எஸ் வி வேணுகோபாலன்

அங்கே கை வைத்து, இங்கே கை வைத்து இப்போது தமிழகத்தில் தொடங்கி விட்டனர். ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போன்று அடுத்தடுத்த தாக்குதலை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர். எழுத்து, புத்தகம், இப்போது தொலைகாட்சி!

‘குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தாதே’ என்று ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை மிரட்ட முடிகிறது அவர்களுக்கு. அடுத்த தினம் நேரடியாக உள்ளே நுழைந்து நிருபரை அடித்து காமிராவைப் பறித்துக் கொண்டு செல்கின்றனர். மூன்றாவது வடிவம், குண்டு வீச்சு. அடுத்து, “நாங்கள்தான் செய்தோம்” என்று காலை பத்து மணி அடிக்கும்போது நீதிமன்றத்திலேயே போய்நின்று ஒப்புக் கொள்ளவும் சாத்தியமாகிறது. ஃபாசிசத்தின் உட்கூறுகள் இன்னதென்று அறியாதவர்களுக்கு செயல்வழி கற்பித்தல் மூலம் அவர்கள் விளக்க முற்பட்டிருக்கின்றனர்.

“தாலி”யைப் பற்றி விவாதிப்பது இந்து மதத்திற்கெதிரான துவேஷம் என்று அறிக்கை விடுக்கிறார் பா ஜ க தலைவர் ஒருவர். எது துவேஷம்? திருமணத்தில் தாலி என்பது எந்தக் காலத்திலிருந்து நடைமுறைக்கு வந்தது? அதைப் பற்றிப் பேசுவது எப்படி துவேஷம் ஆகிவிட முடியும்?

“நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்ற சிவவாக்கியர் துவேஷம் செய்தவராகக் கருதப்படுகிறதா? பிரும்ம தத்துவத்தைப் படைத்த யாக்ஞவல்கியருக்கு இடம் இருக்கும் காலம் வரையில், அதைக் கேள்விக்கு உட்படுத்திய துணிச்சல் மிகுந்த பெண் ஞானி கார்க்கிக்கும் அதே வரிசையில் இடம் இருக்கத்தானே செய்யும் !

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நெற்றியில் திருமண் சார்த்தி உபதேசம் செய்து வைணவர்கள் என்று அறிவித்தார் இராமானுசர். அவரைக் காட்டி, திருவல்லிக்கேணி அறங்காவலர் குழு தேர்தல் நேரத்தில் செருப்புத் தொழிலாளிகளும் வைணவரே என்று நாமதாரிகளாக அவர்களை முன்னிறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர் பி இராமமூர்த்தியின் வாதங்களை நீதிமன்றம் ஏற்கத்தானே செய்தது?

தன்னெதிரே வந்த ‘சண்டாளனை’, ‘விலகிப் போ’ என்று சொன்ன ஆதி சங்கரரை, எதிலிருந்து எதை விலகச் செய்வது-ஜீவாத்மா, பரமாத்மா இரண்டல்ல ஒன்றே என்று சிவனே நேரில் வந்து திகைக்க வைத்ததாக இன்றும் சொல்லப்பட்டு தானே வருகிறது?

இப்படியான செய்திகளில், எவ்வெவை துவேஷம் உள்ளவை, எவை துவேஷம் அற்றவை ?

அன்றாடப் பாடுகளுக்குத் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் எந்தக் காரணத்தாலும் ஒன்று திரண்டுவிடக் கூடாதென்பதைத் தவிர இப்படி மதத்தை வைத்து, சாதியை வைத்து கோடுகளைக் கிழிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு நோக்கம் என்ன?

தாலியை வைத்து இத்தனை காலம் திரைக்கதை எழுதுவோர்தான் பெரிய பெரிய தத்துவங்களை எழுதி அலுக்க வைத்துக் கொண்டிருந்தனர். விதவைத் தாய்க்கு, மனநிலை பிறழ்ந்த ஒருவரை தாலி கட்டச் செய்த வில்லன்களை அடித்து நொறுக்கும் சின்னத்தம்பி திரைப்பட நாயகன், தண்ணீரைச் சிதறடித்து தாயின் குங்குமத்தை அழிக்கும் காட்சியில் அந்தத் தாய் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதும், தியேட்டரில் ரசிகர்கள் அவளது விதவைத் தன்மை மீட்டெடுக்கப்பட்டதற்கு விசில் அடித்து மரியாதை செய்ததும் அராஜகம் அல்லவா? பெண் கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு என்று தொடங்கி கவியரசு விளக்கம் கொடுத்து பாடல் எழுதியதும், வேறு ஓர் ஆணை படுக்கையில் ஏற்றுக் கொள்ளும் பெண், கணவன் கட்டிய தாலியைக் கழற்றி வைத்திருப்பதைப் பாராட்டும் ஒரு காமுகனும், தாலியை முன் வைத்து ஒரு பெண்ணின் முன்னாள் காதலனும், கணவனும் நடத்தும் பஞ்சாயத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு மனம் உண்டு என்பதைக் கண்டு கொள்ளாத பண்பாட்டு வெற்றிப் படமும்….தமிழில் தாலி படுத்திய பாடுகள் கொஞ்சம் நஞ்சமா?

சாதி மறுப்பற்ற திருமணம் தான் என்றலும், எங்கள் திருமணத்தை வைதீக முறைப்படி செய்ய முடியாதென்று நான் போராடிக் கொண்டிருக்கையில் என் தந்தையை இசைவு தெரிவிக்கச் செய்ய தாலி கட்ட மட்டும் ஒப்புக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன். ஆனால் தோழர் ராஜேஸ்வரி முடியாதென்று வாதிட்டார். ‘பதிலுக்கு நானும் உங்கள் கழுத்தில் ஏதேனும் கட்டிவிடுவேன்’ என்ற அவரது வாதம் என்னைக் கவர்ந்தது. அந்தப் பக்கம் தந்தை. இந்தப் பக்கம் வருங்கால வாழ்க்கை இணை. அப்புறம், தந்தையின் மன நிறைவுக்காக தாலியைக் கட்டியபிறகு, அடுத்த சில நாட்களுக்குப் பின் அதை வேண்டாம் என்று கழற்றி எறிந்தோம். எங்கள் பெற்றோருக்கும் அது தெரியும். இருந்தாலும் தாலி கட்டிய உறுத்தல் உதற முடியாதது.

நிஜ வாழ்க்கையில் முரண்பாடுகளும், போராட்டங்களும், பிரச்சனைகளும் சூழ்கையில், தாலி பற்றியே பேசக் கூடாதென்று குரல் எழுப்புபவர்கள் உள்ளபடியே பேச வருவதென்ன? உரிமைகள் குறித்த விவாதங்கள் எல்லாவற்றையும் அந்நிய கலாச்சாரம் என்று பேசும் இந்துத்துவ தரப்பினர், ஆணாதிக்க மன நிலையின் வேர்களைக் கூட எல்லைகளுக்கு வெளியே வீசி எறிந்துவிட முடியுமா?

இப்படித்தான் தொடங்குகிறது இத்தகு வன்மமும், வன்முறை கருத்தோட்டமும். அது ஈவிரக்கமற்றது. அதற்கு மதம் ஒரு கவசம். ஆனால் அதன்மீதே அதற்கு பெரிய பிடிமானம் கிடையாது. வேறு யாருக்கோ, வேறு எதன் மீதோ நடக்கிறது என்று பெரும்பான்மை மக்களை விலக்கி வைக்க அவர்களுக்கு மிரட்டல் ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் கால காலமாகக் கூர் தீட்டிப் பயன்படுத்திவரும் ஆயுதம் இது. சாதிய, மத வெறித்தனத்தின் கூராயுதங்கள் இவை.

பெருமாள் முருகன் மீது செலுத்தப்பட்டது உளவியல், கருத்தியல் வன்முறை என்றால், முருகேசன் சந்தித்தது உடலியல் வன்முறையும் சேர்த்து. வேடிக்கை பார்க்கக் கூடும் கூட்டத்தை இரத்தம் கக்க வைப்பேன் என்ற ஒற்றை வாக்கியத்தில் வித்தைக்காரனால் விரட்டி அடித்துவிட முடிகிறது. அப்போது நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம், நீதி, அநீதி எதைப்பற்றியும் நின்று நிதானித்து கேட்க ஒருவரும் அருகே நிற்பதில்லை. பாதிக்கப்பட்டவரே தனித்து விடப்படுவார்.

ஆனால், ஜனநாயக சமூகத்தில் இந்த நடைமுறைகளை அனுமதிக்கக் கூடாது. நாஜி கொடூரங்களைக் குறித்த இலக்கியங்களில் எளிய சொற்களைக் கொண்ட கவிதை ஒன்று தலைமுறை தலைமுறையாக எல்லோரையும் ஈர்த்து வருகிற அதிர்ச்சி செய்தியைக் கொண்டிருப்பது. நிமொல்லர் என்னும் பாதிரி எழுதிய அந்தக் கவிதை வரிகள்,

அவர்கள் முதலில்
யூதரைத் தேடி வந்தனர்
நான் கண்டுகொள்ளவில்லை,
நான் யூதனில்லை

அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தனர்
நான் கவலை கொள்ளவில்லை,
நான் கத்தோலிக்கன் இல்லை

அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தபோதும்
நான் பேசவில்லை, நான் தொழிற்சங்கவாதி இல்லை.

பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தனர்
நான் கேட்டுக் கொள்ளவில்லை, நான் கம்யூனிஸ்ட் இல்லை

இப்போது அவர்கள்
என்னைத் தேடி வந்திருக்கின்றனர்.
எனக்காகக் குரல் கொடுக்க
ஒருவருமே இல்லை….

இந்தக் கவிதை விடுக்கும் எச்சரிக்கைக்கும், கருப்பொருள் கற்பிக்கும் பாடத்திற்கும் ஈடு இன்னொன்றில்லை.

*************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *