Blog

  • யாருடைய கவனக் குறைவு இது?

    பவள சங்கரி

    தலையங்கம்

    வறுமைக் கோட்டில் தவிக்கும் மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழக்கக் கூடாது, அந்த ஒரு வேளை உணவாவது அவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்ற சேவை உள்ளத்துடன் காமராசர் கொண்டு வந்தது மதிய உணவுத் திட்டம். பின் அது வாரத்திற்கு ஒரு முட்டையுடன் சத்துணவுத் திட்டமாக அனைத்திந்திய அளவில் கொண்டுவரப்பட்டது. குழந்தைச் செல்வங்களுக்கு உணவு வழங்கப்படும்போது இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான இடத்தில் சுத்தமான குடிநீரும், சத்தான உணவும் கொடுக்க வேண்டியது அவசியம். பணியாட்களும் உண்மையான அக்கறையுடன், கடமையுணர்வுடன், தங்கள் குழந்தைகளைப்போல எண்ணுபவர்களாக அமைதல் அவசியம். அப்படி இல்லாதபட்சத்தில் பால்மணம் மாறாத அந்தக் குழந்தைகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவித்துவிடுகிறது. இதற்கு உதாரணம்தான் சமீபத்தில் நடந்த பெருங் கொடுமை. ஆம் 23 குழந்தைகளை ஒரே நேரத்தில் உயிரிழக்கச் செய்த நெஞ்சம் பதறும் சோகம்.

    பீகார் மாநிலத்தின் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி எனும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கின்றனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உணவில் ‘மோனோக்ரோடபஸ்’ என்ற இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்தின் படிமங்கள் இருந்தது தடயவியல் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி குழந்தைகளின் உயிரைப் பலி வாங்குவது கொடுமையான செயல், மன்னிக்க முடியாத குற்றமும்கூட. இந்த விசயத்தில் உடனடியாக செயல்படாமல் உளவுத்துறை மெத்தனம் காட்டுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் நம் முதலமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லதொரு திட்டமான ‘அம்மா உணவகத்திட்டம்’ இது போன்று எந்த பிரச்சனைகளும் வராமல் கவனமாகச் செயல்படக்கூடிய வகையில் சரியான தலைமை அமைவதும் அவசியம். பல நல்லத் திட்டங்கள் ஒரு சில அலுவலர்கள் அல்லது அதிகாரிகளின் கவனக் குறைவால் சிதைந்து போக அனுமதிக்கக் கூடாது.

    இந்த விசயத்தில் பள்ளி நிர்வாகத்தை மட்டும் குறை கூறுவதைவிட, குழந்தைகளின் பெற்றோர்களாவது கவனம் செலுத்தியிருக்கக் கூடாதா என்று எண்ண வேண்டியதாகிறது. பல பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று விட்டுவிடுகிறார்கள். மற்றபடி பெற்றோர், ஆசிரியர் சந்திப்பிற்கு அழைத்தாலும் வருவதில்லை. தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியாவது பெற்றோர்கள் அவ்வப்போது பள்ளியில் நடக்கும் சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். சில பெரிய தனியார் பள்ளிகளில் கட்டாயப்படுத்துவதால் எப்படியோ பெற்றோர் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் இது போன்ற கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால் அதற்கு அவசியம் இல்லாமல் போகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு பள்ளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதற்கான சரியான செயல் திட்டத்தை உருவாக்கி அதை கடைப்பிடிக்க வேண்டியது இப்போதைய உடனடித் தேவை. இதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டியதாகும். காரணம், இத்தனை கலவரம் நடந்து கொண்டிருக்கும் இதே வேளையில் உத்திர பிரதேசத்தில் ஒரு அரசு பள்ளியில் ஒரு குழந்தையின் தட்டில் போட்ட சாப்பாட்டில் ஒரு தவளை செத்துக் கிடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போது உள்ளக் கொந்தளிப்பே ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு பிரபல பள்ளியில் ரஞ்சன் என்ற சிறுவன் நீச்சல் குளத்தில் இறந்ததும் இது போன்றே கவனக் குறைவான செயலால்தான்.

    பீகாரில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் கிட்டத்தட்ட 1.5 கோடி சிறார்கள், இந்த சத்துணவை நம்பியே பள்ளிக்கு வருகிறார்கள். கிட்டத்தட்ட 70,000 பள்ளிகளில் மதிய உணவு போடுகிறார்கள். தமிழ்நாட்டில் 53.5 இலட்சம் சிறார்கள் இதனால் பயன் பெறுகிறார்கள். இனி இது போன்றதொரு அவல நிலை எக்காரணம் கொண்டும் வரக்கூடாது என்பதே பொது மக்களின் வேண்டுதல்களாக உள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாதுகாப்புப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவ்வப்போது சத்துணவுக் கூடங்களை கண்காணித்து வருவதும் அவசியமாகிறது.

    2014 தேர்தல் திருவிழாவிற்குக் கட்டியங்கூறி தேர்தல் பணிகளை ஆரம்பிக்கின்றனர் தேர்தல் அதிகாரிகள். பத்திரிக்கைகளும் தங்கள் பங்கிற்கான பணிகளைத் துவக்கிவிட்டன. ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்வதையே முக்கியப்பணியாகக் கொண்டு அதற்காகவே கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் குழந்தைகள் நலனையோ அல்லது பொது மக்கள் நலனையோப் பற்றி கவனம் செலுத்த ஒருவருக்கும் நேரம் இல்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது. தங்களின் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் அரசியல்வா(வியா)திகளை என்ன சொல்ல முடியும்?

    Share
  • பெயரற்ற பிரியம்

    தி. சுபாஷிணி

    வழக்கத்திற்கு மாறாக சுந்தரம் பெரியப்பாவின் வீடு மிகவும் சுத்தமாக, பிரகாசமாகத் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு. பெரியப்பாவின் வீடு இரு வாசல்களுடன், மூன்றடி உயரத்தில் காம்பவுண்ட் சுவர் கொண்ட வீடு.  வீட்டின் முன்னும் பின்னும் மரங்களும் செடிகளும் சுதந்திரமாய் வளர்ந்திருக்கும்.  கொடுக்காய்ப் புளி மரத்தின் இளஞ்சிவப்புக் காய்களுக்காக வரும் கிளிகள் சந்தோஷமாய் வந்து போகும். வாதாமரங்களில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும். காகங்களின் கூட்டங்கள் பெரியப்பாவிற்கு காலத்தைக் கூறிக் கொண்டிருக்கும்.  வீடு சுற்றிலும் பழுப்பு இலைகளும் காய்ந்த பூக்களும், கனிகளும் கலந்து கிடந்து ஒரு தனி அழகை அளித்துக் கொண்டிருக்கும்.

    ஆனால் இன்று…! இருவாசல்களும் அழகாய்ப் பெருக்கிக் கோலமிட்டிருந்தது. இரண்டாவது வாசல் கதவு திறந்திருந்தது. அதன் வழியே சூரியன் தாராளமாகச் சென்று கொண்டிருந்தான். அன்றைய தினம் காலை வெய்யில் வீட்டையே பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. சுப்ரமணியம் ஒரு கணம் எல்லாவற்றையும் நின்று அனுபவித்துவிட்டு, பெரியப்பாவின் வீட்டிற்குள் நுழைந்தான். அன்று வந்த தினசரிகள் அழகாய் மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெரியப்பாவைக் கூப்பிட யத்தனித்தான் சுப்ரமணியம்.

    அதற்குள், “அடடே! சுப்ரமணியமா? வாப்பா! வா! நீ வந்து பல நாட்கள் ஆகிவிட்டனவே!” என்று கூறிக் கொண்டே அவனுக்கு ஒரு நாற்காலியைப் போட்டுவிட்டுத் தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டார் சுந்தரம்.

    “ஆமாம் பெரியப்பா! கிட்டதட்ட இரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இங்கு வந்து, வருடக் கடைசியல்லவா! ஆடிட்டிங்கு ஒவ்வொரு ஊராய்ப் போனதில் நாட்கள் கடந்ததே தெரியவில்லை பெரியப்பா! நேற்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் வள்ளி தான் உங்களை உடனே பார்த்து வருமாறு கூறினாள். அவளுக்கும் இரண்டு சிறுகுழந்தைகளை வைத்துக் கொண்டு, உங்களைப் பார்க்கவே வரமுடியவில்லையாம். மிகவும் வருத்தப்பட்டாள் பெரியப்பா!  சின்னவனுக்கு உடம்பு இலேசாக சுரம் போலிருக்கு இல்லாவிட்டால் அவளும் உங்களைப் பார்க்க என்னுடன் வந்திருப்பாள்” என்று மனம் வருந்திக் கூறினான்.

    “அப்புறம்! எப்படிப் பெரியப்பா இருக்கிறீர்கள்!” என்று சுப்ரமணியம் வினவ,
    “அதுதான் நீ வந்துட்டாயே, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று பெரியப்பா சொல்லி முடிப்பதற்குள், ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியொருத்தி நல்ல வாசனையான மோரைக் கொணர்ந்து வைத்தார்கள்.

    அந்த இளம் வெய்யில் நேரத்திற்கு அது மிகவும் இதமாக இருந்தது சுப்ரமணியத்திற்கு. அவனுடைய மனம் இந்த பெண்ணின் இருப்பை இரண்டாவது அதிசயமாய்ப் பார்த்தது. சுந்தரம் பெரியப்பாவின் வீட்டுப் பிரகாசத்திற்குப் பொருள் புரிந்துவிட்டது.

    சுந்தரமும், சுப்ரமணியம் மோர் குடிக்கும் வரைக் காத்திருந்தார்.  பின், ஊர் நிலவரம், குடும்ப நலம், அலுவலக சூழ்நிலை, அரசியல் என்று பேச்சு போய்க் கொண்டிருந்தது. சுப்ரமணியத்திற்கு செல்வி ஒரு சில சாமான்கள் மதிய சாப்பாடு தயாரிக்க வாங்கிவரச் சொன்னது நினைவுக்கு வரவே, சுப்ரமணியம் பெரியப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். சுந்தரமும் வாசல்வரை அவனை வழியனுப்பினார். சுந்தரமும் மோர் தந்த மகராசியை அறிமுகப்படுத்தவில்லை,  சுப்ரமணியமும் அவரிடம் கேட்வில்லை. இயல்பாகவே, சுப்ரமணியத்திற்கு தனக்கு எவ்வளவு நெருக்கமாய் இருந்தாலும் அவர்கள் விஷயத்தில் தானாகப் போய் எதுவும் கேட்கமாட்டான்.  அவர்களாகச் சொன்னாலும் கேட்டுக் கொள்வதோடு சரி. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு என்று தெரிந்து இருப்பவன் சுப்ரமணியம்.

    சுப்ரமணியம் வந்து போனதிலிருந்து சுந்தரத்திற்கு அவனது நினைவாகவே இருந்தது. தன் நாற்காலியில் வந்து அமர்ந்து தினசரியை கையிலெடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார்.  அவரது நினைவுகளும் பக்கம் பக்கமாய் திரும்பத் தொடங்கின.

    கல்லூரிப் படிப்புத் தொடங்கும் காலத்தில், சுப்ரமணியத்தின் சகோதரர்கள், நண்பர்கள் அனைவரும் ஸயின்ஸும் மேத்ஸும் எடுத்துப் படித்தனர். சுப்ரமணியம் மட்டும், சுந்தரம் கூறினார் என்பதற்காக ‘காமர்ஸ்’ எடுத்துப் படித்தான்.  அவனுக்கு அந்தப் பெரியப்பாதான் ரோல் மாடல். கல்லூரிக்கு செல்லும் நேரங்களைவிட்டால், மீதி நேரங்கள் எல்லாம் இவர் வீடே கதியென்று கிடப்பான். சுந்தரத்தின் கிளையண்ட்ஸ் எல்லோரும் இவனது நண்பர்கள். வசந்தா பெரியம்மா இவனுக்கு அம்மாவிற்கும் மேல் என்றுதான் கூற வேண்டும்.

    அவன் வீட்டிலிருந்து ஆள் வந்தால்தான் இவனே தன் வீட்டிற்குக் கிளம்புவான். அதுவும் மனசே இல்லாமல்தான்.  பெரியப்பாவின் வழிகாட்டுதலில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஆடிட்டர் தேர்விலும் வெற்றி பெற்று பெயர் சொல்லும்படியான ஆடிட்டராகி விட்டிருந்தான் இன்று. சுப்ரமணியத்திற்கு, வசந்தா பெரியம்மாவின் உறவுக்காரப்பெண் செல்வியை மணம் முடித்து வைத்ததும் சுந்தரம் பெரியப்பா தான். இதில் சுப்ரமணியத்திற்கு பெருமையெனில், அவனது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி.

    காலத்தின் வேகத்திற்கு வசந்தா பெரியம்மாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. சுப்ரமணியம் தன் கணவரைப் பார்த்துக் கொள்வான் என்னும் நம்பிக்கையில் விரைவில் சிவபதம் அடைந்து விட்டாள். அவளது நம்பிக்கையை இன்றளவும் சுப்ரமணியம் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். சுந்தரம் பெரியப்பாவின் சொத்து விஷயங்கள், வரவு செலவு, வரி கட்டுதல் போன்ற வெளி வேலைகள் முழுவதும் சுப்ரமணியத்தின் கவனிப்பில்தான் நடந்து வருகின்றன.

    பெரியப்பாவின் தேவைகள் அனைத்தும் அவர் நினைக்குமுன் அவர்முன் வந்து நிற்கும். இருபது பேர்கள் கொண்ட கம்பெனியை நடத்துகின்றான் சுப்ரமணியம். அதனால் பெரியப்பாவின் வேலைகளைக் கவனிப்பதில் சிரமமில்லை.  மாறாக மிகவும் சந்தோஷமாக செய்வான் சுப்ரமணியம். இம்முறைதான் இவ்வளவு இடைவெளி விழுந்து விட்டது. இருப்பினும் அவரது தேவைகளை அவனது கம்பெனி ஆட்கள் கவனித்து வந்தார்கள். அவனது நினைவு-களில் எப்போதும் பெரியப்பா இருப்பார்.  அவர்களுக்கிடையில் ஒரு தோழமை இருந்து வந்து கொண்டிருக்கிறது. அவரது தனிமையைப் பற்றி பலமுறை விவாதித்திருக்கின்றனர். தன்னால், தன் குடும்பத்தால் அதை நிரப்ப முடியுமா என்றெல்லாம் யோசித்து இருக்கின்றான்.

    இந்த சுப்ரமணியத்திற்காக ஒருநாள் தன் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காத்திருக்கிற சமயம், காம்பவுண்ட் வாசல் கதவு அருகில் நிழல் தட்டியது.  சுப்ரமணியமாகத்தான் இருக்கும், வேறு யார் என்னைத் தேடி இப்பொழுது வரப்போகிறார்கள் என சுந்தரம் தன் அருகில் இருக்கும் நாற்காலியைச் சரியாகப் போட்டார். கதவு திறக்கும் சப்தம் மெதுவாக கேட்டது. சுப்ரமணியம் திறந்தால் இப்படி இருக்காதே என தலையை நிமிர்த்தி வாசல் பக்கம் பார்த்தார்.

    ஒரு பெண்மணி இவரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

    இருந்தும் இல்லாத வெளிச்சத்தில் அவளது நிதானத்தையும் தெளிவான ஒரு முடிவோடு நிற்பதையும் சுந்தரத்தால் உணர முடிந்தது. அவள் குட்டையில் சேர்த்தியில்லை. நெட்டையென நெடுமூச்சு விட இயலாது. நாற்பது வயது தக்க உடல் அமைப்பு. வயதின் காரணமாகவோ இல்லை வாழ்க்கை அனுபவத்தினாலோ அவள் வாய்மொழியில் ஒரு கனிவு ததும்பி இருந்தது. ரொம்ப அழகு என தூக்கிக்கொண்டாட முடியாவிட்டாலும் அழகற்றவள் என ஒதுக்கிட இயலாது. இந்த நிலையே அவர் வயது தந்ததாகத்தான் இருக்க வேண்டும். அந்த குறைந்த ஒளியிலும் அவரது முகம் துலக்கி வைத்த வெண்கலச் செம்புபோல் தோற்றமளித்தது-. அவள் நெற்றியிலிருந்த திலகம் கறுப்பா சிவப்பா என அறிய முடியவில்லை சுந்தரத்திற்கு. அவள் அள்ளி முடித்த கூந்தல், ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் அவளைக் காட்டியது. இவையெல்லாம் க்ஷண நேரம் அளந்ததுதான்.
    சுந்தரம் தான் மௌனத்தைக் கலைத்தார்.

    “என்ன தாயி! யார் வேண்டும்! இந்தா இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்” என சுப்ரமணியத்திற்காக போட்ட நாற்காலியில் அவளை அமரச் செய்தார்.

    “ஜயா! நான் இந்த ஊருக்குப் புதுசு. இந்த ஊர் லைப்ரரி ஐயா தான் நான் தங்குவதற்கு இடம் தேடி அலைந்தபோது உங்களைப் பார்க்கச் சொன்னார். உங்கள் வீட்டில் ஒரு பகுதி காலியாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் வாடகைக்கு விடுவீர்களா என்று தெரியாது. இதுபற்றி உங்களிடமே விசாரித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார்” என்று சிறிது நிறுத்தினாள் வந்தவள்.

    “ம்…ம்… அப்படியா? ஆமாம். நான் ஒருபோதும் அறை வாடகைக்கு விடனும்னு நினைக்கலைதான்.  சரிதாயி! எவ்வளவு காலம் வேண்டுமோ உன் விருப்பம்போல் தங்கிக்கொள்.  உன்னிடம் வாடகை வாங்கி நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதோ?  அந்த சுவற்றின் ஆணியில் சிவப்பு நாடாவில் தொங்குகிறதே, அதுதான் அந்த வீட்டு திறவுகோல். ம்…ம்.. வசந்தா போனதற்கப்புறம் அந்த கதவையே திறந்ததில்லை. ம்.ம்.. போய்ப்பாரு தாயி. வசதிப்பட்டால் எனக்கொரு ஆட்சேபமில்லை” என்றார் சுந்தரம்.

    இவள் யார்?  எந்த ஊர்! எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறாள்! இவள் உறவு எங்கிருக்கின்றது,  வேண்டாம் என்று உறவை விட்டு விலகி வந்திருக்கிறாளா? இல்லை உறவு அற்றுப்போய் கால் போன வாக்கில் இங்கு தங்கி விட்டாளா! & இவற்றில் ஒன்றைக்கூட சுந்தரத்திற்கு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவள் கேட்டாள், இவர் இடம் கொடுத்து விட்டார் அவ்வளவுதான்.

    சுப்ரமணியம் இனிமேல் வருவாளா? என்ற யோகாவில் ஆழ்ந்தார் சுந்தரம். பக்கத்து வீடு பெருக்கித் துப்புரவு செய்யும் சப்தம் கேட்டது. கம்மென்று மின்னொளி பாய்ந்ததை உணர்ந்தார்.  ஆம், பக்கத்து வீடு மஞ்சள் ஒளியில் மிளிர்ந்தது. அவ்வொளி இவரது அகத்தின் ஒளியாய் பிரகாசித்ததை உணர்ந்தார். அவருக்கு இது மிகவும் வியப்பை அளித்தது. ஒன்றும் தோன்றாமல் அப்படியே அந்த மின்னொளியின் மஞ்சளில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார்.

    பக்கத்து வீட்டிலிருந்து அடுப்பெரியும் ஓசையும் வாசனையும் வந்தது. வசந்தா இறந்து போனதற்கப்புறம் இந்த வீட்டில் அடுப்பு பற்றவைக்கவே இல்லை. பல வருடங்களுக்குப்பின் வந்த இந்த அடுப்பின் மணம் தன் தாயை, தன் தாரத்தை அவரிடம் அழைத்து வந்தது. அன்பை அள்ளி அள்ளி இவர் மீது வைத்தாள் தாய். அரவணைத்து அத்துணை சந்தோஷத்தையும் அளித்தாள் வசந்தா. ஒருநாள் கூட இவ்வீட்டை விட்டு இவர் பிரிந்து இருந்தது இல்லை. பிறந்தது முதல் இவ்வீட்டின் வாசனையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மெல்ல மெல்ல ஒரு காரமான இனிமையான வாசனை வீட்டில் பரவி ஆக்கிரமித்தது.

    ஐயா! எனக் குரல் வந்த திக்கில் தலை திருப்பினார்.  வந்தவள் தான் அழைத்தது.
    வீட்டிலிருந்து ஸ்டூல் ஒன்றை அவர் முன் இட்டாள். சொம்பு நீரைக் கொடுத்து கைகழுவுமாறுக் கூறினாள். கமகமவென உப்புமாவும் தேங்காய்ச் சட்டினியும் ஒரு தட்டிலிட்டு அந்தஸ்டூலில் வைத்தாள்.

    சுந்தரத்திற்கு இது கனவா! நனவா என்று புரியவில்லை. ஆனால் அந்த மணத்தின் அழைப்பால் அவளிடம் ஒரு மறுப்பும் சொல்லாமல், இவள் என்னவோ காலம் காலமா இவருக்கு பரிமாறிக் கொண்டிருப்பவள்தான் என்கிற மாதிரி சாப்பிடத் தொடங்கினார். உப்புமா அருமையாக இருந்தது. இந்த உப்புமாவை இவ்வளவு அருமையாக செய்ய முடியுமா என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள்.  தாயின் ருசியும் தாரத்தின் மணமும் அந்த உப்புமாவில் கலந்து, அவரைக் கரைத்து விட்டது.

    அந்தக் கணம் முதல் சுந்தரம் வீடு பெண்ணால் பூவாய் மலர்ந்தது. வீடு முற்றமும், கொல்லைப் புறமும் திருத்தி நேர்த்தியாய் மாறியது-. வீட்டிற்குள் ஒவ்வொரு பொருளும் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு, அந்த வீட்டின் எழிலைப் பேரெழிலாக்கி விட்டன.

    பக்கத்து வீட்டிற்காக வந்தவள் மெள்ளமெள்ள முழு வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டாள்.  சுந்தரத்தின் தேவைகள் சரியான நேரத்தில் சரியானபடி கவனிக்கப்பட்டு வந்தன.

    எல்லாவற்றையும் அவளே எடுத்துச் செய்யத் தொடங்கி விட்டாள். இருவருக்கும் பேச்சு, உரையாடல் சில சொற்கள் தாம் இருக்கும். ஒருவருக்கொருவர் மீது அக்கறை அதிகமாக இடம் பெற்றது.  நாட்கள் மாதமாகியது.  அப்படியும் சுந்தரம் அவளிடம் அவள் யார் என்று கேட்கவில்லை.
    இருவாசல் வீடு மீண்டும் ஒரு வாசலாகியது. பக்கத்து வீட்டில் கோலமிடுவதோடு சரி.  மற்றபடி புழக்கமெல்லாம் பிரதான வாசல் மூலமாகவே இருந்தது. இந்த ஒரு மாத காலமும் சுந்தரத்திற்கு தனிமை கழன்று போய் இருந்தது. ஒரு புது உற்சாகம் பிறக்கத் தொடங்கியது. ஆனால் இன்னமும் அவள் பெயரை அவள் கூறவில்லை, இவரும் கேட்கவில்லை.

    இருவர் மனத்தின் இடைவெளி குறையத் தொடங்கியது. இருவரின் தனிமை தணிந்தது. அவளும் சந்தோஷத்தில் பூரித்துப் போனாள். ஏதோ அவள் வாழ்வு இங்கு அர்த்தமானது போல் மகிழ்ந்து இருந்தாள். உள்ளங்களிடையே இடைவெளி இல்லாதபோழ்து, பிற விஷயங்கள் ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அன்று இரவு இதன் பொருளை இருவருக்கும் உணர்த்தியது. காலை சுந்தரம் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, காபியைக் கொணர்ந்தாள். அதன் மணத்தில் அவள் மனமும் மணந்தது. காபியை சுந்தரம் எடுத்து சுவைத்தார். அது கசப்பும் இனிப்புமாக புதிய  சுவையில் இருந்தது. அவர் நிமிர்ந்து பார்த்தபோது அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தது. ஒரு கணம் இருவர் பார்வையும் ஓரிடத்தில் நின்று நிலைத்தது. இருவர் வயது, இருவர் நிலை தாண்டி நின்ற நிலையும் அதை உணர்த்தியது. அதில் அவள் தெளிவைக் கண்டு நிலை கொண்டது போல் இருந்தது.

    சுந்தரத்திடமிருந்து காபி டம்ளரை வாங்கிச் சொன்றாள் அவள். அப்போது மேசையின் மீது ஒரு காகிதம் பறந்து அவரது மடியில் விழுந்தது. அது யாரோ எழுதிய கவிதை:

    அவன்:
    சொப்பனத்தில் வந்து
    சோதனைகள் செய்தால்
    எப்படித் தாங்குவேன்
    என் இனியவளே!

    அவள்:
    அப்படித்தான் செய்வேன்!
    அதில் என்ன குறை கண்டீர்?
    இப்படியே இருக்கட்டும்
    என்றும் நம் உறவு.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 82 (29.07.13)

    மலர் சபாpicture 82

    யாம் கூடி ஊடி இருந்த காலத்து
    அந்திமாலை வந்தால்
    பிரிவாற்றாமையால் வருந்தி
    காமநோய் கொள்வேன்
    என்றறிந்தும் கூட
    என்னை எள்ளியாடும் பொருட்டு
    அவள் தன் கிளி மொழிகளையும்
    அன்னத்தின் மென்னடையையும்
    களிப்புடைய மயில் போன்ற சாயலையும்
    மறைத்து வைத்து

    வேல் போன்ற நெடிய கண்களையுடைய
    ஏவல் பெண் போன்ற உருவம் புனைந்து
    தனித்து வந்து என் முன் நடிப்பாளே…
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த உள்வரி.

    சிலம்பு வாய் விட்டுச் சிணுங்கவும்
    மேகலை அசைந்து ஒலிக்கவும்
    அணிகலன்கள் புனையும் அளவு
    இருந்தும் இல்லாத இடையுடன்
    நடந்து வருகின்ற அவள்
    என்மீது காதல் கொண்டவள் போல்
    என்னையே பார்த்திடுவாள்.

    அவளை நான் பிரிந்து வருந்துவதை
    அறிந்திருந்தும் கூட
    என்னுடன் இணைந்திருக்காமல்
    புறத்தே நின்றிருப்பாளே……
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த புறவரி.

    பூமாலை, குழல், தாதுக்கள் சேர்ந்த கூந்தல்
    ஒற்றை வட முத்து மாலை
    அழகிய மார்புகள் இவைகளின் சுமையால்
    வருந்துகின்ற மின்னல் போன்ற
    இடையாள் அவள்
    நல்ல நெற்றியை உடையாள்
    என்னருகேதான் வாராது
    வாயில் புறம் வந்து நிற்பாள்.
    என் காம வேட்கையை
    ஏவல் மகளிர் வாயிலாகக்
    குறிப்பால் செய்தியாக
    உணர்த்திய போதும்
    அச்செய்தி மொழியைப் புரிந்து கொள்ளாது
    வேறு பொருள் கொண்டவள் போல்
    அழகிய கூந்தல் கொண்ட அவள்
    தளர்ந்த மேனியள்
    போலத்தான் நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த கிளர்வரி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 78 – 95
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 96 – 101
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    http://puthu.thinnai.com/?p=18576

    Share
  • வார ராசி பலன்!…29-07-13 – 04-08-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:  மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், தங்கள் செயலில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும். வியாபாரிகள் புதியவர்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும் முன் தகுந்த ஆலோசனை செய்வது அவசியம். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலையான வரவிற்கான வழி வகைகளை உறுதி செய்துகொள்வார்கள். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் இருக்க, சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். விலை உயர்ந்த சாதனங்களை கையாளும் போது கவனமாக இருந்தால், பணியாளர்களுக்கு மன உளைச்சலும், வீண் செலவுகளும் வராமலிருக்கும்.
    ரிஷபம்: சுய தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர் அதிகரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்கு கடினமான முயற்சிக்குப்பின் சில காரியங்கள் பலிதமாகும். எனவே வாக்குறுதிகளை கொடுக்கும் முன் யோசனை செய்யுங்கள். கலைஞர்கள் மேற்கொள் ளும் வெளி நாட்டு பயணம் அவர்களின் தகுதிக்கான பரிசாய் இருக்கும்.மாணவர்கள் வீீண் புரளிகளை நம்பி செயல்பட வேண்டாம்.

    மிதுனம்: வியாபார வட்டத்தில் புழங்குபவர்கள் சொல்லோடு தங்கள் செயலும் இணைந்தி ருக்குமாறு பார்த்துக் கொண்டால், நல்ல பெயர் நிலைத்திருக்கும். நீங்கள் நல்லது சொன்னா லும் அது மற்றவர்க்கு தப்பாய்த் தோன்றும் என்பதால், பெண்கள் இயன்ற வரை மௌனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் பணிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வது புத்திசாலித்தனம். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்குங்கள். மன அளைச்சலும், கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் நேரம் தவறாமை யைக் கடைபிடித்தால், பல சலுகைகள் வந்து சேரும். பணியில் உள்ளவர்கள், கொடுக்க கணக்கு வழக்குகளை கவனமாய் சரிபார்த்தல் அவசியம். .

    கடகம்: மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது. பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரச்னைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டு பெற வேண்டியிருக்கும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடா மல் இருந்தாலே , பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும்.

    சிம்மம்: .மாணவர்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு செல்வர். பெண்கள் தங்கள் குடும்ப ஒற்றுமையை பிறர் குலைக்க இடம் கொடுக்க வேண்டாம். முதியவர்கள் எலும்புகளின் பலம் குறையாமல் பார்த்துக் கொண்டால், வேலைகளை சோர்வின்றி செய்யலாம். வியாபாரிகள் புது திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டால், அதிக லாபம் கிட்டும். கலைஞர்கள் தேவையற்ற செலவுகளைச் சுருக்கினால், பொருளாதாரம் கையை க் கடிக்காது. பொது வாழ்வில் இருப்போர்கள் பொறுப் புணர்ந்து செயல்படு பவரிடம் பணிகளைக் கொடுத்தால் வெற்றி உங்களுக்கே!

    கன்னி: பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மற்றவருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்து விடும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பணப்பற்றாக் குறையை சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும் நிலை இருப்பதால், வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசிய மாகும்.மாணவர்கள் பல் மற்றும் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் சீராக இருக்கும் .

    துலாம்: இல்லற இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். அலுவலகத்தில் நிலவும் போட்டியை சமாளிக்க அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும்.வியாபாரிகள் சலுகைகளையும், வாய்ப்புகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ள, பொறுமையைக் கடைபிடியுங் ள்.வழக்கு விவகாரங்களில், நேரடி கவனம் செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புக்கள் கூடுதலாகும். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம்.

    விருச்சிகம்: இயந்திரங்களை இயக்குபவர்கள், தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நலம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் , குடும்ப அமைதிக்கு பங்கம் நேராதவாறு திட்டமிட்டு பணிகளை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.அமைதியான சூழலில் அநேக பணிகளை முடிக்க முடியும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்துகொண்டால்,உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் நேராது. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க்க  எதிலும் நிதானமாகசெயல்படுவது அவசியம்.

    தனுசு: கலைஞர்கள் திறமையுடன் செயல்பட்டுவந்தால், அதற்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், அநாவசியத் தொந்தரவுகள் அருகே வாராது. வியாபாரிகள் வாகனங்களுக்குரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்தி விட்டால், தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உயர்பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்கு பிடித்த மாற்றங்களை செய்ய சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும்.

    மகரம்: வியாபாரிகள் வேண்டிய நன்மைகளையும், சலுகைகளையும் பெற நேர் வழியில் முயற்சி செய்வது நல்லது. மேலும் உங்களின் சரக்குகளுக்குத் தேவையான பாதுகாப்பைப் பலப்படுத்துவது அவசியம்.. பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்களை பத்திரமாக வைப்பது அவசியம். மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரைப் பெறுவது எளிதாகும். கலைஞர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும்.

    கும்பம்: வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்கு தேவையான பணத்தை ஒதுக் கிவிட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம்.பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.அதிகாரி ளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகள் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து கொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். பங்குச் சந்தையில் அதிக பணம் முடக்க வேண்டாம்.

    மீனம்: மாணவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட முயல்பவர்களின் சகவாசத்தைத் தவிர்த்தால், நல்ல நிலையை அடையலாம்.பொறுப்பில் இருப்பவர்கள் எந்த இடத்திலும்பணிவாகப் பேசுவது நல்லது. கலைஞர்கள் எந்த சூழலிலும், உறுதியான மனத்துடன் செயல்பட்டு வந்தால், எல்லாம் நலமாகவே முடியும். பெண்கள் வீண் விரயத்திற்கு வழி கோலும் செலவுகளை சுருக்கிக் கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு என்பது இராது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டியவாரமிது. சுய தொழில் புரிபவர்கள் எதிலும் அகலக் கால் வைக்காதிருப்பது நல்லது.                                                                                                                       

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி – 1)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    Alexander-The-Great-1

                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

     

     jhelum“இது நதியா அல்லது கடலா’’ என்ற ஐயப்பாடு எழும் அளவில், அகண்ட ஜீலம் நதி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த்து. பருவக்காற்றினால் உந்தப்பட்டு அடாது கொட்டித்தீர்க்கும் மழை அந்த சிந்து மஹாநதியின் உபநதியை மேலும் மேலும் வெள்ளப்பெருக்கில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. உச்சிப் பொழுதாக இருந்தாலும் கார்மேகக் கூட்டம் வானத்தையே மூடிவிட்டதால் இயற்கை வெளிச்சம் வெகு குறைவாக இருந்தது. ’சல…சல..’. என்ற பலத்த அரவத்துடன் அலைமோதும் வெள்ளம், ‘விர்…விர்…’ என்று வீசும் அதிவேகக் காற்றின் பேரொலி, மற்றும் வான்முகில்களின் உருமல் அந்த பிராந்தியத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.

    அத்தகைய கண்கொள்ளாக் காட்சியைத் தனது போர்க் கூடாரத்திலிருந்து வெளிவந்து அந்த மழையினூடே நனைந்து கொண்டே ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான் மாசிடோனிய மாமன்னன் அலெக்சாண்டர். ஜீலத்தின் கிழக்குக் கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பே பவுரவ நாட்டு மன்னன் புருஷோத்தமனுடன் நடந்து ஓய்ந்திருந்த போரில் அந்த யவன மன்னன் உடலை சிராய்த்திருந்த விழுப்புண்களின் வலியைக்கூட  ஓரளவுக்கு அக்காட்சி மறக்கச் செய்தது.

    ‘ஆஹா, எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ஹைடஸ்பெஸ்!**. இந்த உபநதியே இப்படியிருந்தால் இண்டஸ் (சிந்து மாநதி) எவ்வளவு பெரிதாக இருக்கும்! அப்புகழ்பெற்ற காஞ்ஜெஸ் (கங்கை மாநதி) எப்படியிருக்குமோ!’  என அவன் மனம் ஆலோசனையில் வீழ்ந்தது. ‘எப்படியாவது காஞ்ஜெஸ் சமவெளி நாடான மகதத்தையும் வெல்ல வேண்டும்’ என்ற ஒரு மனத்துடிப்பு வெளிப்பட்டது. சிந்து-கங்கை சமவெளி நாடுகளை வென்று கீழை நாடுகளையும் வீழ்த்தி தன் உலக ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டவேண்டும் என்பதே அவன் அவா.

    ஆனால் அவன் படைவீரர்களோ வீட்டு நினைவு மேலிட்டதாலும், மாதக் கணக்கில் போர் புரிந்து பல நாடுகளை வீழ்த்திய களைப்பினாலும் மேற்கொண்டு போரிட விரும்பவில்லை. அதுவும் தவிர ஜீலம் போரில் தாங்கள் இதுவரை கண்டறியாத யானைப்படையின் எதிர்த்தாக்குதலால் அவர்கள் சற்று அச்சம் அடைந்ததும் அவர்கள் உற்சாகக் குறைவுக்கு ஒரு காரணம். மகத சாம்ராட்டின் யானைப்படை பவுரவ மன்னனின் படையைவிட பல மடங்கு பெரியது என்ற தகவல் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.  மேலும் பரத கண்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த முல்லைப் பிரதேசத்தில் உள்ள மரக்கிளைகளில் தலை கீழாகத் தொங்கியவாறு தவம் செய்யும் யோகிகள் அவர்களுக்கு வியப்போடு அச்சத்தையும் ஏற்படுத்தினர். “ஐயோ! இவர்கள் மாயாவிகளோ என்னவோ, என்ன செய்வார்க்ளோ?” என்ற பயம் அவ்வீரர்களைப் பீடித்து, ’போதும் இந்த ஓயாத சண்டை’ என்று எண்ண வைத்தது.

    ’என்ன வீரர்கள் இவர்கள்! நான் இவர்களுக்கு என்ன குறை வைத்தேன்? கை நிறைய ஊதியம் கொடுத்ததோடல்லாமல் மாசிடோனியாவில் உள்ள இவர்கள் குடும்பத்தாருக்கு உணவுப் பொருட்களோடு எல்லா வசதிகளையும் இலவசமாக அளித்திருக்கிறேன். இவற்றைத் தவிர, எனது திக்விஜயத்தில் வீழ்ந்த நாடுகளில் சூறையாடப்பற்ற விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் இவர்களுக்கே ஈந்தும் இவ்ர்கள் ஏன் இப்படி எனது ஆணையை மீறி நாடு திரும்ப விரும்புகிறார்கள்? நன்றி கெட்ட ஜன்மங்கள்!’ என அலெக்சாண்டர் பற்களைக் கடித்தான்.

    அதே நேரத்தில், ஜீலத்தின் கீழ்க்கரையில் நடந்து முடிந்த அந்த உக்கிரமான போரில் ’தான் மெய்யாக வெற்றி பெற்றோமா?’ எனும் சந்தேகம் அவனுள் எழுந்தது. ’…இந்த நாட்டு மன்னன் எப்பேற்பட்ட வீரன்! என்ன உயரம், ஏழடி இருப்பானோ? அவன் முன் நான் ஒரு சித்திரக்குள்ளனே. போர் யானையின் மீது அமர்ந்து எவ்வளவு லாவகமாக அம்புகளையும் ஈட்டிகளையும் மாற்றி மாற்றி என் மீது எறிந்து என்னை இப்படிக் காயப்படுத்தி உள்ளான். குருதி சொட்டும் காயங்களுடன் தரையில் வீழ்ந்த என்னை ஏன் அவன் கொல்லவில்லை? அவனது தயக்கத்தைப் பயன்படுத்தித்தானே என் மெய்க்காப்பாளர்கள் அவனை சிறைபிடித்தனர்! அப்படி அவன் தயக்கம் காட்டாதிருந்தால் வெற்றி அவனுடையதாக இருந்திருக்கும் அல்லவா…’ என்றெல்லாம் அலெக்சாண்டரின் சிந்தனை ஓடியது.

    ‘கீழைநாட்டாரை எவ்வளவு குறைவாக எடை போட்டிருந்தோம். இங்கு வாழும் மக்கள் காட்டுமிராண்டிகள் என்றும் இவர்களை வீழ்த்துவது மிக எளிது என்றல்லவா நினைத்திருந்தோம். நாம் இதுவரை கண்டிராத இவர் யானைப்படை எவ்வளவு நாசத்தை நம் படைகளுக்கு உண்டாக்கி விட்டிருக்கிறது. நஞ்சு தோய்க்கப்பட்டக் கணைகளைத் துதிக்கைகளால் எறிந்து அந்த யானைகள் எத்தனை சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக என் உயிருக்கு உயிரான புரவி பூசிபாலஸ் இப்படையின் யானையால்தான் கொல்லப்பட்டது. என் வலது கை போன்ற தளபதி நினேயியாவை இந்த யுத்தத்தில்தானே காவு கொடுத்தேன். இந்த என் வெற்றிக்கு எத்தனை பெரிய விலையைக் கொடுத்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இப்படை யானைகள் சகதியான தரையில் சரியாகக் கால் ஊன்றமுடியாமல் பவுரவ நாட்டுப் படைகள் மீதே திரும்பிப் பாய்ந்ததால் அல்லவா அவர்கள் பக்கமும் பலத்த இழப்பு ஏற்பட்டது. கடந்த மாதங்களில் கிரேக்கம், எகிப்து, சிரியா, மத்தியதரைக் கடல் நாடுகள், பாரசீக நாடுகளெல்லாம் எவ்வளவு எளிதாக என்னிடம் சரண் அடைந்தன! இங்கு மட்டும் என் பராக்கிரமம் ஏன் செல்லவில்லை..?.’ என்று எண்ணி அந்த யவன அரசன் மனம் ஒடிந்து போனான்.

    ‘மேலும், பவுரவ நாட்டின் விரோதியான தக்‌ஷசீல சிற்றரசன் அம்பியின் உதவியில்லாமல் இந்த ஹைடஸ்பஸின் மேற்குக் கரையைக் கடந்து அதன் கீழ்க்கரையில் இப்போரினை நடத்தியிருக்க முடியுமா? பொற்குவைகளால் அவனை மயக்கி அல்லவா நான் கைபர் கணவாய் வழியாக இந்த பரத கண்டத்தில் கால் வைத்தேன். பவுரவ நாட்டிற்கு இந்த நதி இயற்கை அளித்துள்ள பெரிய அரண். அம்பியின் யோசனைப்படி இரவோடு இரவாக ஜீலத்தின் வடக்கு திசை நோக்கி படைகளை நகர்த்தி அகலக்குறைவான ஓரிடத்தில் பரிசல்கள் மூலம் கீழ்க்கரைக்கு வந்து சேர்ந்திராவிட்டால் மழை ஓயும்வரை நம்மால் எதுவும் செய்திருக்க முடியாது.’

    இவ்வாறெல்லாம் ஆலோசனை செய்த அலெக்சாண்டருக்குத் தன் ஆசான் அரிஸ்டாடில் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது: ‘கீழைநாட்டவர்கள் ஆன்மீக பலம் மிகுந்தவர்கள். அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல.’ மேதை பிளாட்டோவின் முக்கிய சீடரான அவரது மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதனை உணர்ந்த நிலையில், மழையில் அதிக நேரம் நனைந்ததால் ஏற்பட்ட விழுப்புண்களின் வலி தாங்கமுடியாமல், உள்ளே வந்து மஞ்சத்தில் வீழ்ந்தான்.

    “யாரங்கே? ரொக்ஸானாவைக் கூப்பிடுங்கள்” என்று உரத்த குரலில் கர்ஜித்தான்.

     “ஜீலம் நதி”  கிரேக்கர்களால் “ஹைடஸ்பெஸ்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(7)

      செண்பக ஜெகதீசன்ifish

     

    வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்

    தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

                                          -திருக்குறள்- 931 (சூது)

     

    புதுக் கவிதையில்…

     

    துடிக்கும் புழுவது தூண்டிலில்,

    கிடைத்தது உணவெனப் பாய்ந்தே

    எடுத்து விழுங்கிடும் மீனுக்கு

    எமனும் அதுதான்..

     

    இதுதான் கதை

    வென்றிடுதல் சூதாட்டத்தில்

    என்பதுவும்..

     

    அதனால்,

    வேண்டாம் வேண்டாம்

    சூதாட்டம்-

    வென்றாலும் வேண்டாம்…!

     

    குறும்பாவில்…

     

    சூதினிலே வெற்றியது,

    மீன்பிடிக்கும் தூண்டிற்புழுதான்..

    மறந்திடு சூதை…!

     

          மரபுக் கவிதையில்…

     

    தூண்டிற் புழுவை இரையெனவே

    துரத்திப் பிடித்து விழுங்கியேதான்

    மாண்டு போகும் மீனினமே,

    மண்ணில் மனிதன் கதையிதுதான்,

    வேண்டாம் இந்தச் சூததுவும்,

    வெற்றி யதிலே வருவதெல்லாம்

    தூண்டிற் புழுவின் வடிவினிலே

    வந்திடும் துன்பம் மறவாதே…!

     

    லிமரிக்…

     

    வேண்டாம் சூதாட்டம் எழு

    உன்னையே ஏற்றிடும் கழு,

    வென்றாலும் வதையிது

    வெற்றியின் கதையிது-

    மீன்விழுங்கும் தூண்டில் புழு…!

     

    கிராமிய பாணியில்…

     

    தோத்தாலும் செயிச்சாலும்

    தோதுப்படாது சூதாட்டம்,

    தாதகப்பஞ் சொல்லக்கேளு

    தருமராசா கதயக்கேளு..

     

    சூதுலதான் செயிச்சாலும்

    சோகப்படாது ஒருநாளும்,

    தூண்டுலுல புழுவப்பாத்து

    தூண்டுலோட தின்னமீனு

    துடிச்சிச்சாவும் கததானே..

     

    அதாலே,

    தோத்தாலும் செயிச்சாலும்

    தோதுப்படாது சூதாட்டம்,

    வேதனயா சென்மத்துக்கும்

    செத்தமீனு கதவேண்டாம்,

    தாதகப்பஞ் சொல்லக்கேளு

    தருமராசா கதயக்கேளு…!

     படத்துக்கு நன்றி

       http://www.clipartof.com/portfolio/anortnik/illustration/fish-caught-on-a-fishing-pole-92573.html

    Share
  • குறவன் பாட்டு – 3

    
    சச்சிதானந்தம்
    அறைகூவும் கானகமும் அதில் வாழும் குறவனும் 

     

    சூரியன் ஊடுருவா வீரியக் காட்டில்,

    மாரியின் ஆதிக்கம் மீறிய காட்டில்,

    யாரினும் இறங்காத மரமடர் காட்டில்,

    குறவனும் குறத்தியும் எளிமையாய் வாழ்ந்தனர்!                                                                            22

     

    முறைசாராத் தொழில்தனை முதன்முதலில் செய்தவன்,

    கறைசாரா மனதோடு கானகத்தில் வாழ்பவன்,

    நரைசேரா இளமையோடு குறத்தியோடு களிப்பவன்,

    முறைசார்ந்து வாழ்க்கையினை முழுமையாக வாழ்பவன்!                    23

     

    சமவெளிகள் புல்வெளிகள் கடந்தாக வேண்டும்,

    சலசலக்கும் காட்டாற்றில் நடந்தாக வேண்டும்,

    பாதைகள் பலவுண்டு காட்டுக்குள் செல்ல,

    தடம்மாறிப் போகாமல் நடமாட வேண்டும்!                                                                                          24

     

    காட்டாற்றின் ஆழத்தை அறிந்தாக வேண்டும்,

    கடக்கின்ற முறைதன்னில் கடந்தாக வேண்டும்,

    தினந்தோறும் உருமாறும் காட்டாற்றின் ஆழம்,

    யுகந்தோறும் உயிர்வாழும் குறவனே அறிவான்!                                                                              25

     

    இரவுநேரப் பறவைபோலக்  கூர்செவி கொண்டு,

    ஒலிவரும் திசையும் தொலைவும் அறிந்து,

    புலிவரும் போதும் புலன்களில் உணர்ந்து,

    விலங்கினைப் போல விழிப்புடன் வாழ்வான்!                                26

     

    காட்டாற்றில் நீர்பருக   வருகின்ற விலங்கினுக்கு,

    இடையூறு செய்யாமல் நடையூற வேண்டும்,

    சேற்றாற்றில் முதலைகள் உயிர்வாழக் கூடும்,

    காற்றோடும் வேகத்தில் கடந்தாக வேண்டும்!                                                                                      27

     

    ஏவுகணை வேகத்தில் தாவுகின்ற மான்கூட்டம்,

    கூவுமிசைக் குரலாலே பாடுகின்ற குயில்கூட்டம்,

    தீவுகளின் கூட்டம்போல் வாழுகின்ற களிற்கூட்டம்,

    மேவுமனம் கொண்டிடுவர், கண்டுகேட்டுக் குறவர்கூட்டம்!                                                       28

     

    வாழையடி வாழையாய் வழித்தடம் மாறாத,

    யானையடிப் பாதையாய், மாறாமல் தொடர்ந்து,

    ஏழையுடன் ஏழையாய், யுகம் கடந்து யுகம்யுகமாய்,

    நானிலத்தில் வாழுகிறான் கானகத்துக் குறவன்!                                                                                29

     

    துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,

    கலவரம் பூணும் கானுருக் கண்டு!

    குலவறம் காக்கும் குறவனின் மனமோ

    இலகுறக் கண்டு கானினை வெல்லும்!                                                                                                      30

     

    Share
  • கென்யா பயணம் 2

    நாகேஸ்வரி அண்ணாமலை

    kenewzz

    நாங்கள் கென்யா ஏர்வேஸில் பம்பாய் வழியாக கென்யாவின் தலைநகரான நைரோபிக்குச் செல்வதென்று முடிவு செய்தோம். கென்யா ஏர்வேஸ் விமானம் எல்லா விமானங்களையும் போல் இருந்தாலும் விமானப் பணியாளர்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருந்த விமானப் பணியாளர்கள் போல் இல்லை. அவர்களைப் போல் இவர்கள் நளினமாக நடந்துகொள்ளவில்லை. கடனே என்று இல்லாவிட்டாலும் ஒரு இயந்திர கதியில் உணவைப் பயணிகளுக்குக் கொடுப்பது, வேறு ஏதாவது தேவையா என்று கேட்பது ஆகிய காரியங்களைச் செய்தார்கள். விமானத்தில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பணியாளர்கள் நடந்துகொண்டதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இன்னும் கொஞ்சம் சேவையின் தரத்தை உயர்த்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

    நைரோபி விமான நிலையத்தில் போய் இறங்கி விமானத்தை விட்டு வெளியேறியதும் அதை அடுத்து இருந்த பகுதி எல்லா விமான நிலையங்களையும் போல் விஸ்தாரமாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு உள்ள பகுதிகள் மிகச் சாதாரணமாக இருந்தன. அமெரிக்காவில் குடியேறல் பகுதி மிக பிரமாண்டமாக இருக்கும். அமெரிக்காவிற்குப் பல நாடுகளிலிருந்தும் விமானங்கள் வந்தவண்ணமாக இருக்கும். குடியேறல் பகுதியில் ஒரு அதிகாரி வரும் பயணிகளைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இங்கே போங்கள், மற்றவர்கள் அந்தப் பக்க்ம் போங்கள் என்று அரட்டிக்கொண்டிருப்பான். அங்கு இருக்கும் அதிகாரிகள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். நைரோபி விமானநிலயத்தின் குடியேறல் பகுதி மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டே அதிகாரிகள் இருந்தனர். கென்யாவிற்கு வரும் பயணிகளுக்கு விசா விமானநிலயத்திலேயே வழங்க வசதி இருந்ததால் அதற்கு இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவ்வளவே.

    சில நாட்கள் தங்குவதற்குரிய விசாவைப் பெற்றுக்கொண்டு விமானநிலையத்தை விட்டுவெளியே வந்தோம். சில்லென்று குளிர்ந்த காற்று வீசியது. அப்படிக் குளிர் அடித்ததே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சாதாரணமாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும்போது விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தால் ஒரே வெக்கையாக இருக்கும். அது மாதிரி அமெரிக்கா சென்றடையும் போதும் கோடை காலமாக இருக்குமாதலால் குளிராக இருக்காது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெக்கையாக இருக்கும் என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். எங்கள் மாணவ நண்பர்கள் நைரோபி காலநிலை மைசூர் காலநிலை மாதிரி இருக்கும் என்று சொல்லியிருந்தாலும் அவர்கள் சொன்னது மனதில் பதிவாகியிருக்கவில்லை. நல்ல வேளை ஆளுக்கு ஒரு ஸ்வெட்டர் கொண்டுபோயிருந்தோம். வேக வேகமாக அதை எடுத்துப் போட்டுக்கொண்டோம்.

    பூமியில் பூமத்தியரேகைக்கு வடக்கில் இருக்கும் நாடுகள் வடமண்டலம் என்றும் தெற்கே இருக்கும் நாடுகள் தென்மண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றன. கென்யா நாட்டின் நடுவே பூமத்தியரேகை ஓடுகிறது. அதனால் பூமத்தியரேகைக்கு வடக்கே இருக்கும் பகுதிகள் வடமண்டலத்தைச் சேர்ந்தவை. தெற்கே இருக்கும் பகுதிகள் தென் மண்டலத்தைச் சேர்ந்தவை. கென்யாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் நாட்டின் தலைநகரான நைரோபி தென் மண்டலத்தைச் சேர்ந்ததால் இப்போது, அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், அங்கு குளிர்காலம். குளிர்காலம் என்றாலும் பூமத்தியரேகைக்குப் பக்கத்தில் அவ்வளவு குளிர் இருப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே 3000 அடி உயரத்தில் நைரோபி இருப்பதால் கொஞ்சம் குளிர்கிறது. சிங்கப்பூர் பூமத்தியரேகைக்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நைரோபி பூமத்தியரேகைக்குத் தெற்கே 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இரண்டும் பூமத்தியரேகையிலிருந்து சம தூரத்தில் இருந்தாலும் சிங்கப்பூர் கடல் மட்டத்தில் இருப்பதால் எப்போதும் சென்னையைப் போல வெக்கையாக இருக்கும். நைரோபி கடல்மட்டத்திற்கு மேலே இருப்பதால் எப்போதுமே மைசூரைப் போல கொஞ்சம் குளிராக இருக்கிறது.

    நைரோபி என்ற பெயர் அங்கு வாழ்ந்துவந்த மசாய் பழங்குடி மக்கள் அங்கு ஒடும் நதிக்கு இட்ட பெயர். அதன் மூலப் பெயர் நைலோபி மருவிப். பின்னால் நைரோபி ஆயிற்றாம். மசாய் மக்கள் நாடோடி மக்கள்; ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இடம்விட்டு இடம் போய்க்கொண்டிருப்பர்கள். இப்போது இம்மக்கள் இந்த நகரத்திலும் அதன் பக்கத்திலும் இல்லை.
    ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கென்யாவின் தலைநகரான நைரோபி ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மற்ற நகரங்களை விட பின்தோன்றியது; வேகமாக வளர்ந்துவரும் இது அதி நவீனமானது; கிழக்கு ஆப்பிரிகாவில் அதிக உயரத்தில் இருப்பது; மற்ற நகரங்களை விடப் பெரியதும் கூட்.

    ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் ஆதிவாசிகள் வசித்துவந்தனர். ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியபோது அவைக்ளுக்கிடையே அடிக்கடி போர் நடந்தது. அதனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பெர்லினில் ஒரு மாநாட்டைக் கூட்டி தங்களுக்குள் ஒரு ச்மரச உடன்படிக்கை செய்துகொண்டனர். அவரவர் பிடித்துக்கொண்ட இடஙகளை அவரவர் அதிகாரத்தில் வைத்துக்கொள்வதென்றும் பிடித்துக்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் அந்த இடங்களின் பாதுகாப்பிற்காக துருப்புக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த மக்களிடம் நாகரீகத்தைப் பரப்ப கிறிஸ்துவ மதத்தை அந்த மக்களிடம் பரப்ப வேண்டும் என்றும் தங்களுக்குள் விதிகளை வகுத்துக்கொண்டனர். இப்படி அந்த நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள இடங்களை ஆக்கிரமித்துக்கொண்ட முறையிலேயே பல நாடுகளின் எல்லைகள் வகுக்கப்பட்டன. உலகில் உள்ள வெள்ளை இனத்தவர்கள்தான் நாகரீகம் அடைந்தவர்கள், மற்ற கருப்பு இனத்தவர்களை நாகரீகப்படுத்தும் ‘பொறுப்பு, சுமை’ வெள்ளை இனத்தவர்களைச் சேர்ந்தது என்று வெள்ளை இனத்தவர்கள் தாங்களாக நினைத்துக்கொண்ட காலம் அது. மற்ற நாடுகளைக் கைப்பற்றி தங்கள் ஆளுகைக்குள் வைத்துக்கொண்டதற்கு அவர்கள் கற்பித்துக்கொண்ட நியாயம் என்றும் சொல்லலாம். இப்படி மனிதனை மனிதன் அடிமை செய்து அரசாட்சி செய்தவர்கள் இப்போது மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள்.

    இப்படி ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிரித்துக்கொண்டபோது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள இப்போதைய கென்யா, டான்சினியா, எத்தியோப்பியா, உகாண்டா, போன்ற நாடுகளின் பல பகுதிகள் பிரிட்டனின் அதிகாரத்திற்குள் வந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து கென்யா வழியாக உகாண்டா வரை பிரிட்டிஷ் அரசு தன் வணிகத்தை வளர்க்க ரயில்பாதை அமைக்க முடிவுசெய்தபோது பல இந்தியர்களை – அப்போது இந்தியாவும் பிரிட்டிஷாரால் ஆளப்பட்டு வந்தது – ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட அழைத்து வந்தது. ரயில்பாதை அமைக்கப்படும்போது பல இடங்களிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாக அமைந்த நைரோபி ஒரு நகரமாக 1899-இல் உருப்பெறத் தொடங்கியது. தற்காலிக நகரமாகத் தோன்றிய நைரோபி இன்று வெகு வேகமாக வள்ர்ந்துகொண்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளிலேயே கென்யாதான் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடி அதிக வளர்ச்சி பெற்ற நாடு என்று கூறுகிறார்கள்.

    நைரோபியை உலகின் சஃபாரி தலைநகர் என்று குறிப்பிடுகிறார்கள். நாட்டின் மக்க்ள்தொகையில் பத்து சதவிகிதத்தினர் இந்த நகரில் வசிக்கிறார்கள். சுமார் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் நேஷனல் மியூசியம் ஆஃப் கென்யா, சுமார் எண்பதாயிரம் பேர் கூடக்கூடிய கென்யாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்களுக்கு உரையாற்றும் பெரிய நேஷனல் பார்க், கன்வென்ஷன் சென்ட்ர், நைரோபி சிட்டி மார்க்கெட், விலங்குகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் ஆகியவை இருக்கின்றன. சிறிய வேன்கள் அளவில் நிறைய டொயோட்டக்களும் ஹுயுண்டாக்களும் பவனி வரும் இந்நகரின் பெரிய தெருக்களில் கைவண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு மனிதர்கள் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்க்கும்போது கென்யாவின் வறுமையும் ஏற்றத்தாழ்வும் மனதை நோகச் செய்கின்றன.

    (தொடரும்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பேரா. நாகராசன்

    இந்த வார வல்லமையாளர் [15/07/2013 – 22/07/2013]

    தமிழகத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.  வேற்றுமையில் ஒற்றுமை ஒற்றுமையில் வேற்றுமை என்று இரட்டைக் குதிரைச் சவாரி செய்வதில் தமிழர்களுக்கு நாட்டம் அதிகம்.  ஒரே நேரத்தில் இந்த இரண்டு சிந்தனைகளும் வெளிப்படும்போது தமிழன் ஒரு குழப்ப வாதியாகக் காட்சியளிப்பது இயல்பு.

    உலகத் தமிழன் என்று ஒரு புறமும் தனித் தமிழன் என்று இன்னொரு புறமும் ஒருவரே ஒரே நேரத்தில் குரல் எழுப்பி மற்றவர்கள் குழப்பம் அடைவதுபோல் எழுதுவதும் பேசுவதும் சில குறிப்பிட்ட தமிழ்ப் படைப்பாளர்களுக்குக் கை வந்த கலை.  தனித்தமிழ், தனித்தமிழன், தமிழன் பெருமை என்று கண்ணைக் கட்டிக்கொண்டு வேகமாகப் பின்னோக்கி நடப்பதும் மேலைநாட்டு நாகரிகப் பண்புக்கூறுகளைக் கண்ணை மூடிக்கொண்டு முன்னெடுப்பதிலும் ஒரு இரட்டை நிலை தமிழ்ப் படைப்பாளர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது

    தமிழ் அறிஞர்கள் பழம்பெருமை பேசுவதையும் ஒரு சிறு வட்டத்தில் தங்களை நிறுத்திக்கொண்டு தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்யும் புதியத் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு தங்கள் சிந்தனையைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியச் செய்யும் ஆர்வமும் திறனும் இல்லாதவர்களாக இருப்பது உண்மை

    புதிய சிந்தனை புதிய படைப்புகள் புதிய வடிவமைப்பு என்று தமிழின் சிறப்புக்கு அணி சேர்க்கும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய தலைமுறைத் தமிழ் இளைஞர்களுக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளார்ந்த உந்துதலுடன் செயல்படும் தமிழறிஞர்கள் வெகு சிலரே.  இணையத் தமிழ்த் தளத்தில் தரமான தமிழில் தற்காலத்துக்குத் தேவையான சிந்தனைகளை எண்ணிம வடிவில் தொடர்ந்து எழுதுவது என்பது எளிதல்ல

    தன் சொந்தக் கருத்துகளையும் இணையத்தில் பரவிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய தகவல்களையும் தினம் ஒரு மாலையாக மஞ்சரியாகத் தொகுத்துத் தருவதை ஒரு வேள்வியாக நடத்தும் ஒரு கணித் தமிழ் இணையத் தமிழ் அறிஞர் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு பெறுகிறார்

    photo (1)ஈழத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பவர், தனித் தமிழ் வளர்ச்சிக்கு வழி கோலுபவர், இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்பவர், வல்லமை இதழுக்குத் தொடர்ந்து வளம் சேர்ப்பவர் என்று பல வல்லமைகளை நாள்தோறும் வெளியிடும் வல்லமையாளர் திரு. திருவள்ளுவன் இலக்குவனார்

    நெருக்கத்தில் இருப்பவர்கள் பெருமையை அறிந்து பாராட்டுவதைச் சில நேரங்களில் மறந்து விடுவது இயல்பே.  எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் உள்ளூரில் உள்ளவர்கள் அவர் பெருமையை எடுத்தியம்புவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை

    வல்லமை இந்தத் தடையைக் கடந்து இணையத்தில் வல்லமை மின் தளத்தில் தொடர்ந்து தமிழன் சிறப்பு பெருமை உரிமை பற்றி மட்டுமன்றி உலக அளவில் தமிழன் மற்ற இன மொழி மரபுப் பெருமைகளை அறிய வேண்டும் என்ற உணர்வுடன் தன் படைப்புகளைத் தயங்காமல் தளர்வில்லாமல் வெளியிடும் திருவள்ளுவன் இலக்குவனாரை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

    20-ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழிக் காவலராகத் தமிழனின் சிறப்பை இந்திய அரங்கில் நிலை நிறுத்த மாணவர்களுக்கு ஊக்கமும் உரமும் ஊட்டிய எங்கள் பேராசிரியர் திரு.இலக்குவனார் அவர்களின் புதல்வன் இந்த வார வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்

    வாழ்த்துகள் திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (20)

    பவள சங்கரி

    துக்கத்தை சுமையென ஒதுக்க முடியுமா?

    487340_430840180309256_1635201260_n2

    “தோல்வி, வேதனை , போராட்டம், இழப்பு, அதள பாதாளங்களிலிருந்தும் மீண்டு வரும் வழி போன்றவற்றை அறிந்தவரே, நாம் அறிந்தவர்களிலேயே மிக அழகான மனிதர்கள். இந்த மனிதர்களே, பாராட்டு, உணர்திறன் மற்றும் கருணை, கனிவு, ஆழமான அன்பு போன்றவைகள் நிறைந்ததொரு புரிதலான வாழ்க்கையை வாழ்பவர்கள். அழகான மக்கள் சட்டென்று தோன்றுவதில்லை”.
    எலிசபெத் குப்ளர் ராஸ்

    books‘துக்கம்’ என்ற அந்த வார்த்தையே நம் ஒவ்வொருவரையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. நாம் அறிந்த ஒருவருக்கு அந்த சோகம் நிகழும் போதே நம் மனமும் கடந்து துடிக்கிறது. சில நேரங்களில் அதிலிருந்து முழுமையாக விலகிவிடவும் தோன்றும். அந்த நேரத்தில் இது போன்ற நிலை நமக்கும் ஒரு நாள் வரக்கூடும், நம்மைச் சேர்ந்த, நாம் உயிராய் மதிக்கிற ஒருவர் நம்மைப் பிரியும் தருணமும் வாய்க்கலாம் என்று அறிவு அறிந்தாலும், உணர்வு அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கி தப்பி ஓடவே பார்க்கிறது. சில காலம் முன்பு என் நெருங்கிய தோழி, சரியான புத்தகப்புழு என்று பெயர் வாங்கியவள், பலவிதமான புத்தகங்களையும் படிப்பவள். ஒரு நாள் எலிசபெத் குப்ளர் ராஸ் என்ற உளவியல் ஆய்வாளரின் On Death and Dying என்ற நூலைக் கொடுத்து படிக்கச் சொன்னாள். இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான உளவியல் நூல்களின் ஒன்றான இது, இறப்பு மற்றும் மரணத்தின் வாயிலில் நிற்போர் பற்றிய கருத்தரங்கின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதில் மரணத்தைக் கையாள்வதற்குரிய யோசனைகள் , மறுப்பு மற்றும் தனிமை, கோபம், பேரம், மன அழுத்தம் மற்றும் ஏற்பு போன்ற ஐந்து நிலைகளில் ஆராயப்படுகின்றன. நேர்காணல் மற்றும் உரையாடல்கள் மூலம், திடீர் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதற்கான தீர்வு, அந்த மரணத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவை போன்றவற்றை மிக அழகாக எடுத்துரைக்கும் நூல் இது என்றாலும், இதை ஏன் எனக்கு அவள் இப்போது கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும் என்று குழப்பமாகவே இருந்தது. அவளிடமே அதைக் கேட்ட பொழுது அவளும், இந்த உலகில் பிறந்த யாராக இருந்தாலும் ஏதோ ஒரு நாள் இது போன்ற ஒரு சூழலைச் சந்திக்காமல் இருக்க முடியாதே. இந்த உலகில் தோன்றியது எதுவும் நிலையாக இருக்கும் என்ற சாத்தியம் இல்லை. என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் அல்லது மாற்றம் பெறும். இது உறவுகளுக்கும் பொருந்தும். என்றோ ஒரு நாள் சந்திக்கப்போகும் அந்த சூழ்நிலைக்கு நம்மை நாம் முன்னரே தயார்படுத்தி வைத்துக்கொண்டால் அதன் பாதிப்பிலிருந்து ஓரளவிற்குத் தப்பிக்கலாமே. அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படும்போது அதிலிருந்து அவர்கள் மீண்டுவர உதவலாமே என்றபோது, ‘அடடா, இப்படி ஒரு கோணத்தில் யோசிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று நினைத்ததோடு உடனே அதனை வாசித்தும் முடித்தேன்.

    சில நாட்கள் சென்றிருக்கும், எங்கள் தெருவில் சில வீடுகள் தள்ளி வசிக்கும் தோழி ஒருவருக்கு திடீரென்று இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று யாருமேseed1 எதிர்பார்க்கவில்லை. வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் இவருடைய கணவர் எந்த விதமான நோயும் இல்லாதவர். இவர்களுக்கு பள்ளியிறுதியாண்டு படிக்கும் அன்பான ஒரே மகன். மனைவி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என்பதால் மகனை எப்படியும் மிக உயர்ந்த மதிப்பெண் பெறச்செய்து, நல்லதொரு பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு படிக்க வைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் காலை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவர், லேசாக மயக்கமாக இருக்கிறது என்று படுத்தவர் திரும்பவும் எழுந்திருக்கவே இல்லை. அவசரமாக உடனே மருத்துவமனை எடுத்துச் சென்றபோதும், ‘மேசிவ் அட்டாக்’ என்று பெயர் சொல்லி அவரை வெறும் உடலாக திருப்பி அனுப்பிவிட்டார்கள். தன் கணவனும், மகனும் மட்டுமே உலகமாக நம்பி வாழ்ந்து வந்தவருக்கு அனைத்துமே சூன்யமாகத் தென்பட மன அழுத்தத்தின் எல்லைக்கேச் சென்றுவிட்டார். அவ்வப்போது வழியில் பார்க்கும்போதெல்லாம் நலம் விசாரிக்கும் அளவில் எங்கள் பழக்கம் இருந்தாலும் இந்த பேரிழப்பின் காரணமான அவர் நிலையைக் காணும் போது என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த வீட்டில் மயான அமைதியே நிலவியிருந்தது. அவர் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதும் அவரால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. மகனின் பள்ளியிறுதி தேர்வும் நெருங்கும் சமயம். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு அந்தத் தாய் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியதுதான். இதனை எடுத்துச் சொல்லும் துணிச்சல் நெருங்கிய உறவினர்களுக்கு வரவில்லை. அதையும் மீறி ஓரிரு வார்த்தைகள் சொன்னதும் அதுவும் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. வேதனையின் உச்சத்தில் இருந்தவரிடம், “உன் துக்கத்தைப் புதைத்து விடு, அதைப்பற்றியே நினைக்காமல் கவனத்தை திசை திருப்பிக் கொள், உன் துன்பங்கள் மறைந்துவிடும்” என்ற ஒட்டு மொத்த அறிவுரை மேலும் துன்பத்தை அதிகப்படுத்துவதாகவே இருந்தது. இதற்கு பல உதாரணங்களைக் கொடுக்கலாம். ‘அவர் நேரம் அப்படி, அவர் போய்விட்டார்’, ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்பது போன்ற ஒரு சில வார்த்தைகள்கூட நன்மைகளுக்குப் பதிலாக நொந்த புண்ணில் உப்பைத் தூவுவதாகக்கூட அமையலாம்.

    தவிர்க்க இயலாத அந்த துக்கத்தை திறந்த மனதுடன், அறிவுப்பூர்வமாக, நட்புரீதியாக, உண்மையாக ஏற்றுக்கொள்வதால் அதிலிருந்து மீண்டுவர வழி பிறக்கும். இந்த வகையில் பேசி பாதிக்கப்பட்ட அந்தத் தாயை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வெகு விரைவில் கொண்டுவர முடிந்தது. இன்று மகன் தான் விரும்பியபடி பொறியாளராக ஒரு நல்ல அலுவலகத்தில் பணிபுரிய மகனுக்கு மணம் முடித்து தன் கணவனே வந்து பேரக் குழந்தையாகப் பிறந்திருப்பதாக மன நிறைவுடன் இருக்கிறார். நாம் எதிர்பார்த்தோ அல்லது எதிர்பாராமலோ நம்மை அணுகும் துக்கத்தை விட்டு விலகி ஓட நினைக்காமல் அதை, அதன் இயல்புடன் நின்று, இதயப்பூர்வமான துணிவுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். நடைமுறைக்கு உதவக்கூடிய ஒரு சுமுகமான உறவை அந்த துக்கத்துடன் ஏற்படுத்திக் கொள்வதே அதிலிருந்து மீண்டுவர சிறந்த வழியாகும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். மனித மனங்களின் இயற்கை குணங்களின் முக்கியமான ஒன்று ஏதேனும் ஒன்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டு வாழ்வது, குறிப்பாக நாம் அதிகமாக நேசிக்கும் உறவுகளை. இதனாலேயே நம் ஆன்றோர்கள் தாமரை இலைத் தண்ணீர் போன்றே நம் உறவுகளை நெருங்க வேண்டும் என்றனரோ? ஆனால் சிலர் நீண்ட காலங்களுக்கு பிடியைத் தளர்த்த மனமில்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பிரிவின் துயரம் சிலருக்கு மரண வேதனை கொடுக்கவும் செய்கிறது. சிலர் அந்த வலியை ஏற்றுக் கொண்டு அந்த ரணத்திலிருந்து மீண்டுவர முயற்சி எடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

    வேதனையில் இருக்கும் போது, கண்ணீரைத் துடைக்கும் அன்பான கரங்களை நாடுங்கள். தன்னைப் போலவும், அதற்கு மேலும் வேதனைப்படுபவர்கள் இந்த உலகில் பலர் இருக்கின்றனர் என்பதையும் உணருங்கள். மனம் ஆறுதல் பெற்று பணியில் நாட்டம் கொண்டு, வெற்றிக் கனியைப் பறிக்க வழிகாட்டும்.

    சுகமும், துக்கமும் இணைந்ததுதான் முழுமையான வாழ்க்கை அல்லவா?
    “ஆசை அறுமின், ஆசை அறுமின்
    ஈசனோடாயினும் ஆசை அறுமின்!”

    தொடருவோம்

    படங்களுக்கு நன்றி:

    http://rishikajain.com/2012/11/09/inspirational-life-learning-quotes/

    Share
  • சொல் ஒன்று வேண்டும்!

    தி. சுபாஷிணி

    அது ஒரு குக்கிராமம். அங்கு செல்லவே இரண்டாம் ஜாமம் ஆயிற்று. நேராக அந்தக் கோயிலுக்குத்தான் சென்றோம். என்னுடன் மன்னிக்கவும் என்னைக் கூட்டி வந்தவர்கள் என் மாமியார், அவரது தம்பி, தங்கை ஆவார்கள். இரவை அங்குதான் கழிக்க வேண்டும். கோயிலில் சுற்றி ஓலைக் கூரை வேய்ந்த பிரகாரம். அதில்தான் அனைவரும் படுத்துறங்க வேண்டும். எங்களைப் போல் இன்னும் பத்து இருபது பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்தவர்கள் அப்படியே படுத்தனர். அவர்கள் உறங்கினார்களா? உறங்கியதுபோல் விழித்திருந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. அதில் என் மனமும் செல்லவில்லை. நான் முற்றிலும் என்னைச் சுற்றியிருந்த இருட்டுடன் இருந்தேன். என்னவோ அந்த வெட்டவெளி இருட்டு முதலில் பயமுறுத்தினாலும், நேரம் செல்லச்செல்ல பழகிவிட்டது.

    எனக்கு அது தோழிபோல் என்னுடன் உறவாடயத்தனித்தது. இரவின் மடி நம் தாய் மடி போன்றது. அது தன் மடியில் நம்மைப்போட்டு, தலை வருடிக் கொடுக்கும். அது என் தலைவருடியது. அது என்னை வருட வருட என் கண்கள் அருவியாய்க் கொட்டியது. எங்கிருந்து இவ்வளவு கண்ணீர் என்றே புரியவில்லை. காதருகே குனிந்து வந்து ‘அழாதே’ என்றது. என் அம்மா பேச்சைக் கேட்காத பலனை இப்போது அனுபவிக்கிறேன் என்றேன். ‘கலக்கமுறாதே! எல்லாம் சரியாகிவிடும், கண்ணுறங்கு’ என்றது அது. மெல்ல மெல்ல இமை கனத்தது. தூக்கம் தழுவியது. அதன் பாதுகாப்பில் கண்ணயர்ந்தேன். இருட்டும் மெல்ல மெல்ல விலகி விடியலின் நம்பிக்கை மலரத் தொடங்கியது. பிரிந்தும் பிரியாத இருளில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் கலக்கமில்லை, தயக்கமில்லை, மயக்கமில்லை. அங்கு படுத்துறங்கியவர்கள் ஒவ்வொருவராய் எழத் தொடங்கவே, நாங்களும் எழுந்தோம். கோயில் முன் இருக்கும் குளத்தில் குளிக்கக் கிளம்பினோம். குளத்தில் இறங்கி தலை அமிழ்த்தினேன். உடல் அமிழ அமிழ உடலும் உள்ளமும் குளிர்ந்தது. இறுதியில் மூன்றுமுறை அமிழ்ந்து எழச் சொன்னார்கள் என் மாமியார். அப்படியே செய்தேன். ஒரு பதில், ஒரு சொல் இதுவரை அவர்களிடம் பேசவில்லை.

    அது அவர்களைச் சுட்டு இருக்கும். அது அவருடைய முகத்தில் தெரிந்தது. என்னால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. ஈரத்துணியோடு குளத்திலிருந்து வெளிப்பட்டு குளக்கரையில் விற்கும் அர்ச்சனைத் தட்டு ஒன்றை வாங்கினேன். பணம் கொடுக்க அவர்கள் முன் வந்தார்கள், மறுத்துவிட்டேன். நானே 50 ரூபாய் கொடுத்து அதைப் பெற்றுக் கொண்டேன். தட்டில் 51 ரூபாய் தட்சிணை வைக்கச்சொன்னார்கள். பணத்தை வைத்தேன். அனைவரும் ஈரத்துணியை மாற்றிக் கொண்டோம். கோயிலுக்குள் சென்றோம். கர்ப்ப கிரகத்திலுள்ள சாமியை தரிசித்தோம். பின் நாங்கள் யாரைப் பார்க்க வந்தோமோ அவரைக் காண கோயில் பிரகாரம் வந்தோம். எங்களுக்கு முன் 10 பேர்கள் நின்றிருந்தனர்.

    ஒவ்வொரு முகம் ஒவ்வொரு விதமாய் உணர்வுகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. பதினோராவது ஆளாய் நாங்கள் நின்றோம். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் சற்றே 2 அல்லது 3 வயது குறைவில் ஒரு அம்மா அமர்ந்து இருந்தார்கள். அவருடைய மனைவி என்றனர். இந்தக் கோயிலில் குடியிருப்பது 7 கன்னிகைகள் என்றும் அந்த ஏழு கன்னிகைகளும் இவர் மீது வந்தமர்ந்து, அவரது வாக்கு மூலம் நம் குறைகளை தீர்ப்பார் என்றனர். மேலும் காணாமல் போன பொருட்கள், யார் எடுத்துச் சென்றது?, அவை கிடைக்குமா கிடைக்காதா என்பதிலிருந்து மக்கட்பேறு உண்டா, அதற்கு நிவர்த்தி உண்டா என்பது வரை அவர் சொல்லும் ‘குறி’யில் தெரிந்து விடும் என்றனர். நமக்கு அதில் ஐயம் இருப்பின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த அம்மா அவர்களிடம் கேட்டுச் சொல்வார்கள். மேலும் பலருடைய அனுபவங்கள் எல்லாம் வரிசையில் நிற்கும்போது செவிகளில் விழுந்தன.

    என் கவனம் முழுவதும் அந்த தெய்வத்திடம் இருந்தது. அன்று அம்மா எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னார்கள். “உனக்கு திருமண வயதே வரவில்லை. சிறுபிள்ளைத்தனமாய் இப்படி அவர்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதே. அவர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. படிக்காத குடும்பம். பையனுக்கும் நிரந்தர வேலை இல்லை. நீயோ பல வேலைகள் தெரியும் என்கிறாய். ஏதாவது ஒரு வேலையில் தொடர்ந்து வேலை பார்த்திருக்க வேண்டாமா! உன்னை பெரியம்மாவுடன் இருக்க அனுப்பியதே அங்கு போய் உலக விவரம் கற்றுக் கொள்வாய் என்று. இம் முடிவை அவர்களிடம் கூறினால் பெரியம்மாவின் மனம் எப்படிப் பாடுபடும்?” என்று அம்மா மனம் நொந்து கூறியதெல்லாம் புத்திக்கு எட்டவில்லை. பிரகாரத்தில் வரும் வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே விழுகின்றது.

    ‘பெரியம்மா!’ நினைப்பு வந்ததும், அழுகைப் பொங்கிப் பொங்கி வந்தது. பெரியம்மா… நிஜம்மாலும் அவங்க பெரியம்மாதான்… தன் குழந்தைகளுக்கு இணையாக என்னையும் வளர்த்தார்கள். நானும் அவர்கள் குழந்தைகளை மிகவும் பத்திரமாய் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி என் பாதுகாப்பில் பல வாரங்கள் கூட வீட்டில் விட்டுச் செல்வார்கள். ஷம்மிம்பானு (அதுதான் என் உண்மையான பெயர். திருமணத்திற்குப்பின் மல்லிகாவாக மாறிவிட்டேன்). உனக்கு இன்னும் இரண்டு வருடத்தில் திருமணம் செய்யணும். பார்! இதெல்லாம் உனக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று ஒரு சிறிய நகைப்பெட்டியைக் காண்பித்தார்கள். ஏதேனும் நல்ல பொருட்களைப் பார்த்தால் இது! எங்கள் ஷம்மிமுக்கு என்று எடுத்து வைப்பார்கள். ஐயோ! பெரியம்மா! உங்களை நான் புரியாமல் போய் விட்டேனே! பெரியம்மா!

    நீங்கள் என்னை அம்மாவிடம் அனுப்பாமல் இருந்தது, அனுப்பினாலும் ஓரிரவு கூட அங்கு தங்க விடாதது ஆகியவையெல்லாம் நீங்கள் என்மேல் வைத்திருந்த அன்பு என்று எப்படி பெரியம்மா தெரிந்து கொள்ளாமல் போனேன்! அதை நீங்கள் அடிமையாய் என்னை நடத்துவதாகவும்; என்னுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் நினைத்து, ஏதோ விடுதலை பெற்றுப் போவதாய் நினைத்து…! காதலுக்கு கண் இல்லை என்பதை இப்போது புரிந்து கொண்டேன். எனினும் நான் எடுத்த வாழ்க்கை என்று அதில் வைராக்கியமாய் இருக்கிறேன் பெரியம்மா. இதோ! இந்த இடத்தில் ஒரு பழியை சுமந்து கொண்டு நிற்கின்றேன் என்றால் உங்கள் உங்கள் மனம் எப்படி வேதனைப்படும்.

    பெரியம்மா! எனக்கு அம்மாவிற்கும் மேலாய் இருந்தீர்கள். எப்படி வளர்த்தீர்கள்! தலையில் முக்காடு விலக அனுமதிக்கமாட்டீர்கள். அதிர்ந்து பேச, அதிர்ந்து நடக்க ஒப்பமாட்டீர்கள். அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தீர்கள். அம்மாவும் நீங்களும் எந்த நிலையிலும் பொய் சொல்லுதலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படுத-லும் கூடாது என்றல்லவா என்னை வளர்த்தீர்கள். பெரியம்மா! இந்த கணம்வரை நான் உங்கள் பெண்ணாகத்தான் இருக்கின்றேன். ஆனால் இவர்கள் பெரும்பழி சுமத்தி விட்டார்கள் பெரியம்மா!

    திருமணத்திற்கு பின்தான் எனக்குத் தெரியவந்தது. என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு என்று. அவரது அப்பாவும் குடிப்பாராம். என்ன சொல்வேன் பெரியம்மா?- எதை எப்படிச் சொல்வேன்! அவசரப்பட்ட வாழ்க்கை, அவசரத்தில் அள்ளித் தெளித்த நீர் போல்தான் ஆழமில்லாது இருக்கின்றது. தரையும் நனையவில்லை. தெளித்த கையும் நனையவில்லை. அவர் கொண்டு வரும் சம்பளம் பத்தவில்லை. பாதி நாட்கள் வேலைக்கே போவதில்லை. மதுபானக் கடை தான் கதியென்று கிடக்கும் வயதா பெரியம்மா! அங்குதான் மாலையில் அவரது நட்பு வட்டம் கூடுகிறது. இரவு முழுவதும் அடியும், வாயில் வரக்கூடாத வார்த்தைகள் எல்லாம் வந்து விழுகின்றன. வெளியில் என்னை அனுப்பாது வீட்டுக்குள் பொத்தி பொத்தி வளர்த்தீர்களே பெரியம்மா! உங்களுக்குத் தெரியுமா! நான் எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸில் வேலைக்குப்போய்க் கொண்டு இருக்கின்றேன். அதுதான் நம் சமீரா காலேஜுக்குப் போகும் போது நானும் அவ்வழியில்தான் போகிறேன். நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே செல்கிறோம். ஆம்! அவள் ஆட்டோவில் செல்கிறாள். நான் சைக்கிளில் செல்கின்றேன். அதுசரி இங்கு இந்த நிலை ஏன் என்று கேட்கிறீர்களா! முழுக்க நனைந்தாகிவிட்டது இனி முக்காடு எதற்கு! சொல்வது என தீர்மானித்தபின், எல்லாவற்றையும் சொல்வதுதானே நியாயம்.

    பெரியம்மா! என் மாமியாரின் தங்கை இருக்கிறார்களே, (அவர்களும் என்னுடன்தான் இந்த வரிசையில் நிற்கிறார்கள்) அவர்கள் பூர்விக நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று தன் அக்காவான என் மாமியாரிடம் உதவி கேட்டு போன மாதம் வந்தார்கள். நான், மாமியார் எல்லோரும் வீட்டில் இருக்கும் நகையை அடகு வைத்து ஒரு லட்சம் கொடுத்து உதவினோம். உடன் பிறப்பிற்குள் இந்த உதவிகூட இல்லைன்னா எப்படி பெரியம்மா! அதுவும் என் திருமணத்திற்கு அவர்கள் பணம் கொடுத்து உதவினார்களாம். அது முடிந்த கதை. அதன்பின் அவர்கள் வீட்டு நகைளை விற்றுத் தரச் சொன்னார்கள். நானும் மாமியாரும் அவர் இருக்குமிடம் சென்று, அங்குள்ள சேட்டுக் கடையில் விற்று மொத்தம் 46000 ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, பத்திரமாக அவர்களை அவரது வீட்டிற்கு கொண்டு விட்டு விட்டு நாங்கள் இங்கு கிளம்பி வந்துவிட்டோம். பின் நான்கு நாட்கள் போயின. என்னுடைய இளைய மாமியாரிடமிருந்து போன் வந்தது. என் மாமியார் முகம் மிகவும் கருத்து சிறுத்துப் போயிற்று. சரி. அவர்கள் அக்கா தங்கைக்குள் ஆயிரம் இருக்கும் என்று நான் விட்டு விட்டேன்.

    இரண்டு நாட்கள் கழிந்தன. நான் என் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நாட்களும் என் கணவர் குடிக்காது, வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தார். மூன்றாவது நாள் நான் வேலையிலிருந்து வரவும் என்மாமியார், கணவர், என் மாமனார், நாத்தனார் ஆகிய நால்வரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் பேச்சை நிறுத்தினர். என்னையே அனைவரும் பார்த்தனர். நானும் விளையாட்டாக,
    “என்ன அத்தை! ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் வந்ததும் நிறுத்தி விட்டீர்கள்!” என்று கேட்டேன்.

    அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தனர். பின் மாமனார்தான் பிரச்சனையைச் சொல்லத் தொடங்கினார். மல்லிகா! மருமகளே! நாங்கள் உன்மேல் எந்த தவறையும் பழியையும் சுமத்தவில்லை. ஆனால் இப்படியொரு காரியத்தை உன்னுடைய அத்தையின் தங்கை லல்லி கூறுகிறாள். இதை எப்படி உன்னிடம் கூறுவது என்று விழித்துக் கொண்டிருக்கின்றோம்.

    “அப்படியென்ன பெரிய பிரச்சனை மாமா! ஏதாஇருந்தாலும் சொல்லி விடுங்கள்” என்றேன் நான். “சொல்ல நாக்கூசுகிறது அம்மா! நீ லல்லி விட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் வைத்திருந்த பணத்தில் 4000 -ரூபாய் காணவில்லையாம். உங்கள் மருமகள் வந்து போனதற்குப் பின்தான் காணவில்லை என்று அடித்துக் கூறுகிறாள் அம்மா”. எனக்கு ஒரு நிமிடம் பெரியம்மா என் மூச்சே நின்று விட்டது. என் இஷ்டப்படி திருமணம் செய்து கொண்டேன் என்பதைத் தவிர வேறு ஒரு தவறும் செய்ததில்லை பெரியம்மா.

    அல்லா சத்தியமா சொல்றேன் பெரியம்மா! இவங்க இப்படியொரு பழியை என்மேல் போடுவாங்கன்னு நினைக்கல. அவங்க என் கம்பெனி வாசலில் பைத்தியம் மாதிரி நின்னுகிட்டு இருந்தாங்க பெரியம்மா! காலையிலிருந்து சாப்பிடலை மல்லிகா! வீட்டை ஆரம்பித்துவிட்டேன். எப்படி முடித்து சமாளிக்கப் போறேன்னு தெரியலைன்னு புலம்பினாங்க. நான்தான் சமாதானம் பண்ணி, சாப்பாடு வாங்கி சாப்பிடச் சொல்லி அத்தைகிட்ட பேசி கடனுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எல்லாம் பண்ணினேன். இவ்வளவு ஏற்பாடு பண்ணுகிறவங்க எங்கேயாவது 4000 ரூபாயை எடுப்பாங்களா! நான் உறைந்து போய் விட்டேன் பெரியம்மா! ஒரே வார்த்தைதான் சொன்னேன். “என்னை எங்க அப்பா அம்மா, பெரியம்மா அப்படி வளர்க்கலை. அத்தை! மாமா! நீங்க எதிர்பார்க்கின்ற மாதிரி சீர் செனத்தி கொண்டு வரலைதான. ஆனால் எங்க அப்பா அம்மா உண்மையையும் நேர்மையையும் அன்பையும்தான் சீராக கொடுத்திருக்காங்க. எல்லா மதமும் அதைத்தான் சொல்லுது என்று சொல்லும்போது என் இரண்டரை வயது குழந்தை ஷாலினி வந்தாள். “அம்மா” என்று கட்டிக் கொண்டாள். அவர் கும்பிடும் நடு வீட்டு சாமி எதிரில் என் குழந்தை தலையின் மேல் சத்தியம் செய்தேன் பெரியம்மா “எவ்வளவு தாழ்ந்தாலும் திருடி என் வயிற்றை வளர்க்க மாட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை” என்று.

    உடனே என் மாமியார், “அய்யோ! குழந்தைமேல் சத்தியம் பண்ணாதே குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்” என்று அலறினாள். “ஏன் அத்தை நீங்க பயப்படறீங்க? நான் பொய் சொன்னால்தான் குழந்தையை பாதிக்கும். நான் ஒருபோதும் அந்த இழிவான செயலைச் செய்யமாட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு உரிமையான கணவன் பர்ஸிலிருந்தே எடுக்க மாட்டேன்”. நான் சலனமே இல்லாது அன்றைய வேலையை செய்யப் போய்விட்டேன். ஆனால் என்மேல் பழி போட்டாங்களே! அவங்க மேல் எவ்வளவு இரக்கப்பட்டு எல்லாம் செய்தோம். ஏன் இந்த நிலை எனக்கு என்று யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

    மறுநாள் கம்பெனிக்கு போன் வந்தது. நீ மாலையில் சீக்கிரம் புறப்பட்டு வா. லல்லி அத்தை வீட்டுக்கு வந்திருக்காங்க. நாங்கள் சென்றமாதம் வேலூர் கிட்ட ஒரு கிராமத்தில் ஒரு பழங்காலத்துக் கோயில் ஒன்று உண்டு. அங்க என் கணவரின் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்ட அங்குள்ள பூசாரியிடம் குறி கேட்கலாம் என்று என்னை என் மாமியார் கூட்டிச் சென்று இருந்தார்கள். சென்ற மாதம் முழுவதும் என் கணவர் திமிரில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டார். பாவம்! பாழும் மனசு அம்மாவிற்கு, என்னசெய்ய! அவனுக்கு நேரம் சரியில்லை அதான் என்று புலம்பவே அங்கு சென்றிருந்தோம். ஆனால் அங்குபோய் அவர் முன் பிரச்சனையை சொன்னவுடனே அவர் கூறிவிட்டார். உன் பையன் சோம்பேறி. முதலில் வேலைக்குப் போகச் சொல்லு. அவன் நீ இருக்கும் தைரியத்தில் இப்படிச் செய்கிறான். நீதான் கெடுக்கிறாய். அடுத்த மாதம் வா. ஒரு சாமியாரிடம் அனுப்புகிறேன். அவர் முடிகயிறு போட்டு விடுவார். அதன் பின் அவன் குடித்தால் அவனுக்கு மரணம்தான் என்று சொல்லி அனுப்பி விட்டார். எனக்கு மனத்திற்குள் சந்தோஷம். இப்போதாவது அத்தை உண்மையை உணருவார்களா! குடிப்பதற்கு இவங்களே பணம் கொடுத்து விட்டு, கலாட்டா பண்ணும்போது புலம்புவார்கள்.

    “அந்த வேலூர் சாமி கிட்ட உன்னைக்குறி கேட்கக் கூப்பிடுது அவர் நீ எடுக்கலென்னு சொன்னால்தான் நம்புவாங்களாம்” என்றது அந்த போன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த 4000த்தில் நாம் அப்படி என்ன செய்துவிடப் போகிறோம். ஒரு மாதம் உழைத்தால் இதைவிட ஒன்றரை மடங்கு சம்பளம் எனக்கு. மடியில் இருந்தால்தானே கனம். என்ன! நல்லவேளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. கம்பெனிக்கு லீவு போட வேண்டாம். குழந்தை ஷாலினியை என் நாத்தனாரும் அவரும் பார்த்துக் கொள்ளட்டும் என யோசனை ஓடியது.

    வீட்டில் போனதும், மாமியார் முகம் வாடியிருந்தது. நம் மருமகளை வீணாகப் பழி போடுகிறாளே என்று. ஆனால் லல்லி அத்தையோ, வந்ததும் வராததுமாக கிளம்பு கிளம்பு நான் உன்னை நம்பத்தயாராக இல்லை. அந்த சாமிக்கிட்ட வா! அது உன்னை காட்டிக் கொடுத்து விடும் என்று குதிகுதின்னு குதித்தாள். நான் பேசவே இல்லை பெரியம்மா! முந்தின இரண்டு நாட்களாக ஷாலினிக்கு மூச்சிரைப்பு. ஆஸ்பத்திரிக்குப் போய், இராத்தூக்கம் முழித்த அலைச்சல். என் உடம்பும் முடியலை ‘அம்மா’ என்று அம்மாவின் மடியில் படுத்துவிட மாட்டோமா என்று இருந்தேன் பெரியம்மா! தவறு செய்யாவிட்டாலும் இப்படி அவமானம் ஏன் வருகிறது. நம் குரானில் இருக்கிறதா சொல்லுங்கள் பெரியம்மா! என் விதியை நொந்து கொண்டே கிளம்பினேன். பெரியம்மா! நான் முந்தாநாள் மதியம் சாப்பிட்டது. இன்னமும் ஒரு சோற்றுப் பருக்கைக்கூட உள்ளே போகவில்லை. என்னதான் அறிவு தைர்யப்படுத்தினாலும், மனசு புடுங்கி, வயிற்றில் ஒரு குமட்டல் இருக்கிறது பெரியம்மா! அந்தக் குமட்டல் இந்த சன்னிதானத்தில் கொஞ்சம் அடங்கி இருக்கு பெரியம்மா!

    இதோ! என் கண்முன் கோயிலின் கர்ப்பகிரகத்தில் அந்த கன்னித்தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் பெரியம்மாவாகத்தான் தெரிகிறார்கள். தாயைவிட வேறு யாருக்கு குழந்தையைத் தெரியும். வாய் பெரியம்மா! என்று அரற்றுகிறது.

    அதற்குள் என் முறை வந்துவிட்டது. அந்த பூசாரிமுன் என்னை அமரச் சொன்னார்கள். என்னுடன் வந்தவர்கள் என் பக்கவாட்டில் அமர்ந்து இருந்தனர். நான் என் மனதை ஒரு நிலைப்படுத்தி அவரை என் தாயாக எண்ணிக் கும்பிட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கலை சாமி! நீதான் அவர்களுக்குத் தெரியப்படுத்தணும்னு வேண்டிக்கிட்டேன்.

    சாமியார் புன்னகைத்தார். தட்டில் இருக்கும் தேங்காயை உடைத்தார். “அம்மா! பெற்ற குழந்தை மேல் சத்தியம் பண்ணியுமா அவர்கள் உன்னை நம்பாது இங்கு என்னிடம் அழைத்து வந்திருக்காங்க. என்னம்மா! நான் உனக்கு உன் பெரியம்மாதான். சந்தேகம் வேண்டாம். பெரியம்மாவின் காலடியில் உன்னை அர்ப்பணித்து விட்டாய். கலங்காதே! இந்தப் பணம் அவர்களே செலவழித்துவிட்டு, அந்த நாலு சுவத்துக்குள் திட்டம் போட்டு நடத்தி விட்டு, பழியை உன்மேல் போட்டு விட்டார்கள். உனக்கு நான் உடனிருப்பேன் என்றும். தாய்முன் மதம் ஒன்றுமில்லையம்மா. போ. உனக்கு அவங்களை சபிக்க வேண்டுமென்றால் என் கோவில் முன் உள்ள மண்ணை அள்ளித் தூவி கோபத்தைத் தீர்த்துக்கொள்.”

    அய்யய்யோ! சாமி! வேண்டாம் சாமி! எனக்கு வேண்டியது நான் எடுக்கலை என்கின்ற சொல் ஒன்றுதான். அதை அவர்களுக்கு நிரூபிக்கணும். அவ்வளவுதான் சாமி! எப்படிசாமி. என் பெரியம்மாவிடம் புலம்பியதை நீங்கள்…

    போ தாயி! எல்லாம் நல்லபடியா நடக்கும். எப்போதும் இப்படியே தெளிவா இரு தாயி. உன்ன இந்த கன்னியம்மா எப்போதும் காப்பாத்துவாள். என்று கூறி ஆசி வழங்கினார். எனக்கு அப்போதுதான் நிம்மதி வந்தது. நான் அவரை வணங்கி எழுந்து அவ்விடத்தை விட்டு வருவதற்குள் லல்லி அத்தையைக் காணோம். என்ன அவளையா பார்க்கிறாய்! அவ ஓடிப் போய்ட்டாம்மா! அவளால் எப்படி நிக்க முடியும். வா! நாம் வீட்டிற்குப் போகலாம். என் மேல் உனக்கு வருத்தம் இல்லையே. நான் என்ன சொல்லட்டும்? எதுவும் பேசவில்லை. நான் வாய் திறந்து பேசியே ஒன்றரை நாட்களுக்கு மேலாகி விட்டது.

    அனைவரும் வீடு செல்ல பஸ்ஸில் அமர்ந்தோம். என் மாமியாரின் தம்பி அவருடைய குடும்ப பிரச்சனைக்கு குறி கேட்க வந்திருந்தார். அதற்கு ஒரு தீர்வும் அவருக்கு கிடைத்தது. அவர், அவர் பிரச்சனையில் மூழ்கியிருந்தார். அவரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. என்மேல் விழுந்த பழி எப்படி விலகப் போகிறது என்று இந்தக் கோயிலுக்கு வரும்போது இருந்தது. அந்த சஞ்சலமும் இல்லை. பஸ் புறப்பட்டது. ஒரு மணி நேரம் கழிந்தது. அடடா! நான் குளித்துக் களைந்த ஆடையை அங்கேயே விட்டுவிட்டது தெரிந்தது. சரி போகட்டும். அந்த பழையதுணி மாதிரி என் பழியும் நீங்கிவிட்டது. அதற்காக சங்கடப்பட வேண்டாம்.

    இந்த மனசு அமைதியாயிற்று. அதோடு நிற்கிறதா! அறிவு விழித்துக் கொண்டது. இந்த சாமி, சாமியார் எல்லாம் செய்தித்தாளில் வரும் செய்திபோல் ஏமாற்று வேலையாய் இருந்திருந்தால்…. அம்மாடி என நான் கத்தவும், பஸ் எதிரில் சாலையை திடீரென்று கடந்த ஆட்டுக்குட்டிக்காக பிரேக் போடவும் சரியாக இருந்நதது. நல்லவேளை அந்த சத்தத்தில் என் சத்தம் எடுபடவில்லை.

    சரி! எதற்கு நடக்காத ஒன்றை நினைத்து மனம் உருகுவானேன். பாவம்! லலிதா அத்தை! ஏதோ பணக்கஷ்டத்தில், அவர்கள் புத்தி வேலை செய்து விட்டது. குறுக்குவழியை நாடிவிட்டது. என்ன ஒரு லட்ச ரூபாய் ஏற்பாடு பண்ணிக் கொடுத்த தன் அக்கா ஒரு 4000 -ரூபாயைத் தரமாட்டங்களா! உண்மையைச் சொல்லியிருந்தால்… விட்டுவிடுவோம். மறந்து விடலாம்தானே பெரியம்மா!

     

    Share
  • உறக்கத்திலோர் உளறல் !!!

    பி.தமிழ்முகில்   நீலமேகம்

     

    ஜானவி அந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் பாடப்பிரிவில் புதிதாக இணைந்திருந்தாள் . கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சென்ற பின்னரே அவள் வந்து சேர்ந்திருந்தாள் . பொறியியல் நுழைவுத்  தேர்வெழுதி விட்டு, முடிவுகளுக்காய் காத்திருந்தாள் . அவளது மதிப்பெண்கட்கு வெளியூரில் உள்ள புகழ் பெற்ற பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், தங்களது பிள்ளையை தங்களை விட்டு வெகு தொலைவிலிருக்கும் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அவளது பிரிவால் கஷ்டப்பட அவளது பெற்றோர் விரும்பவில்லை. எனவே, அவளை தங்களது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் கல்லூரியிலேயே சேர்த்தனர்.

    அன்றாடம் கல்லூரிக்கு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பேருந்தில் பிரயாணம்.  காலை மாலை வேளைகளில் இரண்டு மணிநேர பிரயாணத்தால் அவள் மிகவும் சோர்வுற்றாள் . இதனால், அவளுக்கு பாடங்களில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை. காலையில் அவசர அவசரமாக   உண்டும் உண்ணாமலும் ஓடுவாள். மாலையிலோ, பயணக் களைப்பிலேயே சீக்கிரமாய் உறங்கிப் போவாள். பாடங்கள் படிக்க போதிய நேரம் இல்லாமல் இருந்தது. கல்லூரி விடுதியில் தங்கிக் கொண்டால், அலைச்சலும் மிச்சமாகும், படிக்கவும் நிறைய நேரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், விடுதியில்  சேரப்போவதாக பெற்றோரிடம் கூறினாள். இதைக் கேட்டவுடன், அவர்களுக்கு என்னவோ போல் இருந்தது. மகளைப் பிரிய அவர்கள் விரும்பவில்லை. பின்னர், அவளது படிப்பு  கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அரைமனதாக ஒப்புக் கொண்டனர். இதுநாள் வரை, தன பெற்றோரை பிரியாத ஜானவிக்கு மனது என்னவோ போலிருந்தது. ஒருவாறு மனதினை தேற்றிக் கொண்டாள் . வார இறுதியில் வீட்டிற்கு வந்து செல்லலாம் என்றபடியால், அவளது மனதிற்கு ஆறுதலாய் அமைந்தது.

    கல்லூரி விடுதியில் ஜானவிக்கு கொடுக்கப்பட்ட அறையில் ஏற்கனவே நால்வர் தங்கி இருந்தனர்.இரண்டு இரண்டாமாண்டு மாணவிகள் அனிதா, கற்பகம், மூன்றாமாண்டு மாணவி சக்தி, முதலாமாண்டு மாணவி சந்தியா. ஐந்தாவதாய் ஜானவி வந்து சேர்ந்தாள். ஜானவி அறைக்குள் சென்று தனது உடைமைகளை வைத்து விட்டு, அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மற்றவர்களது முகத்தில் அவ்வளவாக ஆர்வமில்லாது கடனே என்று அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு மாத காலமாய் நால்வராய் மட்டுமே இருந்து பழகிய அவர்களுக்கு, ஐந்தாவதாய் வரும் ஒருவரை அனுசரித்துப் போக மனமில்லை. அவர்கள் ஏன்  இப்படி இருக்கிறார்கள் என்பது விளங்காமல் சற்று குழப்பமடைந்தாள். அவர்களது செய்கைகளும் நடத்தைகளும் சற்று வருத்தமளித்தாலும், தான் படிப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். எவரைப் பற்றியும்  எண்ணி எதற்கு வீணான மனசஞ்சலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென  சகஜ நிலையில் இருக்க முயன்றாள்.

    ஓர்நாள்  இரவு, விடுதியில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, எங்கும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. வெளி வராண்டாவில் இருக்கும்   மின்விளக்கின் ஒளியைத்   தவிர, மற்ற இடங்களில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது, பூச்சிகளின் சப்தம் மட்டுமே.திடீரென, அந்தப் பேரமைதியைக் குத்திக் கிழிக்கும் விதமாக, ஓர் குரல். தூக்கத்திலிருந்து பதறிப்போய்  எழுந்தாள்  சக்தி. முதலில் முனுமுனுப்பாய் ஆரம்பித்த அக்குரல் மெல்ல மெல்ல உயர்ந்தது. சப்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜானவி பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேசுவது எதுவும் ஓர்  கோர்வையாக இல்லாமல், ஏதோ உளறல் போல் இருந்தது. அறையிலிருந்த மற்ற நால்வரும் பயந்து போய்  விழித்துக் கொண்டனர். யாரும் எழுத்திருக்காது படுத்தபடியே வைத்த கண் வாங்காது ஜானவியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென ஜானவி, தடதடவென்று  உருண்டு வந்து, தன்  அருகினில் படுத்திருந்த சக்தியினை வேகமாக கட்டிலுக்கடியில் தள்ளிவிட்டாள் . மேலே காலை தூக்கிப் போட்டவள், சக்தியைப் பார்த்து, ” யார் நீ ? ” “யார் நீ ?” என்று பெரும் கூச்சலிட்டாள் . எதிர்பாரா நேரத்தில், எதிர்பாராததொரு நிகழ்வினைக் கண்ட சக்தி பயத்தில் அப்படியே உறைந்து போனாள். வீறிட்டு அலறினாள் . இதற்குள், அனைவரும் பயந்து போய், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து பயத்துடன் சுவற்றின் ஓரமாய் ஒதுங்கி நிற்க, சக்தியும் ஒருவாறு சமாளித்து கட்டிலுக்கடியிலிருந்து எழுந்து மற்ற மாணவியருடன் நின்று கொண்டாள். அனைவரும் பயத்தில் ஏதும் புரியாது நின்று கொண்டிருக்க, படுக்கையில் இருந்து எழுந்த ஜானவி, அப்போது தான் உறக்கத்திலிருந்து  எழுந்தவள் போல் ,    ” என்னாச்சு ?       ஏன் எல்லாரும் பயந்து போய்  நிக்கறீங்க? ” என்றவாறு மற்றவர்களிடம் வந்தாள். ஆனால், அனைவரும் பயந்து ஒதுங்கினர்.

    அடுத்தநாள் காலை, இச்செய்தி  விடுதி முழுவதும் பரவியது. விடுதி மாணவிகள் அனைவரும் ஜானவியை விசித்திரமாகப் பார்த்தனர். அவளது வகுப்பில் மற்ற மாணவியருக்கும் இவ்விஷயம் தெரியவர, எவரும் அவளுடன் பேசவில்லை.  இன்னும் பலரோ பயந்து ஒதுங்கினர். சிலர் ஒருபடி மேலே போய்  ” இவளுக்கு பேய் புடிச்சிருக்கு போல”  என்றனர். சிலர்           “இவளுக்கு பைத்தியம்” என்று தங்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் கேட்ட ஜானவி, கண்கள் குளமாக மௌனமாய் நடந்து கொண்டிருந்தாள் . ஜானவியின்  பின்னால் கூட்டமாக, அவளது வகுப்பு மாணவியர் சிலர் வந்து  கொண்டிருந்தனர். அவர்கள் மெல்லிய  குரலில் ” ஏய் ! ஜானவி போறா…இவளுக்கு பேய் புடிச்சிருக்கான்னு பாத்துரலாம்.பேய்க்கு முன்னாடி நின்னு பேசுனா தான் கேட்கும்.பின்னாடி இருந்து பேசுனா தெரியாது. இவ பேயான்னு சோதனை பண்ணிருவோம்” என்று பேசி இருக்கின்றனர்.இதனால் மிகவும் மனமுடைந்து போனாள்  ஜானவி. அறையில் உடனிருக்கும் மாணவியரோ , ஜானவி அறையில் இருந்தால், படீரென கதவை அடைப்பதும், எவரையோ திட்டுவதைப் போல் மறைமுகமாக ஜானவியைத் திட்டுவதும் என  அவளை துன்பப் படுத்தினர். இதனால், காலையில் அறையை விட்டு வெளியேறினால், மாலையில் அறையில்  எவருமில்லாத நேரத்தில் வந்து தன்  வேலைகளை முடித்துக் கொள்வாள்.இரவிலும் வெகுநேரம் கழித்து அனைவரும் உறங்கிய பின்னரே, உறங்க வருவாள். அவளது நிலை மிகவும் பாவமாக இருந்தது.

    சில நாட்களாக ஜானவியை கவனித்து வந்தாள் சக்தி. அவள் ஏதோ சோகத்தில் இருப்பதாய் உணர்ந்தாள். மாணவியர் அவளை கிண்டல் செய்வதையும் கேள்விப்பட்டாள். மிகவும் வருத்தமுற்றாள். அவளது மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்தவளாய், அன்று மாலை வகுப்புகளனைத்தும் முடிந்த நிலையில் ஜானவியை அவளது வகுப்பில் சென்று பார்த்தாள்.  ஒருவித பயத்துடனே சக்தியை நோக்கி வந்தாள் ஜானவி. ” பயப்படாத ஜானவி. ” என்று அவளுக்கு தைரியமளித்தாள். ” அன்றைக்கு  இராத்திரி என்ன நடந்ததுன்னு தெரியுமா? ” என்றாள். “தெரியலையே அக்கா… எல்லாரும் பயந்து போய் நின்னுட்டு இருந்தீங்க. நானும் வந்து உங்களோட நின்னப்ப , எல்லாரும் என்னையப் பாக்கவே பயந்து ஒதுங்குனீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நானும் பயந்துட்டேன் அக்கா” என்றாள் .  சக்தி மெதுவாக அந்த இரவு நடந்த விபரங்களை ஒவ்வொன்றாகச் சொன்னாள். ” நான் இப்படி எல்லாமா அக்கா பண்ணினேன் ? எனக்கு எதுவுமே தெரியாது அக்கா. சாரி ” என்றாள் ஜானவி.  தான் ஏதோ  உடல் கோளாறுக்காக மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அம்மருந்தின் பக்க விளைவுகள் இவ்வாறு இருக்கக்கூடுமென மருத்துவர் கூறியிருப்பதாக தெரிவித்தாள். உண்மையை அறிந்து கொண்ட சக்தி, அதன்பின் அவளுடன் எப்போதும் போல் சகஜமாகப் பழகினாள்.

    ஒருமாதம் சென்றுவிட்ட நிலையில், ஜானவியுடன் அனைவரும் சகஜமாகப் பழகாவிட்டாலும், ஒரு சிலர் அவளுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டனர். தனிமைத் துயர் தீர்ந்தபடியால், அவளும் மகிழ்வுடன் தன் பாடங்களில் கவனம் செலுத்தலானாள் . ஒருசிலரோ, இன்னும் அவளை கிண்டலடித்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களை அவள்  ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தன் தோழியருடன் மகிழ்வாகவே தன் கல்லூரி வாழ்வை அனுபவித்தாள்.

    மீண்டும் ஓர் நாள் இரவு, ஜானவி தூக்கத்தில் கை கால்களை உதற  ஆரம்பித்தாள். ஏதேதோ பேசினாள் . இம்முறையும் அறையில் உடனிருந்த மற்ற மாணவியர் அனைவரும் பயப்பட, சக்தி மட்டும் அருகில் சென்று அவளை எழுப்பினாள். அவள் எழுந்திரிப்பதாய் இல்லை. பெருங்குரலெடுத்து ஏதோ பேச ஆரம்பித்தாள். மனதினுள் இதற்கு முன் ஏற்பட்ட அனுபவம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , ஜானவியை உலுக்கினாள். ” ஜானவி !  ஜானவி ! எழுந்திரு ! என்னாயிற்று உனக்கு ? எழுந்திரு!  ” என்று சற்று சப்தமாகக்  கூறினாள். உறக்கம் கலைந்தவளாய் எழுந்த ஜானவி , ” என்னக்கா ஆச்சு ? ஏதாவது பேசினேனா? ” என்றாள். “ஆமாம் ! ” என்றாள்  சக்தி . ” பயமா இருக்கு அக்கா! நான் உங்க கையைப் பிடிச்சுட்டு படுத்துக்கறேன்” என்ற ஜானவி, சக்தியின் கையைப் பிடித்தவாறே உறங்கிப் போனாள். அதன்பின், ஓர்நாளும் ஜானவி உறக்கத்தில் பேசவில்லை.

    தனக்கு ஆதரவாயும், பக்கத் துணையாகவும் ஒருவர் இருக்கிறார் என்ற மனோதிடம் ஜானவிக்கு ஏற்பட, அவளது பயம் அனைத்தும் இருந்த இடம் தெரியாது பறந்தோடியது.

     

    p.s.

     Somniloquy

               Somniloquy or sleep-talking refers to talking aloud while asleep. It can be quite loud, ranging from simple sounds to long speeches, and can occur many times during sleep. Listeners may or may not be able to understand what the person is saying. Sleep talkers usually seem to be talking to themselves. But sometimes, they appear to carry on conversations with others. They may whisper, or they might shout.actions may be funny or violent. Things that can cause sleep talking include : certain medications, emotional stress, fever, mental health disorder.

    Source:

    wikipedia.org

    webmd.com

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(67)

    சக்தி சக்திதாசன்

     

    vaali

    clip_image002

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    துயரம் தோய்ந்த உள்ளத்துடன் , எழுதும் இந்த விரல்கள் முக்கியமான் ஒரு வலுவை இழந்து போன்ற ஒரு கனத்த இதயத்தின் சுமையைத் தாங்கிய நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகின்றேன்.

    “வாலி”பத்தின் முக்குயமான பகுதியத் தன் பெயரில் கொண்டிருந்ததினால் அவர் என்றுமே எங்களுடன் வாலிபக் கவிஞனாக இருந்து விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்தோம் போலிருக்கிறது. காலப்புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தை அனைவர்க்கும் எழுதும் ஒரு மாபெரும், மறைக்க முடியா எழுத்தாளன் காலன் எம் அன்புக்குரிய வலிபக் கவிஞர் வாலியின் வாழ்க்கைப் புத்தகத்திலும் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டான்.

    என்ன செய்வது ? தமிழுலகம் ஒரு உன்னதப் படைப்பாளனை இழந்து விட்டது. தமிழ்த் திரையுலகம் நான்கு தலைமுறைகளுக்கு பாடல்கள் தந்த ஒரு வித்தக பாடலாசிரியனை இழந்து விட்டது.

    நானோ ?

    எப்போதும் தப்பாமல் என்னைத் தட்டிக் கொடுத்து நேசமிகு நல்ல பல கணங்களை எனக்குக் கொடுத்த ஒரு பாசமிகு குருநாதனை இழந்து விட்டேன்.

    ரங்கநாதன் எனும் இந்த ஸ்ரீரங்கம் தந்த ஒப்பர்ர ஒரு கவிஞனை , இலக்கிய வித்தகனை, தமிழை நேசித்தவனை நாம் இழந்து விட்டோம்.

    என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசனை அவர் வாழும் நாளில் நான் சந்திக்க முடியாமல் போய் விட்டதே எனும் ஆதங்கம் எப்போதும் என் மனதினுள் அழப்பதிந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது.

    அப்படியில்லாமல் என்னைக் கவர்ந்த இன் இனிய கவிஞர் வாலியை நான் என் வாழ்நாளில் நான் சந்தித்து விட வேண்டும் எனும் இலக்கிய தாகமே எம் சந்திப்புக்கு வித்திட்டது.

    அப்போது நான் தோழி நிர்மலாவின் “நிலாச்சாரல்” இணையத் தளத்தில் ஓய்வற்று எழுதிக் கொண்டிருந்த நேரம் .

    “ சக்தி தமிழக இலக்கியப் பிரபலங்களுடனான ஒரு நேர்காணல் தொடரை நீங்கள் எமக்காகத் தந்தால் என்ன ? “ என்று தோழி சிறு பொறியைத் தட்டி விட அது ஒரு அழகிய தொடராக ஒளியேற்றியது.

    எனது நீண்டநாள் மனவோசையான “கவிஞர் வாலியுடனான சந்திப்பு” என்பதற்கு இவ்நேர்காணல் ஒரு வழிகோல் சமைத்தது என்பதுவே உண்மை.

    ஆனால் அச்சந்திப்பு ஒரு ஊடகத்திற்கான நேர்காணல் சந்திப்பு என்பதை விட என் உளம் நிறைந்த “கவிஞர் வாலியுடன்” ஒரு ஒப்பற்ற நீண்டநாள் உறவுக்கு வழி சமைத்தது என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.

    அவ்வுறவு நட்பு அல்ல அதைத் தாண்டிய ஒரு “குரு சிஷ்ய” பக்தி என்றே சொல்ல வேண்டும். கவினர் வாலி என்பவரைப் பற்றி அதுவரை ஊடகங்களினூடாக அறிந்தவைகள் ஏராளம். ஆனால் அவருடனான நேர்ச் சந்திப்பு என்னுள் அவரிப்பற்ரி இருந்த மதிப்பை மென்மேலும் பன்மடங்கு உயர்த்தியது .

    “உண்மை , நேர்மை, உழைப்பு ” என்பனவற்றிற்கு கவிஞர் வாலி ஜயா கொடுத்த முக்கியத்துவம் உண்மையிலேயே என்னைச் சிலிர்க்க வைத்தது.

    இத்தகைய ஒரு உன்னத கவிஞன் அனைத்திற்கும் மேலாக ஒரு உத்தம மனிதன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவே எனக்குப் பெருமை,/ இ,ம் மாபெரும் கவிஞன் வலம் வந்த மண்ணிலே நானும் என் கால் பத்தித்திருக்கிறேன் என்பதுவே என் வாழ்வில் எனக்குப் பெருமை சேர்க்கும் விடயம்.

    ஒரு சாதாரண் ஈழத்தமிழன் புலம் பெயர்ந்து இங்கிலாந்திலே வாழ்பவன் ஏதோ கொஞ்சம் எழுத்திலே மோகம் கொண்டிருப்பவன் என்று எதையுமே கணக்கிலெடுக்காமல் என்னை மிகவும் அன்பாக உபசரித்த அந்த மனிதாபிமானம் மிக்க கவிஞர் வாலி வானளாவும் வகை உயர்ந்தவர் என்பதுவே உண்மை.

    அந்நாட்களில் கைகளினால் எழுதும் பிரதி போல கணனி மூலம் நான் தயாரிக்கும் “தமிழ்ப்பூங்கா” எனும் இதழைப் பார்த்து எனக்கு ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளைத் தந்தலிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முன்னர் வரை எப்போது நான் தமிழகம் வரும்போதும் நேரடியாகவும், இங்கிலாந்திலிருந்து தொலைபேசி வழியாகவும் தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்து வந்த ஒரு உயர்ந்த இலக்கியச் சிற்பியின் இழப்பு என்னைத் துயரத்திலாழ்த்துகிறது..

    இவரைப் பற்றி பல செய்திகளை நான் உங்களுடன் இம்மடலின் மூலம் இனிவரும் காலங்களில் பகிர்ந்து கொள்வது நான் செய்ய வேண்டிய காலத்தின் கடமை என்றே கொள்கிறேன்.

    இம்மடலின் முடிவில் அவருடைய இரண்டு சிறிய ஆரம்பக் கவிதைகளை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவர் பள்ளியில் படிக்கும் போது அவரின் “வாலி” எனும் புனைப்பெயரைக் கண்டு “வாலில்லையே உனக்கு பின் எப்படி வாலி என்று . . . . “ பரிகசித்த ஆசிரியருக்கு

    காலில்லை என்பதால்

    காடிகாரம் ஓடாதா ?

    வாலில்லை என்பதால்

    வாலியாக முடியாதா ? என்று இன்பத் தமிழாலே பதிலடி கொடுத்தாராம்

    இதோ என்ன்னைப் போன்றவர்களுக்கு அவர் தரும் ஊட்டச் சத்து ,

    ஊக்கு விக்க ஆளிருந்தால்

    ஈக்கு விக்கும் ஆள்கூட

    தேக்கு விற்பான்

    ஆமாம் எளிமை, இனிமை, புலமை இவையனைத்தின் மறுவடிவம் தாம் என் கவிஞர் வாலி ஜயா. இவரின் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டதாக அந்தக் காலன் எண்ணலாம் ஆனால் இவ்வகிலத்தில் தமிழை நேசிக்கும் கடைசித் தமிழன் உள்ள வரை எம் வாலி ஜயா என்றும் முதிரா “வாலி”பனாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

    அவரின் ஆத்ம சாந்திக்காக ந்ல்லாம்வல்ல என் மனம் வாழும் திருஅண்ணாமலையான் பாதம் பணிகிறேன்.

    துயரத்துடன்

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வாழ்க்கை நலம் – 19

     

    குன்றக்குடி அடிகள்

    19.  நன்றி மறவேல்

    நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ஒருவர், ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றதிற்கும் உதவி செய்ததை மறத்தல் கூடாது. நன்றை – நல்லதை மறவாதிருக்கும் பண்பினைக் குறிக்கும் சொல் நன்றி என்பது. இந்தப் பரந்த உலகத்தில் மானுடம் ஒருவருக்கு ஒருவர் கலகம் செய்து அழிந்து கொண்டே வந்திருகிறது. அழிந்துமிருக்கிறது.

    இத்தகு உலகில் ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்வது என்பதே வளர்ந்த மனிதரின் நிலை. இங்ஙனம் ஒருவர் செய்த நன்மையை மறக்காது பாராட்டினால் மேலும் பல நன்மைகளைச் செய்ய அவர் முன்வருவார். நாடு வளரும். அதோடு நன்மையை அடைந்த ஒருவர் அந்த நன்மையை மறவாதிருத்தலே அவர் அந்த நன்மையின் – தன்மையின் பயனை அறிந்திருக்கிறார் என்று உணரப்பெறும். இங்ஙனம் தன்மையை அறிந்துணரும் நிலையில்தான் நன்மை வளரும். பலரும் பயன் பெறுவர்.

    ஒருவர் செய்த நன்மையை மறந்து விட்டால், அவருக்கு யாரும் நன்மை செய்ய முன்வர மாட்டார்கள். அதனால் அவர் தம் வாழ்வில் தேக்கம் ஏற்படும். துன்பங்களும், துயரங்களும் தோன்றி அல்லற்படுவர்; அழிந்து போவார். அதனால் “நன்றி மறப்பது நன்றன்று” என்றது திருக்குறள். நன்மையை மறவாதிருத்தலே நன்மையை நிலையாகப் பாதுகாக்கவும் மேலும் பல நன்மைகளைப் பெறவும் கூடிய வழி.

    நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களாலே மட்டுமா இந்த உலகம் இயங்குகிறது. இல்லையே! இந்த உலகில் நல்லவர்கள் – நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம். தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால்  நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன்? தீமையால் விளையக்கூடிய பயன் யாதுமில்லை.

    ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார் மீது காழ்ப்புணர்ச்சி கால்கொள்ளும் – அவருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்க மாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால் “நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம்! தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி! வையகம் வளர வாழ வழி!

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.”

    இத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உள இயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும். அவ்வளவுதான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை “அன்றே” மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர் [08/07/2013 – 14/07/2013]

     பேரா.  நாகராசன்

    சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்ற கவிதை வரிக்கேற்ப மடலாடர்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்கள் சிந்தனை வளங்களைக் கருத்து வடிவில் வல்லமை மின் இதழிலும் மடலாடல் குழுவிலும் வெளியிடுவது நாம் அறிந்ததே

    தனித்திருப்பவன் தனியனல்ல ஒருவரின் தனித்தன்மை ஒரு குழுவில் இருக்கும்போதே வெளிப்படும். தனித்தன்மை மிளிரத் தங்களின் ஆற்றல் வெளிப்படும் வண்ணம் தெரிந்தெடுத்த புலத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்துபவர்களே வல்லமையாளர்கள்

    photoநவீன விஞ்ஞானம் நாத்திகம் என்று தமிழ்க் குமுகம் தன்னுடைய நடுநாயகமான ஆன்மீகத்திலிருந்து விலகி வெகுதூரம் பயணிக்கும் ஆபத்தான சூழலில் தமிழகத்தின் சமயச் சிந்தனைகளைத் தொடராகக் கோர்வையுடம் எழுதும் வல்லமை உடையவர் அவர்

    சமயக் குரவர்களையும் பாணர்களையும் நினைவில் நிறுத்தும் வண்ணம் பல தலங்களுக்கு நேரில் சென்று அத்தலங்களின் பெருமைபற்றி ஆற்றொழுக்கான எளிய தமிழ் நடையில் எழுதும் வல்லமை படைத்தவர் அவர்

    பழமையான ஓலைவடிவிலும் அச்சு ஊடகத்திலும் உள்ள வளங்களில் சிறப்பான சிலவற்றித்  தேர்ந்தெடுத்து இணையத்துக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவர்  அருகிவரும் கருத்து வளங்களை எண்ணிமப்படுத்துவதில் வல்லவர்

     ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்ததும் இணையத்தில் தன் பங்குக்கான தினம் ஒரு திவ்ய நாமம் நாள் தவறாமல் எழுதும் வல்லமையுடையவர் நல்லதொரு கருத்தென்றால் தயங்காமல் பாராட்டுவதும் குறையைச் சுட்டும்போது மென்மையான நிலைப்பாட்டையும் எடுத்துப் பிறர் மனம் புண்படாமல் எழுதும் வல்லமையாளர் இணையத்துக்கே இயல்பான கருத்து மோதல் கட்சி சேர்த்தல் பிறரை எள்ளி நகையாடல் போன்ற வல்லமைகள் இல்லாதவர் இணையத் தமிழுக்கு உயர்கல்வியில் உரிய இடம் கிடைக்கவேண்டும் என்ற மாறாப்  பற்று கொண்டவர் அவர் திரு.காளைராஜன் அவர்கள் அவரே இந்த வார வல்லமையாளர் அவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெருமை அவரே இந்த வார வல்லமையாளர்

     

    Share