அரசியல் அங்கில்லை!

-மெய்யன் நடராஜ்

நடந்தது மீண்டும் நடக்காது என்று
நடக்காதே! வாழ்வில் நடக்கும் – நடப்பை
நடத்தும் நடத்துநர் நாடகத்தில் நம்மை
நடத்துவ தொன்றே நடப்பு.

பணம்வந்து நல்ல பதவியும் வாய்த்து
மனம்மாறா நட்பை மலரின் – மணமாய்
தினந்தோறு முந்தன் திசைவீசச் செய்யுங்
குணங்கொள்ளும் நண்பன் கொடை.

சீர்திருத்த வாதியென்னும் செல்லப் பெயரெடுக்கப்
போர்தொடுத்தே தெய்வப் புகழ்மறுக்கும் – பேர்களுக்கு
ஊழ்வினை தீர்க்கும் ஒருநாள் உளம்வருந்தும்
வாழ்வளித்தோன் தன்னை நினைந்து.

மரணத்தின் வாசலிலே மண்டியிட்டு நின்றுக்
கரணந்தான் போட்டாலும் காலன் – வரவில்
சரணடையுந் தன்மை சகலருக்கு மொன்றே
அரசியல் அங்கில்லை ஆம்.

நெற்கிளி ஓட்டும் நிலமுழுவோன் கைகளிலே
பொற்கிழி நீட்டாப் புவியரசு – வெட்டுக்
கிளிகள் விரும்பும் விருது விருந்தை
அளிப்பதி லில்லை அறம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.