ராமஸ்வாமி சம்பத்

ALEXANDER

 

 

 

 

 

 

 

சத்தியத்துக்கு மனம் கட்டுப்பட்டதால் அலெக்சாண்டர் இன்னும் ஆலோசனையிலேயே இருந்தான். உண்மை அவனைப் பேசவிடவில்லை. அந்த மவுனத்தைப் பயன்படுத்தி ஆசுதோஷர் மேலும் பேசமுற்பட்டார்.

“சிகந்தர்! உன்னை மாவீரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறாய். ஒரு மாவீரனின் இலக்கணம் என்ன என்பது உனக்குத் தெரியுமா? ’எப்பொழுதும் உயிருக்குத் தீங்கு நேரிடுமோ’ என்ற பயத்தினால் கோழையாகத் திகழ்கிறாய். தாகத்தைக் கூட உன்னால் தனியாக தணித்துக்கொள்ள முடியாது அந்த நீரை உன் மெய்க்காப்பாளன் அருந்தி அதில் நஞ்சு கலக்கப்படவில்லை என்று சொல்லும் வரை. எந்த அத்தியாவசிய மருந்தையும் உன்னால் உட்கொள்ள முடியாது அதனை இன்னொருவன் பரிசோதனை செய்யாமல். அல்லும் பகலும் ’யார் யார் உனக்கு எதிராக சதி செய்கிறார்களோ?’ என்ற சந்தேகம் உன் மனதை வாட்டிக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட உன்னை எவ்வாறு மாவீரன் என்று கூறிக்கொள்கிறாய்?

“பல நாடுகளை வென்றதால் மட்டும் நீ மாவீரனாக முடியாது. வெறும் படை பலத்தால் கிடைத்த வெற்றி உனக்கு மேலும் புதிய பகைவர்களை உண்டாக்கும். அவர்கள் பழி வாங்கும் எண்ணத்தோடு தத்தம் படைபலத்தைப் பெருக்கிக்கொண்டு தக்க சமயத்திற்குக் காத்திருந்து உன்னைத் தோற்கடிக்க முயல்வர். போரில் வெற்றியா தோல்வியா என்பது சந்தர்ப்பங்களைப் பொருத்து இருக்கிறது. வாய்ப்புகள் கூடிவரும்போது தோற்றவரும் உன்னை வெல்லக்கூடும்.”

”அப்படியென்றால் நான் பெற்ற வெற்றிகளைக் குறைத்து எடை போடுகிறீர்களா?”

“ஒருக்காலும் உன்னை மலிவாக மதிப்பீடு செய்யவில்லை. அச்சுறுத்தும் படை வலிமையினாலும் போர்த் தந்திரங்களாலும் பெறும் வெற்றி தாற்காலிகமே என்பதனை உணர்த்த முயல்கிறேன்.”

“புரிந்துகொண்டேன்” என்று கூறிய அலெக்சாண்டர் முனிவரை நோக்கி, “எனக்கு போரஸ் போல் ஆன்மீக பலம் பெறவேண்டும் எனும் ஆவல். அதற்குத் தாங்கள் அருள் புரியவேண்டும்” என்றான்.

மீண்டும் மோகனப் புன்னகை புரிந்தவாறு ஆசுதோஷர் சொல்ல முற்பட்டார். “இதுவரை வெளிப்பகைவர்களை முறியடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாய். இனி உன் உள்நோக்கிச் செல்ல முயற்சி செய். உன்னுள் இருந்துகொண்டு உன்னை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் அந்த ஆறு உட்பகைவர்களோடு இடைவிடாமல் போராடு. அந்தபோரில் நீ வென்றுவிட்டால் ஆன்மீக பலம் உன் சொத்தாகிவிடும். கிடைத்த அந்த சொத்தைப் பேணி வளர்க்க வேண்டாமா? அதற்கு, நீ வென்ற நாட்டு மக்கள்மீது உன் அதிகாரத்தைத் திணிக்காமல் அவர்களை உன் பிரிய பிரஜைகளாக நடத்து. நல்லாட்சியை நல்கு. பரத கண்ட அரசர்கள்போல் மாறுவேடம் அணிந்து மக்கள் மத்தியில் புழங்கி அவர்கள் குறைகளை அறிந்து கொண்டு அவற்றை நீக்க முயற்சி செய். அப்படி செய்தால் உன் கொடுங்கோல் செங்கோலாக மாறிவிடும். மக்களும் உன் இறையாண்மையை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். அதன்பின் நீ ‘மாவீரன் சிகந்தர்’ மட்டுமல்ல. ’உத்தமன் சிகந்தர்’ எனவும் பேர் பெறுவாய்.”

அலெக்சாண்டருக்குப் புல்லரித்த்து. ’உத்தமன் சிகந்தர்! எத்தனை அழகான பெருமை வாய்ந்த விருது! அதை நான் பெற்றே ஆகவேண்டும்’ என்ற ஒரு உத்வேகம் அவனுள் எழுந்தது.

“முனிவரே! தாங்கள் சொல்லியபடி ‘உத்தமன்’ எனும் பேரெடுக்க விழைகிறேன். அதற்குத் தங்கள் ஆசிகளை வழங்குங்கள். பரத கண்டத்தில் நான் ஒரு சுபவேளையில் அடியெடுத்து வைத்திருக்கவேண்டும். இல்லாவிடில் ஆன்மீக பலத்தினை அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்குமா? முதற்கண் போரஸுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்”  என்று கூறி அவர் அடி பணிந்தான்.

அதன் பின்னர் ஆசுதோஷர் வெளியே நின்றிருக்கும் பவுரவ வீரனையும் அழைத்து அவர்கள் இருவரையும் ஆசிரமத்தில் அவர் விருந்தினராக இன்னும் ஒரு நாள் இருக்கக் கோரினார். ஆசிரமத்து எளிய உணவு வகைகள் அலெக்சாண்டருக்கு அமிர்தமாக இருந்தன. படாடோபமான அரண்மனை மஞ்சத்தைவிட தரைமீது போடப்பட்ட கோரைப்பாய் அவனுக்கு மிக்க சுகத்தோடு ஆழ்ந்த உறக்கத்தையும் அளித்து அவன் போர்க்களைப்பை நீக்கியது.

ஆசுதோஷர் அலெக்சாண்டருக்கு ஆன்மீக பலம் பெறுவதற்கு அவசியமான பிராணாயாமம் மற்றும் ஆழ்நிலை தியானம் இவற்றை சிறிது நேரம் அவன் சிரத்தின் மீது தன் கையை வைத்துக் கண்களை மூடி செவியருகே மெல்லமாகச் சொல்லிக் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் அளித்தார். அலெக்ஸாண்டர் தன்னை மறந்தான்.. தான் ஏதோ ஒரு மகத்தான சக்திக்குள் தானறியாமலே புகுத்தப்படுவதை உணர்ந்தான்.

அடுத்த நாள் ஆசியோடு அவர்களுக்குப் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

ஜீலம் நதிக்கரைக்குத் திரும்பிய அலெக்சாண்டர், புருஷோத்தமனை கட்டி அணத்துக் கொண்டான். “போரஸ் உனக்கும் ஆசுதோஷ முனிவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அஞ்சாநெஞ்சனான உன் உதவியால்தான் உண்மையான வலிமை எது என்பதனை உணர்ந்து கொண்டேன். உன்னை ஒரு அரசன்போல் நான் நடத்தவேண்டும் என்றுதானே கோரினாய்? அப்படியே உன் ராஜ்ஜியத்தை உனக்கே அளிக்கிறேன். மேலும் பக்கத்து காந்தார நாட்டின் பெரும்பகுதிக்கும் நீயே மன்னன் ஆவாய். உன் நட்பு எனக்கு என்றென்றும் தேவை” என்று மன நெகிழ்வோடு கூறினான்.

“பார்த்தீர்களா நான் கட்டிய ரக்‌ஷையின் மகிமையை! என் வருங்காலக் கணவரும் காப்பாற்றப்பட்டார். என் உடன்பிறவா அண்ணனுக்கும் ஆயுளோடு ராஜ்ஜியமும் கிடைத்து விட்டது” என்று ரொக்ஸானா பெருமிதத்துடன் உரைத்தாள். அங்கு குழுமியிருந்த அனைவரும் அவள் சொல்லுவதை ஆவலுடன் கேட்டு ஆமோதித்தனர்..

Education of Alexander the Great by Aristotleபின்னர் புருஷோத்தமனுடன் ஆலோசனை நடத்திய அலெக்சாண்டர் அவன் அறிவுரையின் படி சிந்துமாநதி மீதாக மேலைக்கடல் சேர்ந்து மாசிடோனியா திரும்ப நிச்சயித்தான். மீண்டும் காட்டுப்பாதை வழியாக பயணம் செய்ய வேண்டுமோ என்று கவலையுற்றிருந்த யவன வீரர்களின் மகிழ்ச்சி ஜீலம் நதிபோல் கரை புரண்டு ஓடியது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “உத்தமன் அலெக்ஸாண்டர்!…(பகுதி-7)

  1. அருமை ஐயா! அலெக்ஸாண்டருக்கு மட்டுமா, இந்தப் பகுதியை வாசிக்கையில் நமக்கும் அந்த ஆறு உட்பகைவர்களுடன் போரிட்டு வென்று பிறவிப் பயனைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. இறைவன் கருணை செய்ய வேண்டும். மிக்க நன்றி ஐயா.

  2. //அச்சுறுத்தும் படை வலிமையினாலும் போர்த் தந்திரங்களாலும் பெறும் வெற்றி தாற்காலிகமே என்பதனை உணர்த்த முயல்கிறேன்.”//

    இந்த உண்மையை உலக வரலாற்றில் அசோகரைத் தவிர வேறு யாரும் முழுமையாக உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. மாவீரன் அலெக்ஸாண்டர் இந்த உண்மையை உணர்ந்து செயல்படுத்தினானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

  3. அன்புள்ள சின்னப்பெண் கவிநயா,
    மிக்க மகிழ்ச்சி உன் ஆர்வத்திற்கு. இறைவன் கட்டாயம் கருணை செய்வான். முயற்சி திருவினை ஆக்கும்.
    ஆசிகளுடன்
    ஸம்பத்

  4. அன்புள்ள சச்சிதானந்தம் ஐயா,
    அலெக்சாண்டர் அந்த உண்மையை உணர்ந்து செயல்படுத்தியதால்தான் ‘Alexander, the Great’ எனும் விருதினைப் பெற்றான். ஆனால் அவன் ஜீலம் போர்க்குப்பின் மூன்று ஆண்டுகளே வாழ்ந்ததால் உலகத்தாரால் அத்தகைய மாற்றத்தின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
    வணக்க்த்துடன்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *