Blog

  • வஞ்சித்தல்!

    -ரோஷான் ஏ. ஜிப்ரி, இலங்கை

    கண்கொத்திப் பாம்பின்
    சாயல் ஒத்த
    உன் பார்வைவிழ
    என் கிளை பிரிகிறது!

    தனித்த தண்டவாளமாய்
    இழுபட்டுப் போயிற்று
    வாழ்வின் இருப்பு!

    கூட்டுப் பிரார்த்தனையின்
    அதிஉச்ச நம்பிக்கையை
    நீ வீசிய சிறுகல் சிதைத்திற்று!

    இந்த வதைகளில்
    எந்த ரசமும் இருப்பதற்கான
    சாத்தியமும் இல்லை இனி…
    அது வெறும் மெழுகுச் சிலையாய்
    உருகி வடிந்து உறைகிறது
    என்பதைத் தவிர!

    தவத்தின் உச்சகட்டங்களைத் தாண்டி
    மனம் விரும்பியதென்று மார்தட்டிப்
    பசி மறந்து, துயில் துறந்து
    பெருக்கிய முற்றம்
    இன்றுன் ஆக்கிரமிப்பின்
    அத்துமீறல்களுக்குள் அகப்பட்டுச்
    சீர்குலைந்து சிதறிய வாசலாய்!

    பொறிகலங்க வைக்கும் அறங்களைப்
    புகட்டவும், போதிக்கவும்
    சாத்தியமாகும் உன்னால் என்பதைச்
    சாட்சி பகிர்ந்திற்று
    சமகால நடவடிக்கைகள்!

    வார்த்தைகளால் தீயிட்டுக் கொளுத்தவும்
    வஞ்சித்தலால் கூந்தல்கட்டி விரட்டவும்
    அறியுமாயிருந்த உனக்கு
    இழப்பு, தவிப்பு எதையும் நீ
    அறிந்துணர அவகாசம் எடுக்கவில்லை!

    சுவைமிகு என் மனசின் துணுக்குகளைப்
    படித்துப் பார்க்கத் தவறும் எல்லாக்காலத்திலும்
    ரசம் வடியும் தேனீயாய்
    இறுதிக்கணம்வரை
    நான் சுற்றி அலைவேன்
    நீ கலைத்துவிட்ட இவ்வெளியில்!

     

    Share
  • ஏழையின் ஏக்கம்!

    -ஆர். எஸ். கலா

    பட்டாடை உடுத்திப் பவனிவர
    ஆசை ஆனால் பணம் இல்லை…
    பட்டுமெத்தை மேல் படுத்து உருண்டு
    விளையாட ஆசை
    ஆனால் பணம் இல்லை…
    தினமும் அறுசுவை உணவு உண்ண
    ஆசை ஆனால் பணம் இல்லை…
    விதம் விதமாக நகை போட்டு
    அழகு பார்க்க ஆசை
    ஆனால் பணம் இல்லை…

    வானூர்தியில் உலகம் சுற்றி வரஆசை
    ஆனால் பணம் இல்லை…
    மாடி வீட்டின் மேல் இருந்து வேடிக்கை
    பார்க்க ஆசை
    ஆனால் பணம் இல்லை….
    சீரும் சிறப்புமாகத் திருமணம் நடக்க
    வேண்டும் என்று ஆசை
    ஆனால் பணம் இல்லை…
    பல முதியோர் இலங்களுக்குச் சென்று
    பல  வழியில்  உதவி செய்ய ஆசை
    ஆனால் பணம் இல்லை…

    இந்தப் பணத்துக்காகப் பல வேலை தேடிச்
    செய்ய ஆசை
    ஆனால் படிப்பு இல்லை…!
    மனதில் உறுதி உள்ளது இதயத்தில்
    ஆசை உள்ளது நிறைவேற வழி
    இல்லை…

    ஏழையாகப் பிறந்தேன் ஏழையாக
    வளர்ந்தேன் ஏழையாக வாழ்கின்றேன்
    ஆனால் பணத்துக்காக அழைக்கின்றேன்
    அழைக்கின்றேன்  அழைத்துக் கொண்டே
    இருக்கின்றேன்!

     

    Share
  • கவிஞன்!

    -துஷ்யந்தி, இலங்கை

    விழியென்னும் தடாகமதில்
    மொழியெல்லாம் உயிர் பெற்றுச்
    சிந்தனைச் செடிகளாய்
    கவியிதழ் பூக்களாய்
    தமிழ்க் கோத்த மாலையாய்
    பிறந்திடும்  அவன் பார்வையிலே!

    தூய்மையின் நிறம் சொல்லும்
    வெண் கடுதாசி ஏடுகளும்
    அவன் பேனாவின் மைபடப்
    பேரழகு பெற்றிடும் – இன்னும்
    சில துளிக் கவிக்காய்
    ஏங்கியே நின்றிடும் – அவன்
    பாக்களின் சொல்லாலே!

    மாயத்திரையை நுகர்ந்து
    மனதிலே அழகிய கோலமிட்டு
    யதார்த்த வரிகளாய் அமைத்து
    ரசிக்கும்படியாய் அமைத்து
    சொற்களோடு விளையாடும்
    அவன் அழகிய எண்ணங்களே!

    எளிமையாய் வாழ்ந்திடும்
    அமைதியை நேசித்திடும்
    உறவுகளை மதித்திடும்
    உணர்வுகளை ரசித்திடும்
    உள்ளங்களைப் படித்திடும் – அவன்
    இயல்பான வாழ்க்கையே!

    வீசும்தென்றல் கூட அவனிடம்
    பேசிடும்  மொழிகள்…
    இருளின் சுவடுகள் அவனிடம்
    காட்டிடும் கவிதைகள்…
    அந்திவானமோ அவனிடம்
    தூவிடும் சிந்தனைகள்…
    கொட்டும் மழையோ அவனை
    நனைத்திடும் தேன் தமிழாலே…
    ஏனெனில்,
    அவனோ இயற்கை அன்னை
    தன் கைகளாலே செதுக்கிவிட்ட
    குழந்தையே….!!!

     

    Share
  • யார் சொன்னது…?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    எத்தனைப் போராட்டம்
    எத்தனை இன்னல்
    எத்தனை சோகம்                                                kamalini
    எத்தனைக் கனவு
    எத்தனை வியாதி
    எத்தனைச் சோதனை
    எத்தனை எத்தனை…
    அத்தனையும் வாழும் வாழ்வில்!

    உடைந்து நொறுங்கிய கண்ணாடித்துண்டுகளாய்
    ஓட்டமுடியாச் சிதறல்கள்!
    உள்ளத்தின் உணர்வுகளில்
    வாழ்வின் தழும்புகள்!

    இதய நாளம்
    உயிர்ப் பிரிவின்
    சோகத்தில் துடிக்கின்றது!

    இதயத்தில் அவள் எண்ணங்களே
    நினைத்து நினைத்து அழுது வடிக்கும்
    என் மனசு!

    மரணம் என்று யார் சொன்னது..?
    மரணித்து விட்டார் என்று!

    கமலினி அக்கா
    ஹயாத்தோடு செல்லுகின்றார்
    மறுமை நாளில் எழுப்பப்படுவார்!

    நாமின்று உயிரோடு வாழ்கின்றோம்
    என்றோ ஓர்நாள் நாம்தான்
    மண்ணில் மரணிக்கப்படுவோம்!

     

    Share
  • ஆரோக்கிய தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    உலகில் அனைவரும் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் நல்லது
    நல்ல உணவும் உடற்பயிற்சியும் ஆரோக்கியத்திற்கு நல்லது
    சோம்பேறித்தனமும், முயற்சியின்மையும் ஆரோக்கியத்திற்குக் கேடாகும்
    தீய பழக்கங்கள் என்றும் ஆரோக்கியத்திற்குக்  கேடாகும்!

    உடலில் ஆயிரம் வியாதி பெயரோ ஆரோக்கியசாமி!
    நோயின்றி வாழ நல்ல ஆரோக்கியம்  தேவை
    உடல்  ஆரோக்கியம் பெறச் சத்துணவு  தேவை
    உடல் வலிமை பெற  நல்ல உடற்பயிற்சி  தேவை!

    சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத  முடியும்
    ஆரோக்கியமாய் இருந்தால் வாழ்க்கை வளர்ச்சியடையுமே
    நல்ல உணவும் உடற்பயிற்சியும் மேற்கொள்வோமே
    மனதில் இறுக்கம்இன்றி ஆரோக்கியத்தைப் பேணுவோமே!

     

    Share
  • என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா?

    கவிஞர் காவிரிமைந்தன்.

    aasaimugam

     

    ஆசைமுகத்திற்காக கவிஞர் வாலி அன்று வரைந்த பாட்டு! காதல் பாடல் என்று வரும்போது பல்லவி என்ன வைக்கலாம் என்று எண்ணிடத் தோன்றிய கணமெ… அன்பு முகம் நோக்கி காதலன் கேட்கும் கேள்வியாய் முதல் வரி அமைந்திட… இன்பபுரி நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்… வரியும் இனிக்கிறதே! காதலி கூடுகிறாள்… அவள் தானும் சேர்ந்தே பாடுகிறாள்!!

    SM Subbaiah naiduகாதலியிடம் தான் வேண்டுவன எல்லாம் கேட்கும் பாணியைப் பாருங்கள்… அவளும் தருவதைத் தந்து பெறுவதில் குறியாய் இருக்கிறாள்! இன்ப நாமாவளியில் இருவர் இதயங்கள் இணைகின்றன! எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையும் அதற்கேற்ப கவிஞர் வாலியின் வரிகளும் இசைத்தமிழாய் வலம் வருகின்றன! எளிய வார்த்தைகளில் புதிய பாணியில் சொல்லப்பட்ட காதல் பாட்டாக..

    கட்டித்தங்கம் வெட்டியெடுத்த மக்கள் திலகத்துடன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி திரையில் தோன்றும் இன்பத்தமிழ்த் தேனாறு இசையின்வாயிலாக வழிகிறது! இறைவன் எழுதிவைத்த தேவகுயில்கள் டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு இன்பநாதம்! தமிழ்த்திரையின் மொத்த ராஜ்ஜியத்தில் இவர்களின் பங்காக… அவற்றுள் ஒன்றே இப்பாடல் என்றாக… இதோ நன்றாக. .. என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா? வேறென்ன வேண்டுமாம்.. பாடலைக் கேளுங்கள்… பதில் கிடைக்கும்!!


    காணொளி: https://youtu.be/l3-cs57NsRg

    என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
    உன் கைகளில் வரவும் வேண்டுமா
    இந்தக் கைகளில் வந்தால் போதுமா
    நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
    என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

    ஊரென்ன சொல்லும்
    சொல்லட்டுமே
    உறவென்ன பேசும்
    பேசட்டுமே
    காதலர் நெஞ்சம்
    கொஞ்சட்டுமே
    காவிய வாழ்வை
    மிஞ்சட்டுமே
    [என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா]

    காவிரி கெண்டை
    கண்களிலே
    தாமரைப் பொய்கை
    கன்னத்திலே
    நாயகன் வந்தான்
    பக்கத்திலே
    நாயகி விழுந்தாள்
    வெட்கத்திலே
    [என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா]

    ஆசைகள் தொடங்கும்
    நெஞ்சத்திலே
    ஆடி அடங்கும்
    மஞ்சத்திலே
    மாந்தளிர் மேனி என்னருகே
    மன்னவன் தோள்கள் என்னருகே

    என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
    உன் கைகளில் வரவும் வேண்டுமா
    இந்தக் கைகளில் வந்தால் போதுமா
    நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
    என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா

    ____________________________________________

    பாடல்: என்னைக் காதலித்தால் ……
    படம்: ஆசைமுகம்
    கவிஞர்: வாலி
    இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா

    Share
  • கமலினி செல்வராஜன்.

    akk(1954 – 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ்நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார்.
    இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார்
    கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர்மு. கணபதிப்பிள்ளை,
    வயலின் கலைஞர் தனபாக்கியம்
    ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார்.
    கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து,
    பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.
    களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார்
    . தந்தை மு. கணபதிப்பிள்ளை
    இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது
    அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக்காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.
    சில்லையூர் செல்வராசன் எழுதிய ‘தணியாத தாகம்’ வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக ‘கமலி’ பாத்திரத்தில் இவர் நடித்தார்.
    இலங்கை வானொலியில்’கலைக்கோலம்’ முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.
    ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா
    செல்லத்துரையின்நெறியாள்கையில்
    , கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’,எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூக சேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
    ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.
    இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
    ஆதர கதாவ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார்அக்கா கமலினி செல்வராஜன்.
    நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)
    கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)
    நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)
    35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது வழங்கி கெளரவித்தது.
    1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து இவர் கொழும்பில் தனது மகன் அதிசயனுடன் வசித்து வந்தார்
    கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் 2015 ஏப்ரல் 7 இன்று கொழும்பில் காலமானார்.
    அன்பு அக்கா கமலினி செல்வராஜன்.
    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 1

    சி. ஜெயபாரதன்.

    kahlil-gibran

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

     

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    மனித இதயம் 

    “மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை ! காதில் கேட்பதில்லை ! புரிந்து கொள்வது மில்லை ! ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.” – கலில் கிப்ரான்.

    ஒற்றை இதயத்தால்
    நான் இப்போது
    உரைப்பவை எல்லாம்
    நாளை ஆயிரம் இதயங்கள்
    ஓதும் !

    பிறக்க வில்லை நாளை
    இறந்து விட்டது நேற்று
    ஏன் அவலம் அவைமேல்
    இன்று இனிக்கும் போது ?

     

    கடவுளின் படைப்பு 

    கடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.” – கலில் கிப்ரான்.

    paintings-of-gibrans-mother“கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக் களஞ்சியத்திலிருந்து ஊறி வந்தது. இல்லாவிட்டால் அவர் சுயமாக உண்டாக்கியவை எல்லாம் அத்துணை உலக மயமாக, மகத்துவமாக, அழகு மொழி மூலம் ஆடை போர்த்திய படைப்புக்களாய் அமைந்திருக்க முடியாது.” – கிளாடி பிராக்டன் (Claude Bragdon)

    “நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது.  மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும்.  ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of Eternity) ஒருபோதும் ஒரு ரகசியத்தை எதிர்காலம் புறக்கணிக்காது !” – கலில் கிப்ரான்

    நானொரு வார்த்தை சொல்ல
    வந்தேன் !
    நானதைச் சொல்ல வேண்டும்
    இப்போது !
    மரணம் என்னைத் தடுத்தால்
    நாளைக்கு
    உரைக்கப்படும் அது !
    ஏனெனில்
    நீடிக்கும் வரலாற்று நூலில்
    வருங் காலம்
    ஒருபோதும்
    புறக்கணிப்ப தில்லை
    ஒரு ரகசியத்தை !

     

     

    “கடவுளின் பிரதிபலிப்பான அன்பின் மகிமையிலும் அழகின் ஒளிச்சுடரிலும் நான் வாழப் பிறந்தேன்.  இங்கிருக்கிறேன் நான் (அவ்விதம்) வாழ்ந்து கொண்டு ! அந்த வாழ்க்கை அரங்கிலிருந்து என்னைத் துரத்த முடியாது.  ஏனெனில் உயிரோடு வாழும் எனது வார்த்தைகள் மூலம் மரணத்திலும் நான் உயிர்ப்பித்து வாழ்பவன் !”- கலில் கிப்ரான்

    அன்பின் மகிமை,
    அழகின் ஒளிச்சுடர்
    கடவுளின் பிரதி பலிப்பு !
    அவற்றில் வாழப் பிறந்தேன் !
    அவ்விதத்தில்
    நானிங்கு வசிக்கிறேன் !
    துரத்த முடியா தென்னை
    அந்த வாழ்வு
    அரங்கத்தை விட்டு !
    ஏனெனில்
    மரணத்திலும் நான் வாழ்பவன்
    உயிரோடு வாழும்
    என் வார்த்தைகள் மூலம் !

     

    கலில் கிப்ரான் வாழ்க்கை வரலாறு

    லெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலில் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத்திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய “தீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதைக் கட்டுரைகள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலில் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழிகளை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறுகளையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலிக் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது.

    வட லெபானில் உள்ள பிஷாரி (Bechari or Bscharri in Lebanon) என்னும் ஊரில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். அப்போது துருக்கியைச் சேர்ந்த ஒரு மாநிலமாக இருந்தது லெபனான். அதில் ஒரு பகுதி சிரியாவைச் சேர்ந்திருந்தது. அவர் பிறக்கும் போது அவரது அன்னைக்கு முப்பது வயது.. தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்தான் கலில் கிப்ரான். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளித் தாயாரால் ஒதுக்கப் பட்டார். படிப்பில்லாத அன்னை மன உறுதியால் இன்னலுடன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கலில் கிப்ரானுக்கு எட்டு வயதாகும் போது, அவரது தகப்பனார் வரிப்பணத்தைச் சரிவரக் கட்டாமல் சிறையில் தள்ளப்பட்டார். அரசாங்கம் அவர்களது வீட்டைப் பறிமுதல் செய்ததால் அனைவரும் வெளியேற்றப் பட்டு உறவினர் இல்லத்தில் வாழ வேண்டியதாயிற்று. மன ஊக்கமுடைய அன்னை தன் பிள்ளைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள்) அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். 1894 இல் விடுதலையான தகப்பனார் புலம்பெயரத் தயங்கி லென்பனானில் தங்கிக் கொண்டார்.

    paintings-4

    சிரியன் சமூகக் குழுவினர் வாழும் பாஸ்டனில் அனைவரும் முதலில் தங்கினார். 1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம்  கற்கலானார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. பாஸ்டனில் செழித்த கலாச்சார, நாடக, கான இசைக் கலைகள் கலில் கிப்ரானைப் பற்றிக் கொண்டன. 1897 இல் கலில் கிப்ரான் லெபனானுக்குத் திரும்பி பேரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிக் இலக்கியம் கற்றார். 1904 இல் (21 ஆவது வயதில்) கலில் கிப்ரானின் முதல் ஓவியக் கண்காட்சி பாஸ்டனில் அரங்கேறியது. 1908 முதல் 1910 வரை புகழ் பெற்ற பிரென்ச் ஓவிய மேதை “ஆகஸ்டு ரோடின்” (August Rodin 1840-1917) கீழ் சிற்பக் கலை, ஓவியக் கலைப் பயிற்சி பெற கலில் கிப்ரான் பாரிசுக்குச் சென்றார். கலில் கிப்ரானின் ஓவியங்கள் பல அவரது குரு ஆகஸ்டு ரோடின் படைப்புகளை ஒத்திருப்பதில் வியப்பில்லை.

    கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத்திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது..

    ++++++++++++++++++

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    (வினி)யோக நித்திரை
    ———————————————-

    crazy
    தூங்கும்மாட் டுக்குத் துணையாகத் தூங்குகிறான்,
    சாங்கியம் சொன்ன சகாதேவன்(சகாகிருஷ்ணன்)-தேங்கும்
    உறக்கத்தில் எல்லா உயிர்களும் ஒன்றே,
    மறக்கத்தான் ஜீவன்ஆன் மா ….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 6, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள்

     

    Jyothirllata Girija2

     

     

    பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். வல்லமை வாசகர்கள் அவரை வல்லமை இதழின் எழுத்தாளராகவும் அறிவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகள் வல்லமையில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராக குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்கிறார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணியைப் பாராட்டும் நோக்குடன் அவரை வல்லமை இதழ் குழுவினர்களிடம் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும், கவிஞரும், வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் சமீபத்திய “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    பள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக  வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்.

    பதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர்புதினத்தைத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, 2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கெளரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார்.

    jyothi-300x224

    இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்பட பல மொழிபெயர்ப்புகள் என தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செயப்பட்டுள்ளது.

    முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

    அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தை சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று சென்ற ஆண்டு வெளியிடப் பட்டது.

    இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் இவரது படைப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் இந்த மாதம் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    thirukural

    மேலும் அண்மையில் இவரது …

    1 படி தாண்டிய பத்தினிகள்
    2 இதயம் பலவிதம்
    3 வசந்தம் வருமா?
    4 மரபுகள் முறிகின்ற நேரங்கள்
    5 வாழத்தான் பிறந்தோம்
    6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது
    7 நாங்களும் வாழ்கிறோம்
    8 குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
    9 இல்லாதவர்கள்
    10 அவசரக்கோலங்கள்

     பத்து நூல்களை பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

    எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வரும் ஜோதிர்லதா கிரிஜா அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமையடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    மேலதிகத் தகவல்கள்:
    http://jyothirlathagirija.blogspot.com/
    https://plus.google.com/112576644547569337452/posts

    Share
  • படக்கவிதைப் போட்டி (7)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11134356_815628041824730_874016360_n

    திருமதி ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • அரசியல் அங்கில்லை!

    -மெய்யன் நடராஜ்

    நடந்தது மீண்டும் நடக்காது என்று
    நடக்காதே! வாழ்வில் நடக்கும் – நடப்பை
    நடத்தும் நடத்துநர் நாடகத்தில் நம்மை
    நடத்துவ தொன்றே நடப்பு.

    பணம்வந்து நல்ல பதவியும் வாய்த்து
    மனம்மாறா நட்பை மலரின் – மணமாய்
    தினந்தோறு முந்தன் திசைவீசச் செய்யுங்
    குணங்கொள்ளும் நண்பன் கொடை.

    சீர்திருத்த வாதியென்னும் செல்லப் பெயரெடுக்கப்
    போர்தொடுத்தே தெய்வப் புகழ்மறுக்கும் – பேர்களுக்கு
    ஊழ்வினை தீர்க்கும் ஒருநாள் உளம்வருந்தும்
    வாழ்வளித்தோன் தன்னை நினைந்து.

    மரணத்தின் வாசலிலே மண்டியிட்டு நின்றுக்
    கரணந்தான் போட்டாலும் காலன் – வரவில்
    சரணடையுந் தன்மை சகலருக்கு மொன்றே
    அரசியல் அங்கில்லை ஆம்.

    நெற்கிளி ஓட்டும் நிலமுழுவோன் கைகளிலே
    பொற்கிழி நீட்டாப் புவியரசு – வெட்டுக்
    கிளிகள் விரும்பும் விருது விருந்தை
    அளிப்பதி லில்லை அறம்.

     

    Share
  • யூத்!

    -றியாஸ்முஹமட்

    இன்டர்நெட்டில்
    இடறி விழுந்தான்
    கைபேசியில்
    கைதியானான்

    விதைக்கும் காலத்தை
    விரயம் செய்கிறான்
    ’தல’ என்கிறான்
    ’தளபதி’ என்கிறான்

    பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறான்
    பார்க்காத போதும் சிரிக்கிறான்
    போதையில் மிதக்கிறான்
    போற இடம் மறக்கிறான்

    பேராண்மை என்கிறான்
    பேரின்பம் என்கிறான்
    தறிகெட்டு ஆடுகிறான்
    தகிட தாளம் போடுகிறான்

    சிகரெட்டில் தீ வைத்துச்
    சிந்தனைகளை எரிக்கிறான்
    எதைப் புரிந்து கொண்டான்?
    எதைத் தெரிந்து கொண்டான்?

    கேள்வி கேட்டால்
    கேள்விக்குப் பதில்
    யூத்
    யூத்தாமாம்!!

     

    Share
  • மறக்க முடியவில்லை!

    -முகம்மட் ஜரூஸ்

    மண்வெட்டியில்
    புல்வெட்டி
    எடுப்பாரு அப்பா..!

    மண்புழுவைக்
    கண்டு
    மண்கட்டி
    நான்
    எறிவேனேப்பா..!

    குப்பை வாரியில்
    வாசலைப்
    பெருக்குவாளம்மா..!

    அகப்பை கொண்டு
    வர்ணம்
    போடுவதைக்
    கண்டு
    அதட்டுவாளம்மா.!

    உதட்டைத்தூக்கி
    நான்
    விம்மலுக்குள்
    உறைந்து
    கம்பீரமாய் நிற்பேன்.!

    உரத்த குரலில்
    எரிந்து
    கொள்வார்
    அம்மாவிடமப்பா..!

    கண்ணிமையில்
    ஈரமிருக்காது
    கண்ணெரிய
    கதறியழுவேன்..!

    நடிப்பென்றாலும்
    அம்மா
    துடிப்பாள்..!

    அரவணைத்தெடுத்து
    பொய்கள்
    நூறு
    சொல்லிச்சிரிப்பாள்..!

    முந்தானையால்
    போர்த்தி
    நெஞ்சணையில்
    பஞ்சணை
    தந்தவளம்மா..!

    கையாந்தாரையில்
    தடவி
    நுலம்படித்துக்
    காயத்தை
    காயவைத்தாரப்பா..!

    மாரடைத்துப் போகுது
    ஊற்றுநீராய்க்
    கண்ணுறைக்கு
    ஏகனவன்
    எடுத்துப்போனதால்..!

    எங்கள் வீட்டுக்குள்
    கரையானுக்கும்
    உறைவிடம்
    நிறைவாகிருந்தது..!

    கூரைவீடு இன்று
    மாடிவீடு…
    ஓடியாட
    இங்கேது இடம்..?

    மூடிமறைத்தாலும்
    மூச்சுக்குள்
    ஆடி அழையும்..!

    வசந்தகாலம்
    தான்
    பசுமைகள்
    நிறைந்த
    இளமைக்காலம்..!

     

    Share
  • தேகமும் யோகமும் (3ஆம்பகுதி)

    கவியோகி வேதம்

    யோகம் செய்யச்… சோம்பலே தடை..

    yoga

     அன்பர்களே!

    தினசரி காலையில் 5-மணிக்கு எழுந்து குளித்துவிட்டு யோகமும், நல்ல தியானமும் செய்ய வேண்டுமென்று மனதார நினைப்போம்.ஒன்றிரண்டு நாள் இந்த நல்ல பழக்கம் மிகஅற்புதமாய்நடந்தேறும்.நெஞ்செல்லாம் மகிழ்ச்சி பொங்கும்.முகத்தில் ஏதோ ஒரு தேஜஸ் வருவதாய் நம் நண்பர்கள்(நக்கலாகக் கூட!)-சொன்னாலும் சொல்வர்…ஆயின் ஒரு ஐந்து நாள்கழிந்தவுடன் மனத்தில் ஒரு சின்ன குட்டிச் சாத்தான் எட்டிப்பார்க்கும். ‘என்னடா இது, ஒன்றுபோல அதிகாலை 5க்கே எழுந்திருக்கவேண்டியிருக்கே.. இந்த மார்கழிக்குளிரில்  போர்வைக்குள் முடங்கிச் சுகமாக நித்ரா தேவியை அணைத்துத் தூங்காமல்சீக்கிரமே எழுந்து எதற்கு இப்படி யோகா செய்யணும்? இதனால் யாருக்கு என்ன பயன்? அதுதான் நண்பர்களே சொல்லிவிட்டார்களே.. முகத்தில் ‘ஒரு ஒளிவட்டம்’ எட்டிப்பார்க்கிறதென்று!..” என்று அந்தச் சாத்தான் உபதேசம் கொசுவுடன் சேர்ந்து

    காதில் சொய்ங்..கென்று ரீங்கரிக்கும். அவ்வளவுதான் மனம் அதை உண்மையென நம்பிக் குரங்காட்டம் போட்டு, போர்வையைஇன்னும் இழுத்து அணைக்கும்!.

     அன்பர்களே.. யோசித்துப்பாருங்கள்! உங்கள் குரு இப்படியா மட்டிச் சோம்பலுக்கு இடம் கொடுக்கச் சொன்னார்?கடைசி

    ஆயுள் நிமிடம் வரை உடம்பும் மனதும் சுறுசுறுப்பாக இருக்கவன்றோ அவர் இவ்வளவு சிரமப்பட்டு, உங்களுக்கு யோகாகற்பித்தார்! விடியும்வரை நீங்கள் தூங்கிவிட்டு இப்படி குருத்துரோகம் பண்ணலாமா?சாத்தானுக்கு அடிமையாகி, தெய்வநிந்தனைக்கு ஆளாகலாமா?தெய்வ வாக்கும்,மந்திர பலமும்,எதையும் சாதித்து வெற்றிபெறும் மனோபாவமும் உங்கட்குவரவேண்டாமா?சிந்தனை செய்யுங்கள்!நான்சொல்லும் உறுதிமொழியாக இதை எடுப்பீர்!

    .. “நான் தினசரி சோம்பலுக்கு இடம் கொடாமல் யோகா செய்வேன்; கூடவே தியானமும் செய்வேன்”.. என்று.

    ..நிச்சயம் தினசரி யோகத்தியானத்தால்

    (யோகப்பயிற்சியும், அதன்பின் தியானம்)-உங்கள் வாழ்க்கையே ஒரு புதுப்பொலிவு பெறும்..இறைவன் நிதம் உங்களுடன் மெதுவாகப் பேசுவதை அனுபவத்தில் உணர்வீர்கள்.உண்மை..இந்த அற்புதச்சொத்தை உங்களைக் கீழே தள்ளப்பார்க்கும் சாத்தான் எண்ணம் கொடுக்குமா?

    … ஆகவே, இந்தச் சோம்பல் உங்கள் முதல் எதிரி!அதற்கு இடம் கொடுக்காதீர்கள்!தினசரிப் பழக்கமாக நீங்கள் இதனைக்கைக்கொண்டால், பின்பு அது உங்களை யோகா விடாது.உங்கள் குருவாக்கும் உங்களைக் கைவிடாது.

    உங்கள் செயல் யாவும் வெற்றியே பெறும்.உங்கள்  ‘குலதெய்வமும்’ உங்கட்குப் பக்கபலமாக நிற்பதை வெகுவாகஉணர்வீர்! ஆம்.. இது என் அனுபவ உண்மை.

    ……….அடுத்தது.. தினசரி நான் தினசரிச் சேதி படித்தபின்தான் யோகா செய்வேன்..தினசரிச்சேதிகள் எனக்கு உற்சாகம்

    கொடுக்கிறதே!’- என நினைத்தால் அதைப்போல ஒரு மடத்தனம் கிடையாது.அதனால்தான் நான் உங்களை அதிகாலை.5 க்கே எழுந்து காலைக்கடன் யாவும் முடித்து யோகா செய்ய அவசரப்படுத்தினேன்.ஸ்வாமி சிவாநந்தர்(பத்தமடை)அழகாகச் சொல்வார்! ‘காலையில் அழகிய தியானம் செய்யாமல் தினசரியில் நீங்கள் மூழ்கினால் தியானம், மத்யானமாகிவிடும். அதாவது அதிலுள்ள சேதிகள், அரசியல் நீசத்தனம், வன்முறைச் சேதிகள் எல்லாமே நம்மை வேறுஎண்ணங்களில் கொண்டுபோய் மூழ்கடிக்கும்.நேரமும் ஓடிவிடும்.சோம்பலும் கூடிவரும்..அவ்வளவு பேட் வைப்ரேஷன்(BAD vibration)அது என்பார்.சலனத்தை உண்டாக்கும் அந்த பேப்பர் முக்கியமா? இல்லை அதிகாலை வரும் தெளிவான, தெய்வீகச் சிந்தையோடு நீங்கள்..செய்யப்போகும் யோகா முக்கியமா? நீங்களே தீர்மானியுங்கள்’ என்பார்.

           ஆகவே ஒரு குறிப்பிட்ட காலை நேரத்தை யோகாவுக்கு என ஒதுக்கினால் அந்த நேரத்தில் உங்களைச் சுற்றிலும் பாதுகாத்து நிற்க உங்கள் குலதெய்வதமும், குருவின் சூக்‌கும உருவும் தயாராக நிற்பதை அனுபவத்தில் உணர்வீர்!நேரம் தவறாமல்அதே காலத்தை யோகத் தியானத்திற்கே பயன்படுத்துவீர்கள் எனில் நம் வாழ்க்கையே சீராகி உண்மையான வாழ்க்கையைவாழ்ந்தவர்கள் ஆவோம்.ஒரு அற்புத தெய்வீக சக்தியே நம்முள் குடியேறும். இது என் அனுபவம்!அதனால்தான் இந்த நல்ல நெறியை உங்களுக்கு வலியுறுத்திச் சொல்கின்றேன்.

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    Share