மீ.விசுவநாதன்

(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

கே.வி. அண்ணபூர்ணா
கே.வி. அண்ணபூர்ணா

முதல் வகுப்புக்கு அவனுக்குக் கண்ணம்மா டீச்சரும், சுப்புலட்சுமி டீச்சரும் பாடம் எடுத்தார்கள். கண்ணம்மா டீச்சர் கையில் ஒரு பிரம்போடுதான் இருப்பாள். நல்ல “கிணீர்” என்ற குரலில் வாய்ப்பாடு சொல்லித்தருவாள். மனப்பாடம் செய்ய வைத்து, திரும்பத்திரும்பக் கேட்டு மனதில் பதிய வைக்கும் அழகில் ஒவ்வொரு குழந்தையும் தன் அம்மாவின் அருகில் இருப்பதைப் போல உணர்ந்து கொள்ள முடியும். “அம்மா, ஆடு, இலை, ஈ, உரல், ஊர், எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓடம், ஒளவைப்பாட்டி, ஆயுத எழுத்து அக்கன்னா” என்று தமிழின் உயிர் எழுத்துக்களையும், ஆயுத எழுத்தையும், “கசடதபற” வல்லினம், “ஙஞணநமன” மெல்லினம், “யரலவழள” இடையினம் என்று தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ராகம் போட்டுக் கற்றுத் தந்தது இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவனுக்குத் தமிழ்ப்பாலூட்டிய தாய்தான் கண்ணம்மா டீச்சர். வாய்ப்பாடு தப்பாகச் சொன்னாலோ வலது கை மணிக்கட்டில் பிரம்பால் ஒரு தட்டு தாட்டுவாள். அவன் கண்ணம்மா டீச்சரிடம் மணிக்கட்டில் நிறைய அடி வாங்கி இருக்கிறான். ஒவ்வொரு முறை அடிக்கும் பொழுதும் அவன் தன் வலது கையை சடக்கெனப் பின்னல் இழுத்துக்கொள்வதும், டீச்சர் அவனது கையைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு “கவாஸ்கரை”ப்போல் குறிப்பார்த்து மணிக்கட்டில் பிரம்பால் தட்டுவதும், டீச்சர் கையை ஓங்கும் பொழுதே அவன் கிரிகெட் ரசிகர்கள் போல “ஓவென”க் கத்துவதும், “கோழி கிண்டின மாதிரி எழுதிட்டுக் கத்த வேற செய்யறயா” என்று மீண்டும் அவனுக்கு பிரம்படி உற்சவம் நடத்துவதும் தினசரி நடக்கும். அவன் அதை அம்மாவிடம் சென்று ஒரு முறை முறையிட்டான். அம்மா அவனது கையைப் பிடித்துக் கொண்டு அடுத்த நாள் நேராக டீச்சரிடம் வந்தாள். பேசினாள். நடந்ததைத் தெரிந்து கொண்டு,”டீச்சர் இவன்…மணிக்கட்டே போனாலும் சரி ..இவன நன்னா திருத்திக் கொண்டு வாங்கோ…அதுபோரும் எனக்கு” என்று அம்மாவும் டீச்சர் பக்கமே பந்தடித்ததில் அவனுக்கு முகம் “இஞ்சி தின்ன குரங்கு” போலாகி விட்டது. உடனே கண்ணம்மா டீச்சர் அவன் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டு “விஸ்வநாதன் நல்ல புள்ள இல்ல…நல்லப் படிப்பான்”..என்று அவன் கண்களைப் பார்த்துக் கொஞ்சுவது போலச் சொன்னாள். அவன் நல்ல படிப்பாளியாக இருந்தானோ இல்லையோ , அந்த டீச்சரை அவன் எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அன்று அந்த மணிக்கட்டில் கொடுத்த அடிதான் அவனது எழுத்து “மணிமணி”யாக இருக்கக் காரணமானது.

அதே வகுப்புக்கு செல்லப்பா சாரும் வந்து பாடம் நடத்துவார். முக்கியமாக வாய்ப்பாடு சொல்லித்தருவார். அதுவும் வேடிக்கையாகச் சொல்லித்தருவார். அதனால் மனதில் நன்கு பதியவும் செய்யும், வகுப்பில் தூக்கமும் வராது. கரும்பலகையில் ஒவ்வொரு வாய்ப்பாடும் ராகம் போட்டபடி எழுதுவார். உடனே ஒவ்வொரு மாணவரையும் எழுந்து நின்று கொண்டு உரக்கப் படிக்கச் சொல்லுவார். மாணவர்களின் கவனம் பாடத்தில் இருக்கிறதா என்று கவனிப்பார். அதற்கு அவரே வாய்ப்பாடு சொல்லி பிள்ளைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுவார். ” ஒரோன்னு ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு , மூவொண்ணு மூணு , நாலொண்னு சாப்பாடு” என்பார். உடனே,” சார் தப்பு. நாலொண்னு நாலு” என்று சொல்லும் பிள்ளைகளைப் பார்த்து,”நீங்க கவனிக்கரெளான்னு பார்த்தேன்” என்று கூறிச் சிரிப்பார். அப்படிதான் ஒருமுறை அவன் “நாலொண்ணு சாப்பாடு” என்றான். ஆமாம் இங்க வா சாப்பாடு தரேன் என்று அவன் கையில் பிரம்பால் ஓங்கி ஒரு முத்தம் கொடுத்தார். அவன் கையைப் பின்னல் எடுத்தபொழுது அந்தப் பிரம்படி செல்லப்பாசார் முழங்காலில் பட்டுவிட்டது. கோபத்தில் அவர் அவனைப் பார்த்ததும் அவன் அந்த வகுப்புக்குள்ளேயே ஓட்டமெடுத்தான். அவரும் சுற்றிச் சுற்றி வந்து அவனை பிடித்து, அவனது இடது தோள்பட்டைக்குக் கீழே உள்ள சதைப்பகுதியை நன்றாக நிமிட்டியபடி,”பாடத்துல ஒழுங்கா கவனம் இருக்குமா..சொல்லு இருக்குமா” என்று கேட்க அவனும் கண்களில் நீர் தளும்ப,”இருக்கும் சார்…” என்றான். அது அவனுக்கொரு பாடம். இன்று வரை அவன் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலோ, எந்தக்கதையோ கட்டுரையோ, கவிதையோ படித்தாலோ மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்கிறான். அப்போதெல்லாம் அவனுக்குச் செல்லப்பாசார்தான் நினைவில் வந்து செல்வார். அவர் அவனது வீட்டிற்குப் பக்கத்திலேதான் குடி இருந்தார். நல்ல மனிதர். நேரம் தாழ்த்தி ஒருநாளும் அவர் பள்ளிக்குச் சென்றதில்லை. பள்ளியில் மிகுந்த சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருப்பார். ஒவ்வொரு வருடமும் விஜய தசமி அன்று குழந்தைகள் எல்லோரும் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், தட்சிணையோடு வந்து அவரவரது வகுப்புக்குரிய ஆசிரியர்களை நமஸ்காரம் செய்வார்கள். அவர்கள் எல்லோருக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிதருவார்கள். அதன் பிறகு வகுப்பு வாரியாக எல்லா மாணவ மாணவியர்களையும் ஒரு வரிசைக்கு நான்கு பேர்களாக நிற்கவைத்து பெருமாள் கோவிலின் தெற்கு மாடவீதி, மேலமாட வீதி, வடக்கு மாட வீதி, சன்னதிதெரு வழியாக ரதவீதி சுற்றி மீண்டும் பள்ளிக்கூடம் வரை நாகஸ்வர மேளத்துடன் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். வீதி முழுக்க மனிதர்களை, அன்பு முகங்களைக் காண ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஊர்வலம் அவனது வீட்டு வாசலுக்கு வரும் பொழுது அங்கே நின்று கொண்டிருக்கும் அவனது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, அத்தை, அக்கா என்ற அன்புக் கூட்டத்தைப் பார்த்து அவன் கையை அசைத்து சிரித்து மகிழ்வான். ஊர்வலம் நிறைவு பெற்றவுடன் அனைவருக்கும் ஒரு பழம், கொஞ்சம் அவல், ஏதேனும் ஒரு இனிப்பு என்று பிரசாதமாகத் தருவார்கள். அந்தக் கலாச்சாரமே ஒரு வரப்பிரசாதம்தான். அனேகமாக நாகஸ்வரம் “சித்திரை”க் கம்பர்தான் வாசிப்பார். அவர்தான் அந்த கிராமத்தின் ஆஸ்தான வித்வான். அவர் நாகஸ்வரம் வாசிக்கும் பொழுது அவரது இரண்டு கன்னங்களும் கொழக்கட்டையை அடக்கி வைத்தது போல இருக்கும். அவன் அதைக் காட்டி அவரிடம்,” இது என்ன பலூனா” என்று சுவாரஸ்யமாக அவர் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டான். அப்பொழுது அங்கு வந்த சுந்தர வாத்தியாரிடம்,” சாமி இந்தப் புள்ள எதாவது எடக்குப் பண்ணிக்கிட்டே இருக்கு” என்று சித்திரைக் கம்பர் புகார் செய்தார். ” பெரியவாள அப்படியெல்லாம் கேலி பண்ணக் கூடாது விஸ்வம்…” என்று செல்லமாகச் சொல்லி அழைத்துச் சென்றார். நல்ல வேளை செல்லப்பா சார் இல்லை..அவர்ட்ட புகார் சொல்லி இருந்தால் அவன் கன்னத்தில் ரெண்டு கொடுத்து அவனை அனுமன் ஜாடையாகப் பண்ணி இருப்பார். சித்திரைக் கம்பரிடம் அவனக்குத் தனியான ஒரு அன்பு இருக்கத்தான் செய்தது. அவரது எளிமையான தோற்றமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்த ஊரில் உள்ள பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில்களுக்கெல்லாம் அவர்தான் நாகஸ்வரம் வாசிப்பார். கொடுத்ததைப் பெற்றுக் கொள்ளும் குணவான்.

amv1

                                                                                                          கே.வி அண்ணபூர்னா

அன்று அவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. மாலையில் விளையாட டுண்டிவிநாயகர் தெருவுக்குப் போனான். அங்குதான் அவனது மாமா தாத்தா வீடு இருக்கிறது. நண்பர்களோடு விளையாடி விட்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கைகால்களைக் கழுவிக்கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு மாமா தாத்தாவுடன் சென்றான். சுவாமி தரிசித்துவிட்டு வெளியில் வரும் பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சுந்தர வாத்தியாரிடம் அவனுக்குத் தாத்தா பேசிகொண்டிருந்தார். பேச்சு வாக்கில் சித்திரைக் கம்பரை அவன் கேலி செய்த விபரம் வெளியானது. “அப்படியா” என்று அவனுக்கு மாமாத்தாத்தா அவனைப் பார்த்துக் கேட்டார். “இல்லையே” என்றான் அவன். “இல்லையா..விஸ்வம் பொய் சொல்லக் கூடாது..பாவம்” என்றார் சுந்தர வாத்தியார். அவன் மெதுவாக “இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் சார்..” என்றான். அப்பொழுது சுந்தர வாத்தியார் அவர்களுடன் பிரதட்சிணமாக வந்தார். வந்து கொண்டே இருந்தவர் “விஸ்வம் இங்கவா..ஒனக்கு ஒரு கதை சொல்லறேன் …” என்று அவனுக்கு நண்பன் சுப்பாமணியின் வீட்டின் வாசலில் (L. M .சுந்தரம் ஐயர் வீடு) கிழக்குப் பார்த்த சின்னத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். அவனுக்குக் கதை கேட்க மிகவும் பிடிக்கும். அவருக்குக் கீழே தரையில் அவன் அமர்ந்து கொண்டான். தாத்தா அவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

“ஒனக்கு …அக்கரக்கோவில் கதை தெரியுமோ…” என்று கேட்டார். தெரியாது சார் என்றான். இப்ப நான் உனக்குச் சொல்லறேன் என்று ஆரம்பித்தார். நம்ம ஆத்தங்கரைக்கு அக்கரைல இருக்கறதால அத அக்கரக்கோவில்னு சொல்லுவா.. ஆனா அதுக்கு இன்னொரு பேரு எரித்து ஆட்கொண்டார். அந்த சிவனுக்கு காசிவிஸ்வநாதர் என்று பெயர். அம்பாளுக்கு மரகதாம்பிகை என்று பெயர். அது ஒரு அழகான கோவில். மொதல்ல ஒரு பெரிய பிராகாரம் உண்டு. அங்க நெறைய பூச்செடியும், மரங்களுமா அழகா இருக்கும். உட்ப்ராகரம் உண்டு. அதற்குள்ள கர்பகிரஹத்தில் கிழக்குப் பார்த்த சிவலிங்கமும், தெற்குப் பார்த்த அம்பாளும் இருக்கா…ஒரு நாள் ஒரு கன்னட பிராமணர் இந்தக் கோவிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் பண்ணினார். அவர்ட்டக் கொஞ்சம் தங்கக் கட்டிகள் இருந்தது. அத, அந்தக் கோவில்ல பூஜை பண்ணற பட்டர் கிட்டக் கொடுத்து ,”சுவாமி ..நான் காசிக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்..இந்த தங்கக் கட்டிகள நீங்க வைச்சுண்டிருங்கோ..நான் திரும்பி வந்து வாங்கிக்கறேன்” என்று சொன்னார். சரின்னு அந்தப் பட்டரும் அந்த தங்கக்கட்டிகளை வாங்கி வைத்துக் கொண்டார். கொஞ்ச மாசம் கழிஞ்சி, காசிக்குப் போன அந்த கன்னட பிராமணர் திரும்ப வந்து அந்த பட்டரப் பாத்து,” சுவாமி ..நான் காசிக்குப் போயிட்டு வந்துட்டேன்,.நன்னா தரிசனம் பண்ணினேன்…இந்தாங்கோ உங்களுக்கு பிரசாதம் என்று கொடுத்துட்டு தான் கொடுத்துட்டுசப் போன தங்கக்கட்டிகளைக் கேட்டார். பட்டரும் உடனே அந்தத் தங்கக் கட்டிகளை அந்தக் கன்னட பிராமணர் எப்படிக் கொடுத்திருந்தாரோ அப்படியே அந்தப் பையை அவரிடம் திரும்பத்தந்தார். கன்னட பிராமணர் பையைத் திறந்து பார்த்தார். அதுல தங்கக் கட்டிகள் இல்லை. எல்லாமே செங்கல் கட்டிகளா இருந்தது. அவர் ஒடனே பட்டரைப் பார்த்து,”சுவாமி ..நான் கொடுத்தது தங்கக்கட்டி ..நீங்கள் தந்ததோ செங்கல் கட்டியா இருக்கே”ன்னு கேட்டார். “நீங்க கொடுத்தாத அப்படியே பிரிக்காம சுவாமி முன்னால வைச்சிருந்தேன்..இப்ப அத அப்படியே எடுத்து உங்கள்ட்டக் கொடுத்தேன்…” என்றார் பட்டர்.. “நீங்க பொய் சொல்லறேள்..”என்றார் கன்னட பிராமணர். “நீர்தான் பொய் சொல்லரீர்” என்றார் பட்டர். “சரி…நாளைக்குக் காலைல வரேன்..நீர் இந்த சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ணும்..நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று கன்னட பிராமணர் சொன்னார். சரி என்று பட்டரும் ஒப்புக் கொண்டார். சுவாமிக்கு முன்னால் சத்தியம் என்று பொய் சொல்ல முடியுமா..அதனால் அந்தப் பட்டர் சிவலிங்கத்துக்குள்ள சக்தியை கோவிலுக்கு வெளிப் பிராகாரத்திலுள்ள ஒரு வில்வமரத்துக்கு தனது மந்திர சக்தியால் மாற்றி வைத்தார். காலைல அந்த கன்னட பிராமணர் வந்து கேட்டால் இந்த சிவலிங்கம் முன்னால தைரியமா சத்தியம் பண்ணலாம். இப்பதான் அதுல சக்தி இல்லையே என்று நினைத்தார். இந்தச் செய்தியை சிவபெருமான் அந்த கன்னட பிராமணரின் கனவில் சொல்லி, “சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ண வேண்டாம்..கோவில் பிராகாரத்திலுள்ள வில்வ மரத்தில் சத்தியம் செய்தால் போதும் என்று சொல்” என்று கூறி மறைந்தார்.

காலையில் அந்த கன்னட பிராமணரும் வந்தார். எப்பொழுதும் போல கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களும் இருந்தா. பட்டர் கர்பகிரகத்தில் உள்ள சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு அந்த பிராமணரை அழைத்தார். அந்த கன்னட பிராமணர், “சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ண வேண்டாம்..கோவில் பிராகாரத்திலுள்ள வில்வ மரத்தில் சத்தியம் செய்தால் போதும்..பகவான்தான் எல்லா எடத்துலயும் இருக்கானே ..” என்றார். அங்கு வந்திருந்த பக்தாளும் அதையே சொன்னா. பட்டர் பயத்தோடவே சரின்னு சொன்னார். எல்லாரும் அந்த வில்வ மரத்துப் பக்கமாப் போனா. அந்தப் பட்டர் வில்வ மரத்துல கையைவைச்சு “இவர் கொடுத்தது செங்கல் கட்டிகள்தான் தங்கக்கட்டிகள் இல்லை ” என்று சொன்ன ஒடனே அந்த வில்வ மரமும், அந்தப் பட்டரும் அப்படியே தீப்பிடிச்சு எரிஞ்சு போய்ட்டா…அப்போ அங்க அசரீரியா,”நீ கொடுத்த இந்தத் தங்கக் கட்டிகள எடுத்து நல்லது பண்ணுன்னு” சிவபெருமானே சொன்னார். அதனால இந்த சுவாமிக்கு “எரித்து ஆட்கொண்டார்” என்ற பேரும் வந்தது. அதனால ஒருநாளும் பொய் சொல்லவே கூடாது, சத்தியம்தான் பேசணும் என்று அவன் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார் சுந்தர வாத்தியார்.

அந்தக் கன்னட பிராமணர் அந்தத் தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு பெரிய கால்வாய் வெட்டத் தீர்மானித்தார். பொதிகைமலைச் சாரலில் தோன்றும் ஜீவநதியான தாமிரபரணியின் கரையில் அதை அமைக்க நினைத்தார் . ஒரு பசுமாடு அந்த மலை அடிவாரத்தில் இருந்து மெதுவாக நடந்து போச்சு. அது பின்னாடியே போனார். அது மூத்திரம், சாணி போடற எடத்த எல்லாம் குறிச்சிண்டார். அந்தப் பசு மலைஅடிவாரத்தில் இருந்து கிளம்பி கல்லிடைகுறிச்சி, வீரவநல்லூர், காருகுறிசின்னு நடந்து போய் ஒரு இடத்துல படுத்துண்டுருத்து. அந்த இடம்தான் பிரான்சேரி. அதுதான் பிரான்சேரிக் குளம். பேச்சு வழக்கில் அது பிளான்சேரி ஆயிடுத்து. அதுவரை அழகான கால்வாய் வெட்டினார். மூத்திரம் போன இடங்களில் ஒரு சிறு கிளைவழி வெட்டினார். சாணி போட்ட இடங்களில் குளங்களை வெட்டினார். இப்படி ஒரு பெரிய தர்மம் செய்த அந்த கன்னட பிராமணரின் நினைவாகத்தான் அந்தக் கால்வாயை “கன்னடியன் கால்வாய்” என்று இன்றும் அழைக்கிறார்கள். இதோ ஓடிண்டு இருக்கே இதுதான் கன்னடியன் கால்வாய் என்று பக்கத்தில் காண்பித்தார். பசு என்ற தேவதை நடந்த அந்த இடமெல்லாம் இன்றும் பசுமையாகவே இருக்கு…” என்று கதை சொல்லி முடித்த பொழுது அன்று இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவனை மாமாத்தாத்தா வீட்டில் விடு விட்டு மெல்ல கிழக்கு நோக்கி அவரது வீட்டிற்கு நடந்து சென்றார் சுந்தர வாத்தியார்.

(03.04.2015)

இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

Leave a Reply

Your email address will not be published.