‘’கோழி எழும்முன்னர் கூவித் திருப்பாவை,
தோழியர் தம்மை துயிலெழுப்பி, -’’ஆழி
மழைக்கண்ணா’’ பாடுகிறாள் மார்கழியாள், மாலை
கழைத்தோளில் சூடிக் கொடுத்து’’….கிரேசி மோகன்….
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – தமிழை ஆண்டாள்
”பைகொண்ட பாம்பில் படுத்த பெருமாளை
மைகொண்ட கண்ணாள் மலர்சூடி, -மெய்கொண்ட
தைக்கண்ட தாமோ தரன்தாய்விட்(டு) ஓடிட,
தைகண்டாள் மார்கழித் தாய்”….கிரேசி மோகன்….தைகண்டாள் -தை பிறந்தால் திருமண வழி பிறக்கும்….
மார்கழித் தாய் -ஆண்டாள்“அழகாண்டாள் பாட்டு அழகாண்டாள் பக்தி
பழகாண்டாள் போல்நீயும் பண்பு, -கழுகாண்டான்,
கண்முன்னே தோன்றியுனைக் கல்யாணம் செய்திடுவான்
பெண்கள்நாம் புருஷோத் தமர்க்கு” ….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’ஆண்டாள் -6’’….
———————————-‘’புள்ளும் சிலம்பின, புல்லும் தளும்பின,
தெள்ளுதமிழ் ஆண்டாள் திருப்பாவை, -சொல்லிட:
வெள்ளை மனத்தினள், வில்லிப்புத் தூர்வாழ்வு
கொள்ளைத் தமிழமுதே காப்பு’’….கிரேசி மோகன்…. -
உன்னையறிந்தால் ………. (35)
நிர்மலா ராகவன்
குடும்பத்துள் ஏன் போட்டி?
கேள்வி: `நீ அப்பா பிள்ளையா, அம்மா பிள்ளையா?’ என்று யார் கேட்டாலும், என் இரண்டு வயது மகள், `அப்பா பிள்ளை!’ என்று பளிச்சென்று சொல்கிறாள். அப்படியானால், அம்மா முக்கியமில்லையா?
விளக்கம்: அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குழந்தையின் அன்பில் போட்டியா, இப்படி ஒரு கேள்வி எழ! இருவருடைய பராமரிப்பு, அன்பு, அறிவுரை — இவை எல்லாமே குழந்தைகளுக்கு அவசியம்தானே!
சிறு வயதிலேயே குழந்தை புரிந்து கொள்கிறது, அப்பா தூக்கிக் கொண்டிருந்தால், `அப்பா பிள்ளை,’ என்றும், அம்மா வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தால், `அம்மா பிள்ளை,’ என்றும் சொல்ல வேண்டும் என்று. (அப்போதுதானே தன்னையும் வெளியே அழைத்துச் செல்வார்கள்!)
அம்மா வேலையாக இருக்கும்போது விஷமம் செய்தால், திட்டுகிறாள். அதனால், அப்பாவின் பக்கம் சாய்கிறது. தானே இன்னும் இரண்டு வயது போனால், அம்மாவைப்போல் தானும் ஒரு பெண்தான் என்று புரிய, அவளைப்போல் நடக்க முயலும். விடுங்கள். குழந்தைகள் செய்வது, சொல்வது எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் சுயமாகவா சிந்திக்கிறார்கள்!
சிறு வயதில், உடன்பிறந்தாருடன் போட்டி போடுவது பிறவிக்குணம். அது வேறு விஷயம். ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணத்துடன், தம்மையுமறியாது, சிறு வயதிலிருந்தே அக்குணத்தை வளர்க்க முற்படுகிறார்கள் பலரும்.
`தம்பி பாத்தியா, எவ்வளவு சமர்த்தா சாப்பிடறான்! இத்தனைக்கும் ஒன்னைவிடச் சின்னவன்!’ என்று நான்கு வயதான பையனிடம் சொல்லிப் பாருங்கள்.
அவனால் தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது. பதிலுக்கு, தம்பியின் முதுகில் ஒன்று வைக்கிறான், `நீ ஏன் சமத்தா இருக்கே? என்னை மாதிரி இரேன்!’ என்று!
போட்டி மனப்பான்மையால் விளையும் தீமை — பொறாமை. எல்லாக் குழந்தைகளையும் சமமாகப் பாவிக்காது, பாரபட்சத்துடன் நடத்துவதால் வரும் வினை இது.
தான் எப்படியாவது எல்லாரையும்விட, எப்போதும், உயர்த்தியாகவே இருக்க வேண்டும் என்ற வெறியாலும் போட்டி வருகிறது.
இதுவே பழக்கமாகப் போய்விட, பெரியவர்களான பின்பும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பொறாமை கொண்டு, அவர்களை வார்த்தைகளால் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுக்குத் தங்களுடைய வெற்றிகளால் திருப்தி அடைந்துவிட முடிவதில்லை. பிறரைத் தாழ்த்தினால்தான் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி.
ஒரு குடும்பத் தலைவன் இப்படி போட்டி மனப்பான்மையோடு வளர்ந்திருந்தால், தன் மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் போட்டி. சிலர் அவனது குணம் புரிந்து விட்டுக்கொடுக்கலாம். அனேகமாக, குடும்பத்தில் பிளவுதான் வரும்.
எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க உத்தியோகத்தில் இருந்தார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மனைவியை, `முட்டாள்’ என்று பழிப்பார். அவள் பட்டதாரி. முதல் வகுப்பில் தேறியவள். ஆனால், அவரைப்போன்று மூன்று பட்டங்கள் பெற்றிருக்கவில்லை. தான் அவரைவிடத் தாழ்ந்தவள்தான் என்று அவர் எவ்வளவு மட்டம் தட்டியபோதும் பொறுத்துப்போனாள். இம்மாதிரியானவர்களின் தாம்பத்திய உறவு எவ்வளவு லட்சணமாக இருக்கும்!
இன்னொரு குடும்பத்தில் மனைவி ஏதோ சிறப்புப் பெற்றிருக்கிறாள். `இவன் நம்மைவிட மேலானவன் என்று நினைத்துவிடப் போகிறானே!’ என்று கணவனின் நண்பர்கள் அச்சம் கொண்டு, காரியத்தில் இறங்குவர்:
`இனிமேல், நீதான் அவள் பெயரை உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும்!’
`எப்படித்தான் இப்படி ஒரு மனைவியை பொறுத்துப் போகிறாயோ! இப்படியே விட்டால், உன்னை மதிக்க மாட்டாள், பார்!’
`நம் மனைவியைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லையே!’ என்ற பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று அவன் புரிந்துகொண்டால் போயிற்று. இல்லையேல், தாழ்வு மனப்பான்மையுடன் மனைவியை எதிர்த்துக்கொண்டே இருப்பான்.கணவனது பக்கபலம் இல்லாது, அவனுடைய எதிர்ப்பையும், ஏளனத்தையும் தாங்க வேண்டியிருந்தால், ஒரு பெண் ஆக்ககரமாக ஏதாவது செய்யவே துணியாது, யோசிக்கும் நிலை வந்துவிடக்கூடும். பல பெண்கள், `கல்யாணத்துக்குமுன் நிறைய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது நேரமில்லை,’ என்று சொன்னாலும், உண்மைக் காரணம் அதுவாக இருக்காது. உள்ளுக்குள் புழுங்குவாள்.
ஆக, கணவன் தான் மனைவியைவிட உயர்வு, அல்லது தாழ்வு என்று நினைப்பதால் குடும்பத்தில் கண்ணுக்குப் புலனாகாத விரிசல்தான் உண்டாகும்.
பேரும், புகழும் கொண்ட ஒருவனிடம், `உங்கள் மனைவியின் ஊக்குவிப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், அவன் ஆண். அவனுடைய திறமை, உழைப்பு போன்றவை இயல்பானது என்று கருதப்படுகிறது.
என்னை ஒரு வானொலி பேட்டியின்போது, `உங்கள் கணவரின் ஒத்துழைப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று கேட்டபோது, `நான் இதற்குப் பதில் சொல்ல மாட்டேன். எந்த ஆணையாவது நீங்கள் இப்படிக் கேட்டிருக்கிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்டேன்.
`யாருமே ஊக்குவிக்காம நீங்க இந்த அளவுக்கு மேலே வந்தீங்களா?’ என்று இரைந்தார் பேட்டி எடுத்தவர். (ஒரு பெண்ணின் வெற்றியைக் கண்டு அச்சம் அடைகிறவரோ? )
`உங்கள் கேள்வியைச் சற்று மாற்றி,` யார் உங்களை ஊக்குவித்தது?’ என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்,’ என்றேன்.
பிறர் மகிழ்ச்சியடைவார், பாராட்டுவார் என்று ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினால், தொடர்ந்து அதைச் செய்யும் ஆர்வம் குன்றிவிடும். நம் திருப்திக்காக, மனநிறைவுக்காகச் செய்யும்போதுதான் முழுப்பலன் கிடைக்கிறது.
`என் மனைவி வாழ்வில் உயர்ந்தால், அது எனக்கும் பெருமைதானே! இதில் என்ன போட்டி!’ என்று ஒருவர் எண்ணி நடந்தால், அக்குடும்பத்தில் பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலவும். அவர்களது குழந்தைகள் பெற்றோரைவிட இன்னும் மேலான நிலைக்குப் போவார்கள். இவர்களுக்கு, `அம்மாவா, அப்பாவா?’ என்ற பாகுபாடு, அதனால் விளையும் குழப்பங்கள் இராது.
மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கே உரிய பயன்பாடு உண்டு.
கண் முக்கியமா, கால் முக்கியமா?
எது உயர்வு, எது மட்டம்?இதேபோல், தாய், தந்தை, மகன், மகள் எல்லாரும் குடும்பத்தின் வெவ்வேறு அங்கங்கள். அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஒவ்வொருவரின் தனித்தன்மையும், பலமும் மற்றவருடையதுடன் இணைந்து, மேலும் வலுப்படும்.
சில குடும்பங்களில் எல்லா உறுப்பினர்களுமே பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவதன் ரகசியம்: போட்டியின்மை, ஒத்துழைப்பு.
தொடருவோம்
-
இந்த வார வல்லமையாளர்!
டிசம்பர் 21, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு ஆக்சாத் பிரகாஷ் அவர்கள்
வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், விபத்தில் உயிர் காக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தவரும், மேல்நிலைப்பள்ளி மாணவருமான திரு. ஆக்சாத் பிரகாஷ் அவர்கள். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க ஆக்சாத் பிரகாஷ் உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர். டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயதாகும் இந்த இளைஞர், கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளும் முதலுதவி சிகிச்சை தரும் ‘தொழில்நுட்ப அணிகலன்’ (wearable technology device) ஒன்றினை வடிவமைத்து, தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி – 2015 (Taiwan International Science Fair, 2015) இல் அறிமுகப்படுத்தினார். இக்கருவி செயல்படும்விதத்தைப் பற்றி அறிவியல் கண்காட்சியில் செயல்முறை விளக்கமும் அளித்துள்ளார். ஆக்சாத் பிரகாஷ், ‘ஹெலிக்ஸ்சேஃப்’ (HelixSafe – #HelixSafe on twitter.com) என்று பெயரிட்டுள்ள தனது மருத்துவ கருவிக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார். காப்புரிமை பெற 2013 இல் இவர் விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வமான காப்புரிமை தகவல் இதழில் (Official Patent Journal, 2015) இச்செய்தி வெளியாகியுள்ளது.
விபத்துகள் நிகழும் பொழுது, உயிருக்கு ஊசலாடுபவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் துரித கதியில் இயங்கத் தேவை. வீணாக்கும் ஒவ்வொரு பொன்னான வினாடியும் வாழ்வா, சாவா என்ற முறையில் ஒருவரது வாழ்க்கையையே நிர்ணயிக்கும். நகரப்பகுதியில் விபத்து நிகழ்ந்தாலே அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பெருமளவு காலம் விரயமாவதைத் தடுக்க வழி இருப்பதில்லை. ஆளரவமற்ற அத்துவானக்காட்டின் சாலையொன்றில் வாகன விபத்து நிகழ்ந்தால், அதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் விபத்திற்குள்ளானவர் உடனடி மருத்துவ உதவியின்றி அவரது வாழ்வே முடிந்துவிடலாம்.
இது போன்ற வாகன விபத்து நிகழ்வுகளில் கைகொடுத்து உதவக் கூடியது, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரம் போன்ற ஹெலிக்ஸ்சேஃப்-தொழில்நுட்ப அணிகலன். இக்கருவியின் சென்சார் என்ற உணரும் பகுதி விபத்து நிகழ்ந்த நேரத்தில், இக்கருவி அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும். அது இயல்புக்கு மாறாக இருந்தால், தானே தேவையான முதலுதவிக்கான மருந்தினை கருவியில் இருக்கும் சிறிய ஊசி உடலுக்குள் செலுத்துவதுடன், அருகாமையில் உள்ள மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு உடனடித் தகவலும் அனுப்பும்.
இந்த மருத்துவக் கருவியின் மாதிரி வடிவம் ‘அர்டுயினோ டெவெலப்மென்ட் என்விரான்மெண்ட்’, மற்றும் ‘எம்பெடெட் சி’, ‘விஷுவல் பேசிக்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது (The prototype has been created with Arduino Development Environment, Heart Rate Sensor and accessories and programmed in Embedded C and Visual Basic). இந்த ‘ஹெலிக்ஸ்சேஃப்’ மருத்துவக் கருவி கண்டுபிடிப்பிற்காக, “சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய இந்தியாவின் முதன்மை திறமைசாலிக் குழந்தை” (‘India’s First Whiz Kid’ award for Best Innovation, 2013), என்ற விருதினையும் ஆக்சாத் பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த விருதினை 2013 ஆண்டு ‘நர்ச்சர் டேலண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Nurture Talent & Computer Society of India) இவருக்கு வழங்கிப் பாராட்டியது. இந்த மருத்துவக் கருவி செயல்படும் முறையைப் பற்றி , ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. மும்பை ஆகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் ஆக்சாத் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.
‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தற்பொழுது பெரும்பாலும் ஆரோக்கிய வாழ்வினை முன்னிறுத்தும் நோக்கில் உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் அளவுகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நிலநடுக்கத்தின் பொழுது, தொழில்நுட்ப அணிகலன் அணிந்திருந்தவர்கள் உறக்கம் தடைப்பட்டு விழிக்க நேர்ந்ததையும், மீண்டும் உறங்கச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்பது போன்ற தகவல்களை, தானே சேகரித்து தரவுகளை அனுப்பியது.
இந்தத் தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயம் பற்றி இத்துறை வல்லுநர்கள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு, வலிப்பு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப விரைந்து செயலாற்றி சிகிச்சையைத் துவக்க விரும்பி மருத்துவத் துறையும் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 2 பில்லியனில் இருந்து 40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இத்துறை வளரும் என்றும், சிறு கணினிசார் நிறுவனங்கள் இதன் வளர்ச்சியில் அதிகம் பங்கு பெற்றுப் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு, உடற்பருமன், இதயநோய் எனப் பல்வேறு வகையிலும் உடல்நலம் கண்காணிக்க ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ உதவக்கூடும் எனவும் தெரிகிறது.
முன்னேறும் இத்துறையில் ஒரு பதின்ம வயது பள்ளி மாணவன் இந்தியாவில் முன்மாதிரியாக இருப்பது இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது. கணினி அறிவியலில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அத்துறையில் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் செல்வன் ஆக்சாத் பிரகாஷ்; தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த சமுதாயம் உருவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நல்ல பல கருவிகளைத் தயாரிக்க விரும்புவதாகவும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (PTI-Press Trust of India)விற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செல்வன் ஆக்சாத் பிரகாஷின் விருப்பங்கள் நிறைவேறி, மக்களுக்குப் பயன்தரும் கருவிகள் பல வடிவமைக்க வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
மேலும் தொடர்புள்ள தகவலுக்கு:
விபத்தில் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்
http://tamil.thehindu.com/india/விபத்தில்-உயிர்-காக்கும்-கருவியை-கண்டுபிடித்த-பள்ளி-மாணவர்/article8004063.ece
Published: December 18, 2015Beyond Fitbit: The quest to develop medical-grade wearables
http://www.reuters.com/article/us-usa-health-wearables-insight-idUSKBN0U10G120151218
Published: December 18, 2015Wearable Technology is Here: Interoperability will be an issue for this technology, just as it is today for communications and data.
http://www.emergencymgmt.com/emergency-blogs/disaster-zone/wearable-technology-is-here.html
Published: December 18, 2015How The Napa Earthquake Affected Bay Area Sleepers
https://jawbone.com/blog/napa-earthquake-effect-on-sleep/
Published: Aug 25, 2014 -
பிறகும் தொடரும் தீவின் மழை
எம்.ரிஷான் ஷெரீப்
மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும் நம் பாதச்சுவடுகள் இன்னும்
எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது
தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு
உன் சேமிப்பில் வந்தது
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்
புனித ஸ்தல மரமொன்றில்
கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்
வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை
பொய்ப்பித்தே வந்தன
சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும்
நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள்
நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா
ஆனாலும் அப் பிரதேசத்துக்கும்
அவை தினந்தோறும் வந்தன
மழைத் திரை ஒரு நீர்க்கோடாய்
அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது
‘விதியில் எழுதப்பட்டவர்கள்,
சமுத்திரத்தில் வழி தவறி
திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்
முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’
என்றவர்கள் கூறியதை
நீ குறித்து வைத்துக் கொண்டாய்
தொலைதூரம் பறந்து சென்ற
வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை
ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்
அதன் நிறத்தை, வாசனையை
அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி
மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும்
‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்
சிறிதும் கருணையேயற்று
ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி
பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்
அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு
கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்
ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும்
நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்
ஈரத் துளி விழும் சப்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக
-
தொல்காப்பியத்தின் காலம்
–முனைவர் மா.சியாமளாதேவி.

தொல்காப்பியம் தமிழில் இன்று கிடைக்கப்பெறும் நூல்களுள் மிகவும் பழமையானது. அதில் காணப்பெறும் சில வழக்காறுகள், இலக்கணக்கூறுகள், வாழ்க்கை மரபுகள் சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டன என்பது, இன்று பலரும் ஒப்ப அறிந்த முடிபாகும். இதனால் அது ‘தமிழின் முதனூல்’ என்று போற்றப்படுகின்றது. மூவாயிரம் ஆண்டு பழமையுடையதாயினும், இன்றும் அதன் ஆளுமைத் தமிழ் மொழியில் பெரும்பகுதி நிலைத்து நிற்கிறது.நூலின் காலம்:
எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல, இந்நூல் தோன்றுவதற்கு முன்பே இலக்கியங்கள் பல இருந்திருத்தல் வேண்டும். அவை காலப்போக்கில் இறந்துபட்டிருக்கலாம். இத்தகைய நூல்களில் பெயர்களையும், பகுதிகளையும் பிற்கால உரையாசிரியர்கள் மேற்கோளாகக் குறிப்பிடுவது, மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தும் சான்றாக உள்ளது. தொல்காப்பியர் தமக்கு முன் விளங்கிய ஆசிரியர்களின் நெறியையே தாம் எடுத்துரைப்பதாகக் கூறுகிறார். தொல்காப்பியர் தம் நூலில், சற்றொப்ப 260 இடங்களில் தமக்கு முன்பு இருந்த அல்லது தம் காலத்தில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் பலரைப் பலவாறு குறிப்பிட்டுள்ளார். நூலின் இடையே,
‘என்ப’- ‘என்மனார்’- ‘மொழிப’-
‘யாப்பென மொழிப யாப்பறி புலவர்’-
‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’என ஆங்காங்கு கூறிச்செல்வதாலும், ‘ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்றும் தமக்கு முற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுவதாலும், அவருக்கு முன்பே பற்பல இலக்கண நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனத் துணிந்துரைக்க முடிகிறது.
“தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற தொடர் வடமொழியின் இலக்கணத்தில் வல்லுநரான பாணினியைக் குறிப்பிடாமல் அதற்கும் முந்தைய இந்திர வியாகரணத்தைப் பற்றிக் குறிப்பதால் பாணினிக்கும் (கி.மு.4ஆம் நூற்.) முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது புலப்படுகின்றது”1
“மறைமலையடிகள், வெள்ளைவாரணார் போன்றோர் இறையனார் களவியல் உரைவழி நின்றும் அகச்சான்று, புறச்சான்று வழி நின்றும் தொக்காப்பியர் காலம் கி.மு.5000 ஆண்டுகட்கு முற்பட்டது என்றும் கூறுகின்றார்”2
தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆண்டிலே முற்பட்டதென்று கூறுவோர் பலர். பிற்பட்டதென்று கூறுவோர் சிலர்.
1. “வேதவியாசர் காலத்திற்கு முன்னே தொல்காப்பியம் செய்யப்பட்டது. இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் எழுதப்படுவதற்கு முன்னே தொல்காப்பியம் எழுதப்பட்டது.”
2. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. இந்த முத்தமிழ்ச்சங்க வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் சற்றொப்ப 1300 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது தொல்காப்பியம் என்று முடிவு கட்டலாம்.
3. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுவோர் உள்ளனர். தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டிருகின்றது. ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொன்றியது என்போர் காட்டும் காரணமாகும்.
4. மக்கள் இரும்பு, பொன் முதலிய உலோக வகைகளைக் கண்டுபிடித்தகாலம் கி.மு.5000 க்குப்பின் என்பர். தொல்காப்பியத்திலே உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதலால் அதன் காலம் கி.மு. 5000த்திற்கும் பிற்பட்டதுதான் என்பதில் ஐயம் இல்லை என்பர்.
5. தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முன்னென்று மொழிவோரும் உள்ளனர். பாணினி இலக்கணத்திற்கு முன்னேயிருந்த ஐந்திர இலக்கணத்தைப் படித்தவர் தொல்காப்பியர். ஆகவே, தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முன்னே வாழ்ந்தவர். பாணினியின் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு, தொல்காப்பியர் கி.பி.4ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தவர். இந்தக் கணக்கு உண்மையானால் தொல்காப்பியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாகும்.
6. தொல்காப்பியம் கி.பி.2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்; இதற்கு ஆதரவு உண்டு என்போரும் உள்ளனர். இவ்வாறு கூறுவோர் சிறுபான்மையினர்.
7. எந்த வகையில் பார்த்தாலும் தொல்காப்பியம் கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலேயன்றி பிற்பட்ட நூலில்லை என்போரும் பலர். இது தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதோர் முடிவு என்பர் சாமி. சிதம்பரனார்.”3 மேலும்,
“சுந்தரமூர்த்தி தொல்காப்பியக் காலத்தைப் பற்றி, சங்க இலக்கிய மொழி நிலையையும் தொல்காப்பிய மொழி நிலையையும் வைத்துப் பார்க்கின் இது சங்க இலக்கியங்களுக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்று கி.மு.மூன்றாவது நூற்றாண்டுப் பகுதியை ஒட்டிய காலப் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்றும் எண்ணுவர். சங்க இலக்கியங்கள் கி.மு. இரண்டாவது நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் பல நிலைகளில் தோன்றியுள்ளன அவர் எண்ணம்” என்று கூறுகிறார்.
சான்றெண்:
1.சண்முக.செல்வகணபதி. மொழி வரலாறும் மொழி இயலும்.,ப.1
2.சி.பாலசுப்பிரமணியன்., தமிழ் இலக்கிய வரலாறு.,ப.18
3.சாமி.சிதம்பரனார். தொல்காப்பியத்தமிழர்., பக்.6-10
4. Sundaramurthi, Early Literary Theories inTamil., pg.3-7துணை நூற்பட்டியல்:
1.செல்வகணபதி.சண்முக.,
மொழிவரலாறும் மொழி இயலும்.,
பழனி; சிட்டிப்பதிப்பகம்
மு.பதி.20022.சிதம்பரனார்.சாமி.,
தொல்காப்பியத் தமிழர்.,
சென்னை; நியூசெஞ்சூரி புக் ஹவுஸ்.,
மு.பதி.20023.பாலசுப்பிரமணியன்.சி.
தமிழ் இலக்கிய வரலாறு.,
சென்னை; மனமலர்ப் பதிப்பகம்.,
மு.பதி.2003.4.Sundaramurthy.G.,
Early Literary theories in Tamil.,
Chennai; sarvoday ilakkiya pannai.,
F.E.1947முனைவர் மா.சியாமளாதேவி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி,
மன்னன்பந்தல், மயிலாடுதுறை -
படக்கவிதைப் போட்டி – 44
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-
மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 1
— முனைவர் துரை. குணசேகரன்.
கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
முடியாத முதலோனை மூவர் பெருமானை
வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…என்னும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரிகளாலே முருகப்பெருமானைப்போற்றி, மகாவித்துவானின் இலக்கியப்பணிகள் குறித்த என்னுடைய பேருரையைத் தொடங்குகின்றேன்.
கம்பனைப்போல்
வள்ளுவர்போல்
இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லைஎனும் பாரதத்தில் ‘பா’ரத்தால் பவனிவந்த சாரதியாம் பாரதியின் பாடலில் சேர்க்கப்படவேண்டிய இன்னொருவர் உண்டென்றால் அவர்தாம் சிற்றிலக்கியக்களஞ்சியக் கருவூலமாம் 199 ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணில்தோன்றி, மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மாமனிதர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.
காலத்தொடு கற்பனை கடந்த
கருவூலத்துப் பழம்பாடல்
கலைமாச் செல்வர்என்னும் குமரகுருபரர் சொற்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர்.
செந்தமிழ் வளர்ந்த தென்பாண்டி நாட்டில் மானிடர்போற்றும் மதுரைமா நகரில் இல்லறத்தை நல்லறமாய் நடத்துகின்றார் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி இணையர். வாழ்வின் வளம்வேண்டி திரிசிரபுரம் எனும் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரித்தென்கரையில் உள்ள எண்ணெயூருக்கும் அதனை அடுத்து அதவத்தூருக்கும் வந்து குடியமர்கின்றனர். இணையர் நடத்திய இல்லறப்பயனாய், செய்த பெருந்தவத்தால் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம்நாள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தார்.
கல்வியும் இல்வாழ்வும்:-
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’என்று பாடிய புறநானூற்றுப்புலவர் ‘சான்றோனாக்குதலை தந்தையின் கடனென்றார். அவரின் கூற்றை மெய்ப்பிக்கும்வகையில் சிதம்பரம்பிள்ளை, மகனை மற்றவர் போற்றும் மாண்புகள் மிகுந்தவனாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.ஆம், சிறுவயதிலேயே தந்தை கற்பிக்கும் பள்ளியில் பிள்ளைக்கும் பாடஞ்சொல்லித்தரப்படுகிறது. ஐந்து வயதில் தொடங்கிய கல்வியால் ஆத்திசூடி, நீதிநூல்கள் தொடங்கி, காலஞ்செல்லச்செல்ல அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், நிகண்டு, பிரபந்தம், சதகம், மாலை, நைடதம், நன்னூல் உள்ளிட்ட இன்றியமையா சிற்றிலக்கியவகைகள் மற்றும் இலக்கணங்களையும் பிழையறக்கற்றுக்கொண்டார். பள்ளியில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் உள்ள சட்டாம்பிள்ளையாக உயர்ந்தார்.
பன்னிரண்டு வயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றலைப்பெற்றார். படிக்கும் நூல்களை ஏட்டில் எழுதும் பயிற்சியையும் பெறுகிறார். சூழலைக்கொடுத்து செய்யுள் செய்யும் பழக்கத்தையும் காலஞ்செல்லச்செல்ல திரிபு, யமகம், சிலேடை அமைத்து பாவியற்றும் கலையையும் கற்றுக்கொள்கிறார். விரைந்து, குறுகிய காலத்திலேயே பிந்தைய நிலையில் கற்க வேண்டியதனைத்தும் கற்றுக்கொள்வதுடன், தந்தைசென்று பாடஞ்சொல்லும் இடத்துக்கும் உடன் சென்றுவரலானார். தந்தை செல்லமுடியாத காலத்தில் மீனாட்சிசுந்தம் அவர்களே சென்று பாடம்நடத்தி வருகிறார். பிள்ளையின் திறமறிந்தோர் தந்தைக்கு அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும் அளிக்கின்றனர்.
வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழிஉடைந்தாற்போல மீனாட்சிசுந்தரம் பிள்ளை நன்கு வளர்ந்துவரும் சூழலில், பதினைந்து வயதில் தந்தை சிதம்பரம்பிள்ளை மறைவெய்துகிறார். அதுவரை, தாம்பிறந்த அதவத்தூரில் வாழ்ந்துவந்த பிள்ளையவர்கள், திரிசிரபுரம் மலைக்கோட்டையில் உள்ள தெற்கு உள்தெருவில் வாடகை வீடொன்றில்வந்து குடியேறுகிறார். காவேரிஆச்சி என்னும் மங்கை நல்லாளை நண்பர்களும் உறவினர்களும் மணமுடித்து வைக்கின்றனர்.
தந்தை மறைந்தாலும் கல்வி கற்பதை மறக்கவில்லை. உறையூர் முத்துவீரராகவே முதலியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார், வீரநாயக்கன்பாளையம் இருளாண்டிவாத்தியார் பாலக்கரை வீரராகவசெட்டியார், கோட்டடி ஆறுமுகம்பிள்ளை, கல்குடி மருதமுத்தப்பிள்ளை, வேலாயுதமுனிவர், கீழ்வேளுர் சுப்பையாபண்டாரம், திருநயம் அப்பாவையர், வேலாயுதமுதலியார், கீழ்வேளுர் சுப்பிரமணியதேசிகர், திரிசிரபுரம் கோவிந்தம்பிள்ளை போன்ற தலைசிறந்த கல்விமான்களிடம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களை ஐயமறக்கற்றுக்கொண்டார்.
ஐந்தாம் இலக்கணமாம் அணியிலக்கணத்தைக்கற்பிக்க, உரிய ஆசிரியர் கிடைக்காமையால் தண்டியலங்கார ஆசிரியரை எதிர்பார்த்துக்காத்திருந்தார். அவ்வயம் வீடுவீடாக சென்று பிச்சையேற்று வாழ்க்கைநடத்திவரும் பரதேசி ஒருவர், அணியிலக்கணம் அறிந்தவர் என்பதை அறிகிறார். ஆனால், அப்பரதேசி எவரையும் மதிக்கும் இயல்பு அற்றவர் என்பதும் தெரியவருகிறது.
தானே தரக்கொளி னல்லது தன்பால்
மேவிக் கொளக்கொடா விடத்து மடற்பனைஎன்பதனையொத்து, தம்மை நாடிவருவோருக்கு சிலதமிழ் நூற்கருத்துகளை உரைப்பார் என்பதனை அறிந்து, அவரிடம் சென்று எவ்வாறேனும் அணியிலக்கணம் கற்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார். பரதேசி பிச்கை ஏற்கும் காலமறிந்து கூடவேசென்று அவருக்குப்பிடிக்கும் பொருள் கீழ்த்தரமான ஒன்று என்று அறிந்தும், அவர்விரும்பும் போதைப்பொருளில் ஒன்றை வாங்கிச் சென்று காலமறிந்து கொடுக்கிறார். அணியிலக்கணம் மட்டுமன்றி வேறுசில நூல்களைப்பெற்றும் பிள்ளையவர்கள் தன்னை மேம்படுத்திக்கொண்டதாக உ.வே.சா. குறிப்பிடுகின்றார்.
‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்றே’என்னும் புறப்பாடலின் பொருளை அறிந்தவர் அன்றோ. இவ்வகையில் ஐந்திலக்கணத்தில் பிள்ளையவர்கள் தேர்ச்சி பெற்றவராகிறார். மேலும்,
நினைத்த மாத்திரத்தில் நினைத்த அளவு கவிதைபாடும் ஆசுகவி,
இனிமையாக இசையுடன் கவிபாடும் மதுரகவி,
சித்திரவடிவில் பாவியற்றும் சித்திரக்கவி,
சுருங்கிய பொருளை விரித்துப்பாடும் வித்தாரக்கவி
எனும் நால்வகையிலும் செய்யுளியற்றிப்பாடும் ஆற்றலை உரிய அறிஞர்களின்வழி கற்றுக்கொள்கிறார்.செய்யுள் இயற்றும் பயிற்சி:-
பாடங்களை உரிய ஆசிரியர்களை நாடிக்கேட்டு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிள்ளையவர்கள், நல்லவாய்ப்புகள் வழி அவற்றைச்செயல்படுத்தும் பயிற்சியைப் பெறுகிறார். தந்தையார் காலத்தில் பாடஞ்சொல்லி முடித்தபின் பிள்ளையுடன் உடன் பயின்ற மாணவர்களையும் கடைக்கு அனுப்பி, வீட்டிற்குத்தேவையான பொருள்களை வாங்கிவரச்சொல்வது பழக்கம். அப்போது பிள்ளையவர்களும் மாணவர்களும் ஒருசெய்யுளை ஒருவர் சொல்ல, அதன் இறுதிச்சொல்லை முதலாகக்கொண்டு அந்தாதி முறையில் வேறொருவர் வேறாருசெய்யுளைக் கூறுவர். இவ்வகையில் அவரவர் அறிந்த செய்யுளை அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.சங்கச்சாவடியைக்கடந்து பிள்ளைகள் செல்லும் பொழுது அங்குப்பணிபுரியும் அரங்கபிள்ளை என்பவர், சிதம்பரம் பிள்ளையின் மாணவர்கள் என்பதை அறிந்து அப்போது நடைபெற்றுவரும் பாடங்கள் குறித்தும் மனப்பாடம் செய்துள்ள பாடல்கள் குறித்தும் வினவுவார். செய்யுள் இயற்றும் வழியை அறிந்திருக்கிறீர்களா? என்ற வினவலுடன் ஒருமுறை விநாயகர் குறித்து ஒரு வெண்பாவைச்செய்யுங்கள் என்றாராம். அவ்வமயம் அனைவரும் அதுகுறித்து சிந்தனை செய்து கொண்டிருக்கையில் பிள்ளையவர்கள்,
“பாரதத்தை மேருப்பருப் பதத்திலே எழுதி
மாரதத்தைத் தந்தையிவர் வண்ணஞ்செய் சீருடையோய்
நற்றழிழை யாங்கணயந்து கற்றுத் தேறமனத்
துற்றருளை எங்கட் குதவு”எனும் வெண்பாவை விரைந்து எழுதித்தருகிறார். இதே போன்ற வழக்கத்தை ஒவ்வொருமுறையும் செய்யவைத்து, வெண்பாவிற்கு ஒரு பணமாகிய இரண்டு அணா கொடுத்து அனுப்புவாராம். இப்பயிற்சி பிள்ளையவர்கள் எதிர்காலத்தில் கடல்திறந்த மடையாக, பாக்களைக்கொட்டுவதற்குக்களனாக – பயிற்சிக்களமாக அமைந்தது.
இதேபோன்று திரிசிரபுரம் மலையாண்டிப்பிள்ளை என்பவர் பிள்ளையவர்களின் ஆற்றலை அறிந்து, தம் ஊரிலுள்ள மிராசுதார் ஒருவரின் இல்லம் அழைத்துச்சென்று சிறப்பாக அறிமுகம் செய்தார். அருகில் இருந்த ஒருவர் ஒருபாடலைக்கூறி ‘இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று கேட்க, உடனே பொருளுரைக்கிறார். இதனையே ஈற்றடியாகக்கொண்டு ஒருவெண்பாப்பாடு என்று சொல்ல, ‘சொல்’ என்பதற்கு ‘நெல்’ என்னும் பொருள் கொண்டு எழுத, அது பொருந்தாமையால் ‘தூய’ என்பதனை முன்னே வைத்து, உடனே பாடிமுடிக்கிறார். கேட்ட மிராசுதாரர் ஒருவண்டிநெல் கொடுத்தனுப்புகிறார். இது பிள்ளைக்கு மட்டுமன்றி, ‘தன் மகனைச்சான்றோன் எனக்கேட்கும் தந்தைக்கும்’ நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தன.
தந்தையார் சோமரசம்பேட்டை எனும் ஊரில் மறைந்தார். மறைந்த ஆண்டு ‘விரோதி’ என்பதாகும். வேதனையின் விளிம்பிற்கே சென்ற பிள்ளையவர்கள்,
“முந்தை அறிஞர் மொழிநூல் பலநவிற்றும்
தந்தை எனைப்பிரியத் தான்செய்த – நிந்தைமிகும்
ஆண்டே விரோதியெனும் அப்பெயர்நிற்கே தகுமால்
ஈண்டேது செய்யாய் இனி”என்று வெண்பாப்பாடுகிறார். இப்பயிற்சிகள் பிற்காலத்தில் படைப்புலக அரிமாவாகத் தமிழகத்தில் பிள்ளையவர்கள் வலம்வர பேருதவியாய் இருந்தது.
சென்னைப்பயணம்:-
“நவில்தொறும் நூனயம் போன்று பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”எனும் மொழிக்கேற்ப எண்ணற்ற நூல்களைப்பயின்று தமது அறிவெல்லையை விரிவுபடுத்திக்கொண்டார். தாம் வாழும் இடத்தைச்சுற்றியுள்ள தமிழறிஞர்களிடம் மட்டும் கற்றகல்வி போதாது என்று எண்ணினார். சென்னையில் கல்விச்சங்கம் ஒன்று நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமிழ் வித்துவான்களை வரவழைத்து மாணாக்கர்களுக்குப்பாடம் புகட்டுதல், பழைய தமிழ்நூல்களைப்புதிப்பித்தல், செய்யுள் வடிவிலான நூல்களை எழுதுவித்தல், கல்விநிலையங்களுக்கு ஏற்றவகையில் உரைநடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றச்செய்தல், வடமொழி உள்ளிட்ட பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் முதலான பணிகளைச்செய்து வருவதை அறிந்துகொள்கிறார். சென்னை செல்லுவதற்கும் அங்கே தங்கித் தமிழறிஞர்களைச் சந்தித்து வருவதற்கும் பொருட்செலவு குறித்து சிந்தித்து வருகிறார்.
இலக்குமணப்பிள்ளை மகாவித்துவானை ஆதரித்து வருபவர்களில் ஒருவராவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவரின் வழக்கை நடத்துவதற்குரிய சரியான நபர் யார்’ என்பதை சிந்தித்து, மகாவித்துவானின் நினைவு வரவே, அவரை அனுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறார். காலம் கனிந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது இதுதான் போலும் இதனை,
நித்தியத் தரித்திரராய் உழைத்துழைத்துத்
தினைத் துணையும் பயனின்றிப் பசித்தமக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கணத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்என்று புரட்சிக்கவியில் பாவேந்தர் பாடுவாரே அந்த இன்பத்தினை மகாவித்துவான் அடைந்திருப்பார்.
சென்னையை அடைந்த பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஸ்ரீதாண்டவராயத்தம்பிரான், காஞ்சிபுரம் சபாபதிமுதலியார், எழும்பூர் திருவேங்கடாசலமுதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை, சென்னையில் விநாயகப்புராணத்தை கச்சியப்ப முனிவர் அரங்கேற்றம்செய்தபொழுது அதற்குசிறப்புப்பாயிரம் அளித்த போரூர் வாத்தியார், அட்டாவதானம் வீராசாமி செட்டியார், புரசைஅட்டாவதானம் சபாபதி முதலியார் போன்றவர்களிடம் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிபுராணம், சைவப்பிரபந்தங்கள், திருவாரூர்த்தலபுராணம் உள்ளிட்ட நூல்களில் ஏற்பட்ட ஐயங்களைத்தீர்த்துக்கொண்டார்.
கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார், திருக்குறள் பரிமேலழகர் உரை, கம்பராமாயணம், பாகவதம், திவ்வியப்பிரபந்தம் போன்ற நூல்கள் தொடர்பான பாடங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டார். ஒவ்வொரு நாளையும் மூன்றாகப்படுத்திக்கொண்டு முற்பாகத்தில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தும், பிற்பகலில் எழும்பூர்த்திருவேங்கடாசல முதலியாரிடத்தும் கதிரவன் மறைவிற்குப் பின் மயிலை திருவண்ணாமலைமடத்துதிருவம்பலத்தின்னமுதம்பிள்ளையிடத்தும் சென்று அவர்களுக்கு ஆகவேண்டிய எழுதுதல், ஒப்புநோக்குதல் முதலான பணிகளைச் செய்துவிட்டு, தக்கநேரத்தில் பாடங்கேட்டுவருதலை வழக்கமாகிக்கொண்டிருந்தாராம். இவர்களில் எவருக்கேனும் பாடஞ்சொல்ல நேரமில்லையாயின் அதனை முன்பே தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் பிறஅறிஞர்களிடம் பாடம் கேட்கச்சென்று விடுவாராம்.
பிள்ளையவர்கள் மேற்படிக்காலத்தை எவ்வாறு பொன்னான காலமாக எண்ணிச்செயல்பட்டுள்ளார் என்பதை உ.வே.சா. போன்ற மாணவர்களுக்குச் சொல்லுவாராம். திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் பொழுது அருள்மிகு கபாலீசுவரர்கோவில் வாயில் வழியாகத்தான் போவார்களாம். உள்ளே சென்று வழிபட விருப்பம் இருந்தும் நேரம்போய்விடுமே என்னும் கவலையால் வெளியில்நின்றே வழிபட்டுச் செல்வதாக உ.வே.சா பிள்ளையவர்கள் குறித்த வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.
அறிஞர் பாராட்டு:-
‘அடக்கம் அமரருள் உயக்கும்’ என்பது வள்ளுவரின் வாக்கு அல்லவா? இது பிள்ளையவர்களுக்கு மிகவும் பொருந்தும். சென்னையில் இருந்தநேரம் சபாபதி முதலியார் அவர்கள் பிள்ளையவர்களை மகாலிங்கையர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இருவரும் தமிழ்மலைகள். நீங்கள் எந்த நூலை வாசித்திருக்கின்றீர்? அவற்றில் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச்சொல்லுங்கள் என்றாராம். உடனே,இரசத வரையமர் பவள விலங்கல்
இடம்படர் பைங்கொடியே
இமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத்
திமயம் வரும்பிடியே….என்று தொடங்கி,
மதுரித நவரசம் ஒழுகக் கனியும்
வளத்த நறுங்கனியே
தரணி மிசைப்பொலி தருமக்குயிலே
தாலே தாலேலோ
தழையும் தந்தி வனத்தமர் மயிலே
தாலே தாலேலோஎன்று நிறைவு செய்கிறார். பொருளையும் தக்கவாறு எடுத்துரைக்கிறார். கேட்ட மகாலிங்கயைர், ‘இப்பாடல் ஒரு பிள்ளைத்தமிழில் உள்ளது போலிருக்கிறது. சொற்களும் பொருளும் நயம்பட உள்ளன. இது திரிசிரபுரம் முதலிட இடங்களில் மட்டும்தான் வழங்குகிறது போலும். இதன்பெயரையாவது ஒருவரும் நம்மிடம் சொல்லவில்லையே’ என்று ஏக்கத்துடன், ‘இச்செய்யுள் எந்தநூலில் உள்ளது? இயற்றியவர் யார்?’ என்று வினவுகிறார்.
மிகவும் அடக்கத்தோடு, ‘இது அடியேன் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழில் உள்ளது’ என்கிறார். ‘இவ்வளவு அருமையான நூலைப்படைத்தவர் அடங்கியிருப்பது வியப்பாக உள்ளது. இதைப்படைக்க எவ்வளவு நூல்பயிற்சியைப்பெற்றிருக்க வேண்டும் என்று பலவாறாகப்பராட்டி பலமுறை அச்செய்யுளைக்கூறச்சொல்லிக்கேட்டுமகிழ்ந்தாராம். இந்நூல் இதுவரை அச்சேறவில்லையென்றால் உடனே அம்முயற்சியில் இறங்குங்கள் என்று கூறியதுடன், ‘இந்த நகரில் எவ்வளவுநாள்; தங்கினாலும் என்னுடன்தான் தங்கவேண்டும். யோசிக்க வேண்டாம். ஆகவேண்டிய காரியம் எதுவாக இருப்பினும் முடித்துத்தர ஏற்பாடு செய்கிறேன்’ என்று அன்பொழுக வேண்டிக்கொண்டாராம். கற்றோருக்குச்சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்களே அது இதுதான் போலும்.
பிறகு மகாலிங்கையருடன் பழகும் வாய்ப்பினை மிகுதிப்படுத்திக்கொண்டார். நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை தண்டியலங்காரவுரை நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலான நூல்களில் தமக்கிருந்த ஐயங்களைப்போக்கிக் கொண்டார். அதுவரை அவருக்குக்கிடைக்காமலிருந்த இலக்கணக்கொத்துரையையும் பெற்றுக்கொண்டார். அதனைக் கொடுக்கும்பொழுது, ‘இந்நூல் கிடைக்காமல் பலவிடங்களில் அலைந்தேன். திருவாவடுதுறை மடத்திலும் இல்லை. பின் தாண்டவராயத்தம் பிரானிடத்தே பெற்றேன். இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று கொடுத்தாராம். அதனை உடனே படியெடுத்துக்கொண்டதாகக்குறிப்பு உள்ளது. மகாலிங்கையரின் வேண்டுகோளான அகிலாண்டநாயகிபிள்ளைத்தமிழ், திரிசிரபுரம் இலக்குமணப்பிள்ளையின் பொருளுதவியால் அச்சிடப்பெற்றது. இதுகுறித்து என் உரையில் பின்னால் சொல்லவிருக்கிறேன். இதேபோன்று பிள்ளையவர்களின் அச்சான படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. உரையின் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.
இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
உணர விரித்துரை யாதார்என்னும் குறள்நெறிக்கேற்ப, கற்ற கல்வியின் சிறப்பே எடுத்துரைக்கும் ஆற்றலில்தான் உள்ளது. அவ்வகையில் தந்தைஅளித்த பயிற்சியாலும் தாம் செய்த முயற்சியினாலும் பிள்ளையவர்கள் கல்விச்செல்வம் நிரம்பிய நிறைகுடமாய், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்சான்றோராய் விளங்கினார். தான்பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பெருக பாடம்சொல்லும் செயலில் இறங்கினார்.
பெரியபுராண விரிவுரை:-
பிள்ளையவர்கள் பெரியபுராணத்தின்மீது ஈடுபாடு கொண்டு அதனை ஐயமற அறிந்து கொண்டார்கள். அதனை விரிவுரையாக நிகழ்த்தினால் தமிழ்ச்சுவையையும் பக்தியின் மேன்மையையும் பலரறியக்கூடும் என்பதால் தக்காரை அணுகி விரிவுரையை நிகழ்த்திவருகிறார். சமயக்காழ்ப்புணர்ச்சியால் பொறாமைகொண்ட சிலரால் விரிவுரை தடைபடுகிறது. காரணம் பெரியபுராணத்தில் வரும் ஒவ்வோர் அடியவரின் புராணத்திலும் அவரின் மரணம் குறித்து செய்திவருவதால் அமங்கலமுடிவாயிருக்கின்ற இந்த நிகழ்வை ஒரு வீட்டில் நடத்தலாமா? என்று இல்லத்து உரிமயாளரை கலைத்துவிடுகிறார்கள். மொழிப்பற்று இல்லாதவரிடத்து இவ்விரிவுரை பயன்தராது என்று உரை நிறுத்தப்படுகிறது. சிலரின் வேண்டுகோளுக்கேற்ப பின்பு வேறொரு இடத்தில் எஞ்சிய பகுதி தொடங்கப்பெற்று நிறைவடைகிறது.இதேபோல பிள்ளையவர்களின் சீர்காழிக்கோவை உள்ளிட்ட ஒருசிலபடைப்புகளில் அரங்கேற்றத்தின்பொழுதும் இப்படிப்பட்ட இடர்பாடுகளைச் சந்தித்துள்ளார். காலப்போக்கில் அவையெல்லாம் நீங்கியது மட்டுமன்றி, ‘பிள்ளையவர்கள் நம்பகுதிக்கு வரமாட்டார்களா? நம்மூரைப்பற்றித்தலபுராணங்கள் பாடமாட்டார்களா’ என்று மக்கள் ஏங்கித்தவித்த காலம் உருவாயிற்று.
(தொடரும்)
குறிப்பு:-
இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.முனைவர் துரை. குணசேகரன்
தலைவர் தமிழாய்வுத்துறை
அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
மன்னன்பந்தல்,மயிலாடுதுறை*********************
-
குறளின் கதிர்களாய்…(100)
–செண்பக ஜெகதீசன்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். (திருக்குறள் -253: புலால்மறுத்தல்)புதுக் கவிதையில்…
கொலைக் கருவியைக்
கொண்டவனிடத்தில்
கொஞ்சமுமிருக்காது இரக்கம்!அதுபோல்,
மற்ற உயிரழித்து
மாமிசம் உண்போர்
மனத்திலும் இருக்காது
நல்லதாம் அருள்!குறும்பாவில்…
வாளுடையானிடம் இருக்காது இரக்கம்,
உயிர்வதைத்து ஊனுண்போரிடம்
உறையாது அருள்!மரபுக் கவிதையில்…
கரத்தினில் ஆயுதம் எடுத்தேதான்
–காவு கொள்ள நிற்போர்க்கே
இரக்கம் என்றும் இருப்பதில்லை
–இதயம் கல்லாய்ப் போய்விடுமே,
தெரிந்திடு இதுதான் கதையாகும்
–துடிக்கத் துடிக்க உயிர்வதைத்துத்
தெரிந்தே மாமிசம் உண்போரிடம்
தங்கா துண்மை அருளதுவே!லிமரைக்கூ…
கொலைவாளன் மனமது ஈரமிலா இருளே,
கொன்ற உடலை உண்போரிடம்
என்றும் தங்காது மனதினில் அருளே!கிராமிய பாணியில்…
கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
திங்காத திங்காத ஒடம்பத்திங்காத…எரக்கமில்ல எரக்கமில்ல,
அடுத்தவன அழிச்சிடவே
ஆயிதத்த எடுத்தவங்கிட்ட
எரக்கமில்ல எரக்கமில்ல
மனசுலத்தான் எரக்கமில்ல…அதுபோல
உயிரக்கொன்னு ஒடம்பத்தின்னா
அருளுயில்ல இருளேதான்…அதால
கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
திங்காத திங்காத ஒடம்பத்திங்காத! -
மார்கழி மணாளன் – 5 திருமலை (திருப்பதி) ஸ்ரீ வேங்கடாசலபதி
க.பாலசுப்பிரமணியன்
விழித்தாலும் வேங்கடத்தில் விழிக்கவேண்டும்
விழியிரண்டும் வேங்கடனைப் பார்க்கவேண்டும்
கோவிந்தாவெனக் குரல்கொடுக்க வேண்டும்
குறைகளெல்லாம் அவனிடமே சொல்லவேண்டும் !
ஆனந்த நிலையம் அவன் கோவில்
ஆறுதல் அடைந்திட அவன் பாதம்
அருள் வெள்ளம் அவன் திருமேனி
அணைத்திடுமே அவன் அபயக்கரம் !
ஏழுமலை ஏறிவந்தால் போதும்
ஊழ்வினைகள் உருக்குலைந்து ஓடும்
ஏழ்மையின் பொருளறிந்த வாசன்
எழுபிறப்பும் உயிர் காக்கும் நேசன் !
பிரபந்தங்கள் பாடி வந்த பெரியோர்கள்
பிரபஞ்சத்தில் வியந்து நின்ற தெய்வமன்றோ !
தங்காத தங்கத்தை அவனுக்குத் தந்தாலும்
தங்கி நின்று அருள் செய்யும் திருமாலன்றோ !
திருமங்கை வாழ்கின்ற திருமார்பை
தாளால் மிதித்திட்ட தவத்தோன்
தாள் பிடித்த தெய்வமன்றோ நீ !
தந்தருள்வாய் நின் தாளை நான் பிடிக்க !
தானழித்து தலைமழித்துத் தாள்தேடி வந்துவிட்டால்
தந்தையாக நீயிருப்பாய் திருமாலே! தாமோதரா !
மலையேறி வந்தோர் தம் மனம் கொள்வாய்
மங்கையுடன் வந்தே நீ அருள் தருவாய் !
அலர்மேல் மங்கையவள் அருள்பார்வை ஒரு பக்கம்
அன்புடனே இலக்குமியும் இதயத்தின் ஒரு பக்கம்
கண்மூடியே காதல் செய்யும் கள்வனவன் கண்ணன்
கார்மேகன் கொடுப்பதிலே குறையில்லா குபேரன் !
ஏழுமலைவாசன் இதயத்தில் இருந்தால்
எழுகின்ற கதிரவனாய் ஒளி தருவான்
ஏழு பிறப்பிற்கும் தருவான் செல்வம்
ஏழ்மையால் வலிக்காத வாழ்வின் வண்ணம் !
மலர்வாசம் கனிவாசம் மாதவன் பெயர்வாசம்
மார்கழி வைகறை வாசலில் மண்வாசம்
மனங்குளிரக் காலையில் பாவைக் குரல்வாசம்
மனிதங்கள் காத்திடுமே திருமலை ஸ்ரீனிவாசம் !
-
நான் அறிந்த சிலம்பு – 191
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை
படைத்துக்கோள் பெயர்
குரல் நரம்பை
மாயவன் என்று அழைத்தாள்;
இளி நரம்பினை வீரம் மிக்க
பலராமன் என்று அழைத்தாள்;
துத்த நரம்பினை
நப்பின்னை என்று அழைத்தாள்;
மற்றைய நரம்புகள்
முன்னர் இருந்த மரபுப்படியே
ஏற்ற பெயர்களைப் பெறும் என்றாள்.மாயவன் என்றழைக்கப்பட்ட
நரம்புக்கு அடுத்து,
பின்னை என்றழைக்கப்படும்
துத்தமும் தாரமும் நின்றன.பலதேவன் என்றழைக்கப்பட்ட
இளி நரம்பினைச் சேர
உளரியும் விழையும் நின்றன.கைக்கிளை நரம்பு பின்னைக்கு
இடப்பக்கம் நின்றது.விளரி நரம்பு தாரத்துக்கு
வலப்பக்கம் நின்றது.வளம்பொருந்திய துளப மாலையை
மாயவன் எனும் கண்ணன் தோளில் சார்த்தி,
கூத்து நூல் பகரும் இயல்பில் இருந்து நீங்காது
குரவைக் கூத்தாடத் தொடங்கினாள்.உலகினை அளந்த திருமால் தன் மார்பில் இருக்கும்
இலக்குமியை நோக்காததற்குக் காரணமான
வளையணிந்த கைகளையுடைய
நப்பின்னைதானே யாம் என்று மாதரி வியந்தாள்.













