கிரேசி மோகன்
—பி. தமிழ் முகில்.
நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.
இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள் நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும் நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )

Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox) ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.
இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.
இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில் பயன்படுத்தலாம்.
இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.
திறந்த நூலகம் ( Open Library )

Open Library என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.
திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது. யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.
இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம்.
திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.
PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.
இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.
சென்னை நூலகம்
திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை 20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html
இந்நூலகத்தின் இணையதள முகவரி
நூலகம் திட்டம் (noolaham.org) :
![]()
நூலகம் திட்டம் ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ கூட்டுழைப்பாகும்.
இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக, மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.
இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.
இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.
மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ( Project Madurai ):

உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும்.
இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம். தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.
இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
http://www.projectmadurai.org/index.en.html
இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
http://www.projectmadurai.org/pmworks.html
புத்தகங்களை pdf கோப்புகளாகவும், Unicode, TSCII எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.
தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :
![]()
தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.
சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.
இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal’s dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.
நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.
இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.
செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.
திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):

தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.
இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.
http://www.openreadingroom.com/
பிரித்தானிய தமிழ் நூற்சேகரம், தமிழ் மரபு அறக்கட்டளை:

பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html
தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில் பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பார்த்து பயன் பெறலாம்.
http://tamilheritagefoundation.blogspot.ca/
தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.
http://thfreferencelibrary.blogspot.ca/
தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :

தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் கிடைக்கின்றன.
இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.
தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ
http://thamizhagam.net/tamillibrary/tamillibrary.html
இலவச தமிழ் மின்னூல்கள் :

மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).
பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.
இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
கூகுள் புத்தகங்கள் :

கூகுள் நிறுவனம் வழங்கும் சேவை கூகுள் புக்ஸ் ஆகும். இத்தளத்தில் தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன. இச்சேவையை கீழ்காணும் தளத்தில் பெறலாம்.
கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு :
இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் இங்கு குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
–சு. கோதண்டராமன்.
வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. இறைவனுக்கு எந்த மந்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்தாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. பிற்கால வேத இலக்கியத்தில் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரம் ரிக் ஸம்ஹிதையில் காணப்படவில்லை என்று பார்த்தோம். இது இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.
பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தாய் வேதமாகிய ரிக் ஸம்ஹிதையின் கருத்துக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை வேதமாகக் கருதப்படும்.
ஓங்காரம் வேதத்துக்கு ஏற்புடையதா என்று பார்ப்போம். ஓங்காரத்தின் பொருள் என்ன?
ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.
இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?
ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.
புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.
பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”
ரிக் ஸம்ஹிதை புதுமையை ஆதரிக்கிறதா? ஆம்.
சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையை விரும்புவார்கள். எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறையாகப் பார்ப்பது போல ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ரிஷிகள் அது போல அக்னி எரியும் அழகை ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்த்துப் பரவசப்பட்டு வர்ணித்தார்கள் என்பதை முன்பு பார்த்தோம்.
வைகறைப் பொழுதைப் புகழ்ந்து ரிஷி பாடுகிறார். இதுவரை எத்தனையோ வைகறைகளைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறார் அவர். அது தான் பார்த்தாயிற்றே, இன்றைக்கும் அதே மாதிரித் தானே இருக்கப் போகிறது என்று அவர்கள் அலுப்பு அடையவில்லை. இன்றைய வைகறை இதற்கு முன்பாக வந்த மற்ற வைகறைகளை விட அழகானது என்று தினமும் சொல்கிறார்.1.123.10 ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகு தோன்றுகிறது அவருக்கு.
ஒரு பிரபலமான மந்திரம் இது. நவோ நவோ பவதி என்று தொடங்குவது. இதில் ரிஷி தினமும் சந்திரனின் வடிவம் மாறுவதைக் கண்டு சந்திரன் தினமும் புதிதாகப் பிறப்பதாகக் கூறி பரவசப்படுகிறார்.
நவோ நவோ பவதி ஜாயமானோ அஹ்னாம் கேதுருஷஸா மேத்யக்ரம், பாகம் தேவேப்யோ விததாத்யாயன் ப்ர சந்தரமாஸ் திரதே தீர்கமாயு: 10.85.19
எனவே வேத ரிஷிகளுக்குப் புதுமையைக் கண்டு ஆனந்தம் ஏற்படுகிறதே அன்றி அலுப்பு ஏற்படுவது இல்லை.
வேத ரிஷிகள் பல இடங்களில் நான் இந்தப் புதிய தோத்திரம் இயற்றியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். தேவர்களை வழிபட முந்தைய ரிஷிகள் செய்த மந்திரங்கள் போதும் என்று அவர்கள் இருந்து விடவில்லை. புதிய மந்திரங்களைப் படைக்கிறார்கள்.
ரிக் ஸம்ஹிதையிலேயே, முந்திய ரிஷிகளின் கருத்துக்கு மாறுபட்ட புதிய கருத்துகள் காணப்படுகின்றன என்று பார்த்தோம். யக்ஞம் செய்தால் தான் தேவ நிலையை அடையலாம் என்று ஒரு கருத்தும் காணப்படுகிறது. ரிபு சகோதரர்கள் யக்ஞம் என்று எதுவும் செய்யவில்லை. சமீகள் மூலமாகவே யக்ஞத்தின் பலனை அடைந்தார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பசுக்களைக் கொன்று வேள்வி நடத்திய காலத்தில் பசுக்களைக் கொல்லாதீர்கள் என்ற புதிய கருத்தும் எழுகிறது. இந்தப் புதுமையை மக்கள் எதிர்க்கவில்லை. வேதத்தில் அந்தக் கருத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.
வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி.
–எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
சித்திரையின் பின்னாலே
சிறப்பெல்லாம் வருமென்று
பக்குவமாய்ப் பஞ்சாங்கம்
பார்த்திடுவோம் யாவருமே!
பஞ்சாங்கப் பலன்தன்னைப்
பலபேரும் பார்த்துவிட்டு
நெஞ்சார மகிழ்ந்தாலும்
சிலநெஞ்சம் மகிழாது!
பரிகாரம் செய்துவிடின் 
பலன்சிறந்து விடுமென்று
பலன்குறைந்த நெஞ்சத்தார்
பலவற்றைச் செய்திடுவார்!
பூசைகள் பலசெய்வார்
புதுவழிகள் பலபார்ப்பார்
ஆசையால் உந்தியவர்
காசையெல்லாம் செலவிடுவார்!
சித்திரையை யாவருமே
சிறப்பாக வரவேற்போம்
சிக்கலெலாம் போகவேண்டிச்
சிரத்தையுடன் செயல்படுவோம்!
புத்தாடை உடுத்திடுவோம்
புத்துணர்வு பெற்றிடுவோம்
மொத்தமுள்ள நல்லவற்றை
முழுமையுடன் செய்திடுவோம்!
சித்திரையின் பின்னாலே
சீராகும் எனும்நினைப்பால்
அத்தனை பேருள்ளமுமே
சித்திரையைக் கொண்டாடும்!
வாசலிலே கோலமிட்டு
வரவேற்போம் சித்திரையை
நீதிநெறி தனைமனதில்
நீங்காது தேக்கிவைப்போம்!
தாய்தந்தை மனங்குளிரத்
தாள்பணிந்து நின்றிடுவோம்
பேய்மனத்தை ஒழிப்பதற்குப்
பெம்மானை வணங்கிடுவோம்!
— முனைவர் சி.சேதுராமன்.
தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் களவு, கற்பு என்ற இயல்களும் பொருளியல் என்பது ஐந்தாவது இயலாகவும் அமைந்துள்ளது. யாப்பிலக்கணத்தையும் அணியிலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தொடு சேர்க்காமல் பிற இலக்கணத்தை; தனித்தனியாகக் கூறுவர். ஆனால் தொல்காப்பியர் யாப்பிலக்கணத்தைச் செய்யுளியல் என்றும் அணி இலக்கணத்தை உவமயியல் என்றும் கூறியுள்ளார். ஆறாவதாக மெய்ப்பாட்டியலும் ஏழாவதாக உவமவியலும் எட்டாவதாகச் செய்யுளியலும் ஒன்பதாவதாக மரபியலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன.
அகத்திணை – புறத்திணை
தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது. அவ்வொழுக்கம் தொடர்புடைய மனைவி, மக்கள் உற்றார், உறவினரோடு ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், அயலார், பொதுமக்கள் என்பவரோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. திணை என்பது ஒழுக்கம் என்பதால் அகவொழுக்கம் அகத்திணையிலும் புறவொழுக்கம் புறத்திணையிலும் கூறப்பட்டன.
புறவொழுக்கத்தைக் கூறும் புறத்திணையியலில் முதலாவதாகக் கூறப்படும் வெட்சி என்னும் ஒழுக்கம், அறவழியில் நடக்கும் மன்னன் ஒருவன்தான் படையெடுத்துச் செல்லும் செய்தியைத் தன் பகைவனுக்கு முன்னரே அறிவிப்பதாகும். திடீரென்று படையெடுத்துப் போனால் பகைவர் நாட்டிலுள்ள பெண்டிரும், பிணியுடையோரும், சிறுவரும் பிறரும் அஞ்சி அல்லலுற்று அலமருதல் வேண்டத் தகுந்ததில்லை என்ற அறவுணர்வுதான். பகைவர் எனினும் அவரிடம் அறவுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை உணர்த்துவதே வெட்சி ஒழுக்கமாகும். இத்தகைய அடிப்படை உணர்வுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புறத்திணை இயலில் இரண்டாவதாகச் சொல்லப்படுவது வஞ்சித்திணை. வஞ்ச நெஞ்சப் பகைவனின் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வதே அது. மூன்றாவது உழிஞைத் திணை. பகை நாட்டிலுள்ள அரணை வளைத்துக் கைப்பற்றிக் கொள்வது. நான்காவது தும்பைத் திணை. போர்க்களத்தில் இருபடையும் பொருது வெற்றி தோல்வி அடைவது. ஐந்தாவது வாகைத் திணை. வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவது. ஆறாவது காஞ்சித்திணை. நிலையாமை பற்றி எண்ணிச் செயற்படுவது. ஏழாவது பாடாண்திணை. இஃது முன்னோர் கூறிய குறிப்பில் பரவலும் புகழ்தலும் செய்வது ஆகும்.
பாடாண்திணை
பாடாண் என்பது புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்களாற் பாடப்பெறும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். புலவராற் பாடப் பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினைப் பாடாண் எனும் சொல் உணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.
பாடாண்திணை தனக்கென ஒரு தனிநிலை பெறாது பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழுக்கு ஏற்ற ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாக அமையும். அகத்திணை, புறத்திணை இரண்டும் மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவனவாகும். ஆதலால் பாடாண் திணையும் மக்களுக்கு உரியதாகவே ஆதல் வேண்டும். இது கருதியே பாடாண் பாடல்கள் எல்லாம் மக்களில் தக்காரின் புகழாகவே வரும் என்று கூறினர்.
பாடாண் திணையும் கைக்கிளையும்:
பாடாண் திணைப் பகுதி கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது எட்டு வகையுடையதாகும் என்பதை,
‘‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங்காலை நாலிரண்டுடைத்தே’’(தொல்.புறத்.,20)
என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
கைக்கிளையில் காதற் சிறப்பு ஒருவருக்கே ஆகிவரும். அதுபோலப் பாடாண்திணையிலும் சிறப்பானது தகுதியுடைய ஒருவருக்கே உரித்ததாக வரும். கைக்கிளையில் காதற்கூற்று, பாராட்டும் தலைவனிடத்ததாகும். பாடாண்திணையில் புகழும் கூற்று புகழ்வோனிடத்திலேயே அமையும். கைக்கிளையில் இழுக்கு நீக்கித் தருக்கியலே சொல்லி இன்புறுதல் உரிது. பாடாணில் பழி தழுவாத புகழ்ச்சி ஒன்றே பயின்று வரும். கைக்கிளைக்கும் பாடாணுக்கும் நிலமும் பொழுதும் வரையறையில்லை. ஒருதலையாய் வெளிப்படையாக அமையுமதனால் படாண்திணை கைக்கிளைக்குப் புறனாக அமைந்தது.
ஒரு நிலத்திற்கு உரியதாக அன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோன்று ஒரு பாலுக்கு உரித்ததன்றி ஒருவரை ஒருவர் ஏதேனும் ஒரு பயன் கருதிய வழிப் பாடப்பெறுவது பாடாண்திணையாகும். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாது வெளிப்படையாக வருவதுமாகிய பண்பு இவ்விரண்டிற்கும் பொருந்தும். பாட்டுடைத் தலைவன் வணங்கிப் பாடும் புகழ்ச்சியும் வேண்டப் பாடும் புலவர்கள் பரிசிற்பொருளை வேண்டும் முறையில் அமைந்தது பாடாண்திணை ஆதலால் இஃது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று.
இல்லற வாழ்வில் ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயல்களாகிய அகவொழுக்கங்களும், அரசியல் வாழ்விலே போர் வீரர்கள் மேற்கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்றும் அறுவகைப் புறத்திணை ஒழுகலாறுகளும் ஆகிய இவ்வொழுக்கங்களை நிலைக்களமாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வனவாகும்.
பாடாண் திணையில் பாடுதல்வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சி முதலிய ஆறு திணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளையும் செயல்களையும் நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றுந் தனிநிலைத் திணைகளாகும். பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்குறித்த திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணையாகும்.
தலைமக்களுக்குரிய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கு அமைந்த மாந்தரது ஒழுகலாறு பாடாண் திணையாகும் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். பாடாண் அல்லாத வெட்சி முதலிய பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்புப் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றாத நிலையில் அவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்துந் திறத்தால் அவை வெட்சி முதலிய தனிநிலைத் திணைகளாகும் எனவும் அச் செயல்களைக் கருவாகக் கொண்டு புலவர்கள் பாடும்போது அங்ஙனம் தாம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக் குறிப்புப் பாடாண் என்னும் சார்புநிலைத் திணையாகும் எனவும் பகுத்துணர்தல் வேண்டும்.
புலமையுடையோர் பலரும் தமது உரையினாலும், பாட்டினாலும் உயர்வாகப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க இல்வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற் தன்மையே தொல்காப்பியர் கூறிய பாடாண் திணை எனில் மிகவும் பொருத்தமுடையதாகும்.
வெட்சிப் பாடாண் – வெட்சியடியாகப் பிறப்பது
‘‘ஒன்னர் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉம் என்ஐக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே’’(புறம்.,262)
பகைவருடைய தூசிப் படையை முறியடித்துப் பெயர்ந்து போகும் தன் படைக்குப் பின்னே நின்று ஆநிரையோடு வருகிறான் என் தலைவன். அவனுக்கு அருகேயிருந்து உடன் வரும் வீரர்கள் அவனைக் காட்டிலும் பெரிய பொலிவு உடையவராய் உள்ளனர் என்று கூறித் தலைவனையும் வெட்சியடியாகப் புகழப்படுவதால் இது வெட்சிப் பாடாண்திணை ஆயிற்று எனலாம்.
இவ்வாறே உழிஞைப் பாடாண் உழிஞையடியாகப் பிறப்பது:
‘‘ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும்செய்கை’’ (புறம்.,45)
என்று நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்திருந்தான். எனவே இது உழிஞையாயிற்று. கோவூர்க்கிழார், ‘‘உம்முள் ஒருவர் தோற்பினும் தோற்பது உம்குடியே! இருவரும் வெல்லுதல் இயற்கையும் அன்று; ஆதலால் நும் செய்கை உம் குடிக்குத் தக்க ஒரு செயல் அன்று’’ என்று குடியைப் புகழ்வதால் இது உழிஞைப் பாடாண்திணையாகும். இவ்வாறே பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு பாடாண்திணை வரும்.
அமரர் கண் முடியும் அறுவகை
பாடாண்திணையின் பகுதியாகத் தொல்காப்பியர்,
‘‘அமரர்கண் முடியும் அறுவகையானும்
புரைதீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப’’
எனறு குறிப்பிடுகின்றார்.
இதற்கு இளம்பூரணர், ‘‘அமரர் கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பனவற்றினும், குற்றம் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும், அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணையாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்’’ என்று உரைகூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர், அறுவகை என்பதற்கு, முனிவர், பார்ப்பார், ஆநிலை, மழை, முடிவேந்தர், உலகு என ஆறு என்று குறிப்பிடுகின்றார். இருவரும் ஒரே வகையைக் குறிப்பிடாது மாறுபட்டுக் குறிப்பிடுகின்றனர்.
இளம்பூரணர் வணக்க வகைகளைக்(கொடிநிலை உள்ளிட்டவை வணக்க வகைகள்) கூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர் வணங்கப்படும் பொருள்களைக் (செயற்கையான தேவர்கள், முனிவர்கள், பார்ப்பார் உள்ளிட்டவை வணங்கப்படும் பொருள்கள்) குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை எழுதிய நாவலர் அவர்கள்,
‘‘தொல்காப்பியர் தாம் கருதிய ‘ஆறுவகை’’யினைத் தம் நூலில் எங்கு, எவ்வாறு காட்டியுள்ளார் என்பதை இரண்டு உரைகாரர்களுமே விளக்கினார் இல்லை. தாம் கூறக் கருதிய தொகைப் பொருள் இவையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல் கூறுபவரல்லர் தொல்காப்பியர்….தொல்காப்பியர் தொகை சொன்னால் வகை கூறியுமிருப்பர். வகை கூறாமல் தொகை மட்டும் கூறுவது அவர் இயல்பு அன்று. அவ்வாறு இல்லாதிருந்தால் தொல்காப்பியம் இன்றுவரை நின்றிராது. தொல்காப்பியர் முன்னர் திணை ஒவ்வொன்றிலும் பெயர் சுட்டிக் கூறியுள்ளார். அவையே வகையாம். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பன வகையாம். இந்த வகை அறுதானே, இந்த வகைக்குத்தாம் தொல்காப்பியர் தொகை கூறுகிறார். அந்தத் தொகையே அறுவகை எனப்படுகிறது” என்று குறிப்பிட்டு,
தொல்காப்பியர் குறிப்பிடும் அமரர் என்பதற்கு,‘‘அமர் என்பது போர். அமரர் என்பது போர் செய்யும் வீரரைக் குறிக்கும். வெட்சி, ஆநிரை கொள்ளும் போர். வஞ்சி, படையெடுத்துச் செல்லும் போர், உழிஞை, அரணை வளைத்துச் செய்யும் போர். தும்பை தன் வலிமையையே தன் துணையாகக் கொண்டு செய்யும் போர். வாகை போரில் வெற்றி கொள்ளுதல். காஞ்சி, போரில் இழந்த இழப்பைக் கண்டு நிலையாமையை எண்ணுதல் இவையாவும் போர் பற்றியன. பாடாண் என்பது அப்போர் பற்றிய போர் வீரரது வீரம் குறித்து அவர்பாற் சென்று முடியும் புகழ்ச்சி. பாடாண் முன்பு குறித்த ஆறின் அடியாக வரும் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுவதேயாகும்’’ என்று குறிப்பிடுகின்றார். நாவலர் குறிப்பிடும் இதுவே பொருத்தமான உரையாக அமைந்திலங்குகின்றது.
வழக்கில் திணைப் பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து அதனதன் கூறுபட நின்று வாழ்த்துதலும், புகழ்தலும் சொல்லுமிடத்தும் பண்டைச் சான்றோர் கூறியுள்ள இயற்பாக்களே அன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படாது என்று தொலகாப்பியர் குறிப்பிடுகிறார்.
காமப்பகுதி:
பாடாண் திணையில் காமப்பகுதி கடவுளோடும் மக்களிடத்தும் நீக்கார் என்று கூறுவர். (காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் மருங்கினும் என்மனார் புலவர்) இது இயற்பெயருடனும் வரலாம் என்று குறிப்பிடுவர். இக்காமப்பகுதி மக்களுக்கேயன்றி கடவுளோடு கடவுள் காதல் கொண்ட பாடாணுக்கும்(‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’-கம்ப.மிதிலை.,35 இராமன்-சீதை காதல்) கடவுள் மனிதரோடு காதல் கொண்ட பாடாணுக்கும்(‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகை யமர்ந்தன்றே’திருமுருகு.,100-102 முருகன்-வள்ளி காதல்)வரும். இவ்விரு முறையும் புலனெறி வழக்கில் வருதல் உண்டு. அதற்கு விலக்கில்லை.
இக்காமப்பகுதி குழவிப் பருவத்தும் உரியதாகும்.(குழவி மருங்கினும் கிழவதாகும்)இதுவே பிள்ளைத் தமிழ் இலக்கிய வகைக்கு அடிப்படையாயிற்று என்பது நோக்கத்தக்கது. கடவுள்-கடவுளோடும், கடவுள் மானுடரோடும் கொள்ளும் காமப் பகுதியோடு காதற்பருவம் பெறாத சிறாரிடத்திலும் தூய காமப் பகுதி உரியதாகும்.
பேதைப் பருவமுடைய சிறாரிடத்துக் காதற் செவ்வி கருத முடியாது. காம உணர்வு குழவிக்கில்லை. எனினும் அக்குழவியிடத்தில் தூய காதல் கொள்வாருடைய அன்பின் தன்மை பற்றிய பாடாண் அக்குழவியின் மேல் சார்த்தி வருவதே இங்கு கூறப்படுவதாகும். ஊரின் காமப் பகுதி நிகழ்தலும் உரித்து என்று கூறுவர். இதற்கு தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப் பிறப்பும் பாராட்டுதற்குரியனவாகும். அப்பாராட்டுப் புலனெறி வழக்கொடு பொருந்தும் என்பர். இதனைத் தொல்காப்பியர்,
‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமையான’’ (புறத்.,30)
என்று குறிப்பிடுகிறார். இது உலா இலக்கிய வகைத் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் வழக்கில் பொருந்தி வரும்.
கடவுள் வாழ்த்தோடு வருவன:
திணைகள் யாவும் மக்களின் ஒழுக்கம் குறித்தே வருமாயினும், பாடாண்திணை வகையில் ஒருசில தலைமக்களின் பாராட்டுடனும் வரும். ஆனால் குறிப்பிடப்படும் சில, கடவுள் வாழ்த்தொடு பொருந்தியே வரும். அவை கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் ஆகும்.(‘‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே-)
கொடிநிலை என்பது கொடியெடுத்துப் படைக்கு முன்னர் செல்லுதல். இது வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு,
‘‘புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப்
போகுங் காலை
கொள்ளும் கொடியெடுத்துக் கொன்றவையும்
கொடுமர முன்செல்லும் போலும்’’ (சிலப்.,வேட்டுவ வரி, 13.பா)
என வரும் சிலப்பதிகாரப் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதில் நிரை கருதிப் போதல் வெட்சி. அதற்குக் கொடியெடுத்து முன் செல்லல் கொடிநிலை. கொற்றவை பரவல் கடவுள் வாழ்த்து ஆகும்.
கந்தழி என்பது மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக் குறிக்கும். இக்கந்தழி என்பதை காந்தள் என்று பொருள் கொண்டு காந்தள் மலரைச் சூடிக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்குக் காந்தள் என்று பெயர் வந்தது. வேலைக் கையிலேந்திய வேலன் முருகனைத் துதித்து வெறியாடுவது காந்தள் எனப்டும் காந்தள் வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும் என்று அறிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. வள்ளி என்பது வள்ளல் தன்மையைக் குறிக்கும். வள்ளி என்பதனைப் பெண்கள் ஆடும் வள்ளிக் கூத்து என்றும் குறிப்பிடுவர். வள்ளி ஒரு கொடிக்குப் பெயர். ஆதலால் கூத்தைக் குறிக்க வாடாவள்ளி என்று கூறப்பட்டது. ‘‘கொடி வாடும்’’; ‘‘கூத்து வாடாது’’. எனவே வாடாவள்ளி என இது கூறப்பட்டது. வள்ளி வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும்.
இளம்பூரணர் கந்தழி என்பதற்கு விளக்கம் கூறாமல்,
‘‘அன்றெறிந்தானும் இவனால் அரண்வலித்து’’
என்ற வெண்பாமாலைப் பாட்டை உதாரணமாகக் காட்டி அமைவர;. அப்பாட்டு உழிஞை வகையாகும். நச்சினார்க்கினயர் கந்தழி என்பதற்கு, ‘‘ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்’’ என்று பொருள்கூறுவர். தொல்காப்பியரால் கொடிநிலையும் வள்ளியும் வெட்சித் திணையில் விளக்கப்பட்டன. அவற்றைப் போலவே காந்தள் என்பதும் வெட்சித் திணையில் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள்’’ என விளக்கப்பட்டது. கந்தழி என்பது எங்கும் விளக்கப்படவில்லை. காந்தள் முருகக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வந்ததாகும். முதலன மூன்றும் என்பன கொடிநிலை, காந்தள், வள்ளி என்பனவேயாகும் இவற்றால் கந்தழி கொள்ளத் தகுந்ததில்லை. காந்தள் என்பதே கொள்ளத் தகுந்தது; பொருத்தமானதும் ஆகும்.
கந்தழி என்பதற்கு, நாவலர் பாரதியார், ‘‘காந்தள் என்பது ஏடு பெயர்த்து எழுதுவோரால் பொருட் பொருத்தம் கருதாமல் கந்தழி என எழுதப்பட்டது போலும். அவ்வாறு வந்த கந்தழியை உரையாசிரியர்கள் இருவரும் அப்படியே ஏற்றுத் தம்முள் மாறுபட்டு உரை கண்டனர் எனத் தெரிகிறது. இதனாலும் கந்தழி துறையாகாமல் காந்தள் வலியுறுவது காண்க’’ என்று குறிப்பிடுவது பொருந்துவதாக உள்ளது.
கொற்றவள்ளை:
மன்னனின் புகழினை விளக்கமாகக் கூறியும் பகைவர் அழிவுக்கு இரங்கியும் பாடும்பாடல் கொற்ற வள்ளை எனப்படும். இதுவும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு, ‘‘கொற்றம் என்பது வெற்றி. வள்ளை என்பது உலக்கைப்பாட்டு. பெண்டிர் தம் அரசனின் வெற்றிக்கு மகிழ்ந்து உலக்கைக் குற்றோடு ஒத்துப்பாடும் பாட்டு கொற்றவள்ளை எனப்படும். கொற்றவள்ளை வஞ்சி வகையைச் சேர்ந்தது. இது கடவுள் வாழ்த்தொடு பொருந்தியும், கடவுள் வாழ்த்தின்றி தலைமக்கள் புகழ் மட்டும் சுட்டியும் வரும்’’ என்றும் பொருள் கூறுவர்.
பாடாண் திணையின் துறைகள்:
பாடாண் திணை 10 துறைகளைக் கொண்டது. அவையாவன,
1. கொடுப்போர் ஏத்தல்: கொடைகொடுக்கும் வள்ளல்களைப் புகழ்தல், கொடார்ப்பழித்தல்: பெருஞ்செல்வராயிருந்தும் வழங்காதவரைப் பழித்தல், அதாவது ஈயார் பழியாம்; ஈவோர் புகழாம். எனவே அதுவும் பாடாண்திணையாயிற்று.
2. இயன்மொழி வாழ்த்து-நெருங்கிப் பொருந்திப் புகழ்வது இயன்மொழி ஒருவனிடம் உள்ள சால்பை உரைப்பது இயன்மொழியாகும்.
3. வாயில்நிலை: சேய்மையினின்று வந்த வருத்தம் தீர வாயில் காவலனிடம் கூறுதல்.
4. கண்படைநிலை: பரிசில் பெறுவோர் உறங்கக் கருதிக் கூறுவது. இதனை, ‘‘பரிசில் மாக்களும் துயில்கமா சிறிதே’’ என்ற தொடராலேயே பொருள் விளங்கக் காணலாம்.
5. வேள்வி நிலை: கபிலை நிறமுள்ள பசுவைக் கருதிய வேள்வி. பசுவின் நெய்யால் வேள்வி செய்வதுண்டு. ஏனெனில் பசுக்களை வேள்வித் தீயிலிட்டுக் கொன்று அவற்றின் ஊனை உண்பது தமிழர் முறையில்லை. இதனை,
‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று’’(குறள்259)
என்ற திருக்குறள் விளக்குவது நோக்கத்தக்கது. நெய் முதலிய பொருள்களை வேள்வித்தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்து முழப்பதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாதிருப்பது நல்லது என்பது நம்முன்னோரின் உயர்ந்த கொள்கையாகும். அதனால் பசுக்களின் நெய்யைக் கொண்டு வேள்வி நிகழ்த்துதலையே தொல்காப்பியர் இதில் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
6.விளக்குநிலை: வேலும் கோலும் குறித்த விளக்கு நிலை. அதாவது இருள்நீக்கி ஒளி உதவும் விளக்குப் போன்று தீது நீக்கி நன்மை பயப்பது வேலும் கோலுமாகும். வேல் காவலுக்கும், கோல் முறை செய்தலுக்குமாக வந்த ஆகுபெயர்கள். (‘‘செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது, பிறிது தெறல் அறியார் நின்நிழல் வாழ்வோர்…அறம்துஞ்சும் செங்கோல்-முறைசெய்யும் கோலைக் காட்டும். ஏமக்காப்பு-காவல் செய்யும் வேலைக் காட்டும்’’…புறம்.,20)
7. வாயுறைவாழ்த்து: வாய்மை, தீமையிலாத சொலல். அத்தீமையில்லாதவை உறைந்த வாழ்த்தே வாயுறை வாழ்த்தாகும். வாய்-வாய்மொழி. உறை-மருந்து. வாயுறை என்பது சொல் மருந்து எனப் பண்புத்தொகையாகும். வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையுமாம் என்பர் நச்சினார்க்கினியர். வாய்மொழியாகிய மருந்தைக் கொண்டு தீமை நீக்குவது என்பது கருத்து.
8. செவியுறை வாழ்த்து: செவியில் அறிவுறுத்தல் செவியுறை வாழத்தாகும். இதனை செவியறிவுறூஉம் எனவும் கூறுவர். ‘‘செவியுறை -செவிமருந்து அடங்கி வாழ்வார்க்குப் புகழாதல் வாழ்த்தின் பாற்பட்டது’’ என்பர் நச்சினார்க்கினியர். செவிமருந்தினால் நலம் பயக்கச் செய்வது கருத்து.
9. புறநிலை வாழ்த்து: வழிபடும் தெய்வம் உன்னைப் புறங்காப்ப பழியில்லாத இல்லறச் செல்வத்தோடு புதல்வர்ச் செல்வமும் பெற்று வழிவழி சிறந்து வாழ்வீராக என்பது புறநிலை வாழ்த்தாகும்.
10. கைக்கிளை: ஒருதலைக் காதலாகும். இதற்கு நாவலர் அவர்கள், ‘‘பாடாண் துறைகள் அடுத்த சூத்திரத்தில் கூறப்படுவதாலும் தொல்காப்பியர் கையாளும் முறையாலும் இங்கு கூறுபவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளாம்; துறைகளாகா. இன்னும் ‘‘நாடுங்காலை நாலிரண்டு உடைத்தே’’ என முன்னே எண் கொடுத்துத் தெளிவாக்கியுள்ளார் தொல்காப்பியர். இத்தொகு நிலையைத் ‘‘தொக்க நான்கு’’ எனப் பிறவற்றிலிருந்து பிரித்து வேறு கூறியுள்ளார். எனவே இங்கு கூறப்பட்டவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளே என்று கொள்ளவேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார்.
பாடாண் திணையின் பிற துறைகள்:
பாடாண் திணையின் துறைகளாகத் தொல்காப்பியர் மேலும் பத்துத் துறைகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:
1. துயில் எடை நிலை: துயில் எழுப்பும் நிலை. துயிலும் அரசர்க்குக் குற்றமற்ற அவர் நல்ல புகழைக் கருதிப் புகழ்வோர் எடுத்துரைப்பது. இது நாளடைவில் பள்ளிஎழுச்சி என்ற சிற்றிலக்கிய வகைக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஆற்றுப்படை: ஆற்றுப்படுத்தல் – வழிகாட்டல். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்னும் நால்வகை இரவலரும் தனித்தனியாகப்ப் பரிசில் பெற்று மீளும்போது, இரவலன் ஒருவன் பரிசில் பெற விரும்பி வள்ளலைத் தேடிச் செல்லும் அவனுக்கு வழியிடையில் இடைப்படத் தோன்றி, பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை அவனுக்குத் தெரிவித்து அவனும் அவ்வள்ளல்பால் சென்று பரிசில் பெறச்சொல்லும் துறையாகும். (கூத்தர்-ஆடல் செய்வோர், பாணர்- இசைபாடுவோர், பொருநர்- நாடகத்தில் குறித்த ஒருவனைப் போல நடிப்பவர், (பொருந்-ஒப்பு), விறலி-இசைக்கேற்ப ஆடுபவள் விறல் என்பது உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டும் திறம். அத்திறமை உடையவர; விறலியர;). இத்துறை ஆற்றுப்படை என்ற இலக்கியத்திற்கு வழிகோலியது.
3. பெருமங்கலம்: பிறந்தநாள் விழா. மன்னனுக்கோ, தலைவனுக்கோ சிறந்த நாள் என்பது அவன் பிறந்த நாள் ஆகும். அதில் அவன் சினம் அகற்றி விழாக் கொண்டாட வேண்டும். அன்று பகைவரையும், தவறு செய்தோரையும் சினத்தல் கூடாது. சிறைவீடு செய்தல், கொடை வழங்குதல் வேண்டும். இது ஒரு துறையாகும்.
4. மண்ணு மங்கலம்: மண்ணுதல்-நீராடுதல், மங்கலம்- விழாக் கொண்டாடுதல். சிறந்த புகழுடைய முடிசூட்டு விழாவின்போது நடக்கும் நீராட்டுவிழா.
5. குடைநிழல் மரபு: உலகியல் ஒழுக்கத்தை உயர்த்தும் வேந்தனது குடைநிழல் முறை கூறல்.
6. வாள்மங்கலம்: பகைவரை வெற்றி கொள்ளக் கருதி வேலை, வாளை நீராட்டும் மங்கல விழாவாளும் வேலும் மன்னர்கள் ஒன்றெனக் கருதுவர்.
7. எயில் அழித்த மண்ணுமங்கலம்: நிலைத்த மதிலை அழித்தபின் நீராடும் மற விழா. பகைவர் மதிலின் குடுமியைக் கைக்கொண்ட பின் பெருமிதம் கொண்டாடும் நீர்விழா உழிஞைத்திணயில் ஒரு துறை. அது மதிலை அழியாது கைப்பற்றிய விழா. இங்கு பாடாண்திணையில் வரும் இத்துறை மதிலை அழித்துவிட்டுக் களியாட்டம் நடத்துவது. கைக்கொண்டது அங்கு. அழித்தது இங்கு. விழாவெல்லாம் நீராடியே தொடங்குவது மரபு. இதனை,
‘‘கடுந்தேர்க் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்ழப்
பாழ்செய்தனை, அவர் நனந்தலை நல்எயில்’’(புறம்.,15)
என்ற பாடல் விளக்குகின்றது. பகைவரது பரந்த இடத்தையுடைய நல்ல மதிலை அழித்து, விரைந்ததேர் குழிசெய்த வீதியில் வெளியவாயையுடைய கழுதையாகிய புல்லிய இனத்தைப் பூட்டி உழுது பாழ் செய்தாய் என்று இப்பாடலில் மதில் அசெய்து கூற்படுவது நோக்கத்தக்து.
8. அரசனது முன்வாயிலில் வந்து பரிசில் கேட்கும் நிலை. இதற்கு,
‘‘வான்தோய் நீள்குடை வயமான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகென்னும் பூசல்போல
வல்லே களைமதியத்தை உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறிப்புணர் உடம்பில் தோன்றி என்
அறிவுகெட நின்ற நல்கூர்மையே’’(புறம்.,266)
என்ற பாடல் சான்றாக அமைகின்றது. சென்னியே சான்றோர; கூடியிருந்த அவையில் வந்து நேர;ந்த ஒருவன், யான் உற்ற துன்பத்திற்கு நீர் துணையாய் இருந்து எனக்குப் பற்றுக் கோடாக வேண்டும் என்ற ஆரவார வேண்டுகோளைக் கேட்ட சான்றோர் அவன் துன்பத்தை விரைவில் தீர்த்தனர். அதுபோல என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னைக் கருதி வந்த விருந்தினரைக் கண்டு விருந்தளிக்க முடியாமல் ஒளிந்து கொள்ளும் திருந்தா நிலையுடையது என் இல்வாழ்க்கை. என் உடம்பில் தோன்றி என் அறிவு கெடும்படி நின்ற என் வறுமையை விரைவில் தீர்ப்பாயாக என்றார் புலவர். இதில் முன்வாயில் நின்று பரிசில் கேட்ட நிலை கூறப்படுவது நோக்கத்தக்கது.
9. இருவகை விடை: 1. புரிசில் பெற்ற பின்னும் ஈந்தோனைப் புகழ்ந்து தானே விடை கேட்டல், 2. ஈந்தோன் விடை கொடுத்தல். இவை உலக வழக்கில் பயின்று வரும் இருவகை விடையாகும்.
10. காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து: நாள் நிமித்தம், புள்நிமித்தம், பிற நிமித்தங்களால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சமும் நன்மைக்கு உவகையும் கொண்டு குறைவில்லாமல் ஆராய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து.
‘‘காலனும் காலம் பார்க்கும்…………
………………………………………
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்
களிறு மேற்கொள்ளவும் காழக நீப்பவும்’’(புறம்.,41)
யமனும் உயிர்க்கொள்ளக் காலம் பார்க்கும். அஞ்சத் தகுவனாகிய பறவைகள் குரலிசைப்பவும், பல் நிலத்திலே வீழவும், எண்ணெயைத் தலையிலே தேய்க்கவும், பன்றி மேல் ஏறவும், ஆடையைக் களையவும் ஆகிய செயல்களால் நாள், புள் நிமித்தங்களும் பிறவும் இப்பாடலில் வந்தன. இவற்றால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சப்படுதல் இயல்பு. அதனால் அதனை அறிந்து வாழ்த்தினைக் கூறுகின்ற முறைமை இப்பாடலில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
உலகியலில் வரும் ஒழுக்க நடத்தைகளில் கருத்துக் கொண்டு மூன்று காலமும் தழுவிப் பாடாண் துறைகள் வரும். இங்கு கூறப்பட்ட துறைகள் பலதிறப்பட்ட புறத்திணைகளுக்கு உரியன. எனினும் தலைவன் புகழ், வாழ்த்துக்களாய் வருதலால் பாடாண் துறைகளாய் முடிகின்றன.
பாடாண்திணையில் வாழ்த்தல், புகழ்தல், முன்னோர் கூறிய குறிப்பு ஆகிய மூன்றிடத்திலும் இயற்பாக்களோடும், இசைப்பா, வண்ணக் கூறுகளும் வந்து வழங்கும். தூய காதல் பகுதியாகிய ஏழாவதும் எட்டாவதும் கடவுளோடு கடவுள், கடவுளோடு மனிதர் குழவிக் கைக்கிளை ஆகிய முறைகளில் வருவதுண்டு. பாடாணில் ஊர்சிறப்பும், உயர்குடிப் பிறப்பும் கூறுத் உண்டு. அப்போது உண்மைப் பெயர் சொல்லிப் பாடுவதுண்டு. அகத்திணையிற்றான் உண்மைப் பெயர் சுட்டக் கூடாது. பாடாண்திணையில் கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருவது கொடிநிலை, காந்தள், வள்ளி என்பன. கொற்றவள்ளை என்பதும் கடவுள் வாழ்த்தோடு பொருந்தியும் கடவுள் வாழ்த்தின்றியும் வரும். பாடாண் திணை சிறப்பு வகையில் எட்டாகத் தொல்காப்பியரால் மொழியப்பட்டுள்ளன. பாடாண் துறைகளாகப் பத்துவகைகளையும் தொல்காப்பியர் மொழிந்துள்ளார்.
முனைவர் சி.சேதுராமன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.)
புதுக்கோட்டை-1
மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com
-விப்ரநாராயணன்
சித்திரை என்னை நித்திரை
யினின்று எழுப்பி விட்டாள்என்
முத்திரை பதிக்க வேண்டும்
இந்நாட்டில் நானென விதித்திட்டாள்!
இத்தரை மக்கள் இன்பமாய்
வாழ வழியெது எனக் கேட்டேன்
புத்தர் சொல்படி நடவென
விடையளித்துச் சென்றாள்!
நெல்லிலே கலப்படம், பேசும்
சொல்லிலே கலப்படம் என
நெல்லை இதழ் ஒன்றில்
படித்தேன் பதறி விட்டேன்!
கல்லைக் காசாக்கு வேனெனக்
கூறி மயக்குபவர் பலர்
எல்லை கடந்து மற்றவர்
உயிரைக் குடிப்பவர் பலர்!
வஞ்சக எண்ணங் கொண்டு
சுற்றித் திரிபவர் பலர்
லஞ்சப் பேயுருக் கொண்டு
உலா வருபவர் பலர்!
கஞ்சி குடிக்க வழியில்லாதோர்
வயிற்றில் அடிப்பவர் பலர்
வஞ்சியரின் வாழ்வைப் பாழாக்கிக்
கொலை புரிவோர் பலர்!
சாத்திரங்கள் பல படைத்தாய்
புராணங்கள் பலபடைத்தாய்
வேதங்கள் நான்கு மொழிந்தாய்
காப்பியங்கள் பல படைத்தாய்–ஆனால்
சித்திரையே மக்கள் அவற்றைப்
படித்ததாகத் தெரிய வில்லை!
பத்தர்கள் பலர் தோன்றி
பத்தியைப் பரப்பினர் உலகில்
சித்தர்கள் பலர் வந்துநம்
சித்தத்தைத் தெளிவு படுத்தினர்
முக்தர்கள் பலர் அவதரித்து
முக்திக்கு வழியாதெனக் காட்டினர்!
ஆறுகள் பல படைத்தாய் ஆனால்
ஆறாத சண்டை உண்டானது
ஆறுகள் வற்றிப் போயிற்று ஆனால்
சண்டைகள் வற்ற வில்லை
கோவில்கள் பல படைத்தாய்
கூடவே உண்டியலும் வந்தது
கோவில் உண்டியலை உடைக்கும்
கூட்டங்கள் பெருகி விட்டன!
கோள்களைச் சுற்றிச் செல்கிறது
உலக விண்வெளிக் கலங்கள்
கோள்களைச் சுற்றி வருகின்றனர்
தங்கள் பாவங்கள் தீர!
சாத்திர விதிகள் படைத்தாய்
கூடவே விலக்குகளும் வந்தன
பற்றற்று வாழ வேண்டுமெனப் பகர்ந்தாய்
பற்றே வாழ்வெனக் கருதினர் மக்கள்!
நிலம் தந்தாய் நீர் தந்தாய்
இருக்க இடம் தந்தாய்
நிலங்களை அழித்தனர் மக்கள்
வாழ்விழந்து தவித்தனர் உழவர்கள்
நீர்நிலைகள் இருப்பிடங்கள் ஆயின
நீர்நாடி விலங்குகள் வந்தன
நிலமில்லை எனவே உணவில்லை
நீரில்லை எனவே வாழ்வில்லை!
பணம் பணமென்று ஓடுகின்றனர்
திசை யறியாது மக்கள்
குணம் நாடிச் செல்வோர்
குறைந்து விட்டனர் பாரினில்
கணப் பொழுதில் காசு
அள்ள வேண்டும் என்று
கானல் நீரைத் தேடி
அலைகின்றனர் பணப் பேய்கள்!
சோதனைகள் பல கண்டோம்
விடுதலை பெற்றோம் இருந்தும்
வேதனைகள்தான் இன்றும்
முழுமை விடுதலை இல்லை
போதனைகள் பல பெற்றும்
காற்றில் பறக்க விட்டோம்
போதும் போதும் சோதனைகள்
கண் திறப்பாய் சித்திரையே!
தேவைக்கு வரம்பு போடும்
வித்தையைக் கற்றுக் கொடுப்பாய்
தேகத்துள் உறைபவன் யாரெனக்
காட்டுவாய் எனக்கு அம்மையே
தேசம் சிறப்புடன் வாழ
வழி காட்டுவாய் தாயே
தேசுடை மாந்தர் வழிசெல்ல
வலிமை கொடுப்பாய் சித்திரையே!
சித்திரை வந்தாள் வாசலில்
நின்றாள், வாவென அழைத்தேன்
இத்தரை முழுதும் பாவங்கள்
சூழ்ந்து உள்ளது என்றாள்
ஆத்திரங் கொண்டாள்; அமைதியானாள்
அன்பாய்ப் பகர்ந்தாள் என்னிடம்
சாத்திரம் கூறும் கூற்றுப்படி
வாழ வேண்டும் என்றாள்!
மாற்றம் வேண்டும் சித்திரையே
வழி கூறுவாய் இன்றே
மாற்றம் உங்கள் மனதில்
வரும்வரை மாற்றம் இல்லை
மாற்றம் உன்னிடத்தில் இருந்து
துவங்க வேண்டும் முதலில்
மாற்றம் அகத்தில் தேவை
புறத்தே அல்ல என அறிவாய்!
மனித மனம் சுயநலமின்றி
ஒருநிலைப் படல் வேண்டும்
புனிதமான எண்ணங்கள் என்றும்
மனதில் தோன்ற வேண்டும்
இனிய சொற்களைப் பேசி
இன்முகத்துடன் இருக்க வேண்டும்
தனித்த சிந்தனையுடன் மனித
உறவைப் போற்ற வேண்டும்!
-வேதா. இலங்காதிலகம்
நீல ஆழியில் செல்லும் வெள்ளி ஓடம்
நூலில் ஆடாத வெள்ளிப் பந்து
நிலத்தின் இருட்டைச் சலவை செய்து
நிலா மஞ்சள் பூசும் சந்திர வட்டக் கவியாள்!
தலைக் கனமற்று கலைத் தடமிடுபவளே! 
திடல் ஏறி உன்னைத் தொடுமாசை தான்
திருடன் உன்னைத் தூற்றகிறான், அவன்
திருட்டு உன்னொளியில் தெரியப் படுமாம்!
நட்சத்திர நங்கையர் கூட்ட
நல்லிரவு ராணியே! முகில் வலைத் துணி
முக்காட்டை விலக்கி நிலத்தினையொரு
முறை பாரேன்! தண்ணொளி வீசேன்!
காலைச் சூரியன் ஒளியில் நீ முற்றாகக்
காணாமற் போவதில் என்றும்
கவலையே கொள்வதில்லையா இரவரசியே!
நீலவானில் அம்புலியாய், கவிஞருள்ளக்
கோல எழிற் கற்பனை ஊற்றாய்
வலம் வருகிறாய் அற்புதமாய்!
ஓய்வில்லா நிலவே! கலம் இறங்கிய மனிதன்
காலடியும் நிலவில் விழுந்துள்ளதே!
நிலவு அந்த மழலைக் காலம்!
நிலவாய்த் தேய்ந்து முதுமை மறுபடி
உலவுகிறது மழலைத் திங்களாய்…!
இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
இதய வங்கியில் ஆனந்தக் காசு
சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!
வேண்டுதல் வேண்டாமையற்று
பேதா பேதங்கள் அற்ற பேசாத எழிலே!
இலங்கையிலும் உன்னைக் கண்டேன்
இங்கும் உன்னைக் காண்கிறேன்
அறிவில் உயர்ந்தோன் எங்கும் தெரியப் படுவதாய்!!
-முகம்மட் ஜரூஸ்
விழித்திருந்து
ஏன்
இரவுதனை
மெல்ல
நகர்த்துகிறாய்? 
என்
விழியோரம்
ஏன்
விழுந்து
பிம்பமாகிறாய்?
வட்டம் போட்டு
எனில்
திட்டங்கள்
என்ன
தீட்டுகிறாய்?
வரும்
வழியெல்லாம்
எனக்கு
ஏன்
நிழலாகிறாய்?
நீலவானில்
உன்
முற்றுகை!
நீர்நிலை
எல்லாம்
உன்
முகத்திரை!
அகிலத்தினது
ராணியா
நீ?
நித்திரையில்
வந்து
ஏன்
சித்தரிக்கிறாய்?
கனவுகள்
வந்து
பந்தி விரிக்கின்றதே!
-துஷ்யந்தி, இலங்கை
உடலின் நிறமதை பார்த்து – அதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் கொண்டு
உலகில் பிரிவினை செய்தே – என்றும்
வேற்றுமை காண்பவன் மனிதன்!
திடமாய் உடலது இருக்க – அதில்
தெளிவாய் மனமது இயங்க,
கைநீட்டுவதில்லை மண்ணில் – பிறர்
தயவென்று போவதுமில்லை!
வாழ்கின்ற காலத்தில் என்றும் – நாம்
செய்திடவேண்டும் நல்ல சேவை
நாளைய தலைமுறைக்கு நாமும் – ஒரு
பாடமாய் வாழ்ந்திட வேண்டும்!
ஊனம் உடலிலே இருந்தும் – நித்தம்
உழைத்து வாழ்ந்திட வேண்டும்
பாடம் சொல்லிடும் வாழ்வை – நாம்
பரிசாய் ஏற்றிட வேண்டும்!
படிப்பில் வருவதில்லை பண்பு – உயர்
குணத்தால் வருவதே பண்பு
பண்டிதர் வேடம் பூண்டு – பிறர்
காலில் கிடப்பதும் முறையோ?
மண்ணிலே பிறந்தவர்க்கெல்லாம் – இறைவன்
அழகிய வாழ்வைத் தந்தான்
கடலிலே கிடக்கும் முத்தாய் -அதை
தேடுதல் தானே கடமை…!
தடைகள் வந்தபோதும் – அவை
படிக்கற்கள் என்று எண்ணி
திடமாய் முடிவெடுத்திட்டால் – வாழ்வு
நிச்சயம் வெற்றியாய் மாறும்…!
உறுதியுடன் போராடு நண்பா – நித்தம்
ஊருக்காய் உழைத்திடு நண்பா
இன்று விதைத்திடும் நன்மை – உனக்கு
நாளை பயன்தரும் நண்பா…!
ஒரு எளிய மனிதனின் சுயசரிதை
மீ.விசுவநாதன்
அத்தியாயம் : ஏழு
ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில்
அவனுக்கு அந்த கிராமத்து சிவன்கோவில் மிகவும் பிடிக்கும். அது “பாட்டநயினார் புரம்” கிராமத்து பக்தர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. சில வருடங்களுக்கு முன்புதான் அறநிலையத்துறை இந்தக் கோவிலையும் தனது வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தக் கோவிலுக்கு அழகான சிறிய உட்பிராகாரமும், கோவில் வெளி மதிலைச் சுற்றிய பெரிய பிராகாரமும் உண்டு. சுவாமியின் பெயர் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ சிவகாமி. உட்ப்ராகாரத்தில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ நடராஜருக்கென்று தனி மண்டபம், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளது.
வெளிப்ராகாரத்தில் அரிநெல்லி மரமும், நெல்லி மரமும், மா மரமும், நிறைய தென்னையும் பூச்செடிகளும் இருக்கும். தெற்குப் பிராகாரத்தில் அழகான கோரதமும், திருவாதிரைத் திருநாளுக்குரிய வாகனங்களும், உள்ளது. கோவிலின் வடக்குப் புறத்தில் தெளிந்த கன்னடியன் கால்வாய் ஓடுகிறது. கோவிலின் வாசலில் வடபுறத்தில் ஒரு பெரிய அரச மரமும், அதனடியில் ஒரு சிறிய விநாயகர் கோவிலும் உள்ளது. அதன் அருகிலேயே கன்னடியன் கால்வாய்ப் படித்துறையும் உண்டு. அதற்கு தகரத்தில் ஒரு கொட்டகை போட்டிருப்பார்கள். கிராமத்து சிறுவர்களும், வாலிபர்களும், அந்தத் தகரக்கொட்டகையில் ஓடி வந்து அந்தக் கால்வாயில் தாவிக்குதித்து நீந்துவார்கள். கோடை காலம் தவிர வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் நிறையவே ஓடிக் கொண்டிருக்கும். அப்படிக் குதித்து நீந்தி விளையாடும் பிள்ளைகளைப் பார்த்து அந்தப் படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கும் மாமிகள் ,” இராவணனை அழிச்சுட்டு ராமன் அயோத்திக்குப் போகும்போது கொஞ்சம் வானரங்கள இங்க கொண்டு வந்து விட்டானோ என்னமோ ..இதுகளெல்லாம் அந்தப் பாடுன்னா படுத்தறது…..” என்று அர்ச்சனை செய்வதுண்டு.
சிறுவயது முதலே இந்தக் கோவிலும், அதன் அருகில் ஓடிக் கொண்டிருக்கிற வாய்க்காலும் அவனுக்கு மிகவும் பிடித்தமான இடங்கள். அவனுக்குத் தண்ணீரில் நீந்த ரொம்பவும் பிடிக்கும். அதுவும் எதிர்நீச்சல் என்றாலே தனி குஷிதான். ரகு, சங்கர், குட்டிச்சங்கர், சன்னதித்தெரு கண்ணன், H.கிருஷ்ணன் , கபாலி, பிரபு, நீலகண்டன், சுரேஷ், மூர்த்தி, SV, RV, NR, சக்தி, கிட்டு, ராஜாமணி என்று ஒரு பெரிய நண்பர்களின் பட்டாளத்துடந்தான் அவன் குளிக்கவே செல்வான். காலையில் ஆறரை மணிக்குக் குளிக்கச் சென்றால் எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். அவனுக்கு அம்மா, “என்னடா அப்படி கண்ணு ரெண்டும் செவக்கச்செவக்க ஆத்தங்கரையே கதின்னு கெடக்கணுமா…பள்ளிக்கூடம் போகணுமேன்னு கொஞ்சம்கூட நெனப்பில்லியா..நீ என்ன தண்ணிப் பிசாசா….” என்று தினமும் அவனைக் கடிந்து கொள்வாள். அவனுக்கு அது ஒரு இனிய வாழ்தாகவேதான் இருந்தது.
“பிரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள்”
சிவன்கோவிலில் பூஜை செய்துவந்தவர் ப்ரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள். நன்கு வேதம் கற்ற பண்டிதர். எளிமையானவர். பேராசை இல்லாத மனிதர். அவர்தான் நீண்ட காலம் அந்த சிவன் கோவிலில் பூஜை செய்து வந்தார். எப்போதும் அவரது வாய் மந்திரத்தை முணுமுணுத்தபடியேதான் இருக்கும். அவரது நெற்றியில் விபூதிப் பட்டை எப்போதுமே இருக்கும். கச்சிதமாகக் கட்டிய பஞ்ச கச்சம், மார்பின் குறுக்காகப் போட்டபடி இருக்கும் அங்க வஸ்திரம் என்று அவர் சிவஸ்வரூபமாகவே இருப்பார். காலையில் எட்டு மணிக்கு மேல் அவர் லக்ஷ்மணவாத்தியார் வீட்டுத் திண்ணையிலோ அல்லது மேலமாடத் தெருவில் உள்ள குருசாமிப் பட்டர் வீட்டுத் திண்ணையிலோ அமர்ந்து கொண்டு வேத மந்திரங்களைச் சொல்லிப் பாடம் செய்து கொண்டிருப்பார். பல முறை அவர் “கணம்” சொல்வதை அவன் நின்று கேட்டிருக்கிறான். கேட்கவே அத்தனை சுகமாக இருக்கும். அவர் அவனைப் பார்த்துச் சிரித்தபடியே மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பார். கவனம் சிதறவே செய்யாது. கண்ட கண்ட வேளைகளில் உண்ணவும் மாட்டார். வம்பு பேசும் இடங்களில் நிற்கவும் மாட்டார். அப்படிப் பட்ட வேத வித்துக்களின் பார்வை அவன் மீது பட்டது அவனது பூர்வஜென்ம பலன்தான்.
காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் கனபாடிகள் கோவிலைத் திறந்து விடுவார். அங்கு காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் முத்தையாப்பிள்ளை. கண்டிப்பானவர். கோவிலை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பவர். ஒரு ஈ, எறும்பு கூட அவருக்குத் தெரியாமல் அந்தக் கோவிலுக்குள் நுழைய முடியாது. மகாதேவ கனபாடிகளுக்கு முத்தையாபிள்ளையைப் பிடிக்கும். முத்தையாப்பிள்ளைக்கும் கனபாடிகளின்மீது மதிப்பும், நம்பிக்கையும் உண்டு. அது, அந்தக் காலத்தில் அந்தக் கோவிலுக்கு அறங்காவலராக இருந்த சந்திரா அப்பளம் டெப்போ சுப்பா மாமாவுக்கும், கிராம மக்களுக்கும் மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
ஒவ்வொரு நாளும் கனபாடிகள் சிவனுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்யும் வேளைகளில் அனேகமாக அவனும் தரிசனத்திற்கு வருவான். அப்பொழுது கனபாடிகளின் மந்திர உச்சரிப்பில் அவன் மெய்மறப்பான். அதைக் கேட்டுக் கேட்டே அவனுக்குச் சில பூஜா மந்திரங்கள் மனப்பாடம் ஆகிவிட்டது.
பிரதோஷ காலங்களில் மகாதேவ கனபாடிகள் செய்யும் பூஜையைப் பார்க்கவே பிறவி எடுத்து வரவேண்டும் என்று நினைக்கத் தோன்றும். அத்தனை ஒருமுகப்பட்ட நினைவுடன் அவர் பூஜை செய்வார். ரிஷப வாகனத்தில் சிவனை அமர்த்தி கோவிலின் வெளிப்பிராகாரத்தில் மூன்று பிரதக்ஷிணம் செய்வார்கள். சித்திரைக் கம்பர்தான் நாக ஸ்வரம். ஸ்ரீருத்ரம், சமகம் பாராயணம் செய்து கொண்டு, சில வைதீகர்களும், கிராம ஜனங்களும் சுவாமிக்குப் பின்னல் வருவார்கள். பூஜை முடிந்ததும் வெல்லம் போட்ட பச்சைப் பயிறுச் சுண்டல் தருவார்கள். அதை மடப்பள்ளி பனகுடி சங்கரநாராயணய்யர்தான் கோவில் வாசலில் வைத்துத் தருவார். ஒரு முறை அவன் அவருக்குப் பின்புறமாக உள்ள திணையில் ஏறி அந்தச் சுண்டல் பாத்திரத்தில் கையை விட்டான். அவருக்கு வந்த கோபத்தில் அந்தச் சுண்டல் பாத்திரத்தை அவன் தலையில் அப்படியே கவிழ்த்து விட்டார். அவன் சிரித்துக் கொண்டே ஓடினான். தலை வழியாக வழிந்து அவன் வாயில் விழுந்த சக்கரைப் பாகுடன் கலந்த பச்சைப் பயிறு நன்றாகத்தான் இருந்தது. அவனுக்கு அம்மா அன்று இரவில் கொடுத்த பிரம்படி அவனுக்குக் கசப்பாக இருந்தாலும் அது அவனைத் திருத்தியது. அவன் அந்த சிதம்பரேஸ்வரரைப் பற்றி சமீபத்தில் ஒரு பிரதோஷ தினத்தில் ஒரு கவிதையை இப்படி எழுதினான்.
“ஆடியும் நித்தம் ஓடியும் ஆனந்த நண்பர் கூடியும்
தேடிய சிவனைப் பாடியும் தேகத்தில் திருநீர் பூசிய
கோடியி லொருவ னாகியும் கொண்டாட்டம் போட்ட வாலிபம்
ஆடியே போன நாளிலும் அச்சிவனை மறக்கி லேனடி ! (1)
(வாய்பாடு: விளம், மா, விளம் . காய், மா, விளம்)
“சிதம்பரே சர்,சிவ காமி” சிரித்தருள் அழகிய கோவில் ,
அதற்கரு கிலேகுளிர் தண்ணீர் அலைகிற கனடியன் கால்வாய் ,
இதற்கெலாம் எழிலினைக் கூட்டும் இளம்பொதி கைதரும் காற்றில்
பதமென சிவபிர தோஷம் பலரினை இணைக்கிற தென்பேன் ! (2)
(வாய்பாடு: விளம், விளம், மா, விளம், விளம், மா )
(19.12.2014)
மகாதேவாஷ்டமி , அதுதான் “வைக்கத்தஷ்டமி” சிவனுக்கு முக்கியமான நாள். முந்தய தினம் இரவில் சுமார் எட்டு மணிக்கெல்லாம் மறுநாள் அன்னதானத்திற்கான காய்கறிகளை கிராம ஜனங்கள் மிகுந்த உற்சாகத்தோடு அரிந்து வைக்கத் துவங்குவர். அவனையும் அவனுக்கு அப்பாவும், தாத்தாவும் கோவிலுக்குத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அவனும் அவனால் முடிந்த காய்கறிகளை எடுத்து அங்கிருக்கும் பெயரியோர்களிடம் தருவான். அவனைப் போலவே வைதியப்பபுரம் தெரு அப்பாத்துரை, ஸ்ரீராம், வேங்கடாஜலமையர் மகன் சிவராமன் (ஆசிரியர் சிவராமன்) சக்தி அப்பளாம் “கிருஷ்ணமூர்த்தி”, ராமசுப்பி மாமியின் மகன்கள் ராமசுப்ரமணியன், விஸ்வம், லெஷ்மணவாத்தியார் மகன் விஸ்வம், கிச்சன் போன்ற கிராம மகாஜனங்களும் கைங்கர்யம் செய்வார்கள். அனேகமாக அன்று இரவு ஒரு மணிக்கு மேலாகிவிடும். இரவில் வீட்டிற்க்குச் சென்று தூங்கி விட்டு காலை சுமார் நாலரை மணிக்கெல்லாம் ஆத்தங்கரைக்குச் சென்று குளித்துவிட்டு கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
மகாதேவாஷ்டமி அன்று காலையில் சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் முடிந்தவுடன் கிராம போஜனம் (அன்னதானம்) வெகு விமர்சையாக நடைபெறும்.
உட்பிராகாரத்திலும், வெளியில் நந்திக்குச் சுற்றுப் புறத்திலும் சாப்பாட்டுப் பந்திகள் நடைபெறும். அவனுக்கு அப்பாவும், சித்தப்பாவும், தாத்தாவும் பந்தியில் பரிமாறுவார்கள். அவன் பந்தியில், “சீதாள பாதாள பச்சைக் கற்பூர கங்காமிருதம்” என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் தருவான். அப்படிச் சொல்லித்தான் குடிக்கத் தண்ணீர் தரவேண்டும் என்பார்கள். ஒவ்வொரு உணவு வகையையும் ஒவ்வொரு பக்தர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவனுடைய குடும்பத்தின் சார்பாக வெகு காலமாகவே வடையும், பழமும், மோரும் காணிக்கையாகச் செய்து வருகின்றனர்.
“ஆமண்ணா” மாமாதான் அனேகமாக சமையல் செய்வார். அவர் சமையல் மிகச் சுவையாக இருக்கும். கோவிலுக்குத் தெற்குப் பிராகாரத்தில் பெரிதாக நான்கு, ஐந்து அடுப்புகள் தோண்டி வைத்துப் பெரிய வார்ப்புகளில் சமையல் செய்வார்கள். பாயாசத்திற்கேன்றே ஒரு பெரிய வார்ப்பு இருக்கும். இரண்டு பேர்கள் பாயாசத்தைக் கிண்டிக் கொண்டே இருப்பார்கள். பார்க்கவே அழக்காக இருக்கும்.
சரியாகப் பகல் பன்னிரெண்டு மணிக்கு மேல் அன்னதானம் துவங்கினால் மதியம் மூன்று மணிவரை நடைபெறும். எல்லா கிராமத்து ஜனங்களும் இந்த சிவன் கோவிலில் வந்துதான் பிரசாதம் சாப்பிடுவார்கள்.
மாலையில் ஆறரை மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் புறப்பட்டு வைத்தியப்பபுரம் தெரு வழியாக கந்தப்பபுரம் தெரு கடந்து வடக்குரதவீதிக்கு வருவார். கந்தப்பபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் இருந்து ஸ்ரீ முருகன் புறப்பட்டு வடக்குரதவீதியில் உள்ள தனது தந்தையார் ஸ்ரீ சிதம்பரேஸ்வரரை மூன்று முறை பிரதக்ஷிணம் செய்துவிட்டு பக்கத்திலேயே நிற்பார். பொது தீபாராதனை நடைபெறும். உடனே இருவரும் சேர்ந்து வடக்கு ரதவீதி, மேலப்பாட்டநயினார்புரம் வழியாக வருவார்கள். இராமச்சந்திரபுரம் தெரு ஆரம்பத்தில் பொது தீபாராதனை நடைபெறும். ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சிவன் கோவிலுக்கும், ஸ்ரீ முருகன் வைத்தியப்பபுரம் வழியாக ஸ்ரீ முருகன் கோவிலுக்கும் செல்வார்கள். அனேகமாக அன்று மழை பெய்யும். அந்த மழையிலும் சுவாமி நனையாமல் தாங்கள் நனைத்தபடி பக்தர்கள் சுவாமியின் சப்பரத்தைத் தள்ளிச் செல்வார்கள். அவன், அவனுடைய நண்பர்கள் நீலகண்டன், கிருஷ்ணசுப்ரமனியன் எல்லோரும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அமர்ந்திருக்கும் வண்டிச் சப்பரத்தை பின்னல் இருந்து தள்ளிக்கொண்டு வருவார்கள். அவர்கள் மீது சுவாமிக்கு முன்னால் தீவட்டி பிடித்துக் கொண்டிருக்கும் கோவில் காவல்காரர் முத்தையாப்பிள்ளை எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பார். அதற்கான காரணத்தை பின்பு கூறுகிறேன்…….
(09.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….
வையவன்
மதனபள்ளியிலிருந்து தாமு திரும்பி வருவதற்குள் சிவாவுக்கு இரண்டு கடிதங்கள் வந்திருந்தன.
ஒன்று நந்தவனம் ஆசிரியரிடமிருந்து இரு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஒரு செக். அவனது கதையைப் பாராட்டி உற்சாகமூட்டும் சில வரிகள்.
இரண்டாவது அம்மாவிடமிருந்து சில எழுத்துப் பிழைகளுக்கு மத்தியில் அவன் வாழ்வில் எதிர்ப்பட்ட முதல் வெளிச்சத்திற்கு அவள் பூரிப்பு பாற்கடலாகப் பொங்கியிருந்தது. அவன் எழுதியிருந்த கடிதத்துக்குப் பதில்.
தபால்காரர் வந்துபோன பின்புதான் தாமு வந்தான் நேரே ஒர்க்ஷாப்புக்குப் போய்விட்டு வருகிறான் என்று மோட்டார் சைக்கிள் ஒலி அறிவித்தது.
மாடிப் படியில் அவனது மிடுக்கான ஷý ஓசை கேட்டது. சிவா எதிர் கொள்ளச் சென்றான்.
பிரயாணக் களைப்பு தெரியாமல்அவன் குளித்து புத்துணர்ச்சியோடு காணப்பட்டான்.
பிரீதா வீட்டிலிருந்து வருகிறான் என்று புரிந்து கொண்டான் சிவா.
அவனைப் பார்த்ததும் கச்சிதமாக ஒரு புன்னகை செய்தான் தாமு. பிரீதா சொல்லி விட்டாள். அவன் பார்வையில் சிவா உணர்ந்தான்.
“கங்க்ராட்ஸ்”
“தாங்க்யூ”
சிவா செக்கையும் கடிதத்தையும் நீட்டினான்.
செக்கின் தொகையைப் பார்த்துவிட்டு “நாட் பேட்” என்று சிலாகித்து விட்டு கடிதத்தைப் படித்தான்.
எட்டு வருஷங்களில் தெலுங்கை மறந்து விடுமளவு அவன் தமிழில் ஊறியிருந்தான்.
“நவ் யூ ஆர் ஸம்படி!”
“பிகாஸ்…பிகாஸ் ஆப் யூ”
“நீ மிகைப்படுத்தறே!”
“இந்த நிழல்… இந்த பாதுகாப்பு இல்லாமே என்னால் இதை எழுதியிருக்க முடியாது.”
“ஓ…இட்ஸ் ஜஸ்ட் எக்ஸ்டர்னல்.”
அவன் ‘ஷý’வை அவிழ்ப்பதற்காக மாடியின் கை பிடிச்சுவரின் மீது காலை உயர்த்தி வைத்தவாறே செக்கையும் கடிதத்தையும் திரும்ப நீட்டினான்.
“வேண்டாம்” என்றான் சிவா.
“ஏன்?”
“இது உங்களுடையது”
தாமு ஒரு வினாடி அவனை ஆராய்வது போல் பார்த்தான்.
“ஒனக்கு பாங்கிங் புரொஸீஜர் தெரியுமா?”
சிவாவுக்கு விளங்கவில்லை.தாமு குறுப்பாகப் புன்னகை செய்தான்.
“பின்னாலே ‘ஸைன்’ பண்ணிக்கொடு.”
சிவா பேனாவை எடுத்துவர உள்ளே போனான். தாமு ஃபேன் ஸ்விட்சைத் தட்டிவிட்டு சோஃபாவில் உட்கார்ந்தான். டீப்பாயின் மேல் அவனுக்கு வந்திருந்த கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய் அவன் பார்வையிடும்போது இவன் வெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவன் என்று நம்ப முடியவில்லை.
செக்கின் பின்னால் கையெழுத்துப் போட்டு எடுத்து வந்த சிவா ஓரமாக நின்றான்.
“அப்பா எப்படி இருக்கார்?”
“பாரலைஸிஸ் ஸ்ட்ரோக். கட்டில்லே படுத்துட்டார். இடது பக்கம் பூரா ஆக்ஷன் இல்லே.”
யாரோ மூன்றாம் நபருக்கு நேர்ந்ததைப் பற்றி சொல்வது போல் தாமு சொன்னான்.
“ஆஸ்பிடல்லே சேத்துரலாமே.”
“அவருக்கு ஹாஸ்பிடலைசேஷன் பிடிக்காது. லைஃப் ஆர் டெத். எதுவாயிருந்தாலும் தன் கூரையின் கீழ்ணு அவருக்கு ஒரு பிரின்சிபிள்.”
“ட்ரீட்மெண்ட்?”
‘டாக்டர்கள் வீட்டுக்கு வந்துகிட்டிருக்காங்க.”
சிவாவுக்கு அந்தத் தகவலில் ஜமீன் மிடுக்கு தெரியவில்லை. ஒரு பீஷ்ம வைராக்கியம் தென்பட்டது.
சிவா கையெழுத்திட்ட செக்கை நீட்டினான்.
அதை வாங்கித் தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்டான் தாமு. யோசனையோடு சிவாவைப் பார்த்தான்.
“இனிமே நாயனாவாலே நெலத்தைக் கவனிக்க முடியாது சிவா! அங்கே நிறைய ரயத்துக்கள் டிரபிள். இப்ப அவருக்கு ஒடம்பும் சரியில்லே!”
இது எதற்காக பீடிகை?
சிவா காத்திருந்தான்.
“அம்மா என்னை திரும்பி வந்துடச் சொல்லி அழுதாங்க. நாயனா ஒண்ணும் பேசலே. முளிச்சுப் பார்த்தாரு.”
அந்த தகப்பன் மகன் உறவு சிக்கல் சிவாவுக்கு சுவாரஸ்யமாயிருந்தது.
“போடா வெளிலேண்ணு சொன்னவரு வாடாண்ணு கூப்பிடட்டும்ணு நான் பதில் சொல்லலே. அவருக்கு வாய்விட்டுக் கூப்பிட முகமில்லே. பக்கத்திலே அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதி வச்ச நோட்டு கிடந்தது. அதை எடுக்கச் சொன்னார். அதிலே ‘ரா’ என்ற எழுத்தை மட்டும் தொட்டுத் தொட்டுக் காட்டினார். ரான்னா தெலுங்கிலே வான்னு அர்த்தம்.”
சிவாவின் முதுகுத் தண்டில் தவளை துள்ளியமாதிரி இருந்தது.
“இனிமே மதராஸ் இல்லே… மதனபள்ளி தான்.”
அது எத்தனை நியாயம் என்று உணரும் போதே ‘டர்-டர்’ என்று ஒரு ஷட்டர் கதவு தனக்கும் தாமுவுக்கும் மத்தியில் வந்து விழுந்ததாக நினைத்தான் சிவா.
இந்த ராயப்பேட்டை வாசம், திஷ்யா, பிரீதா, சமையல், சாப்பாடு எல்லாம் நறுக்கென்று அங்கங்கே முற்றுப் புள்ளிகள் குத்திக் கொண்டு நின்றன.
தாமு டீப்பாய் மேலிருந்த சிகரெட் கேஸை எடுத்துப் பிரித்தான். பற்ற வைத்த பின்பும் எரியும் தீக்குச்சியின் நீல ஜ்வாலை நோக்கி ஏதோ யோசித்தான்.
“உக்காரு சிவா”
“இட்ஸ் ஆல் ரைட்”
“நோ. ப்ளீஸ் பீ ஸீடட்”
சிவா உட்கார்ந்தான்.
‘யு டோன்ட் நோ மெட்ராஸ். ரைட்டராயிட்டா மட்டும் போதாது. கிதாப் வேணும். பந்தா வேணும்.”
சிவா கேட்டுக் கொண்டான்.
“இங்கே சரக்கே வேணாம்; முறுக்கு போதும். ஏன் அதான் ஓணும்!”
“வில் இட் ஹெல்ப் மை ரைட்டிங்?”
“வாட் இன் இன்னொஸன்ட் க்வெஸ்டின்? ஒண்ணு சொல்றேன் சிவா.. வேலை தேடறதை விட்டுடு.”
“ஏன்?”
“தட் வில் மேக் யூ ஸிக்.”
“என்ன பண்ணட்டும்?”
“எழுது… எழுது… இந்த சமூகத்தினுடைய வயித்திலே ஒதைக்கறா மாதிரி எழுது.”
தாமு அதைச் சொன்னபோது அவன் குரலில் தொனித்த வீர்யம் சிவாவின் தந்துகிகளில் பாய்ந்தது.
தாமு சட்டைப் பையிலிருந்த செக்கைத் தொட்டுக் காட்டி விட்டு, “பட்டோண்ட் பிலீவ். இது மாதிரி ஒனக்கு நெறய வரும்னு நம்பிடாதே! எட்டு வருஷத்திலே எத்தனையோ ஆர்ட்டிஸ்ட்.. எத்தனையோ ரைட்டர்ஸ்… எவ்வளவோ பார்த்துட்டேன்.
இதை நம்பிட்டே, இதுக்குப் பின்னாடியே நாய் மாதிரி நீ அலையணும். ஒண் டே அர் த அதர்- இந்த ரீடர்ஸும் மாகஸின்ஸும் கூலா ஒன்னைக் கை கழுவிடுவாங்க.”
“வேலை தேட வேண்டாம்னு சொல்றீங்களா?”
“ஆமா- நான் மதனபள்ளிக்கு போறேன். நீ மெட்ராசுலே இரு. ஒர்க்ஷாப்பை மேனேஜ் பண்ணு.”
“எனக்கு ஒர்க் ஷாப்பைப் பத்தி ஒண்ணுமே தெரியாதே!”
“மதனபள்ளியிலிருந்து வர்றப்ப எனக்குக் கூட ஒண்ணும் தெரியாது!”
பதில் பளிச்சென்று மண்டையில் அறைந்தது.
ஆனால் நீங்கள் தாமு. நான் சிவா என்று அவன் நினைத்தான். சொல்லவில்லை.
“கத்துக்கோ. இது ஒன் தொழில்ணு நெனச்சா ஒனக்கு ஒரு மாசம் போதும். ‘நாம்ப குமாஸ்தா’தான்னு நெனச்சா எட்டு வருஷம் கூடப் போதாது.”
இவன் மனிதனா இல்லை மின்சார ட்ரான்ஸ்மிட்டரா?
“மதனபள்ளியிலே வாரத்திலே மாசத்துலே எப்பவாச்சும் மூச்சு திணறும்போது அப்படி காத்துவாங்க நான் மெட்ராஸ் வருவேன். அப்ப எனக்கு இந்த ‘ஆஸ்ரமம்’ வேணும்.”
தாமு ஆள் காட்டி விரலை வளைத்து அந்த வீட்டுத் தரையைக் கொத்துகிற மாதிரி சைகை செய்து காட்டினான்.
“நான் யோசிக்கணும்.”புகையை இழுத்து ஊதிவிட்டு தாமு சிரித்தான்.
“ஐ லைக் தட் ஆன்ஸர். யோசி, நல்லா தெளிவா யோசி. என்ன கேக்கணும்னாலும் ப்ளெய்னா கேளு. ஒனக்கு ஒரு வாரம் ‘டைம்’ தர்றேன்.”
தாமு எழுந்தான். சிகரெட்டை ட்ரேயில் வைத்து நசுக்கினான்.
“அந்த ஸ்விட்சை ‘ஆஃப்’ பண்ணு” என்று ஃபேனைச் சுட்டிக் காட்டிவிட்டு, ட்ரஸ்ஸிங் டேபிள் முன்னால் போய் பௌடர் கொட்டிக் கொண்டான்.
“நீ போய் டிரஸ் பண்ணு… நீ என்னோட வர்றே?” என்று உத்தரவு போல் சொல்லிவிட்டுப் பவுடர் போடத் தொடங்கினான்.
எதற்கு என்று புரியாவிட்டாலும் சிவா போய் டிரஸ் பண்ணத் தொடங்கினான்.
இருவரும் கிளம்பி வெளியே வரும்போது வாசலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த திஷ்யா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள்.
தாமுவின் கூலிங் கிளாஸ் அணிந்த கண்களில் ஓடிய ஏதோ ஒரு விஷமச் சிரிப்பு, உதட்டோரம் சிதறி வழிந்ததை சிவா கவனித்தான்.
அவனுள் எங்கோ கரித்தது. உதடுகளை நெளித்துக் கொண்டு திஷ்யா விசுக்கென்று மோவாயை நொடித்துத் திரும்பினாள். அந்த வேகத்தில் அவளது கூந்தல் தாவி அவளற் மார்பின் மீது விழுந்தது.
தாமு மோட்டார் சைக்கிளை ஸ்ட்டார்ட் செய்தான். அது ஜப்பான்மேக். அதன் ஓட்டத்திலேயே பில்லியனில் போகிறவனும் டிரைவரும் கத்தாமல் பேசிக் கொள்ளலாம்.
மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டே தாமு ஒரு கேள்வி கேட்டான்.
“டூ யூ லைக் தட் கேர்ள்?”
“யாரு… திஷ்யாவா?”
“எஸ்”
அதற்கு சிவாவிடம் சலனமில்லை.
“ஓ ஸாரி சிவா! நீதான் ரிஷியாச்சே…”
அவனது மோட்டார் சைக்கிள் போஸ்டர் தின்னும் சகிந்திப் பசுவின் ஆயுசை நீடிக்க முயன்றது. ப்ரேக் அடிக்காமல் வளைத்து அந்த பசு, அதன் பரம்பரை, அதை வளர்ப்பவன், பிறப்பின் மர்மம் ஆகிய எதைப் பற்றியும் விமர்சிக்காமல் தாமு தன் விஷயத்தில் மூழ்கியிருந்தான்.
“ஷி ஈஸ் லவ்வி…”
சிவா தொண்டையை விழுங்கினான்.
“லைஃபோ… லவ்வோ… சிவா அட்டாக் இட். ஃபர்ஸ்ட் யூ அட்டாக் இட். யோசிச்சே.. தயங்கினே.. தென் நீ ஒரு ‘யூஸ் லெஸ்…போயட்’டாத்தான் இருக்கணும்.”
மோட்டார் சைக்கிள் அரசுடைமையாக்கப்பட்ட அந்த பாங்கின் ஓரமாக வந்து நின்றது.
“எறங்கு?”
கைது செய்யப்பட்டுப் பின் தொடர்கிறவன் போன்று சிவா பின்னால் போனான்.
மானேஜரின் அறையில் தாமு நுழைந்ததும் அவர் எழுந்து வரவேற்றார்.
சிவாவை அவன் அறிமுகப்படுத்தினான்.
“திஸ் ஈஸ் மிஸ்டர் சிவா. எ பட்டிங் ரைட்டர்”
“க்ளாட் டு மீட் யூ” மானேஜர் கை குலுக்கினார்.
“இவர் பேரிலே ஒரு அக்கவுண்ட் ‘ஓபன்’ பண்ணனும்’ என்று செக்கை நீட்டிக் காட்டினான் தாமு.
“ஓ எஸ்”
சிவா மீண்டும் ஒருமுறை தாமுவின் பெருந்தன்மை முன்னர் தான் குறுகி நிற்பதை உணர்ந்தான்.
தொடரும்
-ரா.பார்த்தசாரதி
மலையிலிருந்து நதிகள் பல பிறக்கின்றன
நதிகளை அன்னைக்கு நிகர் எனச் சொல்கிறோம்!
நன்முறையில் அணை போடுவது நல்லதே
கழிவுநீரைக் கலக்குவது என்றும் தீமையானதே!
வாழும் உயிரினம் வாழா வேண்டுமே
நீரைக் குடிபவர்களுக்கும் கேடு விளையுமே
பயிர்களை அழிப்பதா? மக்கள்நலம்கெட வைப்பதா?
தெரிந்தும் தண்ணீரை அசுத்தபடுத்துவதா?
இன்று நதி நீரை மனசாட்சியின்றி களங்கப்படுத்துகிறோம்
தூய்மை என்பது தாய்மையின் வடிவமே!
தாய்மை என்னும் தூய்மை காக்கப்படவேண்டுமே
இதனை நன்முறையில் அரசாங்கமே நிறைவேற்றவேண்டுமே!
-ஆர். எஸ். கலா
எடுப்பான உடை அணிந்தேன்
மிடுக்கான நடை போட்டேன்
கடுகடுப்பாகக் கோபம் காட்டி வந்தேன்
உறவைத் தண்டித்தேன் உரிமைக்குக்
குரல் கொடுத்தேன்!
வியர்வை சிந்தி உழைத்தேன்
வாழ்வில் பல இன்பங்களை
அனுபவித்தேன்!
பல அறுசுவை உணவைச் சுவைத்தேன்
மனைவியை நேசித்தேன் பிள்ளையைச்
சுவாசித்தேன் நல்லதோர் குடும்பம்
பல்கலைக்கழகமாக வாழ்ந்து வந்தேன்!
அது ஒரு காலம் ஓடிப்போனது வெகு தூரம்
வயசு வந்து போச்சு அத்தனை நாடகமும்
முடிஞ்சுபோச்சு!
எத்தனையோ கோபங்கள் நான் காட்ட
அத்தனையும் தாங்கி நின்று என்னை மடி
சாத்தியவள் என்னவள்!
சோகத்தில் பங்கு எடுக்க அன்னை,
தோள்கொடுக்கச் சில நண்பர்கள்
அது அப்போ…இளமைக் காலம்!
இன்று என் உயிர் மட்டுமே தஞ்சம்
விக்கல் எடுக்கின்றது நீர் கொடுக்க
ஒரு கை இல்லை!
என் உயிர் பிரியும் முன் என்னவள் உயிர்
நீத்தாள்; நிராகரிக்கப்பட்டேன் நான்
என் துணையாக ஒரு வெத்தலைப் பையும்
என் இளமை நினைவுமே மிச்சம்!
பழைய வாழ்வையும் வெத்தலையையும்
மனசும் வாயும் அசைபோட வாழ்வின்
இறுதியை நோக்கி இல்லத்தில் நான்!!
-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்
காசெல்லாம் செலவு செய்து
கடவுளை நாம் வணங்குகிறோம்
நீசக்குணம் போயிட நாம்
நினைத்து என்றும் பார்த்தோமா?
ஆசைவார்த்தை கூறி நின்று
அனைவரையும் மடக்கு கின்றோம்
அல்லல் பட்டு நிற்பவரை
அரைக்கணம் நாம் பார்த்ததுண்டா?
மோசடிகள் பல செய்து
முழுவதையும் சுருட்டு கின்றோம்
காசில்லா நிற்கும் அவர்
கஷ்டமதை பார்த்த துண்டா?
ஊரில் உள்ள அத்தனையும்
காரில் சென்று விலைபேசி
நீதிநெறி தனை மறந்து
தாறு மாறாய் வாங்குகின்றோம்!
வாரி வாரிச் சுருட்டுகின்றோம்
வயிற்றில் எல்லாம் அடிக்கின்றோம்
சாமியையும் விலை பேசிச்
சந்தை தனில் விற்கின்றோம்!
கோயில் சென்று வந்தாலும்
குணம் எமக்கு மாறவில்லை
பாவிகளாய் இருப் பார்க்குப்
பணம் இருந்தும் என்னபயன்?!