வையவன்

மதனபள்ளியிலிருந்து தாமு திரும்பி வருவதற்குள் சிவாவுக்கு இரண்டு கடிதங்கள் வந்திருந்தன.
ஒன்று நந்தவனம் ஆசிரியரிடமிருந்து இரு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஒரு செக். அவனது கதையைப் பாராட்டி உற்சாகமூட்டும் சில வரிகள்.

இரண்டாவது அம்மாவிடமிருந்து சில எழுத்துப் பிழைகளுக்கு மத்தியில் அவன் வாழ்வில் எதிர்ப்பட்ட முதல் வெளிச்சத்திற்கு அவள் பூரிப்பு பாற்கடலாகப் பொங்கியிருந்தது. அவன் எழுதியிருந்த கடிதத்துக்குப் பதில்.
தபால்காரர் வந்துபோன பின்புதான் தாமு வந்தான் நேரே ஒர்க்ஷாப்புக்குப் போய்விட்டு வருகிறான் என்று மோட்டார் சைக்கிள் ஒலி அறிவித்தது.

மாடிப் படியில் அவனது மிடுக்கான ஷý ஓசை கேட்டது. சிவா எதிர் கொள்ளச் சென்றான்.
பிரயாணக் களைப்பு தெரியாமல்அவன் குளித்து புத்துணர்ச்சியோடு காணப்பட்டான்.
பிரீதா வீட்டிலிருந்து வருகிறான் என்று புரிந்து கொண்டான் சிவா.

அவனைப் பார்த்ததும் கச்சிதமாக ஒரு புன்னகை செய்தான் தாமு. பிரீதா சொல்லி விட்டாள். அவன் பார்வையில் சிவா உணர்ந்தான்.
“கங்க்ராட்ஸ்”
“தாங்க்யூ”

சிவா செக்கையும் கடிதத்தையும் நீட்டினான்.

செக்கின் தொகையைப் பார்த்துவிட்டு “நாட் பேட்” என்று சிலாகித்து விட்டு கடிதத்தைப் படித்தான்.
எட்டு வருஷங்களில் தெலுங்கை மறந்து விடுமளவு அவன் தமிழில் ஊறியிருந்தான்.
“நவ் யூ ஆர் ஸம்படி!”

“பிகாஸ்…பிகாஸ் ஆப் யூ”
“நீ மிகைப்படுத்தறே!”

“இந்த நிழல்… இந்த பாதுகாப்பு இல்லாமே என்னால் இதை எழுதியிருக்க முடியாது.”
“ஓ…இட்ஸ் ஜஸ்ட் எக்ஸ்டர்னல்.”

அவன் ‘ஷý’வை அவிழ்ப்பதற்காக மாடியின் கை பிடிச்சுவரின் மீது காலை உயர்த்தி வைத்தவாறே செக்கையும் கடிதத்தையும் திரும்ப நீட்டினான்.

“வேண்டாம்” என்றான் சிவா.
“ஏன்?”
“இது உங்களுடையது”
தாமு ஒரு வினாடி அவனை ஆராய்வது போல் பார்த்தான்.

“ஒனக்கு பாங்கிங் புரொஸீஜர் தெரியுமா?”
சிவாவுக்கு விளங்கவில்லை.தாமு குறுப்பாகப் புன்னகை செய்தான்.
“பின்னாலே ‘ஸைன்’ பண்ணிக்கொடு.”

சிவா பேனாவை எடுத்துவர உள்ளே போனான். தாமு ஃபேன் ஸ்விட்சைத் தட்டிவிட்டு சோஃபாவில் உட்கார்ந்தான். டீப்பாயின் மேல் அவனுக்கு வந்திருந்த கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய் அவன் பார்வையிடும்போது இவன் வெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவன் என்று நம்ப முடியவில்லை.

செக்கின் பின்னால் கையெழுத்துப் போட்டு எடுத்து வந்த சிவா ஓரமாக நின்றான்.
“அப்பா எப்படி இருக்கார்?”

“பாரலைஸிஸ் ஸ்ட்ரோக். கட்டில்லே படுத்துட்டார். இடது பக்கம் பூரா ஆக்ஷன் இல்லே.”
யாரோ மூன்றாம் நபருக்கு நேர்ந்ததைப் பற்றி சொல்வது போல் தாமு சொன்னான்.
“ஆஸ்பிடல்லே சேத்துரலாமே.”

“அவருக்கு ஹாஸ்பிடலைசேஷன் பிடிக்காது. லைஃப் ஆர் டெத். எதுவாயிருந்தாலும் தன் கூரையின் கீழ்ணு அவருக்கு ஒரு பிரின்சிபிள்.”
“ட்ரீட்மெண்ட்?”

‘டாக்டர்கள் வீட்டுக்கு வந்துகிட்டிருக்காங்க.”
சிவாவுக்கு அந்தத் தகவலில் ஜமீன் மிடுக்கு தெரியவில்லை. ஒரு பீஷ்ம வைராக்கியம் தென்பட்டது.
சிவா கையெழுத்திட்ட செக்கை நீட்டினான்.

அதை வாங்கித் தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்டான் தாமு. யோசனையோடு சிவாவைப் பார்த்தான்.
“இனிமே நாயனாவாலே நெலத்தைக் கவனிக்க முடியாது சிவா! அங்கே நிறைய ரயத்துக்கள் டிரபிள். இப்ப அவருக்கு ஒடம்பும் சரியில்லே!”
இது எதற்காக பீடிகை?
சிவா காத்திருந்தான்.

“அம்மா என்னை திரும்பி வந்துடச் சொல்லி அழுதாங்க. நாயனா ஒண்ணும் பேசலே. முளிச்சுப் பார்த்தாரு.”
அந்த தகப்பன் மகன் உறவு சிக்கல் சிவாவுக்கு சுவாரஸ்யமாயிருந்தது.

“போடா வெளிலேண்ணு சொன்னவரு வாடாண்ணு கூப்பிடட்டும்ணு நான் பதில் சொல்லலே. அவருக்கு வாய்விட்டுக் கூப்பிட முகமில்லே. பக்கத்திலே அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதி வச்ச நோட்டு கிடந்தது. அதை எடுக்கச் சொன்னார். அதிலே ‘ரா’ என்ற எழுத்தை மட்டும் தொட்டுத் தொட்டுக் காட்டினார். ரான்னா தெலுங்கிலே வான்னு அர்த்தம்.”

சிவாவின் முதுகுத் தண்டில் தவளை துள்ளியமாதிரி இருந்தது.
“இனிமே மதராஸ் இல்லே… மதனபள்ளி தான்.”

அது எத்தனை நியாயம் என்று உணரும் போதே ‘டர்-டர்’ என்று ஒரு ஷட்டர் கதவு தனக்கும் தாமுவுக்கும் மத்தியில் வந்து விழுந்ததாக நினைத்தான் சிவா.

இந்த ராயப்பேட்டை வாசம், திஷ்யா, பிரீதா, சமையல், சாப்பாடு எல்லாம் நறுக்கென்று அங்கங்கே முற்றுப் புள்ளிகள் குத்திக் கொண்டு நின்றன.

தாமு டீப்பாய் மேலிருந்த சிகரெட் கேஸை எடுத்துப் பிரித்தான். பற்ற வைத்த பின்பும் எரியும் தீக்குச்சியின் நீல ஜ்வாலை நோக்கி ஏதோ யோசித்தான்.

“உக்காரு சிவா”
“இட்ஸ் ஆல் ரைட்”
“நோ. ப்ளீஸ் பீ ஸீடட்”
சிவா உட்கார்ந்தான்.

‘யு டோன்ட் நோ மெட்ராஸ். ரைட்டராயிட்டா மட்டும் போதாது. கிதாப் வேணும். பந்தா வேணும்.”
சிவா கேட்டுக் கொண்டான்.

“இங்கே சரக்கே வேணாம்; முறுக்கு போதும். ஏன் அதான் ஓணும்!”
“வில் இட் ஹெல்ப் மை ரைட்டிங்?”

“வாட் இன் இன்னொஸன்ட் க்வெஸ்டின்? ஒண்ணு சொல்றேன் சிவா.. வேலை தேடறதை விட்டுடு.”
“ஏன்?”
“தட் வில் மேக் யூ ஸிக்.”
“என்ன பண்ணட்டும்?”

“எழுது… எழுது… இந்த சமூகத்தினுடைய வயித்திலே ஒதைக்கறா மாதிரி எழுது.”
தாமு அதைச் சொன்னபோது அவன் குரலில் தொனித்த வீர்யம் சிவாவின் தந்துகிகளில் பாய்ந்தது.

தாமு சட்டைப் பையிலிருந்த செக்கைத் தொட்டுக் காட்டி விட்டு, “பட்டோண்ட் பிலீவ். இது மாதிரி ஒனக்கு நெறய வரும்னு நம்பிடாதே! எட்டு வருஷத்திலே எத்தனையோ ஆர்ட்டிஸ்ட்.. எத்தனையோ ரைட்டர்ஸ்… எவ்வளவோ பார்த்துட்டேன்.

இதை நம்பிட்டே, இதுக்குப் பின்னாடியே நாய் மாதிரி நீ அலையணும். ஒண் டே அர் த அதர்- இந்த ரீடர்ஸும் மாகஸின்ஸும் கூலா ஒன்னைக் கை கழுவிடுவாங்க.”

“வேலை தேட வேண்டாம்னு சொல்றீங்களா?”
“ஆமா- நான் மதனபள்ளிக்கு போறேன். நீ மெட்ராசுலே இரு. ஒர்க்ஷாப்பை மேனேஜ் பண்ணு.”

“எனக்கு ஒர்க் ஷாப்பைப் பத்தி ஒண்ணுமே தெரியாதே!”
“மதனபள்ளியிலிருந்து வர்றப்ப எனக்குக் கூட ஒண்ணும் தெரியாது!”
பதில் பளிச்சென்று மண்டையில் அறைந்தது.

ஆனால் நீங்கள் தாமு. நான் சிவா என்று அவன் நினைத்தான். சொல்லவில்லை.
“கத்துக்கோ. இது ஒன் தொழில்ணு நெனச்சா ஒனக்கு ஒரு மாசம் போதும். ‘நாம்ப குமாஸ்தா’தான்னு நெனச்சா எட்டு வருஷம் கூடப் போதாது.”

இவன் மனிதனா இல்லை மின்சார ட்ரான்ஸ்மிட்டரா?
“மதனபள்ளியிலே வாரத்திலே மாசத்துலே எப்பவாச்சும் மூச்சு திணறும்போது அப்படி காத்துவாங்க நான் மெட்ராஸ் வருவேன். அப்ப எனக்கு இந்த ‘ஆஸ்ரமம்’ வேணும்.”

தாமு ஆள் காட்டி விரலை வளைத்து அந்த வீட்டுத் தரையைக் கொத்துகிற மாதிரி சைகை செய்து காட்டினான்.
“நான் யோசிக்கணும்.”புகையை இழுத்து ஊதிவிட்டு தாமு சிரித்தான்.

“ஐ லைக் தட் ஆன்ஸர். யோசி, நல்லா தெளிவா யோசி. என்ன கேக்கணும்னாலும் ப்ளெய்னா கேளு. ஒனக்கு ஒரு வாரம் ‘டைம்’ தர்றேன்.”

தாமு எழுந்தான். சிகரெட்டை ட்ரேயில் வைத்து நசுக்கினான்.
“அந்த ஸ்விட்சை ‘ஆஃப்’ பண்ணு” என்று ஃபேனைச் சுட்டிக் காட்டிவிட்டு, ட்ரஸ்ஸிங் டேபிள் முன்னால் போய் பௌடர் கொட்டிக் கொண்டான்.

“நீ போய் டிரஸ் பண்ணு… நீ என்னோட வர்றே?” என்று உத்தரவு போல் சொல்லிவிட்டுப் பவுடர் போடத் தொடங்கினான்.
எதற்கு என்று புரியாவிட்டாலும் சிவா போய் டிரஸ் பண்ணத் தொடங்கினான்.

இருவரும் கிளம்பி வெளியே வரும்போது வாசலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த திஷ்யா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள்.

தாமுவின் கூலிங் கிளாஸ் அணிந்த கண்களில் ஓடிய ஏதோ ஒரு விஷமச் சிரிப்பு, உதட்டோரம் சிதறி வழிந்ததை சிவா கவனித்தான்.

அவனுள் எங்கோ கரித்தது. உதடுகளை நெளித்துக் கொண்டு திஷ்யா விசுக்கென்று மோவாயை நொடித்துத் திரும்பினாள். அந்த வேகத்தில் அவளது கூந்தல் தாவி அவளற் மார்பின் மீது விழுந்தது.

தாமு மோட்டார் சைக்கிளை ஸ்ட்டார்ட் செய்தான். அது ஜப்பான்மேக். அதன் ஓட்டத்திலேயே பில்லியனில் போகிறவனும் டிரைவரும் கத்தாமல் பேசிக் கொள்ளலாம்.

மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டே தாமு ஒரு கேள்வி கேட்டான்.
“டூ யூ லைக் தட் கேர்ள்?”
“யாரு… திஷ்யாவா?”
“எஸ்”

அதற்கு சிவாவிடம் சலனமில்லை.
“ஓ ஸாரி சிவா! நீதான் ரிஷியாச்சே…”

அவனது மோட்டார் சைக்கிள் போஸ்டர் தின்னும் சகிந்திப் பசுவின் ஆயுசை நீடிக்க முயன்றது. ப்ரேக் அடிக்காமல் வளைத்து அந்த பசு, அதன் பரம்பரை, அதை வளர்ப்பவன், பிறப்பின் மர்மம் ஆகிய எதைப் பற்றியும் விமர்சிக்காமல் தாமு தன் விஷயத்தில் மூழ்கியிருந்தான்.

“ஷி ஈஸ் லவ்வி…”
சிவா தொண்டையை விழுங்கினான்.

“லைஃபோ… லவ்வோ… சிவா அட்டாக் இட். ஃபர்ஸ்ட் யூ அட்டாக் இட். யோசிச்சே.. தயங்கினே.. தென் நீ ஒரு ‘யூஸ் லெஸ்…போயட்’டாத்தான் இருக்கணும்.”

மோட்டார் சைக்கிள் அரசுடைமையாக்கப்பட்ட அந்த பாங்கின் ஓரமாக வந்து நின்றது.
“எறங்கு?”

கைது செய்யப்பட்டுப் பின் தொடர்கிறவன் போன்று சிவா பின்னால் போனான்.
மானேஜரின் அறையில் தாமு நுழைந்ததும் அவர் எழுந்து வரவேற்றார்.
சிவாவை அவன் அறிமுகப்படுத்தினான்.

“திஸ் ஈஸ் மிஸ்டர் சிவா. எ பட்டிங் ரைட்டர்”
“க்ளாட் டு மீட் யூ” மானேஜர் கை குலுக்கினார்.

“இவர் பேரிலே ஒரு அக்கவுண்ட் ‘ஓபன்’ பண்ணனும்’ என்று செக்கை நீட்டிக் காட்டினான் தாமு.
“ஓ எஸ்”

சிவா மீண்டும் ஒருமுறை தாமுவின் பெருந்தன்மை முன்னர் தான் குறுகி நிற்பதை உணர்ந்தான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *