இன்றும் உலகம் மாறவில்லை!
-ரா.பார்த்தசாரதி
பிள்ளை பிறந்தால் என்றும் பேரின்பம்
குலம் தழைக்க வந்தத் திருமகன்
பெண் பிறந்தால் ஏனோ பெருமூச்சு
பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு!
இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது
இதனை அரங்கேற்றுவதும் பெண் இனமே!
குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே…
பெண் குழந்தைகளைப் புறக்கணிப்பதும் ஏனோ?
தன்னைப்போல் பிறரையும் நினை
ஆண், பெண் பாகுபாடின்றி நினை
பெண்ணே உன்வீட்டின் செல்வம்
உன் குடும்பத்தில் அவளொரு சேமக்கலம்!
பெண்ணை ஆணுக்கு நிகர் என நினை
தங்கமெனத் தன்பெண்ணை வளர்த்தான்
தங்கத்தைத் திருமண பந்தத்தில் தொலைத்தான்
பிறந்த வீடு விட்டு புகுந்தவீடு புகுந்தாள்!
பிரித்துப் பாகுபடுத்தும் பெண்ணின் வாழ்க்கை,
எதிர்காலம் எப்படியோ என நினைக்கும் வாழ்க்கை
தன்னலமின்றிப் பிறர் நலனுக்காகப் புகுந்தாள்
தன் முன்னேற்றத்தைக் காணத் துடித்தாள்!
பிறந்த வீட்டில் கொடிகட்டிப் பறந்தாள்
கொம்பைச் சுற்றிப் படரும் கொடியானாள்
இன்று உரிமைக்காகச் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறாள்
விட்டுகொடுக்கும் வாழ்க்கையே உயர்வென நினைக்கிறாள்!
பிள்ளை வீட்டில் பிச்சை எடுக்கும் பெற்றோர்
பெண் வீட்டில் மரியாதையாக நடத்தப்பட்டாலும்
பழமை பேசி, தன்னுக்குள் போட்டுக்கொண்ட வேலி
என்று மாறுமோ இந்தத் தேவையற்ற வேலி?
மருமகனை, மகனாக நினைக்கத் தெரிந்தாலும்
மருமகளை, மகளாக நினைக்கத் தெரிந்தாலும்
பழமை நீக்கி, காலத்திற்கேற்ப வாழத் தெரிந்தாலும்
பெண்ணே! இன்றும் உலகம் மாறவில்லை!