Blog

  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ?

    unnamed

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    அகிலவெளி அரங்கிலே
    முகில் வாயுவில் மிதக்கும்
    காலாக்ஸிகள் இரண்டு மோதினால்
    கைச்சண்டை புரியாமல்
    கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் !
    கடலிரண்டு கலப்பது போல்
    உடலோடு உடல்
    ஒட்டிக் கொள்ளும் !
    வாயு மூட்டம்
    கட்டித் தழுவிக் கொள்ளும் !
    கர்ப்பம் உண்டாகி
    காலாக்ஸிக்கு
    குட்டி விண்மீன்கள் பிறக்கும் !
    இட்ட எச்சத்திலே
    புதிய கோள்கள் உண்டாகும் !
    ஈர்ப்புச் சக்தியால்
    விண்மீனைச் சுழல வைக்கும்
    காலாக்ஸி !
    கோள்களை நீள்வட்டத்தில்
    சீராய்ச் சுற்ற வைக்கும்
    விண்மீன்கள் !
    காலாக்ஸி ஒளி மந்தைகளைப்
    படகுகள் போல்
    காலவெளியில் உந்தச் செய்வது
    கருமைச் சக்தி !

    ++++++++++++++++

    “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது !  (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது !”

    ஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb)

    விண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமையான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன !  பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே !

    டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University)

    “காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப் பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.”  (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    டாக்டர் ஆன்ரூ பங்கர் (Dr. Andrew Bunker Anglo-Australian Observatory)

    “கடந்த பத்தாண்டுகளில் வானியல் விஞ்ஞானம் மூன்று முறைகளில் முற்போக்கு ஆகியுள்ளது. முதலாவது முன்னேற்றம் : விண்வெளியில் வெகு ஆழமாக நோக்கிக் காலாக்ஸிகளின் பூர்வீக நிலையை உளவ முடிகிறது !  வடிவில்லாத வாயுவாக இருந்து பிரபஞ்சம் எப்படிப் படிப்படியாக விருத்தியடைந்து பிரமாண்ட தோரணமாக விரிந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது !  இரண்டாவது முன்னேற்றம் :  பேபி பிரபஞ்சம்  எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு எண்ணிக்கை மிக்கச் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன ! என்ன விதமான கலவைக் கூறுகளைப் (Ingredients) பிரபஞ்சம் கொண்டிருந்தது, எப்படி அது விரிந்து கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.  மூன்றாவது முன்னேற்றம் :  பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது நாம் நோக்கும் இரவு வானம் மிக்க ஆர்வத்தைத் தூண்டும் ஓர் அற்புதக் கொடையாகத் தெரிகிறது !

    ராயல் மார்டின் ரீஸ், வானியல் நிபுணர் (Royal Martin Rees) (Jan 2007)

    ஒளியில்லாத, காலாக்ஸிகள் உண்டாகாத, விண்மீன்கள் தோன்றாத ஒரு பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து பார்ப்போமா ?  மூல வாயுக்கள் கொந்தளித்து கண்ணுக்குப் புலப்படாத பிண்டத்தில் மூழ்கிய கால வெளிக் கருங்கடல் இது !  பெரு வெடிப்பு நேர்ந்து பேரொளி வீசி ஒருசில நூறாயிரம் ஆண்டுகள் கடந்து பிரபஞ்சம் அரை பில்லியன் வருடங்களாக இருள் யுகத்தில் (Dark Age) மூழ்கிக் கிடந்தது !  அதற்குப் பிறகு ஏதோ ஒன்று நிகழ்ந்து எல்லாமே மாறிவிட்டது !  அந்தப் புதிரான ஒன்று விண்மீன்களை உண்டாக்கியது !  காலாக்ஸிகளைப் படைத்தது !  மேலும் கோள்களை உருவாக்கியது !  புல், பூண்டு, விலங்கினம், மனித இனத்தைப் படைத்தது !  அந்த மகத்தான ஆதிச்சக்தி யாது ?  அகியவியல் புதிரான (Cosmology Puzzle) அந்த மூல காரணியை அறிய பல சிக்கலான கணனி மாடல்களை (Computer Models) விஞ்ஞானிகள் இப்போது வடித்து வருகிறார்கள் !

    ரான் கோவன் (Ron Cowan, National Geographic Magazine)

    “(பரிதிபோல்) கோடான கோடி விண்மீன்கள் கொட்டிக் கிடக்கும் வாயு, தூசி மயமான பால்வீதி காலாக்ஸியில் நாம் வசித்து வருகிறோம் !  சுமார் 2 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் (நமது காலாக்ஸியை) நெருங்கி வரும் ஆன்ரோமேடா என்னும் காலாக்ஸி அசுர அளவிலும், சுருள் வடிவிலும் (Spiral Galaxy) பால்வீதியை ஒத்துள்ளது !  (இடைவெளியைக்) கணித்து வரும் போது சுமார் 3 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு காலாக்ஸிகளும் மோதிக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் !  அப்படியானால் அந்த நிகழ்ச்சியில் என்ன நேரிடும் ?  பரிதியைப் போன்ற விண்மீன்கள் (ஒவ்வொன்றுக்கும் வலுவான ஈர்ப்புச் சக்தி இருப்பதால்) ஒன்றோடு ஒன்று அவை மோதிக் கொள்ள மாட்டா என்று சொல்லலாம்.  ஆனால் காலாக்ஸிகளின் பூத ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து, சுருள் வடிவைத் திரித்து மாற்றி ஒரு பில்லியன் ஆண்டுகள் கடந்து ஒரு புதிய பெரிய நீள்வட்ட காலாக்ஸியாக (Elliptical Galaxy) உருவாகிவிடும் !”

    ஜான் டொபின்ஸ்கி (John Dubinski, University of Toronto, Canada)

    “பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) நமது பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலாக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கருமைப் பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது.  அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன.  பால்வீதி காலாக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது !  ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது.  காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம்.  நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள்.  மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலாக்ஸியை மாற்றி அமைத்தன !  ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கருமைப் பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலாக்ஸி படைக்கப் பட்டது.”

    கார்டன் மையர்ஸ் (Gordon Myers’ Supercomputer Simulation)

    பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி

    பால்வீதி மந்தையின் மில்லியன் கணக்கான விண்மீன்க¨ளைத் தனது பூர்வீகத் தொலைநோக்கியில் முதன்முதல் கண்டவர் இத்தாலிய விஞ்ஞானி காலிலியோ !  இப்போது பால்வீதி மந்தையில் 200 பில்லியனுக்கும் மேலாக விண்மீன்கள் சுற்றிக்கொண்டு வருகின்றன !  மேலும் பால்வீதியில் பரிமாணம் கூற முடியாத பேரளவில் அகில மீனின வாயும் தூசியும் (Interstellar Gase & Dust) மண்டிக் கிடக்கின்றன.   பூமியிலிருந்து இரவில் வான்வெளியை நோக்கினால் பால்மய வண்ணத்தில் தூரிகையில் வரைந்தால் போல் தெரிவதால் அந்தப் பெயர் அளிக்கப்பட்டது !  சுருள் காலாக்ஸியான (Spiral Galaxy) நமது பால்வீதியின் ஒரு கரமான ஓரியன் வளைவில் (Orion Arm) நமது சூரிய மண்டலம் சுற்றி வருகிறது !

    18 ஆம் நூற்றாண்டில் வானியல் விஞ்ஞானிகளான வில்லியம் ஹெர்செல் அவரது சகோதரி கரோலின் ஹெர்செல் (William Herschel & Caroline Herschel) இருவரும் பல்வேறு விண்மீன்களின் இடைத் தூரங்களைப் பல்வேறு திசைகளில் கணித்தனர்,  பால்வீதி காலாக்ஸி தட்டு போல் அமைந்த விண்மீன் முகில் என்றும் நமது பரிதி பால்வீதி மையத்தில் இருப்பதாகவும் கூறினார்.  1781 ஆம் ஆண்டில் சார்லஸ் மெஸ்ஸியர் (Charles Messier) வான வெளியில் மங்கல் பொட்டு ஒளிகளான (Faint Patches of Light) பல்வேறு நிபுளாக்களை பதிவு செய்து அவற்றை எல்லாம் சுருள் நிபுளாக்கள் (Spiral Nubulae) என்ற வகுப்பில் பிரித்தனர்.  20 ஆம் நூற்றாண்டில் வானியல் நிபுணர் ஹார்லோ ஸேப்லி (Harlow Shapely) கோள் வடிவில் உள்ள விண்மீன் கொத்துக்கள் (Globular Star Clusters) பரவி இருப்பதையும், அவை இருக்கும் தளங்களையும் அளந்து பால்வீதி மந்தையின் மையம், பூமியிலிருந்து 28,000 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது என்றும், விண்மீன் தோரணங்களான ஸாகிட்டாரியஸ், ஸ்கார்ப்பியோ (Constellations Sagittarius & Scorpio) இரண்டுக்கும் அருகில் உள்ளது என்றும், பால்வீதி மையம் தட்டாக இல்லாமல் ‘ஆப்பம் போல்’ (Pan Cake) நடுவில் தடித்த தென்றும் அறிவித்தார்கள் !

    மெஸ்ஸியர் கூறிய சுருள் நிபுளா பிரபஞ்சத் தீவுகள் அல்லது காலாக்ஸிகள் (Island Universe or Galaxy) என்று பின்னால் ஹார்லோ ஸேப்லி தர்க்கம் செய்தார்.  1942 இல் வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) தனது புதிய மிகப் பெரும் 100 அங்குலத் தொலைநோக்கி மூலம் உளவித் தர்க்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

    பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் !

    பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது !  அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோது கின்றன !  சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன !  காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங் களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன !  அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன !  காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை.  பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸி களிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன.  இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள்.

    ஆன்ரோமேடா காலாக்ஸி (Andromeda Galaxy or Messier Object # M31) பால்வீதி மந்தைக்கு அருகில் பூமிக்கு அப்பால் 2.2 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  பொதுவாக வானியல் நிபுணர் விண்வெளித் தூரங்களை “மெகாபார்செக்ஸ்” (Megaparsecs – Mpc) (One Mpc = 3.26 Million Light Years) (One parsec = 3.26 Light Years = Unit Distance Between Earth & Sun) அளவீட்டில் குறிப்பிடுகிறார்கள்.

    நமது பால்வீதியும் கடந்த பல பில்லியன் ஆண்டுகளாய்ப் பல சிறு காலாக்ஸிகளை இழுத்துத் தன்னுடன் சேர்த்துப் பின்னிக் கொண்ட ஒரு சேர்க்கை காலாக்ஸிதான் !  அதுபோல் நமது பூத அண்டை காலாக்ஸி ஆன்ரோமேடா பின்னொரு யுகத்தில் நமது பால்வீதியைப் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் என்று நம்பப் படுகிறது !  ஆன்ரோமேடா காலாக்ஸி நமது பால்வீதி காலாக்ஸியை மணிக்கு 216,000 மைல் வேகத்தில் (348,000 Km/Hr) நெருங்கி வருகிறது !  இன்னும் 2 பில்லியன் ஆண்டுகள் கடந்து இரண்டும் பூத நீள்வட்ட வடிவத்தில் புதிய காலாக்ஸியாக “மில்கோமேடா”  (Milky Way + Andromeda =Milkomeda) என்னும் பெயரில் நடமாடி வரும் !

    காலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரண்டு நிபந்தனைகள்

    ஒன்றை ஒன்று நெருங்கும் இரண்டு காலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் !

    1.  அவை இரண்டும் பக்கத்தில் இருந்து ஒப்புமை நிலையில் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்து நெருங்கி வரவேண்டும் !

    2.  அவை இரண்டும் ஒப்புமை வேகத்தில் மெதுவாகப் பயணம் செய்து ஒன்றை ஒன்று நெருங்கி வரவேண்டும் !

    காலாக்ஸிகள் வெகு தூரத்தில் இருந்தால் அவற்றின் ஈர்ப்பாற்றல் விசை நலிந்து போய் ஒன்றை ஒன்று இழுத்துக் கொள்ள வலு இருக்க முடியாது.   அவை நெருங்கும் போது விரைவாகச் சென்றால் பற்றிக் கொள்ள முடியாது கப்பல்கள் இரவில் கடப்பது போல் நழுவிச் செல்லும்.

    ஒரே பரிமாணத்தில் இல்லாது வெவ்வேறு அளவில் உள்ள இரு காலாக்ஸிகள் மெதுவாக நெருங்கி வந்தால்,  பெரிய காலாக்ஸி, சிறு காலாக்ஸியைத் தன்வசம் இழுத்துக் கொண்டு தன்னுரு சிதைந்து மாறாமால் பார்த்துக் கொள்கிறது !  அதாவது பெருங்காலாக்ஸி சுருள் காலாக்ஸியாக இருந்தால் அதன் வடிவம் மாறுவதில்லை !

    ஏக அளவுள்ள, ஒரே மாதிரியான இரண்டு காலாக்ஸிகள் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்கும் போது, ஒளி வேடிக்கைகள் கிளம்பி ஏராளமான வாயுப் பிண்டம் சிதறி வால்களாய் நீண்டு வெளியே எறியப் படுகின்றன !  பிறகு அவையெல்லாம் ஈர்ப்புச் சக்தியால் வாயு முகிலாய் இழுத்துச் சுருக்கிப் புதிய விண்மீன்கள் பிறக்கின்றன !  அலங்கோலமான கொந்தளிப்புக்குப் பிறகு புதிய காலாக்ஸியில் சீரொழுக்கம் மீண்டும் (Re-order After Chaotic Condition) நிலைபெறுகிறது !

    பால்வீதிச் சீரமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறிந்த விபரங்கள்

    நமது காலாக்ஸி பால்வீதி பல்வேறு சிறு காலாக்ஸிகள் சேர்ந்த ஓர் இணைப்புக் காலாக்ஸியாக விஞ்ஞானிகள் கருதுகிறார்.  பேபி பிரபஞ்சத்தில் முதலில் காலாக்ஸிகள் உருவாகும் போது பலச் சிறு பூர்வாங்க காலாக்ஸிகளைப் (Proto-Galaxies) பின்னிக் கொண்டு வடிவாகின என்று தெரிகிறது.  பால்வீதி காலாக்ஸி முதல் சில பில்லியன் ஆண்டுகளில் 100 உட்பட்ட சிறு பூர்வாங்க காலாக்ஸி களைப் பிடித்து உருக்குலைத்துச் சேமித்து உண்டானது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  மேலும் கடந்த சில மில்லியன் ஆண்டு களாக 5 முதல் 11 சிறு காலாக்ஸிகளைப் பின்னிக் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் சான்றுகள் காட்டுகிறார்.  இம்மாதிரி காலாக்ஸி சேர்ப்புகள் பிரபஞ்ச விண்வெளியில் பெருத்த வான வேடிக்கைகளை நிகழ்த்துவதில்லை என்றும் கவனித்துள்ளார் !

    (தொடரும்)

     ++++++++++++++++++++++++++

     தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Happens When Galaxies Collide ? & Will the Milky Way Merge with Another Galaxy (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine – All About Galaxies [March 2008]
    23 Astronomy Magazine – Our Galaxy’s Collision with Andromeda -5 Billion Years A.D. Our Galaxy’s Date with Destruction By : Abram Loeb & T.J. Cox [June 2008]
    24 Milky Way – Andromeda Galaxy Collision By : John Dubinski (University of Toronto)
    25 Galaxies in Collision (http://spacescience.spaceref.com/

    26 The Merger of the Milky Way & Andromeda Galaxies By : John Dubinski (University of Toronto) (Jan 2001)

    27 On a Collision Course or Uniting as an Intergalatic Super System By : Chee Chee Leung [April 25, 2008]

    ******************

    Share
  • எப்படியும் வாழ்கிறான்!

    —மணிமுத்து.

     

    இன்று வழக்கத்தை விட நேரமாகிவிட்டது, ஆகவே மிதிவண்டியை வேகமாக அழுத்திக் கொண்டிருந்தாள் அவள். சிக்னல் கூட தன் பங்கிற்கு உதவி செய்தது அவளுடைய நேரத்தை நீட்டிக்க.

    எனவே சுற்றி இருப்பவர்களிடம் பார்வையை ஓட்டினாள். சுறுசுறுப்பான காலைவேளை என்பதால் அனைவரும் கைகடிகாரத்தை பார்ப்பதும் மீண்டும் சிக்னலையும் பார்த்தபடி இருந்தனர்.

    அருகில் இருந்த ப்ளாட்பாரத்தில் வரிசையாக கடைகளும், செருப்பு தைப்போரும் அமர்ந்திருந்தனர், யாராவது காலில் செருப்பு பிய்ந்திருக்கிறதா என்ற பார்வை அங்கு போவோர் வருவோரின் காலையை தேடிக் கொண்டிருந்தது.

    நல்லவேளை சிக்னல் விழுந்து விட்டது, அப்பாடா என்று கூறிக்கொண்டே சைக்கிளை அழுத்தினாள் அவள்.

    பஸ்நிலையத்தை நெருங்கியதும் அங்கு அமர்ந்து இருந்த ஒருவரிடம் பையிலிருந்த பார்சலை நீட்டினாள். அவனுடைய முகம் எப்போதும் போல் மலர்ந்தது, ஒரு நிமிடம் அந்த முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்தவள் நிரந்தரமான சந்தோஷத்தை உண்டாக்க விரும்பினாள்.

    பார்சலை வாங்கியவன் அவளுடைய மிதிவண்டி கடந்ததும் அதிலிருந்த உணவை உண்பதில் முற்பட்டான், அவன் இரு கால்களையும் இழந்தவன்.

    அவனை பார்த்தால் அவள் மனதில் ஏனோ ஒரு பரிதாபம் . எனவே தினமும் அவனுக்கு ஒரு வேளை உணவு அவளுடைய பொறுப்பாய் எடுத்துக்கொண்டாள், அதுவும் அவளுடைய உணவை பாதியாக குறைத்து தான்.

    அவன் பெயர் கோடிஸ்வரன். ஆனால் பெயர் மிகவும் பொருத்தம் தான் என்று அவன் பெயரை கேட்ட போது எண்ணினாள்.

    அவள் பெயர் தீபா. வெளிச்சம் என்ற அர்த்தத்தை எடுத்து கொண்டு யாருக்காவது துன்பம் என்றால், அவளால் முடிந்த உதவி செய்வாள்.

    இவள் கஷ்டம் என்று நினைத்து செய்த பல உதவி கள் இறுதியாக நகைச்சுவையாக முடிந்துவிடும்.

    ஒரு நாள் கடைக்கு சென்றவள் வழியில் ஒரு பாட்டி வாயை அசைத்து கொண்டே இருப்பதற்காக அருகில் பூந்தொட்டியிலிருந்த மண்ணை வாயில் போட, உடனே வீட்டிற்கு சென்று தாயிடம் கூட சொல்லாமல் பத்து ரூபாய்க்கு இரண்டு பீஸ்கட் பாக்கெட்களை வாங்கி அந்த பாட்டியின் கைகளில் திணித்தாள். அந்த பாட்டிக்கு, கண்ணோ அறை குறை, காதோ முழு குறை, எனவே அமைதியாக வாங்கி கொண்டார்.

    பிறகு வீட்டிற்கு திரும்ப, பக்கத்துவீட்டு வாண்டு “YOU ARE GREAT!” என்றது அவளை பார்த்து, உடனே பூரிப்பில் வீட்டிற்கு சென்றாள்.

    தன் தாயிடம் “அம்மா வெளியில ஒரு வயசானவங்களை பார்த்தேன் மா, எனக்கு கஷ்டமாக இருந்தது” என்றவள். உடனே தன் மாமாவிடம் தொடர்பு கொண்டு முதியோர் இல்லத்தையே விசாரிக்க சொல்லி விட்டாள்.

    பிறகு தான் தெரிந்தது அந்த பாட்டி பொழுது போகாமல் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார் என்று!.

    தாயின் குரல் கோபமாக ஒலித்தது ”அடி பாவி சட்டினி அரைக்க வைச்சிருந்த காசை இப்படி பண்ணிட்டு வந்திட்டியே! இன்னிக்கு ரசத்துல சாப்பிட்டு படு அப்பதான் திருந்துவ என்று!”ஓசை படாமால் மாடிக்கு சென்று விட்டாள்.

    மற்றொரு சமயம், இரண்டு செங்கல் ரோட்டில் கிடக்க தூக்கி தூரப் போட்டாள் அது உடைந்து சிதறியது.

    அப்போது அருகே வந்தவர் “ஏன்மா செங்கல் தூக்க முடியலேனு வைச்சுட்டுப்போன இப்படி உடைச்சிட்டியே எங்கிருந்து வந்து சேர்றிங்க எனக்குன்னு என்று பொறிந்து விட்டு போனார்”.  அவளோ சுற்றிலும் பார்வையை ஒட விட்டாள் “அப்பாடா யாரும் பார்க்கலை!” என்றபடி அங்கிருந்து அகன்றாள்.

    அன்றுடன் அவளுக்கு கடைசி நாள், இனி அவள் வேலைக்கு செல்ல போவது இல்லை எனவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.

    இனி அந்த கோடிஸ்வரனின் ஒரு வேளை சாப்பாடு என்ற எண்ணம் தான் அவள் மனதில். எனவே அன்று அவரிடம் பேசினால் “நீங்க எதாவது வேலை பார்க்கறிங்களா, நான் வேணா எங்க அண்ணன் கிட்ட சொல்லி எதையாவது செய்றேன்” என்றாள். இந்த ஒரு மாதமாக உணவு கொடுத்த மரியாதைக்காக கோடிஸ்வரன் அவளை திட்டவில்லை.

    மெளனமாக மறுத்துவிட்டான். அவளும் இப்பொழுது வெளியூர் சென்றுவிட்டாள். ஆனாலும் கோடிஸ்வரன் வாழ்கிறான், வேறுயாரோருவர் பரிதாபத்துடன் செய்யும் உதவியால்.

    எப்பொழுதாவது பஸ்சில் செல்லும் போது மீண்டும் அவனை சந்திக்க நேரும் “பரிதாப பார்வையை செலுத்திய படி பஸ்ஸுடன் அவளும் நகர்ந்து விடுவாள்”

    வாழ்க்கை இப்படித்தான் என்று பழக்க படுத்தி கொண்டால் மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கும்.

    முயற்சி செய்து பழக்கத்தை மாற்றிவிட்டால் மற்றவர்கள் பரிதாபத்தில் வாழ நேராது.

    begger
    அவள் முயற்சி செய்தால்…
    அவன் வாழ்வதற்கு!
    பரிதாபத்துடன் அல்ல….!

    பரிதாபம் !!!……
    மோசமான வார்த்தை
    மற்றொருவர் சொல்லும்போது கேட்க நேருவது !

    இப்படியும் மனதில் தோன்றும்
    “அவன் என்ன உசத்தி!
    யார் அவனுக்கு உரிமை கொடுத்தா
    என்னை பார்த்து பரிதாபப்பட!..
    ஏனோ இந்த எண்ணம்
    அவனுக்கு மட்டும் எதிர்மறையாக அமைந்துவிட்டது!

    Share
  • அவள் அப்படித்தான்

    —ஆர்.எஸ் கலா.

    IMG_148177015739141

    வாணி… கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை
    கூடி விளையாடுவதோ ஏழை வீட்டு பசங்களுடன்
    அதட்டிப் பார்த்தார் தந்தை பரமசிவம்
    அடித்துப்பார்த்தாள் தாய் பாக்கியம்
    தன் மகள் மாறவில்லை பிடிவாதம்
    கொண்ட சிறுமி அவள்.

    சரி விட்டு விடுவோம் வளர்ந்ததும் ஏழை பணம்
    என்ற வேற்றுமை அறிந்து நிறுத்தி விடுவாள்
    என்று முடிவு செய்த பெற்றோர் மௌனம்
    காத்தனர். ஆனால் வாணி மாற வில்லை.
    அவள் வளர்வது போல் அவள் பரிவும்
    பாசமும் ஏழைகள் மேல் வளர்ந்தே வந்தன.

    பகட்டு வாழ்வை வெறுத்தாள்
    நாகரீக உடையை நிராகரித்தாள்
    சமுதாய சிந்தனையில் தினமும் முழ்கிப் போனாள்
    நாகரீக உச்சியில் நின்று ஆடும்
    பெற்றோருக்கு ஏமாற்றம் அதிகம்தான்
    மிஞ்சியது.

    பல தரப்பட்ட பட்டப் படிப்புக்களைப்
    படிக்கச் சொல்லி அவர்கள் கேட்டுக் கொண்டும்
    வாணி அதை ஏற்றுக் கொள்ளாது தமிழ்
    ஆசிரியராக வர வேண்டும் என்னும் இலட்சியத்தில்
    படித்து இறுதி ஆண்டு பரீட்சையும் எழுதி விட்டாள்
    தற்போது வீட்டிலேயே இருந்தாள் பரீட்சை
    முடிவு வரும் வரை.

    பெற்றோர் ஏதேதோ நாட்டின்
    பெயர்களை கூறி அழைத்தனர்
    அழகை ரசிக்க வரும் படி அதை எல்லாம்
    மறுத்து விட்டு தன் தோழியுடன் பேசி
    ஒரு முடிவுக்கு வந்தாள். தான் வீட்டில்
    இருக்கும் வரை அந்த நாளை ஒரு
    நல்ல முறையில் கழிக்க விரும்பிய வாணி
    தன் தோழி ராணியிடம் கேட்டாள்.

    நீயும் நானும் மண்டபம் சென்று அங்கே உள்ள
    இலங்கை அகதிகளின் மழலைகளுக்கு
    பாடம் கற்றுக் கொடுப்போமா தங்கும்
    விடுதியில் தங்கி, செலவுகள் அத்தனையும்
    என்னுடையது என்றாள். ராணி ஏழை வீட்டுப்பிள்ளை
    ஆனால் அறிவாளி அவளும் ஒப்புக்
    கொண்டாள்.

    இருவரும் புறப்பட்டனர் வாணியின்
    பெற்றோர் பாரட்ட மனம் இன்றி முறைத்தனர்
    கண்டு கொள்ள வில்லை சென்று விட்டாள் வாணி
    மண்டபத்தை அடைந்ததும் அங்கே உள்ள அகதிகளின்
    பார்வை பல கேள்விகளை எழுப்பியது அவர்கள்
    இருவரும் தங்களை அறிமுகம் செய்ததும் சில
    பெற்றோர் கண்ணீர் சிந்திய படியே நன்றி கூறினர்.

    தங்கள் பிள்ளைகளும் நாலு எழுத்து கற்றுக்
    கொள்ளப்போவதை எண்ணி.
    ராணி வாணி இருவரின் இதயமும் கனத்தன
    அன்று முதல் ஆசிரியர்களானார்கள்
    அகதி மழலைகளுக்கு கண் மூடி திறப்பதுக்குள்
    மூன்று மாதம் ஓடி மறையவே விடை பெற வேண்டிய
    கட்டாயம் .

    மழலைகளின் அன்பில் நனைந்த அவர்களின்
    கண்களும் கலங்கின அகதிகளின் அன்பையும்
    கண்டு பெருமிதம் கொண்ட வண்ணம் வீட்டை
    வந்து அடைந்தார்கள். வீட்டில் பல உறவுகள்
    இருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்
    அவர்கள் ஆங்கில மொழியில் நலம்
    விசாரித்தனர் வாணி அழகாய் தமிழ்
    மொழியில் வணக்கம் நான் நலம் என்றாள்.

    உறவுகளின் முகம் சற்று மாறியது வாணியின்
    பெற்றோர் சமாதானம் செய்தனர் அவள் அப்படித்தான்
    தமிழ் பற்று அதிகம் என்றனர் இவைகளை கண்டு
    கொள்ளாமலே தன் அறையின் உள்ளே நுழைந்த
    வாணி தன் மடி கணினியைத் தட்டுகிறாள்
    அரசு பாடசாலைக்கு தமிழ் ஆசிரியர் விண்ணப்பம்
    கொடுக்க தயாரானாள், அவள் மாறமாட்டாள்
    அவள் அப்படித்தான் வாழ்க்கை எல்லை வரை
    இருப்பாள் இது உறுதி…!

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    மலேசியா

    Share
  • உன் மேலே கொண்ட ஆசை….

    காவிரி மைந்தன்

    காதல் ஜோதி திரைப்படத்திற்கான கதை பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களுடையது!  இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்கு சுப்பு ஆறுமுகம் பாடல் எழுதியிருக்கிறார் என்பது சுவையான தகவல்! அதிலும் இளம்பெண் விதவையாகிறபோது.. அவளுக்கு மீண்டும் வாழ்வுதர.. மனைவியாக ஏற்க..  நாயகன் தன் கருத்தை வெளிப்படுத்துவதாய்..

    unnamed

    கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாலென்ன..

    கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

    நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

    அவளுக்கு ஏற்கனவே அமைந்த வாழ்வு நீடிக்கவில்லை! மஞ்சள் குங்குமம் நிலைக்கவில்லை!  கன்னிப்பெண் போகாட்சி தரும் அவள்  வாழ்வு  முடிந்ததாய்கருத வேண்டியதில்லை  என்கிற பகுத்தறிவுக்  கருத்தைத்  தன்  பாடல்  வரிகளிலும் முத்திரை பதித்தாற்போல்  பதித்திருக்கிறார்!

    நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

    மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

    என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

    unnamed (1)

    தன் இனத்தின் தலைவன் என்று பேரறிஞர் ஏற்றுக்கொண்ட வெண்தாடி வேந்தர் பெரியாரை நினைவூட்ட ஈரோட்டையும்.. தான் பிறந்த காஞ்சியைநினைவூட்ட அங்கே பிரபலமான சேலையையும் இணைத்து பாட்டுவரிக்குள் புகுத்திவைத்த பக்குவம் தெரிந்த பண்பாளர்.. நம் அண்ணாவன்றோ?

    ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

    காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

    நடிகர் ரவிச்சந்திரன் கையில் ஒரு டேப்பை வைத்துக்கொண்டு சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடும்போது.. நமக்கே  அவ்விருவர் சேர்ந்துவிடக் கூடாதா என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது!

    தத்ரூப நடிப்பால் ரவிச்சந்திரனும் M. பானுமதியும்  (தொலைக்காட்சிப்புகழ்) இப்பாடல் காட்சியை மெருகூட்டியிருக்கிறார்கள் என்றால் அதுமிகையில்லை!  இசையில் நம்மை கட்டி இழுத்துவைக்கிறார் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி

    உன் மேலே கொண்ட ஆசை…

    உன் மேலே கொண்ட ஆசை..

    உத்தமியே மெத்த உண்டு

    சத்தியமா சொல்லுறேண்டி தங்கரத்தினமே!

    தாள முடியாது கண்ணே பொண்ணுரத்தினமே..

     

    சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிபோல்

    முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே!

    மூணுமுடிச்சு போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே!

    நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

    மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

    என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

    ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

    காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

    தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே!

    கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாளென்ன..

    கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

    நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

     

    https://www.youtube.com/watch?v=SXDzICClM4U

    Share
  • தாய்மை

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    24653
    மன்மதன் கரந்தனில்
    தாய்மையின் வில்
    ரதிதேவி வரமிட்டாள்
    தாய்மையே வெல்..!

    தாயுமானவன் அவன்
    விதைத்த வித்துக்கள்
    புவியெங்கும் பூ
    மரங்களாகி விதை தூவி
    தாய்மைக்கனி தாங்கி
    புவிதாங்கும் சுமைதாங்கி..!

    கார்மேகம் தாங்கும் மழைநீராக
    மங்கையரின் மனந்தனில்
    தாய்மை உறங்கும்..!

    பெற்றெடுத்துத் தாயான
    நிமிடம் முதலாய் தியாகத்தின்
    உறைவிடமே தாய்மை..!

    பெண்மையின் பூரணம்
    தாய்மையே தலையாயம்
    தேசம் கடந்தும்
    புரியும் தாய்மொழி ..!

    அன்பின் முகவரி
    அன்னையே
    தராசு முள்ளென
    தாய்மைக்கு
    ஆண் பெண்
    பேதங்களில்லையே..!

    ஏங்கும் மனமெங்கும்
    தாய்மையின் சங்கமம்
    பெண்ணவளின் கடமைகளுள்
    தாய்மையே குங்குமம்..!

    தன் பசி துறந்து
    பெற்ற மக்களின் வயிறு
    நிறைக்கும் அட்சய பாத்திரம்..!

    ஆயிரம் ஜென்மங்களும்
    நீயே எந்தன் தாயாக வேண்டும்
    வேண்டும் மனம் தான்
    தாய்மையின் வெற்றி…!

    இறைவனின் பிரதிநிதியாகி
    வீட்டுக்கு வீடு
    வாழும் காமதேனு..!

    தாய்மைக்கில்லை
    வேலியும் விலங்கும்
    நஞ்சையும் அமுதையும்
    சமமாக்கி நிறுத்தும்
    துலாக்கோல் தாய்மையே ..!

    பூலோகப் உயிரினங்களுக்கு
    இறைவன் கொடுத்த
    உயிர் உரம் தாய்மை….!

    தாய்மை ஒரு வரம்
    அதுவே மங்கையரின்
    சிந்தாமணி மகுடம்..!

    ஏழ்மையிலும் தாய்மை
    பெருமையையே தாங்கும்
    ஊமை நெஞ்சங்களும்
    தாய்மைக்கே ஏங்கும்..!

    உருவைத் தாங்கி உணர்வில் ஏங்கி
    உயிரை வைத்து உயிரைப் பிரித்து
    வாழும் அதிசய அன்னம்….அம்மா..!

    ஆயிரம் கோடி யுகங்கள்
    பிறந்தாலும் அழிந்திடாது
    வளரும் உறவு தொப்புள்கொடி..!

    ஜனன மரண கணக்குக்குள்
    விடையாக விதையாகி
    மறைந்து மலரும்
    தாய்மைக் கிளைகள்..!

    காந்தம் மட்டும் ஈர்ப்பதில்லை இரும்பை
    தாய்மையின் காந்தமும்
    இளக்கும் இரும்பு மனத்தை..!

    தாய்மை என்றொரு பிம்பம்
    மனித இதயங்களின் பிரதிநிதியாய்
    பேதங்களின்றி அழகு காட்டும்
    மாயக் கண்ணாடி..!

    தாய்….அன்பின் ஆதிக்கத்தால்
    உள்ளம் நிறைத்து
    அள்ளிக் கொடுக்கும்
    அன்புச் சுரங்கம்…!
    இதயங்கள் ஒட்டி
    உறவாடும் நந்தவனம்..!

    எல்லையில்லா அன்பு கொண்டு
    அன்னையாய் நிற்பவள்
    தாய்மையின் வாஞ்சையால்
    பிரபஞ்சத்தையும் வசமாக்குவாள்
    பராசக்தி வடிவானவள்
    இப்பரத்தில் தாய்மையே வெல்லும்….!

    ஜெயஸ்ரீ ஷங்கர்
    ஹைதராபாத்

    Share
  • வெண்பாக்கள்

    VSP (வெத்திலை ,சீவல் ,புகையிலை) வெண்பா….

    Image0720

    “வெற்றிலை பச்சைமால் , வெள்ளைசுண் ணாம்புசிவம்
    முற்றியபாக் கேநான் முகனாராம் -உற்றிட
    தாம்பூ லவாய்சிவக்கும் தாயம்பாள் வண்ணத்தில்;
    பான்முலம் பேரின்பம் பார் “….

    “மாலே டிகாக்ஷனாம் மையிருள் வண்ணத்தில் ,
    பாலோ அரனின் பளிச்வெண்மை, -நாலும்
    படவுலகைப் பார்ப்போன் பிரவுன் சுகராம்;
    கடவுளைக் காப்பியில் காண்”….கிரேசி மோகன்….

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 48

    –சு. கோதண்டராமன்.

    வேதம் – மனித குல வரலாறு

    619px-Rigveda_MS2097

    வேதம் அநாதி, அதாவது அது உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே இருக்கிறது. வேதத்தை ஒரு நூல் என்று கருதினால் அதை அநாதி என்று கூற முடியாது. மனித இனம் தோன்றி நாகரிகம் வளர்ந்து மொழி வளர்ந்து அதற்கு இலக்கணம் ஏற்பட்ட பிறகு தான் வேதம் இயற்றப்பட்டது.

    ஆனால் வேறு ஒரு வகையில் வேதத்தை அநாதி என்று கூறலாம். இது அநாதி காலத்தில் பிரபஞ்சம் தோன்றியதை விவரிக்கிறது. மனித குலம் ஏற்பட்டு நாகரிகம் வளராத காலத்தைக் குறிப்பிடுகிறது. மனிதனுக்குத் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிய நிலையைக் கூறுகிறது. வழிபாட்டு முறை ஏற்பட்ட காலத்தைத் தெரிவிக்கிறது. எனவே வேதத்தைப் பிரபஞ்ச வரலாற்றுச் சுவடி என்று கூறலாம். விரிவாகப் பார்ப்போம்.

    ரிக் 10 வது மண்டலம் 129வது சூக்தம் நாஸதீய சூக்தம் எனப்படுகிறது. அதில் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எப்படி இருந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் பெருவெடிப்புக் கொள்கையை (big bang theory) ரிஷிகள் தங்கள் உள்ளுணர்வினால் அறிந்து சொன்னது நமக்குப் பெரு வியப்பைத் தருகிறது. அங்கு தெளிவில்லாத இருளான சூன்யம் மட்டுமே இருந்தது என்கிறார்கள்.

    அப்பொழுது இருப்பும் இல்லை. இல்லாமையும் இல்லை. காற்று இல்லை, வானமும் இல்லை. எது எதை மூடியிருந்தது? எங்கே மூடியிருந்தது? ஆழம் காண முடியாத நீர் இருந்ததா?

    மரணம் இல்லை, மரணமின்மை இல்லை. இரவையும் பகலையும் பிரிப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. மூச்சில்லாத ஒன்று தன் சொந்த வலிமையில் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தது. அது தவிர வேறு ஒன்றும் இல்லை.

    இருட்டு இருந்தது. அது இருளால் மூடப்பட்டிருந்தது. எல்லாமே இனம் புரியாத அந்தகாரம். இருந்ததெல்லாம் சூனியம். எதற்கும் உருவமில்லை. தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.

    அதன் பின் இச்சை பிறந்தது. அதுவே மனதின் முதல் விதை. தங்கள் இதயத்திற்குள் தேடிய ரிஷிகள் ஸத்துக்கும் அஸத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டார்கள்.

    ஒளி பக்கவாட்டில் பரவியது. அதற்குக் கீழே என்ன இருந்தது? மேலே என்ன இருந்தது? வலிமையுள்ள அவர்கள் தோற்றுவிப்போர் ஆயினர். சுதந்திரச் செயல் கீழேயும் சக்தி மேலேயும் இருந்தது.

    இதை உண்மையில் அறிந்தோர் யார்? இதைக் கூறவல்லோர் யார்? எங்கிருந்து அது தோன்றியது? எங்கிருந்து இந்த சிருஷ்டி வந்தது? தேவர்கள் சிருஷ்டிக்குப் பின் தோன்றியவர்கள். எனவே அவர்களாலும் இதைச் சொல்ல முடியாது.

    படைப்பின் முதல்வனாகிய அவன் எல்லாவற்றையும் படைத்தானா? அல்லது அவன் படைக்கவில்லையா? அவனது கண் எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. அவனும் அறிவானோ மாட்டானோ?

    (இருள் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் படிப்படியாக விரிவடைகிறது. ஒரு காலத்தில் மீண்டும் சுருங்கத் தொடங்கி மீண்டும் இருள் புள்ளி நிலையை அடைகிறது. இவ்வாறு மாறி மாறி விரிதலும் சுருங்குதலும் ஏற்படுவதை வேத இலக்கியம் கூறுவதாக விவேகானந்தர் கூறுகிறார். ரிக் வேதத்தில் அவ்வாறு இருப்பதாக என் கண்ணில் படவில்லை.)

    பெரு வெடிப்புக்குப் பிறகு எல்லாமே விரைவில் நடந்தேறின. நிலம் உண்டாயிற்று. உயிரினங்கள் தாவரங்கள் தோன்றின. மனிதன் தோன்றினான். மனிதன் மிருகங்களைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தான். இந்நிலையில் அவனது வாழ்வில் பெரும் மாறுதலைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனிதன் தீயைக் கண்டுபிடித்த அந்த நிகழ்ச்சி மனித குல வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல். அது பற்றி வேதம், மாதரிச்வான் என்னும் காற்று ப்ருகுவிடம் அக்னியைக் கொண்டு வந்து கொடுத்தது, ப்ருகவர்கள் மரக் கட்டைகளைக் கொண்டு தீ மூட்டத் துவங்கினர் என்று கூறுவதிலிருந்து கீழ்க்கண்டவாறு நடந்திருக்கலாம் என ஊகிக்கலாம்.

    கற்களை எறிந்து மிருகங்களை வீழ்த்தும் அறிவில் மட்டுமே மிருகங்களிலிருந்து மனிதன் வேறுபட்டிருந்த காலம் அது. வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

    அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதர்க்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

    தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

    மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான்.

    பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

    கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

    த்வஷ்டா என்பவர் மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். ரிபு சகோதரர்கள் அதைச் சீர்திருத்தி மெல்லிய ஆனால் உறுதியான மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தனர். வேதத்தில் இவர்கள் போற்றுதலுடன் நினைக்கப்படுகின்றனர்.

    மனித குல வரலாற்றின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியில் அங்கிரஸ் மற்றும் அவரது கூட்டத்தினர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

    அங்கிரஸ் காலத்துக்கு முன்னரே மனிதர்கள் இயற்கையை உற்று நோக்கி அதில் ஒரு ஒழுங்கு முறை இருப்பதையும், மனிதனுக்கென்று ஒரு ருதம் இருப்பதையும் அறிந்து கொண்டனர். அங்கிரஸும் அந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றி நடந்தார். ஆனால் அவரது சிந்தனை இதைத் தாண்டி அப்பால் சென்றது. இந்த ஒழுங்கு முறையை ஏற்படுத்தி இயக்கிக் கொண்டு இருப்பது யார் எனச் சிந்தனை செய்தார். அவரது கூட்டத்தினர் இரு பிரிவாகப் பிரிந்து ஆராய்ந்தனர். பல மாதங்கள் தவம் செய்தனர். ஒரு கூட்டம் ஒன்பது மாத முடிவில் கண்டு பிடித்த உண்மையை மற்றொரு கூட்டம் பத்து மாதத்தில் தெரிந்து கொண்டது. அவர்கள் என்ன தெரிந்து கொண்டார்கள்?

    ருதத்தை இயக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதற்கு தோற்றம் இறுதி இல்லை என்பது தான் அவர்கள் கண்ட உண்மை. அது என்றைக்கும் இருப்பது என்னும் பொருளில் அதற்கு ஸத் என்று பெயரிட்டனர். இப்படியாக அவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைந்தனர். அந்த ஸத்யத்தை வழிபட்டால் ஆனந்தம், கால உணர்வற்ற அமரத்துவ நிலை கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டனர். அதைச் சாமானிய மனிதர்கள் அடைய முடியாது தடுக்கும் தீய சக்தி எது என்பதையும் அவர்கள் அறிந்தனர்.

    நமக்கு உரிமையான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியாமல் யாரோ திருடிக் கொண்டு போய்விடுகிறார்களே எனச் சிந்தித்தனர். கடைசியில் நம்முடைய மனம் தான் நமக்கு எதிரி. நம்முடைய மனதில் உள்ள பகைவர்களை அழித்தால் ஆனந்தமாகிய பசுக்கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என அறிந்தார்கள். அந்த ஸத்தியத்தைத் தியானம் செய்யுங்கள் என்று சொன்னது அங்கிரஸ் கூட்டத்தினர் மனித குலத்துக்குச் செய்த ஒரு பேருபகாரம். வழிபாட்டின் சிறப்பை முதன் முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அங்கிரஸ்கள் என்கிறது வேதம். 10.67.2

    கண்ணுக்குத் தெரியாத ஸத்தியத்தைத் தியானம் செய் என்றால் அது எல்லோராலும் சாத்தியமா? அந்த நிலையில் தான் மனிதர்களுக்குத் தெய்வத்தைத் தொழுவதற்கான ஒரு எளிய முறையைக் கண்டுபிடித்த அதர்வன் தோன்றினார். அவர் தான் யக்ஞம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர். அக்னியைக் கண்ணால் பார்க்கலாம். மற்ற தேவர்களைக் கண்ணால் காண முடியாது. எனவே மற்ற தேவர்களுக்கான உணவை அக்னியில் சேர்த்து விடுங்கள். அவர் அதை அந்தந்தத் தேவர்களிடம் சேர்த்து விடுவார் என்று சொன்னார். தேவர்கள் பலரானாலும் எல்லோரும் ஒரே ஸத்யத்தின் பிரதிநிதிகள் தானே. அதனால் ஸத்தியத்தைத் தொழ விரும்பினால் உங்களுக்குப் பிடித்த தேவருக்கு அக்னி மூலமாக அவியுணவைக் கொடுத்து வழிபடுங்கள் என்று விளக்கினார். வேள்வி பிறந்தது.

    ப்ருகு, அங்கிரஸ், அதர்வன் ஆகிய இந்த முப்பெரும் மனித குல முன்னோர்களும் வேதத்தில் பல இடங்களில் போற்றப்பட்டு இன்றும் நம்மால் நன்றியுடன் நினைவு கூரப்படுகிறார்கள்.

    தர்ப்பணத்தின்போது இரண்டாவது ரிக்காகச் சொல்லப்படும் மந்திரம் இதற்கு ஓர் உதாரணம்.

    எங்கள் முன்னோர்களாகிய, ஒன்பது மாதம் தவம் செய்த அங்கிரஸ்கள், அதர்வாணர்கள், ப்ருகுக்கள் ஸோமபானம் தந்து வழிபடுவதற்கு உரியவர்கள். போற்றத் தகுந்த அவர்களது நல்லாசிகளில் நாம் வாழ்வோமாக. 10.14.6

    அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் யக்ஞியானாம் அபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம: 10.14.6

    இவ்வாறு பிரபஞ்சத் தோற்றம், தீயைக் கண்டுபிடித்தது, பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தது, வேள்வி மூலம் வழிபடும் முறையை ஏற்படுத்தியது ஆகிய மனித நாகரிக வளர்ச்சியின் சில முக்கிய மைல் கற்களைத் தொட்டுக் காட்டும் வேதத்தை மனித குல வரலாற்றுச் சுவடி என்று சொல்வது பொருத்தமே.

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(143)

    — சக்தி சக்திதாசன்.

     

    val143
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இனியதோர் இளமாலைப் பொழுதினிலே உங்களுடன் மடலூடாக உறவாட உட்கார்ந்து கொண்டே முன்னே இருக்கும் சாரளத்தினூடாகப் பார்க்கிறேன்.

    இங்கிலாந்தின் காலநிலையின்படி மார்ச் மாதக் குளிர் தனக்கேயுரித்தான சில்லென்ற குளிரை வீசினாலும் கதிரவனும் தன் ஒளிக்கதிர்களை அள்ளி வீசிக்கொண்டுதானிருக்கிறான்.

    வாயிற்கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினால் குளிருமோ எனும் அச்சத்தில் வீட்டினுள் கதகதப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் எனும் நினைப்பில் அழகான ஒரு நாளை அனுபவிக்காமல் விட்டு விடுபவர்களில் சிலசமயங்களில் நானும் அடங்குவேன்.

    இன்று என் சிந்தையில் இப்படி எத்தனை நாட்களை தவற விட்டு விட்டேன் ! ஐயைய்யோ ஜம்பதுகளின் அடிப்பகுதிக்கு வந்து விட்டோமே இந்த அழகான நாட்கள் வாழ்க்கையில் இனி குறைந்து கொண்டே போகுமே ! எனும் ஒருவகை அச்சம் குடி கொண்டிருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

    பொதுவாக நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் காரியங்களைத் தள்ளிப் போடுவதேயாகும்.

    இப்பழக்கத்தினால் நாம் எத்தனையோ நாட்களின் அருமையை உணர்ந்து கொள்ளாமல் அது அப்படியே நம்மைக் கடந்து செல்ல விட்டிருக்கிறோம்.

    உண்மையில் வாழ்க்கையில் நாம் சுகமாக கண்விழிக்கும் ஒவ்வொருநாளுமே நமது வாழ்க்கையில் ஒரு உன்னதமான நாள் என்பதை உணரத் தவறி விடுகிறோம்.

    ஒரு சிறிய கதை ஒன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவ வகுப்பு ஒன்றில் ஆசிரியர் சிறிய ஒரு நிகழ்வை உருவாக்கிக் காட்டுகிறார். அந்நிகழ்வு அவரின் ஒன்று விட்ட அக்காவின் வாழ்க்கையில் நிஜமாக நடந்தது என்று விவரிக்கிறார்.

    அவரை விட பத்து வயது மூத்தவரான அவரது ஒன்று விட்ட அக்கா மிகவும் கெட்டிக்காரியானவர். அவர் நன்றாகப் படித்து முன்னேறியவர். ஒரு பெரிய கம்பெனியின் பிரதான நிர்வாக இயக்குனராக பதவி வகித்தார்,

    திருமணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது அல்ல எனும் நிலைப்பாட்டில் தனக்கு மனதுக்குப் பிடித்தவருடன் மேலைநாட்டு வழக்கப்படி ஒன்றாகக் குடித்தனம் நடத்தி வந்தார்.

    திடீரென ஒருநாள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். சரியாக அவர் இறந்து மூன்று நாட்களின் பின்னர் அவரது பிரிவால் வாடிய அவரது வாழ்க்கைத் துணைவர் (கணவரல்ல) அவரது அறையிலிருந்த பொருட்களை பார்த்து தன் துணையின் பிரிவை ஆற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் கையில் ஒரு அழகிய பரிசுப் பெட்டியினுள் பெண்கள் அணியும் அழகான பட்டு ஸ்கார்ப் ஒன்று அகப்பட்டது.

    ஆமாம் அது அவ்வாழ்க்கைத்துணைவரால் அவரது துணைவியாருக்கு 7 வருடங்களின் முன்னால் பரிசளிக்கப்பட்டது. அதை துணவர் பரிசளித்த போது அதைக் கண்டு மகிழ்ந்த அந்த மறைந்த பெண்மணி அதன்மீது அளவில்லாத பற்றுக் கொண்டு அதனை அணைத்தபடி தூங்கி விட்டு இதை ஒரு சிறப்பான நாளில் தான் அணிந்து கொள்வேன் என்று என்று சொன்னார்.

    ஏழுவருடங்களுக்குப் பின்னர் சொன்ன அந்தப் பெண்மணி மறைந்து போனார், ஆனால் அந்த ஸ்கார்ப் . . . . அணியப்படாமலே இருந்தது..

    அப்படியாயின் அந்தப் பெண்ணின் வாழ்வினில் கடந்த ஏழுவருடங்களில் எந்த ஒரு நாளுமே சிறப்பான நாளாக இல்லை என்றாகி விட்டது இல்லையா ?

    அன்பினிய வாசக உள்ளங்களே நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுமே இறைவனால் நமக்குத் தரப்பட்ட சிறப்பான பரிசாகும். வாழ்க்கை நம் எல்லோருக்கும் எப்போதும் நியாயமானதாக இல்லாதிருந்தாலும் மனவருத்தம், தடைகள் , முட்டுக்கட்டைகள் என்பன எமது வாழ்க்கைத் திட்டங்களையும், ஒவ்வொருநாளையும் அதற்கேயுரிய கெளரவத்துடனும் அனுபவிப்பதை தடை செய்ய அனுமதிக்கக் கூடாது.

    நமது நிலை மீது நாமே பரிதாபம் கொள்ளும் மனப்பான்மை என்றுமே நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லாது. முக்கல்களும், முனகல்களும் எப்போதும் வெற்றியின் சந்தர்ப்பங்களை பயமுறுத்தித் துரத்தி விடும்.

    எப்போதும் நாம் மகிழ்ச்சிகரமான நாளைத் தேடிக்கொண்டு இன்றைய நாளைத் தொலைத்து விடுவதில் வல்லவர்கள்.

    வாழ்க்கை நம்மீது வீசும் சவால்களை திறந்த மனதுடன் எதிர்கொண்டு அவைகளை நமக்குச் சாதகமான வழியில் மாற்றிக் கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனமான செயலாகும். நமது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அதனை நாம் செப்பனிடும் விதத்திலேயே தங்கியுள்ளது.

    நமது பொறுப்புகளை நாம் தட்டிக் கழித்துக்கொண்டு விதி, சந்தர்ப்பம், சூழ்நிலை எனும் பொய்க்காரணங்களின் மீது பழியைப் போட்டுவிட்டு எமது இயலாமையை மறைத்து விடுவதில் நாம் அனைவரும் திறமைசாலிகளே !

    வாழ்வில் நாம் உயிருடன் வாழும் ஒவ்வொருநாளும் சிறப்பான நாட்களே ! எனது உற்ற நண்பன் ஒருவன் அடிக்கடி எனக்குக் கூறுவது ” சீரற்ற காலநிலை என்று ஒன்று இல்லை அக்காலநிலைக்கு உகந்தவாறு நாமணியும் உடை சீரற்று இருப்பதால் தான் காலநிலை நம்மைப் பாதிக்கிறது “

    என் ஜன்னலின் வழியே நான் கண்ட பகல் பொழுது என் மனதில் விரித்த சிந்தனை எனும் தாமரையில் துளிர்த துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    அடுத்தவாரம் சந்திக்கும் வரை கிடைக்கும் ஒவ்வொருநாளையும் இறுகப்பற்றி மகிழ்வுடன் வாழுங்கள்.

    val143.1
    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மணி ஓசை!

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    மணி ஓசை கேட்டவுடன்
    மனமெல்லாம் மகிழ்கிறது
    துணி வெல்லாம் பிறக்கிறது
    தூயநிலை வருகிறது!

    மால்மருகன் கோவில் மணி                              temple bell
    மருந்தாக இருக்கிறது
    தோல்வி எலாம் தொலைகிறது
    துவண்டநிலை போகிறது!

    வேலவனின் கோவில் மணி
    வினையெல்லாம் போக்(கு)கிறது
    நால்வேதப் பொருளை எல்லாம்
    நயமாகத் தருகிறது!

    சிவனாரின் கோவில் மணி
    சீர்திருத்த முயல்கிறது
    அவமானச் செயல் எல்லாம்
    அதுபோக்க முயல்கிறது!

    மாதாவின் கோவில் மணி
    மனங்குளிர வைக்கிறது
    ஆதாரம் தான் எனவே
    அதுஒலித்து நிற்கிறது!

    விகாரையின் கோவில் மணி
    விண்ணென்று ஒலிக்கிறது
    வீண் வார்த்தை பேசுவதை
    விட்டுவிடு என்கிறது!

    கோவில்மணி ஓசை கேட்டால்
    குணமெல்லாம் மாறுமையா
    குவலயத்தில் நாம் வாழ
    கோவில்மணி உதவும் ஐயா!

    ஆதலினால் கோவில் தன்னை
    அனைவருமே நாடிநிற்போம்
    ஆண்டவனின் அருள் பார்வை
    அனைவருக்கும் கிட்டும் ஐயா!

     

    Share
  • போச்சு எல்லாமே போச்சு!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    படித்த படிப்பும்
    வீணாகப் போச்சு
    வேலைக்காக அரசியல்வாதி
    கால் பிடித்து
    மானம் போச்சு!

    கையில காசி காணாது
    மாமா மச்சினன் உறவுகள்
    அறுந்து போச்சு
    இதுதானடா உறவுகள்
    என்று வெறுத்துப் போச்சு!

    வாழ்ந்தும் வாழாமலும்
    முடியும் நரைத்துப் போச்சு
    காதல் என் காதல்
    அது கண்ணீரில் கரைந்து போச்சு!

    என் வாழ்க்கை ‘இன்டரஸ்டிங்’
    இல்லாமல் போச்சு
    இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு
    ஜாலியாப் போச்சு!

    கல்குடா வாழ்க்கை
    வளைகுடா வாழ்க்கையாக
    மாறிப் போச்சு
    தனியாகவே வாழ்ந்து
    வெறுத்துப் போச்சு!

    ‘கிளாமர்’ காலமெல்லாம்
    மலையேறிப் போச்சு
    உழைத்த பணம் எப்படியோ
    தீர்ந்து போச்சு!

    ஊர் நிலமைகளை நினைத்து
    என் தூக்கமும் போச்சு
    ஊர் படையெல்லாம்
    பெரும் படையாகவும் ஆச்சு!

    பணம் இருந்தால் மாத்திரமே
    அரச உத்தியோகம் என்பது
    சரியாகப் போச்சு
    நாடு ரொம்ப கெட்டு போச்சு!

    பட்டம் படித்தவன்
    பாலைவனம் மேய்வது
    பழகிப் போச்சு
    சமூகமும் தம் நிலைமறந்து
    போச்சு!

    படித்தவர்களுக்கு
    வேலை என்பது
    குழந்தைப் பேச்சு
    இதைக் கேட்டுக் கேட்டு
    காதும் புளித்துப் போச்சு!

    நம்ம தலைவர்களும்
    இப்படியா என புரிந்து போச்சு
    காலத்தின் கோலம்
    மாறிப் போச்சு!

    நாடு ஏன்டா இப்படி
    குட்டி சுவராப் போச்சு
    என் கதை கேட்டு ஏன்டா
    உன் முகம் தொங்கிப் போச்சு!

    லாப்டொப்பிலும்,போனிலும்
    என் வாழ்க்கை போயாச்சு
    ஏன்டா இப்படி வெளிநாட்டு
    வாழ்க்கை கருகிப் போச்சு!

     

    Share
  • குருட்டுக் கவிதை!

    -சரவணன், கோலாலம்பூர்

    ஔவைக்கு கனி 
    கொடுத்திருந்த முருகன் 
    பாவம்.. பசித்திருந்த 
    குப்பம்மாள்களைத்தான் 
    கண்டு கொள்ளவே இல்லை….!

    நந்தனுக்கு விலகி 
    வழிவிட்டிருந்ததாம் 
    நந்தியும்.. அப்போதும்கூட 
    சிவன் அழைத்திருக்கவில்லை 
    உள்ளே வா என்று…!

    புழக்கடை வாசல் 
    மிதித்துவிட்டதற்காய்ச்
    சூடு வாங்கியிருந்த 
    சுப்பனின் முதலாளியும் 
    அதிகாலைகள் தவறாமல் 
    சொல்லிவிடுவார்… 
    வினைதீர்ப்பாய் விநாயகாவென…!

    யோசித்து ஆழ்ந்திருக்கையில் 
    அம்மா அதட்டினாள்…
    நேரத்தோட கோயிலுக்குப் போ… 
    இல்லன்னா சாமி 
    கண்ணைக் குத்திரும்…!

    நெடுஞ்சாண்கிடையாய் 
    நீட்டிப்படுத்து…தரிசனங்களுக்காய் 
    விழிகள் திறந்தேன்… 
    செட்டியார்களால் கட்டப்பட்டு 
    அவர்களுக்காய் 
    பாத்தியப்பட்டது… எனச் சொன்னது 
    முதற் பிரகாரம்…!

    சாமி…
    கண்ணைக் குத்தியிருக்கலாம்!!

     

    Share
  • எதிர்பார்க்கும் நட்பு!

    ரா. பார்த்தசாரதி

    குறையில்லாத  மனிதன்  இவ்வுலகில்  உண்டா?
    குறையினைச் சுட்டிக் காண்பிக்காத மனிதர்கள் உண்டா?
    குறையினைக் களைய நல்வார்த்தைகளை  எடுத்துரைப்பதுண்டா?
    இனிய சொல்கொண்டுதான்  அதனைத் தீர்ப்பதுண்டா?

    உலகமே  என்னை  ஒதுக்கி  வைத்தாலும்
    என்னைப்  பாதுகாத்து   நிழல் கொடுப்பாயா?
    நாளுக்கு நாள்  கணக்குப்  பார்க்கும் மனிதர்கள் இடையே
    தன்மையுடன் பழகும் உன் நட்பை எதிர்பார்க்கலாமா?

    நான் வெல்லும்போது  வாழ்த்துவதைவிட,
    நான் வீழும்போது  என்னைத் தாங்குவாயா?
    எதிர்பார்ப்பினால் ஏமாற்றம் அடைவது தெரிந்திருந்தும்
    எதிர்பார்ப்பு இல்லாத உன் நட்பை அளிப்பாயா?

    Share
  • தாய்மை

    திருமதி. மீனாட்சி நாகப்பன், புதுக்கோட்டை

    ‘பெண்’ அவள் பேசும் பொற்சித்திரம்!
    பெண்- அவள் மகத்துவம் பெறும் நன்னாள் எதுவன்றோ!     mom with child
    அது “தாய்மை”அடையும் நாளன்றோ!

    மங்கை – அவள் மலர்மாலை, மாங்கல்யம் அணிந்து
    மனங்கள் சங்கமித்து மண்ணுலகில்
    கரு உருப்பெற்று, உயிர்பெற்று
    கண்ணுக்கு கருவிழிபோல் காத்திடுவாள் கண்ணும் கருத்துமாய்!

    மடியில் கிடத்தி மழலை மொழிகேட்டு
    மனதும், நினைவும் மகிழ்ச்சியாகப்
    பூரித்துப் புன்னகை பூப்பதும் பெண்ணாலே!

    இடையில் தன்மழலையை இருத்தி வைத்து
    இனிய மொழிகள் கேட்டிடுவாள்!
    விண்ணகத்து நிலாக்காட்டிச் சோறு
    ஊட்டிடுவாள்! தாய்மைப்பேறு பெருமை
    பெற்ற தவத்தை நிறைவு செய்ய!

    பள்ளி சென்ற சிறுபிள்ளை பாலகன் ஆனாலும்
    தாயவளுக்கு தங்கக்குழந்தைகளே
    அரியாசனத்தில்அமர வைப்பவர்கள்!

    கருணையும் அன்பும் கலந்து
    கருவிழியில் தேக்கிடுவாள்!
    கண்ணீரில் தாலாட்டிடுவாள்
    தாய்மைப்பேறு பெற்ற பின்!

    ’ஆண்-பெண்’ என்றழைக்கும்போது
    ஏற்படும் கடினம்
    ’அம்மா – அப்பா’ என்றழைக்கும்போது
    மென்மை ஆடை அணிகிறது
    இந்தத் தாய்மைப்பேறு பட்டம்
    பெறுவதால் தரணியில்!

    Share
  • அவன், அது, ஆத்மா! (3)

    மீ. விசுவநாதன்

    புளியமரத்தடி ஜோசியர்

    அவன் பிறந்த பின்பு , அதன் குறிப்புகளை எடுத்துக் கொண்டு கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோட்டைத் தெரு புளியமரத்தடி ஜோசியர் ப்ரும்மஸ்ரீ இராமநாத ஐயரிடம் கொடுத்து அவனது ஜாதகத்தைக் கணித்தார்கள்.

    கல்லிடைகுறிச்சி புளியமரத்தடி ஜோசியர் மிகப் பிரபலம். அவரைத் தேடி வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்துச் செல்லவது இன்றும் தொரடர்ந்து நடந்து வருகிறது. கல்லிடைக் குறிச்சி கிராமத்தின் ஆஸ்தான ஜோசியர் இவர்கள்தான். ஊர்க் கோவில் உற்சவங்களுக்கு நாள் பார்த்துச் சொல்வதும், பரிகாரங்கள் சொல்வதும், சாஸ்தாப்ரீத்தி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாள் குறித்துச் சொல்வதும் இவர்தான். இராமநாத ஜோசியருக்குப் பின் அவரது பிள்ளைகள் கோபால சர்மா, ராதா கிருஷ்ண சர்மா, செல்வி சுபா ஆகியோர் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இன்றும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு ஆஸ்தான ஜோதிடர் செல்வி. சுபா தான். இவர் ஒரு கணித ஆசிரியையும் கூட.

    amv

    கல்லிடைகுறிச்சியில் இருந்து ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிங்கம்பட்டி என்ற சிறிய கிராமம். அங்குதான் மிகப் பிரபலமான சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானம் இருக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த மிக அழகிய ஊர். சுற்றி எங்கும் வயல் வெளிகளும், தோப்புகளுமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியான பூமி. சிங்கம்பட்டியில் இருந்து மிக அருகிலேயே உள்ளதுதான் மணிமுத்தாறு. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மணிமுத்தாறு நீர்த்தேக்கம் (118 அடி ஆழம் கொண்டது) இங்கு உள்ளது. நெல்லை மாவட்டத்தின் கால்வாய்ப் பாசனத்துக்கு மிக முக்கியமான பங்கு வக்கிக்கும் நீர்த்தேக்கமிது. மணிமுத்தாறு அருவியும், எண்பதடி ஆழங்கொண்ட தடாகமும் அழகாக இருக்கும். தண்ணீர் பளிங்கு போல இருக்கும். இளைஞர்களுக்கு இந்தத் தடாகத்தில் பாய்ந்து விழுந்து, முங்கி, எழுந்து நீந்தி விளையாடுவது தனி ஆனந்தம். அதற்கு மேலே மாஞ்சோலை என்ற பச்சைப் பசேல் என்றிருக்கும் குளிர்ந்த மலை சார்ந்த ஊர். இங்கு தேயிலைத் தோட்டங்கள் அதிகம். இங்கு விளையும் தேயிலை உலகப் பிரசித்தி பெற்றது. அதற்கும் மேலே உள்ளது கோதையார் என்னும் ஊர். எப்பொழுதும் “சில்” லேன்றுதான் இருக்கும். இக்காடுகளில் புலி, சிறுத்தை, மான், மிளா , யானைகள் போன்ற வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த மலை புலிகளின் சரணாலயம்.

    அழகழகான வண்ண வண்ணப் பறவைகளும், சிங்கவால் குரங்குகளும் இந்தக் காடுகளில் அதிகம் காணலாம்.

    அந்தத் தென்பொதிகை மலைத் தொடரில் இன்னொரு பக்கத்தில் உள்ளது பாபநாசம். இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு உள்ளது. அதன் கொள்ளளவு 144 அடி. மூன்று புறம் மலைப்பகுதியைக் கொண்ட அணைக்கட்டு. இந்த அணைக்கு நீர் வருகின்ற முக்கியமான பகுதியே “பாணதீர்த்த அருவி” ஆகும். இந்த அருவிக்கரை திரைபடத் துறையினருக்கு மிகவும் பிடித்தமான இடம். “ரோஜா” படத்தில் வரும் “சின்னச் சின்ன ஆசை”ப் பாடல் இங்குதான் எடுக்கப் பட்டது. இந்த அருவி நீர் விழுந்து ஓடிப் பெருகிய இடமே “பாபநாசம் அணைக்கட்டு”. அதில் இருந்து வெளிவரும் நீர்தான் மலையின் வழியாக ஓடி “கல்யாண தீர்த்தம்” என்று விழுந்து, அதற்கும் கீழே “அகஸ்தியர் அருவி” என்னும் பெயருடன் வருடம் பூராவும் வற்றாமல் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியது. இந்த கல்யாண தீர்த்த அருவியில் குளிக்கும் பொழுது கால்வழுக்கி விழுந்த தன் மகளைக் காப்பாற்றச் சென்று தானும் அந்த அருவித் துறையிலேயே விழுந்து மறைந்தவர்தான் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகி “வ.வே.சுப்பிரமணியம் ஐயர்”. அவர் அருவியில் குளிக்கச் செல்லும் முன்பாக, தனது உடைகளை கரையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் வைத்திருக்கும் படித் தந்து சென்றார். அவர்தான் காமராஜர் அமைச்சரவையில் கல்வி மந்திரியாக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்களுடைய சித்தப்பா, பின்னாளில் துறவறம் பெற்று சுவாமி சித்பவானந்தர் என்ற பெயருடன் திருப்பராய்துறை ஆஸ்ரமம் நிறுவி, ஆன்மிகத் தொண்டாற்றியவர். அவரது சீடரே சுவாமி ஒம்காரானந்தர். தேனீயில் வேத புரியில் ஆஸ்ரமம் அமைத்து மிகச் சிறந்த முறையில் ஆன்மிகச் சேவை செய்து வருகின்றார்.

    T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி

    amv1

    தென்பொதிகையில் களக்காடு, மணிமுத்தாறு, பாநாசம் மலைத் தொடரில் சுமார் எண்பதாயிரம் ஏக்கர் காட்டு நிலப்பரப்பு சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்துக்குச் சொந்த மாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய வரலாறு கொண்டது இந்த ஜமீன். இதன் 32வது பட்டத்து ராஜாதான் “தென்னாட்டுப் புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து ஷண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி” . சுருக்கமாக T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி. இவருக்கு இப்பொழுது சுமார் வயது எண்பதுக்கும் மேலாகிறது. நன்கு கல்வி கற்றவர். சிறந்த ஆன்மிகவாதி. இவர்தான் இந்த ஜமீன் பரம்பரையின் கடேசி ராஜா. ஜமீன் பட்டத்தைத் துறந்தவர்.

    தீர்த்தபதிப் பட்டம் வந்த வரலாறு

    சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்தின் குரு சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார். இப்போதைய ராஜா T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் கொள்ளுத்தாத்தா (பூட்டனார்) திவான் பகதூர் சுப்ரமணியத்தேவர் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யார் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசித்தார். அப்பொழுது சாதுர்மாஸ்ய விரத காலம். ராஜா சுவாமிகளை வணங்கி தங்களது சிங்கம்பட்டி ஜமீனுக்கு விஜயம் செய்யும் படி வேண்டுகிறார்.

    தனக்கு வாரிசு வேண்டும் என்று பிராத்தித்து, சாதுர்மாஸ்யம் விரதம் முடிந்த பின்பு சுவாமிகளின் பல்லக்கைச் சுமந்துகொண்டு தங்களது ஜமீனுக்கு அழைத்துச் செல்கிறார். சிங்கம்பட்டியில் சில பிராமணக் குடும்பங்களை குடி அமர்த்தி அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகிறார். அப்பொழுது சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார் அவர்களது ஜமீன் பாரம்பர்யம் பற்றித் தெரிந்து கொள்கிறார். பாணதீர்த்தம் வரை அவர்களது ஜமீனுக்கு உட்பட்டு இருந்ததால், அந்தப் பரம்பரைக்கு “தீர்த்தபதி” என்று பட்டம் தந்து ஆசீர் வாதித்தார்.

    அதனால் அடுத்த பரம்பரை ராஜாவின் பெயர் “முருகதாஸ் தீர்த்தபதி” என்று அழைக்கப் பெற்றார். அவர் தனது காலத்தில் சிருங்கேரி பீடத்தின் 34வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசனம் செய்து தனது குருநாதரை அவரும் பல்லக்கில் சுமந்து சென்று தனது குருபக்தியை வெளிப் படுத்தினார். இப்போதய ராஜா T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களும் தங்களது குருநாதரை இப்பொழுதும் குரு விச்வாசத்துடன் தரிசனம் செய்து வருகிறார்.

    ஒவ்வொரு வருடமும் ஆடி அம்மாவசை அன்று பாபநாசம் காரையாறு மலையில் உள்ள ஸ்ரீ சொரிமுத்தையனார் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, இரவில் “இரவில் ராஜ தரிசனமும்” தருகிறார். இந்த விழாவைக் காண லட்சக் கணக்கான மக்கள் இன்றும் கூடுகின்றார்கள். சிங்கம்பட்டி சமஸ்தான வாரிசுகள்தான் இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள்.

    1953 க்குப்பின் ஜமீன்கள் மறந்தது விட்டன. இருந்தாலும் அதன் பாரம்பர்யச் சின்னங்களை இன்றைய ராஜா பாதுகாத்து வருகிறார்.

    அதில் முக்கியமானது சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று திரும்பிய சமயம், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்குப் பரிசளித்த மரத்தாலான யானைச் சிறப்பம். பாஸ்கர சேதுபதி மன்னர், இப்போதய முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார்.

    இத்தனை பெருமை பெற்ற சிங்கம்பட்டி ஜமீன்தார்களால் அழைத்து வரப்பட்டு கல்லிடைகுறிச்சி கோட்டைத் தெருவில் குடியமர்த்தப் பட்டக் குடும்பம் தான் “புளிய மரத்தடி” ஜோதிடக் குடும்பம்.

    அவன் பிற்காலத்தில் 1996ல் அவனது முதல் சிறுகதைத் தொகுதி “இரவில் நனவில்” புத்தகத்தை கவிஞர் வாலி அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துக் கொடுத்தான். அவர் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, அவனைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி, ” ஒய் ஒமக்கு எந்த ஊர்?”

    “எனக்குக் கல்லிடைக் குறிச்சி என்றான்.”

    உடனே அவர்,” நான் “செல்வம்” படத்திற்காகப் பாட்டெழுதக் குற்றாலம் சென்றிருந்தேன்.. அப்பொழுதுதான் எனக்கு மகன் பிறந்த செய்தி வந்தது… பக்கத்தில் இருந்த படத் தயாரிப்பாளரும், நடிகருமான வி.கே. ராமசாமி என்னிடம், “கவிஞரே இப்படியே கல்லிடைக்குறிச்சிக்குப் போயி புளியமரத்தடி ஜோசியரைப் பார்த்து உங்க மகனோட ஜாதகத்தைக் குறிச்சிக்கிட்டுப் போகலாம் என்றார்..” என்று கல்லிடைகுறிச்சியின் பெருமையைச் சொன்னார். அதன் பிறகு கவிஞர் வாலி அவர்களை அவன் பல முறை சந்தித்து உரையாடும் பேரு பெற்றான். அதை அவன் சமயம் வரும் பொழுது எழுதுவான்.

    அவனுக்கு ஒரு வயது நெருங்கும் சமயம், அவனுக்குத் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் இருந்த பொழுது, வீடு வாசல் படியை முதல் முதலாகத் தாண்டியதற்காக திருஷ்டி சுற்றிப் போட்டார்களாம். எப்படித் தெரியுமோ?…உப்புக் கொழக்கட்டை செய்து, அதாவது சிறிது சிறிதாக அம்மணிக்கொழகட்டை செய்து, குழந்தை மெதுவாகப் படி தாண்டும் பொழுது அதன் தலையில் அந்தக் கொழக்கட்டைகளைக் கொட்டுவார்களாம். அதன் பின் அவைகளை எடுத்து வாய்காலில் மீனுக்கு உணவாகப் போட்டுவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஆசிதர வந்தவர்களுக்கு வெற்றிலை, பாக்குப் பழத்துடன் கொஞ்சம் கொழக்கட்டையும் தருவார்களாம்.

    இதுஎப்படி அவனுக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா?..

    அவனுடைய நண்பனின் சகோதரி, போலீஸ் காரராத்துக் கோமு அக்கா , சென்னையில், தியாகராயநகர் பஸ்நிலையம் பின்புறம் போலீஸ்கோர்டேர்ஸ்ல் இருந்த (1973 ஜூலை மாதம்) பொழுது அவனுடைய நண்பர்கள் குட்டிச் சங்கர், பிரபுவுடன் பார்க்கச் சென்றான்.

    அப்பொழுது ,”அடேய்யப்பா..எப்படி வளந்துட்டே…ஒனக்கு ஒரு வயசாகற போது, வாசப்படி தாண்டின ஒடனே ஒன்னோடு பாட்டி எங்க எல்லார் கைலயும் கொழக்கட்டையைக் கொடுத்துக் கொழந்தை தலைவழியாக் கொட்டுங்கோடி” என்று சொன்னதுதான் ஞாபகம் வருது என்று சொன்னாள்.

    அதன் பிறகு அவன் படிப்படியாக முன்னால் வந்தான்….

    (01.02.2015)

    இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    m s s

    rajajiதிரையிசைப் பாடல் வரிசையில் இடம்பெறாவிட்டாலும் பொற்காலப் பாடல்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்ற இப்பாடல் இடம்பெறவேண்டும் என்கிற வேட்கையால் இணைக்கப்படுகிறது. மூதறிஞர் ராஜாஜி அவர்களால் இயற்றப்பட்ட பாடல் என்கிற அந்தஸ்தும்… சங்கீதவானில் புகழ்க்கொடிவீசிய பாட்டரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய வகையிலும்…

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பெறவேண்டிய ஆனந்த நிலையையே பல்லவியாக்கி… மறைபொருள் நோக்கிய மகத்தான தவமாக ஊனுருக… உயிருருக… தானுருகி யாவரும் கேட்க விரும்பும் பாடலாய்… எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு இன்புறத்தக்க பாடல்!

    ஐ.நா.சபையில் திருமதி.எம்.எஸ்சுப்புலட்சுமி அவர்கள் குரலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப்பாடலும் இதுவே என்கிற கூடுதல் தகவல் தமிழர்கள் அனைவரும் பெறுகின்ற பெருமை!

    பாடல்: ராஜாஜி
    பல்லவி
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    குறையொன்றுமில்லை கண்ணா
    குறையொன்றுமில்லை கோவிந்தா

    அனுபல்லவி
    கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
    குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

    சரணம் – 1
    வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க
    வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    ராகம் காபி
    சரணம் – 2
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
    உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
    குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்
    குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா

    சரணம் – 3
    குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    ராகம்: சிந்துபைரவி
    சரணம் – 4
    கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி
    நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

    சரணம் – 5
    யாரும் மறுக்காத மலையப்பா
    உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    Share