நான் அறிந்த சிலம்பு – 82 (29.07.13)
யாம் கூடி ஊடி இருந்த காலத்து
அந்திமாலை வந்தால்
பிரிவாற்றாமையால் வருந்தி
காமநோய் கொள்வேன்
என்றறிந்தும் கூட
என்னை எள்ளியாடும் பொருட்டு
அவள் தன் கிளி மொழிகளையும்
அன்னத்தின் மென்னடையையும்
களிப்புடைய மயில் போன்ற சாயலையும்
மறைத்து வைத்து
வேல் போன்ற நெடிய கண்களையுடைய
ஏவல் பெண் போன்ற உருவம் புனைந்து
தனித்து வந்து என் முன் நடிப்பாளே…
வசந்தமாலையே!
இதுதான் அவள் நடித்த உள்வரி.
சிலம்பு வாய் விட்டுச் சிணுங்கவும்
மேகலை அசைந்து ஒலிக்கவும்
அணிகலன்கள் புனையும் அளவு
இருந்தும் இல்லாத இடையுடன்
நடந்து வருகின்ற அவள்
என்மீது காதல் கொண்டவள் போல்
என்னையே பார்த்திடுவாள்.
அவளை நான் பிரிந்து வருந்துவதை
அறிந்திருந்தும் கூட
என்னுடன் இணைந்திருக்காமல்
புறத்தே நின்றிருப்பாளே……
வசந்தமாலையே!
இதுதான் அவள் நடித்த புறவரி.
பூமாலை, குழல், தாதுக்கள் சேர்ந்த கூந்தல்
ஒற்றை வட முத்து மாலை
அழகிய மார்புகள் இவைகளின் சுமையால்
வருந்துகின்ற மின்னல் போன்ற
இடையாள் அவள்
நல்ல நெற்றியை உடையாள்
என்னருகேதான் வாராது
வாயில் புறம் வந்து நிற்பாள்.
என் காம வேட்கையை
ஏவல் மகளிர் வாயிலாகக்
குறிப்பால் செய்தியாக
உணர்த்திய போதும்
அச்செய்தி மொழியைப் புரிந்து கொள்ளாது
வேறு பொருள் கொண்டவள் போல்
அழகிய கூந்தல் கொண்ட அவள்
தளர்ந்த மேனியள்
போலத்தான் நடிப்பாளே..
வசந்தமாலையே!
இதுதான் அவள் நடித்த கிளர்வரி.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 78 – 95
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 96 – 101
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html
படத்துக்கு நன்றி:
http://puthu.thinnai.com/?p=18576