தி. சுபாஷிணி

வழக்கத்திற்கு மாறாக சுந்தரம் பெரியப்பாவின் வீடு மிகவும் சுத்தமாக, பிரகாசமாகத் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு. பெரியப்பாவின் வீடு இரு வாசல்களுடன், மூன்றடி உயரத்தில் காம்பவுண்ட் சுவர் கொண்ட வீடு.  வீட்டின் முன்னும் பின்னும் மரங்களும் செடிகளும் சுதந்திரமாய் வளர்ந்திருக்கும்.  கொடுக்காய்ப் புளி மரத்தின் இளஞ்சிவப்புக் காய்களுக்காக வரும் கிளிகள் சந்தோஷமாய் வந்து போகும். வாதாமரங்களில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும். காகங்களின் கூட்டங்கள் பெரியப்பாவிற்கு காலத்தைக் கூறிக் கொண்டிருக்கும்.  வீடு சுற்றிலும் பழுப்பு இலைகளும் காய்ந்த பூக்களும், கனிகளும் கலந்து கிடந்து ஒரு தனி அழகை அளித்துக் கொண்டிருக்கும்.

ஆனால் இன்று…! இருவாசல்களும் அழகாய்ப் பெருக்கிக் கோலமிட்டிருந்தது. இரண்டாவது வாசல் கதவு திறந்திருந்தது. அதன் வழியே சூரியன் தாராளமாகச் சென்று கொண்டிருந்தான். அன்றைய தினம் காலை வெய்யில் வீட்டையே பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. சுப்ரமணியம் ஒரு கணம் எல்லாவற்றையும் நின்று அனுபவித்துவிட்டு, பெரியப்பாவின் வீட்டிற்குள் நுழைந்தான். அன்று வந்த தினசரிகள் அழகாய் மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெரியப்பாவைக் கூப்பிட யத்தனித்தான் சுப்ரமணியம்.

அதற்குள், “அடடே! சுப்ரமணியமா? வாப்பா! வா! நீ வந்து பல நாட்கள் ஆகிவிட்டனவே!” என்று கூறிக் கொண்டே அவனுக்கு ஒரு நாற்காலியைப் போட்டுவிட்டுத் தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டார் சுந்தரம்.

“ஆமாம் பெரியப்பா! கிட்டதட்ட இரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இங்கு வந்து, வருடக் கடைசியல்லவா! ஆடிட்டிங்கு ஒவ்வொரு ஊராய்ப் போனதில் நாட்கள் கடந்ததே தெரியவில்லை பெரியப்பா! நேற்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் வள்ளி தான் உங்களை உடனே பார்த்து வருமாறு கூறினாள். அவளுக்கும் இரண்டு சிறுகுழந்தைகளை வைத்துக் கொண்டு, உங்களைப் பார்க்கவே வரமுடியவில்லையாம். மிகவும் வருத்தப்பட்டாள் பெரியப்பா!  சின்னவனுக்கு உடம்பு இலேசாக சுரம் போலிருக்கு இல்லாவிட்டால் அவளும் உங்களைப் பார்க்க என்னுடன் வந்திருப்பாள்” என்று மனம் வருந்திக் கூறினான்.

“அப்புறம்! எப்படிப் பெரியப்பா இருக்கிறீர்கள்!” என்று சுப்ரமணியம் வினவ,
“அதுதான் நீ வந்துட்டாயே, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று பெரியப்பா சொல்லி முடிப்பதற்குள், ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியொருத்தி நல்ல வாசனையான மோரைக் கொணர்ந்து வைத்தார்கள்.

அந்த இளம் வெய்யில் நேரத்திற்கு அது மிகவும் இதமாக இருந்தது சுப்ரமணியத்திற்கு. அவனுடைய மனம் இந்த பெண்ணின் இருப்பை இரண்டாவது அதிசயமாய்ப் பார்த்தது. சுந்தரம் பெரியப்பாவின் வீட்டுப் பிரகாசத்திற்குப் பொருள் புரிந்துவிட்டது.

சுந்தரமும், சுப்ரமணியம் மோர் குடிக்கும் வரைக் காத்திருந்தார்.  பின், ஊர் நிலவரம், குடும்ப நலம், அலுவலக சூழ்நிலை, அரசியல் என்று பேச்சு போய்க் கொண்டிருந்தது. சுப்ரமணியத்திற்கு செல்வி ஒரு சில சாமான்கள் மதிய சாப்பாடு தயாரிக்க வாங்கிவரச் சொன்னது நினைவுக்கு வரவே, சுப்ரமணியம் பெரியப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். சுந்தரமும் வாசல்வரை அவனை வழியனுப்பினார். சுந்தரமும் மோர் தந்த மகராசியை அறிமுகப்படுத்தவில்லை,  சுப்ரமணியமும் அவரிடம் கேட்வில்லை. இயல்பாகவே, சுப்ரமணியத்திற்கு தனக்கு எவ்வளவு நெருக்கமாய் இருந்தாலும் அவர்கள் விஷயத்தில் தானாகப் போய் எதுவும் கேட்கமாட்டான்.  அவர்களாகச் சொன்னாலும் கேட்டுக் கொள்வதோடு சரி. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு என்று தெரிந்து இருப்பவன் சுப்ரமணியம்.

சுப்ரமணியம் வந்து போனதிலிருந்து சுந்தரத்திற்கு அவனது நினைவாகவே இருந்தது. தன் நாற்காலியில் வந்து அமர்ந்து தினசரியை கையிலெடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார்.  அவரது நினைவுகளும் பக்கம் பக்கமாய் திரும்பத் தொடங்கின.

கல்லூரிப் படிப்புத் தொடங்கும் காலத்தில், சுப்ரமணியத்தின் சகோதரர்கள், நண்பர்கள் அனைவரும் ஸயின்ஸும் மேத்ஸும் எடுத்துப் படித்தனர். சுப்ரமணியம் மட்டும், சுந்தரம் கூறினார் என்பதற்காக ‘காமர்ஸ்’ எடுத்துப் படித்தான்.  அவனுக்கு அந்தப் பெரியப்பாதான் ரோல் மாடல். கல்லூரிக்கு செல்லும் நேரங்களைவிட்டால், மீதி நேரங்கள் எல்லாம் இவர் வீடே கதியென்று கிடப்பான். சுந்தரத்தின் கிளையண்ட்ஸ் எல்லோரும் இவனது நண்பர்கள். வசந்தா பெரியம்மா இவனுக்கு அம்மாவிற்கும் மேல் என்றுதான் கூற வேண்டும்.

அவன் வீட்டிலிருந்து ஆள் வந்தால்தான் இவனே தன் வீட்டிற்குக் கிளம்புவான். அதுவும் மனசே இல்லாமல்தான்.  பெரியப்பாவின் வழிகாட்டுதலில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஆடிட்டர் தேர்விலும் வெற்றி பெற்று பெயர் சொல்லும்படியான ஆடிட்டராகி விட்டிருந்தான் இன்று. சுப்ரமணியத்திற்கு, வசந்தா பெரியம்மாவின் உறவுக்காரப்பெண் செல்வியை மணம் முடித்து வைத்ததும் சுந்தரம் பெரியப்பா தான். இதில் சுப்ரமணியத்திற்கு பெருமையெனில், அவனது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி.

காலத்தின் வேகத்திற்கு வசந்தா பெரியம்மாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. சுப்ரமணியம் தன் கணவரைப் பார்த்துக் கொள்வான் என்னும் நம்பிக்கையில் விரைவில் சிவபதம் அடைந்து விட்டாள். அவளது நம்பிக்கையை இன்றளவும் சுப்ரமணியம் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். சுந்தரம் பெரியப்பாவின் சொத்து விஷயங்கள், வரவு செலவு, வரி கட்டுதல் போன்ற வெளி வேலைகள் முழுவதும் சுப்ரமணியத்தின் கவனிப்பில்தான் நடந்து வருகின்றன.

பெரியப்பாவின் தேவைகள் அனைத்தும் அவர் நினைக்குமுன் அவர்முன் வந்து நிற்கும். இருபது பேர்கள் கொண்ட கம்பெனியை நடத்துகின்றான் சுப்ரமணியம். அதனால் பெரியப்பாவின் வேலைகளைக் கவனிப்பதில் சிரமமில்லை.  மாறாக மிகவும் சந்தோஷமாக செய்வான் சுப்ரமணியம். இம்முறைதான் இவ்வளவு இடைவெளி விழுந்து விட்டது. இருப்பினும் அவரது தேவைகளை அவனது கம்பெனி ஆட்கள் கவனித்து வந்தார்கள். அவனது நினைவு-களில் எப்போதும் பெரியப்பா இருப்பார்.  அவர்களுக்கிடையில் ஒரு தோழமை இருந்து வந்து கொண்டிருக்கிறது. அவரது தனிமையைப் பற்றி பலமுறை விவாதித்திருக்கின்றனர். தன்னால், தன் குடும்பத்தால் அதை நிரப்ப முடியுமா என்றெல்லாம் யோசித்து இருக்கின்றான்.

இந்த சுப்ரமணியத்திற்காக ஒருநாள் தன் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காத்திருக்கிற சமயம், காம்பவுண்ட் வாசல் கதவு அருகில் நிழல் தட்டியது.  சுப்ரமணியமாகத்தான் இருக்கும், வேறு யார் என்னைத் தேடி இப்பொழுது வரப்போகிறார்கள் என சுந்தரம் தன் அருகில் இருக்கும் நாற்காலியைச் சரியாகப் போட்டார். கதவு திறக்கும் சப்தம் மெதுவாக கேட்டது. சுப்ரமணியம் திறந்தால் இப்படி இருக்காதே என தலையை நிமிர்த்தி வாசல் பக்கம் பார்த்தார்.

ஒரு பெண்மணி இவரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

இருந்தும் இல்லாத வெளிச்சத்தில் அவளது நிதானத்தையும் தெளிவான ஒரு முடிவோடு நிற்பதையும் சுந்தரத்தால் உணர முடிந்தது. அவள் குட்டையில் சேர்த்தியில்லை. நெட்டையென நெடுமூச்சு விட இயலாது. நாற்பது வயது தக்க உடல் அமைப்பு. வயதின் காரணமாகவோ இல்லை வாழ்க்கை அனுபவத்தினாலோ அவள் வாய்மொழியில் ஒரு கனிவு ததும்பி இருந்தது. ரொம்ப அழகு என தூக்கிக்கொண்டாட முடியாவிட்டாலும் அழகற்றவள் என ஒதுக்கிட இயலாது. இந்த நிலையே அவர் வயது தந்ததாகத்தான் இருக்க வேண்டும். அந்த குறைந்த ஒளியிலும் அவரது முகம் துலக்கி வைத்த வெண்கலச் செம்புபோல் தோற்றமளித்தது-. அவள் நெற்றியிலிருந்த திலகம் கறுப்பா சிவப்பா என அறிய முடியவில்லை சுந்தரத்திற்கு. அவள் அள்ளி முடித்த கூந்தல், ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் அவளைக் காட்டியது. இவையெல்லாம் க்ஷண நேரம் அளந்ததுதான்.
சுந்தரம் தான் மௌனத்தைக் கலைத்தார்.

“என்ன தாயி! யார் வேண்டும்! இந்தா இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்” என சுப்ரமணியத்திற்காக போட்ட நாற்காலியில் அவளை அமரச் செய்தார்.

“ஜயா! நான் இந்த ஊருக்குப் புதுசு. இந்த ஊர் லைப்ரரி ஐயா தான் நான் தங்குவதற்கு இடம் தேடி அலைந்தபோது உங்களைப் பார்க்கச் சொன்னார். உங்கள் வீட்டில் ஒரு பகுதி காலியாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் வாடகைக்கு விடுவீர்களா என்று தெரியாது. இதுபற்றி உங்களிடமே விசாரித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார்” என்று சிறிது நிறுத்தினாள் வந்தவள்.

“ம்…ம்… அப்படியா? ஆமாம். நான் ஒருபோதும் அறை வாடகைக்கு விடனும்னு நினைக்கலைதான்.  சரிதாயி! எவ்வளவு காலம் வேண்டுமோ உன் விருப்பம்போல் தங்கிக்கொள்.  உன்னிடம் வாடகை வாங்கி நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதோ?  அந்த சுவற்றின் ஆணியில் சிவப்பு நாடாவில் தொங்குகிறதே, அதுதான் அந்த வீட்டு திறவுகோல். ம்…ம்.. வசந்தா போனதற்கப்புறம் அந்த கதவையே திறந்ததில்லை. ம்.ம்.. போய்ப்பாரு தாயி. வசதிப்பட்டால் எனக்கொரு ஆட்சேபமில்லை” என்றார் சுந்தரம்.

இவள் யார்?  எந்த ஊர்! எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறாள்! இவள் உறவு எங்கிருக்கின்றது,  வேண்டாம் என்று உறவை விட்டு விலகி வந்திருக்கிறாளா? இல்லை உறவு அற்றுப்போய் கால் போன வாக்கில் இங்கு தங்கி விட்டாளா! & இவற்றில் ஒன்றைக்கூட சுந்தரத்திற்கு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவள் கேட்டாள், இவர் இடம் கொடுத்து விட்டார் அவ்வளவுதான்.

சுப்ரமணியம் இனிமேல் வருவாளா? என்ற யோகாவில் ஆழ்ந்தார் சுந்தரம். பக்கத்து வீடு பெருக்கித் துப்புரவு செய்யும் சப்தம் கேட்டது. கம்மென்று மின்னொளி பாய்ந்ததை உணர்ந்தார்.  ஆம், பக்கத்து வீடு மஞ்சள் ஒளியில் மிளிர்ந்தது. அவ்வொளி இவரது அகத்தின் ஒளியாய் பிரகாசித்ததை உணர்ந்தார். அவருக்கு இது மிகவும் வியப்பை அளித்தது. ஒன்றும் தோன்றாமல் அப்படியே அந்த மின்னொளியின் மஞ்சளில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டிலிருந்து அடுப்பெரியும் ஓசையும் வாசனையும் வந்தது. வசந்தா இறந்து போனதற்கப்புறம் இந்த வீட்டில் அடுப்பு பற்றவைக்கவே இல்லை. பல வருடங்களுக்குப்பின் வந்த இந்த அடுப்பின் மணம் தன் தாயை, தன் தாரத்தை அவரிடம் அழைத்து வந்தது. அன்பை அள்ளி அள்ளி இவர் மீது வைத்தாள் தாய். அரவணைத்து அத்துணை சந்தோஷத்தையும் அளித்தாள் வசந்தா. ஒருநாள் கூட இவ்வீட்டை விட்டு இவர் பிரிந்து இருந்தது இல்லை. பிறந்தது முதல் இவ்வீட்டின் வாசனையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மெல்ல மெல்ல ஒரு காரமான இனிமையான வாசனை வீட்டில் பரவி ஆக்கிரமித்தது.

ஐயா! எனக் குரல் வந்த திக்கில் தலை திருப்பினார்.  வந்தவள் தான் அழைத்தது.
வீட்டிலிருந்து ஸ்டூல் ஒன்றை அவர் முன் இட்டாள். சொம்பு நீரைக் கொடுத்து கைகழுவுமாறுக் கூறினாள். கமகமவென உப்புமாவும் தேங்காய்ச் சட்டினியும் ஒரு தட்டிலிட்டு அந்தஸ்டூலில் வைத்தாள்.

சுந்தரத்திற்கு இது கனவா! நனவா என்று புரியவில்லை. ஆனால் அந்த மணத்தின் அழைப்பால் அவளிடம் ஒரு மறுப்பும் சொல்லாமல், இவள் என்னவோ காலம் காலமா இவருக்கு பரிமாறிக் கொண்டிருப்பவள்தான் என்கிற மாதிரி சாப்பிடத் தொடங்கினார். உப்புமா அருமையாக இருந்தது. இந்த உப்புமாவை இவ்வளவு அருமையாக செய்ய முடியுமா என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள்.  தாயின் ருசியும் தாரத்தின் மணமும் அந்த உப்புமாவில் கலந்து, அவரைக் கரைத்து விட்டது.

அந்தக் கணம் முதல் சுந்தரம் வீடு பெண்ணால் பூவாய் மலர்ந்தது. வீடு முற்றமும், கொல்லைப் புறமும் திருத்தி நேர்த்தியாய் மாறியது-. வீட்டிற்குள் ஒவ்வொரு பொருளும் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு, அந்த வீட்டின் எழிலைப் பேரெழிலாக்கி விட்டன.

பக்கத்து வீட்டிற்காக வந்தவள் மெள்ளமெள்ள முழு வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டாள்.  சுந்தரத்தின் தேவைகள் சரியான நேரத்தில் சரியானபடி கவனிக்கப்பட்டு வந்தன.

எல்லாவற்றையும் அவளே எடுத்துச் செய்யத் தொடங்கி விட்டாள். இருவருக்கும் பேச்சு, உரையாடல் சில சொற்கள் தாம் இருக்கும். ஒருவருக்கொருவர் மீது அக்கறை அதிகமாக இடம் பெற்றது.  நாட்கள் மாதமாகியது.  அப்படியும் சுந்தரம் அவளிடம் அவள் யார் என்று கேட்கவில்லை.
இருவாசல் வீடு மீண்டும் ஒரு வாசலாகியது. பக்கத்து வீட்டில் கோலமிடுவதோடு சரி.  மற்றபடி புழக்கமெல்லாம் பிரதான வாசல் மூலமாகவே இருந்தது. இந்த ஒரு மாத காலமும் சுந்தரத்திற்கு தனிமை கழன்று போய் இருந்தது. ஒரு புது உற்சாகம் பிறக்கத் தொடங்கியது. ஆனால் இன்னமும் அவள் பெயரை அவள் கூறவில்லை, இவரும் கேட்கவில்லை.

இருவர் மனத்தின் இடைவெளி குறையத் தொடங்கியது. இருவரின் தனிமை தணிந்தது. அவளும் சந்தோஷத்தில் பூரித்துப் போனாள். ஏதோ அவள் வாழ்வு இங்கு அர்த்தமானது போல் மகிழ்ந்து இருந்தாள். உள்ளங்களிடையே இடைவெளி இல்லாதபோழ்து, பிற விஷயங்கள் ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அன்று இரவு இதன் பொருளை இருவருக்கும் உணர்த்தியது. காலை சுந்தரம் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, காபியைக் கொணர்ந்தாள். அதன் மணத்தில் அவள் மனமும் மணந்தது. காபியை சுந்தரம் எடுத்து சுவைத்தார். அது கசப்பும் இனிப்புமாக புதிய  சுவையில் இருந்தது. அவர் நிமிர்ந்து பார்த்தபோது அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தது. ஒரு கணம் இருவர் பார்வையும் ஓரிடத்தில் நின்று நிலைத்தது. இருவர் வயது, இருவர் நிலை தாண்டி நின்ற நிலையும் அதை உணர்த்தியது. அதில் அவள் தெளிவைக் கண்டு நிலை கொண்டது போல் இருந்தது.

சுந்தரத்திடமிருந்து காபி டம்ளரை வாங்கிச் சொன்றாள் அவள். அப்போது மேசையின் மீது ஒரு காகிதம் பறந்து அவரது மடியில் விழுந்தது. அது யாரோ எழுதிய கவிதை:

அவன்:
சொப்பனத்தில் வந்து
சோதனைகள் செய்தால்
எப்படித் தாங்குவேன்
என் இனியவளே!

அவள்:
அப்படித்தான் செய்வேன்!
அதில் என்ன குறை கண்டீர்?
இப்படியே இருக்கட்டும்
என்றும் நம் உறவு.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பெயரற்ற பிரியம்

  1. நன்றாக இருக்கும்போது நம்மோரு பலர் ஒட்டி உறாவாடுவது இயல்பு, ஆபத்துக் காலத்திலும், தனிமையிலும் ஒட்டி உறவாடுபவர்கள்தான் மனிதர்கள். ‘தனிமை’ என்பது ஒரு கொடூரமான அனுபவம், அதை தனிமையிலே தவிப்பவர் மட்டுமே உணர முடியும். எழுத்தாளர் சுபாஷிணி அவர்கள் ஒரு வரிக் கருத்தை ஒரு பக்க அளவிற்கு அழகாக சொல்லி தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *