அன்புள்ள மணிமொழிக்கு,
31-03-2014
43,அக்ரகாரத்தெரு,
பாரதி தஞ்சை
அன்புள்ள மணிமொழிக்கு,
மணிமணியான கையெழுத்தில் உன் தமிழ்மொழி கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது பார்! நீயும், நானும் எழுதிய கடிதங்களை நம் ஊர்த்தோட்டத்து மாமர நிழலில் கட்டிய ஊஞ்சலில் ஆடியபடியே, படித்துச் சிரித்த நாட்கள் என் கண்ணிற்குள் நிற்கிறது.
நீயும், நானும் கிணத்தடியருகில் விளையாடிய மாக்கல் செப்பு எனது பெயர்த்தி வைத்து விளையாடுகிறாள். காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுற்றுகிறது பார்! உனக்கும், எனக்கும் 13 வயதில் திருமணம்.
14 வயதில் குழந்தை. நல்லவேளை! இன்னமும் சீக்கிரம் பிறக்கவில்லை. இல்லையெனில் பருவ வயதை அடையும்முன்னே திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள். நீ மாதவையா நாவல்களை முன்பொருமுறை எனக்குப் படித்துக்காட்டினாயே! ஞாபகம் இருக்கிறதா?
என்ன கொடூரமான விதவைக்கோலம் இல்லையா!ப்ச்…இன்று நினைத்தாலும் பெண்ணின் நிலையை நினைத்து வருந்துகிறேன்.
நீ எழுதிய வரிகளை ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பார்த்தேன்.
உனது வீட்டின் அருகில் இன்னமும் இத்தகைய கொடுமை நடக்கிறதா?
குழந்தை இல்லையெனில் மருத்துவரிடம் செல்வதுதான் முறை. அதைவிட்டு சோழிகளைக்குலுக்கி சோசியம் பார்ப்பதும், ஆணைவிட்டு திருநீறு மந்திரித்து தலையில்போட்டு கைகளைத் தடவி விடுவதும்,சர்ச்சில் மண்டியிடச்சொல்வதும் படிக்கவே அருவெறுப்பாக இருக்கிறது. அந்தப்பெண் படித்திருக்கிறதா? படித்திருந்தால் எங்காவது வேலைக்குச்சென்று பிழைத்துக்கொள்ளச்சொல். யாரிடம் குறை உள்ளது என்பதைத் திருமூலர் சொல்லவில்லையா?
கணவன்,மனைவிக்குள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மனவேறுபாட்டை உருவாக்காதா?
உசிலம்பட்டி மக்கள் என்றுதான் மாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
பெண்கள் வேலைக்குப்போவது நல்லது. ஆனால், நீ உன்னுடைய அமெரிக்கப் பயணம் குறித்து எழுதியிருந்தாய். இங்கும் பல கணவர்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் வரதட்சணை தரும் அமுதசுரபிகளாய் மணிமேகலைகள் தினமும் உலா வருகின்றனர். நோயுற்று வாழ்ந்த காலத்திலும் பணிக்குச் செல்லும் பெண்ணிற்குத் தேவையான உணவுகளைத் தயாரிப்பதில் ஆண்வர்க்கம் உதவுவதில்லை. தமது குழந்தைகளுக்காக அவர்கள் கேட்கும் ஆடம்பரப்பொருட்களுக்காகத் தன்னை மாய்த்து உருக்கி வாழும் மெழுகுவர்த்திகளாகப் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண் உதவினால் மனைவிக்குதாசன். பெண் படித்திருக்கிறாள் என்ற அகம்பாவம். கொண்டுவரும் பணம்வரும்தேதி மட்டும் அவள் அந்தநேரத்து வீட்டுவிளக்கு இளவரசி. பணி முடிந்து வரும்நேரம் சற்று லேட்டானாலும் இன்னமும் பழைய பல்லவிதான்.பொண்ணுன்னா விளக்கேத்தறதுக்கு முன்னாடி வந்தாத்தானே நன்னாருக்கும்.
இந்தப்பெண்களும் தனது பணிக்குத் தகுந்தாற்போல உடை உடுத்துவது கிடையாது. வெளிதேசத்தில் இருப்பதுபோல அரைகுறையாய் உடை உடுத்துகின்றனர். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பானா ரோட்டில்! திரும்பிய இடமெல்லாம் டாஸ்மாக்! ஊத்திக்கிட்டவனுக்கு நிதானந் தெரியுமா?இவ நம்ம அம்மாபோல,இவ நம்ம சகோதரிபோலன்னு!
பஸ்ஸூல அண்ணான்னு பொண்ணு சொன்னா பிராமணாத்து அண்ணாவான்னு கேக்கறதுகள் காலேஜ் படிக்கும் கழிசடைகள். இதெல்லாம் என்ன செய்யப்போகுதுகளோ!
இதுல பொண்ணுங்க நகை வேற! கழுத்து நிறைய அம்பிகைக்கு சார்த்துறமாதிரி அள்ளிப்போட்டுக்கறது! பெண்ணுக்கு எதிரி முதல்ல நகையும், அரைகுறை ஆடையும்தான்.
எனது பக்கத்துவீட்டில் ஒரு பெண் இருக்கிறாள். எங்கோஒரு பெரிய பணியில் இருக்கிறாள். இருக்கிற இடம் தெரியாது. வழிய வழிய தலை.ஒருக்ளிப்போ,ஆடம்பர உடையோ கிடையாது. அப்புறம்தான் ஒருநாள் டிவிலயும்,யுட்யுப்லயும் பாத்தேன்.என்னமா பேசுது அந்தப்பெண்.
அன்னைக்கு முழுதும் அந்தப்பெண்ணைப்பத்தித்தான் எங்காத்துல ஓயாத பேச்சு.எங்காத்துக்காரர் சொல்றார்.இப்ப புரிஞ்சுதா! பொண்ணுன்னா ஆடை, அலங்காரத்துல இல்லன்னு…..எனக்கு அந்த நிமிஷமே ஃப்ளாட்டை விட்டு வெளியேறி அந்த பொண்ணை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு தோணிச்சு…..அவா வீட்டு காலிங்பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தேன். அவளே வந்தாள் நைட்டியோட…கையில பக்கோடா பிசைந்த மாவோட…என்னம்மா இது…நீ பேசுன பேச்சுல மீடியாவே கேட்டுக்கிட்டிருக்கே…நீ கேக்கலையா……….எனது கணவர் கேட்டுக்கிட்டு இருக்கார் மாமி….அவருக்கு பிடிக்குமேன்னு வெங்காய பக்கோடா செஞ்சேன்.அவருக்கு வெளில இருக்கறதெல்லாம் உடம்புக்கு ஆகாதுன்னா…..ஒரு நிமிஷம் நான் மௌனமானேன்.என்ன விஷயமாக வந்தீர்கள்?உள்ளே வாருங்கள்,பக்கோடா சாப்பிட்டுப் பாருங்கள் என்றாள்.
உனது திறமையைப் பாராட்டி எங்காத்துக்காரர் உன்னைப் பாராட்டணும்னு சொல்லி காத்துண்டிருக்கார் குழந்தை.அவருக்கு வயது 80க்கும் மேலே ஆறது..ஒரு நிமிஷம் வர முடியுமா! என்றேன். அந்த நேரத்தில் எனக்கு வள்ளுவர் கூறிய இல்வாழ்க்கைதான் ஞாபகத்திற்கு வந்தது.
வீடென்னவோ 400 சதுர அடிதான்.அதில் அறிவை அந்தப்பொண்ணு எப்படி வளர்த்தான்னு தெரியல! புடவைய மாத்திட்டு ஒருவழியா வீட்டிற்கு வந்து… எங்க ரெண்டுபேர்கிட்டயும் ஆசி வாங்கிட்டா! புடவை வச்சுக்கொடுத்தேன்.
மறுத்துட்டா! கணவன்கிட்டயும்,பெத்தவங்க,கூடப்பிறந்தவங்ககிட்டயும்தான் வாங்கிக்கட்டறதுன்னு பழக்கம்னு பழம்பஞ்சாங்கம் பேசிட்டா!
சரி! அவள் விருப்பம்னு விட்டுட்டேன். மறுநாள் ஷாப்பிங்மால்ல பாத்துப்பேசினா! எப்படி இப்படி இருக்க முடிகிறது என்றேன். எனது குறிக்கோள் ஒன்றுதான் எனது கண்ணில் தெரியுது! பாக்கறதுக்கு என் கணவர் சைலண்டா இருக்கறாருன்னு தோணும். இப்ப இருக்கற பொண்ணுங்க மாதிரி எடுத்ததுக்கெல்லாம் டைவோர்சா பண்ணமுடியும். வேலைக்குப் போற பொண்ணுன்னாலே அப்பிடித்தான் முத்திரை குத்திடுவாங்க! வெளியிலயும் போகவிடமாட்டாங்க. அதான் சமையலறையில எங்க சாம்ராஜ்யம்தான். அப்புறம் டைவோர்சாவது! மண்ணாவது! முடிஞ்சா நான் செத்தேன்னா அவருக்குத் தனியா பண்ணிச் சாப்பிடத்தெரிஞ்சுக்கணும்னு கத்தும் கொடுத்திருக்கேன். அவா வீட்ல தெரிஞ்சா கத்துவா! இவர் அதல்லாம் சொல்ல மாட்டார். இதுதான் வாழுற வாழ்க்கையின் அடிப்படை ரகசியம். எடுத்ததுக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு அம்மாவிடம் குறை சொல்றது இரண்டு பேருக்குமே வீக். என்ன மாமி நான் சொன்னது சரிதானே! என கன்னத்தில் குழி விழச் சிரித்தாள்.ஆனாலும், அவள் உள்மனதில் என்னவோஒரு சோகத்தின் சாயல் இருப்பதை அவள் கண்கள் காட்டியது. அவள் பெயர் வாணி. பத்திரிகையில் நிறைய எழுதியிருக்கிறாள்.இப்போதான் வந்திருக்கிறாள். அவள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை நான் கண்டுபிடிக்கிறேனா பார்! எனது அம்மா ஒளித்து வைத்த லட்டு டப்பாவையே கண்டுபிடிச்சுடுவியேன்னு! நீ சிரிக்கும் சத்தம் இங்குவரை எனக்குக்கேட்கிறது. நான் நேற்று ஒரு கதை படித்தேன். அதில் நண்பரில் ஒருவர் தினமும் மற்றவர் வீட்டிற்குப் போய்விடுவாராம். திடீரென்று அவர் நண்பர் இறந்து விட்டார்.இருப்பினும் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் அவர் சொன்னாராம். எப்போதும்போல அந்த ஈசிசேரை எடுத்துப்போடுங்க…கடைசிவரை எனது நண்பன் இருப்பதுபோல சேரில்வந்து உட்கார்ந்து பார்த்துச்செல்கிறேன் என்றாராம்.
அதைப்படித்தபின் எனக்கு உன் நினைவாகவே உள்ளது. நீ எப்போது வருவாய்? வருவதைக் கடிதம் எழுது. இந்தக்காலத்துக்குழந்தைகளுக்கெல்லாம் கடிதமே எழுதத்தெரியறதுல்ல…எல்லாம் மெயில், மெசேஞ்தான்.
உனக்குப் பிடித்த தேன்குழலும்,மைசூர்பாகும் செஞ்சு வச்சுருக்கேன். சாப்பிடத்தான் அருகில் நீ இல்லை. நீ தண்ணீர் ஊற்றி வளர்த்த மாமரத்து நிழலில்எத்தனை பிஞ்சுகள் உனக்காக காத்திருக்கின்றன தெரியுமா! மணிமொழி எங்கே?எங்கே? எனப்பூக்கள் ஏங்கிக் கிடக்கின்றன. உனது ஃபோட்டோவின் அருகில் பலகாரப் பித்தளைத் தூக்குடனும்,மாம்பிஞ்சு சாப்பிட காரமா கேப்பியே உரல்ல இடிச்ச உப்பு மிக்ஸ்டு மிளகாய்த்தூளுடனும் காத்திருக்கும் உனது அருமை தோழி.
பின்குறிப்பு-
வழக்கம்போல எனது ஒற்றுப்பிழைகளையெல்லாம் திருத்தி வாசிக்கவும். நமது தமிழாசிரியர்(இலட்சுமணன்) ஒற்றுப்பிழை நீக்கும் வகுப்பு எடுக்கும்போது தூங்கிவிட்டேன். நீயும் கற்றுத்தரவில்லை.
வெண்ணிலா
பெறுநர்
மணிமொழி,
7, காந்தி தெரு,
உசிலம்பட்டி.