-மேகலா இராமமூர்த்தி

உள்ளங்கவர் கிள்ளைகளை ஒளிப்படமெடுத்து வந்திருப்பவர் திரு. சத்யா. படக்கவிதைப் போட்டி 229க்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

மரமேடையில் அருகமர்ந்து அழகுக்கோலம் காட்டும் பைங்கிளிகாள்! பேசும் ஆற்றல் கைவரப்பெற்ற அரிய பறவைகள் அல்லவோ நீங்கள்! செங்கனி வாய்திறந்து சந்தத் தமிழில் ஒரு சிந்துபாடுங்களேன்! நாங்களும் வந்து கேட்கிறோம்!

பட்டுக்கிளிகளைப் படத்தில் பார்க்கையில் பாட்டெழுதக் கை பரபரக்கின்றதா பாவலர்களே? எழுதுகோல் எடுங்கள்! பழுதறக் கவிமாலை தொடுங்கள்!

*****

”கிள்ளையின் செம்பவள மூக்கழகில் செயலிழந்தேன்; செழுமஞ்சள் கழுத்தழகில் மனமிழந்தேன்” என்று வியக்கும் திரு. யாழ். நிலா. பாஸ்கரன், அப்பறவைகளைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகளை அறிவுறுத்தி, ”மூக்காலே சீட்டெடுக்க வைக்கும் மூடரிடம் சிக்காது பறந்திடுவீர்!” என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

கதிர் விழித்த இளங்காலை வேளையிலே
கதிர் விளைந்த சோளக்கொல்லை எல்லையிலே
கதிர் கொய்ய வந்த கான் கிளிக்கூட்டத்தில் என்விழிக்
கதிர் கண்டுவியந்த கண்கொள்ளாக் காட்சியிது!

பச்சைப் பசுங்கிளிகள், பறந்து திரியும்
பசுஞ்சோலைப் பூங்கிளிகள் இரண்டும்
இச்சை கொண்டு இணைந்திருக்கும் இன்பக் காட்சியிது
இணையில்லா இயற்கையின் ஆட்சி இது!

செம்பவள மூக்கழகில் செயலிழந்தேன்
செழும் மஞ்சள் கழுத்தழகில் மனமிழந்தேன்
சேர்ந்த இரு விழியின் இணையழகில்
சொந்த நினைவினை நானிழந்தேன்!

விழித்தெழுந்தேன் விளைந்த கற்பனை
மொழிவிடுத்து வியனுலகில் நடைமுறையில்
மெலிந்த பல்லுயிர்களுக்கு விளையும் கேடெண்ணி
அழிந்த அவற்றின் கூடெண்ணி ஐயுற்றேன்!

வஞ்சனையாய் வலைவிரித்துச் சிறைப்பிடித்து
வாயினிலே சூடுவைத்து வாலறுத்து
வண்ணப் பசுஞ்சிறகை வன்முறையாய் வெட்டிவிடும்
வஞ்சகர் கையிலினிச் சிக்காது விழிப்புடனே பறந்திடுவீர்!

முக்காலம் அறிந்திடவும் முயற்சிக்கா வாழ்வின்
முழுப்பயனும் தெரிந்திடவும் மூளையில்லா
மூடர்சிலர் இக்காலத்தலும் உங்களைக் கூண்டிலிட்டு
மூக்காலே சீட்டெடுக்க முடுக்கிடுவார் சிக்காதீர்!

மாமதுரை அரசாளும் அங்கயற்கண்ணி
மங்கை மீனாட்சி திருத்தோளில் அமர்ந்திருக்கும்
மங்களக் கிளிகள் உங்கள் அருளாலே மாநிலத்தில்
மங்காமல் பசுஞ்சூழல் தழைத்தோங்கட்டும்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

அந்த வாழ்க்கை…!

கிளியே கிளியே ஆசைக் கிளியே
கேளடி சேதி கருத்தில் கொள்ள,
எளிதாய் மனிதனை நம்பி விடாதே
ஏய்த்தே உன்னைக் கூண்டி லடைப்பான்,
வெளியே விடுவான் சீட்டை எடுக்க
வெற்றுரை பேசிக் காசு பறிப்பான்,
அளிப்பான் ஒருநெல் அடைப்பான் மீண்டும்
அடிமை வாழ்க்கை வேண்டாம் பறந்திடு…!

”உன்னை ஏய்த்துப் பிழைக்கும் மாந்தன் அளிக்கும் ஒற்றை நெல்லுக்காய் அவனிடம் அடிமையாய்ச் சிக்கிடாதே; விரைந்து பறந்திடு; விடுதலை பெற்றிடு!” என்று கிள்ளைக்குச் சுதந்தர உணர்வூட்டும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *