பேரா. நாகராசன்

இந்த வார வல்லமையாளர் [15/07/2013 – 22/07/2013]

தமிழகத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.  வேற்றுமையில் ஒற்றுமை ஒற்றுமையில் வேற்றுமை என்று இரட்டைக் குதிரைச் சவாரி செய்வதில் தமிழர்களுக்கு நாட்டம் அதிகம்.  ஒரே நேரத்தில் இந்த இரண்டு சிந்தனைகளும் வெளிப்படும்போது தமிழன் ஒரு குழப்ப வாதியாகக் காட்சியளிப்பது இயல்பு.

உலகத் தமிழன் என்று ஒரு புறமும் தனித் தமிழன் என்று இன்னொரு புறமும் ஒருவரே ஒரே நேரத்தில் குரல் எழுப்பி மற்றவர்கள் குழப்பம் அடைவதுபோல் எழுதுவதும் பேசுவதும் சில குறிப்பிட்ட தமிழ்ப் படைப்பாளர்களுக்குக் கை வந்த கலை.  தனித்தமிழ், தனித்தமிழன், தமிழன் பெருமை என்று கண்ணைக் கட்டிக்கொண்டு வேகமாகப் பின்னோக்கி நடப்பதும் மேலைநாட்டு நாகரிகப் பண்புக்கூறுகளைக் கண்ணை மூடிக்கொண்டு முன்னெடுப்பதிலும் ஒரு இரட்டை நிலை தமிழ்ப் படைப்பாளர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது

தமிழ் அறிஞர்கள் பழம்பெருமை பேசுவதையும் ஒரு சிறு வட்டத்தில் தங்களை நிறுத்திக்கொண்டு தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்யும் புதியத் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு தங்கள் சிந்தனையைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியச் செய்யும் ஆர்வமும் திறனும் இல்லாதவர்களாக இருப்பது உண்மை

புதிய சிந்தனை புதிய படைப்புகள் புதிய வடிவமைப்பு என்று தமிழின் சிறப்புக்கு அணி சேர்க்கும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய தலைமுறைத் தமிழ் இளைஞர்களுக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளார்ந்த உந்துதலுடன் செயல்படும் தமிழறிஞர்கள் வெகு சிலரே.  இணையத் தமிழ்த் தளத்தில் தரமான தமிழில் தற்காலத்துக்குத் தேவையான சிந்தனைகளை எண்ணிம வடிவில் தொடர்ந்து எழுதுவது என்பது எளிதல்ல

தன் சொந்தக் கருத்துகளையும் இணையத்தில் பரவிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய தகவல்களையும் தினம் ஒரு மாலையாக மஞ்சரியாகத் தொகுத்துத் தருவதை ஒரு வேள்வியாக நடத்தும் ஒரு கணித் தமிழ் இணையத் தமிழ் அறிஞர் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு பெறுகிறார்

photo (1)ஈழத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பவர், தனித் தமிழ் வளர்ச்சிக்கு வழி கோலுபவர், இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்பவர், வல்லமை இதழுக்குத் தொடர்ந்து வளம் சேர்ப்பவர் என்று பல வல்லமைகளை நாள்தோறும் வெளியிடும் வல்லமையாளர் திரு. திருவள்ளுவன் இலக்குவனார்

நெருக்கத்தில் இருப்பவர்கள் பெருமையை அறிந்து பாராட்டுவதைச் சில நேரங்களில் மறந்து விடுவது இயல்பே.  எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் உள்ளூரில் உள்ளவர்கள் அவர் பெருமையை எடுத்தியம்புவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை

வல்லமை இந்தத் தடையைக் கடந்து இணையத்தில் வல்லமை மின் தளத்தில் தொடர்ந்து தமிழன் சிறப்பு பெருமை உரிமை பற்றி மட்டுமன்றி உலக அளவில் தமிழன் மற்ற இன மொழி மரபுப் பெருமைகளை அறிய வேண்டும் என்ற உணர்வுடன் தன் படைப்புகளைத் தயங்காமல் தளர்வில்லாமல் வெளியிடும் திருவள்ளுவன் இலக்குவனாரை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

20-ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழிக் காவலராகத் தமிழனின் சிறப்பை இந்திய அரங்கில் நிலை நிறுத்த மாணவர்களுக்கு ஊக்கமும் உரமும் ஊட்டிய எங்கள் பேராசிரியர் திரு.இலக்குவனார் அவர்களின் புதல்வன் இந்த வார வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்

வாழ்த்துகள் திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. வல்லமையாளர் திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

  அன்புடன் 
  ….. தேமொழி 

 2. வல்லமையாளர்களுக்கும் அமைப்பினருக்கும் வணக்கமும் நன்றியும். வல்லமையாளர்கள விருதுகள் குறித்துப் படித்து வந்தாலும் விண்ணப்பித்ததில்லை. இப்பொழுதுதான் தெரிகிறது, தக்காரை அடையாளம் கண்டுகொண்டு விருது வழங்குகின்றீர்கள் என்று. தங்களின் தொண்டிற்கும் பாராட்டும் உள்ளத்திற்கும் நனி நன்றி.
  நல்வாழ்த்து வழங்கிய திருவாளர்கள் பார்வதி இராமச்சந்திரன், தேமொழி ஆகியோருக்கும் நன்றி.
  என அவ்வப்பொழுது இணையப்பதிவிலும் தொலை பேசி வழியாகவும் நேரிலும் பாராட்டுவோர் உண்டு. என்றாலும் இணையத்தை மிகுதியாகப் பயன்படுத்துவோர் சிலர் இவற்றை எலலாம் பகிர வேண்டிய தேவை ஏன் என்று குறைகூறியதும் உண்டு. வைகறைக்கு முன்னரே எழுந்து பணியாற்றினாலும் நேரம் போதாதபொழுது இவற்றைத் தொடர வேண்டுமா என்ற எண்ணம் வரும் பொழுதெல்லாம் எங்கிருந்தோ அறிமுகம் இல்லாதவர்கள் பேசி இப்பகிர்வுகளாலும் கட்டுரைகளாலும் உணர்வு பெறுவதாகக் கூறிப் பாராட்டி அந்த எண்ணத்தை மறக்கடிப்பர். அதுபோல் இனி அப்படிப்பட்ட எண்ணம் வரக்கூடாது என்பதற்காக இவ்விருது வழங்கப்பட்டதாக நம்புகின்றேன். இப்பணியை வேள்வியாக ஏற்றுப் பாராட்டியமைக்கும் தந்தையார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களை நினைவு கூர்ந்ததற்கும் பெரு மகிழ்வைத் தெரிவிக்கின்றேன. தங்களுக்கும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 3. வல்லமையாளர் திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் தமிழ்ப் பணி மேலும் மேலும் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 4. திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்கள் வல்லமையாளர் விருது பெற்றமைக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் அவர்கள் தமிழ்ப்பணி சிறக்க வேண்டுகின்றேன். 

 5. //நெருக்கத்தில் இருப்பவர்கள் பெருமையை அறிந்து பாராட்டுவதைச் சில நேரங்களில் மறந்து விடுவது இயல்பே.  எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் உள்ளூரில் உள்ளவர்கள் அவர் பெருமையை எடுத்தியம்புவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.//     வல்லமையாளர் விருது பெற்ற வல்லவக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு என்னுடைய மகிழ்ச்சியும் பாராட்டுதல்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.