Blog

  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

    அன்பினிய நண்பர்களுக்கு,

    Google_Appliance

    வணக்கம். சென்ற மாதம் (மார்ச் 1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் எழுதிய ஒரு கட்டுரை மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரை குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

    திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

    வணக்கம்

    கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

    இணையத்தில் இன்று பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் பல பயன்பாடுகளில் ஒன்றாக கட்டுரையாளர் வரைபடச் சேவையை தேர்ந்தெடுத்து முத்தான தகவல்களை தந்திருக்கிறார். கூகிள் தொடர்ந்து இந்திய இரயில் தடப் பயணம் குறித்து வரும் செய்திகள் முதற்கொண்டு பல விவரங்களை மிக நேர்த்தியாக, புரியும் வண்ணம் தந்திருப்பது அருமை.

    இணைய பயண்பாடுகளின் ஒரு பகுதியை மட்டும் குறித்து இவர் எழுதி இருப்பது நன்றாக இருந்தாலும் இன்னும் எத்தனையோ விவரங்கள் தமிழில் பதியப் படாமல் இருக்கின்றன. இன்றைய பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் தொலைபேசிகள் ஆரம்பித்து வீட்டில் பார்க்கும் தொலை காட்சி வரை இணையத்தின் ஆக்டபஸ் கரங்கள் நீண்டிருக்கின்றன. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அவற்றை நெறிபடுத்தி தேவையான பல விவரங்களை கட்டுரையாளர் தொகுத்து சிறு மின்னூலாக வழங்கினால் பலருக்கும் நல்லதொரு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

    இந்தக் கட்டுரையாளரை நான் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கிறேன். மீண்டும் வாழ்த்துகள்.

    அன்புடன்
    ஐயப்பன்

    இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறோம். பயனுள்ள நல்ல கட்டுரைகளை வரவேற்கிறோம் நண்பர்களே. அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 50

    சு. கோதண்டராமன்.

     

    ருத்ரம்

    619px-Rigveda_MS2097

    இந்த நூலில் ரிக் ஸம்ஹிதையின் கருத்துகளைப் பற்றி மட்டும் பார்த்தோம். வேதத்தின் மற்ற பகுதிகளான யஜுர், சாமம், அதர்வணம், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியன பொய்யா?

    ஆதியில் தோன்றிய வேதமான ரிக் ஸம்ஹிதையின் மையக் கருத்துக்கு இணக்கமாக இருப்பது பாமர மனிதனின் சொல்லாக இருந்தாலும் அது வேதமே என்பது பாரதியின் கருத்து.

    வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த
    மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்.

    வேத சாரம் என்ன? மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம் –
    பிரபஞ்சத்தை இயக்கும் நியதி ஒன்று உள்ளது. ருதம் என்பதும் தர்மம் என்பதும் வ்ரதம் என்பதும் அதுவே. அதை இயக்கும் சக்தியே பரம்பொருள். அதை எப்பெயரிட்டும் அழைக்கலாம். எந்த முறையிலும் வழிபடலாம். அது நம்மை விட மேலானது என்ற உணர்வோடு கூடிய பணிவு மனதில் இருத்தல் வேண்டும்.

    நியதிப்படியே பிரபஞ்சத்தில் எல்லாம் நடைபெறுகிறது. மனித நியதியாவது- மேலோரைப் பணிதலும், கீழோரைக் காத்தலும் ஆகும். இதுவே செயலாகப் பரிணமிக்கும்போது யக்ஞம் ஆகும். இந்த நியதியை மீறுவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும். துன்பம் நீங்க தெய்வத்தைச் சரணடைவது தவிர வேறு வழி இல்லை.

    யக்ஞமும் சமீ என்ற அருஞ்செயலுக்கான உழைப்பும் எல்லா நலன்களையும் தரும். இறுதி லட்சியமாகிய ஒளியை, அதாவது தெய்வ நிலையை, அடைவதும் அதனால் சாத்தியமாகும்.

    வேதத்தின் இந்த மையக் கருத்துக்கு உடன்பாடாக உள்ளவை உண்மையான வேதங்கள். வேதம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் இதற்கு மாறான கருத்தைக் கூறினால் அவை பொய் வேதங்களாகும்.

    ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி இதுவே மேலான தெய்வம் என்று சொல்லும் நூல் வேதம். இது தவிர மற்றவை எல்லாம் தெய்வமல்ல என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

    இந்த வழிபாட்டுமுறை சிறந்தது என்று ஏதேனும் ஒரு முறையைச் சுட்டிக் காட்டும் நூல் வேதம். மற்ற முறைகள் எல்லாம் உங்களை நரகத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

    மனிதனின் இறுதி லட்சியம் தர்மத்தை அனுசரித்து, கடுமையாக உழைத்து, ரிஷி, மகோனர், சூரி நிலைகளைக் கடந்து ஒளி நிலையை அடைவது என்று கூறுவது வேதம். உண்டு உடுத்து உறங்கி, பிறர் துன்பம் பற்றிக் கவலைப்படாமல் தந்நலமே பெரிதாகக் கருதி உயிர் வாழ்வதுதான் மனித வாழ்வு எனப் போதிக்கும் நூல் பொய் வேதம்.

    இனி இந்தக் கண்ணோட்டத்தில் யஜுர்வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியை ஆராய்வோம்.

    ருத்ரம் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்ளுமுன் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்ற தலைப்பில் சொல்லப்பட்ட ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு-வருவோம்.

    ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
    1. கடந்த காலமாகவும் வருங்காலமாகவும் காலம் கடந்து நிற்றல்,
    2. விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
    3. சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
    4. புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

    இதே கருத்தை ருத்ரம் தனக்கே உரிய வழியில் சொல்கிறது. இங்கு பரம்பொருளுக்கு ருத்ரன் என்று பெயர் அளிக்கப்படுகிறது.

    ருத்ரன் காலம் கடந்தவர் என்பது அழியாதவர்(விக்ஷீணக), பவ: (ஆதிமூலம்), முன்னே பிறந்தவர் (பூர்வஜ) பின்னே பிறந்தவர் (அபரஜ)என்ற சொற்களால் குறிப்பிடப்படுகிறது.

    இடம் கடந்தவர் என்பது பல வகையாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் இருக்கும் இடங்களாகக் கூறப்படுபவை- ஆழமான மடு, ஆற்றுக் கரை, உப்பரிகை, களம், களர்நிலம், குறுகிய பாதை, பெரும்பாதை, சுக்கான் பூமி, சுனை நீர், புல்தரை, பயிர்நிலம், மணல் திட்டு, பெருவெள்ளம், இன்னும் பல.

    மந்திரியாகவும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் சபையினராகவும் அவர் இருக்கிறார். தச்சர், குயவர், கருமார் போன்ற வடிவிலும் அவர் உள்ளார். நல்லவர்களாக மட்டுமல்ல, தீயவராகவும் அவர் உள்ளார். திருடர்களில் பல வகையாகவும் ஏமாற்றுபவர்களாகவும் அவரே காட்சி தருகிறார். ஒருவராக மட்டுமல்ல, பலராகவும் காட்சி தருகிறார். உட்கார்ந்திருப்பவர்கள், நிற்பவர்கள், வழிநடப்பவர்கள், விரைந்து செல்பவர்கள், படுத்திருப்பவர்கள், தூங்குபவர்கள், விழித்திருப்பவர்கள், உரக்கக் கூவுபவர் என்று பல நிலை மனிதர்களாகவும் அவர் உள்ளார். மனிதராக மட்டுமல்ல, குதிரை, நாய் முதலான மிருகங்களாகவும் அவர் உள்ளார்.

    உயிரற்ற பொருட்களும் அவரே- மின்னல், மலை, மழை, மழையின்மை, மாட்டுக் கொட்டகை, தீவு, கட்டில், வீடு, இளம்புல், காய்ந்த சருகு, குகை, காட்டுமரம், குளம், ஒலி, எதிரொலி, மேகம், தேர், மரம், முரசு, முரசுக்குச்சி, முள்காடு, செடி கொடி, வீட்டுப் பொருள், காற்று, புழுதி, தூசி, இன்ன பிற.

    அனைத்தையும் தோற்றுவித்தவர் என்பது பவ என்னும் பெயரால் விளக்கப்படுகிறது.

    அவர் நம்மனோரால் புரிந்துகொள்ளப்பட முடியாதவர் என்பது நாம் முரணாகக் கருதுபவை எல்லாம் அவரிடத்தில் அழகாகப் பொருந்தி இருப்பதிலிருந்து தெரிகிறது. பெரியவர் (மஹத்), சிறியவர் (க்ஷுல்லக), உயரமானவர் (ப்ருஹத்), குட்டையானவர் (ஹ்ரஸ்வ), மகிழ்ச்சி தருபவர் (சம்பு), அழவைப்பவர் (க்ரந்தயத்), கருத்த கழுத்தர் (நீலக்ரீவ), வெண் கழுத்தர் (சிதிகண்ட), சடையர் (கபர்தீ), மொட்டையர் (வ்யுப்தகேச), காய்ந்ததில் உள்ளவர் (சுஷ்க்ய), பச்சையான பொருட்களில் உள்ளவர் (ஹரித்ய), சிவப்பு நிறத்தர் (அருண), மஞ்சள் நிறத்தர் (ஸஸ்பிஞ்சர) என்று அவர் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவர்.

    மைபடிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னினல்லான்
    ஒப்புடையனல்லன், ஒருவனல்லன், ஓரூரனல்லன், ஒருவன் இல்லி,
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும், அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
    இப்படியன் இத்திறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே.
    என்று அப்பர் உரைத்தது இதைத்தான்.

    ருத்ரத்தின் சில தனித் தன்மைகளையும் பார்ப்போம். யஜுர் வேதம் தோன்றிய காலத்தில் அரசனது நிலப்பரப்பு பெருகியது. அவனது வேலைகளும் பொறுப்புகளும் பெருகின. அவனுக்கு ஆலோசனை சொல்ல மந்திரிகளும் ஆலோசனை சபையினரும் ஏற்பட்டுவிட்டார்கள். இந்த மாற்றங்கள் ருத்ரத்தில் காட்டப்படுகின்றன. ருத்ரன் மந்திரியாகவும் சபையினராகவும் காட்சி தருகிறார்.

    ருத்ரத்தின் மற்றொரு தனித்தன்மை- இதில் இறைவனின் கோப முகம் நன்றாகக் காட்டப்படுகிறது. இந்திரன் முதலானோரின் பெருவீரமும் எதிரிகளை அழிக்கும் வலிமையும் பல இடங்களில் பேசப்படுவது போல ருத்ரனும் நல்லோர்களின் தலைவராக இருந்து அவர்களின் எதிரிகளை அழிப்பதற்கு எல்லா ஆயுதங்களையும் தாங்கி எப்போதும் ஆயத்தமாக உள்ளார். 273 போற்றிகளில் 51 இத்தகைய படை வலிமையைப் பறைசாற்றுபவை தாம். இந்த வேறுபாடுகள் அடிப்படைக் கொள்கைக்கு மாறானவை அல்ல.

    இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. பவஸ்ய ஹேதி (பிறப்பை அறுக்கும் ஆயுதம்) என்று அவர் வர்ணிக்கப்படுகிறார். பிறப்பு என்பது இழிவானது என்ற கருத்து ரிக் வேதத்தில் காணப்படவில்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்றாகச் சுவைத்து அனுபவித்தனர். நீண்ட ஆயுள் வேண்டினர். ஆனால், மரணத்துக்கு அஞ்சவில்லை. இறந்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. எங்கும் பிறப்பு ஒரு சுமை என்று யாரும் கருதியதாகத் தெரியவில்லை. பிறப்பை அறுக்க வேண்டும், மீண்டும் பிறவாத நிலையை அடையவேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக யஜுர் வேதத்தில் தான் பார்க்கிறோம். அந்த வகையில் இது ஆதி வேதத்தின் மையக் கருத்திலிருந்து முரண்படுகிறது எனலாம்.

    தமிழ் போன்ற பிற மொழிகளில் தோன்றிய தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களும் ஆதி வேதத்தின் கருத்தைக் கூறும் அளவுக்கு வேதம் என்ற பெயருக்குத் தகுதி உடையன.

    Share
  • ஐந்து கை ராந்தல் (7)

    வையவன்

    அவ்வளவு சீக்கிரம் சிவா திரும்பி விடுவான் என்று தெரு வாசலில் நின்று கொண்டிருந்த திஷ்யா எதிர்பார்க்கவில்லை.
    “என்ன இவ்வளவு சீக்கிரம்?”
    தன் மனசில் திடீரென்று வந்து கவிந்திருந்த தனிமைக்கு அவளைப் பார்ப்பது உற்சாக மளித்தது.
    “விடுதலை கெடைச்சுடுச்சு” என்றான் கிண்டலாக.

    “அப்ப ஜெயில்லேருந்து தான் வர்றீங்களா ஐயா?” என்றாள் திஷ்யா.
    ஆம். பாசம் என்ற சிறையிலிருந்து. அதை இவள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? சிவா மாற்றிச் சொன்னான்.
    “நண்பன் கிட்டேயிருந்து விடுதலை. ஒனக்கு அத்தை கிட்டேயிருந்து கெடைச்சுடுச்சா?”
    உனக்கு என்ன வாய்க் கொழுப்பு என்பது போல் திஷ்யா அவனைப் பார்த்து நாக்கைக் கடித்தாள். இது ஒரு படி முன்னேற்றம் என்று சிவாவுக்குத் தோன்றியது.

    “அத்தை சாயங்கால வண்டியிலே ஊருக்குப் போறாங்க. நீங்க வந்து டிக்கெட் வாங்கிக் கொடுங்க. பிரேம் வியாசர்பாடிக்குப் போயிருக்கான். வேற ஆள் தொணையில்லே….”
    “நானா…” சிவா சற்று தயங்கினான். பிறகு ஒப்புக் கொண்டான்.
    அறைக்குப் போன போது தாமுவிடமிருந்து வந்த கார்டு கிடந்தது.

    ‘அப்பா தேறி வருகிறார். விரைவில் வருகிறேன்’ என்று இரண்டு வரிகள் மட்டும் எழுதியிருந்தான்.
    சிவா குளித்து விட்டு சிறிது நேரம் படுத்தான்.

    பிறகு எழுந்து உட்கார்ந்து மற்றொரு சிறுகதை எழுதத் தொடங்கினான். வெளியே எங்கும் போகவில்லை.
    மாலை ஐந்து மணி ஆனபோது சீதா வந்து “ஸ்டேஷனுக்குப் போக ஒங்களை அக்கா ரெடியாகச் சொன்னா” என்று தகவல் கொடுத்தாள்.

    அத்தையை ரயிலேற்றி அனுப்பிவிட்டுத் திரும்பும் போது சென்ட்ரலின் நடுவே போட்டிருந்த ஆசன வரிசைகளைப் பார்த்தபோது சிவாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

    “கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்துட்டுப் போவோமா?”
    “ஆஹா… எப்படிப்பட்ட இடம் கெடைச்சிருக்கு ஒனக்கு”
    “ஃபேன் ஓடறது. நாலஞ்சு ஸீட் காலியா இருக்கு…”

    “அங்கே பசங்கள்ளாம் தனியா இருக்குமே…” என்று அரை மனசோடு சொல்லியவாறே திஷ்யா சம்மதித்தாள்.
    சிவா அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

    உட்கார்ந்தவுடனே அவள் கேட்ட முதல் கேள்வி.
    “நீ எதுக்குக் கதை எழுதறே?”

    சிவாவுக்கு அவளுக்கு ஒரு ‘கூல் டிரிங்’ வாங்கிக் கொடுக்கும் நினைப்பு எழுந்தது.
    “நாம்ப ஒரு கூல் டிரிங் சாப்பிடலாமா?”
    “மொதல்லே என் கேள்வி!”
    “கொஞ்சம் கூலாச் சொல்லலாமே”
    “காசு வச்சிருக்கியா?” என்று விஷமத்தனமாகக் கேட்டாள்.

    “நீ வாங்கிக் கொடுப்பேண்ணு ஒங்கிட்டே கேக்கறதா நெனப்போ?”
    “சீ… சும்மா வேடிக்கைக்குக் கேட்டேன்.”
    “அப்ப வா போவோம்” என்று எழ முயன்றான் சிவா.

    “எழுந்து போனா எடம் போயிடும்”
    “ஒண்ணு செய்யறேன்… நான் போயி ரெண்டு கூல்டிரிங் வாங்கிட்டு வர்றேன். நீ எடத்தைப் பார்த்துக்க” என்று சிவா சம்மதம் கேட்டான்.

    “ஐயைய… நான் தனியா ஒக்காந்திருக்க முடியாது.. நான் போய் வரட்டா?” என்று கேட்டாள் திஷ்யா.
    “நீ போய் எனக்காக வாங்கிட்டு வந்தா எனக்கு ஷாஹென்ஷா மாதிரி ஒரு ஃபீலிங் வரும்”
    “எனக்கு மட்டும் ஒரு ஷா ஹென்ஸி மாதிரி வராதா”

    “ஷா ஹென்ஷாவுக்கு பெண் பால் ஜஹானரா”
    “தாங்க்யூ பண்டிட்… ரெண்டு பேருமே போக வேண்டாம். வீட்டுக்குக் கௌம்பறப்ப குடிச்சுப்போம். நான் கேட்ட கேள்வி?”
    “சென்ட்ரல் ஸ்டேஷன் நடுவிலே ஹோன்னு இரைச்சலுக்கு மத்தியிலே கேக்கற கேள்வியா இது? சரி நீ ஏன் அதைப் படிச்சே?”

    “எல்லாரும் ஒன் கதையைப் படிச்சிட்டு அழுதாங்க.. ஏன் அழணும்ணு வாங்கிப் படிச்சேன். எனக்கு சிரிப்பு வந்தது?”
    “எதுக்கு சிரிச்சே?…” என்று அவளைக் கூர்ந்து பார்த்தான் சிவா.

    “வாழ்க்கையிலே எத்தனையோ கஷ்டம் இருக்கு. அதிலே என்னமோ ஒன்னைப் பிடிச்சு ஓஹோன்னு பிரமாதப்படுத்திட்டே ஸோ வாட்?”

    அவள் சொல்வது முழுக்க நிஜமில்லை என்று சிவாவுக்குப் பட்டது. நான் ஒன்றும் உன் ரசிகை இல்லை என்று காட்டிக் கொள்கிற மாதிரி அவள் முயற்சிக்கிறாள். அவன் அதை ரசித்தான்.

    எழுத்தாளனின் ரசிகையாக இருப்பதை விட சிவாவுக்கு வேறு என்னவோவாக இருப்பதில் ஒரு சமத்துவம் தேடுகிறாள் என்று புரிந்தது.
    “திஷ்யா, ஒரு விஷயம் தெரியுமா?”

    “சொல்லு” தன் விரல்களுக்கு வைத்திருந்த மருதாணி நன்கு பற்றியிருக்கிறதா என்று கைகளை திருப்பிப் பார்த்துக் கொண்டே விவாதிக்கத் தயாரானாள்.

    “அந்தக் கதை வெளிவந்தப்புறம் சில பேர் எங்கிட்டே தங்களோட சொந்தக் கதையைச் சொல்லி அங்கலாய்க்கிறாங்க.. இதோ இப்ப ரயிலேத்தி அனுப்பினோமே ஒங்க அத்தை.. அவங்க என்கிட்டே ரெண்டு கதை.. சொந்தக் கஷ்டங்கள்தான்… சொல்லிட்டாங்க”

    “நீ அதைக் கதையா எழுதித் தீர்த்து வச்சுடுவியாக்கும்?”

    சவுக்கைச் சொடுக்குவது மாதிரி இவளிடம் ஒரு குத்தல். சிவா அவள் கண்களைப் பார்த்தான். மிக மெல்லிசாக மை தீட்டியிருந்தாள். குத்தல் விடும் போதெல்லாம் அந்த முகத்தில் தோன்றிய ஒரு தனி சோபை நெஞ்சை அள்ளுவதாயிருந்தது.

    ‘கஷ்டங்களைத் தீர்த்துக்கறதை விடவும் அதை நாலு பேரு தெரிஞ்சுக்கிட்டா மேல்ணு பெரும்பாலோர் நெனைக்கிறாங்க!”
    “ஏன் அப்படி?”

    “கேக்கவும் சொல்லவும் பிரச்னை இருக்கறதாலே! மனுஷாள் அப்ப தான் உயிர் வாழறதா நெனைக்கிறாங்க. வாழ்க்கையின் வெகுமானமே அந்தப் பரிவுதான்.”
    “அதுக்குதான் நீ எழுதறியா கதை?”

    “எஸ் அண்ட் நோ”
    “இது ஒரு பதிலா?”
    “திஷ்யா..ஒன் கேள்விக்கு ஒரு பதில்..ஒற்றைப் பதில் தர முடியாது”
    “சமுதாய சீர்திருத்தம்…புரட்சி..லட்சியம்?”

    “அதையெல்லாம் நான் சொல்லிக்கிட்டே எழுத ஆரம்பிச்சா… கதை வராது. பெருக்கல் வாய்பாடுதான் வரும்… எனக்கு ஒரு கதை எழுதினா ஒரு பிரார்த்தனையை முடிச்ச திருப்தி… ஒரு நிறைவு… ஒரு விடுதலை… அதான் பொருத்தம்…”
    “என்ன சொன்னே…பிரார்த்தனையா?”
    “ஆமா” என்றான் சிவா.
    “நீ என்ன ரிஷியா?”

    ஸீட்டுக்கும் முதுகுக்கும் இடையே கூந்தல் உறுத்தியதால் திஷ்யா அதை எடுத்து முன்னே விட்டாள். மார்பின் மீது கன்னங்கரேலென்று விழுந்த அந்த கூந்தல் அவளை ‘ஸெக்ஸி’ யாக்கிற்று.

    அந்த உதடுகளின் சிவப்பிற்கு அந்தகூந்தல் கருமை காட்டிய மாறுபாட்டில் தான் வசமிழப்பதை சிவா உணர்ந்தான்.
    தான் ரிஷியல்ல. அது அப்போது நன்கு உறைத்தது.

    “ரிஷி மட்டும்தான் பிரார்த்திக்கணுமா?”
    “ஏன்… கிழவர்கள்… கிழவிகள்… கையாலாகாதவங்க… கனவு காணும் குழந்தைகள்…” திஷ்யா அடுக்கிக் கொண்டே போனாள்.

    “ஸ்டாப்… உன் லிஸ்ட்லே எழுத்தாளனையும் சேத்துக்க.. அவனும் பிரார்த்திக்கிறான். பரிவிற்காக.. மனித உணர்வுகள் செத்துப் போயிடாம இருக்க. அன்புக்காக”

    அவனுக்குக் கோபம் வருவிக்கும் முயற்சியில் தான் தோற்றதை ஒப்புக் கொள்ள அவனைப் பார்த்தாள்.
    அவன் விழிகளில் ஒரு இரக்கம் அவளுக்குப் புலப்பட்டது. சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்கள் தங்களைக் கவனிக்கிறதைப் பார்த்தாள்.

    உதட்டைச் சுளித்து இமைகளைத் தாழ்த்தினாள்.. அவனுக்கு அவளுடைய கவர்ச்சி அதிகரித்தது.
    கீழே பார்த்துக் கொண்டே கூப்பிட்டாள்.
    “சிவா”

    “ம் ம்”
    “அசடு வழிய ஆரம்பிச்சாச்சா?”
    அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    “இது சென்ட்ரல் ஸ்டேஷன்.. இதெல்லாம் கதையிலேயே வச்சுக்க… என்ன?”
    “என் கதையிலே இதெல்லாம் வச்சுக்கறதில்லே”
    “குட்… அப்பதான் கதை ஆரோக்கியமா இருக்கும்.”
    “சொல்லுங்க விமர்சகரே”

    “ரெண்டு விஷயம் ஒங்கூடப் பேசணும்னு தான் அத்தையை வழியனுப்ப ஒன்னைத் தொணைக்குக் கூப்பிட்டேன்.”
    “அப்ப டிக்கட் வாங்கித் தர்றதுக்காக அழைச்சுட்டு வரலியா?”

    “அட… அட… க்யூவிலே நிண்ணு அடிதடி பண்ணி சூர பராக்கிரமத்தோடே எப்படி டிக்கெட் வாங்கினே பாரு.. இதுக்கு நீ இல்லாமே எங்கே முடியப் போறதுண்ணு ஒன்னைக் கூட்டிகிட்டு வந்தேன் இல்லே?…”
    “எந்நன்றி கொன்றார்க்கும்…” என்று ஒரு குறளை ஆரம்பித்தான் சிவா.

    “சொல்லட்டுமா.. இல்லே கௌம்பலாமா?”
    “சொல்ல விரும்பினா சொல்லு”
    “இதுதான் வரணும்ணு எதிர்பார்த்தேன்”
    “எது?”
    “கோபம்”

    “வரலே…வராது…உன்கிட்டே வரவே வராது”
    “சிவசிவா… ஒன்னைச் சொல்லலே; அசல் சிவனைச் சொல்றேன். நேத்து சாயந்திரம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் போயிட்டு வர்றப்ப ஒருத்தன் கார்லேருந்து என்னை மொறைச்சுப் பார்த்தான்.”
    திஷ்யா சொன்னதும் குறுக்கிட்டான் சிவா.

    “வழக்கப்படிண்ணு சொல்லு-”
    “இல்லே… இது அப்படி இல்லே… நாலஞ்சு நாளா ஒரு மோட்டார் பைக் வாலா தெனம் நான் அன்ஸ்டிடியூட்டுக்குப் போற போதெல்லாம் அந்த நேரத்துக்கு நான் வருவேண்ணு காத்திருக்கிற மாதிரி பழியா கெடப்பான். இன்னிக்கு அவனும் அந்த காரிலே ஒக்காந்திருந்தான்.”
    “நீ பயந்துட்டியா?”

    “நோ… நான் என்ன தப்புப் பண்ணினேன். பயப்பட? முழுக்கக் கேளு”
    அவள் ‘சீரியஸாக’ச் சொல்ல ஆரம்பித்தாள்.

    “காரை நான் இன்னிக்கு ‘பாஸ்’ பண்றப்ப ‘மிஸ்’னு அவன் என்னைக் கூப்பிட்டான். மோட்டார் சைக்கிள்காரன் கார் டிரைவரைப் பார்த்து இவர் யார் தெரியும்லேண்ணு கேட்டான். ‘ஐ டோண்ட் பாதர்’னு சொன்னேன். அந்த ‘கட்’டை வாங்கிக்கிட்ட மாதிரியே காட்டிக்காமே வளவளத்தான். இவர்தான் பிரபல டைரக்டர் தினேஷ்குமார்.

    “இவருடைய புதுப்படத்திலே நடிக்க ஒரு ஹீரோயின் தேவை. ஒங்களுக்குச் சௌகரியப் படுமாண்ணான். எனக்கு மகா கோபம் வந்தது.”

    “என்ன பண்ணே?” என்று சிவா ஆவலோடு கேட்டான்.
    “நோ… டெஃபனிட்லி நோண்ணு சொல்லிட்டு வந்துவிட்டேன்.”
    “தட்ஸ் குட்.. அவ்வளவுதானே!”

    “இல்லே… அதுக்கு மேலே போய்ட்டாங்க அவங்க. இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் என் அட்ரஸைக் கேட்டிருக்காங்க. அங்கே இருக்கற சினிமா சபலம் ஒண்ணு ரெண்டு சொல்லியிருக்கு. நேரா ஹாஸ்பிடலுக்குப் போயி அப்பாவைப் பார்த்திருக்காங்க.”
    “ஓ”
    “எடுத்த எடுப்பிலே எழுபத்தஞ்சாயிரம் தர்றோம்ணு ஆரம்பிச்சாங்களாம்.”
    “அப்பா என்ன சொன்னார்?”

    “வாரா வாரம் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு கிண்டி ரேஸுக்குப் போறவர் என்ன சொல்லியிருக்கப் போறார்? அதுக்கென்ன ஆகட்டும்னு தலையை ஆட்டிட்டு வந்திருக்கிறாரு!”
    “ஒன்னை வந்து கேட்டாரா?”

    “கேட்டாராவது… ராத்திரி சாப்பிடவேயில்லே.. முடியவே முடியாதுண்ணு அடிச்சு சொல்லிட்டதிலே அவருக்கு ஏகக் கோபம்.”
    சிவா ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்தான்.

    “என்ன பாக்கறே?”
    “நீ எதை மறுத்துக்கிட்டிருக்கேண்ணு ஒனக்குத் தெரியுமா?” சிவா அவளைப் பரீட்சை செய்வது போலக் கேட்டான்.
    “நான்சென்ஸ்.. அந்த அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதுண்ணுதான் தெருத் தெருவா துணி இல்லாமே தொங்கற வால்போஸ்டர்கள்ளே தெரியுதே…”
    “அப்புறம் இது என்ன?”
    சிவா கண்ணிமைகளை மூடிக்கொண்டு பதில் தந்தான்.

    “இதான் டெம்ப்டெஷன்… பைபிள் பாஷையிலே சொன்னா சைத்தானின் தூண்டுதல்.”
    “எப்படி?”
    “இன்னிக்கு லட்சோப லட்சம் பேருக்கு சினிமா நடிகையாயிடணும்.. லட்சம் லட்சமா சம்பாதிக்கணும்னு வெறி இருக்கறப்ப அதை நீ வேணாங்கறியே”
    “நான் டெம்ப்ட் ஆகலே.”
    “ஒங்க அப்பா”

    “அவருக்கு சைபர் சைபரா எண்களைச் சொன்னாலே டெம்ப்ட் ஆயிடுவார்.”
    “அவர் நிர்ப்பந்திச்சா நீ என்ன பண்ணுவே?”
    “அவர் ரொம்ப ஓவரா வற்புறுத்தினா ஓடிடுவேன்.”
    “எங்கே?”

    அவள் நிசப்தமானாள்.
    அவன் காத்திருந்தான்.
    “ஐ’ம் ஸாரி சிவா..நான் ஓடமாட்டேன்…எங்க குடும்பத்திலே ஒருத்தர் ஓடினது போதும்.”
    யாரு… என்று வாய் வரை வந்த கேள்விக்கு அவன் ‘ஸீல்’ வைத்தான்.

    திஷ்யாவின் அம்மா ஓடிப்போன சங்கதி அந்த வீட்டில் அவன் கால் வைத்த முதல் வாரத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.

    ஒரு சூதாடியோடு வாழ முடியாமல் போராடிப் பார்த்து நாலு குழந்தைகளையும் விட்டு விட்டு ஒரு வைர வியாபாரியோடு அவள் ஓடிப் போனாளாம்.
    “நான் ஓடமாட்டேன்.”

    சென்ட்ரலில் என்ஜின்கள் முழங்கின. ட்ராலிகள் காது பிளக்க உருண்டு வந்தன.
    ஓடுவோர் நடப்போர் யந்திரம் மனிதர் என்று அந்த மாபெரும் கூரையின் கீழ் ஒலிகளின் சங்கமம் கடல் மாதிரி கேட்டது.

    சப்தக் கடல்.
    “ஐ வில் ரெஸிஸ்ட்… ரெஸிஸ்ட் இட்”
    “நான் அப்பாகிட்டே பேசிப் பார்க்கறேன்.”
    அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை.
    “ரெண்டு விஷயம்ணு சொன்னியே.. இன்னொரு விஷயம்?”

    “எங்கே ஒங்க பாஸ்”
    “பாஸா… யாரது”
    “தாமு”
    “மதனபள்ளி போயிருக்கார்..ஏன் என்ன விஷயம்?”
    “எப்ப வருவார்?”
    “தெரியாது”
    “வந்தா ஒண்ணு சொல்லி வை” அவள் முகம் சட்டென்று சிவந்தது.

    “என்னது?”
    “அவரை ஜாக்ரதையா இருக்கச் சொல்லு.. எல்லாப் பொண்ணுங்களும் மலையாளத்து நர்ஸ் மாதிரின்னு நெனைக்க வேண்டாம்னு சொல்லு.”
    “என்ன… என்னது திஷ்யா?”

    ‘இதை மட்டும் நீ சொல்லு. மத்ததை நேரம் வர்றப்போ சொல்றேன்”
    சிவாவுக்குத் திறக்கக் கூடாத ஜன்னல் ஒன்றைத் திறந்துவிட்ட மாதிரி ஒரு திகைப்பு.
    “திஷ்யா.”

    பெண்ணாகவும் அழகாகவும் பிறந்துவிட்ட விபத்துக்கு வருந்துவது மாதிரி அவள் ஒரு ‘சிலுவைச்’ சிரிப்பு சிரித்தாள்.
    அதில் பலவீனம் இல்லை. போராட முடியும் என்ற வைராக்கியம் தெரிந்தது.
    “இப்ப சொல்லு… நீ கதை எழுதி எழுதி என்ன சாதிக்கப் போறே?”
    “கண்ணீரின் உப்பு விளையும் கருவூலத்தைத் தரிசனம் பண்ணுவேன். பிரார்த்திப்பேன்”
    “நீ கவிதை கூட எழுதலாம்!”

    “கூல் டிரிங்ஸ் சாப்பிடலாம் எழுந்திரு”
    அவர்கள் எழுந்தனர்.

    தொடரும்

    Share
  • நல்லதோர் கவிதை செய்வோம்!

    -விஜயகுமார்

    கேடுநிறை மாந்தர்களின்- குணக்
    கேடுநிறை எண்ணங்களினால்
    பாடுஅது பெரும்பாடு கவியெழுதும்
    கவிமகள்கள் படும்பாடு!

    கவிதை எதுவென்றறியாமல்
    கவிதை இதுதானென்று வீண்வாதம் புரிந்து
    கவிதையினைக் கொல்வோர் நடுவில்
    கவிதையைக் கவிதையாய்ப் படைக்கும்
    கவி தாய்களைக் காயப்படுத்தாதீர் கயவரே!

    மகளிரவர் மாண்புதனைப் பண்புடனே
    போற்றிட்ட கவிகள் உதித்த நாடது நம்நாடாம்!
    அம்மி அரைத்த மங்கையவள் மகத்துவத்தைக்
    கும்மிப் பாட்டிலுரைத்த கவிநம் மகாகவியாம்!

     

    Share
  • அவன், அது , ஆத்மா (6)

    மீ.விசுவநாதன்

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    கே.வி. அண்ணபூர்ணா
    கே.வி. அண்ணபூர்ணா

    முதல் வகுப்புக்கு அவனுக்குக் கண்ணம்மா டீச்சரும், சுப்புலட்சுமி டீச்சரும் பாடம் எடுத்தார்கள். கண்ணம்மா டீச்சர் கையில் ஒரு பிரம்போடுதான் இருப்பாள். நல்ல “கிணீர்” என்ற குரலில் வாய்ப்பாடு சொல்லித்தருவாள். மனப்பாடம் செய்ய வைத்து, திரும்பத்திரும்பக் கேட்டு மனதில் பதிய வைக்கும் அழகில் ஒவ்வொரு குழந்தையும் தன் அம்மாவின் அருகில் இருப்பதைப் போல உணர்ந்து கொள்ள முடியும். “அம்மா, ஆடு, இலை, ஈ, உரல், ஊர், எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓடம், ஒளவைப்பாட்டி, ஆயுத எழுத்து அக்கன்னா” என்று தமிழின் உயிர் எழுத்துக்களையும், ஆயுத எழுத்தையும், “கசடதபற” வல்லினம், “ஙஞணநமன” மெல்லினம், “யரலவழள” இடையினம் என்று தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ராகம் போட்டுக் கற்றுத் தந்தது இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவனுக்குத் தமிழ்ப்பாலூட்டிய தாய்தான் கண்ணம்மா டீச்சர். வாய்ப்பாடு தப்பாகச் சொன்னாலோ வலது கை மணிக்கட்டில் பிரம்பால் ஒரு தட்டு தாட்டுவாள். அவன் கண்ணம்மா டீச்சரிடம் மணிக்கட்டில் நிறைய அடி வாங்கி இருக்கிறான். ஒவ்வொரு முறை அடிக்கும் பொழுதும் அவன் தன் வலது கையை சடக்கெனப் பின்னல் இழுத்துக்கொள்வதும், டீச்சர் அவனது கையைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு “கவாஸ்கரை”ப்போல் குறிப்பார்த்து மணிக்கட்டில் பிரம்பால் தட்டுவதும், டீச்சர் கையை ஓங்கும் பொழுதே அவன் கிரிகெட் ரசிகர்கள் போல “ஓவென”க் கத்துவதும், “கோழி கிண்டின மாதிரி எழுதிட்டுக் கத்த வேற செய்யறயா” என்று மீண்டும் அவனுக்கு பிரம்படி உற்சவம் நடத்துவதும் தினசரி நடக்கும். அவன் அதை அம்மாவிடம் சென்று ஒரு முறை முறையிட்டான். அம்மா அவனது கையைப் பிடித்துக் கொண்டு அடுத்த நாள் நேராக டீச்சரிடம் வந்தாள். பேசினாள். நடந்ததைத் தெரிந்து கொண்டு,”டீச்சர் இவன்…மணிக்கட்டே போனாலும் சரி ..இவன நன்னா திருத்திக் கொண்டு வாங்கோ…அதுபோரும் எனக்கு” என்று அம்மாவும் டீச்சர் பக்கமே பந்தடித்ததில் அவனுக்கு முகம் “இஞ்சி தின்ன குரங்கு” போலாகி விட்டது. உடனே கண்ணம்மா டீச்சர் அவன் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டு “விஸ்வநாதன் நல்ல புள்ள இல்ல…நல்லப் படிப்பான்”..என்று அவன் கண்களைப் பார்த்துக் கொஞ்சுவது போலச் சொன்னாள். அவன் நல்ல படிப்பாளியாக இருந்தானோ இல்லையோ , அந்த டீச்சரை அவன் எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அன்று அந்த மணிக்கட்டில் கொடுத்த அடிதான் அவனது எழுத்து “மணிமணி”யாக இருக்கக் காரணமானது.

    அதே வகுப்புக்கு செல்லப்பா சாரும் வந்து பாடம் நடத்துவார். முக்கியமாக வாய்ப்பாடு சொல்லித்தருவார். அதுவும் வேடிக்கையாகச் சொல்லித்தருவார். அதனால் மனதில் நன்கு பதியவும் செய்யும், வகுப்பில் தூக்கமும் வராது. கரும்பலகையில் ஒவ்வொரு வாய்ப்பாடும் ராகம் போட்டபடி எழுதுவார். உடனே ஒவ்வொரு மாணவரையும் எழுந்து நின்று கொண்டு உரக்கப் படிக்கச் சொல்லுவார். மாணவர்களின் கவனம் பாடத்தில் இருக்கிறதா என்று கவனிப்பார். அதற்கு அவரே வாய்ப்பாடு சொல்லி பிள்ளைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுவார். ” ஒரோன்னு ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு , மூவொண்ணு மூணு , நாலொண்னு சாப்பாடு” என்பார். உடனே,” சார் தப்பு. நாலொண்னு நாலு” என்று சொல்லும் பிள்ளைகளைப் பார்த்து,”நீங்க கவனிக்கரெளான்னு பார்த்தேன்” என்று கூறிச் சிரிப்பார். அப்படிதான் ஒருமுறை அவன் “நாலொண்ணு சாப்பாடு” என்றான். ஆமாம் இங்க வா சாப்பாடு தரேன் என்று அவன் கையில் பிரம்பால் ஓங்கி ஒரு முத்தம் கொடுத்தார். அவன் கையைப் பின்னல் எடுத்தபொழுது அந்தப் பிரம்படி செல்லப்பாசார் முழங்காலில் பட்டுவிட்டது. கோபத்தில் அவர் அவனைப் பார்த்ததும் அவன் அந்த வகுப்புக்குள்ளேயே ஓட்டமெடுத்தான். அவரும் சுற்றிச் சுற்றி வந்து அவனை பிடித்து, அவனது இடது தோள்பட்டைக்குக் கீழே உள்ள சதைப்பகுதியை நன்றாக நிமிட்டியபடி,”பாடத்துல ஒழுங்கா கவனம் இருக்குமா..சொல்லு இருக்குமா” என்று கேட்க அவனும் கண்களில் நீர் தளும்ப,”இருக்கும் சார்…” என்றான். அது அவனுக்கொரு பாடம். இன்று வரை அவன் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலோ, எந்தக்கதையோ கட்டுரையோ, கவிதையோ படித்தாலோ மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்கிறான். அப்போதெல்லாம் அவனுக்குச் செல்லப்பாசார்தான் நினைவில் வந்து செல்வார். அவர் அவனது வீட்டிற்குப் பக்கத்திலேதான் குடி இருந்தார். நல்ல மனிதர். நேரம் தாழ்த்தி ஒருநாளும் அவர் பள்ளிக்குச் சென்றதில்லை. பள்ளியில் மிகுந்த சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருப்பார். ஒவ்வொரு வருடமும் விஜய தசமி அன்று குழந்தைகள் எல்லோரும் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், தட்சிணையோடு வந்து அவரவரது வகுப்புக்குரிய ஆசிரியர்களை நமஸ்காரம் செய்வார்கள். அவர்கள் எல்லோருக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிதருவார்கள். அதன் பிறகு வகுப்பு வாரியாக எல்லா மாணவ மாணவியர்களையும் ஒரு வரிசைக்கு நான்கு பேர்களாக நிற்கவைத்து பெருமாள் கோவிலின் தெற்கு மாடவீதி, மேலமாட வீதி, வடக்கு மாட வீதி, சன்னதிதெரு வழியாக ரதவீதி சுற்றி மீண்டும் பள்ளிக்கூடம் வரை நாகஸ்வர மேளத்துடன் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். வீதி முழுக்க மனிதர்களை, அன்பு முகங்களைக் காண ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஊர்வலம் அவனது வீட்டு வாசலுக்கு வரும் பொழுது அங்கே நின்று கொண்டிருக்கும் அவனது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, அத்தை, அக்கா என்ற அன்புக் கூட்டத்தைப் பார்த்து அவன் கையை அசைத்து சிரித்து மகிழ்வான். ஊர்வலம் நிறைவு பெற்றவுடன் அனைவருக்கும் ஒரு பழம், கொஞ்சம் அவல், ஏதேனும் ஒரு இனிப்பு என்று பிரசாதமாகத் தருவார்கள். அந்தக் கலாச்சாரமே ஒரு வரப்பிரசாதம்தான். அனேகமாக நாகஸ்வரம் “சித்திரை”க் கம்பர்தான் வாசிப்பார். அவர்தான் அந்த கிராமத்தின் ஆஸ்தான வித்வான். அவர் நாகஸ்வரம் வாசிக்கும் பொழுது அவரது இரண்டு கன்னங்களும் கொழக்கட்டையை அடக்கி வைத்தது போல இருக்கும். அவன் அதைக் காட்டி அவரிடம்,” இது என்ன பலூனா” என்று சுவாரஸ்யமாக அவர் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டான். அப்பொழுது அங்கு வந்த சுந்தர வாத்தியாரிடம்,” சாமி இந்தப் புள்ள எதாவது எடக்குப் பண்ணிக்கிட்டே இருக்கு” என்று சித்திரைக் கம்பர் புகார் செய்தார். ” பெரியவாள அப்படியெல்லாம் கேலி பண்ணக் கூடாது விஸ்வம்…” என்று செல்லமாகச் சொல்லி அழைத்துச் சென்றார். நல்ல வேளை செல்லப்பா சார் இல்லை..அவர்ட்ட புகார் சொல்லி இருந்தால் அவன் கன்னத்தில் ரெண்டு கொடுத்து அவனை அனுமன் ஜாடையாகப் பண்ணி இருப்பார். சித்திரைக் கம்பரிடம் அவனக்குத் தனியான ஒரு அன்பு இருக்கத்தான் செய்தது. அவரது எளிமையான தோற்றமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்த ஊரில் உள்ள பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில்களுக்கெல்லாம் அவர்தான் நாகஸ்வரம் வாசிப்பார். கொடுத்ததைப் பெற்றுக் கொள்ளும் குணவான்.

    amv1

                                                                                                              கே.வி அண்ணபூர்னா

    அன்று அவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. மாலையில் விளையாட டுண்டிவிநாயகர் தெருவுக்குப் போனான். அங்குதான் அவனது மாமா தாத்தா வீடு இருக்கிறது. நண்பர்களோடு விளையாடி விட்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கைகால்களைக் கழுவிக்கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு மாமா தாத்தாவுடன் சென்றான். சுவாமி தரிசித்துவிட்டு வெளியில் வரும் பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சுந்தர வாத்தியாரிடம் அவனுக்குத் தாத்தா பேசிகொண்டிருந்தார். பேச்சு வாக்கில் சித்திரைக் கம்பரை அவன் கேலி செய்த விபரம் வெளியானது. “அப்படியா” என்று அவனுக்கு மாமாத்தாத்தா அவனைப் பார்த்துக் கேட்டார். “இல்லையே” என்றான் அவன். “இல்லையா..விஸ்வம் பொய் சொல்லக் கூடாது..பாவம்” என்றார் சுந்தர வாத்தியார். அவன் மெதுவாக “இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் சார்..” என்றான். அப்பொழுது சுந்தர வாத்தியார் அவர்களுடன் பிரதட்சிணமாக வந்தார். வந்து கொண்டே இருந்தவர் “விஸ்வம் இங்கவா..ஒனக்கு ஒரு கதை சொல்லறேன் …” என்று அவனுக்கு நண்பன் சுப்பாமணியின் வீட்டின் வாசலில் (L. M .சுந்தரம் ஐயர் வீடு) கிழக்குப் பார்த்த சின்னத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். அவனுக்குக் கதை கேட்க மிகவும் பிடிக்கும். அவருக்குக் கீழே தரையில் அவன் அமர்ந்து கொண்டான். தாத்தா அவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

    “ஒனக்கு …அக்கரக்கோவில் கதை தெரியுமோ…” என்று கேட்டார். தெரியாது சார் என்றான். இப்ப நான் உனக்குச் சொல்லறேன் என்று ஆரம்பித்தார். நம்ம ஆத்தங்கரைக்கு அக்கரைல இருக்கறதால அத அக்கரக்கோவில்னு சொல்லுவா.. ஆனா அதுக்கு இன்னொரு பேரு எரித்து ஆட்கொண்டார். அந்த சிவனுக்கு காசிவிஸ்வநாதர் என்று பெயர். அம்பாளுக்கு மரகதாம்பிகை என்று பெயர். அது ஒரு அழகான கோவில். மொதல்ல ஒரு பெரிய பிராகாரம் உண்டு. அங்க நெறைய பூச்செடியும், மரங்களுமா அழகா இருக்கும். உட்ப்ராகரம் உண்டு. அதற்குள்ள கர்பகிரஹத்தில் கிழக்குப் பார்த்த சிவலிங்கமும், தெற்குப் பார்த்த அம்பாளும் இருக்கா…ஒரு நாள் ஒரு கன்னட பிராமணர் இந்தக் கோவிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் பண்ணினார். அவர்ட்டக் கொஞ்சம் தங்கக் கட்டிகள் இருந்தது. அத, அந்தக் கோவில்ல பூஜை பண்ணற பட்டர் கிட்டக் கொடுத்து ,”சுவாமி ..நான் காசிக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்..இந்த தங்கக் கட்டிகள நீங்க வைச்சுண்டிருங்கோ..நான் திரும்பி வந்து வாங்கிக்கறேன்” என்று சொன்னார். சரின்னு அந்தப் பட்டரும் அந்த தங்கக்கட்டிகளை வாங்கி வைத்துக் கொண்டார். கொஞ்ச மாசம் கழிஞ்சி, காசிக்குப் போன அந்த கன்னட பிராமணர் திரும்ப வந்து அந்த பட்டரப் பாத்து,” சுவாமி ..நான் காசிக்குப் போயிட்டு வந்துட்டேன்,.நன்னா தரிசனம் பண்ணினேன்…இந்தாங்கோ உங்களுக்கு பிரசாதம் என்று கொடுத்துட்டு தான் கொடுத்துட்டுசப் போன தங்கக்கட்டிகளைக் கேட்டார். பட்டரும் உடனே அந்தத் தங்கக் கட்டிகளை அந்தக் கன்னட பிராமணர் எப்படிக் கொடுத்திருந்தாரோ அப்படியே அந்தப் பையை அவரிடம் திரும்பத்தந்தார். கன்னட பிராமணர் பையைத் திறந்து பார்த்தார். அதுல தங்கக் கட்டிகள் இல்லை. எல்லாமே செங்கல் கட்டிகளா இருந்தது. அவர் ஒடனே பட்டரைப் பார்த்து,”சுவாமி ..நான் கொடுத்தது தங்கக்கட்டி ..நீங்கள் தந்ததோ செங்கல் கட்டியா இருக்கே”ன்னு கேட்டார். “நீங்க கொடுத்தாத அப்படியே பிரிக்காம சுவாமி முன்னால வைச்சிருந்தேன்..இப்ப அத அப்படியே எடுத்து உங்கள்ட்டக் கொடுத்தேன்…” என்றார் பட்டர்.. “நீங்க பொய் சொல்லறேள்..”என்றார் கன்னட பிராமணர். “நீர்தான் பொய் சொல்லரீர்” என்றார் பட்டர். “சரி…நாளைக்குக் காலைல வரேன்..நீர் இந்த சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ணும்..நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று கன்னட பிராமணர் சொன்னார். சரி என்று பட்டரும் ஒப்புக் கொண்டார். சுவாமிக்கு முன்னால் சத்தியம் என்று பொய் சொல்ல முடியுமா..அதனால் அந்தப் பட்டர் சிவலிங்கத்துக்குள்ள சக்தியை கோவிலுக்கு வெளிப் பிராகாரத்திலுள்ள ஒரு வில்வமரத்துக்கு தனது மந்திர சக்தியால் மாற்றி வைத்தார். காலைல அந்த கன்னட பிராமணர் வந்து கேட்டால் இந்த சிவலிங்கம் முன்னால தைரியமா சத்தியம் பண்ணலாம். இப்பதான் அதுல சக்தி இல்லையே என்று நினைத்தார். இந்தச் செய்தியை சிவபெருமான் அந்த கன்னட பிராமணரின் கனவில் சொல்லி, “சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ண வேண்டாம்..கோவில் பிராகாரத்திலுள்ள வில்வ மரத்தில் சத்தியம் செய்தால் போதும் என்று சொல்” என்று கூறி மறைந்தார்.

    காலையில் அந்த கன்னட பிராமணரும் வந்தார். எப்பொழுதும் போல கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களும் இருந்தா. பட்டர் கர்பகிரகத்தில் உள்ள சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு அந்த பிராமணரை அழைத்தார். அந்த கன்னட பிராமணர், “சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ண வேண்டாம்..கோவில் பிராகாரத்திலுள்ள வில்வ மரத்தில் சத்தியம் செய்தால் போதும்..பகவான்தான் எல்லா எடத்துலயும் இருக்கானே ..” என்றார். அங்கு வந்திருந்த பக்தாளும் அதையே சொன்னா. பட்டர் பயத்தோடவே சரின்னு சொன்னார். எல்லாரும் அந்த வில்வ மரத்துப் பக்கமாப் போனா. அந்தப் பட்டர் வில்வ மரத்துல கையைவைச்சு “இவர் கொடுத்தது செங்கல் கட்டிகள்தான் தங்கக்கட்டிகள் இல்லை ” என்று சொன்ன ஒடனே அந்த வில்வ மரமும், அந்தப் பட்டரும் அப்படியே தீப்பிடிச்சு எரிஞ்சு போய்ட்டா…அப்போ அங்க அசரீரியா,”நீ கொடுத்த இந்தத் தங்கக் கட்டிகள எடுத்து நல்லது பண்ணுன்னு” சிவபெருமானே சொன்னார். அதனால இந்த சுவாமிக்கு “எரித்து ஆட்கொண்டார்” என்ற பேரும் வந்தது. அதனால ஒருநாளும் பொய் சொல்லவே கூடாது, சத்தியம்தான் பேசணும் என்று அவன் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார் சுந்தர வாத்தியார்.

    அந்தக் கன்னட பிராமணர் அந்தத் தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு பெரிய கால்வாய் வெட்டத் தீர்மானித்தார். பொதிகைமலைச் சாரலில் தோன்றும் ஜீவநதியான தாமிரபரணியின் கரையில் அதை அமைக்க நினைத்தார் . ஒரு பசுமாடு அந்த மலை அடிவாரத்தில் இருந்து மெதுவாக நடந்து போச்சு. அது பின்னாடியே போனார். அது மூத்திரம், சாணி போடற எடத்த எல்லாம் குறிச்சிண்டார். அந்தப் பசு மலைஅடிவாரத்தில் இருந்து கிளம்பி கல்லிடைகுறிச்சி, வீரவநல்லூர், காருகுறிசின்னு நடந்து போய் ஒரு இடத்துல படுத்துண்டுருத்து. அந்த இடம்தான் பிரான்சேரி. அதுதான் பிரான்சேரிக் குளம். பேச்சு வழக்கில் அது பிளான்சேரி ஆயிடுத்து. அதுவரை அழகான கால்வாய் வெட்டினார். மூத்திரம் போன இடங்களில் ஒரு சிறு கிளைவழி வெட்டினார். சாணி போட்ட இடங்களில் குளங்களை வெட்டினார். இப்படி ஒரு பெரிய தர்மம் செய்த அந்த கன்னட பிராமணரின் நினைவாகத்தான் அந்தக் கால்வாயை “கன்னடியன் கால்வாய்” என்று இன்றும் அழைக்கிறார்கள். இதோ ஓடிண்டு இருக்கே இதுதான் கன்னடியன் கால்வாய் என்று பக்கத்தில் காண்பித்தார். பசு என்ற தேவதை நடந்த அந்த இடமெல்லாம் இன்றும் பசுமையாகவே இருக்கு…” என்று கதை சொல்லி முடித்த பொழுது அன்று இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவனை மாமாத்தாத்தா வீட்டில் விடு விட்டு மெல்ல கிழக்கு நோக்கி அவரது வீட்டிற்கு நடந்து சென்றார் சுந்தர வாத்தியார்.

    (03.04.2015)

    இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • அபலைப் பெண்ணுக்கு விடுதலை !

    எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கண்டனத்தைத் தெரிவித்து முன்னர் பதிவிட்டிருந்தேன். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அப் பெண்ணை விடுதலை செய்யக் கோரி மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    தற்பொழுது அந்த இளம் பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    விரைவில் விடுதலையாகப் போகும் அவருக்காகப் பாடுபட்ட, எனது பதிவினைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும், இணையத் தளங்கள் எல்லாவற்றுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    – எம்.ரிஷான் ஷெரீப்

    02.04.2015

    Share
  • தாகூரின் கீதப் பாமாலை – 3

    image

    தாகூரின் கீதப் பாமாலை – 3

    புவியில் வாழ விழைகிறேன் !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    வனப்பு மிகும் இந்த வையத்திலே
    இறக்க விரும்ப வில்லை !
    வாழத்தான் விழைகிறேன்
    மானிடரிடையே !
    பரிதியின் வெளிச்சத்திலே
    மலர்கள் விரியும் வனங்களிலே
    அனைத்து உயிர்களின்
    இதயத்திலே
    எனக்கோர் தனியிடம் வேண்டுவேன் !
    உறவும், பிரிவும் சேர்ந்து
    முறுவலும், கண்ணீரும் பெருகி
    ஓயாத அலைகளாய்ப்
    பூதளம் நெடுவே
    உயிரினப் பிறவிகள்
    விளையாடி வருகின்றன
    இடைவிடாது !
    மானிடரின்
    இன்ப துன்பத்தைப் பின்னி
    அழிவில்லா
    ஓர் உலகம் தன்னை
    உருவாக்க விரும்புகிறேன் !
    அப்பணி
    முடியாமல் போயினும்
    உம்மோடுதான்
    வாழ்நாள் முழுதும்
    வசிக்க விழைகிறேன்,
    காலையிலும் நடுப் பகலிலும் நீ
    பறித்திட ஏதுவாய்
    புதியதாகப்
    பூக்கள் மலர்ச்சி போல் இசைப்
    பாக்கள் எழுதிக் கொண்டு !
    நான் சமர்ப்பிக்கும்
    பூக்களை ஏற்றுக்கொள்
    பூரிப்புடன் !
    அந்தோ ! அவற்றை நீ
    அகற்றி விடு, அவை யாவும்
    வாடி வதங்கி
    மாய்ந்து போவதால் !

    ************

    Original Source: A Tagore Testament,
    Translated From Bengali By Indu Dutt
    Jaico Publishing House (1989)
    121 Mahatma Gandhi Road,
    Mumbai : 400023

    *********************

     

    Share
  • இப்படியும் ஏமாற்றுவாளா !

    ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    நளினி எப்பொழுதும் எந்தக் கலர் புடவையில்சென்றாளோ அதே கலர் புடவையுடன் திரும்புவாள். எல்லா சேல்ஸ் மேனும் அவள் கையாள். வரும்போது சலவை புடவையுடன் வருவாள் …புதுப் புடவையை எடுப்பாள். அலங்கார அறைக்குள் சென்று உடுத்திய புடவையை அழகாக மடிப்பாள், விலை லேபிளை ஒட்டிவிட்டு, புதுப் புடவையை உடுத்துவாள். அக்கடை ஆட்களை வைத்தே உடுத்தியதை கலைக்கப்பட்ட புடவை குவியலில் கலந்திடுவாள்.. காமேராக்களும் பார்த்துக்கொண்டு இருந்தன.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    crazy

    ”சீரங்க நாதரே, சாரங்க பாணியே
    வாருங்கள் வேதப்புள் வாகனத்தில்-நீரங்க( திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள்),
    வண்ணனே கேசவ் வரைந்தனுப்பும், தூரிகைக்
    கண்ணனே காலைக் கடன்’’….கிரேசி மோகன்….

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலக்ஸி எப்படி இயங்குகிறது ?

     
     

    Fig 1 Our Milky Way Center

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    காலவெளிக் கருங்கடலில்
    கோலமிட்டுக்
    கொலு விருக்கும் தீவுகள்
    காலக்ஸிகள் !
    சுருள் சுருளாய் சுற்றுபவை
    கால்களா ? வால்களா ? கரங்களா ?
    ஆதி அந்தம் அறியா
    நீல வெளி அலைக்கடலில்
    ஆக்டபஸ் போல்
    நீந்திச் செல்பவை !
    காலக்ஸி
    மையக் கருவில் கதிர்வீசும்
    கருந் துளைகள்
    பிரபஞ்சக் குமிழி வடித்த
    காலக் குயவனின்
    கரும் பொருட் களஞ்சியம் !
    அசுர ஆற்றலிலுடன் முடங்கிக்
    காணாமல் பதுங்கிய
    மோனத் திமிங்கலங்கள் !
    உறங்கியும் உறங்காத உடும்புகள் !
    விண்மீன் விழுங்கிகள் !
    காலக்ஸி பின்னலாம்
    வாயு முகிலில் !
    விண்மீனும் தோன்றலாம் !
    அண்டக்கோள் உண்டாக்கலாம் !
    ஒளியும் பிண்டமும்
    ஒன்றென
    ஓதினார் ஐன்ஸ்டைன்
    வேதமாய் !
    ஒளியை உறிஞ்சிக்
    கரும் பிண்டமாய் மாற்றும்
    மூலக் குகை
    மாயக் கருந்துளை !
    பிரபஞ்சப் படைப்பு
    சீரான கொந்தளிப்பே !

    ++++++++++++++

    Fig 1A Galaxy Structure

    “வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது.  மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.”

    கிரேக்க மேதை பிளாடோ (கி.மு. 428-348)

    இந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை ! அனைத்து அறிவு வீதிகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”

    லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)

    Fig 1B The Galaxy Spirals & Glow


    நமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச வெப்பத் தேய்வு (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது.  அதாவது சிறுகச் சிறுக விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் முடிவிலே அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும்.  விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒருகாலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.

    டாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)

    “விஞ்ஞானிகளின் முக்கிய வினா: ‘பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன ? என்பதுவே.  அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் !  எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும்.  நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்.”

    டாக்டர் டாம் தியூன்ஸ் (Dr. Tom Theuns, Researcher, Durham University U.K.)

    Fig 1A Evolution of a Galaxy


    கண்ணுக்குத் தெரியும் பிரமாண்டமான பால்வீதி காலக்ஸி

    பரிதி மண்டலம் சுற்றிவரும் நமது பால்வீதி காலாக்ஸியைக் (Milky Way Galaxy) காண பூதக் கண்ணாடியோ அல்லது பெரிய தொலை நோக்கியோ தேவையில்லை.  அமாவாசைக் காரிருளில் நகர விளக்குகள் திரிபு செய்யாத தெளிவான வானத்தை முழுமையாகப் பார்த்தால் நாமிருக்கும் பால்வீதி காலாக்ஸி நீள்வாக்கில் அமைந்திருப்பது தெரியும்.  அந்த ஒளிமந்தையில் இருப்பவை : கோடான கோடி விண்மீன்கள், திணிவு மிக்க வாயு முகில்கள், மற்றும் தூசிக் குவியல்கள் !  அசுர ஆப்பம் போல் மையத்தில் தடித்து ஓரத்தில் மெலிந்த உருவம் கொண்டது !  அந்தத் தட்டின் விட்டம் சுமார் 120,000 ஒளியாண்டுகள்.  (Light-year ஒளியாண்டு என்பது விண்வெளித் தூர அளவீடு.  ஓராண்டில் ஒளி செல்லும் தூரம்).  மையக் கருவில் கதிர் வீச்சால் ஒளிமயமாகத் தெரிவது மாபெரும் கருந்துளை (Black Hole).  கருந்துளையின் நிறை மட்டும் சுமார் 4 மில்லியன் பரிதிப் பளு¨வைக் கொண்டது.  ஈர்ப்பாற்றலில் தனது அண்டக் கோள்கள் அனைத்தையும் பின்னிக் கொண்டு நமது பரிதி மண்டலம் பால்வீதி மையத்தை ஒருமுறை சுற்றிவர 225 மில்லியன் ஆண்டுகள் எடுக்கின்றன !  பால்வீதி ஒளிமந்தையில் சூரிய மண்டலத்தின் தூரம் மையத்திலிருந்து 26,000 ஒளியாண்டுகள் !  பால்வீதி ஒளிமந்தையில் 200 பில்லியன் விண்மீன்களுக்கு மேல் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார். அவற்றில் உள்ள அண்டக் கோள்களின் எண்ணிக்கை ஒரு டிரில்லியன் (1 Trillion = 10^12) என்றும் மையக் கருந்துளையும் சேர்த்துப் பால்வீதியின் நிறை மொத்தம் ஒரு டிரில்லியன் பரிதிகள் என்றும் ஊகிக்கப் படுகின்றன.  பால்வீதி காலக்ஸியில் காணப்படும் மிகப் பூர்வ விண்மீனின் வயது சுமார் 13.2 பில்லியன் ஆண்டுகள் !

    Fig 1C Shape of A Galaxy

    சூரிய மண்டலம் தோன்றி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன.  இன்னும் பரிதியின் எரிசக்தி எரிந்து ஒளியூட்டும் தகுதி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.  பால்மய வீதிக்கு உயிரூட்டி அவற்றின் கோடான கோடி விண்மீன்களைச் சுற்ற வைத்துச் சதா சக்தி பரிமாறி வருவது அதன் மையத்தில் அமைந்துள்ள குவிமேடான அசுரக் கருந்துளையே !  அதிலிருந்து பேரளவு கதிர்வீச்சு சக்தி (Radiation Energy) தொடர்ந்து வெளியாகி வருகிறது.  நமது பால்வீதி காலாக்ஸியை ஆழ்ந்து அறிந்து கொள்ளும் போது மற்ற காலாக்ஸிகளின் பண்பாடுகளைத் (Properties) தெரிந்து கொள்ள நாம் தயாராகிறோம்.  மேலும் உலக நாடுகள் தள விண்ணோக்கிகளை உபயோகித்தும், நாசா ஹப்பிள் தொலைநோக்கி, ஸ்பிட்ஜர் தொலைநோக்கி (Spitzer Infra-red Observatory) இரண்டைப் பயன்படுத்தியும் ஈசா (ESA – European Space Agency) தனது புதிய ஹெர்ச்செல் தொலைநோக்கியை அனுப்பியும் பிரபஞ்சத்தின் காலக்ஸி களையும் விண்மீன்களையும் ஆராய்ந்து வருகின்றன.

    Fig 1 The Cosmic History

    பால்வீதி மந்தையின் மில்லியன் கணக்கான விண்மீன்க¨ளைத் தனது பூர்வீகத் தொலைநோக்கியில் முதன்முதல் 1610 இல் கண்டவர் இத்தாலிய விஞ்ஞானி காலிலியோ !  இப்போது பால்வீதி மந்தையில் 200 பில்லியனுக்கும் மேலாக விண்மீன்கள் சுற்றிக் கொண்டு வருகின்றன !  மேலும் பால்வீதியில் பரிமாணம் கூற முடியாத பேரளவில் அகிலமீனின வாயும் தூசியும் (Interstellar Gase & Dust) மண்டிக் கிடக்கின்றன.   பூமியி லிருந்து இரவில் வான்வெளியை நோக்கினால் பால்மய வண்ணத்தில் தூரிகையில் வரைந்தால் போல் தெரிவதால் அந்தப் பெயர் அளிக்கப்பட்டது !  சுருள் காலக்ஸியான (Spiral Galaxy) நமது பால்வீதியின் ஒரு கரமான ஓரியன் வளைவில் (Orion Arm) நமது சூரிய மண்டலம் வசித்து வலம் வருகிறது !

    18 ஆம் நூற்றாண்டில் வானியல் விஞ்ஞானிகளான வில்லியம் ஹெர்செல் அவரது சகோதரி கரோலின் ஹெர்செல் (William Herschel & Caroline Herschel) இருவரும் பல்வேறு விண்மீன்களின் இடைத் தூரங்களைப் பல்வேறு திசைகளில் கணித்தனர்,  பால்வீதி காலக்ஸி தட்டு போல் அமைந்த விண்மீன் முகில் என்றும் நமது பரிதி பால்வீதி மையத்தில் இருப்பதாகவும் கூறினார்.  1781 ஆம் ஆண்டில் சார்லஸ் மெஸ்ஸியர் (Charles Messier) வான வெளியில் மங்கல் பொட்டு ஒளிகளான (Faint Patches of Light) பல்வேறு நிபுளாக்களை பதிவு செய்து அவற்றை எல்லாம் சுருள் நிபுளாக்கள் (Spiral Nubulae) என்ற வகுப்பில் பிரித்தனர்.

    Fig 1E Hydrogen Gas in Omega Nebula

    20 ஆம் நூற்றாண்டில் வானியல் நிபுணர் ஹார்லோ ஸேப்லி (Harlow Shapely) கோள் வடிவில் உள்ள விண்மீன் கொத்துக்கள் (Globular Star Clusters) பரவி இருப்பதையும், அவை இருக்கும் தளங்களையும் அளந்து பால்வீதி மந்தையின் மையம், பூமியிலிருந்து 28,000 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது என்றும், விண்மீன் தோரணங்களான ஸாகிட்டாரியஸ், ஸ்கார்ப்பியோ (Constellations Sagittarius & Scorpio) இரண்டுக்கும் அருகில் உள்ளது என்றும், பால்வீதி மையம் தட்டாக இல்லாமல் ‘ஆப்பம் போல்’ (Pan Cake) நடுவில் தடித்த தென்றும் அறிவித்தார்கள் !  மெஸ்ஸியர் கூறிய சுருள் நிபுளா பிரபஞ்சத் தீவுகள் அல்லது காலாக்ஸிகள் (Island Universe or Galaxy) என்று பின்னால் ஹார்லோ ஸேப்லி தர்க்கம் செய்தார்.  1942 இல் வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) தனது புதிய மிகப் பெரும் 100 அங்குலத் தொலைநோக்கி மூலம் உளவி அந்தத் தர்க்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

    Fig 5 Spitzer Space Telescope

    பால்வீதி காலாக்ஸி புரியும் பௌதிகப் பணிகள் என்ன ?

    வானியல் விஞ்ஞானிகள் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட விண்மீன்கள் பொதுவான மையப் பீடம் ஒன்றைச் சுற்றும் பால்வீதி காலக்ஸியை ஓர் அகிலவெளித் தீவாகக் கருதுகிறார்.  மொத்தப் பால்வீதியின் நிறையில் அத்தனை விண்மீன்களும் 10% பளு வீத ஒப்பளவில் உள்ளன.  விண்மீன் களுக்கு இடையில் சுமார் 1% நிறை அளவு வாயு முகிலும், தூசியும் நிரப்பியுள்ளன.  காலக்ஸியில் மீதமிருக்கும் 89% நிறையாவும் கரும் பிண்டம் (Dark Matter) என்று கணிக்கப் படுகிறது. !  மாயமான இந்தக் கரும் பிண்டம் கண்ணுக்குப் புலப்படாமல் நியூட்ரான், புரோட்டன் கலந்த அடிப்படைப் பரமாணுக்களின் திணிவாகத் (Baryonic Matter) தனது பூதகரமான ஈர்ப்புச் சக்தியை மட்டும் விண்மீன்கள் மீது வெளிப்படுத்திக் கொண்டு “தூங்கும் சிங்கம்” போல் முடங்கிக் கிடக்கிறது !

    Fig 2 Our Huge Milky Way Galaxy

    மேலும் பால்வீதி காலக்ஸி மிகத் தாழ்வாக 1% ஒப்பு நிறையில் அகில விண்மீன் இன வாயுச் சேமிப்புக் களஞ்சியமாக (Reservoir of Intersteller Gas) உள்ளது.  ஆயினும் அச்சிறிய அளவே புதிய விண்மீன்களின் எதிர்கால உதய மூலமாய்ப் பரவிக் கொண்டுள்ளது.  காலாக்ஸியின் வாயு முகில் திணிவு (Gas Cloud Density) நமது சூரியனைப் போல் ஒரு பில்லியன் மடங்கு பெரிய பூதப் பரிதி ஒன்றை ஆக்கும் திண்மை கொண்டது.  வாயுவே காலக்ஸியின் உட்தள இயக்கங்க வேலைகளுக்கு மையப் பொருளாக இருப்பது.  ஒரு விண்மீன் ஆனது சுய “ஈர்ப்பு வாயுக் கோளமாக” (Self-Gravitating Ball of Gas) ஹைடிரஜன் எரிசக்தியை அணுப்பிணைவு (Nuclear Fusion) செய்து உருவாவது.  அவ்வித அணுப்பிணைவுத் தொடர் இயக்கங்களில் வெப்பசக்தி வெளியாகிக் கன மூலகங்கள் (Heavier Elements) தோன்றுகின்றன.  அதே நோக்கத்தில் பார்த்து ஒரு காலக்ஸியை கரும் பிண்டம், விண்மீன், வாயு முகில் அனைத்தையும் இழுக்கும் சுய ஈர்ப்புத் தீவாகக் கருதி அதை விண்மீன் அண்டக் கோள்கள் தயாரிக்கும் ஓர் யந்திரமாக வைத்துக் கொள்ளலாம் ! இதில் ஓர் ஆச்சரியம் என்ன வென்றால் காலாக்ஸிகள் உருவான பிறகு தனிப்பட்ட முறையில் அவை விருத்தி அடைவதில்லை.  அருகில் உள்ள மற்ற காலக்ஸிகளின் சூழ்வெளியோடு முட்டி மோதி மாறுதல் அடைகின்றன.

    Fig 1G The Galex Space Telescope

    நாசா அனுப்பிய காலெக்ஸ் விண்ணோக்கி

    2003 ஏப்ரல் 28 ஆம் தேதி நாசா பூமியைச் சுற்றிவரும் “காலெக்ஸ்” (GALEX Orbiting Space Telescope) என்னும் விண்ணோக்கியை ராக்கெட் மூலம் அனுப்பியது.  பூமியை ஒன்றரை மணி நேரத்தில் ஒரு முறை சுற்றி வரும் காலெக்ஸ் விண்ணோக்கிப் பிரபஞ்சத்தில் கடந்த 10 பில்லியன் ஆண்டுகளாக புறவூதா ஒளிவீசும் பூர்வாங்க காலாக்ஸிகளை நோக்கிக் கடந்த 5 ஆண்டு களாய் அகிலத்தின் பூர்வீக வரலாற்றைத் (Cosmic History) தொடர்ந்து அறிந்து வந்தது. அந்த விண்ணோக்கு விளைவுகள் நமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அது எவ்வாறு வளர்ச்சி அடைந்து மாறியது என்பதையும் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.  அத்துடன் காலெக்ஸ் பூர்வாங்க காலத்தில் விண்மீன்கள் உருவாக இருந்த மூல காரணங்களை உளவிக் காணும்,  மேலும் காலெக்ஸ் முதல் முறையாக பிரபஞ்சத்தில் உருவாகி வரும் காலக்ஸிகளைக் காட்டும் ஓர் விளக்கமான விண்வெளிப் படத்தைத் (Galaxy Map) தயார் செய்துள்ளது !  அதன் மூலம் நமது பால்வீதி போன்ற காலாக்ஸிகள் எவ்விதம் உருவாயின என்று நான் அறியலாம்.  காலெக்ஸ் உளவி அனுப்பும் புறவூதா நோக்கு நிகழ்வுகள் நமது பால்வீதியில் எப்போது விண்மீன்கள் இரசாயன மூலகங்களை உற்பத்தி செய்தன என்னும் புதிரையும் விடுவிக்கும் !

    Fig 1D Our Huge Galaxy

    பிரபஞ்சத்தின் பூதகரமான காலக்ஸி ஒளிமந்தைகள்

    பரிதியைப் போல் கோடான கோடி விண்மீன்கள் சேர்ந்து நமது பால்வீதியில் குடியேறி அதன் மையத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றி வருகின்றன.  பால்வீதியில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை 200 பில்லியனுக்கு மேற்பட்டது !  பால்வீதியை விடப் பன்மடங்கு பெரிய தனித்தனிக் காலக்ஸிகள் ஒன்று கூடி “காலக்ஸிகளின் கொத்துக்கள் அல்லது மந்தைகளாக” (Clusters of Galaxies) உலவி வருகின்றன !  மந்தையில் காலக்ஸிகளும், காலக்ஸிகளுக்கு இடையே உள்ள இடைவெளி நிரப்பிகளும் அடங்கும்.  மந்தையில் இருப்பவற்றை இறுக்கிப் பிணைத்துக் கொள்வது அவற்றின் ஈர்ப்பு விசை. மந்தையில் உள்ள காலக்ஸிகளின் இடைவெளியை நிரப்புவது கனல் வாயு !  கனல் வாயுவின் உஷ்ணம் மில்லியன் கணக்கான டிகிரிகள் !  அந்தப் பேரளவு உஷ்ண வாயுவில் கண்ணுக்குத் தெரியும் ஓளி வீசாது, கருவிக்குத் தெரியும் எக்ஸ்-ரே கதிர்கள் வீசும் !  வாயு உஷ்ணம் பரவியுள்ள விதத்தை உளவி ஈர்ப்பு விசை எத்தகைய முறையில் அழுத்தி யுள்ளது என்றும், இடைவெளியில் எத்தனை அளவு பிண்டம் இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் அறிய முடிகிறது.  அம்முறையில் கணித்ததில் காலாக்ஸிகள் மற்றும் இடைவெளிக் கன வாயு நிறையை விட ஐந்து மடங்கு நிறை காலாக்ஸி மந்தைகளில் உள்ளது என்று தெரிகிறது.

    Fig 1F Our Milky Way Galaxy Details

    பிரபஞ்சக் கூண்டுக்குள்ளே இருக்கும் புதிரான பிண்டங்கள் என்ன ?

    காரிருள் விண்வெளி எங்கணும் குவிந்த குடைபோல் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் கூண்டுக்குள்ளே சிதறிக் கிடக்கும் பொருள்கள் என்ன ?  சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் !  அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரிய விண்ணில் உள்ளவைதான் என்ன ? அவை எல்லாம் சூனிய மண்டலமா ? வெறும் இருள் மண்டலமா ?

    சுமாராகச் சொல்லப் போனால் பிரபஞ்சத்தில் 73% கருமைச் சக்தி (Dark Energy), 23% கருமைப் பிண்டம் (Dark Matter) 4% தான் சூரிய மண்டலம் போன்ற ஒளிமய மந்தைகள் (Normal Matter).  விபரமாகச் சொன்னால் கருமைச் சக்தி 65%, கருமைப் பிண்டம் 30%, விண்மீன்கள் 0.5% [Stars],  உலவும் ஹைடிரஜன், ஹீலியம் சேர்ந்து 4% [Free Hydrogen & Helium], கன மூலகங்கள் 0.03% [Heavy Elements], மாய நியூடிரினோக்கள் 0.3% [Ghostly Neutrinos].  இவற்றில் நமக்குப் புரியாமல் புதிராகப் இருக்கும் இருட் பிண்டம் என்பது என்ன ?  ஒளிச்சக்தி, ஒலிச்சக்தி, மின்சக்தி, காந்த சக்தி, அணுசக்தி, ஈர்ப்புச் சக்தி போலத் தெரியும் பிரபஞ்சத்தின் புதிரான இருட் சக்தி என்பது என்ன ?

    ajay

    பூர்வாங்க காலாக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாதல்

    பேரளவு ஹைடிரன் வாயு ஈர்ப்புச் சக்தியால் உருண்டு திரண்டு அடர்த்தி மிகுந்து விண்மீன்கள் ஒன்று வளரும் அல்லது கலைந்து போய்விடும் !  அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன.  முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் !  பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன !  பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் உண்டைகளாகத் திரண்டு விடுவித்துக் கொண்டவை பெரும்பான்மையாக கரும்பிண்டமும், நடுத்தன்மை ஹைடிரஜனும், (Dark Matter & Neutral Hydrogen) ஓரளவு ஹீலிய வாயுவாகவும் கருதப்படுகிறது.  இந்த உண்டை (Object) தனது ஈர்ப்புச் சக்தியால் சிதைய ஆரம்பிக்குக் போது, அது “பூர்வாங்க காலக்ஸி” (Protogalaxy) என்று குறிப்பிடப் படுகிறது.  முதன்முதல் திரணட பூர்வாங்க காலக்ஸிகள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிச் சிதைந்து போயின !

    Fig 1H Hubble Telescope Viewing Galaxies

    கருமைப் பிண்டம், சாதாரணப் பிண்டம் (Dark Matter & Ordinary Matter in the form of Hydrogen & Helium Gas) இரண்டும் இந்த சமயத்தில் பிரிகின்றன !  வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன !  விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன !  ஆனால் அவை விண்வெளியில் வெகு தூரத்தில் (பல ஒளியாண்டுகள் தூரம்) மிக மிக மங்கலாகத் தெரிவதால், தொலைநோக்கிகள் மூலம் காண்பதுவும் சிரம மானது !

    காலக்ஸிகள் பிரபஞ்ச வரலாற்றின் அறிகுறிச் சின்னங்கள் !

    Fig 8 Dark Matter & Dark Energy


    பிரபஞ்சத்தில் கோடான கோடி விண்மீன்கள் சுற்றும் மந்தை மந்தையான காலாக்ஸிகள் அகிலத்தின் அடிப்படை அரங்கம் (Basic Unit of Cosmology) !  அவற்றில் இருப்பவை பெரும்பாலும் : எண்ணற்ற விண்மீன்கள், வாயுக்கள், தூசி துணுக்குகள், பேரளவில் கரும்பிண்டம் (Dark Matter) ! பூகோளத் தளத்திலிருந்து பிரபஞ்ச விளிம்புவரை தொடும் காலக்ஸிகள் மட்டும்தான் பிரபஞ்சத்தின் ஆதிகால மூல வரலாறுகளை விளக்கும் பூர்வாங்க “மைல்கற்கள்” அல்லது “அறிகுறிச் சின்னங்கள்” (Signposts) !  காலாக்ஸி ஒன்றில் பில்லியன் கணக்கில் விண்மீன்களும் மற்றும் சில வாயுக்களும், கருமைப் பிண்டங்களும் (Dark Matter) ஈர்ப்பாற்றலால் பின்னிக் கொண்டிருக்கின்றன !  விலக்கித் தள்ளும் “கருமைச் சக்தியால்” (Repulsive Dark Energy) மந்தை காலாக்ஸிகள் நில்லாமல் பிரபஞ்ச விளிம்பை விரித்துக் கொண்டு விரைவாய்ச் செல்கின்றன.  வாயுக்கள் நிரம்பச் செழித்து இன்னும் புதிய விண்மீன்கள் உருவாகும் நமது பால்வீதி காலக்ஸி சுருள் வடிவைக் (Spiral Shaped Milkyway) கொண்டது.  நீள்வட்ட காலக்ஸியில் (Elliptical Galaxy) வாயுக்கள் கிடையா.  மற்றும் பால்வீதிக்கு அருகில் “ஆப்பம்” போன்ற தட்டு லென்ஸ் காலாக்ஸியும் (Lenticular Galaxy), வடிவீன காலக்ஸியும் (Irregular Galaxy), ஸாகிட்டாரியஸ் குள்ள காலாக்ஸியும் (Sagittarius Dwarf Galaxy) பல்வேறு வடிவத்தில் உள்ளன.

    Fig 5 Galaxy Evolution

    பிரபஞ்சத்தில் எப்படி காலக்ஸிகள் உருவாயின என்பது வானியல் விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது !  காலாக்ஸிகள் உருவான முறையைக் கூறும் வானியல் பௌதிகம் சிக்கலானது !  காரணம் : விண்மீன்கள் ஆக்கப்படும் விஞ்ஞான இயக்கங்களை அவை கடினமானக் கணினி மாடல் மூலம் விளக்குகின்றன.  ஹைடிரஜன், ஹீலியம் போன்ற வாயுக்கள் பேரளவு உஷ்ணத்தில் மூலக மாற்றம் அடையும் வெப்ப இயக்கவியல் (Thermodynamics), அணுக்கரு இயக்கங்கள் (Nuclear Reactions), வெப்ப அணுக்கரு இயக்கங்கள் (Thermo Nuclear Reactions or Fusion Reactions) போன்றவை நிகழ்வதையும், அவற்றிலிருந்து எழுகின்ற சக்தியைப் பற்றியும் அந்த விபரங்கள் கூறுகின்றன !  உதாரணமாக வாயு முகில்களில் விண்மீன்கள் உருவாவதையும், புதிய விண்மீன்கள் அந்த வாயுக்களை வெப்பமாக்குவதையும், பிறகு அவை அந்த வெப்பத்தைப் பரப்புவதையும், அடுத்தினி விண்மீன்கள் பிறக்காமல் தடுக்கப்படுவதும் அவற்றில் அறியலாம் !

    Fig 7 Herschel Telescope

    (தொடரும்)
    +++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe -How Did the Milky Way Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. Daily Galaxy – Cataclysmic Orbit – Our Solar System’s Journey Through the Milky Way Posted By : Luke McKinney [Sep 26, 2008]
    21 Daily Galaxy -GAIA Space Probe – Mapping the Family Tree of the Milky Way Posted By : Casey Kazan (July 2, 2007]
    22 Daily Galaxy – Hubble’s Secret – Orbiting the Milky Way Posted By : Casey Kazan [Dec 22, 2008]
    23 Daily Galaxy – 18 Billion Suns – Biggest Black Hole in the Universe Discovered Posted By Rebecca Sato [Dec 30, 2008]
    24. Daily Galaxy – Journey to the Center of the Milky Way Postd By : Casey Kazan (Jan 12, 2009)
    25. Astronomy Today – The Milky Way Galaxy A Grand Design By : Eric Chaisson & Steve Mcmillan (1999)
    26. (Galex Space Probe) Galaxy Evolution Explorer Celebrates Five Years in Space By : Linda Vu (Spitzer Space Center (April 28, 2008)
    27. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40807101&format=html (My Thinnai Article on Galaxy) [July 11, 2008]
    28. Cosmos By : Carl Sagan (1980)
    29. National Geographic Encyclopedia of Space By : Linda Glover (2005)
    30. Astronomy Magazine – (1) Receipe for a Galaxy By : Francis Reddy (2) How the Milk Way Works & (3) The Milky Way Inside & Out Both Articles By : Robert Benjamin (July-Sept 2009)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (July 2, 2009)

    Share
  • அந்தகாரத்துக்கு முன்பு

     

    – சந்திரகுமார விக்ரமரத்ன

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     Untitled 12(113)

    வாசலருகே மலர்ச்செடியின்

    பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே

    கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ

    அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு

    பாடப்படப்போகும் போதனை கீதங்களை

    கொழும்புக்குச் சென்று

    அப்பாவிடம் உரைப்பீரோ

     

    அமாவாசைக் கனவுகள் வந்து

    தம்பியை அச்சுறுத்துகையில்

    நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட

    யாருமில்லை வீட்டில் இப்பொழுது

    இன்றிரவு சொந்தங்கள்

    எம் குடிசையில் விழித்திருப்பர்

    எவ்வாறிருக்குமோ நாளை

    நாம் உணரும் அந்தகார இருள்

     

    வண்ணத்துப் பூச்சிகளே

    மெதுமெதுவாக

    மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்

    இனி

    பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்

    உறைந்துவிடும் அம்மாவின் வாசனை

    அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு

    மயானத்துக்கு வந்து நாளை

    கூட்டிச் செல்லுங்கள் அப்பா

    சிறைச்சாலைக்கு எம்மையும்

     

    – சந்திரகுமார விக்ரமரத்ன

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • சிலவரிக் கவிதைகள்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    பறவைகளின் உடல்
    மறைக்கும் உடைத்
    தூவல்கள்…

    எப்பொழுது வரவேண்டுமென்று             ARAVINDHAN BOOK
    மயிலிடம் கேட்கிறது
    மழைக்குமுன் சிறு தூவல்…

    சேவலே கூவிவிடாதே
    இன்னமும் நேரமிருக்கிறதென்கிறது
    விடியலுக்கு முன்பான இருட்டு…

    உனக்காகத்தானே
    இத்தனை நாட்கள்
    காத்துக் கிடந்தேனென்று
    ஓடி வந்துக் கலக்கிறது
    குட்டையில் மழைநீர்…

    பொறுத்திரு சிலநாட்கள்
    முழுமையாய் வருகிறேன்
    மேகத்திடம் சொல்கிறது
    வளர் பிறை…

    தலை சுற்றச் சுற்ற
    காற்றள்ளி வீசுகிறது
    மின் விசிறி…

    தொலைதூரம் ஓடிவந்து
    படுக்கையில் கிடக்கிறது
    கனவு…

    உதடும் கோப்பையும்
    உரசிக்கொள்ளக்
    கள்வெறி கொள்கிறது
    மது…

     

    Share
  • நயம் விரும்பும் மனம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    நயம் ஒன்றே விரும்பும் மனம்
    யெயம் காணத் துடிக்கும் தினம்
    பயமற்ற தன்னம்பிக்கைத் தூணெனும் மனம்
    சுயமழியாது காக்கும் தனம்!

    இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்
    அன்பின் இராகமாய் புது அனுராகமாய்
    இன்னிதழ்களின் எழில்மிகு நடனத்தில்
    மென்னகைப்பது கண்களில் நிதரிசனம்!

    வினைமனத் தினப்போரின் வில்லங்கப்
    பிணைதலில் விதி யென்று கூறிடும்
    புனையால் மனம் இறுகிடும்; இளகிய
    நினைவு இன்பம் சேர்ப்பதியல்பு!

     

    Share
  • இதயம் கவர்ந்தவன்!

    -திருக்குவளை மீ.லதா

    உன்  காந்தப் பார்வையின் இழுப்பட்ட விசையால்
    இடம் மாறியது எனது இதயமடா!
    விலகி செல்லும் போது வீணாய் அழைத்து போனது
    உன் பின்னால் என் மனமும்!

    உடைகளின் வண்ணத்தின் ஒற்றுமை
    நம் எண்ணத்தின்ஒற்றுமையைப்
    பறைசாற்றிய  நாட்கள் எத்தனை!

    காத்திருப்பில் கரைந்துபோன காலங்களில்
    உன்னுடன் பேசிய  நினைவுகள்
    உயிர் கொடுத்தன வாழ்ந்துவிடு என்று!

    மணக்கும் மல்லிகை பார்த்தால்
    மறக்காது மனக்கண்முன் வந்துபோனது
    மல்லிகையுடன் நீ நின்ற கோலம்!

    கற்பனையில் கரைந்த காட்சி  கண்மலரக்
    கண் எதிரில் நின்றது உனது வடிவில்
    கண்கலங்கி நின்றேன் சந்தோஷத்தின் எல்லையில்!

    சுமைதாங்கும்  இதயமாய்
    உனைத் தாங்கிய இதயம்
    களைப்பாறியது உனது இதயம் சேர்ந்து!

    மணித்துளிகள் நிமிடங்களானது
    பிரிவென்ற அம்பு துளைக்கக் காத்திருக்க?
    கிடைத்திடும் தருணம் ’மகிழ்ச்சி கொள்’ என்றது
    பகவத்கீதை வரிகள் போல!

    அடிக்கடி சந்தித்த பார்வையின் பரிமாற்றம்
    பாதுகாப்பாய்ப் பூட்டப்பட்டது
    பெட்டகத்தின் திறப்பான் என்னிடம் இருத்தப்பட்டது!

    விருந்தோம்பல்  விளையாட்டாய்ப் போக
    மனம் மணி பார்த்தது பதைபதைத்து!
    சிரிப்பலையில் சிறகு விரித்த சந்திப்பு
    இப்போது மெளனம் சாதித்தது பிரிவைக் கண்டு!

    விடை கொடுத்து விடை பெற்றாய்
    விடை தெரியாத என் கேள்வி மட்டும்
    கொக்கிபுழுவாய்க் குடைந்து நின்றது!

    உள்நுழைந்து இதயம் சுரண்டிய உன் நினைவும்
    நீ வந்து சென்ற அடையாளமாய் மிச்சம் இருந்தது
    அறை முழுதும் வாசனையாய் உன் அங்கத்தில் பரவிய நறுமணம்!
    தினம்தோறும் அசைபோடும்
    மனத்தின் காட்சியானது உனது வருகை காலம் முழுதும்!

     

    Share
  • சோகத்தை மிஞ்சும் சடங்கு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஓய்வு நாளாக (Sabbath day) அனுசரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் யூதர்களிடையே நியுயார்க்கிலுள்ள புருக்ளின் பகுதியில் ஒரு பெரிய சோக நிகழ்ச்சி மார்ச் மாதம் 21-ஆம் தேதி நடந்தது. சனிக்கிழமை யூதர்களுக்கு ஓய்வு தினமாதலால் அன்று தீயை மூட்டக் கூடாது என்பதால் வெள்ளி சூரிய அஸ்தமனத்திற்கு முன் அடுப்பை மூட்டி அன்று இரவு முழுவதும் உணவை சூடாக வைத்திருந்து மறு நாள் குடும்பத்தினருக்கு உணவளிக்கும் ஒரு பழக்கத்தை யூதர்கள் அனுசரிக்கிறார்கள். இப்படி இந்தப் பழக்கத்தை அனுசரிக்கும் ஒரு குடும்பத்தில் ஹாட் பிளேட்டில் ஏதோ கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து வீடு பூராவும் தீ பரவி அந்தக் குடும்பத்தின் எட்டுக் குழந்தைகளில் ஏழு பேரைப் பலிவாங்கியிருக்கிறது.

    இந்தச் சம்பவம் நடந்த பிறகு சநாதன யூதர்கள் வாழும் அந்த வட்டாரம் முழுவதும் மிகவும் கலங்கிப் போயிருக்கிறது. தங்களுக்கும் இந்தக் கதி வந்துவிடக் கூடாதென்பதற்காக பல வித எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாரா வாரம் வரும் இந்த சனிக்கிழமையை எப்படிச் சமாளிப்பதென்று திட்டம் தீட்டி வருகிறார்கள் அந்த வட்டார மக்கள். அந்த ஏரியாவில் உள்ள மின்சாதனங்கள் விற்கும் ஒரு கடையில் நெருப்புப் பிடித்தால் நெருப்பிலிருந்து வரும் புகையைக் கண்டுபிடிக்கும் (smoke detectors) கருவி அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதற்கு மேல் சேமிப்பு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கடையில் இருந்ததைப் போன்று மூன்று மடங்கு கருவிகளும் விற்றுப்போய்விட்டன. யூதர்களுடைய கோவிலிருந்து இம்மாதிரியான நிறையக் கருவிகள் இனாமாகப் பலருக்கு வழங்கப்பட்டன.

    அந்த வட்டாரத்தில் வசிக்கும் ஒரு யூதர் தன் நான்கு குழந்தைகளுக்கும் வீட்டில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று விரிவான பயிற்சி கொடுத்ததோடு வீட்டில் ஆறு கயிற்று ஏணிகளையும் (குடும்பத்தவர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒன்று போலும்) ஜன்னல்கள் அருகே சுத்தியலையும் (ஜன்னலை உடைத்துத் தப்புவதற்கு) வைப்பதற்கு ஏற்பாடு செய்யப் போகிறாராம். தன் குழந்தைகளுக்கு எங்கு, எந்த மாதிரி தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும், எப்படித் தப்பிக்க வேண்டும் என்று பயிற்சிகள் கொடுக்கப் போகிறாராம். ஒன்பதிலிருந்து பதினைந்து வயதுள்ள அவர் குழந்தைகளுக்கு அவர் கொடுக்கப் போகும் பயிற்சியில் ‘அம்மாவுக்காகக் காத்திருக்காதீர்கள். அப்பாவுக்காகக் காத்திருக்காதீர்கள். முதல் முதலாக நீங்கள் செய்ய வேண்டியது வெளியே செல்வது’ என்ற போதனையும் இந்தப் பயிற்சிகளில் ஒன்று.

    பல யூதர்கள் தங்கள் வீடுகளில் உள்ள நெருப்பின் புகையைக் கண்டுபிடிக்கும் கருவி நன்றாக வேலை செய்கிறதா என்றும் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் அவற்றைக் கடைக்கு எடுத்துச் சென்று கடைக்காரரிடம் பரிசோதித்துக்கொண்டு வர வேண்டும் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள். சிலருடையது மிகவும் பழையதாகிவிட்டதால் அவற்றுக்குப் பதில் புதியவைகளை வாங்கிவந்து மாட்டியிருக்கிறார்கள். தீயணைப்புக் கருவிகளையும் சிலர் வீட்டில் புதிதாக நிறுவியிருக்கிறார்கள். இன்னும் சிலர் வெள்ளியன்று சூரிய அஸ்தமனத்திற்குக் கொஞ்சம் முன்னால் அடுப்பு ‘ஆன்’ ஆகி அவர்கள் படுக்கப் போகும்வரை வேலைசெய்துவிட்டு தானாக ‘ஆஃப்’ ஆகி மறுபடி இவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்ததும் தானாக ‘ஆன்’ ஆகி மறுபடி வேலைசெய்வதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கருவியை (timer) வாங்கி அவர்கள் அடுப்போடு பொருத்தப் போகிறார்கள்.

    ரஷ்யாவில் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டு மடிந்த அனுபவத்தையும் ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய யூதப்படுகொலையையும் யூதர்கள் சேர்ந்து அனுபவித்திருப்பதால் இப்போது இந்த மிகப் பெரிய சோக சம்பவமும் அந்த வட்டாரத்திலுள்ள யூதர்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை இரவில் இடையிடையே எழுந்து அழுகிறதாம். ஏழு குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு அருகே வசித்த ஒரு பெண் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறார். ‘இறைவன் ஏன் இப்படி அவர்களைச் சோதித்தார்?” என்று கேட்பதோடு, ’இது இறைவன் செயல். அதை ஏன் என்று கேட்க நான் யார்?’ என்றும் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறார்.

    இப்படி சோகத்தில் அமிழ்ந்து போயிருக்கும் இந்த யூதர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்கள் இந்த சோகத்தை எதிர்கொண்டு மறப்பதற்கு ஒரு மதத்லைவர் தலைமையில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இம்மாதிரியான சோக சம்பவங்களின்போது நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்திருப்பது ஒன்றுதான் நம் எல்லோருக்கும் பலத்தைக் கொடுப்பது என்று அவர் கூறியிருக்கிறார்.

    இந்த மாதிரி இன்னொரு சோகச் சம்பவம் நடந்துவிடக் கூடாதென்று பல முன்னேற்பாடுகளை இந்த யூதர்கள் செய்துவருகிறார்கள். ஆனால் ஒருவருக்காவது மூட நம்பிக்கையில் பிறந்த இந்த ஓய்வு நாள் பழக்கத்தை ஏன் விட்டொழிக்கக் கூடாது என்று கேட்கத் தோன்றவில்லை. அன்று சமைக்காமலே சாப்பிடக் கூடிய பழங்கள் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டிக்கலாம் என்று ஏன் ஒருவருமே நினைக்கவில்லை? கால மாற்றத்திற்கேற்பத் தங்களையும் தங்கள் சடங்குகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏன் இந்த யூதர்கள் நினைக்கவில்லை?

    Share