அன்பு நண்பி மணிமொழிக்கு ஆதிரை எழுதியது.

இங்கு நான் நலமே.  அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலத்தையும் அறிய ஆவல்.

நீண்ட நாட்களுக்குப் பின் உன் கடிதத்தைப் பார்த்தவுடன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விட்டேன்.  ஆனால் அதில் உன் அண்ணன் மகன் பாலச்சந்தரின் திருமண முறிவு பற்றி நீ கவலையுடன் எழுதியிருந்ததைப் படித்தவுடன் மிகவும் வேதனையாகிவிட்டது.  அவனை எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது.  சிறு வயதில் நீ தானே அவனை வளர்த்தாய்?  அவனது பெற்றோரை விட, ‘அத்தை’ ‘அத்தை’ என்று உன்னிடம் தான் அவனுக்கு ஒட்டுதல் அதிகம்!

நீ குறிப்பிட்டிருந்தது போல், இக்காலத்தில் திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் மண முறிவு நிகழ்வது, மிகவும் கவலையளிக்கும் செய்தி தான்.   இக்கால பிள்ளைகளுக்கு எங்கும் எதிலும் அவசரம் தான்.  கண்டவுடன் காதல், பெற்றோரை எதிர்த்து அவசரத் திருமணம், மஞ்சள் கயிறு காய்வதற்குள்ளாகவே மணமுறிவு!

ஹிந்து பத்திரிக்கையில் மணமகன்/மகள் தேவை விளம்பரங்களில் பாதிக்குப் பாதி மணமுறிவு பெற்றவர்களின் விளம்பரம் வருவதைப் பார்த்தாயா? நம் குழந்தைகள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் மணி?

ஒரு குழந்தை பிறந்த பின்னரும், பாலுவின் மனைவி மணமுறிவு பெறுவதில்  ஆர்வம் காட்டுவது தான் பெரிய கொடுமை. குழந்தையின் நலனை உத்தேசித்தாவது, இருவரும் சேர்ந்திருக்கக் கூடாதா? சிறுவயதிலேயே பெற்றோரைப் பிரிந்து வாழ, அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது?

மணமுறிவுக்கு அப்பெண் வீட்டார் பதினைந்து லட்சம் கேட்கிறார்கள் என்பதையறிந்து அதிர்ச்சி.  மணமுறிவை இப்போது பெண்வீட்டார் ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் என்னுடன் வேலை பார்க்கும் விஜி என்பவரின் மகனுக்கும், இது போன்றே நடந்தது.  திருமணம் முடிந்த ஆறு மாதங்களுக்குள் விஜியின்  மருமகள், “இனிமேல் இங்கு வாழ முடியாது,” என்று சொல்லி விட்டு அவளது அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள்.  இரவில் அலுவலக நண்பர்களுடன் பார்ட்டியில் கூத்தடித்து விட்டு, நேரங்கழித்து வீட்டுக்கு வந்தவளைக் கணவன்   கண்டித்தானாம்.  தன் சுதந்திரத்தில்(!) தலையிடுவதாக அவனோடு சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டுக்குப் போனவள், போனவள் தான்.

இவர்களும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள்.  “பெண்ணையும் பையனையும் தனிக்குடித்தனம் வைத்து விடுகிறோம்;  நாங்கள் யாருமே வரமாட்டோம்,” என்றெல்லாம் கூடச் சொல்லிப் பார்த்தார்கள்.  ஆனால் அவள் எதற்கும் மசிவதாய் இல்லை.  ‘இனி இவனோடு சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை,’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாளாம்.

பெண்ணின் பெற்றோரும், அவளது அந்த முடிவுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்ற போது விஜி மிகவும் நொந்து போய்விட்டார்.  நம் பிள்ளையோ, பெண்ணோ இது போல் தவறு செய்யும் போது பெற்றோராகிய நாம் என்ன செய்வோம்?

திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்!  குடும்பத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்.  இரண்டு பேரும் வெவ்வேறு குடும்பத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் என்பதால், துவக்கத்தில் கருத்து வேறுபாடு இருக்கவே செய்யும்.  அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையை நாசம் செய்து கொள்ளக்கூடாது; விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையே ஈகோ என்ன வேண்டிக்கிடக்கிறது? என்றெல்லாம் நம் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லி, இருவருக்கும் சமரசம் செய்து வைக்கத் தானே முயல்வோம்?

ஆனால் இப்போது பெற்றோரே, தம் பெண்ணிடம், “நீயும் தான் அவனுக்கிணையாகச் சம்பாதிக்கிறாய்; நீ எதற்கு அடங்கிப் போக வேண்டும்?  பிரிந்து வருவது தான் சரி,” என்று பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில் இன்னும் அதிகமாக்குகிறார்கள்.  அல்லது “இது என் மகளுடைய வாழ்க்கை பிரச்சினை; இதில் அவள் தான் முடிவெடுக்க வேண்டும்; எங்களால் எதுவும் செய்ய முடியாது,” என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.  விளைவு?  மணமுறிவு!

அதற்கு நஷ்ட ஈடாக பையன் வீட்டாரிடம் பதினைந்து அல்லது இருபது லட்சம் எனப் பேரம் பேசுவது தான் எல்லாவற்றிலும் கொடுமை!  எத்தனை லட்சம் கொட்டிக் கொடுத்தாலும், நாசமாய்ப் போன தம் பெண்ணின் வாழ்வு சீராகி விடுமா என்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நாம் இருபது ஆண்டுகள் வேலை செய்து பெற்ற வருமானத்தை நம் பெண்கள் இருபது வயதிலேயே பெறுகிறார்கள் என்பது மகிழ்ச்சி தான்.    ஆனால் அதற்காக பெரியவர்களை மதிக்காமல்,  அவர்களது புத்திமதியை அலட்சியம் செய்யும் போக்கு, எதற்கும் விட்டுக்கொடுத்து வாழாத பிடிவாதம் தான் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

மேல்நாட்டுக் கலாச்சாரத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி நம்முடையதைக் காற்றில் பறக்க விட்டு விட்டுக் காதலர் தினம் கொண்டாடுவதும்,  திருமணத்துக்கு முன்பே, எந்தவிதக் கட்டுப்பாடுமின்றிக் காதலனுடன் சினிமா, பார்க் என்று சுற்றுவதும், ஆண் பெண் என்ற பேதமில்லாமல், மது அருந்துவதும்,  புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடு இரவில் பாட்டு, டான்ஸ் என்று பொது இடங்களில் கும்மாளம் அடிப்பதும்,  அங்கிங்கென்னாமல் எல்லா இடங்களிலும் மிகவும் சகஜமாகிவருகிறது. இதனால் பாரம்பரியம் மிக்க நம் குடும்பம் என்ற அமைப்பே, சிதைவுக்குள்ளாகும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் மணி!

இது தான் பெண்களின் உண்மையான சுதந்திரம் என்ற மாயையில் இவர்கள் உழலுவது தான் சோகத்திலும் பெரிய சோகம்!

கயலுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் துவங்கியிருக்கிறது மணி!  பையன்  ஏழையாக இருந்தாலும் படித்தவனாக, பண்புள்ளவனாக, நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாக, எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவனாக அமைய வேண்டும் என்பதே என் வேண்டுதல்!   அவளிடம் ஒரு அம்மாவாக மட்டுமில்லாமல், எந்த விஷயமானாலும் கூச்சப்படாமல் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு ஒரு தோழியாக நடந்து கொள்கிறேன்.  மேலும் அவளுக்கு நம் தமிழ்க் கலாச்சாரப் பின்னணி மற்றும் குடும்ப மதிப்பீடுகளைச் சொல்லியே வளர்த்திருக்கிறேன்.  எனவே மாமியார் வீட்டில், ‘பெண்ணை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்,’ என்ற நற்பெயரை அவள் எனக்கு வாங்கித் தருவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.  உனக்குத் தெரிந்த இடத்திலும், கயலுக்கு மாப்பிள்ளை பார்க்கவும்.

மற்றவை உன் அன்பு கடிதங்கண்டு பதில்,

இப்படிக்கு,

ஞா.கலையரசி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க