ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

மீ.விசுவநாதன்

அத்தியாயம் : ஏழு

ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில்

amn

அவனுக்கு அந்த கிராமத்து சிவன்கோவில் மிகவும் பிடிக்கும். அது “பாட்டநயினார் புரம்” கிராமத்து பக்தர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. சில வருடங்களுக்கு முன்புதான் அறநிலையத்துறை இந்தக் கோவிலையும் தனது வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தக் கோவிலுக்கு அழகான சிறிய உட்பிராகாரமும், கோவில் வெளி மதிலைச் சுற்றிய பெரிய பிராகாரமும் உண்டு. சுவாமியின் பெயர் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ சிவகாமி. உட்ப்ராகாரத்தில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ நடராஜருக்கென்று தனி மண்டபம், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளது.

வெளிப்ராகாரத்தில் அரிநெல்லி மரமும், நெல்லி மரமும், மா மரமும், நிறைய தென்னையும் பூச்செடிகளும் இருக்கும். தெற்குப் பிராகாரத்தில் அழகான கோரதமும், திருவாதிரைத் திருநாளுக்குரிய வாகனங்களும், உள்ளது. கோவிலின் வடக்குப் புறத்தில் தெளிந்த கன்னடியன் கால்வாய் ஓடுகிறது. கோவிலின் வாசலில் வடபுறத்தில் ஒரு பெரிய அரச மரமும், அதனடியில் ஒரு சிறிய விநாயகர் கோவிலும் உள்ளது. அதன் அருகிலேயே கன்னடியன் கால்வாய்ப் படித்துறையும் உண்டு. அதற்கு தகரத்தில் ஒரு கொட்டகை போட்டிருப்பார்கள். கிராமத்து சிறுவர்களும், வாலிபர்களும், அந்தத் தகரக்கொட்டகையில் ஓடி வந்து அந்தக் கால்வாயில் தாவிக்குதித்து நீந்துவார்கள். கோடை காலம் தவிர வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் நிறையவே ஓடிக் கொண்டிருக்கும். அப்படிக் குதித்து நீந்தி விளையாடும் பிள்ளைகளைப் பார்த்து அந்தப் படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கும் மாமிகள் ,” இராவணனை அழிச்சுட்டு ராமன் அயோத்திக்குப் போகும்போது கொஞ்சம் வானரங்கள இங்க கொண்டு வந்து விட்டானோ என்னமோ ..இதுகளெல்லாம் அந்தப் பாடுன்னா படுத்தறது…..” என்று அர்ச்சனை செய்வதுண்டு.

சிறுவயது முதலே இந்தக் கோவிலும், அதன் அருகில் ஓடிக் கொண்டிருக்கிற வாய்க்காலும் அவனுக்கு மிகவும் பிடித்தமான இடங்கள். அவனுக்குத் தண்ணீரில் நீந்த ரொம்பவும் பிடிக்கும். அதுவும் எதிர்நீச்சல் என்றாலே தனி குஷிதான். ரகு, சங்கர், குட்டிச்சங்கர், சன்னதித்தெரு கண்ணன், H.கிருஷ்ணன் , கபாலி, பிரபு, நீலகண்டன், சுரேஷ், மூர்த்தி, SV, RV, NR, சக்தி, கிட்டு, ராஜாமணி என்று ஒரு பெரிய நண்பர்களின் பட்டாளத்துடந்தான் அவன் குளிக்கவே செல்வான். காலையில் ஆறரை மணிக்குக் குளிக்கச் சென்றால் எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். அவனுக்கு அம்மா, “என்னடா அப்படி கண்ணு ரெண்டும் செவக்கச்செவக்க ஆத்தங்கரையே கதின்னு கெடக்கணுமா…பள்ளிக்கூடம் போகணுமேன்னு கொஞ்சம்கூட நெனப்பில்லியா..நீ என்ன தண்ணிப் பிசாசா….” என்று தினமும் அவனைக் கடிந்து கொள்வாள். அவனுக்கு அது ஒரு இனிய வாழ்தாகவேதான் இருந்தது.

“பிரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள்”

amvசிவன்கோவிலில் பூஜை செய்துவந்தவர் ப்ரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள். நன்கு வேதம் கற்ற பண்டிதர். எளிமையானவர். பேராசை இல்லாத மனிதர். அவர்தான் நீண்ட காலம் அந்த சிவன் கோவிலில் பூஜை செய்து வந்தார். எப்போதும் அவரது வாய் மந்திரத்தை முணுமுணுத்தபடியேதான் இருக்கும். அவரது நெற்றியில் விபூதிப் பட்டை எப்போதுமே இருக்கும். கச்சிதமாகக் கட்டிய பஞ்ச கச்சம், மார்பின் குறுக்காகப் போட்டபடி இருக்கும் அங்க வஸ்திரம் என்று அவர் சிவஸ்வரூபமாகவே இருப்பார். காலையில் எட்டு மணிக்கு மேல் அவர் லக்ஷ்மணவாத்தியார் வீட்டுத் திண்ணையிலோ அல்லது மேலமாடத் தெருவில் உள்ள குருசாமிப் பட்டர் வீட்டுத் திண்ணையிலோ அமர்ந்து கொண்டு வேத மந்திரங்களைச் சொல்லிப் பாடம் செய்து கொண்டிருப்பார். பல முறை அவர் “கணம்” சொல்வதை அவன் நின்று கேட்டிருக்கிறான். கேட்கவே அத்தனை சுகமாக இருக்கும். அவர் அவனைப் பார்த்துச் சிரித்தபடியே மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பார். கவனம் சிதறவே செய்யாது. கண்ட கண்ட வேளைகளில் உண்ணவும் மாட்டார். வம்பு பேசும் இடங்களில் நிற்கவும் மாட்டார். அப்படிப் பட்ட வேத வித்துக்களின் பார்வை அவன் மீது பட்டது அவனது பூர்வஜென்ம பலன்தான்.

காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் கனபாடிகள் கோவிலைத் திறந்து விடுவார். அங்கு காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் முத்தையாப்பிள்ளை. கண்டிப்பானவர். கோவிலை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பவர். ஒரு ஈ, எறும்பு கூட அவருக்குத் தெரியாமல் அந்தக் கோவிலுக்குள் நுழைய முடியாது. மகாதேவ கனபாடிகளுக்கு முத்தையாபிள்ளையைப் பிடிக்கும். முத்தையாப்பிள்ளைக்கும் கனபாடிகளின்மீது மதிப்பும், நம்பிக்கையும் உண்டு. அது, அந்தக் காலத்தில் அந்தக் கோவிலுக்கு அறங்காவலராக இருந்த சந்திரா அப்பளம் டெப்போ சுப்பா மாமாவுக்கும், கிராம மக்களுக்கும் மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.

ஒவ்வொரு நாளும் கனபாடிகள் சிவனுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்யும் வேளைகளில் அனேகமாக அவனும் தரிசனத்திற்கு வருவான். அப்பொழுது கனபாடிகளின் மந்திர உச்சரிப்பில் அவன் மெய்மறப்பான். அதைக் கேட்டுக் கேட்டே அவனுக்குச் சில பூஜா மந்திரங்கள் மனப்பாடம் ஆகிவிட்டது.

பிரதோஷ காலங்களில் மகாதேவ கனபாடிகள் செய்யும் பூஜையைப் பார்க்கவே பிறவி எடுத்து வரவேண்டும் என்று நினைக்கத் தோன்றும். அத்தனை ஒருமுகப்பட்ட நினைவுடன் அவர் பூஜை செய்வார். ரிஷப வாகனத்தில் சிவனை அமர்த்தி கோவிலின் வெளிப்பிராகாரத்தில் மூன்று பிரதக்ஷிணம் செய்வார்கள். சித்திரைக் கம்பர்தான் நாக ஸ்வரம். ஸ்ரீருத்ரம், சமகம் பாராயணம் செய்து கொண்டு, சில வைதீகர்களும், கிராம ஜனங்களும் சுவாமிக்குப் பின்னல் வருவார்கள். பூஜை முடிந்ததும் வெல்லம் போட்ட பச்சைப் பயிறுச் சுண்டல் தருவார்கள். அதை மடப்பள்ளி பனகுடி சங்கரநாராயணய்யர்தான் கோவில் வாசலில் வைத்துத் தருவார். ஒரு முறை அவன் அவருக்குப் பின்புறமாக உள்ள திணையில் ஏறி அந்தச் சுண்டல் பாத்திரத்தில் கையை விட்டான். அவருக்கு வந்த கோபத்தில் அந்தச் சுண்டல் பாத்திரத்தை அவன் தலையில் அப்படியே கவிழ்த்து விட்டார். அவன் சிரித்துக் கொண்டே ஓடினான். தலை வழியாக வழிந்து அவன் வாயில் விழுந்த சக்கரைப் பாகுடன் கலந்த பச்சைப் பயிறு நன்றாகத்தான் இருந்தது. அவனுக்கு அம்மா அன்று இரவில் கொடுத்த பிரம்படி அவனுக்குக் கசப்பாக இருந்தாலும் அது அவனைத் திருத்தியது. அவன் அந்த சிதம்பரேஸ்வரரைப் பற்றி சமீபத்தில் ஒரு பிரதோஷ தினத்தில் ஒரு கவிதையை இப்படி எழுதினான்.

“ஆடியும் நித்தம் ஓடியும் ஆனந்த நண்பர் கூடியும்
தேடிய சிவனைப் பாடியும் தேகத்தில் திருநீர் பூசிய
கோடியி லொருவ னாகியும் கொண்டாட்டம் போட்ட வாலிபம்
ஆடியே போன நாளிலும் அச்சிவனை மறக்கி லேனடி ! (1)

(வாய்பாடு: விளம், மா, விளம் . காய், மா, விளம்)

“சிதம்பரே சர்,சிவ காமி” சிரித்தருள் அழகிய கோவில் ,
அதற்கரு கிலேகுளிர் தண்ணீர் அலைகிற கனடியன் கால்வாய் ,
இதற்கெலாம் எழிலினைக் கூட்டும் இளம்பொதி கைதரும் காற்றில்
பதமென சிவபிர தோஷம் பலரினை இணைக்கிற தென்பேன் ! (2)

(வாய்பாடு: விளம், விளம், மா, விளம், விளம், மா )
(19.12.2014)

மகாதேவாஷ்டமி , அதுதான் “வைக்கத்தஷ்டமி” சிவனுக்கு முக்கியமான நாள். முந்தய தினம் இரவில் சுமார் எட்டு மணிக்கெல்லாம் மறுநாள் அன்னதானத்திற்கான காய்கறிகளை கிராம ஜனங்கள் மிகுந்த உற்சாகத்தோடு அரிந்து வைக்கத் துவங்குவர். அவனையும் அவனுக்கு அப்பாவும், தாத்தாவும் கோவிலுக்குத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அவனும் அவனால் முடிந்த காய்கறிகளை எடுத்து அங்கிருக்கும் பெயரியோர்களிடம் தருவான். அவனைப் போலவே வைதியப்பபுரம் தெரு அப்பாத்துரை, ஸ்ரீராம், வேங்கடாஜலமையர் மகன் சிவராமன் (ஆசிரியர் சிவராமன்) சக்தி அப்பளாம் “கிருஷ்ணமூர்த்தி”, ராமசுப்பி மாமியின் மகன்கள் ராமசுப்ரமணியன், விஸ்வம், லெஷ்மணவாத்தியார் மகன் விஸ்வம், கிச்சன் போன்ற கிராம மகாஜனங்களும் கைங்கர்யம் செய்வார்கள். அனேகமாக அன்று இரவு ஒரு மணிக்கு மேலாகிவிடும். இரவில் வீட்டிற்க்குச் சென்று தூங்கி விட்டு காலை சுமார் நாலரை மணிக்கெல்லாம் ஆத்தங்கரைக்குச் சென்று குளித்துவிட்டு கோவிலுக்கு வந்து விடுவார்கள்.

மகாதேவாஷ்டமி அன்று காலையில் சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் முடிந்தவுடன் கிராம போஜனம் (அன்னதானம்) வெகு விமர்சையாக நடைபெறும்.
உட்பிராகாரத்திலும், வெளியில் நந்திக்குச் சுற்றுப் புறத்திலும் சாப்பாட்டுப் பந்திகள் நடைபெறும். அவனுக்கு அப்பாவும், சித்தப்பாவும், தாத்தாவும் பந்தியில் பரிமாறுவார்கள். அவன் பந்தியில், “சீதாள பாதாள பச்சைக் கற்பூர கங்காமிருதம்” என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் தருவான். அப்படிச் சொல்லித்தான் குடிக்கத் தண்ணீர் தரவேண்டும் என்பார்கள். ஒவ்வொரு உணவு வகையையும் ஒவ்வொரு பக்தர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவனுடைய குடும்பத்தின் சார்பாக வெகு காலமாகவே வடையும், பழமும், மோரும் காணிக்கையாகச் செய்து வருகின்றனர்.

“ஆமண்ணா” மாமாதான் அனேகமாக சமையல் செய்வார். அவர் சமையல் மிகச் சுவையாக இருக்கும். கோவிலுக்குத் தெற்குப் பிராகாரத்தில் பெரிதாக நான்கு, ஐந்து அடுப்புகள் தோண்டி வைத்துப் பெரிய வார்ப்புகளில் சமையல் செய்வார்கள். பாயாசத்திற்கேன்றே ஒரு பெரிய வார்ப்பு இருக்கும். இரண்டு பேர்கள் பாயாசத்தைக் கிண்டிக் கொண்டே இருப்பார்கள். பார்க்கவே அழக்காக இருக்கும்.

சரியாகப் பகல் பன்னிரெண்டு மணிக்கு மேல் அன்னதானம் துவங்கினால் மதியம் மூன்று மணிவரை நடைபெறும். எல்லா கிராமத்து ஜனங்களும் இந்த சிவன் கோவிலில் வந்துதான் பிரசாதம் சாப்பிடுவார்கள்.

மாலையில் ஆறரை மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் புறப்பட்டு வைத்தியப்பபுரம் தெரு வழியாக கந்தப்பபுரம் தெரு கடந்து வடக்குரதவீதிக்கு வருவார். கந்தப்பபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் இருந்து ஸ்ரீ முருகன் புறப்பட்டு வடக்குரதவீதியில் உள்ள தனது தந்தையார் ஸ்ரீ சிதம்பரேஸ்வரரை மூன்று முறை பிரதக்ஷிணம் செய்துவிட்டு பக்கத்திலேயே நிற்பார். பொது தீபாராதனை நடைபெறும். உடனே இருவரும் சேர்ந்து வடக்கு ரதவீதி, மேலப்பாட்டநயினார்புரம் வழியாக வருவார்கள். இராமச்சந்திரபுரம் தெரு ஆரம்பத்தில் பொது தீபாராதனை நடைபெறும். ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சிவன் கோவிலுக்கும், ஸ்ரீ முருகன் வைத்தியப்பபுரம் வழியாக ஸ்ரீ முருகன் கோவிலுக்கும் செல்வார்கள். அனேகமாக அன்று மழை பெய்யும். அந்த மழையிலும் சுவாமி நனையாமல் தாங்கள் நனைத்தபடி பக்தர்கள் சுவாமியின் சப்பரத்தைத் தள்ளிச் செல்வார்கள். அவன், அவனுடைய நண்பர்கள் நீலகண்டன், கிருஷ்ணசுப்ரமனியன் எல்லோரும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அமர்ந்திருக்கும் வண்டிச் சப்பரத்தை பின்னல் இருந்து தள்ளிக்கொண்டு வருவார்கள். அவர்கள் மீது சுவாமிக்கு முன்னால் தீவட்டி பிடித்துக் கொண்டிருக்கும் கோவில் காவல்காரர் முத்தையாப்பிள்ளை எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பார். அதற்கான காரணத்தை பின்பு கூறுகிறேன்…….

(09.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *