Blog

  • ஆழ்துளைக்குள் அவலம்!

    ஆழ்துளைக்குள் அவலம்!

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆழ்துளைக்குள் அழுகையொலி
    அனைவரையும் உலுக்கியதே!
    வாழவெண்ணி வந்தவுயிர்
    ஆழத்துள் அடங்கியதே!

    ஓலமிட்டு அழுதவர்கள்
    ஓடியோடி அலைந்தவர்கள்
    நாளைவரும் எனநினைத்தார்
    ஆழ்துளையோ விடவிலையே!

    தண்ணீரைத் தேடினோர்க்குக்
    கண்ணீரே மிச்சமெனப்
    பிஞ்சுக் குழந்தையொன்று
    பேதலிக்க வைத்ததுவே!

    கெஞ்சினார் கிண்டினார்
    கேட்கவில்லை இறைவனுக்கு
    பிஞ்சுக் குழந்தை உயிர்
    பிரியும்நிலை ஆனதே!

    பெற்றாரின் தவறா?
    பேணி நிற்கும்
    பேரரசின் தவறா?

    கற்றாரின் தவறா?
    கடவுளின் தவறா?
    யார்தவறோ அறியோம்!
    பிஞ்சின் அழுகை மட்டும்
    நெஞ்சலாம் ஒலிக்கிறதே!!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 74

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 74

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    74.நாடு

    குறள் 731:

    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வருஞ் சேர்வது நாடு

    செழிப்புகொறையாத வெளச்சலும், படிச்ச அறிவாளிகளும், சுயநலம் இல்லாத பணக்காரங்களும் சேந்து இருக்க எடம் தான் நாடு.   

    குறள் 732:

    பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு

    அதிக பொருள் வளம் இருக்கதாவும், எல்லாரும் விரும்புதமாரியும், கேடு இல்லாம நல்ல வெளச்சலோட இருக்கதும்தான் சிறந்த நாடு.  

    குறள் 733:

    பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
    கிறையொருங்கு நேர்வது நாடு

    மத்த நாட்டுலேந்து வந்து குடியேறுதவங்களோட சுமையத் தாங்கி அரசுக்கு வரி செலுத்துதக்கு ஏதுவா வளமா இருக்கது சிறந்த நாடு. 

    குறள் 734:

    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு

    வயித்துப் பசி, நோவுநொடி, பகையாளிங்க இவையெல்லாம் இல்லாம இருக்கதுதான் நாடு.

    குறள் 735:

    பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு

    கூட்டங் கூட்டமா கூடவே இருந்து குழிபறிக்குத பகையும், அரச நெருக்கடிக்குத்தள்ளுத கலகக்காரங்க , கொலைகாரங்க இவுகளால வெளையுத பொல்லாப்பும் இல்லாம இருக்கதே சிறந்த நாடு. 

    குறள் 736:

    கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை

    பகையாளியால பாழ்பட்டுப் போவாம ஒருக்கா போனாலும் அத சரி செஞ்சுக்கிடுத அளவு வளமா இருக்கதும் தான் மத்ததவிட சிறந்த நாடு.

    குறள் 737:

    இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு

    ஊத்துத் தண்ணி, மழைங்குத ரெண்டு வகை நீர்வளமும் உயரமாவும் அகலமாவும் இருக்க மலையும் அதுலேந்து கெளம்பி ஓடுத ஆறும் , பலமான கோட்டச்சுவரும் நாட்டுக்குத் தேவைப்படுத உறுப்புக்கள் ஆவும். 

    குறள் 738:

    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

    நோவுநொடி இல்லாமை, செல்வம், நல்ல வெளச்சல், சந்தோசமான வாழ்க்க, நல்ல பாதுகாப்பு இந்த அஞ்சும் ஒரு நாட்டுக்கு அழகு னு படிச்சவங்க சொல்லுவாக. 

    குறள் 739:

    நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு

    அதிகமா சிரமப் பட்டு முனைஞ்சு ஒழைச்சு வளமா இருக்க நாடுகள விட இயற்கையிலயே எல்லா வளத்தையும் கொண்டிருக்கது தான் சிறந்த நாடு. 

    குறள் 740:

    ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு

    நல்ல ராசா இல்லாத நாட்டுல எல்லாவித வளமும் இருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லாமப் போவும்.  

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • சேக்கிழார் பா நயம் – 53

    சேக்கிழார் பா நயம் – 53

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    இனி, நிலவு வெளிப்படுதல்  என்னும்  இலக்கிய உத்தி,   மிகச்சிறந்த  காப்பியங்களில் பல்வேறு  வகைப்பட்ட   சுவைகளுடன் அமைந்த அழகைக் காண்போம்.

    கம்பர், கன்னிமாடத்தின்  மேலிருந்து  இராமனைக்  கண்ட சீதை, அவன்பால்  காதல் கொண்டு  பஞ்சணையில்  சாய்ந்தாள்.  அப்போது வெண்ணிலவு வானில்  தோன்றியது.  அது முன்பு பாற்கடலைக் கடைந்தபோது அங்கிருந்த அமுதக்கலசம் பாற்கடலின் துளிகள் விண்மீன்களாய்   விளங்க,  வானில்    தோன்றியதுபோல் கடலின்மேல்  வெண்திங்கள் தோன்றியது என்பதை,

    பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின்
    விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க
    இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம்
    இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள்

    என்றுபாடுகிறார்.   இடையிடையே  புள்ளிகளை இட்டது போல் விண்மீன்கள் தோன்றும் இருளின்  குழம்பை , நிலவின்  கதிர்கள் நக்கி உண்டதுபோல எங்கும்   இருள்  தேய, கீழ்த்திசையில்  தோன்றும் வெள்ளிப்  பூரண  கும்பத்தில் வைத்த இளம்பாளைகள் போல நிலவின் கதிர்கள்   விரிந்தன என்பதைக்  கம்பர்,

    புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
    நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை
    கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த
    வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால்

    என்று பாடுகிறார். அந்த வானின்   இருள்   முழுவதையும் நிலவு   தன்  கைகளால்  வாரி  உண்டு  எங்கும்பரவியது.  அது,   சடையப்ப வள்ளலின் ஒளி  மிக்க புகழ் எங்கும்  பரவியது போல் இருந்தது  என்பதைக் கம்பர்,

    வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம்
    உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை
    விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர்
    பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால்

    என்று பாடுகிறார்.  மேலும்  கடலின் நடுவில் முளைத்து எழுந்த  நிலவுஎன்னும் ஓவியன், தன்   வெள்ளிய சுதை மட்டைகளால் பூசி,  அண்டத்தின்  பழையதான மங்கிய தோற்றத்தை நீக்கிப் புதுமைப்  பொலிவினை உருவாக்கியது என்பதை,

    நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன்
    மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்
    காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு
    பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால்

    என்று பாடுகிறார். பின்னர் யுத்தகாண்டத்தில் வீடணனுக்கு   அடைக்கலம்  கொடுத்த இராமபிரான்  சீதையைத்  தேடி  அடைவது  குறித்து  எண்ணிய  போது, உலகம் என்ற  வலைஞன் ,   பெண்ணின் உருவுடைய  சீதை   கிட்டினால் பிடித்துத்  தருவேன் என்று நிலவு  என்ற  வெள்ளைநிற வலையை வீசியது போல  நிலவொளி  பரவியதை,

    கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
    பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா
    உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும்
    வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்

    என்று பாடுகிறார். இவ்வாறே சேக்கிழார் சுவாமிகளும், இறைவனால்  தோற்றுவிக்கப்  பெற்ற  உயிர்களுக்குத் தூய்மையையும், பிறர்  போற்றும் இன்பத்தையும், குளிர்ச்சியையும்  தந்து,  வானெங்கும்   பரவிய   வெண்ணீற்றின்  உயர்ந்த  ஒளிபோல்      நீண்ட   நிலவின்   ஒளி  பரவியது   என்பதை ,

    தோற்று  மன்னுயிர்  கட்கெலாந்   தூய்மையே
    சாற்று   மின்பமும்  தண்மையும்  தந்துபோய்
    ஆற்ற   அண்டமெ   லாம்பரந்  தண்ணல்வெண்
    ணீற்றின்  பேரொளி  போன்றது  நீணிலா

    என்று   பாடுகிறார்.

    கம்பர் சீதை  திருமணத்துக்கு  எழுந்தருளும்  இராமனுக்குப் பூரண கும்பம்அளிப்பது  போலும் என்றும் , சீதை இராமன்திருமண வாழ்க்கை அமுதம்போல இனிமை  தரும்  என்றும் , சடையன் புகழ் போல்  இருவர் புகழும் பரவும் என்றும், சீதையைத்  தேடும்  வலைஞனாய்  விளங்கும்  என்றும்  அவர் கருத்தின்  படிக்  கூறினார்.

    சேக்கிழார் சுவாமிகள்  தம்  சைவத்   திருவுள்ளத்துக்கு  ஏற்ப , நிலவொளி  திருநீற்றை  நினைவூட்டியது.   பார்க்கும் இடமெல்லாம்  பர வெளியாகத் தோன்றும்  புலவரின்  சிவக்கண்ணுக்கு  நிலவொளி  திருநீற்று  ஒளியாகக்  காட்சி தருகிறது.

    நிலாப்போலவே திருநீறும் தோற்றம் பெறும் உயிர்களுக்கெல்லாம்தூய்மையும் இன்பமும் தண்மையும் தருவதாம்; எல்லா அண்டங்களிலும்  தனது ஆணை பரப்புவதுமாம். நிலாவானது தோற்றம் பெறும் உயிர்களின்உடம்புக்கு அளிக்கும் இயல்பைத் திரு நீறானது உயிர்களுக்கு அளிப்பதாம்.  நீறு – உயிர்க்குத் தூய்மை தருதல்,   கட்டிய பாசத்தினின்றும் நீக்குதலாம்.  இன்பம் தருதலாவது பிறப்பிறப்புக்களால் வரும் துன்பம் நீக்கிப் பேரின்பம் தருதல்.   தண்மைதருதலாவது “சுழலார் துயர்வெயில்   சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும் நிழலாவன“ என்ற அப்பர் பெருமானின் திருவாக்கின்படி,  பாச வெப்பத்தினின்றும் நீக்கிச் சிவனடித் தண்ணிழலிற் சேர்த்தலாகும்.  இதுவேயின்பம், பிறவெல்லாம் துன்பம் என நூல்களிற் பேசப்பெறும். நீறு சத்தியின் இயல்புடையதாதலின் உயிர்களுக்குத் தூய்மை முதலியன தரும் என்பர். “பரா  (பராசக்தி)வண்ணமாவது நீறு“ என்பது தமிழ்மறை.

    நிலா, தோற்றம் பெறும் உடம்புகளுக்குத்தூய்மை – இன்பம் – தண்மை தந்து வளர்க்குமென்ப. சூரியன் உயிர் தங்குவதற்குரிய வெப்பம் கொடுப்பன். சந்திரன் உடம்பு வளர்ச்சிக்கு உரிய தண்மையும் பிறவும் தருவன் என்பது உலகநூல்  துணிபு!   சைவர்க்கு விதித்த மணச் சடங்குகளில் முளைசாத்துதல்  ஆகிய சடங்கில்   சந்திரனுக்குரிய பகுதிகளே சிவாகமங்களிற் கூறப்படுதலும்காண்க.

    திருநீறு  தூய்மை  தருவதையும், இன்பம் தருவதையும், குளிர்ச்சி  தருவதையும், ‘’மந்திரமாவது  நீறு ‘’ என்ற பதிகத்தில்   கண்டறியலாம்

    வேதத்தில்  உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
    போதம்  தருவது  நீறு;  புன்மை தவிர்ப்பது நீறு;
    ஓதத்   தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு;
    சீதப் புனல்வயல்  சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!

    எயிலது  அட்டது  நீறு; இருமைக்கும்   உள்ளது நீறு;
    பயிலப்  படுவது நீறு; பாக்கியம்   ஆவது  நீறு ;;
    துயிலைத்  தடுப்பது நீறு;  சுத்தம்  அதாவது  நீறு;
    அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே!

    என்ற  இரு  பாடல்களே   இவையனைத்தையும்  குறிப்பதைச்  சிந்தித்து உணர்க.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 229-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 229-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    உள்ளங்கவர் கிள்ளைகளை ஒளிப்படமெடுத்து வந்திருப்பவர் திரு. சத்யா. படக்கவிதைப் போட்டி 229க்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    மரமேடையில் அருகமர்ந்து அழகுக்கோலம் காட்டும் பைங்கிளிகாள்! பேசும் ஆற்றல் கைவரப்பெற்ற அரிய பறவைகள் அல்லவோ நீங்கள்! செங்கனி வாய்திறந்து சந்தத் தமிழில் ஒரு சிந்துபாடுங்களேன்! நாங்களும் வந்து கேட்கிறோம்!

    பட்டுக்கிளிகளைப் படத்தில் பார்க்கையில் பாட்டெழுதக் கை பரபரக்கின்றதா பாவலர்களே? எழுதுகோல் எடுங்கள்! பழுதறக் கவிமாலை தொடுங்கள்!

    *****

    ”கிள்ளையின் செம்பவள மூக்கழகில் செயலிழந்தேன்; செழுமஞ்சள் கழுத்தழகில் மனமிழந்தேன்” என்று வியக்கும் திரு. யாழ். நிலா. பாஸ்கரன், அப்பறவைகளைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகளை அறிவுறுத்தி, ”மூக்காலே சீட்டெடுக்க வைக்கும் மூடரிடம் சிக்காது பறந்திடுவீர்!” என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

    கதிர் விழித்த இளங்காலை வேளையிலே
    கதிர் விளைந்த சோளக்கொல்லை எல்லையிலே
    கதிர் கொய்ய வந்த கான் கிளிக்கூட்டத்தில் என்விழிக்
    கதிர் கண்டுவியந்த கண்கொள்ளாக் காட்சியிது!

    பச்சைப் பசுங்கிளிகள், பறந்து திரியும்
    பசுஞ்சோலைப் பூங்கிளிகள் இரண்டும்
    இச்சை கொண்டு இணைந்திருக்கும் இன்பக் காட்சியிது
    இணையில்லா இயற்கையின் ஆட்சி இது!

    செம்பவள மூக்கழகில் செயலிழந்தேன்
    செழும் மஞ்சள் கழுத்தழகில் மனமிழந்தேன்
    சேர்ந்த இரு விழியின் இணையழகில்
    சொந்த நினைவினை நானிழந்தேன்!

    விழித்தெழுந்தேன் விளைந்த கற்பனை
    மொழிவிடுத்து வியனுலகில் நடைமுறையில்
    மெலிந்த பல்லுயிர்களுக்கு விளையும் கேடெண்ணி
    அழிந்த அவற்றின் கூடெண்ணி ஐயுற்றேன்!

    வஞ்சனையாய் வலைவிரித்துச் சிறைப்பிடித்து
    வாயினிலே சூடுவைத்து வாலறுத்து
    வண்ணப் பசுஞ்சிறகை வன்முறையாய் வெட்டிவிடும்
    வஞ்சகர் கையிலினிச் சிக்காது விழிப்புடனே பறந்திடுவீர்!

    முக்காலம் அறிந்திடவும் முயற்சிக்கா வாழ்வின்
    முழுப்பயனும் தெரிந்திடவும் மூளையில்லா
    மூடர்சிலர் இக்காலத்தலும் உங்களைக் கூண்டிலிட்டு
    மூக்காலே சீட்டெடுக்க முடுக்கிடுவார் சிக்காதீர்!

    மாமதுரை அரசாளும் அங்கயற்கண்ணி
    மங்கை மீனாட்சி திருத்தோளில் அமர்ந்திருக்கும்
    மங்களக் கிளிகள் உங்கள் அருளாலே மாநிலத்தில்
    மங்காமல் பசுஞ்சூழல் தழைத்தோங்கட்டும்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    அந்த வாழ்க்கை…!

    கிளியே கிளியே ஆசைக் கிளியே
    கேளடி சேதி கருத்தில் கொள்ள,
    எளிதாய் மனிதனை நம்பி விடாதே
    ஏய்த்தே உன்னைக் கூண்டி லடைப்பான்,
    வெளியே விடுவான் சீட்டை எடுக்க
    வெற்றுரை பேசிக் காசு பறிப்பான்,
    அளிப்பான் ஒருநெல் அடைப்பான் மீண்டும்
    அடிமை வாழ்க்கை வேண்டாம் பறந்திடு…!

    ”உன்னை ஏய்த்துப் பிழைக்கும் மாந்தன் அளிக்கும் ஒற்றை நெல்லுக்காய் அவனிடம் அடிமையாய்ச் சிக்கிடாதே; விரைந்து பறந்திடு; விடுதலை பெற்றிடு!” என்று கிள்ளைக்குச் சுதந்தர உணர்வூட்டும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • Wife in heart, son on shoulder!

    Wife in heart, son on shoulder!

    Jayanthi Sankar, Singapore

    After more than three weeks, I suddenly realized today that I had forgotten to share them with you all. I had in my folder a line drawing whose source is unknow, shared by my brother Ram, months back. I used it as the base for the Swaminatha swami. Colour combinations are mine.

    And the other, Vishnu with Lakshmi, (named by me as) ‘Harivaksha sthasthalAlayAm’ is an inspiration from the famous Artist Kesav’s work. With my sincere respects to him, I took the basic structure and explored a different set of hues.

    Preparing the A1 sized 300mg watercolor papers took me a week and painting another.

    I affectionately dedicate these with the best of my wishes and heartful prayers to Ram.

    Share
  • 2020இல் விண்கப்பல் சுற்றுலா

    2020இல் விண்கப்பல் சுற்றுலா

    -சி. ஜெயபாரதன், கனடா

    2020ஆம் ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்

    NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    1. https://everydayastronaut.com/crew-dragon-vs-starliner/
    2. https://youtu.be/P_LLNuLhEXc
    3. https://youtu.be/oV319JAmxCM

    +++++++++++++++++++

    Image result for Orion, crew dragon, Starliner

    Orion Spaceship and Space Station

    ++++++++++++++++

    Image result for Orion, crew dragon, Starliner

    Starliner Spaceship

    +++++++++++++++

    நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்
    நிலவில் தடம் வைத்தார்.
    பூமியைச் சுற்றி வரும்
    அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்
    சிலநேரம் தங்கிச்
    சுற்றுலாப் பயணம்  செய்ய
    நிற்கிறார்  வரிசையில்
    புவி மனிதர்  !
    நவயுகத் தரை நபர்கள் 
    இனிமேல் 
    விண்கப்பல் புவிச் சுற்றில் 
    சுற்றுலா வருவர் !
    கனவில்லை இது !
    மெய்யான நிகழ்ச்சி ! 
    வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.

    ++++++++++++++++++

    Image result for Orion, crew dragon, Starliner

     

    https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU

    ++++++++++++++++

    நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா

    இப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]]  புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது.  குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல.   அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது.  2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது.  ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு.  அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.

    முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.

    அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.

    ++++++++++++++++++++++++++++++

    நாசாவின் திட்டம் 2024 ஆண்டில் நிலவுக்கு மீளும்  புது முயற்சி.
    2020 ஆண்டில்  விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்

    அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும்  தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன.  ஆனால் எப்போது என்று இன்னும்  தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர்,  பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர்.  அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி  பிஸோஸ் [Jeffery Bezos] .  இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.

    வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை.  பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில் [Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார்.  முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது.  இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் !  மிக மலிவு.  விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.  தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.
    வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார்.  தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும்.  சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம்.  காலிஃபோர்னியா  மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில்  விண்கப்பல் பறந்தது.  பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது :  இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்.  விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி.  விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின்  ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    (ஜூலை 8, 2010)

     

    தட்டாம்பூச்சி போல் பறக்குது !
    தரணியில் முதலாய்ப் பறக்குது !
    பரிதியின் சக்தியால் பறக்குது !
    எரிசக்தி இல்லாமல் பறக்குது !
    பகலிலும் இரவிலும் பறக்குது !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப் பாய்க் கீழ் இறங்குது !
    நாற்பது குதிரைச் சக்தியில்
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் செல்கள்
    பரிதிச் சக்தியை அளிப்பது !
    ஒற்றை விமானி ஓட்டுவது !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாளினிப் பறக்கும் !
    அட்லாண்டிக் கடலைக் கடக்கும் !
    அகில உலகைச் சுற்றும் !
    நூறாண்டுக்கு முன்னே பறந்த
    ரைட் சகோதரர் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++


    “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”

    பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab)

    “நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன்.  பூரிப்படைகிறேன் !  (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு !  இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம்.  நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”

    சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)

    “எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது.  நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது.  தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”

    கிளாடி நிக்கலியர் (Flight Director & Former Space Shuttle Astronaut)


    வரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி

    2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது.  எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி.  பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது.  ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன.  ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள்.  ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது.  சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும்  சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது.  வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி).  வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.

    சோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.

    இதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன..  இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும்.  நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது.  மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது !

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது.  காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் !  அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.

    சூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது !  திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர்.  பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர்.  அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் :  சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport).  புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51.  கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00.  ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி).  பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம்.  பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது.  இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது.  63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன.  ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.

    இரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது !  ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.  சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் :  1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி.  2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது.  3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது !  2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது.  இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் !  ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.

    2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது.  12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை.  அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை.  ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது.  நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி).  அவை மெதுவாகச் சுற்றின.  ஊர்தியின் நீளம் 72 அடி.  இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி.  மொத்த எடை 1.6 டன்.   தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph.  பறக்கும் வேகம் 43 mph.  உச்ச வேகம் 75 mph.   பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.

    சுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர்.  அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது.  உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது.  ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.

    சூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :

    1.  2007 மே 22 :  பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார்.  அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.

    2. 2009 ஜூன் 26 :  சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்பு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.

    3. 2010 ஏப்ரல் 7 :  சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.

    4. 2010 ஜூலை 7 :  சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.

    5. 2010 ஜூலை 8 :  சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது.  ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).

    6. 2011 ஆண்டில் :  இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.

    7. 2012 ஆண்டு வரை :  ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து
    விமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.

    8.  2013 -2014 :  விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது,  உலகத்தைச் சுற்றி வருவது.


    +++++++++++++++++++++++
    https://youtu.be/bkPJQY7rQWA

    தகவல்:

    Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

    1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)

    2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)

    3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)

    4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)

    5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.

    6.  http://www.spacedaily.com/reports/Boeing_SpaceX_unlikely_to_make_manned_flights_to_ISS_in_2019_999.html  [July 12, 2018]

    7. https://phys.org/news/2018-07-space-tourist-flights.html  [July 13, 2018]

    8.  http://www.spacedaily.com/reports/First_space_tourist_flights_could_come_in_2019_999.html  [July 13, 2018]

    9.http://www.spacedaily.com/reports/NASA_Boeing_SpaceX_closing_in_on_return_to_human_spaceflight_for_US_999.html[October 2, 2019]

    10. https://en.wikipedia.org/wiki/Orion_(spacecraft)

    11. https://www.space.com/spacex-starship-crew-dragon-nasa-flights.html

    12. https://en.wikipedia.org/wiki/Boeing_CST-100_Starliner

    ******************

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 73

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 73

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    73. அவை அஞ்சாமை

    குறள்721:

    வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்

    அளவா பேசுத கொணம் உள்ளவுகளுக்கு சபையில இருக்க மனுசங்க படிச்சவங்களா, படிக்காதவங்களா ங்குத வகைய உணந்துக்கிடுத சக்தி இருந்திச்சின்னா பேசுதப்போ தப்புசெய்ய மாட்டாங்க. 

    குறள்722:

    கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்

    படிச்சவங்க முன்ன தாம் படிச்சத அவுக மனசுல பதியுதமாரி சொல்லுதவங்க படிச்சவங்க எல்லாரையும்விட ஒசத்தியானவங்க.

    குறள்723:

    பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத் தஞ்சா தவர்

    பகையாளிகூட சண்டபோட்டு சாவுததுக்கு நெறையபேர் இருப்பாக. படிச்சவங்க முன்ன பயப்படாம பேசுததுக்கு கொறைய ஆட்கள்தான் இருப்பாக. 

    குறள்724:

    கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்

    அறிவாளிங்க சபையில நாம படிச்சத அவுக ஏத்துக்கிடுதமாரி சொல்லிப்போட்டு நம்மளவிட அதிகம் படிச்சவங்ககிட்டேந்து நிறைய விசயத்தக் கத்துக்கிடணும். 

    குறள்725:

    ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு

    பெரியமனுசங்க இருக்க சபையில குறுக்க கேள்விகேக்கும்போது பயப்படாம பதில் சொல்லுததுக்காவ இலக்கணமும், தருக்கம் ங்குத  அளவைத் திறமும் கத்துக்கிடணும். 

    குறள்726:

    வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு

    பயந்தாக்கொள்ளிக்கு வாள் கூட என்ன சம்பந்தம்? சபையில பேசுததுக்கு பயப்படுதவங்களுக்கு அவுக படிச்ச நூல் கூட என்ன சம்பந்தம்?

    குறள்727:

    பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
    தஞ்சு மவன்கற்ற நூல்

    சபையில பேசுததுக்கு பயப்படுதவன் படிச்ச நூல், போர்க்களத்துல பயப்படுத பேடி கிட்ட இருக்க கூரான வாள் கணக்கா ஆவும். 

    குறள்728:

    பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்

    அறிவாளிங்க முன்ன அவுக மனசுல பதியுதமாரி சொல்ல ஏலாதவங்க எத்தன நூல்களப் படிச்சிருந்தாலும் பிரயோசனமில்ல. 

    குறள்729:

    கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்

    அறிவாளிங்க கூடியிருக்க எடத்துல பேச பயந்தவங்க எத்தன படிச்சிருந்தாலும் படிக்காதவனவிட தாழ்த்தியாதான் மதிக்கப்படுவாங்க.

    குறள்730:

    உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்

    சபைக்கு பயந்து தாம் படிச்சத ஏத்தாமாரி சபையில பேசத்தெரியாதவங்க உசிரோட இருந்தாலும் செத்தவனுக்கு சமானம் தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • வாழ்த்துதல் வழங்கும் நற்பயன்கள்

    வாழ்த்துதல் வழங்கும் நற்பயன்கள்

    -எம். மோகன்தாஸ் 

    வாழ்த்தின் மகிமை

    உலகில் வாழ்த்துதல் என்பது காலங் காலமாக இருந்துவரும் சிறந்த பண்பாடாகும். பிறர் நலமாக வாழவேண்டும் என்று எண்ணுவது உயர்ந்த பண்பாடாகும். அந்த எண்ணத்தை சொல் மூலம் வெளிப்படுத்துவதே வாழ்த்தாகும். வாழ்த்தும் போது மனதில் அமைதியான, இனிமையான அலை ஏற்படுகிறது. பிறர் நலம் கருதிய எண்ணத்தோடு “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தும் போது எல்லா பேறுகளையும் பெறும் சிறப்பான வாழ்க்கைக்காண வாழ்த்தாக அமைகிறது “வாழ்க வையகம்” என்பது உலகம் சிறக்க வாழ்த்துவதாக அமைகிறது.

    அணு முதல் அண்டங்கள் வரை சுழன்று கொண்டேயிருப்பதால் ஓர் அலை தோன்றிக்கொண்டே இருக்கிறது அந்த அலை மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், இரண்டு பொருள்களுக்கிடையே ஓடிக்கொண்டு இருத்தல் என்ற தன்மைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரிடத்திலும் ஒரு அலை இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்த்தும் போது அந்த அலை மற்றவர்கள் மேல் மோதும், ஓரளவு திரும்பும் ,ஓரளவு சிதறும், ஓரளவு ஊடுருவிப் போகும்.பிறகு இரண்டு பேருக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கும். அந்த இனிமையான, அமைதியான, நுண்மையான அலை இயக்கம் மனித சமுதாயம் முழுவதும் பரவும், பேரியக்க மண்டலம் முழுவதும் சென்று நிரம்புகிறது.

    மன அலைச்சுழல்

    மனித மனதின் எண்ண ஓட்டத்தினை “ELECTRO ENCEPHALOGRAM” கொண்டு ஆராயும்போது மனது ஒன்று முதல் நாற்பது வரையிலான அதிர்வெண்களைக் கொண்ட மன அலைச்சுழல்களாக இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

    மனித மனம் ஐம்புலன்களின் வழியாக இயங்கும்போது பீட்டா அலையில் 14 முதல் 40 வரை யிலான அலைச் சுழலில் இயங்குகிறது. அப்போது தான் தனது என்ற உணர்ச்சி மயமான எண்ணங்கள் உண்டாகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற அறுகுண வயப்பட்டு துன்பத்திலேயே வாழும் சூழ்நிலை உண்டாகிறது. கோவிலுக்கு சென்று மனதை ஒருநிலைப்படுத்தி வழிபடும் போதும், தவம் செய்யும் பொழுதும் மனம் ஆல்பா நிலைக்கு வருகிறது. அப்பொழுது மன அலைச்சுழல் 8 முதல் 13 வரையிலான அதிர்வெண்களில் இயங்கும். தவத்தில் இருக்கும் பொழுது தூங்காமல் விழிப்புடன் இருகின்றோம் . இதையே பத்திரகிரியார், “தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்“ என்கிறார்.

    தவத்தில் மனம் அமைதியான இனிமையான, ஓர் நுண்ணிய நிலையை அடைகிறது. இந்நிலையில் தான் வேண்டுதல் நல்ல பலன் அளிப்பதாக அமைகிறது வாழ்த்தும்போது வாழ்த்துபவர்க்கும் வாழ்த்துப் பெருபவர்க்கும் மிக விரைவில் நல்ல பலனை அளிக்கிறது. தவத்தில் மேலும் ஆழ்ந்து செல்லும் போது மனம் 4 முதல் 7 வரையிலான தீட்டா அலைச்சுழலில் இருக்கும் அப்பொழுது மனமானது கோள்கள், அண்டங்கள், பிரபஞ்சம் வரை விரிவடைகின்றது, அவற்றை அறியும் பரந்த மனத்துடன் இயங்குகிறது. மேலும் தவத்தில் ஆழும்போது 1 முதல் 3 வரை அலைச்சுழலான டெல்டா நிலையில் இறைநிலையாகவே மாறி விடுகின்றது. இந்த நிலையத்தான் “ சமாதி நிலை”,” முக்தி நிலை” ,”வீடுபேறு” என்கிறோம்

    வாழ்த்தின் ரகசியம்

    “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தும் பொழுது ‘ழ்’ என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நாக்கு மடிந்து மேலண்ணத்தைத் தொட்டு அழுத்துகின்றது. இந்த அழுத்தம் மேலே இருக்கும் பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகளை நன்கு இயங்க வைக்கின்றது. உடல் இயக்கத் தலைமைச் சுரப்பியான பிட்யூட்டரியும், மன இயக்க தலைமைச் சுரப்பியான பீனியலும் தூண்டப்பட்டு நன்கு இயக்கப்படுவதன் மூலம் உடலும் மனமும் சிறப்படைகின்றன. பீனியல் சுரப்பி, மனத்திற்குள்ளாக உள்ள ரத்தினம் எனும் பொருள் கொள்ளும்படி “மனோன்மணி” (மனம் + உள்+மணி) என்று அழைக்கப்படுகிறது.

    வாழ்த்தின் பயன்

    “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தும் போது நாம் மனோன்மணியோடு தொடர்பு கொள்கிறோம் மனம் நுண்ணிய நிலையில் வாழ்த்தும்போது வாழ்த்து செயலாகிறது. பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்கு இடையே ஓர் இனிய நட்பை வளர்க்கும். இருவரது ஜீவகாந்த அலையும் ஒருமித்து செயல்படும் நிலை உருவாகும். ஒரு செடியைப் பார்த்து தொடர்ந்து வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி வந்தால் அதன் பலவீனம் நீங்கி பலம் பெறுவது போல் நாமும் பலம் பெறுவோம். நோய் நீங்கி நலம் பெறுவோம்.

    வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான மந்திரமாகும். வாழ்த்து பேரறிவில் பதிவாகி அதன் மூலம் அடி மனத்திற்கு பரவி நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும். வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும். நாம் ஒருவரை வாழ்த்தும் போது நம் உயிராற்றலுக்கும் அவரது உயிராற்றலுக்கும் உயிர்த்தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் வாழ்த்து வேலை செய்யும்.

    தவம் செய்யும்போது மனம் நுண்ணிய நிலையில் இருப்பதால் நாம் செல்லும் வாழ்த்துக்கு பலம் அதிகம். நமக்காக வேண்டும் தன் வாழ்த்தை விட பிறருக்காக வேண்டும் போது விரைவாக பலன் கிடைக்கும். நினைப்பதெல்லாம் நடக்கும், சொல்லும் வாக்குகள் எல்லாம் பலிக்கும்.

    முதலில் வாழ்க்கைத் துணையை வாழ்த்துவதன் மூலம் குடும்பத்தில் இனிமையான அமைதியான சூழ்நிலை ஏற்படுகிறது. பின்னர் குழந்தைகளை வாழ்த்துவதன் மூலம் நல்ல குணங்களுடன் ஆரோக்கியமான எண்ணங்களை உடைய குழந்தைகளை வளர்க்க முடிகிறது. சகோதர சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தப்படும் போது நல்ல உறவு ஏற்படுகிறது. எதிரிகளை வாழ்த்தும் போதும் அவர்கள் மனம் திருந்தி நற்செயல் புரியும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். உலகை வாழ்த்தும் போது உலகம் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த வகையில்தான் நோயாளியைப் பார்த்து வாழ்த்தும்போது நோயின் தாக்கம் குறைந்து குணம் பெறுவது நிகழ்கிறது . இந்த உண்மையை நிரூபிக்கும் வகையில் இக்கட்டுரையாளர் மூலம் “உயர் ரத்த அழுத்தத்தின் மீது வாழ்த்தின் தாக்கம்” என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. தொடக்க நிலையிலேயே நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது எனவே நாம் அனைவரும் பிறர் வாழ வாழ்த்துவோம், நாமும் நலமுடன் வளமுடன் வாழ்ந்திடுவோம். .

    Share
  • குறளின் கதிர்களாய்…(272)

    குறளின் கதிர்களாய்…(272)

    செண்பக ஜெகதீசன்

    கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
    யிவறியா ரில்லாகி யார்.
    -திருக்குறள் -935(சூது)

    புதுக் கவிதையில்…

    சூது, சூதாடு களம்
    சூதாடுவதில் வல்லமை
    இவற்றை மேற்கொண்டு
    கைவிடாதவர்கள்,
    தாம் உயிரோடிருந்தும்
    இல்லாமல் போனவர்களே…!

    குறும்பாவில்…

    சூது, சூதாடுமிடம், சூதாடுந்திறன்
    இவற்றில் ஈடுபட்டுக் கைவிடாதவர்கள்
    இருந்தும் இல்லாதவர்களே…!

    மரபுக் கவிதையில்…

    தீயதாம் சூதும் தெரிந்ததனைத்
    தொடர்ந்தே ஆடிடும் களமதுவும்,
    மாயக் கலையாம் சூதாட்டம்
    முறையாய்க் கற்ற தேர்ச்சியெல்லாம்
    நோயதாய்ப் பிடித்துக் கைவிடாத
    நேர்மை யற்ற மாந்தரெல்லாம்,
    காயம் கொண்டு உயிரிருந்தும்
    கணக்கில் அவரெலாம் இலாதாரே…!

    லிமரைக்கூ..

    தேர்ச்சி, களத்துடன் சூது
    மேற்கொண்டு கைவிடாதவர்க்கு உயிரிருந்தும்
    இல்லாதாராய் வாழ்க்கை ஏது…!

    கிராமிய பாணியில்…

    சூதாடாத சூதாடாத
    சூடுசெரண யில்லாம
    சூதாடாத சூதாடாத..

    சூதாட்டம்
    அது ஆடுற எடம்,
    நல்லா ஆடுற தெறம
    எல்லாம் இருந்தும்,
    கேடுண்ணு அதக்
    கைவிடாதவன்
    உயிரோட இருந்தாலும்
    அவன் இல்லாதவன்தான்..

    அதால
    சூதாடாத சூதாடாத
    சூடுசெரண யில்லாம
    சூதாடாத சூதாடாத…!

    Share
  • புத்தொளி வேண்டும்!

    அண்ணாகண்ணன்

    புத்தொளி வேண்டும் வேண்டும்!
    புழுதியை மேவிச் செல்லும்
    சிற்றொளியேனும் வேண்டும்!
    சிறகுகள் வேண்டும் ஐயா!
    உள்ளொளி பிறக்க வேண்டும்!
    உயிர்க்கூடு சிலிர்க்க வேண்டும்!
    மெய்யொளி காணுதற்கே
    மெய்யறிவு ஓங்க வேண்டும்!

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    Share
  • சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்

    சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்

    -வையவன்

    அமுதசுரபி தீபாவளி மலர் 2019 இல் வெளிவந்தது… 

    “ஒரே ஒரு கணம் ..ஒரு கணம் பொறுங்கள். புதைந்திருக்கிற சக்கரத்தைச் சேற்றிலிருந்து எடுத்து விடுகிறேன். பிறகு நம் போர் தொடரட்டும்” கர்ணனது கெஞ்சல் இருவர் காதிலும் விழவில்லை. உத்தரவு வந்தது. வரவேண்டிய இடத்திலிருந்து வந்தது.

    “கொல்”

    வில்லை ஏந்தி நின்ற அர்ஜுனனை ஏவிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்

    “நில்”

    திடீரென்று வானம் கறுத்தது. இடி முழக்கம் கேட்டது.

    மண்ணில் புதைந்திருந்த தேர்ச் சக்கரத்தை பிடுங்கி எடுக்கக் குனிந்தபடி வேண்டுகோள் விட்ட கர்ணன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் கால்களை உயர்த்திக் கனைத்ததால் சாரதி இல்லாத தேர், வலமும் இடமும் தள்ளாடி அசைந்தது . தேரோட்டி கைவிட்டுச் சென்று விட்டான். தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியன் ”நீயே ஓட்டிக்கொண்டு சென்று நீயே மாண்டு போ” என்பது போல் சென்றுவிட்டான்.

    பெருமழை பெய்து குருக்ஷேத்திர பூமியை வெள்ளப் பெருக்கால் மூழ்கடித்து யுத்தத்தை நிறுத்திவிடுமா?

    இல்லை. வானம் பயமுறுத்துகிறது. ஒருக்காலும் மழை பெய்து யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. அப்படியே மழை பெய்தாலும் கோவர்த்தன கிரியை இடையர்களுக்காக ஒற்றை விரலில் உயர்த்தி நிறுத்திய கிருஷ்ணனா விட்டுவிடுவான்?

    அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகி, வில்லில் அம்பைப் பூட்டி நிற்கிறவனுக்கு உத்தரவு கொடுப்பவனைத் திரும்பிப் பார்த்தான். அவன் மட்டுமல்ல. குருக்ஷேத்திரத்தில் எல்லாத்தலைகளும் உயர்ந்து வானையே பார்ப்பதை கர்ணன் கண்டான்.

    “நில்”

    பூட்டிய அம்பை கர்ணன் மேல் விடாமல் அர்ஜுனன் ஏதோ ஒரு கட்டளை வந்தது போல் தாமதித்தான்.

    அவனுக்கு நிராயுத பாணியான தன் மீது ஆயுதம் ஏவக் கூடாது என்ற தயக்கம் வந்து விட்டதா?

    இல்லை. இல்லை இந்த யுத்தம் எப்படி முடியும் என்று கர்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

    கிருஷ்ணன் தேரோட்டியாகச் சம்மதித்தான் என்று கேட்ட பொழுதே கர்ணன் மனதில் குருக்ஷேத்திர யுத்தம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் தர்மத்திற்குச் சிறிதளவாவது கிருஷ்ணன் மதிப்பு கொடுப்பான் என்று கர்ணன் நினைத்தான்.

    முடிவு என்னவாயினும் தான் சார்ந்திருக்கும் பக்கம் சாய்ந்து விடாமல் தனது பெயருக்குக் களங்கம் வராது நடந்து கொள்வான் என்று உள்ளே ஓர் நினைவிழை ஓடியது.

    நேற்றுப் போரிட்டு மூலையில் முடங்கிய தர்மன் கிளப்பிவிட்ட ரோஷம் கூடவா மறந்திருக்கும்?

    தேரோட்டி சல்லியன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டுமோ? தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியனை அவமானப் படுத்தியது குற்றம் தானா?

    தான் நாகாஸ்திரத்தை எடுத்ததுமே சல்லியன் சொன்னது நினைவு வந்தது.

    “கர்ணா! நீ நாகாஸ்திரத்தை எடுத்துவிட்டாய். சரி அஸ்திரம் வீணாகக்கூடாது.அதை அர்ஜுனனின் மார்புக்கு குறி வை” எந்த விதி என்னை வீர தர்மம் குறித்துப் பேச வைத்தது.

    “சல்லியா! மாட்டேன். அர்ஜுனன் ஒரு வீரன். நான் ஒரு வீரன். அதனால் நான் அவன் கழுத்துக்கு குறி வைப்பேன்” நடந்தது மீண்டும் நினைவில் புரண்டது.

    “கர்ணா! நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறி வை. கழுத்துக்கு வைக்காதே”

    நான் ஏன் எரிச்சலடைந்தேன்? எவர் பேச்சையும் கேட்க விடாது எந்தத்தீ என்னுள் எரிந்து கொண்டே இருக்கிறது!

    “சல்லியா! ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். நீ கேவலம் ஒரு தேரோட்டி. நீ எனக்கு அறிவுரை கூறாதே”; என்று சொல்கிறான்.

    தேரோட்டி மகன், தேரோட்டி மகன் என்று பார்ப்பவர்கள் எல்லாம் மனசிற்குள்ளாவது நினைக்க விட்ட அந்தத் தீ மீண்டும் சுடர் விட்டுவிட்டது. பொறிகள் தெறித்து அற்புதமான தேரோட்டியான சல்லியன் மீதும் பட்டு அவனைச் சுட்டுவிட்டன.

    எனினும் மிகுந்த பெருந்தன்மையான சல்லியன் , “கர்ணா! ஒப்புக் கொள்கிறேன்.

    ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். மெய்தான். ஒப்புக்கொள்கிறேன். அதுபோல் ஒரு தேரோட்டியைப் பற்றி இன்னொரு தேரோட்டிக்குத்தான் நன்றாய்த் தெரியும். இப்போது கிருஷ்ணன் அர்ஜுனனின் தேரோட்டி. மகா மாயாவி. என்ன சூழ்ச்சி செய்வான் என்று சொல்ல முடியாது. அவன் பொறுப்பிலே இருப்பது அர்ஜுனன். என் பொறுப்பிலே இருப்பது நீ. தயவு செய்து சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறிவை”

    ஏன் கேட்காமல் போனோம்?

    மீண்டும் நடந்தது நினைவில் வந்தது. அர்ஜுனனின் கழுத்தை நோக்கிக் குறிவைக்கப்பட்ட நாகாஸ்திரம் எப்படி மேலே உயர்ந்து அவன் மகுடத்தைத் தட்டித் தூக்கிக் கொண்டு போயிற்று?

    அஸ்திரம் குறி தப்பிவிட்டதா? இல்லை. தேர் தான் கீழே தாழ்ந்துவிட்டது.

    கிருஷ்ணனின் மாயை. தேரைத் தனது காலால் ஒரு அழுத்து அழுத்தி அவன் செய்த வெற்றிப் புன்னகை மனசில் மின்வெட்டியது . தேர் சில அங்குலம் பூமியில் அழுந்தி விட்டது

    எதிராளியைத் தன்னுடைய திறமையினால் வில்லையும் தேரையும் இழக்கச் செய்துவிட்டு அவனை வீழ்த்தலாம், மாறாக வேண்டுமென்றே வில்லை. கீழே வைத்து விட்டோ அல்லது வேண்டுமென்றே தேரிலிருந்து இறங்கினாலோ தாக்கக்கூடாது. இது யுத்த தர்மம். அப்படியும் தாக்கினால் அது அதர்மம். தாக்குகிறவன் திறமையின்மையை வெளிப்படுத்தும் அதர்மம். அந்த யுத்த தர்மத்தை நினைவூட்டுவோம்

    “கிருஷ்ணா, உனக்கும் எனக்குமிடையே ஒன்றுமில்லை. நீ என் பகைவன் அல்ல. நான் உன் பகைவன் அல்ல. நான் யாரென்று உனக்கு நன்றாய்த் தெரியும், யுத்த பூமியில் உறவுகள் கூறி சமாதானம் கேட்க முடியாது. என்னைப் பெற்றவள் யாரென்றும் உனக்குத் தெரியும். அவள் கேட்டுக்கொண்ட வரம் என்னவென்றும் எல்லாம் அறிந்தவனாக உனக்குத் தெரியும். இது சார்ந்திருக்கும் சார்புகளால் வந்த பகை இது. ஆனால் எல்லோருக்கும் பொதுவாய் ஒன்று உண்டு. யுத்த தர்மம்.அதைமறந்து விடாதே” என்றான் கர்ணன்.

    அவன் மனதில் மரண திகிலின் கருமேகம் சூழ்ந்து வந்தது. சிறிது சிறிதாக நெஞ்சை அடைப்பது போல் அதன் ஆதிக்கம் பெருகியது. அவன் குரல் உடைந்தது. கம்மியது. விம்மல் பிறந்தது.

    “எதைப் பற்றி யார் பேசுவது கர்ணா? “ இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு கிருஷ்ணன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் காலதேவனின் தீர்ப்புத் தொனி ஒலித்தது.

    அப்போது வானின் கருமேகம் சிறிது சிறிதாகக் கலைந்து சென்றது. அர்ஜுனனின் குறிக்குத் தப்பாத அம்பு கர்ணனின் மார்போடு உறவு கொள்ளத் துடிப்பது போல் வெளிவாங்கிய வெளிச்சத்தில் மின்னியது.

    “கிருஷ்ணா..கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சினான்.

    “யுத்தத்தின் தர்மம் ஒன்றே ஒன்றுதான். ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பவன் தான் இங்கே தலைவன். மற்றவன் கீழ்ப்பட்டவன்” கெஞ்சுகிற கர்ணன்..

    கிருஷ்ணனுக்குப் பரிதாபம் வரவில்லை.

    “அடடே! எங்கே போயிற்று உன் வீரம்?” மார்புக் கவசங்களையும், காது குண்டலங்களையும் கழற்றிக் கொடுத்த உன் தான வீரம் எதற்கு உயிர்ப்பிச்சை கேட்க வேண்டும்? தீரமாக மரணத்தைச் சந்தி. தீமையின் சகதிகளில், தீய உறவுகளின் சேற்றில் நீ ஆரம்பம் முதலே புதையுண்டவன். தேரோட்டியின் மகனாக இருக்க விதிக்கப்பட்டவன். அதிலிருந்து விடுபட்டு.. உன் பொறாமையிலிருந்து, செருக்கிலிருந்து விடுபடு” என்று எத்தனை பேர் உனக்கு புத்தி சொன்னார்கள். அந்தத் தீமைகளின் உறுதிப் பிடிகளில் இருந்து விடுபடமுடியாத உனக்கு உயிர் வாழ ஒரு கணம் வழங்குவது கூட அதர்மம் தான்”

    “கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சுகிற குரலில் வேண்டினான்.

    “பாஞ்சாலியைச் சூதாடிகளின் அவைக்கு நிர்வாணமாக இழுத்துவரச் சொல்லி ஏவியவனை நீ தடுக்கவில்லை. ஊக்கப்படுத்தினாய். கர்ணா.. நீ தேரோட்டி மகன் என்று அவளது சுயம்வரத்திலே இகழ்ந்தவள் திரௌபதி. அவள் மீது உனக்கு வஞ்சம். அந்த வஞ்சத்தை மறக்காமல் துரியோதனன் போட்ட ராஜ்ஜிய பிச்சைக்கு யாசகம் போல் ஏற்ற சோற்றுக் கடன் தீர்க்கப் போராட வந்திருக்கிறாய். இப்போது தர்மம் பேசுகிறாய். எது தர்மம் சொல்? கர்ணா”

    கர்ணன் முகம் இருண்டது. பிறவியே மீண்டும் ஈனப்பட்டது போல் கிருஷ்ணனின் சொற்கள் அம்புகளாக மாறி அவன் இதயத்தைத் துளைத்தன.

    “அந்தண வேடமிட்டுப் பரசுராமரிடம் பொய் சொல்லி அஸ்திர வித்தை கற்று சாபத்திற்கு ஆளானாயே, அது தர்மமா? சக்கர வியூகத்திலிருந்து மீளத் தெரியாத பதினாறு வயது பாலகன் அபிமன்யுவைச் சுற்றி வளைத்துக் கைவேறு கால் வேறாக வெட்டிச் சிதைத்தீர்களே அது தர்மமா”

    கிருஷ்ணன் நீதிதேவன் போல் கம்பீரக் குரலில் திருப்பித் திருப்பி நினைவூட்டினான்.

    “கொல்”

    அர்ஜுனனின் அம்பு கர்ணனின் மார்பைத் தொடும் முன் தாய் குந்திக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவில் எழுந்தது.

    அம்பு கர்ணன் மார்பைத் துளைத்தது.

    “அம்மா “ என்று அவன் அலறி வீழ்ந்தான்.

    எங்கோ தூரத்தில் இருந்த குந்தியின் வயோதிக மார்பில் பால் சுரந்தது.

    கர்ணன் வீழ்ந்தான் என்று குருக்ஷேத்திரத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

    “மகனே”; அலறியபடி எல்லோரையும் விலக்கிக் கொண்டு குந்தி ஓடி வந்தாள்.

    Share
  • என் இனிய காதலே…!

    என் இனிய காதலே…!

    – சு.திரிவேணி, கோயம்புத்தூர்

    என் ஒவ்வொரு நாளும்
    உனக்காய்த்தான் விடிகின்றன.
    எப்போதும் என்றில்லாவிட்டாலும்
    எப்போதாவது
    நீதான் என் நிரந்தர
    வாழ்க்கை ஆகிறாய்.
    வசந்தத்தின் பதிவுகளை
    எனக்குள்
    வார்க்கக் காத்திருக்கிறாய்.

    அடிக்கடி உன்
    ஞாபகம் வந்தாலும்
    கடமை மறந்த காதலி நான்!
    உன்னைக் காண என் சார்பில்
    ஓரிரு முயற்சிகள்தான்!
    என் பார்வை வரத்திற்காய்த்தான்
    உன் தவங்கள் எல்லாம்!
    நானோ –
    சூழலைக் காரணம் காட்டி
    உன்னை துடிக்க வைத்துப் போகிறேன்.

    எங்கேனும் நான்
    பார்க்க வேண்டுமே என
    அங்கங்கே நிகழும்
    உன் அணிவகுப்புகள்.
    ஊடலும் கூடலுமாய்
    நம் உல்லாச வாழ்க்கை
    மூன்றாண்டுகளின் மயக்கத்தில்
    முடிந்ததென
    வண்டியில் ஏற்றி உன்னை

    வழிஅனுப்பினால்
    மாற இருந்த என் பாதையின்
    மறுமுனையில் நீ நிற்கிறாய்!

    உனக்கும் எனக்குமான
    கணக்கில் இன்னமும்
    பாக்கி இருக்கிறதா?
    உன்னை மணக்கச் செய்யும்
    மலர்களின் மத்தியில்
    இந்தக் காகிதப்பூவுக்கும்
    கருணை உண்டா?

    உன் அருகில் இருக்கையிலேயே
    ஆளை மாற்றத் துடித்தவள் நான்!
    எந்த நம்பிக்கையில்
    என்னை(யும்) நேசிக்கிறாய்,
    தமிழே?
    என் இனிய மொழியே….
    எதற்காய் இந்த
    எதிர்பார்ப்பில்லாக் காதல்?

    – இப்படிக்கு,
    காதல் வளர்க்கும் காதலி.

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)

    சேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    —————————————————-

    இயற்கை  நிகழ்ச்சிகளில் கதிரவன்  மறைதலும் , இரவின்  தோற்றமும், நிலவு வெளிப்படுதலும்   இலக்கியங்களில்  தனித்த இடம் பெறும் .  கதிரவன் மறைவுக்குக்  காரணம் கற்பித்து  உருவகமும்  தற்குறிப்பேற்றமும்  கலந்த பாடலை   அடுத்து, அதனோடு  ஒப்பிடும்வகையில் வானின் இருள் நீண்டு நெடுநேரம் விளங்கியதைக்  கவிஞர் பாடுகிறார்.

    இத்தகைய பாடல்களில் தாம் விரும்பும் தத்துவங்களை  எடுத்துக்கூறி விளக்குவது  கவிஞர்களின்  உத்தியாகும். இராமாயணத்தில் வஞ்சனை அரக்கர்தம் வடிவைப்   போலவும், அவர்களின் நெஞ்சைப்போலவும் நீலவானம்  இருண்டது என்பதைக்கம்பர்,

    நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர்

    அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்

    வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின்

    நெஞ்சினின் இருண்டது நீல வானமே

    என்று பாடுகிறார்.  மேலும் கூனியின்  உரையாகிய  நஞ்சு பாய்ந்தமையால் கலங்கிய   கைகேயி தன்  சிந்தை போல,   சிவந்த  வானம்  இருண்டது என்பதை,

    அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்

    நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்

    மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய

    சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே

    என்றும் பாடுகிறார். அடுத்து  இராமனின்  கார்வண்ண  மேனியைப் பார்த்த பெண்களின்  கண்கள் கருத்தனவோ?, இப்பெண்களின்  மைதீட்டிய  கண்களின் பார்வையால்  இராமன் மேனி கருத்ததோ? என்பதைக்   கம்பர்,

    பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம்

    செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம்

    மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம்

    அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால்

    என்றும் பாடுகிறார்.  போர்க்களத்தில்  இரவில்  இராமனைக் காண வந்த வீடணன்,  இராமன்  தனியே இரவில் நிற்பதைக்  கண்ட கதிரவன் வருந்தி மேலை மலையில் புகுந்தான்  என்பதைக் கம்பர் ,

    மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து

    நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும்

    சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி

    இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான்

    என்றும் , பின்னர் அவ்வானம்  வேதம் நான்கும்  இல்லை என்றும், மனுமுதல் சாத்திரங்கள்  இல்லை  என்றும், வேள்விகள் உண்மை   இல்லை என்றும், தெய்வத்தன்மை  வாய்ந்த வேதியர்  தம்   ஈடுபாடும் இல்லை  என்றும் கூறி, தாமரைக் கையை   உடைய    ஆதிமுதல்வனாகிய  திருமாலைப்  பரம்பொருள் என்று வணங்காத  பேதையர்   உள்ளம் போல   இருண்டது  என்பதைக் கம்பர் ,

    வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும்

    வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே

    ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா

    ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

    என்றும்  பாடுகிறார். இவ்வகையில் சேக்கிழார்  பெருந்தகை, ‘’பஞ்சு போன்ற மெல்லிய பாதம் கொண்ட வேசையர் உள்ளமும், வஞ்சனை உடைய மக்களின்  கொடிய  பாவமும், சிவப்பரம்பொருளின்  ஐந்தெழுத்தின்  தியான  முறைகளை   அறியாதோரின்  நெஞ்சும் போல , எல்லாத்   திசையிலும்   நீண்ட   வானம்       இருண்டது’’  எனப்  பாடுகிறார். அந்தப் பாடலை இங்கே  படித்து  உணர்வோம்.

    ‘’பஞ்சின்   மெல்அடிப்  பாவையர்   உள்ளமும் ,

    வஞ்ச   மாக்கள்தம்   வல்வினை   யும்அரன்

    அஞ்சு  எழுத்தும்  உணரா   அறிவிலோர்

    நெஞ்சும்   என்ன   இருண்டது   நீலவான்’’

    இப்பாடலில் இருமனப்  பெண்டிராகிய பாவையர்தம்  தன்னலம் மிக்க உள்ளம் இருண்டே  விளங்கும்  என்ற தனி மனிதத்  தீமையும்,

    வஞ்சனை செய்து வாழுவோர் செய்யும் பாவங்கள் என்னும் சமுதாயத் தீமையும்,

    (வஞ்ச மாக்கள்தம் வல்வினையும் – வல்வினைமாக்கள் வஞ்சமும் என்று உம்மையைப் பிரித்துக் கூட்டி உரைத்தலுமாம். முன் வினையின் பயனாகி வரும் வஞ்சம் மேன்மேலும் வினையை விளைத்தலால் வஞ்ச மாக்கள் வல்வினை என்றார். “வினையின் வந்தது வினைக்கு விளையாது“ என்றதும் காண்க. “வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடியார்கள்“ என்று பின்னர்க் கூறுவதுங் காண்க. வஞ்சமுடைமையால் மக்கள் மாக்கள் எனப்பெற்றனர். ஐயறிவுடைய மிருகங்கள் போன்றார் என்பது குறிப்பு. விலக்கலாகாமையின் வல்வினை என்றார் என்ற விளக்கமும் காண்க).

    சிவபெருமானின்  மந்திரமாகிய  ஐந்தெழுத்தின்  பெருமையையும், அவற்றை  உச்சரிக்கும்  வைகரி, பைசந்தி, சூக்குமை ஆகிய மூவகைப்  பாராயண முறைகளை அறிந்து   அவற்றை  ஓதாதவரின் உள்ளம் அறியாமை  உடையது   என்னும்  ஆன்மிகத்  தீமையும்

    (அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அரன் -ஆன்மாக்களுடைய பாசங்களை அரிப்பவன். அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அஞ்செழுத்தை உணரப் பெறாத மடவோர் என்க. “மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்று வல் லாரையுஞ் சாரலே“ என்று இமயன்றூதர்க்கு அப்பர் பெருமான் இட்ட ஆணையும் காண்க. “விதி எண்ணு மஞ்செழுத்தே“ என்றபடி எழுத்து அறிவினுள்ளே உணரப் பெறுவ தொன்றாதலின் உணரா அறிவிலோர் என்றார்.

    இத்திருவைந்தெழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் – பொருளும் – உள்ளீடும் -நிற்குமுறை-ஓதுமுறைமுதலியனவும்உண்டு.இதனை

    “எவ்வெவ்கோட்படுபொருளும்“ என்ற குரு தோத்திரத்திலே குறித்தருளினர் எமது மாதவச்சிவஞான முனிவர் அஞ்செழுத்தின் வகையும் பெருமைகளும் நூல்களிற்பேசப்பெறுவன. சைவாசாரியார்பாற் கேட்கத்தக்கன. “நாயோட்டு மந்திரம்“என்று அதன் பெயர்தானும் சொல்லலாகாது என அறிவிப்பர் திருமூலதேவர்.மூவர் முதலிகள் கருணையினாற் பஞ்சாக்கரப் பதிகங்களை அருளினர். மணிவாசகப் பெருமானார் “நமச்சிவாய வாழ்க“, “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்“ முதலிய திருவாசகங்களில் பஞ்சாக்கரங்களை அருளினர் என்பர்.)

    ஆகிய  மூன்றும்  இருளடைந்த   உள்ளத்தைக்  காட்டுவன, என்று சேக்கிழார் பாடுகிறார்.

    ‘’நமச்சிவாய  வாழ்க’’  என்று தொடக்கத்திலும்,  ‘’யானேயோ  தவம் செய்தேன் , சிவாய நம   எனப்பெற்றேன் ‘’ என்று  இடையிலும்

    இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
    நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
    அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
    பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே

    ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
    ஆமே பரங்கள் அறியா இடம் என்ப
    ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
    ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்
    சிவசிவ என்றிட தீவினை மாளும்
    சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
    சிவசிவ என்ன சிவகதி தானே

    நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
    சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
    பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
    அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ

    சிவாயநம என சித்தம் ஒருக்கி
    அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
    சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
    அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே

    மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
    சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர்
    நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு
    வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே

    ஆயும் சிவாயநம மசிவாயந
    ஆயும் நமசிவாய யநமசிவா
    ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
    ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே

    என்றெல்லாம்  பல வகைகளிலும்  பக்குவத்திற்கேற்ப அஞ்செழுத்து  ஓதுதல் சிவஞானியர்  வழக்கங்களை   சேக்கிழார் சுவாமிகள்  உரைத்தருளுகின்றார். அகவிளக்காகி இருள் கெடுப்பது ஐந்தெழுத்தாதலின் அது ஏற்றப்பெறாத நெஞ்சு இருண்டிருக்கும் என்பது குறிப்பு. இவற்றை  அறிந்து, உணர்ந்து கொண்டோர்  வாழ்க்கை ஒளி பெறும். என்பதை இப்பாடல்  நயமாக  விளக்குகிறது.

    (தொடரும்…

    Share
  • படக்கவிதைப் போட்டி – 229

    படக்கவிதைப் போட்டி – 229

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சத்யா எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (27.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 228-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 228-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    Mr. Ayman bin Mubarak-இன் காமிரா வண்ணத்தில் உருவான இவ் ஒளிப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 228க்கு வழங்கியுள்ளார் திருமிகு. சாந்தி மாரியப்பன். ஒளிப்பட வித்தகர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

    வாரிதியின் ஓரமாய்ச் சவாரி செய்யும் இந்தக் குதிரைச் சாரதியின் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்….போர்க்களத்தில் வாகை சூடித் திரும்பும் வெற்றிவீரன்போல!

    இவ்வண்ணப்படம் பல எண்ண அலைகளை நம் கவிஞர்கள் மனத்தில் உருவாக்கியிருக்கும் என நினைக்கிறேன். அவ்வெண்ணங்களைக் குழைத்து அவர்கள் கட்டித்தரும் பா மாளிகையை நாமும் இரசித்துவருவோம் களிப்போடு!

    *****

    ”உப்புக் காற்றில் ஊர்வலம் வரும் உப்பரிகையின் தேசிங்கு ராசா இவன்; ஊர்சுற்றிப் பார்க்கவரும் பயணிகளுக்கோ பரியேற்றம் காட்டும் பாமர சாரதி” என்று சிறுவனின் சீர்த்தி பேசுகின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.

    பரந்த நீலக்கடலின் ஓரத்தில்
    பாயும் புரவியின் வேகத்தில்
    விரிந்த கரைமணல் திடலில்
    விரைந்தோடுதே வாழ்வின் சாகசம்!

    கடலாட வருவோரை, காலார நடப்போரைக்
    கவர்ந்திடவே காற்றாகப் பறந்திடும்
    கரையோரக் குதிரைகள் – வாடிக்கை
    காணாமல் போனாலும் காட்டுமே வேடிக்கை!

    குட்டிக் குழந்தை முதல் குடுகுடு கிழவர் வரை
    குதிரையில் ஏற்றி குதூகலமூட்டும் வித்தைக்காரன்
    கூட்டம்தேடி ஓடும் நேரத்தில் வாழ்வை வெறுத்து
    கடலில் மாய வருவோர் காக்கும் காவல் வீரன்!

    உப்புக் காற்றில் ஊர்வலம் வரும்
    உப்பரிகையின் தேசிங்கு ராசா – இவன்
    ஊர்சுற்றிப் பார்க்க வரும் பயணிகளுக்கு
    உற்சாகமாகப் பரியேற்றம் காட்டும் பாமர சாரதி!

    வரும் போகும் விரிகடல் அலை போலே
    வந்து போகும் வாடிக்கையர் தரும் வருவாயில்
    வயிறு வளர்க்கும் வாழ்கைக்குத் தான் வறுமை
    வற்றாத மகிழ்ச்சிதான் மனதுக்குள் என்றும்!

    தள்ளிப்போடு துன்பத்தின் வலியைத்
    துள்ளியோடு வெள்ளி மீனாகப் புது நம்பிக்கை விளையும்
    தூங்காத இரவுகள் இனி நீங்கிவிடும்
    நீங்காத துயரங்கள் இனி தூர விலகிவிடும்!

    *****

    ”அலையில் மாட்டிடுவோர்க்கும் ஏனையோர்க்கும் உதவிடும் இப்புரவி வீரனின் அரும்பணி புவியுளோர் மனத்தில் நிலைத்திடும் என்றும்” என நற்சொல் நவில்கின்றார் திரு.செண்பக ஜெகதீசன்.

    உதவிப் பவனி…

    அலைகள் மோதும் கடற்கரையில்
    அழகுப் புரவி மீதேறி
    சிலைவரும் அம்பாய்ப் பாய்பவரின்
    சிறப்புப் பணியைப் போற்றுகின்றேன்,
    அலையில் மாட்டிடும் மனிதர்முதல்
    அனைத்து பேர்க்கும் உதவுகின்றார்,
    நிலையா உலகில் இவர்பணிதான்
    நிலைத்து நிற்கும் மனங்களிலே…!

    பரியேறிவரும் சிறுவனைப் பாராட்டிப் பாக்கள் புனைந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    குதிரைச் சவாரி!

    தடைகள் அனைத்தும் தவிர்த்துத்
    தளைகள் உடைத்து எறிந்து
    சிறுமை அனைத்தும் களைந்து
    சிறகுகள் விரித்திட வேண்டும்!

    குறுநகை புரிந்து பின்னால்
    குயுக்திகள் செய்யும் வீணர்
    குறுக்கீடு தாண்டிப் பாய்ந்து
    குவலயம் வென்றிட வேண்டும்!

    சிறுமைகள் செய்திட விழையும்
    குறுமதி செயல்கள் தவிர்த்து
    நேர்பட நிமிர்ந்து செல்லும்
    நெஞ்சுரம் பெற்றிட வேண்டும்!

    மயக்கிடும் வீண்செயல்தனை மறைக்கும்
    கண்ணியக் கடிவாளம் கொண்டு
    கடமைக் குதிரை ஏறி – துன்பக்
    கடலினைத் தாண்டிட வேண்டும்!

    எதிர்ப்புகள் எத்தனை வந்தும்
    உயிர்ப்புடன் அவற்றை வென்று
    பொறுப்புடன் செயலது புரியும்
    மனிதரைப் போற்றிட வேண்டும்!

    கண்ணியக் கடிவாளம் பிடித்து, கடமைக் குதிரையேறி, வாழ்வில் குறுக்கிடும் துன்பக் கடலினைக் கடந்திட வழிசொல்லும் பொருள்பொதிந்த இக் கவிதையை யாத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.

     

     

     

    Share