கவா கம்ஸ்

அன்புள்ள மணிமொழிக்கு,

     வணக்கம். நீ யார் என்று எனக்குத் தெரியும். நான் யார் என்று உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இந்த கடிதம் உனது வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பது மட்டும் சர்வ நிச்சயம். நான் கூறும் இக்கதையை கேள். அதன்பிறகு, நான் யார் என்பதை நீயே அறிந்து கொள்வாய்.

     அவள், சென்னையின் அந்த நேர்த்தியான சாலையில் திக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள். யாரையோ தேடுவதுபோல் தோன்றியது. அவளது விழிகளோ, பல நாட்கள் சூரியனைக் காணாத மலர்களை போல் வாடியிருந்தது. உதடுகள் பாலைவன நிலமாய் வறண்டு வெடித்திருந்தது. உடம்பில் விலையுயர்ந்தது என்று பார்த்தால் ஒரே ஒரு தங்க சங்கிலி மட்டுமே. காதில் பிளாஸ்டிக் தோடும் கைகளிலே மரவளையல்களும் அணிந்திருந்தாள். கால்களில் கொலுசு இருந்ததா இல்லையா என்பதை அவளது புடவை ரகசியமாய் வைத்திருந்தது.

     அந்த சாலையில் கார்களும் வேன்களும் தனக்கே உரிய வேகத்துடன் பறந்து கொண்டிருந்தன. ஓரமாய் சென்று கொண்டிருந்த அவள், தடுமாறியவளாய் சாலையின் உள்ளே நுழைந்து குடிகாரனை போலத் தள்ளாடி தள்ளாடி நடந்தாள். பலநாள் பட்டினி போலும். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த டாக்ஸி அவள் மேல் மோதியது. மயங்கி சரிந்தாள் அவள்.

     “ அம்மா ! அம்மா ! எழுந்திரு ! ரொம்ப அடி பட்டிடுச்சா ?,” என்று பதறினான் டாக்ஸி டிரைவர். பதில் ஏதும் கிடைக்காததால், அவளைத் தூக்கி டாக்ஸியில் போட்டுக் கொண்டு, கூட்டம் கூடும்முன் அங்கிருந்து கிளம்பி சென்று தப்பித்தான்.

     அவளை ஒரு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றான்.

“ உங்க பேர் என்ன ? ”, டாக்டர்.

“ ஹரி “, என்றான் டாக்ஸி டிரைவர்.

“ இந்த பெண் உனது மனைவியா ? என்ன கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்குது “, டாக்டர்

உண்மையை சொன்னால் போலீஸ் கேஸ் ஆகி உதைபடுவது உறுதி.

ஒரு முடிவுடன் , “ ம் …. ம் … அமாங்க ! “, என்றான் ஒரு பயத்துடன்.

“ பேரு ? “, டாக்டர்.

“ ம் .. ம் ..  ! .. ஹரிணி “, என்று கூறிவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டான். அந்த பெண் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

“ ரொம்ப பெரிசா ஒண்ணுமில்லை .. கை கால்ல லேசா சிராய்ப்பு … அவ்வளவுதான். நாலு நாளா சாப்பிடலை போல… புருஷன் பொண்டாட்டி சண்டைன்னா பட்டினி போடுவையா ? போலிச கூப்பிடணுமா என்ன ? “, என்று அதட்டினார் டாக்டர்.

     “ இல்லீங்க … இனிமேல் ஒழுங்கா பார்த்துப்பேன் .. “, என்றான் ஹரி.

     தன் வீட்டிற்கே அவளைக் கூட்டிச் சென்றான். சின்னதாய் ஒரு ஒட்டு வீடுதான் என்றாலும் அங்கிருந்தவர்களின் மனது மிகப்பெரியதாக இருந்தது.

     தனது அம்மா, அப்பா, தங்கையிடம் விவரமாக நடந்தவற்றை கூறினான். ஹரியின் தங்கை , “ ஹையா ! எனக்கு கதைபேச ஒரு ஆன்டி கிடைச்சாச்சு “, என்று குதூகலித்தாள்.

     “ அம்மா ! அப்புறமா அவ யாரு என்னன்னு விசாரிங்க. நான் எது கேட்டாலும் பதில் சொல்ல மாடேங்கறா. பேந்தப் பேந்த முழிக்கறா. முதல்ல அவளுக்கு சாப்பாடு கொடு. கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் கேட்டுக்கலாம் “, என்று அம்மாவிடம் ஹரி கூறினான்.

     நன்கு தூங்கி எழுந்த பின்னும் அவள் திரு திருவென்றே விழித்துக்கொண்டிருந்தாள்.

     நீ யாரம்மா ? எங்கிருந்து வந்திருக்க ? கைல துணிமணி, பணம் எதுவுமே இல்லாம எப்படி வந்த ? உங்க வீடு எங்க ? கொண்டுபோய் விட்டுடறோம் சொல்றியா ? “, என்றெல்லாம் கேட்டாள் ஹரியின் அம்மா.

     ஒரு மாணவனுக்கு, தேர்வில் அத்தனை கேள்விகளும் “அவுட் ஆப் சிலபஸ்” ஆக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவளுக்கு. அதிர்ச்சியாகி மயங்கி சரிந்தாள்.

     அதன்பிறகு அவர்கள் அவளை விசாரிப்பதையே நிறுத்திவிட்டனர். அவள் குடும்பத்தில் வாழ பிடிக்காமல் ஓடி வந்திருக்கலாம் என்று யூகித்தனர். செய்தித்தாளில் தகவல் கொடுக்கலாம் என்று யோசித்து, பின் அவளுக்கு பிரச்சனையை கொடுக்கலாம் என்பதால் அதையும் கைவிட்டனர்.

     நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்கள் ஆகின. நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அவள் அந்தக் குடும்பத்தினர் மனதில் ‘ஈஸி சேர்’ போட்டு நன்கு அமர்ந்துவிட்டாள். அவளுக்கும் அந்த குடும்பமே உலகமாய் ஆனது. தனது கடந்த காலத்தைபற்றி யோசிப்பதையே விட்டுவிட்டாள்.

                கூடவே ஹரிக்கும் அவளுக்கும் சிநேகம் காதலாய் மாறியது. ஆனால், அதை மனதளவில் உணர்ந்திருந்த இருவருமே வாய்விட்டுக் கூறிக்கொள்ளவே இல்லை.

     கணவன், குழந்தையென்று யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சம் ஹரிக்கு.

     “ நான் யார் ? “, என்ற கேள்விக்கே விடைதெரியாத  போது காதல் தனக்கு ரொம்ப அவசியமா ? என்ற பதபதைப்பு அவளுக்கு.

     அந்த நாள் ! அனைவரும் பயந்து கொண்டிருந்த அந்த நாள் வந்தேவிட்டது. ஆம், அவர்கள் கோவிலில் குதூகலித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வயதான பெரியவர் அவளை அடையாளம் கண்டுகொண்டார்.

     “ அம்மா ! மணிமொழி ! இத்தனை நாளா எங்கே போய்ட்ட … எங்க செல்வமே ! உங்கப்பா அம்மா உன்ன தேடாத இடமில்லை… என்னைத் தெரியலையா ? நான்தான் உன் பெரியப்பா மா ! “, என்று கூறி அழுதார்.

     அவர்களது சொந்த ஊர் மதுரை. அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரரின் மகள், மணிமொழி. காலேஜ் டூர் வந்த இடத்தில் அவள் விபத்துக்குள்ளானாள். அப்போது ஏற்பட்ட பாதிப்பில் அவளுக்கு பழைய நினைவுகள் அழிந்து போயின. அவளை பத்திரமாக பெற்றோரிடம் சேர்க்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்த சமயத்தில் அவள் காணாமல் போய்விட்டாள்.

     கல்லூரி பேரைக் காப்பாற்ற நிர்வாகமும், குடும்ப கவுரவத்தை காப்பாற்ற பெற்றோரும் போலிசுக்கு போகாமல் தாங்களே சென்னையில் தங்கி இரண்டு வருடங்கள் தேடினர். பின்பு, நம்பிக்கையிழந்து திரும்பிவிட்டனர்.

     இந்த விஷயங்களை அந்த பெரியவர் மூலமாக அனைவரும் அறிந்து கொண்டனர்.

     அவளுக்கு இது அனைத்தும் வேறு யாரோ ஒருவருடைய கதைபோல் இருந்தது.

     பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை தரப்பட்டது. ஒரு சிறிய ஆபரேஷன் செய்தால், பழைய நினைவுகள் அனைத்தும் வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனால், இந்த நான்கு வருடத்து நினைவுகள் அழிந்து போய்விடும் என்ற செய்தி ஹரிக்கும் அவளுக்கும் இடியாய் இறங்கியது.

     அவளின் பொக்கிஷ நினைவுகளை அழிக்கும் புண்ணிய நாளும் முடிவாகிவிட்டது.

     “ ஹரி “ “ ஹரி “ என்று சதா ஜெபம் செய்துகொண்டிருந்தாள்.

     இன்னும் பத்து நாட்களில் தன் ஹரியை தனக்கே அடையாளம் தெரியாது என்று எண்ணும்போதே அவள் கண்கள் சூடேறின. கண்ணீர் சுட்டது.

     அதற்காகத்தான், அதற்காகத்தான் இந்தக் கடிதம் !

     அவள் ஹரியை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை உணர்த்துவதர்க்காகவே இந்த கடிதம்.

ஆம். அந்த “ அவள் “ நீதான்.

ஹரியை விட்டுவிடாதே !

ஹரியை விட்டுவிடாதே !

     உன் மானம் காத்தவன் ! உனக்கென ஒரு குடும்பத்தைக் கொடுத்தவன் ! நிராயுதபானியாக நின்ற உனக்கு வாழ்வளித்தவன் !! அவன் இல்லையேல், எங்கோ யாரோ ஒரு காமவெறியன் கையில் சிக்கி சின்னாபின்னப்பட்டு இறந்திருப்பாய் ! ஹரி ஏழைதான். ஆனால், உத்தமன்.

ஹரியை மறந்துவிடாதே !

ஹரியை ஏமாற்றிவிடாதே  !!

என்று உனக்குக் கூறவே இக்கடிதம்.

நான் யார் என்று இப்போது அறிந்திருப்பாய்.

ஆம் ! அந்த நீ நான்தான்.

     நான் எனக்காகவே எழுதிக்கொள்ளும் கடிதம். இன்னும் பத்து நாட்களில் நான் நானாக இருக்க மாட்டேன் அல்லவா ? அதற்காகத்தான் இந்த கடிதம். இந்த நான்காண்டுகளில் எனக்கு என்ன ஆயிற்று என்று நானே என் கைப்பட எனக்கு எழுதிய கடிதம்.

     இதை நான் என் பெற்றோரிடம் கொடுக்கமாட்டேன். அவர்கள் கிழித்து எறிந்து விடுவார்கள். ஹரி பெற்றோரிடமும் கொடுக்க மாட்டேன். எனக்கு நல்லது செய்வதாக எண்ணி மறைத்துவிடுவார்கள். என் மனதை நன்கு உணர்ந்த எனது தோழி, ஹரியின் தங்கையிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். ஆபரேஷன் முடிந்தவுடன் இந்த கடிதம் என் கைகளில் கிடைக்கும்.

     பின்பு, இதே மலர்ச்சியுடன் எனது காதலுக்காகப் பெற்றோரிடம் போராடுவேன்.  நிச்சயமாக !

ஹரியிடம் எனது காதலை சொல்வேன், மணிமொழியாக !

–    அதுவரையில் காத்திருப்பேன்

ஹரியின் ஹரிணியாக !!!

11 thoughts on “அன்புள்ள மணிமொழிக்கு

 1. ரஞ்சனி அம்மாவிற்கு என் மனமார்நத நன்றிகள் 🙂

 2. மிக அருமை!!! ரொம்ப ரசித்துப் படித்தேன்! வாழ்த்துகள்!!

 3. முதல் பரிசு பெற்றதற்கு இனிய் வாழ்த்துகள்! ..

  கதை சொல்லும் கடிதம் அருமை..பாராட்டுக்கள்..!

 4. Its nice.. கால்களில் கொலுசு இருந்ததா இல்லையா என்பதை அவளது புடவை ரகசியமாய் வைத்திருந்தது.

 5. மிகமிக அற்புதமான கடித கட்டமைப்பு. முத்தான கடிதத்திற்கு பாராட்டுக்கள். முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

 6. @ புதுவை பிரபா :  மிக்க நன்றி 🙂

 7. அனைவருக்கும் வணக்கம். என்னுடைய எழுத்து ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த இடத்தில் தொடங்கியது. நான் எழுதிய முதல் கதை வல்லமையில் முதல் பரிசு பெற்றது. அந்த ஊக்கமே இப்பொழுது நான் ஒரு நாவலை எழுதி வெளியிடும் அளவிற்கு என்னை உயர்த்தியுள்ளது. எனது முதல் மர்ம நாவல் “பிராஜக்ட் ஃ” கடந்த வாரம் “தில்லித் தமிழ்ச் சங்கத்தில்” திரு. சாலமன் பாப்பையா அவர்களால் வெளியிடப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியுடன் வல்லமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  முழு விபரங்குக்கு https://www.facebook.com/பிராஜக்ட்-ஃ-மர்ம-நாவல்-748400878599401/

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க