இலக்கியம்கட்டுரைகள்

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 2 (அறிவன்)

ச. கண்மணி கணேசன் (ஒய்வு),
முதல்வர் & தமிழ்த்துறைத்தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி 

முன்னுரை:

சிறுபாத்திர வரிசையில் இரண்டாவதாக இடம்பெறக் கூடியது அறிவன் எனும் பாத்திரம். இப்பாத்திரம் யாரைக் குறிக்கிறது? என்பது பற்றியும்; தொகை நூல்களில் இப்பாத்திரம் பெறும் பரிமாணத்தையும் கூர்ந்து நோக்குவது இக்கட்டுரையின் மையப் பொருளாகும்.

இலக்கண நூல்களில் அறிவன்:

தொல்காப்பியர் சொல்லும் அகப்பொருள் இலக்கணம் ‘அறிவர்’ கூற்றிற்கு உரியவர் எனக் கற்பியலில் பேசுகிறது (நூற்பா.- 12&13). ஒரு துணைப்பாத்திரம் என்று சொல்லத்தக்க வகையில்; ‘முக்காலத்திற்கும் வழிவழியாக வரும் நல்லனவற்றை உரைத்தலும்; தீயனவற்றை விலக்கலும் செவிலிக்குரிய கூற்றாவது போல அறிவர்க்கும் உரியன’ என்கிறார் தொல்காப்பியர். இதனால் அறிவர் இல்லறத்தார்க்கு உரிய உறுதிப் பொருட்களை தக்க நேரத்தில் அவர்க்கு அறிவுறுத்துவர் என்பது பெறுகிறோம்.

இது ‘அறிவர்’ என்று பன்மைப்படுத்தப்பட்ட பாத்திரத்திற்கு உரியதெனக் கூறப்படினும்; அறிவன் என்னும் தனிப்பாத்திரத்திற்கு உரிய இலக்கணமாக ஏற்றுக் கொள்வதிலும் தயக்கம் ஏற்பட வழியில்லை. தொல்காப்பியப் புறத்திணையியலும்;

“மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன்” (நூற்பா- 20)

என அகத்திணையியல்  செய்தியோடு ஒத்துச் செல்வதைக் காண்கிறோம். .      புறப்பொருள் வெண்பாமாலையும் வாகைத்திணைத் துறைகளுள் ஒன்றான ‘அறிவன் வாகை’ பற்றிப் பேசும்போது;

“புகழ் நுவல முக்காலமும்
நிகழ்பு அறிபவன் இயல்புரைத்தன்று”

என்பதால் அறிவன்  மூன்றுகால நிகழ்ச்சிகளையும் அறிந்துணர்ந்து கூறக்கூடியவன் என்பது  உறுதிப்படுகிறது.

தொகைநூல்களில் உள்ள  புலனெறி வழக்கு:

அறிவன் பேசுவதாகத் தொகைநூல்களில் பாடல்கள் இல்லை. ஆனால் சிறுபாத்திரம் என்னும் தகுதியுடன் ஒரு பாடலில் நேரடியாக (கலித்தொகை- 39) இடம்பெறுகிறான். அப்பாத்திரம் பெறும் சிறப்பிடத்தைக்  காணலாம்.

கலித்தொகையில் அறிவன்:

ஆற்று வெள்ளத்திற்கு ஆற்றாமல் இழுத்துச் செல்லப்பட்ட தலைவியை; அவ்வெள்ளத்துட் பாய்ந்து; உய்வித்துத் தன் மார்போடு தழுவிக் கரையேறினான்  தலைவன். பால்வயத்தான் ஏற்பட்ட உறவில் தலைவி அவனுக்குக் கற்புக்கடம் பூண்டாள். ஊரார் தூற்றினர்; தமர் வெகுண்டெழுந்தனர்; தோழி அறத்தொடு நின்றாள். தாய் தமரை உய்த்துணர வைத்தாள்; இருவரிடத்தும் குற்றம் இல்லை என்று தெளிந்து சீற்றம் அடங்கினர். ஊரறி நன்மணம் நிகழ வரையுறைத் தெய்வத்திற்குக் குரவை அயர்ந்தனர் தோழியர். இந்தச் சூழலில்;

“நெறிஅறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇத்
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக ………..
சேயுயர் வெற்பனும் வந்தனன்….”

என்கிறார் கபிலர். ‘நூல் நெறி அறிந்து; தான் குறித்துச் சொல்லும் நல்ல நேரம் ஒருபோதும் தப்பாத பெருமையுடைய கணியனை முற்பட அழைத்துக் கொண்டு; இருவரும் மணமுடித்துக் கூடுதற்கு ஏதுவான நல்ல முகூர்த்தத்தை முடிவு செய்ய; தம் இனத்துப் பெரியோராகிய சான்றவரோடு தலைவன் வந்தான்’ என்பது பொருள். இங்கே புலவர் அறிவன் காலத்தைக் கணிப்பவன் என்ற பொருள் விளக்கத்திற்கேற்பப் பாடியுள்ளார்.

பாடலில் அறிவன் ஏதும் பேசவில்லை; எனினும் அவனது பாத்திரம் கூடல்நிமித்தம் எனும் குறிஞ்சி ஒழுக்கமாகிய உரிப்பொருளுக்கு ஏற்ற வழிவகை செய்யும் தனிச் சிறுபாத்திரம் ஆகும். அவனது கணிப்பு தப்பாது என்னும் பெருமை சான்ற புகழ்மொழி நோக்கத்தக்கது.

இன்னொரு அறிவன்:

குறுந்தொகை 277ம் பாட்டு தலைவி கூற்றாக அமைந்துள்ளது; எனினும் முன்னிலையார் யார் என்னும் செய்தி வெளிப்படையாக இல்லை. ஆனால் பாட்டின் பொருளை ஒட்டி முன்னால் நின்று கேட்பவன் அறிவன் என்று சொல்ல வழியேற்படுகிறது. அத்தலைவி;

“மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவது என்றி
அக்கால் வருவர் எம் காதலோரே”

எனத் தன் கணவன் வருவதாகச் சொல்லிச் சென்ற மழைக்கால முடிவின் வாடைக்காலம் எப்போது வரும் எனக் கேட்கிறாள்.

ஓரில் பிச்சையார் என்று தொகுத்தோர் பெயரிட்ட புலவர்; தலைவி தன் முன்னின்றவரை வாழ்த்தும் முறையில் தனிச்சிறப்பு பெறுகிறார். ‘நாய் இல்லாத குற்றமற்ற அகன்ற தெருவில் ஒரு வீட்டிலேயே உன் வயிறு நிரம்பும் படியாக செந்நெல் வெண்சோறும் வெண்ணெயும் கிடைத்து நீ பசியாறுவாயாக; அத்துடன் இம்மழைக்காலக் குளிரினை எதிர்கொள்ளும் பொருட்டு விரும்பத்தக்க வெப்பநீரை உம் சேமச்செப்பு நிறையப் பெற்றுப் பயன் பெறுவீராக’ எனும் வியங்கோள் மூலம் தன் கணவன் வரும் காலத்தைக் கணக்கிட அறிவனின் உதவியை அவள் நாடுகிறாள் என்பது பொருத்தமாகப் படுகிறது. குறுந்தொகையைத் தொகுத்தோர்  தலைவி அறிவனிடம் பேசுவதாகவே கூறியுள்ளனர். இப்பாடலிலும் அறிவன் கூடல் நிமித்தத்திற்கு ஏற்ற வலுவூட்டும் பாத்திரமாகக் காணப்படுகிறான்.

உதவி கேட்ட அவள் அவனுக்குப் பிச்சை இடவில்லை; மாறாக நாயில்லாத தெருவில் பிச்சையேற்று அவன் வயிறு நிறைய வேண்டும் என்று வாழ்த்துவது அக்காலச் சமூகநிலையையும் தெளிவுறுத்துகிறது. அறிவன் அந்தணர் இல்லத்தில் பிச்சையேற்று உண்பவன் என்பதே புலப்படும் குறிப்புப்பொருள்.

பெரும்பாணாற்றுப்படை விவரிக்கும்; சாணம் மெழுகிய, கோழியும் நாயுமற்ற; மறைகாப்பாளர் உறைவிடத்தைக் (அடி.-  298- 301) குறுந்தொகைத் தலைவி குற்றமற்ற தெரு என்று சொல்வதாகக் கொள்வது பொருத்தமே. பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் இதே கருத்தைக்  கூறிச் செல்கிறார். செவ்விலக்கியக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிவேறுபாடு ஓரில் பிச்சையாரின் பாடலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

முடிவுரை:

தொல்காப்பியர் அறிவனைத் துணைப்பாத்திரம் எனும் தகுதிக்கு உரியனாகக் கூறினாலும்; தொகைநூல்களில் அவன் சிறுபாத்திரமாகவே காணப்படுகிறான். அறிவன் காலத்தைக் கணிப்பவன் ஆவான். கூடல்நிமித்தம் எனும் குறிஞ்சி உரிப்பொருளுக்கு வழிவகை செய்யும் தனிப் பாத்திரமாகக் காணப்படுகிறான். அறிவர் அந்தணர்களின் இல்லத்தில் பிச்சையேற்று உண்டனர்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க