— சக்தி சக்திதாசன்.

 

val143
அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

இனியதோர் இளமாலைப் பொழுதினிலே உங்களுடன் மடலூடாக உறவாட உட்கார்ந்து கொண்டே முன்னே இருக்கும் சாரளத்தினூடாகப் பார்க்கிறேன்.

இங்கிலாந்தின் காலநிலையின்படி மார்ச் மாதக் குளிர் தனக்கேயுரித்தான சில்லென்ற குளிரை வீசினாலும் கதிரவனும் தன் ஒளிக்கதிர்களை அள்ளி வீசிக்கொண்டுதானிருக்கிறான்.

வாயிற்கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினால் குளிருமோ எனும் அச்சத்தில் வீட்டினுள் கதகதப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் எனும் நினைப்பில் அழகான ஒரு நாளை அனுபவிக்காமல் விட்டு விடுபவர்களில் சிலசமயங்களில் நானும் அடங்குவேன்.

இன்று என் சிந்தையில் இப்படி எத்தனை நாட்களை தவற விட்டு விட்டேன் ! ஐயைய்யோ ஜம்பதுகளின் அடிப்பகுதிக்கு வந்து விட்டோமே இந்த அழகான நாட்கள் வாழ்க்கையில் இனி குறைந்து கொண்டே போகுமே ! எனும் ஒருவகை அச்சம் குடி கொண்டிருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

பொதுவாக நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் காரியங்களைத் தள்ளிப் போடுவதேயாகும்.

இப்பழக்கத்தினால் நாம் எத்தனையோ நாட்களின் அருமையை உணர்ந்து கொள்ளாமல் அது அப்படியே நம்மைக் கடந்து செல்ல விட்டிருக்கிறோம்.

உண்மையில் வாழ்க்கையில் நாம் சுகமாக கண்விழிக்கும் ஒவ்வொருநாளுமே நமது வாழ்க்கையில் ஒரு உன்னதமான நாள் என்பதை உணரத் தவறி விடுகிறோம்.

ஒரு சிறிய கதை ஒன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒரு வாழ்க்கைத் தத்துவ வகுப்பு ஒன்றில் ஆசிரியர் சிறிய ஒரு நிகழ்வை உருவாக்கிக் காட்டுகிறார். அந்நிகழ்வு அவரின் ஒன்று விட்ட அக்காவின் வாழ்க்கையில் நிஜமாக நடந்தது என்று விவரிக்கிறார்.

அவரை விட பத்து வயது மூத்தவரான அவரது ஒன்று விட்ட அக்கா மிகவும் கெட்டிக்காரியானவர். அவர் நன்றாகப் படித்து முன்னேறியவர். ஒரு பெரிய கம்பெனியின் பிரதான நிர்வாக இயக்குனராக பதவி வகித்தார்,

திருமணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது அல்ல எனும் நிலைப்பாட்டில் தனக்கு மனதுக்குப் பிடித்தவருடன் மேலைநாட்டு வழக்கப்படி ஒன்றாகக் குடித்தனம் நடத்தி வந்தார்.

திடீரென ஒருநாள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். சரியாக அவர் இறந்து மூன்று நாட்களின் பின்னர் அவரது பிரிவால் வாடிய அவரது வாழ்க்கைத் துணைவர் (கணவரல்ல) அவரது அறையிலிருந்த பொருட்களை பார்த்து தன் துணையின் பிரிவை ஆற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் கையில் ஒரு அழகிய பரிசுப் பெட்டியினுள் பெண்கள் அணியும் அழகான பட்டு ஸ்கார்ப் ஒன்று அகப்பட்டது.

ஆமாம் அது அவ்வாழ்க்கைத்துணைவரால் அவரது துணைவியாருக்கு 7 வருடங்களின் முன்னால் பரிசளிக்கப்பட்டது. அதை துணவர் பரிசளித்த போது அதைக் கண்டு மகிழ்ந்த அந்த மறைந்த பெண்மணி அதன்மீது அளவில்லாத பற்றுக் கொண்டு அதனை அணைத்தபடி தூங்கி விட்டு இதை ஒரு சிறப்பான நாளில் தான் அணிந்து கொள்வேன் என்று என்று சொன்னார்.

ஏழுவருடங்களுக்குப் பின்னர் சொன்ன அந்தப் பெண்மணி மறைந்து போனார், ஆனால் அந்த ஸ்கார்ப் . . . . அணியப்படாமலே இருந்தது..

அப்படியாயின் அந்தப் பெண்ணின் வாழ்வினில் கடந்த ஏழுவருடங்களில் எந்த ஒரு நாளுமே சிறப்பான நாளாக இல்லை என்றாகி விட்டது இல்லையா ?

அன்பினிய வாசக உள்ளங்களே நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுமே இறைவனால் நமக்குத் தரப்பட்ட சிறப்பான பரிசாகும். வாழ்க்கை நம் எல்லோருக்கும் எப்போதும் நியாயமானதாக இல்லாதிருந்தாலும் மனவருத்தம், தடைகள் , முட்டுக்கட்டைகள் என்பன எமது வாழ்க்கைத் திட்டங்களையும், ஒவ்வொருநாளையும் அதற்கேயுரிய கெளரவத்துடனும் அனுபவிப்பதை தடை செய்ய அனுமதிக்கக் கூடாது.

நமது நிலை மீது நாமே பரிதாபம் கொள்ளும் மனப்பான்மை என்றுமே நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லாது. முக்கல்களும், முனகல்களும் எப்போதும் வெற்றியின் சந்தர்ப்பங்களை பயமுறுத்தித் துரத்தி விடும்.

எப்போதும் நாம் மகிழ்ச்சிகரமான நாளைத் தேடிக்கொண்டு இன்றைய நாளைத் தொலைத்து விடுவதில் வல்லவர்கள்.

வாழ்க்கை நம்மீது வீசும் சவால்களை திறந்த மனதுடன் எதிர்கொண்டு அவைகளை நமக்குச் சாதகமான வழியில் மாற்றிக் கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனமான செயலாகும். நமது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அதனை நாம் செப்பனிடும் விதத்திலேயே தங்கியுள்ளது.

நமது பொறுப்புகளை நாம் தட்டிக் கழித்துக்கொண்டு விதி, சந்தர்ப்பம், சூழ்நிலை எனும் பொய்க்காரணங்களின் மீது பழியைப் போட்டுவிட்டு எமது இயலாமையை மறைத்து விடுவதில் நாம் அனைவரும் திறமைசாலிகளே !

வாழ்வில் நாம் உயிருடன் வாழும் ஒவ்வொருநாளும் சிறப்பான நாட்களே ! எனது உற்ற நண்பன் ஒருவன் அடிக்கடி எனக்குக் கூறுவது ” சீரற்ற காலநிலை என்று ஒன்று இல்லை அக்காலநிலைக்கு உகந்தவாறு நாமணியும் உடை சீரற்று இருப்பதால் தான் காலநிலை நம்மைப் பாதிக்கிறது “

என் ஜன்னலின் வழியே நான் கண்ட பகல் பொழுது என் மனதில் விரித்த சிந்தனை எனும் தாமரையில் துளிர்த துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

அடுத்தவாரம் சந்திக்கும் வரை கிடைக்கும் ஒவ்வொருநாளையும் இறுகப்பற்றி மகிழ்வுடன் வாழுங்கள்.

val143.1
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *