சேஷா சீனிவாசன்

என்னுயிரினும் இனிய மகள் மணிமொழிக்கு,

உன் அன்பு அன்னை எழுதுவது. உன் வாழ்வில் நலமும் இன்பமுமே என்றும் சூழ்ந்திருக்க வேண்டுகின்றேன்.

எங்கள் ஆசைமகளாகிய நீ எங்களுக்குத் தெரிவிக்காமலே உன் விருப்பப்படி உன் மணவாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்டாய். ஆரம்பத்தில் அது எங்களுக்குப் பெருத்த இடியாகவும், சொல்லொணாத் துயரம் தரும் நிகழ்வாகவும் இருந்ததென்னவோ உண்மைதான்; ஆயினும், மணவாழ்க்கை என்பது ஒரு பெண்ணுக்கு அவள் மனம் விரும்பும் வாழ்க்கையாக அமைவதுதானே சிறப்பு? அந்த அடிப்படையில் பார்த்தால் நீ உன் மனத்திற்குப் பிடித்த மணவாளனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்; இஃதொன்றும் மன்னிக்கமுடியாத பெரிய குற்றமில்லை. அத்தோடு…இளம்பெண்கள் தம் விருப்பப்படிக் கணவனை வரிப்பதும் அவனோடு உடன்போவதும் நம் தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதுமில்லை.

தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்ட தன்மகளைப் பிரிந்த தாய் ஒருத்தி தன் அன்புமகள் சிறு குழந்தையாய் இருந்தபோது வைத்து விளையாடிய பாவையையும், சிறிய கிள்ளையையும் காணுந்தோறும் ”இவையெல்லாம் என் இனிய பைங்கிளி வைத்து விளையாடிய பொருள்களாயிற்றே!” என்று சொல்லிச் சொல்லிப் புலம்புவதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் ஓதலாந்தையார் எனும் அருந்தமிழ்ப் புலவர் சொல்லோவியமாய் வடித்திருப்பார். கல்லூரியில் நான் அப்போது படித்த பாடல் இப்போது என் நினைவில் நிழலாடுகின்றது…..

”இதுவென் பாவை பாவை யிதுவென்
அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற்
பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை
காண்டொறுங் காண்டொறுங் கலங்க
நீங்கின ளோவென் பூங்க ணோளே.” 

மணிமொழி! என் சூழ்நிலையின் பிரதிபலிப்பாகவே இப்பாடலை உணர்கிறேன்….கண்களில் வழியும் கண்ணீரருவிக்கு அணைகட்ட இயலவில்லை மகளே!

உன் தந்தையின் நிலையோ,

”ஒருமகள் தன்னை யுடையேன்

  உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்

  செங்கண்மால் தான்கொண்டு போனான்”

என்று ஆண்டாளை அரங்கத்தானுக்கு மணம்செய்து கொடுத்துவிட்டுப் புலம்பும் பெரியாழ்வாரின் நிலையை ஒத்திருக்கின்றது. வேறென்ன சொல்ல?

”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று கீதையில் அந்தக் கண்ணபிரான் உபதேசித்திருப்பதை எண்ணும்போது மனம் சிறிது அமைதிப்படுகின்றது. வாழ்வில் நடப்பவை எதுவும் நம் விருப்பப்படி நடப்பதில்லையே. நீரின் போக்கில் செல்லும் புணைபோல் விதியின் போக்கில் செல்வதுதான் உயிர்வாழ்க்கை என்பது ‘உளவியல் அறிஞராய்’த் திகழும் கணியன் பூங்குன்றனார் என்ற சங்கப் புலவர் கண்டு சொன்ன உண்மையல்லவா!

”……………………………..மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது

கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்

முறைவழிப் படூஉ மென்பது திறவோர்

காட்சியிற் றெளிந்தனம்…………..” 

 

எத்துணைப் பொருள்பொதிந்த மொழிகள் இவை!

மனம் கவல்கின்றபோதும், வாழ்வின் போக்கை நினைத்துப் பேதுறும்போதும் இதுபோன்ற பாடல்களும், ஆன்றோரின் அறவுரைகளுமே மனத்துயர் தீர்க்கும் மருந்துகளாகின்றன.

போகட்டும்… இந்தக் கடிதத்தை மேலும் அவலச்சுவை நிறைந்ததாக்க விரும்பவில்லை; வேறு செய்திகளுக்கு வருகிறேன்….

நீ சென்னையில் இருப்பதாகவும் உன் வாழ்க்கைத் துணைவன் நல்ல வேலையில் இருப்பதால் உனக்குப் பொருளாதார நெருக்கடி ஏதும் எழ வாய்ப்பில்லை என்றும் உன் தோழி பூங்குழலி மூலம் அறிந்தேன். (உன் முகவரியையும் அவள்தான் தந்தாள்). எங்களோடு நீ தொடர்பை முறித்துக்கொண்ட போதிலும் உன் தோழியுடன் தொடர்பிலிருப்பது குறித்து மகிழ்ச்சி. இல்லையென்றால் உன் நிகழ்காலம் நாங்கள் அறியாத இருண்டகாலமாகவே அல்லவா போயிருக்கும்!

மணிமொழி! உன்மீது எங்களுக்குக் கோபமோ வருத்தமோ கொஞ்சமும் இல்லை. நீ மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழவேண்டும் என்பதே உன் பெற்றோராகிய எங்கள் விருப்பம். எங்கள் முயற்சியின்றியே இறைவன் அருளால் அது நல்லபடியாக நடந்துவிட்டது. அளவற்ற அருளாளனான அந்த இறைவனுக்கு நன்றி!

இனி, உன் அன்னை என்ற முறையில் உனக்குச் சில அறிவுரைகளைக் கூற விரும்புகிறேன். எங்களுக்கு நீ ஒரே பெண் என்பதால் உன்னைச் செல்ல(வ)மகளாக வளர்த்துவிட்டோம்; உன் விருப்பப்படியே எல்லாம் செய்தோம் (மணவாளனைத் தேடித் தருவதைத் தவிர!). எனவே சிரமம் என்பதே என்னவென்று அறியாதவள் நீ; சுடுசொல்லே கேட்டறியாதவள். உன் பெற்றோர் போலவே உன் புகுந்த வீட்டினரும் உன்னைக் கொண்டாடவேண்டும் என்றும் உன் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்காதே! புதிதாகச் சென்ற நீ(தான்) அவர்களின் விருப்பங்களையும், வாழ்க்கைமுறையையும் முதலில் அறிந்துகொள்ள முயலவேண்டும். அதற்கேற்ப உன்னை ஓரளவிற்கேனும் மாற்றிக்கொள்ள முயல்வது தேவையற்ற கருத்துமுரண்களும், சச்சரவுகளும் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

கூடுமானவரைக்கும் அடுக்களை வேலைகளை நீயே விருப்பத்தோடு செய்.

அன்போடும் சுவையோடும் பரிமாறும் உணவும், பண்பான பேச்சும் புகுந்த வீட்டினரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ரகசியங்கள்; இவை நல்ல பெண் என்ற பெயரை உனக்கு விரைவில் பெற்றுத்தரும். இப்படிச் சொல்வதனால் உன் அன்னை உன்னை மற்றவர்களுக்கு அடிமையாக வாழச் சொல்கிறாள் என்று பொருள் கொள்ளாதே! விட்டுக்கொடுத்துச் செல்வதும் அனுசரித்து நடந்துகொள்வதும் அடிமையாயிருப்பது என்று பொருள்படாது. அதுவும் காதல் திருமணம் செய்துகொண்ட உன்னையும் உன் கணவனையும் உன் புகுந்த வீட்டினர் அன்போடு ஏற்றுக்கொண்டனர் என்பதை அறிந்தபோது நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது! ஆகவே அவர்கள் எங்களைவிடவும் நல்ல மனிதர்கள் என்றே எனக்குத் தோன்றுகின்றது. அத்தோடு, மணமான பெண்ணுக்குத் தன் மாமியாரும் மாமனாருமே தாய் தந்தையர்! அவர்களை அன்போடு பேணுவது அப்பெண்ணின் கடனாகும்.

அடுத்து, நீ கற்ற பொறியியல் கல்விக்கு ஏற்ற வேலை ஒன்றையும் அடைவதற்கு முயற்சி செய் உன் புகுந்த வீட்டினரின் சம்மதத்துடன்! சிறுவயது முதலே நற்பண்புகளை அறிந்தும் புரிந்தும் வளர்ந்த நீ, நல்ல பொறுப்புள்ள பெண்ணாக நடந்துகொண்டு பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு!

மணிமொழி! எங்களின் சம்மதம் பெறாமல் நீ மணம்புரிந்து கொண்டதனால் நாங்கள் உன்னை ஏற்றுக்கொள்வோமோ…..மாட்டோமோ என்றெல்லாம் அலமருவதைத் தவிர்த்து எங்களோடு பழையபடி நீ அன்பாயிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். எங்களுக்கு நீ ஒரே பெண் அல்லவா? உன்னைவிட்டால் எங்களுக்குத்தான் யார் இருக்கிறார்கள் அம்மா?

விரைவில் உன்னிடமிருந்து தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்கிறேன். எங்கள் அருமை மாப்பிள்ளைக்கு (உன் கணவனுக்கு) எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவி. உன் புகுந்த வீட்டினர் அனைவரையும் நானும் உன் தந்தையும் நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.

கணவனுக்கு ஏற்ற மனைவியாக…..அவன் பெருமையை உயர்த்தும் பீடுடைய பெண்ணாக நடந்துகொள்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண். என்பது நீ அறியாதது அல்லவே!

விரைவில் உன்னையும், மாப்பிள்ளையையும் நேரில் காணும் ஆவலுடன் வழிமேல் விழிவைத்தபடி,

உன் அன்புப் பெற்றோர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க