அன்புள்ள மணிமொழி
பாரதி
31-03-2014
4, அக்ரகாரத்தெரு,
சென்னை.
அன்புள்ள மணிமொழி,
இன்று ஒவ்வொரு வீட்டிலும் கணவன்,மனைவி வீட்டில் சண்டை போடுவதை நினைத்து தொலைக்காட்சியில் பார்த்து நாம் எத்தனை முறை மகிழ்ந்து சிரித்திருப்போம். அப்படியெல்லாம்கூட ஈகோ வருமா! என்ன! என்றுகூட நீ கேட்டாயே?
நான் சொன்னேன்! பணம் காசு இன்று வரும் நாளை போகும்! ஆனால் மாறாத அன்புள்ளம்கொண்ட இல்லத்தரசி வாய்ப்பதுதான் ரொம்ப கஷ்டம்.
இப்படியெல்லாம் எத்தனைமுறை பேசியிருப்போம்.
ஆனால் ஒரு சிறு விஷயத்திற்காக என்னிடம் ஏனம்மா இவ்வளவு கோபப்பட்டாய்??நான் செய்தது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இருவரும் வழக்கம்போல கோவிலில் உட்கார்ந்து பேசுவோமே?அதை விட்டுவிட்டு இதென்ன புதுப்பழக்கம்…….நீ மட்டும் கோவிலுக்குத் தனியாக என்னைவிட்டுச் சென்றுவிட்டாய்? எங்கு சென்றாலும் உனது தலையலங்காரம் நான்தான் செய்துவிடுவேன். எனக்கு முடி இல்லை என்றாலும் ஆண்டவன்கிட்டபோய் கேட்டுக்கறதுதானேன்னு சிரிக்கச்சிரிக்கப்பேசுவாயே! ஒருநாளாய் எனக்கு ஒருயுகமாய் இருப்பது உனக்குத் தோணலையா!
நான் என்ன பிரமாத தப்பு செய்துட்டேன்னு என்கிட்ட கோபிச்சுக்கிட்டு போய்ட்ட….சும்மா ஒருநாள் நான் சமைச்சுக்காட்டுறேன்னு சொன்னேன்.அதுக்கே இப்பிடிப் பண்றியே……நான் செத்ததுக்குப்பிறகு செஞ்சுக்கோங்கன்னு அலுவலகசுற்றுலான்னு எதுத்த தெருக்கோயிலுக்குக் கிளம்பிட்டியே………..என்னுயிர் கண்ணம்மா என பாரதி பாட்டைப் பாடத்தோணுதும்மா……..உன்புடவை இங்கே படுக்கையில் காற்றில் அசையறப்ப நீ கூப்பிடறமாதிரி இருக்குடா…எத்தனைவருட தாம்பத்தியம்டா உனக்கும்,எனக்கும்….50 வருஷம் அடுத்த வருஷம் வந்தா…….உனக்கு உடம்புக்கு வந்தா என்னை யாருடா பாத்துப்பான்னு நீ பையன்கிட்டபேசுனதை ரகசியமா நான் கேட்டேன்.அதான் சிம்பிளா சமைச்சுப்பாத்தேன்.கடவுள்கிட்ட கேட்டேண்டா…..எப்பவும்போல ஒண்ணா ரெண்டுபேரையும் எடுத்துக்கச்சொல்லி….எல்லாத்துக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமாடா…..யோசிச்சுப்பாரேண்டா…..நம்ம பிள்ளைங்க தங்கந்தாண்டா……ஆனா எனக்கு நீதானே எல்லாம்…..இத்தோட கடைசி…கடவுள்கிட்ட இரண்டுபேரும் ஒண்ணா செத்துப்போய்டணும்னு வேண்டிக்கோ……..சீக்கிரமா பத்திரமா வந்துடு..பிஸ்கட்மட்டும் இருக்கு…நீ வந்து பண்ணிக்கொடு…பசி தாங்குவேன்.தெருவுல ஒரு பிச்சைக்காரிக்கு நான் செய்தவற்றையெல்லாம் கொடுத்துவிட்டேன்.கோபம் தீர்ந்ததா!
இப்படிக்கு உனது நினைவால் வாடும் அன்புக்கணவனாகிய தோழன்,
பின்குறிப்பு-
இப்படியெல்லாம் பொய்சொல்லி உன்னை வரச்சொல்லி விளையாடலை. நிசமாகவே இருக்கமுடியலை. பக்கத்துல ஒளிஞ்சு கடிதம் எழுதுறத நீ பாத்ததை சன்னல் பக்கத்துல நின்னு பாத்துட்டேன்.எப்ப கோவில்ல இருந்து வந்தே. உன்னாலயும் என்னை விட்டு இருக்க முடியல. கதவைத் திறந்துட்டு வந்துடு.
வீரா
பெறுநர்
மணிமொழி,
எதிர்த்த தெரு பார்த்தசாரதிகோவில்,
சென்னை.