நான் அறிந்த சிலம்பு – 161
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05. அடைக்கலக் காதை
கோவலன் செய்த அறங்களை மாடலன் பாராட்டி, அவன் மனைவியுடன் தனியாக மதுரை வந்ததற்கு இரங்குதல்
நாவன்மை மிக்க மாடலன்
கோவலன் அங்கு வந்த காரணம் யாது
என்ற கேள்வி எழுப்பி,
அவனது நிலையறிந்து பேசத் தொடங்கினான்.
முதுமறையோனை மத யானையிடமிருந்து விடுவித்தமை
அரசன் அளித்த தலைக்கோலின் சிறப்பால்
புகழ்பெற்ற மாந்தளிர் போன்ற
மென்மையான மேனியளாம் மாதவி
நல்வினை வாய்க்கபெற்ற காரணத்தால்
ஒரு பெண் சிசுவை ஈன்றாள்.
தூய்மையற்ற குழந்தைப்பேறு
தீட்டு நாட்கள் கழிந்தபின்,
வயதில் மூத்த பிற கணிகையர்
அந்தக் குழந்தைக்கு
நல்லதொரு புகழ்வாய்ந்த
பெயரினை இடுவோம் என்று
அழகிய பெயர் ஒன்று சூட்டும்படி
நின்னை வேண்டி நின்றார்.
அவர்களின் தகுதிமிக்க பேச்சைக்கேட்டு
நீ அவர்களிடம் உரைக்கலானாய்:
”முன்னொரு நாளில் இருள் நிறைந்த ஒரு யாமத்தில்
அலைமோதும் பெரிய கடலில் எழுந்த சூறைக்காற்றால்
எம் குலத்தவன் ஒருவனின் மரக்கலம் உடைந்தது.
கரைசேர வழியொன்றும் இல்லாத போதும்
அவன் செய்த அறத்தாலும் தானத்தாலும்
சிறிது காலம் நீந்தியபடி இருந்தான்.
அவன் முன்னே ஒரு தெய்வம் தோன்றி…
“அசுரர் துன்பப்படாமல் இருப்பதற்காக
இத்தீவிற்கு இந்திரன் ஏவல் காரணமாய்
நான் இங்கு வாழ்ந்து வருகிறேன்.
உனது பெரிய சிறந்த தானத்தின் பயன்
உன்னைவிட்டு நீங்காது.
எனவே கடலில் நீந்திய நின்துயர்
தீரும் வண்ணம்
தண்ணீரில் நீ படும் இத்துன்பம் நீங்குக!
எனக்கூறித் தம் மந்திரத்தால்
அவனைக் கரையில் சேர்த்தது.
அத்தெய்வத்தின் பெயரை என் குழந்தைக்கு இடுங்கள்!”
என்று நீ கூறினாய்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 20 – 35
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
படத்துக்கு நன்றி: கூகுள்