-மேகலா இராமமூர்த்தி

பச்சிலையில் இச்சையோடமர்ந்திருக்கும் வெட்டுக்கிளியைத் துல்லியமாய்ப் படமெடுத்து வந்திருப்பவர் திருமிகு. கீதா மதி. இப்படத்தை படக்கவிதைப் போட்டி 263க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விரு மங்கையர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

உழவர்கள் பாசத்தோடு வளர்த்திடும் பயிர்களை வெட்டி நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் உழவர்களின் பகைவர்களாய் விளங்குகின்றன.

வெட்டுக்கிளியே! பிறவற்றிற்கு இன்னா செய்யும் தீய பண்பை நீ கைவிட்டால் மன்னா உலகத்தில் மன்னுபுகழ் பெறுவாய்; மறவாதே!

இதோ உன் செயல்குறித்துக் கருத்தாய்க் கவிபாட எம் கவிஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை வரவேற்கின்றேன்!

*****

”பச்சை இலையை மிச்சமின்றி உண்ணும் வெட்டுக்கிளியைத் துச்சமாக எண்ணாது ஒழித்திடவேண்டும்” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பகையாய்…

பச்சை இலையில் வெட்டுக்கிளி
பார்த்திட அழகுதான் சின்னக்கிளி,
மிச்ச மீதி வைக்காமல்
முழுதும் இலையைத் தின்றிடுமே,
துச்ச மாக எண்ணவேண்டாம்
துணையுடன் கூட்டமாய் வந்தாலே
பச்சைப் பயிரெலாம் பாழாகும்,
பார்த்தே ஒழிப்போம் பகையிதையே…!

*****

”வெட்டுக்கிளியே! பயிரை நட்ட விவசாயி பட்ட துயரை நீ அறிந்தால் கிட்ட வராமல் எட்டிச்செல்வாய்” என்று எதார்த்தம் உரைக்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

எட்டிச் செல் வெட்டுக்கிளியே!

வட்டிக்குக் கடன் வாங்கி
வயல்காட்டைப் பண்படுத்தி
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சோர்வின்றித் தினம் உழைத்து
நட்ட பயிர் வளர்ச்சிக்காய்
நாளும் பொழுதும் பாடுபட்டுக்
கொட்டும் நல்ல‌ விளைச்சலால்
கிட்டும் பணம் கொண்டு
வட்டிக் கடன் அடைத்து
வளமாய் வாழ நினைக்கையில்
நட்ட பயிர் இலைகளை
வெட்டி உணவாய் உட்கொண்டு
நட்டம் தன்னை ஏற்படுத்துதல்
நல்லதோ சொல் வெட்டுக்கிளியே?
நட்ட விவசாயி நாளும்
பட்ட துயர் நீயறிந்தால்
கிட்ட வராமல் கூட்டத்துடன்
எட்டிச் செல்வாய் மனமிரங்கி!

*****
”வெட்டுக்கிளியே! உன்னை நாங்கள் கொண்டாட வேண்டுமா? உன் வெட்டும் குணத்தை மாற்றிக்கொண்டு சுதந்தரமாய்ப் பறந்து திரி!” என்று நல்யோசனை நவில்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

இளம்பச்சை வண்ணமதில்
அழகாய் நீ இருந்தாலும்
உனை நான் வெறுக்கிறேன்
வெட்டுவது உன் குணமாய்
இருக்கையிலே வேறு என்செய?

உலகின் கண்டம் விட்டுக் கண்டம் வந்து
தானியங்களை அழித்து விட்டு
நாடுகளை நாசமாக்கும் இனம்தானே நீ?

விளை நிலங்கள் பயிரினங்கள்
வீழ்ந்திட்ட நிலையினையே
மறந்திட்டு உனை ரசிக்க
ஈரமில்லை என் நெஞ்சில்!

வந்தவழி சென்று விடு
எம் நாட்டின் வாசலை மூடிவிட்டோம்
நீ இருந்த இடத்திலே இருந்திட்டு
இறுதி வரை வாழ்ந்து விடு

வெட்டும் குணம் மாற்றிக் கொள்!
சுதந்திரமாய்ப் பறந்து திரி
நாங்கள் அழைப்பதற்கும் ஏதுவாக!!
உனை ரசிப்பதற்கும் தோதாக!

*****

”இன்னல் விளைத்து உழவர்களுக்குத் தொல்லைகொடுக்க இயற்கை நடத்தும் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க இங்கு யாருனை அனுப்பிவைத்தார்? பெயரைச் சொல்! அவரையும் எம் கடவுளர் வரிசையில் சேர்த்துவிடுகின்றோம்” என்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

திரும்பிச் செல்!

இன்பமாய் அமர்ந்திருக்கும் நீ எனை உண்பதுபற்றி
இறுதிமுடிவு எடுக்குமுன் பொறுமையாய்க் கேள்!
இலையெனும் நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
இப்புவிவாழ் உழவரையெல்லாம் கதிரவன்
இரக்கமின்றி சுட்டெரித்தான் கடவுளாய் வணங்கினர்
இரவுபகலாய் அதிகமழைபொழிவித்து
இடர்விளைவித்தவனையும் மழைக்கடவுளென்றனர்
இங்குமங்கும் மரங்களைச் சாய்த்துப் பயிருக்குச் சேதம்
இழைத்த காற்றையும் கடவுளாய் வணங்கினர்
இதுபோன்ற கடவுளர் பல உண்டு இவர்கள் பட்டியலில்
இருப்பதை வைத்து விதை வாங்கித் தூவி வயிற்றைக் கட்டி
இயன்றவரை கடும் உடலுழைப்பால் எமை உருவாக்கி
இயற்கை நடத்தும் நாடகமாம் புயல், மழை வறட்சியினின்று
இந்நேரம்வரைக் காத்த எம் உழவர்கூட்டத்தை நினைத்துப்பார்!
இன்னல் விளைத்து உழவர்களுக்குத் தொல்லைகொடுக்க
இயற்கை நடத்தும் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க
இங்கு யாருனை அனுப்பிவைத்தார்? பெயரைச் சொல்!
இடர் விளைவித்தவரையெல்லாம் கடவுளாக்கிச் சுடர் ஏற்றி வழிபட்டு
இம்மியளவும் தளரா எம் உழவர் பெருமக்கள் உன்னை அனுப்பியவரையும்
இனிமேல் கடவுளர்கள் பட்டியலில் கண்டிப்பாகச் சேர்த்துவணங்குவர்
இப்பூவலக மக்களெல்லாம் நல்லவர்கள் இவர்களுக்கு
இயற்கை வழிபாடு ஒன்றும் புதிதல்ல புரிந்துகொள்!
இப்போதுவரை வயிறுபெருத்த உன்கூட்டம் உலகத்துப் பயிரை
இடைவிடாது விழுங்கியது போதும் திரும்பிச்செல்!
இவ்வுலகத்தவர் வயிற்றை நிரப்பி நன்றிசெலுத்த எமக்கும் வாய்ப்புகொடு.

*****

”வெட்டுக்கிளியே! கிளி என்றால் நேசம்! அது உனக்கு இல்லாததால் எம் பயிர்கள் நாசம்! காந்தி தேசத்தில் இனி நாங்கள் காட்டப்போவதில்லை இரக்கம்; வெட்டி வீழ்த்தப்போகிறோம் உன் இறக்கைகளை!” என்று சினந்துரைக்கின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

வெட்டுக்கிளியே எச்சரிக்கை
முதலில் உனது பெயரை
மாற்றி எழுத வேண்டும்
நீ வெட்டுக்கிளி அல்ல
நீ பாயும் புலி!

கிளி என்றால் அழகு
கிளி என்றால் நேசம்
இரண்டுமே இல்லாததால்
பயிர்களோ நாசம்!

கண்டம் விட்டுக் கண்டம்
பறவைகள் தான் வருகிறது
இரண்டகம் உன்போல் செய்யலையே!

உழைக்காமல் உண்பவனே
உண்ணும் உணவை அழிப்பவனே
பூச்சி இனம் தானே
கண்ணாமூச்சி உன் இனத்திடமே

பயிர்களை நாசம் செய்யச் செய்ய
உன் அழிவு நீ தேடியதே!

விவசாயிகளை வாட்டாதே
படையெடுப்புக் கொழுப்பே!

பல்முனைத் தாக்குதல்
பாரதம் எப்படிச் சமாளிக்க?

ஒருபுறம் கொரானா
மறுபுறம் சீனா சனியன்
நடுவினில் நீயா?
நாங்கள் என்ன வீணா?

பார்த்து விடுவோம் ஒருகை
காந்தி தேசத்தில்
உனக்கில்லை இரக்கம்!
உன் இறக்கை வெட்டப்படும்!
விவசாயிப் பயிர்
இருக்கை காக்கப்படும்!

*****

இந்தியப் பயிர்களை வெட்டித் தள்ளிய வெட்டுக் கிளிகள்மீது சீற்றத்தைக் காட்டி நம் கவிஞர்கள் எழுதியிருக்கும் கவிதைகள், நாட்டு வளத்திலும் உழவர் நலத்திலும் அவர்களுக்கிருக்கும் அளவற்ற அக்கறையைக் காட்டுகின்றன. பாராட்டுக்கள் நம் கவிஞர்களுக்கு!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

உயிர் சுழற்சி

பேரிச்சைப் பாலை விட்டு 
நெல்இச்சைக் கொண்டு வந்து
உரம்பாய்ச்சி வளர்த்து வைத்த
கதிரழித்த வெட்டுக்கிளி…

நாடுவிட்டு நாடுசென்று
ஏவுகணை போலத் தாக்கி
பாடுபட்டு வளர்த்த பயிர்
காவுகொண்டு போனதிங்கே….

பூச்சியினம் ஊர்வன உண்ணும்
ஊர்வனவற்றை விலங்கு உண்ணும்
விலங்கினங்கள் காட்டில் வாழும்
உயிர் சுழற்சிப் பாடம் கண்டோம்…

உயிர் சுழற்சி இயற்கையை – நாம்
முறைதவற வைத்துவிட்டு
சிற்றுயிரிப் பூச்சியினைக்
குற்றஞ்சொல்லி ஏது பயன்?

”உயிர்சுழற்சி இயற்கையை மனிதர்களாகிய நாம் முறைதவற விட்டுவிட்டு, வெட்டுக்கிளிகளையும் இன்னபிற சிற்றுயிர்களையும் குற்றஞ்சொல்லி என்ன பயன்?” என்று வினாத்தொடுத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.