Blog

  • குறளின் கதிர்களாய்…(485)

    குறளின் கதிர்களாய்…(485)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(485)

    திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
    தறனல்ல செய்யாமை நன்று.

           – திருக்குறள் – 157 (பொறைடைமை)

    புதுக் கவிதையில்…

    தகுதியற்ற கொடியவற்றைப்
    பிறர்
    தனக்குச் செய்தாலும்,
    அதனால் விளையும்
    அல்லல் கண்டு நொந்து
    அறனல்லாதவற்றை
    அவர்க்குச் செய்யாதிருப்பது
    அனைத்திலும் நன்று…!

    குறும்பாவில்…

    தனக்குப் பிறர் தகாதனவற்றைச்
    செய்தாலும், அதுதரும் துன்பத்தால் அறனல்லாதவற்றை
    அவர்க்குச் செய்யாதிருப்பது நன்று…!

    மரபுக் கவிதையில்…

    தகுதி யற்ற கொடியவைதான்
         தனக்குப் பிறரால் வந்தாலும்
    மிகுதி யாக வருந்துன்பம்
         மீது கொண்ட கருத்தாலே
    தகுதி யில்லா அவர்மீது
         தாங்க வியலா வகையினிலே
    புகுந்தே அறமே யிலாச்செயலைப்
         புரியா திருத்தல் நன்றாமே…!

    லிமரைக்கூ…

    தனக்குப்பிறர் செய்தாலும் கெடுதலே,                    
    தரணியில் நன்றாகும் தாம்நொந்தாலும் அவர்க்குத்
    தீங்கு செய்யாமல் விடுதலே…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    பொறும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த கொணமான
    பொறும வேணும்..

    தாங்கமுடியாத கெடுதல
    அடுத்தவன் நமக்குச் செஞ்சாலும்
    அதுனால துன்பப்பட்டத நெனச்சி
    நொந்துபோயி நாமளும்
    அவனுக்குக் கெட்டத
    செய்யாம இருக்கதுதான்
    எல்லாத்திலயும் நல்லது..

    அதால,
    வேணும் வேணும்
    பொறும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த கொணமான
    பொறும வேணும்…!

    Share
  • நல்லையல்லை!

    -மேகலா இராமமூர்த்தி

    நிலவைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. இன்பம் தருகின்ற அதன் தண்மையும், உடலை வருத்தாத நல்லொளியும் மக்கள் அனைவரும் விரும்பக்கூடியவை; அதனால் அல்லவோ ”நிலா நிலா ஓடி வா; நில்லாமல் ஓடி வா!” என்றும், ”அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?” என்றும் அந்த அம்புலியை ஆசையோடு அழைத்தனர் மக்கள்.

    அதுமட்டுமா? நிலவுதரும் இன்பத்தை, பயனைத் துய்ப்பதற்கென்றே அந்நாளில் நிலாமுற்றங்களை அமைத்தனர். 

    ”நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து” – (நெடுநல்வாடை – 95)

    நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து” – (சிலப் – அந்திமாலைச் சிறப்புச்செய் காதை – 31) என நிலாமுற்றம் குறித்துப் பேசுகின்றன பண்டைத் தமிழிலக்கிய நூல்கள். நிலாமுற்றத்துக்கு ’வேயாமாடம்’ என்ற பெயருமுண்டு.

    இன்பம் தருகின்ற ஒருபொருளே சில நேரங்களில் துன்பம் தருகின்ற ஒன்றாகவும் அமைந்துவிடுவது உண்டு. நிலவு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அவ்வகையில் நிலா தொல்லையாக உலாவிய சூழலை விவரித்து அதனைச் சாடுகின்றது இந்தக் குறுந்தொகைப் பாடல்.

    இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்கும் ஆவலில், கல்லும் முள்ளும் காடும் மேடும் தாண்டித் தலைவியின் வீடுநோக்கி வந்துகொண்டிருந்தான் தலைவன் ஒருவன். இவ்வாறு இரவுநேரத்தில் நிகழும் தலைவன் தலைவி சந்திப்புக்கு ’இரவுக்குறி’ என்று பெயர்சூட்டியது சங்க இலக்கியம்.

    அவ்வேளையில் வானில் காட்சியளித்த முழுமதி, சூரியனைத் தோற்கடிக்கும் வகையில் தன் ஒளிக்கதிர்களை வாரியிறைத்து வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. அதனைத் தலைவியின் வீட்டுவாயிலில் நின்றவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தாள் தலைவன் தலைவியின் காதலுக்கு உற்றதுணையாகத் திகழ்ந்த தலைவியின் தோழி. 

    காதலர் சந்திப்பைப் பிறருக்குக் காட்டிக்கொடுத்து அவர்களுக்கு ஏதம் விளைவிக்கும் வகையில் பளீரென்று வானில் ஒளிவிட்ட நிலாவின்மீது சுளீரென்று கோபம் வந்தது அவளுக்கு. எனவே, நிலவை எரித்துவிடுபவள்போல் சினத்தோடு நோக்கியவள்,

    ”நெடுநேரம் எறிக்கும் வெண்ணிலவே! கரிய அடிப்பகுதியினையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்துகிடக்கும் பெரிய பாறையானது, வேங்கைப் புலியின் குருளையைப்போல் (குட்டி) தோன்றும் காட்டுவழியில் தலைவியோடு களவுக்காதல் வளர்க்க வரும் தலைவனுக்கு நீ நன்மை தருவாய் அல்லை!” என்றாள் கடுமையாக.

    ”கருங்கால் வேங்கை  வீயுகு  துறுகல்
    இரும்புலிக்
     குருளையின்  தோன்றுங்  காட்டிடை
    எல்லி
     வருநர்  களவிற்கு
    நல்லை
     யல்லை  நெடுவெண்  ணிலவே.”  (குறுந்: 47  நெடுவெண்ணிலவினார்)

     

    அப்போது தலைவியின் வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்த தலைவனின் காதுகளில் தோழி நிலவோடு நடத்திய சூடான உரையாடல் விழவே செய்தது. அவன் காதுகளில் விழவேண்டும் என்பதுதானே அவள் நோக்கமும்!

    நிலவு தனக்குரிய இரவுநேரத்தில் மட்டுமே எறிக்கும் இயல்புடையதாயினும், அது விரைவில் மறையவேண்டும் எனும் தோழியின் எண்ணமே அது நெடுநேரம் எறிப்பதாய் ஒரு மாயத்தோற்றத்தை அவளுள் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால்தான், ’நெடுவெண்ணிலவே’ என்று அதனை விளித்தாள். 

    இரவுநேரத்தில் வானில் தோன்றும் முழுநிலா பகல்போல் ஒளியை விரித்துக் காதலர்க்கு இகலாகும் (பகை) எனும் செய்தியை,

    ”பகல்உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
    அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே” 
    (அகம்: 122 – பரணர்) எனும் அகநானூற்றுப் பாடலும் பேசுகின்றது.

    பொன்போலும் நிறங்கொண்ட வேங்கை மலர்கள் பாறைகளில் குவிந்துகிடப்பது அப்பாறையை வேங்கைப்புலியின் குருளையைப்போல் உருமாற்றி, அவ்வழி வருவோரை ஆங்கே ஒரு புலி படுத்துக்கிடக்கின்றதோ என்று கிலிகொள்ள வைக்கும் தன்மையுடையது.

    ஆதலால், தலைவன் இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வருதலும் ஆபத்தானதே; தவிர்த்தலுக்குரியதே; எனவே, இவ்வாறு உடலுக்கும் உயிருக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களை விடுத்துத் தலைவியை விரைவில் மணந்துகொண்டு நிலாவின் இன்பத்தைத் தலைவன் நிம்மதியாய்த் துய்க்கலாமே என்பதை அவனுக்குணர்த்தும் உள்ளுறை குறிப்பு தோழியின் கூற்றில் ஒளிந்துகிடக்கின்றது.

    இப்பாடலைப் பாடிய புலவர்பெருந்தகையின் பெயர் இன்னதென்று தெரியாத காரணத்தால் பாடலில் பயின்றுவரும் சிறந்த தொடரான ’நெடுவெண்ணிலவு’ என்பதை வைத்துப் புலவருக்கு ‘நெடுவெண்ணிலவினார்’ என்று பெயர் சூட்டிவிட்டனர் தமிழ்ச்சான்றோர்!

    இதில் இடம்பெற்றிருக்கும் ’நல்லையல்லை’ எனும் சொல்லானது பிற்காலக் கவிஞர்களையும் பெரிதும் ஈர்த்திருக்கின்றது; அதற்கான சான்று, கம்பராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.

    இராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் எனும் செய்தியை அறிந்த கைகேயியின் பணிப்பெண்ணும் தந்திரத்தில் வல்லவளுமான மந்தரை (கூனி) கடுஞ்சினம் கொள்கின்றாள். எப்படியாவது கைகேயியின் மனத்தை மாற்றி அவள் மகன் பரதனை நாடாளச்செய்யவேண்டும்; இராமனைக் காடேகச் செய்யவேண்டும் எனும் கொடுமனத்தோடு கைகேயியின் அரண்மனைக்குள் விரைவாக நுழைகின்றாள்.

    பால்போல் தெளிந்த மனமும், மைந்தன் இராமனிடம் அளவற்ற தாயன்பும் கொண்ட கைகேயியிடம் இந்தச் செய்தியைச் சொல்கிறாள். அதைக் கேட்டதுதான் தாமதம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கேகயன் குலக்கொடி, சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இரத்தினமாலை ஒன்றை மந்தரைக்குப் பரிசாய்த் தருகின்றாள். சீற்றத்தோடு அம்மாலையை வாங்கிய மந்தரை, தரை குழிவிழும் அளவுக்கு அதனை விட்டெறிந்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்திவிட்டுக் கைகேயியிடம் இராமனுக்கு எதிராகத் தன் துர்ப்போதனையைத் தொடங்குகின்றாள்.

    ஆரம்பத்தில் அதற்குச் சற்றும் செவிசாய்க்காத கைகேயி கூனியைப் பார்த்து, ”நீ எனக்கு நல்லவளுமில்லை; என் மகன் பரதனுக்கு நல்லவளுமில்லை; அவ்வளவு ஏன்… தருமத்தோடு சிந்தித்துப்பார்த்தால் நீ உனக்கே நல்லவளில்லை; விதியின் வேலையிது! அதனால்தான் உன் மனத்துக்கு இதமென்று படுவதைச் சொல்கிறாய் அறிவற்றவளே!” என்று வெகுள்கிறாள்.

    ”எனக்கு நல்லையும் அல்லை நீ
         என் மகன் பரதன்
    தனக்கு நல்லையும் அல்லை அத்
         தருமமே நோக்கின்
    உனக்கு நல்லையும் அல்லை
         வந்து ஊழ்வினை தூண்ட
    மனக்கு நல்லன சொல்லினை
         மதி இலா மனத்தோய்.” (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1470)

    இப்பாடலில் ”நல்லையும் அல்லை” என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதைக் காண்கின்றோம். சங்கப் புலவரான நெடுவெண்ணிலவினாரின் ’நல்லயல்லை’ எனும் சொல்லாட்சியையே கம்பர் இங்கே பயன்படுத்தியிருக்கின்றார் என்பது கண்கூடு.

    ”நல்லையல்லை” என்ற மந்திரச்சொல் கம்பரோடு நின்றதா எனில் இல்லை; 2017ஆம் ஆண்டு வெளியான “காற்று வெளியிடை” எனும் தமிழ்த் திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்தின் வரிகளில் உருவான ”நல்லை யல்லை நன்னிலவே நீ நல்லை யல்லை” என்ற பாடலிலும் இடம்பிடித்துக் ”காலத்தை வென்றவன் நான்” என்று மார்தட்டி நிற்கின்றது.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. குறுந்தொகை மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.
    2. அகநானூறு – நாவலர் திரு ந.மு வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பட்ட பதவுரை விளக்கவுரையுடன் பாகனேரி வெ பெரி பழ மு காசிவிசுவநாதன் செட்டியாரால் வெளியிடப்பட்டது.
    3. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

     

    Share
  • கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தனி மனிதர்கள் பலர், ஒன்றுபடச் சேர்ந்ததே சமூகம் எனச் சமூகத்திற்குத் தவறான விளக்கம் தரப்படுகிறது. 1,000 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடினாலும், அவ்வாறே 1,000 துறவிகள் ஒன்று கூடினாலும் அது சமூகம் ஆகாது. ஏனெனில் இந்த ஆயிரம் பேருக்கும் குடும்பப் பொறுப்பு என ஏதும் கிடையாது. என்றால் கூட்டமாகச் சேர்ந்திருப்பது சமூகம் ஆகாது. ஒரு இரயில் நின்றதும் 1,000 பேர் அதில் இருந்து இறங்கி தம் வழியே செல்கின்றனர் இது சமூகம் ஆகாது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பில் தான் குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்தம் குடும்பப் பொறுப்பானது இறக்கும் காலம் வரை 3-4 தலைமுறைக்கு நீள்கிறது. குடும்பத்தவர் தாம் உலகில் நிலைக்கப் பொருளைக் கொடுத்தும் கொண்டும் வாழப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் வெவ்வேறு மாற்றுத் தொழில் செய்வோரிடம் கூட்டுச் சமூகப் பொறுப்பு கட்டமைக்கப்பட்டு சமூகம் என்பது நாம் கண்கூடாகக் காணும் பொருள் போல உண்டாகிறது. தனிமனிதர்களான துறவிகள், பிச்சைக்காரர்கள் கூட்டமாக கூடினாலும் இப்படியான பொறுப்பை கொண்டிராததால் அவர்களை சமூகம் என்று அழைக்க முடியாது. ஆனால் இவர்கள்  சமூகத்தைச் சார்ந்து வாழ்பவர்கள். இந்த வெவ்வேறு மாற்று தொழில் செய்யும் குடும்பங்களால் தான் ஊர் என்பதே உண்டாகிறது. ஒரு குடும்பத்திற்கு அடுத்ததாக ஊர் என்பதே பெரிய சமூகம் ஆகும். அதுவே பல ஊர்களை உள்ளடக்கி நாடு என்று விரிகிறது. பல நாடுகள் இணைந்ததே தேசமென்ற பெரும் சமூகக் கட்டமைப்பு ஆகும். குடும்பம் சிதைந்து தனிமனித நலன் மேலோங்கினால் (ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும், திருமணமில்லா இருபாலார் கூட்டு வாழ்க்கை ஆகியவற்றால்) சமூக அமைப்பு, ஊரமைப்பு, நாட்டமைப்பு ஆகியன சிதைந்து விடும். ஊர்ச் சமூகம் நாடாக விரியும் போது நிர்வாகம், பாதுகாப்பு, பணம் போன்ற சமூக முறைமைகள் தேவைப்படுகின்றன. இந்த முறைமை வந்த பின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் தமக்கென தனியே படையைப் பேணி மண உறவால், படை சூழ்ந்த உறவுகளால் படைச்சாதி என்ற படைச் சமூகத்தை உண்டாக்கி இந்த சமூக இயங்கியலை கட்டுப்படுத்தினர். இந்த கட்டுப்பாட்டால் சில சமூகத்தவர் ஏற்றம் பெற்று எல்லா வசதிகளையும் உரிமைகளையும் அனுபவித்தனர். பலர் அதற்கு வெளியே வைக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டதால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு உண்டானது. அது எவ்வாறு கல்வெட்டில் வெளிப்படுகிறது என்று பார்ப்பதே இந்தப் பார்வை.

    சேலம் மாவட்டம் சேலம் வட்டம் பேளூருக்குத் தென்கிழக்கில் சின்ன ஏரிக்கரையில் உள்ள இரு கல்வெட்டுகள்

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. மிலாடாந
    3. ஜனனாத வள
    4. நாட்டுத் துரவி நா
    5. ட்டு வெளியூர் வண்
    6. ணாத்தி தாழி வடுகி 
    7. இட்ட தூம்பு   

    வெளியூர் – இன்றைய பேளூர்; தூம்பு – மதகு; மிலாடு – ஒன்றுகூடும் இடம்; தாழி – பருத்த, குண்டான

    விளக்கம் : முதலாம் இராசராசன் சிறப்புப் பெயரான சனநாதன் பெயரில் அமைந்த நாடு என்பதை கொண்டு இதன் காலம் முதற் குலோத்துங்கன் காலம் என்று தீர்மானிக்கப்பட்டது. இராசராசன் வெற்றிக்கு பின் ஒன்றுகூடும் இடம் சனநாதன் வளநாடு என்று பெயரிடப்பட்ட நாட்டில் அமைந்த துரவி நாட்டின் திறந்த வெளியூரில் (பேளுர்) வாழும் வண்ணாத்தி குண்டு வடுகி என்பவள் இந்த ஏரிக்கு மதகு ஒன்று அமைத்துக் கொடுத்தாள். இந்த ஏரியின் நீரில் தான் அவள் நாள்தோறும் ஊரார் துணிகளைத் துவைத்துக் காயவைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தாள். இந்த மதகால் ஏரி நீர் பாசனத்திற்கு அளவோடு வெளியேறும் அல்லாவிடில் முன்பு போல கால்வாய் மூலம் அதிக நீர் வெளியேறி ஏரி நீர் விரைந்து வற்றும் என்பதே காரணம்.

    பார்வை நூல்: கொங்கு இதழ் பிப்ரவரி 1974 பக். 39

    1. ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோ
    2. ழ தேவற்கு யாண்டு 41 வது 
    3. மிலாடாகிய ஜநநாத வளநாட்டு 
    4. த் துறவிநாட்டு வெளியூரா
    5. ன ஏரியில் ஏறி
    6. வீரபட்டணத்து வண்ணான் பி
    7. ச்சன் சொக்கன்
    8.  இடுவுத்த தூம்பு.

    எறிவீரபட்டணம் – வணிகர் படை ஊர்; இடுவித்த – கட்டி நிறுத்திய

    விளக்கம் : முதலாம் குலோத்துங்க சோழனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கிபி.1111 இல் சனநாத வளநாட்டில் அடங்கிய துறவிநாட்டில் உள்ள திறந்த வெளியூரில் (பேளூர்), வணிகர் தம் எறிவீரபட்டணத்தில் வாழும் வண்ணான் பிச்சன் சொக்கன் என்பவன் ஏரிக்கு மதகு கட்டினான்.

    மேல் உள்ள முதல் கல்வெட்டு போல் அல்லாமல் இதில் வேந்தனின் ஆண்டுக் குறிப்பும் பெயரும் உள்ளது. இதைக்  கொண்டு அந்த மதகும் கல்வெட்டும் இதே ஆண்டினது எனக் கொள்ளலாம். வண்ணாத்தி தாழி வடுகியும் வண்ணான் பிச்சன் சொக்கணும் உறவினர் ஆதல் வேண்டும். மிக அரிதாக வண்ணார் செய்த சமூகப் பங்களிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: கொங்கு இதழ் மார்ச்சு 1974 பக். 68

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மர் திருபுவனச் சக்கர 
    2. வத்திகள் ஸ்ரீ பராக்கிரம பாண்டி
    3. ய தேவர்க்கு யாண்டு 9 ஆவது ஆனி மாதம் 10 தில் 
    4. நாலாயிர நாடாழ்வானேன் என் 
    5. மனையான அஞ்சாந் தெருவில் 
    6. மேற் சிறகில் தெற்
    7. கொரு மனை விட்டு உ 
    8. ள்ளில் மனை ஒன்று 
    9. காரிமகன் சிவநாய
    10. னுக்கு விற்றேன். 
    11. இப்படிக்கு ஊரக 
    12. ம் கற்பகத்து அறிவேந்     

    சிறகில் – குறுக்கு தெரு, cross street; உள்ளில் – உள் வீடு; ஊரகம் – ஊர் அதிகாரி; கல் பகத்து – பகுத்து விலை கூறல், கல்பெயர்த்து வை

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 9 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1324 ஆனி மாதம் 10 ஆம் நாளில் நாலாயிர நாடாழ்வானான நான் இவ்வூரில் ஐந்தாம் தெருவில் மேற்கே உள்ள குறுக்கு தெருவின் தெற்கே ஒரு வீடு தள்ளி உள் இருந்த மனை ஒன்றை காரியின் மகன் சிவனாயனுக்கு விற்றுவிட்டேன்”. இப்படி விற்ற வீட்டை கல் பெயர்த்து நாட்டியதை அறிவேன் என்று ஊர் அதிகாரி கையொப்பம் இட்டார்.

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் நாலாயிர நாடாழ்வான், காரி மகன் சிவனாயன் ஆகிய பெயர்களை உற்று நோக்குங்கள் இவர் இருவரும் அரச குடும்ப வழி மணம் புரிந்த படைத்தளபதி சாதியர் என்று தெளிவாகிறது. ஐந்தாம் தெரு வடக்கு தெற்காக நீண்டிருந்தால் தான் அதன் மேற்கில் குறுக்கு தெரு அமைய முடியும். அதில் இரண்டாம் வீடு நீண்டு தென்புற புழைக்கடையில் இன்னொரு வீட்டை கொண்டு இருந்துள்ளது. கோவிலுக்கு சற்றும் தொடர்பில்லாத இரண்டு தனி ஆள்களின் கொடுக்கல் வாங்கல் செய்தி ஏன்? எப்படி? இந்த கோவிலில் பதியப்பட்டு ஆவணமானது என்பது ஒரு கேள்வி.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 122 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மரான திருபுவன
    2. ச் சக்கரவத்திகள் ஸ்ரீ பராக்கிறம பாண்
    3. டிய தேவற்கு யாண்டு 10 ஆவது ஆனி
    4. மாதம் 22ந் தியதி நான்று தென் பத்தரா
    5. யனேன் யென் மனையான இரண்டான் தெரு
    6. வின் மேல் சிறகில் தலைமனையில் மனை
    7. ச பணியிருக்கும் அண்ணாமலைய் மகன் நாழி
    8. ப் பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இவை 
    9. அறிவோ
    10. ம் 

    ஞான்று – போது; தியதி – நாள்; மனை எச்ச – வீட்டு வேலை; தலைமனை – வளமனை, bungalow

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1325 ஆனி மாதம் 22 ஆம் நாளின் போது தென் பத்தராயனான நான் என்னுடைய வீடான இரண்டாம் தெருவிற்கு மேற்கு வரிசையில் உள்ள பெரிய வீட்டில் வேலை செய்யும் அண்ணாமலை என்பவர் மகன் நாழிப்பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இந்த விவரத்தை அறிவோம் என்று கையெழுத்து இட்டுள்ளனர். இதில் எதை, எந்த வீட்டை விற்றார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை. பத்தராயன் தன் இன்னொரு வீட்டை விற்றார் என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏனெனில் பெரிய வீட்டை வாங்கும் அளவிற்கு பணியாளுக்கு பணம் இருந்திருக்குமா? பத்தராயன் பெயர் அவரை அரச குடும்பத்தவர் என்று காட்டுகிறது. எனவே தான் அவருக்கு வளமனை இருந்துள்ளது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 123 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    தென் ஆர்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீசுவரர் கோயில் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவற்திகள் ஸ்ரீ இராச தேவற்கு யாண்டு 11 வது உத்தம (நீ)திய்யா
    2. பெருங் கீத்தி முத்தமிழாலையாமும் மையு நிறைந்தோர் எழுபத்தொன்பது நாட்டு மில
    3. டாகிய ஜனநாதவள நாட்டு மேலாராற்றூர் கூற்றத்து திருவலஞ்சுரத்தில் இருங்கோ
    4. ளப்பாடி நாட்டோமுங் குந்றக் கூற்ற நாட்டோமும் துண்ட நட்டோமுந் திருமுனைப்பாடி
    5. நாட்டோமுஞ் செங்குந்ற நாட்டோமும் வாணகப்பாடி நாட்டோமும் ஆண்டய் நாட்டோ
    6. மும் பங்கள நாட்டோமும் மேல்கரை நட்டோமும் கங்கப்பாடி நட்டோமும் பரணூற்(று) நா
    7. ட்டோமும் எம்மிலிசைந்து உடையார் திருவலஞ்சர உடையநார் கோயில் கல்வெட்டியதாவது இந்
    8. நாட்டு மலையமார்களும் நத்த மக்களும் இடங்கைத்திலே பாவாடை ஏறினோம். இடங்கைக்கு 
    9. கண்ணுங் கையுமாய் புல்லும் பூமியுள்ளவு நிற்க கடவோம். இதில் பிழங்கில் மாறுசாதிக்கு தாழ்வு 
    10. செய்தோமானோம்.

    இசைந்து – விரும்பி; மலையமார் நத்த மக்கள் – பார்க்கவ குல சாதியில் நயினார், உடையார் பட்டம் உள்ளவர்; பாவாடை – இறைவன் திருமேனி முன் உறுதி கொள்; பிழங்கில் – தவறினால்; மிலாடாகிய – ஒன்று கூடும் இடம், assembling point; மில் – சேர்க்கை, நெருங்குதற் கருத்து. இந்தியில் இன்றும் சந்திப்பு என்பது மிலா எனப்படுகிறது

    விளக்கம் : இரண்டாம் இராசராசன் 11 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1161இல் உடையார்களின் மெய்கீர்த்தியை கூறித் தொடங்கும் இக்கல்வெட்டு ” 79 நாட்டவர் ஒன்றுகூடும் ஜனநாத வளநாட்டின் மேலாராற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சுரத்தில் இருங்கோளப்பாடி நாட்டு (விருத்தாச்சலம் பெண்ணாடம்), குன்றக் கூற்ற நாட்டு (பெரும்பழுவூர்), துண்ட நாட்டு (பெரம்பலூர்), திருமுனைப்பாடி நாட்டு (சேந்தமங்கலம்), செங்குன்ற நாட்டு , வாணகப்பாடி நாட்டு (விழுப்புரம் சங்கராபுரம்), ஆண்டை நாட்டு, பங்களநாட்டு (வேலூர் – திருப்பத்தூர்), மேல்கரைநாட்டு (ஈரோடு), கங்கப்பாடி நாட்டு (தருமபுரி), பரணூற்று நாட்டு என 11 நாட்டின் பார்கவ குலத்தவர் நாமே விரும்பி திருவலஞ்சுர ஈசன் கோவிலில் கல்வெட்டுவித்தது யாதெனில், இந்த நாடுகள் அனைத்தின் மலையமார், நத்த மக்கள் ஆகியோர் இடங்கைப் பிரிவிலே சேர்ந்தோம். இனி இடங்கைப் பிரிவிற்கு கண்ணும் கையுமாய் புல்லும் பூமியும் உள்ளளவும் இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். இதில் தவறினால் வேற்று சாதியை தாழ்வாக நடத்திவிட்டோம் என்றாகும்”.

    இக்கல்வெட்டு மூலம் பண்டு தமிழகத்தில் 79 நாடுகளுக்கு மேல் இருந்துள்ளன என்று அறிந்து கொள்ளலாம். காலம் எப்போதும் போல மாறாமல் இருந்தால் இந்த உறுதிமொழியை அப்படியே காப்பாற்ற முடியும். ஆனால் 50 ஆண்டுகள் கழித்து காலம் மாறியது பிற சாதிகளுக்கு காணி விற்க கூடாது என்று முடிவுகொண்டு இவர்களே இந்த உறுதிமொழியை தகர்ப்பதை கீழ் உள்ள கல்வெட்டுகளை படித்து விளங்கிக் கொண்டால் புரியும்.

    பார்வை நூல்: ஆவணம் 11, 2000 பக். 32

    திருச்சி மாவட்டம் முசிறி  வட்டம் கரட்டாம்பட்டி நடுகல்

    ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப் பரகேசரி பர்மருக்கி யாண்டு 35 ஆவது. இவ்வாண்டு மியமானாட்டு வள்ளுவப்பாடி, விரியூர் ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ் சுருனிமான்கள்  நிரை கொண்டு போக நிரைப் பின்பு சென்று ஆடு ஈடு கொண்டு பட்ட நாகன் வீரன் மகளுக்கு ஓர் (ரோ)ரால்  இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்   

    சுருனி > சுருதி – கேட்டல்; நிரை – மந்தை; ஈடு – இழந்தவற்றுக்கு மாற்றாக; ஓர் ஓர் – ஒரே நினைப்பாக, இரண்டாம் கருத்து இல்லாமல், no second thought; இறையிலி – அரசனுக்கு வரி செலுத்த வேண்டாத நிலம்

    விளக்கம் : மதுரையை கைப்பற்றி ஆண்ட முதற் பராந்தகனின் 35 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி 942 நிகழ்ச்சி. இந்த ஆண்டில் மியமாநாட்டில் அடங்கிய வள்ளுவப்பாடி, விரியூர் ஆகிய ஊர்களின் ஆடுகளை ஊற்றத்தூர் நாட்டின் பாடாவூ(லூ)ரைச் சேர்ந்த மூப்பனார் மறவர்களான ஐந்து நாட்டு சுருதிமான்கள் மந்தையாக கொள்ளை கொண்டு போயினர். கொள்ளை கொண்ட ஆட்டு மந்தையின் பின்னே தொடர்ந்து சென்று இழந்த ஆடுகளுக்கு மாற்று ஆடுடன் மீண்டு திரும்பிய பின் வீரசாவடைந்தான் நாகன் என்பவன். அந்த வீரன் மகளுக்கு இரண்டாவது மாற்று கருத்து ஏதும் இல்லாமல் அனைவரும் ஒரே சிந்தனையுடன் முடிவெடுத்து இறையிலி நிலக்கொடை கொடுத்தோம் விரியூர் ஊராரோம் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    ஐந்து நாடு என்பது ஊட்டத்தூர், திருப்பிடவூர், பாச்சில், திருவெள்ளறை, சென்னிவலக் கூற்றம் என்னும் ஐந்து நாடுகள் கொடுக்கப்பட்டு குடியேறியதால் ஐந்து நாட்டு சுருதிமான்கள், அஞ்சுநாட்டார் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய பார்கவ குல சுருதிமான் அல்லது மூப்பனார் குல மக்கள் ஆவர்.

    பார்வை நூல்: வரலாற்று குழு வலைத்தளப் பக்கம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் பெரிய குறுக்கை அகரம் இலட்சுமி நாராயண பெருமாள் சிதிலமடைந்த கோவிலில் கண்டெடுத்த 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ 
    2. குறுக்கைத் 
    3. திருச்சிற்றம்ப
    4. லச் சதுர்வே
    5. தி மங்கலத்
    6. துத் திருமுற்ற
    7. ங்களும் இந்
    8. த அகரமும் ஐ
    9. ஞ்சு நாட்டு
    10. ச் சுருதிமா
    11. ந்கள் கா
    12. வல்   

    முற்றம் – ஊரின் வெளியிடம், அகரம் – பிராமணர் குடியிருப்பு; சுருதிமான் – மூப்பனார் சாதி படை மறவர்.

    விளக்கம் : இவ்வூரின் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் மூன்றாம் இராசராசனின் 24 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி. 1240) கல்வெட்டு இவ்வூரை “குறுக்கை திருச்சிற்றம்பலத்து சதுர்வேதி மங்கலம்” என்கிறது. சுருதிமான்கள் இடங்கைப்பிரிவினர். உழு தொழில் செய்பவர் என்கிறது ஊற்றத்தூர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. இந்த ஊரின் கோவில்களைச் சுற்றியுள்ள வெளியிடங்களும் பிராமணர் அக்கிரகாரமும் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களின் காவலுக்கு உட்பட்டவை என்கிறது இக்கல்வெட்டு. இதில் இருந்து மூப்பனார் போர் புரிபவர் குடியினர் என்று உணர முடிகிறது. போர்க்குடி என்றால் அரச குடியுடன் மணஉறவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த வகையில்  சுருதி மான்கள் படைத் தலைவர்களாக அரையர்களாக கிழார்களாக இருந்துள்ளனர்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 17, பக். 8-9, த நா தொ து வெளியீடு

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் ஊர்த்தெருவில் நடப்பட்ட கற்பலகையில் பொறித்த 67 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்தி ஸ்ரீ / கொலோத்துங்க சோழ / தேவற்கு யாண்டு 10  ஆவது / வடகரை கரிகாலகந்ந வள / (நா)ட்டு வந்நாட்டு பிரிதிசூர சது / (ப்)பேதி மங்கலமாந பிரம / தேசத்தை எங்களய்யந் ராஜரா / ஜ  வந்நாடுடையார் இவூரை / வல்லுவந் புலியநாந  இருப / த்து நால்ப்   பேரரையந் உ / ள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி / செய்து குடுத்தார். ஸ்ரீ ரா / ஜராஜ தேவற்கு யாண்டு 6  / ஆவது திருவையாறுடையா / ந் கரிகால சோழநான  சனநாத / வந்நாடுடையாநும் நந்தம / ரில்  நாந _ _ _ வந்நாடுடை / யாநும் இவ்வனைவோமும்  பி / ரமதேசமுடைய பள்ளிகள் / நாட்டரையநுக்கும் புலியந் / மாதநாந மகதை நாட்டு / பேரையநுக்கும் புலியந் / பெரியாநாந வந்நாட்டு நா / டாழ்வாநுக் / கும் புலியந் / நாந திக்கும் சா / த்தந் பெரியா / நுக்கும் சோ / மந் புலிய நு / க்கும் இவர்கள் / வங்குசத்துக் / கல்லது மற் / று பிராமண / ர் வெள்ளாளருள் /ளிட்டாருக்கும் / பள்ளிக்கும் வி / ற்க கடவதல் / லவாகவும் / சந்திராத்த / வல்  முள்ளத / னையும்  எங்க / ள் வங்குசம் / __ _ / _ _ _ / _ _ _ / _ _ _ / _ _ வாலிகண்டபுரத்து _ டின் முக்கூட்டு மொக்க எழு / கும் தென்பாற்கெல்லை / க்கு வடக்கும் மேற்பாற் கெல் / லை அனுக்கூர் எல்லைக்கு கிழக் / கும் வடபாற்கெல்லை சிறுவி / சலூர் எல்லைக்கு தெற்கும் இந்த நாலெல்லைக்குப் / பட்ட நிலம் இவர்கள் இ _ _ _ / க்கு வேண்டுவநவு / ஞ் செய்து சோப்பை _ – / த்து கொடு இருந்தமை _ _ _ ம / கதை நாட்டு பேரையந்  / புலியந் பெரியாநாந வந்நாட்டு  நாடாழ்வாநும் / _ _ _ _ / ணநாத வந்நாடுடையாநும் / இராசராச வந் நாடுடையா  / னும் விருபேரமுப் / _ _ _ _ / ன் வல்லவரையன் சத்தி / யம்                

    ஐயன் – தந்தை; பேரையன் – படைத்தலைவன்; நந்தமர்  – உடையார் சாதி; வங்குசம் – வம்சம்; பள்ளிகள் – வன்னியரில் ஒரு பிரிவினர், மொக்க – முழுவதுமாக; எழுகும் – பரவும், தோன்றும்; சொப்ப – செப்பமாக, neatly; கொடு – தீங்கு

    விளக்கம் : சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1188), வடகரை கரிகாலக்கன்ன வளநாட்டு வந்நாட்டின் ஊரான பிரிதிசூர சதுர்வேதி மங்கலமான பிரம்மதேசத்தை எங்கள் தந்தை ராஜராஜ வந்நாடு உடையார் என்னும் அரசர் அல்லது கிழார் வள்ளுவன் புலியனான இருபத்தினால் பேரரையன் உள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி (உரிமை நிலம்) செய்து கொடுத்தார் என்று வல்லவரையன் கூறுகிறான். இந்த வல்லவரையன் தூண்டுதலில் 34ஆண்டுகள் கழித்து இப்போது சோழ வேந்தன் மூன்றாம் இராசராசனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1222) திருவையாறுடையான், கரிகாலச் சோழனான ஜனநாத வந்நாடுடையான், உடையார் சாதி நந்தமரில் நாந_ _ _ வந்நாடுடையான் ஆகியோர் வல்லவரையனுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவு யாதெனில், “பிரம்மதேசத்தினுடைய பள்ளிகளான நாட்டரையனுக்கும், புலியன் மாதனான மகதை நாட்டு படைத் தலைவனுக்கும், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வானுக்கும், புலியானான திக்கும் சாத்தன் பெரியானுக்கும், சோமன் புலியனுக்கும் ஆகிய  இவர்கள் ஐந்து வம்சத்தை சேர்ந்த பள்ளிகள் தவிர்த்து வேறு எந்த பிராமணருக்கோ, வெள்ளாளருக்கோ அல்லது பள்ளிகளுக்கோ விளை நிலத்தை விற்ககூடாது. இதை  சந்திரனும் ஞாயிறும் உள்ள வரை எங்கள் வம்சத்தார் கடைபிடிக்க வேண்டும். இந்நிலம் வாலிகண்டபுரத்தின் _ _ _ டின் முக்கூட்டு இருந்து முழுவதும் பரவியுள்ள தென்பகுதி எல்லைக்கு வடக்கிலும் மேற்குப்பகுதி எல்லை அனுக்கூர் எல்லைக்கு கிழக்கும் வடபகுதி எல்லையில் சிறுவிசலூர் எல்லைக்கு தெற்கும் ஆக இந்த நான்கு எல்லைக்கும் உட்பட்ட நிலம் ஆகும்” என்று எல்லை சுட்டப்பட்டுள்ளது. இது நிறைவேற இவர்கள் வேண்டிய நடவடிக்கை எடுத்து செப்பமாக (fully, neatly) அதில் தீங்கில்லாமல் இருக்க வேண்டும். மகதை நாட்டு பேரையன், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வான், _ _ ஜனநாத வந்நாட்டுடையான், இராசராச வந்நாடுடையான், விருபேரமுப்_ _ _ ஆகியோர் ஐவரும் இவ்வாறு நடப்பதாக வல்லவரையனுக்கு சத்தியம் செய்து கொடுத்தனர்.

    வல்லவரையன் ஒரு குறுநில அரசன் அல்லது கிழான் என்று தெரிகிறது. இவன் தூண்டுதலால் 1222 இல் இந்த காணி விற்பனைத் தடை நடவடிக்கையை நந்தமரோடு (உடையார் சாதி) சேர்ந்து கொண்டு மேற்கொள்ளக் காரணம் எதுவாக இருக்கும் என்று எண்ணுங்கால் இது சமூக பாதுகாப்பு நடவடிக்கை அல்ல என்று மட்டும் புரிகிறது. ஏனெனில் பிராமணரோ பிள்ளைமாரோ பள்ளிகளோ இவர்களுக்கு அச்சமூட்டுபவர் அல்லர். எனவே இதை ஒரு ஒடுக்குமுறையின், அடக்குமுறையின் முதல்படியாக கொள்ள வேண்டி உள்ளது. இவர்களுக்கு தமது உழு நிலத்தை விற்றால் இவர்கள் அந்த ஊரில் வந்து குடியேறுவர். அத்தோடு நில்லாமல் இந்த அரசகுடி மண உறவுடைய படைச் சாதியார் போலவே தாமும் எல்லா உரிமைகளையும் பெற உரிமை கோருவர். அப்படி உரிமை கொடுத்தால் இந்த படைச் சாதிக்கும் புதிதாக உரிமை பெற்ற சாதியாருக்கும் வேறுபாடு இல்லாமல் போகும். முன்பு இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு தம் முன் குனிந்து கைகட்டி நின்றவர் இனி அச்சமின்றி நிமிர்ந்து செல்வர். தமக்கு எந்த மதிப்பும் இனி இருக்காது  என்ற அச்ச எண்ணமே இதற்கு காரணமாக எனலாம். இதே காலகட்டத்தில் தான் கொங்கு நாட்டில் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் ஆட்சியில் அதற்கு முன் இல்லாத சில உரிமைகள் கோவில் பணி மக்களான கம்மாளர், சிவப்பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோர் தம் வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டலாம், வீட்டுச்  சுவருக்கு சுண்ணாம்புப் பூசலாம், வாயிலுக்கு இரட்டை கதவு வைக்கலாம், காலுக்கு செருப்பு அணியலாம், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் உரிமைகள் தரப்பட்டன என்பதை அங்கத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே இந்த வல்லவரையனின் கல்வெட்டின் மூலம் உண்மையாகவே இந்த சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை இந்த படைச் சாதியார் தான் அதிகாரத்தில் இருந்து கொண்டு நடப்பித்தனர் என்று உறுதியாகிறது. இந்த படைச் சாதியர் தான் இன்று தமிழகம் முழுவதும் நிலவுடைமை சாதிகளாக உள்ளனர். இவர்களில் வெள்ளைத் தோல் ஆரியர் அதிகம் உண்டு என்பது அரசகுடிக் கலப்பால் அது ஏற்பட்டது என்பதை உணர்க. இதாவது, அரசகுடிக்கு பெண் கொடுத்து அரசகுடிப் பெண்ணைக் கொண்டதால் இப்படி நேர்ந்தது எனலாம். அதனால் தான் பார் ஆண்டவர், மண் ஆண்டவர், அடக்கி ஆண்டவர், ஆண்ட பரம்பரை என்று இவர்கள் மார்த் தட்டுகின்றனர்.  இந்த கல்வெட்டின் மூலம் இக்கல்வெட்டு கூறும் உண்மைக்கு எதிர்மாறாக தான் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளையர் முதற்கொண்டு தலித்தியர், திராவிடவியலர், கம்யூனித்துகள் போன்றோர் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத் தாழ்வையும் இந்து மதம் தான், சனாதன தர்மம் தான், பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்ற பேச்செல்லாம் பொய்ப் புனைவுகள் என்றாகிவிட்டன அன்றோ !! தமிழ்நாட்டின் 60,000 தமிழ்க் கல்வெட்டுகளும் முழுவதுமாக படிக்கப்பட்டு அச்சேறினால் வரலாற்றில் நடந்த உண்மைகள் அத்தனையும் ஆய்வின் வெளிச்சத்திற்கு வரும். பொய்கள் தகரும்.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டுக்கள் செப்பேடுகள் பக். 154-156 ஆசிரியர்: இல. தியாகராஜன் & ஆவணம் 23, பக்.58 – 59

    அரியலூர் மாவட்டம் வாரணவாசி மருதமுத்துக் கவுண்டர் கொல்லையில் நடப்பட்டுள்ள 44 வரிக்  கற்பலகைக் கல்வெட்டு

    திருபுவனச் சக்க / ரவத்திகள் இராச / ராச தேவற்க்கு / யாண்டு 21 வதின் எதிராமா / ண்டு உடையார் திருவாலந்து / றை நாயனார் / தேவதாந / ங் கீழ்ச் சார் / ஆந வாரணவாசி / யில் காணி இ / வாரணவாசி / உடையாந் / வந்தவர் வி / ற்றல்  ஒற்றி வை / க்குதல் / செய்வார் தந் சா / தியாற்கு / விற்பது த / ன் சாதி த / விர விற்றார் / உண்டாகி / ல் நாயிலு(ம்) / பந்றியிலு(ம்) / கடையா / க குத்தி நூ / ர கடவதாக / வும் கீழ்ச்சா / ர் ஆந ஐஞ் / சு நாட்டுக லூற்கு / விலங் / கல் உண்டாகில் நா /ங்கள் / ளே ஏறட்டு / கொண்டு தீ / த்துக் குடுப் / போம் ஆக க / ல் வெட்டி நா / ட்டி குடுத்தோ / ம் அஞ்சு / நாட்டோம்.     

    எதிர் – அடுத்த , successive; காணி – விளை நிலம்; வந்தவர் – புதிதாக குடியேறியவர்; ஒற்றி – அடமானம்; கடையாக – கீழாக; நூர – அழிய; விலங்கல் – குறுக்காக, இடைஞ்சலாக; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; தீத்து – கழித்து, இல்லாதாதல், விலக்கு, முடித்தல்; அஞ்சு நாட்டோம் – சுருதிமான்கள் என்னும் மூப்பனார்கள்

    விளக்கம் : மூன்றாம் இராசராச சோழனின் 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1238) திருவாலந்துறை இறைவனுக்கு தேவதானமாக கொடுக்கப்பட்ட கீழ்சாரான வாரணவாசியில் உள்ள விளை நிலத்தை இந்த வாரணவாசியில் வாழ்பவர் புதிதாக வருபவருக்கு விற்றாலோ அடமானம் வைத்தாலோ அது தன் சாதியாருக்கு மட்டுமே விற்பதாகவே இருக்க வேண்டும். தன் சாதியார் தவிர மாற்று சாதியாருக்கு விற்பாரானால் அவரை நாயை விட, பன்றியை விட கேவலமாகக் கருதி குத்திக் கொல்லுக.  கீழ்ச்சாரான ஐந்து நாட்டு ஊர்களுக்கு இடைஞ்சலாக ஏதேனும் நடக்குமானால் நாங்களே முன்வந்து அச்சிக்கலை முடித்து வைப்போம் என்று கல்வெட்டி புதைத்து நிறுத்தினோம் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களோம் என்று மூப்பனார்கள் ஆணை வெளியிட்டுள்ளனர்.

    இந்த கல்வெட்டு மூலம் பிற சாதியார் தம் ஊர்களில் குடியேறுவதை தடுக்கும் ஒரு உத்தியாகவே இந்த நடவடிக்கையை படைச் சாதியாரான மூப்பனார்கள் மேற்கொள்கின்றனர் என்பது தெளிவு. இது ஏனெனில் உழு நிலம் வாங்குபவர் இந்த ஊரில் வந்து நிரந்தரமாக குடியேறுவார். பின் இந்த படைச்சாதி மூப்பனார்களைப் போல தாமும் எல்லா உரிமைகளையும் பெற கோரிக்கை வைப்பர். அதனால் அரசகுலத்துடன் மணவுறவு உள்ள படைச் சாதியாரான தமது கௌரவம் கெடும் என்ற அச்சம் தான் காரணம். இதே காலகட்டத்தில் கொங்கு  நாட்டில் வீரராசேந்திரனின் ஆட்சியில் கம்மாளர், சிவ பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோருக்கு முன்பு இல்லாத உரிமைகளான வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டல், வீட்டிற்கு சுண்ணாம்பு பூசல், இரட்டைக் கதவு வைத்தல், காலுக்கு செருப்பு அணிதல், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் தரப்பட்டன. அப்படி ஒரு உரிமைக் கொடுப்பு ஏதும் இவர்களது ஊரில் நிகழக் கூடாது என்ற கருத்தே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்பது மேலுள்ள சில கல்வெட்டுகளால் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 267 – 269 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டம் ஏறகுடி 20 வரிக் கல்வெட்டு

    1.  ஸ்வஸ்தி ஸ்ரீ  கொர்சடைய பன்மர் திருபுவனச் ச
    2. க்ரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டி தேவ 
    3. ற்க்கு யாண்டு 25 வது ஆவணி மாதம் 5 தி 
    4. நாள்  பழுவூர்பற்று திரணி நாட்டவரும் கண்
    5. டராதித்தன்  பிடாகைத் திரணி நாட்டவரும் இ
    6. றைக் குடியில் பெரியநாடான ஆலடியில் 
    7. (டியில்) நிறைவற நிறைந்து குறைவறக் கூ
    8. டி எங்களில் இசைந்து ஒருமைப் பிடிபா
    9. டு பண்ணின பரிசாவது பழுவூர் பற்றினா
    10. லும்  கண்டராதித்தன் பிடாகையிலும் பல பற்றி
    11.  லும் நாங்கள் கொண்டுடை வோமாய் நா 
    12. ங்கள் ஆண்டு போதுகிற நிலக் காணிகளும் 
    13. நத்தக் காவல் காணிகளும் காப்புக் காணி 
    14. களும் மற்றும் எப்பேற்பட்ட உரிமைகளும் 
    15. எங்கள் ஆண் மக்களே இந்தக் காணி ஆள
    16.  _ _ வும். இப்படி இசைந்து ஒரு
    17.  மைப் பிடிபாடு பண்ணினோம் பழுவூர்ப்பற்று ஐ
    18. ஞ்சு நாட்டவரும் கண்டராதித்தன்  பிடாகை ஐ
    19. ஞ்சு நாட்டவரும் இவ்வானைவரோம்.
    20.  இப்படிக்கு இவை சொக்கனார் எழுத்து.

    பிடாகை – உட்கிடையூர்; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; பரிசாவது – ஏற்பாடாவது; பற்று – ஒதுக்கிய நிலம்; ஆண்டு – கட்டுப்பாட்டில் அனுபவி; நத்தக் காவல் – வீட்டு மனைப் பிரிவு காவலர்; காப்புக் காணி – காவலுக்கு உட்பட விளை நிலம்

    விளக்கம் : ஜடாவர்ம வீரபாண்டியனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி.1278) ஆவணி மாதம் 5 ஆம் நாள் பழுவூர் பற்று திரணி நாட்டாரும் கண்டராதித்தன் உட்கிடையூர் திரணி நாட்டாரும் இறைக் குடியில் பெரிய நாடான ஆலடியில் பெருங் கூட்டமாகக் கூடி எங்களுக்கு நாங்களாகவே விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்து மேற்கொண்ட ஏற்பாடு யாதெனில், பழுவூர் பற்றிலும் கண்டராதித்தன் உட்கிடையூரிலும் இன்னும் பல பற்றிலும் நாங்கள் உரிமை கொண்டுள்ள நாங்கள் கட்டுப்படுத்தி அனுபவிக்கின்ற  உரிமை நிலங்களும், வீட்டுமனைக் காவலர் நிலங்களும் காவலுக்கு உட்பட்ட நிலங்களும் வேறு எந்த வகைத் தான உரிமைகளும் எமது ஆண் பிள்ளைகளே, அவர் வழியினரே இந்த உரிமை நிலங்களை ஆண்டு அனுபவிக்க வேண்டும். இப்படியாக விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்தோம் பழுவூர் பற்றில் வாழும் மூப்பனார் சாதி ஐந்து நாட்டவரும் கண்டராதித்தன் பிடாகை மூப்பனார் சாதி ஐந்து நாட்டவருமான இந்த அனைவரும். இப்படியாக இவை எல்லாம் சொக்கனார் எழுத்து.

    மேல் கல்வெட்டில் சொன்னபடியே என்ன தான் கடுமையாகப் பிற சாதிமாருக்கு நிலங்களை விற்க கூடாது என்று முடிவெடுத்து நடைமுறைப் படுத்தினாலும் பெண் வழியாகப் பிரித்துக் கொடுத்த நிலங்களை மாப்பிள்ளைகளும் பெண் வழிப் பேரர்களும் பிற சாதிமாருக்கு விற்பதால் தமது சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் மாப்பிள்ளை, பேரர்களுக்கு  அவரது ஊர்களிலேயே தந்தை வழி நிலம் உள்ளதால் பெண் வீட்டார் நிலம் தேவைப்படாது. இந்த அனுபவத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்ற முறையே சரியானது அப்போது தான் மாப்பிள்ளைகள் சொத்தை பிராமணருக்கோ பிள்ளைமாருக்கோ பள்ளிகளுக்கோ விற்கமுடியாது என்று கருதி பெண்ணுக்கு சொத்துரிமை ஏதும் இல்லை என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினர். இக்கல்வெட்டு மூலம் பெண்ணுக்கு சொத்துரிமை இந்துமதத்தால், மனுநெரியால், பிராமணர்களால் தடை செய்யப்படவில்லை அதை படைச் சாதியினர் தான் தடை செய்தனர் என்று தெளிவாகிறது அன்றோ!!

    பார்வை நூல்: ஆவணம் 6, 1995, பக். 33

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் சமணர் கோயில் கற்பலகை 13 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. சகலலோகச் 
    3. சக்கரவத்தி 
    4. இராசநாராயணன்
    5. மனுநெறி தப்பாத
    6. மல்லிநாதன். பெருந்தேவ
    7. ந் செட்டித் தெருவில் 
    8. வேற்று மனிதர் இருக்க
    9. கடவதல்ல வென்றும்,
    10. பரிசாம் விடுவரல்ல 
    11. வென்றும் சொ
    12. ன்னோம். இப்ப
    13. டி செய்க.     

    பரிசாம் – காசு, வாடகை

    விளக்கம் : இரண்டாம் இராசநாராயண சம்புவராயனான மல்லிநாதன் ஆட்சியில் வெட்டப்பட்ட ஆண்டுக்குறிப்பு ஏதும் இல்லாத கல்வெட்டு இது. இவனை மனுநெறி தப்பாதவன் என்று கூறி,” இவ்வூர் பெருந்தேவன் செட்டித் தெருவில் சமணர் அல்லாத வேற்று சாதியார், மதத்தார் எவரும் குடியிருக்கக் கூடாது என்றும், சமணர் எவரும் வேற்றாருக்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்றும் ஆணையிட்டான். அவ்வாறே நடந்து கொள்க”  என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    கல்வெட்டில் குறிக்கப்படும் செட்டித் தெருவில் வாழும் சமணர் தொழிலால் வணிகர், உணவால் சைவர் என்பதால் அவர்களாகவே வேந்தனிடம் கோரிக்கை வைத்து இந்த ஆணையை பெற்று வந்துள்ளனர். மேலும் வர்ண கோட்பாடு என்பது சிவ, விண்ணவ மதத்திற்கு மட்டும் என்று இல்லாமல் சமண, புத்த மதத்தவரையும் சேர்த்து சமூக முறைமையாகவே கட்டுப்படுத்தியுள்ளது அல்லது மதம் கடந்து அனைவரையும் உள்ளடக்கியது என்று தெரிகின்றது. வாடகை என்ற சொல் அப்போது இல்லை என்பதால் பரிசாம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. வேந்தனும், சமணரும் கூட சாதி ஆதரவாளராகவே இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு பெரும் சான்று ஆகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 17, பக். 132 ஆண்டு: 2006

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவில் தென் சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீமத் பூமிதேவி புத்ரஸ்ய சாதுர்வண்ண குலோத்பவம் சர்வலோகஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய 
    2. சாஸனம். திரிபுவனச் சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது நாடும் நகரமும் கூடி
    3. இருந்து காஞ்சிமாநகரில் செப்பேட்டுப்படி செக்கார் செய்யக் கடவ முறைமை எண்ணையு _ _ _
    4. வையிலே கூறி விற்க கடவந். இவனுக்கு உகச்சும் பறையும் கொட்டக் கடவதல்லன். ஒரு துறையில் நீருண்ணக் கடவனல்லன். தந்  மனையில் சேந்த வடக்கு திருவாசலுக்குப் புறம்பே _ _ _ துக்கு குடுக்ககடவ _ _ _ தல்லந். _ _ _ ல்லா தெற்றஞ் செய்யக் கடவதல்லந். வாஸ்துவுக்கும் _ _ _ ம்பி _ _ _  ம வெற்றிலையும் _ _ _  ந்து விற்கக்  கடவன். எண்ணை, விறகு மல்லாதும் _ _ _  கடவந்.     

    சித்ரமேள – சித்திரமேழி நாட்டார் வணிகக் குழு சபை; சாசனம் – சட்ட ஆவணம்; செக்கார் – எண்ணை வணிகர்; உ(வ)கச்சு – மத்தளம், தவில்; தெற்றம் – தவறு, பிழை; ஸ்ரீமத் – எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்

    விளக்கம் : எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால் பூமியின் மைந்தர்களின், நால்வர்ணக் குலத்தில் பிறந்த, உலகமனைத்தின் நன்மைக்கும் பொருட் தேவைக்கும் வாழும் சித்திரமேழிநாட்டு வணிகக் குழுவின் சட்ட வரைவு என்று கல்வெட்டு சித்திரமேழியாரின்  மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. மூன்றாம் இராசராசனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு 1219 இல் நாட்டுச் செட்டிகளும் நகரத்துச்  செட்டிகளும் ஒன்று கூடி இருந்து காஞ்சிமாநகரில் உள்ள செப்பேட்டின்படி செக்கில் எண்ணை பிழிவோர் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை என்று அறிவித்தது யாதெனில், “எண்ணையை _ _ விலை கூறி விற்க வேண்டும். (எப்படி விலை கூற வேண்டும் என்ற வரி சிதைந்து விட்டது). செக்கருக்கு வீட்டு நன்மை தீமைகளில் மத்தளமும் பறையும் கொட்ட உரிமை இல்லை. ஒரே நீர்த்துறையில் மேல் சாதியாரோடு நீர் மொண்டு, பருகக் கூடாது. தன் வீட்டு வடக்கு திருவாயிலுக்கு வெளியே _ _ _ கொடுக்கக் கூடாது. (எதை கொடுக்க என்ற வரி சிதைந்து விட்டது). _ _ பிழையாக செய்யக்கூடாது. (எதை என்பது சிதைந்து விட்டது). வாஸ்துவுக்கும் _ _ _ வெற்றிலை _ _ _ விற்கலாம். (இன்னொரு பொருள் எது என்பது சிதைந்து விட்டது. எண்ணை, விறகு அல்லாதது தவிர்த்து இவற்றை மட்டும் விற்கலாம் என்று வரையறை சொல்கிறது.

    படைப்பற்றுப் பள்ளருக்கும் பறையருக்கும் தமது உரிமை குறித்து பிணக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டை பார்த்து வந்ததில் ‘பள்ளருக்கு தவிலும் சேமக்கலமும் முழங்கலாம், ஐந்து பந்தர்கால் நடலாம்’ என்றும் பறையருக்கு ‘கொட்டு மேளதாளம்,12 பந்தர் கால் உரிமை உள்ளதையும்’ உறுதி செய்தனர் என்பதை புதுக்கோட்டை ஆலங்குடி கல்வெட்டு (ஆவணம் இதழ் 15, பக். 32) தெரிவிக்கிறது. இவர்களுக்கு கொடுத்த உரிமை கூட எண்ணை வணிகருக்கு, செக்கருக்குக்  கொடுக்கவில்லை என்பது கேள்விக்கு உரியதாக உள்ளது. இந்த வணிக சபையோர் தான் இதை அறிவிப்பதால் அவர்களையே இதற்கு முழு பொறுப்பு ஆக்குவதா அல்லது பின்னிருந்து இயக்கிய ஆட்சியாளர்களை காரணகர் ஆக்குவதா என்று தெரியவில்லை. ஆனால் இதே கால கட்டத்தில் தான் கோவில் பணி மக்களுக்கும் படைப்பற்று சாதிமாருக்கு சில உரிமைகள் கூடுதலாக தரப்பட்டதை வைத்து பார்க்கும் போது இந்த செக்கர்களும் தமக்கும் அது போல உரிமையை எதிர்பார்த்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அந்த கோரிக்கையில் எண்ணை மட்டும் இன்றி சில கூடுதல் பொருள்களை காட்டாக வெற்றிலை, விறகு விற்பது ஆகிய உரிமைகள் தரப்பட்டு பழைய அதே சமூகக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. கல்வெட்டில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் செப்பேடு கிடைத்தால் அது யார் ஆட்சியில் எழுதப்பட்டது, நால் வர்ணத்தை எப்படி சாதியாகப் பிரித்தார்கள். இதனால் படைச் சாதி அடைந்த பயன் என்ன? அத்தனையும் தெரிந்து விடும். ஆனால் திரு. நாகசாமி இது இந்த கோவிலுக்கு அமர்த்தப்பட்ட செக்கருக்கு மட்டுமான விதி என்கிறார். பின் ஏன் சித்திரமேழி சபை இதை அறிவிக்க வேண்டும்? கோவில் நிர்வாகத்தர் அல்லவா அறிவிக்க வேண்டும்?

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் மடல் 7 எண்: 865 & கல்வெட்டு காலாண்டு இதழ் 8 பக். 23 த நா தொ து வெளியீடு. 

    Share
  • குறளின் கதிர்களாய்…(484)

    குறளின் கதிர்களாய்…(484)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(484)

    ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.

           – திருக்குறள் – 139 (ஒழுக்கமுடைமை)

    புதுக் கவிதையில்…

    தவறியும் தீய சொற்களைத்
    தம் வாயால்
    சொல்லிடும் குற்றம்,
    உயர் நெறியாம்
    ஒழுக்கம் உடையவர்க்கு
    ஒருநாளும்
    பொருந்தி வராதே…!

    குறும்பாவில்…

    தீய சொற்களைத் தவறியும்
    தம்வாயால் சொல்லும் குறைபாடு நல்லொழுக்கம்
    உள்ளவர்க்கு என்றும் பொருந்தாது…!

    மரபுக் கவிதையில்…

    தீங்கைப் பிறர்க்குத் தருகின்ற
         தீய சொல்லைத் தம்வாயால்
    ஓங்கிச் சொல்லும் குற்றமதாய்
         ஒன்றைத் தவறிச் செய்வதையும்
    தாங்கிக் கொள்ள முடியாத
         தனமாம் ஒழுக்கம் உடையோர்க்குத்
    தீங்காம் இதுபோல் உள்ளவையே
         திடமாய் என்றும் பொருந்தாதே…!

    லிமரைக்கூ…

    தவறியும் பிறர்க்குத் தீங்கு
    தரும்சொற்கள் பேசும் குறைபாடு ஒழுக்கமுடையோரிடம்
    பொருந்தி வராதே ஆங்கு…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    வாழ்க்கயில கண்டிப்பா வேணும்,
    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்..

    வாய்தவறிக் கூட
    மத்தவங்களுக்குக் கெடுதல் தருற
    தீயசொல்லப் பேசுற
    கொறபாடு,
    ஒழுக்கமா நடக்கிற
    ஒசந்தகொணம் உள்ளவங்களுக்கு
    ஒருநாளும் பொருந்திவராதே..

    அதால
    வேணும் வேணும்
    வாழ்க்கயில கண்டிப்பா வேணும்,
    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்…!

    Share
  • அம்மாவுக்குப் படையல் (சிறுகதை)

    அம்மாவுக்குப் படையல் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா.

    அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ முணுமுணுத்ததை அலட்சியம் செய்தாள்.

    `இன்று அம்மாவின் பத்தாவது நினைவுநாள். அதை ஒட்டி நான் படைத்தது!’ என்ற விளக்கத்துடன் பத்து விதமான வண்ண வண்ண உணவுப்பண்டங்கள் வெவ்வேறு அளவைக்கொண்ட பாத்திரங்களில்.  முதல்நாளையப் பதிவு.

    அவள் பார்வை அதன்கீழ் போயிற்று. உதடுகள் பெருமைச்சிரிப்பில் விரிந்தன. விதவிதமான விமரிசனங்கள். எழுதியவர்களுடைய குணாதிசயங்களும் அவளுக்குள் எழுந்தன.

    பார்த்தாலே நாவில் ஊறுகிறதே! – யாரோ சாப்பாட்டுப் பிரியர்.

    உங்களுக்குத்தான் எவ்வளவு பொறுமை! எத்தனை மணிநேரம் அடுப்பில் வெந்தீர்கள்? – சமைப்பதே தண்டனை என்று வெறுப்பவர்.

    அம்மாவைவிட மேலான வேறு தெய்வமில்லை இவ்வுலகில் – சினிமாவில் காட்டுவதெல்லாம் உண்மை என்று நம்பிவிடும் ஏமாளி.

    அடுத்ததைப் பார்த்ததும் சட்டென மனம் அதிர்ந்தது.

    அம்மாமேல் எத்தனை அன்பு வைத்திருந்தால் இப்படிக் கொண்டாடுவீர்கள்!

    சற்றுமுன் எழுந்த உற்சாகம் வடிந்தது.

    குற்ற உணர்ச்சியால்தான் இவ்வளவும் செய்தோமா?

    அதை உடனே மறுத்தாள்.

    பதின்ம வயதில் சற்று முன்னேபின்னேதான் இருப்பார்கள். தன்னைத் தன் போக்கில் விடாது, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்த அம்மாவுடன் ஓயாது சண்டை பிடித்துக்கொண்டிருந்ததில் என்ன தப்பு?

    அண்ணா ஊர்சுற்றிவிட்டு வந்தபோதெல்லாம் எதுவும் கேட்டாளா அந்த அம்மா? அவன் மட்டும் உயர்த்தியோ?

    கேட்டபோது, `என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்றுவிடுவாள்.

    `ஆண்களுக்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவளில்லை’ என்ற வீம்பு அப்போதுதான் எழுந்தது. இரவு நேரங்களில் `பார்ட்டி’ என்று கண்ட இடங்களுக்கு போக ஆரம்பித்தாள். பல தரப்பட்ட ஆண்களுடன் பழக்கம் ஏற்பட, வீட்டில் கிடைக்காத நிம்மதி வெளியிலாவது கிடைத்ததே என்ற நிறைவு ஏற்பட்டது.

    அம்மாவுடன் அப்பாவும் சேர்ந்துகொண்டார். அவள் பெயர் கெட்டுவிடுமாம். `அப்புறம் யார் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வார்கள்?’ என்று இரைந்தார்.

    `எனக்கே தேடிக்கத் தெரியும். இந்த வீட்டை விட்டுத் தொலையறேன்!’ என்று கத்திவிட்டு வெளியேறினாள்.

    எங்கு போவது என்ற குழப்பம் இருக்கவல்லை.

    அம்மாவுடன் சண்டை போட்டபோதெல்லாம் தன் தோழி ஆலிஸிடம் அதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.  படிக்கப் பிடிக்காது, ஒரு உத்தியோகத்தை தேடிக்கொண்டவள் ஆலிஸ். அவளுடைய பெற்றோர் கடல் கடந்து, வேறு நாட்டில்.

    அப்போதெல்லாம், `நான் தனியாத்தானே இருக்கேன். அம்மாகூட  இருக்கப் பிடிக்காட்டி, இங்கே வந்து இரேன்!’ என்று அபயகரம் நீட்டியவளே அவள்தானே!

    `செத்தாலும் அந்த வீட்டுக்குப் போகமாட்டேன்!’ என்றபடி நிர்க்கதியாக வந்து நின்று தோழியின் தோளில் கரம் போட்டு அணைத்துக்கொண்டாள் ஆலிஸ்.

    அப்பா இறந்த செய்தி கிடைத்தபோது, மரியாதைக்காக வீட்டுக்குப் போனாள் காஞ்சனா. அம்மா அவளைக் கண்டுகொள்ளவில்லை.

    முப்பது வயதில், `தனக்கு எல்லா விதத்திலும் ஈடு கொடுக்கக்கூடியவன் இவன்தான்!’ என்று தோன்றிப்போக, ஒருவனை மணந்தாள்.

    ’தறுதலை’ என்று தான் அஞ்சிய மகள் ஒருவாறாகச் சராசரி பெண்ணைப்போல் இல்லறத்தில் இணைந்துவிட்டாளே என்ற பூரிப்புடன், அம்மா கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டாள். `எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு!’ என்று பார்ப்பவரிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள்.

    இரு குழந்தைகளையும் பெற்றபிறகு, `இனி அம்மா நம்மைக் கண்டிக்க என்ன இருக்கிறது!’ என்று அம்மாவைத் தன்னுடன் வந்து தங்கும்படி அழைத்தாள் காஞ்சனா, `தனியா இருக்கீங்களேம்மா!’ என்ற உபசார வார்த்தைகளுடன்.

    `இத்தனை வருஷம் தனியாத்தானே இருந்தேன்! அபார்ட்மெண்டில அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. என்ன பயம்?’ என்று மறுத்துவிட்டாள் அம்மா.

    கடந்ததை அசை போட்டுக்கொண்டிருந்தாள் காஞ்சனா. தான் வற்புறுத்தி அழைத்தும், அம்மா ஏன் தன்னுடன் வரச் சம்மதிக்கவில்லை?

    `வயதான என்னைப் பார்த்துக்கொள்ளாது, எவளோ சிநேகிதிக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தாயே!’ என்ற எண்ணமோ?

    பல வண்ணங்களில் தான் சமைத்து வைத்திருந்ததை அம்மா இனி சாப்பிட வரமாட்டாள் என்ற எண்ணம் உதிக்க, காஞ்சனா உரக்க அழுதாள்.

    தான் பெற்ற பெண்களும் தன்னைப்போலவே பெற்றவளைப் புரிந்துகொள்ளாது வதைப்பார்களோ என்ற பயமும் அதில் கலந்திருந்தது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(483)

    குறளின் கதிர்களாய்…(483)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(483)

    எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ்
    செல்வர்க்கே செல்வந் தகைத்து.

           –திருக்குறள் – 125 (அடக்கமுடைமை)

    புதுக் கவிதையில்…

    புவி வாழ்வில்
    செருக்கு ஏதுமின்றி
    அடக்கமானவராய் ஒழுகுதல்
    பொதுவாக
    அனைவருக்கும் நல்லதாகும்,
    அதிலும்
    சிறப்பாய்ச் செல்வர்களுக்கு
    அதுவே மேலுமொரு
    செல்வமாக விளங்கும்…!

    குறும்பாவில்…

    செருக்கின்றிப் பணிவுடன் ஒழுகுதல்
    எல்லோருக்கும் நல்லதாகும், அவர்களுள் செல்வர்களுக்கே
    அதுவே மேலுமோரு செல்வமாகும்…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வினிலே
         மற்றோர் முன்னில் செருக்கின்றி
    எண்ணம் உயர்வாய்ப் பணிந்திருத்தல்
         எல்லார் தமக்கும் நன்றாகும்,
    திண்ண மாக அதுவேதான்
         திரண்ட செல்வம் கொண்டோர்க்கு
    வண்ண மயமாய் மேலுமொரு
         வளமாம் செல்வம் ஆகிடுமே…!

    லிமரைக்கூ…

    செருக்கிலா அடக்கம் நன்றே
    எல்லோருக்கும், அதுவே செல்வர்கள் தமக்கு
    மேலுமோர் செல்வமாகும் நின்றே…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    வாழ்க்கயில வேணும்,
    அவசியமா வேணும்
    அடக்கம் வேணும்..

    தலக்கனம் இல்லாம
    தன்னடக்கத்தோட வாழுறது
    ஒலகத்தில
    எல்லாருக்கும் நல்லது,
    அதுலயும்
    செல்வந்தரா இருக்கவுங்களுக்கு
    அதுவும் சேந்து
    கூடவொரு செல்வமா
    ஆயிடுமே..

    ஆதால,
    வேணும் வேணும்
    வாழ்க்கயில வேணும்,
    அவசியமா வேணும்
    அடக்கம் வேணும்…!

    Share
  • கல்வெட்டு, இலக்கியப் புனைவு இல்லை

    கல்வெட்டு, இலக்கியப் புனைவு இல்லை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இனக்காப்பிற்காக, பிற இனத்தாரோடு போர் செய்த பழங்குடி நிலை முற்றாக மாறி, வேந்தர், மன்னர், அரையர், கிழார்-கோன்  ஆகிய  நாலடுக்கு அதிகார ஆட்சியாளர் தமது ஆட்சி நிலைக்கவும் நாடு விரிக்கவும் பழங்குடிகள் முதல் எளிய அப்பாவி மக்கள் வரை தமது உயிரை ஈகம் செய்தும் குடும்ப வாழ்வை அழித்தும் வாழ்கிற போரில் தள்ளினர். இதற்காகத் தேர்ந்த பயிற்சி உடைய வீரராகவும் உளவாளியாவும் அவர்களை மாற்றினர். இத்தகு நெறி கொண்ட போர் எளிய மக்களின் உலக வாழ்க்கையை, சமூக வாழ்க்கையை, சமய நம்பிக்கையை அடியோடு மாற்றிப் போட்டது என்பதே  வரலாறு. போரில் இறந்த வீரன் தெய்வமாக வணங்கப்பட்டான் குருதி சிந்தினமைக்காக அவன் குடும்பத்தாருக்கு நெய்த்தோர்பட்டி நிலம் வழங்கப்பட்டது என்பதே ஆறுதல் செய்தி. இவற்றுக்குச் சான்றாக இங்குச் சில நடுகல் கல்வெட்டுகளை விளங்கிக் கொள்ளலாம்.

    ஒரு முறை அமெரிக்கப் பெண் ஒருத்தி இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்கின்றீர் பின் ஏன் மக்கள் காமவயப்பட்டு இவ்வளவு அதிகப் பிள்ளை பெற்று இந்தியா மக்கள் தொகைப் பெருக்க நாடாக உள்ளது எனக் கேட்டாள். அதற்கு அவளுக்கு, இந்தியா ஆன்மீக பூமி தான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்திய மக்கள் எல்லோரும் யோக ஆன்மீக  வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே இந்தியாவில் குறைந்த அளவு மக்கள் தான் உண்மையான ஆன்மீகத்தை நாடுபவராக உள்ளனர் என்று விடை கூறப்பட்டது. இந்தியாவில் தோன்றிய தந்திர யோகம், வேத மதம், சமணம், புத்தம்  ஆகியன புலால் கூடாது என்று உணவுக் கட்டுப்பாடு வைத்தன. பொய், களவு கூடாது என்றன. பெண் பித்து கூடாது என்றன. ஆனால் இவற்றை மக்கள் கடைப்பிடிக்க விடாதபடி தனது வெற்றி ஒன்றே குறியாகக் கொண்டு வேந்தர், மன்னர், அரசர், கோன் போன்ற ஆட்சியாளர்கள் போரில் ஈடுபடும் வீரருக்குப் புலால் விருந்தும், கள் விருந்தும் கொடுத்துப் போருக்கு அனுப்பினர். வலுவான படை அமைக்க, தம்முள்ளே வலுவான உறவு நீடிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தனர். அதைத் தான் எளிய போர் வீரனும் கடைப்பிடித்தான். விளைவு இரு குடும்பங்களைப் பேண முடியாமல் வறுமையில் உழலும் சூழல் ஏற்பட்டது. கல்விப் பரவல், கீழ்த்தட்டு குடிகளிடம் இல்லாமல் போனது. ஆதலால் மக்களிடம் ஒழுக்கக் குறைபாட்டால் ஆன்மீகம் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்த்ததாக அமைந்துவிட்டது.

    குமரி மாவட்டம் தோவாளை வட்டம் ஆரம்போலி(ஆரல்வாய்மொழி)யில் கிடைத்த 17 வரி நடுகல் கல்வெட்டு. இப்போது பத்மநாபபுரம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    1. ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு இ
    2. ருபத்தேழாமாண்டு சேரமா
    3. னார்  படை விழிஞத்து புறத்து 
    4. விட்டுழக்கக் கரைக்கோட்டை அழி
    5. ப்பான் வர பெருமானடிகளுள
    6. ன்பு மீக்குள இரண கீர்த்தி[யு] 
    7. ம் அமர்க்கழியும் உள் வீ
    8. ட்டினொற்றைச்  சேவகர் கோட்
    9. டை அழியாமை காத்தெறி
    10. ந்து  பலரும் பட்ட இ
    11. டத்து இரணகீர்த்தி உள் 
    12. வீட்டுச் சேவகன் கொழுவூ
    13. ர்க் கூற்றத்துப் பெருமூர்
    14. த் தாதம் பெருந்திளை [அ]
    15. த்திரத்தாற் பலரோடுங் 
    16. குத்திப் பட்டான் இரு
    17. பது கமாளி சேவகன்   

    விடு – திரிந்து; உழக்க  – அழிக்க; ஒற்றை – ஒற்றர் படை; தாதம் – மூலப்படை; திளை – போர்ப்படை, அத்திரம் – அம்பு; இருபது  – பதுங்கு படை, மறைந்து தாக்கும் படை, Ambush; கமாளி – பிரிவு, Division (கமர்  – நிலப்பிளவு. எனவே கம் என்றால் பிரிவு. கம் + ஆளி  = கமாளி – பிரிவினன்; சேவகன் – படைத்தலைவன்  

    விளக்கம் : நடுகல்லின் முன் பக்கம் வீரன் உருவம்  பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறம் கல்வெட்டுச் செய்தி உள்ளது.  இக்கல்வெட்டு கி.பி. 792இல் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் வரகுணனுக்கு 27ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. விழிஞம் திருவனந்தபுரத்திற்கு மேற்கே கடற்கரையில் அமைந்துள்ளது. ஏற்கெனவே மாறஞ்சடையன் சேரனிடம் இருந்து கைப்பற்றிய அவனது சில ஆட்சிப் பகுதிகளை மீட்கச் சேரமான் படை விழிஞத்தின் புறநகர்ப் பகுதியை அழித்தபடி, கரைக்கோட்டையை அழிக்க வந்தது. அப்போது பெருமானடிகள் பாண்டியனிடத்து மிக்க அன்பு கொண்ட இரணகீர்த்தி, அமர்கழி, அரண்மனை உள்வீட்டு ஒற்றர்படைத் தலைவன் ஆகியோர் கோட்டை அழிந்துவிடாமல் காத்து, பகைவரை அழித்து ஒழித்தனர். அதில் பலர் வீரச் சாவடைந்த இடத்தில் இரண கீர்த்தி, உள்மனை படைத்தலைவன், கொழுவூர் கூற்றத்தில் உள்ள பெருமூர் மூலப் படையின் பெரும்படைப் பிரிவு ஆகிய பலரோடும் சேர்ந்து பகைவர் பலரைக் குத்திக் கொன்று  வீரச்சாவடைந்தான் கோட்டைப் பதுங்கு படைப் பிரிவின் தலைவன். இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. பட்டான் என்ற ஒருமைச் சொல் இரணகீர்த்தியையோ உள்மனை ஒற்றனையோ குறிக்கவில்லை என்பது தெளிவு. ஆரல்வாய்மொழி அவன் ஊர் என்பதால் இந்த நடுகல் அங்கே சுற்றத்தாரால் நிறுத்தப்பட்டது. இக்கல்வெட்டு பலரால் தவறாக விளக்கப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 72, பக்.9-10, ஆண்டு 2006, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    தருமபுரி மாவட்டம் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 12 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ  அரிமிதைய மாவலி வாணராயர் 
    2. கங்கநாடும் புறமலைநாடும் கோயினூர்நாடும்
    3.  கோவூர்நாடும் தாயனூர்நாடும் பற்றநாடும் ம _ _ _ 
    4. அவர்க்குத் தாநாகிப் பிள்ளைய் கொண்டுள்
    5. புகுந்து வஞ்சித்து நாடு கொண்டானுளம்பன்.
    6. அவர் போரிற் றுஞ்சின பின்னைத் தேவிமார்
    7. கருப்பிணியருளராக அவகளைக் காத்திருந்
    8. தாண் பிள்ளைப் பெறுவதுந் தகடூர் புகுந்து
    9. நுளம்பன் பலத்தோடே துணிந்து நாடு பாவி
    10. நார்  சங்கரகுட்டியார் . அவரோடுடன்
    11. புகுந்து தகடூரில் பட்டார் நாகந்தை 
    12. சிறு குட்டியார். கல்நாடு    

    தாநாகி – அத்தானாகி; பலத்தோடு – படையுடன்; நாடுபாவி – நாடுவிரித்து, ஆக்கிரமித்து; பட்டான் – வீரசாவடைந்தான்; கல்நாடு – நெய்தோர்பட்டி, உதிரப்பட்டி

    விளக்கம் : இந்நடுகல் கல்வெட்டு 8-9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படுகிறது. இதில் எந்த வேந்தர் பெயரும் குறிப்பிடாதது அரிமிறைய மாவலி வாணராயர் சுதந்திர ஆட்சியை நடத்தினர் என்று கொள்ள வேண்டியுள்ளது. அவர் கங்க நாடு (தகடூர்), புறமலைநாடு (அரூர்), கோயினூர்நாடு, கோவூர்நாடு (ஊத்தங்கரை), தாயனூர்நாடு, பற்றநாடு என்று மிக பெரிய நிலப் பரப்பை ஆண்டுள்ளார். இவரது வாணர் குடும்பத்திற்கும் நுளம்பர் குடும்பத்திற்கும் இடையே முன்னம் திருமணம் நிகழ்ந்து நுளம்பன் இவருக்கு அத்தான் உறவாகிப் போனான். அந்த நுளம்பன் அரிமிறைய வாணன் குடும்பத்தில் பெண் எடுத்து மாப்பிள்ளை ஆகிப் போனான். அந்த உரிமையில் அரிமிறைய வாணனை வஞ்சித்து அவனது நாட்டின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டான் நுளம்பன். இதனால் இருவருக்கும் நிகழ்ந்த போரில் அரிமிறைய வாணன் போரில் இறந்து விடுகிறான். இவனுடைய மனைவியர் அதன் பின் கருவுற்றிருப்பதை அறிய வர அதற்காக அவர்களைக் காத்து அதில்  ஒருத்தி ஆண் பிள்ளை பெற்றவுடன் படையுடன் தகடூரில் புகுந்து நுளம்பன் படையுடன் துணிந்து மோதி இழந்த நாட்டைக் கைப்பற்றினார் படைத்தலைவர் சங்கரக் குட்டியார். அவருடன் இணைந்து தகடூரில் படையோடு புகுந்து வீரச்சாவடைந்தார் நாகந்தை சிறு குட்டியார். இந்நடுகல் அவர் நினைவில் நடப்பட்டு அவரது குடும்பத்திற்கு நெய்த்தோர்பட்டி நிலம் தரப்பட்டது.

    முதலாம் மகேந்திர நுளம்பன் தான் அரிமிறைய வாணனை வஞ்சித்து நாடு கவர்ந்தான் என்று கொள்ளப்படுகிறது. வாணரும் நுளம்பரும் கன்னடர் ஆவர். தமிழகத்தில் இவர்களது அதிகாரம் பல்லவரால் ஏற்பட்டது.

    பார்வை நூல்: கல்வெட்டியல் 132, த நா தொ து வெளியீடு.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் திண்டிவனம் அருகே கிடைத்த 3 வரி நடுகல் கல்வெட்டு

    1. கம்பப் பெருமாள் ஆனையாடின
    2. கொந்தளத்து இவ்வூர் அழிந்த நாள்
    3. பட்டான் இவ்வூர் கோதுபத்தி  மாத்ரகன்.

    கொந்தளத்து – அமளிகுமளி, turmoil; கோதுபத்தி (கோடு+பத்தி) – குலையாகப் பிரித்த படையணிப் பிரிவு, army division; divide as a battalion; மாத்ரகன் – அளவிடுபவன், surveyor, assessor

    விளக்கம் : 9ஆம் நூற்றாண்டில் வேந்தன் கம்ப வர்மப் பல்லவனே திண்டிவனம் அருகே யானைப் படையுடன் சென்று போர் புரிந்த போது இந்த ஊரே அமளி குமளியாக அழிந்த நாளில் இவ்வூரின் படைப்பிரிவில் அளப்போனாக உள்ள வீரன் இப்போரில் வீரச்சாவடைந்தான். அவன் இயற்பெயர் குறிப்பிடப்படவில்லை. இறந்த வீரன் எந்த அரசன் சார்பாக போரிட்டான் என்றும்   தெரியவில்லை. ஆண்டுக் குறிப்பும் இல்லை. இந்த ஊர், சிறு படைத் தளமாக இருந்ததாலே வேந்தனால் அழிக்கப்பட்டது. கம்ப வர்மன் நிருபதுங்கன், அபராஜித்தன் பதவி சண்டையில் யார் பக்கம் இருந்தான் என்று தெரியவில்லை. அப்படியானால் இது பல்லவர் இடையே நடந்த போராகக் கொள்ள முடியுமா?

    கல்வெட்டின்படி ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஊரும் சேர்ந்தே அழிக்கப்படுகிறது என்பதை இக்கல்வெட்டு சுட்டுகிறது. இங்கே ஊர் என்பது படைவீரர் ஊர் என்று கொள்வதே சரியாகும்.

    பார்வை நூல்: கல்வெட்டியல் 131, த நா தொ து வெளியீடு.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கருங்காலிப்பாடி ஊரில் கண்ட 5 வரி நடுகல் கல்வெட்டு.

    1. தென் வேணாட்டு மேலைக் கரு
    2. ங்காலிப்பாடி சிலகில் காவேட்டுவைய
    3. ன் அடியேன் பறையன் பளியனேன் 
    4. ஊரழியப் போகே
    5. னென்று  பட்டான்  

    சிலகில் – பிளவில், இருமலைக்கு நடுவே; போகேன் – விடமாட்டேன்

    விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டோ இல்லாத கல்வெட்டு இது. வேணாட்டின் தெற்கே உள்ள கருங்காலிப்பாடியின் மலை இடுக்கில் வாழும் காட்டின்  வேட்டுவத் தலைவனுக்கு அடியவனான பறையன் பளியன் என்பவன் இவ்வூரை பகைவர் அழிக்க விடமாட்டேன் என்று சூளுரைத்து, போரில் வீரச் சாவடைந்தான்.

    பளியர் என்போர் தமிழகப் பழங்குடி மக்கள் ஆவர். இன்று திண்டுக்கல், தென்காசிப் பகுதிகளில் மட்டும் சிறு தொகையில் வாழ்கின்றனர். ஆனால் இக்கல்வெட்டு அவர்கள் தமிழகத்தின் வட பகுதியான திருவண்ணாமலையிலும் வாழ்ந்ததைத் தெரிவிக்கிறது. மன்னர்கள் அமைதியாக வாழும் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் போரிலும் உளவிலும்  ஈடுபடுத்தினர். மேலும் இது போன்ற பழங்குடிகளே பின்னாளில் பறையர் என்ற சாதி தோன்றக் காரணமாக இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு சான்று. ஆனால் இந்துமதம் தான், பிராமணர் தான் பட்டியலின மக்களை உருவாக்கினர் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய்யுரைத்து வரலாற்றையே புனைவாகச் செய்துள்ளனர். இக்கல்வெட்டு அதைத் தகர்க்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை பன்றயன் புளியனேன் என்று தவறாகப் படித்து அச்சேற்றி ‘கல்வெட்டியல்’ என்ற நூலில் கடைசிப் பகுதியில் வெளியிட்டுள்ளது. இப்படித் தப்பும் தவறுமாக படித்து நூல் வெளியிட்டால் உண்மை தான் மறைக்கப்பட்டுவிடும்.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 341, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டம்பட்டி 6 வரி நடுகல் கல்வெட்டு

    1. சிவமார பருமர்க்கு யாண்டு யிருபத்
    2. திரண்டாவது மாவலி வாணராயர் க
    3. ங்க நாடாள இந்திரன் தகடூ
    4. ர் மேல்வந்த ஞான்று மறவனா
    5. ர் சேவகன் கண்ணனூருடை கமிய
    6. த் தழமன் பட்டான்.  

    கம்மிய – கருமார் (அ) கைவினைஞன், blacksmith / craftsman; தழமன் – தழல் என்றால் நெருப்பு. எனவே உலைக்கு நெருப்பைப் பேணுபவன்; சேவகன் – படைத்தலைவன் 

    விளக்கம் :  நுளம்ப வேந்தன் சிவமாறனின் 22ஆம் ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண மன்னன் மாவலி வாணராயன் கங்க நாட்டை (தகடூர்) ஆண்டுகொண்டிருக்கையில் வைடும்ப அல்லது தெலுங்குச் சோழன் மன்னன் இந்திரன் தகடூர் மேல் படை கொண்டு வந்த போது இந்த வாணனுக்கு அடிபணிந்த ஆட்சியாளன் மறவனுடைய படைத்தலைவனாக உள்ள கண்ணனூருடைய கருமான் உலைக்கு நெருப்பு எரிப்பவன் வீரச் சாவடைந்தான். இவன் இயற்பெயர் தெரியவில்லை. இவன் போர்க்கருவி செய்பவனாய் இருந்திருப்பான் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஒவ்வொரு படையும் தனியே தனக்கென கருமாரை வைத்திருந்தன என்று தெரிகிறது. அதே நேரம் படையெடுத்து வருபவன் முதலில் அழிப்பது ஆயுதம் செய்பவரை ஆயுத சாலையைத் தான் என்பதை இக்கல்வெட்டு நமக்கு சுட்டுகிறது.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 348, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அங்குத்திசுனை  7 வரி வட்டெழுத்து நடுகல் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  நுளம்பன் மகன் 
    2. சிவமாறன் வூறளிய்க் ஆழுடைய 
    3. போயையந் மகந் துட்டப்பநுக்கு  
    4. தம்பி முளித்தயந் செய்வித்தாந். 
    5. தச்சான் வெந்றி 
    6. சிரியன் நாட்டி
    7. னக் கல்      

    ஆளுடைய – தலைமை செய்யும்; போ ஐயன் – வில் வேடுவர் தலைவன், bowman.  போ + அன் = போவன் அல்லது போயன் என் ஆகும். போ என்பது வளைந்த வில்லை குறித்தது. ஆங்கிலச் சொல் Bow உடன் தொடர்புடையது. 

    விளக்கம் : மேலுள்ள ஒட்டம்பட்டி கல்வெட்டுக்கு முற்பட்ட 8ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. மாவலி வாணனைச் சிவமாற நுளம்பன் வென்று ஆட்படுத்துவதற்கு முன் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம். சிவமாறன் ஊத்தங்கரை மேல் படையெடுத்து ஊரை அழித்த போது போயர் தலைவனுக்கு மூத்த மகன் துட்டப்பன் அதில் வீரச்சாவடைந்தான். அவன் தம்பி முழித்தயன் இந்த நடுகல்லைச் செய்வித்தான். சிற்பி வென்றி சிரியன் இந்தக் கல்லையும் எழுத்தையும் செதுக்கி நிறுத்தினான். இதில் மான் வேட்டையாடுவது போன்ற உருவப் பொறிப்பு போயர் வேட்டுவர் என்று சுட்டுகிறது. இவர்கள் போர்த் தொழிலை ஏற்றவர்கள். இந்தப் பழங்குடிகள் பின்னாளில் தருமபுரியில் குடியேறிய தெலுங்கு ஒட்டருடன் கலந்துவிட்டனரோ? ஏனெனில் இவர் பெயரை இன்று ஒட்டர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  

    பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுப் பேரவை காணொளி

    இராமநாதபுரம் மாவட்டம், முதுகுடி ஊர் அருகில் உள்ள கருங்குளம் ஏரி 16 வரிக் கல்வெட்டு

    1. ____ 
    2. குலைசேகர தேவ
    3. ர்க்கு யாண்டு 34 வ
    4. துக் கருங்குளத்திர்க் 
    5. கு ஒரு பழி உண்
    6. டானபடியாலே, 
    7. இப்பழிக்கு இவ்வூர் 
    8. குடும்பரில் பெரிய 
    9. தேவப் பள்ளன் அணை 
    10. வெட்டிப் போகையா
    11. லே இவன் மகளுக்கு 
    12. ஊரார்களிட்ட உதி
    13. ரப்பட்டி குடுத்தபடி தபான
    14. வ  நிலம் அரை மா  அணை 
    15. நிலம் சந்திராதித்தவன் 
    16. மானி போவிப்பர் 
    17. கா _ _ _   

    பழி – தீவினை; அணை – கரை; தபானவ – வறண்ட புஞ்சை; மானி – மதித்து; போவி – செல்வதாக   

    விளக்கம் : மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 34ஆவது ஆட்சி ஆண்டு 1302 இல் இராமநாதபுரம் முதுகுடி ஊருக்கு அருகில் உள்ள கருங்குளத்தில் கரை உடைந்துவிட்டது. இந்த உடைப்பை இந்த ஊர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன் கரைவெட்டி தடுத்தான். அதில் அவன் இறந்துவிடுகிறான். இதனால் பரிவுற்ற ஊர் மக்கள் அவன் மகளுக்கு நெய்த்தோர்பட்டியாக குளக்கரைக்கு ஒட்டி அரைமா வறண்ட புஞ்சை நிலத்தைக் கொடுத்தனர். இதைச் சந்திரன் சூரியன் உள்ள கால அளவும் மதித்துச் செல்ல வேண்டும் என்று குறித்தனர். நெய்தோர்பட்டி என்ற குறிப்பு பெரிய தேவ பள்ளன் இந்தக் கரையைப் பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட உயிர்ச் சேதத்திற்காகக் கொடுத்திருக்கலாம்.       

    பார்வை நூல்: கொங்கு இதழ் 25. செ இராசு, திசம்பர் 1972

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சின்னத்தாமல்செறு கிராமத்தில் கற்பலகையில் செதுக்கிய நடுகல்லில் உள்ள 8 வரிக் கல்வெட்டு.

    1. செல்(லை)ளை
    2.  வூரர் அடியக
    3. ன் பம்மான்
    4. டை மகன்  ஆ
    5. னை கொன்
    6. றும் நத்தம்
    7. கொண்டா 
    8. ந்  

    அடியகன் – ஏவலன், தொண்டன்; பம்மாண்டி – பறை அடிப்பவன்;  நத்தம் – நெய்த்தோர்பட்டி நிலம்

    விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டுக் குறிப்போ இல்லாத தனி நடுகல் கல்வெட்டு. வீரன் இடக்கையில் கேடயமும் வலக்கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். செல்லைவூரரின் ஏவலன் பறையடிப்பவனின் அடியாள் வீரன் ஊரில் அட்டகாசம் செய்த யானையைக் கொன்று தானும் வீரச்சாவடைந்து விடுகிறான். அதற்காக அவன் வீட்டாருக்கு நெய்தோர்பட்டி நிலம் ஊராரால் கொடுக்கப்பட்டது. வீரன் பெயர்க் குறிப்பு இல்லை. பம்மாண்டை பெயரும் இல்லை.

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக்.130, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் 7 வரி நடுகல் எருது பிடி கல்வெட்டு

    1. கோவுரிச் சங்கன் 
    2. கருவந் துறையி
    3. லே எருது விளை
    4. யாடி பட்டான். 
    5. சங்கன் மகன் பெ
    6. ரிய பயலு நட்ட க
    7. ல்லு 

    எருது விளையாடி – காளை அடக்கி; கோ – ஆனேறு, நூல் கோற்றல்; உரி – களைதல், கழற்றுதல் 

    விளக்கம் : மன்னன் பெயர், ஆண்டுக் குறிப்பு, விளையாடிய காரணம் ஏதும் இல்லாத நடுகல் கல்வெட்டு. ஆத்தூர் கருமந்துறையில் 400 ஆண்டுகள் முன் நடந்த எருது பிடித்து, கழுத்தில் கட்டியதை உருவும் போட்டியில் விளையாடிய போது அந்த எருது முட்டி சங்கன் சாவடைந்தான். இவனது மூத்த மகன் இதன் நினைவாக நடுகல் நட்டான். இதே விளையாட்டாக இருந்ததாலோ என்னவோ அவன் “கோவுரி” என்ற அடையுடன் அழைக்கப்படுகிறான். இன்றைய சல்லிக்கட்டு அக்காலத்தே கொங்கில் கோவுரி எனப்பட்டது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 15, பக். 14 த நா தொ து வெளியீடு

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் குலசேகரபுரம் ஊரில் கிட்டிய இறுதி 6 வரிக் கல்வெட்டு

    1. _ _ _ ஆற்றுந பெருமகன் உய
    2. ர் பிரம்மதாய்ய பெற்றமை தெருட்டு
    3. கொல்லாறு விட நடந்து கொண்
    4. டார் மணற்குடி பார்ப்பார் சா
    5. ன்றார். வடக்குஇருக்கை அறி நாட்டா
    6. த் தெல்லையாக நட்ட கல் 

    தெருட்டு – அறிவிப்பு; கொல்லாறு – ஏச்சு பேச்சு, ஏளனம் (அ) தீங்கான பேச்சு, கொல் குறும்பு, act of teasing; இருக்கை – குடியிருப்பு; நாட்டாத்து – ஊர்;

    விளக்கம் : கடைசி ஆறு வரிகள் தவிர்த்து மேல் இருந்த கல்வெட்டு வரிகள் உடைந்து சிதைந்துவிட்டன. எனவே முழுச் செய்தியும் அறிய முடியவில்லை.  _ _ _ ஆற்றுந பெருமகன் உயர்ந்த  பிரம்மதாயம் / பிரம்ம தேயம் பெற்றதை அறிவித்தவுடன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோர் தம் ஏச்சு பேச்சுகளை விட்டு நல்லமுறையில் நடந்து கொண்டனர். இந்தப் பிரம்மதேயத்தின் வடக்குக் குடியிருப்பை அறிந்துகொள்ள ஊர் எல்லையாக நடப்பட்ட கல் இது. பெருமகன் என்பது ஆட்சியாளனைக் குறிக்கிறது. அவன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோரரான பிராமணருக்கு இறையிலி நிலக்கொடை அறிவித்துள்ளான். அதன் வடக்கு எல்லை இது என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. இதன் மூலம் பார்ப்பாரச் சான்றார் என்பது பிராமணரைக் குறிப்பது தான் நாடார் குலத்தவரை குறிப்பதல்ல என்பது தெளிவு. சிலர் இதற்கு நாடாருள் பார்ப்பர் என்று தவறாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். பிரம்மதேயம் பிராமணருக்கு மட்டும் கொடுக்கப்படுவது என்பதைக் கருதவேண்டும். கல்வெட்டில் இ, ய, த, ட எழுத்துகள் பழமையானவை. இக்கல்வெட்டில் குறில் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் புள்ளியிடப்பட்டுள்ளதால் இது  7ஆம் நூற்றாண்டினது என்று தெரிகிறது. இதே போல மதுரை மேலூரின் பெருமாள் மலை அருகே 13ஆம் நூற்றாண்டின் “நாயனார் திருமுகப்படி திருமுகூர்  நாட்டு தேவதானம் பட்டூர்க்கு எல்லை” எல்லைக் கல்வெட்டு கிட்டியது ஒப்பு நோக்கத் தக்கது.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக். 176, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி. கல்வெட்டு காலாண்டு இதழ் 11 பக்.33

    திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் வட்டம் கப்பலூர்ப்பட்டியில் உள்ள 23 வரி கல்வெட்டு

    ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்குச் செல்லா நின்ற யாண்டு அ (8). இவ்வாண்டு (பெரு)மாள் கீழ்  வாழ்ந்து மழநாட்டான் மூர்க் கூற்றத்துக் கீழ்க்கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பறையாசாரிகள் மக னிருத்தி  விரதி (சூரன்) றந்தையாரையுந் தாயாரையுஞ் சாத்திச் செய்வித்த கிணறும் வட்டும்.    

    பெருமாள் – மன்னன்; காடிக்காரம்  – நெருப்புக்கல், ஆயக்கல், silver nitrate acid; நிருத்தி – தேய்க்கும், அழிக்கும்; நெருப்பு அறை – நெருப்புக் கல்; வட்டு – நீர் முகக்கும் கலன்     

    விளக்கம் : மன்னன் கோக்கண்டன் மாந்தரனின் எட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு. இவன் களப்பிர மன்னன் என்றும் சேரன் என்றும் இரு வேறு கருத்து நிலவுகிறது. இந்த மன்னன் கீழ் நேரடியாகப் பணி செய்து வாழ்பவனான மழநாட்டான்மூர் கூற்றத்தின் கிழக்கில் எதகம்பாடி ஊரைச் சேர்ந்த நெருப்புக்கல் உரைக்கும் நெருப்புக் கல் ஆசாரி வெள்ளான் கூத்தனுடைய மகன் விரதி சூரன் என்பவன் தன் தந்தையையும் (வெள்ளான் கூத்தன்) தாயையும் நினைவில் கொண்டு பொது மக்கள் பயனுற கிணறும் நீர்க்கலனும் செய்தான். இவனும் இவன் தந்தையும் உலோகப் பணியோடு (metallurgy) தொடர்புடையவர் போலும்.

    பார்வை நூல்:  கல்வெட்டு காலாண்டு இதழ் 85, ஆண்டு: 2011 பக்.4 & இதழ் 66 பக். 42, ஆண்டு: 2005

    குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் புலியூர்க் குறிச்சி கிராமத்தில் உள்ள உதயகிரிக் கோட்டை 13 வரி கிருத்துவர் கல்லறைக்  கல்வெட்டு

    1. லோகத்திலே பரதேசி கிறிஸ்துவனே 
    2. நில்லு நினையுங்கோ 
    3. இவ்விடத்திலே யிருக்கிற 
    4. வலிய காப்பிதாருட மகன் செரிய கப்பித்தான் 
    5. யுவான் யஸ்தாக்கியோ வென்தொ தெலுனுவ  9(00)
    6. 2(0)1 ஆண்டு ஆவணி மாதம் 12 நாள் செவாயி  கிளமைக்கு பிற
    7. ந்து  9(00)4(0) ஆண்டு சித்திரை மாதம் 2(0)2 நாள் திங்கள் கிள
    8. மைக்கு களக்காட்டுச் சண்டையிலே காயப்பட்டு 
    9. 9(00)4(0)1 ஆண்டு புரட்டாசி மாதம் 9 நாள் சரீரம் 
    10. விழுந்து போகவும் செய்து அவருடைய 
    11. ஆற்பனாவுக்கு உதவியாக சறு 
    12. வேசுரனோட வேண்டி
    13. க் கொள்ளவும் ஆமென். 

    பரதேசி – வெளிநாட்டு; நினை – அஞ்சலி; வலிய – பெரிய; கப்பித்தான் – படையணி தலைவன், captain; செரிய – சிறிய; ஆற்பனா – ஆத்மா;      

    விளக்கம் : திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி தச்சு வீரர் திலெனாய் (Euastachius Benedictus de  Lannoy (1715 – 1777). இவருடைய மகன் சிறிய கப்பித்தான் யுவான் யஸ்தாக்கி யோவென் தொ தெலுனு (Yuvan Euastace Johannes de Lannoy) கொல்லம் ஆண்டு 921 (1745) இல் ஆவணி மாதம் 12 நாள் செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர். இவர் தமது 19 வயதில் கொல்லம் ஆண்டு 940 (1764) இல் சித்திரை மாதம் 22 நாளில் திங்கட்கிழமை அன்று களக்காட்டுப் போரில் காயமடைந்தார். பின் 8 மாதம் 17 நாள் கழித்து 941 (1765) இல் புரட்டாசி மாதம் 9 ஆம்  நாளில் 20 ஆம் வயதில் உடலை விட்டு ஆவி பிரிந்தது. அவருடைய ஆன்மாவுக்கு ஆறுதலாக உலகத்தில் வாழும் வெள்ளை நாட்டவரே இங்கு நின்று நினைத்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்க . ஆமென்!! இவர் தமிழகத்தில் குடி இருந்ததால் உரோமன் கத்தோலிக்க முறைப்படி புதைக்கப்பட்டாலும் இவரது பிறப்பும் இறப்பும் தமிழில் எழுதப்பட்டது. இவருக்கு பின்னர் இறந்த தந்தை திலெனொய் மகனுக்கு அருகேயே புதைக்கப்பட்டு அவரது கல்லறை ஆவணம் (epithet) தமிழ், இலத்தின் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு  காலாண்டு இதழ் 72, பக்.9 ஆண்டு 2006

    மயிலாடுதுறை மாவட்டம் திருவீழிமிழலை (திருவிந்தளூர் செப்பேடு, பக்கம். 186)

    நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றிருபத்தொன்றினால் வரியிலிட்டுக் குடுத்தபடியும் நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றினால் கங்கைகொண்ட சோழபுரத்தில் நம் வீடு முடிகொண்டசோழநில் தெற்கில் மறைவிடக் கூடத்தில் நாம் கூறை உடா நிற்க விக்கிரம சோழபாண்டியந் நமக்குச் சொல்லி நூற்று முப்பத்தின்மர் சதுர்வேதி பட்டர்களுக்கு ப்ரஹ்மதேய இறையிலியாக குடுப்பித்த சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் _ _ _   

    வரியிலிட்டு – எழுதிக் கொடுத்த; வீடு – அரண்மனை; கூறை உடா  – ஆடை உடுத்தாமல் 

    விளக்கம் : முதலாம் இராசேந்திர சோழனின் மகன் வேந்தன் இராசாதிராசனுக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் 121 ஆம் நாளில் எழுத்தில் எழுதிக் கொடுத்த அறிவிப்பு ஆணை யாதெனில், எனக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் நாள் 100 அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் என் அரண்மனை முடிகொண்ட சோழனில் தெற்குத் திசையில் இருந்த மறைவிடக் கூடத்தில் நான் ஆடை ஏதும் உடுத்தாமல் (இலங்கோடுடன்) நின்றிருக்க, விக்கிரம சோழபாண்டியன் என்னிடம் சொல்லியதால் 130 சதுர்வேதம் கற்ற பிராமணர்களுக்கு பிரம்மதேய இறையிலிக் கொடையாக கொடுக்கப்பட்ட  ஊர் சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் ஆகும்.

    வேந்தன் எண்ணெய்க் குளியலாட எண்ணெய் பூசி இருந்ததால் ஆடை உடுத்தாமல் இருந்திருக்கலாம். மேலும் அமைச்சன் அல்லது அணுக்கச் செயலன் விக்கிரம சோழபாண்டியன் இப்படி மறைவிடம் செல்லும் வகையில் வேந்தனுக்கு நெருங்கிய குருதி உறவினனாக இருத்தல் வேண்டும். முதலாம் இராசேந்திரன் தனது மகனை மதுரைக்கு ஆட்சியாளனாக அமர்த்திய போது அவனுக்குச் சோழ பாண்டியன் என்று பட்டம் சூட்டினான் என்பதில் இருந்து இது உறுதியாகிறது. இராசாதிராசன் 100 ஆம் நாளில் இந்தக் கொடைக்கு ஒப்புதல் அளித்தாலும் ஓலை ஆணை என்னவோ 21 நாள் கழித்துத் தான் எழுதி வழங்கப்பட்டது. ஆக அதன் ஏற்பாட்டிற்கு இத்தனை நாள் ஆகியுள்ளது.

    பார்வை நூல்: கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள், பக். 101, இல. தியாகராஜன்.

    சதிகல் கல்வெட்டு (இடம் கொங்கின் வடமேற்கு பகுதியாக இருக்கலாம். ஊர்ப் பெயர் தெரியவில்லை)

    வீரபிரதாப ஸ்ரீ  _ _ _ _ ராயமகாராயர்  பிருத்விராச்சசியம் செய்திருக்க சக வருஷம் 1339 ஆவது ஹேவிளம்பி சம்வத்சரத்து பாத்திரபதசுத்த பஞ்சமி  ஸ்ரீ சகலாட்சபுரத்தும்  ரெ _ _ மகன் புக்கரன் ஸ்வரக்கத்தன் ஆனதில் அவன் பெண்டாட்டியர் மூவர் தோளும் கையும் கொடுத்த கம்பம் 

    சொர்க்கத்தன் – இறந்து சொர்க்கம் புகுந்தவன் 

    விளக்கம் : விசயநகர வேந்தன் வீர விஜயராய மகாராயர் மண்ணுலகு ஆண்டு கொண்டிருந்த சக ஆண்டு 1339 (கி.பி.1417) இல் ஏவிளம்பி ஆண்டில் பாத்திரபத சுத்த பஞ்சமி அன்று ஸ்ரீ சகலாட்ச புரத்தும்  ரெ _ _  மகன் புக்கரன் இறந்து சொர்க்கம் ஏகினபடியால் அவனது மூன்று மனைவியரும் உடன்கட்டை ஏறி மாண்டதன் நினைவாகத் தோளும் கையும் கொடுத்த கம்பம்  நாட்டப்பட்டது.

    இறந்த பெண்டிரின் நினைவாக இவ்வாறான சிற்பம் அல்லது சதிக்கல் கல்வெட்டுகளுடன் இருப்பது தமிழகத்தில் மிக அரிது. சதிக்கல் கருநாடகத்தில் அதிகமாக காணப்படுகிறது.  

    பார்வை நூல்: செந்தமிழ் தொகுதி 3 & தென்னிந்திய வீரக் கற்கள், பக். 379-380, வெ. கேசவராஜ்

    Share
  • குறளின் கதிர்களாய்…(482)

    குறளின் கதிர்களாய்…(482)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(482)

    கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
    வொன்றுநன் றுள்ளக் கெடும்.

           –திருக்குறள் – 109 (செய்ந்நன்றி அறிதல்)

    புதுக் கவிதையில்…

    ஒரு காலத்தில்
    உபகாரமொன்று செய்தவர்
    பின்பு
    உயிரை எடுத்தல் போலொரு
    உபத்திரவம் செய்தாலும்,
    முன்பு அவர் செய்த
    நன்மையை நினைத்தவுடன்
    இத்துன்பம்
    இல்லாமல் கெட்டு
    அகன்று போய்விடும்…!

    குறும்பாவில்…

    கொல்லுதல் போலொரு துன்பமொருவர்
    கொடுத்தாலும் முன்பவர் செய்த நன்மையொன்றினை
    நினைத்ததும் இத்துன்பம் இலாதுபோகும்…!

    மரபுக் கவிதையில்…

    கொல்வது போலொரு கொடுந்துன்பம்
         கொடுத்திடும் ஒருவரும் அன்றொருநாள்
    நல்லதாய் நமக்கவர் செய்திட்ட
         நற்செயல் ஒன்றினை நினைத்தவுடன்,
    அல்லதா யவரது செயலாலே
         அடைந்ததாம் அளவதே யில்லாத
    அல்லலும் இலையெனக் கெட்டழிந்தே
        அகன்றிடும் நிலையினைக் காண்பாயே…!

    லிமரைக்கூ…

    உடலொடு உள்ளம் வேகும்
    கொடுமையொருவர் செய்தாலும் முன்பவரின் நன்மையினை
    நினைத்தவுடன் இத்துன்பம் போகும்…!

    கிராமிய பாணியில்…

    நன்றிகாட்டணும் நன்றிகாட்டணும்
    செய்த ஒதவிக்கு நன்றிகாட்டணும்,
    ஒசந்தகொணம் இதுதான்
    ஒலகத்தில ஒசந்தகொணம் இதேதான்..

    ஒரு காலத்தில
    ஒபகாரமா நன்ம செய்த
    ஒருத்தரு பின்னால
    கொல்லுற மாதிரி
    கொடும செஞ்சாலும்,
    அவுரு முன்னால செஞ்ச
    நன்மய நெனச்ச ஒடனயே
    இந்தத் துன்ப நெனப்பெல்லம்
    இல்லாமப் போயிடுமே..

    தெரிஞ்சிக்கோ,
    நன்றிகாட்டணும் நன்றிகாட்டணும்
    செய்த ஒதவிக்கு நன்றிகாட்டணும்,
    ஒசந்தகொணம் இதுதான்
    ஒலகத்தில ஒசந்தகொணம் இதேதான்..!

    Share
  • குறளின் கதிர்களாய்…(481)

    குறளின் கதிர்களாய்…(481)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(481)

    பணிவுடைய னின்சொல னாத லொருவற்
    கணியல்ல மற்றுப் பிற.

           –திருக்குறள் –95(இனியவை கூறல்)

    புதுக் கவிதையில்…

    ஒருவன்
    பெரியோர்களிடத்துப்
    பணிவுடையோனாய் இருத்தல்,
    எல்லோரிடமும் இனிய சொல்லே
    பேசுபவனாய் இருத்தல் ஆகிய
    உயர் குணங்கள் மட்டுமே
    அவனுக்கு ஆபரணங்களாய்
    அணிசெய்கின்றன..

    உடலில் அணியும்
    பிற நகைகளெல்லாம்
    உண்மையில்
    ஆபரணங்கள் ஆகா…!

    குறும்பாவில்…

    உயர்ந்த குணங்களாம் பணிவோடிருத்தல்
    இன்சொல்லே பேசுதல் போன்றவையே ஒருவனுக்கு
    அணிகலன்கள், மற்றவை அல்ல…!

    மரபுக் கவிதையில்…

    பெரியோ ரிடத்துப் பணிவுடைமை
         பேசும் பேச்சே இன்சொல்லாம்
    அரிய குணமே ஒருவர்க்கே
         அணியாய் சிறக்கும் வாழ்வினிலே,
    தெரிந்த வரையில் இவைதவிரத்
         தேடிப் பிடித்தே அணிகின்ற
    பெரிதும் சிறிதாய்ப் பிறநகைகள்
         பெருமை பெறாதே அணியெனவே…!

    லிமரைக்கூ…

    பணிவு பேசுமின்சொல் என்றே
    இரண்டும் அணியாகும் ஒருவனுக்கு வாழ்வில்,                
    மற்றெதும் அணியாகா நின்றே…!

    கிராமிய பாணியில்…

    பேசணும் பேசணும்
    நல்ல பேச்சே பேசணும்,
    எங்கயும் எப்பவும்
    நல்ல பேச்சே பேசணும்..

    பெரியவுங்க கிட்ட
    பணிவா இருக்கிறதும்
    அடுத்தவங்க கிட்ட
    அன்போட நல்ல பேச்சா
    பேசுறதும்தான்
    ஓலகவாழ்க்கயில ஒருத்தனுக்கு
    ஓசத்தியான ஆபரணம்,
    அது யில்லாம
    ஒடம்புல போட்டு
    அழகு பாக்கிறதெல்லாம்
    உண்மயில ஆபரணமே யில்ல..

    அதால
    பேசணும் பேசணும்
    நல்ல பேச்சே பேசணும்,
    எங்கயும் எப்பவும்
    நல்ல பேச்சே பேசணும்…!

    Share
  • எழினி!

    எழினி!

    -மேகலா இராமமூர்த்தி

    பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றின் பயன்பாட்டை நாம் காலப்போக்கில் நிறுத்திவிட்டோம்; அல்லது பயன்படுத்த மறந்துவிட்டோம். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் ’எழினி’ என்ற நற்றமிழ்ச் சொல். இந்நாளில் நாம் ’திரைச்சீலை’ (curtain) என்றழைப்பதை அந்நாளில் ’எழினி’ என்ற பெயரால் அழைத்தன பண்டைத் தமிழ்நூல்கள்.

    சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியருள் ஒருத்தியான மாதவிமடந்தையின் நாட்டிய அரங்கேற்றத்தை விளக்குகின்ற ‘அரங்கேற்று காதை’யில் தூணிலே கட்டப்பட்டிருந்த மூன்றுவிதமான எழினிகளை அவற்றின் அமைப்பின் அடிப்படையில் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றார் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்.

    ”ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
    கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
    ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
    மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
    விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து
    …” (சிலப்: அரங்கேற்று. – 109-113)

    இடத்தூணிடத்தே தொங்கவிடப்பட்டுக் கயிற்றை உருவியவழி வலத்தூண்வரை சென்று மறைப்பது ஒருமுக எழினியென்றும், வலத்துண்கள் இரண்டின் மருங்கும் தொங்கவிடப்பட்ட இரண்டு திரைகள், உருவியவழி இரண்டு பக்கத்திலிருந்தும் வந்து நடுவில் ஒன்றோடொன்று இணைவது பொருமுக எழினியென்றும், கூத்தர் அவையோர்க்குப் புலப்படாமல் மறைந்துநின்று அமரர்கள் பேசுமாறு பேசுதற்கமைந்த, மேலிருந்து கீழாக இறங்கும் திரைச்சீலை கரந்துவரல் எழினியென்றும் உரையாசிரியர்கள் இவற்றுக்கு விளக்கமளிக்கின்றனர்.

    இன்று நாம் காணுகின்ற ஒருபக்கத் திரை, இருபக்கத் திரை, மேலிருந்து கீழாக இறங்கும் திரை ஆகியவை அக்காலத்திலேயே புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பது சிலம்பின் வாயிலாக நமக்குப் புலனாகின்றது.

    இம்மூவகை எழினிகள் அல்லாமல் எந்திரத்தால் இயங்கும் ’எந்திர எழினி’யும் அன்றிருந்தமையைச் சீவக சிந்தாமணி நமக்கு அறியத் தருகின்றது. சிந்தாமணியின் கதைத் தலைவன் சீவகனுக்கும், காந்தருவதத்தைக்கும் திருமணம் முடிந்தபின்னர் சீவகனைக் கண்டு நாணிநின்ற தத்தையை அவளின் தோழியர் உள்ளேயிருத்திப் பூம்பட்டால் ஆன எழினியால் அவ்விடத்தை மூடினராம்.

    ”கோதையும் தோடுமின்னக்குண்டலம் திருவில்வீச
    மாதரம் பாவைநாணி மழைமினின் ஒசிந்துநிற்பக்
    காதலம் தோழிமார்கள் கருங்கயற் கண்ணினாளை
    ஏதமொன் றின்றிப்பூம்பட் டெந்திர எழினிவீழ்த்தார்
    .” (சீவக: காந்தருவ தத்தையார் இலம்பகம் – 740)

    எந்திர எழினி என்பதனால் ஏதேனும் கருவிகொண்டு (machine) அத்திரையைத் தத்தையின் தோழியர் இயக்கியிருக்கவேண்டும். 

    போருக்குச் சென்ற மன்னனின் பாசறையை இரண்டு அறைகளாகப் பிரிக்கும் நோக்கில் இடையே உறுதியான கயிற்றாலே திரைச்சீலையை வளைத்துக் கட்டி, அவ்விரண்டு அறைகளுள் உள்ளறையாகிய பள்ளியறையில் மன்னனின் காவலுக்குச் சட்டையணிந்த, வாயினால் உரைக்கவியலாமல் செய்கைகளால் உரைக்கும், ஊமை மிலேச்சர் காவலாயிருந்தனர் எனும் செய்தியைச் சங்கநூலான முல்லைப்பாட்டு தெரிவிக்கின்றது.

    …………………………….திண்ஞாண்
    எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
    உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

    படம்புகு மிலேச்சர் உழையர் ஆக… (முல்லைப்பாட்டு: 63-65)

    துணியால் ஆன திரைச்சீலைகளையே தமிழிலக்கியப் புலவோர் பலரும் தம் பாடல்களில் விரித்துரைக்க, கவிச்சக்கரவர்த்தி கம்பரோ கவினார் இயற்கைக் காட்சியொன்றை நம் கண்முன் நிறுத்திப் புதுமையானதொரு திரைச்சீலையையும் நமக்கு முன்னே அசையவிடுகின்றார். அக்காட்சி இதோ:

    ”சோலைகளில் மயில்கள் அழகாய்த் தம் தோகையை விரித்து ஆடுகின்றன;  அந்த மயிலாட்டம் சுற்றியுள்ள அனைவர்க்கும்/அனைத்திற்கும் தெளிவாய்த் தெரியும் வகையில் தாமரை மலர்கள் விளக்குகளாய் ஒளிவீசி நிற்கின்றன; ஆட்டம் என்றால் அதற்குப் பக்கவாத்தியங்கள் வேண்டாவா? அதனால் வானத்து மேகங்கள் இடியெனும் முழவினை வாசிக்கின்றன; இந்த அதிசயக் காட்சியினை, மகளிரின் கண்ணொத்த, குவளை மலர்கள் வியப்போடு விழித்து நோக்குகின்றன; ஆட்டத்திற்கு மேலும் மெருகூட்ட வண்டுகள் மகர யாழொலிபோல் இனிமையாய்ப் பாடுகின்றன. ஆங்…ஆட்ட அரங்கிற்குத் திரைச்சீலை வேண்டுமல்லவா? அருகிலுள்ள நீர்நிலையின் அலைகளே வெண்ணிறத் திரைச்சீலையாய்த் திகழ்கின்றன. இவ்வழகிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தையெல்லாம் மருதமெனும் மங்கை கம்பீரமாய் வீற்றிருந்து இரசிக்கின்றாள்” என்று கற்பனைநயம் சொட்டச் சொட்டக் காட்சிப்படுத்துகின்றார் கம்பர்.

    தண்டலை மயில்கள் ஆட,
       தாமரை விளக்கம் தாங்க,
    கொண்டல்கள் முழவின் ஏங்க,
       குவளைகண் விழித்து நோக்க,
    தெண்திரை எழினி காட்டத் 
       தேம்பிழி மகர யாழின்
    வண்டுகள் இனிது பாட
       மருதம்வீற் றிருக்கும் மாதோ. (கம்ப. பாலகாண்டம் – 35)

    நீர்நிலையில் எழும்பும் அலைகளை ’எழினி’ என்று கம்பர் பொருத்தமாய் இயம்பியிருப்பது இரசனைக்குரியது.

    இவ்வாறு, எழினி என்ற சொல் திரைச்சீலையைக் குறிக்கும் வகையில் அன்றைய இலக்கிய நூல்களில் பலவிடங்களில் பயின்று வந்திருக்கக் காண்கின்றோம்.

    எழினி, அஃறிணையான திரைச்சீலைக்கு மட்டுமே உரித்தான பெயரா என்றால் ”இல்லை” இப்பெயர் எங்களுக்கும் உரியதே என்று நம்முன் வரிசையாக வருகின்றனர் குறுநிலமன்னர்கள் சிலர். அவர்கள் யார் என்று பார்ப்போமா?

    ’எழினி’ எனும் பெயரில் சங்க நூல்களில் குறிக்கப்படுவோரில் முதன்மையானவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகவும் சிறந்த பொருநனாகவும் அறியப்படும் அதியமான் நெடுமானஞ்சி.

    குறுநில மன்னனான குமணனிடம் பரிசில்பெறச் சென்ற பெருஞ்சித்திரனார் எனும் புலவர்பெருந்தகை, ”கடையெழு வள்ளல்களின் மறைவுக்குப்பின் நீயே இரந்தோரின் துயர் தீர்க்கும் வள்ளலாய்த் திகழ்கின்றாய் என்றறிந்து உனைநாடி வந்தேன்” என்று அவனிடம் கூறுமிடத்து, கடையெழுவள்ளல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுவிட்டுக் குமணனின் வள்ளன்மையைப் புகழ்கின்றார். அவ்விடத்தில் ’எழினி’ என்று அதியமான் குறிக்கப்படுகின்றான்.

    …கறங்குவெள் ளருவி கல்லலைத்து ஒழுகும்
    பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
    கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
    காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
    மாரி ஈகை மறப்போர் மலையனும்
    ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
    கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்…
    (புறம்: 158 – பெருஞ்சித்திரனார்)

    இப்பாடலுக்கு உரைவரைந்த உரைவேந்தர் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை, எழினி என்பது அதியனின் தந்தை பெயர். அப்பெயரோடு சேர்த்து அவன் எழினியதியமான் என்றழைக்கப்பட்டான்; தந்தையின் பெயரைப் பெயரனுக்கு வைக்கும் மரபு பற்றி அவனுடைய மகனுக்கும் எழினி என்ற பெயர் வந்தது என்கின்றார்.  

    வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி” (குறுந்: 80) எனக் குறுந்தொகையிலும், ”சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி” (அகம்: 105) என அகநானூற்றிலும், பெருஞ்சேரல் இரும்பொறையோடு பொருது வீழ்ந்த நிலையில், ”பொய்யா எழினி பொருது களம்சேர” (புறம்: 230) எனப் புறநானூற்றிலும்  எழினி எனும் பெயரால் அதியமான் குறிக்கப்படுகின்றான். 

    அதியமானை அதிகம் பாடிய புலவர் சங்க கால ஔவையார்; அவர், பொகுட்டெழினி என்றும் எழினி என்றும் அழைக்கப்பட்ட அதியனின் மகனையும் பாடியுள்ளார். புறநானூற்றின் 392ஆவது பாடல் அதிலொன்று. அப்பாடலில், வறுமையில் வாடி, கிழிந்த ஆடையோடு, ”மதியேர் வெண்குடை அதியர்கோமான் கொடும்பூ ணெழினி”யின் அரண்மனை முற்றத்தில் வந்துநின்று கிணைப்பறை இசைத்த பொருநன் ஒருவன், தன் வறுமை நீங்கப்பெற்றுப் புத்தாடையும், தேறலும், நல்ல உணவும் பெற்றமையைப் புகழ்ந்துரைக்கின்றார் ஔவையார்.  

    இவர்கள் இருவரல்லாமல், நெடுஞ்செழியனோடு தலையாலங்கானத்தில் போரிட்டுத் தோற்ற எழுவர் கூட்டணியில் ஒருவனாகப் “பொலம்பூண் எழினி” (பொன்னாலான அணிகளையுடை எழினி) என்றோர் எழினி அகநானூற்றின் 36ஆவது பாடலில் குறிக்கப்படுகின்றான்.

    முதுகுன்றம் எனும் ஊரின் தலைவனும், வீரமிகு படையை உடையவனுமாகிய கண்ணன் எழினி என்பவன் அகநானூற்றின் 197ஆவது பாடலில், ”மறம்மிகு தானை கண்ணன் எழினி” என்று பேசப்படுகின்றான். முதுகுன்றம் என ஈண்டுக் குறிக்கப்பட்டிருப்பது இன்று விருத்தாசலம் எனும் வடமொழிப் பெயரோடு விளங்கும் ஊராக இருக்கலாம். 

    மற்றோர் எழினி, ”கல்லா எழினி” எனும் அடையோடு அகநானூற்றின் 211ஆவது பாடலில் குறிக்கப்படுகின்றான். சோழமன்னன் ஒருவன் இவனை யானைகளை அகப்படுத்தும் வேட்டைக்கு அழைத்திருக்க, அறிவிலியான இந்த எழினி வரவில்லையாம்; அதனால் கோபமுற்ற அம்மன்னன், தன் ஆளுகைக்கு உட்பட்ட கழார் (கழாஅர்) எனும் பகுதியை ஆட்சிசெய்த பரதவர்கோமான் மத்தி என்பவனை அழைத்து எழினிக்குப் புத்தி கற்பிக்குமாறு ஏவ, அவ்வாறே மத்தி இந்த எழினியோடு போரிட்டு இவன் பல்லைப் பிடுங்கிவந்து தனக்குச் சொந்தமான வெண்மணி எனும் ஊரின் வாயிலிலுள்ள வன்மையான கதவில் பதித்தான் என்கிறார் மாமூலனார். பகைவனை அவமானப்படுத்தும் வகையில் அவன் பல்லைப் பிடுங்கித் தம் கோட்டையில் பதித்துவைப்பது அந்நாளைய அரசர்களின் (கோர) வழக்கமாக இருந்திருப்பதனை இதன்மூலம் அறிகின்றோம்.

    சேரநாட்டிலுள்ள வாட்டாறு எனும் பகுதிக்குத் தலைவனாக இருந்த எழினியாதனை, ”வளநீர் வாட்டாற்று எழினி யாதன்” என்று புறநானூற்றின் 396ஆவது பாடலில் குறிப்பிடும் புலவர் மாங்குடி கிழார், இவன் ஊக்கமில்லாதவர்க்கு ஊக்கமளிப்பவன்; உறவில்லாதவர்க்கு உறவாயிருப்பவன்; தன்னை நாடிவருவோர்க்கு வாரி வழங்குபவன் என்று பாணனின் கூற்றாகப் புகழ்ந்துள்ளார். இந்த எழினியாதன், தலையாலங்கானத்துச் செருவில் பாண்டிய நெடுஞ்செழியனோடு போரிட்டுத் தோற்ற எழினியின் மகன்; தந்தைக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இவன், நெடுஞ்செழியனோடு நட்புச் செய்துகொண்டான் என்கிறார் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.  

    வேலெறிவதில் வல்லவனான செல்லிக் கோமான் ஆதன் எழினியை ”எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி” என்று நமக்கு அறிமுகப்படுத்துகின்றது அகநானூற்றின் 216ஆவது பாடல். இவன் கோசர்களின் தலைவன் என்று அதில் சுட்டப்பெறுகின்றான்.  

    இவ்வாறு எழினியெனும் பெயரிலிருந்த ஆட்சியாளர்களையும் சங்கப்பாடல்கள் வாயிலாய் நாம் அறியமுடிகின்றது.  

    ஆக, எழினி என்பது திரைச்சீலைக்கும், குறுநில மன்னர்கள் சிலர்க்கும் பொதுவான பெயராக அன்றிருந்தமை தெளிவு. நாம் மறந்துபோன எழிலார் பெயரான எழினியைத் திரைச்சீலைக்கு மீண்டும் அணிவிப்போம்; குழந்தைகட்கும் சூட்டி மகிழ்வோம்!

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. புறநானூறு மூலமும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதிய விளக்க உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    2. அகநானூறு மூலமும் நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் எழுதிய பதவுரை விளக்கவுரையும்.
    3. குறுந்தொகை மூலமும் மகாமகோபாத்தியாய, தாக்ஷிணாத்ய கலாநிதி, டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதிய உரையும்.
    4. முல்லைப்பாட்டு – பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரை.
    5. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.
    6. சீவக சிந்தாமணி மூலமும் புலவர் அரசு, பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் ஆகியோர் எழுதிய உரையும்.
    7. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.  

     

    Share
  • பயணமும் பணமும் (சிறுகதை)

    பயணமும் பணமும் (சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    ‘விஸ்வா விடு நாங்க எடுத்துக்கறோம். நீ இந்த அளவுக்கு எங்களுக்கு உதவுறதே பெரிய விஷயம். பெட்டிய விடு.’

    ‘விடுங்க பெரியப்பா. உங்களுக்கு செய்யறதுல எனக்கு என்ன சங்கடம். விடுங்க நான் வண்டில கொண்டு போய் வைக்கிறேன் என்றான் விஸ்வா.

    ‘கிளம்பிட்டீங்களா சித்தப்பா……….. என்று கேட்டுக்கொண்டே அவசரமாக ஆட்டோவை விட்டு இறங்கினான் கண்ணன்.
    ஒரு வாடக வந்துருச்சு  சித்தப்பா அதுதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.

    ‘பரவால்ல கண்ணா அதுதா எங்களுக்கு விஸ்வா இருக்கானே எதுன்னாலும் பாத்து பாத்து செய்யறதுக்கு அப்பறம் எங்களுக்கு என்ன  கவல.’’

    ‘ அப்பா எப்படி இருக்காரு இப்ப  துணி தெச்சிட்டு இருக்காரா? தைக்கிறதுக்கு வருதா ?’’

    ‘அப்பப்போ ஏதாவது தைப்பாரு.  பெருசா  ஒண்ணுமில்ல சித்தப்பா. அவராலையும் இப்போ முடியறதில்ல.  என்ன கடைசி காலத்துல ஒரு தடவையாவது வெளிநாடு எங்கயாவது கூட்டிட்டு போடான்னு சொல்லிகிட்டே இருப்பாரு .

    ‘அவனுக்கு என்ன சொல்லுவா.   பொழைக்கத் தெரியாம பொழைச்சாச்சு. யார் பேச்சயும் கேட்கவும் மாட்டா. ஆனா ஆசை மட்டும் நெறைய இருக்கு.’

    ‘ஆமா சித்தப்பா.  பார்க்கலாம். சரி நீங்களும் சித்தியும் எவ்வளவு நாள் கொடைக்கானல் தங்க போறீங்க. விஸ்வா அண்ணாவும் தங்கறாரா?’

    ‘அவ இல்லாம நாங்க எங்க போவோம். நீயும் தானப்பா எங்க கூட தங்கறேன்னு’ விசுவாவை பார்த்துக் கேட்டார் கமலநாத்.

    ‘வீட்ல சுனிதா கிட்ட சொல்லிட்டு தான்  வந்தே பெரியப்பா’ என்று கூறியவாறு பெட்டிகளை எடுத்து அவன் கார் டிக்கில வைத்தான்.

    ‘விஸ்வாண்ணா கார்லயே போறீங்களா?’

    ‘ஆமா அவன் சொன்னா கேட்க மாட்டேங்குறா. எங்கார்ல போலாங்கறா’

    ‘சரி சித்தப்பா பார்த்து போயிட்டு வாங்க. கண்ணன் கிளம்பினான்.’

    வேகமாக வீட்டை அடைந்த கண்ணனை ஏம்ப்பா லேட்டா வர்றே என்ற மிரட்டல் தொணியில் தையல் மெஷினை மிதித்துக் கொண்டே மருதாசலம் கேட்டான்.

    ‘சித்தப்பாவும் சித்தியும்  இன்னக்கி  கொடைக்கானல் சுத்திப்பார்க்க கிளம்பறாங்க. சில ஐட்டம்ஸ் வாங்கிட்டு வர சொன்னாங்க. சரி வர வழி தானேனு வாங்கி கொடுத்துட்டு வழி அனுப்பி வெச்சிட்டு வர்றேன் .’

    ‘தனியாவா?’

    ‘இல்ல விஸ்வாண்ணாவும் கூடப் போறாரு. அவரு கார்ல தான் இவங்க போறாங்க. அந்த அண்ணன் போகாம இருப்பாரா?’

    ‘ம்ஹூம் கொடுத்து வச்சவங்க பைய, பிரான்ஸ்ல இருந்து மாசாமாசம் காசு அனுப்புறான். இங்கே எல்லாத்தையும் விஸ்வா தன் பிள்ளையா இருந்து கவனிச்சுக்கறா. ம்ஹூம் அதுக்கும் ஒரு கொடுப்பின வேணும்.’

    கை கால் மூஞ்சி கழுவிட்டு வர்றதுக்குள்ள லதா டிஃபன் எடுத்துவைத்தாள். மகள் கீதா ஹோம் வொர்க்  எழுதிக் கொண்டிருந்தாள். கண்ணனுக்கு மனக்கஷ்டமாக இருந்தது. மனசுக்குள்ள நெனச்சுகிட்டா சித்தப்பா, பசங்கள நல்லா படிக்க வெச்சாரு. வெளிநாட்டில் செட்டில் ஆகியிருக்காங்க. நமக்குத் தெரிஞ்சது இந்த ஆட்டோ தொழில் மட்டும்தான். கவர்ன்மென்ட் பள்ளில பத்தாவது வர படிக்கவெச்சாரு.  இதுல எப்ப பார்த்தாலும் அவங்களோட நம்மள வச்சு ஒப்பிட்டு பார்த்துட்டு இருக்கிறது வேற ஒரு கொறச்சல். கோபந்தா வருது. வேற வழி சகிச்சிகிட்டுதானே ஆகணும். சாப்பிட்டு படுக்கையறைக்கு சென்றவன் இருந்த மன வருத்தத்தில் கீதா சாப்பிட்டாளா என்று கூட கேட்கவில்லை. படுத்துத் தூங்கி விட்டான்.

    2

    கொடைக்கானல் மாலை 4 மணிக்கு வண்டி போய் சேர்ந்தது.  ஹோட்டல் அறையில் பெட்டிகளை எடுத்து வைத்துவிட்டு அவர்களை சிறிது நேரம் ஓய்வெடுக்கவிட்டு, வேறொரு அறைக்குச்சென்றான் விஸ்வா.

    ‘ஏங்க இந்த விஸ்வா நம்ம பெத்த புள்ள மாதிரி நாம எப்ப கூப்பிட்டாலும் ஓடிவரா நாம பெத்த புள்ள கூட நம்மள இந்த மாதிரி அக்கறையா கவனிப்பானானு தெரியல.

    ‘ஆமா அவ அப்பா இறந்தது அவனால ஏத்துக்க முடியல. இன்னும் கொஞ்ச நாளு இருப்பாருன்னு எதிர்பார்த்தா. அதனால் தான் சின்ன ஹாஸ்பிடலா இருந்தாலும் நல்ல ஹாஸ்பிடலா அட்மிட் பண்ணி பாத்துக்கிட்டா.’

    ‘ஆமா அவனுக்கு அப்பா மேல பாசம் அதிகம்தா. தங்கவேல் அண்ணனும் அப்படித்தான் என்னன்னாலும் புள்ளைக்கி புள்ளைக்கினு யோசிப்பாரு. அப்படியே யோசிச்சு கட்டுனதுனால தான் இப்ப இவ்வளவு பெரிய சொந்த வீட்ல இருக்கா.’

    ‘சரிதா நீங்க சொல்றது அவன் பொண்டாட்டி சுனிதாவும் மாமியா சாகுற வரைக்கும் நல்லா தா பாத்துகிட்டா. அந்த அம்மா கழுத்தில் கெடந்த எட்டு பவுன் தாலியை கூட நாத்தனாருக்கே கொடுத்துட்டா. ஆனா அந்த அம்மா கிட்ட எப்படியும் அதை சேர்த்தாம 40 பவனாவது இருந்திருக்கும். அது யாருக்கு போச்சுன்னு தெரியல .’

    ‘நமக்கு எதுக்கு அதெல்லாம் அது அவங்க ஃபேமிலி விஷயம். விஸ்வநாதன் நம்மகிட்ட எப்படி இருக்கான்னுதா பாக்கணும். ஞாயிற்றுக்கிழமையானா நோன்வெஜ்ஜோட  காலைல  வந்து நிக்கறா. எங்க போறதா இருந்தாலும் நம்மளையும் அவங்க பேமிலியோட சேர்த்து கூப்பிட்டு போறான். என்ன வேணும்னாலும் சொன்னா உடனே வாங்கிட்டு வர்றான். டாக்டர் கிட்ட போகணும்னா கூட்டிட்டு போறா. ஃபோன் பண்ணனா உடனே வந்து நிக்கறா. இதை விட என்ன வேணும். போய் படுத்து தூங்கு.’

    கொடைக்கானலில் ஒரு வாரம் சுத்தி பார்த்துவிட்டு வீடு திரும்பினர். கமலநாதனும், தங்கவேலுவும் பால்ய நண்பர்கள். தங்கவேலு ஒரு வயது தான் சின்னவன். இருவரும் ஒரே தெருவில் குடியிருந்தவர்கள். பிறகு தங்கவேலுவிற்கு அரசு வேலை கிடைத்து விட்டது. கமலநாதனுக்கு அதே  பர்னிச்சர் வேலைதான். பர்னிச்சர் என்றால் லட்சங்கள் புரளும் வியாபாரம். பெரிய பெரிய விலை உயர்ந்த மரங்களை வியாபாரிகளுக்கு கைமாத்தி விடுற வியாபாரம். அவருக்குனு ரெகுலர் கஸ்டமர்ஸ் இருந்தாங்க. யாரு எப்ப வருவாங்க எப்படி  டீலிங் பேசுவாங்கன்னு தெரியாது. ஆனா பிசினஸ் போயிட்டே இருக்கும் அந்த சில டெக்னிக்ஸ யாருக்கும் சொல்லியே தர மாட்டார்.

    3

    கண்ணன் ஆட்டோ ஓட்டுன காசை கொஞ்சம்  பெரிய ஸ்டீல் உண்டியல் வாங்கி அதில் போட்டு வச்சான்.  சரி அப்பாவுக்கும் ஒரு ஆசை தானே விமானத்தில் போய் ஏதாவது ஒரு வெளிநாட்டில் போய் இருந்துட்டு வரணும்னு. துபாய் தான் பக்கமா இருக்கு அங்கே கூட்டிட்டு போலாம். அதுக்கு தான் உண்டியல்ல காசு சேர்த்துக்கொண்டிருந்தான்.  சித்தப்பா பசங்க ஃபிரான்சில இருக்கிறதுனால அவர் அடிக்கடி போயிட்டு வருவாரு. ஒருவேளை அவரை பார்த்து கூட இவருக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். சரி ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம் மனைவி லதாவும் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் சொல்ல  மாட்டா . கொடைக்கானலில் இருந்து கார்ல திரும்பி வரும் போதுதான் கமலநாதன், விஸ்வா கிட்ட சொன்னார்.

    ‘விஸ்வா…………. வீட்ல போய் இனி வேலைக்கு ஒரு ஆள் விட்டு கொஞ்சம் மராமத்து வேலை எல்லாம் செய்யணும்.’

    ‘ஏன் பெரியப்பா திடீர்னு ‘

    ‘உங்கிட்ட சொல்லலையா வினோத் பேமிலியோட அடுத்த மாசம் வர்றா.’

    ‘அப்படியா எவ்வளவு மாச லீவு.’

    ‘இல்ல திரும்ப போறதப்பத்தி இங்க வந்துதா யோசிக்கணும்னு சொல்றா’

    ‘அப்படியா ?’

    ‘ஆமா ‘

    பார்ப்போம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கழித்து கமலநாதன் விசுவாவுக்கு போன் செய்தார். ‘ஏம்ப்பா இந்த பக்கம் ஆளையே காணோம்.’

    ‘பெரியப்பா கொஞ்சம் வேலை பிசி.’

    ‘சரி சரி பாருப்பா அந்த வீட்டு மெயின்டன்ஸ்க்கு ஆளக்கேட்டிருந்தேனே!’

    ‘ஆ……. ஆமா மறந்துட்டே………. வரச்சொல்றே .

    ‘பெரியப்பா நா அப்புறம் பேசுறேன் .’

    வினோத் ஊரில் இருந்து குடும்பத்தோடு வந்தான் விஸ்வநாதன் அவனை ஏர்போர்ட்டுக்கு ரிசீவ் பண்ண போனான் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றவன் ஒரு வாரமா வரவே இல்லை. போன் பண்ணாலும் சரியா ரெஸ்பான்ஸ் இல்ல.

    ஒரு வாரம் மகன்கூட நல்லா ஊரச்சுத்திட்டு வீட்ல உட்காந்திட்டு இருக்கும்போது அப்பாவுக்கும் மகனுக்குமான விவாதம் தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே சென்றது.

    ‘அப்பா எனக்கு உங்க சொத்தெல்லாம் ஒன்னும் வேண்டா.  நாம இந்த வீட்டக் காலி பண்ணிட்டு உங்களுக்கு பிசினஸ் பாக்குறதுக்கு வசதியா டவுன பார்த்து போவோம்.  உங்க கூட இருந்து உங்க பிசினச கத்துக்கறே.’

    ‘அப்போ நான் சொன்னப்ப எல்லாம் கேட்கல. என்னால பிசினஸ் பார்க்க முடியலன்னு அப்போ இதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு இப்போ எனக்காக ஒரு கஸ்டமர் வட்டாரத்தை உருவாக்கி வச்சிருக்கேன் இப்போ உனக்கு என் பிசினஸ் வேணுமா ? .’

    ‘சரி உங்க பிசினஸ் வேண்டாம். இந்த வீட்ட கொடுத்துட்டு டவுன்ல நல்ல ஒரு வீடா பார்த்து வாடகைக்கு போலாம். இத வாடகக்கு விட்டர்றலாம்’

    ‘என்னோட இந்த வீட்டை விட்டுட்டு நான் பொறந்த இந்த வீட்ட விட்டுட்டு உன் கூட வந்து அடிமையா இருக்கணுமா. அதெல்லாம் முடியாது.’

    ‘அப்பா  ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.’

    ‘ஆமா பேசாம எனக்கு முடியலடா எங்க கூடவே இருடான்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்படி கெஞ்சினே. அப்ப எல்லாம் ஒனக்கு எதுவும் தோணல.  இப்போ  உன்னோட மாமனார் செத்திட்டாரு  அவரு  பிசினஸ் பார்க்க ஆளு வேணும் அதனால இங்க செட்டில் ஆயிடலாம்னு வந்திருக்கே. உன்ன விட விஸ்வா எவ்வளவோ மேல். நாங்க பெறாத புள்ளையா இருந்தாலும் எங்களுக்கு இன்னும் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து பார்த்து பண்ணுறா.  எதயும் எதிர் பார்க்க மாட்டா.’

    ‘ஆமா மாமனார் பிசினஸ் பாத்துக்க தான் வந்தே. இப்ப என்ன அதுக்கு உங்க பிசினஸ நீங்களே பாருங்க, ஆனா இந்த வீட்ல எனக்கு முழு உரிமை இருக்கு. தனியா இருக்கிறது தான் எங்களுக்கு பிடிக்கும்னு தானே அங்கே வந்தப்போ ஒரே மாசத்துல திரும்பி வந்தீங்க. நா அங்க ரெண்டு குழந்தைகள வெச்சிட்டு தனியா கஷ்டப்படுறேன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா .’

    ‘இந்தர்றா உனக்கு இந்த வீடு தானே வேணும். வெச்சுக்கோ. நான் இப்பவே இங்கிருந்து போறேன். கண்ணனப் பாரு அவங்க அப்பா அவனுக்கு ஒண்ணுமே சேத்து வைக்கல ஆனா அவங்க அப்பனுக்கு ஒண்ணொண்ணும் பார்த்து பார்த்து செய்யறா, அவங்க அப்பா ஆசைப்படுறாருனு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வச்சு அவங்க அப்பாவை துபாய்க்கு கூட்டிட்டு போறான். நேத்துதான் எனக்கு போன் பண்ணி சொன்னா இந்த வாரத்தில் துபாய் போறோம் சித்தப்பானு.  ஒன்ன எல்லாம் படிக்க வெச்சு ஆளாக்கனதுக்கு நீ இப்படித்தாண்டா கடைசில பேசுவே. நானும் எங்க கூட கடைசி காலத்தை கழிக்கதான் வந்திருக்கேன்னு நினைச்சே. இனிமே நீ இருக்கிற வீட்ல நான் இருக்க மாட்டே.  நான் இப்பவே கிளம்பறேன்டா  நீயே இரு என்று ஒரு பெரிய பை நிறைய  துணிகளை போட்டுக்கொண்டு வெளியிலிறங்கினான். செண்பகம் கோயிலுக்கு போயிட்டு வர்ற வரைக்கும் கூட காத்திருக்கல. ஆட்டோ ஏறிச் சென்று விட்டார்.

    4

    ‘ஏங்க நீங்க உங்க பெரியப்பா வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சு ஏன் போகலையா?’

    ‘அதுதான் அவருடைய பையன் ஊர்ல இருந்து வந்திருக்கறானே.’

    ‘அதுக்கு என்ன இப்போ இதுக்கு முன்னாடி வந்தப்போ உங்க கார்ல தானே ஊரு சுத்துனாங்க இப்ப மட்டும் என்ன ஆச்சு?’

    ‘இனி அவன் திரும்ப வெளிநாட்டுக்கு போக மாட்டானாம்’

    ‘ ஏ………..?’

    ‘அவ அப்பாவோட பிசினஸை பார்க்க போறானாம்’

    ‘அதுக்கும் நீங்க அவங்க வீட்டு போறதுக்கும் என்ன இருக்கு?’

    ‘உண்மைய சொல்லட்டுமா நான் அவரு வீட்டுக்கு போறது, வேணுங்கிறதெல்லாம் வாங்கி கொடுக்கறதெல்லாம் காரணமாத்தான் .’

    ‘என்ன சொல்றீங்க ?’

    ‘ஆமா நான் என்ன லூசா? எங்க அப்பாவும் அவரும் நல்ல நண்பர்களாத்தா இருந்தாங்க. அண்ணந்தம்பியாதா பழகனாங்க, நான் இல்லைன்னு சொல்லல. எங்க அப்பாவுக்கு கவர்மெண்ட் வேலை அவருக்கு பிரச்சனை இல்ல. ஆனா என்ன கமலநாத சித்தப்பாவோட பிசினஸ் விஷயங்கள தெரிஞ்சுக்கணும்னு எவ்வளவு தடவை அனுப்பி இருப்பாரு.  போறப்ப எல்லாம் எடுபிடியா என்ன வெச்சிருந்தாரு.  முக்கியமான கஸ்டமர்ஸெ பார்க்கப்போகும் போது என்ன ஒரு தெரு தள்ளி  நிக்க வெச்சுட்டு போவாரு. அவரோட பிசினஸ் சூட்சமங்கள கத்துக்கணும்னு தான் அவருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி போனே. என்னோட வண்டில கூகுள் மேப் ரெக்கார்டோட செட் பண்ணி இருக்கேன் அதனால தான் நிறைய இடத்துக்கு அவங்க கார எடுக்க விடாம, நம்ம கார எடுத்துட்டு போனே. அவங்க பிசினஸ் டீலிங் பேசும் போதெல்லாம் நான் காருக்கு வெளியில்தான் நிப்பேன்.  அவங்க உள்ள உட்கார்ந்து பேசுனதெல்லாம் ரெக்கார்ட் ஆயிருக்கு. நல்லா வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல பானை ஒடஞ்ச மாதிரி ஊர்ல இருந்து அவரு பைய வந்திட்டா. இனி எனக்கு சொல்லித்தரவா போறாரு.’

    ‘ நிஜமா நீங்க இதுக்கு தான் போறீங்கன்னு தெரியாம போச்சு.’

    ‘ நாமும் நம்ம லைஃப்ல செட்டில் ஆக வேண்டாமா? திவ்யா பிளஸ் டூவந்துட்டா அடுத்த வருஷம் நீட். அவ ஏவரேஜாதா படிப்பானு எனக்கும் தெரியும். ஆனா அவளை டாக்டர் ஆக்கணும்ங்குறது எங்கனவு. வருமானத்த ஜாஸ்தி பண்ண வேண்டாமா?’

    ‘இதுக்கே நீ ஷாக் ஆனா என்ன பண்றது. உனக்கு தெரியாத இன்னொரு விஷயத்தையும் சொல்றேன் ஆத்திரம் வரும்போது எல்லாத்தையும் சொல்றதுதா.  எங்க அப்பாவ நல்லா கவனிச்சிருந்தா இன்னும் ரெண்டு வருஷம் நல்லா இருந்திருப்பாரு. அவரோட பேங்க் பேலன்ஸ் ஃபுல்லா காலி பண்ணித்தா வைத்தியம் பார்த்தேன் ரெண்டாவது ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொன்னாரு. முப்பது நாள் போகட்டும்னு சொன்னப்பதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அந்த ஆபரேஷன் செலவுக்கு கண்டிப்பா எனக்கு அவர் கட்டுன வீட்ட தான் அடமானம் வைக்கணும். அதுவும் பத்துமா இல்ல விக்க வேண்டியது வருமானு தெரியல. மொதல் ஆபரேஷனுக்கப்பறம் அவருக்கு கேஸ் ட்ரபுள் இருக்கிற ஐட்டம், கூல்டிரிங்க்ஸ், சிசர், ஊறுகா, மது இதெல்லா  கொடுக்க கூடாதுனு டாக்டர் தெளிவா சொல்லியிந்தாரு. வேற வழி தெரியல மனசாட்சியை கட்டி போட்டுட்டு தான் பிரிட்ஜ் ஃபுல்லா கொக்க கோலாவும், சரக்கு பாட்டிலுமா வாங்கி அடிக்கினே. அவரு அத பார்த்தா சும்மா இருக்க மாட்டார்னு எனக்குத்தெரியும். ஆனா நானா ஊத்திக் கொடுக்கல. அவராத்தான் எடுத்து குடிச்சிட்டாரு. கேஸ் அடச்சு உயிரை விட்டுட்டாரு.’

    வாயில் கைப்பொத்தி  திகைத்துப்போயி  உக்காந்தா சுனிதா.

    ‘என்ன ஷாக் ஏங்க உங்கள பாக்கவே பயமா இருக்கு. நாளைக்கு எங்களையும் இப்படி எல்லாம் யோசிப்பீங்களானு சினிமா டயலாக் எல்லாம் பேசாதே. எல்லாம் நம்ம குடும்பத்துக்காகத்தான் மத்தவங்களுக்கு முன்னாடி என் பொண்ணு டாக்டர் ஆகணும் அவ்வளவுதான். இப்படி பாக்குற அளவுக்கு நான் ஒன்னும் கொலைகாரன் கிடையாது. செய்ற வேலைல  சாதகங்களைத் தேடுறேன் அவ்வளவுதான். எல்லாம் நம்ம எதிர்காலத்துக்காகத்தான். அந்த கிழவங்கிட்டதா கொஞ்சம் ஏமாந்திட்டேன். அந்த ஆட்டோக்காரன் கண்ணன  அவருகிட்ட நெருங்க விடாம கவனமா இருந்தே. ஆனா அவன் பையன் இப்படி உடனே வருவானு  யோசிக்காம போயிட்டே…. ச் …..சே…..’

    விஸ்வாவின் வீட்டை நம்பி தஞ்சம் புக நெனச்சு வந்த கமலநாதன் கதவுக்கு வெளியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார். ஆட்டோவில் இருந்து இறங்குகிற  மனைவி செண்பகத்தின் குரலும், மகனின் குரலும் கேட்டது. கமலநாதனின் எண்ணங்கள் மிதக்கத் தொடங்கின, வாயு மண்டலத்தில் பறப்பதாக உணர்ந்தார் .

    சத்தம் கேட்டு  விஸ்வாவும் சுனிதாவும் வெளியில் வந்தனர்

    Share
  • இந்திய விண்ணுளவி ஆதித்யா -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத் தொடங்கியது

    இந்திய விண்ணுளவி ஆதித்யா -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத் தொடங்கியது

    சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா

    https://youtu.be/XrmKEF70L1A

    2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யா-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ) தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIAN POINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது.  அந்த ஆதித்யா விண்ணுளவி 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி PSLV-C57 ராக்கெட்டில் ஏவப்பட்டது. ஏழுவிதமான கருவிகளைச் சுமந்து செல்லும் விண்ணுளவி அடுத்த 5 ஆண்டுகள் சூரியனை ஆய்வு செய்து தகவல் அனுப்பும். ஏழில் 4 கருவிகள் சூரிய ஒளியை ஆராய்பவை. மற்ற 3 கருவிகள் ஒளிப் பிழம்பு [Plasma] & காந்த சக்தியை உளவு செய்பவை.

    ஆதித்தியா ஆய்வுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
    1.  ஆதித்தியா   L-1  சூரியனை உற்று நோக்க, தங்கு அரங்கில் சுற்றுப் பாதை அமைக்கப்பட வேண்டும்.

    2.  ESA  தகவல்படி,  L-1 தங்கு அரங்கில் பெரிய இரு கோள்களின் ஈர்ப்பு விசைகள் கழிவுபட்டு நகர்ச்சி எளிதாய் ஆகிறது.

    3. முதன்முதல் முழுவட்டச் சூரிய வடிவம் பதிவு செய்யப்பட்டது,

    4.  சூரியப் புயல்கள், சூரிய வீச்சுகள் [Solar Flares] பற்றி முதல் விளக்கமாக அறிய முடிந்தது. அவற்றின் விளைவுகள் பூமியின் காலநிலையை எப்படி மாற்றுகின்றன?  விண்வெளியில் இயங்கும் 7800 உலக துணைக்கோள்கள் எவ்விதம்
    பாதிக்கப்படுகின்றன?  என்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்கிறார்கள்.

    5.  ஆதித்யா திட்டச் செலவு 46 மில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது.

    Share
  • பொங்கலோ பொங்கல் !

    பொங்கலோ பொங்கல் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
    தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
    பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
    புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்

    நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே
    நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
    உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
    உயர்வான எங்களது பொங்கல் விழாவே

    வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
    மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
    தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
    தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே

    வீட்டிலுள்ள அனைவரு மதிகாலை எழும்பியே
    விரைவாக நீராடி புத்தாடை அணிந்துமே
    பொங்கல் பொங்க புறப்படுவோம் பூரிப்பாகவே
    மங்கலமாய் பெற்றவர்கள் மகிழ்ந்து நிற்பார்கள்

    பொங்கற்பானை அடுப்பினிலே ஏற்றி வைத்ததும்
    அக்கினையை மூட்டிவிடப் பாட்டி வந்திடுவா
    அரிசி பருப்பு சர்க்கரை அனைத்தையையுமே
    அம்மாயங்கே ஒழுங்காய்க் கொண்டு வந்திடுவா

    பானையிலே பாலையூற்ற தாத்தா வந்திடுவார்
    பாட்டியோடு அம்மாவோடு நாமும் ஊற்றுவோம்
    பொங்கிவரும் வேளைக்காக காத்து நின்றுமே
    அரிசியுள்ளே போடுதற்கு ஆவல் கொள்ளுவோம்

    பொங்கிவரும் பாலைப்பார்க்க பூரிப் பெய்துவோம்
    அரிசியினை கையெடுத்து அனைவரும் போடுவோம்
    பொங்கிலினை பெருவிருப்பாய் மனதில் எண்ணியே
    பொங்கலோ பொங்கலென்று சொல்லி மகிழுவோம்

    அரிசிவெந்த பின்னரம்மா சர்க்கரை போடுவார்
    அக்கம்பக்கம் பொங்கல்மணம் காற்றில் கலந்திடும்
    பானைநிறைய பொங்கலெம்மை பார்த்துச் சிரித்திடும்
    அம்மாவுடனே  பொங்கலினை இறக்கி வைத்திடுவார்

    கோலமிடை வாழையிலை அம்மா வைத்துமே
    பொங்கலினை பக்குவமாய் படைத்து மகிழுவார்
    அந்தவேளை ஆதித்யன் ஆசி வழங்குவான்
    அனைவருமே அவனை வணங்கி ஆசிவேண்டுவோம்

    தம்பிதங்கை பட்டாசை வெடித்து மகிழுவார்
    தாத்தாபாட்டி  தூரநின்று கேட்டு மகிழுவார்
    அப்பாவம்மா அனைத்தையுமே பார்த்து மகிழுவார்
    ஆனந்தமாய் பொங்கலங்கே பொங்கி ஒளிருமே

    தாத்தாபாட்டி கால்களிலே விழுந்து வணங்குவோம்
    ஆசிகூறி காசுதந்து வாழ்த்தி மகிழுவார்
    அப்பாவம்மா ஆசிதந்து அணைத்து நிற்கையில்
    ஆனந்தமே எங்களுக்குள் பெருகி நின்றிடும்

    பொங்கலன்று அனைவருமே கோவில் செல்குவோம்
    எல்லோர்வாழ்வும் சிறப்புறவே இறையை வேண்டுவோம்
    ஆலயத்தில் பக்குவாய் அனைத்தும் நடந்திடும்
    ஆண்டவனின் நினைப்புடனே வீடு திரும்புவோம்

    பொங்கலினை மற்றவர்க்கும் கொடுத்து மகிழுவோம்
    தருகின்ற பொங்கலினை ஏற்றும் மகிழுவோம்
    உறவுகளைப் பார்ப்பதற்கு உவப்பாய்ச் செல்குவோம்
    உடனிருந்து பொங்கலினை உண்டு மகிழுவோம்

    பொங்கலெனும் வார்த்தையது பொருள் பொதிந்தது
    மங்கலத்தை மாநிலத்தில் பதித்து நிற்பது
    எங்கணுமே இன்பமதைப் பெருக்கி நிற்பது
    இனிப்போடு உறவுகளை இணைக்கச் செய்வது

    Share
  • பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் மனத்தில் புத்துணர்வையும் , உத்வேகத்தையும் , உவந்தளிக்கும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்

    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு”

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மன மிருத்தும் அமுத வாக்குகள்.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்க ரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலுந்தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவை அனைத்தும் ஒன்றாய் இணையும் விழாவினைப் பற்றி அறிவது அவசியம் அல்லவா? அந்த விழாவின் உட்கருத்தை அறிவோமா ? வாருங்கள் !

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது ? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம் ? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது ? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல் !

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள்,உழைப்புக்கு உதவிடும் கரு விகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட் களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப் படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல்யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டு மென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழவைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா ?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றை யெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரி தாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும், இந்துக்களாயினும் , தைப் பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கி றார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா !  நன்றி நவிலும் விழா ! உழைப்பாளரின் உன்னத விழா ! கூட்டுறவின் விழா ! மதபேதமற்ற மகோன்னத விழா ! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா ! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்.

    Share
  • அறியாப் பருவத்திலே (சிறுகதை)

    அறியாப் பருவத்திலே (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு.

    இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக வந்தது.

    `கணக்கு’ என்றதுமே உமா ஞாபகம்தான் எழுந்தது.

    கண்டிப்பாக உமாவுக்குப் பிறந்தவளாகத்தான் இருக்கவேண்டும். அதே சாயல், அதே வெட்கங்கலந்த சிரிப்பு.

    அவனுடன் படித்த உமா படிப்பில் கெட்டிக்காரி. பாடத்தில் சந்தேகம் கேட்பதுபோல் அவளுடன் பழகியவன் அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.

    சிடுமூஞ்சி கணக்கு வாத்தியாரைப்போல் இல்லாது, பொறுமையாக விளக்கிவிட்டு, “நான் என்ன, ஒன்னோட டீச்சரா?” என்று சிரிப்பாள் உமா. வெட்கமும் பெருமையும் அதில் கலந்திருக்கும்.

    “சனிக்கிழமை என்கூட ஒரு இடத்துக்கு வர்றியா? என்று அவன் கெஞ்சலாகக் கேட்டபோது, அவள் அதிகம் யோசிக்கவில்லை.

    “எங்கேடா?” என்றுமட்டும் கேட்டாள்.

    “சொன்னாத்தான் வருவியா? அது ஒரு சர்ப்ரைஸ்! ஒனக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்று புதிர் போட்டுவிட்டு, “லைப்ரரின்னு வீட்டிலே சொல்லிட்டு வா!” என்று திட்டம்கூட வகுத்துக்கொடுத்தான்.

    “எங்கேடா?” மீண்டும் கேட்டாள்.

    “ராஜன் வீட்டுக்கு!” என்று மட்டும் தெரிவித்தான்.

    அவர்களுடன் இன்னும் நாலைந்துபேர் இருந்தார்கள். ஒன்றாகப் படித்தவர்கள்.

    “டி.வி பாக்கத்தான் என்னை வரச்சொன்னியா? இதுக்கு வீட்டிலேயே ஒக்காந்து படிச்சிருப்பேன்,” என்று அலுத்தவளிடம், “இது வேற மாதிரி,” என்று நமட்டுச்சிரிப்புடன் புதிர்போட்டான் ரமணன்.

    அவளுக்குப் பயம் வந்தது. “ராஜன்! ஒங்க வீட்டிலே பெரியவங்க யாரும் இல்லே?” என்று கேட்டாள்.

    “அப்பா வேலை விஷயமா வெளிநாட்டுக்குப் போயிருக்கார். அம்மாவும் கூடப்போயிருக்காங்க. வீட்டிலே நானும், அண்ணனும்தான். நல்ல காலம், அவனுக்கு இன்னிக்கு ஏதோ விளையாட்டுப்போட்டி! நாம்ப ஜாலியா படம் பாக்கலாம்!” பெரிய சிரிப்புடன் பதில் வந்தது.

    “நான் போறேன்,” என்று எழுந்தவளின் கையைப்பிடித்து இழுத்தான் ரமணன். “ஒனக்கும் சேர்த்துக் காசு குடுத்திருக்கேன் உமா. கொஞ்சம் பாரு. பிடிக்காட்டி போயிடலாம்”.

    அறையில் அசாத்திய மௌனம் நிலவியது. எல்லாம் படம் ஆரம்பிக்கும்வரைதான். அதன்பின் ஒரே கூச்சல், கும்மாளம்.

    படிப்பைத்தவிர வேறு எதையும் அறிந்திராத அந்த பதினான்கு வயதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருந்தது.

    `பெண்களை என்னமாக இழிவு படுத்துகிறார்கள்!’ என்று கோபமும் வந்தாலும், புதிய விஷயத்தை அறிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்துடன் பார்த்தாள்.

    திரையில் வரும் பெண்ணாகவே காமத்துடன் தன்னைப் பார்க்கிறார்கள் நண்பர்கள் என்று புரிந்துகொண்டபோது நிலைமை முற்றியிருந்தது.

    அதற்கடுத்த வாரம் பள்ளியில், “ஸாரி உமா. இனிமே அப்படிப் பண்ணமாட்டேன்,” என்று ரமணன் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.  “நடந்ததை மறந்துடு”.

    ஆனால், நடந்ததை மறக்கமுடியாதபடி விதி விளையாடியது.

    “யாருடி அவன்? நீ படிச்சு முன்னுக்கு வருவேன்னு பாத்தா, இப்படி கெட்டுப்போய் வந்து நிக்கறியே!” அப்பா குதித்தார்.

    இருபுறமும் போலீஸ் காவலுடன், தலையைக் குனிந்தபடி, ரமணன் நடந்தபோது பள்ளி முழுவதும் வேடிக்கை பார்த்தது. பின்னால், வருத்தமே உருவாக அவனுடைய விதவைத்தாய்.

    இளம் வயது அவனுக்குத் துணையாக இருந்தது. சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினார்கள்.

    ராஜன்தான், `எனக்கென்ன பயம்? எங்கப்பா எனக்கு ஆதரவா இருக்காரு!’ என்று வீறாப்பாகப் பேசினாலும், ஈராண்டுகளாக இப்படி ஒரு தொழிலில் சாமர்த்தியமாகச் சம்பாதித்த தனக்கு உலை வைத்துவிட்டானே பாவி என்று குமுறினான்.

    `அந்தப் பொண்ணு `நோ! நோ!’ ன்னு கத்தினா. அவ கையையும், காலையும் ரெண்டு, ரெண்டு பேர் பிடிச்சுக்கிட்டு,” என்ற வர்ணனையுடன் வாக்குமூலம் அளித்தான்.

    வீடியோ கடைக்குப்போய், `ஸ், ஸ்’ என்று ரகசியக்குரல் கொடுக்க, மேசை அடியில் கொடுப்பார்கள் அப்படங்களை. அவன் நல்ல காலம், `அவங்க அந்த மாதிரி படம் பாக்கறப்போ ஒனக்கென்ன அங்கே வேலை?’ என்று யாரும் அவனைக் கேட்கவில்லை. போலீஸ் அதிகாரியின் பிள்ளையாயிற்றே!

    வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, புதிய மனிதனாக வெளியே வந்த ரமணன் முதல் வேலையாக உமாவைத் தேடிப்போனான்.

    அவளிருந்த வீட்டில் யாரோ குடியிருந்தார்கள். எங்கு போய் தேடுவது என்ற குழப்பம்தான் எழுந்தது அவனுக்குள்.

    விரக்தியுடன், தானுண்டு, தன் கடை உண்டு என்று வாழ ஆரம்பித்தான்.

    ரமணனுடைய மினி மார்க்கெட்டில் வேலை செய்த பரதனுக்குக் கல்யாணமாம்.

    “எல்லாரும் ஒங்களைமாதிரி சன்யாசியா இருப்பாங்களா ஸார்?” என்று விளையாட்டாகக் கேட்டபடி பத்திரிகை கொடுத்தான் மாப்பிள்ளை.

    நானா சன்யாசி! நான் பிஞ்சிலேயே வெம்பிப்போனவண்டா!

    “என்னடா? லவ்வா?”

    வெட்கப்பட்டான். “அதெல்லாம் இல்ல ஸார். அனாதை ஆசிரமத்திலே வளர்ந்த பொண்ணு. பஸ் ஸ்டாப்பில பாத்தேன். பிடிச்சுப்போச்சு”.

    “அப்போ அது லவ்தான்!” தனக்கும் மீண்டும் கலகலப்பு வந்துவிட்டதே என்ற ஆச்சரியம் எழுந்தது ரமணனுக்கு.

    மணவறையில் அமர்ந்த பெண்ணைப் பார்த்ததும், அவன் மனம் ஆடிப்போயிற்று.

    இவளா? இவளா அனாதை?

    அப்பன் நானிருக்கிறேன்.

    ஆனால், அதை உரக்கச் சொல்லமுடியுமா?

    பிறந்ததுமே, `வேண்டாம்!’ என்று உன்னை உதறிவிட்டுப் போய்விட்டாளா உன் தாய்? ஆத்திரம் எழுந்தது.

    `பாவம், சிறு பெண்! அவள் வேறு என்ன செய்திருக்க முடியும்?’ என்று மூளை தர்க்கம் செய்தது.

    நான் செய்த தவற்றுக்கு இப்பெண்கள் இருவரும் பலி!

    “மொதல்லே முதலாளி காலிலே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம், வா!”

    கூச்சத்துடன் காலை பின்னுக்கு இழுத்துக்கொண்டான் ரமணன்.  “நல்லா இருங்க!” என்று வாழ்த்தியபோது, குரல் தழுதழுத்தது.

    தனக்கு நாதியில்லாமல் போய்விட்டதே என்ற கவலை இனி இல்லை. கடையை பரதனுக்குக் கொடுப்பதுதான் தான் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இனியாவது மகள் செல்வச்செழிப்புடன் வாழ்வாள்.

    தன்னைப்போல் தனிமரமாக இல்லாது, எங்கோ குடும்பம், குழந்தைகள் என்றிருப்பாள் உமா. அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது.

    “ஸார் முகத்திலே இன்னிக்குத்தான் சிரிப்பைப் பாக்கறேன்!” என்று மகிழ்ச்சியுடன் புதுமனைவியிடம் கூறினான் பரதன்.

    அது நிலைக்காது என்று அப்போது எவரும் நினைக்கவில்லை.

    ஒரு வாரத்திற்குப்பின். “ஒங்க மொதலாளி நீங்க நினைக்கிறமாதிரி நல்லவரில்லே. என்னை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறாருங்க. நாம்ப வேற எங்கேயாச்சும் போயிடலாம். ஒங்களுக்கு இந்த வேலை வேணாம்!” என்று கெஞ்சலும் பயமுமாகக் கூறியபோது, மனைவியின் விருப்பத்திற்கு அடிபணிந்தவனாக, “நானும் கவனிச்சுட்டுத்தான் வரேன். காலாகாலத்திலே கல்யாணம் கட்டாட்டி இப்படித்தான்!” என்று அந்த பிரச்னைக்கு முடிவு கட்டினான் பரதன்.

    Share