இந்த வார வல்லமையாளர்!

மார்ச் 31, 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  முனைவர். ராஜம் ராமமூர்த்தி அவர்கள்

வீ எஸ் ராஜம்

**************************************************************************************

முனைவர். ராஜம் பற்றி அறியாத இணையத்தமிழர்கள் இருப்பது அரிது.

தமிழ் இலக்கணம் பயிற்றுவிக்க வலைத்தளம் (http://www.letsgrammar.org) ஒன்று உருவாக்கி இன்றும் தமிழ்ப்பணி செய்பவர் இவர்.  அத்துடன் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம், முனைவர். ராஜமும், இவருடன்  இணைந்து பணியாற்றிய மற்றொரு ஆராய்ச்சியாளரும் உருவாக்கிய ஆய்வு நூலை வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது ( The Earliest Missionary Grammar of Tamil, Harvard Oriental – Series 76, Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History, and Analysis, Translated with commentary by Jeanne Hein and V. S. Rajam – http://www.hup.harvard.edu/catalog.php?isbn=9780674727236&content=bios).

முனைவர். ராஜம் அவர்களது சிறப்பு, அவர் பல துறைகளில் (கணிதம், கணினி தொழில் நுட்பம், தமிழிலக்கியம்) வல்லவராக இருப்பது.  அத்துடன் அத்திறன்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வளர்சிக்காக தனது பங்கினை சிறப்புற அளிப்பது.

இவர் திறமையை நான் சொல்லுவதை விட சமீபத்தில் மற்றொரு தமிழறிஞர் முனைவர். ராஜம் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதை (கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அன்றோ?) சொல்வதில்தான் அவரது சிறப்பு மேலும் சிறப்புற விளங்கும். இந்த வாரம் சென்னையில் நடைபெறும் “கணிணித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு” நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் முனைவர். பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள், முனைவர். ராஜம் பற்றிக் குறிப்பிட்டது இங்கு  உங்கள் பார்வைக்கு…

“பேராசிரியை இராசம் அவர்களுக்கு தமிழாய்வு உலகில் ஒரு சிறந்த இடம் உண்டு. குறிப்பாக, தமிழ்க் கணினிமொழியியல் துறையில் மிகச் சிறந்த இடம் உண்டு. இந்த ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். பலருடைய பங்களிப்பு வெளியுலகில் தெரியாமல் இருந்துவிடுகிறது. அவர்கள் பெயரெல்லாம் ஆய்வுலகில் நிலைக்க நாம் வழிசெய்யவேண்டும்.”

–பேராசிரியர். ந. தெய்வ சுந்தரம்

ஆம், இது உண்மை. பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டது போல முனைவர். ராஜம் கணிணித்தமிழ் வளர்ச்சியில் ஒரு முன்னோடி. இவர் 1978-இலிருந்து தமிழைக் கணினிக்குள் புகுத்த வேண்டிப் பல கணினி மொழிகள் படித்துள்ளார்  (APL,  C, C+, FORTRAN, Java, Javascript, LISP, Macro-11 [Assembly Language], Pascal, PHP, SQL, XML, …). அவரது பல்கலைகழக நாட்களில், அதாவது ஒரு முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் முன்னரே தொடங்கிவிட்டது இவருடைய கணிணித்தமிழ்ப்பணி.

தமிழிலக்கிய நூல்களில் நாம் ஒரு சொல்லைத் தேட வேண்டியிருப்பின்,  நூலின் பின்பகுதியைப் புரட்டி அங்கு கொடுக்கப் பட்டுள்ள சொற்களின் பட்டியலில் அச்சொல் எங்கு வருகிறது என்று தேடுவோம். பிறகு அப்பக்கத்தைத் திருப்பி அச்சொல் எவ்வாறு, என்ன பொருளில் குறிபிடப்பட்டுள்ளது என்று தொடர்ந்து ஆராய்வோம். இவ்வாறு  தமிழில் சொல்லடைவு, தொடரடைவு இரண்டும் நமக்குத் தேவை (சொல்லடைவு எனில் ஒரு பாடலில் உள்ள சொற்களையும், அப் பாடலில் ஒவ்வொரு சொல்லும் வருமிடங்களையெல்லாம் அகரவரிசையில் தொகுத்துக்கூறுவது – Word Index எனலாம்.  தொடரடைவு  எனில், ஒவ்வொரு சொல்லுடன், அது வரும் அடிகளையே கொடுப்பது – concordance)

காட்டாக, இராமாயணத்தில் ‘அங்கதன்’ என்ற சொல் வருமிடங்கள்…

அங்கதன் (41 இடங்களில் ஒரு சில …)

அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கிட்:11 118/1  (இவ்விளக்கப் பகுதி முனைவர். பாண்டியராஜா பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது)

ஒரு கணிநிரல் (Program) சில விநாடிகளில் ஒரு சொல்லடைவையோ அல்லது தொடரடைவையோ தொகுத்து வழங்கிவிடும்.  ஆனால் அந்த நிரலை எழுதும் முயற்சிக்கு எத்தனை எத்தனையோ மணிநேரங்கள் தேவைப்படும். ‘ஜாவா’ நிரல் எழுதினாலும் பல கோப்பைகள் ‘ஜாவா’ (காஃபி) அருந்திய பின்னரும், பலநாள் தூக்கம் தொலைத்த பின்னரும் நிரல் எழுதுபவர் விரும்பிய வண்ணம் அது அமைந்ததா  என்பதை கணினிநிரல் எழுதியவரே வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் அது போன்ற நிரல்களை, தனது பல்கலைகழக மாணவப் பருவத்திலேயே எழுதி ஐம்பது மதிப்பெண் வழங்கும் ஒரு தேர்வில் அறுபது மதிப்பெண்கள் (தவறு என்று சந்தேகிக்க வேண்டாம், சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன் 60/50 மதிப்பெண்கள்) வாங்கியவர் முனைவர். ராஜம் ராமமூர்த்தி.

doctor rajam

அவரது மாணவப் பருவத்தில் அவர் எழுதிய தொடரடைவு (Concordance) உருவாக்கம் நிரலிக்கு அவர் தேர்ந்தெடுத்த பாடல் ஒளவையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஒன்று.


அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

— ஒளவையார், குறுந்தொகை: 23

[பாடலின் பொருள்: காதல் நோய் தாக்கி உடலும் மனமும் நலிவடைந்த தலைவியினைக் கண்டு வருந்திய பெற்றோர், அகவல்மகள் என்னும் குறிக்காரியிடம் சென்று குறி கேட்கிறார்கள்.  குறிசொல்லத் தொடங்கும் அவளது கடவுள் வாழ்த்துப்பகுதி மலைநாட்டுத் தெய்வத்தின் புகழ் பாடுகிறது அத்துடன் அது தலைவியின் உள்ளத்திலிருக்கும் தலைவனை வாழ்த்துவது போலவும்  அமைந்துவிடுகிறது. அதனைக் கேட்ட தோழி அவன் குன்றத்தைப் பாடிய பாட்டை இன்னும் பாடுக என்கிறாள்.  அதாவது தோழி அறத்தொடு நிற்பது என்ற நிலையில் அடங்கும் வகையில், தலைவியின் காதலைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் அமைகிறது இப்பாடல். இவ்வாறு இவள் சொல்வதிலிருந்து தலைவியின் சுற்றத்தார் தலைவியின் தலைவனை பற்றித்  தெரிந்துகொள்வார்களாம்.]

சென்ற வாரம் குழும மடலாடல் ஒன்றில் கணிணித்தமிழ் கொண்டு எவ்வாறு கணிணித்தமிழ் வளர்ச்சியில் பங்களிப்பது என்பது பற்றிய விவாதத்தில் பங்கேற்ற முனைவர். ராஜம் அவர்கள், மேலே குறிப்பிட்ட பாடலுக்கு, அவர் படித்த UNIX வகுப்பில் இறுதித் தேர்வுக்காக எழுதிய நிரல்களை பகிர்ந்து கொண்டார் ( “Unix visits South India” project – http://www.letsgrammar.org/oldProjects/UNIX_Project_Rajam.pdf).

இது போன்று கணிணித்தமிழ் வளர்ச்சிக்கு இக்கால மாணவர்களை ஊக்குவிக்கும் கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்ட முனைவர். ராஜம் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறார்கள்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. ஆஹா, அருமையான தேர்வு. முனைவர் ராஜம் அம்மாவின் பல்துறை ஆற்றலைச் சிறப்புற விளக்கி, 50க்கு 60 மதிப்பெண்கள் பெற்ற அவர் திறத்தை எடுத்துக் காட்டினீர்கள். கணிணி மொழியியல் முன்னோடியான வல்லமையாளர் ராஜம் அம்மாவின் திறனும் புகழும் மேன்மேலும் சுடர்விட, எங்கள் வாழ்த்துகள்.

 2. ஆஹா! என்னுடைய அபிமான ஆசிரியைக்கு வல்லமையாளர் விருது கிடைத்தது பற்றி இப்போதுதான் பார்த்தேன். தேமொழி. மிக்க நன்றி!  
  ராஜம் அம்மா வுக்கு வாழ்த்துகள்!

  //“பேராசிரியை இராசம் அவர்களுக்கு தமிழாய்வு உலகில் ஒரு சிறந்த இடம் உண்டு. குறிப்பாக, தமிழ்க் கணினிமொழியியல் துறையில் மிகச் சிறந்த இடம் உண்டு. இந்த ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். பலருடைய பங்களிப்பு வெளியுலகில் தெரியாமல் இருந்துவிடுகிறது. அவர்கள் பெயரெல்லாம் ஆய்வுலகில் நிலைக்க நாம் வழிசெய்யவேண்டும்”//

  இது சில காலமாகவே என் மனத்தை அரிக்கும் விஷ்யத்தில் ஒன்று. ராஜம் அம்மா விஷயத்தில் தமிழக அரசாங்கமே சரியாக கவனிக்கவில்லை. இனிமேலாவது முழித்துக் கொண்டு ராஜம் அம்மா போன்ற சிறந்த ஆய்வாளர்களை சிறந்த முறையில் கௌரவிக்கவேண்டும். அப்படி கௌரவிப்பது அரசாங்கத்துக்கு மட்டுமல்ல அன்னைத் தமிழுக்கும் நல்லது. 
  அன்புடன்
  திவாகர்

 3. ஓர் அபூர்வ நூலின் ஆய்வும், அதன் கதையும் 
                                – ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

  The Earliest Missionary Grammar of Tamil, 
  Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History and analysis 
  By Jeanne Hein and V S Rajam 

  Published by 
  The Department of South Asian studies 
  Harvard University 
  2013

  ஒரு விதத்தில் இந்தப் பாதிரியாருக்கு இலக்கியத் தமிழும், தமிழ்ப் புலவர்களின் சகவாசமும் இல்லாதிருந்தது இந்தக் கையேட்டின் சமகால பேச்சு மொழிப் பதிவாக்கம் என்னும் அம்சத்தில் இதன் மதிப்பைப் பெரிதும் கூட்டுவதாய் இருக்கிறது. 

  மேலும் கிறித்தவத் தமிழ் என்ற ஒரு மொழி வகையைப் பற்றிப் பேசாமல் தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு முழுமை பெறாது. அப்படிப்பார்த்தால் கிறித்தவத் தமிழ் எப்படி ஆரம்பித்திருக்கும், எப்படி அதன் தொடங்கு கணங்கள் இருந்திருக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு இதைவிடச் சிறந்த ஆவணம், அந்தத் தொடக்க காலத்தை மிக நுண்மையாகவும் மிக அண்மையாகவும் படம்பிடிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை எனலாம். 

  ஹென்ரிக்கு பாதிரியார் தயாரித்த இந்தக் கையேடுதான் ஹார்வேர்டு பல்கலைக் கழக வெளியீடாக வந்துள்ள மேலே நாம் குறித்திருக்கும் நூல்.

  இரண்டு பெண் திலகங்களான முனைவர்கள் Jeanne Hein, V S Rajam இவர்களின் கூட்டு உழைப்பால் இன்று அழகான நூலாக, ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆய்வுக் குறிப்புகளுடன் M Witzel அவர்களின்  முகவுரையோடு வெளிவந்துள்ள நூல். 

  ஹென்ரிக்கு பாதிரியார் பற்றிய வாழ்க்கை வரலாறு நூல் ஒன்றை 1977ல் Jeanne அவர்கள் இயற்றினார். அப்பொழுது லிஸ்பனில் உள்ள தேசிய நூலகத்தில் அவர் கண்ணில் பட்டது இந்தக் கையேட்டின் கையெழுத்துப் பிரதி. மைக்ரோ ஃபிலிம் பிரதியைப் பெற்று அவருடைய ஆய்வு தொடர்ந்தது. 

  400 வருஷங்களுக்கு முந்தைய போர்த்துகீஸ் மொழி பற்றிய நுண்புலம் மிக்க அறிஞர்கள் கிடைப்பார்கள். ஆனால் அந்தக் காலத்திய பரவர்கள் சமுதாய தமிழ்ப் பேச்சு மொழி பற்றிய சால மொழிப் புலமை மிக்க ஓர் அறிஞரை எங்கே தேடுவது? இலக்கியத் தமிழுக்கும், இலக்கணத் தமிழுக்கும், பொதுவாக புழங்கு வெளியில் உள்ள பேச்சு மொழி பற்றியும் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் பரவர் சமுதாயத்தின் 16 ஆம் நூற் பேச்சு மொழி? 

  அப்பொழுதுதான் முனைவர் வி எஸ் ராஜம் அவர்களின் தொடர்பு Jeanne அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. 1978லிருந்து இரண்டு அறிஞர்களும் தம்முள் செயல்திட்டம் வகுத்துக்கொண்டு நெடும் பணி ஆற்றி வந்திருக்கிறார்கள். 

  ஆனால் 1982ல் வெளியிடலாம் என்று எல்லாம் முடியும் தருவாயில் ஒரு பெரிய இடர்ப்பாடு. ஹான்ஸ் வெர்லாக் என்பார் எழுதிய நூல் முதல் ஐரோப்பிய தமிழ் இலக்கணம் பற்றியது ஹெய்டெல்பர்க்கில் வெளிவந்தது. இந்தத் துறையோ மிக மிக தனிப்பட்ட துறை. இதில் ஏற்கனவே ஒரு நூல் வந்து உடனேயே மற்றும் ஒரு நூல் அதே விஷயங்களைக்  குறித்து என்றால் வெளியிட பதிப்பகமோ, பல்கலைக் கழகமோ செலவிற்கான ஒதுக்கீடு குறித்து தயக்கம் வந்துவிடும். எனவே 27 வருஷங்கள் கிணற்றில் விழுந்த கல்லாயிற்று இருவர்தம் உழைப்பும். 

  என்ன செய்வது? ஏதோ ஆய்வு என்றால் நாம் கடையில் போய் நூல் வாங்கினால் அல்லது நூலகத்தில் படித்தால் ஆயிற்று என்று நினைக்கிறோம். இல்லையென்றால் கணினியில் அங்கும் இங்கும் காப்பி பேஸ்ட் பண்ணிக் கோப்பில் இட்டுவைத்துக்கொண்டு ‘ஹாய் பாரு ஆய்வு… ஹாய் பாரு ஆய்வு..’ என்று அலட்டிக்கொள்வதுதான் என்றும் பலர் நினைப்பதுண்டு. ஆனால் உண்மையான ஆய்வு என்பது வியர்வையும், பெருமூச்சும், உறக்கமின்மையும், ஜாலியான பொழுதுகளைத் தியாகம் செய்தலும் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள் ? பல எதிர்பாராத காரணங்களால் ஏற்படும் ஏமாற்றம், நிச்சயமற்ற தன்மை இதெல்லாம் எங்கே தெரிகிறது? 

  இந்தக் காலகட்டத்தில் பாவம்! இன்னொரு இடி, Jeanne அம்மையார் Alzheimer’s நோய் என்பதால் தாக்குண்டு பிறரோடு தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார். சரி கையெழுத்துப் பிரதிகள் கெடாவண்ணம் யேல் டிவினிடி ஸ்கூலின் நூலகத்திற்கு அவற்றைப் பராமரிக்குமாறு கொடுத்துவிடலாம் என்று கருதிய அவர் கணவர் Norvin Hein இந்த ஆய்வின் கையெழுத்துப் பிரதியை அப்பொழுது யேலுக்கு வந்த பேராசிரியர் அண்ணாமலை அவர்களிடம் காட்ட, பேராசிரியர் காட்டிய ஊக்கத்தாலும், நூலின் தேவை பற்றிய கணிப்பாலும் உந்தப்பட்டு, மேலும் பல அறிஞர்களிடமும் ஊர்ஜிதம் செய்த பிறகு மீண்டும் வெளியிடும் முனைப்பிற்கு நூல் வந்து சேர்ந்தது. 

  ஆனால் இப்பொழுதோ முனைவர் ராஜம் ஒற்றை ஆளாகத்தான் நூலாக்க தயாரிப்பு, மற்றும் செப்பனிடல் போன்றவற்றைச் செய்ய வேண்டிய நிலை. இருபது வருஷங்களுக்கும் மேல் ஓடிப் போய்விட்டது என்றாலும் தாம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து திறம்பட நூலை முழுமையாக்கி, பின்னிணைப்புகள், அகரமுதலி ஆகியன சேர்த்து அவர் அளித்த நேர்த்தி, முதல் வாய்ப்பிலேயே ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தால் வெளியிட ஏற்புக்கு உரித்தாக ஆனது. 

  நூலின் தளமோ 16ஆம் நூற் பரவர் சமுதாயப் பேச்சு மொழி, கன்னியாகுமரி, இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதி நெய்தல் நிலம் சார்ந்த சமுதாயம், பழக்க வழக்கம், பேச்சு மொழிக் கூறுபாடுகள், போர்த்துகீசிய கிறித்தவ குருமார்கள் அந்தத் தமிழை வாங்கிக்கொண்டு போர்த்துகீசிய ஒலிகளையும், சொற்களையும் கல்ந்த நிலையில் தாம் வாங்கிப் புரிந்துகொண்ட விதத்தில் ஹென்ரிக்கு பாதிரியாரால் லத்தீன் மொழி இலக்கண கையேடு என்னும் முன்மாதிரியில் செய்யப்பட்ட நூல். போர்த்துகீசிய மொழிக்கே Joao de Barros என்பார் செய்த மொழிக் கையேட்டை மாதிரியாகக் கொண்டு செய்ததுதான் இந்த நூலும். இதன் ஆங்கில ஆக்கம், அதற்கான ஆய்வுக் குறிப்புகள் இப்பொழுது நூலைப் பார்க்கும் பொழுது அதன் கட்டடம், தருவித நேர்த்தி, தரவுகளைச் செம்மையுறக் காட்டியளிக்கும் நுட்பம் இவைதான் நம் கண்ணில் படுகிறது. ஆனால் நூலின் அடித்தளமோ நெடிய உழைப்பு, அயராத ஆய்வு, இயற்கை இடர்ப்பாடுகள், அவற்றையும் தாண்டிக் கனிந்த உள்ளத்து எழுச்சியின் பலன். 

  https://groups.google.com/forum/?fromgroups=#!searchin/vallamai/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D$20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D$20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%7Csort:relevance%7Cspell:true/vallamai/fub_0SOv3oQ/1DmiKZbVwnoJ

 4. என்னே ஈதென்னே ஈதென்னே!

  மின்மடலாடல் குழுமங்களின் நுணுக்கம் தெரியாமல் ஒதுங்கி முடங்கிக் கிடந்த ஒருத்தியை இழுத்துப் பிடித்து மேடையில் ஏற்றி ‘நாட்டியப் பேரொளி’ என்ற ஒரு மகுடம் சூட்டி, ‘ஆத்தா இந்தப் பட்டத்துக்குத் தகுந்த மாதிரி ஆடு’ என்று கட்டளையிட்ட மாதிரி இருக்கு. 

  வாழத் தெரியாத எனக்கென்ன வல்லமை இருக்கு? 

  சரி. இந்த விருது கொடுக்கும் சதியைத் தொடங்கியவர்களுக்கும் தொடர்ந்தவர்களுக்கும் என் அன்பும் ஆசியும். 

  என் கணினி முயற்சியைப் புரிந்துகொண்டு விளக்கிய தேமொழிக்கும் ஊக்கமளிக்கும் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  இளைய தலைமுறைக்கு ஒரு சொல்: மக்களே, வயது என்பது ஒரு தடையில்லை; வாய்ப்பு என்பதே வழி. கணினித் துறையில் யான் புகுந்தபோது எனக்கு வயது 36. அந்தக் காலத்தில் நம் ஊரில் அந்த வயதில் ஒரு பெண்ணை மூட்டை கட்டி ஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிடுவார்கள். திருமணம் ஆனவுடனே ஒரு பிள்ளை பெறவேண்டும், பெற்றவுடனே அவளுக்கு ஏற்கனவே இருந்த கீழ்நிலை இன்னும் கீழே … இப்படிப்பட்ட சூழலில் பிறந்து வளர்ந்தவள் நான். 

  இதையெல்லாம் வேறிடத்தில் வேறு தலைப்பில் விளக்கிச் சொல்லவேண்டும். இளைய தலைமுறைக்கு உதவும். 

  வல்லமை விருது அளித்த குழுவினருக்கும் வாழ்த்திய அன்பு நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  அன்புடன்,
  ராஜம்

 5. இதற்குமுன் மறுமொழி ஒன்று பதிவு செய்தேனே, வரவில்லையா? 

 6. வார வல்லமை யாளியா
  ராஜம் அம்மா ?
  இல்லை !
  மாத வல்லமை யாளியா ?
  இல்லவே இல்லை !
  வருட வல்லமை யாளியா ?
  இருக்கலாம் !
  வயது முப்பத்தாறி லிருந்து  
  படைத்து
  முனைவர் பட்டம் பெற்று, 
  நூறு வயது வரை
  ஆக்கும் திறம் கொண்ட
  வல்லமை யாளி
  அல்லவா ராஜம் அம்மா ?

  சி. ஜெயபாரதன்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *