27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! சின் யோங் திரைப்பட அருங்காட்சியகம், ஜேஜூ தீவு, தென் கொரியா.

சுபாஷிணி ட்ரெம்மல்

சினிமா தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல.. உலகில் எல்லா சமூகங்களுமே விரும்பி பார்க்கும் ஒரு பொழுது போக்கு அம்சமாக மனித வாழ்க்கையில் இடம் பிடித்துக் கொண்டு விட்டதை நாம் மறுக்க முடியுமா?

பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து சமூகத்தின் சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய மிக பலம் பொருந்திய ஒரு ஊடகமாக இன்று சினிமா விளங்குகின்றது. குறிப்பிட்டு சொல்வதானால் திரைப்படத் துறையின் வளர்ச்சி என்பது மிகத் துரிதமாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றது எனலாம். வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளும் தத்தம் மொழிகளில் சினிமா துறையில் விரிவான வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. பொதுவாகத் தமிழக சூழலின் பின்னனியில் பார்க்கும் நமக்கு நன்கு பரிச்சயமானதாக இருப்பவை ஹாலிவூட் தயாரிப்புக்களான அமெரிக்க திரைப்படங்களும், இந்திய திரைப்படங்களும் எனலாம்.

எனது வாழ்க்கை பின்னனியில் மலேசிய சினிமாவின் பரிச்சயமும் தற்சமயம் ஜெர்மானிய திரைப்படங்களின் பரிச்சயமும்  கிடைக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதால் இந்த மொழி படங்கள், இவற்றின் பொதுவான கதை புலன்கள், நடிக நடிகையரின் தோற்றத் தேர்வு பற்றிய பொதுவான கருத்துக்கள், எனச் சில விஷயங்களை அறிந்திருக்கின்றேன். இத்தகைய படங்களை அவ்வப்போது பார்க்க வாய்ப்பு கிடைப்பதால் ஓரளவு இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து அலசவும் முடிகின்றது. என் கணிப்பில் அமெரிக்க படங்களை விட ஜெர்மானிய தயாரிப்புக்களாக அமையும் படங்கள் மிக இயல்பான தோற்றத்தை தருவதாக அமைந்திருக்கின்றன என்பதை பல படங்கள் எனக்கு ஊர்ஜிதப்படுத்துகின்றன. இந்தியப் படங்களையும் மலாய் மொழிப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலாய் படங்கள் பொதுவாக 60, 70, 80களில் தமிழ் படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை போலவே அமைந்திருக்கிருக்கும். பின்னர் படிப்படியாக வட இந்திய படங்கள் மலாய் மக்களின் சினிமா மோகத்திற்கு விருந்தாக அமைந்ததன் விளைவாக பல மலாய் படங்கள் இவ்வகை பின்னனியிலே அமைந்திருப்பதைக் காணமுடியும். இதில் அமெரிக்க படங்களையும் கலந்து வைத்தார்போல கலவையாக சில படங்கள் அமைவதுண்டு. இதனையும் மீறி சில படங்கள் மலாய் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது போலவும் தனித்துவத்துடன் விளங்குவதையும் ஒதுக்கி விட முடியாது.

சினிமா துறை என்பது கேளிக்கை, பொழுது போக்கு அம்சம் என்பதோடு  மட்டும் முடிந்து விடுவதல்ல. தற்கால சூழலில் பற்பல புதிய யுத்திகள், நுணுக்கமான கருவிகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள்  என இத்துறை மிக நுணுக்கமானதொரு துறையாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளதை காண்கிறோம். ஆரம்ப கால சினிமா துறை நிலையிலிருந்து இக்காலத்து மாற்றங்கள் வரை அறிந்து கொள்வதென்றால் அதனை சினிமா துறைக்கானப் பிரத்தியேக அருங்காட்சியகங்கள், அல்லது தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள், நூலகங்கள் எனச் சென்று தான் தேட வேண்டும். உலகின் பல நாடுகளில் சினிமா துறை வளர்ச்சியின் தொடர்ச்சியை பதிவாக அமைத்து பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சில அருங்காட்சியகங்கள் இயங்குகின்றன. அத்தகைய அருங்காட்சியகங்கள் வரிசையில் அமையும் ஒன்று தான் தென் கொரியாவில் உள்ள  சின்யோங் திரைப்பட அருங்காட்சியகம் (Sinyoung Cinema Museum).

 unnamed

ஜேஜு தீவை இந்த தென் கொரிய வரைப்படத்தில் காணலாம். தெற்குப் பகுதியில் மிக கீழே அமைந்திருக்கும் ஒரு தீவு இது.

1999ம் ஆண்டு ஜூன் மாதம் தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜேஜூ தீவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.  மூன்று மாடிகளைக் கொண்டு அமைந்த ஒரு மாடர்ன் வடிவ கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

2003ம் ஆண்டில் டிசம்பர் மாதம் தென் கொரியாவிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்த வேளையில் ஒரு நாள் இந்தத் திரைப்பட அருங்காட்சியகத்திற்கும் சென்று வந்தேன். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் இது. நான் சென்றிருந்த வேளையிலும் கணிசமான வருகையாளர்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 sy3

தென் கொரிய திரைப்படங்கள்  (டிசம்பர் 2003)

இந்த அருங்காட்சியகத்தின் உள்ள மூன்று தளங்களில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அரும் பொருட்களும் தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு தளத்தில் Hall of Fame என் பெயரிடப்பட்டு தென் கொரிய சினிமா துறையில் மிக முக்கியப் பங்கு வகித்தோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் சினிமா நடிக நடிகையர் மட்டுமன்றி தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஒலி, ஒளிப்பதிவாளர்கள் என தென் கொரிய சினிமா துறைக்கு முக்கியப் பங்கு வகித்தோர் படங்கள் இடம்பெருகின்றன. கீழே நின்று பார்க்கும் போது நம்மை சுற்றி இருக்கும் இந்தப் பல்வேறு கலைஞர்களும் நம்மை பார்ப்பது போன்ற பிரமையை இந்த அமைப்பு நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றது.

 sy4

தென் கொரிய சினிமா துறையினருக்கு ஒரு அஞ்சலி (டிசம்பர் 2003)

இந்த Hall of Fame அடுத்து சினிமா தொழில் நுட்பக்கருவிகளின் கண்காட்சி ஒரு பகுதியிலும், அசையும் படங்கள் என்ற வகையில் ஒரு பகுதியும், பிரத்தியேகமான முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஒரு பக்கமும், சினிமா படங்களில் பயன்படுத்தப்பட்ட ராட்ஷஸ வடிவங்களின் வடிவங்கள் ஒரு புறமும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் நூதன முறைகள் பற்றிய விளக்கப் படங்களுக்கு ஒரு பகுதி எனவும் தனித்தனியாக அமைந்திருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் தனிச் சிறப்பு எனக் குறிப்பிடுவதென்றால் அது தென் கொரியாவின் சினிமா துறையின் படிப்படியான வளர்ச்சியை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஆவணக் கூடம் என தயங்காது சொல்லலாம். தென் கொரியாவில் படமாக்கப்பட்ட திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பக் கருவிகள்,  சினிமா செட்டிங், வடிவங்கள், கதை வசனப் பதிவுகள், சினிமா சுருள்கள் என பல சேகரிக்கப்பட்டு இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

 sy1

தொழில் நுட்பக் கருவிகள் (டிசம்பர் 2003)

தென் கொரியாவின் புகழ் மிக்க நடிகர் ஒருவரின் பெயர்தான் Sinyoung. அவர் பெயரில் தான் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் திரைப்பட பூங்கா என இருப்பது போல இங்கு ஒரு புகழ் பெற்ற ஒரு சினிமா துறை கலைஞரை சிறப்பு செய்யும் வகையில் அவர் பெயரில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

இந்த அருங்காட்சியகத்தின் இரண்டாம் தளம் முழுமையாக சினிமா துறை பணிகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  அருகிலேயே வேற்று கிரகத்து கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளில் காட்சிகள் அமைக்கப்பட்டு அதில் சிறுவர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

 sy5

ஆரம்பகால முயற்சிகளின் பதிவு பகுதியில்  (டிசம்பர் 2003)

அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வெளியே வரும் முன்னர் அங்கிருக்கும் விற்பனை பொருட்கள் நிலையத்தில் இந்த அருங்காட்சியகம் வந்து சென்றதன் நினைவாக  இருக்க ஏதாகினும் நினைவுப் பொருட்களையும் இங்கு வருகை தருவோர் வாங்கிக் கொள்ளலாம். இந்த அருங்காட்சிகம் கடற்கரையை மிக ஒட்டி அமைந்திருக்கின்றமையால் அருங்காட்சியகத்தைப் பார்க்க வருவோர் கடற்கரையிலும் சில மணி நேரங்களை ஓய்வெடுக்கச் செலவிடலாம். இயற்கை சூழலில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பெரியோர் முதல் சிறியவர்கள் வரி தென் கொரிய சினிமா துறையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கு நிறைய விஷயங்களைக் வழங்கக்கூடிய ஒரு கருவூலம்தான்.

அருங்காட்சியக வளாகத்தின் கீள்தளத்தில் சிறிய ரெஸ்டாரண்ட் ஒன்றும் இருக்கின்றது. இங்கு நம் களைப்பு தீர காபி வாங்கி அருந்து விட்டு மீண்டும் மற்றொரு அருங்காட்சியகத்திற்கு நம் பயணத்தை நாம் தொடர்வோமா.. ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *