திரௌபதி சுயம்வரம்

ஆ. கிஷோர்குமார்
துருபதன் மகளுக்கு
சுயம்வர தருணம்
சுயம்வர சபையில்
கண்ணனும் அவன் அண்ணனும்
அருகருகே அமர்ந்திருக்க
வேதியர் வரிசையில்
பாண்டவர்கள்… பார்ப்பன வேடம்
பூண்டவர்கள்.
சுயம் வர சபையில்
ஓரு எழில் வரம்..
நகை பூண்ட
நாயகி பாஞ்சாலி..
திரிஷ்டத்துய்மன்
சபைக்கு வணக்கம் அளித்துப் பின்
விளக்கம் அளித்தான்
வில்லைக் காட்டி..
இதில் நாணை ஏற்றி
அம்பைப் பூட்டி
சுழலும் சக்கர இடைவெளியில்
தெரியும் இலக்கை அடிப்பவர்க்கே துருபதன் மகள் துணையாக வருவாள்
வாழ்க்கை முழுக்க
இணையாக இருப்பாள்.
ஒவ்வொருவராய் முயல
எழுந்து வந்த எல்லாரும்
வில்லை வளைக்கக் கூட வக்கில்லாமல் விழுந்து ஓடினர்..
சிசுபாலன், சல்லியன், ஜராசந்தன் எனத்
தோற்றவர் பட்டியல் நீண்டது
மண்டபத்தின் மத்தியைச் சிறிது நேரம் வில்லே ஆண்டது..
துணுக்குற்ற துரியன்
துள்ளி எழுந்தான்
எல்லோரையும் எகத்தாளமாய்ப் பார்த்தான்..
சபை நடுவே சென்று
வில்லெடுத்து இரும்பு நாணை இழுத்துக் கட்டினான்
சின்ன இடைவெளியில் சற்றே பலமிழக்க எதிர்த்தடித்த வில்லால்
எகிறி விழுந்தான்
என்ன நடந்ததோ என விழித்தான்…
வியர்வையை விரலால் வழித்தான்…
சபை அங்கே சிரித்தது
கண்ணால் துரியனை எரித்தது…
அந்தணர் கூட்டத்தில்
அர்ஜுனன் எழுந்தான்
ஐயம் வினவினான்
நான் மேல்வருணன்
நான் எடுக்கலாமா இந்த நாண்?
திரிஷ்டத்துய்மன் சற்றே முறைத்தான்
யோசித்தபின் உரைத்தான்
இது வீரம் பேசும் தருணம்.
தேவையில்லை இங்கு வருணம்.
போட்டி பொதுவானதே..
வில்லருகில் போனான் விஜயன்
கண்களில் இலக்கை இறுக்கினான்
கருத்தினில் கண்ணனை இறுக்கினான்
வில்லில் நாணை இறுக்கினான்
அம்பை வில்லில் இருத்தினான்.
ஒவ்வோர் அம்பும் இலக்கை தாக்கியது
இவனால் முடியுமா என்ற ஐயத்தை நீக்கியது..
திரௌபதி பார்வை
அவன் வீரம் பார்த்தது…
நெற்றி அதை வழிமொழிந்து வியந்தது……..
உடல் மகிழ்ச்சியில்
தானாக வேர்த்தது …
கையோ அவன் கழுத்தில் மணமாலை சேர்த்தது…
திரௌபதி சீதாவைப் போல் தந்தை வைத்த வில்போட்டி பரிசாகக் அர்ஜுனனுக்குக் கிடைத்தவள். இது ஓர் பெண் தான் தெரிந்தெடுக்க சுயவரம் என்பது ஏற்றுக் கொள்ளப் படாது.