படக்கவிதைப் போட்டி – 230
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முகமது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
மனக்கண்ணாடி
வீண் படாடோபம் கொண்டு
வெற்று வார்த்தைப் பேசி
நல்லவனாய்
வல்லவனாய்
நாலும் தெரிந்த துயவனாய்
நித்தம் நூறு வேடம் கொண்டு
சுயநலப் பச்சோந்தியாய்
பிணந்தின்னும் சாத்திரம் சொல்லி
தன்னுருவே தனை வெறுக்க
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசி
வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர் வாழ்க்கை எனக்கூறி
உழன்று நாளும் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா
என் மனக்கண்ணாடி
அரிதாரம் தனை நீக்கி
தன்மானம் கொண்டு
சுயபிம்பம் எதுவென்று
தெளியும் நாள் எந்நாளோ?
ஓட்டை க் கீற்றின் ஓதுக்கின் மறைவில்
ஒருசாண் வயிற்றுக் கஞ்சி வார்க்க
ஒய்யாரமாய் ஒப்பனை செய்கிறான்
ஓயாது உழைக்கும் ஓர் குப்பத்து ராசா
அரியசனம் இல்லாமலே, அரண்மனை தான் செல்லாமலே
அரிதாரம் பூசிக்கிட்ட அவன்தானே இந்நாட்டு ராசா
அரங்கேற்றம் ஆகின்ற அரங்கத்தில் எந்நாளுமே
அரசாளும் மகராசன் இவன் வந்தாலே கரகோசந்தான்
தெருவோரம் தான் இவன் அரசாங்கம்
இரவானால் தான் நடந்தேறும் இவன் அதிகாரம்
தெரியாத கதையாடல் இங்கேது திரைவிலகி ஒளி
தெரிந்தால் இவனாலே உருவாகும் புதுஉலகம்
ஆயிரம் வழிகள் அவனுக்கு எது அடைத்தாலும் திறந்திடுவான்
ஆயிரம் வலிகள் அவனுள்ளே ஆனாலும் சிரித்திருப்பான்
ஆயிரம் விழிகள் அவன்மீது அதனாலே மகிழ்ந்திருப்பான்
ஆயிரம் வாழ்த்துகள் அவைதரும் ஆனந்தவாழ்கை அவனுக்கு
ஏடு எடுத்து படித்ததில் எழுத்தாணி பிடித்ததில்லை ஆனாலும்
போடும் வேடம் எதிலும் பொய்யாய் நடித்ததில்லை
ஆடும் கூத்தில் எங்கும் மனம் தடுமாறவிட்டதில்லை
ஓடும் நதிபோல ஓயாமலே தாவும் இவன் ஆட்டம்
முடிசூடா மன்னன் இவன் இப்போது முடங்கிக் கிடக்கின்றான்
முன் எப்பேதும் இல்லாமல் இப்பேது மூழ்கி தவிக்கின்றான்
முகச்சாயம் பூசாமல் பல மாதம் முடிந்து போனது- இனி
முடியட்டும் பகல் முளைக்கட்டும் இரவு விடியட்டும் இவன் வாழ்வு
யாழ். நிலா. பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
noyyal.blogspot.in
அரிதாரம்…
பாரினில் நாம்
பார்க்கும் முகங்களில் பல
பொய்ப்பூச்சில் மிளிரும்
போலி முகங்கள்..
உண்மை முகங்களைக்
காட்டுவதில்லை ஒருவரும்,
முகம் மூடிச் செல்லுமுன்னே
மனிதன் பல
முகமூடிகளை மாட்டிக்கொள்கிறான்..
அரங்கத்தில் நடித்திடவும்
ஆலய வேண்டுதல்களிலும்
அரிதாரம் பூசுபவர்களை
அடையாளம் கண்டுகொள்ளலாம்
எளிதாக..
ஒப்பனையே இல்லாமல்
வேடம் போடும்
மனிதனின் நாடகம்
எப்போது முடியும்…!
செண்பக ஜெகதீசன்…
அழகு
பொய்யாய் போகும் மெய்க்கு
போராடி செய்கிறோம்
அலங்காரம் தினம்
அழகாய் தோன்றிடவே
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
என்று சொன்னதாலோ
போராடி தினம்
அலங்காரம் செய்து
உள்ளிருக்கும் மிருகத்திற்கு
முகமூடி போட்டு
புன்னகை பூட்டிய
பொய்முகம் தேவையில்லை
சிந்தனைகள் சீராய் இருந்தால்
அகத்தின் அழகு தானாய் மெய்ப்படும்
அசுரனாய் வேடமிட்டு
மேடை ஏறி
வர்ணஜாலம் காட்டிடவே
வர்ணம் பூசி
வந்து நின்றேன்
கண்ணாடியின் முன்னாடி
தொண்டை வறண்டு
வாய்கிழிய வசனம் பேசி
அழிந்து போகும்
அசுரனாய் நான்
சூரஸம்ஹரம் நாடகத்தில்
பாராட்ட யாருமில்லை
பார்த்து ரசிக்க கூட்டமில்லை
அழிந்து போகும் இக்கலையால்
நஷ்டம் வந்து
நலிந்து போனேன்
என்னுள் இருக்கும்
பசியெனும் மிருகம்தனை
போக்கிடவே
வந்த இந்த வாய்ப்பில்
அசுரனாய் முகமூடி அணிந்து
மேடை ஏறி அழிந்து போனேன்
நிலை மாறும் இவ்வுலகில்
என் நிலை மாறும்
என்ற நம்பிக்கையில்
கரகோஷம் மட்டும்
கலையை வளர்க்க உதவாது
கலையை அறிந்த
உயிரோட்டமாய் வாழும்
அந்த உயிர்களை
காத்து நிற்க
உதவிக்கரம் நீட்டுவோம்
இப்புவியெங்கும்
நம் கலை அழகை
போற்றிட செய்வோம்