யாருடைய கவனக் குறைவு இது?
பவள சங்கரி
தலையங்கம்
வறுமைக் கோட்டில் தவிக்கும் மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழக்கக் கூடாது, அந்த ஒரு வேளை உணவாவது அவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்ற சேவை உள்ளத்துடன் காமராசர் கொண்டு வந்தது மதிய உணவுத் திட்டம். பின் அது வாரத்திற்கு ஒரு முட்டையுடன் சத்துணவுத் திட்டமாக அனைத்திந்திய அளவில் கொண்டுவரப்பட்டது. குழந்தைச் செல்வங்களுக்கு உணவு வழங்கப்படும்போது இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான இடத்தில் சுத்தமான குடிநீரும், சத்தான உணவும் கொடுக்க வேண்டியது அவசியம். பணியாட்களும் உண்மையான அக்கறையுடன், கடமையுணர்வுடன், தங்கள் குழந்தைகளைப்போல எண்ணுபவர்களாக அமைதல் அவசியம். அப்படி இல்லாதபட்சத்தில் பால்மணம் மாறாத அந்தக் குழந்தைகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவித்துவிடுகிறது. இதற்கு உதாரணம்தான் சமீபத்தில் நடந்த பெருங் கொடுமை. ஆம் 23 குழந்தைகளை ஒரே நேரத்தில் உயிரிழக்கச் செய்த நெஞ்சம் பதறும் சோகம்.
பீகார் மாநிலத்தின் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி எனும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கின்றனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உணவில் ‘மோனோக்ரோடபஸ்’ என்ற இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்தின் படிமங்கள் இருந்தது தடயவியல் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி குழந்தைகளின் உயிரைப் பலி வாங்குவது கொடுமையான செயல், மன்னிக்க முடியாத குற்றமும்கூட. இந்த விசயத்தில் உடனடியாக செயல்படாமல் உளவுத்துறை மெத்தனம் காட்டுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் நம் முதலமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லதொரு திட்டமான ‘அம்மா உணவகத்திட்டம்’ இது போன்று எந்த பிரச்சனைகளும் வராமல் கவனமாகச் செயல்படக்கூடிய வகையில் சரியான தலைமை அமைவதும் அவசியம். பல நல்லத் திட்டங்கள் ஒரு சில அலுவலர்கள் அல்லது அதிகாரிகளின் கவனக் குறைவால் சிதைந்து போக அனுமதிக்கக் கூடாது.
இந்த விசயத்தில் பள்ளி நிர்வாகத்தை மட்டும் குறை கூறுவதைவிட, குழந்தைகளின் பெற்றோர்களாவது கவனம் செலுத்தியிருக்கக் கூடாதா என்று எண்ண வேண்டியதாகிறது. பல பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று விட்டுவிடுகிறார்கள். மற்றபடி பெற்றோர், ஆசிரியர் சந்திப்பிற்கு அழைத்தாலும் வருவதில்லை. தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியாவது பெற்றோர்கள் அவ்வப்போது பள்ளியில் நடக்கும் சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். சில பெரிய தனியார் பள்ளிகளில் கட்டாயப்படுத்துவதால் எப்படியோ பெற்றோர் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் இது போன்ற கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால் அதற்கு அவசியம் இல்லாமல் போகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு பள்ளிகளிலும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதற்கான சரியான செயல் திட்டத்தை உருவாக்கி அதை கடைப்பிடிக்க வேண்டியது இப்போதைய உடனடித் தேவை. இதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டியதாகும். காரணம், இத்தனை கலவரம் நடந்து கொண்டிருக்கும் இதே வேளையில் உத்திர பிரதேசத்தில் ஒரு அரசு பள்ளியில் ஒரு குழந்தையின் தட்டில் போட்ட சாப்பாட்டில் ஒரு தவளை செத்துக் கிடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போது உள்ளக் கொந்தளிப்பே ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு பிரபல பள்ளியில் ரஞ்சன் என்ற சிறுவன் நீச்சல் குளத்தில் இறந்ததும் இது போன்றே கவனக் குறைவான செயலால்தான்.
பீகாரில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் கிட்டத்தட்ட 1.5 கோடி சிறார்கள், இந்த சத்துணவை நம்பியே பள்ளிக்கு வருகிறார்கள். கிட்டத்தட்ட 70,000 பள்ளிகளில் மதிய உணவு போடுகிறார்கள். தமிழ்நாட்டில் 53.5 இலட்சம் சிறார்கள் இதனால் பயன் பெறுகிறார்கள். இனி இது போன்றதொரு அவல நிலை எக்காரணம் கொண்டும் வரக்கூடாது என்பதே பொது மக்களின் வேண்டுதல்களாக உள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாதுகாப்புப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவ்வப்போது சத்துணவுக் கூடங்களை கண்காணித்து வருவதும் அவசியமாகிறது.
2014 தேர்தல் திருவிழாவிற்குக் கட்டியங்கூறி தேர்தல் பணிகளை ஆரம்பிக்கின்றனர் தேர்தல் அதிகாரிகள். பத்திரிக்கைகளும் தங்கள் பங்கிற்கான பணிகளைத் துவக்கிவிட்டன. ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்வதையே முக்கியப்பணியாகக் கொண்டு அதற்காகவே கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் குழந்தைகள் நலனையோ அல்லது பொது மக்கள் நலனையோப் பற்றி கவனம் செலுத்த ஒருவருக்கும் நேரம் இல்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது. தங்களின் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் அரசியல்வா(வியா)திகளை என்ன சொல்ல முடியும்?
வருத்தமான இந்த செய்தி. ஒரு வரி செய்திகளாக மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன. இதற்கு அடுத்தடுது மூன்று சம்பவங்கள் இதைப்போலவே நடந்தன. பொதுவில் நம் பாரதத்தில் உயிருக்கு பாதுகாப்பு என்பது மேல் மட்டம், அடுத்த மட்டம் அடித்தட்டு மட்டம் என்ற வகையில் உள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் அடித்தட்டு மட்டம்.இந்த அடித்தட்டு மக்களின் உயிரைப்பற்றி அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, இன்னும் சொல்லப்போனால் சட்டத்திற்குகூட கவையில்லை.
பிரதமருக்கு குண்டு துளைக்காத கார், அந்த காருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு. பசியார வழியில்லா ஏழைக்குழந்தைகளுக்கு சமைக்கும் சாப்பாட்டின் அடுப்படிக்கு உருப்படியாக ஏதும் இருக்கிறதா?
அந்தக்குழந்தைகள் அனைவரும் ஏழைக்குழந்தைகள். இங்கு ஏழைகள் என்றாலே உதாசீனமே. ஒரு 3 மாதத்துக்கு முன் சேலத்தில் விஜயவாடாவிலிருந்து பிழைப்பு தேடி வந்த பெண்ணின் பிரசவத்துக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரம் லஞ்சம் தரவில்லை என்பதால் வெளியில் துரத்தப்பட்டு பேருந்து நிலைய கழிவறை ஓரமாக பிரசவம் நடந்தது.கேட்கும் போதே நெஞ்சம் பதருகிறது. ஏழையின் உயிருக்கு விலையே ஆயிரம் என்றாக்கி வைத்திருக்கிறது அதிகார வர்கம்.
கோட்டையில் ஓட்டை
யார் காப்பார்
இந்த நாட்டை.