Blog

  • சேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)

    சேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆரம்என்பு புனைந்த  ஐயர்தம்   அன்பர் என்பதோர்  தன்மையால்
    நேர வந்தவர்  யாவராயினும்   நித்த   மாகிய   பக்திமுன்
    கூர வந்தெதிர்   கொண்டு கைகள்  குவித்து நின்று  செவிப்புலத்து
    ஈர மென் மதுரப்பதம் பரிவெய்த  முன்னுரை செய்தபின்

    உரை:

    ஆரமும் எலும்பும் அணிந்த ஐயர்தம்   அன்பர்கள் என்ற ஒரே தன்மையினை எண்ணி, அதனையே காரணமாக வைத்து, அடியார்களை நோக்கி , முன்னே வந்தவர்கள் யாவரேயாயினும்,  உறுதியாகி நிலைத்த பத்தி கூர வந்து எதிர் கொண்டு  வாயார அழைத்துக் கை குவித்து எதிரே வணக்கமாக நின்று அவர்கள் கேட்குமாறு குளிர்ந்த அன்பான இனிய மொழிகளை அவர்கள் அன்புகொள்ளுமாறு சொல்லி அதன் பின்,  (அடுத்த பாடலுடன்  பொருள் முடியும்)

    விளக்கம்:

    கழுத்து மாலையாக  எலும்பை   அணிந்தவர் சிவபிரான். இவரை இப்பாடல் ‘’ஆரம் என்பு புனைந்த  ஐயர்‘’ என்று பாடுகிறது.  உலகம் அழியும் காலத்தில் இறந்து விட்ட பிரமன், திருமால் ஆகியோரின் எலும்புகளை அணிந்து சங்கார  நடனம் ஆடியவர் அவர். படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும், தேவர்களும்  அழிந்தபின்னும்,  நித்தியராய் உள்ளவர் அவர். அவரே தலைவர் என்பதை ஐயர் என்ற  சொல் குறித்தது! இதனைத்   திருவாசகம்,

    ‘’கண் நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
    எண் இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
    மண் மிசை மால் பலர் மாண்டனர் காண்‘’

    என்றும்,

    நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
    கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ
    கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர்
    தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

    என்றும், பாடுகின்றது. திருமந்திரம்

    “எலும்புங் கபாலமு மேந்தில னாகில்,
    எலும்புங்கபாலமு மிற்றுமண் ணாமே“

    என்றவாறு, இவர் ஏந்திப் புனைந்ததனால் அவை இற்றுப்போகாது நின்றன. நித்தராகிய இவர் அன்பர்களும் தாமும் நித்தராவார்; தம்மை அடைந்தாரையும் நித்தர்களாக்குவார்; ஆதலின் அன்பர் என்பதோர் தன்மையை நாடினார் என்பது குறிப்பு.  அன்பர் என்ற ஒரே தன்மையினாலே  வேடம், பாவனை, செயல் என்பனவும் கொள்ளப்பெறும்.

    ‘’பத்திமுன்கூர’’  என்ற தொடர்  – தம்மிடத்திலே நித்தியமாய் – இயல்பாய் – அமைந்த அடியார் பத்தி முன்னே சிறப்பாய்க் கூர்ந்து கூடிற்று.

    அடியார்களை வந்து எதிர்கொண்டபின், அவர் செவியில் அன்பு கலந்த மெல்லிய சொல் கூறினார். இவ்வாறு பரிவெய்த – அன்பர்கள் தம்மிடத்துக் கருணை கூரும்படி. முன்உரை செய்த பின் – முன் – அவர்கள் முன்பு. எதிர்கொண்டு  கைகுவித்து நிற்றலுக்குமுன் என்றலுமாம். வாக்கு இன்னுரை முன் சொல்லிக்கொண்டே செல்ல, அதனுடன் எதிர் கொள்ளுதலும் கைகுவித்தலும் நிகழ்ந்தன. ஆயினும் அன்பர்கள் கண்ணுக்கு அச்செயல்கள் முன்னர்த் தோன்றின; மொழிகள் பின்னரே கேட்டன. காட்சிப் புலப்படுக்கும் ஒளியலைகள் வேகத்தால் மிக்கனவும், செவிப்புலப்படுக்கும் ஓசையலைகள் வேகத்தால் அவற்றினும் மிகக் குறைந்தனவுமா மென்பர் விஞ்ஞான நூலார். ஆதலின் அம்முறையே கண்ட செயலை முன்னர்க் கூறிக் கேட்ட சொல்லைப் பின்னர்க் கூறினார்.

    அடியார்களைக்ள் கண்டபோதே விரைந்து எதிர் செல்லுதலும், அவர்முன் நின்று மென்மையான சொற்களைக் கூறுதலும் விருந்தோம்பலின் செயல்கள் ஆகும்.  இப்பாடலுடன் அடுத்த பாடலையும் பொருளுணர்ந்து கூற வேண்டும்.

    இப்பாடல் சைவ நன்மக்கள் நிகழ்த்தும் சங்கம வழிபாட்டின் அங்கமாகிய  மாகேசுர பூசையின் சிறப்பைக் காட்டுகிறது. இத்துடன் அடுத்த திருப்பாடலையும் சேர்த்துப் பாடுவது மாகேசுர பூசையில்  எப்போதும் நிகழ்வதாகும். அடியார்களை  வரவேற்கும் முறை இங்கே கூறப்பெறுகிறது.

    Share
  • நாலடியார் நயம் – 37

    நாலடியார் நயம் – 37

    நாங்குநேரி வாசஸ்ரீ

    37. பன்னெறி

    பாடல் 361

    மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
    இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? – விழைதக்க
    மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
    காண்டற்கு அரியதோர் காடு.

    மேகம் தவழும் மாடி உள்ளதாய்
    மேன்மைமிகு காவல் உடையதான வீட்டில்
    மின்னும் அணிகளே விளக்காய் ஒளிவீசினும்
    மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெறாதவனின்
    மனை பார்க்கக் கூடாத சுடுகாடேயாம்.

    பாடல் 362

    வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
    இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் – இழுக்கெனைத்தும்
    செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
    கையுறாப் பாணி பெரிது.

    தளர்வில்லா வாளின் காவலிருந்தும்
    தம்ஒழுக்கம் தவறி மகளிர் நடப்பாராயின்
    சில சொற்களே பேசும் அவர்தம் குற்றம்
    செய்யாக்காலம் சிறிதேயிருப்பினும் ஒழுக்கத்தைப்
    பெறாத காலம் பெரிது ஆகும்.

    பாடல் 363

    எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
    அட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனை
    உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
    கொண்டானைக் கொல்லும் படை.

    கணவனை அடிக்கச்சொல்லி எதிர்நிற்பவள்
    கொண்டவனுக்கு எமன் போன்றவள்
    காலையில் சமையலறைக்குள் புகாதவள்
    காலத்துக்கும் போக்க முடியா நோய்
    கணவனுக்குச் சமைத்த உணவைத் தராதவள்
    கொண்டவன் வீட்டிலுள்ள பிசாசு
    கணவனைக் கொல்ல உதவும் படையொத்த
    கொலைக் கருவிகளாம் இம்மூவரும்.

    பாடல் 364

    கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
    ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; – பேர்த்துமோர்
    இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
    கற்கொண்டு எறியும் தவறு.

    இல்வாழ்வை நீக்கச் சொல்லிப் பெரியோர்
    இயம்பியும் நீக்காது தலையே வெடிக்குமளவு
    இறப்பில் பறை ஒலிக்கக் கேட்டும்
    இல்வாழ்க்கை நிலையில்லாதது என
    இருக்காது மறுபடியும் திருமணம் புரிந்து
    இன்புற்றிருக்கும் மயக்கம் ஒருவன் கல்லை
    இயல்பாய் எடுத்துத் தன்மேல் எறிந்துகொள்ளும்
    இன்னாச் செயல் போலும் குற்றமாம்.

    பாடல் 365

    தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
    இடையே இனியார்கண் தங்கல் – கடையே
    புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
    உணரார்பின் சென்று நிலை.

    தவத்துக்குரிய செயலில் முயன்று வாழ்தல்
    தலையாய நிலையாம் இனிய குணமுள்ள
    தம் மனைவியுடன் வாழ்தல் இடைப்பட்ட நிலை
    தனக்குக் கிட்டாதெனினும் பொருளாசையால்
    தம் பெருமையுணராரைத் தொடர்தல் கடையாய நிலை.

    பாடல் 366

    கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
    துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
    இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
    முனிவினாற் கண்பா டிலர்.

    நல்ல நூலைக் கற்று வாழ்நாளை
    நல்ல பயனுடையதாய்க் கழிப்பர்
    நல்லறிவுடைத் தலைமையான அறிவினர்
    நல்லபொருளை அனுபவித்துத் தம் வாழ்வை
    நடத்துவர் இடைப்பட்டவர், கீழ்மக்களோ உண்ண
    நல்லுணவு கிட்டவில்லையே, செல்வத்தை மிகுதியாய்
    நாம் பெறமுடியவில்லையே என வருந்தி
    நல்லுறக்கமின்றி நாளும் கழிப்பர் தம் வாழ்வை.

    பாடல் 367

    செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
    செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
    வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
    மகனறிவு தந்தை அறிவு.

    நல்ல நெற்களால் உண்டான நல்விதைகள்
    நற்செம்மை நெல்லாகவே விளைவதால்
    நிறைந்த வயல்சூழ் நாட்டின் வேந்தனே!
    நல்லறிவு தந்தைக்கு வாய்க்கப்பெற்றாலந்த
    நல்லறிவு மகனுக்கும் இருக்கும்.

    பாடல் 368

    உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
    புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
    கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
    கீழ்மேலாய் நிற்கும் உலகு.

    பெருஞ்செல்வரும் சான்றோரும் தம்நிலை தாழ்தலும்
    புறப்பெண்டிரின் மக்களும் கீழ்மக்களும் உயர்வெய்தலும்
    காலருகே இருக்கவேண்டியது தலைப்புறமாகி
    குடையின் காம்புபோல் உலகம் கீழ்மேலாய்
    கிடக்கும் நிலையற்ற தன்மை கொண்டது.

    பாடல் 369

    இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
    தணியாத உள்ளம் உடையார்; – மணிவரன்றி
    வீழும் அருவி விறன்மலை நன்னாட!
    வாழ்வின் வரைபாய்தல் நன்று.

    இரத்தினங்களை வாரிக்கொண்டு விழும்
    இனிய அருவிகளுடை மலைநாட்டு மன்னனே!
    தம் நண்பர்கள் மனத் துன்பத்தைக்கூற அதைத்
    தீர்க்க நினையாக் கல்நெஞ்சம் உடையோர்
    வாழ்வதை விட மலை மேலேறிக் குதித்து
    வீழ்ந்து உயிர்விடுதல் நல்லதாம்.

    பாடல் 370

    புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
    விதுப்புற நாடின்வே றல்ல; – புதுப்புனலும்
    மாரி அறவே அறுமே, அவரன்பும்
    வாரி அறவே அறும்.

    புது வெள்ளத்தால் வந்த நீரும்
    பொதுமகளிரின் நட்புமாகிய இரண்டும்
    பொறுமையாய் ஆராய்ந்தால் வேறல்ல.
    புதுநீர் நீங்கும் மழைநின்றால்
    பொதுமகளிரின் அன்பு நீங்கும்
    பொருள் வரவு நீங்கின்.

    Share
  • ஒய்எம்சிஏ பக்தவத்சலம் விடைபெற்றார்!

    ஒய்எம்சிஏ பக்தவத்சலம் விடைபெற்றார்!

    பக்தவத்சலம் அவர்கள், என் மீது தனித்த அன்பு கொண்டவர். என் நூல்களை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அமுதசுரபி வெளியிட்ட நூல்களை இங்கே அறிமுகப்படுத்தினார். அதில் ஒரு நூலைக் கவிஞர் வைகைச்செல்வன் அறிமுகப்படுத்திப் பேசினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ஒரு வார நிகழ்வுக்கு புறநானூறு தொடர்பாக, ஔவை நடராசனார் உரையாற்ற, ஔவை பணித்தபடி அந்த அமர்வுக்கு நான் தலைமை தாங்கினேன். தொடர்ந்து இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை அனுப்பி, தொலைபேசியிலும் எனக்கு அழைப்பு விடுப்பார். சரியான நேரத்தில் நிகழ்வைத் தொடங்கி, குறித்த நேரத்தில் நிறைவு செய்வார். நற்றமிழில், செறிவாக உரையாற்றும் பாங்குடையவர். நிகழ்வுக்கு வரவேற்புரை ஆற்றுவதுடன், பேச்சாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தி, பேசிய பிறகு அதன் சுருக்கத்தையும் எடுத்துரைத்துப் பாராட்டுவார். பண்பாளர் பக்தவத்சலம் அவர்களின் மறைவுக்குத் தனிப்பட்ட முறையிலும் வல்லமை சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னார் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். – அண்ணாகண்ணன்

    இலக்குவனார் திருவள்ளுவன்

    செவ்வாய்தோறும் சென்னையில் தமிழ்க்கூடலை நிகழ்த்தி வந்த பொறியாளர் கெ. பக்தவத்சலம் இன்று (ஆனி 16, 2051/30.06.2020) காலை 8.30 மணியளவில் அயராது ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளில் இருந்து விடைபெற்றார்.

    கிறித்துவ இலக்கியக்கழகத்தின் (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் என்றதும் அறியாதார் கிறித்துவ அமைப்பின் வாதுரை மன்றம் என எண்ணுவர். ஆனால் தமிழ்வளர்க்கும்  தமிழ் ஆர்வலர்களின் சங்கமம் இது என்பதைத் தமிழன்பர்கள் அறிவர். சொல்லின் செல்வர் இரா. பி. சேது (பிள்ளை) அவர்களை முதல் தலைவர்களாகக் கொண்டு 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. இதில் 1966ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயலராகத் திறம்படச் செயலாற்றி வருகிறார்.

    தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் அமைப்பு ஒன்றின் செயலராகத் தொடர்ந்து 54 ஆண்டுகள் தொண்டாற்றுவது அருவினைச்செயலாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் முதல்நிலைத் தமிழறிஞர்களும் வளர்நிலைத் தமிழாசிரியர்களும் மலர்நிலை தமிழ் ஆய்வாளர்களும் பங்குபெற்றுள்ளனர். அவ்வாறு பங்கேற்கா அறிஞர் யாருமிலர் எனலாம். இவரது செவ்வாய்க்கிழமை நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதும் சூழலை இவர் உருவாக்கினார்.

    1958இல் இளநிலைப்பொறியாளராகத் தம் பணி வாழ்வை சென்னை மாநகராட்சியில் தொடங்கினார். பொறியியல் சான்றிதழ்க் கல்வியை முடித்தவர் தணியாத் தமிழார்வத்தால் குமுகவியலில் இளங்கலைப் பட்டத்தையும் அரசறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். என்றாலும் பள்ளிப்பருவத்தில் தமிழில் மிகுதியாக மதிப்பெண் பெற்ற இவர் நாட்டம் முழுமையும் தமிழில்தான் இருந்தது.  தம் வீட்டிற்கே ‘தமிழ் இல்லம்’ என்று பெயர் சூட்டியவர் தமிழை எங்ஙனம் மறக்க இயலும்? மாணவப் பருவத்திலேயே ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தனிஅரசு, சி.பி.சிற்றரசுவின் தீப்பொறி, கவியரசு கண்ணதாசனின் தென்றல், நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். பணிவாழ்க்கையில் இணைந்தாலும் தமிழ் வாழ்வாக மாற்றிக் கொண்டார்.

    ‘நித்திலக்கோ’ என்னும் புனைபெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இளந்தமிழன், தாமரை, ஓம் சக்தி வாசகர்கள் இவரை நன்கு அறியும் வகையில் அவற்றில் சிறப்பான கட்டுரைகளைப் படைத்து வந்தார்.

    கி.இ.க. (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிஞர்களின் உரைகளைக் குறிப்பெடுத்து இலக்கிய இதழ்களுக்கு அனுப்பி வந்தார்.

    தமிழக அரசின் திருக்குள்நெறி பரப்பு மையம் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருதும், பெரியார் நூலக வாசகர் வட்டம் ‘பெரியார் விருது’ம் வழங்கியுள்ளன. உலகத்திருக்குறள் பேரவை, வில்லிவாக்கம் திருக்குறள் வாழ்வியல் சங்கம், வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம், சென்னை நண்பர்கள் கழகம் முதலான தமிழ் அமைப்புகளும் இவருக்கு விருதுகளும் பாராட்டிதழ்களும் அளித்துச் சிறப்பித்துள்ளன. முகம்மாமணி, கவிதை உறவு முதலான இதழ்கள் இவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

    வேதநாயகர், அறம் வளர்த்த ஆன்றோர்கள், புகழாளர்கள் முதலான நூல்களை எழுதித் தமிழான்றோர்களை இக்காலத்தலை முறையினர் உணரச்செய்தார். இலக்கியக்கூட்டங்களில் இவர் ஆற்றிய பொழிவுகளும் வானொலி, தொலைக்காட்சி உரைகளும் மென்மையும் நுண்மையும் மிக்கன. இச்சிறப்பின் காரணமாகத்தான் ‘சன்’தொலைக்காட்சியில் இவர் ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சியில் இருமுறை பங்கேற்றார்.

    மேதை வேதநாயகம் மீது பற்று கொண்டு அவரது நினைவு மலரைச் சிறப்பாகத் தொகுத்து தந்தார். அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரைவயில் அவர் குறித்துச் சிறப்பாகப் புகழுரை வழங்கினார்.

    வாசுதேவ(பிள்ளை) அறக்கட்டளையின் அறங்காவலராகத் திகழ்ந்தும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், வானவில் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பேற்றும் ‘கருணீகர் நல்வாழ்வு’ இதழின் சிறப்பாசிரியராக இருந்தும் பிற பொதுவாழ்விலும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

    இலக்கிய உரைகள், கவிதைகள், தொடர் சொற்பொழிவுகள், இலக்கியத் திறனாய்வுகள் என அறுநூற்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளால் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்‘ எனத் தமிழன்னைக்கு வாரந்தோறும் தமிழ்மாலை அணிவித்து வந்த செம்மல் தம் பணிகளில் இருந்து விடை பெறுகிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் வாழும் கவிஞர்கள் குறித்து ஆற்றிய 200 தொடர் சொற்பொழிவுகளாகும்.

    கணிணிவழிக் கிரந்தத்திணிப்பு எதிர்ப்பிற்காக “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா” என நிகழ்ச்சி நடத்தி என்னைச் சிறப்புரையாற்றச் செய்தார். என் தலைமையில் இவர் வள்ளலார்பற்றி ஆற்றிய உரை, வள்ளலார் குறித்த சிறந்த இலக்கிய ஆய்வாகும்.

    ஆட்சித்துறையினர், நீதித்துறையினர், திரைத்துறையினர், இதழியல்துறையினர், கலைத்துறையினர், முதலான எத்துறையில் இருந்தாலும் தமிழ் ஆர்வலர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது இவரின் தனிச்சிறப்பு. அயல்வாழ் தமிழறிஞர்கள் இங்கு வரும்பொழுது அவர்களை அழைத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவார்.

    அறிஞர்களின், கவிஞர்களின் பிறந்தநாள் விழாக்கள், நினைவு விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றைச் சிறப்புடன் நடத்துவதும் இவரின் செயற்சிறப்பு. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நடத்தியதுடன் அதற்கு முன்பும் பின்புமாகத் தொடர்ந்து 35 ஆண்டுகள் இலக்குவனார் நினைவரங்கம் நிகழ்த்தி அவர் மீதான அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தியுள்ளார். எந்த ஓர் அமைப்பும் எந்தத் தமிழறிஞருக்கும் இவ்வாறு தொடர்நினைவரங்கம் நிகழ்த்தியதில்லை!

    இவருக்குத் தோன்றாத் துணையாக விளங்கிய மனைவி திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் ஈராண்டுகளுக்கு முன்னர் மறைந்து அவருக்குப் பெருந்துயரம் தந்தார். இன்றோ இவரே மறைந்து தம் வழியில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றப்பணிகளில் ஈடுபட்டுத் துணைச்செயலராகத் திகழும் மகன் பேரா. தாமரைக்கண்ணன், பெண் மக்கள் திருவாட்டி கல்யாணி, திருவாட்டி சுமதி, பெயரர்கள், தமிழ்ச்சுற்றத்தார் துயருற நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார்

    வாழும் பொழுது ஓய்வு எடுக்காமல் பணியாற்றியதால் வாழ்வில் இருந்து பெறும் ஓய்வே தமிழ்ப்பணிக்குமான ஓய்வானது.

    அண்மையில் உடல் நலமுற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அலைபேசி வழி உரையாடினார். மகுடைத் தொற்றால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாதது குறித்து வருந்தினார். அவருக்கான ஓய்வுக்காலமாகக் கருதுமாறும் வரும் தைத்திங்களில் பட்டிமன்ற நிகழ்ச்சி, பட்டிமன்ற முத்துவிழா, தமிழர்திருநாள் எனச் சிறப்பாக  நடத்தலாம் என்றும் அமைதிகாக்குமாறும் தெரிவித்தேன். திசம்பரில் வரும் அவரின்பிறந்தநாள் பெருமங்கலத்தையும் அப்பொழுது இணைத்துக் கொண்டாட வேண்டும் என்றேன். ஆனால், காலன் அதற்கான வாய்ப்பை நல்கவில்லையே!

    தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், இலக்குவனார் இலக்கிய இணையம் இலக்குவனார் இலக்கியப்பேரவை, அம்பத்தூர், அகரமுதல இதழ் ஆகியவற்றின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

    இனியும் கி.இ.க.பட்டிமன்றத்தில் “செவ்வாய்தோறும் செந்தமிழ்” முழங்கும். ஆனால், அங்கே தமிழ்த்தாய் இவரைத் தேடுவார்!

    நன்றி: அகரமுதல

    Share
  • அப்பா

    அப்பா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேரிலே சாமிவந்தால் தோளிலே தூக்கிவைத்து
    பாரடா என்றுகாட்டும்  பாங்கினை மறக்கமாட்டேன்
    ஊரிலே யுள்ளார்எல்லாம் உன்மகன் உதவானென்று
    நேரிலே வந்துசொன்னால்  நிமிர்ந்தொரு பார்வைபார்ப்பார்

    கவலைகள் படவும்மாட்டார் கண்டதை உண்ணமாட்டார்
    தெருவிலே சண்டைவந்தால்  திரும்பியே பார்க்கமாட்டார்
    அடிதடி வெறுத்துநிற்பார் ஆரையும் தூற்றமாட்டார்
    உரிமை யாயுதவி நிற்பார்  ஊரிலே எங்களப்பா

    பொய்யவர்க்குப் பிடிக்காது புளுகுவதை வெறுத்திடுவார்
    மெய்பேசி நின்றுவிட்டால்  விரும்பியவர் அணைத்திடுவார்
    உண்மையே பேசென்பார்  உழைப்பையே நம்பென்பார்
    எண்ணமெலாம் இனிதாக இருக்கவே வேண்டுமென்பார்

    அன்பாக இருவென்பார் அனைவர்க்கும் உதவென்பார்
    அசடனாய் வாழாதே அறிஞனாய் உயரென்பார்
    பலகதைகள் ஊடாகப்  பண்புகளை வளர்த்திட்டார்
    பாரில் வாழநான் பாதையே அப்பாஅப்பா

    Share
  • காலமையா காலம்!

    அண்ணாகண்ணன்

    இந்தப் பாடலை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்.

     

    காலமையா காலம் ஐயா – ஆல
    காலமையா ஐயா ஐயா
    கோலமையா கோலம் ஐயா – அலங்
    கோலமையா ஐயா ஐயா

    நோவெழுந்து நிற்பதனால்
    நாவிழந்து நிற்கின்றோமே
    சாவெழுந்து நிற்பதனால்
    வாழ்விழந்து நிற்கின்றோமே

    தாக்கமையா தாக்கம் ஐயா
    தேக்கமையா தேக்கம் ஐயா
    ஏக்கமையா ஏக்கம் ஐயா
    ஆக்கமெங்கே ஐயா ஐயா

    நடுக்கமிங்கே ஐயா ஐயா
    கடுக்குதிங்கே ஐயா ஐயா
    இடுக்கணிங்கே ஐயா ஐயா
    தடுப்பதெங்கே ஐயா ஐயா

    நாதியில்லே ஐயா ஐயா
    நீதியில்லே ஐயா ஐயா
    ஜோதியில்லே ஐயா ஐயா
    சேதியில்லே ஐயா ஐயா – நல்ல
    சேதியில்லே ஐயா ஐயா

    பாரமையா ஐயா ஐயா – எல்லாம்
    தூரமையா ஐயா ஐயா
    ஈரமெங்கே ஐயா ஐயா
    சாரமெங்கே ஐயா ஐயா

    வாருமையா வாரும் ஐயா
    பாருமையா பாரும் ஐயா
    கேளுமையா கேளும் ஐயா – கதை
    நீளுமையா நீளும் ஐயா

    போதுமையா போதும் ஐயா
    ஏதும் செய்யலாமோ ஐயா
    தீதுவரும் பாதை மாறி
    தோதுவர வேணும் ஐயா

    துக்கமிங்கே ஐயா ஐயா – வலி
    பக்கமிங்கே ஐயா ஐயா
    மிக்கதுயர் ஐயா ஐயா
    தக்கவழி தாரும் ஐயா

    தாருமையா தாரும் ஐயா – வழி
    கூறுமையா கூறும் ஐயா
    சேருமையா சேரும் ஐயா – இடர்
    தீருமையா தீரும் ஐயா

    ஒல்லும்வழி காட்டும் ஐயா
    நல்லவழி காட்டும் ஐயா
    வல்லவழி காட்டும் ஐயா
    வெல்லவழி காட்டும் ஐயா

    Share
  • கருப்பு வெள்ளை (சிறுகதை)

    கருப்பு வெள்ளை (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு பின்னர் அந்தப் புகைப்பட நிலையத்திற்குள் நுழைந்தேன். அன்று இருந்த அதே வாசனை. உள்ளே பெரியவரின் படம், கருப்பு வெள்ளையில். பார்த்துக்கொண்டே நின்ற போது அவர் மகன் “வாங்கோ” என்றார். பெரியவரே உள்ளே சென்று சின்னவராகத் திரும்பியது போல ஒரு தோற்றம்.

    “ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறோம். இந்த ஊர்தானா?” எனக் கேட்டார்

    “ஆமாம்” என்றேன்.

    “அன்னிக்கு பார்த்த மாதிரியே இருக்கு ஸ்டுடியோ” என்றேன்.

    “இது எங்க சொத்து. அவர் விட்டுச் சென்ற எதிலும் நாங்க கை வைக்கவில்லை. இந்த ஸ்டாப்ளர், போன் எல்லாம் அப்பிடியே இருக்கு. புது போன் ஐந்நூறு ரூபாய். ஆனா நான் பழசை ரிப்பேர் பண்ணி இன்னிக்கும் வச்சிருக்கேன். சில பேர் கிண்டல் பண்றாங்க. நான் அதைக் கண்டுக்கிறதில்ல. கிட்டத்தட்ட இந்த சின்ன ரூமுக்கு எங்க வயசு.”

    “ஆமாம். டைம் மிஷின்ல பின்னாடி போற மாதிரி இருக்கு. இங்க தான் அப்பாகிட்ட பாஸ்போர்ட் எடுத்துண்டு  கல்லூரியில் சேர்ந்தேன். ரெண்டு நாள் கழிச்சு பஸ் பாஸுக்கும் வந்தேன். அன்னிக்கு இருந்த அதே வாசனை. இன்னிக்கும் இருக்கு. எப்படி இதைப் பராமரிக்கிறீங்க?”

    “நாங்க ஒன்னும் செய்யாம இருந்தால் அதுவே நல்ல விஷயம். எந்த ஒரு மாற்றமும் பழசைக் குலைச்சுப் போட்டுடும்.”

    “நீங்க நவீனத்துவத்துக்கு எதிரானவரா?”

    “இல்லை சார். ஆனா அது இங்க வேணாம்.”

    “ஏன் சார்?”

    “எங்க அப்பா. அவர் நினைவை போற்ற எங்களால் முடிந்த அளவு சேவை – எல்லாமே இங்க எங்க அப்பா தான்.”

    “இங்க பாருங்க” என்றார் .

    சின்ன கண்ணாடிப் பெட்டியில் அவர் போட்ட மூக்கு கண்ணாடி, கட்டிய வேஷ்டி, பொடி டப்பா, ரிஸ்ட் வாட்ச்.

    “எப்படி சார் இந்த அர்ப்பணிப்பு. எனக்கு எங்க அப்பா திவச தேதியே நினைவில்லை.”

    “ரொம்ப பெரிய விஷயமில்லை சார். எனக்குப் பணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இது எல்லாமே இயல்பாக வந்துவிட்டது.”

    “ஆனாலும் இது பெரிய விஷயம்தான்” என்றேன் .

    “இந்தப் பாராட்டு கூட எங்க அப்பாவுக்குத்தான் போய்ச் சேரணும். அவர் ரொம்ப எளிமை. கடைசி வரைக்கும் சைக்கிளிள்தான் போவார் – வருவார்.”

    கை கொடுத்தேன். அப்பாவைப் போல இவருக்கும் அதே தொளதொள பேண்ட். ஒரு வேளை இது அவர் அப்பா உடுத்தியிருந்ததாகக் கூட இருக்கலாம்.

    வெளியே வந்த பிறகும் அந்த பவுடர்  வாசனை போகவில்லை.

    Share
  • நாலடியார் நயம் – 36

    நாலடியார் நயம் – 36

    நாங்குநேரி வாசஸ்ரீ

    36. கயமை

    பாடல் 351

    ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
    காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
    தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
    போத்தறார் புல்லறிவி னார்.

    நிறைந்த அறிவுள்ளவர் சிறியவராயினும்
    நல்லொழுக்கத்துடன் தம் புலனடக்கி இருப்பர்
    நல்லறிவில்லாக் கயவரோ முதியவராயினும்
    நெறிகெட்ட செயலிலே உழன்று கழுகுபோல்
    நடந்து குற்றம் நீங்கப் பெறார்.

    பாடல் 352

    செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
    வழும்பறுக்க கில்லாவாம் தேரை; – வழும்பில்சீர்
    நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
    தேர்கிற்கும் பற்றி அரிது.

    நீர்நிறை பெரிய குளத்தில் வாழ்ந்தாலும்
    நாளும் தவளை தம்மேலுள்ள வழவழப்பான
    அழுக்கை நீக்காததுபோல் குற்றமற்ற
    அரும்பெரும் நூல்களைக் கற்பினும் நுண்ணறிவு
    அற்றவர் அந்நூல்களின் பொருள் உணரார்.

    பாடல் 353

    கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
    குணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்
    குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
    எற்றால் இயன்றதோ நா.

    கூட்டமான மலைகள்நிறை நாட்டின் அரசனே!
    கண்ணெதிரில் ஒருவர் நின்றாலும் அவரின்
    குணங்களைக் கூறுதற்கே நா எழுதல் அரிதெனும்போது
    குற்றத்தை மட்டுமே கூறி குணம்கெடும்படி செய்யும்
    கயவனின் நாக்கு எப்பொருளால் செய்யப்பட்டதோ?

    பாடல் 354

    கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
    சேடியர் போலச் செயல்தேற்றார்; – கூடிப்
    புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
    மதித்திறப்பர் மற்றை யவர்.

    பக்கங்கள் உயர்ந்தகன்ற அல்குலையுடை நற்குலப்
    பெண்டிர் விலைமகளிர் போல் தம்
    பெண்தன்மையை ஒப்பனை செய்ய அறியார்
    பொதுமகளிரோ புதுவெள்ளம் போல் ஆடவருடன்
    பழகிக் கலந்து தம் பெண்தன்மை மேம்பட
    பாங்காய் அலங்கரித்துப் பொருளைக் கவர்ந்து செல்வர்.

    பாடல் 355

    தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
    உளிநீராம் மாதோ கயவர்; – அளிநீரார்க்கு
    என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
    இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

    தளிர்மேல் நிற்பினும் ஒருவர் தட்டித்
    தள்ளாமல் போகமாட்டாத உளியின்
    தன்மையுடை கயவர் இரங்கும்
    தன்மையுடை மென்மையானவர்க்குத்
    தேவையான உதவி செய்யார் தம்மைத்
    தாக்கித் துன்புறுத்தும் கொடியவருக்கு
    தேடிச் சென்று செய்வர் எத்தகு உதவியும்.

    பாடல் 356

    மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
    விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
    செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
    வைததை உள்ளி விடும்.

    வாழும் மலைவளத்தை நினைத்து மகிழ்வான் குறவன்
    விளையும் நிலத்தை நினைத்து உவப்பான் உழவன்
    வாழ்வில் பிறர்செய்த நன்மையை நினைப்பர் சான்றோர்
    வெறுப்புடன் பிறர் இகழ்ந்ததையே நினைத்திருப்பான் கயவன்.

    பாடல் 357

    ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
    பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; – கயவர்க்கு
    எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
    எழுநூறும் தீதாய் விடும்.

    தமக்கொரு நன்மை செய்தவர் பின்
    தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்யினும்
    தளராது பொறுப்பர் சான்றோர் கயவரோ
    தமக்கு எழுநூறு நன்மைகள்செய்து
    தவறுதலாய் ஒன்று தீமையாய் ஆகிவிடின்
    தமக்குச் செய்த எழுநூறு நன்மைகளையும்
    தள்ளி நீக்கி தீமையையே நினைத்திருப்பர்.

    பாடல் 358

    ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
    மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; – கோட்டை
    வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
    செயிர்வேழம் ஆகுதல் இன்று.

    வாள் போலும் கண்ணுடையவளே! பன்றிக்கொம்பில்
    வயிரம் இழைத்த பூணைப்பூட்டினும் அது
    வீரம் மிகுந்த யானை ஆகாததுபோல் நற்குடிப்பிறந்தார்
    வறுமையுற்றபோது செய்யும் உதவியையும் மூடர்
    வளமான செல்வம் மிக்க காலத்தும் செய்யார்.

    பாடல் 359

    இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
    நின்றாதும் என்று நினைத்திருந்து – ஒன்றி
    உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
    மரையிலையின் மாய்ந்தார் பலர்.

    இன்று செல்வமுடையவர் ஆவோம்
    இப்பொழுதே ஆவோம்
    இன்னும் சிலநாட்களில் ஆவோம் என
    இடைவிடாது சிந்தித்துச் சொல்வதிலேயே
    இன்புற்று பின் தம் உள்ளம்நொந்து தாமரை
    இலைபோல் தாமிருந்த இடத்திலேயே
    இன்பக் கற்பனையில் திரிந்து இறப்பவர் பலர்.

    பாடல் 360

    நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
    ஈரங் கிடையகத் தில்லாகும்; – ஓரும்
    நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
    அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.

    நீரில் தோன்றி பசும்
    நிறத்துடன் இருப்பினும்
    நெட்டியின் உட்புறம் ஈரத்தால்
    நனையாதது போல் செல்வம்
    நிறைந்திருப்பினும் பெருங்கல் போலும்
    நெஞ்சமுடை மனிதரும் இவ்வுலகில்
    ஈரமற்ற நெஞ்சுடன் உள்ளனர்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(307)

    குறளின் கதிர்களாய்…(307)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(307)

    உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்.

    – திருக்குறள் -933 (சூது)

    புதுக் கவிதையில்...

    உருளும் சூதாடு கருவியால்
    வருகின்ற வெற்றிப் பொருளை
    இடைவிடாது கூறி
    எப்போதும் சூதாடுவானாயின்,
    அரசனுக்கு
    முன்னுள்ள பொருளும்
    பின்னால் அது வரும்வழியும்
    அவனை விட்டு நீங்கிப்
    பகைவரையே சேரும்…!

    குறும்பாவில்...

    சூதாடுகருவியின் சுழற்சியில்வரும் பொருளைச்
    சொல்லியே சூதாடுபவன் சேர்த்த செல்வமும்
    வழியும் நீங்கிப் பகைவரைச்சேரும்…!

    மரபுக் கவிதையில்...

    உருளு கின்ற சூதாட
    உதவும் கருவி யதன்மூலம்
    வரும்பொருள் தன்னைச் சொல்லியேதான்
    வழக்கமாய்ச் சூதினை யாடுமரசன்
    திருவது தேடி வைத்ததுவும்
    திரும்பத் தேடிடும் வழியதுவும்,
    இருக்கா தவனை நீங்கிவிடும்
    எதிரி யிடமது சேர்ந்திடுமே…!

    லிமரைக்கூ…

    உருளும் கருவியால் சூது
    வருபொருள் சொல்லி யாடுவோன்பொருள் பகைவர்க்கே,
    அவனிடம் செல்வமினி யேது…!

    கிராமிய பாணியில்...

    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    அதிகமாக் கெடச்சாலும்
    அதுவேணாம் போகாத..

    சுத்தி வருகிற
    சூதாடுற கருவியால
    சேரும் செல்வமுண்ணு
    சொல்லிச் சொல்லியே
    சூதாடுறவன் ராசாண்ணாலும்,
    அவன்
    சேத்துவச்ச செல்வத்தோடே
    சேக்கிற வழியெல்லாமே
    அவன உட்டுட்டு
    எதிராளிகிட்ட போயிடுமே..

    அதால
    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    அதிகமாக் கெடச்சாலும்
    அதுவேணாம் போகாத…!

    Share
  • பிரம்ம கமலம் – அபூர்வ மலர்

    பிரம்ம கமலம் – அபூர்வ மலர்

    பிரம்ம கமலம், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும். இந்தத் தாவரத்தின் இன்னொரு சிறப்பு, இதன் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிரம்மன் வீற்றிருப்பது போலவே இதன் அமைப்பு இருப்பதால், பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டாகும் என்று நம்பப்படுகிறது. இந்த அபூர்வ மலரை இங்கே பாருங்கள்.

    நம் நண்பரின் நண்பர் ஸ்ரீமதி, இதனைப் பெங்களூரிலிருந்து அனுப்பியுள்ளார். நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 2 (அறிவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 2 (அறிவன்)

    ச. கண்மணி கணேசன் (ஒய்வு),
    முதல்வர் & தமிழ்த்துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி 

    முன்னுரை:

    சிறுபாத்திர வரிசையில் இரண்டாவதாக இடம்பெறக் கூடியது அறிவன் எனும் பாத்திரம். இப்பாத்திரம் யாரைக் குறிக்கிறது? என்பது பற்றியும்; தொகை நூல்களில் இப்பாத்திரம் பெறும் பரிமாணத்தையும் கூர்ந்து நோக்குவது இக்கட்டுரையின் மையப் பொருளாகும்.

    இலக்கண நூல்களில் அறிவன்:

    தொல்காப்பியர் சொல்லும் அகப்பொருள் இலக்கணம் ‘அறிவர்’ கூற்றிற்கு உரியவர் எனக் கற்பியலில் பேசுகிறது (நூற்பா.- 12&13). ஒரு துணைப்பாத்திரம் என்று சொல்லத்தக்க வகையில்; ‘முக்காலத்திற்கும் வழிவழியாக வரும் நல்லனவற்றை உரைத்தலும்; தீயனவற்றை விலக்கலும் செவிலிக்குரிய கூற்றாவது போல அறிவர்க்கும் உரியன’ என்கிறார் தொல்காப்பியர். இதனால் அறிவர் இல்லறத்தார்க்கு உரிய உறுதிப் பொருட்களை தக்க நேரத்தில் அவர்க்கு அறிவுறுத்துவர் என்பது பெறுகிறோம்.

    இது ‘அறிவர்’ என்று பன்மைப்படுத்தப்பட்ட பாத்திரத்திற்கு உரியதெனக் கூறப்படினும்; அறிவன் என்னும் தனிப்பாத்திரத்திற்கு உரிய இலக்கணமாக ஏற்றுக் கொள்வதிலும் தயக்கம் ஏற்பட வழியில்லை. தொல்காப்பியப் புறத்திணையியலும்;

    “மறுவில் செய்தி மூவகைக் காலமும்
    நெறியின் ஆற்றிய அறிவன்” (நூற்பா- 20)

    என அகத்திணையியல்  செய்தியோடு ஒத்துச் செல்வதைக் காண்கிறோம். .      புறப்பொருள் வெண்பாமாலையும் வாகைத்திணைத் துறைகளுள் ஒன்றான ‘அறிவன் வாகை’ பற்றிப் பேசும்போது;

    “புகழ் நுவல முக்காலமும்
    நிகழ்பு அறிபவன் இயல்புரைத்தன்று”

    என்பதால் அறிவன்  மூன்றுகால நிகழ்ச்சிகளையும் அறிந்துணர்ந்து கூறக்கூடியவன் என்பது  உறுதிப்படுகிறது.

    தொகைநூல்களில் உள்ள  புலனெறி வழக்கு:

    அறிவன் பேசுவதாகத் தொகைநூல்களில் பாடல்கள் இல்லை. ஆனால் சிறுபாத்திரம் என்னும் தகுதியுடன் ஒரு பாடலில் நேரடியாக (கலித்தொகை- 39) இடம்பெறுகிறான். அப்பாத்திரம் பெறும் சிறப்பிடத்தைக்  காணலாம்.

    கலித்தொகையில் அறிவன்:

    ஆற்று வெள்ளத்திற்கு ஆற்றாமல் இழுத்துச் செல்லப்பட்ட தலைவியை; அவ்வெள்ளத்துட் பாய்ந்து; உய்வித்துத் தன் மார்போடு தழுவிக் கரையேறினான்  தலைவன். பால்வயத்தான் ஏற்பட்ட உறவில் தலைவி அவனுக்குக் கற்புக்கடம் பூண்டாள். ஊரார் தூற்றினர்; தமர் வெகுண்டெழுந்தனர்; தோழி அறத்தொடு நின்றாள். தாய் தமரை உய்த்துணர வைத்தாள்; இருவரிடத்தும் குற்றம் இல்லை என்று தெளிந்து சீற்றம் அடங்கினர். ஊரறி நன்மணம் நிகழ வரையுறைத் தெய்வத்திற்குக் குரவை அயர்ந்தனர் தோழியர். இந்தச் சூழலில்;

    “நெறிஅறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇத்
    தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக ………..
    சேயுயர் வெற்பனும் வந்தனன்….”

    என்கிறார் கபிலர். ‘நூல் நெறி அறிந்து; தான் குறித்துச் சொல்லும் நல்ல நேரம் ஒருபோதும் தப்பாத பெருமையுடைய கணியனை முற்பட அழைத்துக் கொண்டு; இருவரும் மணமுடித்துக் கூடுதற்கு ஏதுவான நல்ல முகூர்த்தத்தை முடிவு செய்ய; தம் இனத்துப் பெரியோராகிய சான்றவரோடு தலைவன் வந்தான்’ என்பது பொருள். இங்கே புலவர் அறிவன் காலத்தைக் கணிப்பவன் என்ற பொருள் விளக்கத்திற்கேற்பப் பாடியுள்ளார்.

    பாடலில் அறிவன் ஏதும் பேசவில்லை; எனினும் அவனது பாத்திரம் கூடல்நிமித்தம் எனும் குறிஞ்சி ஒழுக்கமாகிய உரிப்பொருளுக்கு ஏற்ற வழிவகை செய்யும் தனிச் சிறுபாத்திரம் ஆகும். அவனது கணிப்பு தப்பாது என்னும் பெருமை சான்ற புகழ்மொழி நோக்கத்தக்கது.

    இன்னொரு அறிவன்:

    குறுந்தொகை 277ம் பாட்டு தலைவி கூற்றாக அமைந்துள்ளது; எனினும் முன்னிலையார் யார் என்னும் செய்தி வெளிப்படையாக இல்லை. ஆனால் பாட்டின் பொருளை ஒட்டி முன்னால் நின்று கேட்பவன் அறிவன் என்று சொல்ல வழியேற்படுகிறது. அத்தலைவி;

    “மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
    எக்கால் வருவது என்றி
    அக்கால் வருவர் எம் காதலோரே”

    எனத் தன் கணவன் வருவதாகச் சொல்லிச் சென்ற மழைக்கால முடிவின் வாடைக்காலம் எப்போது வரும் எனக் கேட்கிறாள்.

    ஓரில் பிச்சையார் என்று தொகுத்தோர் பெயரிட்ட புலவர்; தலைவி தன் முன்னின்றவரை வாழ்த்தும் முறையில் தனிச்சிறப்பு பெறுகிறார். ‘நாய் இல்லாத குற்றமற்ற அகன்ற தெருவில் ஒரு வீட்டிலேயே உன் வயிறு நிரம்பும் படியாக செந்நெல் வெண்சோறும் வெண்ணெயும் கிடைத்து நீ பசியாறுவாயாக; அத்துடன் இம்மழைக்காலக் குளிரினை எதிர்கொள்ளும் பொருட்டு விரும்பத்தக்க வெப்பநீரை உம் சேமச்செப்பு நிறையப் பெற்றுப் பயன் பெறுவீராக’ எனும் வியங்கோள் மூலம் தன் கணவன் வரும் காலத்தைக் கணக்கிட அறிவனின் உதவியை அவள் நாடுகிறாள் என்பது பொருத்தமாகப் படுகிறது. குறுந்தொகையைத் தொகுத்தோர்  தலைவி அறிவனிடம் பேசுவதாகவே கூறியுள்ளனர். இப்பாடலிலும் அறிவன் கூடல் நிமித்தத்திற்கு ஏற்ற வலுவூட்டும் பாத்திரமாகக் காணப்படுகிறான்.

    உதவி கேட்ட அவள் அவனுக்குப் பிச்சை இடவில்லை; மாறாக நாயில்லாத தெருவில் பிச்சையேற்று அவன் வயிறு நிறைய வேண்டும் என்று வாழ்த்துவது அக்காலச் சமூகநிலையையும் தெளிவுறுத்துகிறது. அறிவன் அந்தணர் இல்லத்தில் பிச்சையேற்று உண்பவன் என்பதே புலப்படும் குறிப்புப்பொருள்.

    பெரும்பாணாற்றுப்படை விவரிக்கும்; சாணம் மெழுகிய, கோழியும் நாயுமற்ற; மறைகாப்பாளர் உறைவிடத்தைக் (அடி.-  298- 301) குறுந்தொகைத் தலைவி குற்றமற்ற தெரு என்று சொல்வதாகக் கொள்வது பொருத்தமே. பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் இதே கருத்தைக்  கூறிச் செல்கிறார். செவ்விலக்கியக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிவேறுபாடு ஓரில் பிச்சையாரின் பாடலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

    முடிவுரை:

    தொல்காப்பியர் அறிவனைத் துணைப்பாத்திரம் எனும் தகுதிக்கு உரியனாகக் கூறினாலும்; தொகைநூல்களில் அவன் சிறுபாத்திரமாகவே காணப்படுகிறான். அறிவன் காலத்தைக் கணிப்பவன் ஆவான். கூடல்நிமித்தம் எனும் குறிஞ்சி உரிப்பொருளுக்கு வழிவகை செய்யும் தனிப் பாத்திரமாகக் காணப்படுகிறான். அறிவர் அந்தணர்களின் இல்லத்தில் பிச்சையேற்று உண்டனர்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 22

    பழகத் தெரிய வேணும் – 22

    நிர்மலா ராகவன்

    (நீங்கள் ஆமையா, முயலா?)

    ஒரு சிறுவன் தன் பொம்மைக்காரில் பேட்டரியைப் பொருத்தப் படாத பாடுபட்டான். முதலில் முடியவில்லை. அழுதபடியே மீண்டும் முயன்றான்.

    இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

    ‘பாவம், குழந்தை! அழுகிறானே!’ என்று அவன் கையிலிருப்பதைப் பிடுங்கி, நீங்களே உதவ நினைக்கிறீர்களா?

    அது அன்பான செயல் என்று நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால், அவனுடைய அழுகை பலக்கிறது. ஏனெனில் அவன் கையாலாகாதவன் என்று பிறர் நினைக்கிறார்கள். அது அவனுடைய தன்னம்பிக்கைக்குச் சவால்.

    நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவன் எடுத்த காரியத்தில் வெற்றி அடைகிறான். பேட்டரி சரியான இடத்தில் அமர, கார் ஓட ஆரம்பிக்கிறது.

    ‘நான் கெட்டிக்காரன்!’ என்ற பெருமிதம் எழுகிறது. அப்போது சிறுவன் முகத்தில் தோன்றும் களிப்பே தனிதான்.

    “தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் பயந்து, பாதியில் நிறுத்திவிடுவதுதான் தவறு” (உளவியலாளர் ஸ்கின்னர்).

    பொதுவாகவே, குழந்தைகள் பாடும்போதோ, வாய்ப்பாடு ஒப்பிக்கும்போதோ கடைசி ஓரிரு வார்த்தைகளை அல்லது எண்களை அதிவேகமாகச் சொல்லி முடிப்பார்கள். அவர்களுக்கு எப்படியாவது முடிவை அடையவேண்டும் என்ற வெறி.

    வாழ்க்கையில் வெற்றி பெற அப்படி அவசரப்படுவது தகாது. பொறுமையும் நிதானமும் அவசியம். குறுகிய காலத்தில் சாதிக்க நினைத்தால் எந்தக் காரியமும் அரைகுறையாகத்தான் முடியும்.

    மேரி க்யூரி (MARIE CURIE) தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த அறிவுரையாகக் கருதுவது: “முன்னேறுவது என்பது எளிதானதோ, விரைவாகக் கிடைப்பதோ அல்ல”.

    இந்த உண்மை புரிந்துதான் இருமுறை நோபல் பரிசு வாங்கியிருக்கிறார் — பௌதிகத்திலும், ரசாயனத்திலும்.

    இதைத்தான் ‘ஆமையும் முயலும்’ கதைவழி சிறுவர்களுக்குப் போதிக்கிறோம்.

    எந்தக் காரியமும் செய்வதற்குமுன் கடினமாக, நம்மை அயர்ச்சி அடையவைப்பதாகத்தான் இருக்கும். அதற்காக, கனவுடனேயே திருப்தி அடைந்துவிடலாமா?

    கதை

    ராஷ்டிரகூட அரசனாகிய முதலாம் கிருஷ்ணனுக்கு ஒரு கனவு இருந்தது. ஔரங்காபாத் அருகிலிருக்கும் எல்லோராவில் ஒரே கல்லில் கைலாசநாதர் கோயில் கட்டவேண்டும் என்பதுதான் அது. அதனைக் கட்டி முடிக்க இருபத்தாறு ஆண்டுகள் ஆயிற்று.

    ‘நல்ல வேளை, ஆரம்பித்தபின்னர் மனம் தளர்ந்து, இது நடக்கிற காரியமா!’ என்று அரசன் யோசித்து, எடுத்த முயற்சியைக் கைவிடவில்லை.

    ‘ஒரே கல்லைக் குடைந்து, இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டுவது மனிதனால் முடிகிற காரியமே இல்லை. வேற்று கிரகவாசிகள் செய்ததாக இருக்கும்,’ என்று அயல்நாட்டவர்கள் ஆற்றாமையுடன் ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிற அளவுக்கு அசாதாரணமான சின்னமாக எல்லோரா குகைக்கோயில் ஆகியிருக்காது.

    கஜினி முகமது

    ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெறாவிட்டால் என்ன! அதிலும் ஒரு சௌகரியம். மீண்டும் செய்யும்போது முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை.

    ஒரு மாணவன் பல முறை பரீட்சையில் தோல்வியுற்று, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் அவனை கஜினி முகமது என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

    உண்மையில், அவன் பாராட்டுக்கு உரியவன். மனம் தளராது எடுத்த காரியத்தை முடிப்பது என்று உறுதியாக இருக்கிறான், அல்லவா?

    ‘இது என்ன பிடிவாதம்? முடியவில்லை என்றால் விட்டுவிடேன்!’ என்று பிறர் அவநம்பிக்கை அளிக்க முயலலாம்.

    அவனுக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதை நோக்கிப் போகும்போது எவ்வகையான தடங்கல் வந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

    புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும் இத்தகையவர்கள்தாம்.

    கால் வலிக்கிறதே, உடல் களைத்துப்போகிறதே, வேறு எதற்குமே நேரம் கிடைப்பதில்லையே என்றெல்லாம் யோசித்துப் பின்வாங்கியிருந்தால், முதல்தர விளையாட்டு வீரர்களாக ஆகியிருக்க முடியுமா?

    ‘இறுதிச்சுற்றின்போது, கண்டிப்பாக வெற்றி நமக்குத்தான்!’ என்று சற்றே அயரவும் மாட்டார்கள் இவர்கள்.

    அறிவும் பலமும் இருந்தால் மட்டும் போதாது, வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் விடாமுயற்சியும் அவசியம் என்று இவர்களுக்குத் தெரியும்.

    உடலும் மனமும் களைத்தபின்னரும் தொடர்ந்து செய்வதுதான் விடாமுயற்சி.

    இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, என் மாணவி ஒருத்தி இரவு பகலாக, தகுந்த ஆகாரமுமின்றி படித்ததில், பரீட்சைக்கு ஒரு மாதம் முன்னர் ‘மண்டை வலி’ என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கோமா நிலைக்குப்போய், பரீட்சை எழுத முடியாமல் போயிற்று.

    பாடங்களைப் படிப்பதானாலும் அவ்வப்போது ஓய்வும், உணவும் அவசியம்தானே?

    நான் முன்பெல்லாம், ஒரு ஆப்பிள், குடிநீர், பால் எல்லாவற்றையும் எனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, சாப்பாட்டு மேசைமுன் அமர்ந்து கதை எழுத ஆரம்பிப்பேன். ‘பசிக்கிறதே!’ என்று பாதியில் எழுந்துபோனால் கற்பனை தடைப்பட்டுவிடும்.

    இப்போதும், எங்கள் வீட்டுக் குழந்தைகள் நாள்முழுவதும் படிக்கும்போது பழம், பிஸ்கோத்து என்று ஏதாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். முனைந்து படிக்கையில், பசி தெரியாது. ஆனால் களைப்பு அதிகரிக்க, வேகம் குறைந்துவிடும். காலை, மாலை இருவேளையும் காற்றாட நடக்கவும் வேண்டும். இல்லையேல், ரத்த சோகை, மங்கலான கண் பார்வை என்று ஏதேதோ அவதிகள் வந்துவிடும்.

    கேள்வியும் பதிலும்

    பதின்ம வயது மாணவர்களுக்கான புத்தகத்தில் ஒரு கேள்வி: ‘பெரியவன் ஆனதும் என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?’

    படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் எழுதியது: டாக்டர், வக்கீல், துப்புறவுத் தொழிலாளி.

    பெரிய இலக்கு. ஆனால் அதை அடைவதற்காக எந்த முயற்சியும் கிடையாது.

    என் மாணவிகள் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கணக்கைப் போடத் திணறினால், நான் அதை கரும்பலகையில் போட்டுக்காட்டுவேன்.

    ‘எத்தனை சுலபம்!’ என்று ஒரு குரல் எப்போதும் எழும்.

    ‘அதை நீங்களே போடுவதுதானே!’ என்று நினைத்துக்கொள்வேன்.

    எதுவானாலும், செய்து முடித்தபின்தான், ‘இதற்கா இவ்வளவு தயங்கினோம்!’ என்ற ஆச்சரியம் எழும்.

    மேடும் பள்ளமும்

    கடுமையாக உழைத்து, உச்சத்திற்குப் போனபின் பலர் அங்கேயே நிலைப்பதில்லை. கர்வம் கொண்டால் விழுவது நிச்சயம்.

    உச்சத்திலிருந்தபோது கொண்டாடியவர்கள் அப்போது காணாமல் போய்விடுவார்கள். தம் தவறு என்னவென்று கீழே விழுந்தவர்களுக்குப் புரிவதில்லை. ‘நன்றிகெட்ட மனிதர்கள்!’ என்று பிறரைப் பழிப்பார்கள்!

    எல்லை கடந்தது

    இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளுக்கு எல்லையே கிடையாது. சில வருடங்கள் கற்றபின் மலைப்பாக இருக்கும். மெள்ள மெள்ளச் சென்றாலே போதும். கரையைக் காண முடியாவிட்டாலும் அறிவு சிறந்திருக்கும்.

    ‘நீயும்தான் இத்தனை வருடங்களாக ஒரே காரியத்தைச் செய்கிறாய்! என்ன கிழித்தாய்!’ –- இப்படிப் பலவாறாகச் சிலர் ஏன் நம்மை அவநம்பிக்கைக்கு ஆளாக்க முயல்கிறார்கள்?

    அவர்களைப் பொறாமை ஆட்டிவைக்கிறது. இதைப் புரிந்துகொண்டால், அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்ய முடியும். நம் மன உறுதியும் தளராது. விடாமுயற்சியுடன் செயல்படுகிறவர்களை வீழ்த்துவது கடினம்.

    எல்லோரையும் எப்போதும் மகிழ்விக்க நினைத்தால் நம் மகிழ்ச்சிதான் கெடும்.

    Share
  • திரௌபதி சுயம்வரம்

    திரௌபதி சுயம்வரம்

    ஆ. கிஷோர்குமார்

    துருபதன் மகளுக்கு
    சுயம்வர தருணம்

    சுயம்வர சபையில்
    கண்ணனும் அவன் அண்ணனும்
    அருகருகே அமர்ந்திருக்க

    வேதியர் வரிசையில்
    பாண்டவர்கள்… பார்ப்பன வேடம்
    பூண்டவர்கள்.

    சுயம் வர சபையில்
    ஓரு எழில் வரம்..
    நகை பூண்ட
    நாயகி  பாஞ்சாலி..

    திரிஷ்டத்துய்மன்
    சபைக்கு வணக்கம் அளித்துப் பின்
    விளக்கம் அளித்தான்

    வில்லைக் காட்டி..
    இதில் நாணை ஏற்றி
    அம்பைப் பூட்டி
    சுழலும் சக்கர இடைவெளியில்
    தெரியும் இலக்கை அடிப்பவர்க்கே துருபதன் மகள் துணையாக வருவாள்
    வாழ்க்கை முழுக்க
    இணையாக இருப்பாள்.

    ஒவ்வொருவராய் முயல
    எழுந்து வந்த எல்லாரும்
    வில்லை வளைக்கக் கூட வக்கில்லாமல் விழுந்து ஓடினர்..

    சிசுபாலன், சல்லியன், ஜராசந்தன் எனத்
    தோற்றவர் பட்டியல் நீண்டது
    மண்டபத்தின் மத்தியைச் சிறிது நேரம் வில்லே ஆண்டது..

    துணுக்குற்ற துரியன்
    துள்ளி எழுந்தான்
    எல்லோரையும் எகத்தாளமாய்ப் பார்த்தான்..

    சபை நடுவே சென்று
    வில்லெடுத்து இரும்பு நாணை இழுத்துக் கட்டினான்
    சின்ன இடைவெளியில் சற்றே பலமிழக்க எதிர்த்தடித்த வில்லால்
    எகிறி விழுந்தான்
    என்ன நடந்ததோ என விழித்தான்…
    வியர்வையை விரலால் வழித்தான்…
    சபை அங்கே சிரித்தது
    கண்ணால் துரியனை எரித்தது…

    அந்தணர் கூட்டத்தில்
    அர்ஜுனன் எழுந்தான்
    ஐயம் வினவினான்
    நான் மேல்வருணன்
    நான் எடுக்கலாமா இந்த நாண்?

    திரிஷ்டத்துய்மன் சற்றே முறைத்தான்
    யோசித்தபின் உரைத்தான்
    இது வீரம் பேசும்  தருணம்.
    தேவையில்லை இங்கு வருணம்.
    போட்டி பொதுவானதே..

    வில்லருகில் போனான் விஜயன்
    கண்களில் இலக்கை இறுக்கினான்
    கருத்தினில் கண்ணனை இறுக்கினான்
    வில்லில் நாணை இறுக்கினான்
    அம்பை வில்லில் இருத்தினான்.

    ஒவ்வோர் அம்பும் இலக்கை தாக்கியது
    இவனால் முடியுமா என்ற ஐயத்தை நீக்கியது..

    திரௌபதி பார்வை
    அவன் வீரம் பார்த்தது…
    நெற்றி அதை வழிமொழிந்து வியந்தது……..
    உடல் மகிழ்ச்சியில்
    தானாக வேர்த்தது …
    கையோ அவன்  கழுத்தில் மணமாலை சேர்த்தது…

    Share
  • நாலடியார் நயம் – 35

    நாலடியார் நயம் – 35

    நாங்குநேரி வாசஸ்ரீ

    35. கயமை

    பாடல் 341

    கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
    குப்பை கிளைபோவாக் கோழிபோல்; – மிக்க
    கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
    மனம்புரிந்த வாறே மிகும்.

    காலத்தே தானியத்தை வேண்டுமளவு போட்டாலும்
    குப்பைகிளறுவதை விடாது கோழி அதுபோல்
    மேன்மைமிகு நூல்களை விரிவாய் விளக்கினாலும் தன்
    மனம் விரும்பிய வழியிலே செல்வான் கீழோன்.

    பாடல் 342

    காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
    தாழாது போவாம் என உரைப்பின் – கீழ்தான்
    உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
    மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

    உறுதியான நூற்பொருளைக்  கற்பதற்கு
    உயரிய சான்றோரிடம் காலம் தாழ்த்தாது
    உடனே செல்வோம் எனச் சொன்னால்
    உறங்க வேண்டும் என்றோ வேறொரு
    உபயோகமற்ற காரணத்தையோ சொல்லி
    உடன்படாது மறுத்துச் செல்வான் கீழானவன்.

    பாடல் 343

    பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
    ஒருநடைய ராகுவர் சான்றோர்; – பெருநடை
    பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
    வற்றாம் ஒருநடை கீழ்.

    விளங்கும் மலையருவிகளுடை நல்ல நாட்டின்
    வேந்தனே! மேலோர் பெருஞ்சிறப்பு தமக்கு
    வாய்க்கப் பெற்றினும் ஒழுக்கத்தினின்று
    வழுவாது ஒரே நிலையில் இருப்பர் மாறாக
    வளமான பெருஞ்சிறப்பு கிட்டுமாயின்
    வேறாக நடந்து கொள்வர் கீழோர்.

    பாடல் 344

    தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
    பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; – பனையனைத்து
    என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
    நன்றில நன்றறியார் மாட்டு.

    விளங்கும் அருவிகளுடை நல்ல நாட்டு
    வேந்தனே! செய்த உதவி தினை அளவே
    விளங்கினும் சான்றோர் பனையளவென
    விரும்பிப் போற்றுவர் பனையளவு உதவினும்
    நன்றியில்லாதார் அதனை உதவியெனவே
    நினைக்க மாட்டார்.

    பாடல் 345

    பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
    எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; – அச்சீர்
    பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
    கருமங்கள் வேறு படும்.

    நல்ல உணவைப் பொற்கலத்தில் வைத்து வளர்க்கும்
    நாய்க்குக் கொடுத்தாலும் பிறர் எச்சில் சோற்றை
    கண் இமைக்காமல் பார்த்திருக்குமதுபோல்
    சிறப்புள்ளவனாய் மதித்துப் பெருமை செய்திடினும்
    செய்யும் செயல்களால் வேறுபட்டு நிற்பான் கீழ்மகன்.

    பாடல் 346

    சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
    எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; – எக்காலும்
    முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
    இந்திரனா எண்ணி விடும்..

    உலகம் முழுதும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும்
    உயர்ந்த செல்வம் பெறினும் வரம்புகடந்த சொற்களை
    உரையார் பெரியோர் எப்போதேனும் முந்திரி எனும்
    சிறுதொகையின்மேல் காணி எனும் அற்பத்தொகை
    சேர்ந்தால் தம்மைத் தேவலோக இந்திரனாய் நினைத்து
    செருக்குற்று நடப்பர் கீழோர்.

    பாடல் 347

    மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
    செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
    எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
    செய்தொழிலாற் காணப் படும்.

    மாசற்ற நல்ல பொன்னின் மேல்
    மாட்சிமை பொருந்திய இரத்தினங்கள்
    பதித்துச் செய்தாலும் காலில் அணிதற்கே
    பயன்படும் செருப்பு என்பதுபோல் கீழ்மக்கள்
    அதிகமாய்ச் செல்வம் பெற்றிருப்பினும்
    அவர் செய்யும் செயல்களால் கீழோரெனவே
    அறியப் படுவர் எப்போதும்.

    பாடல் 348

    கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
    இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், – அடுத்தடுத்து
    வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
    ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

    பெருமையான மலைகளுடை நல்லநாட்டைப்
    பெற்ற அரசனே! கீழ்மகன் கடும் சொல் சொல்லும்
    பழக்கம் உடையவன் எவரிடத்தும் இரக்கம்
    பாராட்டாதவன் மற்றவர் படும் துன்பத்திற்கு
    பெரிதும் மகிழ்பவன் அடிக்கடி சினம் கொள்பவன்
    பல இடங்களில் கண்டபடி திரிபவன் மற்றவரை
    பழித்துப் பேசும் இயல்பு கொண்டவன்.

    பாடல் 349

    பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
    உழையினியர் ஆகுவர் சான்றோர்; – விழையாதே
    கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
    எள்ளுவர் கீழா யவர்.

    தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மிகுந்து
    தொடர்ந்து ஒலியெழுப்பும் கடலினது
    குளிர்கரையுடை நாட்டு வேந்தனே! ஒருவர்
    தம் பின் நின்றால் பல நாள் பழகியவரென
    தகுதியுடைப் பெரியோர் அவர்களிடம் இனியராய்
    தக்கவாறு பழகுவர் கீழ்மக்களோ நிற்பவரை
    தம் நண்பராய்க் கருதாது பழிப்பர்.

    பாடல் 350

    கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
    வையம்பூண் கல்லா சிறுகுண்டை; – ஐயகேள்,
    எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
    செய்தொழிலாற் காணப்படும்.

    அரசனே கேட்பாயாக! நாள்தோறும்
    அறுக்கத்தக்க புல்லைத் தின்பதற்கு
    அறுத்துக் கொடுத்தாலும் சிறிய எருதுகள்
    அளவிற்பெரிய வண்டியை இழுக்கமாட்டா
    அதுபோல் செல்வம் பெற்றிருப்பினும் கீழோரை
    அவர் செய்யும் செயலினால் அறிய இயலும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 264

    படக்கவிதைப் போட்டி – 264

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (28.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 263இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 263இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பச்சிலையில் இச்சையோடமர்ந்திருக்கும் வெட்டுக்கிளியைத் துல்லியமாய்ப் படமெடுத்து வந்திருப்பவர் திருமிகு. கீதா மதி. இப்படத்தை படக்கவிதைப் போட்டி 263க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விரு மங்கையர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    உழவர்கள் பாசத்தோடு வளர்த்திடும் பயிர்களை வெட்டி நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் உழவர்களின் பகைவர்களாய் விளங்குகின்றன.

    வெட்டுக்கிளியே! பிறவற்றிற்கு இன்னா செய்யும் தீய பண்பை நீ கைவிட்டால் மன்னா உலகத்தில் மன்னுபுகழ் பெறுவாய்; மறவாதே!

    இதோ உன் செயல்குறித்துக் கருத்தாய்க் கவிபாட எம் கவிஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை வரவேற்கின்றேன்!

    *****

    ”பச்சை இலையை மிச்சமின்றி உண்ணும் வெட்டுக்கிளியைத் துச்சமாக எண்ணாது ஒழித்திடவேண்டும்” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பகையாய்…

    பச்சை இலையில் வெட்டுக்கிளி
    பார்த்திட அழகுதான் சின்னக்கிளி,
    மிச்ச மீதி வைக்காமல்
    முழுதும் இலையைத் தின்றிடுமே,
    துச்ச மாக எண்ணவேண்டாம்
    துணையுடன் கூட்டமாய் வந்தாலே
    பச்சைப் பயிரெலாம் பாழாகும்,
    பார்த்தே ஒழிப்போம் பகையிதையே…!

    *****

    ”வெட்டுக்கிளியே! பயிரை நட்ட விவசாயி பட்ட துயரை நீ அறிந்தால் கிட்ட வராமல் எட்டிச்செல்வாய்” என்று எதார்த்தம் உரைக்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

    எட்டிச் செல் வெட்டுக்கிளியே!

    வட்டிக்குக் கடன் வாங்கி
    வயல்காட்டைப் பண்படுத்தி
    சுட்டெரிக்கும் வெயிலிலும்
    சோர்வின்றித் தினம் உழைத்து
    நட்ட பயிர் வளர்ச்சிக்காய்
    நாளும் பொழுதும் பாடுபட்டுக்
    கொட்டும் நல்ல‌ விளைச்சலால்
    கிட்டும் பணம் கொண்டு
    வட்டிக் கடன் அடைத்து
    வளமாய் வாழ நினைக்கையில்
    நட்ட பயிர் இலைகளை
    வெட்டி உணவாய் உட்கொண்டு
    நட்டம் தன்னை ஏற்படுத்துதல்
    நல்லதோ சொல் வெட்டுக்கிளியே?
    நட்ட விவசாயி நாளும்
    பட்ட துயர் நீயறிந்தால்
    கிட்ட வராமல் கூட்டத்துடன்
    எட்டிச் செல்வாய் மனமிரங்கி!

    *****
    ”வெட்டுக்கிளியே! உன்னை நாங்கள் கொண்டாட வேண்டுமா? உன் வெட்டும் குணத்தை மாற்றிக்கொண்டு சுதந்தரமாய்ப் பறந்து திரி!” என்று நல்யோசனை நவில்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இளம்பச்சை வண்ணமதில்
    அழகாய் நீ இருந்தாலும்
    உனை நான் வெறுக்கிறேன்
    வெட்டுவது உன் குணமாய்
    இருக்கையிலே வேறு என்செய?

    உலகின் கண்டம் விட்டுக் கண்டம் வந்து
    தானியங்களை அழித்து விட்டு
    நாடுகளை நாசமாக்கும் இனம்தானே நீ?

    விளை நிலங்கள் பயிரினங்கள்
    வீழ்ந்திட்ட நிலையினையே
    மறந்திட்டு உனை ரசிக்க
    ஈரமில்லை என் நெஞ்சில்!

    வந்தவழி சென்று விடு
    எம் நாட்டின் வாசலை மூடிவிட்டோம்
    நீ இருந்த இடத்திலே இருந்திட்டு
    இறுதி வரை வாழ்ந்து விடு

    வெட்டும் குணம் மாற்றிக் கொள்!
    சுதந்திரமாய்ப் பறந்து திரி
    நாங்கள் அழைப்பதற்கும் ஏதுவாக!!
    உனை ரசிப்பதற்கும் தோதாக!

    *****

    ”இன்னல் விளைத்து உழவர்களுக்குத் தொல்லைகொடுக்க இயற்கை நடத்தும் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க இங்கு யாருனை அனுப்பிவைத்தார்? பெயரைச் சொல்! அவரையும் எம் கடவுளர் வரிசையில் சேர்த்துவிடுகின்றோம்” என்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    திரும்பிச் செல்!

    இன்பமாய் அமர்ந்திருக்கும் நீ எனை உண்பதுபற்றி
    இறுதிமுடிவு எடுக்குமுன் பொறுமையாய்க் கேள்!
    இலையெனும் நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
    இப்புவிவாழ் உழவரையெல்லாம் கதிரவன்
    இரக்கமின்றி சுட்டெரித்தான் கடவுளாய் வணங்கினர்
    இரவுபகலாய் அதிகமழைபொழிவித்து
    இடர்விளைவித்தவனையும் மழைக்கடவுளென்றனர்
    இங்குமங்கும் மரங்களைச் சாய்த்துப் பயிருக்குச் சேதம்
    இழைத்த காற்றையும் கடவுளாய் வணங்கினர்
    இதுபோன்ற கடவுளர் பல உண்டு இவர்கள் பட்டியலில்
    இருப்பதை வைத்து விதை வாங்கித் தூவி வயிற்றைக் கட்டி
    இயன்றவரை கடும் உடலுழைப்பால் எமை உருவாக்கி
    இயற்கை நடத்தும் நாடகமாம் புயல், மழை வறட்சியினின்று
    இந்நேரம்வரைக் காத்த எம் உழவர்கூட்டத்தை நினைத்துப்பார்!
    இன்னல் விளைத்து உழவர்களுக்குத் தொல்லைகொடுக்க
    இயற்கை நடத்தும் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க
    இங்கு யாருனை அனுப்பிவைத்தார்? பெயரைச் சொல்!
    இடர் விளைவித்தவரையெல்லாம் கடவுளாக்கிச் சுடர் ஏற்றி வழிபட்டு
    இம்மியளவும் தளரா எம் உழவர் பெருமக்கள் உன்னை அனுப்பியவரையும்
    இனிமேல் கடவுளர்கள் பட்டியலில் கண்டிப்பாகச் சேர்த்துவணங்குவர்
    இப்பூவலக மக்களெல்லாம் நல்லவர்கள் இவர்களுக்கு
    இயற்கை வழிபாடு ஒன்றும் புதிதல்ல புரிந்துகொள்!
    இப்போதுவரை வயிறுபெருத்த உன்கூட்டம் உலகத்துப் பயிரை
    இடைவிடாது விழுங்கியது போதும் திரும்பிச்செல்!
    இவ்வுலகத்தவர் வயிற்றை நிரப்பி நன்றிசெலுத்த எமக்கும் வாய்ப்புகொடு.

    *****

    ”வெட்டுக்கிளியே! கிளி என்றால் நேசம்! அது உனக்கு இல்லாததால் எம் பயிர்கள் நாசம்! காந்தி தேசத்தில் இனி நாங்கள் காட்டப்போவதில்லை இரக்கம்; வெட்டி வீழ்த்தப்போகிறோம் உன் இறக்கைகளை!” என்று சினந்துரைக்கின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    வெட்டுக்கிளியே எச்சரிக்கை
    முதலில் உனது பெயரை
    மாற்றி எழுத வேண்டும்
    நீ வெட்டுக்கிளி அல்ல
    நீ பாயும் புலி!

    கிளி என்றால் அழகு
    கிளி என்றால் நேசம்
    இரண்டுமே இல்லாததால்
    பயிர்களோ நாசம்!

    கண்டம் விட்டுக் கண்டம்
    பறவைகள் தான் வருகிறது
    இரண்டகம் உன்போல் செய்யலையே!

    உழைக்காமல் உண்பவனே
    உண்ணும் உணவை அழிப்பவனே
    பூச்சி இனம் தானே
    கண்ணாமூச்சி உன் இனத்திடமே

    பயிர்களை நாசம் செய்யச் செய்ய
    உன் அழிவு நீ தேடியதே!

    விவசாயிகளை வாட்டாதே
    படையெடுப்புக் கொழுப்பே!

    பல்முனைத் தாக்குதல்
    பாரதம் எப்படிச் சமாளிக்க?

    ஒருபுறம் கொரானா
    மறுபுறம் சீனா சனியன்
    நடுவினில் நீயா?
    நாங்கள் என்ன வீணா?

    பார்த்து விடுவோம் ஒருகை
    காந்தி தேசத்தில்
    உனக்கில்லை இரக்கம்!
    உன் இறக்கை வெட்டப்படும்!
    விவசாயிப் பயிர்
    இருக்கை காக்கப்படும்!

    *****

    இந்தியப் பயிர்களை வெட்டித் தள்ளிய வெட்டுக் கிளிகள்மீது சீற்றத்தைக் காட்டி நம் கவிஞர்கள் எழுதியிருக்கும் கவிதைகள், நாட்டு வளத்திலும் உழவர் நலத்திலும் அவர்களுக்கிருக்கும் அளவற்ற அக்கறையைக் காட்டுகின்றன. பாராட்டுக்கள் நம் கவிஞர்களுக்கு!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

    உயிர் சுழற்சி

    பேரிச்சைப் பாலை விட்டு 
    நெல்இச்சைக் கொண்டு வந்து
    உரம்பாய்ச்சி வளர்த்து வைத்த
    கதிரழித்த வெட்டுக்கிளி…

    நாடுவிட்டு நாடுசென்று
    ஏவுகணை போலத் தாக்கி
    பாடுபட்டு வளர்த்த பயிர்
    காவுகொண்டு போனதிங்கே….

    பூச்சியினம் ஊர்வன உண்ணும்
    ஊர்வனவற்றை விலங்கு உண்ணும்
    விலங்கினங்கள் காட்டில் வாழும்
    உயிர் சுழற்சிப் பாடம் கண்டோம்…

    உயிர் சுழற்சி இயற்கையை – நாம்
    முறைதவற வைத்துவிட்டு
    சிற்றுயிரிப் பூச்சியினைக்
    குற்றஞ்சொல்லி ஏது பயன்?

    ”உயிர்சுழற்சி இயற்கையை மனிதர்களாகிய நாம் முறைதவற விட்டுவிட்டு, வெட்டுக்கிளிகளையும் இன்னபிற சிற்றுயிர்களையும் குற்றஞ்சொல்லி என்ன பயன்?” என்று வினாத்தொடுத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share