Blog

  • நந்தன் திரை விமர்சனம்

    நந்தன் திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    நந்தன் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். வணங்கான்குடி என்ற ஊராட்சியின் தலைவர் பதவியை மேல்சாதித் தலைவர் ஒருவரே மீண்டும் மீண்டும் வகிக்கிறார். அந்தத் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்த பிறகு, தாழ்த்தப்பட்ட ஒருவரே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நிலை உருவாகிறது. தன் தீவிர விசுவாசியை அந்தப் பதவியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படம் துணிவாக முன்வைக்கிறது.

    தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலங்களை, அவர்கள் சந்திக்கும் கொடுமைகளை, தனித் தனிச் சுடுகாடு இருப்பதை, அடிமைகளாக நடத்தப்படுவதை நெஞ்சை அறுக்கும் வகையில் காட்டியிருக்கிறார்கள். இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா எனக் கேட்பவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று காட்டத் தயார் என அவர் திரையில் காட்டியது, வலிமையான வாக்கியம்.

    திரைப்படம் முடிந்த பிறகு, ஊராட்சித் தலைவர்கள் பலரும் திரையில் தோன்றி, தங்கள் அனுபவத்தைச் சொல்வது, அழுத்தமாக உள்ளது. இந்தப் படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று வெளிக்கொணர்ந்த இரா.சரவணன், பெரும் பாராட்டு உரியவர்.

    காலத்துக்கும் நீங்க எங்க காலுக்குக் கீழ தான்டா என்ற ஆதிக்கவாதிகளின் குரல் ஒலிக்கும்போது, (தாழ்த்தப்பட்ட) நாயகர்களின் செருப்பின் அடிப்பாகம், திரை முழுவதும் வருமாறு காட்டியிருப்பது, இயக்குநரின் முத்திரை.

    அதிகாரத்துக்கு வா. அதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரத்துக்கு வந்தாலும் இங்கே பல பேரால நிமிரக் கூட முடியலை.

    இது, படத்தில் இடம்பெறும் ஒரு வசனம். இதுவே படத்தின் சாரமாகவும் இருக்கிறது.

    ஆதிக்க சாதித் தலைவராக நடித்துள்ள பாலாஜி சக்திவேலும் அவரது விசுவாசியாக அம்பேத்குமார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமாரும் வட்டார வளர்ச்சி அலுவலராக நடித்துள்ள சமுத்திரக்கனியும் தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.

    சசிகுமாரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்துவிட்டு வரும் பாலாஜி சக்திவேலை அவர் அம்மா ஒரு கேள்வி கேட்கிறார். அவன் பலத்துக்கு உன்னை அடிக்கிறதுக்கு என்னேரம் ஆகும்? என்ற அவரது கேள்வி, முக்கியமானது. உடல் வலிமையை முன்னிறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் படத்தைக் கொண்டு செல்லாமல், ஜனநாயக ரீதியில் படத்தை நகர்த்திய இயக்குநருக்குப் பாராட்டுகள். மகாத்மா காந்தி, இந்த வழிமுறையையே பின்பற்றினார்.

    அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதையே மிகப் பெரிய இலக்காகக் கட்டமைக்கிறார்கள். அதுவே எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்பது எத்தகைய மாயை என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். அப்படியானால் எது தீர்வு என்பதை இன்னும் வெளிப்படையாக, தெளிவாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.

    ஊரை விட்டு விரட்டப்பட்ட பிறகு, மகனுடைய கேள்விக்கு, சசிகுமாரின் மனைவி பதில் சொல்கிறார். நமக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா யார் நம்மைத் துரத்தியிருக்க முடியும்? ஒரு குழி இடத்தைச் சம்பாரிக்கலேன்னா இப்படி ஊர் ஊரா ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.

    நிலத்துக்கு, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆனால், நம்மைத் துரத்த முடியாது என்பது ஒரு தெளிவான செய்தி. தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதார வலிமை அடைந்து, நில உரிமை பெற வேண்டும். அத்துடன், கூட்டாக நின்று அரசியல் வலிமை பெற வேண்டும்.

    ஆனால், எதிர்த்துக் கேள்வி கேட்பவனை லாரியை ஏற்றிக் கொல்லும்போது என்ன செய்வது? சமூக மதிப்பைப் பெறுவதற்கு என்ன செய்வது? உரிமை மறுக்கப்படும்போது என்ன செய்வது? அச்சுறுத்தப்படும்போது என்ன செய்வது? ஏமாற்றப்படும்போது என்ன செய்வது? ஒரே சமுதாய மக்களிடம் பிளவு ஏற்படுத்தி, அவர்களின் வாக்கு வலிமையைப் பிரிக்கும்போது என்ன செய்வது? யாரின் பின்னால் அணி திரள்வது? எந்தக் கூட்டணியில் நிற்பது? எந்தக் கோரிக்கைகளை முன்வைப்பது? யார் நமக்கு நன்மை செய்வார்? இந்தக் கேள்விகள் ஓயப் போவதில்லை. நம் தேடலும் தான்.

    Share
  • கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலை படத்தில், வைரமுத்து எழுதிய ‘வந்தேன்டா பால்காரன், பசு மாட்டைப் பத்திப் பாடப் போறேன்’ என்ற பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள்.

    புல்லு கொடுத்தா
    பாலு கொடுக்கும் உன்னால
    முடியாது தம்பி

    இது என்ன வகையான ஒப்பீடு? பசு என்பது பெண். எனவே பால் கொடுக்கிறது. ஆனால், உன்னால முடியாது தம்பி என ஆணிடம் எதற்குச் சொல்கிறார்? காளை மாடு கூடத்தான் புல்லு சாப்பிட்டுப் பால் கொடுக்காது. மனிதரிலும் பிள்ளை பெற்ற பெண், பால் கொடுக்கக் கூடியவர்தான். புல் போன்று சில கீரைகளை, ஏன் அருகல்புல் சாற்றைக் குடித்துக்கூட அவரால் பால் கொடுக்க முடியும். எதற்காக ஏடாகூடமாக ஒப்பிட்டிருக்கிறார்?

    சாணம் விழுந்தா உரம் பாரு
    எருவை எரிச்சா திருநீறு
    உனக்கு என்ன வரலாறு
    உண்மை சொன்னா தகராறு

    சாணம் மட்டுமில்லை, மனித மலமும் உரம் தான். அதைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்கள். மாட்டைப் புகழ்வதற்காக, மனிதனைத் தாழ்த்தலாமா? மனிதனின் எழுச்சிமிகு முன்னேற்றத்தை அவனது வரலாற்றைப் படித்தாலே புரியுமே.

    அட மீன் செத்தா கருவாடு
    நீ செத்தா வெறும்கூடு
    கண்ணதாசன் சொன்னதுங்க
    பசு இருந்தாலும் பாலாகும்
    செத்தாலும் தோலாகும்
    நான் கண்டு சொன்னதுங்க

    மீன் செத்தா கருவாடு. ஆனால், மனிதன் செத்தால் வெறும்கூடு இல்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் உரம் தான். மேலும் மனிதன் இறந்தால் அவனது உறுப்புகள் பலவற்றைத் தானமாக அளிக்க முடியும். மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக, அவன் உடலையே தானமாக வழங்க முடியும். கண்ணதாசன் இதைப் புரிந்துகொண்டாரா தெரியவில்லை.

    பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் என்பதில் என்ன பெருமை? மிகவும் பொருள்வயமான கண்ணோட்டம் இது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆட்டுக்கும் இவ்வாறு பயன் இருக்கும். மனிதன் இறந்தாலும் வேறு வகையில் இத்தகைய பயன் உண்டு. அதனால் தான் அநாதைப் பிணங்களையும் திருடும் கூட்டம் இருக்கிறது.

    அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
    ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
    அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
    அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

    ஆட்டுப்பால் ஆயுள் வளர்க்கிறது, மாட்டுப்பால் அன்பு வளர்க்கிறது என்கிறார். ஏன், ஆட்டுப்பால் அன்பு வளர்க்காதா? மாட்டுப்பால் ஆயுள் வளர்க்காதா? இதே பாடலில், அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி என்று வருகிறது. பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். தாய்ப்பால் சுரக்காத நிலையிலேயே செறிவூட்டிய பால்மாவும் பசும்பாலும் கொடுக்கிறார்கள். மிகக் குறைந்த அளவிலேயே இது நிகழ்கிறது. குழந்தை பிறந்து 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகே பசும்பால். முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலே ஆதாரம். எனவே பாதி குழந்தைகள், பசும்பாலை நம்பிப் பிறப்பதாகச் சொல்வதும் சரியில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகே பசும்பாலை நாடுகிறார்கள்.

    பசுவைத் தெய்வமாக வணங்குவது, தமிழர் வழக்கம். கோமாதா என்றே அழைப்பார்கள். பசுவின் உடலில் தெய்வங்களும் தேவர்களும் வாழ்வதாகக் கருதுவோர் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்தாலும் பசு தன் கன்றுக்காகச் சுரக்கும் பாலையே மனிதனும் கறந்து குடிக்கிறான். எனவே, பசுவும் நம் தாய், நாமெல்லாம் அதன் கன்றுகளே என்றாவது சொல்லியிருக்கலாம்.

    பால்காரர் தான் வளர்க்கும் மாடுகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல, வேறு ஏதும் இல்லையா? அதன் பால், சாணம், திருநீறு, செத்த பிறகு தோல் – இந்தப் பயன்களைத் தான் வைரமுத்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது வியாபாரியின் கண்ணோட்டம். கன்றுக்காக இரங்கி, தன் இரத்தத்தைப் பாலாக்கி அருளும் பசு, வெறும் வியாபாரப் பொருளாகி நிற்கிறது. வியாபாரிகள் இப்படி எழுதலாம். கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    Share
  • எட்டுக்குள்ள உலகம் இல்லை, வைரமுத்து!

    எட்டுக்குள்ள உலகம் இல்லை, வைரமுத்து!

    அண்ணாகண்ணன்

    பாட்ஷா படத்தில் வைரமுத்து எழுதிய ரா ரா ரா ராமையா என்ற பாடலை வானொலியில் ஒலிபரப்பினார்கள். அதில், எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா, நான் புட்டுப் புட்டு வைக்கப் போறேன் பாரையா என்று தொடங்கி, இப்படி வளர்ந்தது.

    முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
    நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
    மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
    நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
    ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
    நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
    ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
    நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை

    எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
    நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

    இதைக் கேட்டதும் காலத்திற்கு ஒவ்வாத ஒரு பாடல் (outdated) என்றே முதலில் தோன்றியது.

    இந்தப் பாடலை எழுதிய வைரமுத்துக்கு இப்போது 71 வயது. இசையமைத்த தேவாவுக்கு 73 வயது. பாடிய எஸ்.பி.பி. 2020இல் மறைந்தபோது அவருக்கு 74 வயது. நடித்த ரஜினிக்கு இப்போது 73 வயது. இவர்கள் அனைவரும் 64 வயது கடந்தவர்கள். ரஜினி இப்போதும் நாயகனாக நடித்து வருகிறார்.

    முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல என்பது எவ்வளவு தவறானது என்பதை லப்பர் பந்து படமே சொல்லிவிடும்.

    ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல என்பது என்ன கணக்கு? 16 வயதில் பதினொன்றாம் வகுப்பே முடித்திருப்பார்கள். இதன் பிறகே கல்லூரிப் படிப்பு, மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு. இவற்றைக் கருத்திலேயே கொள்ளாமல், 16 வயதிற்குள் கல்லாதது கல்வியுமல்ல என எப்படிச் சொல்ல முடியும்?

    மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல என்பதும் இக்காலத்துக்குப் பொருந்தாது. இந்த 24 வயது கடந்து, இன்னும் சரியான வேலை கிடைக்காமல், வரன் கிடைக்காமல், 30, 40, 50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்போர் பல இலட்சம் பேர். இந்த 24க்குப் பிறகு திருமணம் செய்தவர்கள், இன்னும் காத்திருப்பவர்கள் இந்த வரிகளைக் கேட்கும்போது எத்தகைய எரிச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாவார்கள் என்பதை வைரமுத்து உணரவே இல்லையா?

    நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல என்பதும் சரியில்லை. முந்தைய வரியில் பார்த்தது போல், திருமணமே தள்ளிப் போகும் போது, பிள்ளைப் பேறும் தள்ளிப் போவது இயல்பே. இதற்கு வேறு பல காரணிகளும் உண்டு. பெருகி வரும் கருவாக்க மருத்துவமனைகளும் இதை உணர்த்துகின்றன. இவை எல்லாவற்றையும் விட, 32 வயதுக்குப் பிறகும் பிள்ளை பெறாதவர்களைக் குற்ற உணர்விலும் தவிப்பிலும் இந்த வரி தள்ளும் என்பதை வைரமுத்து ஏன் உணரவில்லை?

    ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல என்பது இன்று எத்தனைப் பேருக்குப் பொருந்தும்? சரியான வேலை கிடைக்காமல், விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் போராடும் கோடிக்கணக்கானோரைப் பார்த்தே இதைச் சொல்கிறார். 40 வயதுக்குள் எல்லாச் செல்வங்களையும் சேர்க்க வேண்டும் என்று. இதைக் கபிலன் வைரமுத்து சொல்ல முடியுமா? வங்கிக் கடன், வங்கியல்லாத கடன் என்று வாங்கி, ஆயுள் முழுக்கக் கடனைத் துரத்தும் நண்பர்கள், இதைக் கனவிலேனும் காண முடியுமா என்பது ஐயமே.

    ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல என்பது எத்தனைப் பேருக்கு வாய்க்கும்? 48 வயதுக்குள் உலகம் சுற்ற முடியுமா? ஒருநாள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் அன்றைக்கு வருமானம் இருக்காது என்ற நிலையில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையிலும் உழைப்பவர்கள் இருக்கிறார்கள். சற்றே கூடுதலாகத் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ முடியாதவர்கள் இருக்கிறார்கள். பிள்ளைகளைப் படிக்க வைக்க, நல்ல நிலைக்குக் கொண்டு வர, தங்கள் ஆசைகளைத் தியாகம் செய்தவர்கள் ஏராளம். இந்நிலையில் உல்லாசமாக உலகம் சுற்ற, வைரமுத்துவாக, ரஜினியாக எல்லோரும் பிறக்க முடியாதே.

    ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை என்பது யாருக்கு? 54 வயதில் ஓய்வு பெறலாம் என்பதும் கனவே. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கே 58 வயது, 60 வயது ஓய்வு பெறும் வயதாக இருக்கிறது. முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றுச் சிலர் வரலாம். தனியார் துறையில் உடல் ஒத்துழைக்கும் வரை உழைக்கலாம். முறைசாராப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுளின் கடைசி நாள் வரைக்கும் ஓய்வே கிடையாது. எல்லாக் கடமைகளையும் முன்னரே முடித்தால் தானே நாம் விரும்பும் வகையில் ஓய்வு பெற முடியும்? இதற்கான வாய்ப்பு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா கிடைக்கிறது? பிறகு, விதிகளை மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக ஏன் வைக்க வேண்டும்? இதில் பொது விதிகளைக் கட்டமைப்பது, கோடிக் கணக்கானவருக்கு மன அழுத்தத்தையும் தோல்வி மனப்பான்மையையும் உண்டாக்கும். எழுத்தாளர்களும் கவிஞர்களும் நம் எழுத்தின் தாக்கம் எத்தகையதாக இருக்கும் எனப் பல கோணங்களில் கவனித்து எழுத வேண்டும். ஊக்கம் ஊட்ட வேண்டிய பாடல், துக்கம் ஊட்டுவது, நவீன வாழ்வின் அவலம்.

    Share
  • கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    வேலினைக் கையில் ஏந்தி
    வெற்றியைத் தந்த கந்தன்
    மூலமாய் நின்ற மூர்த்தி
    பொறியிலே வந்த கந்தன்
    கார்த்திகைப் பெண்கள் ஏந்த
    கந்தனாய் ஆன தெய்வம்
    கலியுகம் காக்க என்றும்
    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    ஆணவம் அழித்த கந்தன்
    அகவிருள் அகற்றும் கந்தன்
    பேணிடும் அடியார்க் கெல்லாம்
    பேரருள் ஈயும் கந்தன்
    நாமெலாம் விரும்பி நிற்கும்
    நல்லையில் உறையும் கந்தன்
    சேவடி தொழுது நின்றால்
    தெரிசனம் தருவான் கந்தன் !

    சூரரை வதைத்த கந்தன்
    சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
    மாயிருள் மாயை போக
    வந்தனன் ஒளியாய் கந்தன்
    ஆழமாம் பிறவி நோயை
    அகற்றிட மருந்தாய் நிற்கும்
    வேலுடை கந்தன் பாதம்
    பற்றுவார் வீடு காண்பார் !

    Share
  • விண்வெளியில் வற்றாத சுரங்கம் – சிறுகோள்களின் பெருவளங்கள்

    விண்வெளியில் வற்றாத சுரங்கம் – சிறுகோள்களின் பெருவளங்கள்

    முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
    ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை,
    MaGa Tech Gramam Pvt Ltd, சேலம், இந்தியா 
    natarajangravity@gmail.com

    முன்னுரை

    பூமியில் சுரங்கங்கள் தோண்டுவதைப்பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். பூமிக்கு வெளியே விண்வெளியில் சுற்றி வரும் பல்வேறு விண்கற்கள் அல்லது சிறுகோள்களை நாடி, அவற்றில் சுரங்கங்கள் தோண்டி அதன் கனிம வளங்களை எதிர்காலத் தலைமுறையின் நன்மைக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்பதை அறிவியல் விளக்கத்தோடு ஆராய முற்படுகிறது இக்கட்டுரை. மேலும்  சிறுகோள்களில் சுரங்கம் தோண்டுவதின்  அவசியம், பல்வேறு வகையான சிறுகோள்கள், அவற்றில் உள்ள பொருட்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள் ஆகியவை பற்றியும் இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

    சிறுகோள் சுரங்கம் தோண்டுதல் – தேவையும் பின்னணியும்

    சமீபத்திய ஆண்டுகளில் ராக்கெட் அறிவியல் மற்றும் பிற பயனுள்ள தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக, விண்வெளியில் அதிக தூரம் செல்வது சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது. அரசாங்க நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பல தனியார் விண்வெளி நிறுவனங்களும் (SpaceX, Blue Origin, Virgin Galactic போன்றவை) விண்வெளிப் போட்டியில் பங்கேற்கின்றன. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள்  மற்றும் சூப்பர்-ஹெவி ராக்கெட்டுகள் (DragonX மற்றும் Falcon Heavy) போன்றவை மூலம், விண்வெளித் திட்டங்கள் இன்று மிகவும் சிறந்ததாகவும், திறமையானதாகவும், சிக்கனமானதாகவும் மாறியுள்ளன.

    அதிக  விண்வெளி வாகனங்கள், விண்வெளி ஆய்வகங்கள் மற்றும் பிற வகையான உபகரணங்கள் விண்வெளி ஆய்வுத் துறையை புதிய உயரங்களுக்குக்  கொண்டு சென்றுள்ளன. விண்வெளி ஆய்வுகள் குறித்த முதலீடுகள் மற்றும் யோசனைகள் வளர்ச்சியடையும் போது, அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக வாயேஜர் (சூரிய குடும்பத்திலிருந்து ஆள்வேளிக்கு வெளியேறிய முதல் திட்டம்), நியூ ஹொரைசன் (புளுட்டோவை ஆய்வு செய்தது), காசினி (சனிக்காக), வீனஸ் எக்ஸ்பிரஸ் (சுக்கிரனுக்கு), ஜூனோ (வியாழனுக்கு), செவ்வாய் ரோவர்கள், மெசஞ்சர் (புதனுக்கு) மற்றும் சந்திரனில் உள்ள ரோபோடிக் ரோவர்கள் போன்ற பயணங்கள் இதற்கு சான்று. இதேபோல், ஹப்பிள், சந்திரா எக்ஸ் மற்றும் கோப் போன்ற விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள்கள் சோதனை ஆய்வுகளின் புதிய வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், SpaceX தனது தொழில்நுட்பங்களில் அசாதாரணமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் அவர்கள் பெற்ற வெற்றியானது, விண்வெளிப்  பயணத்தின் செலவைக்  குறைத்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. மேலும், ஸ்டார்ஷிப் என்ற புதிய தலைமுறை விண்கலத்தை உருவாக்குவதில் SpaceX தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விண்கலம் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திறன் கொண்டது மற்றும் எதிர்காலத்தில் விண்வெளிப்  பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. SpaceX-ன் க்ரூ டிராகன் விண்கலம், நாசாவுடன் இணைந்து, விண்வெளி வீரர்களைச்  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பவும், மீண்டும் பூமிக்கு கொண்டு வரவும் பயன்படுகிறது. இது, அமெரிக்காவின் விண்வெளிப் பயணத் திறனை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான சாதனையாகும்.

    இந்த தொழில்நுட்பங்கள் பூமியின் ஆற்றல் நெருக்கடி மற்றும் பிற பொருள் தேவைகளுக்கான தீர்வுக்கான புதிய நம்பிக்கையைத் தருகின்றன. பூமியின் ஆற்றல் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொழில்துறை, வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களின் வளர்ச்சி காரணமாக மாற்று ஆற்றல் மூலங்களின் தேவை அவசியமாகிவிட்டது. 2018 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் மோசமான ஒரு பூஜ்ஜிய நாள் (பூமிக்கு அடியில் உள்ள நீர் மட்டம் முற்றிலும் வற்றிய நிலை) நெருக்கடி ஏற்பட்டது. இது எதிர்காலத்தில் நீர் மற்றும் பிற ஆற்றல் வளங்களின் கூடுதல் தேவை இல்லாவிட்டால் எதிர்கொள்ள வேண்டிய இருள் நிலையை விளக்குகிறது. பிற தொழில்களிலும், பொருட்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது.  பூமியின் அரிய வளங்கள் மற்றும் பிற அதிக செலவு பிடிக்கும் பொருட்கள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் சந்தைத்  தேவைகள் காரணமாக பெரிய அளவில் சுரண்டப்படுகின்றன. இந்தப் பொருட்களின் பற்றாக்குறையானது  நானோ தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் இதர தொழில்துறைத் துறைகள் போன்ற பல வளரும் துறைகளை பாதிக்கும்.

    இந்த நெருக்கடியைத் தீர்க்க, விண்வெளித்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு வளங்களைப்  பெறுவது ஒரு மாற்றுத் தீர்வாக முன்மொழியப்பட்டுள்ளது. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் இருந்து பல்வேறு பொருட்கள் மற்றும் தாதுக்களைப் பெற்றுப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் சிறுகோள் சுரங்கம்  தோண்டுதல் என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள விண்வெளி தொழில்நுட்பங்கள் சிறுகோள்களிலிருந்து பொருட்களைப் பயன்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    2000 ஆம் ஆண்டிலிருந்து, 80க்கும் மேற்பட்ட விண்வெளி தொடர்புடைய புதிய நிறுவனங்களில் 13.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு விசை உள்ளது. எனவே, சிறுகோள்களில் சுரங்கம் செய்வது எளிது. 1 கிமீக்கும் அதிகமான அளவு கொண்ட 1000 க்கும் அதிகமான பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் உள்ளன. ஒரு ஆய்வு விண்கலம் சிறுகோளைச் சுற்றி வருவதில் உள்ள பிரச்சினைகள் [1] இல் விவாதிக்கப்பட்டுள்ளன.  ரோசெட்டா, டார்ட் மற்றும் பிற சிறுகோள் தொடர்பான விண்வெளிப் பயணங்கள் விண்வெளி ஆய்வின் புதிய அத்தியாயங்களை எழுதி வருகின்றன. 2014 ஆம் ஆண்டில் தொடங்கி 2016 ஆம் ஆண்டு வரை நீடித்த ரோசெட்டா பயணம், 67பி/சூரியுமா-செரெஜூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்மீனைச் சுற்றி வந்து, அதன் மேற்பரப்பில் பிலே என்ற விண்கலத்தைத் தரையிறக்கியது. இதன் முக்கிய நோக்கம் வால்மீனின் அமைப்பு, மேற்பரப்பு மற்றும் தோற்றம் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதாகும். வால்மீன்களில் உள்ள நீர் மற்றும் கரிமப் பொருட்களின் தன்மை பற்றியும் இந்தப் பயணமானது புதிய தகவல்களை வழங்கியது.

    சமீபத்தில், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற டார்ட் பயணம் விண்வெளி பாதுகாப்புக்கான ஒரு முக்கியப்  படியாகக் கருதப்படுகிறது. டிடிமோஸ் என்ற சிறுகோளின் துணைக்கோளான டைமோர்போஸைத் தாக்கி, அதன் சுற்றுப்பாதையை மாற்றியது இதன் நோக்கமாகும். சிறுகோள் தாக்குதலிலிருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதே இதன் முக்கிய நோக்கம்.

    ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்ட ஹயபுசா மற்றும் ஹயபுசா2 பயணங்கள் சிறுகோள்களிலிருந்து மாதிரிகளைச்  சேகரித்து பூமிக்குக் கொண்டுவந்தன. ஹயபுசா பயணம் இடோகவா என்ற சிறுகோளிலிருந்தும், ஹயபுசா2 பயணம் ரியூகு என்ற சிறுகோளிலிருந்தும் மாதிரிகளைச்  சேகரித்தன. இந்தப் பயணங்கள் சிறுகோள்களின் கனிமவியல், தோற்றம் மற்றும் அமைப்பு பற்றி முக்கியமான தகவல்களை வழங்கின. இவற்றின் மூலம், சிறுகோள்கள் பற்றிய நமது புரிதலை பெரிதும் விரிவுபடுத்த முடிந்தது.

    இந்தப் பயணங்கள் சிறுகோள் சுரங்கம், விண்வெளி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வு ஆகிய துறைகளில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். சிறுகோள்களிலிருந்து மதிப்புமிக்க வளங்களைப் பெறுதல், விண்வெளியில் மனிதர்கள் வாழத் தேவையான வளங்களைப் பெறுதல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிறுகோள் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற பல நோக்கங்களுக்கு  இந்தப் பயணங்கள் உதவக்கூடும். இத்தகைய பயன்கள் விளைவாக சிறுகோள் சுரங்கம் தோண்டுதல்  ஒரு சுவாரஸ்யமான தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது.

    சிறுகோள்கள்

    பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் பல்வேறு மூலப்பொருட்களின் ஆதாரமாக இருக்கலாம் [2]. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

    • சி வகை (கார்பனேசியஸ்): நீர் மற்றும் கார்பனை கொண்டுள்ளது.
    • எஸ் வகை (பாறை வகை): சிலிக்கேட்டுகள், சல்பேட்டுகள் மற்றும் பிற உலோக கூறுகள் போன்ற பாறை போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.
    • எம் வகை (உலோக வகை ): பெரும்பாலும் உலோகங்களைக் கொண்டுள்ளது.

    ஒரு சிறுகோள் மேற்கூறிய வகைகளில் எது என்பதை மின்காந்த அலைப்  பிரதிபலிப்பு ஆய்வு மூலம் உறுதிப்படுத்தலாம். சி வகை சிறுகோள்கள் நீர், உலோகம் மற்றும் பிற கரிம கூறுகளைக் கொண்டிருப்பதால், சிறுகோள் சுரங்கத்திற்கான முக்கிய இலக்குகளாகக் கருதப்படுகின்றன. இந்த சிறுகோள்களில் இருந்து பெறப்படும் வளங்கள் ராக்கெட் எரிபொருள், விண்வெளி உபகரணங்கள் மற்றும் ராக்கெட் எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம். எஸ் வகை சிறுகோள்கள் பிளாட்டினம் போன்ற  உலோகங்களை கொண்டுள்ளன. அவை பூமியில் உள்ள வர்த்தக சந்தைகளில்  பணமாக்கப்படலாம். எம் வகை சிறுகோள்கள் பெரும்பாலும் உலோகங்களைக்  கொண்டுள்ளன, அவை விண்வெளிப் பயணங்களுக்கான உபகரணங்களைத் தயாரிக்கவும், விண்வெளியில்  குடியேறுவதற்கும் பயன்படுத்தப்படலாம்.

    அனைத்து வகையான சிறுகோள்களிலும், சி வகை சிறுகோள்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் 75% சி வகையைச் சேர்ந்தவை. இந்த வகை சிறுகோள்களில் சுமார் 20-25% நீர் உள்ளது. மேலும், இத்தகைய  சிறுகோள்களில் உலோகங்கள் மற்றும் கார்பன் கூறுகளும் உள்ளன. எஸ் வகை சிறுகோள்களில் இரும்பு மற்றும் பிற  உலோகங்கள் குறைவு. ஆனால் அவை அதிகளவு பிளாட்டினத்தைக்  கொண்டுள்ளன. எனவே, இந்த வகை சிறுகோள்கள் விண்வெளி நிறுவனங்களுக்கு சிறந்த பொருளாதாரத்  தீர்வாக இருக்கும். எம் வகை சிறுகோள்கள் உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளைக் கொண்டுள்ளன. எம் வகை சிறுகோள்களை விண்கலங்களுக்கான பொருட்களை வழங்கும் சுரங்கமாகப் பயன்படுத்தலாம். சிறுகோள் பட்டையில் இருக்கும் எம் வகை சிறுகோள்களில் பூமியின் மையத்தில் உள்ள உலோகச் செறிவுகளை  விட பில்லியன் மடங்கு அதிக உலோகச் செறிவுகள்  இருக்கலாம்.

    சி1 கார்பனேசியஸ் சிறுகோள்களில் சராசரியாக 10% நீர் களிமண் வடிவில் உள்ளது. 2% முதல் 5% வரை கார்பன் கிராஃபைட் வடிவில் உள்ளது. இரும்பு சல்பைடு மற்றும் நீரில் கரையும் சல்பேட்டுகள் போன்ற மற்ற கூறுகளும் இத்தகைய சிறுகோள்களில் உள்ளன. சி2 வகை சிறுகோள்கள் சிறிய அளவு மேக்னடைட், குறைந்த அளவு நீர், கார்பன், 10% சல்பர், கரையக்கூடிய சோடியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளன. சி3, சி4 மற்றும் சி5 ஆகியவை மிகக் குறைந்த நீர் மட்டத்தைக் கொண்டுள்ளன.

    பூமிக்கு அருகிலுள்ள ஒரு சி வகை சிறுகோள் விண்கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. 253 மத்தீல்டே என்ற சிறுகோளிலிருந்து 1212 கிமீ தொலைவில் அந்த விண்கலம் பறந்தது. அந்த சிறுகோள் பரிமாணம்  45 கிமீ x 46 கிமீ x 66 கிமீ என அளவிடப்பட்டது. அதன்  செயலாக்கப்பட்ட படம் [3] இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுகோள்களில் பின்வரும் கூறுகள் உள்ளன [4].

    சி2 வகை  சிறுகோள்களானவை  Fe – 10.7%, Ni – 1.4%, Co – 10.11%, C – 1.4%, H2O – 5.7%, S – 1.3%, FeO – 15.4%, SiO2 – 33.8%, MgO – 23.8%, Al2O3 – 2.4%, Na2O – 0.55%, K2O – 0.04%, P2O5 – 0.28% ஆகியவற்றைக் கொண்டவை. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களின் கண்டுபிடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், 2013 ஆம் ஆண்டை விட பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களின் அவதானிப்பு 42% அதிகரித்துள்ளது.

    Fe, Co, Ni, Ge, Re, Ru, Pt, Pd, Os, Ir மற்றும் Au போன்ற இரசாயனக் கூறுகள் சில சிறுகோள்களில் அதிகளவில் காணப்படுகின்றன. சிறுகோள்களில் இருந்து பிளாட்டினம் தோண்டி எடுக்கும்  போது, Ag, In, Ga, As மற்றும் பல பயனுள்ள தாதுக்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தப் பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களை விண்வெளிக் கட்டுமானத்திற்கும், பூமியில் லாபகரமான விற்பனைக்கும் பயன்படுத்தலாம். பூமியில், பிளாட்டினம் பெரும்பாலும் ஒரு நாட்டில் (தென்னாப்பிரிக்கா) மட்டுமே குவிந்துள்ளது. உள்ள பிளாட்டினம் வளம் அடுத்த 240 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால், பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் பிளாட்டினத்திற்கான மாற்று ஆதாரமாக உள்ளன.

    சிறுகோள்களுக்கு சரியான பிரதிபலிப்பான மேற்பரப்பு இல்லை. ஆனால் அவை பகுதி பிரதிபலிப்பு மேற்பரப்பைக் கொண்டுள்ளன. ஒரு சிறுகோளின் நிறமாலையானது, அவதானிக்கப்பட்ட நிறமாலையை சூரிய நிறமாலையால் வகுத்துப் பெறப்படுகிறது.

    நீர் – எரிபொருளாகப் பயன்படுத்துதல்

    பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் இருந்து நீரைச் சேகரிப்பது ஏன் மிகவும் முக்கியம்? ஏனெனில், எதிர்கால விண்வெளி ஆய்வுப் பணிகளில் எரிபொருளாக நீரைப் பயன்படுத்தலாம். இப்போதுள்ள வேதி எரிபொருட்களுக்குப் பதிலாக, நீரை  ஒரு வகை மிகவும் சூடான நீராவி, போல மாற்றி எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம். இந்த செயல்முறையில், நீரை ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனாகப் பிரிக்கப்படுகிறது, மேலும் அவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம் [5].

    சிறுகோள் சுரங்கத் திட்டங்களின் விளைவாக, H2O, N2, O2 போன்ற உயிர்வாழ்வுப் பொருட்கள், H2, O2, CH4, CH3OH போன்ற எரிபொருள் பொருட்கள், CO2, NH4OH போன்ற வேளாண் தேவைகள், H2O2 போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் SO2 போன்ற குளிர்பதனப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களில் இருந்து பெறப்படும் என்று நம்பப்படுகிறது. இதேபோல், Au, Pt, Pd, Os, Ir, Tn, Ru, Re மற்றும் Ge போன்ற உலோகங்கள் மற்றும் Si, Al, Ga, Cd, As, Se, In, Sb மற்றும் Te போன்ற குறைக்கடத்திகள் சிறுகோள் சுரங்கம் மூலம் பெறப்படலாம்.

    தொழில்நுட்பம்

    சமீபத்திய ஆண்டுகளில், சிறுகோள் சுரங்கப் பணிகளில் விண்வெளி ரோபோக்கள் குழு பயன்படுத்தப்படலாம் என முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விண்வெளி வீரோபோக்கள்  குழு சிறுகோள்களுடன் இணைந்து, அவற்றின் உள்ளடக்கங்களை ஆராய முடியும். சிறுகோள்களை உடைத்தல் மற்றும் அவற்றை ஏவுவாகனத்துக்கு மாற்றுதல் போன்ற பணிகளைச் செய்ய இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம். இந்த பயணத்திற்கு, கியூப்சேட்டுகள் (Cubesats) பயன்படுத்தப்படலாம் என வும் முன்மொழியப்பட்டுள்ளது. கியூப்சேட்டுகள் தாய் விண்கலத்துடன் இணைக்கப்பட்டு, மாதிரி பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சிறுகோள்களில் இறக்கி விடப்படும்.

    தாய் விண்கலம், ரோபோக்களுக்கான வாகனத்தை ஏந்திச் செல்லும். இதனால் எரிபொருள் சேமிக்கப்படும் மற்றும் பணியின் சிரமங்கள் மற்றும் காலம் குறையும் [6]. கியூப்சேட்டுகள் நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மைக்ரோ செயற்கைக்கோள்கள். ஆகும்  சிறுகோள் சுரங்கத்திற்கு நான்கு நிலைகள் உள்ளன. அவை:

    • ஆய்வு (Prospecting)
    • சேகரிப்பு (Harvesting)
    • செயலாக்கம் (Processing)
    • உற்பத்தி (Manufacturing)

    ஆய்வு நிலை

    ஆய்வு நிலையில், சிறிய செயற்கைக்கோள்கள் சிறுகோள்களைச் சுற்றிச் சென்று  அங்கு கிடைக்கும் வளங்களைக்  கண்டறியும். இந்த ஆய்வு நிலை மூன்று முறைகளைக் கொண்டுள்ளது:

    1. தேவையான வளங்கள்  அதிகம் உள்ள சிறுகோள்களைக் கண்டறிதல்
    2. கிடைக்கும் வளங்களின் இருப்பிடம் தொலைவில் இருந்தே உறுதிப்படுத்துதல்
    3. சிறுகோள்களுக்கு அருகில் சென்று வளங்களின் இயல்பை அறிதல்

    இந்த நிலையில்  வளங்களை அறிதல் இரண்டு துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

    1. தொடு ஆய்வு:
    2. தொடாத ஆய்வு:

    சிறுகோள்களில் உள்ள தாதுக்களின் எண்ணிக்கையை பின்வருமாறு அளவிடலாம் [7]:

    Nore== Ptype . Prich . Plow-Δ v . Peng . N (> D_min)

    இதில்:

    • Nore=: தாதுக்களின் அளவு
    • Ptype: வகைப்பாட்டின் நிகழ்தகவு
    • Prich: வளத்தின் செறிவின் நிகழ்தகவு
    • Plow-Δ v: குறைந்த டெல்டா-வி சுற்றுப்பாதையைக் கொண்ட சிறுகோளின் நிகழ்தகவு
    • Peng : பொறியியல் சவால்களின் நிகழ்தகவு
    • N (> D_min): குறைந்தபட்ச அளவை விட அதிகமான சிறுகோள்களின் எண்ணிக்கை

    1991 ஆம் ஆண்டு முதல் பல செயற்கைக்கோள்கள் சிறுகோள்களை ஆராய அனுப்பப்பட்டுள்ளன. 1991 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில், கலிலியோ செயற்கைக்கோள்கள் கேஸ்ப்ரா மற்றும் ஐடா என்ற சிறுகோள்களைக் கடந்து சென்றன. 2001 ஆம் ஆண்டில், பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் சந்திப்பு விண்கலம் (NEAR) ஒரு சிறுகோளில் தரையிறங்கியது. 1999 ஆம் ஆண்டில், டீப்ஸ்பேஸ்-I 9969 பிரெய்ல் மற்றும் 1992KD ஆகியவற்றின் படங்களை எடுத்தது. 1992 ஆம் ஆண்டில், ஸ்டார்டஸ்ட் ஒரு சிறுகோளைக் கடந்து சென்று அறிவியல் தகவல்களைச்  சேகரித்தது. 2005 ஆம் ஆண்டில், ஜப்பானின் ஹயபுசா செயற்கைக்கோள் இடோகவா என்ற சிறுகோளில் தரையிறங்கி அதன் மாதிரிகளைப்  பகுப்பாய்வு செய்தது. சீனாவின் சாங்’இ-2 விண்வெளிப் பயணம் 4179 என்ற சிறுகோளுக்கு அருகில் பறந்து அதிக தெளிவுத்தன்மை கொண்ட படங்களை எடுத்தது.

    செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் கியூப்சேட் ஏற்கனவே பணியில் உள்ளது [8]. நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கியூப்சேட் போன்ற செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. எதிர்கால செயற்கைக்கோள்களில் பயன்படுத்தக்கூடிய மைக்ரோ அயன் எஞ்சின், மைக்ரோ பல்ஸ் பிளாஸ்மா திரஸ்டர் மற்றும் மைக்ரோ தகவல் தொடர்பு அலகு ஆகியவற்றை உருவாக்க நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது.

    சேகரிப்பு நிலை

    சேகரிப்பு என்பது சிறுகோள்களில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும் மற்றொரு நிலை ஆகும்.  இந்த சேகரிப்பு செயல்முறையில், ரோபோடிக் விண்கலங்கள் சிறுகோள்களில் இருந்து தாதுக்கள் மற்றும் நீரைச் சேகரிக்கும். பெறப்படும் நீர், விண்கலங்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் [9]. இந்த செயல்முறை பெரும்பாலும் சிறுகோள்களில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுப்பதில் கவனம் செலுத்தும். முன்னதாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ரோபோடிக் விண்கலங்கள் சிறுகோள்களில் இருந்து பயனுள்ள தாதுக்களைப் பிரித்தெடுக்கும்.

    செயலாக்க நிலை

    சிறுகோள் சுரங்கத்தின் மூன்றாவது நிலையில், செயலாக்க நிலை தொடங்கும். சேகரிப்பு நிலையில் பெறப்பட்ட பொருட்கள் எரிபொருள், குடிநீர் மற்றும் பிற உபகரணப் பொருட்கள் போன்ற வடிவங்களில் செயலாக்கப்படும். சேகரிக்கப்பட்ட பொருட்கள் செயலாக்க அலகுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் தயாரிப்பு மற்றும் உற்பத்தி நிலைக்கு அனுப்பப்படும் [9].

    உற்பத்தி நிலை

    சிறுகோள் சுரங்கத்தின் இறுதி நிலை உற்பத்தி நிலையாகும். மைக்ரோ ஈர்ப்பு மற்றும் கடுமையான வெற்றிடச்  சூழலில் உற்பத்தி செய்வது என்பது  பல பல சவால்களைக் கொண்டது.  பின்னர் பிரித்தெடுக்கப்பட்ட வளங்கள் பாதுகாப்பான கொள்கலன்களில் சேமிக்கப்படும். ஆவியாகக்கூடிய பொருட்கள் அதிக அழுத்தத்தில் அடக்கிச்  சேமிக்கப்படும். இதேபோல், நீர் தேவையான அளவு அழுத்தப்பட்ட சிலிண்டர்களில் சேமிக்கப்படும் மற்றும் தாதுக்கள் மூடிய காப்ஸ்யூல்களில் வைக்கப்படும்.

    விண்வெளியில் உற்பத்தி செய்ய பெரிய கட்டமைப்புகள் தேவைப்படும். இதற்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய, பெரிய அளவிலான சூரிய ஆற்றல் கலன்கள் பயன்படுத்தப்பட்டு அதிக ஆற்றலானது  உற்பத்தி செய்யப்படும்.

    பூமியைச் சுற்றி ஒரு பூமிக்கு அருகிலுள்ள சிறுகோளைப் பிடிப்பது [14] இல் விளக்கப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையில் அதைப் பிடித்து இழுத்துச் செல்ல ஒரு எளிய வழிமுறையை உருவாக்கிச்  செயல்படுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறு பிடித்து சுரங்கம் செய்ய 23 சிறுகோள்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பூமியின் ஈர்ப்பு விசைப் புலத்தில் உள்ள சிறுகோளின் இயக்க சமன்பாடுகள்  [14] இல் விரிவாக அணுகப்பட்டுள்ளன.

    இல்மனைட் (FeTiO3) இலிருந்து டைட்டானியத்தை பிரித்தெடுப்பதற்கான தரநிலை வழிமுறை:

    FeTiO3 (s) + 3Cl2 (g) + 3C (s)  → 3Co(g) + FeCl2 (s) + TiCl4(g)

    TiCl4(g) + 2Mg(s)  → 2MgCl2(l) + Ti (s)

    சிறுகோள்கள் உயிரற்ற குளிர் மற்றும் இறந்த உலகங்கள் எனக் கருதப்படுகின்றன. நாசாவிடம், பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் மாற்றுப் பயணத்திற்கு, குறைந்த பூமி சுற்றுப்பாதையைத் தாண்டி விண்வெளி சேவைகளுக்கு மனித மற்றும் ரோபோடிக் பங்களிப்புகளை இணைக்கும் யோசனை உள்ளது. இந்தப் பயணத்தின் மூன்று முக்கிய பகுதிகள்:

    1. அவதானிப்பு: தாதுக்கள் நிறைந்த இலக்கு சிறுகோளை அவதானிப்பது.
    2. வாகன செயல்படுத்தல்: ரோபோடிக் சிறுகோள் வாகனத்தைப் பயன்படுத்தி சிறுகோளை விண்கலத்துடன் இணைப்பது.
    3. மனித விண்வெளிப் பயணப்  பிரிவு: சிறுகோள்களில் மாதிரிகள் எடுத்தல் மற்றும் ஆராய்ச்சி போன்ற பணிகளைச் செய்வது.

    இத்தகைய அரிய தனிமங்களின் சந்தை மதிப்புத் தரவுகளை [2] மற்றும் [10] ஆகியவற்றிலிருந்து பெறலாம்.

    உறுப்பு விலை (அமெரிக்க டாலர்/கி) செறிவு (ppm) சுரங்க உற்பத்தி (டன்/ஆண்டு) விற்பனை செய்யப்பட்ட டன் விற்பனை (அமெரிக்க டாலர் மில்லியன்/ஆண்டு)
    குறைக்கடத்திகள்
    பாஸ்பரஸ் (P) 0.08 1300 10,100 722 2,167
    காலியம் (Ga) 300.00 60 468 468 1,544
    ஜெர்மானியம் (Ge) 745.00 210 1,640 1,640 6,145
    ஆர்சனிக் (As) 0.94 3.7 28 28 85
    செலினியம் (Se) 10.47 36 281 281 846
    இண்டியம் (In) 160.00 0.46 4 4 11
    ஆன்டிமனி (Sb) 3.92 0.047 0.4 0 0
    டெல்லூரியம் (Te) 57.32 0.45 4 0 0
    குறைக்கடத்திகளின் மொத்தம் 3143 10798

     

    வேகம் மாற்றம்

    வேகம் மாற்றம் என்பது சிறுகோள் சுரங்கப் பணியில்  மிக முக்கியமான ஒரு காரணியாகும். ஒரு சுற்றுப்பாதையில் இருந்து மற்றொரு சுற்றுப்பாதைக்கு பொருட்களை மாற்றுவது என்பது தூரத்தை மட்டுமல்லாமல், வேகம் மாற்றத்தையும் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. ஒரு சுற்றுப்பாதையில் இருந்து மற்றொரு சுற்றுப்பாதைக்கு மாறுவதற்கு டெல்டா-வி அல்லது δv எனப்படும் வேகம் மாற்றம் தேவைப்படுகிறது.

    [11] மற்றும் [12] ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பல்வேறு டெல்டா-வி மதிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.
     

    மாற்றம் டெல்டா-V (கிமீ/வி)
    பூமிப் பரப்பிலிருந்து LEOக்கு 8.5
    பூமிப் பரப்பிலிருந்து தப்பிக்கும் வேகத்திற்கு 11.2
    பூமிப் பரப்பிலிருந்து GEOக்கு 11.8
    LEO-லிருந்து தப்பிக்கும் வேகத்திற்கு 3.2
    LEO-லிருந்து செவ்வாய் அல்லது வெள்ளி பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு 3.7
    LEO-லிருந்து GEOக்கு 3.5
    LEO-லிருந்து HEEOக்கு 2.5
    LEO-லிருந்து சந்திர தரையிறக்கத்திற்கு 6.3
    LEO-லிருந்து பூமிக்கு அருகிலுள்ள சிறுகோளுக்கு 4.0
    சந்திரப் பரப்பிலிருந்து LEOக்கு (வளிமண்டலத்தில் மெதுவாகச் செல்லுதல்) 2.4
    NEA-லிருந்து பூமி பரிமாற்ற சுற்றுப்பாதைக்கு 1.0
    போபோஸ் அல்லது டீமோஸ்-லிருந்து LEOக்கு 8.0

    சிறுகோள்களில் சுரங்கம் செய்யப் பயன்படுத்தப்படும் முறைகள் கீறல், துளைத்தல், வெடித்தல், வெட்டுதல், ஆவியாக்குதல், வெட்டி நொறுக்குதல் போன்றவை. மேற்பரப்பு சுரங்க முறையும்  பயன்படுத்தப்படலாம்.

    நிகழ்கால மதிப்பு

    முன்மொழியப்பட்ட நிதியுதவி பெறும் சிறுகோள் திட்டத்தின் நிகழ்கால மதிப்பு பின்வருமாறு வரையறுக்கப் படுகிறது [12]:

         NPV = R(1+i)-n  -C

    இங்கு:

    • R: ஒரு பொருளின் நிகழ்கால மதிப்பு
    • n: ஆண்டுகள்
    • i: சந்தை வட்டி விகிதம்
    • C: மூலதனம்

    நிகழ்கால மதிப்பானது  பின்வருவனவற்றைச் சார்ந்தது.

    1. திட்டத்தைத் தொடங்குவதற்கான செலவு
    2. பூமிக்குத் திரும்பும் பொருளின் அளவு
    3. பயணத்தின் காலம்

    இத்தகைய கணக்கீடுகள் அடிப்படையில் சிறுகோள்களில் இருந்து தனிமங்கள் மற்றும் ஏனைய பொருள்களை எடுத்து வருதல் எதிர்காலத்தில் இலாபகரமானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    சிறுகோள் சுரங்கத்தின் சவால்கள்

    சிறுகோள் சுரங்கம் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான வாய்ப்பைத் திறந்து வைத்தாலும், இது பல சவால்களையும் எதிர்கொள்கிறது. இந்தச் சவால்களைப் புரிந்துகொள்வதும், அவற்றைச் சமாளிக்கத் தயாராவதும் இந்தத் தொழில்நுட்பத்தின் வெற்றிக்கு மிகவும் அவசியம்.

    1. அதிக செலவு:

    சிறுகோள்களுக்குச் சென்று, சுரங்கம் செய்யும் செயல்முறை மற்றும் பொருட்களைப் பூமிக்குக் கொண்டு வருவது மிகவும் செலவு பிடிக்கும். ராக்கெட் ஏவுதல், விண்கலம் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், சுரங்கக் கருவிகள், தகவல் தொடர்பு உபகரணங்கள், விண்வெளி வீரர்களின் பயிற்சி மற்றும் பாதுகாப்பு எனப் பல அம்சங்களிலும் அதிக செலவுகள் ஏற்படும். மேலும், சிறுகோள்கள் பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதால், பயணத்திற்கு அதிக நேரமும், எரிபொருளும் தேவைப்படும், இது செலவினத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்தச் செலவினங்களைக்  குறைக்கவும், சுரங்கத்தின் இலாபத்தன்மையை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியம்.

    1. விண்வெளி சூழலின் சவால்கள்:

    விண்வெளி என்பது மனிதர்களுக்கும், இயந்திரங்களுக்கும் கடுமையான சூழல் ஆகும். சிறுகோள்களில் மைக்ரோ ஈர்ப்பு, வெப்பநிலை மாறுபாடுகள், கதிர்வீச்சு மற்றும் வெற்றிடம் ஆகியவை சுரங்கப் பணிகளை மிகவும் சவாலாக்குகின்றன. விண்கலங்கள் மற்றும் கருவிகள் இந்தக் கடுமையான சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். மேலும், விண்வெளியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகளான சிறுகோள் மோதல், விண்கற்கள், சூரியப் புயல்கள் போன்றவற்றிற்குத் தயாராக இருக்கவும் வேண்டும்.

    1. சிறுகோள்களை அடைதல் மற்றும் தரையிறங்குதல்:

    சிறுகோள்களின் சுற்றுப்பாதை நிலையற்றதாக இருப்பதால், துல்லியமான வழிசெலுத்தல் மற்றும் தரையிறங்கும் முறைகள் மிகவும் அவசியம். சிறுகோள்களின் மேற்பரப்புப் பற்றிய துல்லியமான தகவல்கள்இல்லாததால், தரையிறங்கும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் சவால்களைச் சமாளிக்க, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் துல்லியமான வழிசெலுத்தல் அமைப்புகள் தேவைப்படுகின்றன.

    1. தொழில்நுட்ப வளர்ச்சி:

    சிறுகோள்களில் சுரங்கம் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. புதிய வகை விண்கலங்கள், சுரங்கக் கருவிகள், எரிபொருள் அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள் போன்ற பல அம்சங்களில் மேம்பாடுகள் தேவை. மேலும், விண்வெளியில் சுரங்கம் செய்து, கனிம வளங்களைக் கொண்டுவரும் பயண முறைகளை உருவாக்குவது ஒரு பெரிய சவாலாகும். இந்தத் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அவசியம்.

    1. சட்ட மற்றும் ஒழுங்குமுறை சவால்கள்:

    விண்வெளி சட்டங்கள் மற்றும் விண்வெளியில் வளங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்த சர்வதேச ஒப்பந்தங்கள் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. எந்த நாடு, எந்த நிறுவனம் சிறுகோள்களில் சுரங்கம் அமைப்பது, எந்த வளத்தை எப்படிப் பகிர்ந்துகொள்வது போன்ற விவகாரங்களில் தெளிவான விதிகள் இல்லை. இது போன்ற விவகாரங்களில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புதிய விதிகள் அவசியம். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும்.

    இத்தகைய சவால்களைச் சமாளித்து, சிறுகோள் சுரங்கத்தை ஒரு வெற்றிகரமான தொழிலாக உருவாக்குவதற்கு, அரசாங்கங்கள், விண்வெளி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், சர்வதேச ஒத்துழைப்பு, சட்ட மற்றும் ஒழுங்குமுறை சீரமைப்பு ஆகியவை சிறுகோள் சுரங்கத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானவை.

    முடிவுரை

    மாற்று வளங்களைத் தேடுவதற்கு சிறுகோள் சுரங்கம் தோண்டுதல்  ஒரு வரப்பிரசாதமாகும். எதிர்காலச்  சந்தைகளுக்கு சிறுகோள் சுரங்கம் மூலம் கிடைக்கும் வளங்கள் நல்ல பலனைத் தரும். பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் புது  வளங்களைச் பெறுவதற்கான முக்கிய இடமாக இருக்கும். பிளாட்டினம், இரிடியம் போன்ற அரிய உலோகங்கள், நீர் போன்ற எரிபொருட்கள் மற்றும் அரைக்கடத்திப் பொருட்கள் சிறுகோள் சுரங்கம் மூலம் பெறப்படலாம். 16,000க்கும் அதிகமான பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் மூலம் ஏராளமான எரிபொருள் மற்றும் ஆற்றல் வளங்கள், நீர் ஆகியவற்றைப் பெற முடியும். இந்த இயற்கை வளங்கள் எதிர்கால சந்ததியினருக்கு முக்கிய வளமாக இருக்கும். பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் 2 டிரில்லியன் டன்கள் நீர் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வளங்கள் எதிர்கால எரிபொருளாகவும், மனிதர்களின் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படலாம். SpaceX மற்றும் Deep Space Industries (DSI) போன்ற வணிக விண்வெளி நிறுவனங்கள் ஏற்கனவே சிறுகோள் சுரங்கத்திற்கான தங்கள் முயற்சிகளைத் தொடங்கிவிட்டன. சிறுகோள்களில் உள்ள தாதுக்கள் கிடைப்பது மூலம் உலகின் சில பல ட்ரில்லியனர்கள்  உருவாக வாய்ப்புள்ளது. சில அறிக்கைகள் 2100 ஆம் ஆண்டளவில் பூமியில் உள்ள தொழில்களில் கால் பகுதி விண்வெளி அடிப்படையிலான தொழில்களால் மாற்றப்படும் எனக் கூறுகின்றன [13]. பூமியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான தீர்வாக இந்தத் தொழில்கள் இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளுடன் கூடிய புதிய தொழில்துறைச்  சகாப்தம் சிறுகோள் சுரங்கம் மூலம் கிடைக்கும்.

    ஒருவேளை பாரதி இருந்திருப்பராயின்,  “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சிறுகோள்களில் சுரங்கம் அமைப்போம் “ என்று பாடியிருப்பாரோ என்னவோ !

    மேற்கோள்கள்

    1. Scheeres, D. J., Marzari, F., Tomasella, L., & Vanzani, V. (1998). ROSETTA mission: satellite orbits around a cometary nucleus. Planetary and Space Science, 46(6-7), 649-671.
    2. Ross, S. D. (2001). Near-earth asteroid mining. Space, 2001, 1-24.
    3. Veverka, J., Thomas, P., Harch, A., Clark, B., Bell III, J. F., Carcich, B., … & Cheng, A. (1997). NEAR’s flyby of 253 Mathilde: Images of a C asteroid. Science, 278(5346), 2109-2114.
    4. Billingham, J. (Ed.). (1979). Space resources and space settlements (Vol. 428). US Government Printing Office.
    5. Miller, T., & Herr, J. (2004, July). Green rocket propulsion by reaction of Al and Mg powders and water. In 40th AIAA/ASME/SAE/ASEE Joint Propulsion Conference and Exhibit (p. 4037).
    6. Yu, X., & Zhou, J. (2014, October). CubeSat: A candidate for the asteroid exploration in the future. In 2014 International Conference on Manipulation, Manufacturing and Measurement on the Nanoscale (3M-NANO) (pp. 261-265). IEEE.
    7. Elvis, M. (2013). Prospecting asteroid resources. Asteroids: Prospective energy and material resources, 81-129.
    8. Vannitsen, J., Segret, B., Maiu, J. J., & Juang, J. C. (2013, September). CubeSat on Earth-Mars Free Return Trajectory to study radiation hazards in the future manned mission. In Proceedings of the European Planetary Science Congress (EPSC’13).
    9. Andrews, D. G., Bonner, K. D., Butterworth, A. W., Calvert, H. R., Dagang, B. R. H., Dimond, K. J., … & Yoo, C. J. (2015). Defining a successful commercial asteroid mining program. Acta Astronautica, 108, 106-118.
    10. Kargel, J. S. (1997). Semiconductor and precious-metal resources of metallic asteroids. In Princeton Conference on Space Manufacturing, Space Studies Institute.
    11. Lewis, J. S. (1991). Construction materials for an SPS constellation in highly eccentric Earth orbit. SPS 91-Power from Space, 174-179.
    12. Sonter, M. J. (1997). The technical and economic feasibility of mining the near-earth asteroids. Acta Astronautica, 41(4-10), 637-647.
    13. Metzger, P. T. (2016). Space development and space science together, an historic opportunity. Space Policy, 37, 77-91.
    14. Hasnain, Z., Lamb, C. A., & Ross, S. D. (2012). Capturing near-Earth asteroids around Earth. Acta Astronautica, 81(2), 523-531.
    Share
  • உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

    உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்
    தித்திக்கும் இனிப்பும் சேர்ந்துமே நிறைய
    இத்தரையில் மலர்கின்ற ஏற்றமிகு நாளாய்
    தீபாவளித் திருநாள் சிறப்பாக வருகிறதே

    பெரியவரும் மகிழ்வார் சிறியவரும் மகிழ்வார்
    உரிமையுடன் உறவுகள் பரிசுகளும் தருவார்
    மூத்தோரை வணங்கி ஆசிகளும் பெறுவார்
    முதல்வனாம் இறையைப் பணிந்துமே நிற்பார்

    புத்தாடை அணிவார் புத்துணர்வு  பெறுவார்
    சித்தமதில் எத்தனையோ தேக்கியே வைப்பார்
    அத்தனையும் நிறைவேற ஆண்டவனை வேண்டி
    அனைவருமே ஆலயத்தை நோக்கியே செல்வார்

    இந்துக்கள் எல்லோரும் கொண்டாடி மகிழும்
    இனிமைத் திருநாளாய் இத்திருநாள் அமையும்
    இருப்பாரும் மகிழ்வார் இல்லாரும் மகிழ்வார்
    இல்லார்க்கும் இருப்பார்க்கும் இத்திருநாள் இனிக்கும்

    பட்டுடுத்தி மகிழ்வார் பலபேர் இருக்கின்றார்
    பட்டின்றி மகிழ்வாரும் பலபேர்  இருக்கின்றார்
    கஷ்டமுடன் உழைத்துக் களிப்புறுவார் களிப்பே
    காசினியில் நிறைவான களிப்பாக அமையும்

    ஏழை பணக்காரென எத்தினமும் பார்ப்பதில்லை
    இல்லார்க்கும் விடிகிறது இருப்பார்க்கும் விடிகிறது
    தீபாவளித் திருநாள் சிறப்பான திருநாளே
    யாவர்க்கும் நன்னாளாய் அதுவமைந்து நிற்கிறதே

    நரகாசுரன் மடிந்தான் எனவெண்ணி நிற்கின்றோம்
    நாளும் பொழுதுமாய்ப் பலவசுரர் வருகின்றார்
    அசுரன் மடிந்தநாள் அதுதானே தீபாவளி
    ஆனாலும் அசுரர்கள் எப்படித்தான் வருகின்றார்

    கோபமும் வெறுப்பும் கொள்ளையும் கொலையும்
    பகையும் பதற்றமும் பாரெல்லாம் நிறைகிறதே
    அன்பும் அரவணைப்பும் அறமும் ஆன்மீகமும்
    நின்று நிலைத்தாலே நித்தமுமே தீபாவளி

    இறையெண்ணி நிற்போம் இயலார்க்கு ஈவோம்
    மறைகூறும் அனைத்தும் மனமேற்றி வைப்போம்
    குறைகளைந்து நிற்போம் கோவிலுக்குச் செல்வோம்
    உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்

    Share
  • பட்டாசினால் நன்மைகளும் உண்டு

    அண்ணாகண்ணன்

    பட்டாசினால் நன்மைகளும் உண்டு. முக்கியமாக, அது அச்சத்தைப் போக்கும் ஆயுதமாக விளங்குகிறது. மத்தாப்பினைத் தொடவே அஞ்சும் குழந்தைகள், பொட்டு வெடி, பூண்டு வெடி, சாட்டை, சங்கு சக்கரம், புஸ்வாணம் என அடுத்தடுத்து முன்னேறி, நாளடைவில் வெடி வெடிப்பதற்குத் தயாராகிறார்கள். அது வெடித்துச் சிதறுவதை, அதன் பேரொலியைப் பாதுகாப்பான தொலைவில் நின்று கவனிக்கிறார்கள். அந்த அதிர்ச்சியைச் சாதாரணமாகக் கடக்கிறார்கள். எத்தகைய பேரொலிகளையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடுகிறார்கள். இந்த வளர்ச்சி, மிகத் தேவையானது. இந்த அனுபவம் அவசியமானது. இதர பல அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளுக்கும் உதவக்கூடியது.

    இன்னொரு கோணத்தில், நாளைய போர்களுக்கு இன்றே நம்மைத் தயார் செய்யக் கூடியதாய் இருக்கிறது. நூற்றாண்டுகளாய் முழுமையான போர் என்ற ஒன்றையே நாம் காணவில்லை. ஆனால், அது எந்தக் காலத்திலும் வராது என்று சொல்வதற்கு இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஏதும் நேர்ந்தால், அது நமக்கு முற்றிலும் புதிதாக இருக்கும். அமைதியான வாழ்க்கை காரணமாக, நாம் அதற்குத் திடீர் எனத் தயாராக முடியாது. ஆனால், ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஊரே போர்க்கோலம் பூண்டது போல் தான் இருக்கிறது. துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் இயல்பாக நம் கைகளில் புழங்குகின்றன. பேரொலிகளுக்கு ஓரிரு நாள்களாவது நாம் பழகியிருக்கிறோம். இது நம் மரபணுக்களில் இருப்பது, நமக்கும் நம் சந்ததியினருக்கும் அவசியமானதே.

    பட்டாசினால் நேரும் கேடுகள் ஒரு புறம் இருந்தாலும் நன்மைகளும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    ஒளி எவ்வளவு சிறிதானாலும் ஏற்றுங்கள். அது எவ்வளவு பெரிய இருளையும் வெல்ல வல்லது.

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(507)

    குறளின் கதிர்களாய்…(507)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(507)

    அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

    – திருக்குறள் – 611 (ஆள்வினையுடைமை)

    புதுக் கவிதையில்…

    முடியர்து நம்மால்
    இதனைச் செய்ய
    என்று
    மனம் தளர வேண்டாம்,
    செயலொன்றைச்
    செய்து முடிப்பதற்குரிய
    பெருமையைப்
    பெற்றுத் தந்திடும்
    பெருமுயற்சியே…!

    குறும்பாவில்…

    நம்மால் முடியாதென மனந்தளராதே,
    செயலொன்றைச் செய்து முடித்திடும் பெருமையைப்
    பெற்றுத் தந்திடும் முயற்சியே…!

    மரபுக் கவிதையில்…

    நம்மால் செய்யக் கடினமென
    நாட்ட மின்றிச் சோர்வுற்றுச்
    செம்மை யானச் செயலெதையும்
    செய்யத் தவற வேண்டாமே,
    நம்மை யந்தச் செயலைத்தான்
    நன்கு முடிக்கும் பெருமையினை
    தம்மால் பெற்றுத் தந்திடுமே
    தளரா நமது முயற்சியதே…!
    லிமரைக்கூ…

    வேண்டாம் முடியாதெனத் தளர்ச்சி,
    விடாத முயற்சி பெற்றுத் தந்திடுமே
    வெற்றிப் பெருமையுடன் வளர்ச்சி…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    வாழ்க்கயில வேணும்,
    வேலயச் செய்யும்போது
    விடாத மொயற்சி வேணும்..

    நம்மால
    இதச் செய்ய முடியாதுண்ண
    மனத்தளர்ச்சி
    வேண்டவே வேண்டாம்,
    ஒரு செயலச்
    செய்து முடிக்கவுள்ள
    பெருமய
    விடாத மொயற்சி ஒண்ணே
    வாங்கித் தந்திடுமே..

    அதால
    வேணும் வேணும்
    வாழ்க்கயில வேணும்,
    வேலயச் செய்யும்போது
    விடாத மொயற்சி வேணும்…!

    Share
  • ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்ற வலைத்தொடரை, அமேசான் பிரைமில் பார்த்தேன். இது சிறுவர்களை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட வலைத்தொடர். சிறுவர்களுக்கான வலைத்தொடர் எனச் சொல்ல முடியாது.

    பள்ளிச் சிறுவர்கள், துப்பாக்கியால் சுடுவதும் பிணத்தை மறைத்து வைப்பதும் சாட்சியங்களை அழிப்பதும் பிணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும் சொந்த அப்பாவையே தலையில் அடித்து அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைப்பதும் கார் ஓட்டுவதும் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள்.

    பள்ளி ஆய்வகத்திலிருந்து குளோரோபார்ம் எடுத்து வந்து, மயங்க வைப்பது ஓரளவு லாஜிக்குடன் இருக்கிறது. ஆனால், திருடனிடம் கைப்பற்றிய நகைகளைக் காவல் துறை மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல், வெள்ள நிவாரணத்துக்குச் சேர்ப்பது தவறு.

    ஒரு தவறு நடந்தால், உரிய வழியில் தீர்க்க வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் தீர்க்க முயலக் கூடாது. அப்படி முயன்றால் அதற்கு உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றாவது காட்டியிருக்கலாம். இதில் இறுதியில் பிள்ளைகள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் அவரவர் இயல்பாகப் படிக்கிறார்கள்.

    இதைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு தவறுகள் செய்தாலும் இறுதியில் எதுவுமே நடவாதது போல் தப்பிவிடலாம் என நினைப்பார்களா? மாட்டார்களா?

    சிறுவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். சாகசங்கள் கூடச் செய்யலாம். ஆனால், அறத்தோடு கூடிய நெறிமுறைகளுடன் வளர வேண்டும். தவறுகளைக் காணும்போது முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிக்க வைக்கலாம். அதே நேரம் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் அதை ஒப்புக்கொண்டு தண்டனைகளை ஏற்க வேண்டும். அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் திருந்த வேண்டும். இந்த அடிப்படையோடு எடுத்திருந்தால், படம் வலிமையாக இருந்திருக்கும்.

    காட்சி ஊடகங்கள் அதிகத் தாக்கம் உள்ளவை. அவ்வாறே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை. அதிலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள், வலைத்தொடர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இவ்வாறு செய்வது தவறில்லை என நினைத்தால், இதே போல் எங்காவது செய்து பார்க்க நினைத்தால், செய்தாலும் தப்பிவிடலாம் என நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். வலைத்தொடரை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இவற்றை யோசிக்கவில்லையா?

    சிறுவர்கள் ஐவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் இரட்டை முகத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார். காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் நந்தா துரைராஜ், சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சிறப்பாகக் காட்டுகிறார். கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், வலைத்தொடர் இன்னும் வலிமையாக, வசீகரமாக இருந்திருக்கும்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 32 [ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 32 [ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    இதழாசிரியர்கள் படைப்பாளர்களாகவும் அமைவது தமிழுக்குப் புதுமையான ஒன்றல்ல. பாரதி, திருவிக. கல்கி, ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், அண்ணா, கலைஞர். கவிஞர் கண்ணதாசன், மணியன், வல்லமை அன்னா கண்ணன் உள்ளிட்ட பெருமக்கள் பலரும் இதழாசிரியர்களாக இருந்து கொண்டே படைப்பாளர்களாகவும் பரிணமித்தவர்கள். இந்த நிரலில் தற்காலத்தில் வாழுகின்ற ஆரூர் தமிழ்நாடன் ‘இனிய உதயம்’ இதழின் ஆசிரியர். கல்லூரி காலத்திலிருந்தே திராவிடச் சிந்தனையாளராக இருப்பினும் அழகியல் மீதூரும் கவிதைகளையும் சமுதாயச் சிக்கல்களைப் பாடுபொருளாக்கும் கவிதைப் படைப்புக்களையும் படைத்து வரும் பண்பாளரான இவர் புதிய வடிவங்களைக் கையாள்வதிலும் கைதேர்ந்தவர்!  முகநூலில் இவரது கவிதைகளை நான் பல்லாண்டுகளாகப் படித்து வருகிறேன். மரபு சார்நத கவிதைகளையும் புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ வடிவங்களையும் கையாளும் இவருடைய கவிநேரத்தியை “ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை” என்னுந் தலைப்பில்  இந்தக் கட்டுரை சில கருத்துககளை முன் வைக்க முயல்கிறது.

    பாட்டாக நானிருந்தென்ன? பொருளாக நீ வரவேண்டும்!

    புதிராகத் தொடங்கிப் புரியாமல் நடந்து புலப்படாமலே போவதுதான் காதல் என்று ஆனபிறகு, காதல் நிலையின் எல்லாத் தடுமாற்றங்களும் கவிதையாகத்தான் அமைந்து போகும். ஒரு கனியின் எல்லாப் பகுதிகளும் இனிப்பது போலவே காதலின் பன்முகப் பரிமாணங்களும் இனிக்கும். திணை ஐந்தனுள், கசக்கிற திணை என்று ஏதும் உண்டா என்ன?  எல்லாமே இனிப்புத்தான் இலக்கியங்களில்! காதலில் இனிப்பு கசப்பு இருக்கலாம். காதற் கவிதையில் இனிப்பு மட்டுமே!  கசப்பே கிடையாது. பிரிவையும் சுவைத்துச் சொன்னவன் தமிழன். அப்துல் ரகுமான் பாடுவார்

    “காதல்
    ஒரு வித்தியாசமான சிறை!
    இங்கே
    கைதியாவதற்குத்தான்
    எல்லாரும் ஆசைப்படுகிறார்கள்!”

    என்று என்ன ஒரு மென்மை? என்ன ஒரு ஆழம்?  “பூட்டிய இருப்புக் கூட்டின் சிறைக்கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா”  என்று ஒரு கவிஞன் பாடுகிறான். அது மொழியினப் போரில் சிறை சென்றவனுக்கு. இது மொத்தத்தையும் பறிகொடுப்பதற்கு! புறவாழ்வில் சமுதாய நலனுக்காகச் சிறைசென்று விடுதலையாவதில் மகிழ்ச்சி! அகவாழ்வில் சிறைசென்றவன் விடுதலையாகிவிடக்கூடாதே என்னும் கவலையே மகிழ்ச்சி! வாழ்க்கைச் சிக்கலில் கூட சிக்கலிலிருந்து விடுதலையாவதுதான் மகிழ்ச்சி. சிட்டுக் குருவி போலே விட்டு விடுதலையாகத்தான் பாரதி விரும்பினான். அந்தப் பாட்டில் விடுதலையை முன்னாலே சொல்லி உவமத்தைப் பின்னாலே சொல்லுவான்! விடுதலையில் உண்டாகும் மகிழ்ச்சி அப்படி;!

    “விட்டுவிடுதலையாகி நிற்பாய் இந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே”

    “வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா” என்றும் பாடுவான். பாரதி உள்ளிட்ட அனைவரும் காதலில் சிறைசெல்லத்தான் விரும்பியிருக்கிறார்கள். எப்படியோ இணைந்தவர்களுக்கு ஏன் இணைந்தோம் என்பது விளங்கவில்லை. காதல் ஒரு விடுகதை  என்றோம். உண்மையில் அது விடுகதை இல்லை வினா விடை!. தலைவன் வினாவானால் தலைவி விடையாகிறாள். தலைவி வினாவானால் தலைவன் விடையாகிறான். தமிழ்நாடன் பாடுகிறார்! அடங்கிய காதலை ஒடுங்கிய மொழியால் சொல்லும் அவர் திறன் காணீர்!

    “கேள்வி பதிலாய் நாம்
    நம்மில்
    கேள்வி யார் ?
    பதில் யார்?
    தெரியவில்லை
    ஆனால் ஒன்று;
    கேள்விக்காகத்தான் பதில்
    பதிலுக்காகத்தான் கேள்வி.”

    உண்டு என்பதை எவ்வளவு எளிமையான வெளிப்பாடு? ஆனால் அழகியலும்  ஆழமும் கொண்ட வரிகள். ‘உனக்காகத்தான் நான் எனக்காகத்தான் நீ” என்றால் உரைநடை! யாருக்கு யார் பதில் என்பதும் யாருக்கு யார் கேள்வி என்பதும் தெரியாத நிலை! இருந்தால் என்ன? கேள்விக்காகத்தான் பதில் பதிலுக்காகத்தான் கேள்வி என்ற உறுதிப்பாடு வந்தபிறகு, கேள்வியாக யார் இருந்தால் என்ன? பதிலாக யார் இருந்தால் என்ன? என்னதான் காதல் என்னும் கற்பனை உணர்வைப் பாடுவதாகக் கவிஞர்கள் சொன்னாலும் அவர்களின் தனிவாழ்க்கை ரகசியத்தைக் கவிதை வரிகள் அம்பலப்படுத்துகின்ற சூழல்களும் உண்டு என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. காரணம் காதலை அதனால் பாதிக்காத யாரும் அவ்வளவு சுத்தமான கற்பனையினால் வடிக்க முடியாது, வடித்தால் அதில் காதல் வழியாது. கேட்பவர்கள் காதில் சீழ்தான் வடியும்.

    ஆரூர் தமிழ்நாடனின் மரபியல் தடம்

    மரபு என்பது சிந்தனைத் தொடர்ச்சி. அறியாத பலர் இதனை யாப்பியல் தொடர்ச்சி என்று கருதிவிடுகிறார்கள். எனவேதான் யாப்பு சுத்தமாக எழுதுகிற கவிதைகளை மரபுக்கவிதைகள் என்று வெளிப்படுத்தித் தங்களை ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள். திருவள்ளுவர் பாடுகிறார்.

    “இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து”

    “Her painted eyes have a double effect. One glance pain and other cures.” என்று இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இங்கே சில பேர் தங்கள் நூல் பிறமொழிகளில் பெயரத்தெழுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இங்கிலாந்து நாட்டுக்காரன் இந்த மொழிபெயர்ப்பைப் படித்தால் என்ன செய்வான்? என்ன கருதுவான்? திருவள்ளுவர் தமிழ்மரபியல் சிந்தனையான விழி பரப்பும் காதலை ஒரு அகநோயாகச் சித்திரித்துள்ளார். ஆனால் மொழிபெயர்ப்போ ‘MULTY SPECIALITY HOSPITAL’ ஆக மாற்றிவிடுகிறது. அதனை விட வேடிக்கை கண்ணுக்கு வண்ணம் பூசியதாக மாற்றியிருப்பது. இதனை மொழிபெயர்க்க இயலாது, இயன்றால் தமிழ்க்காதலின் சாரம் பிழியப்படாது, ‘சிறக்கணித்தாள் போன்று’ நகைசெய்ததால் நோய் வந்தது, அந்த நோய் நீங்க வேண்டுமானால் மற்றொரு கண்ணால் காணவேண்டும் என்னும் தலைவன் வேட்கை புலப்படுத்தப்பட்டது. இந்த மரபியல் சிந்தனையைத் தற்கால இளைஞன் ஒருவன் குறும்புத்தனத்தோடு இப்படிப் பாடுகிறான்

    “நீ ஒரு முறை பாரத்தாய்
    என் நெஞ்சில் முள் தைத்தது!
    முள்ளை முள்ளால்தானே
    எடுக்க வேண்டும்?
    எங்கே இன்னொரு முறை பார்!
    இதுதான் மரபுக்கவிதை! இந்த காதல் மரபை ஆரூர் தமிழ்நாடன் கவிதைகளில் பரக்கக் காணலாம்
    “உன்னிடம் சறுக்கியதை
    எண்ணும்போது
    நெஞ்சம் முழுதும்
    விரவுகிறது வெட்கம்!
    இந்த வெட்கத்தை
    விலக்க வேண்டும்
    முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்”

    காதலில் ஆண் சறுக்குவதுதான் இயல்பு. தான் சறுக்கியதற்குப் பதிலாகத் தலைவியும் சறுக்கினால் காதல் கைகூடும். இல்லையெனில் அது கனவாய்ப் போகும். அதனால் தலைவன் சொல்கிறான். நான் உன்னிடம் தோற்ற வெட்கத்தை விலக்க வேண்டுமானால் நீ என்னிடம தோற்க வேண்டும்? இயலுமா? என்று வினவுகிறானாம். நுண்ணியமான காதல் என்பது இதுதான். சுழியத்தைச் சுழியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று என்பது போன்றது இது. இந்தக் காதல் வெளிப்பாட்டை அவரே இன்னும் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    “பேரிடரும் நீ!
    நிவாரணமும் நீ!”

    தமிழக வெகுமக்கள் அறிந்த இரண்டு சொற்கள் ‘பேரிடர்’ மற்றும் ‘நிவாரணம்’. பேரிடருக்கு ஆளானவனுக்குத்தான் நிவாரணம். நிவாரணத்தின் அருமை அப்போதுதான் அவனுக்குப் புரியும். வெள்ளப் பேரிடரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பன்னிரண்டாவது தளத்தில் இருந்தவனும் நிவாரணம் பெற்றால் அவனுக்கு நிவாரணத்தின் அருமை புரியாது. இங்கே பேரிடருக்கு ஆளானவன் தலைவன். அவன் தடுக்கி விழுந்ததற்கு அவள் காரணமில்லைதான்.  காதல் உள்ளிருந்தே கொல்லும் உயிர் நோய். இவனாகவே நோய்க்கு ஆளாகிக் காரணமில்லாமலேயே தொடர்பில்லாதவளிடத்தில் நிவாரணம் தேடுகிறான். தன்னைப் பார்க்காத தலைவியைத் தலைவன் பாரத்து நோய்கொண்டான் திருக்குறள் தலைவன். தன்னைப் பாரத்ததாக எண்ணிக் கொண்ட மீராவின் காதலன் இதயத்தில் முள் தைத்ததாகக் கதைவிடுகிறான். ஆரூர் தமிழ்நாடனின் தலைவனோ  இவனாகவே தோற்றுவிட்டு அதனை ‘வெட்கம்’ என்று நாணுகிறான். இன்னொரு தலைவன் “உன்னால்தான்  எனக்குத் பெருந்துன்பம்” என்று இயற்கையைச் சாடுவதுபோலத் தலைவியைச் சாடுகிறான். நிவாரணத்திற்கான  விண்ணப்பத்தை அவளுக்கே போடுகிறான்.

    காதலுக்குக் கடன் இல்லை

    காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். நான் சொல்கிறேன் காதலுக்குக் கண்ணிருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கடன் கிடையாது. நீண்ட காலத் தவணையிலோ குறுகிய காலத் தவணையிலோ காதல் செய்ய முடியாது. அது உயிரின் ஓரங்க நாடகம். தற்காலத்தில் வெளிவரும் காதல் கவிதைகளை ஒரு முறை படித்தாலும் காதல் உணர்வே ஒரு கசப்பான உணர்வோ என்று எண்ணத் தோன்றுகிறது. தங்கள் அந்தரங்கத்து வக்கிர புத்திகளையெல்லாம் அந்தக்காலச் சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள் என்று பொய்சாட்சியோடு கவிதை புனைகிறார்கள். சங்க அக இலக்கியப் புனைவுகளைத் தொடர்ந்து திருவள்ளுவர் பேசிய ஆன்மீகக் காதலைக் கண்ணதாசன் எழுதினார்.  அப்துல் ரகுமான் பேசினார். மீரா எழுதினார். சில கவிதைகளில் மேத்தாவும் எழுதினார் தற்காலத்தில்  துரை வசந்தராசனும் ஆரூர் தமிழ்நாடனும்  வெளிப்படுத்தி வருகிறார்கள்

    “யார் செய்த சிற்பம் நீ? ஏக்கக் கனவுதரும்
    வேர்வை நிலலா உன்றன் விலாசமெது? பார்வைகளில்
    வார்த்தையைப் பார்த்து வயமிழந்தேன்! மன்மதனின்
    ஊர்வாழும் நீ யார் உறவு?

    என்னும் அடிகள் ஒரு மெல்லிய இதயத்தின் காதல் முனகலை எடுத்துச் சொல்லும் கவிதை. ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ?” என ஐயுற்ற அந்தக் காலத் தலைமகனைப்போல்  ‘யார் செய்த சிற்பம் நீ? உன்றன் விலாசமெது? என்று வினவுதல் ஒரு புதுமைப் போக்கு!

    “திருவிழா காணவந்த தேவதையே! உன்றன்
    தெருவினிலே நானும் திரிந்தேன்! – ஒரு கோடிப்
    பூச்சிறகு பூக்கப் புதுவானில் நீந்துகிறேன்!
    ஆச்சரியம் தானுன் அழகு!”

    தலைவியை நலம் புனைந்துரைக்கிறான் தலைவன்!. “உன்றன் தெருவினிலே நானும் திரிந்தேன்” என்பது அந்தக் கால இளைஞன் அறியாத ஒன்று. அவன் மடலேறுவான். இவனுக்கு அது தெரியாது. அதனால் திரிகிறான். ‘நீ தரையில்தான் நிற்கிறாய் நான்தான் பறக்கிறேன்’ என்பது தலைவனுக்குத் தெரியும்! நமக்குத் தெரியும். நமக்குத் தெரிய வேண்டுமென்றால் நாமும் காதலித்து மிதக்க வேண்டும்.

    “மனசெல்லாம் உன்றன் மழைச்சாரல்! என்றன்
    நினைவெல்லாம் காதல் நெருப்பு – கனவினிலும்
    உன்முகமே வந்து உயிரை  வதைக்குதடி!
    உன்னையே தாயேன் உவந்து”

    மிக நுண்ணியமான உணர்வலைகளை மொழியால் சொல்லுகிற இந்தக் கவிதையில் காதலின் ஆழம் புரிகிறது. மனது கருவி. நினைவு பொருள். கருவியால் பொருள். தலைவியைப் பாரத்தவுடன் மனத்தில் மழைச்சாரல்! சரி! நினைவில் எப்படி நெருப்பு வரும்? வருகிறதே! அதுதான் காதல்! காதல் என்றால் பூவுக்குள் பூகம்பம் வரும்!

    தற்காலக் கவிஞர்களுள் காதலை உணர்வு ரீதியாகப் பாடியிருப்பவர் ஆரூர் தமிழ்நாடன். இதழையும் இதழ் தரும் முத்தத்தையும் இடையையும் காதலின் எடையையும் கண்ணையும் காதையும் கவிதையாக்கிப் படிப்பவர்களை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கின்றவர்கள் இடையில் ஒரு மரபு சார்ந்த மெல்லிய உணர்வுக்கு மொழிவடிவம் கொடுத்திருப்பதில் தமிழ்நாடன் முழுமையான வெற்றியடைந்திருக்கிறார். ‘உயிரைக் கொஞ்சம் உயிர்க்க வையடா” என்று இவரால் எழுதமுடிகிறது. ‘எனது நானே எப்படி யிருக்கிறாய்? உனது உடலும் உள்ளமும் நலமா? என்று வினவும் தலைவனைக் காட்டுகிறார். காதல் படித்து எழுதுவதன்று பட்டதை எழுதுவது தமிழ்நாடன் பட்டிருக்கலாம்!

    தமிழ்நாடன் கவிதைகளில் மரபு

    மரபியல் சிந்தனை என்பது வேருக்குள் நீர் போன்றது. வேரிலிருந்து அடிமரத்துக்குள் வந்து, கிளைகளுக்குள் பாய்ந்து, சினைகளுக்குள் சீராடி, இலைகளுக்குள் எழுச்சியடைந்து பூக்களில் பரிணமிப்பது. மரபு பற்றிய முழுமையான புரிதலும் பார்வையும் அற்றவர்கள் அதனை யாப்பு என மயங்கித் திரிகிறார்கள். தமிழ்க்கவிதைகளின் சாரமே பொதுவுடைமை. இதனை ஓர் ஆய்வுப் பொருண்மையாகவும் கொள்ள முடியும். தாமரை ஒரு மலர். அதனைப் பெரும்பாலும் இறைவனுடைய திருவடி மென்மைக்குப் பண்புவமை ஆக்கியே பழக்கப்பட்டவர்கள் நம்மவர்கள். அதற்கு முன்னாலே தலைவியின் முகத்திற்கு உவமம் சொன்னார்கள். இந்த இரண்டு வகையைத் தவிர அவர்கள மலர்களை வேறு எதற்காகவும எங்கும் பயன்படுததினார்களா என்பது அறியக் கூடவில்லை!. முதன் முதலாகப் பாவேநதர்தாம் அழகியலைச் சமுதாயச் சிந்தனைக்கு மடைமாற்றம் செய்து காட்டுகிறார்.

    “சித்திரச் சோலைகளே உமை நன்கு
    திருத்த இபபாரினிலே இங்கு
    எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தரோ
    உங்கள் வேரினிலே”

    “அழகின் சிரிப்பில் சோலைகளைப பாடியவர்தான் பாவேந்தர். சோலையின் நடுவே சொக்குப்பச்சை படர்க்கொடி முல்லையின் சிரிப்பை ரசித்தவர்தான் பாவேந்தர். இந்த இடத்தில் அவரால் தொழிலாளிகளைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. பூவிற்குச் செம்மை வந்தது தொழிலாளியின் ரத்தத்தினால் என்பது அவரது தற்குறிப்பேற்றம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய தஞ்சை ராமையாதாஸ் ‘வணங்காமுடி’ என்னும்  திரைக்காவியத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

    “மலையே! உன் நிலையே நீ பாராய்
    கலைஞன் கை உளியாலே
    காவியச் சிலையான
    மலையே உன் நிலையே நீ பாராய்
    தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே நீ!
    உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே!”

    பாறைகள் கிடக்கின்றன. அவை பாறைகளே! எதுவரைக்கும்? சிற்பியின் உளி படாத வரைக்கும்!. அவன் விரலுக்குத் தெரிந்திருக்கிறது எந்தப் பாறையில் திருவள்ளுவர் இருப்பார்? எந்தப் பாறையில் சிவபெருமான் இருப்பார்? எந்தப் பாறையில் பெரியார் இருப்பார்? எந்தப் பாறையில் பெருமாள் இருப்பார்? எந்தப் பாறையில் தேர் இருக்கும்? எந்தப் பாறையில் யானை இருக்கும்? எந்தப் பாறையில் பாண்டவர்கள் இருப்பார்கள்? எந்தப் பாறையில்  படைகள் இருக்கும்? என்றெல்லாம் அவன் விரல்களுக்குத் தெரிந்து கண்டறிகிறான். கடவுளை வணங்குகிறவன் கல்லை மறக்கிறான். திருவள்ளுவரை வணங்குகிறவன் பாறையை மறக்கிறான். ஆனால் சமுதாயச் சிந்தனையுடைய ஒரு கவிஞன் மூலத்தை மறப்பதில்லை. சிற்பியின் உழைப்பு இல்லாவிட்டால் பாறை பாதையோரத்துக் கல்லாகியிருக்கும் என்னும் கசப்பான உண்மை பாவலனுக்குத் தெரிந்திருக்கிறது, அதனால்தான் பாடுகிறான்.

    “கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான மலையே!”

    பாறை தானாகச் சிலையாகாது. சிற்பியின் கையுளி அதன் மேல் படவேண்டும். பக்தர்கள பகவானைத் தரிசிப்பார்கள். கல்லைப் ;பாடாத கவிஞன் சிலையைப் பாடுகிறான். எதில்? காவியத்தில்! பாவலன் சிற்பியைச் சிந்திக்கிறான். இந்த மரபியல் சிந்தனையை அப்படியே தமீழ்நாடன் வழிமொழிகிறார்!

    “எல்லாச் சிற்பங்களிலும் தெரிகிறது!
    வேர்வை ஒழுகும்
    யாரோ ஒரு சிற்பியின்
    சிந்தனை முகம்!”

    “சிற்பம் என்பது கழித்தல் ஓவியம் என்பது கூட்டல்” என்று பாடினார் அப்துல் ரகுமான். சிதறி விழும் சில்லுகள்தான் சிற்பத்தைக் காட்டுகின்றன. கண்டெடுக்கின்றன. சில்லுகள் தங்களை இழந்துதான் சிற்பத்தைக் காட்டுகின்றன. சிற்பத்தைக் காட்டுவதற்காகத் தங்களை இழக்கின்றன. அந்தச் சிற்பத்தில் மானுட உருவங்களையும் பறவை உருவங்களையும் இறைவன் திருவுருங்களையும் மரபு வழியாகக் கண்டுவரும் கவிதை உலகில் பின்னாலே பாடிய கவிஞர்கள் வழியைப் பின்பற்றி ஒரு சிற்பியின் சாதாரண முகமல்ல “சிந்தனை முகத்தைக்” காணும் தமிழ்நாடனின் கவிதையில் உழைப்பின் உயர்வும் பெருமையும் தென்படுகிறதா இல்லையா?

    மழைவேண்டும் தமிழ்நாடன்

    பெரும்பாலும் மழைவேண்டித்தான் வழிபாடு நடக்கும். சங்க இலக்கியத்தைப் பொருத்தவரையில் மாரியைப் பாரியோடு ஒப்பிட்டுப் பாடிய புலமைத்திறன் அனைவருக்கும தெரியும். அது மழையின் வண்மை குறித்தது.  வள்ளுவப்பெருமான் திருக்குறள் பாயிரத்தில் வான் சிறபபு என்னும் இரண்டாவது அதிகாரத்தில் அதனை வைத்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இருப்பினும் அவ்வதிகாரத்தில் உலகியல் இடையறாது நடப்பதற்கு அது செய்யும் உதவியையும் அறம் பொருள் இன்பங்களுக்குக் காரணமான அதன் பெருமையையும் உணர்த்தினாரேயன்றி  அந்த அதிகாரத்தின் ஏந்தப் பாடலிலும் மழையின் அழகியல் பாடப்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. அதன் அவசியமே பாடப்பெற்றது,

    “ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
    ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
    ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
    பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
    ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய் “

    என்னும் திருப்பாவையில் பெருமாள் அருளின் தன்மையை உவம வழி விளக்குகிறார் ஆண்டாள். மழையின் பயணம், அதன் உருவம் நிறம், மின்னலின் தனிச்சிறப்பு இடிமுழக்கம் எனத் தொகுப்பாகப் பாடியருளினார் ஆண்டாள். உவமத்தின் பரிமாணத்தை எப்படி நோக்கிக் கவிதை எழுத வேண்டும் என்பதற்கு இந்தப் பாசுரம் ஒர் ;சிறந்த எடுத்துக்காட்டு, வெகுமக்கள் ஊடகமாகிய திரைப்படத்தில் மழை, காதலர்கள் நனைவதற்காகவே பெய்தது, கவிஞர் மருதகாசிதான் அந்தப் போக்கைக் கொஞ்சம் மாற்றி சமுதாயச் சிந்தனையோடு மழைப்பொழிவைக் காதல் பாட்டாகவே பாடிக் காட்டினார்.

    “சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே மழை
    கொட்டு கொட்டுன்னு
    கொட்டுது பாரு அங்கே

    கஷ்டப்படும் ஏழை சிந்தும்
    நெற்றி வேர்வை போலே -அவன்
    கஞ்சிக்காகக் கலங்கி விடும்
    கண்ணீர்த் துளியைப் போலே  “

    முட்டாப் பயலே மூளை
    இருக்கா என்று ஏழை மேலே…
    துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற வார்த்தை போலே

    இதற்குப் பின்னால் பலர் மழை பற்றி எழுதியிருந்தாலும் “என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்னும் ஒரு மென்மையான ஏக்கக் குரல் வைரமுத்திடமிருந்து வந்தது. அதற்கு முன்போ பின்போ கவிஞர் வசந்தராசன் தனக்கேயுரிய சொற்சிலம்பங்களைக் கைக்கொண்டு மழைக்களம் கண்டார்.

    “அணையுடைந்த மேகநதி மலையு ருட்டும்!
    அருவியென ஆர்ப்பரித்து த்  தரைவி ரட்டும்!
    பனைமரத்தில் பல்துலக்கிப் பசித ணிக்கப்
    பாறைகளைக் கடித்துண்டு துப்பி வைக்கும்!
    முனைமுறியா ஊசிகளின் காதுக் குள்ளே
    முழுப்பகலும்  இரவோடு  முயங்கி நிற்கும்!
    சினைமாட்டின்   மடிபோல  நீர்பெ ருக்கும்!
    சிற்றூரைப்  பேரூரை  ஓரூ ராக்கும்!*

    “பனைமரத்தில் பல்துலக்கும் மழை” எனக் கலிங்கத்துப் பரணியின் களத்தைக்  காட்டிய வசந்தராசன், சினைமாட்டின் மடிபோல நீர் பெருக்கும்! என்னும் நேர்முக வண்ணனையைப் பதிவு செய்திருக்கிறார். இங்கே நான் காட்டிய அத்தனையும் பல தளங்களில் கண்ட கவிதைகளே!. இந்தத் தளத்தில்தான் கவிதை தோன்றும் என்பதில்லை. எந்தத் தளத்திலும் கவிதை தோன்றலாம்.  இந்தப் பின்புலத்தில்தான் தமிழ்நாடனின் மழை பற்றிய  கவிதையை நோக்க வேண்டியதிருக்கிறது. மழையின் தீவிரத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால் உண்டாகும் நடைமுறைச் சிக்கல்களையும் நீண்ட கால இழப்புக்களையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். பெருமழையின் பாதிப்பை உணர்ந்து பாடுகிறார். அதன் விளைவுகளை விருத்தத்தில் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

    “புன்னகையைத் தொலைத்ததுபோல்  தாவ ரங்கள்
    பொலிவிழந்து நிற்பதெலாம்  உன்னால் தானே?
    தன்கிளையின் காய், கனிகள்  உதிர்த்த தோடு
    தவமரங்கள் வீழ்ந்ததுவும்  உன்னால் தானே?*
    தென்றலுக்கே அதிர்கின்ற  சிற்று யிர்கள்
    திணறியதும் பதறியதும்  உன்னால் தானே?
    இன்புறுத்தும் பறவையெலாம்  சிறகொ டுங்கி
    எங்கெங்கோ பறந்ததெலாம்  உன்னால் தானே?

    கொட்டகையில் கட்டிவைத்த  ஆடும் மாடும்
    குலைநடுங்கித் தவித்ததுவும் உன்னால் தானே?
    கட்டளைக்குக் காத்திராமல் பஞ்சா  ரத்துக்
    கவின்கோழி தப்பியதும்  உன்னால் தானே?
    *நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல்
    நலமின்றிச் சரிந்ததும் உன்னால் தானே?
    பட்டணத்து மாமனவன்  சொல்லிச் சென்ற
    பயணமது நின்றதுவும்  உன்னால் தானே?

    பாதையெல்லாம் தொலைந்ததுவும்  உன்னால் தானே?
    பயம்வந்து கவ்வியதும்  உன்னால் தானே?
    வாதையெலாம் பெருகியதும்  உன்னால் தானே?
    வாழ்வியலின் நெருக்கடியும்  உன்னால் தானே?
    கூதல்தரும் வேதனையும்  உன்னால் தானே?
    குறுகுறுக்கும் ஆசைகளும்  உன்னால் தானே?
    ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
    அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ!

    இந்த விருத்தங்களில் தொடர்ந்தாளப்பட்டிருக்கும் ‘உன்னால்தானே’ என்பது உலகியல் வழக்கு. “எல்லாம் ஒன்னால வந்த வினை” என்பதைப் பலரும் கேட்டிருக்கலாம். கவிதையைக் கவிஞன் மொழியில் செவிமடுக்க வேண்டும். அவன் சொல்வதுபோல் நாம் பாவனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரம் பேசினால் அந்தப் பாத்திரமாக வாசகன் மாற வேண்டும். பாத்திரம் பேசுவதையெல்லாம் நூலாசிரியன் கருத்து என மயங்கக் கூடாது. அப்போதுதான் படைப்பாளியின் அனுபவம் வாசகனுக்குக் கிட்டும். மிக நுண்ணிய அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை இது,  பாட்டில் துன்பங்களையல்லவா பட்டியலிடுகிறார்? இதில் அழகியல் எப்படி வரும் எனச் சிலர் வினவக்கூடும்.  துன்பம் மக்களுக்கு, கவிதைக்கு அல்ல. கவிதைக்கு அது பாடுபொருள்.

    1. தாவ ரங்கள் பொலிவிழந்து நிற்பது
    2. தன்கிளையின் காய், கனிகள் உதிர்த்தது
    3. தவமரங்கள் வீழ்ந்தது
    4. சிற்று யிர்கள் திணறியது பதறியது
    5. பறவையெலாம் சிறகொ டுங்கி எங்கெங்கோ பறந்தது
    6. ஆடும் மாடும் குலைநடுங்கித் தவித்தது
    7. பஞ்சா ரத்துக்  கவின்கோழி தப்பியது
    8. *நட்டுவைத்த வாழை நலமின்றிச் சரிந்ததும்
    9. மாமன் பயணமது நின்றது
    10. பாதையெல்லாம் தொலைந்தது
    11. பயம்வந்து கவ்வியதும்
    12. வாதையெலாம் பெருகியது
    13. வாழ்வியலின் நெருக்கடி
    14. கூதல்தரும் வேதனையும்
    15. குறுகுறுக்கும் ஆசைகள்

    என்று நிரல் படுத்திப் படித்தால் பாட்டின் பொருளுணரலாம். இதற்குள்ளேதான் அடங்கிக் கிடக்கிறது கவிதை. அந்தக் கவிதையின் பொலிவினைப்

    1. புன்னகையைத் தொலைத்தது போல் தாவரங்கள்
    2. *நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல் நலமின்றிச் சரிந்ததும்

    என்னும் உவமங்கள் மேலும் பொலிவாக்குகின்றன. சங்க இலக்கியத்தின் தலைசிறந்த மாண்பே அடைச்சொற்கள்தாம். அடையில்லாப் பெயர்ச்சொற்களைச் சங்க இலக்கியத்தின் எந்தப் பகுதியிலும் காண முடியாது. அந்த நீண்ட நெடிய மரபு தமிழ்நாடன் கவிதைகளில் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது, பெயர்ச்சொற்களுக்கு அடைச்சொற்கள் என்பது நெற்றிக்குத் திலகம் போல!

    “ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
    அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ! “

    கெடுப்பதும் மழை என்று பாடிய வள்ளுவர் எடுப்பதும் மழை என்றும் பாடி வேண்டினார். அந்த வேண்டுதலைத்தான் தமிழ்நாடன் முன்னெடுக்கிறார். “மழையே!  உனக்கு இரக்கம் இல்லையா என்றால் அவன் அரசியல் வாதி! மழையே உனக்கு ஈரம் இல்லையா என்றால் அவன் கவிஞன்.  தமிழ்நாடன் கவிஞன் என்பதற்கு இந்தச் சொலலாட்சி போதும்!

    உள்ளூர் பார்வை

    ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகப் பொங்கல் மலருக்குப் பாட்டு  எழுதியவர்களெல்லாம் கவிஞர்கள் எனப்பட்டார்கள். திருமண அழைப்பிதழ் எழுதிக் கொடுத்தவர்களெலலாம் வரலாற்றாசிரியர் ஆனார்கள். தற்போதும் நிலைமை அப்படியேதான் ;இருக்கிறது. என்ன ஒரு மாற்றம்? கவிதையில் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்க்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் செய்த செயல்களைச் சாதனைகளாகக் காட்டி, அவற்றை அப்படியே பல்லாங்குழிக்குள் வைத்த சோழிகளைப் போல, யாப்புக்குள் திணித்து நோபல் பரிசுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அப்படியானால் தனிமனிதனைப் பாடுவது கவிதையாகாதா என்றால் ஆகும். அது கவிதையாக இருக்க வேண்டும். இது வரை நானறிந்த வரை மகாகவி பாரதிக்குப் பாரதிதாசன் எழுதிய பாராட்டினைப் போல் வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. அதற்கு அடுத்தபடியாக உ.வே.சாவுக்கு மகாகவியும் அறிஞர் வ.சுப மாணிக்கமும் எழுதிய பாராட்டுக்கள் அற்புதமானவை.

    “தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
    பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்”

    என்னென்பேன்?” என வியந்து போற்றிய அந்த உணர்ச்சிப் பாராட்டு இன்றைக்கு இல்லை. காரணம் பொருளைப் பாடுவதற்கான காரணங்கள் உண்மையானவையாக இல்லை.  கவிஞனாகவும் இல்லை. பாடுகிற தலைவனிடமிருந்து எதனையாவது எதிர்பார்த்து எழுதினால் அது பாராட்டாக இருக்கலாமே தவிர, கவிதையாக இருக்காது. எதனையும் எதிர்பார்க்காமல் எழுதுகிறவன் கவிஞனாக இல்லாமல் வாய்பாட்டு வணிகனாக இருந்தால் தளையிலேயே சிக்கித் திணறுவான். எனவே இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.  தமிழ்நாடன்; இரண்டும் சம அளவில் கலந்த கலவை. அதனால்தான் அவர் யாரைப் பாடினாலும்  கலைஞரைப பாடியதுபோல அமையவில்லை. அவரும் இவரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடனின் தந்தையார் கலைஞரின் அருமையுணர்ந்து அவருக்கு நெருக்கமானவர். கவிஞர் பிறர் கலைஞரைப் பாடுவதற்கும் தமிழ்நாடனை ஒத்தவர் கலைஞரைப் பாடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. கவிதை மணங்கமழும் கவிதைகளால் கலைஞரை அவர் பாடியிருப்பன  கவிதைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன .

    நீயெழுதும் போதோ நெருப்பெரியும்! உன்கையால்
    நீயெடுக்கும் பூவும் நிறம்மாறும் – நீயெழுப்பும்
    போர்முழக்கச் சொல்லில் புயல்வீசும்! செந்தமிழின்
    வேர்நீ விழுதுகளும் நீ!

    ஒரு நேரிசை வெண்பா எப்படி அமைந்தால் கற்பார் உள்ளத்தைக் கவரும் என்னும் வித்தை தெரிந்தவர் தமிழ்நாடன். அந்த வெண்பாவில் முரண் அமைப்பைக் கையாளும் கலை கற்றவர் அவர். சொல் முரண் பொருள் முரண் என்னும் வகைபாடுகளை நன்கு அறிந்தவர்.அதனால் அந்த முரண்களை மிக இலாவகமாகக் கையாண்டு சில வெண்பாக்களைக் கலைஞருக்குப் பாடியிருக்கிறார் இன்னொரு வெண்பா இப்ப்டி அமைந்திருக்கிறது

    “உன்னிதழ்கள் என்ன ஒளித்தமிழின் தாய்வீடா?
    பொன்சிறகுச் சொற்களெல்லாம் பூக்கிறதே! உன் பேச்சால்
    தேன்பூச்சினுள்ளும் திராவகம் ஊறுவதை
    நான் பார்த்தேன் அன்றொரு நாள்!”

    அரசியல் களம் தமிழிலக்கியக் களம் என்னும் முரண்பட்ட இரு களங்களீலும் மாபெரும் வெற்றிகண்ட கலைஞரை முரண் தொடையினாலேயே பாடியிருப்பது சிலாகிக்கத தகுந்தது. தேர்தலில் கட்சி முழுமையாகத் தோற்றாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் தலைவர் கலைஞர்! காரணம் இலக்கியம்! “நீ என்ன தேனும் பாதரசமும் கலந்த கலவையா?” என்று வைரமுத்து ஒரு முறை கலைஞரைப் பாடியிருந்தார். கலைஞரின் இந்த முரண் தமிழ்நாடனை மட்டுமன்று எந்தக் கவிஞனையும் கவரும்! இந்த முரண்களின் தொகுப்பை இப்படி அமைத்துப் பாரக்கலாம்!

    1. கருவியாக இருக்க வேண்டிய நெருப்பே எரிகிறது
    2. பூக்களுக்குப் பதிலாகச் சொற்கள் பூக்கின்றன.
    3. தமிழ்ச்சொற்கள் கலைஞர்வழி பூக்களாகக் கொட்டுகின்றன
    4. மென்மையான சொற்கள் அனல் வீசும் சொற்களாக மாறுகின்றன
    5. பூக்களில் தேனுக்குப் பதிலாகத் திராவகம் சொட்டுகிறது
    6. தமிழிலிருந்து வந்த கலைஞர் தமிழைத் தாங்குகிற விழுதாகவும் இருக்கிறார்.

    எட்டு அடிகள் கொண்ட இரு நேரிசை வெண்பாக்களில் கலைஞரின் சொற்களின் இருவகை முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் தமிழ்நாடன்! பாடாண் திணைக்குள் கையறு நிலை அடங்காது.  ஆனால் கையறு நிலையில் பாடாண் திணை அடக்கம்! அந்த வகையில் கலைஞருக்குப் பாடிய கையறு நிலைப் பாடல பாடாண் திணைப் பொருண்மைகளை உள்ளடக்கிக் கவித்துவமாகப் பாடியிருக்கும் தமிழ்நாடனின் கவியாளுமை இதனால் புலப்படக் கூடும்.

    உலகப்பார்வை

    உரைநடைக்கும் கவிதைக்கும் எத்தகைய வேறுபாடுகள் உள்ளனவோ அத்தகைய வேறுபாடுகளே சாதாரண மனிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் உள்ளன. சாதாரண மனிதன் நிகழ்வியலைப் பேசுகிறான். கவிஞன் கற்பனையில் மிதக்கிறான். சாதாரண மனிதன் தரையில் நடக்கிறான். .கவிஞன் வானத்தில் பறக்கிறான்.  சாதாரண மனிதன் மனிதர்களிடத்தில் மட்டும் பேசுகிறன். கவிஞனோ மரம், செடி, கொடி என அனைத்து உயிரினங்களோடும் உறவாடுகிறான். சாதாரண மனிதன் உரையாடலில் புனைவுகளே இல்லை. ஆனால் கவிஞன் புனைவுகள் இன்றி எழுதவே முடியாது, சாதாரண மனிதன் அக்கம்பக்கத்து வீட்டாரையும் பகைத்துக் கொள்கிறான். கவிஞனோ மானுடச்சமுதாயம் அத்தனையையும் தன் பார்வையால் தழுவிக் கொள்ளுகிறான். அடுத்த வீட்டுச் சுவற்றையே சாதாரண மனிதன் பார்த்துக் கொண்டிருக்கிறான். சீனப் பெருஞ்சுவரையும் தாண்டியும் கவிஞன் சிந்திக்கிறான். உள்ளூர் தகராறு கூட ஒரு சாதாரண மனிதனுக்குத் தெரிவதில்லை!. ஆனால் ஈராக் ஈரான் போரிலிருந்து இஸ்ரேல் போர் வரை கவிஞனுக்குத் தெரிந்திருக்கிறது, அவனுடைய மானுடப் பார்வை விசாலமானது. அதனால்தான் சங்கச் சான்றோர்களும் அவர்வழி வந்த புலவர் பெருமக்களும் தங்கள் இலக்கியங்களை ‘வையம்’ என்றோ ‘உலகம்’ என்றோ தொடங்கினார்கள்.

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ

    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
    நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ!
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ!

    வானகமே இளவெயிலே மரச்செறிவே
    நீங்களெல்லாம் கானலின் நீரோ!
    வெறும் காட்சிப் பிழைதானோ!

    போனதெல்லாம் கனவினைப்போல்
    புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ!
    இந்த ஞாலமும் பொய்தானோ!

    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ!
    அங்குக் குணங்களும் பொய்களோ!

    காண்பதெல்லாம் மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ!

    என்று மகாகவி பாடுகிறார் என்றால் தன் வாழ்க்கைத் துயரத்தை மறந்து வறுமையைத் துறந்து பாடுகிறார் என்பதை அறிதல் வேண்டும். அசையும் பொருள் அசையாப்பொருள் ஆகியவற்றைத் தனக்கு உறவாக்கிக் கொள்ளும் ஒரு தனித்திறன் மகாகவிக்கு இருந்திருக்கிறது! அவரைத் தொடர்ந்து வந்த பாரதிதாசன்,

    அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    உன்னைச் சங்கமமாக்கு!
    மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
    பிரிவிலை எங்கும் பேத மில்லை!
    உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
    புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
    புவியை நடத்து! பொதுவில் நடத்து!

    உலகு முன்னால் தனிமனிதன் பின்னால் என்னும் சமுதாய நோக்கத்தை முன்னெடுக்கிறார். பாரதிதாசனுடைய கவிதைகள்  தமிழ், தமிழர் என்று தொடங்கித், திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து  விரிந்து செல்லும் இயல்புடையன.இந்த இயல்பு அவர் ஒரு கவிஞர் என்பதால் வந்த இயற்கையமைதி! ஒரு தனிமனிதனிடத்தில் இத்தகைய பரந்துபட்ட விசாலமான மனத்தை அவ்வளவு எளிதாகக் கண்டு விட முடியாது.

    இந்த நீண்ட நெடிய மரபில் வந்தவர்தான் ஆரூர் தமிழ்நாடன். காதலைப் பற்றி எழுதுவது, கண்ணீரைப் பற்றி எழுதுவது, வாழ்வியல் சிக்கலைப் பற்றி எழுதுவது என அவர் பயணம் செய்திருக்கிற களங்கள் பலவாயினும்

    என் கனவென்பது பசியறு உலகம்!
    என் சுகம் என்பது சூதறு மனிதம்!
    என்னிசை என்பது இயற்கையின் பாடல்!
    என் தவம் என்பது வேர்வையின் வெகுமதி!
    என்னூர் என்பது உலகப் பெருவெளி!
    என்னுற வென்பது மானுடக் கூட்ட்ம்!!
    என் மகிழ்வென்பது உலகின் மகிழ்வு!
    என் துயர் என்பது பிறர் படும் துயரம்!!

    என்னுந் தன்னிலை விளக்கம் ஒரு கொள்கைப் பிரகடனமாகவே ஒலிப்பதைக் காணலாம். ‘யாதும் ஊரே யாவரும கேளிர்’ என்று தொடங்கிய இந்த மரபின் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருக்க வேண்டும். மரபியல் சிந்தனைகள் என்பன இவையே. மரபுக்கவிதைகள் என்பனவும் இவையே. மனிதனே ஒரு சமுதாய விலங்கு! அவன் கவிஞன் ஆனால் மானுட நேசிப்பே அவன் பிறவி நோக்கமாகிவிடுகிறது. சமுதாயத்திற்காகத் தலைவர்கள் பாடுபடலாம். உண்மைக்கவிஞனோ சமுதாயத்திற்கே தன்னை ஒப்படைத்து விடுகிறான். அப்படி ஒப்படைத்த ஒரு சிலருள் தமிழ்நாடனும் ஒருவர்!

    கவிதையில் புதிய வடிவங்கள்

    பொருளுக்கேற்ற வடிவம் என்பதே தமிழ்க்கவிதைகளின் வடிவக் கோட்பாடு. இது பற்றிய என் ஆய்வு பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது. சிலப்பதிகாரத்தை விருத்தத்தில் எழுதியிருந்தாலும் கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலும் இரண்டும்; படுதோல்வி அடைந்திருக்கும். இங்கே தொட்டதற்கெல்லாம் “தாக்கம்! தாக்கம்” என்னும் ;கடுமையான பதப்பிரயோகத்தைப் பயன்படுத்தி புதிய வடிவங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பற்றிக் கவலைப் பட ஏதுமில்லை. ஜப்பான் நாட்டுக்காரன் சிதைந்துபோன தன் நாட்டை மறுசீரமைப்பு செய்துவிட்டுப் புதுவாழ்வை நோக்கி எழுச்சி நடை போட்டுக்கொண்டிருக்கிறான். இவர்கள் ஜப்பான் மொழி தெரியாமலேயே ஹைக்கூ என்பது ஜப்பானிய தாக்கத்தால் வந்நது என்பார்கள். பாரதிபோல யாரோ ஒருவர் மிகுந்த சிரமப்பட்டுத் தன் பன்மொழிப் புலமையால் அதனையோ அது போன்றவற்றையோ அறிமுகப்படுத்தியிருக்கலாம்.  திரு அப்துல் ரகுமான் அத்தகைய பன்மொழி வித்தகர். மரபு சாராத கவிதைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்கள ;மிகவும் ஆழமானவை. அவருடைய முனைவர்ப் பட்ட ஆய்வேடே “புதுக்கவிதைகளில் குறியீடு” என்பதாகும். இவர்கள் சிரமப்படாமலேயே அந்த வடிவத்தைத் தம் சிந்தனைகளுக்கு வடிவமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். புதுக்கவிதை அதுபோல்தான் கலீல் ;ஜிப்ரான் என்பார்கள். பாப்லோ நெருடா என்பார்கள். எஸ்ராபவுண்டு என்பார்கள். டி.எஸ்.எலியட் என்பார்கள். இவர்களுக்கு உள்ளூரில் எந்தத் தாக்கமும் இருக்காது. வெளிநாட்டு இறக்குமதியால்தான் இவர்கள் தாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நமக்கு இதுபோன்ற எது பற்றியும் கவலையில்லை. இந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக், பழமொன்ரியூ என்றெல்லாம் கவிதைச் சந்தையில் பல பொருள் வணிகம் செய்யப்படுகிறது, இந்த வணிகம் ஒருவகையில் இந்த மண்ணில் நிலை கொண்டிருந்த மரபுக்கவிதையின் பேரழிவுக்குப் பெருங்காரணமாகவும் அமைந்தது. இத்தகைய வடிவங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நோக்கினால் சிலவற்றில் கவிதைகள் இல்லாமல் இல்லை. இந்த வடிவங்கள் தமிழுக்குப் புதியன என்பதில் எத்தகைய ஐயமோ இவை வரவேற்கப்படவேண்டியவை என்பதில் தயக்கமோ எனக்கு இருந்ததில்லை ஆனால் தள்ளுவண்டி தக்காளியைப போல வணிகத்திற்குப் பயன்படும் போதுதான் கொஞ்சம் நெளிய வேண்டியதிருக்கிறது.

    தமிழ்நாடன் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பாளர். கவிதைப் படைப்பாளர். இயல்பிலேயே கவிஞர். மரபுக்கவிதைகளைச் சரளமாக எழுதும் அவர், புதிய கவிதை வடிவங்களை உள்வாங்குவதற்கு எந்தச் சிரமத்தையும் கொள்வதில்லை. காரணம் கவிஞனுக்கு அதுபோன்ற சிரமங்கள் ஏதும் வராது. அவன் மனம் எப்போதும் கவிதையையே சிந்தித்துக் கொண்டிருப்பதால் வடிவங்கள் அவனை ஆட்கொள்ளுவதில்லை. மாறாக அவனே எல்லா வடிவங்களையும் ஆட்கொள்கிறான். உலகம் யாவையும் தாமுளவாக்கவும் நிலைபெறுத்தலும் நீக்கலும் கொண்ட பரம்பொருளைப் போல கவிதையின் எந்த வடிவத்தையும் ஆக்கவும் நிலைபெறுத்தவும் நீக்கலும் செய்வதற்கான வல்லமையைப் பெற்றவர் தமிழ்நாடன். அவருடைய புதிய கவிதை வடிவங்களிலிருந்;து சில கவிதைகள் இப்படி அமைந்திருக்கின்றன. கவிஞர் சுரதா ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார். இரவு நேரம். நாய் குரைக்கிறது. அடித்துத் துரத்துவதற்குச் சரளைக் கற்களைத் தேடுகிறார். அவை பூமியோடு ஒட்டிக் கொண்டு இவர் கைக்குக் கிட்டவில்லை. உடனே சொல்கிறார். “என்ன இது இந்த ஊரில்? நாயை அவிழ்த்துவீட்டுக் கல்லைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்?” பிறவியிலேயே கவிஞனாக இருந்தவனுக்குத்தான் இது மாதிரி கற்பனைகள் தோன்றும். நாயைக் கட்டிப் போடுவது எல்லாருக்கும் தெரிந்த வினைதான். ஆனால் மண்ணோடு ஒட்டிய சரளைக் கற்களைக் கட்டிப் போட்டிருப்பதாக எல்லாராலும் கற்பனை செய்துவிட முடியாது.

    “என்ன அசதியோ
    அசையாமல்
    படுத்திருக்கிறது
    இரவு;
    நான்தான்
    புரண்டபடியே இருக்கிறேன்.

    மனிதன் அசையாமல் கிடப்பான். அசைந்தபடியும் கிடப்பான். இரவுக்கு அந்த வேறுபாடு கிடையாது. கவிஞனாகையால் உழைத்துக் களைத்த உடம்பல்லவா? இவன் தூக்கம் வராமல் அசைந்து புரண்டு கிடந்து வானத்து இருளை நோக்குகிறான். அந்த இருள் அசையாமல் கிடக்கிறது. இருள் எப்போதுமே அசைவதோ புரள்வதோ இல்லை. கவிஞன் புரண்டதால் வானம் புதிதாகப் புரளாமல் படுத்திருப்பதுபோல் தோன்றுகிறதாம்.

    “ வீணை வாசிக்கிறாய் நீ!
    கண்களால் ரசிக்கிறேன் நான்!”

    கல்யாண அகதிகள் என்று ஒரு திரைப்படம் அதில் நாயகன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவன். அவன் காதலி தன் தோழிகளிடம் சொல்லுவாள் “நான் நியூஸ் பாக்கணும்! நான் நியூஸ் பாக்கணும்!” என்று தோழிகள் வியப்படைவார்கள். செய்திகள் செவிக்குரியன. ஆனால் தங்கள் தோழி ‘பாக்கணும்’ என்றல்லவா சொல்கிறாள் என்று. காதலுக்குக் கண்தான் தலைமையாசிரியர். மற்ற எந்த புலனும் குறிப்பாக மூளை பயன்படவே பயன்படாது, ‘நான் மூளைக்கு மூளையாக அவளைக் காதலித்தேன் என்று எவனும் கூற மாட்டான். நான் உயிருக்கு உயிராக அவளைக் காதலித்தேன் என்றுதான் கூறுவான். மூளை அறிவுப் புலன். இதயம் உணர்வுப் புலன்! அதனால்தான் கவிஞனாகக் காதலித்த தமிழ்நாடன் வீணையிசையைக்  கண்ணால் பார்த்து ரசித்திருக்கிறார். நான் அறிந்தவரையில் இசையைப் பாரத்து ரசித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்! கவிதையென்றால் இப்படித்தான் அமைய வேண்டும். ஆறே சொற்கள்! ஒரு பொருள் முரண்! அருமையான வெளிப்பாடு

    “ஒரு சூறாவளியைப்
    போலத்தான்
    என்னை நீ கடந்திருக்கிறாய்;
    சேதத்தின் மதிப்பில்
    தெரிகிறது
    உன் மதிப்பு.”

    நம்முடைய நாட்டுத் தலைவர்கள் மழை பெய்து, வெள்ளம் வந்து, நடப்பியல் வாழ்க்கை சீரழிந்து ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிய பிறகுதான் வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்து மதிப்பிடுவார்கள்  காதலும் அது போல்தான்! இந்தக் குறுங்கவிதை தலைவனுக்கும் பொருந்தும் தலைவிக்கும் பொருந்தும். காதலில் “சேதாரம் ஆணுக்கு” என்பது ‘பின் நவீனத்துவம்!”  வளையல் கழண்டு விழுவதும், மேனி பசப்பதும், தோள் துவளுவதும் விழிகள் பஞ்சடைவதும் பழந்தமிழ்க் கவிதைகளில் தலைவனுக்குச் சொல்லப்பட்டதாகத் தகவல் இல்லை. பின்னாலே வந்தவர்கள் இந்த மரபை மாற்றி காதலியைப் பிரிந்த தலைமகன் தாடி வளர்த்துக் கொள்வதுவரைப் பாடித் தீர்த்தார்கள். இழந்த பிறகுதான் இருப்பின் பெருமை புரியும். நம்முள் எததனைப் பேர் பெற்றோரை, மனைவியை. கணவனை வாழுங்காலத்தில் புரிந்து கொள்கிறோம்! காதலுக்கும் இது பொருந்தும்.  தன்னிலை மறந்த காதலில் ஏதும் தெரிவதில்லை. இழந்த பிறகுதான் இழந்தது எது என்பதே தெரிகிறது! புரிகிறது.  வடிவங்கள் எதுவாயினும் கவிதைகளை அவற்றில் வார்த்தெடுக்கும் வல்லமை கொண்டவர் ஆரூர் தமிழ்நாடன் என்பதற்கு இந்தக் கவிதைகள் ஒரு குறைந்த அளவு எடுத்துக் காட்டுக்களே! தன்னைப் பாதித்த அனைத்துப் பொருண்மைகள் பற்றியும் ஆரூர் தமிழ்நாடன் முகநூலில் பாடியிருப்பவனவற்றை என்னால் இயன்ற அளவு திறனாய்வு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு அறியப்பட்ட கவிஞனுக்கு அறிமுகம் தேவையில்லை!

    நிறைவுரை

    கவிதையில் வாழ்வதே வாழ்வு என்பது திறனாய்வாளனாகிய என் வாழ்நாள் கொள்கை! நல்ல கவிதைகளையும் அவற்றை எழுதிய உண்மைக் கவிஞர்களையும் அறிமுகம் செய்வதை ஒரு கடனாகக் கொண்டிருக்கிறேன். அந்தக் கடமையை நான் ‘வல்லமை’ யோடு செய்து வருகிறேன். முகநூலில் நான் கண்ட உண்மைக் கவிஞர்கள் சிலருள் ஆரூர் தமிழ்நாடனும் ஒருவர். தமிழ்மணக்கும் தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைப் பற்றிய இந்த என்னுடைய திறனாய்வு இன்னும் பல திறனாய்வுகளுக்கு வழித்தடமாக அமைய வேண்டும் என்பது என் ஆசை. எவ்வளவு சிறந்த கவிஞரானாலும் அவருடைய எல்லாக் கவிதைகளையும் நான் திறனாய்வு செய்வதுமில்லை. பிழைவேட்டையை நான் திறனாய்வாகக் கருதுவதுமில்லை. அரிய பிழைகள் சுட்டிக்காட்டப்படலாம். திறனாய்வில் பல வகை உண்டு. நடுநிலைத் திறனாய்வு (Standard Criticism), விருப்பு வெறுப்பின் எல்லையில் இருந்து திறனாய்வு செய்வது (accentric Criticism) வரலாற்று முறைத் திறனாய்வு (Historical Criticism). கவிஞனின் வாழ்வை ஓட்டி அமைகின்ற திறனாய்வு (Biographical Criticism) விதிகளின் அடிப்படையில் திறனாய்வு செய்வது (Dogmatic Criticsm) கவிஞனின் உணர்ச்சிவழி நின்று செய்கின்ற திறனாய்வு (impressionistic Criticism) எனப் பலவகைப்படும். அரூர் தமிழ்நாடன் பற்றிய கவிதைகளைப் பற்றிய இந்தத் திறனாய்வு ஒரு உணர்ச்சிவழித் திறனாய்வு. (impressionistic Criticism)  தமிழ்நாடன் ஒருமுறை  எழுதியது போல ‘ஆய்வென்று ஜால்ராவைத் தட்டுகின்றார்’ என்பது போன்றது அல்ல! இந்த எண்பது வயதில் நான் யாருக்கு ஜால்ரா தட்டப் போகிறேன்? ஆரூர் தமிழ்நாடனின் பன்முகப் பரிமாணங்களை உணர்ச்சிவழி நின்று கண்டறிய என்னுடைய மிகச் சிறிய முயற்சி இது.!

    (தொடரும்)

    Share
  • உணர்வுகள் (சிறுகதை)

    உணர்வுகள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ‘கமலா எனக்கு சீரு முடிச்சு இது நாலாவது வருஷம். இப்போ வரைக்கும் எனக்கு இப்படி ஆனதே இல்லடி.’

    ‘ எனக்கு ஞாபகம் இருக்குடி என்னோட சீரு முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சுதானே உனக்கு சீரு வச்சாங்க சுமி…. கரெக்டா?’

    ‘ஆமா. ஆனா இதுவரைக்கும் டேட் தவறனதே இல்ல. ரெண்டு நாள் மூணு நாள் முன்ன பின்ன ஆகும். இப்போ நாலு நாள் ஆச்சு இன்னும் ஒண்ணுமே ஆகல.’

    ‘ வெயிட் பண்ணு பார்ப்போம் உனக்கு எதுக்கெல்லாம் கவலைப்படணும்னு வெவஸ்தயே இல்ல.’

    ‘இல்லடி………… போன மாசமும் ஆறு நாள் கழிச்சு தான் ஆச்சு நான் அம்மாகிட்ட பொய் சொன்னே கரெக்ட்டா ஆச்சுன்னு இந்த தடவை சொல்லவும் முடியாது அம்மாவே டேட் குறிச்சி வெச்சிருக்கா.’

    ‘இன்னைக்கு நாம காலேஜ் சேர்ந்து ஃபர்ஸ்ட் செமஸ்டர் கடைசி எக்ஸாம். நாளைலிருந்து 25 நாளக்கி லீவு. லீவ் என்ஜாய் பண்ணுவியா இத உட்கார்ந்து இப்ப போய் பேசிட்டு. சுமி ரொம்ப யோசிக்காத வா அச்சாயங்கடையில போயி ஒரு பழம் பொரி சாப்பிட்டா சரியாகும் வா’

    குழப்பத்துடன் சென்றாள். இனி கமலாவ காலேஜ் திறக்கறவரப் பார்க்கவும் முடியாது. இது போன்ற விஷயங்களை ஷேர் செய்யவும் முடியாது என வருந்தினாள் சுமி. வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.

    அம்மா, துபாயிலிருந்து அப்பா வர்ற குஷியில் இருந்தா. துபாயில் பெரிய வைட் காலர் வேலை ஒன்றுமில்லை. பிளம்பிங் வேலை தான். போய் நாலு வருஷம் ஆச்சு சீருக்கு வந்தது அதுக்கப்புறம் இப்போதான் வராரு. இவங்க இருக்கிறது  ஒரு கிராமம். தப்பட்டன்கிழவன்புதூர். பஸ் வசதி மிகக் குறைவுதான், ஆனால் ஆற்றின் ரம்மியமான ஓசை, ஈரமான சாரல் காற்று, அடுக்கி வைத்த தென்னந்தோப்புகளின் மிருதுவான காற்று, காற்றில் மிதந்து வரும் வாழைக்கனிகளின் வாசம் என்று இயற்கையோடு கலந்த உணர்வுகள். பிளஸ்டூவிற்குப் பிறகு சுமி எப்படியோ கோயம்புத்தூரில் இலவசமாக ஒரு காலேஜ்ல சீட் வாங்கிட்டா.  லீவு விட்டா வந்துருவா.

    வசதிகள் குறைவா இருந்தாலும் ஒட்டு ஒறவோடு பழகுற கிராமம். லீவுக்கு வரும்போது சுமி அங்கலாய்ப்போட வந்தா. போன மாசம் 16ஆம் தேதி விலக்கானது.  இன்னைக்கு தேதி 20 ஆச்சு அம்மா போனதும் முதல்ல அதுதான் கேட்பா. போன அன்னைக்கு மறந்துட்டா அடுத்த நாள் காலைல எழுந்ததும் முதல் கேள்வியே அம்மாவோடது அதுதான்.

    “ஏம்புள்ள நீ இன்னும் விலக்கு ஆகல.  27ஆம் தேதி கல்யாணத்துக்குப் போகோணும். அதுக்குள்ள ரெடி ஆயிடுவியா?. அப்பா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாளு அங்க போய் இருக்கலாங்கற திட்டத்தோட வர்றாரு. நீ வேற போற நேரத்துக்கு முக்குல உட்கார்ந்துடாதே”

    “இல்லம்மா இன்னைக்கு அஞ்சு நாள் தள்ளியாச்சு இன்னும் ஆகல.”

    ‘சரி பார்ப்போம்.   தோட்டத்திற்குப் போன செண்பகம் நன்றாகப் பழுத்த பப்பாளியையும், எள்ளுருண்டை பாக்கெட்டையும் சுமித்ராவுக்குக் கொண்டு வந்து கொடுத்தாள். சீக்கிரமா விலக்கு ஆவதற்காக.

    தேதி 23 ஆனது பப்பாளியும். எள்ளுருண்டையும் வேலை செய்யவில்லை. அவளது அப்பா ஊர்ல இருந்து வந்த முசுவில் யாரும் இதைப்பற்றி யோசிக்கவே இல்ல.

    சரி முன்னப்பின்ன ஆகும். ஆகும்போது ஆகட்டும். கல்யாணத்துக்கு எதுக்கும் முன்னெச்சரிக்கையாக எல்லாம் எடுத்துட்டுப் போனாள் சுமி. சுமியின் அப்பா வெங்கடேசனின் ஒண்ணு விட்ட அத்தை பையனுக்குக் கல்யாணம். அவனுக்கு உறவினர்களைப் பார்த்த மகிழ்வு, சொல்லி அடங்காது. கொண்டாடி தீர்க்க டாஸ்மாக் மட்டும் செல்லவில்லை.

    28-ஆம் தேதி ஊருக்குத்  திரும்பின போது தான் செண்பகத்துக்கு ஞாபகம் வந்தது, சுமி இனியும் விலக்காகவில்லை என்று. தனக்குத் திருமணமாகி வந்த புதிதில் விலக்கானால் தன் மாமியார் காட்டும் சுத்தத்தை எண்ணிப் பயப்படுவாள். படுக்க, பாய் தரமாட்டார்கள், தலையணை கிடையவே கிடையாது. விடிவதற்குள் ஆத்துக்குப் போயி குளிச்சிட்டு வரணும். மாத்திக்கத்துணி எடுத்துகிட்டு போகக்கூடாது. ஈரத் துணியோட வீட்டுக்கு வந்ததுகப்பறம்தா துணி மாத்தணும், மூணாவது நாள்  பயன்படுத்தின துணிக,, போர்வை எல்லாத்தையும் நெனச்சுப் போடணும்.வீட்ட சாணிபோட்டு வளிச்சு விடணும். கோமியம் எடுத்திட்டு வந்து வீட்ட சுத்திலும் தெளிச்சு விடணும்.  அம்மாடி இப்போ நெனச்சுப் பார்த்தாலே மலைப்பா இருக்கு.

    சுமியோ மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். 13 நாட்கள் தள்ளிப்போனது கல்யாண வீட்டில் இரண்டு தடவை வாந்தி வேறு எடுத்தாள். செண்பகத்திற்கு வயிறு கலங்கியது நம்ம பொண்ணு தப்பான வழிக்கு எதுவும் போயிருக்க மாட்டா. இருந்தாலும் காலம் வேற கெட்டுக் கெடக்கு. போன மாசந்தா காலேஜிலிருந்து டூர் போறாங்கன்னு கொடைக்கானல் போயிட்டு வந்தா. போன இடத்தில ஏதாவது……….. சொல்ல பயப்படுறாளோ? அப்பா இருக்காரேனு யோசிக்கிறாளோ? அப்படி எல்லாம் செய்யாது எம்புள்ள. கடவுளே நம்ம ஜாதி சனத்துக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா ஊரே ஒன்னு கூடிருமே. நானா கற்பனை பண்றேனா? வயசு புள்ளைய வச்சிருக்கிற எல்லா அம்மாவும் இப்படித்தான் யோசிப்பாங்களா?

    சுமி ஒரு தடவை பேரன்ட்ஸ் மீட்டிங் வர முடியலன்னு அவங்க மேம் கிட்ட பேசச் சொல்லி ஒரு நம்பர் கொடுத்தா. அவங்கள கூப்பிட்டுக் கேட்போம். ஒரு எளவும் புரிய மாட்டேங்குது. இல்ல இனியும் ஒரு வாரம் பொறுத்துப் பாக்கலாமா? உடம்புல சத்துமானம் கொறவா இருந்தாலும் இப்படித்தான் ஆகும். வேண்டாம் நாளைக்கே மேம் கிட்ட கூப்பிட்டுக் கேட்டுப் பாக்கலாம்.

    சுமி மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். உணவில் நாட்டம் குறைந்தது. வாய்க்கு எதுவும் பிடிக்காமலானது.சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொண்டாள். மறுநாள் காலையிலேயே

    “சுமி நானு டௌனு வர போயிட்டு வந்திடறேன்” என்று பழைய நோக்கியா ஃபோன கையில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

    “ஹலோ மேடம் நான் சுமியோட அம்மா பேசுறேன். இல்ல……….. சுமிக்கி விலக்கு 15 நாளா தள்ளிப்போயிருக்கு. என் பொண்ணு பத்தி நானே தப்பா பேசக்கூடாது இருந்தாலும் பெத்த வயிறு எரியுது காலேஜ்ல அவளுக்கு ஏதாவது பையனோட சகவாசம் இருக்கானு கேட்கத் தான் கூப்பிட்டேன்.”

    “என்ன கேக்குறீங்க? பெத்தவங்க. நீங்க உங்க பொண்ணு எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவ நல்ல பொண்ணு”

    “இல்லைங்க மேடம், கொடைக்கானல் போன எடத்தில ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்துச்சுன்னா?”

    “அம்மா நீங்க தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காதீங்க இது இப்போ இருக்கிற பிள்ளைகளுக்கு சாதாரணமா இருக்கிற ஒரு விஷயம் நீங்க ஒரு நல்ல கைனகாலஜிஸ்டாப் போய் பாருங்க”

    “யாருங்க மேடம்”

    ‘கைனகாலஜிஸ்ட்’

    “சரிங்க மேடம் நான் கூப்பிட்டுப் பேசினதா அவகிட்ட சொல்லாதீங்க…. வெச்சிர்றே”

    ‘ம்ம்ம் சரிங்க’

    22 நாட்கள் தள்ளி ஆகிவிட்டது. சுமியின் நடவடிக்கைலயும் நிறைய மாற்றம். அவ மேடம் சொன்ன டாக்டர பாக்கணும்னா டவுனுக்கு தான் போகணும். அவங்க அப்பாவுக்குத் தெரியாம தான் போகணும் ஏன் எதுக்குன்னு கேட்டு என்னைத் தொலைத்துவிடுவாரு. இது தான் புள்ளைய வளத்துற அழகானு என்ன அங்கேயே வெட்டிப் போட்டாலும் போடுவாரு. சுமிகூட படிக்கிற பொண்ணோட அக்காவுக்குக் கல்யாணம் மதுக்கரைலனு பொய் சொல்லி அம்மாவும் மகளும் கிளம்பினர்.

    சுந்தராபுரத்தில் நல்ல ஒரு ‘கைனகாலஜிஸ்ட்டிடம் சென்றனர் அந்த டாக்டர் சுமியை நன்றாகப் பரிசோதித்து பார்த்துவிட்டு “நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லம்மா. இது நார்மல் தான். விட்டமின் மாத்திரை மட்டும் எடுத்துக்கோங்க. நார்மலாவே சரி ஆயிடும்” என்றார்,

    ‘ச்சே அதுக்குள்ள நம்ம புள்ளையை என்னெல்லாமோ நினைச்சிட்டோமே. சாமி மன்னிச்சுக்கோ’

    வீடு திரும்பினர் டாக்டர் சொன்னது ஆறுதலாக இருந்தாலும் செக்கப் முடிஞ்சு ஒரு வாரம் ஆகிப்போச்சு. ஒருவேளை இவ டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் நான் அம்மாகிட்ட பேசிப் புரிய வச்சிக்கிறேன்னு சொல்லி இருப்பாளோ? மறுபடியும் வயிற்றில் புளி கரைந்தது. இனி அவ அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதான். வேற வழி இல்ல. இப்போ கொஞ்சம் அவ வயிறு பெருசா இருக்கிற மாதிரி இருக்கு. வெயிட்டா இருக்குனு அவளே சொல்றா. எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு நாள் நள்ளிரவு தூக்கம் வராமல் உருண்டு படுத்த அவள் புருஷனை உலுக்கினாள்.

    ‘ஏங்க நாம வீட்டை மாத்திட்டு டவுன் பக்கம் போகலாமா இங்க கொடுக்கிற வாடகைய அங்க கொடுத்துட்டா போச்சு’

    பகலில் தூங்கியதால் தூக்கம் வராத அவனும் எழுந்து உட்கார்ந்தான்.

    “இல்லே எங்க ஜாதி சனமெல்லாம் சுத்துமுத்தும் இருக்கு. நல்லது கெட்டதுக்கு ஓடி வருவார்கள் சரிதா ஆனால் அதுவே நமக்கு உபத்திரவமா மாறக்கூடாது இல்ல”

    “என்ன சொல்ற எனக்கு ஒரு எளவும் புரியல. நான் இன்னும் ரெண்டு வாரத்துல திரும்பிப் போயிருவேன் அப்போ நீ தனியா இருப்பேனு தான் நம்ம சாதி சனத்துக்கு கூட உன்னை இருக்க சொல்றேன் உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”

    “இல்ல சொன்னா டென்ஷன் ஆகாம கேட்கணும். நம்ம சுமி அவ தப்பு பண்ணிட்டான்னு சொல்ல வரல. போன மாசம் அவளுக்கு தூரம் ஆகவே இல்லை. இப்போ அவளோட நடவடிக்கைகளைப் பார்த்தா பயமா இருக்கு . வயிறு வேற பெருசாருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றா. நல்லதோ கெட்டதோ நம்ம ஜாதி சனத்துக்கு புள்ளி வெச்சா போதும். கோலம் போட்டு ரோடு போடுவாங்க.  அப்புறம் அவ வாழ்க்கை? நாம ஒரே புள்ளைய வச்சிருக்கோம். மூதேவி வாயைத் திறந்து எதையும் சொல்லவும் மாட்டேங்குது. எனக்கு அப்படியே மூளையே வெடிக்கிற மாதிரி இருக்கு.”

    தனக்கு என்ன ஆச்சுன்னு குழம்பிய மனத்தோடு படுத்தும் உறங்காமல் விழித்துக்கொண்டிருந்த சுமித்ரா, அம்மா பேசியது அவ்வளவையும் கேட்டுக் கொண்டுதானிருந்தாள். உண்மையிலேயே எனக்கு என்னமோ பிரச்சனை இருக்கு. என்னமோ இருக்கு. என்னவா இருக்கும். வயிறு வேற அப்பப்ப ரொம்ப வலிக்குது. கொடைக்கானல் போகும்போது பஸ்ல கிருஷ்ணா மட்டும்தான் எங்கிட்ட நெருக்கமாப் பழகி, எங்கிட்ட ஏதோ சொல்ல முயற்சி செஞ்சா. எல்லாருக்கும்தா அவ கூல்ட்ரிங்க்ஸ் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தா எல்லாரும் தான் அதைச் சாப்பிட்டோம். பஸ்ல போன சலிப்பில நல்லா படுத்துத் தூங்கிட்டேன். மேம் கூடவே தான் இருந்தாங்க. எனக்கு கன்பியூசனா இருக்கு. கிருஷ்ணா என்ன விரும்புறான்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க ஆனால் நான் எஸ் சொல்லவே இல்லையே ஒரு வேள…….. ச்சேச் சே வாய்ப்பில்லை.

    அப்புறம் ஏன் தல சுத்துது கொடைக்கானலில் எல்லாரும் எழுந்த பிறகு கடைசியா தான் நான் எழுந்தேன். இரவு என்ன ஆகி இருக்கும். இல்ல என் உடம்பு நார்மலா இல்லன்னு மட்டும் தெரியுது.

    முழுசா கேட்ட வெங்கடேசன் ‘அட போடிஇவளே……. .  இல்ல என் பொண்ணு தப்பு பண்ணியிருக்க மாட்டா. நாளைக்கு காலைல டவுன்ல ஏதாவது நல்ல ஹாஸ்பிடலா பார்த்துப் போயிட்டு வரலாம். ஸ்கேன் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சிரப் போகுது. கொடைக்கானல் ஏற்காடு சுத்திப் பார்க்கப் போறோம்னு ஊர்ல சொல்லிடுவோம். ஒரு வாரம் கழிச்சு வரலாம்.

    ‘தனக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலே தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சுமித்ராவிற்குத் தோன்றியது. ஆனால் இந்த நிலைமையில் நான் அப்படி செஞ்சா எங்க அம்மாவோட சந்தேகம் உறுதி ஆயிடும். ஊர் சும்மா இருக்காது அப்படி ஒரு களங்கத்தோட நான் சாக விரும்பல எனக்கும் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியணும்.  அப்பா என் மேல இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருக்கும்போது அவரை ஏமாத்தக் கூடாது இருந்தாலும்…………..’

    காலை விடிந்ததும் மூவரும் கிளம்பி கோவையில் உள்ள ஐ.எப்.சி. மருத்துவமனைக்கு வந்தனர். கைனகாலஜிஸ்ட்கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கியாச்சு. பீரியட் தள்ளிப் போயிருக்கு என்று செக்கப் அறையில் படுக்க வைக்கப்பட்டாள். உள்ளே வரும்போதே சிஸ்டர் “மாசமா இருக்கியாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

    “எனக்கு இனியும் கல்யாணமே ஆகல சிஸ்டர்.’’

    சிஸ்டர் பார்த்த  கேவலமான பார்வை அவளை உருக்கியது.

    டாக்டர் வந்தாரு நல்லா வயத்த அமர்த்தி செக்கப் செய்தாங்க. ஒரு டியூப்பில் ஜெல் தடவி பிறப்புறுப்புக்குள் விட்டு ஸ்கேன் பண்ணினாங்க. வலி உசுரு போற மாதிரி இருந்துச்சு. ஏதேதோ மெடிக்கல்  ரிப்போர்ட் ரெடி பண்ணனாங்க. செக்கப் புல்லா முடிச்சு ‘அம்மாவைக் கூப்பிடுமா’ என்றாங்க. என்னைக் கொஞ்சம் வெளியில நிக்க சொன்னாங்க. எனக்கும் என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு இருந்துச்சு.

    “நீங்கதான் சுமியோட அம்மாவா?  நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா அவங்க அப்பா இருந்தா உள்ள வரச் சொல்லுங்க. நான் சொல்றத பதற்றப்படாம கேளுங்க,”

    செண்பகத்திற்கு இதயத் துடிப்பு இ.சி.ஜியின் எல்லையைத் தொடும் அளவிற்குப் போனது, அடி வயிறு புரண்டு தொண்டை அடைத்தது, நாக்கு வறண்டது. கண்கள் பிதுங்கின,

    “நீங்க நெனைக்கிற மாதிரி உங்க பொண்ணுக்கு தப்பா எதுவும் நடக்கல. ஆனா நீங்க அவள அப்படி நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கீங்க”என்று சொல்லி, கொஞ்ச நேரம் கழித்துக் கூறினார். “பெண்களுக்குக் கருமுட்டை உருவாகற இடம் தான் ஓவரி. அது ரெண்டு இருக்கும் அதுதான் குழந்தை பிறக்க ரொம்ப முக்கியம் அதுல ஒரு ஓவரி ஃபுல்லா உங்க பொண்ணுக்கு தண்ணி நெறஞ்சிருக்கு. அதனால அது ஃபுல்லா இன்பெக்க்ஷன் ஆகி இருக்கு. சோ சர்ஜரி பண்ணி அந்த ஓவரியை ரிமூவ்  செய்யதறதத் தவிர வேற வழி இல்ல. இல்லனா இனி ஒரு ஓவரியையும் அது பாதிச்சிடும். ஆயிரத்தில் ஒருத்தருக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும். எப்படி வருது என்ன காரணம்னல்லா சொல்ல முடியாது. எவ்வளவு சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க. மாப்பிள்ளை பார்க்கும்போது இந்த விஷயத்தைச் சொல்லாமப் பாருங்க அவங்க ஏற்கனவே உடல் ரீதியா பாதிச்சுருக்காங்க. நீங்க உங்க பிரஷர அவங்கமேல காமிச்சு மனதளவில பலவீனமானவங்களா மாத்திடாதீங்க. அவங்க மனதால பாதிப்பு அடைச்சுடுவாங்க. கருமுட்டை உருவாகறது கஷ்டமாயிடும்.”

    செண்பகம் முந்தானையால் கண்களை ஒப்பினாள். சுமியிடம் வயித்தில சின்ன கட்டி. அதை சர்ஜரி செய்து அகற்ற வேண்டும் என்று மட்டும் கூறினர். தன்னுடைய கற்புத்தன்மை நிரூபிக்கப்பட்டது. கர்ப்பமா இருக்குமோ என்ற அம்மாவின் அங்கலாய்ப்பு, சிஸ்டர் பார்த்த கேவலமான பார்வை, மனத்தில் ஏற்பட்ட பயம் என அவள் அடைந்த மன உளைச்சலுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை அடுத்த நாளே  ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அரசாங்க வேலை வாங்கிட்டு அம்மா, அப்பாவப் புது வீடு கட்டி  உட்கார வெச்சிட்டுதான்  கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்ட மகளை எண்ணிக்  கண் கலகிங்கினாள் செண்பகம். செண்பகத்திற்கும்  ஆசையில்லாமல் இல்லை. புள்ளய அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டா  பாரம்  ஒழிஞ்சிடும்னு  நெனக்கற பெற்றோர்களுக்கிடையில் செண்பகம்  சற்று வித்தியாசமானவள்.

    சுமி ப்ளஸ்டூ படிக்கும்போதே கணவரோட வகையறால ஒருத்தரு            மாப்பிள்ளை இருக்குனு சொல்லி வந்தாரு. அதைத் தட்டிக் கழித்தாள். செண்பகம்

    ‘புள்ள இன்னும் கொஞ்சநாள் பெத்தவங்க வீட்டில இருக்கட்டும். அவசரமா கல்யாணம் பண்ணி என்ன ஆகப் போகுது. ஒரு வருசத்தில கையில புள்ளயோட வந்து நிக்கும். அப்பறம் அத வளத்து ஆளாக்கவே பொழுதுக்குக்  கஷ்டப்படணும். அஞ்சுக்கும் பத்துக்கும்   இனி ஒருத்தங்க  கைய  எதிர்பார்த்திட்டு இருக்கணும். கொஞ்சநாள்  படிச்சு முடிச்சிட்டு ஏதோ வேலைக்குப் போட்டம். நமக்கு எதுவும் தரவேண்டா.  அவ  சம்பாதிச்சு  அவ  தேவைக்கு , அவ செலவு செஞ்சுகட்டும். ஒடம்பயும் கொஞ்சம் தேத்திட்டு அதுக்கப்பறம் கல்யாணத்தப் பத்தி யோசிப்போம்” என்று கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தவள்.

    ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போகும்போது சுமி அவள் அம்மாவைப் பார்த்த பார்வை, செண்பகத்தை உப்பு போடப்பட்ட நத்தையாகச் சுருங்கச் செய்தது. இரண்டு மணிநேர ஆபரேஷன்  முடிந்து  அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். சுமிக்கு  இன்னும் சுயநினைவு வரவில்லை ஆனால் கண்களின் ஓரங்களில் கண்ணீர் ஓயாமல் வந்து கொண்டிருந்தது. அறுவை சிகிச்சையின் வேதனை வருத்தி அவளைக் கண்ணீர் விட வைத்ததா? இல்லை தூய்மை நிரூபணமானதன் ஆனந்தக் கண்ணீரா? மகளின்  நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் கணேசன். வருத்தத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது செண்பகத்தின்

    “ஏங்க கையோடு நம்ம குமரேச  புரோக்கர வரச்சொல்லி சீக்கிரமா மாப்பிள்ளை பார்க்கச் சொல்லலாம்” என்கிற வார்த்தைகள்.

    எப்படி இந்த பொம்பளைங்க மட்டும் உடனுக்குடனே சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி தங்கள மாத்திக்கிறாங்க என்ற ஆச்சர்யத்தோடு, கண்ணீரை, மறைத்துக்கொண்டு திரும்பிப்  பார்த்தான் வெங்கடேசன்.

    Share
  • கலைச்சொல்லாக்கமும் மொழிவளர்ச்சியும் கலைப்புலங்களுக்கான தேவைகளும்

    கலைச்சொல்லாக்கமும் மொழிவளர்ச்சியும் கலைப்புலங்களுக்கான தேவைகளும்

    செயபாண்டியன் கோட்டாளம்

    கலைச்சொல்லாக்கத்தை வெறும் தமிழ்வளர்ச்சிக்கான செயலாக கருதுவது போதாது. பிற துறைகளுக்கு பயன்படும்வகையில் கலைச்சொற்கள் அமைந்தாலே அந்த துறைகளுடன் மொழியும் வளரும்.

    விரும்பத்தகு பண்புகள்

    சட்டம், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் கலைச்சொற்கள் துல்லியமாக வரையறுக்கப்பட்டவை. organic chemistry, inorganic chemistry எனும் கருத்துருக்களுக்கு கரிமவேதியியல், கனிமவேதியியல் என்ற சொற்கள் முதனோக்கில் நல்ல சொற்களாக தோன்றுகின்றன. ஆனால், carbon chemistry, mineral chemistry என்ற கருத்துருக்களை எதிர்கொள்ளும்போது நாம் முதலில் தேர்ந்த சொற்கள் துல்லியமற்றவை என்பதை உணர்கிறோம்.

    ஒரு கருத்துருவுக்கு ஒரு சொல் மட்டுமே வழக்கிலிருப்பது திட்டவட்டம். ஒரு சொல்லை ஒரு கருத்துருவுக்கு ஒதுக்கியபின் அந்தச்சொல்லை வேறொரு பொருளுக்காக பயன்படுத்தாதது ஒருத்துவம். திட்டவட்டமும் ஒருத்துவமும் சேர்ந்து சொற்கணத்துக்கும் பொருட்கணத்துக்குமிடையில் ஒரு ஒன்றுக்கொன்றான தொடர்பை உள்ளுரைக்கின்றன. இவ்வாறான ஒன்றுக்கொன்றான தொடர்பு இருக்கும்படி வேதிப்பொருள்களுக்கு பெயரிடும் முறை வேதியியலிலும் உயிரினங்களுக்கு பெயரிடும் முறை உயிரியலிலும் வழக்கிலுள்ளது.

    ஒரு கருத்தைக்குறிக்கும் கலைச்சொல் பரந்த பொருளுடையதாக இல்லாமல் அந்த கருத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருப்பது குறிப்புமை. Anaesthetic என்பதற்கு மயக்கமருந்து என்றோ மரப்பு மருந்து என்றோ சொல்வது குறிப்புமையற்றது. மயங்கிவிழுவதும் கைகால் மரத்துப்போவதும் வேறு பல சூழமைவுகளிலும் நிகழ்பவை. மாறாக, anaesthesia என்ற சொல் மருத்துவர்கள் மருத்துவமனைகளில் மிகுந்த கட்டுப்பாட்டுச்சூழ்நிலைகளில் வேண்டுமென்றே தம் நலம்பெறுநர்களில் தூண்டும் நிலையையே குறிக்கிறது. இதற்கு தமிழிலும் வேறெங்கும் பயன்படாத உணர்மறைப்பு என்ற சொல்லை பயன்படுத்துவது சிறப்பு.

    ஒரு கலைச்சொல்லை கருதும்போது அதனுடன் தொடர்புள்ள மற்ற சொற்களையும் கருதவேண்டும். இது சொற்களிடையில் ஒரு ஒவ்வுமையை நிலைநாட்டுகிறது. Electroனுக்கு எதிர்மின்னி, protoனுக்கு நேர்மின்னி என்ற சொற்களை ஆக்கும்போதே antielectroனுக்கும் antiprotoனுக்கும் என்ன சொல்லப்போகிறோம் என்பதை சிந்திக்கவேண்டும். சிந்திக்காமல், apogee – சேய்மைப்புள்ளி, perigee – அண்மைப்புள்ளி என்று வழக்கில் வரவிட்டால், aphelion, perihelion என்ற சொற்களை எதிர்கொள்ளும்போது திண்டாடுவோம்.

    ஒரு கலைச்சொற்பட்டியல் ஒரு கலைத்துறையிலாவது முழுமையாயிருந்தால் மட்டுமே அது அந்தத்துறையில் பயனளிக்கும். சில சொற்களை மட்டும் வழங்குவது பயனளிப்பதில்லை. மேலும் இவை வளர்ந்துவரும் துறைகள். இந்த வளர்ச்சிக்கு நிகராக நம் பட்டியலும் இற்றையடைந்துவரவேண்டும். இவ்வாறு, முழுமையும் இற்றையுடைமையும் கலைச்சொற்பட்டியலின் விரும்பத்தகு பண்புகள்.

    தமிழார்வலர்கள் சொல்லாய்வு என்ற பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கலைச்சொற்களை முன்மொழிகின்றனர். இந்த அணுகுமுறையால் ஒரு சில கலைச்சொற்களையே உருவாக்கலாம். முழுமையை ஒருபோதும் எட்டமாட்டோம். உலகில் 1.7 இருமடியாயிரம்  உயிரினங்கள் இருப்பதாக உயிரியலாராய்ச்சிகள் காட்டுகின்றன. வேதிப்பொருள்களின் பதிவகத்தில் 200 இருமடியாயிரத்துக்கும் மேலான வேதிப்பெயர்கள் பதிவாகியுள்ளன. தமிழார்வலர்களது இன்றைய அணுகுமுறை அளவுறாதது; பேரெண்ணிக்கைகளுக்கு நீட்டவியலாதது.

    தனித்தமிழ் எதுவரை?

    கலைச்சொற்களில் பிறமொழிச்சொற்களை ஏற்கலாமா என்ற கேள்வியை கருதுவோம். தமிழின் தூய்மையை எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பகுதிகளின் தூய்மையாக பிரிக்கலாம்.

    தமிழ் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தன் படிமலர்ச்சியை நிறைவுசெய்து முழுமையையும் முதிர்ச்சியையும் அடைந்துவிட்ட ஒரு மொழி. ஒரு கட்டுக்கோப்பான இலக்கணம் அதற்கு அப்போதே உண்டாகிவிட்டது. ஒரு கட்டடம் அடித்தளத்திலிருந்து எழுந்து பல படிநிலைகளால் ஒரு மாளிகையாக வளர்வதைப்போலவே எழுத்துக்கணத்திலிருந்து மெய்மயக்கவிதிகளும் புணர்ச்சிவிதிகளும் எழுந்து அவற்றிலிருந்து சொற்களும் சொல்லிலக்கணமும் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படையான எழுத்துக்கணத்தை நாம் மாற்றினாலோ அசைத்தாலோ மாளிகை முழுவதும் அசைந்து ஆட்டங்கண்டு நாளடைவில் வலுவிழந்து வீழ்ந்துவிடும். ஏற்கனவே முழுமையான ஒரு அமைப்பில் கிரந்த எழுத்துகளை உள்ளெடுத்தவர்கள் அவற்றுக்கான சொற்பிறப்பின் இலக்கணத்தையோ மெய்மயக்கவிதிகளையோ புணர்ச்சிவிதிகளையோ வகுக்கவில்லை. எனவே, ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துகளை கலைச்சொற்களில் தவிர்க்கவேண்டும்.

    இதன் மறுபக்கமாக, கலைப்புலங்களில் செயலாற்றும் நமக்கு a2 + b2 = (a+b)2, HCl + NaOH -> NaCl + H2O  போன்ற கணிதச் சமன்பாடுகளையும் வேதிச் சமன்பாடுகளையும் எவ்வாறு எழுதுவது என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறான குறியீடுகளை கணிதக்குறிகளாக கருதவேண்டுமேயன்றி, தமிழின் எழுத்துக்கணத்தில் கலப்படம் விளைவிப்பதாக எண்ணக்கூடாது. குறியீடுகளும் அவற்றின் ஒலிகளும் தமிழ்ச்சொற்களில் இடம்பெறா. மாறாக கிரந்த எழுத்துகள் சொற்களில் இடம்பெறுவதை நோக்குக.

    எழுத்துக்கணம் ஒரு மூடிய கணம். அதன் அடிப்படையில் சொற்களும் இலக்கணமும் உண்டாகின்றன. ஆனால் ஒரு மொழியில் இத்தனை சொற்கள் இருக்கவேண்டும் என்ற வரையறை இல்லை. அது திறந்த கணம். எனவே, கிரந்த எழுத்துகளை நீக்குவது ஒப்பளவில் எளிய செயலாயினும், திசைச்சொற்களையும் வடசொற்களையும் நீக்குவது அவ்வளவு எளிதன்று. தமிழிலக்கண மரபுகளை மீறாதனவும் வெகுகாலமாக தமிழில் புழங்கி மக்கள் மனங்களில் பதிந்து விட்டனவுமான சொற்களை நாம் அறிவியலிலும் மற்ற கலைப்புலங்களிலும் ஏற்கவேண்டும்.

    பாட்டீரியம், வைரசு என்ற சொற்கள் தமிழிலக்கணவிதிகளுள் எதையும் மீறவில்லை. இவற்றை வேண்டாம் என்று சொல்வதற்கான ஒரே காரணம் ஆங்கிலத்தில் bacterim, virus என்ற சொற்கள் இருப்பதே. ஆனால் இது ஒரு போலிக்காரணம். ஆங்கியமறியாத தமிழறிந்தோருக்கு இது ஒரு பொருட்டன்று. வாழைமரம் என்ற ஒரு தமிழ்ச்சொல்லை கருதுவோம். இந்த சொல் உலகின் வேறெந்த மொழியிலாவது இருக்கிறதா என்று முற்றிலும் ஆராய்ந்துபார்த்துவிட்டா நாம் அதை தமிழ்ச்சொல்லாக ஏற்கவேண்டும்? நியூட்டனின் விதிகளை நியூட்டனின் விதிகள் என்றே சொல்லவேண்டும். போலியான தமிழ்ப்பெருமைக்காக சாத்தனின் விதிகள் எனலாமா! அவ்வாறு சொல்வது அறிவியலின் நன்னெறிக்கு புறம்பானது.

    பொருட்டூய்மையை கருதும்போது, வேற்றுநாடுகளில் கண்டுபிடித்த அறிவியற்கருத்துகளையும் அங்கு வளரான தொழினுட்பங்களையும் நாம் ஒதுக்கவேண்டியதில்லை. நம் பண்பாட்டு விழுமியங்களை மாற்றியமைக்காத கருத்துகளை ஏற்கலாம். சான்றாக, புற்றுநோயின் காரணங்களும் அதன் சிகிச்சைகளும் அமெரிக்காவில் கண்டுபிடித்தாலும் அந்த உண்மைகள் உலகின் எல்லா மக்களுக்கும் பொதுவானவை.

    சொற்பிறப்பியலால் பின்னடைவு

    சொற்பிறப்பியலின் அடிப்படையில் பெயர்ப்பது தமிழரை பல நூற்றாண்டுகளுக்கு பின்னடையவைக்கிறது. Acid என்ற பொருளுக்கு அதன் சுவையின் அடிப்படையில் பெயரிட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த அறிவியலர்கள் அதை எலுமிச்சம்பழச்சாறு போன்ற புளிமமாகத்தான் எண்ணியிருப்பார்கள். ஆனால் இப்போது பல விதமான acidகளையும் அவற்றின் வேறுபட்ட பண்புகளையும் தொழிலகங்களில் அவற்றின் பயன்பாடுகளையும் அறிவோம். புளிப்புச்சுவை acidகளின் முதன்மையான பண்பன்று. ஆங்கிலத்தில் acid என்ற சொல் புளிப்பு என்ற பொருளிலிருந்து விடுபடுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆயின. நாம் புளிமத்தில் தொடங்கினால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த நிலையில் தொடங்குகிறோம். Acid என்பதற்கு இன்றைய பொருளை புரிந்துகொள்ளும்வகையில் அமிலம் என்ற இடுகுறிப்பெயரை பயன்படுத்துவது சிறப்பு.

    நொதித்தலின்போது enzymeஐ கண்டுபிடித்ததால் அவ்வாறு பெயரிட்டனர். இன்றைய நம் அறிவியலறிவு enzymeஐ நொதித்தலிலிருந்து வெகுதொலைவு கொண்டுவந்துவிட்டது. ஊக்கிப்புரதம் என்பது இன்றைய பொருளை உணர்த்துகிறது.

    Bacterium என்ற உயிரினங்களை நுண்ணோக்கியால் கண்ட அறிவியலர்களுக்கு அவை சிறுகுச்சிகள் போன்று தோற்றமளித்ததால் இந்த உயிரினங்களுக்கு அந்த பெயர் உண்டாயிற்று. ஆனால் இன்றைய நிலையில் bacterium என்று சொல்லும்போதோ கேட்கும்போதோ குச்சிகளை யாரும் எண்ணுவதில்லை; ஒருவித நுண்ணியிரிகளையே எண்ணுகிறோம். மேலும், இன்று bacillus – குச்சியம், coccus – மணியம், vibrio – அதிரியம், spirillum – சுருளியம் போன்ற பல வடிவங்களில் நாம் பாட்டீரியங்களை அறிவோம். தமிழிலும் பாட்டீரியம் என்ற இடுகுறிச்சொல் ஒரு குறிப்பிட்ட நுண்ணியிரிவகையையே தமிழருக்கு நினைவுறுத்துகிறது. ஆங்கிலச்சொல் கட்டியிழுக்கும் வரலாற்றுச்சுமை தமிழுக்கு தேவையில்லை.

    முடிவுரை

    மேற்சொன்ன வழியுரைகளை பின்பற்றி கலைச்சொற்களை தொகுத்தும் திருத்தியும் தேவையானபோது ஆக்கியும் ஒரு கலைச்சொற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இது மின்பட்டியலாக இருப்பதால், ஆங்கிலத்தில் அகரமுதலாக்கும்போது ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருந்தால் திருத்தி திட்டவட்டத்தை நிலைநாட்டவும் தமிழில் அகரவரிசையாக்கும்போது ஒரே சொல் பல பொருளில் வந்தால் திருத்தி ஒருத்துவத்தை நிலைநாட்டவும் வசதியாகிறது. இந்த முறையாலே apogeeக்கும் aphelioனுக்கும் ஒரே சொல் இருப்பதைக்கண்டு மாற்றினேன்.

    கலைச்சொற்களின் செந்தரம் என்ற விளக்கநூலையும் சொற்பட்டியலையும் (http://oss.neechalkaran.com/dictionary/) அந்தந்த தொடுப்புகளில் காணலாம்; jkottalam@gmail.com என்ற மின்முகவரியிலிருந்தும் இலவசமாக பெறலாம். அறிஞர்கள் பட்டியலை பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் திருத்தங்களையும் தெரிவிப்பது பட்டியலின் அடுத்த வேற்றங்களை மேம்படுத்தும்.


    செ. கோட்டாளம் அறிவியலிலும் தகவற்றொழினுட்பத்திலும் ஆராய்ச்சியாளராகவும் வளராக்கருமாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1954ஆம் ஆண்டு இந்தியாவின் தெற்குத் தமிழ்நாட்டிலுள்ள கொற்கயிைல் பிறந்தார். சென்னயிலுள்ள இந்தியத் தொழினுட்பப்பயிலகத்தில் முதுவறிவியற்பட்டத்தையும் அமெரிக்கவொன்றிய மாநிலங்களின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்திலிருந்து முனைனவர் பட்டத்தையும் பெற்றார்; சாண்டியாகோவிலுள்ள கலிபோனியாப் பல்கலைக் கழகம், கிரிப்பசின் ஆராய்ச்சிப்பயிலகம், ஆர்வடு பல்கலைக் கழகம், கிரேயின் ஆராய்ச்சியகம் முதலிய இடங்களில் நோபல்சூடிய பேராசிரியர் கார்ப்பிளசு உட்பட பல அறிவியலர்களுடன் பணியாற்றினார். புரதம், அணுக்கருவமிலம் போன்ற பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பையும் இயக்கங்களையும் மிகைக்கணினியில் பாவனையாக்குவதற்கான எண்கணிப்பப் படிமுறைகளை வளராக்குவதில் இவர் பங்களித்தார். மேலும், கணக்கீட்டுப் பாய்மயியக்கவியல், புள்ளியியயியற்பியை் ஆகிய துறைகளிலும் பங்களித்துள்ளார். இப்பபாது ஆங்கில மொழியிலுள்ள அறிவியற் செல்வங்களை திட்டமிட்ட ஒழுங்குமுறையில் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.

    jkottalam@gmail.com
    https://www.facebook.com/kottalam 


     

    Share
  • லப்பர் பந்து – திரை விமர்சனம்

    லப்பர் பந்து – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    லப்பர் பந்து, ஒரு நல்ல முயற்சி. ஆனால், இன்னும் சிறந்த முயற்சியாக வந்திருக்கலாம்.

    விளையாட்டுத் துறைகளில் ஆர்வமாக ஈடுபடுவோர் பலரும் அதில் வெற்றி பெற்று, விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற வேண்டும் என்பதைத் துணை இலக்காக இல்லாமல், முதல் இலக்காகவே வைத்திருப்பர். ஆனால், வேறு பொருளாதார இலக்குகள் ஏதுமின்றி, நடுத்தர வயதினை எட்டிய பிறகும் விளையாடும் ஆர்வத்துக்காகவே விளையாடுவோர் பலர். இதற்காக, ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, அணி நடத்துவோரும் போட்டி நடத்துவோரும் பற்பல ஊர்களில் உண்டு. இந்த உள்ளூர்க் கிரிக்கெட்டை விறுவிறுப்பாகக் காட்டுவதில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெற்றி அடைந்திருக்கிறார்.

    இத்தகைய போட்டிகளில் ஒரு சிக்கல் இருக்கிறது. விளையாட்டுத் திறமையும் இருக்க வேண்டும், அதை நேசிக்கவும் வேண்டும். இதையும் தாண்டி, விளையாட்டு உணர்வு என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். அடுத்தவர் திறமையை மதிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கம் கொடுத்து, தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் இது குறைவாகவே இருக்கிறது.

    விளையாட்டு மைதானம், கெத்து காட்டுகின்ற இடமில்லை. திறமையைக் காட்டுகின்ற களம். இங்கே நான் பெரியவனா, நீ பெரியவனா என ஈகோ காட்ட வேண்டிய தேவையில்லை. இதில் நான், என் அணி, என் கிரிக்கெட் கிளப் என வீரர்களின் அகந்தையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி, கேலி செய்து, சீண்டி, வம்பிழுத்து, சண்டை போடுவது தேவையே இல்லாதது. அப்படியே நடந்தாலும் இயக்குநர் அதற்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை.

    கெத்து தினேஷ், உள்ளூர் அணிகளில் பெரிய கிரிக்கெட் வீரர். லப்பர் பந்துக் களங்களில் வாகை சூடுகிறார். ஆனால், கார்க் பந்து வைத்து விளையாடும் போது, அவரால் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் இறுதிப் போட்டியில் குறிமூடி, கால்மட்டை, கையுறை போன்ற முறையான பாதுகாப்பு ஏதுமின்றி, கார்க் பந்தினை எதிர்கொண்டு விளையாடி 94 ஓட்டங்கள் எடுக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடும் தினேஷ், இத்தகைய தொழில்முறை விளையாட்டுக் களத்துக்கு ஏன் தயாராகவில்லை? அவருக்கு அதன் மீது அச்சமா? அவரிடம் இதற்கான திறமை இல்லையா? அப்படி விளையாடி அடிபட்டால் என்னாகும் என்று அவருக்குத் தெரியாதா? இதைப் பற்றிய எந்த எச்சரிக்கையும் இல்லாமல், வெறும் கெத்துக்காக ஆடலாமா? தினேஷ் உடன் விளையாடுபவர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்திருக்கலாம். நவீன விளையாட்டுக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் அரிய வாய்ப்பினை இயக்குநர் இங்கே தவறவிட்டிருக்கிறார்.

    ஓட்டப் பந்தயங்களில் ஆப்பிரிக்க வீரர்கள் முன்னர் வெறுங்காலில் விரைவாக ஓடி எளிதாக வென்றனர். ஆனால், புதையணி அணிந்து வெற்றி பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது. வெறுங்காலில் களிமண் தரையில் விளையாடியவர்கள், புதையணி அணிந்து உள்ளரங்கக் களத்தில் ஆடுவதற்குக் கடும் பயிற்சி தேவைப்பட்டது. உள்ளூர் அணி வீரர்களை இப்படியாக ஆற்றுப்படுத்தி, ஊக்குவித்திருக்கலாம்.

    அடுத்து, உள்ளூர் அணிகளுக்கு ஆடும் பலரும், நாள்முழுவதும் அதே கதி எனக் கிடப்பர். வேலைக்குச் செல்வதையோ தொழில் நடத்துவதையோ செய்யாமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பொறுப்புகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் குடும்பத்தினர், விளையாடப் போகக் கூடாது என எதிர்ப்பார்கள். அவர்களை ஏமாற்றி இவர்கள் விளையாடச் செல்வார்கள். இந்தப் பகுதியை இயக்குநர் நன்றாகக் காட்டியிருக்கிறார்.

    தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா, பிரமாதமாகச் செய்திருக்கிறார். சிறுவர்களிடமிருந்து தவறி வந்த லப்பர் பந்தினை அரிவாள் மணையில் இரண்டாக நறுக்கி எறிவது, அவரது கோபத்தை நன்றாகக் காட்டுகிறது. தினேஷின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அழகாக, அருமையாக நடித்திருக்கிறார். அவரது காதலனாக வரும் ஹரிஷ் கல்யாண், கவனமாக நடித்திருக்கிறார். இவர் சற்றே அடக்கி வாசித்தது போல் இருக்கிறது. ஆண்கள் அணியில் ஒற்றைப் பெண்ணாக அகிலாவை விளையாட வைத்த இயக்குநருக்குப் பாராட்டு. அட்டகத்தி தினேஷ், இதில் கெத்து தினேஷாக ஜமாய்த்திருக்கிறார். பிரிந்து சென்ற மனைவியின் சேலையில் அவர் படுத்துத் தூங்கும் காட்சி மிக அழகு. நண்பர்களாக வரும் பால சரவணனும் காளி வெங்கட்டும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

    படத்தின் இறுதிக்கட்டக் காட்சி, மிகுந்த ஏமாற்றம் அளித்தது. விளையாட்டை முதன்மையாக வைத்துள்ள படத்தில், ஜாதியைப் புகுத்தியது முதல் தவறு. எதிரணியில் பாலய்யா என்ற பட்டியலின வீரர் ஆடுவதற்காக, அந்த அணியே ஜெயிக்கட்டும் என விட்டுத் தருவது போல் காட்டியது மிகத் தவறு. அவர் ஜெயித்ததால், அவர் ஜாதியில் அவர் போல் இன்னும் சிலர் அணியில் இடம் பிடித்துள்ளனர் எனக் காட்டியது, ஜாதியை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. விட்டுத் தந்துதான் அவர்கள் ஜெயிக்க வேண்டும் எனக் காட்டியது, அவர்களின் திறமையை மட்டம் தட்டியதாகவும் அமைந்துவிட்டது. இயக்குநர் சறுக்கிய இடம், இதுதான்.

    வெட்டி வீறாப்பு, வாய்ச்சவடால், கெத்து – இவற்றையெல்லாம் விளையாட்டுத் துறையில் அகற்ற வேண்டும். மாறாக, விளையாட்டு நுணுக்கம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நம் உள்ளூர் அணிகள், சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார் செய்யும் களங்களாக இருக்க வேண்டும். சாதிக்கும் ஊக்கத்தைத் தருபவையாக இருக்க வேண்டும். நம் துரதிருஷ்டம், குடும்ப உணர்வுகளில், ஈகோ மோதல்களில் சிக்கி, படம் எங்கோ வழி தவறிச் சென்றுவிட்டது.

    தொலைந்து போன அந்த லப்பர் பந்தினை யாராவது தேடிக் கண்டுபிடியுங்கள். அடுத்த பந்தினை வீச்சுடன் வீசுவோம்.

    Share
  • வேட்டையன் – திரை விமர்சனம்

    வேட்டையன் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    வேட்டையன் படத்தில் ரஜினியின் செயல் வேகம் சிறப்பாக உள்ளது. 73 வயதுள்ள அவர், 58 வயது காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரவுடிகளையும் போக்கிரிகளையும் சுட்டுத் தள்ளி, என்கவுன்டர் புலியாகப் புகழ் பெறுகிறார். அவரது உடல்வாகுக்கு ஏற்ப, சண்டைக் காட்சிகளையும் நடனக் காட்சிகளையும் அமைத்துள்ளது நன்று. முதிய வயதிலும் துடிப்பாக இயங்க முடியும் எனக் காட்டிய வகையில், ரஜினி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தளர்ந்திருக்கும் முதியவர்கள், இவரிடமிருந்து உத்வேகம் பெற முடியும்.

    படத்தின் முதல் சிக்கல், நீட்டுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்பதே. எந்தப் பயிற்சி நிறுவனமும் உன்னைத் தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன், மருத்துவர் ஆக்கிக் காட்டுகிறேன், வேலை வாங்கித் தருகிறேன் என்று எல்லாம் சொல்வதில்லை. தேர்வில் வெற்றி பெறப் பயிற்சி அளிப்பதும் திறன்களை வளர்க்க உதவுவதும் மட்டுமே அவர்கள் பணி. மற்றபடி படித்துத் தேர்வில் பெறுவது, மாணவர்களின் கடமை. இதை விதிமுறைகளில் தெளிவாக எழுதியிருப்பார்கள். இதற்கென்றே சட்ட நிபுணர் குழுவை வைத்திருப்பார்கள்.

    மாணவர்களிடமிருந்து அவர்கள் பெறும் கட்டணம், பயிற்சி அளிப்பதற்கே. மாணவர்களுக்கு ஆசை காட்டுவது எல்லாம் வாய்மொழியாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் எத்தனைப் பேர் புகார் அளித்தாலும் சட்டரீதியாக அதை அந்த நிறுவனம் எளிதாகக் கடந்துவிடும். இந்த இடத்தில் BUDS Act (The Banning of Unregulated Deposit Schemes Act, 2019) செல்லுபடி ஆகாது. இதை வைத்து, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடியாது. அப்படிச் செய்வதானால், தங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்தும் எல்லாப் பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் இத்தகைய வழக்குகளைத் தொடுக்க முடியும்.

    பயிற்சி நிறுவனம் கொடுத்த கைக்கணினிகள் வேலை செய்யவில்லை என்றால், அது வேறு வகையான புகார். அதை நிறுவனம், வேறு விதமாகச் சமாளிக்க வாய்ப்பு உண்டு.

    தங்கள் மீது புகார் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபாசமாகப் படம் எடுப்பதையும் கஞ்சா புகைப்பதையும் வீடியோ எடுத்து ஒரு நிறுவனம் பரப்பும் என்பது மிகையான கற்பனை. இதை வைரலாகப் பரவச் செய்தாலும் அந்த நிறுவனம் மீது புகார் கொடுப்பதை இவை எப்படித் தடுக்கும் என்பது புரியவில்லை.

    அரசுப் பள்ளி ஆசிரியையாக வரும் துஷாரா விஜயனைக் கொன்றது பயிற்சி நிறுவனத் தலைவர் ராணா டகுபதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. பிறகு எப்படி அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தார்கள்? நீதிமன்றம் எந்த அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கிறது என்பதும் புரியவில்லை.

    துஷாரா விஜயன், குணா உடன் சேர்ந்து சேகரித்த ஆதாரங்களை உடனே இணையத்தில் ஏற்றி, ரஜினியின் மின்னஞ்சலுக்கு அடுத்த நிமிடமே கிடைக்கச் செய்திருக்கலாம். அந்த வன்தட்டை எதற்காகப் பார்சலாக அனுப்ப வேண்டும்? இத்தனைக்கும் குணா, கணிப்பொறி படித்தவர்.

    படத்தில் பலரைச் சுட்டுக் கொன்ற ரஜினி, ராணா டகுபதியை மட்டும் சிறையில் தள்ளுகிறார். உன்னைப் போன்ற பணக்காரர்களையும் சிறையில் தள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டவே இப்படிச் செய்தேன் என்கிறார். இதற்கான காரணம், வலுவாக இல்லை.

    கடைசியில் ராணா டகுபதி தப்பித்துச் செல்லும் இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் ரஜினி. எப்படி? எந்தத் துப்பினைக் கொண்டு அவர் சரியாக அங்கே வந்து இறங்கினார் என்று காட்டவில்லை. கீழே அத்தனை அடியாட்கள் துப்பாக்கியுடன் காத்திருக்கும்போது, மேலிருந்து இறங்கும் ரஜினியின் ஹெலிகாப்டரை மேலேயே சுட்டு வீழ்த்தியிருக்கலாமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இன்னும் கச்சிதமாகச் செய்திருக்க வேண்டும்.

    அமிதாப் பச்சன், மனித உரிமை காக்கும் நீதிபதியாக இருந்தாலும் என்கவுன்டர் நிபுணர் ரஜினியிடம் மென்மையாக நடந்துகொள்கிறார். அவருக்கு ரகசியமாக உதவுகிறார். கடைசியாக, ரஜினியை என்கவுன்டருக்கு எதிராகப் பேச வைக்கிறார்.

    யூடியூபராக வரும் மஞ்சு வாரியர், கவர்கிறார். பகத் பாசில், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். காவல் துறைக்கு உதவத் தொடங்கிய பிறகும் கடைகளின் கியூ ஆர் கோடினை மாற்றி, அவர்களை ஏமாற்றும் விதமாகக் காட்டியிருக்க வேண்டாம். ரித்திகா சிங்கின் நடிப்பு நன்று.

    எல்லோருக்கும் சமமான கல்வி, சமமான சட்டம் என்ற நிலையை மெக்காலே கொண்டு வந்தார் எனச் சொல்கிறார். மெக்காலேவுக்குப் பிறகு தான் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது. அதை நிகழ்த்திய ரெஜினால்டு டையர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஆயினும் ஆங்கிலேய அரசு அவரை ஆதரித்ததுடன், அவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது, ரெஜினால்டு டையருக்குப் பொருந்தாதா? அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர்களுக்குப் பொருந்தாதா? சட்டம் ஆளுக்கு ஏற்றபடி வளையும் என்பதற்குப் படத்தில் வரும் ராணா டகுபதியே சான்று இல்லையா?

    இயக்குநர் த.செ.ஞானவேல், நீட்டுக்கு எதிராகப் படம் எடுத்ததாகச் சொன்னால், அது தவறு. படம் மொத்தமும் ஒரு பயிற்சி நிறுவனத்துக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. மேலும், பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற வாதமே பலவீனமானது. இதை மீண்டும் மீண்டும் சொல்லி, மாணவர்களை நம்ப வைப்பது, மாணவர்களுக்குச் செய்யும் தீங்கு ஆகும். அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பதே உண்மை.

    நீட் எதிர்ப்புக் குழுக்களைக் குளிர்விக்க வேண்டும், அவர்களின் அரசியலை ஆதரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. பகடையை உருட்ட வேண்டிய ரஜினி, தானே ஒரு பகடைக் காயாக உருண்டுகொண்டிருக்கிறார்.

    Share
  • தமிழர் வாழ்வில் சிலம்பு

    -மேகலா இராமமூர்த்தி

    அன்று தமிழ்மக்களின் வாழ்வில் சிலம்பு சிறந்ததோர் இடத்தைப் பெற்றிருந்தது. சிலம்பின் பெயரைக்கொண்டே ஒரு காப்பியத்தைப் படைத்துத் தமிழர் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர் இளங்கோவடிகள்.

    சீர்மிகு சிலம்பைப் பெண் குழந்தைகளுக்கு அணிவித்து அழகுபார்த்தவர் தமிழர். அந்நாளில் சிலம்பு பெற்ற இடத்தை இந்நாளில் கொலுசு பெற்றுள்ளது எனலாம். செல்வச் சிறுமியர் பொற்சிலம்பணிந்திருந்த செய்தியினை (முத்துஅரிப் பொன்சிலம்பு ஒலிப்ப – நற்: 110) சங்கப் பாடல்கள் நமக்கு அறியத்தருகின்றன. சிலம்பில் உள்ளிடு பரல்களாக முத்து, மாணிக்கம் போன்றவை அவரவர் விருப்பத்திற்கும் வளமைக்குமேற்பச் சேர்க்கப்பட்டன.

    சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் காற்சிலம்பில் மாணிக்கப்பரல்களும் கோப்பெருந்தேவியின் சிலம்பில் முத்துப்பரல்களும் இருந்தமையை அக்காப்பியம் வாயிலாய் அறிகின்றோம். கண்ணகியின் தந்தையான மாநாய்கன் நாவாய்களோட்டிக் கடல்வாணிகம் செய்தோரின் தலைவனாய்த் திகழ்ந்தமையால் முத்தினும் விலையுயர்ந்த உயர்தர மாணிக்கப் பரல்களாலான சிலம்பினைத் தன் செல்வமகளுக்கு அணிவித்திருந்தான் என்பதும், பாண்டிநாட்டுக் கோப்பெருந்தேவி தன்னாட்டு விளைபொருளும் முத்துக்களில் சிறப்புப்பெற்றதுமான கொற்கை முத்துக்களைப் பரல்களாகக்கொண்ட சிலம்பினை அணிந்திருந்தாள் என்பதும் நாம் ஊகித்தறியக்கூடிய உண்மைகளே.

    பெற்றோர் தம் மகளிர்க்கு இளமைப் பருவத்தில் அணிவித்த சிலம்பைக் கன்னிமைச் சிலம்பு என்பர்; திருமணத்தின்போது கொழுநன் அணிவிக்கும் சிலம்புக்குக் கற்புச் சிலம்பென்று பெயர். திருமணத்திற்கு முன்பாகக் கன்னிமைச் சிலம்பைக் கழற்றுவதை ஒரு விழாவாகவே அந்நாளில் நிகழ்த்தியுள்ளனர் தமிழ்மக்கள். அதற்குச் ’சிலம்புகழி நோன்பு’ என்று பெயர். இவ்விழா, திருமணத்திற்கு முன்பு, பெண்ணின் பிறந்தவீட்டில் நிகழ்வதே வழக்கமாயிருந்திருக்கின்றது. ஆதலால், பெண்ணைப் பெற்ற தாய் அதனைத் தன் மனையில் நிகழ்த்துவதையே பெருமையாகயும் – தன் கடமையாகவும் கருதினாள். இச்சிலம்பு கழீஇச் சிறப்பைத் தொல்காப்பியர் கரணம் என்று குறித்தார்.

    தலைவி தலைவனோடு, பிறந்தவீட்டார் அறியாமல், உடன்போக்கில் சென்று மணம்புரிந்துகொள்ளும் சூழலில் இந்தச் சிலம்புகழி நோன்பு பெண்ணின் வீட்டில் நிகழாமல் மணமகன் வீட்டில் நிகழ்வதுண்டு. அவ்வாறு நிகழும்போது, அது தலைவியைப் பெற்ற நற்றாயின் உள்ளத்தைப் பெரிதும் வருத்தும்.

    ”தலைவனை மணமுடிக்கும்போது தன் காலில் அணிந்த சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் சிலம்புகழி விழாச்சிறப்பை நான் காணாது பிறர்கண்டு மகிழும்வண்ணம் வெயில் காயும் வெம்மைமிகு பாலைவழியில் நடந்துசெல்லும் என் புதல்வியின் மெல்லடிகள் வருந்துகின்றனவோ?” என்று நற்றாயொருத்தி உடன்போக்கில் சென்றுவிட்ட தன் மகள் குறித்துக் கலங்குவதை நற்றிணைப் பாடல் நம் கண்முன் நிறுத்தி நம்மையும் அவள் நிலையெண்ணிக் கலங்கச்செய்கின்றது.

    …வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
    அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச்
    சிலம்பு கழீஇய செல்வம்
    பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே.
     (நற்: 279 – கயமனார்)

    சிலம்பு கழித்தலை செல்வமென்று இத்தாய் பேசுவதிலிருந்து அதனைத் தன் மனையில் நிகழ்த்துதலைச் செல்வமாக – பேறாக அவள் கருதினாள் என்பது தெற்றெனப் புலப்படுகிறதன்றோ?

    ”தோழிமாரும் தாயரும் கண்டுமகிழுமாறு உறையூரை ஒத்த வளமுடைய தன்வீட்டில் சிலம்புகழி நோன்பும், பெரியோர் நிகழ்த்திவைக்கும் திருமணமும் செய்துகொண்டு தலைவனோடு செல்லாது, தமர் அறியாவண்ணம் தலைவனோடு உடன்போக்கில் சென்று அறியாத் தேயத்தில் சிலம்பு கழித்துத் திருமணம் செய்துகொள்ளுதல் கொடிது” என்று கண்ணீர்விடுகின்ற தாயை நமக்கு வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றது அகநானூறு.

    கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
    காவிரிப் படப்பை உறந்தை அன்ன
    பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர
    நன்மாண் விழவில் தகரம் மண்ணி
    யாம்பல புணர்ப்பச் செல்லாள்…
    […]
    முள்ளெயிற்றுத் துவர்வாய்ச்
    சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ
    அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
    (அகம்: 385 – குடவாயில் கீரத்தனார்)

    ”கொடிது கொடிது வறுமை கொடிது” என்றார் பிற்கால ஔவையார்;
    ”கொடிது கொடிது என் மகள் அறியாத் தேயத்தில் சிலம்பு கழித்தல் கொடிது” என்கிறார் இந்த அன்னையார்.

    ஐங்குறுநூற்றுத் தாயொருத்தியின் வருத்தத்தை அடுத்துக் காண்போம்.

    தன் மகள் உடன்போக்கில் தலைவன் ஊருக்குச் சென்றுவிட்டாள்; ஆங்கே தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்புச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன என்பதனை அவ்வூரிலிருந்து வந்த தமர் (தமக்கு வேண்டியவர்கள்) வாயிலாக அறிந்த தாயொருத்தி, “மக்களே! பொய்கள் பலவற்றை மெய்போலப் பேசி என் மகளை மயக்கி அழைத்துக்கொண்டு சென்றுவிட்ட அந்தக் காளையின் தாயிடம், உங்கள் வீட்டில் சிலம்புகழி சடங்குகள் செய்தாலும் திருமணச் சடங்குகளை எங்கள் வீட்டில் (பெண் வீட்டில்) செய்யுங்கள் என்று நீங்கள் கூறியிருந்தால் அதனால் உங்களுக்கு வரக்கூடிய குற்றமென்ன?” என்று கேட்டு வருந்துவதனை ஐங்குறுநூற்றில் காண்கின்றோம்.

    நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
    எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
    சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
    மையற விளங்கிய கழலடிப்
    பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே
    ”     (ஐங்: 399 – ஓதலாந்தையார்)

    சங்க காலத்தில் சிலம்புகழி நோன்பு ஒருநாளும் அதனைத் தொடர்ந்து வதுவை மணமாகிய திருமணம் இன்னொரு நாளுமெனத் திருமணம் இருகூறுகளைக் கொண்டதாக நிகழ்ந்திருப்பதனை இப்பாடல் வாயிலாக நாம் அறிகின்றோம்.

    உடன்போக்கில் தலைவனோடு சென்றுவிட்ட தம் மகளின் பிரிவைத் தாங்கமுடியாமலும், அவளுக்குத் தம் மனையில் சிலம்புகழி நோன்பும் திருமணமும் செய்துவைக்க இயலாததாலும் தாய்மார்கள் புலம்புவதனை மேற்கண்ட சங்கப் பாடல்கள் நமக்குத் துல்லியமாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

    பண்டைத் தமிழர் வாழ்வில் இடம்பெற்ற எத்தனையோ நிகழ்ச்சிகள், சடங்குகள் காலவோட்டத்தில் மாற்றமடைந்துவிட்டன; சில மறைந்தும்விட்டன; வடவர் வருகையாலும் அவர்தம் மணமுறைகளின் தாக்கத்தாலும் தமிழர் மணத்தில் புதிய சடங்குகள் பல இடம்பெறத் தொடங்கிவிட்டமையும் கண்கூடு.

    நம் மக்கள் பெருமிதத்தோடும், செல்வமென்று உயர்வாகவும் கருதி அக்காலத்தில் நிகழ்த்திய சிலம்புகழி நோன்பு இன்று தமிழர் திருமண நிகழ்வில் இல்லாத ஒன்றாகிவிட்டது; எனினும், நம் பண்பாட்டின் ஓர் அங்கமாய்த் திகழ்ந்த அந்நிகழ்வு குறித்து நாம் அறிந்துகொள்வதற்குச் சங்கப் பாடல்கள் இன்றும் துணைநிற்கின்றன என்பது மகிழ்ச்சியளிக்கும் ஒன்றேயல்லவா?

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையும்
    2. ஐங்குறுநூறு மூலமும் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் உரையும்
    3. அகநானூறு மூலமும் நாவலர் திரு ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பெற்ற பதவுரை விளக்கவுரையும்

     

    Share