Blog

  • ‘’ஞானரதம் THY NAME IS ஜெயகாந்தன்’’.

    கிரேசி மோகன்

    “விஸ்வரூபம் காட்டப்படுவதன்று….காணப்படுவது’’ என்று புதுமையான வியாக்கியானம் அளித்தவர்….

    crazy

    “மாணவர்களே ! நீங்கள் எல்லோரும் மாடு மேய்க்கப் போங்கள்….!’’ என்று ஒரு கல்லூரி விழாவில் கூறிவிட்டு, மாணவர்களின் மயான அமைதியை ‘’மாடு மேய்த்தவந்தான் கீதை சொன்னான்’’ என்று கொக்கரித்து கலக்கியவர்….இது இலக்கியவாதி மகோன்னத ஜெயகாந்தன்….

    எனது குழு நண்பன் “பார்த்தி’’ மூலமாக இவர் எனக்குப் பரிச்சியம்….விருது வாங்க ஜெயகாந்தன் சார் டெல்லிக்கு செல்லுகையில், “பார்த்தி’’ இவரோடு துணைக்குச் செல்லும் ஆத்மார்த்தமான தோழன்….என் மகன் திருமணத்திற்கு பார்த்தியின் சிபாரிசால் வந்தது இந்த ‘’ஞான ரதம்’’….என்னைக் கூப்பிட்டு(என்ன சொல்லப் போகிறாரோ என்று கவலையோடு நான் செல்ல) இறுதியாக இவர் சொன்னது ‘’மோகன்….பார்த்தியைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’….அடடா அந்த மகோன்னதத்துள் எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம்….”கல்லுக்குள் கருணைக் கடவுள்’’ போல்….எழுத்து தெய்வ ரூபேண….இயல்பு மனுஷ்ய ரூபேண….ஜெயகாந்தன் எழுத்தறிவித்த இறைவன் ரூபேண….

    விரசம் இல்லாமல் சமூக அவலங்களை, வாழ்வின் நிலையாமையை சொல்லவல்ல ‘’சரஸ்வதி மைந்தன்’’….இவர் உள்ளங்கையில் நெல்லிக்கனியாக எப்போதும் “மஹாகவியின்’’ பாடல் புத்தகம் இருக்கும்….சிறுகதையை ஒரு பாஷையாக்கிய பெருமகன்….இவரது “பாரீஸுக்குப் போ’’, “விழுதுகள்’’, “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’’, “நந்தவனத்தில் ஓர் ஆண்டி’’ இப்படி பல சகாப்தங்கள் படைத்தும், இவர் தோழர்களுக்கு “சக -ஆப்தனாக’’ இருந்தவர் (எனக்குத் தெரிந்த உதாரணம் “பார்த்தி’’)….

    ”கயைசார்ந்த ஜீவன்கள் காதுவழி மோட்சத்தை
    தயைகூர்ந் தளித்திடும் தெய்வத்தை, -ஜெயகாந்தன்
    பார்த்ததால் பாரீஸன் பக்கமுறப் போனாரே,(பாரீஸுக்குப் போ)
    பார்த்தியைப்பார்த் துக்கொள் பகர்ந்து’’….கிரேசி மோகன்….  

    Share
  • அந்தி மழை மேகம் தங்க மழை தூவும்

    கவிஞர் காவிரிமைந்தன்.

    அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்

    புலவர் புலமைப்பித்தனின் பூந்தமிழ்வரிகள்… இளையராஜாவின் இசையில் துள்ளிகுதிக்க… டி.எல்.மகராஜனுடன் பி.சுசீலா குரல்கள்…மணிரத்னம் இயக்கத்தில் பாலகுமாரன் வசனம் எழுத… சுஜாதா புரொடக்ஷன்ஸாரின் படைப்பில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம்! கமலஹாசன் நடித்த படங்களில் முன்னிலை வகிக்கும் அளவு முத்திரை பதித்த படம்!

    கதையின் நாயகன் தங்களைக் காப்பாற்றும் தருணத்தை ஊரே கூடி மகிழ்கிறது! அந்த மகிழ்ச்சியை ஒரு திரைப்பாடலில் தரலாம் என்று எண்ணி அதற்கேற்ற பின்னணிகளை வடிவமைத்திருக்கிறார்கள். ஹோலி பண்டிகையின்போது அள்ளித்தெளிக்கும் வண்ணக்கோலங்கள் ஒருவர்மீது ஒருவராய் வீசப்பட… அன்பின் பரிமாணமாக அது பரிமாறப்படுகிறது!

    கமலஹாசனுடன் சரண்யா இணைசேர்ந்து நடிப்பில் வரலாறு படைத்த படம்! இசைஞானியின் இசையில் நாம் அந்தக் கதையோடு ஒன்றிவிடுகிறோம். இந்திய திரை வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும் பொன்னெழுத்துக்களில் மின்னும் படமாக நாயகன்… வேலு நாயக்கர் என்னும் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்தந்திருக்கும் உன்னத நடிப்பும் சரி… இப்பாடலில் சேற்றிலும்கூட விழுந்து புரண்டு எழுந்து நடக்கும் நடையிலும் சரி… முற்றிலும் புதிய கமலஹாசனை வடித்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் கேமராவில் பதிவான பவித்ரமான கலைப்படைப்பு என்னும் தகுதியை இந்தக் கூட்டணி பெறுகிறது!

    சந்தோஷம் என்பது சங்கீதத்தோடு சேரும் போது… வருகின்ற சந்தங்களைப் பாருங்கள்!

    சொந்தங்களோடு மகிழ்கின்ற காலங்கள் எப்போதும் இன்பங்களை முழங்குவதைக் கேளுங்கள்!

    புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாட்டுவரிகள்… இசையில் பவனிவரும்போது… இன்பத்தின் துள்ளல்கள் இந்தப் பாட்டு முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது!

    pulamaipiththan463ilayarajaSusheela131108_1cT L MAHARAJAN

     

    அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
    எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம்
    ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
    எங்கள் தெரு எங்கும் தேரோடும்
    தேரோடும் திரு நாளாகும்
    நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
    [அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]

    நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
    நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
    மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
    நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
    தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
    தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
    தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
    [அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]

    பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
    கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
    பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
    ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
    வீடுதோரும் மங்களம் இன்று வந்தது
    காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
    தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
    [அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]

    காணொளி: https://youtu.be/euICZmupFJ0

    Share
  • நினைவாஞ்சலி- ஜெயகாந்தன் அவர்களுக்கு

    நாகினி

    jayakanthan5

    இலக்கியப் பசியுள்ளவர்க்குப்
    புசிக்க ‘ஒரு பிடி சோறு’ தந்து
    ‘இனிப்பும் கரிப்பும்’ நிறைந்த
    புவி வாழ்வினில் ‘தேவன் வருவாரா’ யென
    ஏங்கும் ‘மாலை மயக்கம்’ உள்ள மாந்தருக்கு
    நொடிதோறும் வாசிக்கும் ‘யுகசந்திப்பு’ டன்
    சமூக அவலமெனும் ‘உண்மை சுடும்’ என
    ‘புதிய வார்ப்பு’களாய் இலக்கியமொழி பகர்ந்து
    ‘சுய தரிசனம் ‘ தந்தீரே ஐயா!

    ‘இறந்தகாலங்களி’ல் நடந்ததை மறக்க
    ஆசானாய் ‘குருபூடம்’ ஏறி
    வாழ்வியலில் துயர் ‘சக்கரம் நிற்பதில்லை’யென்றாலும்
    பொறாமை பகையாம் ‘புகை நடுவினிலே’
    ‘சுமை தாங்கி’யாய் வாழ்ந்திட உரைத்தி ன்று
    காலன் விளையாட உயிர்க்கூடு விட்டு
    ‘பொம்மை’ஆகி விண்ணுலகு சென்றதேனோ ஐயா!

    அடைப்புக் குறியிலுள்ளவை அனைத்தும் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதை தொகுப்புகள்..

    .. நாகினி

    Share
  • கவிதாஞ்சலி.. நாகூர் ஹனீபா அவர்களுக்கு

    நாகினி

     

    சிம்ம இசை முரசுக்கேன் உறக்கமின்று
    சிந்திய வெங்கல மணியோசை நின்று
    சிந்தாமல் சிதறாமல் இசைமுரசு
    சிகரத்தின் மூச்சைக் காலன் கவர்ந்தானா!

    இஸ்லாத்தின் புகழ் பாடினீரோ
    இயக்கத்தின் வழி நின்றீரோ
    இயங்கா இதயம் கொண்டி ன்று
    இன்ஸா அல்லாவுடன் கலந்தீரோ!

    இறைவனிடம் கையேந்துகின்றோம்
    இசை சிங்கத்தைத் தந்திடென்று
    இரக்கத் துடன் உயிர்ப்பிச்சை கேட்டும்
    இறைவன் எடுத்தவுயுர் தருவதற்கிலை என்றானே!

    இறைஞ்சும் பிள்ளைகளைத் தவிக்க விட்டேதான்
    இவ்வுலகு விட்டு விண்ணு லகில்
    இசை அரங்கேற்ற நாள் குறித்த
    இறையோன் கைபிடித்துச் சென்றீரே!

    சீக்கிரம் விண்ணுலகு விட்டு
    சிம்மக்குரல் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு
    சிந்தையில் ஒன்றுபட்டு மத பேதமற்ற
    சிவந்த கண்ணீரால் வணங்குகின்றோம்! வாரும் ஐயா!

    … நாகினி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    பெற்றுக்கொள் வெற்றிக்கண் சுற்றிநிற்கும் சூதினை,
    இற்றைக்குன் பாணம் எரிக்கட்டும், -நெற்றிக்கண்
    EYEயிருக்கு, கையிருக்கு, அய்யனென் கீதையால்,
    ‘I’யழித்து நூறழிப்பாய் ஐந்து ….கிரேசி மோகன்….

    இற்றைக்குன் -இன்றைக்கு உன்

    Share
  • மீராவும் மொஹம்மது ஆரிஃபும்

    நிர்மலா ராகவன்
    `கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’
    மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல், படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் மீரா. மூச்சை அடைத்தது. தலைமாட்டில் இருந்த கொசுவர்த்தியைச் சற்று தூரத்தில் வைத்தாள். ஆனாலும், இறுக்கம் தணியவில்லை.
    இருள் அறவே பிரியாத காலைப்பொழுதில், பள்ளிக்கூடம் ஆரம்பிக்க முக்கால் மணி இருக்கையில், அவளிடம் கேட்கப்பட்ட கேள்வி அது. இப்போது, இந்த இரவு வேளையில் மீண்டும் முளைத்து, பாடாய் படுத்துகிறது!
    “குட் மார்னிங், மீரா!”
    வழக்கம்போல், காண்டீனில் தனியே அமர்ந்து பசியாறிக் கொண்டிருந்தாள் மீரா. தேங்காய்ப்பாலில் வேக வைத்த சாதத்துடன், தனித்தனியே பொரித்த நிலக்கடலை, உறைப்பான `ஸம்பல்’(sambal) என்ற சட்னியுடன் நஸி லெமாக் (nasi lemak). மலாய்க்காரர்களின் உணவு. சீனக் கடை முதலாளி ஆ சேக் (சீன மொழியில் மாமா) தயாரித்திருந்தார்.
    எதிரில் வந்தமர்ந்த சக ஆசிரியர் மொஹம்மது ஆரிஃபைக் கண்டதும் புன்னகைத்தாள்.
    “சீக்கிரமே வந்திருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தாள்.
    தனக்குத்தான் வீட்டில் யாருமில்லை. வீட்டில் தானே கறிகாய் நறுக்கி, சமைத்து, சாப்பிட்டபின் பாத்திரம் கழுவும் வேலையாவது மிஞ்சுமே என்று வெளியில் சாப்பிடுகிறோம்.
    குடும்பஸ்தராகிய இவருக்கு என்ன தலையெழுத்து, சீனிப்பாகாய் இனிக்கும் இந்தக் கோப்பியைக் குடித்துத் தொலைக்க வேண்டும் என்று! (ஆ சேக்கிடம் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார், `அதான் சீனிப்பால் போட்டு கலக்கறீங்களே! எதுக்கு ரெண்டு ஸ்பூன் சீனி வேற!’ என்றால். அவர் மனைவி மாக் சிக் (மாமி) மைமூனா கணவருக்குப் பரிவாள்: `கோப்பின்னா இனிப்பாத்தான் இருக்கணும்!’
    (ஆ சேக் மலாய்க்காரியை மணந்து, மதம் மாறி, தன் பெயருடன் பின் அப்துல்லா — கடவுளின் மகன் — என்று இணைத்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் சமையல் `ஹாலால்’ என்ற உறுதி இருந்தது).
    சற்று மௌனமாக இருந்து, எதையோ யோசித்த அந்த ஆசிரியர், “நேத்து ஒங்க கதையை தமிழ்நேசனில படிச்சேன். என்னென்னமோ எழுதறீங்களே! என்னைப்பத்தியும் எழுதறது!” பாதி உண்மையும், பாதி வேடிக்கையுமாகக் கேட்டவரை உற்சாகமாக நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
    இருவருக்குமே தமிழ்தான் தாய்மொழி என்பதால், அவருடன் பேசுவதே உற்சாகமாக இருந்தது. “எழுதிட்டாப் போச்சு! இப்பவே ஒங்களை ஒரு பேட்டி எடுத்துடறேன்!”
    எப்போதும் அமரிக்கையாக, வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருக்கும் இவளுக்குக் கண நேரத்தில் எப்படி குழந்தைபோல் இவ்வளவு உற்சாகமாக மாற முடிகிறது! வியப்புடன் அவளை நோக்கியவருக்கு, அந்த அகன்ற விழிகளினின்றும் தெறித்த தீவிரத்தைக் கண்டு பயம் பிடித்துக்கொண்டது.
    “பேட்டியாவது! நீங்க ஒண்ணு! இப்ப போய், பரீட்சைப் பேப்பர் திருத்தியாகணும் நான்!” எழுந்திருப்பதுபோல் பாவனை காட்டினார்.
    “அதெல்லாம் முடியாது. நீங்கதான் இந்தப் பேச்சை ஆரம்பிச்சீங்க! இப்ப விடமாட்டேன்!”
    சூடான பானத்தை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டார். “பேட்டின்னா.. என்ன சொல்லச் சொல்றீங்க?”
    “ஒங்களால மறக்க முடியாதது ஏதாவது!  குறிப்பா, ஒங்க மனைவிகிட்டகூட சொல்ல முடியாதது!” மேல்நாட்டுக் கதாசிரியர் ஒருவர் இந்த உத்தியால் பல கதைகள் கிடைக்கும் என்று கூறியிருந்ததை அவள் படித்திருந்தாள்.
    அவளுடைய அசாதாரணமான கலகலப்பு அவரை மேன்மேலும் கலக்கத்திற்கு உள்ளாக்கியது. `இவளைத் தன் போக்கிற்கே விடக் கூடாது!’ என்று அவரது ஆண்மை முறுக்கேற்றியது. “என் அந்தரங்கத்தை எல்லாம் ஒங்ககிட்ட எதுக்கு சொல்லணும்?” வார்த்தைகளில் இருந்த கடுமை குரலில் இல்லை.
    “என்ன ஸார், நீங்க! ஒங்களைப்பத்தி எழுதச் சொல்லி நீங்கதான் கேட்டீங்க. இந்த அஞ்சு வருஷத்திலே ஒங்க தனிப்பட்ட வாழ்க்கையைப்பத்தி நான் ஏதாவது கேட்டிருப்பேனா? அதோட..,” சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தாள். “யாருக்குள்ளேயுமே ஒரு ரகசியம் இருக்கும். அதை எவர்கிட்டேயாவது சொல்ல மாட்டோமான்னு துடிச்சுக்கிட்டு இருப்போம். இது மனித சுபாவம்!”
    முகம் வெளிறிப்போய், எதிரிலிருந்தவளின் கண்ணில் எதையோ தேடினார். மீராவும் ஒருவித உணர்ச்சியும் காட்டாது, இமைக்கவும் செய்யாது, அப்பார்வையை எதிர்கொண்டாள்.
    சில நிமிடங்கள் இப்படியே கழிந்தன. இறுதியாக, “கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டார்.
    தன் காதில் விழுந்ததை நம்ப முடியாது, அவரை வெறித்தாள் மீரா.
    கேள்வியைச் சற்று மாற்றிக் கேட்டார் மறுமுறை. “ஒங்களுக்குத் தெரிஞ்ச பெண் யாராவது.. இல்லே, நீங்களே இப்படி..?”
    தன்னெதிரில் அமர்ந்துகொண்டு, சர்வ உரிமையாக, கேட்கக்கூடாத ஒரு கேள்வி கேட்பவர், அனைவரிடமும் பண்பு குறையாமல், மென்மையுடன் பழகுபவர், பெண்களைக் கேவலமாக எடைபோட்டு நடத்தும் பெரும்பாலான ஆண்களைப்போல் அல்லாதவர் என்ற காரணத்தால் மீரா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
    அவள் முகத்தில் பதித்த நயனங்களை சிறிதும் விலக்கவில்லை மொஹம்மது ஆரிஃப். கண் சிமிட்டவும் மறந்தார்.
    சிறியதாக அரிந்திருந்த வெங்காயத்தை எண்ணையில் பொறிக்கும் வாசனை மூக்கின்வழி வயிற்றிலும் கிளர்ச்சி செய்ததை உணரும் நிலையில் இல்லை அவ்விருவருமே.
    அச்சமயம் தலைமை ஆசிரியர் துவான் ஹாஜி காண்டீனுக்குள் நுழைவதைப் பார்த்துவிட்ட ஆரிஃப், கண்ணால் மீராவிடம் சமிக்ஞை காட்டி, “அப்பப்பா! சகிக்கலே இந்த எண்ணைப் புகை!” என்று தொண்டையைச் செருமியபடி எழுந்தார்.
    காலையில் நடந்த இந்த நாடகத்தை வேலை மும்முரத்தில் அவள் மறந்திருந்தாலும், இரவின் தனிமையில் காதில் விழுந்திருந்த ஒவ்வொரு கேள்வியும் மேலெழுந்து பயமுறுத்தின.
    `கல்யாணமான ஒருத்தன்..?’
    `ஒங்களுக்குத் தெரிஞ்ச பெண் யாராவது.. இல்லே, நீங்களே..?’
    தன்னையும் அறியாது உரக்கக் கூவினாள். “பொறுக்கி!”
    இனி தூங்குவது எங்கே!
    உடல் அயர்ந்திருந்தாலும், உணர்வுகள் ஓய மறுத்தன. அவள் தற்செயலாகக் கவனித்து, சிலவற்றை உடனுக்குடன் மறந்திருந்தாலும், கண்டு, கேட்டு, அனுபவித்திருந்த எல்லாவற்றையுமே அச்சுப்போல் தன்னுள் பதித்து வைத்துக் கொண்டிருந்த ஆழ்மனம் விழித்தெழுந்தது.
    மேசை விளக்கைப் பொருத்தினாள். தயாராக வைத்திருந்த காகிதத்தில் பேனா ஓடியது.
    சிறு வயதிலிருந்து மீரா பார்த்துப் பழகியிருந்த ஆண்கள் — அப்பா, அண்ணா, அக்காளின் கணவர். எல்லாருமே ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகள்.
    அப்பா — பெண்ணுக்கென தனியாக ஒரு மனம், அதில் உணர்வுகள் இருக்கலாம் என்பதையே மறுப்பவர். பிள்ளை பெறுவதைத் தவிர, வேறு எதற்குமே லாயக்கில்லாதவள் பெண் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.
    ஆறு ஆண்பிள்ளைகளை மனைவியின் கருவாகக் கொடுத்து விட்டதாலேயே தான் தனது ஆண்மைத்தனத்தை நிலைநாட்டிக்கொண்டு விட்டதாகப் பெருமிதம் கொண்டவர். இதைத் தவிர வேறு எந்தப் பெருமையும் இல்லாதவர்.
    அண்ணா– அப்பாவின் சின்ன அச்சு. மனைவி இன்னும் வராத நிலையில், உடன்பிறந்தவளை அடிமையாக நடக்க முயன்று, அவள் எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடியாது, ஆத்திரம் அடைந்தவன்.
    மாமா — நாற்பது வயதுக்குமேல் ஆகிவிட்ட அக்காவுக்குக் கவர்ச்சி போய்விட்டதாலோ, அல்லது வளர்ந்துவிட்ட பிள்ளைகள் வீட்டில் இருக்கையில், மூடிய கதவு வழங்கும் அந்தரங்கத்தில் தான் மனைவியுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது கேவலம் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பின்படியோ, துறவியாக வாழ முயன்றவர்.
    அம்முயற்சியில் தோல்வியுற்று, மனதையையும், உடலிச்சையையும் கட்டுப்படுத்த வழி தெரியாது, உடல் வளர்ந்திருந்தாலும், விவரம் புரியாத இளம்பெண்களைப் பேச்சாலும், பரிசுப் பொருட்களாலும் முதலில் கவர்ந்து, பின்னர் தன் காமத்திற்கு வடிகாலாக்க முயன்றவர். மீரா அவரிடமிருந்து தப்பித்து வந்தவள்.
    ஆண்கள்மீதே தீராத வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மீரா வளர்த்துக்கொள்ள இவர்கள் மூவருமே காரணமானார்கள்.
    ஆண்டாண்டு காலமாக, தன் உணவு, உடைக்குப் பிறரைத்தான் நம்ப வேண்டும் என்ற நிலையில் இருந்து வந்திருப்பதால்தானே பெண்கள் ஆணுக்கு அடிமையாகவே இருந்திருக்கிறார்கள்?
    இந்த உண்மையை அலசி உணர்ந்ததும், அவளுக்குள் உறுதி பிறந்தது.`நான் எவர் கையையும் எதிர்பார்த்து வாழமாட்டேன். ஆணைப் படைத்த கடவுள்தானே என்னையும் படைத்தார்? அப்படியானால், நான் மட்டும் எப்படித் தாழ்ந்தவள் ஆவேன்?’
    இவ்வாசகத்தை ஒரு காகிதத் துண்டில் எழுதி, தன் அறைக்  கதவில் ஒட்டி வைத்தாள். தினந்தோறும் அதையே பார்த்து வந்ததில், அப்பொருள் அவள் மனதில் பதிந்து, நிமிர்ந்த நடையும், நேர்ப்பார்வையும் கொண்டவளாக மாறினாள்.
    ஆயிற்று. சுமார் இருபது ஆண்டுகளாக ஆண்களின் தொடர்பே அதிகமில்லாத ஒரு பாதுகாப்பான உத்தியோகம்.
    அந்த கம்பத்திலிருந்த ஒரே இடைநிலைப் பள்ளியில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படித்தார்கள். (கம்பம் என்ற வார்த்தை kampong  என்பதன் தமிழாக்கம். சட்டப்படி, மலாய்க்காரர்களன்றி வேறு இனத்தவர் அங்கு குடிபுகவோ, நிலம் வாங்கவோ இயலாது).
    பள்ளி நிர்வாகிகள் அந்த இருபாலரின் அருகாமையும் அவர்களுக்குக் கேடு விளைவித்து விடுமே என்ற அச்சத்துடன், ஏதேதோ விதிமுறைகளை வகுத்தார்கள்.
    விளையாட்டு நேரத்தில், மாணவிகள் தனி குழுவாகப் பிரிந்தனர். அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒரு ஆசிரியை. அவளுக்கு விளையாட்டுகளைப்பற்றி எதுவும் தெரியாது என்றாலும், அவளும் பெண்தான் என்ற தகுதியே முக்கியமாகக் கருதப்பட்டது.
    வகுப்பிலும், ஆண்கள் முன் இருக்கைகளில் அமர்த்தப்பட்டார்கள். ஆசிரியர்களுக்குச் சொல்லப்பட்ட காரணம்: பெண்களின் உருண்டையான பின் பகுதி, அந்த இளம் வயதில் அவர்கள் மனதைச் சலனப்படுத்திவிடும்!
    காரணத்தை அறியாத பையன்களோ, தாம் மிகவும் மேலான பிறவிகள் என்று கர்வம் எழ, பெண்களைத் துச்சமாக நடத்த ஆரம்பித்தார்கள்.
    `கரும்பலகை தெரியவில்லை. உயரமான மாணவர்களின் தலை மறைக்கிறது!’ என்ற மாணவிகளின் முனகல் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள், கேவலம், பெண்கள்தாமே!
    ஆனால், மீரா என்னவோ, பதின்ம வயதுப் பையன்களை குழந்தைகளாகத்தான் பார்த்தாள். அவர்களுடைய களங்கமில்லாத அன்பும், புதிதான எதிலும் அவர்கள் காட்டிய ஆர்வமும் அவளையும் தொற்றிக்கொண்டன.
    நல்லவேளை, கண்டவர் மயங்கும் கட்டழகியாகக் கடவுள் தன்னைப் படைக்கவில்லையே என்ற அற்ப திருப்தி ஏற்படுமே முன்பெல்லாம்! அதுவும் முதல்நாளிலிருந்து குலைந்து போயிற்று.
    தான் இன்னும் இளம்பெண் அல்லவே, தான் சந்தித்திருந்த பிற ஆண்களைவிட வித்தியாசமாக இருக்கிறாரே என்று சமவயதினரான ஆரிஃபுடன் நட்புரிமையுடன் பழகியதை அவர் இப்படி விகற்பமாக எடுத்துக்கொண்டு விட்டாரே!
    நினைக்க, நினைக்க மனம் அடங்கவில்லை மீராவுக்கு.
    ஒரு வேளை, `பெண் என்ற ஒரு உருவம் இருந்தாலே போதும், அழகு, வயது இதையெல்லாம் பற்றி என்ன கவலை!’ என்று நினைக்கும் ஆண்கள்தாம்  அதிகமோ?
    தோன்றியவற்றை எல்லாம் எழுத்து வடிவில் கொண்டு வந்ததில், மனச் சுமை குறைந்து, சிறிது விடுதலை பிறந்தது.
    `இரவு பூராவும் கண்விழித்து எழுதினால், நாளைக்கு வகுப்பில் குரலே எழும்பாது. தலை வேறு கனக்கும்!’ என்று அனுபவம் நினைவுறுத்த, பேனாவைக் கீழே பத்திரமாக வைத்தாள் மீரா.
    தலைக்குமேல் நீட்டிய கைகளைக் கோர்த்துக்கொண்டு, சிரம பரிகாரம் செய்துகொண்டாள். கொட்டாவி வந்தது.
    கண்ணயருமுன், `அது எப்படி என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டீர்கள்?’ என்று அந்த மனிதரை உலுக்கி எடுத்துவிட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.
    மறுநாள் காலையும் சீக்கிரமாகவே வந்து சேர்ந்தார் மொஹம்மது ஆரிஃப்.
    முன்பெல்லாம் மணியடிக்கும்போதுதான் அவரது மலேசிய, புரோட்டான் வீரா காரும் உள்ளே நுழையும் என்பது நினைவிலெழ, கசப்பாக இருந்தது மீராவுக்கு. தன்னைப் பார்த்துப் பேசவே வந்திருப்பாரோ?
    “குட் மார்னிங், மீரா!” நேரே வந்து, அவளெதிரே அமர்ந்துகொண்டார்.
    சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அதற்கு மேலும் பொறுக்க முடியாதவளாய் கேட்டாள்: “நேத்து கேட்டது.. மறைமுகமா ஏதோ செய்யலாம்னு என்னைத் தூண்டவா?”
    `நம் இருவருக்கிடையே நடந்த விஷயம். அது நம்மைத் தவிர, வேறு எந்த நிலையிலும், எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது’ என்ற எச்சரிக்கை மிக, அவள் குரல் தாழ்ந்திருந்தது.
    அவளை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தன் பார்வையை நிலத்தில் பதித்தார். முகம் சுருங்கியது. “இல்லே. நான் செய்த தப்பை ஒத்துக்கிடறதுக்கு!” பதிலும் ரகசியக் குரலில் வந்தது, தான் பேசுவது தன் காதுகளுக்கே எட்டிவிடுமோ என்ற பரிதவிப்புடன்.
    மீரா அடைந்த அதிர்ச்சியில், அப்போது புரிந்த உண்மையில், அவளது பார்வை இன்னும் தீர்க்கமாகியது.
    சே! கதைக்கு கரு கிடைக்குமே என்ற என் சிறுபிள்ளைத்தனமான ஆசையில், இந்த நல்ல மனிதரை எவ்வளவு கேவலப்படுத்திவிட்டேன்!’ மீரா பதைபதைத்துப் போனாள். கூடாது. தன்னைப்போல் எப்போதும் நிமிர்ந்த தலையும், நேர்ப்பார்வையும் கொண்டவர் இப்போது தலை கவிழ்ந்து இருக்கக் கூடாது.
    “ஒங்ககிட்ட எது வேணுமானாலும் சொல்லலாம்னு தோணிச்சு. அதான் அப்படியெல்லாம் கேட்டேன் — ஒங்களை மொதல்ல பரீட்சை செய்யறதுக்கு!”
    யாரோ தன் நெஞ்சில் உதைத்ததுபோல் உணர்ந்தாள் மீரா. `நான் போலி!’ உள்ளுக்குள் அழுதாள்.
    `ஒருத்தர் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதுக்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கும். அவங்களோட  நிலையில நம்மை வைச்சுப் பாத்தா, எதையுமே நம்மால ஏத்துக்க முடியும். யாரையுமே கெட்டவங்களா நினைக்கத் தோணாது!’என்று தான் அடிக்கடி பிறரிடம் சொல்லி வந்ததை எப்படி மறந்துபோனோம்!
    தவறு செய்வது மனித இயல்பு. அத்தவற்றை ஒத்துக்கொள்ளும்போதே ஒருவருக்கு மன்னிப்பு கிட்டிவிடாதா? இத்தகைய உத்தமரை எவ்வளவு கேவலமாக எடை போட்டுவிட்டோம்!
    அவர்களிருவரும் தத்தம் எண்ணச் சுழலில் சிக்குண்டு இருக்கையில், காண்டீனில் இருந்த அந்த சிறிய அறைக்குள் நுழைந்தார் தலைமை ஆசிரியர்.
    அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில், அதுவும் அந்தரங்கமாக ஏதோ பேசியதால் ஏற்பட்ட நெருக்கத்துடன் அவர்கள் அமர்ந்திருப்பதை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் கடுகடுப்பான முகமே காட்டியது.
    “என்கூட கொஞ்சம் வர்றீங்களா?” என்று அடக்கிய குரலில், மலாய் மொழியில் பணித்தவர், தாம் வந்த காரணத்தை மறந்தவராக வெளியே நடந்தார்.
    “இதுவரைக்கும் அவங்களைப்பத்தி ஒருத்தரும் ஒரு வார்த்தை கெட்டதாகப் பேசியதில்லை”. மீராவின் பெயரைக் குறிப்பிட விரும்பாதவராய் பேசினார் தலைமை ஆசிரியர். “நம்ப நடத்தையால மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய நாமே..!” அருவருப்புடன் தன் தலையை இரு பக்கமும் ஆட்டினார்.
    வெளிறிய முகத்துடன்  மொஹம்மது ஆரிஃப் பள்ளி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.
    தனது மென்மையான சுபாவத்தைப் பலகீனமாக எடுத்துக்கொண்டு பழித்த மனைவியிடமிருந்து மனத்தளவில் விலகிப்போன  நிலையில், ஆத்திரத்தையும், சிறுமை உணர்ச்சியையும் அடக்க வழி தெரியாது, வேறு ஒருத்தியோடு சில காலம் தொடர்பு வைத்துக் கொண்டுவிட்டு, `இது தகாத செயல்!’ என்று மனச்சாட்சி இடித்துரைக்க, அந்த உறவைத் துண்டித்துக்கொண்டு இருக்கலாம்.
    ஆனாலும், குற்ற உணர்வை ஏற்கவோ, மறக்கவோ முடியாது, மனோபலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வந்த தருணத்தில்தானே மீரா, கடவுளே மனித உருவில் வந்தமாதிரி, அடிமட்டத்தில் கனன்று கொண்டிருந்த அந்த ரகசியத்தைக் கிளறினாள்?
    அவளுக்கா அவப்பெயர்! அதுவும் தன்னால்?
    ஒரு மாதம் சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டுவிட்டு, அதற்குப்பின், தன்னிடம்கூடச் சொல்லாமல், வேறு பள்ளிக்கு மாற்றிப் போக அந்த நல்லவர் முடிவெடுத்தது மீராவுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.
    Share
  • இடி விழுந்தது போல் இரண்டு செய்திகள் இரவில் வந்தன!

    நண்பர்களே, மிகுந்த வருத்தத்தோடு இப்பதிவினை உங்கள் கண்கள் முன் நிறுத்துகிறேன்!

    unnamed

    இறப்பு மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது; இன்னும் சொல்லப் போனால், இருப்பை இறுதி செய்வதே இறப்பு என்று சொல்லுவேன். ஆனால், என்னவோ என் இனம் மட்டும், ஒவ்வொரு இறப்பையும் ஒரு வெற்றிடமாக்குகிறதே என்பது தான் என் மன வேதனைக்குக் காரணம்!
    என்ன சொல்ல? இடி விழுந்தது போல் இரண்டு செய்திகள் இரவில் வந்தன! இனிவரும் ஆண்டுகள் இருளில் மூழ்கும் அளவிற்கு அச்செய்தியின் தாக்கம், தமிழினத்திற்கு இருக்கும் என்பதில், இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது!

    செய்திகள் கேட்டவுடன், செவிகளில் ரீங்காரமிடுவதே, இறைவனிடம் கையேந்துங்கள் எனும் பாடல் வரிகள்தான்! மீண்டும், மீண்டும், மாண்டவர் மீண்டு வர என் மனம் ஏங்கும் நிலையில் இருக்கிறது நண்பர்களே! இந்தக் குரலையெல்லாம், உணர்வோடு ரசித்த கடைசிச் சமுதாயம் நாம் என்பது என் வயது ஒத்தவர்களுக்கு நன்கு புரியும்!

    மதங்களைத் தாண்டி மானுடம் வரம் கேட்ட பாடல் வரிகள்தான்

    ‘இறைவனிடம் கையேந்துங்கள்……
    இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
    இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்………

    எவ்வளவு அற்புதமான வார்த்தைகளைத் தன் குரலால், தமிழ் பேசும் உள்ளங்களுக்குக் கொண்டு சென்றவர்!

    அன்னாரின் ஆன்மா, இறைவனின் நிழலில் இளைப்பார, மண்டியிட்டு வேண்டுகிறேன்!

    அடுத்து எழுத்துலகக் கண்ணதாசன் என்பேன் இவரை! வீரத்தின் விளை நிலம்! பேனா முனையும் ஒருவனைக் கொல்லும் என்றால், அது ஜெயகாந்தன் எனும் மை கொண்டு, எழுதி இருக்க வேண்டும்! தனக்குச் சரி என்று பட்டதை, எதிரியின் இதயத்தைத் துளைக்கும் அளவுக்கு, எழுத்தால் ஈட்டி கொண்டு எறியும் போராளி!

    இதையெல்லாம் மிஞ்சியது அவர் தன்மானம்! எழுத்தாளன் எனும் இறுமாப்பு! தமிழ்த்தாயின் கிரீடம் அலங்கரித்த எவனுக்கும் இருக்கும் கர்வம்தான், அவருக்கும் இருந்தது என்பேன்! சர்ச்சைகளின் உச்சத்திற்கே செல்பவர். இன்னும் என்ன சொல்ல?

    இவை இரண்டும் தனி மனித இழப்பல்ல! தமிழின் இழப்பு! நண்பர்களே, சற்று சிந்தியுங்கள் நம் தற்கால வாழ்வின் முறையை! நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும்!

    இவர்களுக்கு இணையாக, கடந்த 30 ஆண்டுகள் எவரையேனும் தந்திருந்தால், நாம் குறைந்த பட்சம், நம் தலைமுறை நிமிரும் என அமைதி கொள்ளலாம்! அது இல்லையே என்ற வருத்தம் என்னை நடுங்க வைக்கிறது!

    இறப்பே உன்னிடம் கெஞ்சுகிறேன்
    என் சமூகம் விழித்தெழும் வரை
    எஞ்சியிருக்கும் சொச்சம் பேரையாவது
    விட்டுவை என்று!!

    இன்று ஒரு கருப்பு நாள் எனக்கு!
    என் கண்ணீர் என் சென்னீரில் கலந்தது போல், ஒவ்வொரு தமிழனின் சென்னீரிலும் கலக்கட்டும்!

    வருத்தத்துடன்,
    சுரேஜமீ

    Share
  • சாகாவரம் பெற்ற சங்கத் தமிழன் ஜெயகாந்தன்!

    மெய்யன் நடராஜ்

    jayakanthan5
    சாகா வரம்பெற்ற சங்கத் தமிழன்னை
    ஆஹா எனப்புகழும் அற்புத – மீகாமன்
    கடலூர் பிறந்து கதைநாவல் எல்லாம்
    சுடச்சுடத் தந்தச் சுடர்.

    எழுத்தென்னும் காந்தம் இவருள் நிறைந்து
    இழுக்கின்றத் தன்மை படைக்க –அழுத்தமாய்
    நாவல் சிறுகதை நற்றமிழ் மக்களுக்காய்
    ஆவலாய் படைத்த ஜெயம்.

    கருதிய எண்ணம் கலைவண்ணம் ஆக்கி
    தருவதில் ஓங்கித் திளைத்து – விருதுகள்
    தொட்டு விளையாடி வந்தே விடைபெற்றார்
    விட்டுப் எமையும் பிரிந்து.

    இலக்கிய வானின் எழுவான் மறைவால்
    உலுக்கிய நெஞ்சில் துயரம் – நிலவ
    அவரின் பிரிவிற் கிரங்கல் இதய
    சுவரிலே கண்ணீர் வரி!

     

    Share
  • “ஜெயகாந் தன்நும் புகழ்வாழி”

    மீ.விசுவநாதன்

    images

    கடின உழைப்பால் மேலேறி
    கதைகள், கவிதை, படங்களெனப்
    பிடித்த இடமோ பேரிடம்தான் !
    சிக்குப் பிடித்த வாழ்க்கையினைப்
    பிடித்த பேனா முனையாலே
    பிரகா சமாக்க உதவியவர் !
    முடித்த செயல்கள் எண்ணிடவே
    முடியா ஜெயத்தின் காந்தனவர் !

    உயர்ந்த சிந்தை கொண்டதனால்
    உணர்ந்த மந்திரச் சொல்லாலே
    அயர்ந்து கிடந்த மக்களினை
    அன்பாய்த் தூக்கி நிறுத்தியவர் !
    நயந்து செய்த அவர்படைப்பு
    நாட்டை நிமிர்த்த உதவியது ;
    வியந்து வணங்கி நினைக்கின்றேன்
    “ஜெயகாந் தன்நும் புகழ்வாழி !”

    (09.04.2015)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”இருமரங்கள் சாய உரலிழுத்தோன் இன்று,
    சிறுமருங்குல் சாய சமிஞ்ஞை, -ஒருமூங்கில்,
    வாயிலாய் ராதை வரவுக்காய் ஊதுகிறான்,
    தாயிலாத போதுகா தல்’’….கிரேசி மோகன்….

    Share
  • வைகாசி விசாகம்….

    PAZANI....1111....

     

    தைபூச நாயகன், கைபேசும் வேலோடு,
    மைபூசும் வள்ளி மணவாளன், -வைகாசி
    நன்நாள் விசாகத்தில் நீலமயில் ஏறியுலா,
    தென்பழனி விஞ்ச்சில் தவழ்ந்து ….கிரேசி மோகன்….

    Share
  • வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் !

     எம்.ரிஷான் ஷெரீப்

    In_Our_Translated_World_Tamil_poems_English_Collection

                தமிழ், ஒரு வாசனையைப் போல உலகம் முழுவதும் பரந்துள்ள மொழியாகவிருக்கிறது. உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் ஏதோவொரு மூலையிலாவது எவராவது ஒருவர் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வரட்சி மிகுந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஆபிரிக்க மக்கள், ஏதேனுமொரு செழுமை மிக்க பிற தேசத்துக்கு புலம் பெயர நேருமிடத்து அங்கும் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பாவிப்பதைப் போல, தமிழ் மொழியைப் பேசுபவர்களும் தாம் வாழ நேரும் நிலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனமாகவேனும் தமிழைப் பேசியும், எழுதியும் அம் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

                உலகம் முழுவதுமான தமிழ் மொழியின் பரவலுக்கு, தமிழ் பேசும் மக்களின் புலம்பெயர்தலே காரணமாக இருக்கிறது. தொழிலின் நிமித்தமோ, யுத்தத்தின் பலிகடாக்களாகவோ, வேறு தேவைகளுக்காகவோ தம் பூர்வீக இடங்களை விட்டும் புலம் பெயரும் தமிழ் பேசும் மக்கள் தம் உயிரோடு இரண்டறக் கலந்த மொழியையும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று எம் மொழியைக் கற்றாலும் தமிழ்தான் அவர்களது சிந்தனை மொழியாக இருக்கிறது.

    2242            பண்டைய காலம் தொட்டு, நம் மூத்த குடிகளின் மொழியான தமிழைப் பேணிப் பாதுகாப்பதில் அவர்களது காப்பியங்களும், இலக்கியங்களும் பெரும்பங்காற்றியிருப்பதை மறுப்பதற்கில்லை. அச் செல்வங்கள் இல்லையெனில், புராண தமிழின் பெருமையைக் கூறும் சான்றுகள் ஏது? எனில், அவற்றைப் பாதுகாத்து இந் நவீன காலத்துக்குக் கொண்டு தந்த அப் பெருந் தகைகளை எவ்வாறு மறத்தலோ, மறுத்தலோ தகும்?

                அனைத்தும் நாகரிக மயமாகி விட்ட இக் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறும், இலக்கியங்களும், தமிழ் மொழி மூலமான படைப்புக்களும் உலகம் முழுவதும் பரவி விட்டபோதிலும், வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடத்தில் தமிழ் மொழி இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அம் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயாகும். இந்த இடத்தில்தான் எழுத்தாளர்களுக்கு ஈடாக, அவர்களது படைப்புக்களை ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களும், அம் மொழிபெயர்ப்புக்களைத் தொகுத்து உலகம் முழுவதும் வாழும் வேற்று மொழி மானிடருக்குக் கொண்டு சேர்ப்பவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். உலகம் போற்றும் அவர்களது செயல் பெரும் மதிப்புக்குரியதாகிறது.

                சர்வதேசமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்க்கும் நோக்கோடு 2001 ஆம் ஆண்டு பலரது ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாகத் தோற்றம் பெற்றதுதான் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம். இத் தோட்டத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்கள், அரிய தமிழ் நூல்களின் மீள்பதிப்பு, திறமையானவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தலும், கௌரவித்தலும், இலவச தமிழ் நூல் வினியோகம் எனப் பல விளைச்சல்கள் வெற்றிகரமாக நடந்துகொண்டேயிருக்கின்றன.

                அவற்றுள் மற்றுமொரு பெறுமதிமிக்க விளைச்சலாக, அண்மையில் காலமான  பேராசிரியர் திரு.செல்வா கனகநாயகம் அவர்களது முயற்சியின் பேரில், கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் வெளிவந்துள்ள தமிழ்க் கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எம்.எல்.தங்கப்பா, அனுஷியா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘In Our Translated World’ என ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ ஒரு முழுத் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளமையானது, இங்கு பெரிதும் பாராட்டத்தக்கது. ‘தமிழ் இலக்கியத் தோட்ட’ வெளியீடாக வெளிவந்த இத் தொகுப்பினை வெளியிடும் அனுமதியைப் பின்னர் பெற்ற இந்திய ‘விகடன்’ பதிப்பகம், இன்னும் பல பிரதிகள் அச்சிட்டு, மலிவு விலையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

                கடந்த முப்பது வருடங்களில் தமிழில் பல ஆயிரக்கணக்கான கவிதைகள் அச்சு ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் சிரமமான விடயம் என்பதோடு பரந்த அர்ப்பணிப்பும், உன்னிப்பான கவனமும், கவிதைகள் மீதான வெகுவான ஈடுபாடும் தேவைப்படும் பணியாகவிருக்கிறது. அதை மிகுந்த ஈடுபாட்டோடும் அக்கறையோடும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கமும் அவரது நண்பர்களும் செய்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘தமிழ் இலக்கியத் தோட்டத்துக்காக’ தொகுத்த, அதன் நிறுவுனர்களில் ஒருவரான அமரர் திரு. செல்வா கனகநாயகம் கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு மொழிபெயர்ப்பாளர். எனவே, வேறு சில மொழிபெயர்ப்புப் படைப்புக்களை வாசிக்கும்போது எழும் ஐயப்பாடுகளும், குழப்பங்களும், வார்த்தை மயக்கங்களும், பிசகுகளும் இத் தொகுப்பை வாசிக்கும்போது எழவேயில்லை. ஆங்கில மொழிபெயர்ப்போடு, அதன் மூலத் தமிழ்க் கவிதையும் அருகருகே அச்சிடப்பட்டிருப்பதால் தமிழ் வாசகர்களுக்கு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

                எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஆக்கங்களைப் படைப்பவர்கள் எனில், அப் படைப்புக்களை அவற்றின் மூலத்தோடு எவ்வித மாற்றமும் செய்யாது, இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதனை ஒரு தவம் போலவே செய்கிறார்கள். எனவே யதார்த்த வாழ்வியல், யுத்தம், நேசம், துரோகம், இயலாமை, இயற்கை, வன்மம், இழப்பு என மனித வாழ்வில் சந்திக்க நேரும் எல்லாமும் கொண்ட காத்திரமான எழுபத்தெட்டு தமிழ்க் கவிதைகளை, அவற்றின் செறிவும், உள்ளடக்கமும், சாரமும், அழகும் மாறாது இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதென்பது இலகுவான விடயமாக ஒருபோதும் இருப்பதில்லை.

                கடந்து சென்ற அண்மைய மூன்று தசாப்தங்கள் தமிழ் பேசும் மக்களிடத்தில் இலகுவாக மறக்கப்படக் கூடிய காலகட்டமல்ல. அக் காலகட்டத்துக்குள் வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் புதையுண்டு கிடக்கின்றன. எனவே இத் தொகுப்பிலுள்ள இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் பல யுத்தத்தின் துயரங்களையும், கண்ணீரையும் எடுத்துரைப்பவை. விடையற்ற வினாக்களாக நம் முன் வைக்கப்படுபவை. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் கவிதைகள் வாழ்வியல் பிரச்சினைகளின் வெவ்வேறான பரிமாணங்களை சித்தரிப்பவை. எல்லாக் கவிதைகளுமே ஒன்றுக்கொன்று வேறானவை. வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தை ஈர்ப்பவை. இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கவிதைகளுமே சர்வதேசமும் அறிய வேண்டியவை.

                உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள். இதனால் சமூக ரீதியிலும், கலாசார ரீதியிலும் தமிழின் செழுமை அரிதாகும் வாய்ப்பே மிகும். எனவே வரவேற்கத்தக்க இவ்வாறான தொகுப்புக்கள் தொடர்ந்து வெளிவருவதானது காலத்தின் தேவையாக இருக்கிறது. வரவேற்போம் !

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • குழந்தைகள் இல்லாத வாழ்க்கை

    நாகேஸ்வரி அண்ணாமலை

     images

    சென்ற வாரம் நியுயார்க டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ‘குழந்தைகள் இல்லாத வாழ்க்கை’ (அமெரிக்காவில் இப்போது cancer-free, fat-free என்று சொல்வதுபோல் child-free என்ற ஒரு வார்த்தையையும் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள்.)  என்ற ஒரு கட்டுரையைப் படித்தபோது இந்தியாவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் அதுவும் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டதும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பதும் ஞாபகத்திற்கு வந்தன.  தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் அவர்கள் இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்று அறிந்து இரு தரப்புப் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.  தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பெண்ணின் மேல்தான் பழி விழும்.  மருத்துவ ரீதியாகப் பெண்ணிற்குத்தான் நிவாரணம் தேடுவார்கள்.  இருவரையும் சோதித்துப் பார்ப்பதெல்லம் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறதோ என்னவோ சில தசாப்தங்களுக்கு முன்னால் கண்டிப்பாக இல்லை.

    எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் தன் மூத்த மருமகள் திருமணம் ஆகி ஆறு மாதங்கள்வரை கருத்தரிக்காமல் இருந்தபோது அவரைப் பலவாறாகத் துன்புறுத்திவிட்டார்.  கடைசிவரை அந்த மருமகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.  அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மருமகள்களையும் அந்த மாமியார் படுத்திய பாட்டைச் சொல்லி மாளாது.  திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்குளேயே அந்த டாக்டரைப் பார், இந்த டாக்டரைப் பார் என்று மருமகள்களை விரட்டிக்கொண்டிருப்பார்.  நல்ல வேளை மற்ற நான்கு மருமகள்களும் ஓரளவிற்கு சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.  குழந்தைகள் இல்லாவிட்டால் உடனேயே மருமகளைத்தான் – அதுவும் மாமியார்கள் – குறைசொல்வார்கள்.  மருமகளிடம் குறை கண்டே ஆக வேண்டும் என்று அலையும் மாமியார்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாத மருமகளைக் குறை கூறித் தீர்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அது அமைந்துவிடுகிறது.  வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரிதான்.

    கருத்தரித்த ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்ளப் பயப்பட்டதைப் பார்த்து என் பாட்டி, ‘இதில் பயப்பட என்ன இருக்கிறது?  உலகம் தோன்றியதிலிருந்து பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கூறிவிட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இன்னொன்றையும் கூறினார்.  ‘ரயிலிலோ பேருந்திலோ நாம் பயணம் செய்யும்போது நம் பக்கத்தில் இருப்பவர்கள் நம்மோடு உரையாடினால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கேட்பார்களேயொழிய எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்க மாட்டார்கள்’ என்றார்.  சில தலைமுறைகளுக்கு முன்னால் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள்.  அப்போது பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிழைப்பதில்லை.  அதனாலும் நிறையப் பெற்றுக்கொண்டார்கள்.  மேலும் கருத்தடைச் சாதனங்களும் புழக்கத்தில் இல்லை.  இப்போது காலம் மாறிவிட்டது.  இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

    எனக்குத் தெரிந்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்கள் இந்தியாவில் இல்லை.  (மனிதத் திமிங்கலங்கள் நிறைந்த இந்த உலகத்தில் என் குழந்தையை விட்டுச் செல்லவா என்று பயப்படும் தாய்மார்களும் இந்த உலகத்தில் இருக்கும் ஜனத்தொகை போதாதென்று இன்னொரு ஜீவனை இவ்வுலகிற்குக் கொண்டுவந்து ஜனத்தொகையை இன்னும் அதிகரிக்கவா என்று எண்ணும் தாய்மார்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.)   எங்கள் நண்பர் ஒருவர்தான், அவர் திருமணம் செய்துகொள்ளாமலே ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தபோது, ‘நான் திருமணம் செய்துகொள்வது பற்றியோ குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றியோ ஒரு போதும் நினைக்காத அளவிற்கு விவேகி’ என்று தன்னைத்தானே பெருமையாகப் பேசிக்கொண்டார்.  இவரை விட்டுவிடுவோம்.  இவர் ஒரு அதிநவீனவாதி (ultra modern)!  எல்லா ஜீவராசிகளிடமும் (தாவரங்கள் உட்பட) தங்களுடைய மரபணுக்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருப்பதாகச் சொல்லலாம்.  இயற்கையை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதாக நினைப்பவர்கள்தான் இந்த உந்துதலைப் பொருட்படுத்தாமல் அல்லது புறக்கணிப்பவர்களாக இருப்பவர்கள்.  இயற்கையின் இந்த உந்துதலை இவர்களால் எப்படிப் புறக்கணிக்க முடிகிறது என்பது எனக்குப் புரியாத விஷயம்.  இப்போது இம்மாதிரியான, இயற்கையைப் புறக்கணிக்கும் போக்கு அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

    அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.  அமெரிக்காவிலும் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.  ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் கூட குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் என்ற வாசகங்களை மருத்துவரின் மேஜையின் மீது காணலாம்.  அதே காலகட்டத்தில் பெண்ணியக் கருத்துகள் தோன்றிப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்கள் அல்ல, அவர்களுக்கு இன்னும் நிறைய காரியங்களைச் சாதிக்கச் சுதந்திரம் வேண்டும் என்ற கோஷம் எழுந்தது.  மேலும் பெண்கள் வேலைக்குப் போவதும் கூடியது.  வேலைக்குப் போகும் பெண்களால் வேலையில் கவனம் செலுத்துவதும் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதும் கடினமாயிற்று.  குழந்தைகளை வீட்டில் பராமரிப்பதற்கு இந்தியாவில் இருப்பது போல் பாட்டி, தாய், சித்தி, அத்தை என்று யாரும் இல்லை.  குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் தாதிகளிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தால் அதற்கு நிறையப் பணம் வேண்டும்.  பெண்கள் நிறையச் சம்பாதித்தால் மட்டுமே அது சாத்தியம்.

    சமீபத்தில் வெளிவந்துள்ள “Selfish, Shallow and Self-Absorbed: Sixteen Writers on the Decision Not to Have Children” என்ற புத்தகத்தில் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பதினாறு பிரபலங்கள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன.  மிகப் பெரிய நடிகரான ஜார்ஜ் க்லூனியும் ஒப்ராவும் இதில் அடங்குவர்.  டையர் என்னும் ஒருவர் தான் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது, பத்து நிமிடங்களிலேயே அவருடைய ஆட்டம் தடைப்பட்டதாகவும் அதன் பிறகு அங்கு ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும் குழந்தைகளைவிட அவர் அதிகமாக வெறுப்பது அந்தக் குழந்தைகளைக் கொண்டாடும் பெற்றோர்களைத்தான் என்றும் கூறியிருக்கிறார்.  குழந்தைகள் பெற்றோர்களைப் படாதபாடு படுத்துவதாகவும் இவர் குறை கூறியிருக்கிறார்.

    குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களிடையே நிறைய போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் அதில் தாங்களும் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.  இன்னும் சிலர் குழந்தைகளுக்கு நிறையப் பொருள்கள் வாங்க வேண்டியிருப்பதால் இயற்கை வளங்களை நிறைய வீணடிக்க வேண்டியிருப்பதால் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாகவும் கூறுகிறார்கள்.  குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் நிறைய வேலைகள் இருப்பதாகவும் தங்களுக்கென்று செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதும் சிலரது கவலை.

    இப்படி சிலர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றாலும் சநாதனக் கத்தோலிக்கர்களும் யூதர்களும் இன்னும் நிறையக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்..  சமீபத்தில் நியூயார்க்கில் எட்டுக் குழந்தைகளில் ஏழு குழந்தைகளை இழந்த குடும்பம் யூத ஐதீகத்தில் நம்பிக்கை வைத்திருந்த குடும்பம்.  கருத்தடைச் சாதனங்களை உபயோகிப்பது தடை செய்யப்பட்டிருப்பதும் கருக்கலைப்பு செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருப்பதும் கத்தோலிக்கர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வற்கு காரணங்களாகக் கூறலாம்.  திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களும் அமெரிக்காவில் அதிகம்.  அந்தத் தாய்மார்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது.

    குடும்பம் என்பது மாறிக்கொண்டுவருகிறது. கூட்டுக்குடும்பத்திலிருந்து தனிக்குடும்பம் வந்து இப்போது தனி நபரே குடும்பம் என்று மாறிக்கொண்டிருக்கிறது!

    Share
  • ஒரு ‘குறுக்கிய’ மரத்தின் குலுங்கும் அழுகை!

    -கவியோகி வேதம்

    ஒரு ‘குறுக்கிய’ மரத்தின்(‘போன்ஸாய்”-ன்) குலுங்கும் அழுகை
    (நாட்டுப்பாடல்–கொத்தமங்கலம்சுப்பு பாணியில்..!)

    வான்நிலவெப் பிடிச்சுவெச்சுக் குடத்தில் அடைப்பதா? – சாமி!
    மரம்என்னெக் குறுக்கவெச்சுத் தொட்டி வைப்பதா?
    மானெப்போயி வண்டுசைஸ்ல  மாத்தி மகிழ்வதா? – எவனோ*
    மந்திரம்போல் செய்ததெநீ காப்பி அடிப்பதா?        bonsai
    (*ஜப்பான் குள்ளன்)

    அகத்தியனா என்னெஆக்க இந்தப் படுத்தலா? – தொட்டி
    அதனெயேநீ வெளியில்வச்சு பணத்தெப் பார்ப்பதா?
    முகம்முழுக்க அழுவறேன்உன்  காதில் விழலையா? – அசுர
    முட்டாள்உன் உறுப்பெவெட்டிக் காசு பார்ப்பயா?

    ராமாயணம்  ஒத்த‘வரி’ல சொன்னா சுகமோடா? – மூடா!
    ராகம்பாட மேடைக்கிவந்(து) ஒப்பாரி வச்சேடா!
    தேமேன வளர்றகிளையெ நறுக்குற யேடா? – என்ன
    தெய்வக்’குத்தம்’ செஞ்செனென்(னு) இத்தெப் பண்றேடா!

    உன்னோட கொலவெறிக்கி நான்தான் பலியோடா? – சில
    உளுத்தகம்பி யாலசுத்திக் கையெ – முறுக்கறேடா!
    உன்நாத்தக் குடைவடிவில என்னெ வளர்க்கணுமோ? – ஏன்!
    ஓர்அருவியெ  என்உருவில பார்த்து மகிழணுமோ?

    அப்படியும் முயற்சிசெஞ்சு  துளிரெவிட் டாலும் – மடயா!
    அழுத்தமாக அத்தெக்கிள்ளிச் சிரிக்கிற யேடா!
    தப்படிகள் வெக்கிறதுதான் மனிச நோக்கமோ? – எங்க
    சாபங்களெ வாங்கறதுக்கு  ரொம்ப ஏக்கமோ?

    ‘சைக்கோசெல்’ திரவம்விட்டு மேலும் குறுக்கறே! – உன்
    ‘சைக்கோத்’தனத்தெ எங்கிட்டகாட்டி நீயே சிரிக்கறே!
    வைக்கோல்ல உன்னெத்திணிச்சுப்  பார்க்க ஆசைடா! – பாவி
    வருகுதடா ஆத்திரமாய் உன்னெயப் பார்த்தடா!

    உன்குழந்தெ பெரிசாறதுல ஆசையிருக் காதோ? – ‘மர’
    உறவினரெப் பார்த்(து)எனக்கும் ஏக்கமி ருக்காதோ?
    உன்குழந்தெ கையாட்டுனா சிரிக்க மாட்டயோ? – அடஎன்
    ஓவ்வோர்இலை நறுக்கும்போதும் உணர மாட்டயோ?

    தென்றல்பாத்துத் தலையஆட்ட உணர்ச்சி எழும்புது! – நீ
    செஞ்சவேலை  யாலஒடம்பில் கோபம்  பொங்குது!
    “மன்றம் ஐ.நா.” என்சார்புல பேசக் கூடாதா? – மனுச
    மண்டயிலதட்ட சட்டமொண்ணு செய்யக் கூடாதா?

     

    Share
  • அன்பின் இருப்பிடம் அம்மா…!

    -முகம்மட் ஜரூஸ்

    பத்துமாசம்தான்
    கருவிடம்
    தருவாளவள்
    பத்தியங்களும்                                 amma and child
    சுகமென்று
    சுமப்பாளவள்…!

    கருவிலே
    கணுக்காலால்
    நீ
    இடித்தாலும்
    கதறாது
    சிரிப்பாளவள்…!

    உன்னுருவம்
    காணவே
    உறக்கமிழப்பாள்
    உறக்கத்திலும்
    உன்னையே
    நினைப்பாளவள்…!

    இடுப்பு வலியைக்
    கொடுத்துப்
    பிறப்பாய் நீ
    மூச்செடுக்கவே
    உயிரையும்
    கொடுப்பாளவள்…!

    அகலவிழித்து
    அகிலம்
    பார்ப்பதற்கு
    அலாதித்
    துன்பங்களைச்
    சகித்துக்
    கொள்வாளவள்…!

    அசதியும் மறையும்
    அகிலமும்
    தூங்கும்
    அன்னையிவள்
    ஆராரோ
    தாலாட்டுக் கேட்க…!

    இன்னும் ஒரு
    ஜென்மம்
    எடுத்தாலும்
    இவளுக்கு
    ஈடு
    செய்யலாகுமா…?

    எத்தனை சேவை
    புரிந்தாலும்
    இவள் அன்புக்கு
    நிகராகுமா..?
    இவளின்றிதான்
    அந்த
    அன்பும் நிறைவாகுமா…?

     

    Share