Blog

  • திருத்தணி முருகா.. தென்னவர் தலைவா..

    –காவிரிமைந்தன்.

    திருத்தணி முருகா

    சந்தக் கவிதை அருணகிரியாருக்கு வந்தகவியாவும் வழங்கியவன் கந்தநாதன்!  சிந்தையில் நிறைந்தபடி கந்தனை நினைத்தாலே முத்தமிழால் உள்ளம் துள்ளும்! எத்தனைப் பாடல்கள் எழுதினாலும் இன்பத்தேன் சிந்திடும்! அத் தமிழ்க் கடவுள் அவனாலே கற்பனை வளங்கள் பெருகும்! சக்தியின் மைந்தன்.. கருணையில் வள்ளல்!  சிவகுருபாலன்!.. நமைக் காக்கும் தெய்வம்!

    மலையரசி தாயால் மகிமை பெற்ற நம் கண்ணதாசன் – உள்ளம் உருகியே இயற்றிய பலத் திரைப்பாடல்கள் பக்திக்கு பல்லக்குத் தூக்கும்!  உருகாதோர் உள்ளமிங்கே ஒன்றிரண்டும் கிடையாது என்றே சொல்லும்!  கந்தன் கருணை முதல் திருவருள் முதலாக தமிழ்த் ‘தெய்வம்’ பற்றிய அவனது படைப்புகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்!

    arupadaiveedu_krstiruttani_murugathiruthani

     

    ‘நீலகிரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கா கவியரசு கண்ணதாசன் இயற்றிய பைந்தமிழ்ப் பாசுரம்.. கர்நாடக இசையிலும் வில்லிசைதன்னிலும் தேர்ச்சி பெற்று திரைக்கு இசையமைக்க முன்வந்த மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் தூய இசைக் கோர்வையில் முருகக்கடவுள் புகழ்பாடவே இப்பூமிக்கு வந்து அவதரித்த சூலமங்கலம் சூலமங்கலம் ராஜலட்சுமி – பி.சுசீலாவுடன் இணைந்து வழங்கிய குரல்களில் தெய்வீக மணம் கமழும் தெள்ளமுதம் இதோ..

     

    காணொளி : http://youtu.be/O3HbgyxHcW4

    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    படம்: நீலகிரி எக்ஸ்பிரஸ்
    இசை: மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி
    தாம் தித் தாம் – தை தித் தை
    தாம் தித் தாம் – தை தித் தை

    திருத்தணி முருகா தென்னவர் தலைவா
    சேவலும் மயிலும் காவலில் வருமா
    (திருத்தணி)

    தென் பரங்குன்றம் செந்தூர் மன்றம்
    செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
    வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
    காணும் – கண்ணில் எங்கும் – கண்டாள் உந்தன் தேவை
    (திருத்தணி)

    கந்த வேலை எந்த வேலும்
    வெல்லுவதில்லை!
    உந்தன் பேரை அன்றி வேறு
    சொல்லுவதில்லை!
    உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
    கொள்ளுவதில்லை!
    இன்று நாளை என்றும் துன்பம்
    அண்டுவதில்லை!

    மலையும் நீயே, கடலும் நீயே
    வானும் நீயே,  நிலமும் நீயே

    பஞ்ச பூதம் – ஒன்று கூடும் மன்றம்
    வந்த பேர்க்கு – வாழ்வு நல்கும் குன்றம்
    மங்கல குங்குமம் – கிண்கிணி மங்கலம்
    ஓம் எனும் மந்திரம் – யாவையும் சங்கமம்

    ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
    அலைகள் கலகலென
    இலைகள் சலசலென
    மலைகள் மடமடென
    உலகம் இசை பொழிய

    வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா

    Share
  • சொட்டு மருந்து … 2

    –இன்னம்பூரான்.

    விநாசகாலே விபரீத புத்தி

     

    110401_193350கலயம் நிரம்பி வழிகிறது. அமுத கலயம். அக்ஷயபாத்திரம். வாழ்வாதாரம் அதுவே. சொட்டு மருந்து போல் பருகவேண்டும். எல்லாருக்கும் கிடைக்கவேண்டுமல்லவா! ஒரு அதமன் சொட்டு  ஆலகால விஷம் கலக்கிறார். அனைவரும் பரலோக யாத்திரை. தேர்தலில் தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஒரு சுயபரிசோதனை கூட்டம் நடத்துகிறது. அதில் தன்னுடைய அருள்வாக்கு அளித்த கட்சியின் காரியதரிசியான திக்விஜய சிங்  ஆடிட்டர் ஜெனெரல் மீது, “ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல்” என்று சொன்னது போல ஒரு போலி குற்றச்சாட்டை சாற்றினார். ‘பா.ஜ.க. தான் ஆடிட்டர் ஜெனெரலின் எஜமானன். அடிமை CAGயை அந்த கட்சி ஆட்டுவிக்கிறது. 2ஜி வழக்கில் இது கண்கூடு’ என்பது தான் அந்த அருள்வாக்கு! எங்கே சொன்னார்? போயும் போயும் கர்நாடகாவில். அங்கு முன் ஆட்சி நடத்திய பா.ஜ.க. அரசின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டிய ஆடிட் ரிப்போர்ட்களையும், 150 வருடங்களாக, அரசியல் ஆதாயங்களை அறவே ஒதுக்கிய தணிக்கைத்துறை மீது, ஆதாரமே இல்லாமல் அவர் அள்ளி வீசிய சேறு, காங்கிரஸ் கட்சி முகத்தில். உச்ச நீதிமன்றம் 2ஜி விவகாரத்தில் கூறியதை துச்சம் என்று கடாசிவிட்டார்.

    சமயத்தில், அவர் உண்மை விளம்பி: ராகுல் காந்தி ஆளும் திறனற்றவர் என்று சொன்ன மஹானுபாவன், அவர். தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஜட்டிபனியனையும் பறி கொடுக்க வாய்ப்பு அளிக்கிறார், இந்த பெரிய மனிதர். அவர் இயக்கிய பெண்பாவம் பற்றி நான் பேசபோவதில்லை. அவர் சொல்வதை ஆமோதிக்கிறார், திரு மல்லிகார்ஜுன கார்கே. அவரை எதிர்க்கட்சி தலைவராக, அரசியல் சாஸனத்தை மீறி, அமர்த்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஹீனக்குரலில் கொக்கரிக்கறது. திரு. திக்குவிஜய் சிங்கை பொது கணக்கு மன்றத்தில் தலைவராக போட, இது ஒரு வழி. அப்போது, அவர் கட்சிபற்று அற்ற ஆடிட் ரிப்போர்ட்டுகளை எப்படி கையாளுவார்? சாக்கோ என்ற அவருடைய சகாவே தேவலை என்று ஆகிவிடும். விநாசகாலே விபரீத புத்தி!

    2. துர்ச்சம்பவம்.

    சென்னை மெளலிவாக்கத்தில் ஜூன் 28 அன்று கனத்த மழை பெய்தது. ஒரு 11 மாடி கட்டிடம் வீழ்ந்தது. இன்று காலை வரை 13 சடலங்கள் கிட்டின. அருகிலிருந்த வீடுகள் சுக்குநூறாயின. பாவம் கணேசன் என்ற அண்டை வீட்டுக்காரர் பலியானார். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு இடையே. எல்லாரும் ஏழைகள். ஒரு தொல்லைக்காட்சியில், இடி விழுந்ததே அதற்கு காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தது, கல்யாணக்கூடத்தில் சீப்பை ஒளித்து வைப்பது போன்ற, எதையோ மறைக்கும் செய்தியாகத்தான் தோன்றியது. பிறகு பல தரப்புகளிலிருந்து வந்த செய்திகளை அலசிப்பார்த்தால், பல ஏமாற்று சித்து வேலைகள் தென்படுகின்றன. சில துண்டுச்செய்திகள்:

    ➢ கனத்த மழையால் சில இயந்திரங்களை இயக்க முடியவில்லை. ராப்பகலாக் மீட்பு பணி நடக்கிறது. தொடங்கியதும், அதீத துரித கதி.

    ➢ அடித்தளம் முதல் கட்டுமானத்தில் அசட்டை தென்படுகிறது. ஒருவருக்கொருவர் இணைந்து செய்யாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதாகத் தோற்றம்.

    ➢ முதல் நம்பர் முதலாளி ஓய்வு பெற்ற ஒரு வங்கி ஊழியர். அவருக்குக் கோடிக்கணக்காக செல்வம் வந்தது எப்படி என்ற கேள்வி ஒரு புதிர். அவருக்கு வேண்டப்பட்ட அரசியல் வாதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். பினாமிப்பணமா????????

    ➢ இடி மின்னல் ஒன்றுமில்லை. அத்து மீறி கட்டியது தான் குற்றம் என்றாராம் ஒரு ஊழியர். முதல்வரும் அத்தகைய பொருள்பட கூறியதாக, ஆவணங்கள் கூறுகின்றன.

    ➢ “எரிய வீட்டில் பிடுங்கினது ஆதாயம்.”மீட்பு பணி ஊழியர்களுக்கு வந்த குடிநீர் அபேஸ்!

    ➢ தினகரன் என்ற இரும்பு பட்டறை தொழிலாளி 108க்கு ஃபோன் செய்து நிவாரணத்தை துவக்கி வைத்தார், ஒரு நிமிட தாமதம் இல்லாமல். அவருக்கு ஒரு அரசு சாதனையாளர் விருது தகும்.

    இன்னும் பல சிக்கல்களை பற்றி எழுதவேண்டும், விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்ப. உதாரணமாக ‘டார்ட்’ சட்டம். முழுவிவரங்கள் கிடைத்த பின் தான் அவற்றை பற்றி எழுதலாம். உடனே துரிதமான நடவடிக்கைகள் எடுத்த அரக்கோணம் அமைப்பு முதல், தீயணைப்பு படை, காவல் துறை, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாருக்கும் நாம் நன்றி நவிலவேண்டும். முதல்வரும் துரித நடவடிக்கைகளுக்கு ஆணையிட்டார் என்று பறை சாற்றிக்கொண்டே இருந்தாலும், அதை விட அவருடைய பொறுமையை போற்றவேண்டும். துர்ச்சம்பவம் நடந்தால், அங்கு அரசியல்வாதிகள் வீடீயோக்காரர்களுடன் படையெடுத்து, மீட்புப்படையின் உயிரை வாங்குவார்கள். நம் முதல்வர் தாமதித்து உரிய காலத்தில் மட்டும் சென்றார்.

    இன்னும் பல மருந்துகள்/மாயம்/ வேஷம்/ நஞ்சு செய்திகள் வந்த வண்ணம். பார்க்கலாம்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://www.siruppiddy.net/wp-content/uploads/2011/04/banana-8.jpg

    Share
  • திருமால் திருப்புகழ் (129)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ——————————————————————————————————-
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பூந்தன மாதோடு, சாந்தமும் பூசிய,
    காந்தனே கண்துயில்ஏ காந்தனே, -நான்தினம்,
    நின்புகழ், நின்னெழில், நின்கதை, நின்னருள்,
    வெண்பாவில் பாட விரும்பு….(290)

    காண்பதுன் கோலத்தை, கேட்பதுன் ஜாலத்தை,
    பூண்பதுன் நாமத்தை போற்றுதலாய், -கூன்பதும,
    கொங்கையாள் மார்பில், குலாவும் அரங்கனே,
    சங்கையா உன்தாள் சரண்….(291)

    குறையெனக்குன் காட்சி, நிறையெனக்குன் நாமம்,
    சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி, -அரியுனக்கு,
    இன்னும் தயக்கமேன், என்னைப் பிடித்திட,
    கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….(292)

    கரத்தில் எழுத்தாணி, கற்பனையில் வாணி,
    புரத்தை மறந்து புணர்வோம், -தரத்தில்,
    குறையாத வெண்பாக்கள், கூடிப் பெறுவோம்,
    இறையாத வாவா இசைந்து….(293)

    தூணுண்டு வீட்டில், துரும்புமுண்டு, வாஞ்சையாய்,
    நானுண்டு வாராய் நரசிம்மா, -பூநின்ற,
    சாந்த இலக்குமியை, ஏந்திக் களிக்கின்ற,
    காந்த வடிவில் கனிந்து….(294)

    அய்யோ எனக்குரல், அன்றிட்ட பாஞ்சாலி,
    மெய்யாடை மேவ மறைத்தனை, -அய்யா,
    தவலையில் கட்டித், தயிராடை ஏற்றென்,
    கவலையை கட்டிக் கசக்கு….(295)

    —————————————————————————————————————

    Share
  • அ. ச. ஞானசம்பந்தன் மக்களின் நன்கொடை

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனுக்கும்
    இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு.

    book

    ஆறுமுகநாவலர் பதிப்பித்த பெரிய புரணைம், book1
    அரசங்குடி சரவண முதலியாரின் கைந்நூல்.
    அவரது சொற்பொழிவுகளுக்கு அந்த நூலே பயன்படும்.
    தந்தையாரின் பெரியபுராண நுண் மா நுழை புலத்தின் வழிவந்த
    அசஞாவுக்கும் அதுவே கைந்நூல்.

    பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரான காலத்தில்
    சனிக்கிழமை காலை சென்னையில் புறப்பட்டு
    விமானத்தில் யாழ்ப்பாணம் வருவார்.
    கரவெட்டி தச்சன்தோப்புத் திருக்கோயிலில் மாலைச் சொற்பொழிவு.
    ஞாயிறு மாலையும் அங்கே சொற்பொழிவு.
    திங்கள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டுச்
    சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் பணிக்குப் போவார்
    பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.

    book21959 தொடக்கம் அவர் 2002இல் மறையும் வரை சென்னையில் எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய், இருந்தவர் பேராசிரியர் அ. ச. ஞா.

    இன்றுவரை அவருடைய மக்களும் என்னைத் தன்னுள் ஒருவராகக் கருதி வருகின்றனர்.

    அப்பாவின் நூல்களை அந்தந்தத் துறை சார்ந்தவரிடம் கொடுக்கிறோம் என 2013இல் மூத்த மகன் மெய்கண்டான் மற்றும் கடைசி மகள் மீரா என்னிடம் சொன்னபொழுது, நூல்களுக்கான யாழ்ப்பாணப் புலமையாளரின் தவிப்பும் ஏக்கமும் என் கண்ணில் தெரிந்தன.

    யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்றேன். மகிழ்ச்சி பொங்க, 440 தலைப்புகளைத் தந்தார்கள்.
    17 பெட்டிகளில் கட்டுவித்தேன். யாழ்ப்பாணம் கொணர்ந்தேன்.

    இணுவில் பொது நூலகக் காப்பாளர் அண்ணா தொழிலகம் திரு. சு. பொ. நடராசா என்னை அழைத்து நூலக வளரச்சிக்கு உதவுமாறு கேட்டது என் நினைவில் இருந்தது. 17 பெட்டிகளையும் அவர்களிடம் கையளித்தேன்.

    29.6.2014 மாலை 1630 மணிக்கு முறையாகக் கையளித்தேன். படங்கள் பார்க்க

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 27

    கே.ரவி

    1981-ஆம் ஆண்டில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதாவது, நிஜமாக ஒரு மின்னலே கவிதையான நிகழ்ச்சி. ‘என்னய்யா, இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?’ என்ற எகத்தாளக் குரல் எனக்குள்ளேயே எதிரொலிக்கிறது. தினமும் ஆங்கில நாளேடுகளைக் கரைத்துக் குடிக்கும் ஒருவன், தமிழ் நாளேடு மட்டும் படிப்பவனைப் பார்த்துக் கிண்டலாக உனக்கு என்ன உலக நிகழ்ச்சி தெரியும்? வண்ணாரப்பேட்டை ரவுடி இன்னொருவனைச் சதக், சதக் என்று கத்தியால் குத்திக் கொன்றான் போன்ற அன்றாட விஷயங்கள் மட்டுந்தான் உனக்குச் செய்தி, நிகழ்ச்சி. காஜா தெரியுமா? சட்டைப் பொத்தானைக் கஷ்டப்பட்டு நுழைப்போமே, அந்தக் காஜா இல்லேப்பா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பகுதி. அதன் கடைசி எழுத்து ஆங்கிலத்தின் கடைசி எழுத்து. ஆனால் அதைச் சுட்டிக்காட்டத் தமிழில் ‘ஜ’வை விட்டால் வேறு எழுத்து வடிவம் இல்லையே, என்ன பண்ணுவேன்? சரி, சரி, அந்த இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறதே, அந்தச் செய்தி தெரியுமா உனக்கு?

    இப்படி நக்கல் செய்யும் அந்த மேதாவியிடம், ‘ஐயா, உங்களுக்கு இந்தப் புவிக்கோளமாகிய பூமியில் நடக்கும் சமாச்சாரங்கள்தான் தெரியும்; அவைதாம் உங்களுக்குச் செய்திகள். ஆனால், பூமி மட்டுந்தானா உலகம்? பூமியைத் தாண்டிச் சூரியன் எனப்படும் நட்சத்திரத்தில் நடக்கும் அதிசயங்களை நீர் அறிவீரா? அதையும் தாண்டி அடுத்த அண்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா உமக்கு?’ என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. பாரதி ஒரு கட்டுரையில் எழுதியதை மட்டும் அந்த அதிமேதாவிக்குப் படித்துக் காட்டினால் போதும். பாரதி எழுதுகிறான்:

    உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை………நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமாநந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்த துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

    மின்னல் கவிதை என்று சொன்னேனே, அந்தச் செய்திக்கு வருவோம்.

    3

    என் வளர்ப்புத் தந்தை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டு கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் தொடங்கப் பூஜை போட்டார். இயக்குநர் சக்திதான் அதன் இயக்குநர். சக்தியும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள், இருவரும் ஓரூர்க்காரர்கள், ஆம், பரமக்குடி. சக்தியும், நானும் அமர்ந்து பலநாட்கள் விவாதம் செய்து ஒரு கதையைப் பின்னினோம். அந்தக் கதையை நாங்கள் கமலிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு படத்துக்கு “வாய்ப்பூட்டு” என்று பெயர்சூட்டவும் செய்தார். ‘வாய்ப்பூட்டு’ பட பூஜை மிக விமரிசையாக நடந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்கக் கோரி அணுகினோம். அவர் மூன்று மாதங்களுக்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டதால், பாடல் பதிவு எதுவும் இல்லாமல் பூஜை மட்டும் போட்டோம். ஏதோ காரணங்களால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்தப் படம் எடுக்கும் எண்ணத்தை என் தந்தை கைவிட வேண்டியதாயிற்று. எனக்கு அதற்குள் இயக்குநர் சக்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாலும், திரைப்பட பூஜை என்று என் நண்பர்களையெல்லாம் நான் அழைத்துக் காட்டிவிட்டு உடனே மூட்டை கட்டிவிட என் ஈகோ, அதுதான், அகங்காரம், இடம்கொடுக்காததாலும், எப்படியும் சக்தியின் இயக்கத்தில் வேறொரு படம் எடுத்தே ஆக வேண்டுமென்று என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனிடம் கேட்டேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்ததே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்று தீர்மானம் ஆகியது. கதாநாயகனாக என் நெருங்கிய நண்பர் எஸ்.வி.சேகரையும், கதாநாயகியாக புதுமுகம் ஶ்ரீலட்சுமி என்பவரையும் வைத்து, சக்தியும் நானும் கலந்து ஒரு கதை உருவாக்கிப் படத்துக்கு பூஜை போட நாள் குறித்தோம். குறைந்த பட்ஜெட் ஆயிற்றே! இளையராஜா அளவுக்கு இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுக்க முடியாதே என்ற நிலை வர, ஏதோ ஒரு துணிச்சலில் ‘நானே இசையமைக்கிறேன்’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னதும் என் தந்தையும், சக்தியும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு இசையமைக்குமாறு என்னைத் தூண்டினார்கள். சரியென்று கோதாவில் இறங்கினேன். பூஜை அன்றே முதற்பாடல் பதிவு செய்வது என்று முடிவானது. அப்படி முடிவாகி நாலு நாட்களுக்குள் பூஜையும், பாடல் பதிவும் நடைபெற நாள் குறித்தாகி விட்டது. நாங்கள் முடிவு செய்திருந்த கதையோ கல்லூரியில், அதுவும், ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலும் நடப்பதாக இருந்தது. படத்தின் பெயர் ‘ஸ்பரிசம்’ என முடிவானது.

    1

    நான் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் புடைசூழ நிறைய பைலா (இன்றைய கானா) பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன். இயல்பிலேயே எனக்கு டப்பாங்குத்துப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இலக்கண சுத்தமாக இனிய ராகத்தில் ஒரு பாடல் எழுதுவதைவிட, ஜனரஞ்சகமாக, டப்பாங்குத்துப் பாடல் எழுதுவது ரொம்பக் கடினம். “என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு”, “தென்ன மரத்துல குந்தியிருப்பதச் சின்ன பாப்பா”, போன்ற பாடல்கள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. “ஜவ்வாது பொட்டாகத்தான் இட்டுக்கவா ஒன்னத் தாயத்துக் குள்ளே வச்சுக் கட்டிக்கவா” என்ற பல்லவியை எப்போது கேட்டாலும் ரசிப்பேன். ஆகவே, துணிந்து ஒப்புக் கொண்டேன்.

    பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் ‘சீத்தாத்தை’ என்ற அத்தை ஒருத்தி, என் வளர்ப்பு அன்னை அலங்காரத்தின் தாயார், அவள் அடிக்கடிப் பாடும் ஒரு நையாண்டிப் பாடலைப் பாடினாள். அதைக் கேட்டதும் அதுவே பல்லவியாக என் முதல் திரைப்படப் பாடல் உருவானது.

    2

    முறையாக இசை பயிலாத, எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாத, ஸ்ருதியோடு பாடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நான் இசையமைப்பாளனாக, முதன்முதலில், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருந்த ஆர்.ஆர். ஒலிப்பதிவுக் கூடத்தில், ஸவுண்ட் எஞ்சினியர்கள் மாணிக்கம், சம்பத் ஆகியோருக்கு அருகில் எப்படி சப்த நாடியும் ஒடுங்க அமர்ந்திருந்தேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அது போதாதென்று, நான் இசையமைக்கும் அழகை பார்க்கச் சாரு அண்ணா, அதாவது, சாருஹாசன் வேறு வந்து என் அருகில் உட்கார்ந்து கொண்டு விட்டார். என் நடுக்கம் இரட்டிப்பாகியது. பாடலை யார் பாடப் போகிறார்கள் என்று கூட முடிவு செய்யவில்லை. கோவையிலிருந்து நண்பர் சுந்தரேசன் என்பவரையும், அப்போது சில படங்களில் பாடியிருந்த டி.கே.எஸ். கலா அவர்களையும் மட்டும் பாடத் தயாராக வரச் சொல்லியிருந்தேன். பாடலோ பல மாணவ, மாணவியர் பாடிக்கொண்டு ஆடுவதாக அமைந்திருந்தது. என் பாடல் வரிகளை நான் முணுமுணுக்க, அதை எப்படியோ ஒரு மாதிரியாகச் சரியாகப் புரிந்து கொண்டு ராமமூர்த்தி அவர்கள் ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்ட, ராக்கெட் ராமனாதன், முத்துராஜா, என் மனைவியின் தம்பி ரதீஷ் உட்பட அங்கு வந்திருந்த நண்பர்கள் பலரையும் பாட வைத்துப் பதிவானது அந்தப் பாடல்.

    நான் ஏதோ ஆபாசப் பாடல் எழுதியிருக்கிறேன் என்று மேடையில் ‘சொல்லி விடட்டுமா’ என்று வாலி மிரட்டினார் என்று முன்னொரு பகுதியில் எழுதியிருந்தேனே, அந்தப் பாடல்தான் அது.

    ராஜ கோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா

    வேணு கோபாலா ஒங்கம்மா வெண்ணை தந்தாளா

    ‘ஸ்பரிசம்’ படம் முக்கால்வாசி எடுத்தாகி விட்டது. இன்னும் வியாபாரம் ஆகவில்லை. நான் வக்கீல் தொழிலில் சம்பாதித்த கொஞ்சநஞ்ச பணமும் நேராக படச் செலவுக்கே போய்க்கொண்டிருந்தது. ஷோபனா ரொம்பப் பொறுமைசாலி.

    படம் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு நாளும், அந்த நாள் படப்பிடிப்புக்கு அல்லது பாடல் பதிவுக்குத் தேவைப்படும் பணம் அந்த நாள் காலையில்தான் யார் மூலமாவது எதிர்பாராமல் கிடைக்கும். அப்படி ஒரு ராசி அந்தப் படத்துக்கு. படம் பூஜையன்று விடியற் காலையில், செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் நானும், என் வளர்ப்புத் தந்தையும் புறப்பட்டு விட்டோம்; ‘பார்க்கலாம், மாலைக்குள் பணம் வரும்’ என்ற துணிவோடு, டிரைவ்-இன் ஓட்டலில் போய் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நண்பரிடம் நான் விளையாட்டாக இதைச் சொன்னதும் அன்றைய செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அப்படியே தம் கைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மெய்சிலிர்த்துப் போனேன். அவர்தான், நான் வக்கீல் தொழில் தொடங்கியதும் தம் அலுவலக வளாகத்திலேயே என் அலுவலகம் அமைக்க உதவிய டி.எஸ்.சத்யம். ‘சத்யம் அட்வர்டைஸிங்’ என்ற விளம்பர நிறுவனம் வைத்து நடத்திய அவர் எங்கள் குடும்ப நண்பர். சமீபத்தில் அமரராகிவிட்ட அவர் போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே எனக்கு எப்பொழுதும் உதவிசெய்து வந்திருக்கிறார்கள்.

    5

    “சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்” என்று அசோக வனத்தில் சீதை காத்திருந்ததைக் கம்பன் வர்ணித்தது போல், ஒவ்வொரு நாளும் யாராவது வந்து உதவக் காத்திருந்த என் துணிவை எண்ணிப் பார்த்து வியக்கிறேன். இப்படித்தான் வளர்ந்தது ‘ஸ்பரிசம்’ படம்.

    ‘என்னய்யா, மின்னல், கவிதை என்றெல்லாம் அளந்து விட்டு ஏதோ தோசை மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வி தொலைவிலிருந்து என் செவியை எட்டுகிறது. கதை என்று வந்தால் அப்படித்தான் சுற்றி வளைந்து போகும். பொறுமை தேவை.

    சரி, மின்னலுக்கு வருகிறேன்.

    அந்தப் படத்துக்கு இன்னொரு பாடலை அடுத்துப் பதிவு செய்து படம் பிடிக்க வேண்டும். கல்லூரியிலே கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எப்பொழுதும் சின்ன சின்ன சண்டைகள். இப்படியே பாதிப் படம் போகிறது. நாயகன் செய்த ஒரு விஷமம் நாயகியை மிகவும் பாதித்துவிட அவள் அவனிடம் நிரந்தரமாகக் கோபித்துக் கொண்டுவிட, நாயகன் அவள் மனத்தை மாற்றுவதற்குப் பாட வேண்டும். மறுநாள் அதுபற்றி விவாதிக்க இயக்குநர் சக்தி அழைத்திருந்தார். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யதேவ், ஒரு வழக்கில் என்னைக் கமிஷனராக நியமித்து விட்டார். அன்றிரவே நான் தேவகோட்டைக்குச் சென்று அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரைச் சாட்சியாக விசாரித்து வரக் கட்டளையிட்டு விட்டார்.

    இரவு, புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மனமெல்லாம் ‘ஸ்பரிசம்’ படத்திலேயே இருந்தது. இரவாகியும் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு வெட்டு மின்னல் கண்ணைப் பறித்தது. ஜன்னலை சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன். மின்னல் மட்டும் என் மனத்துக்குள் ஆழமாகத் தைத்து, ஊடுருவிச் சென்று, அங்கிருந்து ஒரு பாடலை வரவழைத்து விட்டது. இல்லை, மன்னிக்கவும், அந்தப் பாடலே மின்னலாக உருமாறி என் நெஞ்சில் குடியேறிவிட்டது. அது பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் போல் இரண்டே வரிகளில் முடிந்து விட்டது. நானும் தூங்கி விட்டேன். தூக்கம் கலைந்த பிறகு, நாளை மேலும் சொல்கிறேனே!

    (தொடரும்)

    புகைப்படத் தகவல்கள்:

    1. வாய்ப்பூட்டு பட பூஜையின் போது கமலுக்கு நான் மாலை அணிவிக்கும் புகைப்படங்கள்

    2. நான் ஸ்பரிசம் படப்பாடல் பதிவு செய்யும் காட்சிகள்.

    3. நானும் இயக்குநர் ஆர்.சி.சக்தியும்

    4. டி.எஸ்.சத்யம் பாரதி விழாவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்குப் பரிசு வழங்கும் காட்சி.

    Share
  • திருமால் திருப்புகழ் (128)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-

    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    சாந்த வதனமும், சர்ப சயனமும்,
    நீந்தும் சரோருக நாபியும், -ஏந்தும்,
    கரங்கள் நான்கும், கருத்த வடிவும்,
    வரங்க(ள்) அளித்திடும் வஸ்து….(283)

    எந்தையே எவ்வுயிர்க்கும், முந்தையே ஏகாந்த,
    சிந்தையே, சிக்காத விந்தையே, -கந்தையே,
    ஆனாலு(ம்) என்நெஞ்சைக், கட்டிக் கசக்கிடு
    தூணாளும் சிங்கா தயவு….(284)

    பூதங் களால்வந்த, ஏதங் களாயிரம்,
    மாதங் களில்நின்ற மார்கழியே, -பாதங்கள்,
    ஓங்க உலகளந்த, உத்தமரே என்குறை,
    நீங்க எனதுள்ளே நில்….(285)

    வீழும் மலையருவி, சூழ்கின்ற வேங்கட,
    ஏழு மலையானை ஏத்துமினோ, -வாழும்,
    கடன்பட்ட மாந்தர்க்கு, கோவிந்த நாமம்,
    புடமிட்டப் பத்தரைப் பொன்….(286)

    ஏங்கா மலிருக்க, ஏங்கு கிறேன்பாம்பில்,
    தூங்காமல் தூங்கும் திருமாலே, -சாங்கிய,
    யோக மதையருள்வாய், யோக்கியதை பார்க்காதே,
    மோகமுள்ளை வைத்ததுன் மாசு….(287)

    நீதான் நானென்றும், நான்தான் நீயென்றும்,
    சேதார மற்றென்றும் சேர்ந்திடுவோம், -ஏதோ,
    இலக்கணம் காட்ட, எழுதவில்லை வெண்பா,
    விலக்கணும் மாய விரிப்பு….(288)

    மூலனே மல்லாண்ட, தோளனே விண்ணளந்த,
    நீளனே, நற்கீதை நூலனே, -மாலனே,
    கோகுல பாலனே, கோதைம ணாளனே,
    ஆகுலம் தீர்த்தென்னை ஆள்….(289)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:
    http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 30, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  திரு. எல். கனக சுப்பிரமணி  அவர்கள்

    L.Kanaga Subramani
    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரியும் திரு. எல். கனக சுப்பிரமணி அவர்கள்.   கனக சுப்பிரமணியின் தமிழ்ப் பற்று பற்றியும், சமுதாதய அக்கறை பற்றியும் பேஸ்புக் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவலைப் படித்து வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப்  பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் அண்ணாகண்ணன். அவரது பரிந்துரையை வழிமொழிந்தவர் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான திரு. சொ.வினைதீர்த்தான் அவர்கள்.   

    தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு திருக்குறளுக்கு பொருள்விளக்கம் படித்த பின்னரே தனது நாளைத் துவக்குபவர் கனக சுப்பிரமணி.  மேட்டுப்பாளையம்  உதகை வழித்தடத்தில் பேருந்து நடத்துனராக பணிக்குச் செல்லும்பொழுது தன்னுடன் சில தமிழ் நூல்களையும் கொண்டு செல்கிறார்.  வழியில் கல்லாரில் காலை 7:15க்கு பேருந்து நிற்கும்பொழுது, பயணிகளின் கவனத்தை ஓர் இரு நிமிடங்களுக்கு தனக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து போக்குவரத்து பாதுகாப்பைக் கடைபிடிக்கவும், சுற்றுப்புறச் சூழிலின் தூய்மை அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறார்.  “ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், மரங்களை நட முடியாவிட்டாலும் சரி, அவற்றை அழிக்காதீர்கள், குப்பை போடாதீர்கள், குருதிக் கொடை அளியுங்கள்” போன்ற அறிவுரைகளைக் கூறுகிறார்.

    அத்துடன் தினம் ஒரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருள் விளக்கமும் அளிக்கிறார்.  அன்று பயணிகளில் யாருக்காவது பிறந்தநாளாகவோ, திருமணநாளாகவோ இருந்தால் வாழ்த்துகளுடன் தன்னுடன் எடுத்துச் சென்ற திருக்குறள் நூல்களை பரிசாக அளிக்கிறார்.  யாருக்கும் அன்றைய நாள் அவ்வாறான  சிறப்பு நாள்களில் ஒன்றாக அமையாவிட்டால், அந்த நூல்களை பயணிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர்  யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அளிக்கிறார். பயணிகள் யாரேனும் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளாக இருந்தால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தவும் செய்கிறார். பேருந்தில் எழுதியிருக்கும் குறளை சுட்டிக் காட்டிய பயணி ஒருவர், இக்குறளின் பொருள் என்னவென்று நடத்துனருக்கோ ஓட்டுனருக்கோ தெரியுமா என்று ஒருமுறை கேட்ட பொழுது தினம் ஒரு குறள் என்ற கொள்கையைத் துவக்கி இருக்கிறார் இவர்.

    தினசரி வாழ்க்கையில் பலவித மக்களை எதிர்கொண்டு சேவை செய்யும் முன்னணி பணியாளர்களுக்கு அது மிகவும் மனஅழுத்தம் தரும் பணியாகவே இருக்கும்.  நடத்துனர் பணியிலும்  அவ்வாறே பலவித உணர்வுகள்  கொண்ட மக்களை எதிர் கொள்ளும்பொழுது இன்முகத்துடன் பணியாற்றுவது என்பது  ஒரு சவாலாக அமைந்துவிடும்.  இந்தச் சூழ்நிலையிலும்  சமுதாயப்பணிக்கும், தமிழ்ப் பணிக்கும் ஓர் இரண்டு நிமிட நேரத்தை ஒதுக்கி பயணிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார் கனக சுப்பிரமணி. இதனை தினமும் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் செய்து வருகிறார் எனபது மிகவும் வியப்பளிக்கும் செய்தி. கனக சுப்பிரமணியைப் பொறுத்தவரை பேருந்துப் பயணமாக இருந்தாலும் அதன் வழியே பயணிகள் கல்வி, தகவல் ஆகியவற்றைப் பெற்று அவர்களுக்கு அது  வசதியான பயணமாக அமைய வேண்டும். கனக சுப்பிரமணிக்கு  அவரது பயணிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் போல.

    கோவை மத்தியச் சிறைச்சாலை கைதிகளுக்காக “செந்தமிழ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ஓய்வு நேரங்களில் கைதிகளின் மறுவாழ்விற்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான  வழிகளில் பணியாற்றுகிறார்.  இசை வகுப்புகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி பரிசு வழங்குதலை  தனது அறக்கட்டளை வழியாகச் செய்கிறார். இதுபோன்ற சமுதாயச் சேவைகள் செய்வதற்கு தனது ஆசிரியர் அற்புதராஜும், மக்கள் திலகமும் முன்னோடிகள் என இவர் கூறுகிறார்.   இளமைக்காலத்தில், சிரமமான காலங்களில் இவரது  ஆசிரியர் அற்புதராஜ்  அவர்கள் இவருக்கு  உணவும் உடையும் அளித்து  பராமரித்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.   உற்சாகமூட்டும் உரைகள் வழங்குவதையும் ஊக்கமூட்டும் செயல்கள் செய்வதையும் தனது கடமையாகக் கருதி வரும் கனக சுப்பிரமணி எம்.ஜி.ஆர் அவர்களை தனது சிறந்த வழிகாட்டியாகக் கருதுகிறார். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இவருக்குப் பிடித்த பாட்டு “தாயில்லாமல் நானில்லை”. இதனைக் கைதிகளுக்காக இவர் பாடுவதும் உண்டு.   எம்.ஜி.ஆர்  பாடல்களில் ஒன்றினை எப்பொழுதும் தனது உரைகளில் ஒரு பகுதியாக்கிக் கொள்கிறார்.

    தனது தமிழார்வத்தையும், சமுதாய அக்கறையையும் இணைத்து தனது தினசரி வாழ்வில் ஒரு சிலர் வாழ்விலாவது மாற்றம் கொண்டுவர விரும்பி தொடர்ந்து ஆர்வமுடன் செயலாற்றும்  கனக சுப்பிரமணி  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
    (இவரைப் பாராட்ட விரும்புவோர் கவனத்திற்கு,  இவரது தொலைபேசி எண்:  96009-87811)

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

    படம்  மற்றும்  தகவல்கள் இந்து நாளிதழில் இருந்து பெறப்பட்டது. நன்றி இந்து.
    http://www.thehindu.com/features/metroplus/from-tickets-to-the-thirukkural/article2896247.ece

    Share
  • “நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா?

    இன்னம்பூரான்.

    psychologyஇந்த மனசு ஆகப்பட்டது லோகசஞ்சாரம் செய்தபடியே இருக்கிறது, நாரத முனி போல. பிரபஞ்சம் முழுதும் இந்த சஞ்சாரம். நாரதரின் பூமாலைகளைப் போல சிந்தனை சூழல் அதற்கு அலங்காரம். சிந்தனையை ‘நல்லதொரு வீணையில்’ எஸ். பாலசந்தர் போல் ரீங்காரித்தால், அந்த ஒலியும் இசையும்  தத்துவம் பேசும் என்பதால், நாரத வீணை பொருத்தமான உவமை. தனம்மாள், ஏமனி, சிட்டிபாபு, காயத்ரி ஆகியோரை விட்டு விட்டு எஸ். பாலசந்தரை உவமை செய்வானேன் என்பர், சிலர். அவர் ‘நான் ஒரு விளையாட்டுப்பிள்ளையாக…’ தனக்குத்தானே குருவாக இருந்து, வீணை கற்றுக்கொண்டவர் என்பதால், அவரொரு உவமையானார். நாரதரின் இசைக்கருவியை ‘ஏக்தாரா’ எனப்படும் தம்புரு என்பர், சிலர். அதனால் காரியம் கெட்டுப்போகவில்லை. அதனுடைய கருமமே தப்புத்தாளத்தைத் தவிர்ப்பதே. மனது விகாரம் (தப்புத்தாளம்) அடைவதை நாம் அன்றாடம் காண்கிறோம். அது நீக்கப்படவேண்டும். உவமை இங்கும் பொருத்தமாக அமைகிறது.

    இந்தத் தொடரை வல்லமை இதழில் எழுதத் தூண்டியது ஒரு நூல்: Dainton,B (2014) Self: London: Penguin.

    அது பிரசுரம் ஆனதே ஏப்ரல் 24, 2014. ‘Self’ என்ற சொல்லை, இப்போதைக்கு ‘விளையாட்டுப்பிள்ளையாகிய நான்’ என்று மொழியாக்கம் செய்கிறேன். பிறகு நீயோ, நானோ அதை மாற்றிக்கொள்ளலாம். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருக்கும் டைய்ண்டன் உம்முடைய ‘நான்’ என்பது என்ன, அதனுடைய போக்குவரத்தை கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கிவிட்டு, அது உமது உடலுக்கு வெளியே இயங்கக்கூடும் என்று குண்டு போட்டதல்லாமல், அப்பவும் அதை கண்காணிக்கமுடியும் என்கிறார். (புத்தகம் இன்னும் கைக்கு வரவில்லை. அதற்குள் என்னுடைய ‘நான்’ அவசரப்படுகிறது!). உள்ளுறை மனதை (“core self”) பற்றி அவர் அலசுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே ‘உவமப் பொருளின் உற்றது உணரும் தெளிமருங்கு உளவே திறத்து இயலான’ (தொல்காப்பியம் 1241) என்று உள்ளுறை உவமத்தை குறிப்பிட்டு, அதை உய்த்துணரவேண்டும் என்று தொல்காப்பியர் கூறியது நோக்கற்பாலது. உய்த்துணர மனம் வேண்டுமே. இங்கு இரு பொருள்: 1. விருப்பமிருந்தால் தான் உய்த்துணர முயல்வோம். 2. உய்த்துணரும் ஆற்றல் அந்த உள்ளுறை மனதுக்குத்தான் (“core self”) உண்டு. இந்த ‘இருபொருள்’ வியாக்யானமே ஒரு சிக்கல். ஆற்றலிருந்தால், விருப்பம் தானே கைகட்டி வரும்; ஆற்றல் இல்லையேல் விருப்பம் கை கூடி வராது. அதற்கு பிறகு வருவோம். அலசும் நூல்களுக்கு பஞ்சமில்லை.

    தீடீரென்று  உழலும் இந்த மனதை நாடியதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மில் எவருக்கும் எல்லா காலகட்டங்களிலும் மனது ‘ஸ்திதபிரதிஞ்னனாக’ மாறாமல் இருந்தது இல்லை. போதாக்குறைக்கு, எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற வகையில் எல்லோரும் மனோநல நிபுணர்கள்! (‘உளவியல்’ என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை. மற்ற துறைகளைப்போல அதிலும் வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அது மட்டுமல்ல. குறைந்தது மூன்று வகை நிபுணர்கள் – மனோநல ஆலோசகர் [Psychologist], மனோநல வைத்தியர் [Psychiatrist], மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist]. இந்த நுட்பங்களை அறியாமல் உளவியல் களவியல் நடைபெறுவது மனத்தை வருத்தும் பாதகமான நிகழ்வுகள்.

    தத்துவம் போல் ‘நான்’ எனப்படுவோர்க்கு உதவுவது எதுவும் இல்லை, அது பித்து போல் மாயத்தோற்றம் அளித்தாலும்.

    ‘நான்’ என்பது முழுபரிமாணத்தில் இயங்குவதை ‘அவனே’ அறிவான். அஃறிணையான மரத்தில் பட்டைச்சத்து மட்டும் உள்ளது. விலங்கினத்துக்கு பிரஞ்ஞை என்ற நினவாற்றல் உண்டு. ‘நான்’ என்பது மனிதனுக்கு மேலும் விளங்கும்; ஏனெனில் அவனுக்கு புத்திக்கூர்மை உண்டு. அவன் நாளையைப் பற்றி அறிவான். உலகை அறிவான்; எது உலகில்லை என்றும் புரிந்து கொள்வான். நிலையாமையிலிருந்து அவன் இறவா வரம் தேடுவான்.. விலங்கினத்துக்கு பசியும் தாகமும் மட்டுமே தெரியும். ஆனால் மனிதனோ ஆழ்கடல். உலகுக்கு அவனே எஜமானன். அவன் தான் எதை அடைந்தாலும் அத்துடன் நிற்காமல், அதன் எல்லையைக் கடக்க விரும்புவான்.

    சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதை ஆங்கிலமாக்கி, அதை எளிய தமிழாக்கம் செய்யும் போது, நுட்பங்கள் மறைந்து போய்விடலாம். இப்போதைக்கு, நூலில் உள்ள ஆங்கில மொழியாக்கம் இங்கே: எல்லாரும் சேர்ந்து நுட்பங்களைத் தேடுவோமே.

    He who knows more and more clearly the self obtains fuller being. In plants and trees sap only is seen, in animals conciousness. The self is more and more clear in man for he is most endowed with intelligence. He knows tomorrow, he knows the world and what is not the world.  By the mortal, he desires the immortal, being thus endowed.  As for animals , hunger and thirst comprise their knowledge. But  this man is the sea, he is above all the world. Whatever he reaches, he desires to go beyond it. ‘Aitareya Aranyaka II.1.3
    Radhakrishnan.S. (1953) The Principal Upanishads: London: George  Allen & Unwin P.91

    இன்னம்பூரான்
    27 06 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி: http://thumb10.shutterstock.com/display_pic_with_logo/536893/125305433/stock-photo-concept-psychology-color-doodle-icons-and-symbols-125305433.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 125

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

    தெய்வம் மந்திர வலிமைக்கு ஆற்றாது, உண்மை உரைத்து நீங்குதல்

    பாய்ந்து செல்லும் கலைமானை
    ஊர்தியாக உடைய கொற்றவை மந்திரத்தைத்           kotravai
    தன் வாயால் ஓதினான் கோவலன்.

    அதைக் கண்டு அஞ்சிய அம்மாயத்தெய்வம்,
    “நான் இவ்வனத்தில் திரியும் வனதேவதை;
    உம்மீது மோகமுற்று உமை மயக்க எண்ணினேன்.
    என் பிழை பொறுத்திடுக.
    கானமயில் போன்ற மென்மையான உன் மனைவியிடத்தும்
    புண்ணியம் செய்திட்ட தவத்திரு கவந்தியடிகளிடத்தும்
    நான் செய்த இப்பிழை பற்றிக் கூறாது பொறுத்தருள்க!”
    என்று வேண்டிக் கொண்டு மறைந்து விட்டது.

    கோவலன் தாமரை இலையில் தண்ணீர் கொணர்ந்து, கண்ணகியின் தாகத்தைத் தீர்த்தல்

    தன் தாகம் தணித்த கோவலன்,
    பசிய தாமரை இலையில்
    தண்ணீர் கொண்டு வந்து
    களைப்புற்றிருந்த கவுந்தியடிகளுக்கும்
    கண்ணகிக்கும் தந்து
    அவர்தம் துயர் நீக்கினான்.

    வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல்

    வானின் மீது செல்லும் ஞாயிறு
    தன் வெம்மையினைப் பரவச் செய்ததால்
    தீமைகள் மிக நிரம்பிய
    இக்காட்டு வழியில் செல்லுதல் கடினம் என்று கருதி,
    கோவலன் கவுந்தியடிகளுடனும்,
    வளைந்த காதணிகளை அணிந்த கண்ணகியுடனும்,
    மயக்கத்தைத் தரக்கூடிய
    கொடிய வழிகளையுடைய
    அப்பாலை நிலத்தின்கண்
    குரா வெண்கடம்பு கோங்கை வேம்பு மரங்களைக்
    கொண்ட பூஞ்சோலை ஒன்றினுள் புகுந்தனன்.

    மழைதரும் வளத்தைப் பெற்றிடாத
    அவ்விடத்தில் வாழ்ந்திருந்த மறவர்
    வழிப்போக்கரை வில்லைக் கொண்டு
    அச்சுறுத்திக் கவர்ந்த
    பொருட்களின் வளமே வாய்க்கப் பெற்றிருந்தனர்.

    கூற்றுவனை ஒத்த வலிமையுடைய அம்மறவர்கள்
    தம் கையில் வளைந்த வில்லேந்தி,
    பகைவர்களை வென்றிட விரும்பி
    அங்கே எழுந்தருளியுள்ள கொற்றவையை
    வணங்கிச் செல்வர்.
    வென்றதும், அதற்கு விலையாகத்
    தங்களது தலைகளையே அறுத்து
    அத்தெய்வத்துக்குப் பலியிட்டு
    நேர்த்திக் கடன் செலுத்துவர்.

    அப்பலியை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
    கொற்றவை, நெற்றியில் கண்ணுடைய குமரி;
    தேவர்களே போற்றிடும் பாவை;
    குற்றமற்ற சிறப்புடைய விண்ணுலகை ஆள்பவள்.
    அத்தகைய கொற்றவையின் கோயிலை
    மூவரும் அடைந்தனர்.

    (காடு காண் காதை முற்றியது; அடுத்து வருவது வேட்டுவ வரி)

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  196 –  216
    *http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
    <http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html>

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 14

    கே.ரவி

    கவிஞருடன் மூன்றாவது சந்திப்பு நிகழ்ந்தது 1972 இறுதியிலோ, 1973 தொடக்கத்திலோ என்று நினைக்கிறேன்.

    நான் பிறந்ததிலிருந்தே என்னையும், என் மூத்த சகோதரி நந்தினியையும் என் அத்தையின் கணவர் ஆர்.கல்யாணராமனும், அவருடைய இரு மனைவியரும் வளர்த்து வந்தனர். கல்யாணராமன் திரைபடத் தயாரிப்பாளர். சகோதரி பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தையார் கே.சுப்ரமணிய அய்யருடைய குருகுல வாசத்தில் பயின்ற திரைப்படத் தயாரிப்பாளர் அவர்.

    1940-களில் திரைப்படத் துறையின் முன்னணி விநியோகஸ்தராகத் திருச்சியில் கல்யாணராமன் தம்மை நிறுவிக் கொண்டார். பிறகு, 1953-ல் நான் பிறந்த பிறகு தம் குடும்பத்தோடு சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்து மொழிமாற்றுத் துறையில், அதாவது வேறு மொழிப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வெற்றி கண்டார். முதன்முதலாக, பம்பாய் (அதன் பூர்வாஸ்ரமப் பெயர்) ஹோமி வாடியாவின் ஹிந்திப் படமான, மாயா ஜாலங்கள் நிறைந்த ஹாதிம்தாய் என்ற படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு நல்ல பணம் சம்பாதித்தார். அதற்கு முன் தமிழில் ஏதாவது மொழிமாற்றுப் படங்கள் வந்திருந்தனவா என்று ராண்டார்கையிடம் தான் கேட்க வேண்டும். அடுத்து ஒரு கன்னடப் படம். சரோஜாதேவி அம்மையார், ஹொன்னப்ப பாகவதர் நடித்த ‘மஹாகவி காளிதாஸ்’. அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். தெலுங்கில் என்.டி.ராமராவ், அஞ்சலிதேவி நடித்த வெற்றிப் படமான ரேசுகாவை மொழிமாற்றம் செய்து, “நாட்டியதாரா” என்ற பெயரில் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பெரிய படங்கள் வெளியான அதே நாளில் திரையிட்டார். அதன் வசனம் முழுப்பொறுப்பையும் திரு.ஆரூர்தாஸ் தான் எங்கள் அலுவலகத்திலேயே தங்கியிருந்து செய்து கொடுத்தார். பலத்த போட்டிகளுக்கு நடுவே அந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

    ravi1

    k.rஇந்தச் சமயத்தில் கல்யாணராமன், அவரை மாமா என்றுதான் நான் அழைப்பேன், மாமா அன்றைய பிரபல திரைப்படப் பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ் அவர்களோடு நெருங்கிப் பழகி வந்தார். மாமாவுக்குத் தமிழில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் எப்படியோ கவிஞர்களிடம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதனால்தான் நான் சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் 13-01-1953-ல் பிறந்த செய்தி திருச்சியிலிருந்த அவருக்கு மறுநாள் கிடைத்ததும், அன்று சூரிய வழிபாட்டு நாள் என்பதால் எனக்கு ‘ரவி’ என்று அவர்தான் பெயர் சூட்டினார். (மஹாகவி காளிதாஸ் டப்பிங் படம் வெளியிட்ட போது பிறந்த என் தம்பிக்குக் காளிதாஸ் என்று பெயர் சூட்டியவரும் அவரே). எனக்கு ரவி என்று அவர் பெயர் சூட்டிவிட்டுச் சொன்னாராம்: “பையன் ரவீந்திரநாத் தாகூரைப் போல் பெரிய கவியாக வருவான்”. இந்தக் கதையை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அத்தைகள் ஸ்வர்ணாம்பாளும், அலங்காரவல்லி என்ற சரஸ்வதியும் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்த காரணத்தினாலோ என்னவோ நான் கவிதைப் பைத்தியமாக வளர்ந்தேன். மேலும், 2000-ஆம் ஆண்டில் என் முதல் கவிதை நூல், “உன்னோடு நான்” முழுக்கப் படித்துவிட்டு, இன்று நம்மிடையே வாழும் ரசிகமணியாக இருக்கும் பாரதி சுராஜ் அவர்கள் அந்தக் கவிதை நூலை “இன்னொரு கீதாஞ்சலி” என்று எழுதிப் பாராட்டிய பேறு பெற்றேன். யார் கண்டார்கள், கவிதைக்கான நொபெல் பரிசு காத்திருக்கிறதோ என்னவோ! வரட்டுமே!

    கவிஞரை மூன்றாவது முறை சந்தித்த கதைக்கு வாப்பா என்று நீங்கள் எல்லாரும் ஒருமனதாக என் மனத்துக்குள் முணுமுணுக்கும் பேரிரைச்சல் கேட்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள்.

    திருச்சியில் என் சகோதரி பெயரில் ‘நந்தினி பிக்சர்ஸ்’, நான் பிறந்த பிறகு ‘ரவி பிலிம்ஸ்’ ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களை நிறுவிப் பெரும் வெற்றியடைந்த மாமா, நான் பிறந்த மூன்றாண்டுகளில் சென்னைக்குக் குடியேறி டப்பிங் படங்கள் எடுத்து வெற்றி கண்ட செய்தியைச் சொல்லி விட்டேன். சொந்தமாகப் படம் தயாரிக்க நினைத்தார் மாமா. தம் நண்பர் தஞ்சை என்.ராமையாதாஸ் பெயரின் முதலெழுத்துகளைக் கொண்டே ‘டி.என்.ஆர் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி, முதல் படமாக ‘லலிதாங்கி’ என்ற திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அவருடைய நெருங்கிய நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் ராஜசுலோசனா அம்மையார் நடிக்கப் படம் வேகமாக வளரத் தொடங்கியது. பாதிப் படம் தயாரித்து முடிந்து விட்டிருந்த கட்டத்தில், அரசனான கதாநாயகன், துறவறம் பூண்டு மெய்ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகக் கதை அமைந்திருந்ததால், நடராஜர் சிலைக்கு முன் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பாட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாக, அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தார். அவருக்காகவே ராமையாதாஸ் அருமையான பல்லவி எழுதியிருந்தார்.

    “ஆண்டவனே இல்லையே!”

    இந்தப் பல்லவிக்குத் தம்பிகள் எப்படி விசில் அடிப்பார்கள்! ஆனால், விசில் அடிக்கப் போகும் தம்பிகளுக்குத் தலையில் அடிப்பது போல் அடுத்த அடி எழுதியிருந்தார்.

    “ஆண்டவனே இல்லையே – தில்லைத்
    தாண்டவனே உன்போல் தாரணி மீதினிலே
    ஆண்டவனே இல்லையே”

    எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். தம் அரசியல் வாழ்க்கைக்கு இந்தக் காட்சி குறுக்கீடாக அமையும் என்று அவர் கருதினார். பெரும் பொருட்செலவில் செட் போடப்பட்டு சில நாட்கள் ஆகியும் எம்.ஜி.ஆர் ஒப்புக் கொள்ளவில்லை. ‘தில்லைத் தாண்டவனே’ என்பதற்கு பதில் ‘உதய சூரியனே’ என்று பாடலாமே என்று சமரசம் பேசினாராம் எம்.ஜி.ஆர். மாமா தீவிர பக்தர். சமரசத்தை நிராகரித்தார். கவியின் வார்த்தைகளை மாற்ற நமக்கு உரிமையில்லை என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லி விட்டு அடுத்த நாளே நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கி முதலில் இருந்து எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் சிவாஜியை வைத்து ‘ராணி லலிதாங்கி’ என்று மாற்றிப் படாமாக்கி வெளியிட்டார். அவர் துணிச்சலைப் பின்னாளில் எம்.ஜி.ஆரே பாராட்டினார் என்பது வேறு கதை.

    கொள்கைக்காக மாமா பலத்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்-பானுமதி என்றே படங்கள் வந்து கொண்டிருந்த நிலையிலும், துணிந்து சிவாஜியுடன் நடித்துக் கொடுத்ததால், பானுமதி அம்மையாருக்கு நாடோடி மன்னன் படத்தில் இருந்து பாதியில் வெளியேற வேண்டியதாயிற்று. மாமாவால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மாமாவின் ஆதரவிலேயே வசித்து வந்து, அவர் மூலம் கே.சுப்பிரமணியம் தயாரித்து வந்த ‘கச்ச தேவயானை’ படத்தில் நடித்து வந்த சரோஜாதேவி அம்மையாருக்கு நாடோடி மன்னனில் நுழைய வாய்ப்புக் கிட்டியது.

    6b71a6a4-fc34-4b3d-9fe6-50ced8973dd9_S_secvpf (1)

    ராணி லலிதாங்கி நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட மாமா, ரஞ்சனையும், இன்னொரு பிரபல நடிகையையும் வைத்து ‘மின்னல் வீரன்’ என்ற படம் எடுத்தார். தலைப்புச் செய்தி, நான் அதில் குட்டி ரஞ்சனாக நடித்தேன். அதுவும் வியாபார ரீதியில் நஷ்டம் ஏற்படுத்தியது. இந்த நஷ்டங்களுக்கெல்லாம் பிறகு, 1970-ஆம் ஆண்டு, மாமா மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட்டார். டி.எம்.செளந்திரராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடிக்க அவர் ‘கவிராஜ காளமேகம்’ படம் எடுத்த போதுதான் கவிஞரோடு என் மூன்றாவது சந்திப்பு நேர்ந்தது.

    மந்தைவெளி, மேற்கு சர்குலர் சாலையில் இருந்த அலுவலகத்தில் ஒருநாள், கவிராஜ காளமேகம் படத்துக்கான அடுத்த பாடல் காட்சி பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. திருவரங்கம் பெருமாள் கோவிலில் வைணவ பட்டராக உக்ராண அறையில் பணிசெய்து கொண்டிருந்தவனுக்கு அம்பிகை அருள் செய்ய, உடனே இம்மென்றால் எழுநூறும் அம்மென்றால் ஆயிரமும் பாடல் பொழியும் ஆசுகவி காளமேகமாக மாறிய புலவனிடம், திருவானைக்கா தாசி மோகனாங்கி காதல் வயப்பட்டது பற்றி ஊரெல்லாம் வம்பு தும்பு பேசக் கேட்டு, ( “ஊரார் அலர் உரைக்கக் கேட்டு”, புரிகிறதா?), அதனால் அவளை வீட்டுக் காவலிலேயே வைத்து விடுகிறாள் அவள் அன்னை. அந்தச் சூழ்நிலையில், திருவானைக்கா கோவிலில் மோகனாங்கி நடனம் ஆட வேண்டிய நாள் வருகிறது. அந்த நடனத்துக்கான பாடலைக் கவிஞரிடமிருந்து எதிர்பார்த்தபடி நாங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம். நாங்கள் என்றால், தயாரிப்பாளரான என் வளர்ப்புத் தந்தை, பட இயக்குநர் ஜி.ஆர்.நாதன், சிங்கப் பிடறி போல் நீண்ட, ஆனால், தும்பைப்பூப் போல் வெளுத்த தலைமுடியோடு அமர்ந்திருக்கும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர். வசனகர்த்தாவின் உதவியாளர் கவிஞரிடமிருந்து பாடல் பெற்று அலுவலகம் வந்து கொண்டிருந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. எல்லாரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பாடலுடன் உதவியாளர் வருகிறார். பாடலை வாங்கி, ஏ.எல்.நாராயணன் உரக்கப் படிக்கிறார்.

    “கேளுங்கள் பெரியோர்களே – மனது
    கீழ்க்குல மாயில்லை மேற்குல மாஎன்று
    கேளுங்கள் பெரியோர்களே.”

    ravi2அதற்கு மேல் அவர் படிப்பது என் செவியில் ஏறவில்லை. அவரும், இயக்குநரும் பாடலைப் புகழ்ந்துவிட்டு மேற்கொண்டு விவாதத்தைத் தொடர, நான் மெளனமாக அமர்ந்திருக்கிறேன். திடீரென்று, விவாதமும் நிற்கிறது. ஏ.எல்.நாராயணன் என்னைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன ரவி, ஒண்ணும் சொல்லலே. பாட்டு நல்லா இல்லியா?” கவிஞர் பாட்டு நன்றாக இல்லை என்று சொல்ல நான் யார்? மெதுவாகச் சொல்கிறேன், “நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ‘கேளுங்கள் பெரியோர்களே’ என்ற பல்லவி ஏதோ ஓட்டுக் கேட்பது போல் இருக்கிறது.” இப்படி நான் சொல்லி முடிக்கும் முன் எம்.ஜி.எம். சிங்கம் போல் கர்ஜனை ஒலியோடு, பிடறி சிலிர்த்துக் கொண்டு எழுகிறார் நாராயணன். என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்று காரில் ஏறச் சொல்கிறார். ‘கவிதா ஹோட்டலுக்கு விடு’ என்று ஓட்டுநரை விரட்டுகிறார்.

    கவிதா ஹோட்டல், அந்த அறையில் நுழைகிறோம். கட்டிலின் மேல் மதுசூதனனாக, மப்பும் மந்தாரமுமாய்க் கவிஞர் அமர்ந்திருக்கிறார். “என்ன ஆலநா?” என்று கவிஞர் கேட்கிறார். ஏ.எல்.நாராயணனைக் கவிஞர் அப்படித்தான் அழைப்பாராம். “வெட்கம் கவிஞரே. உங்க பாட்டை இந்தச் சின்னப் பையன் ஓட்டுக் கேக்கற மாதிரி இருக்குன்னு சொல்லிட்டானே!” என்று சொல்லி விட்டுப் பாட்டுத் தாளைக் கவிஞரிடம் நீட்டுகிறார். வாங்கிப் படித்துவிட்டுக் கவிஞர், “இப்ப என்ன வேணும்? ஆலநா, நீயே ஒரு பல்லவி சொல்லு” என்றதும், அந்தச் சிங்கப் பிடறி சிலிர்த்துக் கொள்கிறது. சிங்கம் சொல்கிறது: “யாராக இருந்தால் என்ன?” உடனே கவிஞர் பதிலுக்குச் சொல்ல உதவியாளர் எழுதுகிறார்: ” இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன யாராக இருந்தால் என்ன”. மடமடவென்று அடுத்த வரிகளை ஆலநாவும், கவிஞரும் மாற்றி மாற்றிச் சொல்லப் பாடல் வளர்கிறது:

    “யாராக இருந்தால் என்ன
    இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன
    யாராக இருந்தால் என்ன

    சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா – அவன்
    மகனுக்குத் தெய்வானை மாமன் மகளா
    இறைவனின் வீட்டினிலும் ஜாதியில்லையே – இதை
    எம்மிடம் கேட்க ஒரு நீதியில்லையே”.

    நான் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருக்கிறேன். அந்தப் பாடல் பெற்ற ஸ்தலம், அதாவது கவிதா ஹோட்டல் அறை, இன்னும் என் மனத்திரையில் காட்சியாகப் பதிந்திருக்கிறது. ஆலநாவையும், கவிஞரையும் கவிதை சொல்ல வைத்த மூல நாவான கலைமகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    அந்தப் பாடலை அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இனிய இசையில், கல்யாணி ராகத்தில் பி.சுசீலா அம்மாவின் தேன் குரலில் கேட்கவும், அதற்கு வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடனக் காட்சியைப் பார்க்கவும் யூ ட்யூபில் அந்தப் பாடல் பதிவு மட்டும் கிடைக்கவில்லை. படத்தின் மற்ற பாடல்கள் உள்ளன.

    சிறுகூடற்பட்டி முத்தையாவுடன் (அதாங்க, கவிஞர்) மூன்று சந்திப்புகள் என்ற கதை முற்றுப் பெறுகிறது. வாலிபக் கவிஞர் வாலியை விட்டுவிட முடியுமா? அவரோடு என் சந்திப்புகளை அப்புறம் சொல்கிறேனே!

    (தொடரும்)

    Share
  • அழகி

    -வி.த.தமிழினி

    azhakiமுகமறியா ஊரில்…சேர்ந்த புதிய வேலையில் ஏற்படும் தனிமையில் தான் அவள் எனக்குப் பழக்கமானாள். பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் அழகு கிடையாது அவளுக்கு. ஆனால் அப்பழுக்கற்றவள்…அவளுக்கும் எனக்குமான உறவு பலரின் சுயநலத்துக்குள்ளாகி விரோதத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். எத்தனை எத்தனை முகங்களை நாங்கள் கடந்திருக்க வேண்டும்.  அவளுக்கு நான் போட்டியாய்…எனக்கு அவளைப் போட்டியாய் மாற்ற வைக்க எத்தனை முகங்களை மாற்றியிருப்பார்கள் அந்த நிறுவனத்தில்… அத்தனைக்கும் காரணமாய் அந்த டார்கெட் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அத்தனை முகங்களைத் தாண்டியும் என்னைச் சகோதரியாய் ஏற்றுக் கொள்ள எப்படி முடிந்தது அவளால்? ஆம்.  பெண்களின் மனதை மனிதத்தை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்தும் என்பதில் அனுபவம் இல்லாதவள் நான்.

    ஏதோ ஓர் நாள் பிறந்த நாளென அவள்  நீட்டிய மிட்டாயை வாங்கிக் கொண்டு ஒப்புக்குச் சப்பாய்  நானும் வாழ்த்தியது இன்னும் நினைவிலிருக்கத்தான் செய்கிறது. மாத இறுதி சமயமானதால் அவளுக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. அவளும் ஏனோ கேட்கவில்லை. கிளம்பும் சமயம் “அக்கா…உங்க போன் நம்பர் கிடைக்குமா…?” எனக் கண்களில் கண்ணீரோடு அவள் கேட்டபோது சற்றே மிரண்டுதான் போயிருந்தேன். என்னால் அவளுக்கு எந்தச் சிக்கலும் எழுந்திருக்க வாய்ப்பில்லைதான். இருப்பினும் ஏதோ இனம்புரியாத பதட்டத்தோடு என் எண்ணைக் கொடுத்து பார்த்துப்போ என அனுப்பியபோதும் ஏதோ குழப்பம்தான் நீண்டிருந்தது. அடுத்த ஐந்து நிமிடத்திலேயே அவள் அழைப்பாளென நான் எதிர்பார்க்கவில்லைதான்.

    அழைப்பை எடுத்தவுடனேயே அக்கா…என்றாள். நான் அக்காவா…? திருமாணவனவள் என்பதால் அவளே முடிவெடுத்துவிட்டாள் போல…  சொல்லும்மா…என்ற என் பதிலுக்குப்பின் அவள் அழுகையைக் கட்டுப்படுத்த எனக்கு 2, 3 நிமிடங்கள்  ஆகிப்போனது. “போன வருஷம்  என் பர்த்டேக்கு எங்க அப்பா என்கூட இருந்தாரு…நாங்க ஒன்னா செலிபரேட் பண்ணோம்…  இப்ப அவர் இல்ல…வீட்ல இருக்கப் பிடிக்கல…அதான் லீவ் போடல…இப்போ வீட்டுக்குப் போகப்பிடிக்கல…” அழுதுகொண்டே இருந்தாள். எத்தனை அன்பானவள் இவள்? அத்தனை முகமூடிகளையும் தாண்டி என்னை அவள் ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன? அத்தனை பேரைத் தாண்டி என்னை அவள் சகோதரியாய்  ஏற்றுக்கொண்டு என்னிடம் மட்டும் பகிர வேண்டிய காரணம் என்ன? என் மனக்கேள்விகள் அத்தனையும் உடைத்தெறிந்து நான் இருக்கேன்மா… கவலைப்படாத… என்ற பதிலிலிருந்துதான் புரிந்தது நானும் அவளை என் தோழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

    வீட்டுச் சூழ்நிலைகளை எவ்வளவு அழகாய்த் தன் உழைப்பால் அவள் நிறைவேற்றுகிறாள். அவள் அம்மாவை எவ்வளவு தோழமையுடன் அணுகுகிறாள் அவள். என் பிறந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு என் வீட்டிலிருந்து வாழ்த்துச் சொல்ல எவ்வளவு தைரியம் அவளுக்கு…?  முதலில் சொன்னது உண்மை இல்லை…அவள் மிக அழகானவள்!

    காதல் தோல்வியால் அவள் மறுத்துக் கொண்டே வந்த திருமணத்தை சம்மதிக்க வைத்து எவ்வளவு பெரிய தவறை நாங்கள் செய்தோம் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அவன் தவறானவனாம்… திருமணத்திற்குப் பின் காவல்துறை மூலம்தான் தெரிந்தது அனைவருக்கும். அத்தனைக்குப் பின்னும் அவனை வெளிவிடுங்கள்…என்று கதறியல்லவா  இருக்க வேண்டும் அவள்? அதுதானே பெண்மைக்கான நியதி… எல்லாவற்றையும் உடைத்தெறிந்து அவன் சிறையிலேயே இருக்கட்டும், என் வாழ்வை நான் பார்த்துக் கொள்கிறேனென அவள் நின்றபோது அத்தனை பேருக்கும் அவள் பிரமிப்பாய்த்தான் தெரிந்தாள். என்ன எப்படியோ அவள் அன்பால், உழைப்பால், மனத்திடத்தால் மெருகேறிக் கொண்டேதான் இருக்கிறாள் தினம்!

     

    Share
  • அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்……

    –காவிரிமைந்தன்.

    அழகன்

     

     

     

    om saravanaதிருமுருகன் அழகினில் மயங்காதவர் யார்? அழகுக்கு மறுபெயரே முருகன்தானே!  அன்னவர்தம் சரண்புகுந்தார் எனும்போது அவன்மீது ஆசைவைத்து நாயகி பாடுகின்றாள் ஒரு பாடல்!  ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு!  கவிஞர் வாலி அவர்கள் வரைந்திருக்கும் ஓவியமாய், சுகமான சொற்களிலே சொக்க வைக்கிறார்!  பி.சுசீலா குரலிலே தேன்மழை பொழிகிறார்!  மெல்லிசை மன்னர்கள்  இசையமைத்திட இனிதாய் ஒரு பாடல் அரங்கேறுகிறது!  நம் மனதில் இன்றும் அக் காட்சி நினைவோடு நிற்கிறது!

     
    http://youtu.be/7qpeuaM39RM
    காணொளி: -http://youtu.be/7qpeuaM39RM

     

    திரைப் படம்: பஞ்சவர்ணக் கிளி
    பாடியவர்: பி.சுசீலா
    இசை: எம்.எஸ்.வி – டி.கே.ஆர்

    சத்தியம் சிவம் சுந்தரம் ஆ….
    சரவணன் திருப்புகழ் மந்திரம்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ…

    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ…
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
    கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
    பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
    வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
    பெண்மையை வாழ வைத்தான் ஆ…
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

    மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
    மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
    அழகுக்கு அழகானேன் ஆ…
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

     

    வார்த்தைகள் வரம்கேட்டு வந்து விழுந்தனவோ?  கவிஞர் வாலி  கரம்பட்டு கண்கள் மயங்கினவோ?  சுகமான பாடல்கள் பல.. பி.சுசீலா பாடியிருந்தாலும் அவற்றுள் முன்னணியில் ‘அழகன் முருகனிடம் ஆசைவைத்தேன்’ பாடல்!  கேட்பது சுகம்!  கேட்டு ரசிப்பது சுகம்!!  என்று சுகத்தின் பன்முகங்கள் இதோ ஒரு பாடலிலே.. அழகியலின் பதிவு எனில் அழையுங்கள் கவிஞர் வாலி அவர்களை!  இறைவனையும் கலந்தபடி இனிதாய் எழுதித்தந்திடுவார்.. அழகனைப் பற்றி அவள் பாடும் பாடலிது!  இது முருகனை அழைக்கும் முத்திரைப் பாடல்!!

    Share
  • லப் ரொப் – லப் டப்

    கே.எஸ்.சுதாகர்

    asusசனிக்கிழமை மதியம். சாப்பாடு வாங்குவதற்காக ‘கே.எஸ் ஸ்ரோர்’ போயிருந்தேன். அந்தப் பல்பொருள் அங்காடியில் உணவு வகைகளும் செய்து விற்கின்றார்கள். காரை நிற்பாட்டுவதற்கு ஒரு தரிப்பிடம் தேடிப் போதும் என்றாகிவிட்டது. பொதுவாக சனிக்கிழமை என்றால் எங்கும் சனக்கூட்டம். காரைவிட்டு இறங்கியதும், என் பின்னாலே இரண்டு ஆப்பிரிக்கர்கள் வந்து நின்றார்கள்.

    “லப் ரொப் வேண்டுமா சேர்?” இரண்டு பேருமே ‘ரை’ கட்டிக் கச்சிதமான ஆடைகளுடன் தோற்றமளித்தார்கள். இந்த இடத்தில் இப்படிப்பட்ட வியாபாரம் நடப்பது சகஜம்தான். இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் இதே இடத்தில் ஒரு ’ஐ போன்’ வாங்கியிருந்தான். இன்னமும் அதைப் பற்றியே சொல்லிப் புளுகிக் கொண்டிருப்பான்.

    “எவ்வளவு காசு?”

    “150 டொலர்கள்!”

    பர்ஸ்-ல் 45 லொடர்கள் மாத்திரம் இருந்தன.

    “பாவித்ததா…புதிசா?”

    “பிறாண்ட் நியூ சேர்” சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த பார்சலின் ஒரு நுனியைப் பிரித்து பெட்டியைக் காட்டினான் ஒருவன். பெட்டியில் பளிச்சென ’அசுஸ்’ என்ற எழுத்துகள் தெரிந்தன.

    பார்த்த மாத்திரத்தில் அதை வாங்கிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இன்றைய நிலவரப்படி 600 டொலர்கள் தேறும்.

    “இதிலேயே நின்று கொள்ளுங்கள். காசு கொஞ்சம் குறைகின்றது. கடையில் என் நண்பர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களிடம் வாங்கி வருகின்றேன்.”

    “நாங்கள் நிற்கமாட்டோம். இது பொலிஸ் நடமாட்டம் உள்ள இடம். நீங்கள் காசுடன் வந்து காருக்குக் கிட்ட நில்லுங்கள். அதன் பின்னர் நாங்கள் வருகின்றோம்” சொல்லிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

    கடைக்குச் சென்று சாப்பாட்டிற்கு ஓடர் கொடுத்தேன். சாப்பாட்டிற்கு கிறடிற் கார்ட்டைப் பாவிக்கலாம். 100 டொலரை இரண்டு நண்பர்களிடம் ஐம்பது ஐம்பதாகக் கறந்து கொண்டேன். நண்பர்களுக்கு விஷயத்தைச் சொல்லவில்லை.  கார் நிற்குமிடம் வந்து சுற்றுமுற்றும் உற்று நோக்கினேன். சொன்ன வாக்கைக் காப்பாற்றுபவர்கள் போல இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

    “ஐந்து டொலர்கள் குறைகின்றன!”

    “அதனாலென்ன பரவாயில்லை. குட் லக்.”

    காசும் பொருளும் இடம் மாறின. எப்பவும் கேட்ட விலையில் இருந்து சிறிதளவாவது குறைத்துக் குடுத்தால்தான் மனதுக்குத் திருப்தி. அந்தத் திருப்தியுடன் காருக்குள் ஏறிக் கதவுகளை லொக் செய்துவிட்டு பார்சலைப் பிரித்தேன். காரின் ஜன்னலைத் தட்டினார்கள். அவர்கள் இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என நான் நினைத்திருந்தேன்.

    கண்ணாடியை நீக்கினேன்.

    “இங்கே வைத்துப் பாராதீர்கள். பொலிஸ் உங்களை அப்பிவிடும்” சொல்லிவிட்டு விரைந்து சென்றார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான்.

    லப் ரொப்பை காரின் பின்னே வைத்துவிட்டு, ஓடர் கொடுத்த சாப்பாட்டைப் போய் எடுத்து வந்தேன். காரை எடுத்துக் கொண்டு வேகமாக வீடு சென்றேன். 600 டொலர் பெறுமதியான லப் ரொப்பை 145இற்கு வாங்கிய மகிழ்ச்சி காரின் வேகத்தில். எவ்வளவு காசிற்கு வாங்கியதாக மனைவி பிள்ளைகளுக்குச் சொல்லலாம்? அவர்களிடம் முதலில் அதன் விலையை உய்த்துணரச் சொல்லவேண்டும். பின்னர் 300 டொலருக்கு வாங்கியதாகச் சொல்லுவோம். அப்பவும் லாபம் தானே! லப் ரொப்பை பார்ப்பதற்கு மனம் துடித்தது. இதயம் ‘லப் டப்’ என அடித்தது.

    பிரதான வீதியில் காரை எங்குமே நிறுத்த முடியாது. பார்க் ஒன்றிற்கு அண்மையாக மரமொன்றின் பக்கமாக நிறுத்திக் கொண்டேன்.

    அவசர அவசரமாக பெட்டியைச் சுற்றியிருந்த பேப்பரைக் கிழித்து எறிந்தேன். அழகான புத்தம் புதிய ‘அசுஸ்’ பெட்டி. பெட்டியைத் திறக்க உள்ளேயிருந்து விழுந்தன இரண்டு ‘செங்கட்டிகள்’.

    இதயம் ஒரு அளவுக் கணக்கின்றி ‘லப் டப்…லப் டப்…’ என அடிக்கத் தொடங்கியது.

    Share
  • கதைசொல்லியும் கதாநாயகனும்..

    மாதவன் இளங்கோ

    என் மகனுக்குக் கதை சொல்வது என்பது அத்தனை எளிதல்ல.

    கதைக்குள் நிச்சயம் ஒரு சிங்கம் இருந்தாக வேண்டும். மரங்கள், அருவிகள், மலைகள் இருந்தாக வேண்டும். காட்டுக்குள் மழை பெய்தாக வேண்டும். யானையோ, புலியோ, முயலோ, மானோ, கரடியோ – இதில் ஏதொன்றுக்காவது பிறந்தநாள் கொண்டாடவேண்டும். கதையில் சண்டை இருக்கக்கூடாது. சிங்கமும் மானும் நண்பர்களாக இருக்கவேண்டும். அவனது நண்பர்கள் சிலரின் பெயரைச் சொல்லவேண்டும். அரவம் கூடாது. பறவைகள் பற்றி பேசலாம்.

    கண்டங்களும், நாடுகளும், கடல்களும் பற்றிய விவரிப்பு இருந்தாக வேண்டும். அவ்வப்போது இந்தியாவையும், சென்னையையும், ஏலகிரி மலையையும் தொட வேண்டும். வானவில்லும் அதை நோக்கிச் செல்லும் விமானமும் வந்தாக வேண்டும். கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே இடைமறித்து அதை அவன் திருத்துவதற்கு முழுவதுமாக அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக, அவனுடைய கதாப்பாத்திரம் அதில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வெறும் கதாப்பாத்திரமாக அல்ல, கதாநாயகனாக! அந்த கதாநாயகனின் வீரத்தைப் பற்றிய விவரிப்பும் நிச்சயம் இருந்தாக வேண்டும். 

    விண்வெளி பற்றி பேசவேண்டும். அவன் விஞ்ஞானி என்று கூறவேண்டும். இறுதியில் அவனுக்குப் பிடித்தமான அத்தனை மிருகங்களையும், பறவைகளையும், நண்பர்களையும், உறவுகளையும், எங்களையும் விண்கலத்தில் கூட்டிக்கொண்டு அவன் விண்வெளிப் பயணம் போவது பற்றி ரசனையுடன் விவரிக்க வேண்டும். பூமியில் தொடங்கி, வியாழனைக் கடந்து, (கோள்களின் வரிசை மாறக்கூடாது!) புளூட்டோவைத் தொட்டு, பால்வெளியை விட்டு வெளியேறி, வேறு ஏதேதோ மண்டலங்களுக்கெல்லாம் சென்று விட்டு மீண்டும் பூமிக்கு வந்து சென்னையில் இறங்கி, அனைவரும் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும்.

    பெரியது குழந்தைகளின் உலகமும், மனமும்.

     

    Kadhaisolli Kadhanayagan

     

    Share
  • தடை தகர்த்து…

    -செண்பக ஜெகதீசன்

    சீறிப் பாயும் கடலலைதான் – மிகச்                                    Sea_storm
         சிறந்த மாலுமி உருவாக்கும்,
    மாறிடும் வானிலை  காட்டிடுமே – திறமை          
         மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
    கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
         காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
    ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
         ஏற்றம் என்றும் பெறுவாரே…!

    Share