-செண்பக ஜெகதீசன்

இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. (திருக்குறள்:1058 – இரவு)

புதுக் கவிதையில்…

இருப்பவர் குணம்தெரிய
இவ்வுலகில்
இருக்கவேண்டும் இரப்பவர்…

இரப்பவரில்லா உலகின்
இயக்கம்,
கயிற்றில் இயங்கிடும்
மரப்பொம்மை போன்றதே…!

குறும்பாவில்…

இரப்பவர்களில்லா உலகின்
இயக்கம்,
கயிற்றிலாடும் பொம்மை இயக்கமே…!

மரபுக் கவிதையில்…

வாங்கிட வறியவர் இல்லையெனில்
   வள்ளல் என்பார் யாருமில்லை,
ஏங்கிடும் இரப்பவர் இல்லாத
   இந்த உலக இயக்கமெல்லாம்,
தாங்கிடும் கட்டிய கயிற்றினிலே
   தங்கியே உயிரிலா பொம்மையது
ஆங்கு மிங்கும் ஆடுதல்போல்
   அதிக பயனெதும் இல்லாததே…!

லிமரைக்கூ…

இருப்பவர்கள் குணம்தெரிய இரப்பவர்கள் தேவை,
இவர்கள் இல்லாத உலகதனின்
இயக்கம்பார், கயிற்றினிலாடும் உயிரிலாப் பாவை…!

கிராமிய பாணியில்…

இருக்கவம்பெரும தெரியணுண்ணா
இருக்க வேணும் எரப்பவனும்,
குடுக்கவனுக்குப் பெருமயில்ல
வாங்க ஆளு இல்லயிண்ணா,
வள்ளலுண்ண பேருமில்ல..

குடுக்க ஆளு இருந்தாலும்
வாங்க ஆளு இல்லாத
ஒலகவாழ்க்க ஒண்ணுமில்ல
கயித்தில ஆடுற பொம்மபோல
வெறுதாப்போவும் வாழ்க்கதானே…

இது
பொம்மலாட்டம் பொம்மலாட்டம்
பலனேயில்லா பொம்மலாட்டம்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.