ஜெயஸ்ரீ ஷங்கர்

24653
மன்மதன் கரந்தனில்
தாய்மையின் வில்
ரதிதேவி வரமிட்டாள்
தாய்மையே வெல்..!

தாயுமானவன் அவன்
விதைத்த வித்துக்கள்
புவியெங்கும் பூ
மரங்களாகி விதை தூவி
தாய்மைக்கனி தாங்கி
புவிதாங்கும் சுமைதாங்கி..!

கார்மேகம் தாங்கும் மழைநீராக
மங்கையரின் மனந்தனில்
தாய்மை உறங்கும்..!

பெற்றெடுத்துத் தாயான
நிமிடம் முதலாய் தியாகத்தின்
உறைவிடமே தாய்மை..!

பெண்மையின் பூரணம்
தாய்மையே தலையாயம்
தேசம் கடந்தும்
புரியும் தாய்மொழி ..!

அன்பின் முகவரி
அன்னையே
தராசு முள்ளென
தாய்மைக்கு
ஆண் பெண்
பேதங்களில்லையே..!

ஏங்கும் மனமெங்கும்
தாய்மையின் சங்கமம்
பெண்ணவளின் கடமைகளுள்
தாய்மையே குங்குமம்..!

தன் பசி துறந்து
பெற்ற மக்களின் வயிறு
நிறைக்கும் அட்சய பாத்திரம்..!

ஆயிரம் ஜென்மங்களும்
நீயே எந்தன் தாயாக வேண்டும்
வேண்டும் மனம் தான்
தாய்மையின் வெற்றி…!

இறைவனின் பிரதிநிதியாகி
வீட்டுக்கு வீடு
வாழும் காமதேனு..!

தாய்மைக்கில்லை
வேலியும் விலங்கும்
நஞ்சையும் அமுதையும்
சமமாக்கி நிறுத்தும்
துலாக்கோல் தாய்மையே ..!

பூலோகப் உயிரினங்களுக்கு
இறைவன் கொடுத்த
உயிர் உரம் தாய்மை….!

தாய்மை ஒரு வரம்
அதுவே மங்கையரின்
சிந்தாமணி மகுடம்..!

ஏழ்மையிலும் தாய்மை
பெருமையையே தாங்கும்
ஊமை நெஞ்சங்களும்
தாய்மைக்கே ஏங்கும்..!

உருவைத் தாங்கி உணர்வில் ஏங்கி
உயிரை வைத்து உயிரைப் பிரித்து
வாழும் அதிசய அன்னம்….அம்மா..!

ஆயிரம் கோடி யுகங்கள்
பிறந்தாலும் அழிந்திடாது
வளரும் உறவு தொப்புள்கொடி..!

ஜனன மரண கணக்குக்குள்
விடையாக விதையாகி
மறைந்து மலரும்
தாய்மைக் கிளைகள்..!

காந்தம் மட்டும் ஈர்ப்பதில்லை இரும்பை
தாய்மையின் காந்தமும்
இளக்கும் இரும்பு மனத்தை..!

தாய்மை என்றொரு பிம்பம்
மனித இதயங்களின் பிரதிநிதியாய்
பேதங்களின்றி அழகு காட்டும்
மாயக் கண்ணாடி..!

தாய்….அன்பின் ஆதிக்கத்தால்
உள்ளம் நிறைத்து
அள்ளிக் கொடுக்கும்
அன்புச் சுரங்கம்…!
இதயங்கள் ஒட்டி
உறவாடும் நந்தவனம்..!

எல்லையில்லா அன்பு கொண்டு
அன்னையாய் நிற்பவள்
தாய்மையின் வாஞ்சையால்
பிரபஞ்சத்தையும் வசமாக்குவாள்
பராசக்தி வடிவானவள்
இப்பரத்தில் தாய்மையே வெல்லும்….!

ஜெயஸ்ரீ ஷங்கர்
ஹைதராபாத்

1 thought on “தாய்மை

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க