திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

இனி, நிலவு வெளிப்படுதல்  என்னும்  இலக்கிய உத்தி,   மிகச்சிறந்த  காப்பியங்களில் பல்வேறு  வகைப்பட்ட   சுவைகளுடன் அமைந்த அழகைக் காண்போம்.

கம்பர், கன்னிமாடத்தின்  மேலிருந்து  இராமனைக்  கண்ட சீதை, அவன்பால்  காதல் கொண்டு  பஞ்சணையில்  சாய்ந்தாள்.  அப்போது வெண்ணிலவு வானில்  தோன்றியது.  அது முன்பு பாற்கடலைக் கடைந்தபோது அங்கிருந்த அமுதக்கலசம் பாற்கடலின் துளிகள் விண்மீன்களாய்   விளங்க,  வானில்    தோன்றியதுபோல் கடலின்மேல்  வெண்திங்கள் தோன்றியது என்பதை,

பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க
இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம்
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள்

என்றுபாடுகிறார்.   இடையிடையே  புள்ளிகளை இட்டது போல் விண்மீன்கள் தோன்றும் இருளின்  குழம்பை , நிலவின்  கதிர்கள் நக்கி உண்டதுபோல எங்கும்   இருள்  தேய, கீழ்த்திசையில்  தோன்றும் வெள்ளிப்  பூரண  கும்பத்தில் வைத்த இளம்பாளைகள் போல நிலவின் கதிர்கள்   விரிந்தன என்பதைக்  கம்பர்,

புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால்

என்று பாடுகிறார். அந்த வானின்   இருள்   முழுவதையும் நிலவு   தன்  கைகளால்  வாரி  உண்டு  எங்கும்பரவியது.  அது,   சடையப்ப வள்ளலின் ஒளி  மிக்க புகழ் எங்கும்  பரவியது போல் இருந்தது  என்பதைக் கம்பர்,

வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர்
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால்

என்று பாடுகிறார்.  மேலும்  கடலின் நடுவில் முளைத்து எழுந்த  நிலவுஎன்னும் ஓவியன், தன்   வெள்ளிய சுதை மட்டைகளால் பூசி,  அண்டத்தின்  பழையதான மங்கிய தோற்றத்தை நீக்கிப் புதுமைப்  பொலிவினை உருவாக்கியது என்பதை,

நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன்
மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால்

என்று பாடுகிறார். பின்னர் யுத்தகாண்டத்தில் வீடணனுக்கு   அடைக்கலம்  கொடுத்த இராமபிரான்  சீதையைத்  தேடி  அடைவது  குறித்து  எண்ணிய  போது, உலகம் என்ற  வலைஞன் ,   பெண்ணின் உருவுடைய  சீதை   கிட்டினால் பிடித்துத்  தருவேன் என்று நிலவு  என்ற  வெள்ளைநிற வலையை வீசியது போல  நிலவொளி  பரவியதை,

கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்

என்று பாடுகிறார். இவ்வாறே சேக்கிழார் சுவாமிகளும், இறைவனால்  தோற்றுவிக்கப்  பெற்ற  உயிர்களுக்குத் தூய்மையையும், பிறர்  போற்றும் இன்பத்தையும், குளிர்ச்சியையும்  தந்து,  வானெங்கும்   பரவிய   வெண்ணீற்றின்  உயர்ந்த  ஒளிபோல்      நீண்ட   நிலவின்   ஒளி  பரவியது   என்பதை ,

தோற்று  மன்னுயிர்  கட்கெலாந்   தூய்மையே
சாற்று   மின்பமும்  தண்மையும்  தந்துபோய்
ஆற்ற   அண்டமெ   லாம்பரந்  தண்ணல்வெண்
ணீற்றின்  பேரொளி  போன்றது  நீணிலா

என்று   பாடுகிறார்.

கம்பர் சீதை  திருமணத்துக்கு  எழுந்தருளும்  இராமனுக்குப் பூரண கும்பம்அளிப்பது  போலும் என்றும் , சீதை இராமன்திருமண வாழ்க்கை அமுதம்போல இனிமை  தரும்  என்றும் , சடையன் புகழ் போல்  இருவர் புகழும் பரவும் என்றும், சீதையைத்  தேடும்  வலைஞனாய்  விளங்கும்  என்றும்  அவர் கருத்தின்  படிக்  கூறினார்.

சேக்கிழார் சுவாமிகள்  தம்  சைவத்   திருவுள்ளத்துக்கு  ஏற்ப , நிலவொளி  திருநீற்றை  நினைவூட்டியது.   பார்க்கும் இடமெல்லாம்  பர வெளியாகத் தோன்றும்  புலவரின்  சிவக்கண்ணுக்கு  நிலவொளி  திருநீற்று  ஒளியாகக்  காட்சி தருகிறது.

நிலாப்போலவே திருநீறும் தோற்றம் பெறும் உயிர்களுக்கெல்லாம்தூய்மையும் இன்பமும் தண்மையும் தருவதாம்; எல்லா அண்டங்களிலும்  தனது ஆணை பரப்புவதுமாம். நிலாவானது தோற்றம் பெறும் உயிர்களின்உடம்புக்கு அளிக்கும் இயல்பைத் திரு நீறானது உயிர்களுக்கு அளிப்பதாம்.  நீறு – உயிர்க்குத் தூய்மை தருதல்,   கட்டிய பாசத்தினின்றும் நீக்குதலாம்.  இன்பம் தருதலாவது பிறப்பிறப்புக்களால் வரும் துன்பம் நீக்கிப் பேரின்பம் தருதல்.   தண்மைதருதலாவது “சுழலார் துயர்வெயில்   சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும் நிழலாவன“ என்ற அப்பர் பெருமானின் திருவாக்கின்படி,  பாச வெப்பத்தினின்றும் நீக்கிச் சிவனடித் தண்ணிழலிற் சேர்த்தலாகும்.  இதுவேயின்பம், பிறவெல்லாம் துன்பம் என நூல்களிற் பேசப்பெறும். நீறு சத்தியின் இயல்புடையதாதலின் உயிர்களுக்குத் தூய்மை முதலியன தரும் என்பர். “பரா  (பராசக்தி)வண்ணமாவது நீறு“ என்பது தமிழ்மறை.

நிலா, தோற்றம் பெறும் உடம்புகளுக்குத்தூய்மை – இன்பம் – தண்மை தந்து வளர்க்குமென்ப. சூரியன் உயிர் தங்குவதற்குரிய வெப்பம் கொடுப்பன். சந்திரன் உடம்பு வளர்ச்சிக்கு உரிய தண்மையும் பிறவும் தருவன் என்பது உலகநூல்  துணிபு!   சைவர்க்கு விதித்த மணச் சடங்குகளில் முளைசாத்துதல்  ஆகிய சடங்கில்   சந்திரனுக்குரிய பகுதிகளே சிவாகமங்களிற் கூறப்படுதலும்காண்க.

திருநீறு  தூய்மை  தருவதையும், இன்பம் தருவதையும், குளிர்ச்சி  தருவதையும், ‘’மந்திரமாவது  நீறு ‘’ என்ற பதிகத்தில்   கண்டறியலாம்

வேதத்தில்  உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம்  தருவது  நீறு;  புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத்   தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு;
சீதப் புனல்வயல்  சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!

எயிலது  அட்டது  நீறு; இருமைக்கும்   உள்ளது நீறு;
பயிலப்  படுவது நீறு; பாக்கியம்   ஆவது  நீறு ;;
துயிலைத்  தடுப்பது நீறு;  சுத்தம்  அதாவது  நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே!

என்ற  இரு  பாடல்களே   இவையனைத்தையும்  குறிப்பதைச்  சிந்தித்து உணர்க.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *