Blog

  • மன்மத ஆண்டே வருக!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    மன்மத ஆண்டே வருக!
    மண்குளிர  மழை தருக!
    பைந்தமிழ்ச் சித்திரை வருக!
    பொய்கைவளர் பூ விரிய!
    வசந்தகால வரவே வருக!
    இசைந்து நல்வளம்  தருக!

    சித்திரைப் பெண்ணே  வருக!
    சிறப்பை நல்கி அருள் தருக!
    வேப்பம்பூக் கொத்தாய்க் குலுங்க
    மாமரம் பூத்துச் சிரிக்க
    இளவேனிற் காலமே வருக!
    இன்பங்கள் கொண்டு வருக!

    லஞ்ச லாவணயம் ஒழிந்து
    பஞ்சம் பசி நீங்கிப்
    பொய்மைகள்  தகர்ந்துபோய்ப்
    பூக்கட்டும் புதிய வருடம்!
    பொங்கிச் செழிக்கட்டும் பூமி!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(67)

    -செண்பக ஜெகதீசன்

    இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
    மரப்பாவை சென்றுவந் தற்று. (திருக்குறள்:1058 – இரவு)

    புதுக் கவிதையில்…

    இருப்பவர் குணம்தெரிய
    இவ்வுலகில்
    இருக்கவேண்டும் இரப்பவர்…

    இரப்பவரில்லா உலகின்
    இயக்கம்,
    கயிற்றில் இயங்கிடும்
    மரப்பொம்மை போன்றதே…!

    குறும்பாவில்…

    இரப்பவர்களில்லா உலகின்
    இயக்கம்,
    கயிற்றிலாடும் பொம்மை இயக்கமே…!

    மரபுக் கவிதையில்…

    வாங்கிட வறியவர் இல்லையெனில்
       வள்ளல் என்பார் யாருமில்லை,
    ஏங்கிடும் இரப்பவர் இல்லாத
       இந்த உலக இயக்கமெல்லாம்,
    தாங்கிடும் கட்டிய கயிற்றினிலே
       தங்கியே உயிரிலா பொம்மையது
    ஆங்கு மிங்கும் ஆடுதல்போல்
       அதிக பயனெதும் இல்லாததே…!

    லிமரைக்கூ…

    இருப்பவர்கள் குணம்தெரிய இரப்பவர்கள் தேவை,
    இவர்கள் இல்லாத உலகதனின்
    இயக்கம்பார், கயிற்றினிலாடும் உயிரிலாப் பாவை…!

    கிராமிய பாணியில்…

    இருக்கவம்பெரும தெரியணுண்ணா
    இருக்க வேணும் எரப்பவனும்,
    குடுக்கவனுக்குப் பெருமயில்ல
    வாங்க ஆளு இல்லயிண்ணா,
    வள்ளலுண்ண பேருமில்ல..

    குடுக்க ஆளு இருந்தாலும்
    வாங்க ஆளு இல்லாத
    ஒலகவாழ்க்க ஒண்ணுமில்ல
    கயித்தில ஆடுற பொம்மபோல
    வெறுதாப்போவும் வாழ்க்கதானே…

    இது
    பொம்மலாட்டம் பொம்மலாட்டம்
    பலனேயில்லா பொம்மலாட்டம்…!

     

    Share
  • சீதனம்!

    -றியாஸ் முஹமட்

    கன்னிக்கு ஏன் வேதனை…?
    கருமச் சீதனத்தின் சோதனை!

    கன்னிக்கோ                                                                                                                  lady
    கலியாணம்
    கடந்த வயது…

    கலியாணச் சந்தையில்
    கனவுகளோடு
    காலூன்றி நிற்கும்
    கற்புக் கன்னி!

    கல்யாணராமர்களோ
    கன பேர்,
    கருமச் சீதனக்
    கனவுகளோடு…

    கல்யாணராமனுக்குக்
    காணிக்கையில்லை,
    காணிக்கை கேட்பவன்
    கடவுளுமில்லை!

    கரும்பு தின்னக் கூலியோ… ?
    கணவனாகக் காசோலையோ…?

    கண் கெட்ட,
    கல்யாணக் காளையர்
    காசு கொடுத்தும்

    கடை, நகை, வாகனமாம்
    கணக்குப் பார்க்கின்றான்
    கச்சிதமாய்…!

    கணக்குப் பிழையானது
    கல்யாணம் விலையானது
    கன்னியின் இன்பக்
    கனவுகளோ கானல் நீராய்க்
    கரைகிறது…….!

    கலியாணச் சந்தையிலோ
    காசுகளோ குவிகின்றது!
    காலங்களோ கடந்தாலும்
    கல்யாணராமர்களோ
    கலக்குகின்றார்கள் – புதுக்
    கட்டழகோடு….!

    கன்னிக்கு என்ன வேதனை…
    கருமச் சீதனத்தின் சோதனை!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 161

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05. அடைக்கலக் காதை

    கோவலன் செய்த அறங்களை மாடலன் பாராட்டி, அவன் மனைவியுடன் தனியாக மதுரை வந்ததற்கு இரங்குதல்

    நாவன்மை மிக்க மாடலன்
    கோவலன் அங்கு வந்த காரணம் யாது
    என்ற கேள்வி எழுப்பி,
    அவனது நிலையறிந்து பேசத் தொடங்கினான்.                              manimekala

    முதுமறையோனை மத யானையிடமிருந்து விடுவித்தமை

    அரசன் அளித்த தலைக்கோலின் சிறப்பால்
    புகழ்பெற்ற மாந்தளிர் போன்ற
    மென்மையான மேனியளாம் மாதவி
    நல்வினை வாய்க்கபெற்ற காரணத்தால்
    ஒரு பெண் சிசுவை ஈன்றாள்.
    தூய்மையற்ற குழந்தைப்பேறு
    தீட்டு நாட்கள் கழிந்தபின்,
    வயதில் மூத்த பிற கணிகையர்
    அந்தக் குழந்தைக்கு
    நல்லதொரு புகழ்வாய்ந்த
    பெயரினை இடுவோம் என்று
    அழகிய பெயர் ஒன்று சூட்டும்படி
    நின்னை வேண்டி நின்றார்.
    அவர்களின் தகுதிமிக்க பேச்சைக்கேட்டு
    நீ அவர்களிடம் உரைக்கலானாய்:

    ”முன்னொரு நாளில் இருள் நிறைந்த ஒரு யாமத்தில்
    அலைமோதும் பெரிய கடலில் எழுந்த சூறைக்காற்றால்
    எம் குலத்தவன் ஒருவனின் மரக்கலம் உடைந்தது.
    கரைசேர வழியொன்றும் இல்லாத போதும்
    அவன் செய்த அறத்தாலும் தானத்தாலும்
    சிறிது காலம் நீந்தியபடி இருந்தான்.
    அவன் முன்னே ஒரு தெய்வம் தோன்றி…
    “அசுரர் துன்பப்படாமல் இருப்பதற்காக
    இத்தீவிற்கு இந்திரன் ஏவல் காரணமாய்
    நான் இங்கு வாழ்ந்து வருகிறேன்.
    உனது பெரிய சிறந்த தானத்தின் பயன்
    உன்னைவிட்டு நீங்காது.
    எனவே கடலில் நீந்திய நின்துயர்
    தீரும் வண்ணம்
    தண்ணீரில் நீ படும் இத்துன்பம் நீங்குக!
    எனக்கூறித் தம் மந்திரத்தால்
    அவனைக் கரையில் சேர்த்தது.
    அத்தெய்வத்தின் பெயரை என் குழந்தைக்கு இடுங்கள்!”
    என்று நீ கூறினாய்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 20 – 35
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • இன்றும் உலகம் மாறவில்லை!

    -ரா.பார்த்தசாரதி

    பிள்ளை  பிறந்தால் என்றும் பேரின்பம்
    குலம் தழைக்க வந்தத்  திருமகன்
    பெண் பிறந்தால்  ஏனோ பெருமூச்சு
    பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு!

    இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது
    இதனை அரங்கேற்றுவதும்  பெண் இனமே!
    குழந்தையும் தெய்வமும்  ஒன்றுதானே…
    பெண் குழந்தைகளைப் புறக்கணிப்பதும் ஏனோ?

    தன்னைப்போல் பிறரையும்  நினை
    ஆண், பெண் பாகுபாடின்றி  நினை
    பெண்ணே  உன்வீட்டின் செல்வம்
    உன் குடும்பத்தில் அவளொரு சேமக்கலம்!

    பெண்ணை  ஆணுக்கு நிகர் என நினை
    தங்கமெனத்  தன்பெண்ணை வளர்த்தான்
    தங்கத்தைத் திருமண பந்தத்தில் தொலைத்தான்
    பிறந்த வீடு விட்டு புகுந்தவீடு புகுந்தாள்!

    பிரித்துப் பாகுபடுத்தும் பெண்ணின் வாழ்க்கை,
    எதிர்காலம் எப்படியோ என நினைக்கும் வாழ்க்கை
    தன்னலமின்றிப்  பிறர் நலனுக்காகப் புகுந்தாள்
    தன் முன்னேற்றத்தைக் காணத் துடித்தாள்!

    பிறந்த வீட்டில் கொடிகட்டிப்   பறந்தாள்
    கொம்பைச் சுற்றிப் படரும் கொடியானாள்
    இன்று உரிமைக்காகச் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறாள்
    விட்டுகொடுக்கும் வாழ்க்கையே உயர்வென நினைக்கிறாள்!

    பிள்ளை வீட்டில் பிச்சை எடுக்கும்  பெற்றோர்
    பெண் வீட்டில் மரியாதையாக நடத்தப்பட்டாலும்
    பழமை பேசி, தன்னுக்குள் போட்டுக்கொண்ட வேலி
    என்று மாறுமோ இந்தத் தேவையற்ற வேலி?

    மருமகனை, மகனாக நினைக்கத் தெரிந்தாலும்
    மருமகளை, மகளாக நினைக்கத் தெரிந்தாலும்
    பழமை நீக்கி, காலத்திற்கேற்ப வாழத் தெரிந்தாலும்
    பெண்ணே! இன்றும் உலகம் மாறவில்லை!

     

    Share
  • வானில் மிதந்த வெள்ளைப் பந்து!

    -மீனாட்சி நாகப்பன்

    அந்தி வானத்திலே
    அந்த மேகத்தினிடையே
    பரந்த முகத்தில் வெள்ளி நிலவு                                              moon
    வட்ட முகமாய்க் காட்சி அளிக்கிறது!

    கரிய மேகத்தின்
    கார் கூந்தலை விலக்கி,
    நெற்றித் திலகமிட்ட
    இரவு நிலவு என்னைப் பார்த்து
    இளநகை பூத்தது!

    வெள்ளைப் பந்து
    வானில் மிதந்து
    வீதி ஊர்வலம்
    விடியும் வரை வந்தது!

    விளக்கொளியாய் ஒளிவீசிய
    விண்ணகத்துச் சந்திரன்
    முழுமையைக் கண்டு
    மலர்ச்சியும் ஆச்சர்யமும் கொண்டு
    மண்ணில் மனம் மகிழ்ந்தேன்!

     

    Share
  • மறக்க முடியவில்லை!

    -மீனாட்சி நாகப்பன்

    பேதைப் பருவத்தில்
    கதைகேட்ட காலங்களும் கடந்து
    ஓடித் திரிந்து ஒளிந்தும்
    விளையாடி ஒளியும் ஒலியும்
    வெள்ளியன்று
    கண்டு ரசித்த நாட்களையும்
    வீதியிலே நாடகமும் ,வெள்ளைத்திரையில்
    வண்ணப்படமும் விடிய விடியப் பார்த்து
    மறுநாள் முழுவதும்
    உறக்கம் கலையாத நேரங்களை
    நினைத்தாலே சிந்தனையில்
    சிலிர்ப்பாய் இருக்கிறது!
    அந்தத் தருணங்கள் அழகாய் இன்னமும் !

    பள்ளியிலும் கல்வியிலே கவனம் கொண்டு
    கரையேறிக் கணிதத்தில் சதம்பெற்ற தருணமும்
    கல்லூரி வனத்திலே கால்பதித்துச்
    சிட்டுக்குருவியாய் எட்டிப் பறந்த
    ஏற்றமிகு நாட்களும் என் எண்ணத்தில் பதிந்த
    வண்ணக்கோலங்கள் அவை!

    சிங்காரச் சென்னையிலே
    ரீங்காரமிட்டுத் தமையனின்
    தலைமையில் கண்டு ரசித்த,
    சென்றுவந்த இடங்கள் ஏராளம்!

    மணக்கோலத்தில்மாங்கல்யம் பெற்று
    மன்னவனுடன் வாழ்க்கைக் களத்தில்
    மனதார அடியெடுத்துவைத்த
    நன்னாளும் மறக்க முடியாத
    பொன்னாளே!

    சிறிய அழகிய கோலமாய் இருக்குமென நினைத்த வாழ்க்கை
    சிக்கல் கோலமாய் விரிந்தாலும்
    சிக்கனமாய்ப் பக்குவமாய்ச் சிறகடித்துப்
    பறக்கின்ற தருணத்திலே
    அன்னையாகி ’அம்மா’வென்று
    அழைக்கும் அழகிய தருணம்
    அமையப்பெற்று வாழ்க்கையின்
    அடுத்தகட்டம் நுழைந்த நன்னாளும்
    மறக்கமுடியாத மனதின் நினைவுகள்!

    கல்வித்துறையிலே கால்பதிக்க
    அவசரமாய் அவசியமாய்
    ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற்ற,
    அரசாணை வாங்கிய நன்னாளும்
    பொன்னாளே என்றும்!

    உள்ளன்புடன் உணர்ச்சியுடன்
    உருவாகும் தருணங்கள் அனைத்தும்
    உலகில் மறக்கமுடியாத
    உன்னதத் தருணங்களே!

     

    Share
  • எரியும் வேதனை..

    நாகினி

     

    அரசுப்பள்ளி மாணவரும் ஆங்கிலம்
    நுனி நாக்கில் பேசுகிறார்…
    வீட்டுக்கொருவர் படிப்பாளர் என
    கல்வி நிலைப் பல்கித் தான் வருகிறது…
    அடுப்படியே கதிஎனும் நிலை பெண்களும்
    விமானம் ஓட்டி விண்ணையே எட்டுகிறார்…
    கிராமத்தின் மண் சாலைகளும்
    பளபள சிமெண்ட் பூச்சாகியது…
    ஓலைக் குடிசையிலும் ஒளிவிளக்கோடு
    டிவி,மிக்சி,மின்விசிறி என அறிவியல்
    சாதனங்கள் சாதாரணப் புழக்கமாகியது…
    தொன்னையில் டீ தருமளவிற்கு
    சாதியால் ஒதுக்கப் பட்ட நிலையும்
    சற்று ஒதுங்கித்தான் போய் விட்டது….
    ஆம்…நினைக்கவே பிரமிப்பாக!

    சமூகத்தின் நற்பிம்பக் காட்சியைக்
    காலக் கண்ணாடி காட்டினாலும்..
    வாழ்க்கை வானில்
    நீங்கா வறுமைக் கோடுகள்..
    பெண்சிசுக் கொலை…
    பாலியல் வன்கொடுமை…
    சாதிமதக் கலவரமென
    இன்றளவும் மறையாத நிரந்தர
    வன்முறைக் கேடுகள்
    உலவுவதை உற்று நோக்குங்கால்…
    மன மூலையில் இனம்புரியா
    வேதனை வலி தீயாய்
    எரியத் தான் செய்கிறது!!

    — நாகினி

    Share
  • திரு வி க அவர்களைச் சந்தித்தேன்……

    எஸ் வி வேணுகோபாலன்

    அன்பின் வி எஸ் கல்யாணராமன் சார்….

    ஆஹா…அஹா…

    இன்று (ஏப்ரல் 11) மாலை நிகழ்ந்த அற்புதமான சந்திப்புக்கு என்ன தலைப்பு கொடுப்பது…

    திரு வி கவைச் சந்தித்திருப்பவரும், அ சீ ரா என்றழைக்கப்படும் பேராசிரியர் அ ஸ்ரீனிவாச ராகவன் அவர்களது மாணாக்கருமான உங்களை எங்கே நாங்கள் சந்தித்தோம்….

    நேரே திரு வி கவை சந்தித்தோம்…
    அசீரா அவர்களைச் சந்தித்தோம்
    எந்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நீங்கள் வானொலி பேச்சு மூலம் மட்டுமே கேட்டறிய முடிந்ததோ அந்தக் கவிமணியை அல்லவா சந்தித்தோம்..

    இன்னும், சொல்லுக்குச் சொல் மேற்கோள் காட்டி நீங்கள் ரசித்துக் கொண்டிருந்த
    (பண்டைக் காலத்துப் பயித்தியங்களில் ஒன்றெனவே கண்டு நானும் ஆளாகிக் கொண்டுவிட்ட) பாரதியை தரிசித்தோம்….

    இன்னும் இன்னும்……
    பட்டினிக்குத் தீனி, கேட்டபின்பு ஞானி என்ற அபிமான கவியரசு கண்ணதாசனும் அல்லவா இன்று நம் கூடவே இருந்தார்….

    அப்புறம், ஜே கே? அவரது கதைகளை, நாவலை மட்டுமல்ல….

    வேறு இடம் தேடித் போவாளோ இந்த
    வேதனையில் இருந்து மீள்வாளோ
    நூறு தரம் இவள் புறப்பட்டாள் விதி
    நூலிழையில் இவள் அகப்பட்டாள்

    என்று சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் தனது அற்புதக் கதையின் திரைப்படமாக்கலில் தானே அற்புதப் பாடல் எழுதிய ஜே கே…

    மாட்டையும் சேர்த்துக் கொண்டு போய் நிறுத்தி எனக்கு வாடகைக்கு வீடு கொடுங்கள் என்று அசத்திக் கொண்டிருந்த ஸ்ரீ தேவி உபாசகர் லா ச ரா,

    தனது இறுதிக் காலத்தில் மிகுந்த உடல் வேதனைக்கு உள்ளாகி மறைந்துபோன நவீன தமிழ் சிறுகதையாளன் சுஜாதா,

    யார்தான் இல்லை….இன்றைய சந்திப்பின்போது……?

    முக்கியமாக இலக்கிய திறனாய்வாளர் தி க சி…அவரை நினைவுகூரத்தானே நிகழ்ந்த இலக்கிய சந்திப்பு அது…….

    81 வயதில் தளராத மனவுறுதியும், தாள மாட்டாத இலக்கிய தாகமும், அசாத்திய நினைவாற்றலும், அன்பின் கொண்டாட்டத்தில் துள்ளும் உள்ளமுமாக…

    உங்களை தனது இல்லத்திற்கு அழைத்து அறிமுகம் செய்வித்த செம்மொழி தி சுபாஷினி அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்கலாம்…

    அவரது அண்ணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விப்ர நாராயணன் தனது மிதமான ஆர்ப்பாட்டமற்ற மொழியில் மறைந்த லாச்சா என்ற வித்வான் ல. சண்முக சுந்தரம் அவர்களது அன்பைப் பற்றி, தமிழ் தாகத்தைப் பற்றி, இலக்கிய ரசனை பற்றி…என்னமாகப் ..பேசினார்..

    (ல சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றி மேலும் அறிய….பின்வரும் இணைப்புகளை வாசிக்கலாம், அவரைப் பற்றி அறிய விரும்பும் அன்பர்கள்)

    http://www.vallamai.com/?p=42140

    http://www.dhinasari.com/latest-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-006358.html

    இலக்கிய ரசனை, வெறும் கடனே என்று ஒப்பித்தல் அல்ல, உள்ளார்ந்த ரசிப்போடு இலக்கிய வாசிப்பும், பகிர்வும், பரப்பலும் கூட ஒரு பிரும்மானந்த நிலையைக்க் கொண்டுவருமா என்று நான் லாச்சாவிடம் ஒரு முறை நேரே கேட்டேன், ஆமாம், டி கே சி அவர்கள் அப்படியான பேரானந்த நிலையை எட்டியவர் என்று அவர் பதில் அளித்தார். அதே நிலையை அவரும் எய்தினார் என்று சொன்னாரே விப்ர நாராயணன்…(கடந்த மாதம் காந்தி நிலையத்தில் உப்பு வெளி என்னும் மொழிபெயர்ப்பு நூல் குறித்து விப்ரநாராயணன் சிறப்பான அறிமுகம் செய்திருந்தார்)

    சிறந்த ரசனை எங்கிருந்தாலும் கொண்டாடப்படவேண்டியதுதானே என்று எல்லோருமே பேசிக் கொண்டோம்….

    எல்லையோர படைவீரர்களை உற்சாகப் படுத்தி நிகழ்ச்சி முடித்துக் கொண்டு தில்லி சென்று அப்போதைய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தார்களாம் தமிழக திரை உலகினர். அதில் சந்திரபாபு முக்கிய இடம் வகித்தவர். அவரை அறிமுகம் செய்தபோது, அவரது பாடலை தான் கேட்டு மிகவும் ரசிப்பதுண்டு என்று சொன்ன ராதாகிருஷ்ணன் தனக்கு மிகவும் பிடித்த பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டாராம்.. சந்திரபாபு பாடப் பாட கண்ணில் நீர் பெருக்கெடுத்தோடிய குடியரசுத் தலைவரைக் கண்டு குதியாட்டம் போட்ட சந்திரபாபு ஓடிச் சென்று அவரது கன்னத்தைத் தட்டிக் கொடுத்து, ரசிகன்மா கண்ணு நீ ரசிகன் என்று மோவாயைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்டு ரசித்திருக்கிறார்….பாதுகாவலர்கள் அதிர்ந்தபோது அவர்களை குடியரசுத் தலைவர் சமாதானப் படுத்தி, சந்திரபாபு ஒரு மாபெரும் கலைஞன், கலைஞன் ஒரு குழந்தை மாதிரி என்றாராம், என்று எப்போதோ வாசித்ததை நான் நினைவு கூர்ந்தேன்.

    அப்படியே கம்பனுக்குள் மூழ்கினீர்கள் நீங்கள்…தோழமை என்றவன் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ…

    ஆணவம் இன்றி தன்னை ஒப்புக் கொடுத்து ரசிக்கும் மனத்திற்கு, விப்ரநாராயணன், எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ என்ற ஆண்டாளின் 15வது பாசுரத்தில் வரும், வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக என்ற இடத்தைச் சுட்டிக் காட்டி, அந்த நானே தான் ஆயிடுக என்ற பொறுப்பைத் தன்மீது ஏற்றிக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போகும் ஞானம், பாரதி சொன்ன பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே எனும் பரிபக்குவ நிலை, டி கே சி அவர்களிடத்து இருந்தது என்றார்….

    அது அப்படியே லாச்சாவிடம் மிளிர்ந்தது என்று உணர்ச்சி வசப்பட்டார் இளைஞர் காஞ்சி சரவணன்.

    தனது சொத்து விஷயம் கோர்ட்டுக்குப் போனபோது, நீதிபதி முன் நின்று, எனக்கென்று பங்கு வேண்டாம்,எனது இளையவர் மொத்த சொத்தையும் எடுத்துக் கொள்ளலாம், இதற்கு எதற்கு உங்களிடத்து வந்தார் அவர் என்று கேட்டு நீதிபதியே அசந்து போகும்படி சொல்லும் உளத் திண்மை டி கே சி அவர்களுக்கு இருந்தது. வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களை சந்தித்த லாச்சாவிடம் அந்தப் புன்னகை, துணிச்சல் நடை, யார் வந்தாலும் உபசரித்து தனது கையால் சமைத்த அறுசுவை உணவளித்து இலக்கியமும் பகிர்வு செய்து அனுப்பும் அவரது வாழ்க்கை அனுபவம் அற்புதமானது என்றார் விப்ரநாராயணன்.

    தி க சி அவரைக் குறித்த நினைவுகளையும் விப்ரநாராயணன் பகிர்ந்து கொண்டார்.

    ஸ்டேன்லி மருத்துவமனை ஓவியராக பணியாற்றும் பாலசுப்ரமணியன் அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இந்த சந்திப்பில் பெருமிதம் பொங்க கலந்து கொண்டிருந்தார்.

    கலகக் குரல்கள் பற்றிய வரிசையில், மீரா எனும் மீ ராஜேந்திரன் அவர்களது,

    திருக்குறளில் தேர்வு எழுதப் போனார்
    பாவம் வள்ளுவர் ஃ பெயில் ஆனார்
    அவர் படிக்கவில்லை கோனார்

    என்ற வரிகளையும்,

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாளும் திருப்பித் தா
    நீ கொடுத்த சங்கத் தமிழ் இந்தா

    என்ற பகடி கவிதை வரிகளையும்

    நான் நினைவு கூர்ந்தது, தனக்கு அந்த நாட்களில் மீ ராவுடன் செலவிட்ட பொழுதுகளை மீண்டும் நெஞ்சில் நிறுத்தியது என்றார் ஓவியர் பாலு.

    காஞ்சி சிவா எனும் சிவசங்கரன், தி க சிவசங்கரன் (தி க சி) அவர்களை நினைவுகூரும் முகமாக நிகழும் சந்திப்பில் அதே பெயரில் தானும் வந்து கலந்து கொண்டிருக்கிறேன் என்றார். தரை என்ற பெயரில் மாதம் தவறாது அயல் நாட்டு முக்கிய திரைப்படங்களை விருப்பம் உள்ளோர்க்கு இலவச திரையிடலை காஞ்சியில் செய்து கொண்டிருக்கும் அவரை தளம் பா இரவி பெருமையோடு அறிமுகம் செய்வித்தார்.

    ரசனையை மேலும் பெருக்கிய ரசகுல்லா,
    சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த என்ற பாரதியைக் கொண்டாடிய வாய்களுக்கு ஒரு பணியாரமும்
    பழரசமும் வேறு கொடுத்து மகிழ்வித்த தி சுபாஷினி அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல….

    பெங்களூரு திரும்பிச் செல்லும் எங்கள் அன்பின் அன்பான கல்யாணராமன் அவர்களே, உங்களை எப்படி மறப்போம்….

    எத்தனை நகைச்சுவை உணர்வு…..எத்தனை ரசனை…..

    உங்களோடு படிக்கும் காலத்தில் படிப்பைக் கை கழுவி வெளியேறிப் போய் கடை வைத்து, கவுன்சிலர் ஆகி, பின் எம் எல் ஏவும் ஆகி பெரிய ஆள் ஆன தங்கவேல், கணிதத்தில் பிளந்து கட்டி சரித்திரம் படைத்த வெறும் கணக்கர் வேலைக்குப் போன தாங்கள், அறிவியலும்-இன்ன பிறவுமாக நகர்ந்த வாழ்வில் அருமையான் இலக்கிய நுகர்வின் மூலம் வாழ்வுக்குப் பொருள் சேர்த்துக் கொண்ட உன்னதம்….

    எதை விவாதிக்க, எதை சொல்லாது விட….

    திரைப்படப் பாடல், நகைச்சுவை துணுக்கு, பத்திரிகை வாசிப்பு, அங்கதம் என்ற ருசி….ஆஹா…ஆஹா…

    எத்தனையோ பெரிய ஆளுமைகளை நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்த உங்கள் காலங்களை எங்களுக்குமாக ஆக்கிக் கொடுங்கள்……என்று கேட்கையில், கவிஞர் வாலியின்,

    பொதிகை மலை தோண்டிப்
    புதையல் எனக் கண்டெடுத்து
    மதுரைப் புலவர்தம்
    மனவீட்டில் பூட்டி வைத்த
    நிதியாம் நற்றமிழை
    நிறுத்தறியாப் பெருஞ்சொத்தை
    மதியால் களவாட
    முயற்சிக்கும் திருடன் நான்

    என்ற கவிதை வரிகளை நினைவு கூர்ந்தேன்…உங்கள் மன வீட்டில் பூட்டி வைக்காது எங்களுக்கும் எழுதி அளியுங்கள், உங்கள் அனுபவங்களை….

    வாழ்க நீங்கள் எம்மான், பல்லாண்டு பல்லாண்டு…..

    திரு வி கவைச் சந்தித்த ஒருவரை நேரில் பார்த்த ஆனந்தம் ஒன்று போதாதா, என் வாழ்வின் மீதிக் காலத்தை மெருகேற்றித் தர….

    வாழ்க பல்லாண்டு….

    எஸ் வி வேணுகோபாலன்

    Share
  • படக்கவிதைப் போட்டி 7-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கவிஞர்களின் சிந்தனைப் பசிக்குச் சிறந்த தீனிபோடும் புகைப்படத்தைத் தந்த திருமிகு. ராமலக்ஷ்மிக்கும், அதனைத் தேர்வு செய்த திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவின் பாராட்டுக்கள்.

    11134356_815628041824730_874016360_n

    தந்தை தோளில் ’ஜம்’மென்று அமர்ந்தபடி வாயில் வைத்த விரலோடும், விழிகளில் விரியும் வியப்போடும் இக்குழவி அங்கே நோக்குவதுதான் எதனை? என்ற ஆர்வம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது இப்புகைப்படத்தைப் பார்க்கும்போது!

    ஆர்வமாய் தந்தை தோளில்
      அமர்ந்துநீ உலகந் தன்னைப்
    பார்வையால் அளக்கின் றாயே
      பாலகா உனக்கார் ஈடு? என்று  அக்குழந்தையைக் கொண்டாடத் தோன்றுகின்றது.

    இன்று, தன் இளம் மகனை அந்த அன்புத் தந்தை தன்தோளிலும், மார்பிலும் சுமக்கின்றார் ஆசையாக! இதே பாரம் இடம்மாறும் காலமும் வரும். அப்போது இப்பிள்ளை தன்னன்புத் தந்தையைப் (பாரமாய் நினையாது) பாசமாய்ச் சுமக்கவேண்டுமே எனுமோர் ஏக்கமும் இக்காட்சியின் நீட்சியாய் நம் உள்ளத்தில் எட்டிப்பார்க்கவே செய்கின்றது.

    கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரம் வீழ்ந்துவிடாதபடி அதன் விழுதுகள் அதனைத் தாங்கிப்பிடிப்பதுபோல் வயதுசென்ற தந்தைக்குத் தள்ளாமை வந்து பிணியெனும் கறையான்கள் அவருடலை அரிக்கும்போது அவருடைய புதல்வன் அவரைத் தாங்கிப் பிடிக்கவேண்டும். அதுவே மகன் தந்தைக்கு ஆற்றும் தலையாயக் கடன்! இவ்வாழ்வியல் உண்மையை நாலடியார்ப் பாடலொன்று நன்றாய் விளக்குகின்றது. அப்பாடல் நம் சிந்தனைக்கு…

    சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
    மதலையாய்
    மற்றதன் வீழூன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி: 197)

    இனி, போட்டிக்கு வந்துள்ள கவிதைகள் குறித்துப் பார்ப்போம்.

    இவ்வாரமும், ’நீ முந்தி நான் முந்தி’ என்று போட்டி போட்டுக்கொண்டு கவிஞர் பெருமக்கள்  ’கவிதைப் பந்தி’ நடத்தியிருக்கின்றீர்கள். பல்வேறு கருத்துக் குவியல்களையும், சிந்தனைச் சிதறல்களையும் அள்ளி வழங்கி ’எந்தக் கவிதையைத் தேர்ந்தெடுப்பது?’ என்று எங்களைத் திகைக்கச் செய்திருக்கின்றீர்கள். உங்கள் சீரியமுயற்சிக்கு எம் பாராட்டுக்கள்!

    என் சிந்தைதொட்ட கவிதை வரிகளின் பட்டியலை முதலில் தந்துவிடுகின்றேன்…

    பருவமாற்றங்களையும் அதனோடு இணைந்தே வரும் மனமாற்றங்களையும் தந்தைக்குக் தனயன் செப்புவதாயுள்ள திரு. பா. இராஜசேகரின்  ரசமான வரிகள்…

    தந்தை
    உன்
    விரல்பிடித்து
    நடைபயின்று!
    நீ
    சுமக்க
    தோழ்அமர்ந்து
    வலம்வந்தேன்
    பிஞ்சுக்காலம்!
    நீ
    அறிவுரைத்தாய்
    முகம்திருப்பி
    கைவிடுத்து
    கண்மறைந்தேன்
    விடலைக்காலம்!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    குறள்வரிகளின் சாயலில் கவிவடித்துச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கும் திரு. சி. ஜெயபாரதனின்  எழில் வரிகள்…  

    தந்தை மகற்காற்றும் உதவி
    முந்தி விழாக் காணக்
    கழுத்தில் 
    குந்தி இருக்கச் செயல் !
    மகன் தந்தைக் களிக்கும்
    தகவல்
    இவன் தந்தை
    ’ஏணிப்படி’ என்று உலகுக்கு
    எடுத்துச் சொலல் !

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    மகனுக்குத் தந்தை சொல்லும் வாழ்வியல் உண்மைகளை விளக்கும் திரு. ரா. பார்த்தசாரதியின்  யதார்த்த வரிகள்…

    தோளில்  தாங்கி  உனக்கு  உலகை காட்டுகின்றேன் 
    தாயோ  அன்பும்,  பாசமும் உன்னிடம் காட்டுகிறாள் 
    அறியாப்   பருவத்தில் உனக்கு நான்  வழிகாட்டி 
    முதுமைப் பருவத்தில் நீதான் என் வழிகாட்டி!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    தன்னலமிலாத் தந்தையின் உள்ளத்தைக் கண்ணாடிபோல் துல்லியமாய்க் காட்டியிருக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகரின்  சீர்மிகு வரிகள்…

    பட்டுவிரல்  நோகுமென்று பாலகனைத் தோள்சுமப்பார் 
    சுட்டியவன் சேட்டைகளில் சொக்கிடுவார் – மட்டிலா 
    அன்பால் கரைத்திடுவார் ஆக்கமுடன் கற்பிப்பார் 
    தன்னல மில்லாத்தந் தை .

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    தந்தை மகன் உறவில் காலம்போடும் அதிசயக் கோலங்களை அழகாய்க் காட்டியிருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின்  பாங்கான வரிகள்…

    தந்தைக்கும் மைந்தனுக்கும் உள்ள இணைப்புஅது
    தன்னலமில் லாதபாசத் தின்பிணைப்பு – மந்திரம்தான்
    தந்தைசொல் ஐந்தாம் வயதில் வயதுவந்த
    பின்னால் அவரேதான் வில்லன்.

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    அரையில்(இடுப்பில்) வைக்கும் அன்னையையும், உயரவைக்கும் தந்தையையும் எண்ணி உளம்பூரிக்கும் மகனைக் காட்டும் திரு. ஜெயராம சர்மாவின்  ரம்மியமான வரிகள்…

    அம்மாவோ அரையில் வைப்பாள்
    அப்பாவோ உயர வைப்பார்
    என்னிளம் பருவம் தன்னை
    இங்கு நான் காணுகின்றேன்.

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    வாழ்க்கை நடைமுறைகளை வண்ணங்களினூடே வனப்பாய்ச் சொல்லியிருக்கும் நல்லை திரு. சரவணாவின்  சிந்தனை வரிகள்…

    நமக்கான அவசரங்களைவிட
    வேகமாயிருக்கிறது… எதிர்காலம்…
    எப்போது வேண்டுமானாலும்
    உறிஞ்சிக்கொள்ளப்படலாம்….நிறங்கள்..!!
    …. கடைசியாய் சாறு தெளித்துக்
    களித்திருந்த தலைமுறை
    என்னுடையதாகவும்…
    பூசப்படா பச்சை
    ரசித்திருந்த தலைமுறை
    உன்னுடையதாகவும் இருக்கலாம்…!!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    தந்தையின் கலப்படமற்ற அன்பை விளக்கிப் ’பிதாவே பிள்ளையின் முன்னறி தெய்வம்’ எனும் அவ்வை வாக்கை வழிமொழிந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனின்  செம்மாந்த வரிகள்…

    தந்தை எதையும் தாங்கிடுவான்
    தனது பிள்ளை மேன்மைபெற,
    சிந்தையில் இதனைக் கொண்டேதான்
    சிரிக்கும் பிள்ளைத் தோளமர்த்தி
    விந்தை யான உலகினிலே
    வியக்கக் காட்சிகள் காட்டிடினும்,
    சிந்தையில் பிள்ளை உயர்வுதானே,
    சிறந்த கடவுளும் தந்தைதானே…!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    ’உன்தோளில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அரும்பிடம் உன் கடந்தகாலக் குறும்புகளைச் சொல்லிமகிழ்கிறாயோ?’ என்று தந்தையிடம் வினாத்தொடுக்கும் திரு. அமீரின் அசத்தல் வரிகள்…

    ஊனும் உயிரும்
    உனக்கு உன்மகனோ?
    உள்ளும் புறமும்
    அவனுக்கு நீதானோ?
    ஒன்றானது உங்கள்
    உணர்வோ?
    பிள்ளையிடம் சொல்வதெல்லாம்
    உந்தன் பழைய நினைவோ?

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    மகன்பெற்ற இன்பமே தான்பெற்ற இன்பமாய்க் குதூகலிக்கும் தந்தையின் உணர்வுகளைச் சொல்லும் திருமிகு. தமிழ்முகிலின்  இன்பத்தமிழ் வரிகள்…

    ..உன்னை சுமந்து சுற்றுவதிலேயே
    இன்பம்
    காண்கிறேன் நானுமே !
    உன் பிறப்பாலேயே நானும்
    தந்தையென
    பிறப்பெடுத்தேன் !
    புது வாழ்வு காண்பித்த பிள்ளையே
    நீயே
    எந்நாளும் எந்தன் வாழ்க்கையே !

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    மகன் தந்தைக் காற்றும் உதவியை வள்ளுவப் பேராசானின் வழிநின்று விளக்கியிருக்கும் திருமிகு. நாகினியின்  நயமிகு வரிகள்…

    இம் மகனை(ளை)ப் பெற 
    இவர் என்ன தவம் செய்தாரோ’ என 
    ஊர் உலகம் மெச்சும் வண்ணம்
    உலக அளவை மிஞ்சும் 
    உன்னத பண்பில் உயர் 
    நேர்மையாளன் இவனெ(ளெ)னும்  
    பாராட்டால் தலைசிறக்கும்  
    நன்நடத்தை உலகையே உமக்கு 
    கைம்மாறாய் வழங்கிடுவேன்
    அன்புமிகு மகனா(ளா)ய் என்றென்றும்!

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    ’ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் புறநானூற்றுப் புலவரின் பொன்வரிகளை அடியொற்றித் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன் வடித்துத் தந்திருக்கும் வைர வரிகள்…

    தாய்  உன்னை   ஈன்றாலும்
    தந்தை  யான    என்கடமை
    தரமான  கல்வி   யையும்
    உரமான  மன    தையும்
    திடமான உடலையும் தந்து
    ….
    என் வாய் உன்  தூய
    நடத்தை  யையும் கேட்டு
    இறும்பூ தெய்தவும் விழையும்…

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    நான் மேற்குறிப்பிட்டவை அனைத்துமே சிறந்த கவிதை வரிகளாய் ஒளிர்கின்றன; மிளிர்கின்றன! எனினும், இக்கவிதைகள் பலவற்றில் ஒன்றின் சாயலை மற்றொன்றில் தெளிவாகவே காணமுடிகின்றது. இக்குறையை இனிவரும் போட்டிகளில் கவிஞர்கள் கவனத்துடன் களைவார்களாக!

    இவற்றினின்று மாறுபட்டுத் தன்தோளில் அமர்ந்திருக்கும் மகன் எவ்வாறு வாழவேண்டும் என்பதைப் புலவர்கள் அரசர்கட்குச் சொல்லும் ’செவியறிவுறூஉ’ பாணியில் தந்திருக்கும் ஓர் இலட்சியத் தந்தையை இங்கே கண்டேன். ’வரம் வேண்டும்…’ எனும் தலைப்பில் அவர் வடித்திருக்கும் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகவும், கருத்துச்செறிவுள்ள அக்கவிதையைப் படைத்தளித்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகவும் தேர்ந்தெடுக்கிறேன்.

    …என் அனுபவ உயரத்தில்
    அவன் அகிலத்தைக் கண்டு
    தனக்கொரு வழியினை
    தானே அமைத்து 
    தலை நிமிர்ந்து
    நடந்திட வேண்டும்!

    ஊர் கோவில் திருவிழாவை
    உயரத்தில் இருந்துப் பார்த்தாலும்
    தானுயரும் நிலை வரும்பொழுது
    வானோக்கி நடக்காத
    வரமவனுக்கு வாய்க்க வேண்டும்!

    தள்ளாடி நான் நடக்கும்
    பொல்லாத காலம்
    புலருகின்றபொழுது
    எல்லோரும் போற்றும் வண்ணம்
    என் இரு கரம் பற்றி
    மெல்ல அழைத்துச் செல்லும்
    நல்ல மனம் நாளு மவன்
    நாதனருளால் பெற
    வேண்டும்!

    இக்கவிதையேயன்றி, (படத்திலிருக்கும்) குழந்தையையும், தந்தையையும் மவுனமாக்கி அருகிருக்கும் மரத்தைப் பேசவிட்டிருக்கும் புதுமைக் கவிஞர் ஒருவரையும் சந்தித்தேன். இப் புதியமுயற்சி என்னை வெகுவாய்க் கவர்ந்தது. சாதாரண மனிதனைப்போல் அல்லாமல் ஓர் மாமனிதனைப்போல் அல்லவா அந்தமரம் தத்துவங்களை உதிர்த்துள்ளது!!
    திரு. சுரேஜமியின்மரம் பேசியது’ எனும் அக்கவிதையை இவ்வாரத்தின் ’பாராட்டத்தக்க கவிதை’யாய்ச் சுட்ட விரும்புகிறேன்.

    அம்மரம் பேசியதை நாமும் செவிமடுப்போம்…

    …எவர் தந்த விதையோ
    இன்று நான் மரமானேன்;
    எத்தனை இன்னல்கள்
    ஏற்ற மரமாக?
    …வாழும் வரை
    உயிர்க்காக;
    வீழும்போது
    உனக்காக!!
    என்னிடம் கற்றுக்கொள்!
    தன்னிடமிருந்து கொடுத்தால்
    தர்மம்!
    தான் மடிந்து கொடுத்தால்
    தானம்!
    சொல்வாயா தாங்கி
    நிற்கும் குழந்தைக்கு?

    இத்தகைய புதுமைச் சிந்தனைகள் தொடர்க!

    பாராட்டுப் பெற்ற கவிஞர்களுக்கும், சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கும் கவிஞர்களுக்கும் என் நெஞ்சுநிறை வாழ்த்துக்கள்! தொடர்ந்து ஊக்கத்தோடு பங்குபெறுக! சிறந்த ஆக்கங்களைத் தருக!

     

    Share
  • நரசிம்ம திருமந்திரம்

    கிரேசி மோகன்
    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
    ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

    ஓவியம்: கேஷவ்
    ஓவியம்: கேஷவ்

    வெண்பாவாக்கம் தமிழில்
    ————————————————

    ’’வீரியன் வீரன் வியாபகன் சைதன்ய
    சூரியன் சூக்கும காரியன் -கூறிய
    சிங்கன் எதிரிக்கு சொப்பனம் காலகாலன்
    மங்களம் சேர்த்திடும் மால்’’….(1)
    ’’எமக்கே எமக்கென்று இவ்வுடம்பைப் பேணி
    எமர்க்கே அளிப்பீர் எரித்து -நமக்கே
    நமக்குண்டு நாரண நாமமதை நெஞ்சில்
    சுமப்பீர் அதுதான் சுகம்’’….(2)

    ’’மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
    உய்யும் ஒரேஆன்மன் ஒளியாக -அய்யநின்
    ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
    சீரான வாழ்வில் செலுத்து’’….(3)

    ’’பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்
    சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
    எங்கும் திகழ்வோனை ஏத்து’’….(4)

    ’’சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
    எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
    தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
    சீராக ஆடிடும் சேய்”….(5)

    ’’திருப்பாற்க் கடலில் திருவனந்தப் பாய்மேல்
    விருப்பாய்க் கிடப்பாய் வெகுண்டால் -உரத்தால்
    இரணியனைக் கொல்ல இரும்பைப் பிளந்து
    நரசிங்கம் ஆவோய் நம:’’….(6)

    ’’காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
    ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
    மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
    தாயொத்த தாயத்தைத் தேடு’’….(7)

    ’’எங்கரி என்றே இரணியன் கேளும்முன்
    அங்கொரு தூணில் அதிர்ந்தவன் -சங்கரி
    அண்ணனை ஆகாய வண்ணனை ஆனந்தக்
    கண்ணனை நெஞ்சே கருது….(8)

    ’’தந்தைசொல் மந்திரம் தப்பென்ற பிள்ளைக்காய்
    அந்தவோர் தூணில் அலமலங்க -வந்திருந்து
    மன்னன் இரணியன் மார்பைப் பிளந்தவனைக்
    கண்ணனை நெஞ்சே கருது’’….(9)

    ’’எந்தையே எவ்வுயிர்க்கும் முந்தையே ஏகாந்த
    சிந்தையே சிக்காத விந்தையே -கந்தையே
    ஆனாலு(ம்) என்நெஞ்சைக் கட்டிக் கசக்கிடு
    தூணாளும் சிங்கா தயவு’’….(10)

    ’’தூணுண்டு வீட்டில் துரும்புமுண்டு, வாஞ்சையாய்
    நானுண்டு வாராய் நரசிம்மா -பூநின்ற
    சாந்த இலக்குமியை ஏந்திக் களிக்கின்ற
    காந்த வடிவில் கனிந்து….(11)

    ’’முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை
    வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல்
    இல்லை இறையென்று சொல்லி இரையாக
    மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து’’….(12)
    நரசிம்மாவதாரம்….
    ———————————-

    பாகவதம் ஸ்ரீமத் நாராயணீயம் வாசித்து வெண்பாக்களாக்கிக் கொண்டிருக்கிறேன்….நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு
    நரசிம்மாவதாரத்தை பகிர்ந்து கொள்கிறேன்….
    இரணியன் பெற்ற வரம்
    ——————————————-
    ’’அல்லில், பகலில், அகத்துள், அதன்வெளியில்,
    புல்புழு, பூச்சி, பறவையால், -கொல்லும்
    மனிதனால், காட்டு மிருகத்தால், சாகா
    தனதுயிர் கேட்டுத் தவம்….(1)
    பிரகலாதன் ஜனனம்
    ————————————-
    இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
    வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
    மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
    தோன்றினன் நாரணத் தொண்டு….(2)

    ”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
    பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
    கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
    நற்கதியை நாரதன் நன்கு….(3)
    *கயாது-பிரகலாதன் தாயார்
    பிரகலாதனை தன் வழிக்கு கொண்டு வர இரணியன் வழிகள்
    ——————————————————————————————————–
    அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
    அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
    இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
    மறையென நின்றான் மகன்….(4)

    முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
    முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
    காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
    கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….(5)

    பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
    பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
    மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
    சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….(6)

    விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
    மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
    பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
    பேரலை போலெழுந்தான் பிஞ்சு….(7)

    கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
    நாவின்தன் மென்மை நலிந்தது, -சாவிந்த
    பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
    நொள்ளையான ஆட்கள் நமுத்து….(8)
    இரணியன் -பிரகலாத சம்வாதம்
    —————————————————————————
    ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
    கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
    நாரண சக்திக்கு பூரண பக்தியே
    காரணம் என்றான் கொழுந்து….(9)

    காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
    போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
    ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
    கூடத்து தூணுக்கே கை….(10)
    நரசிம்மர் தூணில்
    ——————————-
    பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
    சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
    தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
    வேகமாய் வைகுண்டம் விட்டு….(11)
    இரணிய வதம்
    —————————–
    கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
    உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
    பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
    காதுசிகை கோதி குதிப்பு….(12)
    சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
    சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
    இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
    கரநுனியால் கீறிக் கிழிப்பு….(13)….
    பிரகலாதன் நரசிம்மர் உக்ரம் தணித்தல்
    ————————————————————————
    ஆவேச மான அரியை அடக்கிட
    பூவாசத் தாயே பயந்திட -சாவாச
    மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
    தேகம் தழுவத் தணிவு….(14)

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….(15)
    லக்‌ஷ்மியுடன் சாந்த நரசிம்மர்
    ———————————————————
    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….(16)
    —————————————————————————————————————-

    Share
  • செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு

    Martian glacier

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001

    http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/

    Mars dust cover ice


    செவ்வாய்த் தளத்திலே
    செம்மண் தூசிக் கடியிலே
    கண்ணுக்குத் தெரியும் வைரங்கள்
    வெண்ணிறப் பனிக்கட்டிகள் !
    “புனித பசுத்தளம்” என்னும்
    பனித்தளம் மீது
    முக்காலி  ஃபீனிக்ஸ் தளவுளவி
    உட்கார்ந்து உளவுகிறது !
    கோடான கோடி ஆண்டுக்கு முன்
    ஓடிய ஆற்று வெள்ளத்தின்
    நாடி நரம்புகள், தடங்கள் தெரியுது !
    பனிக்கட்டி உறைந்த
    நீரென்று
    நிரூபித்துக் காட்டியது
    தளவுளவி !
    செவ்வாயில் உயிர்
    மூலச் செல்களின் சந்ததிகள்
    ஆழ்பனிக் கடியிலே
    வாழ்ந்து கொண்டு தூங்குதா என்னும்
    வினா எழும்
    விண்வெளிப் பயணத்தில் !

    +++++++++++++++++++

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]


    MARS GLACIERS


    செவ்வாய்க் கோள் தளத்தில் ரேடார் கருவி மூலம் சேகரித்த பத்தாண்டுக் கால பனிக்களத் தடிப்பையும், அதன் நடப்பையும் ஆழ்ந்து ஆராய்ந்தோம். பனித்திரட்சி [Glacier] என்பது ஒரு பெரும் பனிக்குன்று. அதற்கென தனித்த பனித்தள ஓட்டத் தடமும், தோற்ற வரி வடிவமும் உண்டாகி, எமக்கு அதன் மென்மைத் தன்மையைக் காட்டுகிறது.   இவ்வரிப் படங்களை பூமியின் பனித்திரட்சி [Earth’s Glaciers] வரை படங்களோடு ஒப்பிட்டு, நாங்கள் பனித்தள ஓட்ட கணினி மாடல்களை அமைக்கிறோம்.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர், நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்.

    செவ்வாய்க் கோளின் பனித்திரட்சி [Mars Glacier] பனிக்கட்டி அளவைக் கணித்ததில் அதன் கொள்ளளவு 150 பில்லியன் கியூபிக். செ.மீ. என அறிந்தோம்.  அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்பினால் 1.1 மீடர் [3 அடி] தடிப்பு பனித்தள வடிவம் பெறும்.  இந்த பனிக்கடி ஏரிகள் யாவும் செவ்வாய்க் கோளின் வடதென் பகுதிகளின் நடுப்புறத்தில் அமைந்துள்ளன.

    நன்னா கார்ல்ஸன் [காலநிலைப் பனித்திரட்சி நிபுணர்]

    Mars Ice cover

    செவ்வாய்க் கோள் தளத்தில் செய்த புதிய ஆய்வு அறிவிப்பு 

    2015 ஏப்ரல் 9 ஆம் தேதி  “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் அறிவிப்பு மூலம் டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் நீல்ஸ் போஃஹ்ர் ஆய்வகக் காலநிலை அறிவியல் பனித்திரட்சி நிபுணர் [Climatologist & Glacier Expert ] நன்னா கார்ல்ஸன் தெரிவிப்பது : செவ்வாய்க் கோளில் புதைந்துள்ள பனிதிரட்சிக் குன்றுகள் [Mars Buried Glaciers] பேரளவு பனிக்கட்டியைக் கொண்டுள்ளன.   அதைச் செவ்வாய்க் கோள் தளம் முழுதும் பரப்ப முடிந்தால், பனி மூன்றடி [1.1 மீடர்] உயரம் தடிப்பாகும் !   மேலும் மூடிய தூசிக்குக் கீழிருக்கும் பனித்திரட்சி வளையங்களில் [Glacier Belts] உள்ளது உறைந்த நீரே [Frozen Water] தவிர  அது உறைந்த கார்பன் டையாக்சைடு இல்லை [Not Frozen CO2] என்பது தெளிவானது.  செவ்வாய்க் கோளின் செந்நிறத் தூசி, பனித்திரட்சியை மூடி, உறைந்த பனிநீர் பரிதி வெப்பத்தில் ஆவியாக மறைய விடாது தடுத்து வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.

    “நீர் இருப்பு உயிரின வளர்ச்சிக்கு மிக முக்கிய மென்று நாமறிவோம்.  செவ்வாய்க் கோளில் நாங்கள் இப்போது கண்டிருப்பது வெறும் நீர் மட்டுமில்லை; அதற்கும் மேற்பட்ட பொருட்கள்:  நமது உடலில் காணும் உயிர் வளர்ச்சிச் சத்துக்களான ஸோடியம், பொட்டாஸியம், மெக்னீஸியம், ஃபுளுரைடுகள் !  ஆயினும் உயிரின விருத்திக்கு ஆதாரமான ஆர்கானிக் மூலக்கூறுகள் இன்னும் செவ்வாயில் காணப்பட வில்லை !  இனிமேல் திட்டமிடும் நாசாவின் அடுத்த பயணம் செவ்வாயில் உயிரினம் வாழ்ந்து வந்திருக்கிறதா என்று கண்டறியச் செல்லும்.”

    “மேலும் இந்த தளப்பகுதி செவ்வாயில் எதிர்காலப் பயணிகள் குடியிருக்கத் தகுதி உள்ளதா என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியும்.  அது நாசாவின் எதிர்காலப் பயணத் திட்டத்தில் ஒன்றாக இருக்கும்.”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.


    “இறுதியில் நாங்கள் செவ்வாய்த் தள மண்ணை ஆராய முடிந்து அதில் ஒட்டி இருப்பது உறைந்த நீரென்று உறுதிப் படுத்தினோம்.  மேலும் நீரான அதைத் தொடவும், சுவைக்கவும் முடிந்தது !  இதற்கு முன்பு சாதிக்காத ஒரு சோதனை அது !  அதன் சுவை மிக்க இனிமையானது !  இதைக் கண்டதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம்.

    வில்லியம் பாய்டன், ஃபீனிக்ஸ் விஞ்ஞானி, அரிஸோனா பல்கலைக் கழகம். [ஜூன் 2, 2008]

    “ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது.  தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது.  ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது.”

    டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

    “செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம்.  எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன் படுத்தவும் முடியுமென நினைக்கிறேன்.  அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன்.  செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை!  முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

    மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

    Kasei Valles of Mars

    21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் மகத்தான விண்வெளிக் கண்டுபிடிப்பு

    ஆகஸ்டு முதல் தேதி செவ்வாய்க் கோள் தளத்தில் உள்ள பனித் திரட்டுகளை உருக்கி நீரென்று நிரூபித்து நாசாவின் ஃபீனிக்ஸ் விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் ஒரு மகத்தான பொன் மைல் கல்லை நிலைநாட்டினார் !  இதுவரை அது நீர்ப்பனிக் கட்டியா அல்லது உறைந்த கார்பன் டையாக்ஸைடு வாயுக் கட்டியா என்னும் குழப்பத்தில் இருந்தது.  இப்போது அந்து ஐயமின்றி 100% நீர் என்பது உறுதியானது ! ஃபீனிக்ஸ் தளக்கருவி பனிக்கட்டியை உருக்கி நீரென்று சுவைத்துப் பார்த்து விட்டது என்று விஞ்ஞானிகள் பீடும், பெருமிதமும் கொள்கிறார் !  இந்த மகத்தான வெற்றி நாசாவுக்கு ஃபீனிக்ஸின் ஆய்வுக் காலத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டாலர் செலவில் நீடிக்க (செப்டம்பர் 30 தேதி வரை) அனுமதி கிடைத்துள்ளது !  செந்நிறக் கோள் செவ்வாயில் நீர் இருப்பது மெய்ப்பிக்கப் பட்டாலும் ஆங்கே உயிரினம் விருத்தி அடைந்ததற்குரிய சான்றுகள் இன்னும் கிடைக்க வில்லை !

    Clipboard02

    ஓராண்டு முன்பு ஏவப்பட்ட ஃபீனிக்ஸ் தளவுளவி விண்கப்பல் செவ்வாய்க் கோளில் நீர்  இருக்கிறதா என்று அறியவும், உயிரின மூலவிகளை வளர்க்கும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் (Complex Organic Molecules) உள்ளனவா என்று தெரிந்து கொள்ளவும் அனுப்பப் பட்டது.  அதற்கும் முன்னால் சென்று செவ்வாய்க் கோளைச் சுற்றிய ஆடிஸ்ஸி விண்கப்பல் (Odyssey Spacecraft) ஃபீனிக்ஸ் தளவுளவி இறங்கப் போகும் களத்தில் பனிக்கட்டிகள் உருகுவதைப் படமெடுத்து அனுப்பியது.  இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாய் இறங்கிய ஃபீனிக்ஸ் தளவுளவி செவ்வாய்த் தள மண்ணை அள்ளி இரசாயன ஆய்வுக் கருவியில் இடும் அகப்பையைக் கொண்டது.

    ஃபீனிக்ஸ் தளவுளவி நச்சு மூலக்கூறு (Toxic Molecule) கண்டது

    நாசா விண்தேடல் விஞ்ஞானிகள் செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவியின் மெக்கா கருவி [Microscopy, Electrochemistry, Coductivity, Analyzer (Meca)] ஒரு நச்சுப் பொருளைக் கண்டுள்ளதாகக் கூறினார்.  ஆகஸ்டு 5 ஆம் தேதி தளவுளவியின் அகப்பை எடுத்த மாதிரி மண்ணில் இரசாயனத் தீவிர இயக்கமுடைய பெர்குளோரேட் (Perchlorate) உப்பு கலந்திருப்பதாகக் கண்டது.  மேலும் அந்த இரசாயனப் பொருள் மற்ற இடத்திலும் பரவி உள்ளதா என்று அறியப்படும்.  பூமியில் மிக்க வரட்சியான பாலைவனப் பகுதிகளில் பெரும்பாலும் அந்த பெர்குளோரேட் இரசாயனம் காணப்படுகிறது.  செவ்வாய்த் தளத்தை ஒத்த தென் அமெரிக்கா சில்லியின் அடகாமா பாலைவனத்தில் (Atacama Desert, Chille) அது இருப்பதாக அறியப்படுகிறது.

    Martian water

    பெர்குளோரேட் உப்பு உயிரினத்தை விருத்தியும் செய்யாது, சிதைக்கவும் செய்யாது.  அது ஓர் ஆக்ஸிடைசிங் அயான் (Oxydising Ion). அதில் ஒரு குளோரின் அணுவை, நான்கு ஆக்ஸிஜென் அணுக்கள் சுற்றி உள்ளன.  அது இரசாயன இயக்கத்தில் ஆக்ஸிஜன் வாயுவை வெளியாக்குகிறது.  ஆனால் அதிலிருந்து குளோரின் வாயு வரவில்லை.  சில உயிரினச் செல்கள் பெர்குளோரேட்டைத் தீனியாய் எரிக்கின்றன. சில பயிரினங்கள் அதனைத் தம்முள்ளே சேமித்து வைக்கின்றன.  முக்கியமாக பூமியில் ராக்கெட் உந்திச் செல்ல பெர்குளோரேட் இரசாயனம் எரிசக்தியில் (Used in Rocket Fuel) பயன்படுகிறது.

    பூமியில் வாயுத் தூசிகள் சூரிய ஒளியில் பட்டு பெர்குளோரேட் மூலக்கூறு உருவாக்கப் படுகிறது.  பிறகு அது வரண்ட தளத்தின் மீது தங்கி விடுகிறது.  ஈரமான அரங்குகளில் அது மண்ணுக்குள் இறங்கிக் கொள்கிறது.  பூமியில் சில வித பாக்டீரியாக்கள் தமது உயிர்ச்சத்து மாறுபாடுக்கு (Metabolism) பெர்குளோரேட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன ! “பெர்குளோரெட்டுகள் செவ்வாய்க் கோளின் தளங்களில் நீரிருந்த வரலாற்றைச் சொல்லும்,” என்ற் ஃபீனிக்ஸ் ஆய்வாளர் ரிச்சர்டு குயின் (Richard Quinn) கூறினார்.

    Clues for water in Mars

    செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு !

    2008 மே மாதம் 30 ஆம் தேதி சமீபத்திலே 420 மில்லியன் டாலர் திட்டமான செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது ! “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி ! மெய்யாக ·பீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப் பட்டது.  அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ·பீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது !  மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்ட முள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  அடுத்து ·பீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது.  அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி !  அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

    Flood waters on Mars -1

    ஃபீனிக்ஸ் எதிர்த்தள்ளி உந்துகள் இயங்கிக் கீழே மெதுவாக இறங்கிய போது மேலாகக் கிடந்த செம்மண்ணை வெளியேற்றித் தோண்டிய 6 செ.மீ. (~2.5 அங்குலம்) ஆழப் பள்ளத்தில் பனிக்கட்டி மாதிரி எடுக்கப்பட்டது.  அவ்விதம் தளவுளவியின் கரத்தில் எடுக்கப்பட்டு முதன்முதலில் கண்களில் தெரிந்த பனிக்கட்டி விஞ்ஞானிகளிடையே உற்சாகக் கொந்தளிப்பைத் தந்திருக்கிறது.  புதிய உலகில் குளிர்ந்த சுத்தமான நீர்க் கண்டுபிடிப்பு மனிதப் பயணத்துக்கும், குடியேற்றத்துக்கும் மிகவும் உதவிடும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயச் செய்தியாகும்.  திட்டமிட்டபடித் தளவுளவி பனித்தளத்தில் தடம் வைக்காது வேறு வேண்டாத பாறைத் தளத்தில் பாதம் பதித்து விட்டதோ என்றோர் ஐயப்பாடு முதலில் எழுந்தது !  அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது.  அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது !  “இன்று என்ன சேதி” என்று கேட்டால் எந்த நாசா விஞ்ஞானியும் “செவ்வாயில் நீர்ப்பனிக் கட்டியைக் கண்டோம்” என்றுதான் சொல்கிறார்.  இந்த பனித்தள இடத்தைதான் நாசா விஞ்ஞானிகள் உன்னதப் படமெடுப்புக் காமிரா மூலம் [High Resolution Imaging Science Experiment (HiRISE Imager of Mars Orbiter)] முன்னால் விண்ணுளவிக் கப்பல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.

    Fig 1A South Polar Ice Depth

    செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன.  துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும்.  நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது.  ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப்படுகிறது.  துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.

    பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம்.  செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது.  அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே !

    Fig 7 North Polar Ice Cap

    செவ்வாய்க் கோளின் துருவப் பனிப் பாறைகள்

    செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது!  துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது.  வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது!  மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது.  கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.

    அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன.  கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

    aja

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    Picture Credits:  NASA, JPL, ESA & Wikipedia

    1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
    2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
    3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
    4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    6  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
    [Author’s Article on Mars Missions]
    7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
    10 http://www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles)  [Aug 31, 2005]
    11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
    12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
    13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
    14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007]
    15 Phoenix Mission Control Team Poised for Epic Landing on Mars Planet – The Dailey Galaxy (www.dailygalaxy.com/) [May 23, 2008]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(Phoenix Launch Aug 7, 2007)
    17 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (Mars Express Radar Finds Water Source in Mars South Pole)
    18. BBC News – Mars Lander is in Good Health [May 27, 2008]
    19 The New York Times – Mars Lander Transmits Photos of Arctic Terrain [May 27, 2008]
    20 RedOrbit News – Phoenix Lander Spotted from Mars Orbiter (www.redorbit.com) [May 28, 2008]
    21 Future Mission to Mars – Follow on Mars Missions / Mars Sample Return [May 28, 2008] (www.vectorsite.net/tampl_08.html)
    22 CNN News : Pictures Boost Hopes for Mars Ice Discovery [May 31, 2008]
    23 NASA’s Phoenix Lander Robotic Arm Camera Sees Possible Ice [May 30, 2008]
    24 Twittering from Mars – The Phoenix (Mars Lander Probe) on Ice [June 3, 2008]
    25 Phoenix Lander’s Robotic Arm Grabs a Scoop of Mars (Soil) [June 2, 2008]
    26 VOA News : Phoenix Spacecraft Confirms Water on Mars By : Art Chimes Washington DC [Aug 1, 2008]
    27 VOA News : NASA’s Phoenix Lander Finds Toxic Chemical on Mars [Aug 5, 2008]
    28 Phoenix Mars Team Opens Window on Scientific Process [Aug 5, 2008]
    29 BBC News : Open Science Promised for Phoenix [Aug 6, 2008]
    30 The New York Times : Alkaline Soil Sample from Mars Reveals Presence of Nutrients for Plants to Grow [June 27, 2008]
    31 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40806051&format=html (திண்ணைக் கட்டுரை-1)
    32 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805291&format=html (திண்ணைக் கட்டுரை-2)
    33 ABC News : Phoenix Lander Finds Water on Mars [Aug 1, 2008]

    34  Water on Mars Discovered by Phoenix Mission [Aug 5, 2008]

    35  Sky & Telescope Magazine – Phoenix Digs in By : Kelly Beatty  [September 2008]

    36.  http://www.sciencedaily.com/releases/2014/09/140929154248.htm [September 29, 2014]

    37.  http://www.marsdaily.com/reports/Mars_dust-covered_glacial_belts_may_contain_tons_of_water_999.html  [April 9, 2015]

    38. http://www.onenewspage.com/n/Science/754zwhlg5/Dust-covered-ice-glaciers-found-on-Mars.htm  [April 8, 2015]

    39.  http://www.sciencedaily.com/releases/2015/04/150408102701.htm  [April 8, 2015]

    40.  http://phys.org/news/2015-04-mars-belts-glaciers-frozen.html  [April 7, 2019]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  April 11, 2015

    Attachments area
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    crazy

    தாயின் மடிகண்டு தாவும்சேய்க் கன்றேபோல்,
    ஆயனவன் தோள்கண்ட தாய்ப்பசு, – பாய்ந்துரைப்பு,
    தாளே கதியென்று வாளாய்க் கிடந்தேனே!,
    தோள்தந்தாய் தோளேதந் தாய் …. கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
    தின்பது தூக்கம் தவிர்த்(து)ஆயர் -நண்பனின்,
    ஊது குழலாய் உருமாறி என்நாளும்
    கீதகோ விந்தமதைக் கூவு ….கிரேசி மோகன்….

    Share
  • குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா

    amm
    படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்
    மன உலகை மாற்றிட முடியும்.
    —————————————————————————
    – குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு –

    வந்தவாசி.: அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

    இவ்விழாவிற்கு இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.ஜீவா அனைவரையும் வரவேற்றார்.

    கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘ படித்துப் பழகு ‘ குழந்தைகள் கதை நூலை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை ந.சுரேஷ்முருகன்,லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    நூலை வெளியிட்ட எம்.எஸ்.தரணிவேந்தன் பேசும்போது, குழந்தைகளுக்குப் புத்திமதி சொல்வதாக நினைத்து, அவர்களிடம் பெற்றோர்கள் எதையும் நாம் திணிக்கக் கூடாது. குழந்தைகளோடு அன்பாக பேச வேண்டும். அவர்களது எண்ணத்தைப் புரிந்துகொண்டு பேசினால் மட்டுமே குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். அப்படிக் குழந்தைகளை மென்மையாக அணுகுவதற்கு மு.முருகேஷ் எழுதியுள்ள இந்தக் கதைப் புத்தகம் நமக்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது என்று பேசினார்.

    விழாவிற்கு தலைமையேற்ற இரா.சிவக்குமார் பேசும் போது, குழந்தைகள் படிக்கிற மாதிரி எளிமையாக கதை எழுதுவது மிகவும் கடினமானது. கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கல்விப் பணியில் செயல்பட்டுவரும் மு.முருகேஷ், குழந்தைகளின் மனவோட்டத்தை அழகாகப் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பிப் படிக்கும் சுவாரசியத்தோடு குழந்தைக் கதைகளை எழுதியுள்ளார். இது நாளைய குழந்தைகளுக்கான நம்பிக்கை புதுவரவு என்று குறிப்பிட்டார்.

    நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றும்போது, குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் என்பதை நாம் முதலில் மனதார ஏற்க வேண்டும். இன்றைய தலைமுறை குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டி முன்னும், கணிப்பொறி முன்னும் அமர்ந்து நிறைய நேரத்தைக் கழிப்பதற்குக் காரணம், அவர்கள் எடுத்துப் படிக்கத் தூண்டும் மாதிரியான எளிய கதைப் புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவே. குழந்தைகளுக்குப் பிடித்தமான மொழியில் நேரடியான புத்திமதி சொல்லாத படைப்பிலக்கியங்களால் குழந்தைகளின் மன உலகை நிச்சயம் மாற்றிட முடியும் என்று கூறினார்.

    நிறைவாக, மா.குமரன் நன்றி கூறினார்.

    படக் குறிப்பு :
    ——————–
    வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’ படித்துப் பழகு’ குழந்தைகள் கதை நூலை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் அ.மு.உசேன் பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். நடுவில், நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ், தொழிலதிபர் இரா.சிவக்குமார், ந.சுரேஷ்முருகன் ஆகியோர் உள்ளனர்.

    Share