Blog

  • உத்தமன் அலெக்ஸாண்டர்!…(பகுதி-7)

    ராமஸ்வாமி சம்பத்

    ALEXANDER

     

     

     

     

     

     

     

    சத்தியத்துக்கு மனம் கட்டுப்பட்டதால் அலெக்சாண்டர் இன்னும் ஆலோசனையிலேயே இருந்தான். உண்மை அவனைப் பேசவிடவில்லை. அந்த மவுனத்தைப் பயன்படுத்தி ஆசுதோஷர் மேலும் பேசமுற்பட்டார்.

    “சிகந்தர்! உன்னை மாவீரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறாய். ஒரு மாவீரனின் இலக்கணம் என்ன என்பது உனக்குத் தெரியுமா? ’எப்பொழுதும் உயிருக்குத் தீங்கு நேரிடுமோ’ என்ற பயத்தினால் கோழையாகத் திகழ்கிறாய். தாகத்தைக் கூட உன்னால் தனியாக தணித்துக்கொள்ள முடியாது அந்த நீரை உன் மெய்க்காப்பாளன் அருந்தி அதில் நஞ்சு கலக்கப்படவில்லை என்று சொல்லும் வரை. எந்த அத்தியாவசிய மருந்தையும் உன்னால் உட்கொள்ள முடியாது அதனை இன்னொருவன் பரிசோதனை செய்யாமல். அல்லும் பகலும் ’யார் யார் உனக்கு எதிராக சதி செய்கிறார்களோ?’ என்ற சந்தேகம் உன் மனதை வாட்டிக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட உன்னை எவ்வாறு மாவீரன் என்று கூறிக்கொள்கிறாய்?

    “பல நாடுகளை வென்றதால் மட்டும் நீ மாவீரனாக முடியாது. வெறும் படை பலத்தால் கிடைத்த வெற்றி உனக்கு மேலும் புதிய பகைவர்களை உண்டாக்கும். அவர்கள் பழி வாங்கும் எண்ணத்தோடு தத்தம் படைபலத்தைப் பெருக்கிக்கொண்டு தக்க சமயத்திற்குக் காத்திருந்து உன்னைத் தோற்கடிக்க முயல்வர். போரில் வெற்றியா தோல்வியா என்பது சந்தர்ப்பங்களைப் பொருத்து இருக்கிறது. வாய்ப்புகள் கூடிவரும்போது தோற்றவரும் உன்னை வெல்லக்கூடும்.”

    ”அப்படியென்றால் நான் பெற்ற வெற்றிகளைக் குறைத்து எடை போடுகிறீர்களா?”

    “ஒருக்காலும் உன்னை மலிவாக மதிப்பீடு செய்யவில்லை. அச்சுறுத்தும் படை வலிமையினாலும் போர்த் தந்திரங்களாலும் பெறும் வெற்றி தாற்காலிகமே என்பதனை உணர்த்த முயல்கிறேன்.”

    “புரிந்துகொண்டேன்” என்று கூறிய அலெக்சாண்டர் முனிவரை நோக்கி, “எனக்கு போரஸ் போல் ஆன்மீக பலம் பெறவேண்டும் எனும் ஆவல். அதற்குத் தாங்கள் அருள் புரியவேண்டும்” என்றான்.

    மீண்டும் மோகனப் புன்னகை புரிந்தவாறு ஆசுதோஷர் சொல்ல முற்பட்டார். “இதுவரை வெளிப்பகைவர்களை முறியடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாய். இனி உன் உள்நோக்கிச் செல்ல முயற்சி செய். உன்னுள் இருந்துகொண்டு உன்னை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் அந்த ஆறு உட்பகைவர்களோடு இடைவிடாமல் போராடு. அந்தபோரில் நீ வென்றுவிட்டால் ஆன்மீக பலம் உன் சொத்தாகிவிடும். கிடைத்த அந்த சொத்தைப் பேணி வளர்க்க வேண்டாமா? அதற்கு, நீ வென்ற நாட்டு மக்கள்மீது உன் அதிகாரத்தைத் திணிக்காமல் அவர்களை உன் பிரிய பிரஜைகளாக நடத்து. நல்லாட்சியை நல்கு. பரத கண்ட அரசர்கள்போல் மாறுவேடம் அணிந்து மக்கள் மத்தியில் புழங்கி அவர்கள் குறைகளை அறிந்து கொண்டு அவற்றை நீக்க முயற்சி செய். அப்படி செய்தால் உன் கொடுங்கோல் செங்கோலாக மாறிவிடும். மக்களும் உன் இறையாண்மையை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். அதன்பின் நீ ‘மாவீரன் சிகந்தர்’ மட்டுமல்ல. ’உத்தமன் சிகந்தர்’ எனவும் பேர் பெறுவாய்.”

    அலெக்சாண்டருக்குப் புல்லரித்த்து. ’உத்தமன் சிகந்தர்! எத்தனை அழகான பெருமை வாய்ந்த விருது! அதை நான் பெற்றே ஆகவேண்டும்’ என்ற ஒரு உத்வேகம் அவனுள் எழுந்தது.

    “முனிவரே! தாங்கள் சொல்லியபடி ‘உத்தமன்’ எனும் பேரெடுக்க விழைகிறேன். அதற்குத் தங்கள் ஆசிகளை வழங்குங்கள். பரத கண்டத்தில் நான் ஒரு சுபவேளையில் அடியெடுத்து வைத்திருக்கவேண்டும். இல்லாவிடில் ஆன்மீக பலத்தினை அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்குமா? முதற்கண் போரஸுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்”  என்று கூறி அவர் அடி பணிந்தான்.

    அதன் பின்னர் ஆசுதோஷர் வெளியே நின்றிருக்கும் பவுரவ வீரனையும் அழைத்து அவர்கள் இருவரையும் ஆசிரமத்தில் அவர் விருந்தினராக இன்னும் ஒரு நாள் இருக்கக் கோரினார். ஆசிரமத்து எளிய உணவு வகைகள் அலெக்சாண்டருக்கு அமிர்தமாக இருந்தன. படாடோபமான அரண்மனை மஞ்சத்தைவிட தரைமீது போடப்பட்ட கோரைப்பாய் அவனுக்கு மிக்க சுகத்தோடு ஆழ்ந்த உறக்கத்தையும் அளித்து அவன் போர்க்களைப்பை நீக்கியது.

    ஆசுதோஷர் அலெக்சாண்டருக்கு ஆன்மீக பலம் பெறுவதற்கு அவசியமான பிராணாயாமம் மற்றும் ஆழ்நிலை தியானம் இவற்றை சிறிது நேரம் அவன் சிரத்தின் மீது தன் கையை வைத்துக் கண்களை மூடி செவியருகே மெல்லமாகச் சொல்லிக் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் அளித்தார். அலெக்ஸாண்டர் தன்னை மறந்தான்.. தான் ஏதோ ஒரு மகத்தான சக்திக்குள் தானறியாமலே புகுத்தப்படுவதை உணர்ந்தான்.

    அடுத்த நாள் ஆசியோடு அவர்களுக்குப் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

    ஜீலம் நதிக்கரைக்குத் திரும்பிய அலெக்சாண்டர், புருஷோத்தமனை கட்டி அணத்துக் கொண்டான். “போரஸ் உனக்கும் ஆசுதோஷ முனிவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அஞ்சாநெஞ்சனான உன் உதவியால்தான் உண்மையான வலிமை எது என்பதனை உணர்ந்து கொண்டேன். உன்னை ஒரு அரசன்போல் நான் நடத்தவேண்டும் என்றுதானே கோரினாய்? அப்படியே உன் ராஜ்ஜியத்தை உனக்கே அளிக்கிறேன். மேலும் பக்கத்து காந்தார நாட்டின் பெரும்பகுதிக்கும் நீயே மன்னன் ஆவாய். உன் நட்பு எனக்கு என்றென்றும் தேவை” என்று மன நெகிழ்வோடு கூறினான்.

    “பார்த்தீர்களா நான் கட்டிய ரக்‌ஷையின் மகிமையை! என் வருங்காலக் கணவரும் காப்பாற்றப்பட்டார். என் உடன்பிறவா அண்ணனுக்கும் ஆயுளோடு ராஜ்ஜியமும் கிடைத்து விட்டது” என்று ரொக்ஸானா பெருமிதத்துடன் உரைத்தாள். அங்கு குழுமியிருந்த அனைவரும் அவள் சொல்லுவதை ஆவலுடன் கேட்டு ஆமோதித்தனர்..

    Education of Alexander the Great by Aristotleபின்னர் புருஷோத்தமனுடன் ஆலோசனை நடத்திய அலெக்சாண்டர் அவன் அறிவுரையின் படி சிந்துமாநதி மீதாக மேலைக்கடல் சேர்ந்து மாசிடோனியா திரும்ப நிச்சயித்தான். மீண்டும் காட்டுப்பாதை வழியாக பயணம் செய்ய வேண்டுமோ என்று கவலையுற்றிருந்த யவன வீரர்களின் மகிழ்ச்சி ஜீலம் நதிபோல் கரை புரண்டு ஓடியது.

    (தொடரும்)

    Share
  • கல்யாணமோ கல்யாணம்

    சத்திய மணி

     

    கல்யாணமோடு கச்சேரி வருமே கலகலப்பு
    கல்யாணமோடு கலாட்டா த‌ருமே சலசலப்பு
    இதில் கண்காட்சி அணிகளும் அணிவகுக்கும்
    இதைக் கண்டுக்காத‌ அணிகளும் பலயிருக்கும்()

    கெட்டிமேளம் கொட்டச் சொல்லி மாமனாரு பறக்க‌
    பெட்டிநகைப் போட்டுகிட்டு மாமியாரு மினுக்க‌
    முட்டி தாலி முடிச்சிட நாத்தனாரு நுழைய‌
    பட்டி கட்டி மாடுபோல மாப்பிள்ளை குழைய‌
    தட்டு களில் அசத்திடும் சீருகளைப் பாத்து
    எட்டு கட்டி போடுதம்மா ஊருகதை சேத்து()
    பந்திக்கு முந்திவரும் பசியோடு கூட்டம்
    தொந்தி க்குமேல்முழுங்கி ஏந்திரிக்க ஆட்டம்
    சந்திக்க வந்தவர்க்கோ வம்புகதை யூட்டம்
    சிந்திக்க வேளையின்றி பொட்டியுடன் ஓட்டம்
    மண்ணுலகில் இன்றும் இந்தக் கல்யாணம்வாழ‌
    கண்ணுபடப் போவுதென‌ சூடம் சுத்தி போடும்()

    Share
  • ராஜா ராணி பாடல்கள் ஓர் பார்வை

    சூரியா

    இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர், அட்லியின் முதல் படம் தான் இந்த ராஜா ராணி, ஆர்யா – நயன்தாராவிற்கும் கல்யாணம் என்று படத்திற்கு பரப்பரப்பாக விளம்பரம் செய்தவர். படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருக்கிறார் பாடல்கள் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.

    Untitled

    ஹே பேபி

    “அவளை , தன் வாழ்வில் இருந்து போகச் சொல்லும் அவன்”. முதல் பாதி மேற்கத்திய சாயலில் ஜி.வி பாடியிருக்கிறார், பின் பாதியை கானா பாடலாக அசத்தியிருக்கிறார், கானா பாலா. திருமணத்தை நையாண்டி செய்யும் வரிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

    “ டும் டும் டும் , பீப்பீப்பீ ஊதிட்டா புது சங்கு தான்” போன்ற வரிகள் இது.

    அழகாக இரு வேரு வகை இசையை ஒன்று சேர்த்திருக்கிறார் ஜி.வி.

    அங்யாடே

    “அவளுள் நிகழும் பல மாற்றங்கள் நிகழ்கிறாது தவிக்கிறாள், நகம் கடிக்கிறாள், வெட்க்கப்படுகிறாள் எல்லாம் அவனால் தானாம் “. பா.விஜய் இந்த பாடலை எழுத சக்தி ஸ்ரீ கோபாலன் குழைந்து பாடியிருக்கிறார். முதல் முறையே நம்மை கட்டிப்போடுகிறது இந்த பாடல்.

    “என் நினைப்பில் குதிக்கறானே, என் மனசில் குழிக்குறானே

    என படுத்திஎடுத்து, குழப்பி கெடுத்து படுத்துறானே”

    சில்லென மழைத்துளி

    ” பார்த்ததும் காதல் அவனுக்கு, அவளுக்கும் அவ்வாறே ஆனால் இருவரும் தனித்தனியாக பாடுகிறார்கள்”. டெக்னோ இசையில் துவங்கி, நம்ம ஊரு மேளத்திற்கு வந்து பின் கேரளத்து இசைக்கும் பாடல் பயணிக்கிறது. இதை கிளிண்டன், அல்போன்ஸ் மற்றும் ஆல்கா இணைந்து பாடியிருக்கிறார்கள்.

    கேட்போரையும் பாடல் லேசாக நனைக்கிறது.

    “காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி

    மீ்ண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா?

    கோபம் கொள்கையிலும் கிறங்கவைக்குதடி

    மீண்டும் ஒரு முறை நீ கோபத்தில் பார்ப்பாயா? “

    ஓடே ஓடே

    “இருவரும் காதல் கொள்கிறார்கள் அதை காமிக் சாயலில் சொல்லியிருக்கிறார் ” பா.விஜய். விஜய் பிரகாஷ், சாஷா மற்றும் ஷல்மலை கொல்கடே இணைந்து பாடியிருக்கிறார்கள். இடையில் ராக் அண்ட் ரோல் சாயலில் சில வரிகள் வருகிறது. மெலிதான பீட்டுகள் எளிமையான வரிகள் மயக்கும் குரல் என வசீகரிக்கிறது பாடல்.

    இமையே இமையே

    “அவனுக்கும் அவளுக்கும் ஒரு புரிதல் ஏற்பட்ட நேரத்தில் பிரிவு ஏற்படுகிறது “. அதை அழகாக ஜி.வி மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் உயிர்ப்புடன் பாடியிருக்கிறார்கள். முந்தய பாடலில் காதல் சொன்ன பா.வி்ஜய் இதில் பிரிவின் வலி சொல்கிறார்.

    “ சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வானில் ஆண் மழை

    வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை

    அடி மனதில் இறங்கிவிட்டாய்

    அனு அனுவாய் கலந்துவிட்டாய்”

    உன்னாலே

    “எல்லாமே அவனால் தான் என்கிறாள் அவள் “. நா.முத்துக்குமார் எழுத

    வந்தனா ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். நீளம் குறைவு தான் ஆனாலும் ஆழமாக ஒலிக்கிறது. இனி அலைபேசிகளில் அடிக்கடி கேட்கலாம் குரலில் அவ்வளவு உயிர்ப்பு.

    ஜி.வி.க்கு வெற்றி தேவைப்படும் இந்த நேரத்தில் சரியாகப் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ராஜா ராணி சந்தோஷமாக நகர்வலம் வருவார்கள்..

    மதிப்பெண்கள்: 3.75/5

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(73)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்புடை வாசக உள்ளங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

    இங்கிலாந்து பல்வேறு இனத்தவர் , பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சாரம் கொண்ட நாடு.

    எதனது பல்லினக் காலாச்சார வாழ்வில் இனக்களுக்கிடையே உள்ல இணக்கப்பாடு எத்தனை முன்னில்லை கொண்டதாக இருந்தாலும் காலத்துக்குக் காலம் பொருளாதார ச் சீர்கேடு கொடுக்கும் நெருக்கடியாலும், அடிமனதில் ஊறி நிற்கும் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் தாக்கங்களையுடையவர்களின் பிரச்சாரத்தாலும் இங்களுக்கிடையெலேயான முறுகல் நிலை பல்வேறு நாடுகளிலும் ஏற்படுவதுண்டு.

    இங்கிலாந்து இதற்கொன்றும் விதிவிலக்கான நாடு அல்;ல.

    ஆனால் இவ்வினக்களுக்கிடையே ஏஎர்படும் இம்முறுகல் நிலையை எதிர் கொள்வதற்காகவும் இனங்களுக்கிடையே உள்ள ஜக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதற்காகவும் சேவையாற்றுவோர் அனைத்து சமூகங்களிலும் செயற்படுகிறார்கள்.

    இத்தகைய செயற்பாட்டுக்கு பல்வேறு இன மக்களின் கலாச்சார அடிப்படையைப் பற்ரிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்..

    என்ன எத்திசையை நோக்கிப் போகிறது இம்மடல் ? எனும் வினா உங்களுக்குள் இப்போது எழுந்திருக்க வேண்டுமே ?

    இங்கிலாந்தில் கோடைகாலத்தில் (Summer Time) நான் இங்கு வந்த காலத்திலிருந்து தவராமல் நடைபெற்று வரும் ஒரு கலாச்சார நிகழ்வு “நொட்டிங் ஹில் காணிவல் ( Notting Hill Carnuval ) எனும் ஒரு நிகழ்வாகும்.

    மிகவும் விமரிசையாக நடைபெறும் இக்கலாச்சார விழாவானது மேற்கிந்திய தீவு மக்களின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

    ஆகஸ்ட் மாத இறுதியில் வரும் பொதுவிடுமுறை ஒரு திங்களில் விழுவது வழக்கம். இப்பொதுவிடுமுறை வரும் அந்த மூன்று தினங்களடங்கிய வார இறுதி விடுமுறையில் அம்மூன்று நாட்களும் இவ்விழா இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் நாட்டிங் ஹில் (Notting Hill ) எனும் பகுதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சரி இவ்விழாவின் பின்னனி என்ன என்று பார்ப்போமா?

    இவ்விழாவின் பின்னனியில் வெறுபட்ட ஆனல் கருத்தால் இணைந்த இருவேறு நிகழ்வுகள் இருக்கின்றன.

    1958ம் ஆண்டு இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இதே “நாட்டிங் ஹில்” எனும் பகுதியில் இங்கிலாந்தின் மிக மோசமான இனக்கல்வரம் நடைபெற்றது.

    காலாச்சாரப் புரிந்துணர்வு இல்லாத காரணத்தினாலேயே இத்தகைய இனக்கலவரங்க|ள் இடம்பெறுகின்றன என்பதையுணர்ந்த “குளோடியா ஜோன்ஸ் (Claudia Jones ) எனும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad and Tobago எனும் தீவைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெண் “மேற்கிந்திய தீவு விழா ( Caribean carnival )” எனும் விழாவை இலண்டனில் உள்ள St.Pancras Town hall எனும் இடத்தில் 1959 ஜனவரி 30ம் திகதி நடத்தினார்.

    ஆனால் இது ஒரு மண்டபத்தினுள் நடக்கும் நிகழ்வாக அமைந்தது.

    அது போல 1966ம் ஆண்டு நாட்டிங் ஹில் பகுதியில் ” ஹிப்பி லண்டன் ப்ரீ ஸ்கூல் ” எனும் அமைப்பால் தெரு விழா ஒன்று அமைந்தது. .

    இவ்விரண்டு விழாக்களின் ஒன்றினைப்பே தற்போது நடைப்பெற்று வரும் ” நாட்டிங் ஹில் விழா “

    இவ்விழாவில் ஆரன்ப காலங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவர்ரின் சீர்குலைவுகள் நடைப்பெற்றிருந்திருக்கின்றன.

    பெரும்பான்மையாக மேற்கிந்திய தீவுஇன் பின்னனியைக் கொண்ட இளம் தலைமுறையினர் ஈடுப்படும் விழாவாக இருக்கும். பல சமயங்களில் இக்குழுக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே பல கலவரங்கள் மூண்டுள்ளன.

    ஆனால் சமீப காலங்களில் இவ்விழா பொதுவாக அமைதியான முறையிலேயே நடைபெற்று வருகிறது.

    மேர்கிந்திய தீவுகளின் காலாச்சாரத்தில் அமைந்த பல வித நடனங்களையுள்ளடக்கிய ஊர்வலங்கள் இத்தெருக்களில் கோலாகலமாக அரங்கேறும்.

    பல காலாச்சர மக்களுடைய உணவுச் சாலைகள் தெருவோரம் போடப்பட்டு இருக்கும்.

    இவ்விழாவில் இப்போதைய காலங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுவே தெருவில் நடைபெறும் விழாக்களில் உலகளவில் மிகப்பெரியது என்று கணிக்கப்படுகிறது.

    இத்திருவிழாவினால் இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு ஏறத்தாழ #93 மில்லியன் நன்மை கிடைக்கிறது என்கிறது ஒரு பொருளாதார அறிக்கை .

    இதுவரை இவ்விழாவின் வன்முறையால் 5 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

    பல்லின மக்கள் கலந்து வாழும் ஒரு நாட்டில் அமைதியும், சமாதானமும், நீதியும் நிலைபெற வேண்டுமானல் கலாச்சாரப் புரிந்துணர்வு அவசியம். ஒருவரின் கலாச்சாரம் மற்றவர் மீது திணிக்கப்படாத வகையில் அதை கொண்டாடப் பழகிக் கொண்டால் அங்கு அமைதியும், சமாதானமும் நிலவுவது உறுதி.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • படைப்பாற்றல் நம் மூளையின் எப்பகுதியில் உருவாகிறது?

    தேமொழி

    [குறிப்பு:  இக்கட்டுரை சென்ற மாத,  ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ (Scientific American, August 19, 2013 issue) இதழில் வெளியான, பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி (Dr. Kaufman Scott Barry) அவர்களின் கட்டுரையின் மொழி பெயர்ப்பு.  இதனை மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றும் திருவாளர்.காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பு மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. அனுமதி கொடுத்த பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.]

     

    ஆராய்ச்சிக் கண்ணோட்டம் கொண்டு அலசி ஆராயும் தன்மை, செயல்களில் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கும் தன்மை, காரண காரியத் தொடர்புடைய வகையில் தர்க்க ரீதியில் சிந்திக்கும் தன்மை, நிகழக்கூடியவற்றை யதார்த்தமானவற்றை சிந்திக்கும் தன்மை, இயல்பான நடைமுறைக்கேற்ப செயல்படும்  தன்மை போன்ற பண்புகளை வெளிப்படுத்துவது  மனிதர்களின் இடது பக்க மூளையின் செயல் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.

    அது போலவே படைப்பாற்றல், உணர்வுப்பூர்வமான வண்ணமயமான சிந்தனைகள், இன்பம் சுவை போன்றவற்றை அனுபவிக்கும் தன்மை, மனம் கவரும் செயல்பாடுகளை, கவிதைத்துவமான எண்ணங்களை வெளிப்படுத்துதல் போன்ற மென்மையான உணர்வுகளை சித்தரிப்பது மூளையின் வலது பக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கருதப்பட்டு வந்தது.

    crative barain

    தற்கால நரம்பியல் ஆராய்ச்சியில் முன்னோடிகளாகத் திகழும் நரம்பியல் துறை ஆராய்ச்சி வல்லுனர்கள் (Rex Jung, Darya Zabelina, John KouniosMark Beeman, Kalina ChristoffOshin Vartanian, Jeremy Gray, Andreas Fink, Hikaru Takeuchi and others; கொடுக்கபட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்கி இந்த ஆராய்ச்சியாளர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்), மூளை தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பொழுது அது எவ்வாறு இயங்குகிறது என்று தற்கால தொழில் நுட்பங்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகிறார்கள்.  இவர்களின் கண்டுபிடிப்புகள் இதுவரை படைப்பாற்றல் திறனை மூளை கையாளும் விதத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றி அமைப்பதாக விளங்குகிறது.

    நரம்பியல் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை நாம் எண்ணியது போல மூளை வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என்று தனித்தனியாக இயங்குவதாக நாம் நினைப்பது தவறு என்று அறிவுறுத்துகிறது.  மொழி தொடர்பான செயல்களில் இடதுபக்க மூளை அதிக பங்கு வகித்தாலும், இடம் சார்ந்த ‘ஸ்பாட்டியல்’ செயல்களில் வலது மூளையின் பகுதி அதிகம் பங்கு வகித்தாலும்; மூளை படைப்பாற்றலில் ஈடுபட்டிருக்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியோ அல்லது மூளையின் ஒரு பக்கமோ மட்டும் அதில் பங்கேற்பதில்லை என்ற உண்மை இப்பொழுது தெரிய வந்திருக்கிறது.

    உண்மையில், படைக்கும் எண்ணம் கருக்கொண்டு, வளர்ச்சியடைந்து, முழுமையாக முற்றுப் பெறும் வரை மூளையின் புலன் மற்றும் உணர்வு தொடர்புடைய பகுதிகள் பல இணைந்து செயலாற்றுகின்றன. நாம் எதனைப் படைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு, படிப்படியாக உருவாகும் ஒவ்வொரு நிலைக்கும் தேவையான பணிகளைச் செய்ய மூளையின் வெவ்வேறு பகுதிகள் பங்கேற்கின்றன.  மூளையின் வெவ்வேறு பகுதிகள் தேவைக்கேற்ப ஒருங்கிணைந்து செயலாற்றியே படைப்பாற்றல் வெளிப்படுத்தப்படுகிறது.

    முக்கியமாக, ஒரு செயலை நிறைவு செய்ய மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டியத் தேவை இருக்கிறது என்பதைத் தற்கால ஆராய்ச்சி முடிவுகள் வலியுறுத்துகின்றன. மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் ஒருங்கிணைத்து பெருமளவில் செயல்படுவதாலேயே நம் புலன்கள் சரிவர செயல்படுகின்றன.

    இவ்வாறு மூளையின் பல்வேறு பகுதிகளும் இணைந்து செயல் படுவது நாம் செய்யும் செயலைப் பொருத்து அமைகிறது. காட்டாக, ஒரு சிற்றுந்தின் பின்புறம் உள்ள சாமான்கள் வைக்கும் பகுதியில் பொருட்களை அடுக்கும்பொழுது, அவற்றைத் தேவைக்கேற்றவாறு சுழற்றி சீராக அடுக்க விஷுவோ ஸ்பாட்டியல் என்னும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் (Visuospatial Network)  செயல் தூண்டப்படுகிறது.  இதுபோன்று இடஞ்சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொழுது மூளையின் பின்புற சுவர் புறணி மற்றும் முன்புற கண் துறைகள் (posterior parietal cortex and frontal eye fields) ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன.

    இது போன்றே, ஒரு உரையாடல் அல்லது சொற்பொழிவு ஆற்றும் பொழுது மொழி மற்றும் பேச்சுக்குத் தொடர்புடைய நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் தூண்டப்படுகிறது.  அப்பொழுது மூளையின் ‘புரோக்கா’ மற்றும் ‘வெர்னிக்’ பகுதிகள் (Broca’s area and Wernicke’s area  of the brain) இணைந்து செயலாற்றுகின்றன.

    அதுபோலவே மூளை படைப்பாற்றலில் ஈடுபடும்பொழுது மூன்று வித நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல்கள்  தூண்டப்படுகின்றன. அவை:
    1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Control Network)
    2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Imagination Network)
    3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Flexibility Network)

    1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
    ஒரு செயலில் ஒருமித்த ஆழ்ந்த கவனம் செலுத்தத் தேவை இருக்கும் பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்படுகிறது. ஒரு விரிவுரையில் கவனம் செலுத்தும் பொழுதோ அல்லது ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுதோ நம் நினைவுகளுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது.  அப்பொழுது மூளையின் புறப்பகுதி, முன்புறம் மற்றும் பின்புறப் பகுதிகள் (lateral regions of the prefrontal cortex and areas toward the posterior of the parietal lobe) யாவும் இணைந்து செயலாற்றத் தேவையாக இருக்கிறது.  இப்பகுதிகளை இணைக்கும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்பட்டு செயலாற்றுகிறது.

    2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:

    படைப்பாற்றலின் பொழுது, மூளையின் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருவருக்கு கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களினால் கிடைத்த அடிப்படையான நினைவுகள், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு, தற்காலத் தேவைக்கேற்ப மாறுபட்ட கோணங்களையும் சிந்திக்கும் வகையில் நாம் செய்யும் செயலில் தொடர்ந்து மாற்றங்களை தூண்டிக்கொண்டிருக்கும். அத்துடன் இந்த கற்பனைத்திறன் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு சமூகத் தாக்கத்தையும் உள்ளடக்கியது.  உதாரணமாக, நாம் அடுத்தவர் இப்பொழுது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பார் என்று யோசிக்கும்பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும். பெருமூளைப் புறணியின் (cerebral cortex) முன்பகுதியின் உட்புறம், நடுப்பகுதியின் உட்புறம், மற்றும் பக்கவாட்டுப் பகுதியின் உட்புற மற்றும் வெளிப்புறங்கள் யாவையையும் இணைக்கும் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுவதால் கற்பனை செய்யும் திறன் செயல்பாட்டிற்கு வருகிறது.

    crative barain2crative barain3

    3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
    இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. இது வெளிப்புறத்தில் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும், உடலினுள் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தவண்ணம் இருக்கும்.  சமிக்கைகளின் தேவைக்கு ஏற்றவாறு  கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ அல்லது கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ சமிக்கைகளை அனுப்பி தேவையான முடிவெடுத்து, தக்க வகையில் செயலை முடிக்க வழி செய்கிறது. இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பெருமூளைப் புறணியின் மேல்முன்புறம் உள்ள சிங்குலேட் கார்ட்டெக்ஸ் பகுதிகளையும் (dorsal anterior cingulate cortices), முன்புறம் தனித்திருக்கும் கார்ட்டெக்ஸ் (anterior insular) பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த அமைப்பு தேவைகேற்ப கவனத்திற்கோ அல்லது கற்பனைக்கோ என சமிக்கைகளை மாற்றிவிட உதவுகிறது.

    படைப்பற்றலைப் பற்றிய தோராயமான புரிதல்:
    நரம்பியல் அடிப்படையில் படைப்பாற்றலைப் பற்றி அறிந்து கொள்வதில், இந்த மூன்று வகை நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது, எந்த வகைகளில் இவற்றின் செயல்கள் தூண்டிவிடப்படுகிறது அல்லது செயலிழக்கச் செய்யப்படுகிறது, எந்த நிலைகளில் எந்தெந்த மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாதது. சிலநேரங்களில் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்தும், சில நேரங்களில் அவ்வாறு இணைந்து செயல்படுவது படைப்பாற்றலைக் குறைக்கும் என்பதால் தனித்தும் இயங்கத் தேவையாகிறது.

    சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் ரெக்ஸ் யுங் (Rex Jung and Colleagues) மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் பங்குபெற்ற நரம்பியல் வல்லுனர்கள் மூளையின் படைப்பாற்றல் உருவாகும் விதத்தின் ஒரு தோராயமான முதல் நிலையை (first approximation) எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தத் தோராயமான முதல்நிலை வரையறையின்படி, படைக்கும் செயலில் எவ்வாறு நாம் சிந்திக்கும் திறனை கட்டவிழ்க்க வேண்டும், சிந்தனையை சுதந்திரமாக பரவ விட வேண்டும், புதிய வழிகளை கற்பனை செய்ய வேண்டும், உள்மன விமர்சனங்களை அமைதிப் படுத்த வேண்டும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பை சிறிதே செயலிழக்கச் செய்ய வேண்டும், மற்ற இரு கற்பனைத்திறனுக்கான மற்றும் கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.  சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றும் ஜாஸ் மற்றும் ராப் இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை மேம்படுத்த செய்யும் படைப்பாற்றல் முயற்சிகளில் அவர்களது மூளை கட்டற்று சுதந்திரமாக செயல்படும் பொழுது இந்த தோராயமான வரைமுறை குறிப்பிடும் வகையில் படைப்பாற்றல் வெளிப்படுவதைக் காட்டியது.

    எனினும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் திறனை சில சமயங்களில் மறுபடியும் தூண்டிவிட்டு படைப்பாற்றலால் உருவாகிய படைப்பை கவனத்துடன் மதிப்பீடு செய்யவும், அந்த எண்ணங்களை செயல் படுத்தவும் தேவை ஏற்படுகிறது.

    ரெக்ஸ் யுங் ஆராய்ச்சிக் குழுவினர் வரையறுக்கும் மூளையின் படைப்பாற்றல் திறனின் செயல்முறை பற்றிய இந்தத் தோராயமான கணிப்பு ஆராய்ச்சியின் முதல்படிதான். ஆனால் இது மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வழி வகுக்கும் விதத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. படைப்பாற்றல் என்பது மூளையின் பல நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்து செயலாற்றுவதாலேயே நிகழ்கிறது என்று அறிவியல் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னர் எண்ணியது போல மூளையின் ஒரு சில பகுதிகளோ அல்லது மூளையின் ஒரு பக்கம் மட்டுமோ படைப்பாற்றலுக்குக் காரணம் என்ற எண்ணம் தவறு என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

    இத்தகவலுடன் பிற ஆராய்ச்சித் தகவல்களையும் இணைத்துப் பார்த்தால்; பகல்கனவு காணுதல், எதிர்காலக் கற்பனைகள், தன்னைச் சார்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல், ஆக்கப்பூர்வமான சுய பரிசோதனைகள், பொருள் புரிந்து கொள்ளல், சமூக அறிவு போன்றவற்றிக்குக் காரணமான மூளையின் மற்ற பகுதிகள் யாவும் படைப்பாற்றலுக்கு உதவி செய்வது தெரிய வருகிறது. மேலும் தொடரும் ஆராய்ச்சிகள் பல இன, கால வேறுபாடுகள் ஆகியவற்றின்  அடிப்படையிலும் எவ்வாறு படைப்பாற்றல் உருவாகிறது என்பதை விளக்குவதாய் அமைவது படைப்பாற்றல் பற்றி மேலும் அறிய வழி வகுக்கும்.

    மூளையின் படைப்பாற்றல் எவ்வளவு சிக்கல் நிறைந்த செயல்பாடு என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரின் மூளைகளும் இணைந்து விளக்க முற்படும் இத்தருணம்  நரம்பியல் ஆராய்ச்சியில் ஒரு ஆக்கப்பூர்வமான காலக்கட்டம், இந்நேரத்தில் படைப்பாற்றல் பற்றிய நமது பழைய தகவல்களை விட்டொழித்து படைப்பாற்றல் என்பது மூளையின் பலபகுதிகளையும் உபயோகித்து உருவாகும் செயல்திறன் என்பதை உணரவேண்டும்.

    Reference:
    Kaufman Scott Barry , The Real Neuroscience of Creativity, August 19, 2013 ,  Scientific American.
    http://blogs.scientificamerican.com/beautiful-minds/2013/08/19/the-real-neuroscience-of-creativity/

    Note: The author of this article (Dr. Kaufman Scott Barry) granted permission to publish the translation of his work.

     

     

     

    Share
  • கென்யா பயணம் – 7

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கென்யாவில் நாற்பத்தி இரண்டு பழங்குடி இனங்கள் உள்ளன.  போர்ச்சுகீசியரின் வருகையின் விளைவாகவும் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகவும் இவற்றில் பல கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவை.  கடற்கரையை ஒட்டி வாழும் இனங்கள் அரேபியர்களின் வணிகத்தின் விளைவாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவை.  இவற்றில் ஒன்று விக்டோரியா ஏரியை ஒட்டியுள்ள லியு (Luo)  என்னும் இனம்.  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தந்தை இந்த இனத்தைச் சேர்ந்தவர்.  இன்னொன்று கிக்கியு (Kikiyu).  இந்த இரண்டு இனங்களும் மக்கள் தொகையில் பெரியவை.  அதனால் அரசியல் செல்வாக்கும் அதிகம்.  இந்த இரண்டு இனங்களிலிருந்துதான் நாட்டுத் தலைவர்கள் தோன்றுகிறார்கள்.  மக்கள் தொகையில் சிறிய மற்ற இனங்கள் இந்த இரண்டு இனங்களில் ஒன்றோடு சேர்ந்துகொண்டு அரசியலில் பங்கு பெறுகின்றன.  தற்போதைய ஜனாதிபதி கென்யாட்டா கிக்கியு இனத்தைச் சேர்ந்தவர்.  ஆடு மாடுகளுக்குப் புல் தேடி இடம் விட்டு இடம் போகும் மசாய் இனத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம்.

    ஒவ்வொரு இனத்திற்கும் தனிக் கலாச்சார மரபுகள் உண்டு.  ஒவ்வொரு இனமும் தங்கள் குடியிருப்பை அமைக்கும் முறையும் அதில் ஒரு குடும்பத்தின் குடிசைகளை அமைக்கும் முறையும் அந்தக் குடிசைகளைப் பயன்படுத்தும் விதமும் வேறுபடும்.  நைரோபியில் இந்தக் குடியிருப்புகளின் மாதிரிகளை ஒரு இடத்தில் அமைத்திருக்கிறார்கள்.  இங்கே கணவன் குடிசை, முதல் மனைவியின் குடிசை, இரண்டாவது மனைவியின் குடிசை, ஆண் பிள்ளைகள் குடிசை என்றெல்லாம் வேறுபாடு இருந்தது.  இதற்குப் பக்கத்தில் பல இனங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடிக் காட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போமாஸ் (Bomas) என்று பெயர்.  போமா என்றால் ஸ்வாஹிலியில் குடியிருப்பு என்று அர்த்தம்.  இந்த நடன நிகழ்ச்சியில் வித்தியாசமான உடைகளுடன் வித்தியாசமான நடனங்களை பல பழங்குடி இன மக்கள் ஆடுவதைப் பார்க்க முடிந்தது.  கடைசியில் சர்க்கஸில் காட்டுவது போல் தீ வளையத்திற்குள் பாய்வது போன்ற தீரச் செயல்களையும் செய்து காட்டினார்கள்.  இந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு பிரமாண்டமான அரங்கம் குடிசையைப் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.  நிகழ்ச்சியைப் பார்க்க உல்லாசப் பயணிகள்  மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்.  நவீன கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ள இது வகை செய்கிறது.

    இப்போது கென்யர்களின் பொதுவான சில பண்புகளைப் பார்ப்போம்.  நைரோபியில் நாங்கள் தங்கியிருந்தது ஒரு நடுத்தர ஓட்டல்.  ஒரு கென்யரால் துவங்கப்பட்டது. அங்கிருந்த எல்லா ஊழியர்களும் – வரவேற்பாளரிலிருந்து அறையைச் சுத்தம் செய்பவர் வரை – எங்களிடம் மிகவும் பிரியமாக நடந்துகொண்டனர்.  காலைச் சாப்பாடு அறை வாடகையோடு சேர்ந்தது.  காலை ஏழரை மணியிலிருந்து பத்து மணி வரை காலை உணவு நேரம்.  நான்கு வகைப் பழங்கள், மைதா ப்ரெட், கோதுமை ப்ரெட் என்று இரண்டு வகை ரொட்டிகள், பல வகையான கிழங்கு வறுவல்கள், பல வகை சீரியல்கள், அவற்றோடு சாப்பிட பால், ஆரஞ்சுச்சாறு, மாம்பழச் சாறு, அன்னாசிப்பழச்சாறு என்று மூன்று வகை பழச்சாறுகள், ஏதாவதொரு அசைவ அயிட்டம் என்று பல அயிட்டங்கள் இருந்தன.  இதற்கு மேல் விரும்புபவர்களுக்கு முட்டையை நாம் கேட்கும் விதத்தில் சமைத்துக் கொடுக்கிறார்கள்.   இப்படிப் பல வகை உணவுகளோடு அங்கு வேலைபார்ப்பவர்களும் அன்போடு நமக்குப் பரிமாறுகிறார்கள்.  நாம் முட்டை சாப்பிடவில்லையென்றாலும் தினமும் முட்டை வேண்டுமா என்று கேட்பார்கள்.  பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் பணிபுரிபவர்கள் இப்படிப் பிரியமாக நடந்துகொண்டாலும் இவர்களுடைய நடத்தையில் உள்ளன்பு இருப்பதாகத் தெரிந்தது.

    மதிய உணவையும் இரவு உணவையும் இரவு ஒன்பது மணி வரை நாம் கேட்கும் நேரத்தில் அங்கேயே சமைத்துக் கொடுக்கிறார்கள்.  அதற்குரிய கட்டணம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.  நாம் விரும்பினால் நம் அறைக்கே உண்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள்.  இவர்களுடைய இந்த சேவைக்காக எதுவும் ‘டிப்ஸ்’ கொடுக்க வேண்டியதில்லை என்று வரவேற்பாளர் கூறினார்.  கொடுத்தால் பிரியமாக வாங்கிக்கொள்கிறார்கள்.

    நாங்கள் எங்கள் துணிகளைத் துவைத்துக்கொள்ள விரும்பினோம்.  அதை அறிந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்தார்கள்.  துணிகளைக் காயப் போடுவதற்கு ஒரு இடம் இருக்கிறது.  நாங்கள் காலையில் வெளியே போய்ச் சாயங்காலம்தான் திரும்ப ஓட்டலுக்கு வந்ததால் இடையில் மழை பெய்தால் என்ன செய்வது என்று யோசித்தபோது ‘நாங்கள் உங்கள் துணிகளை உள்ளே எடுத்துவைக்கிறோம்’ என்றார்கள்.

    கென்யாவில் நிறைய வடஇந்தியர்கள் இருப்பதால் அவர்களின் இந்திய உணவு வகைகளும் கென்யர்களின் உணவில் கலந்துவிட்டிருக்கின்றன.  அவற்றில் சப்பாத்தி, அதற்குரிய சப்ஜி, புலவு, சமோஸா ஆகியவை முக்கியமானவை.  ஒட்டலிலும் இவை எல்லாம் சமைத்துக் கொடுத்தார்கள்.  எங்கள் மைசூர் வீட்டின் அறையில் தங்கியிருந்த பல மாணவர்கள் எங்களை ஓட்டலில் வந்து சந்தித்தனர்.  அவர்களில் ஒருவரின் கண்வர், ‘சிறு வயதிலிருந்தே இந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததால் இவை கென்ய உணவுகள் என்று நான் நினைத்திருந்தேன்.  விபரம் தெரிந்த பிறகுதான் இவை இந்திய உணவுகள் என்று தெரிந்துகொண்டேன்’ என்றார்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய உணவுகள் கென்ய உணவுகளோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.  இந்தியர்கள் நடத்தும் ஹாண்டி (Haandi) என்னும் இந்திய உணவகம் பிரசித்தமானது.  அங்கு விலையும் கொஞசம் அதிகம்.  இங்கே நிறைய வடஇந்திய சப்ஜிகள், பல வகையான புலவு வகைகள் கிடைக்கும்.  இங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் கென்யர்கள்.  ஒரு இந்தியர் கூட இல்லை.  அதே சமயத்தில் அங்கு உணவருந்த வந்திருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் இந்தியர்கள்.

    அங்கு வாழும் இந்தியர்கள் எல்லோரும் வசதியாக இருப்பவர்கள் போல் தெரிகிறது.  கச்சாப் பொருள்களை வாங்கிவந்து அவற்றைப் பொருள்களாகத் தயாரித்து விற்கும் தொழிற்சாலைகளில் 70 சதவிகிதம் இந்தியர்களின் கையில் இருப்பதாக மாணவ நண்பன் ஒருவன் கூறினான்.  நக்குமார்ட் (Nakumart)  என்னும் பெரிய டிபார்ட்மெண்ட் கடை இந்தியர் ஒருவருக்குச் சொந்தம்.  இந்தியர்களின் பிள்ளைகள் கென்யப் பள்ளிகளில் படித்துவிட்டு மேல் படிப்பிற்காக இந்தியாவிற்கோ பிரிட்டனுக்கோ செல்கிறார்கள்.  இதனால் கல்லூரிகளில் இந்திய வம்சாவளி இளைஞர்களும் கென்ய இளைஞர்களும் நட்புக்கொள்வது அரிது.

    நான் முன்பே எழுதியது போல் இந்தியர்கள் கென்யர்களோடு கலப்பதில்லை போல் தெரிகிறது.  அண்மையில் இந்து பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தது.  கென்யாவில் சுமார் 1000 கன்னடியர்கள் வசிக்கிறார்களாம்.  ஹிருதய வாஹினி என்று மங்களூரிலிருந்து வரும் பத்திரிக்கையும் கன்னட கலாச்சாரக் அமைப்பும் சேர்ந்து 100 பேர் கொண்ட பரதநாட்டிய, யக்ஷகானா கலைஞர்கள் அடங்கிய ஒரு குழுவைக் கென்யாவிற்கு நவம்பர் மாதம் அனுப்பப் போகிறது.  இவர்கள் அங்கு கன்னட கலாச்சாரத்தைப் பரப்பப் போகிறார்களாம்!  ஆயிரம் பேருக்குக் கலாச்சாரத்தைப் பற்றிக் கூற நூறு பேர் போகிறார்கள்.  எத்தனை கென்யர்கள் இவர்களுடைய நிகழ்ச்சிகளைக் காண வருவார்கள் என்று தெரியவில்லை.

    இந்தியர்கள் யாரும் கென்யர்களோடு பழகாவிட்டாலும் கென்யர்களுக்கு இவர்கள் மேல் வெறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கென்யாவிற்கு வந்து அதன் பொருளாதாரத்தில் பங்கு பெற்றிருப்பதால் தாங்கள் பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறார்களே- யொழிய அவர்கள் மேல் வன்மம் பாராட்டுவதாகத் தெரியவில்லை.  இந்த இந்தியர்கள்தான் அம்மண்ணுக்குரிய கென்யர்களோடு சுமுகமாகப் பழகாமல் தனித்து வாழ்கிறார்கள்.  இந்தியர்கள் குடியிருப்பு தனியாக இருக்கிறது.  கலப்புத் திருமணங்கள் நடப்பதாகத் தெரியவில்லை.  இந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும்.  இவர்கள் அமெரிக்கக் கருப்பர்கள் தங்களை விட தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  வெள்ளை இனத்தவர்களைத் தங்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.  இதை எங்கேயிருந்து கற்றார்கள் என்று தெரியவில்லை.  அமெரிக்க இந்தியர்களுக்கு இருக்கும் கருப்பு இன நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இவர்களைப் போன்றவர்கள்தான் கென்ய இந்தியர்களும்.

    (தொடரும்)

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்- 5000 ஆண்டு பழம் நகரம் ஊருக், பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி (4)

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இன்றைய தெற்கு ஈராக் நகரமாக அறியப்படும் வார்க்கா (Warka) முந்தைய மெஸொப்போட்டேனியாவின் ஊருக் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டதொரு நகரம். இந்த நகரம் ஈராக் தலைநகரமான பக்டாட்டிலிருந்து 300கிமீ தூரம் தெற்கில், சமாவா நகருக்கு 15கிமீ கிழக்கில், இயூக்ரப்டீஸ், திக்ரீஸ் நதிக்கரை அமைந்திருந்த பகுதியில் உள்ள பகுதி. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உலகளாவிய மனித நாகரிகத்தின் சுவடுகளை ஆராயும் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.

    முதன் முதலில் 1849ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் வில்லியம் கென்னத் லோஃப்டுஸ் என்னும் தொல்லியல் ஆய்வாளர் இப்பகுதியில் ஓர் நகரம் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதுவே பழமையான சுமேரியன் நகரான ஊருக். ஆங்கிலேய அரசின் ஆணையின் படி வெவ்வேறு நாடுகளில் சில குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட திரு.கென்னத் இறுதியாக ஆங்கில காலனித்துவ இந்தியாவில், தனது பணியை ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில் நோய்வாய்ப்பட்டு 1856ல் இந்தியாவிலேயே இறந்தார். அப்போது அவருக்கு வயது 38.

    அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கம் அப்போதைய ஒட்டோமான் பேரரசை அணுகி ஊருக் (ஈராக்) நகரப் பகுதியில் தொடர்ந்து தாங்கள் அகழ்வாராய்ச்சிகள் செய்ய விண்ணப்பித்து சம்மதம் பெற்று 1912ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினர். ஊருக் எனும் ஒர் நகரமும் அங்கு நாகரிகம் அடைந்த ஒரு சமூகமும் இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்தமையையும் குறிப்பிடும் சான்றுகளை இந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடித்தது இவ்வாய்வை மேற்கொண்ட குழு. இவ்வாய்வு தொல்பொருள் ஆய்விற்கு மிகச் சிறப்பானதொரு கண்டுபிடிப்பாக அமைந்ததோடு பல்வேறு தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.

    ஊருக் நகரில் ஆய்வுப் பணிகளின் போது நன்றி: http://www.dainst.org
    ஊருக் நகரில் ஆய்வுப் பணிகளின் போது
    நன்றி: http://www.dainst.org

    இங்கு தொல்லியல் பணிகள் தொடங்கிய காலம் தொட்டு இப்பகுதியில் இடையிடையே நடைபெற்று வந்த போர், அரசியல் மாற்றங்களால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் தொடர்ந்து இடர்பாடுகளுக்குள்ளாகி வருவது தொல்லியல் ஆய்விற்கு பெருமளவில் தடங்கலாகவே அமைந்திருப்பது உண்மை. இத்தகைய தடைகளுக்கிடையேயும் இது வரை நாற்பதற்கும் குறையாத வெவ்வேறு ஆய்வுகள் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்டு இங்கு ஊருக் நகரமும் அந்நகரத்து மக்களின் நாகரிகம் பண்பாடு பற்றியும் ஓரளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது ஆய்வு உலகத்திற்கு கிடைத்திருக்கும் பெறும் நன்மையே.

    இத்தனை ஆய்வுகளும் இந்த நகரைப் பற்றிய முழுமையான தகவல்களை வழங்கி விட்டதா என்றால் இல்லை என்பது தான் விடையாகிறது. ஜெர்மானிய கீழ்த்திசைச் சங்கத்தினரின் அறிக்கையின்படி ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான ஊரூக் நகர் மட்டுமே இதுவரை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்னும் தகவலை அறிகிறோம். இக்குறுகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளே இந்த நகரத்தின் அக்கால நிலையை இன்று நமக்கு விளக்க உதவுவதாக உள்ளன.

    ஈனன்னா கோயில் கண்டெடுக்கப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வுப்பகுதியாக ஈராக்கில் பாதுப்பில் இருக்கும் ஒரு பகுதி. நன்றி: http://www.dainst.org
    ஈனன்னா கோயில் கண்டெடுக்கப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வுப்பகுதியாக ஈராக்கில் பாதுப்பில் இருக்கும் ஒரு பகுதி.
    நன்றி: http://www.dainst.org

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டையாடியும் மீன் பிடித்தும் ஊர் ஊராக நாடோடிகளாகத் திரிந்த சமூகத்தினரில் ஒரு சிறு பகுதியினர் மெஸபொட்டோமியாவின் தெற்குப் பகுதியில் குடியேறினர். கிபி 3200 ஆண்டு வாக்கில் அங்கே நிரந்தரமாகத் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் அமைத்த நகரமே ஊருக் என்ற பெயருடன் இன்று அறியப்படுகிறது. இங்கு அறியப்படும் நகரம் நல்ல நாகரிகம் அடைந்த ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமளிப்பதாகவும் அமைகிறது. சிறந்த கட்டுமான வடிவத்தைக் காட்டும் கட்டிடங்களின் அமைப்பு, சிற்பங்கள், சிலைகள், வழிபாட்டு முறைகள், ஈமக்கிரியை முறைகள், எழுத்து வடிவங்கள் என பண்பாட்டு வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தைக் காட்டும் சான்றுகளாக இவை நமக்கு இன்று கிடைக்கின்றன. சுமேரிய நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாக ஊருக் கருதப்பட்டாலும் பெரும்பாலும் அக்காடியப் பேரரசுடன் இணைத்து கருதப்படும் ஒரு நகரமாகவே இது பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.

    பெர்லின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த கண்காட்சியாக 5000 ஆண்டு பழமை வாய்ந்த நகரமான ஊரூக் பற்றிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் பெர்லின் நகருக்கு நான் சென்றிருந்த வேளையில் அங்கு பெர்காமோன் அருங்காட்சியகத்தில் இந்தக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு அமைந்தது. ஜெர்மனியின் பழமை வாய்ந்ததும் உலகப்புகழ் வாய்ந்ததுமான ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஊருக் நகரக் கண்டுபிடிப்புகளும் இந்தக் கண்காட்சியில் இணைத்து வைக்கப்பட்டிருந்தன.

    ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு - எழுத்துக்குறியீடும் சிற்பமும் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு படிமம்.
    ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு – எழுத்துக்குறியீடும் சிற்பமும் இணைந்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு படிமம்.

    1912ம் ஆண்டு முதல் 1989 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த நகரின் வழிபாட்டு மையங்களைக் கண்டுபிடிப்பதைக் குறிக்கோளாக வைத்து ஆய்வுகளை மேற்கொண்டன. இக்காலகட்டத்தில் 39 தனித்தனி ஆய்வுகளில் பல சான்றுகள் இப்பகுதியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டன. அவற்றில் போர், அருள் இவையிரண்டிற்கும் ஆதாரமாகக் கருதப்படும் ஈனன்னா தெய்வம், சொர்கத்திற்கான இறைவடிவமான அனு, கிமு 14ம் நூற்றாண்டுக் கோயிலான காரைண்டாஷ் கோயில், கிமு 3-2ம் நூற்றாண்டு கோயிலான காரெய்ஸ் கோயில், கிமு 20-18ம் நூற்றாண்டு ஷின்காஷிட் அரண்மணை போன்றவையும், எழுத்து வடிவங்களும், ஈமக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளும், அலங்காரப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    உலகப் பிரசித்திப் பெற்ற கண்காட்சிகளின் வரிசையில் இடம் பெறும் ஊருக் கண்காட்சியை நேரில் பார்த்து அறிந்து கொண்டமை தனிப்பட்ட வகையில் எனக்கு பிரமிப்பை அளிக்கும் உணர்வினை அக்கணத்தில் ஏற்படுத்தியது என்பதை நான் மறுக்க முடியாது. இன்றைக்கு 5000 ஆண்டுகால பழமையான ஒரு நாகரிகம் நமக்கு விட்டுச் சென்றுள்ள விஷயங்கள் ஏராளம். இந்த கண்டுபிடிப்புகளை தம் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து முடித்த ஆய்வாளர்களையும் தொடர்ந்து இவ்வாய்வுகளில் ஈடுபட்டு புதிய ஆய்வு முடிவுகளை உலகுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையும் நினைத்துப் பார்க்கும் போது மனம் பெருமிதம் அடைகிறது. இத்தகைய கண்காட்சிகளுக்கு லட்சக்கணக்கான யூரோ செலவிட்டு அவற்றைப் பாதுகாத்தும் ஆய்வாளர்களை ஊக்குவித்தும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தும் வரும் பெர்கமோன் அருங்காட்சியகத்தைப் பாராட்டுவது மிகத் தகும் அல்லவோ!

    தொடரும்

    நன்றி:

    Suba Tremmel
    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
    Share
  • பக்தர்களின் ஏ.டி.எம்!

     

    கவிநயா

    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.

    என்பது திருக்குறள்.

    அருட்செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்ததாம். பொருட்செல்வமானது, கீழோரிடத்து உட்பட எவரிடத்தும் இருக்குமாம் என்பதே பொருள்.

    அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அருட் செல்வத்தை அள்ளி வழங்குபவள், அன்னை பராசக்தி. அவளே பக்தர்களின் அள்ளக் குறையாத நிதியாக இருப்பவளும், பக்தர்களுக்கு அள்ளக் குறையாத நிதியைத் தருபவளும், என்கிறது லலிதா சகஸ்ரநாமம். “பக்த நிதிர்” என்பது அன்னையின் ஆயிரம் நாமங்களில் ஒன்று.

    பக்தர்கள் வேண்டும் அனைத்தையும், பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும், பரிவுடன் தருபவள் அன்னை. சாஸ்திரம் தெரியா விட்டாலும், வழி முறைகள் அறியா விட்டாலும், உள்ளார்ந்த அன்பால் மட்டுமே பூசித்தால் கூட அகம் மகிழ்வாளாம் அவள்.

    குற்றம் குறைகள் இருந்தாலும், கொடூரமான தவறே செய்து விட்டாலும், தாயால் மட்டுமே அதனைச் சகிக்க முடியும்; மனதார மன்னித்து மறக்கவும் முடியும். அகிலத்துக்கெல்லாம் அன்னையான அவளுக்கும் அதே குணம் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

    அவள் இன்னும் என்னென்னவாகவெல்லாம் இருக்கிறாளாம்? அபிராமி பட்டர் அடுக்கிக் கொண்டே போவதைப் பாருங்கள்!

    துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
    பணையும் பதி கொண்ட வேரும்…

    அவளே என் துணை; பெற்ற தாயும் அவளே; வேதங்களின் கிளைகளாகவும், வேராகவும் அவளே இருக்கிறாள், என்கிறார் பட்டர்.

    மேலும்,

    ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
    வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
    தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
    கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

    அவளே ஆனந்தமாகவும், அறிவாகவும், வாழ்வின் அமுதமாகவும், ஆகாயத்தில் தொடங்கி ஐம்பூதங்களாகவும், வேதங்களுக்கெல்லாம் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருக்கிறாள்.

    அவளைப் போற்றி வணங்கும் அடியவர்கள் எப்படிப்பட்டவர்களாம்?

    ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
    காத்தும் அழித்தும் திரிபவராம்…

    பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னையாம் அவள்.

    மும்மூர்த்திகளும் அவளுடைய பாதங்களில் தலை வைத்து, தலையின் மேல் கைகளைக் கூப்பி, வணங்குகிறார்கள். அதனால் அவளுக்குச் செய்யும் பூசனைகள் யாவும் அவர்களுக்கும் செய்ததாகவே ஆகிறது, என்கிறார் ஆதிசங்கரர் (சௌ.ல. 25).

    மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
    குனிதரும் சேவடிக் கோமளமே…

    என்கிறார் பட்டரும்.

    வேறு யாரெல்லாம் அவளை வணங்குகிறார்களாம்?

    ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
    போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.

    புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன், முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் அனைவரும் அவளைப் போற்றித் துதிப்பார்களாம்.

    இன்னும் என்னவெல்லாமாய் இருக்கிறாள் அவள்?

    சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
    சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
    முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
    புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

    சித்தியாகவும், அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாள். பராசக்தியாகிய அவள் கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என நின்று, சகல பந்தங்களினின்றும் காக்கக்கூடிய தெய்வமாக இருக்கின்றாள்.

    பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
    மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
    இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
    அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

    அவளே பொருளாக இருக்கின்றாள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் அவளே. அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாள், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாள்.

    இப்படியாக, ஆதியந்தமற்று, மறைகளின் முதலும், முடிவும், நடுவுமாக, ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து இவ்வுலகு எங்கும் பரந்தும், பொருளாகவும், மருளாகவும், தெருளாகவும், அருளாகவும், மும்மூர்த்திகளின் சக்தியாகவும், மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் முனிவர்களாலும் வணங்கப்படுபவளாகவும், சித்தியாகவும், புத்தியாகவும், முக்தியாகவும், அறிவாகவும், அது தரும் ஆனந்தமாகவும், இப்படி எல்லாமாகவும் இருக்கிறாள் அன்னை.

    போற்றித் துதித்து உருகி வணங்கிச் சரண்புக வேறென்ன வேண்டும் ஒரு பக்தனுக்கு? பக்தன் என்னவாக நினைத்து வணங்க விருப்பம் கொண்டாலும், அந்த வடிவாகவும், பக்தன் எதை விரும்பிக் கேட்டாலும், அதைத் தரக் கூடியவளாகவும் இருக்கிறாள். எனவே அவளே பக்தர்களின் பொக்கிஷமாக இருக்கிறாள்.

    அவளை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கே, புண்ணியம் செய்திருக்க வேண்டும், என்கிறார் ஆதிசங்கரர் (சௌ.ல.1). அதனால் புண்ணியம் செய்தவருக்கே அவள் பெரும் புதையலாகக் கிடைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

    என் மகன் சிறுவயதாக இருக்கும் போது, “பணம் தீர்ந்து போச்சே, என்ன செய்யலாம்?” என்று கேட்டால், “ஏடிஎம் –மில் போய் எடுத்துக்க வேண்டியதுதானே” என்பான்! அதைப் போல, அடியவர்களின் ‘ஏடிஎம்’ அவள்தான்! ‘பக்தி’ என்னும் வங்கியில் கணக்கு இருந்தால் போதும். அவளே நிதியாக வந்து உதவுவாள்.

    சில சமயங்களில் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்றும் சொல்வதுண்டு. பணம் மரத்தில் காய்க்கிறதோ இல்லையோ, ஆனால் அருள் காய்க்கும் கல்ப தரு அவள்தான்.

    இப்படிப்பட்ட பக்த நிதியான அன்னையைத் துதிப்பவர்கள் அளப்பரிய அருட்செல்வத்தைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

    படத்துக்கு நன்றி: http://ananthsvedhagroup.org/

    Share
  • “உரத்த சிந்தனை”

    தமிழ்த்தேனீ

     

    இறைவனவன் தன்வேலை அதிகமான காரணத்தால்
    உரத்துக் குரல் கொடுத்து ஓங்கியே ஒலிக்கும்
    மனசாட்சி யெனும் ஒரு தானியங்கிக் கருவியை
    உண்மைக்கு சாதகமாய் தன்சார்பாய் தன்மறுபதிப்பாய்

    நம்முள்ளே புதைத்து வைத்தான் உள்ளத்தில்
    பொதிந்து வைத்தான் அறுகிவிட்ட நேர்மைதனை
    மீட்டெடுக்க ஒரு கருவி காலம் தவறாமல்
    நேர்மை தவறாமல் தானாய் இயங்கும் கருவி

    உரத்த சிந்தனையாய் உண்மையின் பெட்டகமாய்
    தானியங்கிக் கருவியதை உயிர்தரும் போதினிலே
    உடலுடனே ஒட்டி வைத்து அனுப்பி வைத்தான்
    நம்முள்ளே ஒளித்து வைத்தான் நாமே அறியாமல்

    ஓராயிரம் சிந்தனை நம்உள்ளத்தில் விளைந்தாலும்
    சுயநலமாய் சிந்தித்தே உண்மைதனை நாம் ஒதுக்கிக்
    உறுத்துகின்ற போதிலெல்லாம் உரத்த சிந்தனையை
    ஒதுக்கி வைத்தே வாழுகின்றோம் வாய்மை மறந்து

    ஒளித்துக் கூறாது உரத்துக் குரல் கொடுக்க
    ஒளித்து வைத்தே நாமும்தான் நாடகமாடுகிறோம்
    உலகினையே உள்வாங்கும் கடல் போல
    உண்மைகளை உள்வாங்கும் திடல் போல

    உண்மைக்குப் புறம்பாய் வேறெதையோ தேடுகின்றோம்
    மனம் மறைக்கும் கபடவேடம் தரித்தே நிற்கின்றோம்
    உரத்த சிந்தனையாய் மாறுகின்ற ஒவ்வொன்றும்
    உயர்த்திப் பிடிக்கும் நம்மை ஓங்கி வளர்க்கும்

    உழைப்பெனும் உரமிட்டு உண்மையெனும் நீரூற்ற
    தழைக்கின்ற வயல்தனிலே ஓங்கிவளர் நெற்பயிர்போல
    கடவுளின் தூதுவனாம் தானியங்கிக் கருவியதாம் உரத்த
    சிந்தனைய மனிதநேய உரமிட்டு மனசாட்சி நீறூற்றி
    வளர்த்திடுவோம் மானுடமும் வளர்ந்திடவே!

     

    Share
  • பிராயச்சித்தம்

    சு.கோதண்டராமன்

     
    (இந்த என்னுடைய கதை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது. மறு பகிர்வாக இங்கு வெளியிடுகிறேன்.- சு. கோதண்டராமன்)

     
    மூடிய கதவுக்கு வெளியே பெருங் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. அவ்வப்போது சிலர் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

    அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே,

    பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே,

    உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

    பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும்

    எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

    இந்த ஜபத்தைத் திரும்பத் திரும்பக் கூறித் தங்கள் மனத் துயரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

    அறையின் உள்ளே அவரது அன்புக்குப் பாத்திரமான ஃபாதர் சின்னசாமி படுத்திருக்கிறார். ஒரு வாரமாகக் கண் திறக்கவில்லை. உணவு தண்ணீர் இல்லை. அருகில் இரண்டு அணுக்கத் தொண்டர்கள் அவரது தேவையை உணர்ந்து செயல்படத் தயாராக இருந்தனர். அவ்வப்போது கதவைத் திறந்து அவரது உடல் நிலை பற்றிய செய்தியை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தினர்.

    ஃபாதர் அசையாமல் படுத்திருந்தார். அவரது மூடிய கண் இமைகளில் ஒரு சுழிப்பு. உதடுகளில் லேசான அசைவு. ஏதேனும் சொல்ல விரும்புகிறாரோ? குனிந்து காது கொடுத்தனர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க”

    ஆகா, எப்பேர்ப்பட்ட தூய உள்ளம்! தன் நிலை மறந்த நேரத்திலும் இறை வழிபாட்டை மறக்கவில்லையே என வியந்தனர்.

    ஃபாதரின் உடல் தான் கிழித்த நாராகக் கிடந்ததே தவிர, அவரது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காட்சிகள் அவரது மனக் கண் முன் விரிந்து கொண்டிருந்தன.

    இதோ ஒரு குளத்தங்கரை மண்டபம். சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பல ஆண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் அவர்களிடையே பரபரப்பாக ஓடி ஓடிப் பூணூல் வினியோகித்துக் கொண்டிருக்கிறான்.

    “சுப்புணி, எல்லாருக்கும் பூணூல் குடுத்துட்டயா?” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ‘ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டு விட்டு “சுக்லாம்பர தரம் விஷ்ணும் …..” சொல்கிறார். கூட்டம் அவரது சொற்களை எதிரொலிக்கிறது.

    இதோ மற்றொரு காட்சி.

    பள்ளிக் கூடம். இடைவேளை. சுப்புணி தனியே உட்கார்ந்திருக்கிறான். தலைமை ஆசிரியர் அங்கு வருகிறார்.

    “ஏண்டா, சாப்பிடலையா?”

    “இல்லை, ஃபாதர்.”

    “அம்மா சாதம் கட்டிக் கொடுக்கல்லியா?”

    “இல்லை ஃபாதர்.”

    “என் அறைக்கு வா. காசு தரேன். ஓட்டல்லே போய் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிடு.”

    “வேண்டாம், ஃபாதர்.”

    “ஏண்டா?”

    “பிறத்தியார் கிட்டே வாங்கிக்கக் கூடாது என்று எங்கம்மா சொல்லியிருக்கா, ஃபாதர்.”

    “உங்கப்பா புரோகிதர் தானேடா. அவர் பிறரிடம் தானம் வாங்கறது இல்லையா? அது தேவலாம் என்றால் இதுவும் தப்பில்லை. வாங்கிக்க.”

    “இல்லே, ஃபாதர். எங்கப்பா தானம் வாங்கினா, கொடுத்தவாளுடைய நன்மைக்காக ஜபம் பண்ணுவார், அல்லது காவேரி ஸ்னானம் பண்ணுவார், ஃபாதர்.”

    “அந்த மாதிரி நீயும் இதை இப்ப வாங்கிக்க, பின்னாடி எனக்காகவும் இந்த ஸ்கூலுக்காகவும் ஜபம் பண்ணிடு.”

    வாதத்தில் தோற்றுப்போன சுப்புணி வயிற்றுப் பசி தீர்க்கக் கை நீட்டுகிறான்.

    அந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி விரிகிறது.

    ஒரு விதவைத் தாய்.

    “வாடா சுப்புணி, சந்தியா வந்தனம் பண்ணிட்டுவா, சாப்பிடலாம். காலம்பறலேர்ந்து சாப்பிடலை, பாவம்.”

    “இல்லேம்மா, மத்தியான்னம் ஸ்கூல்லே சாப்பிட்டுட்டேன்.”

    “யார்டா சாதம் போட்டா?”

    சொல்கிறான்.

    “போன வருஷம் ஒரு நாள் நீ அந்த மாதிரி சாப்பிட்ட போதே, அது தப்புன்னு சொன்னேனே அப்பா. கண்டவா கிட்டேயும் வாங்கிக்கக் கூடாதுடா. உங்கப்பா எல்லார் கிட்டேயும் தானம் வாங்கிட மாட்டார். யார் சாதம் போடறாளோ அவா குணம் நமக்கு வந்துடும்னு, நல்ல சத்துக்கள் வீட்டிலே தான் சாப்பிடுவார்.”

    “இல்லேம்மா, ஃபாதர் ரொம்ப நல்லவர். நான் நன்னாப் படிக்கறேன்னு எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்ம்மா.”

    காட்சி மாறியது.

    அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள், “வாண்டாண்டா சுப்புணி, சொன்னதைக் கேளுடா, எனக்கு ஒரு கொள்ளி போட்டுட்டு நீ எப்படி வேணுமானாலும் போ. அவன் கையிலே சோறு வாங்கித் தின்னு அவன் புத்தியே உனக்கு வந்துடுத்தேடா.”

    சுப்புணியும் கெஞ்சுகிறான். “மதம் தான் மாறுகிறேனே தவிர, உன் பிள்ளை என்பது இல்லாமல் போகமாட்டேன் அம்மா. உன்னை மறக்க மாட்டேன்ம்மா. அப்பா இறந்தபின் எனக்காக நீ எப்படி உழைச்சு ஓடாப் போயிருக்கேங்கிறதை நான் பாத்துண்டு தானே இருக்கேன். எத்தனை வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சிருக்கே, எத்தனை கல்யாணத்திலே கல்லைக் கட்டி இழுத்து மாவு அறைச்சிருக்கே, இனிமே நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அடுத்த மாசத்திலேருந்து எனக்குச் சம்பளம் வரும். நீ சௌகர்யமா இருக்கலாம். உன்னைக் காப்பாத்தறது என் கடமை. நான் மறக்க மாட்டேம்மா.

    “அதே நேரத்திலே எனக்கு இன்னொரு கடமையும் இருக்கும்மா. எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்க வைச்சு நான் பட்டினி கிடக்க நேரிட்ட போதெல்லாம் என் முகம் பாத்து சாப்பாடு போட்ட மதத்துக்கும் நான் நன்றி செலுத்தணும் அம்மா.”

    “அதுக்காக மதம் மாறித் தான் நன்றி செலுத்தணுமோ? இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா?”

    ………..

    அன்று அவன் தான் செய்தது சரி என்று கருதி வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அம்மா அவனை அதன் பின் வீட்டில் அனுமதிக்கவில்லை.

    ஆயிற்று. அறுபது வருஷங்கள். எத்தனை பிரசங்கங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் ஃபாதர் சின்னசாமி! ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே! மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே! ஜபம் சொல்லிப் பார்க்கிறார் ஃபாதர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க..”

    ‘என்னவோ இன்றைக்கு மரியே என்பதற்குப் பதில் அன்னையே என்ற சொல் தான் உள்ளத்தில் சுழல்கிறது. அவரது அன்னையைப் பொறுத்தவரை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா? என்ன தியாகம்! இருந்த ஒரே பிள்ளையை, வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தவனை உயிருடன் தியாகம் செய்தவள் எவ்வளவு பெரிய மனது உடையவள்! ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே!’

    ‘அவளுக்குத் தான் என்ன மன உறுதி! நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே! அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே! தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா? வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா? நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா? என் தாயைத் தவிக்க விட்டது சரியா?

    ‘இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் அறுபது வருஷம் கழித்து இந்த சிந்தனை? அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா?’

    ‘வெறும் ஜபம் செய்தால் மட்டும் ஒருவன் பாவங்களிலிருந்து தப்ப முடியாது. அவன் மனம் வருந்திப் பரிகாரமான செயல்களும் செய்து தான் திருந்தியதைத் தன் மனம் ஒப்பும் வகையில் நிரூபிக்க வேண்டும்.’

    அவர் மற்றவர்களுக்கு உபதேசித்த வார்த்தைகள் அவர் காதில் ரீங்காரமிட்டன. ‘என்ன செய்யலாம்? நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும்? அன்னையே, எனக்கு சக்தி கொடு.’

    அவரது உதடுகள் மெல்ல அசைந்தன. அணுக்கத் தொண்டர்கள் குனிந்து அவர் வாயருகே காதை வைத்துக் கேட்டனர்.

    “வைத்தி, வைத்தி”

    “யார் வைத்தி என்பது?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அவரது உதடு அசைந்தது.

    “வைத்தி, பாஸ்கரராஜபுரம், பார்க்கணும்.”

    தங்கள் தெய்வத் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றத் தொண்டர்கள் பறந்தனர். எப்படியெல்லாமோ விசாரித்து வைத்தியைக் கொண்டு வந்துவிட்டனர்.

    அங்குக் கூடியிருந்த கூட்டத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். குடுமி, துண்டு மட்டும் போர்த்திய மார்பு, பூணூல், பஞ்சகச்சம், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம்.

    கூசிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரது பால்ய நண்பன் சுப்புணி கட்டிலில் நார் போலக் கிடந்தான்.

    எவ்வளவு அன்யோன்யமாக இருந்தார்கள்! சுப்புணி வீட்டை விட்டு வெளியேறு முன் தாயையும் மகனையும் சேர்த்து வைக்க எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் இந்த வைத்தி. பின்னர் இவர் மூலம் தான் சுப்புணி அம்மாவுக்குப் பணம் அனுப்பினான். அம்மா காரியமும் சுப்புணி தான் செய்தார். அதன் பின் அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.

    “உட்கார்.”

    ஜாடை காட்டினார் சின்னசாமி. வைத்தி கூசிக் கொண்டே ஸ்டூலில் உட்கார்ந்தார். ‘அவரை எப்படிக் கூப்பிடுவது? சுப்புணி என்று கூப்பிடுவதா? சார் என்றா? எல்லோரையும் போல ஃபாதர் என்றா?’

    இருந்த சக்தி எல்லாம் திரட்டி ஃபாதர் பேசினார், மெதுவாக, ஆனால் நிதானமாக.

    “என் கணக்கிலே கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்ம ஊர் வேத பாடசாலைக்கு சேர்ப்பித்து விடு. இந்த என் கடைசி ஆசையை நிறைவேத்துவியா?”

    அவரது குறிப்பு உணர்ந்த தொண்டர் அவரது செக் புத்தகத்தை நீட்டினார். நடுங்கும் கைகளால் அதில் கையெழுத்துப் போட்டு வைத்தியிடம் கொடுத்தார் ஃபாதர்.

    அடுத்த கணம் விவரிக்க முடியாத அமைதி அவரது உள்ளத்தில் தோன்றியது. அவரால் முடிந்த பரிகாரம் செய்துவிட்டார். மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றும் தன் உடலைத் தானே மேலிருந்து பார்ப்பது போலவும் உணர்ந்தார். கண்கள் ஒரு கணம் மின்னின, பின் மூடிக் கொண்டன. அறுபது ஆண்டுக் காலம் இறை பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

    அவரது நண்பர் வைத்தி- அவரைப் போலவே அறுபது ஆண்டு காலம் புரோகிதத் தொழில் செய்து மற்றவர்களின் நன்மைக்காக வேண்டுவதிலேயே காலம் கழித்த அந்தக் கிழவர் அந்த இடத்தை விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறினார்.

     

    Share
  • குறவன் பாட்டு – 9

    
    சச்சிதானந்தம்
    
    
    கரடியின் தாண்டவம் 
    
    
    
    

    குட்டிக ளிரண்டைக் கூட்டிக் கொண்டு,

    வெட்டிரும் பொத்த முகத்தைக் கொண்டு,

    முட்டிக் கரையான் புற்றைச் சாய்த்தது,

    கட்டுறுதிக் குணக் கரடி யொன்று!                                                                                              68

     

    குரங்கைப் போலக் கரடிக் குட்டிகள்

    குதித்துத் தாவித் தாயின் முதுகில்,

    களிறின் மீதமர் கோவைப் போல,

    கம்பீரத் தொனி கொண்டமர்ந் தனவே!                                                                                        69

     

    உலர்ந்தசெம் புற்றைத் தாக்கிக் குலைத்து,

    வலம்வரும் கரடியைக் கண்டது கொண்ட,

    பலமும் குணமும் அறிந்து குறவன்,

    புலனைந் தொடுக்கிப் பதுங்கி மறைந்தான்!                                                                           70

     

    நூறடி தூரத்தில் புலியொன் றுறுமி,

    நாலடி உயர மானைத் துரத்த – அம்மானோ

    ஓரடிப் பாய்ச்சலில் எட்டடி தாண்டி

    மூவிரு நொடிகளில் கரடியைக் கடந்தது!                                                                                 71

     

    நடப்பது இதுவென் றறியும் முன்னே,

    நெருங்கிய புலிகண்டு நடுங்கிய குட்டிகள்,

    நழுவித் தாயின் முதுகில் இருந்து,

    நிலத்தில் சரிந்து நெஞ்சம் பதறின!                                                                                                 72

     

    வேகம் எடுத்த புலிதன் னருகே,

    தேகம் கறுத்த கரடியைக் கண்டு,

    நாகம் போலுடல் சீறி எழுந்திட,

    சாகுங் கலைமான் செத்துப் பிழைத்தது!                                                                                    73

     

    தூணைப் பிளந்த சிம்மம் போல,

    முன்னங் கால்களை மேலே தூக்கி,

    தோள்கள் விரித்து அசுரத் தாண்டவம்,

    ஆத்திரம் பொங்க ஆடிடும் கரடி!                                                                                                       74

     

    புஜபலங் காட்டும் முன்னர் எதிரியின்,

    நிஜபலம் நோக்கும் மன்னர்கள் போல,

    கஜநிறக் கரடியும் கறுவரிப் புலியும்,

    ஜெயம்தனைக் கருதிப் போரின்றிப் பிரிந்தன!                                                                      75

     

    அஞ்சுவ தஞ்சும் ஆற்றல் கொண்டு,

    ஆரண் யத்தின் பாரம் பரியம்,

    அறிந்த குறவன் அமைதியைக் காத்து,

    ஆபத் துகளைத் தவிர்த்து வாழ்ந்தான்!                                                                                 76

    Share
  • காலகாலர் துதி

    புவனேஷ்வர்

     

    மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்

    பேணிய நாளும் நிலையோ – தேமொழிநல்  

    தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட

    காலகா லன்பதம் சேர்.

     

    தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்

    சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா – தேமொழிநல்

    கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட 

    காலகா லன்பதம் சேர்.

     

    வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்

    தீரமுடன் சேர் தம்பியும் – தேமொழிநல்

    பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ

    காலகா லன்பதம் சேர்.

     

    கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்

    நற்றவம் போலவ ருமா   – தேமொழிநல்

    உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து

    காலகா லன்பதம் சேர்.

     

    நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்

    ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா – தேமொழிநல்

    புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்

    காலகா லன்பதம் சேர்.

    பி.கு: குமரி மாவட்டம் பத்மநாபபுரம் வட்டம் மேலாங்கோடு என்னும் திருத்தலத்தில் உறையும் ஈசனின் திருநாமம் ஸ்ரீ காலகாலர். அவர் மீது இயற்றப்பெற்ற பாடல்.

     

    Share
  • வாழ்க்கை நலம் – 25

    குன்றக்குடி அடிகள்

    25.  தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!

    ஒழுங்குகள், ஒழுக்கத்திற்கு முன்னோடி. ஒழுக்கங்கள் நெறிவழிச் செயற்பட ஒழுங்குகள் தேவை. ஒழுக்கம் தன் ஆக்கத்திற்குரியது; பிறருக்குத் தீங்கு செய்யாதது. ஒழுக்கம் பல துறையின. ஒழுக்கம் என்பது விரிந்த பரந்த பொருளுடையது. ஒரு நற்குணம், நற்செயல் மட்டுமே ஒழுக்கத்திற்கு அளவுகோலாக அமையாது.

    ஒழுக்கம் இரு வகையினது. ஒன்று தன்னிலை ஒழுக்கம். பிறிதொன்று சமூக ஒழுக்கம். தன்னிலை ஒழுக்கம் தலைப்பட்டு நிற்போர் பலர் சமுதாய ஒழுகலாறுகளின்றி வாழ்வர். சமுதாய ஒழுகலாறுகளில் தலைப்பட்டு நிற்போர் பலர் தன்னிலை ஒழுக்கம் திரிந்து நிற்பார். ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை. ஒரோவழி இருப்பினும் பயன் தராது.

    தனி நிலையில் வளரும் ஒழுகலாறுகள் உடல் நலத்திற்கு உற்ற துணை; ஆன்ம நலத்திற்கு அரண். அதனால் அறிவு நலம் சிறந்து விளங்கும். முதுமை நிலையிலும் இளமை பேணலாம். எப்போதும் செயற்படலாம்.  ஓயாது உழைத்திட ஒழுக்க நலம் துணை செய்யும்.

    சமூக நல ஒழுக்கங்கள் சமூகத்தை சீரமைக்கும். சூழ்நிலை வாழ்க்கைக்கு இசைந்ததாக அமையும்; நல்லெண்ணம் வளரும்; நம்பிக்கை வளரும்; என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

    நாடு பரப்பளவில் பெரியது. பலகோடி மக்கள் வாழ்வது. இந்நாட்டில் – பலகோடி மக்கள் வாழுமிடத்தில் நல்லெண்ணம் இன்றியமையாதது. ஒருவருக்கும், பிறிது ஒருவருக்கும் இடையே நல்லுறவு வேண்டும். மொழி, சமயம், எல்லைகள் கடந்த நிலையில் உறவுகள் கால்கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் நாடு வளரும்; நலமுறும். ஒரு நாட்டுணர்வு நிலையிலான ஒருமைப்பாட்டில் நிலைகொள்ள தேசிய ஒழுகலாறுகளை மேற்கொள்ள வேண்டும்.

    தேசிய ஒழுகலாறு என்பது நட்டு மக்களிடையில் வழிவழியாக வளர்ந்து வந்துள்ள ஆன்மநேய ஒருமைப்பாடு. பொதுநல அடிப்படைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாட்டிலும் தேசிய ஒழுகலாறுகள் என்று சில, வளர்ந்து இடம் பெற்றுள்ளன. அத்தேசீய ஒழுகலாறுகள் காலத்திற்கு இசைந்த வகையில் புதுப்பொலிவுடன் பேணப்படுதல் வேண்டும். ஒழுக்க நெறிக்கு அரண் செய்து வளர்வது பொதுநலம். அதாவது பிறர் நலம் பேணுதல். தன்னலம் ஒழுக்கக் கேடு.

    “உலகம் வேண்டுவது ஒழுக்கமே!
    சுயநலம் தீயஒழுக்கம்!
    சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

    என்றார் விவேகானந்தர்.

    வாழ்தல் என்பது இன்பமான ஒன்று. இன்ப வாழ்க்கையே இயற்கை. இன்ப நலன்களுக்காகவே உயிருடன் வாழ்கின்றோம். ஆனால், ஒழுக்க நலன்களே அச்சத்தை நீக்கும். இன்புறுந் திறனளிக்கும்; அமைதி வழங்கும். அதனால் உயிருடன் வாழ்தல் பயனுடையதாகிறது. உயிர் இன்றியமையாததுதான்! ஆனால், அதனினும் நல்லது ஒழுக்கம்.

    “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.”

    (குறள்  –  113)

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • ’கப்பலோட்டிய தமிழனின்’ 142வது பிறந்த தினம்!

    ஆவுடை நாயகம்

     voc

    சமுக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை உங்களுக்கு சுதந்திரமாக வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் எத்தனை தியாகம், நேர்மை ,ஆற்றல் காலம் சென்று இருக்கிறது தெரியுமா? உங்கள் குழந்தைகள் எல்லோரையும் பணக்கார பொறியாளனாக, மருத்துவனாக ,அரசியல்வாதியாக, தொழில் அதிபராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள உங்களுக்கு சுதந்திரத் தியாகிகளை காலம் சென்றாலும் வாழும் காந்தியாகவோ, “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடிய மகாகவி பாரதி, வீரபாண்டிய கட்டபொம்பன், உமறுப் புலவர் போல வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து உள்ளதா? அதுகூட வேண்டாம் அவர்களின் தியாகத்தை, வீரத்தை என்றாவது உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறீர்களா? இன்று யார் பிறந்தநாள் தெரியுமா?  சினிமா நடிகர்  பிறந்த நாளாகவோ, இல்லை கிரிக்கெட் வீரர் பிறந்த நாளாகவோ இருந்திருந்தால் தெரிந்து இருக்கும் நீங்கள் நலமாக வாழ, பணக்காரனாக, வழக்கறிஞராக  வாழ வேண்டியவர் தமிழ்,சுதேசியம்,  என்ற அரசியல் கோட்பாட்டை ஏந்தி வந்தவனை தேசத்தாய் தாங்கிக் கொண்ட தினம் .ஆம் , “கப்பலோடு வருவேன் இல்லை கடலில் விழுந்து சாவேன் ” என்ற கப்பலோட்டிய தமிழன் , செக்கு இழுத்த செம்மல், வழக்கறிஞர் வ உ சிதம்பரத்தின் 142வது  பிறந்த தினம்.

    ரூபாய் இருவது லட்சம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற ஆங்கில அரசின் சூழ்ச்சியை பாலகங்காதர திலகர் துணை கொண்டு வென்று தமிழனின் நேர்மையும், வீரத்தையும்  பறைசாற்றி பட்டொளி வீசி வங்கக் கடலில் சிங்கம் ஒரு கப்பலில் வந்தது கடல் மூலமாக வணிகம் செய்ய வந்தவர்களை திருப்பிக் கடல் வணிகத்தால் கலங்க வைத்த ஒரே தலைவன் , உன் பாட்டன் கப்பலோட்டிய  தமிழன் வ. உ.சிதம்பரம். சுதேசி கப்பலில் பயணிகள் நிரம்பினாலும் காத்திருந்து முதலில் ஆங்கிலேயர் கப்பல் சென்ற பிறகுதான் சுதேசி கப்பல் செல்ல வேண்டும் என்ற உத்தரவை நீதியின் துணை கொண்டு வீழ்த்தி சுதேசி கப்பல் சென்றது அப்படிப்பட்ட மாபெரும் வழக்கறிஞர் வ. உ.சிதம்பரம். கப்பலில் செல்லப் பயணிகள் கட்டணம் இலவசம், சரக்குக் கட்டணம் இலவசம் என்று கூறிய ஆங்கில அரசின் வியாபார தந்திரத்தையும், அரசியல் சூழ்ச்சியையும் கவனித்த சிதம்பரம் இலவசம்! இலவசம்  இது நம்மை விலைக்கு வாங்கும் முயற்சி.  எம்  மக்களே இலவசத்தை நம்பாதீர்கள் என்று இன்றைய இலவச அரசியல்  நிலையை அன்றே எடுத்து உரைத்தவன் கப்பலோட்டிய  தமிழன் வ. உ.சிதம்பரம்.

    இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது.  

    வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள்.வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். ஆங்கிலேயர்கள் பயந்து தூத்துக்குடி கடலில் உள்ள குட்டி, குட்டித் தீவுகளில் இரவுப் பொழுதைக் கழித்தார்கள்.

     சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”

    1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது. மரணத்தின் மடியில் வ உ சிதம்பரம் இருக்கும் போது கடைசியாய் தன் மனைவியைத் தமிழ் பாடச் சொல்லியிருக்கிறார். ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் “. செவிகள் பாரதியின் வரிகளைத் தாங்கியபடி,  காலம் அவர் உடலை மட்டும் எடுத்துச் சென்றது. வரலாறு அவர் பெயரை எடுத்துக் கொண்டது!

    Share
  • ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!..

    U Ve Sa 2
    வணக்கம், வாழியநலம்

    இன்று 5/9/13 (வியாழன்) ஆசிரியர் தினம்.

    எனக்கு எழுத்தும் எண்ணும் அறிவித்த என் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் என்

    சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!

    உபாத்யாயர்களுக்குள் உயர்ந்தவர் மஹோபாத்யாயர்…

    அவர்களுக்குள்ளும் உயர்ந்தவர் மஹாமஹோபாத்யாயர்…

    இந்நன்னாளில், தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களைத் தமிழ் உலகின்

    சார்பாக நினைவு கூர்ந்து அன்னாரின் ஓவியத்தை இணைத்து வணங்குகிறேன்.

    சு.ரவி

     

    Share