Blog

  • தாய்மை (2)

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    lfopy_199381

    தாய்மை தாங்கும் அச்சாணி
    வெறும் கவிதைக்குள்
    அடங்கி விடுமா தாய்மை…?

    உதிரம் பகிர்ந்த உறவுகளின்
    உணர்வை ஆணிவேராக
    இதயம் புகுந்து ஊன்றி
    விழுதுகள் மண் தொடும்
    நங்கூரம் தாய்மை..!

    இளமையில் இனிமையானது
    முதுமையில் தனிமையானது
    கடமையில் மேன்மையானது
    பொறுமையில் பூமியானது
    தூய்மையான கருணையே தாயானது..!

    சுழலும் பூமிக்கு அச்சாணி
    தவிக்கும் இதயத்தின் தோணி
    இலக்கில் உயர்த்தும் ஏணி..
    குடும்பத்தைக் காக்கும் ஜீவ ஊருணி..!

    மேன்மை கண்ட தாய்மை
    மென்மை கொண்ட பதுமை
    வறுமை இடத்தும் பெருமை
    கொள்ளும் அவள் அருமை
    மங்கை கொண்ட மகுடம் தாய்மை ..!

    கொட்டிக் கொடுத்தாலும்
    கிட்டாத சிம்ஹாசனம்
    அடையாளம் இல்லாத
    ஆத்மீக ரகசியம்..தாய்மை ..!

    வெடித்த பாறையில் பச்சிலை போல்
    விரிந்த வானத்தின் கார்மேகம் போல்
    பொங்கும் கடலின் தொடர் அலைபோல்
    இறைவன் தந்த சீதனம்..தாய்மை..!

    உன்னதத்தை உன்னதத்தால் உன்னதமாக்கும்
    உருவுக்குள் அடங்கி விடாது
    உணர்வுக்குள் முடங்கி விடாது
    கவிதைக்குள் வீழ்ந்து விடாது…தாய்மை ..!

    உயிருக்குள் உயிராக
    உலகுக்கே உயிராக
    பெருஞ்ஜோதியின் வரமான
    பெருங்கருணையல்லவா..தாய்மை ..!

    Share
  • படக் கவிதைப் போட்டி – 4

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16483711086_5e9d5432f1_z

     

     

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

     

     

    Share
  • இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உண்மை என்று நம்பியதற்காக
    வெற்றி பெறுவதற்குமுன்
    தீர்த்து விடவா
    இத்தனைப் பட்டாசுகளையும்
    தீர்த்துக் கட்டினாய்?

    தீமைகள்
    நல வழிப்பட்டதென்று
    எமது
    தியாக வரலாற்றின்
    தீர்வுகள்
    இருண்ட சாம்ராஜ்யங்கள்! 

    நமது
    சாவகாசங்கள்
    புஸ்வாணங்களும்
    பட்டாசுகளுந்தான்!
    அதனால்தான்
    நமது பட்டுக்களின் மேல்
    இச்சை தீர்க்கிறான்
    பக்கத்து வீட்டான்! 

    எட்டிப் பாருங்கள்
    எத்தனை யுவதிகள்
    இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    பொத்திப் பொத்தி வளர்த்தானே
    நம் சகோதரன் – இன்று
    புட்டுக் கொண்டு வருவது
    வீரத்தின் விரல்கள் மட்டுமல்ல
    கதுப்புகளை நனைக்கும் கண்ணீரும்தான்! 

    கட்டுப் போட்டானே
    அச்சம், மடம், நாணம் என்று
    கசக்கிப் போட்டானே – கயவன்
    இச்சை கொண்ட மிருகம் என்று! 

    அமைதி காக்க அத்தாட்சிப் பத்திரங்கள் அதற்கு
    ஏந்தி வந்தான் துப்பாக்கியந்திரங்கள் -இந்தத்
    தப்பான தாத்பரியங்களுக்குத்
    தார்மீகத்தில்
    தியாகத் தீட்சைகள்! 

    அமைதி  ஒப்பந்தங்கள் – இவை
    அரசியல் தீப்பந்தங்ள் – அதில்
    நாம் இழந்தது உரிமைகளல்ல
    இராஜ தந்திரங்கள்
    இராணுவ ரகசியங்கள்! 

    தட்டி எழுப்பியவனே – எம்மைத்
    தட்டி உறங்க வைத்து விட்டுக்
    குரல் வளையை அறுத்துக்
    குருதி குடிக்கின்றான்! 

    காந்தியத்தின் தாயகமே
    கோர வெறியர்களை – நீயும்
    கொள்கைக் கொத்தர்களென்று
    கௌரவிக்கின்றாயே?!

    ஓ…!
    “கொல்” கைக் கொத்தர்கள்
    சேர்ந்து துகிலுரியும்
    கிருஸ்ண பரமாத்மாக்கள்!  

     

    Share
  • படக் கவிதைப் போட்டி – 3இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    சிலை வணக்கம் புரியும் சிறுவனின் மனத்தில் புகுந்து, கலை மணக்கும் கவிதை வடித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். புதுவை சரவணன் எடுத்த நிழற்படத்தின் சாரத்தை நிஜப் படமாய் எழுத முயன்றீர்கள்.

    16720185552_5ebd517bcb_o

    தெய்வத்தை வணங்கும் தெய்வம் என்று முகநூலில் ராமன் ஜனனியும் ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…! என்று வேலுச்சாமியும் வர்ணித்தது, இந்தப் படத்திற்கான அழகிய தலைப்பு.

    வீட்டுச் சிக்கல்களையும் நாட்டுச் சிக்கல்களையும் சொந்தச் சிக்கல்களையும் தீர்க்க, இந்தச் சிறுவன் கடவுளை வேண்டுவதாக, கவிஞர்கள் அடுக்கிய விதத்தைக் கண்டோம். அதில்

    எப்போதும் இதையே பேசிடாமல்
    என்னை அவர்கள் கொஞ்சிடணும்

    என எஸ்.பழனிச்சாமியும்

    உன்னை வேண்டுவேன் படைத்தவனே
    உலகினில் வேண்டாம் அனாதைகளே…!

    என செண்பக ஜெகதீசனும் தீட்டிய வரிகளை ரசித்தேன்.

    எனினும் ஒரு முழுக் கவிதை என்ற அளவில் பார்க்கையில், பி.தமிழ்முகிலின் படைப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

    ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
    சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
    சுகமாய் தான் வாழனும்
    பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே!

    கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
    பருந்து காக்கையிடம் இருந்து
    பத்திரமா காக்க வேணும் – அவையும்
    என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும்!

    கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
    என்னைக் கண்ட மறு நொடியே
    துள்ளி ஓடி வந்திடனும்
    அன்புடன் நானும் அணைத்திடனும்!

    சின்னச் சின்ன ஆசைகளின்
    சின்னஞ்சிறு பட்டியலிது
    பட்டியல் வளரும் வேளைதனில்
    பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே!

    பொய் பொறாமை புரட்டும் தான்
    என் மனதை அண்டாது காத்திடனும்
    அன்பும் பண்பும் எந்நாளும்
    குறையாது நானும் வாழ்ந்திடனும்!

    நாளும் உன்னைச் சந்தித்தே
    நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
    நலமும் வளமும் உலகமெலாம்
    நிலைத்திடவே வேண்டிடுவேன்!

    இவற்றைச் சின்னஞ்சிறு ஆசைகளாகப் பார்த்தாலும் அர்த்தம் உண்டு. அதே நேரம், குறியீடுகளாகப் பார்த்தாலும் பொருள் உண்டு. மேலும் கடவுளை நலம் கேட்பது ஓர் அழகு என்றால், தனக்காக வேண்டாமல், உலகமெலாம் நலமும் வளமும் நிலைத்திட வேண்டுவது, இன்னும் அழகு. வேண்டும் என்பதன் பேச்சு வழக்கு வேணும் என்றே இருக்க வேணும். மூன்று சுழியை இரண்டு சுழியாக்கினாலும், கவிதை அம்சத்துக்காக, இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகப் பி.தமிழ்முகிலைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    அத்தனை பேரும் கடவுளை வேண்டுகையில், கடவுளே குழந்தையிடம் உரையாடுவது போல் மாற்றி யோசித்ததோடு மட்டுமின்றி,

    குட்டிச்செல்லமே…!
    கூடவே நானிருப்பேன் – உன்
    குட்டித்தோழனாக…!

    எனக் கடவுளைக் குட்டித் தோழனாக்கிய தனுவை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அறிவிக்கிறேன்.

    தமிழ்முகிலுக்கும் தனுவுக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 157

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    அங்காடி வீதி

    இரண்டு உருளையுடைய வண்டிகள்,
    மூடு வண்டிகள், அழகிய தேர் கொடிஞ்சி,
    உடலுக்குத் தேவையான கவசம்,                                      weapons.
    அனைவராலும் விரும்பப்படும்
    மணிகள் பதிக்கப்பெற்ற அங்குசங்கள்,
    தோலால் செய்யப்பட்ட கைகளுக்கான உறைகள்,
    இடுப்பில் அணியும் கச்சை உடைகள்,
    வளைதடிகள், வெண் சாமரங்கள்,
    பன்றிமுகக் கேடயங்கள்,
    சிறிய கேடயங்கள்,
    காட்டின் உருவம் பொறித்த கேடயங்கள்,
    குத்தும் கோல்கள்…

    செம்பு மற்றும் வெண்கலப் பொருட்கள்,
    கயிற்றால் முடிந்த பொருட்கள்
    நெட்டிப் புல்லால செய்யப்பட்ட மாலைகள்,
    ஈர்வாள் முதலிய கருவிகள்,
    தந்தத்தைக் கடைந்து செய்த வேலைப்பாடுகள்,
    வாசம் மிக்க புகைக்கான பொருட்கள்,
    பல வகைச் சாந்துகள்,
    பூவால் கட்டப்பட்ட மாலைகள்…

    இந்தப் பொருட்கள் அனைத்தும்
    ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியாதபடி
    அனைத்தும் தம்முள் கலந்து கிடக்கின்ற
    அங்காடி வீதிகள்…

    இவ்வீதிகள் அரசரும் கண்டு மகிழும் வண்ணம்
    செல்வச்செழிப்பை உடையனவாய் இருந்தன.
    இவ்வீதிகளைக் கண்டுகொண்டே
    கோவலன் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 168 – 179

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • காதல் இனிது!

    -ஆர். எஸ். கலா

    இரு கண் நோக்கியதும் ஒரு ஈர்ப்பு
    இரு இதயம் இடம் மாறியதும் ஒருவித வியர்ப்பு
    இரு மனமும் இணைந்ததும் ஒருவிதத் தவிப்பு
    இரு வீட்டாரும் சம்மதித்ததும் ஒரே குதூகலிப்பு!

    இருகரம் இணைந்ததும் இல்லறம்
    இரு உடல் இணைந்ததும் இன்பம்
    இரு உயிர்களும் ஓர் உயிரானதும்
    விருப்பு வெறுப்பு சமபங்கு!

    காதல் என்னும் நாடகம் அரங்கேற்றம்
    கண்டது கணவன் மனைவியாக மேடையிலே
    தனிமையில் நோக்கிய கண்கள் இரண்டும்
    கைகோத்தது உறவினர் முன்னிலையிலே!

    முக்கனியும் செங்கரும்பும் என்ன இனிமை
    இக்குடும்பத்தில்  இனியது இனியது காதல் அல்லோ
    இவர்கள் இருக்கும் இடத்தில் பொழிந்து
    விடும் காதல் மழை அல்லோ!

    கனியான காதல் இனிப்பாகும்
    கலையாத கனவாய்  நிலையாகும்
    கணவன் கண்ணுக்கு நிலவாக மனைவியும்
    மனைவி நெஞ்சத்தில் சிலையாகக் கணவனும்
    காதல் காவியம் படிக்கலாம் இல்லறத்தில்
    படிப்படியாக!

    நம்பிக்கை என்னும் செடியில்
    பூக்கும் காதல் மலர் கொடுக்கும்
    இனிய காதல் கனியை இறுதி மூச்சை
    நிறுத்தி இறைவன் யாராயினும்
    இருவரில் ஒருவரை  அழைக்கும் வரை!

     

    Share
  • அந்தமானைக் காண வாருங்கள்!

    -ரா. பார்த்தசாரதி

    அந்தமானின்  அழகே  அழகு அதன் இயற்கை அழகைப் பருகு
    தென்னையும், கமுகும் ஒன்றோடுஒன்று கைகோர்த்து நிற்கும்
    கடலின் நடுவே நிற்கும் தீவாய்  நமக்குக் காட்சி  அளிக்கும்
    மனிதனின்   மனஅமைதிக்கு ஓர் உறைவிடமாய் இருக்கும்!   andaman

    வெள்ளி அலை மேலே  துள்ளி விளையாடும் கயல்கள்
    கடல் அடியில் சென்று  கடல் இனங்களைக் காணும் மக்கள்
    நீச்சல் தெரியாதவன் கூடக் கடல் அடியில் நடை போடுகிறான்
    அங்கே தன்னைச் சுற்றி வரும் மீன்களைக் கண்டு களிக்கின்றான்!

    சிறு படகும் இயந்திரப் படகும் பயணிக்கும் மக்கள்  கூட்டம்
    மனிதனுக்கு இயற்கை அழகை  மகிழ்வுடன் காண ஓர்  நாட்டம்
    கடலோரக் கவிதைகள் எழுத  மனிதனுக்கோர்  கண்ணோட்டம்
    காண்பதைக் கவிதை ஆக்குவதே  கவிஞனுக்குக் கொண்டாட்டம்!

    அந்தமான்  சிறையில் நமது தியாகிகள் பட்ட துன்பம்
    இதனைப் பொருட்காட்சியாக அமைத்த  விதம்
    சுதந்திரத்திற்காக அவர்கள்  சிந்திய ரத்தமும், தியாகமும்
    இன்று அதனை நினைக்காவிட்டால் நம் மனம் கலக்கமுறும்!

    சுற்றுலாப்  பயணிகள் கடற்கரையினைக் கண்டு களிக்கும் தீவு
    இரு தீவானாலும் ஒன்றில் பழங்குடியினர் வாழும் தீவு
    தேசத் தியாகிகள் பட்ட துன்பங்களைச் சித்தரிக்கும் தீவு
    நாட்டைவிட்டுத் தள்ளி இருப்பினும் தனித்தன்மை கொண்ட தீவு!

     

    Share
  • பேருந்துப் பயணம்!

    மீ.லதா, திருக்குவளை

    பரபரப்பான  காலைப்பொழுது
    அடித்துப் பிடித்துக் கிளம்பிச்
    சன்னலோர இருக்கை பிடித்து
    ’அப்பாடா!’ என்று பெருமூச்சி,
    பேருந்தில் அமர்ந்து
    காலை உண்ட உணவின்
    இடிபாடு தொண்டைக்குழிக்குள் சிறு அசைவாய்
    பல் இடுக்குகளிலும்!

    தனக்கு மட்டும்தான் இந்த வாழ்கை என்று புலம்பல்!
    அருகில் இருப்பவரை  மறந்து
    கொஞ்சமாக உரையாடலின்
    சத்தங்கள் மறந்து போன
    புத்தகம், எழுதாமல் விட்ட பக்கங்கள்,
    விடுமுறை இல்லையே என ஆதங்கத்தின் வெளிபாடு
    உறவு முறை விசாரிப்பு
    சற்று நேரத்தில் நிரம்பி வழிந்த பேருந்துகளில் சத்தங்களும்
    நடத்துனரின் கூக்குரலும்  ”டிக்கெட் யார் எடுக்க வில்லை?” என்று
    இவள் மனம் வீட்டிலேயே நின்றது
    மூடப்பட்டதா சமையல் பாத்திரங்கள்? சரியாகப் பூட்டப்பட்டதா?
    வீடு என்று
    இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்த மனம்?

    Share
  • தந்தைக்கு ஒரு கவிதை!

    -றியாஸ் முஹமட்

    எழுத நினைக்கிறேன்
    ஒரு கவிதை,
    அடக்க முடியவில்லையே                son with sorrrow

    என் அழுகை!

    எழுது எழுது என்று
    நினைக்கிறது மனது
    அழுது அழுது

    என் பேனாவும் பழுது!

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    பேனாவை எடுத்தால்
    பேச்சு வரவில்லை வாப்பா
    ஏட்டை விரித்தால்

    எழுத்து வரவில்லை வாப்பா!

    காகிதமும் என் கண்ணீரால்
    கரைந்து போனதே வாப்பா
    தளை தட்டுது வாப்பா

    மூச்சு முட்டுது வாப்பா!

    எதுகை மோனை கூட
    அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
    நான் எழுதிய கவிதைகளும்

    கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!

    கூடவே இருப்பீர்கள் என்றுதானே
    கொடி போலப் படர்ந்தேன்
    பாதியில விட்டுப் போகவா

    பனமரம்போல வளர்ந்தேன்?

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    நான் சந்தி வழியிறங்கி
    பள்ளி செல்ல,
    சவூதி வழியிருந்து

    வழி சொல்வீர்களே வாப்பா!

    நாவலடிதானே போனீர்கள் வாப்பா
    காலடி கூட மாறவில்லையே
    மரணப்பிடி பிடிக்கையிலே

    என்னென்ன நினைச்சிருப்பீங்க
    தன்னந்தனியா தவிச்சிருப்பீங்க!

    போங்கள் போங்கள்!
    என் வாப்பா மண் மறைந்தார்
    என்று சொல்பவர்கள்
    என் கண் மறைந்து போங்கள்!

     

    Share
  • தேகமும் யோகமும் ..பகுதி 1-

    கவியோகி வேதம்

    images

    என்னிடம் யோகா-பயிற்சி பெற்ற அன்பர்களும் அவர்தம் நண்பர்களும் ‘சார்! ‘சார்! பிராணாயாமத்தைப்பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன் இல்லை,’ எந்த ஏட்டிலாவது,, இல்லை “வல்லமை’யிலாவது எழுதுங்களேன் என்றுஇடைவிடாது போன் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சொல்லலாம்தான். ஆனால் அது ஒரு தகுதியான குரு மூலமே கற்றுக்கொள்ளக்கூடியது. புத்தகத்தைப்பார்த்துக் கற்கும் வழி அன்று அது. மிக ஆழமான மூச்சு இழுத்தல் பற்றியும், மெதுவாகப் பின்பு விடுவதுபற்றியும் எவ்வளவுதான் இங்கே விவரித்தாலும் ஆசிரியர் மூலம் நீங்கள் கற்றால்தான் பயனளிக்கும். “ இனிஷியேஷன்’, அல்லது ஆசிரியர் உடல்தொட்டுப் பயிற்றுவிக்கும்( நேரடிக் கண்காணிக்கும்) வழிமுறைப்பயிற்சி அது.. ஏன் எனில் ஒரு ஆசான் பிராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது அவரது ‘வைப்ரேஷன்’ (-தொடு அதிர்வுகள்’ )மூலமே சீடனுக்கு அந்தத் தெய்வீகக்கலை வெற்றி கொடுக்கிறது. இது அனுபவ பூர்வ உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. மகான் விவேகாநந்தரின் சரித்திரத்தை ஆழமாகப்படிக்கும் எவரும் இதை ஒத்துக்கொள்வர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவரைத்தொட்டார். அவ்வளவுதான் தியானத்தில் ஆழ்ந்தார் விவேகாநந்தர்!!

    yoga

    ..1980இல் நான் இதுபற்றி விளக்கமாக என் ‘கசின்’ (பெரியப்பா பையன்)இடம் எடுத்துச் சொல்லியும், ஒரு தகுந்த ஆசான் மூலமே நீ மூச்சிழுத்தல் பற்றிக் கற்கவேண்டும். என் புத்தகத்தைப் படித்துச் செய்யாதே என்று பல தடவை அவனிடம் சொல்லியும் கேட்காமல் அவன்தன் வீட்டில் என் யோகா மற்றும் பிராணாயாமப் புத்தகத்தை முன்னால் வைத்துக்கொண்டு அதில் சொன்னவாறு செய்ய ஆரம்பித்தான்.

    சில இடங்கள் அவனுக்குப் புரியவில்லை. அப்படியும் மூச்சை ஏதோ ஒரு ரேஸ் குதிரை போல் காலைத் தூக்கிவைத்துக்கொண்டு(சீக்கிரமே இதில்) வெற்றி அடையவேண்டும் என்று தீவிர வெறியில்( என்மேல் பொறாமை?)_ மூச்சைப் பலமாக இழுத்து, ரொம்ப நேரம் கழுத்து நரம்புகள் புடைக்க நெற்றியில் மூச்சைத் தேக்கினான். வேகம் அதிகம் ஆனதால் மூன்றே நாளில் அவன் கழுத்துநரம்பு சுளுக்கிக்கொண்டது. மருந்து சாப்பிட்டுக் கொண்டே விடாமல் பலமாக இன்னும் மூன்று நாள் செய்தான். வெளியே விடும்போதும் உடல் பலத்தை அழுத்தி மூச்சைவிட்டான். புத்தகத்தையும் சரியாகப்படிக்கவில்லை.

    பத்துநாள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றால் அவனது பெரியப்பா, “பாருடா இவனை. இரண்டுநாளாக ஏதோ மனம் பேதலித்தவன் மாதிரி ஆகாயத்தையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். யோகாவெல்லாம் பண்ற நீ இவனிடம் சொல்லி என்னவென்று கேட்டுச் சரி பண்ணக்கூடாதா? என்னிடம் பேசவே மாட்டேன் என்கிறானே,”- என்றுசொல்லிக் கண்கலங்கினார். நிதானமாகக் கேட்டதில், அவன் இது பற்றி என்னிடம் மெதுவாக விவரித்ததில் எல்லா விஷயமும் எனக்குப் புரிந்துபோச்! பிறகென்ன? ஒரு நரம்பு மற்றும் மன ஆலோசனை நிபுணரிடம் அவனை அழைத்துப்போய் எல்லாவற்றையும் சரி செய்தோம். அந்த அனுபவத்திற்குப்பிறகு அவனிடம் பிராணாயாமம் என்று ஆரம்பித்தாலே,அதோ அந்தத் ‘ தெனாலிராமனின் சூடான பால்கண்டால் நடுங்கும் பூனைமாதிரி’ பயப்பட்டான். தேவையா இது?

    ..அதனால்தான் சொல்கிறேன். மூச்சுப்பிராணாயாமம், தீவிர அழுத்தமான யோகா போன்றவற்றை ஒரு யோகா நிபுணர் மூலம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. எனினும் மெது மெதுவாக இத்தொடரில் ஆபத்து இல்லாத மிகலேசான ஆசனங்கள் பற்றியும் அதிக மூச்சிழுப்பு தேவையில்லாத ஒருவகை த்யானம் பற்றியும் விளக்க இருக்கிறேன்.ஆனால்,..

    ..-தியானம் பயில்வதற்குமுன் மனத்தைப் பக்குவப்படுத்த, எண்ணங்களை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை முதலில் இங்கே விவரிக்கின்றேன். ஏன் எனில் அவை கட்டற்ற எண்ணங்களை அடக்கி தியானத்தில் நமக்கு வெற்றியைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    ..முதலாவதாக நம் ‘உள்மனதும் பழக்கவழக்கமும்’ எனும் மிகத் தேவையான விஷயம் பற்றி அலசுவோம். இது ஒரு அடிப்படைப் பயிற்சி ஆகும். கவனமாகப் படிக்கவும்.

    ஒருநல்ல தெய்வீகமான பழக்கத்தை உள்மனம் வரை வளர்ப்பது என்பது நல்ல நிலத்தை உழுவது போன்றது.இதற்குச் சிலகாலம் பிடிக்கும். பொறுமை தேவை.ஏன் எனில் அது மனசின் ‘உள்’ளிலிருந்து வரவேண்டும்.இந்த நல்ல பழக்கம் பிற துணைப்பழக்கங்களை உருவாக்கும். அவை மனிதனை சரியான வாழ்க்கைப்பாதையில் செலுத்தும். இதற்கு நாமே முயன்று ‘செயல்தூண்டுதல்’ கொடுக்கவேண்டும். பின்பு அதுவே இயல்பாகி விடும்.உதாரணத்திற்கு ஒருவன் விடாமல் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கெடுதல் என்று தெரிந்தும் அவனால்சட்டென விட முடியாது. ஆனால் அப்பழக்கம், அவனுள் ஆஸ்த்மா என்னும் நோயை உண்டு பண்ணுகிறது. உடனே டாக்டரிடம் ஓடுகிறான்.அவர் அவனிடம்

    “டேய்! நீ எப்படியாவது பாடுபட்டு இந்த சிகரெட் பழக்கத்தை ஒழி. ஆனால்தான் நீ பிழைப்பாய்.. இல்லாவிடில் நீ அடுத்தவருடமே பயங்கர இழுப்புநோயால் காலி!” எனச்சொன்னார் என்றால் முயன்று அவன் மெல்லமெல்ல அப்பழக்கத்தை நிச்சயம் விட்டுவிடுவான். ஏன் எனில் அவனது உள்மனமே பயப்படுவதனால். நிச்சயம் இது சாத்தியம். இல்லையா?

    துன்பமான காலங்களில் தைரியத்தைக்காட்டும் திறனும், இச்சைப்படும்போதே சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் வலிவும்,மனம் காயப்படும் போதும் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கும் திறனும்,தடைகள் ஏற்படும்போது நல்லநம்பிக்கையுடன்(positive approach உடன்) நல்வாய்ப்பையே எதிர்பார்க்கும் ஆழமான எண்ணமும், ’தற்செயல்’ நிகழ்வுகள் இல்லை.ஏன் எனில் இவை நாம் மனரீதியிலும், உடல்ரீதியிலும் துணிச்சலுடன் கொடுக்கும் நிலையான, மாறாத ‘பயிற்சி’யின் பயனே ஆகும்.சரியா?அற்பமான சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் ஒரு கோழையைப்போன்று எதிர்மறையாக, அஞ்சியோ இல்லை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் ஒதுங்கியோ போனால், தியானம்
    சித்திக்காது. மாறாக அந்தத் தடைகளையே, துன்ப நினைவுகளையே எண்ணுவதால மனம் தியானத்தில் நிலைக்காது. ஆனால் விடாமல் இயல்புப் பழக்கத்தை மீறி ஒருவன் மேலே சொன்னபடி பயிற்சி செய்தால் எந்த நிலைமையிலும் கலங்காதிருப்பான் அதே மனிதன்! பெரிய விஷயங்களையும் அவன்தான் துணிவோடு செய்து வெற்றியையே பரிசாகப்பெறுவான். இது நம் அனுபவ உண்மை.

    ஆம்!பழக்கமாகும்வரை நாம் எந்த நல்லதைச் செய்யவேண்டும் என எண்ணுகிறோமோ அதை நீடித்து எப்போதுமே செய்ய முனைய வேண்டும்.அதில் தடை வந்தாலும் எதிர்த்து நல்லதையே செய்யவேணும்.பின் வாங்கலாகாது. ‘தீமை இது’ என்று ஒன்று தெரிந்துவிட்டால் அதிலிருந்து கட்டாயம் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளவேண்டும். பின்பு அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும்.தியானப் பயிற்சியாளனுக்கு அது வரும்முன்பே தீமை என்று தெரிந்துவிடும். விலகி விடுவான் உடனே. தெய்வீகப்பாதையில் போகும் பலனை உடனே அவன் அறுவடை செய்வான். மகிழ்வான். இனி நமது சிந்திக்கும் முறை பற்றியும், தற்காலக்காலகட்டத்தில் இந்த விஞ்ஞான வசதிகள் எப்படி நம்மை நேர்-
    பாதையிலிருந்து கவிழ்த்துவிடத் துடிக்கின்றன என்பது பற்றியும் அடுத்த வாரம் தீவிரமாக அலசுவோம்.(தொடரும்).

    Share
  • ஐந்திணை எழுபது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்

    –முனைவர் க. துரையரசன்.

     

    தோற்றுவாய்:
    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியின் தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுக் கொடுத்த 41 நூல்களுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நீதி நூல்களின் தொகுப்பாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கருதப்பட்டாலும் அதில் உள்ளவை அனைத்தும் அறநூல்களில்லை. அத்தொகுப்பில் இடம் பெற்ற நூல்களில் 11 நூல்கள் அற இலக்கிய வகையைச் சார்ந்தவை; 6 நூல்கள் அக இலக்கிய வகையைச் சார்ந்தவை ; 1 நூல் புற இலக்கிய வகையைச் சார்ந்தது. ஐந்திணை எழுபது அக இலக்கிய நூலாகும்.

    நூலும் ஆசிரியரும்:
    இந்நூல் எழுபது அகப்பாடல்களைக் கொண்டுள்ளது. இது திணை தோறும் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் எழுபது பாடல்களைக் கொண்டுள்ளமையால் ஐந்திணை எழுபது என்று அழைக்கப்படுகிறது. ஆயினும் 25, 26, 69, 70 ஆகிய நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை. எஞ்சிய 66 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் 27 செய்யுள்கள் நேரிசை வெண்பாக்களாகவும், 40 செய்யுள்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் அமைந்துள்ளன. இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது என அறிஞர்களால் கருதப்படுகிறது.

    இந்நூலின் ஆசிரியர் மூவாதியார்; இவர் சமணர் என்பர். இவரைப் பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. நூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியுள்ளனரோ என்று தோன்றுகிறது. இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், “கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் “கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என இடம்பெற்று உள்ளன.

    திணை – அமைப்பு முறை:

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
    (தொல். அகத். நூ. 5)

    நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்
    படுதிரை வையம் பாத்தியப் பண்பே
    (தொல். அகத். நூ. 2)

    என்று தொல்காப்பியர் ஐந்திணைகளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று வரிசைபடக் கூறுவது முன்னோர் வழக்கு என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும் இவ்வரிசை முறை பிற்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என்றும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,பாலை என்றும் மாறி அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

    இந்நூலிலும் திணை வரிசைமுறை தொல்காப்பிய வரிசையிலிருந்து மாறுபட்டுக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. அன்பு இன்பத்திற்கு முதன்மையானதாகும். இதனை, அழகும் இனிமையும் தோன்றக் கூறுவது இந்நூல். இன்பத்தின் தொடக்கமாகிய புணர்ச்சியினையும் அதற்குரிய நிமித்தங்களையும் குறிஞ்சி எனக்கூறி, அப்புணர்ச்சியால் பெற்ற அன்பினை நெகிழவிடாது அகத்திருத்தி அமைதலாகிய முல்லையினை அடுத்துரைத்து அவ்வன்பின் நிலைப்பேற்றினைக் கண்டறிவதற்குப் பிரிவாகிய பாலையினைப் பின்வைத்து, அவற்றின் பயனாகிய ஊடலும் கூடலுமென்ற மருதத்தினை விளக்கி, இவைப் பேரின்பத்தினை அடைவதற்குரிய பெருவழியே அன்றிப் பேறாகா எனத் தெளிய இரங்கலாகிய நெய்தலினை இறுதியிற் கூறிய எழில் போற்றத்தக்கதாகும் என்று இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய அ. நடராசபிள்ளை இந்நூலின் முகவுரையில் (பக்கம் 5, கழக வெளியீடு, 2007) குறிப்பிட்டுள்ளார்.

    நுவலும் பொருள்:
    இந்நூல், மக்களின் இன்பத்திற்கு உயிர் நிலையாகிய அன்பினை எழிலும் இனிமையும் தோன்ற எடுத்துரைக்கிறது. இதன்கண் அகப்பொருளின் முப்பொருள்களான முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் நன்கு அமைந்துள்ளன. உள்ளுறை உவமங்கள் மற்றும் இலக்கியச்சுவை நிறைந்தவையாகப் பாடல்கள் அமைந்துள்ளன. பண்டைத் தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் பலவற்றை இந்நூலின் வழி அறியமுடிகிறது.

    குறிஞ்சி: இத்திணையில் தலைவி தலைவனை இயற்பட மொழியும் திறன் சிறப்பாக அமைந்துள்ளது. அதற்கேற்ப இறைச்சிப் பொருளைக் கையாண்டுள்ளார். குறிஞ்சி நிலப் பண்புகள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.

    முல்லை: இத்திணைப் பாக்கள் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை அனைத்தும் பருவம் கண்டு அழிந்த தலைவியின் கூற்றாகவே அமைந்துள்ளன. கார்கால இயல்பு, மாலை நேரக் காட்சி வருணனை ஆகியவை பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

    பாலை: இதற்கெனத் தனிநிலம் இல்லை என்பது இந்நூலின் வழியும் புலனாகிறது. முப்பத்தாறாவது பாடலில் முல்லையையும் பாலையையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். போரில் இறந்துபட்ட வீரர்களுக்குக் கல் நடுதல், அக்கல்லில் அவ்வீரர் பற்றிய சிறப்பானச் செய்திகளை எழுதி வைத்தல், ஆந்தை ஒலி, பல்லி ஒலி, இடக்கண் துடிப்பு, தும்மல் முதலியவற்றால் நிமித்தம் அறிதல் போன்ற செய்திகள் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

    மருதம்: இத்திணையில் தலைவன் புதல்வனைப் பெற்றெடுத்தல், புதல்வற்குப் பெயரிடுதல், பரத்தையர் தலைவனை மாலையால் பிணைத்துச் செல்லுதல், எருமையினைக் கழுத்தில் தொண்டு கட்டையிடல், உறுதிமொழிகளை எழுதி வைத்துக் கொள்ளுதல், பாணற்குத் தலைமகன் வாயில் மறுத்தல், தோழி தலைமகனத் தன் பேச்சாற்றலால் இணங்குவிக்கும் தன்மை, தோழி தலைமகளிடத்துக் கொண்டுள்ள பேரன்பு ஆகியவை நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

    நெய்தல்: முல்லைத் திணையைப் போலவே இத்திணைப் பாக்களும் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணையில் தலைமகள் தலைமகனை இயற்பட மொழியும் திறன், தோழி அன்றிலோடு கூறியாறும் அமைதி, தம் காதலுக்குக் குறுகினைச் சான்றாகக் கொள்ளுமாறு கூறுதல் முதலிய செய்திகள் மனம் கவர்கின்ற வகையில் அமைந்துள்ளன.

    துறைச் சொற்றொடர் விளக்கம்:
    இந்நூல், அகத்திணைக் கூறுகளான முப்பொருள்களையும் கொண்டிலங்குகின்றது. இதன் பாடல்களில் இடம் பெற்றுள்ள அகத்துறைச் சொற்றொடர்களை விளங்கிக் கொண்டால்தான் பாடல்களின் பொருளை நன்கு உணர முடியும். ஆகையால் அவை பற்றிய விளக்கத்தைக் கீழே காணலாம்.

    • வரைவு கடாதல் – திருமணம் புரிந்துகொள்ளும்படி தூண்டுதல்.
    • வரைவு தலைவரல் – தலைமகனைச் சார்ந்தார் திருமணம் பேசி வரல்.
    • வரைவு மலிதல் – திருமணப் பேச்சினை மேற்கொண்டு வரல்.
    • தலைமகன் சிறைப்புறத்தானாக – பாங்கியிற் கூட்டத்தினின்றும் பிரிந்த தலைமகன் தினைப்புனஞ் செல்லுந் தோழியினையும், தலைவியையும் சோலையின் வேலிப்புறமாக நின்று நோக்கினனாக.
    • இயற்பழித்தல் – தலைவனின் அன்பாகிய இயல்பினைக் குறைத்துக் கூறல்.
    • இயற்பட மொழிதல் – அன்பாகிய இயல்பு பொருந்துமாறு கூறல்.
    • மெலிவில் நயம் – துன்பங் கலவாத இன்பம்
    • புணர்ந்து நீங்கல் – பாங்கியிற் கூட்டத்தால் தலைவியைக் கூடிப் பிரிதல்.
    • பகற் குறி – தோழியின் உதவியால் பகல் நேரத்தில் தலைமகனைத் தலைமகள் கண்டு கூடுமிடம். இது தினைப்புனத்தின் அருகிலுள்ள சோலைக்கண்ணதாகும்.
    • படைத்து மொழி கிளவி – புதிதாக ஒன்றை அமைத்துக் கூறுதல்.
    • மன்றத்து உறுகல் – பலர் கூடும் வெளியில் பலரும் அமர்தற்குரியதாகப் பொருந்திய கற்கள்.
    • வெறியாட்டெடுத்தல் – வேலற்குப் பூசையிடல்.
    • அறத்தொடு நிற்றல் – உண்மையினை எடுத்துச் சொல்லித் தவறாகக் காரியங்களை நிகழவொட்டாது நடத்தல். பெரிதும் தலைமகன் மீது தலைமகள் கொண்ட அன்பினைத் தோழி செவிலியிடமும், செவிலி நற்றாயிடமும், நற்றாய் தந்தை தமையனிடமும் கூறுதல்.
    • செலவு – பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து செல்லல்.
    • வரைவிடைப் பிரிவு – தலைமகளை மணத்தல் வேண்டிப் பொருள் தேடும் பொருட்டுத் தலைமகன் மேற்கொண்ட பிரிவு.

    (காண்க: மூவாதியார் இயற்றிய ஐந்திணை யெழுபது, மூலமும் உரையும், அ. நடராச பிள்ளை, பக்கம் 65, கழக வெளியீடு, 2007)

    திணை கண்டறிதல்:
    பாடல்களில் பயின்று வரும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு திணைகளைக் கண்டறியலாம். திணைகளைக் கண்டறியும் முறை பற்றி தொல்காப்பியர்,

    நிலன் ஒருங்கு மயங்குதல் இல்லென மொழிப (தொல். அகத். நூ. 14)
    உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல். அகத். நூ. 15)

    என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் கருத்தைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்…

    • பாடலில் பயின்று வரும் கருப்பொருள்களை வைத்து திணையை உறுதிப்படுத்த முடியாது.

    • நிலம், பொழுது ஆகிய இரண்டு முதற் பொருள்களில் காலத்தை வைத்துத் திணையை உறுதிப்படுத்த முடியாது; ஆனால் நிலத்தை வைத்து உறுதிப்படுத்தலாம்.

    • பாடலில் பயின்று வரும் உரிப்பொருளைக் கொண்டு திணையை உறுதிப்படுத்தலாம்

    எனவே, உரிப்பொருளையும் நிலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பாடல்களின் திணையை உறுதிப்பட வரையறை செய்யலாம்.

    குறிஞ்சித் திணைப் பாடல்கள்:

    “அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
    கவரி மடமா கதூஉம் படர்சாரல்
    கானக நாட! மறவல் வயங்கிழைக்கு
    யான்இடை நின்ற புணை”
    (ஐந்திணை எழுபது, பா. 1)

    இப்பாடலில் கவரிமான், தினை ஆகிய இரண்டு கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவரிமான் முல்லைத் திணைக்குரியது. ஏனல் என்னும் தினை குறிஞ்சித் திணைக்குரியது. இவற்றின் அடிப்படையில் இப்பாடலின் திணையை வரையறுக்க முயன்றால் இப்பாடல் குறிஞ்சித் திணை என்றும் முல்லைத் திணை என்றும் மயக்கம் ஏற்படும்.

    ஆனால் இப்பாடலில் பயின்று வந்துள்ள சாரல் கானக நாட என்பது மலை நாடனைக் குறிக்கிறது. மலை என்பது முதற்பொருளில் நிலத்தின் பாற்படும். தொல்காப்பியரும் நிலத்தைக் கொண்டு திணையை வரையறை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளமையால் இப்பாடல் குறிஞ்சித் திணைப் பாடல் என்று உறுதிப் படுத்தலாம்.

    மேலும் இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘யான் இடை நின்ற புணை’ என்ற தொடருக்கு உரையாசிரியர் தோழி தெய்வம் போன்று நின்று புணர்ச்சியை நிகழ்வித்தாள் என்று குறிப்பிடுகிறார். எனவே இப்பாடலில் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளான புணர்தல் இடம் பெற்றுள்ளமையால் இதன் திணையைக் குறிஞ்சி என்று உறுதிப் படுத்தலாம்.

    “பிரைசம் கொளவீழ்ந்த தீம் தேன்இறாஅல்
    மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
    வரையக நாட! வரையாய் வரின் எம்
    நிரைதொடி வாழ்தல் இலள்”
    (ஐந்திணை எழுபது, பா. 9)

    மேற்கண்ட பாடலிலும் தேன், மான் ஆகிய கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இதனடிப்படையில் திணை கூற முற்பட்டால் குறிஞ்சித் திணை, முல்லைத்திணை என்று மயக்கம் ஏற்படும். ஆனால் மலை என்பதைக் கொண்டு திணை வரையறை செய்தால் மயக்கமில்லாமல் குறிஞ்சித்திணைப் பாடல் என்று அரிதியிட்டுக் கூறலாம்.

    “வரையாய் வரின் எம் நிரைதொடி வாழ்தல் இலள்” என்பது நீ தலைவியை வரையாது களவை நீட்டிப்பாயாயின் தலைவி உயிர் வாழாள் என்று தோழி கூறுவதால் இது புணர்தலின் பாற்படும். எனவே இப்பாடல் குறிஞ்சித் திணையாகும்.

    முல்லைத் திணைப் பாடல்கள்:

    “செங்கதிர்ச் செல்வன் சினம்கரந்த போழ்தினாற்
    பைங்கொடி முல்லை மணம்கமழ – வண்டுஇமிரக்
    காரோடு அலமரும் கார்வானம் காண்தொறும்
    நீரோடு அலமரும் கண்”
    (ஐந்திணை எழுபது, பா. 15)

    இப்பாடலில் “சினம்கரந்த போழ்து” என்பது மாலைப் பொழுது ஆகும். முல்லைத் திணைக்குரிய கார் காலம் இடம் பெற்றுள்ளது. இவை இரண்டும் முதற் பொருளாகும். முல்லை என்பது கருப்பொருளாகும். எனவே இப்பாடல் முல்லைத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

    “தண்நறுங் கோடல் துடுப்புஎடுப்பக் கார்எதிரி
    விண்உயர் வானத்து உரும்உரற்றத் – திண்ணிதின்
    புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
    கொல்லுநர் போல வரும்.”
    (ஐந்திணை எழுபது, பா. 17)

    இப்பாடலில் முதற்பொருளான கார், மாலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும்’ என்பதில் உரிப்பொருளான இருத்தல் பயின்று வந்துள்ளது. எனவே இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும்.

    பாலைத் திணைப் பாடல்கள்:

    “வில்உழுது உண்பார் கடுகி அதர்அலைக்கும்
    கல்சூழ் பதுக்கைஆர் அத்தத்து இறப்பார்கொல்
    மெல்இயல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்குஇவர்ந்து
    நில்லாத உள்ளத் தவர்”
    (ஐந்திணை எழுபது, பா. 30)

    இப்பாடலில் “வில் உழுது உண்பார்” என்பது ஆறலைக் கள்வரைக் குறிக்கும். ‘கல்சூழ் பதுக்கை ஆர் அத்தம்’ என்பது பாலை நில சுரத்தைக் குறிக்கும். இங்ஙனம் இப்பாடலில் பாலைத் திணைக்குரிய கருப்பொருள்களே பயின்று வந்துள்ளன. வேறு திணைகளுக்குரியவை இப்பாடலில் இடம் பெறவில்லை. எனவே இப்பாடல் பாலைத் திணைப் பாடல் என்று வரையறை செய்யலாம்.

    “பீர்இவர் கூரை மறுமனைச் சேர்ந்து அல்கிக்
    கூர்உகிர் எண்கின் இருங்கிளை கண்படுக்கும்
    நீர்இல் அருஞ்சுரம் முன்னி அறியார் கொல்
    ஈரம்இல் நெஞ்சி னவர்”
    (ஐந்திணை எழுபது, பா. 34)

    இப்பாடலில் “நீர்இல் அருஞ்சுரம்” என்பது வறண்ட அரிய பாலை நிலத்தைக் குறிக்கும். இங்ஙனம் நிலத்தைக் குறித்து வந்தமையால் இப்பாடல் பாலைத்திணை ஆகும்.

    மருதத் திணைப் பாடல்கள்:

    “போத்துஇல் கழுத்தின் புதல்வன் உணச்சான்றான்
    மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்
    நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி
    கூத்தாடி உண்ணினும் உண்”
    (ஐந்திணை எழுபது, பா. 45)

    இப்பாடலில் இடம் பெற்றுள்ள புதல்வன், பரத்தை, வாயில் மறுத்தல் முதலிய செய்திகளின் மூலம் மருதத்திணைப் பாடல் என்று உறுதி செய்ய முடிகிறது.

    “வளவயல் ஊரன் மருள்உரைக்கு மாதர்
    வளைஇய சக்கரத்து ஆழி – கொளைபிழையாது
    ஒன்றுஇடை இட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
    ஒன்றி அனைத்தும் உளேன். “
    (ஐந்திணை எழுபது, பா. 56)

    இப்பாடலில் இடம் பெற்றுள்ள வயல், ஊரன், பரத்தை (மருள் உரைக்கு மாதர்) முதலிய கருப்பொருள்களால் இப்பாடல் மருதத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

    நெய்தல் திணைப் பாடல்கள்:

    “இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்
    கடுமான் மணிஅரவம் என்று – கொடுங்குழை
    புள்அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய
    உள்அரவம் நாணுவர் என்று”
    (ஐந்திணை எழுபது, பா. 59)

    இப்பாடலில் அகன்கானல் என்பது கடற்கரைச் சோலையாகும். எனவே இது முதற்பொருளான நிலத்தைக் குறித்தது. சேர்ப்பன் என்பது கருப்பொருளான நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று குறிப்பிடலாம்.

    “மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
    அணிநலம் உண்டுஅகன்றான் என்கொல் எம்போல்
    தணிமணல் எக்கர்மேல்ஓதம் பெயரத்
    துணிமுந்நீர் துஞ்சா தது “
    (ஐந்திணை எழுபது, பா. 60)

    இப்பாடலில் நெய்தல் என்ற திணைப்பெயரே வந்துள்ளது. இருங்கழி என்பது உப்பங்கழியைக் குறிக்கும். சேர்ப்பன் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். ஓதம் என்பது அலையைக் குறிக்கும். முந்நீர் என்பது கடலைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று துணியலாம்.

    முப்பொருள்கள் இடம் பெற்றுள்ளமை:

    • முல்லைத் திணைப் பாடல்களில் கார் (15, 17, 19, 20, 21, 23), கார் (17, 20-24, 27), முல்லை (15, 20, 21, 24) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • குறிஞ்சித் திணைப் பாடல்களில் வரை (3, 10), மலை (4, 5, 6, 9, 12), அருவி (7, 11) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • பாலைத் திணைப் பாடல்களில் சுரம் (29, 32-34, 36, 39), அதர் (30), ஆறலைப்போர் (30, 36) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • மருதத் திணைப் பாடல்களில் புதல்வன் (43, 45, 47, 48, 55), பரத்தை (44, 46-48, 54), பாணன் (45, 46, 48, 49), எருமை (46), வயல் (46, 47, 53, 56) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • நெய்தல் திணைப் பாடல்களில் நெய்தல் (60, 67), புன்னை (58), சேர்ப்பன் (58-60, 62, 65, 68), துறைவன் (57, 61, 63, 64), ஓதம் (60), முந்நீர் (60, 61), நாவாய் (61), இருங்கழி (64, 67, 68), கொடுங்கழி (63), சுறா (65), அலவன் (67), மீன் (68) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    தொகுப்புரை:
    பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகப்பொருள் நூல்கள் ஆறு ஆகும். இதில் திணை என்னும் பெயரில் ஐந்து நூல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் திணையடிப்படையில் ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் இருத்தல் வேண்டும். முல்லை மற்றும் நெய்தல் திணைகளில் தலா இரண்டு பாடல்கள் வீதம்நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை.எனவே அறுபத்தாறு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணைக்குரிய முப்பொருள் அமைப்பு முறையில் நெய்தல் திணைப் பாடல்கள் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பியர் கூறிய வழிமுறையில் இப்பாடல்களின் திணைப் பொருத்தும் குறித்து ஆய்கின்றபொழுது திணைமயக்கமுள்ள பாடல்கள் மிகக்குறைவாகவே உள்ளன. இந்நூல் மாணவர்களுக்குப் பாட அளவிலும் ஆராய்ச்சி அளவிலும் மிகுதியாகச் சென்று சேரவில்லை என்றே கூற வேண்டும். எனவே இந்நூல் மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் மிகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

    பயன்பட்ட நூல்களும் இணைய தளங்களும்:
    1. தொல்காப்பியம், ச.வே.சுப்பிரமணியம் பதிப்பு.
    2. பதினெண் கீழ்க்கணக்கு, அ.நடராச பிள்ளை விளக்கவுரை, கழக வெளியீடு, 2007.
    3. ஐந்திணை எழுபதில் அகத்திணைக் கூறுகள் என்னும் கட்டுரை – சி. ஜெபஸ்டெல்லா, thoguppukal.wordpress.com/2011/01/29
    4. www.tamilvu.org
    5. www.projectmadurai.org

     

     

     

     

     

     

    முனைவர் க. துரையரசன்
    தமிழ் இணைப்பேராசிரியர் &
    தேர்வு நெறியாளர்
    அரசினர் கலைக் கல்லூரி (தன்.)
    கும்பகோணம் – 612 001
    தமிழ்நாடு

    Share
  • மலையமான் திருமுடிக்காரியும் முள்ளூர் நாட்டு வளமும்

    –முனைவர் மு.  பழனியப்பன்.

     

    கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொள்ளப்பெறுபவன் மலையமான் திருமுடிக்காரி ஆவான். சிறுபாணாற்றுப்படை இவனின் கொடைச்சிறப்பினை …

                                           கறங்குமணி
    வாலுளைப் புரவியொடு வையகம் மருள
    ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
    அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
    கழல்தொடித் தடக்கை காரி
    (சிறுபாணாற்றுப்படை 91-95)

    என்று எடுத்துக்காட்டுகின்றது ஒலிக்கின்ற மணிகளை உடைய வெண்மையான பிடரி மயிரினையுமுடைய தன் குதிரையுடன் தன் நாட்டையும் இரவலர்க்கும் வழங்கும் வள்ளலாக மலையமான் திருமுடிக்காரி இருந்துள்ளான்.

    மலையமான திருமுடிக்காரியின் மலைநாடு ஆகும். இது மருவி மலாடு என்று வழங்கப்பெற்றிருந்திருக்கிறது. நடுநாடு எனச்சொல்லப்பெறும் பகுதி சங்ககாலத்தில் மலைநாடு, ஓவியர் மாநாடு என்று இருநிலைப்பட்டதாக இருந்துள்ளது. மலாடுக்கு பெண்ணையம் படப்பை நாடு என்ற பெயரும் உண்டு. இம்மலைநாடு கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டை ஆகிய ஊர்களையம், கல்வராயன் மலைகளையும் உள்ளடக்கியப் பகுதி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (தமிழநம்பி வலைப்பூ) இந்நாட்டினைச் கடைச் சங்க காலத்தில் ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரியாவான்.

    இவனின் மலை முள்ளூர் மலையாகும். இவனின் தலைநகரம் திருக்கோவலூர் ஆகும். இவன் வீரம் செறிந்தவன். கொடைநலம் உடையவன். இவனைப் பற்றிய குறிப்புகள் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு போன்ற பல சங்கப் பனுவல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து இவனின் வரலாற்றை ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

    “துஞ்சா முழவின் கோவல் கோமான்
    நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை
    பெண்ணையம் பேரியாற்று நுண்அறல்கடுக்கும்
    நெறிஇருங் கதுப்பின்”
    ( அகநானூறு 35)

    என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பு காரியின் அரசியல் சிறப்பை விளக்குவதாக உள்ளது. முழவுகள் ஒலித்துக்கொண்டே இருக்கும் நாட்டினை உடையவன் திருக்கோவலூரைத தலைமையிடமாகக் கொண்டு ஆளும் கோமான் காரி. இவன் நெடிய தேர்களை உடையவன். இவனின் சிறப்பு மிக்க நகரங்களுள் ஒன்று கொடுங்கால். இது பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வாற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற கூந்தலை உடையவள் தலைவி என்று தலைவியின் அழகு சிறப்பிக்கப்பெறும் இடத்தில் காரியின் பெருமை பேசப்பெருகின்றது.

    இப்பாடலின்வழி தென் பெண்ணையாற்றின் கரை சார்ந்த பகுதிகளை ஆண்டவன் காரி என்பது உறுதியாகின்றது. மேலும் அவனின் தலைநகரம் கோவல் எனப்பட்ட திருக்கோவலூர் என்பதும், அவனின் சிறப்பு மிக்க நகர்களுள் ஒன்று கொடுங்கால் என்பதும், அவன் எல்லைக்குட்பட்டு ஓடிய ஆறுகளில் ஒன்று தென்பெண்ணையாறு என்பதும் தெரியவருகின்றது.

    மலையமான் திருமுடிக்காரியின் வீரச்சிறப்பு:
    மலையமான திருமுடிக்காரி வீரஞ் செறிந்தவன். இவன் பல மன்னர்களுக்குப் போர் உதவி செய்துள்ளான்.

    ஆரியரை வென்றவன்:

    “ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப்
    பலர் உடன் கழிந்த ஒள்வாள் மலையனது
    ஒருவேற்கு ஓடி யாங்குதம்
    பன்மையது எவனோஇவன் நன்மைதலைப் படினே”
    (நற்றிணை- 170)

    என்ற நற்றிணைப் பாடலில் ஆரியரை வென்றவன் மலையமான் என்ற குறிப்பு காணப்படுகிறது.

    இப்பாடலில் தலைவி தன் பக்கத்து உள்ள அனைத்துத் தலைவியரையும் அழைத்து, அழகுடன் விளங்கும் விறலியிடமிருந்துத் தலைவனைக் காக்க எழுங்கள் என்று உரைக்கிறாள். அவ்வாறு செய்யவில்லை என்றால் ஆரியர்கள் நெருங்கிப் போர் செய்ய வந்தபோது ஒப்பற்ற தன் வாளை எடுத்துப் போர்புரிந்து ஆரியப்படையை விரட்டிய மலையமானின் திறம்போல நாமும் ஒழிய வேண்டியதுதான் என்பது தலைவி கூற்றாகும்.

    இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக்குறிப்பின்படி மலையமான ஆரியரை வென்றச் சிறப்பினை உடையவன் என்பது தெரியவருகிறது.

    சேர மன்னனுக்குப் போர் உதவி புரிந்தவன்:
    முள்ளூர் மன்னனாகிய மலையமான் சிவந்த வேலினை உடையவன். இவன் வீரவளையை அணிந்தவன். இவன் கொல்லிப்பாவையைக் கைப்பற்றுவதற்காகச் சேரமன்னனுடன் முரண்பட்ட கடையெழுவள்ளல்களில் ஒருவனான ஓரியைக் கொன்று அப்பாவையைச் சேரனுக்கு உடைமையாக்கித் தந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பதிவாகியுள்ளது.

    “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
    செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
    ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
    செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி
    நிலைபெறு கடவுள் ஆக்கிய
    பலர்புகழ் பாவை அன்ன நின் நலனே”
    (அகநானூறு, 209)

    ஓரியை வென்றுச் சேரனுக்கு மலையமான அளித்த கொல்லிப்பாவை போன்ற அழகுடையவள் தலைவி என்பதைக் கல்லாடனார் இப்பாடலடிகளில் காட்டியுள்ளார்.

    சோழ மன்னனுக்கும் போர் உதவி புரிந்தவன்:
    மலையமான் திருமுடிக்காரி மற்றொரு சமயத்தில் சோழனுக்குப் போர் உதவி புரிந்திருக்கிறான். ஒருமுறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் புரிந்தனர். இவர்கள் இருவரில் சோழனுக்குச் சார்பாய் காரி நின்று வெற்றியைப் பெற்றுத் தந்தான். இவ்விருவரும் காரியைப் போர் கருதி எந்நாளும் நினைவு கூர்ந்தனர்.

    “குன்றத்து அன்ன களிறு பெயரக்
    கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
    வெலீஇயோன் இவன் எனக்
    கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
    விரைந்துவந்து சமம் தாங்கிய
    வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
    நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
    தோற்றோன் தானும் நிற்கூ றும்மே”
    (புறநானூறு, 125)

    என்ற பாடலில் திருமுடிக்காரி வெற்றிக்கும் காரணமாகின்றான். தோல்விக்கும் காரணமாகின்றான் என்று காட்டப்பெற்றுள்ளது.

    வென்றவர்கள் மலைபோன்ற யானைப்படை அழிந்துபோனாலும் அதன் அழிவைக் கருதாது வெற்றியைப் பெற்றுத்தந்தவன் காரி என்று வென்ற மன்னன் காரியைப் பாராட்டுகிறான்.

    வெற்றிவேல் உடைய காரி வாராது இருந்திருந்தால் இத்தோல்வி கிடைத்திருக்காது என்று தோல்வி பெற்றவனும் காரியை எண்ணுகிறான். இவ்வளவில் பகைவர்க்கும், நண்பர்க்கும் முருகவேள் போலக் காட்சி தருகிறான் காரி என்று இந்தப்பாடலைப் பாடியுள்ளார் வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தன்.

    கொடைச்சிறப்பு:
    காரி கொடைச்சிறப்பு மிக்கவன். இதன் காரணமாகவே இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக ஆக்கப்பெற்றுள்ளான். மற்றவர்கள்போல் இவன் கொடைமடம் மிக்கவன் அல்லன். உண்மையான கொடைத்திறம் மிக்கவன். தன்னைப் பாடியவர்களுக்குப் பொன்னும் பொருளும் அளித்தவன். ‘மாரி ஈகை மறப்போர் மலையன்’ என்று கடையெழு வள்ளல்களில் இவன் குறிக்கப்பெறுகிறான். (புறநானூறு 158) மாரி போன்ற ஈகையன் காரி. மறப்போர் வல்லவன் மலையன் என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.

    கபிலரால் பாடப்பெற்றவன் என்ற பெருமைக்குரியவனாக இவன் போற்றப்பெறுகிறான். இதனை மற்றொரு புலவரான மாறோகத்து நப்பசலையார் இதனைப் பின்வரும் பாடலில் பதிவு செய்கின்றார்.

    “ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
    பாணர் சென்னி பொலியத் தலைஇ
    வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
    ஓடாப் பூட்கை உரவொன் மருக
    வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
    நினவயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
    துயில் மடிந்தன தூங்கிருள் இறும்பின்
    பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந
    தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
    நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
    புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
    இரந்து சென்மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
    பரந்து இசை நிற்கப் பாடினான்”
    (புறநானூறு 126)

    என்ற பாடலில் மலையமான் திருமுடிக்காரியின் புகழ் கபிலரால் பாடப்பெற்று நிலைநிறுத்தப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. இதன்வழி கபிலரின் புகழும், காரியின் பெருமையும் ஒருசேர வெளிப்படுகின்றன.

    காரியின் முன்னோர் புறமுதுகு காட்டாத மன்னர் பரம்பரையினர், அவர்கள் பாணர்க்குப் பொன் பூ சூட்டியவர்கள். இப்பரம்பரையில் வந்த மலையமான் போரில் வல்லவன். அவன் புகழ் நிற்கக் கபிலர் பாடியுள்ளார் என்பது இப்பாடலின் பொருள்.

    மலையமான் திருமுடிக்காரியின் இயல்புகளைக் கபிலர் பாடிய வகை பின்வருமாறு.

    “நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
    பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
    வறிது பெயர்குவர் அல்லர் நெறிகொளப்
    பாடு ஆன்று இரங்கும் அருவிப்
    பீடுகெழு மலையற் பாடியோரே”
    (புறநானூறு 124)

    என்ற இந்தப்பாடலில் கபிலர் நாள், நேரம் பார்த்துக் கொடை பெறவேண்டிய அவசியம் காரியின் அவைக்கு இல்லை என்று குறிப்பிடுகிறார். இது கொடை பெறுவதற்கான, அல்லது தருவதற்கான நாள் இல்லை என்றாலும், பறவையின் குறிப்பும் நல்லமுறையில் இல்லை என்றாலும், சென்று காணக்கூடிய சமயம் இது இல்லை என்றாலும் காரியிடம் சென்றுத் திறனற்ற சொற்களைச் சொன்னாலும் சென்றவர்கள் பரிசின்றித் திரும்பாத கொடைத்தன்மை பெற்றவன் காரி என்று கபிலர் புகழ்கின்றார்.

    காரி தேர் தருபவன் என்பதை மற்றொரு கபிலரின் பாடல் காட்டுகின்றது.

    “நாட்கள் உண்டு நாள் மகிழ்மகிழின்
    யாரக்கும் எளிதே தேர்ஈதல்லே
    தொலையா நல்லிசை விளங்கு மலையன்
    மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
    பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
    பட்ட மாரி உறையினும் பலவே”
    (புறநானூறு, 123)

    என்ற இப்பாடலில் பெரும்பாலும் மன்னர்கள் மதுவுண்டு மயக்கத்தில் இருக்கையில் புவலர்கள் பாடச் செல்வது அல்லது அவர்களை பாட அழைப்பது என்ற வழக்கம் சங்க காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றது. அக்காலத்தில் தேர்கள் பல தருவது என்பது கள்ளின் மயக்கம், புகழின் போதை. ஆனால் கள்ளுண்ணாத காலத்திலும் பற்பல செல்வங்களை, தேர்களை அளிக்கும் வள்ளல் தன்மை பெற்றவன் காரியாவான் என்பது இப்பாடலின் பொருளாகின்றது.

    மற்றொரு பாடலில் மூவேந்தருக்கு உதவியவன் காரி என்ற குறிப்பினை இடம்பெறச் செய்கிறார் கபிலர்.

    “கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
    கழல்புனை திருந்து அடி்க்காரி நின்நாடே
    அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே
    வீயாத் திருவின் விறல் கெழுதானை
    மூவருள் ஒருவன் துப்பாகியர் என
    ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
    வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
    வடமீன் புரையும் கற்பின் மடமொழி
    அரிவை தோள் அளவு அல்லதை
    நினது என இலை நீ பெருமிதத்தையே”
    (புறநானூறு 122)

    என்ற இப்பாடலில் அந்தணர்க்கு வரையாது வழங்கியவன் காரி என்ற கருத்து உரைக்கப்பெற்றுள்ளது. இப்பாடலில் காரி மூவேந்தருள் ஒருவர்க்கு உதவியவன் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. காரி மூவேந்தருள் சேரருக்கு ஒருமுறையும், சோழர்க்கு ஒருமுறையும் போர்உதவி செய்துள்ளான். இதனைக் கபிலரின் நயமாக மூவேந்தரில் இருவருக்கும் பொருந்துமாறு வெளிப்படுத்தியுள்ளது. காரிக்கு அவனின் மனைவியின் தோளே சொந்தம். மற்ற எதுவும் சொந்தமில்லை என்ற நிலையில் வரையாது வழங்கும் வள்ளல் காரி எனக்குறிக்கின்றார் கபிலர்.

    இவ்வாறு காரியின் வீரமும் கொடையும் இணைத்துச் சங்கப்பாடல்களில் பாடப்பெற்றுள்ளன.

    மலையமான் பரம்பரை:

    காரி இறந்தபின் அவனின் மகன்களுள் ஒருவனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் பட்டமேற்கிறான். அவனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் புறநானூற்றுத் தொகுப்பில் கிடைக்கின்றது. இப்பாடலைப் பாடியவர் மாறோகத்து நப்பசலையார். தந்தையையும் பாடியவர், மகனையும் பாடியவர் என்ற பெருமைக்கு உரியவராக இப்புலவர் விளங்குகின்றார்.

    “அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
    சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
    இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
    இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
    5
    அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
    அரசு இழந்திருந்த அல்லல் காலை,
    முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
    இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
    மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
    பொய்யா நாவின் கபிலன் பாடிய,
    மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
    செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
    எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
    அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
    மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
    புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
    விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
    சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
    ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
    உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
    ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
    கவலை நெஞ்சத்து அவலம் தீர,
    நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
    கல் கண் பொடிய, கானம் வெம்ப,
    மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
    கோடை நீடிய பைது அறு காலை,
    இரு நிலம் நெளிய ஈண்டி,
    உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.”
    (புறநானூறு, 1740)

    என்ற இப்பாடலில் மலையமானின் மகன் பற்றி புகழ் பதிவு செய்யப்பெற்றுள்ளது. திருமால் ஒளிந்த ஞாயிற்றைக் கொண்டு வந்து உலகை மீளவும் காப்பாற்றியது போல சோழ மண்டலத்தின் அரசன் தோற்று ஓடியபோது, அவரைப் பாதுகாத்து முள்ளுர்ப் பகுதியில் தங்கவைத்துத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தியவன் திருக்கண்ணன். இவனின் தந்தையான மலையமான் திருமுடிக்காரி இவ்வுலகில் அறம் செய்து அதன் பயனை அனுபவிக்க மேலுலகம் சென்றுள்ளார். அப்பெருமான் கபிலர் வாயினால் புகழப்பெற்றவன். அவன் வழியில் வந்த நீ தேவையான நேரத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆவாய் என்று பாடல் புகழ்கின்றது.

    இப்பாடலின் வாயிலாக மலையமான் திருமுடிக்காரியின் சந்ததியை அடையாளம் காணமுடிகின்றது.

    மலையமானும் அவன் மகன் திருக்கண்ணனும் பேரரசுகளுக்குப் போர்உதவி புரியும் படைக்குழுவின் தலைவனாக இருந்துள்ளனர் என்பது இப்பாடல்கள் வழியாகத் தெரியவருகின்றது,

    இவ்வகையில் மலையமான் திருமுடிக்காரி பற்றிய செய்திகளைச் சங்கப்பாடல்கள் வழியாக அறிந்து கொள்ளமுடிகின்றது.

    இவன் மலையான முள்ளூர் சிறப்பானது ஆகும் . இதன் வளத்தையும் புலவர்கள் பாடியுள்ளனர். அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.

    முள்ளூரின் இயற்கை வளம்:
    திருக்கோவிலூர் வட்டத்தில் முள்ளூர் மலைக்காடு என்ற பகுதி உள்ளது. இதுவே மலையமான் திருமுடிக்காரி வாழ்ந்த இடமாக இருக்கவேண்டும்.இவ்விடத்தின் இயற்கைவளம் பற்றிச் சங்க இலக்கியங்களில் எடுத்து மொழியப்பெற்றுள்ளது.

    முள்ளூர்க்காடு என்றழைக்கப்படும் தற்காலப் பெயர் அக்காலத்தில் முள்ளூர்கானம் எனப்பட்டுள்ளது. குறுந்தொகையில் ஒரு தலைவி இப்பெயரை அப்படியே பயன்படுத்துவதாகக் கபிலர் பாடுகின்றார். “முள்ளூர்க் கானம் நாற வந்து” (குறுந்தொகை 3120 என்ற கபிலரின் குறிப்பு மணம் மிக்க மலர்களைத் தரும் காடாக முள்ளூர் திகழ்ந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

    புறுநானூற்றில் இடம்பெற்ற கபிலரின் பாடலொன்றில் முள்ளூர் மலை உயரமானது என்ற குறிப்பும், அம்மலையில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என்பதும் பெறப்படுகின்றது. “பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பல” (புறநானூறு, 123) என்ற பாடலடியில் முள்ளூர் மழைப்பொழிவு மிக்கது என்பது தெரியவருகிறது.

    முள்ளூர்க் கானம் அடர்ந்து இருள் சூழ்ந்து இருந்தது என்பதை மற்றொரு புறநானூற்றுப்பாடல் விளக்குகின்றது. “துயில்மடித்தன்ன தூங்கு இருள் இறும்பின் பறை இசை அருவி முள்ளூர்பொருந ” (புறநானூறு 126) என்ற பாடலில் ஓரிடத்தில் துயில் உறங்குவதுபோல அடர்ந்த இருளை உடையது முள்ளூர் என்றும், மேலும் இம்மலையில் இருந்து அருவி ஒன்று விழுந்தது என்பதும் இப்பாடலடிகள் வழியாகத் தெரியவருகின்றது.

    இவ்வாறு முள்ளூர்கானம் சிறப்புடையதாக விளங்கியுள்ளது. இவற்றின் வழி நடுநாட்டில் இருந்த அரசுநிலைபற்றியும்,இயற்கைநிலை பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

     

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    Share
  • ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    JALJAL ENNUM

    கவியரசின் பாடல்கள் காலத்தை வென்று நிற்கக் காரணங்கள் பல உண்டு! ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடல்கள் பல தலைமுறைகளைத் தாண்டி நின்றிட கூட்டணி முயற்சிதான் அடிப்படைக் காரணமாகும். கதையின் கருவை உணர்ந்து கவிதைக்குள் அமைத்துத் தர வல்ல கவிஞர்களின் எண்ணச் சிறகுகள் எட்டிய உயரங்கள் சில சமயங்களில் கற்பனை வானத்தையும் மிஞ்சிவிடுகிற தருணங்களும் உண்டு!

    PASAMபாசம் திரைப்படத்தில் கதாநாயகன் கள்வன் பாத்திரத்தில்… கதாநாயகி… மாட்டுவண்டியில் அந்தக் காட்டுப் பாதையைக் கடந்து செல்லும்போது… கள்வனின் பிடியில் சிக்கிவிடுகிறாள். மக்கள் திலகம்தான் கதாநாயகன் என்பதால் கதாபாத்திரத்தின் போக்கும் தன்மையும் மேன்மை கொண்டதாகத் தானே அமையும். அவ்விடத்தில் இடம் பெறும் பாடல்!

    இப்பாடலுக்கு அருமையான விளக்கம் தந்தவர் திமிரியில் வாழும் மருத்துவர் இலக்கிய அன்பர்… என் இனிய நண்பர்…டாக்டர் அ.பரமேஸ்வரன் ஆவார்.

    உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து.. ஆண் தன்னிடம் இல்லாத ஒன்றைப் பெண்ணிடம் தேடுகிறான். பெண் தன்னிடம் இல்லாத ஒன்றை ஆணிடம் தேடுகிறாள். இந்த இயற்கைத் தேடலில் இருவருமே வெற்றி பெறுகிறார்கள். இதைக் காதல் என்றும் கூறுவார்கள். இங்கே கூட இதுதான் நடக்கிறது. கவிஞர்தான் அதை வித்தியாசமாக இலக்கிய நயம் கலந்து தருகிறார் பாருங்கள்!…

    அவன் தான் திருடன் என்றிருந்தேன்
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதல்முதல் திருடும் காரணத்தால்
    முழுதாய் திருட மறந்துவிட்டேன்

    இங்கே ஒரு திருட்டு.. திருட்டென்று தெரியாமலே நடக்கிறது! அதுவும் திருடப்படும் பொருளே தன்னைத் திருடும்படி கேட்கிறது. இந்த அநியாயம் வேறு எங்காவது உண்டா? அடுத்த வரியில்மட்டும் என்ன நடக்கிறது?

    அவன் தான் திருடன் என்றிருந்தேன்
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதல்முதல் திருடும் காரணத்தால்
    முழுதாய் திருட மறந்துவிட்டேன்

    என்கிற பெண்ணின் குரலில் பேதமை நயம் தெரிகிறது! பொருள்நயம், சுவைநயம் என பல்வேறு நயங்களை அபிநய சரஸ்வதி சரோஜாதேவி திரையில் தந்திருக்கிறார்!

    காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
    கையில் உள்ளதை கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்று
    கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்

    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி… இன்னும் நம் காதுகளில் ரீங்காரமாக… எஸ். ஜானகியின் குரலில்… விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவிதை வரிகளில்…

    ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சலவென சாலையிலே
    செல் செல் செல்லுங்கள் காளைகளே
    சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே…

    காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
    கையில் உள்ளதை கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்று
    கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
    (ஜல்ஜல் ஜல்)

    அவன் தான் திருடன் என்றிருந்தேன்
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதல்முதல் திருடும் காரணத்தால்
    முழுதாய் திருட மறந்துவிட்டேன்
    (ஜல் ஜல் ஜல்)

    இன்றே அவனை கைது செய்வேன்
    என்றும் சிறையில் வைத்திருப்பேன்
    விளக்கம் சொல்வதும் முடியாது
    விடுதலை என்பதும் கிடையாது
    (ஜல் ஜல் ஜல்)

    __________________________________

    திரைப்படம் : பாசம்
    பாடல்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர் : எஸ் . ஜானகி

    Share
  • துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.

    jay

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    பெரு வெடிப்பில் பிரபஞ்சம்
    பிறக்க வில்லை !
    ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி
    ஓதி வருகிறார் இன்று !
    கர்ப்ப மில்லை
    கரு ஒன்றில்லாமல்
    பிரபஞ்சம் உருவாகுமா
    வெறுஞ் சூனியத்தி லிருந்து ?
    புள்ளியாய் முதலில்
    திணிவு இருந்தது பொய்யானது !
    கருவை உருவாக்க
    எரிசக்தி எப்படித் தோன்றியது ?
    உள் வெடிப்பு தூண்டியதா
    புற வெடிப்பை ?
    பிரபஞ்சத் துக்கு முன்னிருந்தது
    புள்ளிக் கரு வில்லை !
    பேரளவுத் திணிவிலே
    சூரிய உஷ்ணத்தில்
    காலவெளிக்கு வித்தாய்
    மூலச் சேமிப்பு
    குவாண்டம் ஈர்ப்பில்
    எங்கோ ஓர்
    சூனியத்தில் நேர்ந்ததா ?
    பெரு வெடிப்பின்றி ஆதியில்
    பிரம்மா படைத்தாரா
    பிரபஞ்சத்தை ?

    +++++++++++++++

     

    Before the Big Bang -3

    புதிய கோட்பாடு சொல்வது என்ன வென்றால்,  பிரபஞ்சத்தின் வயது வரையறை இல்லாதது. குவாண்டம் யந்திரவியல் நியதி, ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி ஆகிய இரண்டும் கருமைப் பிண்டத்தைப் [Dark Matter] பற்றி விளக்க முடியவில்லை.

    சௌரியா தாஸ் [விஞ்ஞானி, அல்பெர்டா லெத்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், கனடா]

    நமது பிரபஞ்சம் பெரு வெடிப்பில் புள்ளித் திணிவிலிருந்து தோன்றத் துவங்கியது என்று நாம் குறிப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.

    ராபர்ட் பிரான்டன்பெர்கர் [அகிலவியல்வாதி மெக்கில் பல்கலைக் கழகம், மான்றியால், கனடா] 

     

    No big bang -1

     

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8Ry5BHa_oB0

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NeNqqMfH0cs

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=egY-JJRZl90

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vxbahJOxKLk

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofI03X9hAJI

    ++++++++++++++++++

    பிரபஞ்சத் தோற்றக் கோட்பாட்டில் மாறுபட்ட கருத்துகள்.

    விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் துவங்கியது, எப்போது தோன்றியது, எத்துனைக் காலம் பழமையானது, எம்முறை மூலம் உருவானது என்னும் வினாக்களுக்கு யாவரும் உடன்படும் கருத்தை இதுவரை முடிவாகக் கூற முடியவில்லை !   ஓரடர்த்தியான புள்ளியிலிருந்து உட்புறம் உப்பி, பெரு வெடிப்பில் பிரபஞ்சம் விரிந்து வருகிறது என்னும் கோட்பாடு இப்போது பலரால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.  ஆதி, அந்தமில்லா பிரபஞ்சம் என்னும் வேதாந்தக் கருத்தே விஞ்ஞானிகளிடம் இப்போது பரவி வருகிறது.  துவக்க மில்லாப் பிரபஞ்சம், பெரு வெடிப்பில் விரியா பிரபஞ்சம் என்னும் புதிய கோட்பாடுகளைக் கூறி வருபவர் இருவர்.  ஒருவர் பெயர் : சௌரியா தாஸ் [Saurya Das].  இரண்டாம் விஞ்ஞானியின் பெயர் : ராபர்ட் பிரான்டன்பெர்கர் [Robert Brandenberger]  முதல்வர் அல்பெர்ட்டா லெத்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் [University of Lethbridge in Alberta, Canada] சேர்ந்தவர். இரண்டாமவர் : மான்றியால் மெக்கில் பல்கலைக் கழகத்தைச்  [McGill University Montreal, Canada] சேர்ந்தவர்.  முதல் விஞ்ஞானி : கோட்பாட்டு பௌதிகவாதி  [Theoretical Physicist], இரண்டாம் விஞ்ஞானி கோட்பாட்டு அகிலவியல்வாதி.   [Theoretical Cosmetologist].  இருவரும் பிரபஞ்சம் ஒருகாலத்தில் மிகச் சிறிதாய், வெகுச் சூடாக இருந்திருக்கும் என்றும், வரையறையின்றி பழங் காலத்துத் தோற்றமாய் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

    2015 பிப்ரவரியில் புரிந்த புதிய ஆராய்ச்சிகள் மூலம் அவ்விரு விஞ்ஞானிகள் வெளியிடுவது இதுதான் : பெரு வெடிப்பு நியதியில் கூறப்படும் மிகச்சிறு திணிவு மிக்க பிண்டமே முதலில் வெடித்து துவக்கம் ஆரம்பமானது என்னும் கருத்து இப்போது மறுக்கப் படுகிறது !  குறைபாடு உள்ள ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி மூலம் வரும் பெரு வெடிப்பு நியதி இப்போது ஏற்றுக் கொள்ளப் படவில்லை !

    fig-1-before-the-big-bang

    “நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை !  அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவு களால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

    மார்டின் போஜோவால்டு,  (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

    “எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப் படுத்துகிறது.  துகளியல் நிலையில் (Quantum State) “பெரும் பாய்ச்சல்” மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும்.  ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதி யில்லாமை எப்போதும் இருக்கும்.  காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை மீறிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித “அகிலவியல் மறதி” (Cosmic Forgetfulness) எழுகிறது !

    மார்டின் போஜோவால்டு

     

    No big bang -3

    “ஸ்டீஃபன் ஹாக்கிங், நீல் டுராக் (Stephen Hawking & Neil Turok) இருவரும் வானியல் விஞ்ஞான நோக்குகளில் கிடைத்த எண்ணிக்கையை விட 20 மடங்கு சிறிய பிண்டத் திணிவைக் (Matter Density) கொண்ட ஒரு பிரபஞ்சத்தை ஊகித்து முன்னறிவிக்கிறார்கள்.  ஹாக்கிங் தன் போக்கில் அடிப்படைக் கணித மூலமாக அணுகி அதில் மிகையாக நம்பிக்கை வைக்கிறார்.  முதலில் அது சரியாகத் தோன்றவில்லை எனக்கு. . . . ஆனால் ஹாக்கிங் கூர்மையான சிந்தனை உள்ளவர்.  பன்முறை அவர் செய்த ஆய்வுகளில் விந்தையான முடிவுகளைக் கண்டிருக்கிறார்.  முதலில் அவை தவறாகத் தோன்றின எனக்கு !  பல தடவைகள் அவரது முடிவுகளே செம்மையானதாய்ப் பின்னால் நான் அறிந்து கொண்டேன்.

    ஆன்ரி லின்டே (Andrei Linde Pysics Professor, Stanford University)

    “பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது நாம் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதே.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

     

    No Beginning No Ed

    fig-1b-hubble-telescopes-ultra-deep-view

    “பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது.  மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது.  அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”

    ஆடம் ஃபிராங்க் (Astronomy Magazine Editor, Physicist)

    “அனைத்து அகிலவியல் உப்புதல் நியதிகளும் (Cosmic Inflation Theories) விண்வெளியின் ஒரு புள்ளியை இழுத்துக் கொண்டு அதைச் சுமார் 10^50 மடங்குப் பேரளவில் ஊதி விடுகிறது (Blows up By a Factor of p {margin:0;line-height: 1.5;unicode-bidi: embed;} body { line-height: 1.5;unicode-bidi: embed;}1050).”

    மாரியோ லிவியோ (Mario Livio)

    “பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகள் உஷ்ணத்தில் செம்மையாகச் சீர்மை நிலையடைந்து (Well Synchronized in Temperature), ஒப்புக் கொள்ளப்பட்ட பெரு வெடிப்பு மாடலை விளக்குகிறது.”

    ஷான் கார்ரல் (Sean Carroll)

     

    fig-1c-timeline-of-the-universe

    “இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க எந்த விதமான விருப்பத் தேர்வு (Choice) கடவுளுக்கு இருந்தது என்று அறிய விரும்புகிறேன்.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

     

    Big Bang Cosmology


    ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி

    பிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம்.  ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை.  அதன் தோற்றத்தைப் பற்றியும், தோற்ற மாற்றத்தைப் பற்றியும் மாற்றத்தின் பண்பாடுகள் பற்றியும் நமக்குப் பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன.  நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?  நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது ?  எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின ?  அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை !  உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை !  நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பாதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது !  ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள், கோட்பாடுகள் உறுதியற்ற ஊகிப்புகள்தான் (Speculations).

    fig-1a-cosmic-history

    பிரபஞ்சம் எப்படிப் படைக்கப் பட்டது ?  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன !  மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன !  ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த “பெரு வெடிப்புக் கோட்பாடு” (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.  பெரு வெடிப்புக் கோட்பாடை ஏற்றுக் கொண்ட பிறகு பிரபஞ்சத்துக்குத் தோற்ற ஆரம்பம் தொடங்கி காலக் கடிகார முள் நகரத் துவங்கியது.  பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது.  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன !

     

    fig-1f-content-of-the-universe

    சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அசுரப் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றி விரிய ஆரம்பித்தது.  அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்த அனைத்துப் பிண்டமும் சக்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன.  ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த யூகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது !  அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம் !  அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தோற்றத்துக்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு !

    வேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் (Bib Bounce) தற்போது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாகத் தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சிவேனியா மாநிலப் பலகலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் மார்டின் போஜோவால்டு கணினி மாடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கிறார்.

     

    fig-5-cobe-cosmic-background-explorer

    பிரபஞ்சத்தின் அரங்குகளை ஆராயும் கோப் விண்ணுளவி

    நாசா சமீபத்தில் அனுப்பிய “கோப் விண்ணளவி” (COBE Cosmic Background Explorer) பிரபஞ்சத்தின் வெளிப்புற நீட்சிகளில் உள்ள “அகிலவியல் நுண்ணலைகளை” (Cosmic Microwaves) உணர்ந்தறியச் சென்றது.  அந்த நுண்ணலைகள் பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்த ஒருமைப்பாடுடன் (Homogenity) மகத்தான முறையில் சமநிலையில் பரவி இருந்ததைக் கண்டுள்ளது.  மேலும் பிரபஞ்சம் வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து தணிவு நிலை பெற்றுத் தொடர்ந்து விரிவாகி வருவதைக் கண்டுபிடித்திருக்கிறது. விரிவடையும் போது உண்டாகும் உஷ்ண மாறுபாடுகளையும் கண்டுள்ளது.  அந்த உஷ்ணத் திரிபுகள் ஏற்ற இறக்கங்கள் பிரபஞ்சப் பெரு வெடிப்பு ஆரம்பக்கால நிலைகளை அறிய உதவுகின்றன !

     

    நாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம் (NASA Goddard Space Fight Center) தயாரித்த துணைக்கோள்தான் கோப் விண்ணுளவி.  பூர்வக் காலத் தோற்றப் பிரபஞ்சத்தின் பரவிய உட்சிவப்பு & நுண்ணலைக் கதிர்வீச்சை (Diffuse Infrared & Microwave Radiation) அளந்து உளவிடவே அது பூமியைச் சுற்றி விண்வெளிக்குப் பயணம் செய்ய 1989 நவம்பர் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது.  அதில் முக்கியமாக மூன்று கருவிகள் இருந்தன.

    1.  DIRBE – Diffuse Infrared Background Experiment : அகிலவியல் உட்சிவப்பு பின்புலக்
    கதிர்வீச்சை அளக்கும் கருவி.

    2.  DMR – Differential Microwave Radiometer : அகிலவியல் நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபாடுகளை அளக்கும் கருவி.

    3.  FIRAS – Far Infrared Absolute Spectro-Photometer : நெடுந்தூர உட்சிவப்புத் தனித்துவ ஒளிப்பட்டை ஒளி அளப்புமானி

     

    fig-1g-cobe-space-probe1

    பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன ?பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார்.  அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது.  அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது.  மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது.  அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.

     

    fig-4-dark-matter-the-elementary-particle

    முன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார்.  ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது.  அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டி யுள்ளது.  இது சற்று சிக்கலான சிந்தனைதான்.  ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் காலவெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது.  போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது.  அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது.  ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது !  ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.

     

    fig-3-in-search-of-gods-particle

    இதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது.  போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார்.  அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை.  ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    big-bang-cosmology

    குவாண்டம் ஈர்ப்பு நியதி (துகளியல் ஈர்ப்பு நியதி) என்ன கூறுகிறது ?

    கால-வெளிப் பிணைப்பு ஒற்றைப் பரிமாணக் குவாண்ட நூலிழைகளால் பின்னிய (One Dimensional Quantum Threads) ஓர் “அணு வடிவமைப்பைக்” (Atomic Geometry) கொண்டுள்ளதாகக் “குவாண்டம் ஈர்ப்பு நியதி” கூறுகிறது.  கால மணி பூஜியத்தில் பூர்வீகப் பிரபஞ்சம் முடிவில்லாமையில் புகுந்திடாது நமது விரியும் பிரபஞ்சமாகத் தாவிப் பிறந்தது.  குவாண்டம் ஈர்ப்பு நியதி அந்தப் “பெரும் பாய்ச்சலுக்கு” (Big Bounce) முன்பு சிறுத்துப் போன கால-வெளி வடிவமைப்புப் (Space-Time Geometry) பிரபஞ்சத்தைக் காட்டுகிறது.

    போஜோவால்டு மேலும் ஒரு புதிய முடிவைக் கண்டறிந்தார்.  பூர்வீகக் குவாண்ட ஈர்ப்புப் பிரபஞ்சம் தாவிச் செல்லும் பயணத்தின் போது அமைப்பு அங்கங்களில் குறைந்தளவு ஒன்று (One of the Parameters) தப்பிப் பிழைக்காமல் போகும் !  அதாவது அடுத்தடுத்துத் தாவிப் பிறக்கும் சந்ததிப் பிரபஞ்சங்கள் முன்னதைப் போல் பின்னது முழுமை அடைந்திருக்காது என்பதே அவர் மேலும் அறிந்து கொண்டது.  எப்போதும் ஒரே மாதிரி வாரிசுப் பிறப்புப் பிரபஞ்சம் தோன்றாமல் தடுக்கப்படுவதற்குக் காரணம் “அகிலவியல் மறதியே” (Cosmic Forgetfulness) என்று போஜோவால்டு கூறுகிறார்.

     

    fig-6-evolution-by-science-bible

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Big Bang Happen ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711151&format=html [பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ?]
    20 (a) COBE Space Probe to Glimpse infancy of the Universe – News from Princeton University (June 18, 2001)
    21. Dark Matter Mystery May Call for Revision of Laws of Physics (August 7, 2007)
    22. PhysOrg.com : Probing Question : What Happened Before the Big Bang ?
    23 Sceince Daily : What Happened Before the Big Bang ? (July 3, 2007)
    24 The Big Bang By : Chris LaRocco & Blair Rothstein
    25 PhysOrg.com – What Happened Before the Big Bang ? (July 1, 2007)
    26. Astronomy Magazine – What Happened Before the Big Bang ? By : Philips Plait (July 1, 2007)
    27 What Happened Before the Big Bang ? By : Paul Davis
    28 (1) How Did the Universe Begin ? (2) It Started with a Bang ? (3) Creating a Universe Creation Theory (4) Hartle-Hawking Universe Model – No End of Universe Creation Thories (5) Turok’s Inflationary Theory Work – Reforming the Inflationary Theory.  Website University of Victoria, B.C. Canada.
    29. Scientific American – Follow the Bouncing Universe By : Martin Bojowald [Oct 2008]
    30. Astronomy Magazine – Cosmos Before There Was Light – Seeing the Dawn of Time By : Adam Frank (January 2007)

    30(a) http://www.scientificamerican.com/article/rainbow-gravity-universe-beginning/  [December  9, 2013]

    31.  http://phys.org/news/2015-02-big-quantum-equation-universe.html  [February 9, 2015]

    32.  http://gadgets.ndtv.com/science/news/big-bang-may-never-happened-universe-has-no-beginning-or-end-study-659845  [February 12, 2015]

    33.  http://www.techtimes.com/articles/32659/20150214/big-bang-didnt-happen-new-theory-suggests-universe-has-no-beginning-no-end.htm  [February 14, 2015

    34.   http://www.hawking.org.uk/the-beginning-of-time.html

    35. http://www.liveleak.com/view?i=7e2_1423613281  [February 10, 2015]

    36. http://www.spacedaily.com/reports/What_Big_Bang_Universe_May_Have_Had_No_Beginning_at_All_999.html  [March 2, 2015]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (March 14, 2015)

    Attachments area
    Preview YouTube video The Big Question: How Did The Universe Begin? – Science Documentaries

    The Big Question: How Did The Universe Begin? – Science Documentaries

    Preview YouTube video Rainbow Gravity suggests our universe has NO beginning and No Big Bang

    Rainbow Gravity suggests our universe has NO beginning and No Big Bang

    Preview YouTube video Did the universe have a beginning? – William Lane Craig and Alexander Vilenkin

    Did the universe have a beginning? – William Lane Craig and Alexander Vilenkin

    Preview YouTube video The Universe Big Bang; Relativity Theory.Space-Time [ Amazing Documentary ]

    The Universe Big Bang; Relativity Theory.Space-Time [ Amazing Documentary ]

    Preview YouTube video How the Universe Works – The Big Bang, 1080p

    How the Universe Works – The Big Bang, 1080p
    Share
  • இப்படித்தான் தொடங்குகிறது …….

    எஸ் வி வேணுகோபாலன்

    அங்கே கை வைத்து, இங்கே கை வைத்து இப்போது தமிழகத்தில் தொடங்கி விட்டனர். ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போன்று அடுத்தடுத்த தாக்குதலை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர். எழுத்து, புத்தகம், இப்போது தொலைகாட்சி!

    ‘குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தாதே’ என்று ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை மிரட்ட முடிகிறது அவர்களுக்கு. அடுத்த தினம் நேரடியாக உள்ளே நுழைந்து நிருபரை அடித்து காமிராவைப் பறித்துக் கொண்டு செல்கின்றனர். மூன்றாவது வடிவம், குண்டு வீச்சு. அடுத்து, “நாங்கள்தான் செய்தோம்” என்று காலை பத்து மணி அடிக்கும்போது நீதிமன்றத்திலேயே போய்நின்று ஒப்புக் கொள்ளவும் சாத்தியமாகிறது. ஃபாசிசத்தின் உட்கூறுகள் இன்னதென்று அறியாதவர்களுக்கு செயல்வழி கற்பித்தல் மூலம் அவர்கள் விளக்க முற்பட்டிருக்கின்றனர்.

    “தாலி”யைப் பற்றி விவாதிப்பது இந்து மதத்திற்கெதிரான துவேஷம் என்று அறிக்கை விடுக்கிறார் பா ஜ க தலைவர் ஒருவர். எது துவேஷம்? திருமணத்தில் தாலி என்பது எந்தக் காலத்திலிருந்து நடைமுறைக்கு வந்தது? அதைப் பற்றிப் பேசுவது எப்படி துவேஷம் ஆகிவிட முடியும்?

    “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்ற சிவவாக்கியர் துவேஷம் செய்தவராகக் கருதப்படுகிறதா? பிரும்ம தத்துவத்தைப் படைத்த யாக்ஞவல்கியருக்கு இடம் இருக்கும் காலம் வரையில், அதைக் கேள்விக்கு உட்படுத்திய துணிச்சல் மிகுந்த பெண் ஞானி கார்க்கிக்கும் அதே வரிசையில் இடம் இருக்கத்தானே செய்யும் !

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நெற்றியில் திருமண் சார்த்தி உபதேசம் செய்து வைணவர்கள் என்று அறிவித்தார் இராமானுசர். அவரைக் காட்டி, திருவல்லிக்கேணி அறங்காவலர் குழு தேர்தல் நேரத்தில் செருப்புத் தொழிலாளிகளும் வைணவரே என்று நாமதாரிகளாக அவர்களை முன்னிறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர் பி இராமமூர்த்தியின் வாதங்களை நீதிமன்றம் ஏற்கத்தானே செய்தது?

    தன்னெதிரே வந்த ‘சண்டாளனை’, ‘விலகிப் போ’ என்று சொன்ன ஆதி சங்கரரை, எதிலிருந்து எதை விலகச் செய்வது-ஜீவாத்மா, பரமாத்மா இரண்டல்ல ஒன்றே என்று சிவனே நேரில் வந்து திகைக்க வைத்ததாக இன்றும் சொல்லப்பட்டு தானே வருகிறது?

    இப்படியான செய்திகளில், எவ்வெவை துவேஷம் உள்ளவை, எவை துவேஷம் அற்றவை ?

    அன்றாடப் பாடுகளுக்குத் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் எந்தக் காரணத்தாலும் ஒன்று திரண்டுவிடக் கூடாதென்பதைத் தவிர இப்படி மதத்தை வைத்து, சாதியை வைத்து கோடுகளைக் கிழிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு நோக்கம் என்ன?

    தாலியை வைத்து இத்தனை காலம் திரைக்கதை எழுதுவோர்தான் பெரிய பெரிய தத்துவங்களை எழுதி அலுக்க வைத்துக் கொண்டிருந்தனர். விதவைத் தாய்க்கு, மனநிலை பிறழ்ந்த ஒருவரை தாலி கட்டச் செய்த வில்லன்களை அடித்து நொறுக்கும் சின்னத்தம்பி திரைப்பட நாயகன், தண்ணீரைச் சிதறடித்து தாயின் குங்குமத்தை அழிக்கும் காட்சியில் அந்தத் தாய் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதும், தியேட்டரில் ரசிகர்கள் அவளது விதவைத் தன்மை மீட்டெடுக்கப்பட்டதற்கு விசில் அடித்து மரியாதை செய்ததும் அராஜகம் அல்லவா? பெண் கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு என்று தொடங்கி கவியரசு விளக்கம் கொடுத்து பாடல் எழுதியதும், வேறு ஓர் ஆணை படுக்கையில் ஏற்றுக் கொள்ளும் பெண், கணவன் கட்டிய தாலியைக் கழற்றி வைத்திருப்பதைப் பாராட்டும் ஒரு காமுகனும், தாலியை முன் வைத்து ஒரு பெண்ணின் முன்னாள் காதலனும், கணவனும் நடத்தும் பஞ்சாயத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு மனம் உண்டு என்பதைக் கண்டு கொள்ளாத பண்பாட்டு வெற்றிப் படமும்….தமிழில் தாலி படுத்திய பாடுகள் கொஞ்சம் நஞ்சமா?

    சாதி மறுப்பற்ற திருமணம் தான் என்றலும், எங்கள் திருமணத்தை வைதீக முறைப்படி செய்ய முடியாதென்று நான் போராடிக் கொண்டிருக்கையில் என் தந்தையை இசைவு தெரிவிக்கச் செய்ய தாலி கட்ட மட்டும் ஒப்புக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன். ஆனால் தோழர் ராஜேஸ்வரி முடியாதென்று வாதிட்டார். ‘பதிலுக்கு நானும் உங்கள் கழுத்தில் ஏதேனும் கட்டிவிடுவேன்’ என்ற அவரது வாதம் என்னைக் கவர்ந்தது. அந்தப் பக்கம் தந்தை. இந்தப் பக்கம் வருங்கால வாழ்க்கை இணை. அப்புறம், தந்தையின் மன நிறைவுக்காக தாலியைக் கட்டியபிறகு, அடுத்த சில நாட்களுக்குப் பின் அதை வேண்டாம் என்று கழற்றி எறிந்தோம். எங்கள் பெற்றோருக்கும் அது தெரியும். இருந்தாலும் தாலி கட்டிய உறுத்தல் உதற முடியாதது.

    நிஜ வாழ்க்கையில் முரண்பாடுகளும், போராட்டங்களும், பிரச்சனைகளும் சூழ்கையில், தாலி பற்றியே பேசக் கூடாதென்று குரல் எழுப்புபவர்கள் உள்ளபடியே பேச வருவதென்ன? உரிமைகள் குறித்த விவாதங்கள் எல்லாவற்றையும் அந்நிய கலாச்சாரம் என்று பேசும் இந்துத்துவ தரப்பினர், ஆணாதிக்க மன நிலையின் வேர்களைக் கூட எல்லைகளுக்கு வெளியே வீசி எறிந்துவிட முடியுமா?

    இப்படித்தான் தொடங்குகிறது இத்தகு வன்மமும், வன்முறை கருத்தோட்டமும். அது ஈவிரக்கமற்றது. அதற்கு மதம் ஒரு கவசம். ஆனால் அதன்மீதே அதற்கு பெரிய பிடிமானம் கிடையாது. வேறு யாருக்கோ, வேறு எதன் மீதோ நடக்கிறது என்று பெரும்பான்மை மக்களை விலக்கி வைக்க அவர்களுக்கு மிரட்டல் ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் கால காலமாகக் கூர் தீட்டிப் பயன்படுத்திவரும் ஆயுதம் இது. சாதிய, மத வெறித்தனத்தின் கூராயுதங்கள் இவை.

    பெருமாள் முருகன் மீது செலுத்தப்பட்டது உளவியல், கருத்தியல் வன்முறை என்றால், முருகேசன் சந்தித்தது உடலியல் வன்முறையும் சேர்த்து. வேடிக்கை பார்க்கக் கூடும் கூட்டத்தை இரத்தம் கக்க வைப்பேன் என்ற ஒற்றை வாக்கியத்தில் வித்தைக்காரனால் விரட்டி அடித்துவிட முடிகிறது. அப்போது நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம், நீதி, அநீதி எதைப்பற்றியும் நின்று நிதானித்து கேட்க ஒருவரும் அருகே நிற்பதில்லை. பாதிக்கப்பட்டவரே தனித்து விடப்படுவார்.

    ஆனால், ஜனநாயக சமூகத்தில் இந்த நடைமுறைகளை அனுமதிக்கக் கூடாது. நாஜி கொடூரங்களைக் குறித்த இலக்கியங்களில் எளிய சொற்களைக் கொண்ட கவிதை ஒன்று தலைமுறை தலைமுறையாக எல்லோரையும் ஈர்த்து வருகிற அதிர்ச்சி செய்தியைக் கொண்டிருப்பது. நிமொல்லர் என்னும் பாதிரி எழுதிய அந்தக் கவிதை வரிகள்,

    அவர்கள் முதலில்
    யூதரைத் தேடி வந்தனர்
    நான் கண்டுகொள்ளவில்லை,
    நான் யூதனில்லை

    அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தனர்
    நான் கவலை கொள்ளவில்லை,
    நான் கத்தோலிக்கன் இல்லை

    அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தபோதும்
    நான் பேசவில்லை, நான் தொழிற்சங்கவாதி இல்லை.

    பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தனர்
    நான் கேட்டுக் கொள்ளவில்லை, நான் கம்யூனிஸ்ட் இல்லை

    இப்போது அவர்கள்
    என்னைத் தேடி வந்திருக்கின்றனர்.
    எனக்காகக் குரல் கொடுக்க
    ஒருவருமே இல்லை….

    இந்தக் கவிதை விடுக்கும் எச்சரிக்கைக்கும், கருப்பொருள் கற்பிக்கும் பாடத்திற்கும் ஈடு இன்னொன்றில்லை.

    *************************

    Share