Author: admin
-

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.comஉவமத் திருவாசகம் – 2
முன்னுரை
காதல் பேசும் அகத்திணை இலக்கியங்கள், அதுவல்லாத புறத்திணை இலக்கியங்கள் ஆக இவற்றில் எல்லாம் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இயல்பாகவே வேற்றுமை நிலவுவதை அறிய முடியும். ‘மாறிபுக்கு இதயம் எய்தும் காதல் வெளிப்பாட்டுக்கும்’, ‘பகை முடித்து நகை முழக்கும்’ புறவெளிப்பாட்டுக்குமான உவமங்கள் பெரும்பாலும் அழகியல் நோக்குடையவை. எடுத்துக்காட்டாக இராமன் கான் செல்கிறபோது இருந்த அவனுடைய முகத்தினைக் கம்பர் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையோடு’ ஒப்பிடுகிறார். இறைவனை வழிபடுகிற காலத்துப் புற உறுப்புக்களின் நிலையைக் கூறும் மணிவாசகப் பெருமான் ‘கரமலர் மொட்டித்து இருதயம் மலர’ என நிரல்படுத்துகிறார். முரண்படுத்துவார். இரண்டிடத்திலும் உவமமாக வந்தது மலரேயெனினும் இரண்டின் தாக்கமும் வெவ்வேறாக இருப்பதைக் கற்பார் உணரலாம்.
உவமங்களோடு உறவாடும் உள்ளம்
முன்னுரையில் பக்தியுணர்வுக்கான வெளிப்பாட்டில் அமையும் உவமப்பாங்கு அகப்புறப்பொருள்களை விளக்கும் உவமங்களின் வேறாகி நிற்கும் எனச் சொன்னோம். அதனை உறுதி செய்வதுபோல மணிவாசகப் பெருமான் பாடுகிறார்.
“தழலது கண்ட மெழுகதுபோலத் (1)
தொழுது உளமுருகி அழுது உடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்
படியே (2) ஆகி நல் இடையறா அன்பிற்
பசுமரத்தாணி அறைந்தாற் போலக் (3)
கசிவது பெருகிக் கடலென (4) மறுகி”எழுவரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நான்கு உவமங்களும் தொழுதும் உள்ளம் உருகியும் அழுதும் நடுங்கியும் ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் என்னும் மெய்ப்பாடுகளுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும்.
“சிறுமையென்று இகழாது திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழலது போல (1)
முன்பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள (2)
நன்புலன் ஒற்றி நாத என்று அரற்றி
உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் (3) மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுன் துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர்
தாயே யாகி (4) வளர்த்தனை போற்றி”என்னும் வரிகளிலும் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஏற்ப உவமங்கள் அமைந்துள்ள பாங்கினை அறியலாம். முகத்தை ‘மலர்’ என்பதற்கும் கரத்தை ‘மலர்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது மலர்ச்சியைக் குறித்தது. பின்னது மென்மையைக் குறித்தது. இது சாயா அன்பின் விளைந்த பக்தியாதலின் நிகழாத ஒன்றினை உவமமாக்குகிறார் மணிவாசகப் பெருமான். அதாவது மொட்டு மலருமேயன்றி மலர் மொட்டாகாது, மலர் மொட்டாகி என்பதனால் மெய்வணக்கமும் மொட்டாகிய இதயம் மலர்வதால் உள்நெகிழ்ச்சியும் பெறப்பட்டன. ‘அகம் நக’ என்னும் வள்ளுவத்திற்கு மணிவாசகர் எழுதிய விரிவுரையாகவும் இதனைக் கருத முடியும். ஒன்று மலர வேண்டும். மற்றொன்று குவிதல் வேண்டும். இரண்டும் இணையானது அன்று. ஆனாலும் இதய மலர்ச்சியின் குறியீடாகக் கரமலர் குவிவதைக் கொள்ளலாம்.
புளியம் பழமான மணிவாசகப் பெருமான்
சொற்களுக்கான நேரடிப்பொருள் வேறு. இலக்கிய நயம் பக்தியுணர்வு தோன்றுமாறு உள்ளீடாக நிலவும் பொருள் வேறு. நெருஞ்சிச் செடியில் பழமும் இருக்கும் முள்ளும் இருக்கும். தலைவியின் பாதத்தின் மென்மையைக் கூறவரும் தலைவன் அனிச்சப்பூவும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் என்கிறான். இங்கே நெருஞ்சிப் பழம் என்றது பழத்தைக் குறிக்காது முள்ளைக் குறித்தது காண்க. இந்த நுட்பத்தை மணிவாசகப் பெருமான் கையாள்கிறார்.
“அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.”என்று ஒரு பாட்டு ‘ஆசைப்பத்து’ என்னும் பகுதியில் வருகிறது. “ஆன்மாவும் உடம்பும் வேறு வேறு என்று எண்ணாது இரண்டும் ஒன்றுதான் என்று எண்ணியிருந்தவன் நான். அத்தகைய அறியாமையில் நான் உழன்ற நேரத்திலும் எளிவந்து என்னை ஆண்ட பிரான் நீ! அவ்வருமை கூறி உன்னையழைக்க நான் விரும்பினேன்’ என்கிறார் மணிவாசகர். புண்ணிறைந்த உடம்பின் இழிவை முதலடியில் பேசி, இழிவான உடம்பினிடத்துப் பற்றுக் கொண்டு இருந்ததாகக் கூறுகிறார். அந்தப் பற்றுக்கூட, ஆன்மா என்றும் உடம்பு என்றும் தனித்தனியே பிரித்துக்காண முடியாதபடி ஒன்றியிருந்து விட்டது. அதனையே ‘புளியம்பழம் ஒத்திருந்தேன்’ என்கிறார். ஆனால் உண்மையில் அவர் கூறவந்தது புளியங்காய் ஒத்திருந்தேன் என்பதுதான். பழம் என்ற சொல் இங்குக் காய் என்ற பொருளில் அமைந்துள்ளது. ‘பழம்’ என்ற சொல்லையே வைத்துக்கொண்டு பொருள் செய்தால், இந்த உடம்போடு எவ்விதத் தொடர்பும் பற்றுமில்லாமல், ஓட்டில் ஒட்டாத புளியம்பழத்தைப் போல் இருந்தேன் என்று அழகாக பொருள் கூறலாம். ஆனால், இவ்வாறு பொருள் கூற முடியாமல் தடுப்பது அடுத்துவரும் இருந்தும் என்ற சொல்லாகும். புளியம் காயைப்போல, உடம்பு, ஆன்மா என்ற வேறுபாடின்றி நான் ஒட்டிக்கொண்டிருந்தும்கூட அதுபற்றிக் கவலைப்படாமல் எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்ஆர் அமுதே’ என்கிறார். ‘நீ ஆட்கொண்ட பின்பும், இந்த உடம்பை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கின்ற நான், பெரிதும் இரக்கத்திற் குரியவன் என்று நீ சொல்ல வேண்டும். அச்சொல்லை நான் கேட்க ஆசைப்பட்டேன்’ என்கிறார்.
அழல்சேர் மெழுகு
அன்பு உள்ளத்தின் இயல்பு. அறிவு மூளையின் தேடல். முன்னது உருக்கத்திற்கு உரியது. பின்னது சிந்தனைக்கு உரியது. மானுடம் உள்ளத்தின் வழி இயங்குவது. பாசம், துடிப்பு, ஆதங்கம், அன்பு, அருள், நேயம் என்பனவெல்லாம் அறிவு சார்ந்தன அல்ல. அவை மனம் சார்ந்தவை. ஆதலின் மணிவாசகர் உள்ளிட்ட அருளாளர்கள் பாடும் பாடல்களில் இத்தகைய உணர்வுகளை ஒப்பிட்டும் உறழ்ந்தும் நோக்கக் கூடிய உவமங்களே பெரும்பாலும் காணப்படுகின்றன.
“அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார்”
“அழல்சேர் மெழுகொப்ப ஐயா வென்றன் வாயாலரற்றி”
“அன்பா மனமா யழல்சேர்ந்த மெழுகே யன்னார்” 92
அழல் கண்டு உருகும் மெழுகாய் ஆண்டவனை எண்ணி உருகும் அடியார்கள் என்பதாம். இத்தகைய உருக்கத்திற்கு வெப்பத்திற்கு உருகும் பாறை வெண்ணெய் பொருந்தாமல் போய்விடும். மெழுகின் உருக்கம் நெருப்போடு கலந்துவிடும். செருக்கழிந்த உருக்கத்தின் அத்வைத நிலை இது. அவன் அன்பை வேண்டி நிற்பார் அடையும் நிலையும் இதுவே.
திருவாசகத்தில் கடல்
‘நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்று’ எனக் காதலின் ஆழத்திற்குக் கடலைச் சொன்னவர் உண்டு. திருவள்ளுவர் ‘அடங்கியான் தோற்றத்தினை மலைக்கும், பயன்தூக்காது உதவி செய்தவரை கடலுக்கும் காலத்தினால் உதவியவருக்கு நிலத்தையும்’ ஒப்பிடுகிறார். இவைகளெல்லாம் அறிவுசார்ந்த அளவைகள் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவற்றுள் கடலை அளப்பரிய உருவகமாகக் கொள்கிறார் மணிவாசகர்.
“கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விட லரியேன்”
“கடலின் திரையது போல்வரு கலக்கம்”
“கடலே யனைய ஆனந்தம்”
இங்கே சுட்டப்பட்ட உவமங்களுள் ‘கடலை நாய் நக்க முயன்றதுபோல’ என்பது மரபு சார்ந்த உவமம். கம்பன் சொன்ன அது அவையடக்கத்திற்குச் சொல்லப்பட்டது. இங்கே பெருமானின் அருளை முழுமையாக ஏற்க இயலாமைக்குச் சொல்லப்பட்டது. இனித், துன்பத்திற்கும் இன்பத்திற்கும் கடலையே உருவகப்படுத்துவது தமிழ்க்கவிதைக் கொள்கை. ‘துன்பக்கடல்’ என்பதும் ‘இன்பக்கடல்’ என்பதும் இலக்கிய வழக்கு. ‘பிறவிப் பெருங்கடல்’ என்பது திருவள்ளுவர் செய்த உருவகம்.திருவாசகத்தில் தாயும் பசுவும்
இறைவன் தாயும் ஆனவனாக இருப்பதாலே அடியார் அனைவர்தம் பாட்டிலும் தாய் மகவு என்னும் உறவை முன்னிலைப்படுத்தி அதற்கு இணையாகத் தாய்ப்பசுவையும் கன்றினையும் உவமவாக்கம் செய்வது பெருவழக்கு. ‘கற்றா’ என்னும் சொல் ‘கன்றையுடைய ஆ’ என்றே பொருள்படும். ஏனைய விலங்குகளை இவ்வாறு அதன் கன்றோடு சேர்த்து வழங்குவது உண்டா என்பது சிந்திக்கத்தக்கது.
“ஆவாகி ஆவினில் ஐந்துமாகி
அறிவாகிஅழலாகி அவியுமாகி
நாவாகி நாவுக்கோர் உரையுமாகி
நாதனாய்வேதத்தினுள்ளோனாகி
பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப்
புக்குளால்வாசமாய் நின்றானாகித்
தேவாதி தேவர் முதலுமாகிச்
செழுஞ்சுடராய் சென்றடிகள் நின்றவாறே”பசுவும், பசுவினிடத்தில் தோன்றும் ஐந்து பொருட்களாகவும் (பால், தயிர், நெய், கோசலம், கோமியம்), வேள்வித் தீயாகவும், வேள்விகளைச் செய்வதற்குரிய அறிவாகவும், அந்த வேள்வியினில் இடப்படும் பொருட்களாகவும், வேள்விக்கான மந்திரங்களைச் சொல்லும் நாவாகவும், சொல்லப்படும் மந்திரங்களாகவும், மந்திரங்களின் பொருளாகவும், பயன்படுத்தப்படும் பூக்களாகவும், பூக்களின் மணமாகவும் மணமாக மலர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையாகவும், வேள்விகளால் தொழப்படும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் செழுஞ்சுடராய் எம்பெருமான் எங்கும் பரவி நிற்கிறார் என்ற பொருளமைந்த இந்தப் பாட்டில் தலைமையாகப் பாடப்பட்டிருக்கும் பொருள் பசு என்பதைக் காணலாம். அடியவர்களின் உள்ளம் இறையருள் வேண்டும் ஏக்கம் நிறைந்தது. உயிர்கள் பரபிரம்மம் ஆதலின் அவனிடமிருந்து பிரிந்து வந்த இவை மீண்டும் அவனிடமே சேர்வதற்கான முயற்சியே மானுட வாழ்வு. கன்றின் பிரிவு எல்லாத் தாய்மையையும் கலங்கிக் கதறச் செய்யும் எனினும் பசு பெரிதும் கலங்கி நிற்கும்.
“கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
கன்றை நினைந்தெழு தாயென வந்தகணக்கது வாகாதே”“கற்றா மனம் போல் கதறியும் பதறியும்”
பதி, பசு, பாசம் என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படை. பசுவாகிய உயிர், தன்னை மூடியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மாசு நீங்கிப் பதியாகிய பரம்பொருளை அடைவதே மானுடப் படைப்பின் நோக்கம் என்பதைச் சுருங்க உரைக்கும் சிவஞான போதம் அது. பாசத்தின் நீங்குவதற்கும் இறைவன் அருள் தேவைப்படுமாதலின் அதனை வேண்டுவதும் வேண்டிப் பெறுவதுமே பன்னிரு திருமுறைகளின் உள்ளடக்கம். வேண்டுவதைக் கொடுப்பவர்களில் தாயே முன்னிற்பாள் என்பது உலகியலாதலின் மணிவாசகப்பெருமான் தமது திருவாசகத்தில்,
“நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!”என்று இறைவனைத் தாயாக்கிப் பாடுகிறார். ‘பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ என்று பிறிதொரு இடத்திலும் கூறுவார். தாயின் சிந்தை செயல் அனைத்தும் தன் குழந்தையைப் பற்றியே இருத்தலின், அக்குழந்தைக்குப் பால் ஊட்டும் காலமும் அவள் கருத்திலிருக்க, அக்காலமறிந்து ஊட்டுவாள் என்பதனால் ‘பால் நினைந்தூட்டும்’ என்றார். ஈண்டு இறைவனை அத்தாயினும் என உறழ்ந்து கூறுவதால் இறைவனின் மேன்மை புலப்படும். ‘வேண்டத்தக்கது அறிவோய’’ என இறைவனைப் பரவியதும் அவன் தாயினும் மேம்பட்டுத் திகழ்வது நோக்கியே!. இவ்வாறு இறைவனைத் தாயாகவும் தன்னைக் குழந்தையாகவும் உவமித்துப் பாடும் இடங்கள் திருவாசகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.
“உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”என்னும் பாடலில் கற்றாவை உவமமாக்கியிருக்கிறார் மணிவாசகர். ஆவிற்கு மனம் உண்டு என்பதும் அதுவும் கசிந்து உருகும் இயல்பினை உடையது என்பதும் மணிவாசகர் கண்ட நுண்ணியம். மூளையை வளர்க்கும் வெறுங்கல்வியைவிட மூலத்தை உணரும் அனுபவக் கல்வியையே மணிவாசகர் முன்னெடுக்கிறார். கற்றாரை யான் வேண்டேன் என்பதன் பொருள் அதுதான். அனுபவக்கல்வி கிட்டிவிடுமாயின் கற்பன தானே அமையும் என்பதாம். அந்த அனுபவம் அறிவினால் வராது. அழுதால் வரும். ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்பதும் அது.
“கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம்
காணக் காட்டும்
என்றுடைய நாயகனே! எல்லாம் செய்வல்லவனே!
இலங்கும் சோதி
மன்றுடைய மணவாளா!மன்னவனே! என்னிருகண்
மணியே! நின்னை
அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணை உன் மேல் ஆணை உன்மேல்
ஆணை ஐயா!என்று அருட்பிரகாச வள்ளலாரும் பசுவை உவமித்திருப்பது காண்க.
மணிவாசகர் கண்ட மாற்றுத் திறனாளி
நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை -விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.
ஒரு பசு மந்தை மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றது. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறதாம்.
மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போலத், தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.
“ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
உன் தாளிணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.”பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தன் அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இலக்கியங்களுள் பக்தி இலக்கியத்தைப் பற்றிய மதிப்பீடு எவ்வாறிருப்பினும் இந்த உவமத்திற்கு எந்த இலக்கிய உவமமும் ஈடாகுமா என்பதைக் கற்பார் சிந்திக்க வேண்டும்.
“சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட
ஊரேறாய் இங்கு உழல்வேனோ?”என்று பின்னும் கூறுவார் மணிவாசகர்.
ஆள்வார் இலா மாடும் நுந்து மாடும்
திருவாசகம் முழுவதும் ஊடுருவி நிற்பது பக்தியுணர்ச்சி ஒன்றே. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான தன்னையாண்டுகொண்ட கருணைத் திறத்தினை வியந்து, அச்சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே திருவாசகமாகப் பரிணமித்தது. நெகிழ்ச்சியும் பாசமும் துடிப்பும் கண்ணீரும் ஆகிய அகப்புற மெய்ப்பாடுகளுக்கேற்பவே உவமங்களும் அமைந்திருக்கின்றன.
நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவார். இத்தகைய கன்றுக்கு ‘நுந்து கன்று’ என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.
“நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”மாடு சில நேர்வுகளில் தன் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ‘ஆள்வாரிலி மாடு’ என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.
“……………………….ஆள்வார் இலி மாடாவேனோ?
நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு
மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே”மாடுகளில் மாற்றுத் திறனாளிகளைப் பாடியவர் மாணிக்கவாசகர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தாலும் சமுதாயத்தின் எல்லா நிலைகளையும் அவர் ஊடுருவி நோக்கியிருக்கிறார் என்பது மாடுகளின் வகைப்பாட்டை அவர் உவமமாக்கிய திறத்தால் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.
திருவாசகத்தில் தொடர்ந்து மேயும் எறும்பு
சென்ற கிழமை கட்டுரையில் ‘இருதலைக் கொள்ளி உள்ளெறும்பை’ உவமமாகச் சொன்ன சதுரப்பாட்டைக் கண்டோம். இந்தக் கட்டுரையில் நெய்க்குடத்து எறும்பை உவமமாக்கும் திறனைக் காணலாம். ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களை’ உடையார், நெய்சேர்த்து வைக்கும் குடங்கள் இல்லம் நிறைந்து காணப்படும். நெய்வாசம் கண்ட எறும்புகள் அக்குடங்களின் உள்ளே இறங்கி உறைந்துபோன நெய்யின் பரப்பில் கால்கள் சிக்கிக் கொள்ள மீளத் தெரியாமல் மாளும்.
“உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா
மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே”என்று பாடிய வாதவூரார் தொடர்ந்து செய்யும் விண்ணப்பம் அந்தாதியாதலின் எறும்பிலேயே தொடங்கிப் பாடுகிறார். எறும்பு என்ற சொல் தொடக்கமாக இருந்தாலும் இது நெய்க்குடத்து எறும்பன்று. புழுவரிக்கும் எறும்பு.
“எறும்பிடை நாங்கூழ் வெனப்புல னால்அரிப் புண்டு அலந்த
வெறுந்தமியேனை விடுதி கண்டாய்!”என்று பாடுகிறார். முந்தைய பாட்டில் நெய்க்குடத்து எறும்புகள் ஐம்புலன்களும் உயிரைச் சூழ்வதற்கு உவமம் இந்தப் பாட்டில் உயிர் புலன்களால் அரிக்கப்படுவதற்கு அதாவது ஈர்த்து அலைக்கழிக்கப்படுவதற்கு உவமம்.
நிறைவுரை
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அதன் பெருமை. பாடுபொருளாகிய பக்தியுணர்வுக்கும் அதனை வெளிப்படுத்திய பாங்கிற்கும் உத்திகளுக்கும் உரியதே. ஆனால் அதில் காணப்படும் உவமங்களுக்கும் அந்தப் பெருமையில் செம்பாதி பங்குண்டு என்பது இவ்விரண்டு கட்டுரைகளால் ஓரளவு புலப்படலாம். பன்னூறு பாடல்களில் காணப்படும் உவமங்களைத் தொகுத்து ஆராய்ந்தால் மணிவாசகரின் உவமங்களே பக்தியுணர்ச்சி என்னும் பொருண்மை கற்பார் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்துக் கண்ணீர் வரவழைக்கின்றன என்பதை அறிந்து கொள்ள இயலும். உருக்கம் உள்ளடக்கத்தில் மட்டுமன்று. உவமங்களிலும் உண்டு.
(தொடரும்…)
-

எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்
இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவரது மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் பதிப்பகம் மூலமாக வெளிவந்த ‘தரணி’ நாவல் மற்றும் வம்சி பதிப்பகம் ஊடாக வெளிவந்த ‘அயல் பெண்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகியவையே 2019, 2020 ஆகிய வருடங்களில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவரது ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பானது ஏற்கெனவே இந்தியா வாசகசாலை விருதினை வென்றுள்ளதோடு, ‘தரணி’ நாவலானது கொடகே சாகித்ய விருதினை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 42
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.comஉவமத் திருவாசகம் – 1
முன்னுரை
‘படைப்பு’ என்ற அளவில் திருவாசகம் ஒரு பக்தி இலக்கியம் எனக் கருதப்படலாம். ஆனால் தமிழில் இலக்கியத்தின் பாடுபொருளாக அகம், புறம் என்னும் மரபு பின்பற்றப்பட்டு வந்த காலத்தில் அவற்றினும் மாறுபட்டு அதன் பாடுபொருள் இறைவனாக அமைந்திருப்பதை உணர்தல் வேண்டும். பாடுபொருள் பரம்பொருளாக அமைந்துவிட்ட காரணத்தால் பொதுவான இலக்கிய உத்திகளோ, உவமப் பகுதிகளோ, யாப்பியல் மரபுகளோ இலக்கிய மரபுசார்ந்து அமையும் என்று எதிர்பார்க்க இயலாது. உணர்ச்சியும் அகவுணர்ச்சியாகிய காதல், புறவுணர்ச்சியாகிய வீரம் என்பனவற்றினின்றும் சற்று விலகி உரிமையும் ஆதங்கமும் ஏக்கமும் இரத்தலும் கலந்த ஓர் புதுவகை உணர்ச்சியை இவ்வகை இலக்கியங்கள் கொண்டிலங்கும். விழைதலும் வேண்டுதலும் ஆகிய நிகழ்வில் பயன்படுத்தப்படும் உவமங்களும் பொதுவான இலக்கிய உவமங்களாக அமையாமல் அமைதி, பாசம், இழிவு, நம்பிக்கை முதலிய உணர்வுகளை எதிரொளிப்பதாக அமையும். மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்த அத்தகைய உவமங்கள் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.
திருவாசகத்தில் இருகை யானை
புறநானூற்றில் வரும் ஓரேர் உழவன் என்னுந் தொடர் அக்கால வேளாண் பெருங்குடி மக்களின் வறுமை நிலையை உணர்த்தியது. ‘ஒரு கை யானை’ என்பது யானைக்குச் சிறப்பு கையுடைய விலங்கு அதுவேயாதலின். ஆனால் மணிவாசகப் பெருமான் தன்னை ‘இருகையானை’ என்று உருவகப்படுத்திக் கொள்கிறார். யானை, தனக்குத்தானே சங்கிலியைத் தானே எடுத்துப் பாகன் கையில் தந்து தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். யானைக்குத் தனக்கு மேல் பாகன் என்று ஒருவன் அமர்ந்து இருக்கிறான் என்றும் தெரியாது. மணிவாசகரின் இருகை யானை உவமத்தில் நுண்ணியங்கள் பல உள்ளன என்பதை அறியலாம். தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்வதும் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதும் தனக்கு மேலே இருப்பவன் பாகன் என்பதை அறியாததும் அதன் பலவீனங்கள். காமம், வெகுளி, மயக்கம் இவற்றுள் கிடந்து உழல்வதும், தனக்கான துன்பத்தைத்தானே வரவழைத்துக் கொள்வதும் தன்னை வினைப்படுத்தும் இறைவனை மறப்பதும் மானுடர்க்கு இயல்பு.
“இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே” (திருச்சதகம்)இங்கு அடிகளார் தம்மை யானையோடு உவமித்தது ஒரு நுண்மையான உட்கருத்தைக் கொண்டதாகும். ஒரு கை யானைக்கே இரண்டு கெட்ட குணங்கள் உண்டு. ஒன்று – நன்றி மறப்பது; இரண்டு – குளித்துவிட்டுத் தூய்மையாக வரும்பொழுதே மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக் கொள்வது. மாபெரும் உபகாரம் செய்த குருவிற்குத் தாம் நன்றி பாராட்டவில்லை ஆதலால் நன்றி கொல்லும் யானையோடு உவமம் செய்தார். வழியோடு சென்ற தம்மை வலிய அழைத்து இறையனுபவத்தைக் குருநாதர் நெஞ்சில் நிறைவித்தார். பழைய, பசுகரணங்களைப் போக்கிப் பதிகரணங்களாக மாற்றி அருளினார். ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்பதும் அது. இதற்குக் குளித்துவிட்டு வரும் யானை உவமம். இத்தகைய பெரிய நலங்களை விட்டுவிட்டுப் பொறிகளின் இன்ப நுகர்ச்சியில் மறுபடியும் தம் மனம் செல்வது குளித்துவரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும். அதனாலேயே ‘இருகை யானையை ஒத்திருந்து’ என்று பாடுகின்றார்.
“என்னால் அறியாப் பதம் தந்தாய்
யானறி யாதே கெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை”என யானையின் செயல்களை ஒத்திருக்கும் தனது செயல்களை விளக்கியிருப்பது காண்க.
இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு
‘இருதலை’ என்பது மூங்கிலின் இரண்டு பக்கத்தின் நுனிப்பகுதியைக் குறிக்கும். ‘கொள்ளி’ என்பது அவ்விரு பக்கமும் வைக்கப்பட்ட தீயைக் குறிக்கும். ஒரு நுனியில் பற்றவைத்து அதனைப் பந்தமாகப் பயன்படுத்துவதும் உண்டு. இருபக்கமும் நெருப்பு என்பது பெரும்பாலும் வித்தை காட்டுவோர் செயலாகக் கருதப்படலாம். சிலம்பு விளையாட்டில் இதனைக் காணலாம். அச்செயல் இங்கு முக்கியமன்று. மூங்கில் குழாயின் உள்ளே எறும்பு சென்றதை அறியாது பற்றவைத்த இருமுனைக் கொள்ளிக்கு நடுவே அவ்வெறும்புபடும் வேதனையே உவமமாகக் கொள்ளப்படுகிறது. இந்த உவமத்தைச் சங்கச்சான்றோர்கள் அகத்திணைப் பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை,
“ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமந் தட்பக்
கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய
இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்
நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோளே!”முதலிய பாடல்களினால் அறியமுடிகிறது.
“தாளாண்மை அறிந்தவென்தன் தளர்வில்லா நெஞ்சத்தைப்
பேராண்மை முன்னிழுக்க, பெருங்காமம் பின்னிழுக்க
இருகணுக்கள் தழல்தாங்கும் எரிகொள்ளி உள்சிக்கி
இருபக்கம் ஓடுமொரு எறும்பென்றே நானானேன்”என அந்த அகநானூற்றுப் பாடலுக்குக் கொச்சகக் கலியால் உரையெழுதியவரும் இருந்திருக்கிறார்கள். இந்த இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பைத்தான் மணிவாசகப் பெருமான் தன் நிலையை விளக்க உவமமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
“இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து
நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய்
வியன் மூஉலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
பொருது அலை மூஇலை வேல் வலன்
ஏந்திப் பொலிபவனே!”‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பதே முதுமொழி ஆகும். ஆனாலும் இதில் ஒரு குறை இருப்பதாக மணிவாசகர் உணர்கிறார். ஒரு குச்சியின் இரண்டு பக்கங்களிலும் நெருப்புப் பற்றியிருப்பதால் (குச்சியின் மேலே உள்ள) எறும்பு இரண்டு பக்கங்களாலும் வெளியேற முடியாது. ஆனால், இரு பக்கங்களிலும் நெருப்பு நெருங்கி வரவர வெப்பம் தாங்காத எறும்பு துடிப்பதால் கீழே விழுந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பழமொழியில் உள்ள இக்குறையைப் போக்க, அடிகளார் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்கிறார். இருதலைக் கொள்ளி எறும்பு என்பது மூங்கிலின் மேல்பக்கம் திரிவது. இருதலைக் கொள்ளி உள்ளெறும்பு என்பது இருபக்க அழலுக்கு நடுவே அகப்பட்டுக் கொண்டது. இருதலைக் கொள்ளி எறும்பு என்பதே இருதலைக்கொள்ளிக்கு நடுவே அகப்பட்ட எறும்புதான் என்று கூறுவார் ‘உள்’ என்னும் சொல்லாட்சிக்கான அமைதியைக் கூறுதல் வேண்டும் கடப்பாடு உள்ளது.
இலக்கியங்களில் நாய்
பொதுவாக நன்றியுணர்ச்சியின் குறியீடாகவே நாய் பயன்படுத்தப்படுகிறது. ‘தன்னைப் பலகாலம் பேணிக்காத்தவன் என்றறிந்தும் கொல்லும் யானைபோல, நண்பரையே அழிக்கும் தீயவர் உறவு கூடாது. வேல் உடலிலே தைத்திருக்கவும் வால் குழைத்து நிற்கும் நாய்போலத் துன்பம் தாமே இழைத்த காலத்தும் நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது நட்பே கொள்ளத்தக்கதாகும் என்னும் கருத்தினை,
“யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா, வால்குழைக்கும் நாய்”. (நாலடியார் – 213)என்னும் நாலடியார் பாடல் கூறுகிறது. இனி அங்கதப் புலவர் காளமேகம் தமது தனித்தன்மையான சிலேடை வெளிப்பாட்டிற்கு நாயைப் பயன்படுத்தியிருக்கிறார்.
“ஓடு மிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு”நாய்க்கும் தேங்காய் மூடிக்கும் பாடிய சிலேடை இப்படி அமைந்திருக்கிறது என்றால் பத்துப்பாட்டு இலக்கியங்களில் பாடிணியின் பாதத்து அழகிற்கு நாயின் நாக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
“வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி” (பொரு. 42)
“உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின்” (சிறு. 17)“மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி” (மலை.42)என்றெல்லாம் சங்க கால இலக்கியங்களில் நாயின் நாக்கு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம்.
திருவாசகத்தில் நாய்
மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் நாய் என்னும் விலங்கு உவம வகையானும் உருவகத்தாலும் பாடப்பெற்றிருக்கிறது. மணிவாசகர் தன்னை நாயாக உருவகம் செய்து கொள்ளுகிறார். வேறு சில இடங்களில் ‘நாயைப்போல’ என நாயின் வினைகளைத் தனக்கான வினையுவமமாக்கிக் கொள்கிறார். இந்தவகையில் திருவாசகத்தில் அறுபத்தேழு இடங்களில் நாய் பற்றிய குறிப்பு காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மணிவாசகப் பெருமான் தன்னை நாயோடு ஒப்பிடுவதற்கான காரணம் என்ன? ஜீவ ராசிகளை விட நாயை மட்டும் சொல்வதனால் நாயின் அத்தகைய பண்புகள்தாம் என்ன? தன்னைப் ‘பொல்லாவினையேன், புழுத்தலைப் புலையனேன்’, ‘ஊற்றையேன்’ என்று கீழ்நிலைப்படுத்திக் கொண்டும் அமைதியடையாத நிலையில் ‘நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன்’ என்று திரும்பத் திரும்பத் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார். நாய் தன் தலைவனை அறியும் தன்மை உடையது. மேலும் தன் தலைவன் மேல் விசுவாசம் மிக்கது. சேக்கிழார் பெருமான் கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேட்டை நாய்களைப் பற்றி சொல்லும் போது ஒன்றுக்கு ஒன்று நேர் படாமல் செல்லும் என்கிறார். அதாவது வரிசையாக செல்லாமல் மாறி மாறி செல்லும் தன்மையது. தனக்குப் பிடிக்காது ஒதுக்கும் ஒன்றை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வது நாயின் இயல்பு. தன் வாயினால் கக்கியதைத் தானே திரும்பத் தின்னும் இயல்புடையது. இதன் பொருள் வெறுத்த ஒன்றையே திரும்ப விரும்பும் என்பதாம். ஐந்தறிவு நாய்க்கு அது இயல்பு. ஆனால் ஆறறிவு உடைய மனிதனுக்கும் தான் வெறுத்ததையே மீண்டும் மீண்டும் விரும்புகின்ற குணமுண்டு ஆக ஐந்தறிவு உள்ள நாயின் குணத்தை உயர்த்தித் தான் அதனைவிடக் கீழானவன் என எண்ணும் எண்ணமாகவும் இருக்கலாம். அல்லது கீழ்த்தரமான நாயை விட நான் கீழானவன் என்னும் பொருளிலும் கூறியிருக்கலாம். ஆன்மாவானது பிறவி, பந்தம், பற்று, பாசம் போன்ற இயல்புகள் மனிதனைத் திரும்பத் திரும்ப வந்து ஆட்டி வைப்பதையும் பிறவித்தளையில் இருந்து விடுபட முயல்வதையும் இறைவனின் திருவடியைச் சேர தடையாய் இருப்பதையும் கருத்தில் கொண்டே அவர் நாயேன் என்று நாயின் பண்பை வைத்துக் கூறியிருக்க வேண்டும்.
“நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” (சிவபுராணம்)“நாயினேனை நலம் மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென” (கீர்த்தித் திருஅகவல் )“சொல்லுவது அறியேன் வாழிமுறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது”“குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்து நிரம்பிய”(திருவண்டப் பகுதி)
“கனவிலும் தேவர்க்கு அறியாய் போற்றி
நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி ““பஞ்சுஏர் அடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி”(போற்றித் திருஅகவல்)
சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி”“நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை”
“நாசனே நான் யாதுமொன்று அல்லாப் பொல்லா நாயான”“
“நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்”
“ ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
“ஆடும் நின் கலழ் போது நாயினேன்”(திருச்சதகம்)
“பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே”
(நீத்தல் விண்ணப்பம்)
“கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை”
“நாயான நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை”
(திரு அம்மானை)
“கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட”
(திருப்பொற்சுண்ணம் )“நாயுற்றசெல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்”
“நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை”
(திருக்கோத்தும்பி)
“நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
(திருச்சாழல்)
“தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை”
(திருப்பூவல்லி)
“நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து”
“நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு”
(திருப்பொன்னூசல்)“கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவி
(திருத்தசாங்கம்)“நாளுமணு காவண்ணம் நாயெனை ஆளுடையான்”
(கோயில் மூத்த திருப்பதிகம்)“தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே”
(செத்திலாப் பத்து)
“நாயி னேன் உனை நினையவும் மாட்டேன்”
“எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க
கில்லேன் இல்வாழ்க்கை”
(ஆசைப் பத்து)“நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணைகாணேன்”
(புணர்ச்சிப் பத்து)“தாதாய் மூவேழு லகுக்கும் தாயே நாயேன் தனை ஆண்ட”
(வாழாப் பத்து)“கல்லாத புல்ல றிவிற் கடைப்பட்ட நாயேனை”
“ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு”
(கண்டப் பத்து)
“பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை”
“புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் உடையானே”
( பிரார்த்தனைப் பத்து)“இடரே பெருக்கி ஏசற்றிங்கு இருத்தல் அழகோ அடி நாயேன்”
“ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை”
“நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்”
(குழைத்த பத்து)“அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே”
(உயிருண்ணிப் பத்து)“நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசி ட்டிங்கு”
(திருவேசறவு)“பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே”
(அற்புதப் பத்து)
“பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்புழுத்தலை நாய் போல” (எண்ணப் பதிகம்)
“தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா
கருணையினால்” (யாத்திரைப் பத்து)
“ நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட”
“நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே”
(ஆனந்த மாலை)“நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ”
“நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த”(அச்சோப்பதிகம்)
என்றெல்லாம் தம்மை நாயாக உருவகப்படுத்தியும் நாயின் இழிந்த செயல்களைத் தன் செயல்களுக்கு உவமமாக்கியும் கூறுவதைக் காணமுடிகிறது. பொதுவாகத் தமிழ்க் கவிதைகளில் அல்லது நீதி நூல்களில் நாய் நன்றியுணர்ச்சியாகிய நேர்முகப் பார்வைக்கு உவமமாக்கப்பட்டிருந்தாலும் பக்தி இலக்கியங்களில் நாயின் இழிவான பழக்க வழக்கங்களாகிய எதிர்மறைப் பண்புகளே கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பது சிந்திக்கத்தக்கது.
கண்ணப்பனே அன்பான கதை
திருக்குறளில் ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகச் செயல்படுத்திக் காட்டுவார் திருவள்ளுவர். அதாவது பண்பு செயல்படாது. பண்பை உடைய மனிதன்தான் செயல்படுவான். அந்தப் பண்புக்குப் பெருமையையோ இழிவையோ செய்வான். அன்பு என்னும் பண்பு இயேசு வழியாகச் செயல்படும். துரோகம் என்னும் பண்பு யூதாசு வழியாகச் செயல்படும். ஆனால் திருவள்ளுவர் பண்பே செயல்படுவதாகக் கூறி அந்தப் பண்பின் கொடுமையைச் சித்திரித்துள்ளார்.
“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்துவிடும்”
என்பது அந்தக் குறட்பா. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. பாவமே பாவியாகிவிடாது. ‘அழுக்காறு’ என்பது பண்பு. அழுக்கர்ற்றினைப் பாவி என்றது பண்பினைப் பண்பியாக்கிய நுட்பம். இந்த நுண்ணியம் எதனைக் குறித்தது எனின் ‘அழுக்காறு’ என்னும் பண்பே செயல்படும். செயல்பட்டு அதனை ஆக்கினானை இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் அவனுக்குப் பேரழிவைத் தரும்.
“பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை இருமையும் கெடுத்தல் கொடுமைப்பற்றி அழுக்காற்றினைப் பாவி என்றார்”
என்னும் அழகர் உரை இதனை இன்னும் தெளிவாக்கும். திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் என்றால் மணிவாசகர் இதனை மாற்றுகிறார். இவர் பண்பியைப் பண்பாக்குகிறார்.
“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய்க் கோத்தும்பீ!”
என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனிடத்துப் பேரன்பு காட்டியவருள் கண்ணப்பன் முன்களத் தளபதியாகவே திகழ்கிறார். அவருடைய வேடர்குலப் பின்புலமும் அதற்கு முரணான அளப்பறிய பேரன்பும் தன்னல மறுப்பும் உண்மையான இறையுணர்வும் சிலையையும் தெய்வம் என்று, தந்தையென்று எண்ணும் பக்குவமும் அவருக்கு இந்தப் பெருமையினைப் பெற்றுத்தந்தது எனலாம். அதுபோன்ற அன்பு தனக்கு இல்லையென்பதையும் அத்தகைய தூய அன்பைத் தான் பெருமானிடத்துக் காட்டாதபோதே, காட்ட இயலாதபோதே தனக்குப் பேரருள் புரிந்த திருப்பெருந்துறை சிவபெருமானை வழிபடுகிறார் மணிவாசகப்பெருமான். இங்கே அவர் ஒப்பிடுவது கண்ணப்பன் காளத்தியப்பரிடம் காட்டிய அன்பை. ஆனால் பாட்டில் கண்ணப்பன் அன்பு ஒப்பதோர் என்னாமல் கண்ணப்பன் ஒப்பதோர் என்றே எழுதியிருக்கிறார். அதாவது ‘கண்ணப்பன் வேறு, அன்பு வேறு’ என நோக்காது கண்ணப்பனையே அன்பு வடிவமாக நோக்கியிருக்கிறார். பண்பைப் பண்பியாகச் சொன்னார் வள்ளுவர். பண்பியைப் பண்பாகக் காண்கிறார் மணிவாசகர்!. கண்டு உவமமாக்கியிருக்கிறார்.
நிறைவுரை
அக இலக்கியங்களிலும் புற இலக்கியங்களிலும் பயின்றுவரும் உவமங்களைச் சுவைப்பதற்கும், பக்தி இலக்கியங்களில் வரும் உவமங்களை உணர்வதற்கும் தனித்தனி புலமையும் மனநிலையும் தேவைப்படுகின்றன. புலவனுடைய அறிவையும் நோக்குத் திறனையும் அழகியலையும் முன்னிறுத்தி முன்னவற்றிற்கு உவமங்கள் அமைக்கப்படுகின்றன. பக்தி இலக்கியங்கள் நிலையாமை நோக்கிய வாழ்வியல் அனுபவங்களில் வெளிப்படுவதால் அழகியலைவிட உணர்வுகளும் உணர்ச்சிகளுமே தூக்கலாகத் தெரிகின்றன. இதனை இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் உவமங்களால் ஓரளவு உணரலாம். சைவமானாலும் வைணவமானாலும் ஆண்டவன் அடியார் என்னும் நிலையில் பாடப்படுகின்ற பாடல்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் பரம்பொருளை நோக்கிய மனத்தைப் பக்குவப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன. சிவபதத்தை அடையும் முழுத்தகுதி பெற்ற மணிவாசகர் முதலிய அடியவர்களும் தங்களைத் தாழ்த்திக் கொண்டு பாடும் முறையும் பயன்படுத்தும் உவமங்களும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் நன்னெறிப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. இலக்கியத்தை அழகுபடுத்தும் உவமங்களே வாழ்வியலை நெறிப்படுத்துகின்றன. இதனையே திருவாசகம் முதலிய பக்தி இலககியங்கள் தமது உவமக் கோட்பாடாகவும் கொண்டிருக்கின்றன எனவும் கருதலாம்.
(தொடரும்…)
-

ஊர்வசி- சயந்தன் கதை உணர்த்தும் பாடம்!
முனைவர் அரங்கன் மணிமாறன்
ஒரு முறை தேவாதிபதியான இந்திரனின் சபைக்கு அகத்திய மாமுனிவர் செல்கிறார். இந்திரன் மகிழ்ந்து பணிந்து மிகச்சிறப்பான வரவேற்பும் உபசரிப்பும் செய்கிறான். இந்திரன் சபை கலைகளின் உறைவிடமாயிற்றே! இரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ அரம்பையர் சூழ இருந்து கலைகளின் உச்சத்தைத் தொட்ட அரசவை அல்லவா?!
அவ்வழியே தம் அரசவைக்கு வருகைப்புரிந்த தமிழ்முனி குறுமுனி குடமுனி கும்பமுனி அகத்திய பெருமானுக்கு கலைவிருந்து அளிக்க விரும்பி ஊர்வசியின் நாட்டிய கலைவிருந்து ஏற்பாடு செய்கிறான் இந்திரன். தேவாதிபதியின் தேவசபை புதுப்பொலிவு பெற்றது. கலைநயத்தியத்தின் உறைவிடமான இந்திரனின் சபை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. கலைநயமும் ஒளிநயமும் நறுமணமும் மிக்கு விளங்கிய சபை ஊர்வசியின் கலைத்திறனைக் கண்டு ரசிக்க கூடியது. “ஊர்வசி! உன் கலைத்திறனை தமிழ்முனி அகத்தியர் கண்டு வியக்கும்படி நிகழ்த்திக்காட்டு!” என ஆணையிட்டான் இந்திரன்.
சபையில் இந்திரனின் மைந்தனான சயந்தனும் அமர்ந்திருந்தான். ஊர்வசியின் காதலனாக அவன் அவள் இதயத்தில் இடம்பிடித்திருந்தான் என்பது பலரும் அறியா உண்மை.
நாட்டியம் தொடங்கியது. ஆனால் ஊர்வசியின் மனமும் விழிகளும் சயந்தனையே நாடிநின்றது. ஆடலின் இடையே கண்கள் வழியே நயன காதல் சரசத்தில் ஈடுபட்டாள் ஊர்வசி. நாட்டியத்தை ஒப்புக்கு ஆடினாள். கடமைக்கு ஆடினாள். உப்புசப்பு இன்றி ஆடினாள். அந்த கலை அர்ப்பணம் அகத்தியருக்கன்றி சயந்தனை மகிழ்விப்பதாகவே இருந்தது.
இந்திரன் தன்னை அழைத்து கலைவிருந்து கொடுப்பதாய் அவமானப்படுத்திவிட்டான் என கொதித்தெழுந்தார். கோபங்கொண்ட அகத்தியர் ‘ஊர்வசி! நிறுத்து உன் கலை கொலையை! நீ நிகழ்த்தியது நாட்டிய விருந்தா? அல்லது உன் உள்ளங்கவர் கள்வன் சயந்தனுடனான நயன சல்லாபமா? காதல் மயக்கத்தில் கலையை மறந்து என்னையும் அவமானப்படுத்திவிட்டீர்கள்!
இனி உனக்கும் சயந்தனுக்கும் தேவ லோகத்தில் இடம் இல்லை. நீ பூமியில் மாதவி எனும் கணிக்கைக்குலப் பெண்ணாக அவதரிப்பாய்.நீ காதல் மயக்கத்தில் மறந்த ஆடற்கலையை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் கற்று, சோழன் அரசவையில் அரங்கேற்றுவாய்! அங்கு மூங்கிலாக மாறப்போகும் சயந்தன் தலைக்கோல் எனும் பட்டமாகச் சூட்டப்பெற்று நீ அவனை அடைவாய்! இதுவே காமத்தில் கலையை மறந்து இழிவுப்படுத்திய உங்கள் இருவருக்கும் நான் கொடுக்கும் சாபம்! அகத்தியனின் வாக்கு அகிலத்தில் பொய்க்காது!நான் வருகிறேன்.
ஊர்வசி மாதவியாக மண்ணில் பிறப்பெடுக்கிறாள். ஐந்தாம் வயது முதலே நாட்டியம் கற்கிறாள். தம் பனிரெண்டாம் வயதில் சோழ மன்னன் அரசவையில் தன் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்துகிறாள். கலையை முழுதாகக் கற்றுத்தேர்ந்த அவள் தன் திறன் முழுதும் வெளிப்படும்படியாக அரங்கேற்றியதைப் பாராட்டிய சோழன், நெறிப்படி பகைவரின் வெண்கொற்ற குடை காம்பை இழைத்து நவரத்தினங்களை பதித்து இடைஇடையே தங்க இழையால் சுற்றி அதை புனித நீராட்டி பூமாலைச் சூட்டி பட்டத்துயானையின் மீது இசை முழக்கத்தோடு அரசவை பெரியோர்கள் சூழ வலம்வரச்செய்து நாட்டிய அரங்கில் இருத்தினான். அத்தலைக்கோல் எனும் பட்டத்தையே மாதவியின் ஆடற்கலை திறனுக்கு உயரிய விருதாக அளித்தான். ஊர்வசி தலைக்கோலாம் சயந்தனைச் சூடினாள். இதனை சிலப்பதிகாரம் புகார்காண்டம் அரங்கேற்றுக்காதையில் “காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் என வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்!”
எனவும்
‘இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி’ எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.
இதன் மூலம் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அறிந்து கொள்ளும் பாடம் என்னவெனில் நம்முன் கடமைகள் இருக்கும்போது அதை மறந்து பொழுதுபோக்கு, விளையாட்டு, கேளிக்கை, காதல் போன்ற தேவையற்ற செயல்களிலேயே மூழ்கி, கல்விகற்றல், திறன்களை வளர்த்தல், எதிர்கால வாழ்வுக்கான திட்டப்பணிகளில் ஈடுபடுதலை மறக்கிறோம்.
நாம் யார்? எந்த பருவத்தில் இருக்கிறோம்? நம் இன்றைய பணிகள் என்னென்ன? என்னென்ன திறன்களை நாம் பெற வேண்டியுள்ளது. உலகிலுள்ள மற்ற நாட்டின் இளைஞர்களில் சிலர் எந்த முன்னேற்றத்தை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். மொழியறிவு, தொழில் நுட்ப அறிவு, விஞ்ஞான அறிவு ஆகியவற்றில் எத்தனை விரைவான முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பதை உணர்ந்து நாமும் அத்தகை அறிவுலகின் பந்தயத்தில் பங்கேற்று வெல்வதற்கான சூழல்களைப் பெற வேண்டும். ஆனால் எதிர்கால திட்டங்களோ இலட்சியங்களோ இன்றி அரசியல், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் மூழ்கி குறிக்கோளற்ற பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிறந்த உடற்திறனும் அறிவுத்திறனும் கொண்டு முன்னேற வேண்டும். அதைவிடுத்து தவம் செய்யும் காலத்து சுகங்களில் திளைத்தால் வரம் வாய்க்காது என்பதை உணரவேண்டும். காதல் மயக்கத்தில் கலையை மறந்தவள் கதை உணர்த்தும் நீதி மனம் ஒன்றிலும் செயல் வேறொன்றிலும் இருந்தால் வரத்திற்கு பதிலாக சாபமே கிடைக்கும்.
மனம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றிய கடமைகள் செய்து முன்னேற்றம் காண்போம்!
-

படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 6
முனைவர் ச. சுப்பிரமணியன்
முனைவர் பிச்சை தமிழகனின் ‘‘மரபுத்தொடர் அகரவரிசை’”
முன்னுரை
கவிதை, இலக்கணம், இவைபற்றிய ஆய்வு, மெல்லிசை, என்னும் நாற்பொருளையும் இதயத்தின நான்கு அறைகளிலும் நிரப்பிக் கொள்வதையே நாட்கடமையாகக் கொண்டிருக்கும் எனக்குச் சில நேரங்களில் ‘மறுமாத்தம்’ தேவைப்படுவதை உணர்கிறேன். அப்போது என் கண்ணில் பட்ட நூற்களில் ஒன்றுதான் ‘மரபுத் தொடர் அகரவரிசை’ என்னும் இந்நூலாகும். ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ என்னும் தொடர் தமிழுக்கு வழக்கின் இன்றியமையாமையை உணரத்தும். வழக்கின் உயிர்நாடி மரபுத் தொடர்களே!. ‘பனையட்டு’ என விதிப்படி உடம்படுமெய் புணர்த்தெழுதிப் பின்னர் ‘பனாட்டு’ எனச் சுயதிருத்தம் செய்து கொணடவர் தொல்காப்பியர். புளிச்சோறு, புளிங்கூழ், புளியமரம், புளியம்பழம் என்னும் ஒரே பகுதிக்குப் பல்வகைப் புணர்ச்சி விதிகளைத் தொல்காப்பியம் கூறுவதற்கும் இந்த வழக்கே காரணம். ‘மயில் குயில் ஆச்சுதடி’ என்பார் வள்ளலார். ‘மண்வெட்டிக் கூலிதின்னல் ஆச்சே’ என்பார் மகாகவி!. ‘குந்தி இருந்தவள் வீடு சென்றாள்’ என்பார பாவேந்தர். ‘வீடு முச்சூடும் அழும்’ என்பார் ஜீவா!. இப்பெருமக்கள் தமிழை ஆண்டிருக்கலாம். ஆனால் தமிழ் வழக்கு இவர்களை ஆண்டது அத்தகைய வழக்கின் உயிர் நாடியான மரபுத் தொடர்களை இயன்ற அளவு தொகுத்தும் வகுத்தும் விளக்கமளித்தும் உண்மையான தமிழ்த் தொண்டு செய்திருக்கிறார் கல்வெட்டறிஞர் இலக்கணக்கடல், வழக்கியல் வல்லாளர் முனைவர் பிச்சை தமிழகன் அவர்கள். நான் விரும்பிய நேரத்திலும் வேண்டிய நேரத்திலும் படித்துச் சுவைத்த ‘மரபுத்தொடர் அகரவரிசை’ என்னும் நூலைப் பற்றிய ஒரு சுருக்க மதிப்பீட்டினை இங்கே பதிவு செய்கிறேன்.
மரபத தொடர்களின் சிறப்பும் இன்றியமையாமையும்
மரபுத் தொடர் என்பதில் மரபு என்பது மக்கட்குழுவையும தொடர் என்பது அவர்களால் பேசப்படும் மொழியையும் குறிப்பது. மக்களால் உருவாக்கப்படுதலின் மொழி மக்களுக்கானது. தன்னை உருவாக்கிய மக்கட் சுமதாயத்தின் வழக்கையே தன் வழக்காகக் கொள்வது மொழியின் இயல்பு. இந்த மரபு என்பது பெரும்பாலும் உலகியல் வழக்கையும் மிகச் சிறுபான்மை செய்யுள் வழக்கையும் உள்ளடக்கியது. ஒரு மொழியின் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ ஒரு அசை கூட தானாக அமைந்துவிடாது. உலக வழக்கிலிருந்துதான் வரவேண்டும். இது அடிப்படை. ‘உலகத்தார் உண்டென்பது’ என்பார் திருவள்ளுவர். ‘உலகியல் கூறி பொருள் விளக்குவார் தமிழ்ச்சான்றோர். ‘வட்டார வழக்கு’ என்ற பெயரில் இலக்கியங்கள் வெற்றி பெறுவதற்கும் நாடடுப்புறப் பாடல்கள் தனிக்கவனம் பெறுவதற்கும், திரையிசைப்பாடல்களில் நாட்டுப்புற இசையமைப்புடன் கூடிய பாடலகள் பெருஞ்சிறப்பு பெறுவதற்கும் மண்ணின் மணமாகிய மரபே காரணம். ‘சரிகமபதநி’ என்னும் ஸ்வரங்களை அறியாதவன் ‘தந்தானே தானே தன்ன தன்னானா’ என்னும் தத்தகாரத்தில் தன்னை இழப்பதற்கும் இந்த மரபிசைதான் காரணம். அறிவியல் வளர்ச்சியாலும் மொழிக்கலப்பினாலும் நடப்பியல் வாழ்வில் போலித்தனத்தாலும் மரபுத் தொடர்கள் மறக்கப்படினும் அது தலைகாட்டுகிற இடங்களில் எலலாம் தனிச்சிறப்பு பெறுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு நூறு பேர் முழுக்கால் சட்டை அணிந்த ஒரு விழாவில் வேட்டி கட்டிய ஒருவனுக்கான பெருமை அது. முன்னோர்கள் விட்டுச்சென்ற ‘ வீட்டு உலக்கை’ அது. கண்ணில் மறைந்திருக்கும் காமாட்சி விளக்கு!
உண்மையான தமிழ்த்தொண்டு
அறிஞர் உ.வே.சா. பெரிய படைப்பாளர் அல்லர். கவிஞர் அல்லர். நாவலாசிரியர் அல்லர். வரலாற்றாசிரியர் அல்லர். ஆனால் இவர்களுக்கெல்லாம் மூலமாகத் திகழ்ந்தார். திகழ்கிறார். அதற்குக் காரணம் அவர் ஏற்றுக் கொண்ட பதிப்புப் பணி. குறிஞ்சிப்பாட்டின் இரண்டு வரிகளுக்காகக் குக்கிராமத்திற்கும் குதிரைவண்டிப் பயணம் மேற்கொண்ட குணாளர் அவர். எப்படி புலமைக்கடல் நச்சினார்க்கினியர் தாமே தனித்து ஒரு நூலை எழுதவில்லையோ அவரைப் போலவே தனியொரு நூல் செய்யாமல், இருந்து மறைந்த நு{ல்களைத் தேடுவதிலும் செப்பம் செய்வதிலும் உண்மை கண்டு பதிப்பிப்பதிலும் ஐயரின் உழைப்பு ஆண்டவனும் அறியாதது. அறிஞர்களாலும் பேராசிரியர்களாலும் கைகக்கொள்ள முடியாத கடும்பணி ஐயர் மேற்கொண்ட அந்தப் பணி. அந்தப் பணியை அல்லது அதுபோன்றதொரு பணியைத்தான் அறிஞர் தமிழகன் செய்திருக்கும் இநத மரபுத்தொடர் அகரவரிசை. இருந்த இடத்திலிருந்து இருப்பதைப் படிக்கவே சுணங்கும் இந்த உலகில் கால நேரம் பார்க்காது கால்கடுக்கச் சென்று கேட்டும் குறிப்பறிந்தும் தொகுத்திருக்கும் இந்த ‘மரபுத் தொடர் அகர வரிசை’ முனைவர் அவர்களுக்குப் பெருமை தரும். தமிழுக்கு உரமாகும். இதுதான் உண்மையான தமிழ்த்தொண்டு. பிறர் செய்யாத தொண்டு. அவ்வளவு எளிதாகப் பிறர் செய்ய முடியாத தொண்டு!.
மக்கள் பயனபாட்டில் மரபுத் தொடர்கள்
இலக்கணத்தை அல்லது அது சார்ந்த பொருண்மைகளை இலக்கணமாகக் கற்பித்தலின் அதன் பயன்பாட்டை மக்கள் வழக்கிலிருந்து அல்லது தொடரில் அமைத்து எடுத்துக் காட்டினால் இன்னும் தெளிவாகும்.
- மண்ணையே ஆளலாம் என்று அவன் ‘மனக்கோட்டை’ கட்டுகிறான்.
- ‘கணணும் கருத்துமாக’ இருந்தால் காரியம் கைகூடும்
- ஆடம்பரத்திற்காகப் பணத்தை ‘அள்ளியிறைக்கிறான்’
- விஷயததை ‘ஆறப்போடுவதற்கு’ விசாரணை ஆணையம்
- சில்லறை இலஞசம் பெற்றான் அதனால் ‘சீட்டு கிழிந்தது’
- ‘அவசரக் குடுக்கையாய்’ இறங்கினான், அல்லற்படுகிறான்
- கையேந்தி கடன் பெற்றவன் ‘கம்பி நீட்டினான்’
- கூட்டுக் குடும்பம் என்பது இனி ‘கானலே!’
- ‘கயிறு திரிப்பதில்’ இவனுக்கு நோபல் தரலாம்.
- குடி வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்கிவிடும்
- மேலாளருக்குத் தாளம் போட்டே இவன் மேலே வந்தவன்
மேலே காட்டப்ட்டிருக்கும் தொடர்கள் எல்லாம் நாளும் மக்கள் வாழ்வில் புழங்குவன. மனத்திலே கோட்டை கட்ட முடியாது. தகுதிக்கு மீறிய ஆசை. கண்ணும் கருத்தும் பொறுப்புணர்வை உணர்த்தியது. அளவின்றி வீணான செலவுதான் ‘அள்ளியிறைத்தல்’. ஆறப்போடுதல் என்றால் சூடு குறைவதற்காக அன்று மக்கள் மறக்கட்டும் என்று. . ‘சீட்டு கிழிந்தது’ என்றால் பதவி பறிபோனது.. ‘அவசரக் குடுக்கை’ என்பது பொறுமையின்மை. ‘கம்பி நீட்டினான்’ என்றால் காணாமல் போனான் ‘கானல் என்றால் காணமுடியாது .கயிறு திரித்தல் என்றால் பொய் சித்திரிப்பு. ‘குட்டிச் சுவர்’ என்பது இடிந்த சுவரைக் குறிக்காது வாழ்க்கையின் சிதைந்த நிலையைக் குறிப்பது. ‘தாளம் போடுதல்’ என்றால் அநியாயத்துக்குத் துணைபோதல். இதனை ஒததூதல் என்றும் சொல்வர். ‘ஜால்ரா’ என்பதும் அது. சொற்களுக்கான நேரடிப் பொருளைத் தராது மக்கள் கருதும் பொருளை அவர்தம் பண்பாடு சார்ந்து அமைகின்ற தொடர்களே மரபுத் தொடர்கள் என்பது இவற்றால் ஓரளவு விளங்கக் கூடும்.
உலை வைத்தலும் ஊசலாடுதலும்
உலையும் கஞ்சியும் ஒரு திறத்தன. அவை ஏழைவீட்டுச் சமையல் அறை அணிவகுப்பு ‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்பார் அழுகணி சிததர். அது கொல்லன் உலை. “உலைஅமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல் போல் என்று குழந்தையைத் தூக்குதற்கு உவமம் காடடுவார் பாவேநதர். இந்த இடங்களில் எல்லாம் ஏழை வீட்டுச் சிந்தனையே உலை என்ற சொல்லால் வெளிப்படுததப்படடது. இந்த ஏழையின் பிழைப்பில் மண்ணைப் போடுவதற்கென்று சில ஏகாதிபத்திய சக்திகள் எந்த நாளும் இருந்து வருவது இயல்பு. . முயன்று படித்து முன்னேறும் நோக்குடன பணிபுரியும் ஏழை ஒருவனைப் பற்றிய மொட்டைக் கடுதாசி அந்த எழையின் பிழைப்புக்கு உலை வைக்கும். ‘வைத்தல்’ என்ற வினைக்குத் தரையில் வைத்தல் என்று பொருள. ஆனால் ‘பற்ற வைத்தல்’ என்ற சொல்லில் அது அப்பொருள் தராது. அதுபோல ‘உலை வைத்தல்’ என்ற இந்தச் சொல்லில் ‘வைத்தல்’ என்ற சொல் உலை எனபதோடு இணைந்து ‘கேடு செய்தல்’ என்ற பொருளில் வந்தது. அதுவும் பிழைப்புக்கே கேடு சூழ்வதைததான் ‘உலை வைததல்’ என்னும் மரபுத் தொடர் குறிக்கிறது என்பதை ஆசிரியர் நுட்பமாக விளக்கியிருக்கிறார். காற்று தீயாகி ஸ்டவ் அடுப்புச் சமையலுக்கு உலையும் தெரியாது. அதனால் கஞ்சியும வடியாது!
‘ஊசல் என்பது இலக்கியத்தில் கலம்பகத்திலும் பெண்பாற் பிள்ளைத் தமிழிலும் ஓர் உறுப்பு. திருவாசத்தில் திருப்பொன்னூசல் என்பதைக் காணலாம். ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்? உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்? என்பது நந்திக்கலம்பகம் .‘ஆகாயப் பந்தலிலிலே பொனனூஞ்சல் ஆடுதம்மா’ என்பது திரையிசைப் பாடல். தூய்மையான தமிழ்ச்சொல். அது ஆட்டம் என்னும் தொழிற்பெயரோடு சேர்ந்து ‘ஊசலாட்டம்’ என வருவதுண்டு.
“எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின்
எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில்
புகுத லோடும
உண்ணிலா வியதுயரம் பிடித்து உந்த ஆருயிர் நின்று
ஊசல் ஆடக்
கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடும் துயரம்
கால வேலான்”.என்னும் கம்பன் பாடல். துன்பத்திற்கும் கடமைக்கும் இடையே தசரதன் மனத்து ஊசலாட்டத்தைக் காட்டும். இந்த அரிய சொல் மக்கள் வழக்கிலிருந்து வந்தது. மனம் ஒரு நிலையில் நிலலாமைக்கு ‘ஊசலாட்டம்’ என்று பெயர். இதற்கும் கடியாரத்தின் ஊசலுக்கும் தொடர்பில்லை. ஆனால் கடியாரத்தின் ஊசலுக்குத் (PENDULUM) தமிழில் அப்பெயர் வந்ததற்குக் காரணம் ஒரு முனையிலும் நில்லா அதன் ஆட்டமே. ஊஞ்சலில் ஆடுவதற்கும் ஊசல் ஆடுவதற்கும் தொடர்பில்லை. மக்கள் பார்வையில் அதன் இருமுனையாட்டம் ஒரு முடிவுக்கு வராத நிலையை நினைவுபடுத்தியதால் தோன்றிய தொடர்.!.
உடம்புக்கும் பாடைக்கும் ஒரே பெயர்
‘கட்டுமானம்’ என்ற சொல்லிற்கும் ‘கட்டு’ என்ற சொல்லிற்கும் தொடர்பு உண்டு. ‘மானம்’ என்னும் விகுதி வருமானம், வெகுமானம், அடமானம், உவமானம் என்பன போல் வரும். உறுதியான பொருட்தொகுதிக்கு அப்பெயர் வழங்கப்படுகிறது. தேகக்கட்டு, உடற்கட்டு, வீட்டுக்கட்டுமானம், கீரைக்கட்டு என்பன போன்ற சொற்களில் அப்பொருள் இழைவது காண்க. இனி ‘நாட்டுக்கட்டை’ என்ற சொல்லில் இருக்கும் நுண்ணியமும் அதுவே. உடலுறுப்புக்களின் உறுதியும் அழகும் தளர்ச்சியின்மையும் சுட்டுவதாக அது அமைந்திருப்பதை உணரமுடியும்.
மொழியின் முழுமையான ஆழத்தையும் ஆளுமையையும அவல வெளிப்பாட்டில் காணலாம்.. இலக்கியச் சுவைகளில் பெரிதும் மனங்கவர்ந்து நிற்பது அவலமே. கம்பனின் ஆறு காண்டங்களில் யுத்த காணடத்தை ‘மரண காண்டம்’ அலலது ‘அவல காண்டம்’ என்றே கூறலாம். புலம்பலின் உச்சம். அழுகைகளின அணிவகுப்பு. வழக்கிலும் இந்த அவலததைக் காணலாம். ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பார் திருமூலர். ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றதும் அவரே. அத்தகைய உடம்பை வழக்கில் ‘கட்டை’ என்று வழங்குகின்றனர் மக்கள்.
‘உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்த பிறகுதான் இந்தக் கட்டை போகும், வேகும்’ என்பது வழக்கு. இந்தத் தொடரில் ‘கட்டை’ என்பது உடம்பு. கட்டை என்பது யாக்கையின ;மறுபெயர். யாக்கை தொழிற்பெயர். யாத்தல் எனினும் ஒக்கும். உயிரன்றி யாக்கை செயல்படாது. இயலாது. இனி ஈரம் இல்லாதது கட்டை. விறகுக் கட்டை, மரக்கட்டை என்னும் வழக்கு நோக்குக. உயிரற்ற உடம்பிற்கு யாக்கை என்பது பெயர்.
‘கட்டையிலே போறவனே’ என்பதும் வழக்கு. இங்கே கடடையென்பது உடம்பைக் குறிக்காது கட்டையாகிய உடம்பு வேகின்ற மயான மேடையைக் குறிக்கிறது. உடம்புக்குப் பெருமை உயிர். மரத்திற்குப் பெருமை ஈரம். உயிரிலலாத உடம்பும் ஈரம் இல்லாத மரமும் பயனற்றவை. வேரில் விழுகின்ற மழைத்துளிக்கும் விறகில் விழுகின்ற மழைத்துளிக்கும விளைவு வேறுபடும். எனவேதான் எரிகின்ற உடம்பையும் ‘கட்டை’ யென்றார்கள் எரிக்கப்படும் உடம்பையும் ‘கட்டை’ யென்கிறார்கள்.
‘என் கட்டை போகிறவரைக்கும்’ என்பதும் ‘நான் கட்டையில் போகிறவரைக்கும்’ என்பதும் முறையே உடம்பையும் பாடையையும் ‘கட்டை’ என்னும் ஒரு சொல்லே வழக்கில் இருக்கிறது என்தைத் தமிழகன் மிக அருமையாக உணர்த்தியிருக்கிறார். இந்த வழக்குச் சொலலை கவிஞர் வைரமுத்து தாம் எழுதிய பெய்யெனப் பெய்யும் மழை என்னும் கவிதை நூலில்
“கட்டையிலே போகையிலும்
கட்டாயம் சோதி! என்
கண்ணுக்குள் தெரியுமடி
கவிதையென்னும ஜோதி!”என்று பாடி அதன் இலக்கியத் தகுதியை உறுதிசெய்திருக்கிறார். எதுகையைப் புறந்தள்ளி மோனைக்கும் இயைபுக்கும் முதன்மை தரப்பட்டிருக்கும் இந்தக் கவிதை வரிகளில் ‘கட்டையிலே’ என்ற சொல்லைப் ‘பாடை’ என்னும் பொருளில் அவன் பயன்படுத்தியிருப்பது காண்க.
கடைவிரித்தலும்
செங்குத்தான (VERTICAL) திறப்புக்குத் திறப்பு என்றும் கிடக்கை நிலைத் (HORIZONTAL) திறப்புக்கு விரித்தல் என்றும் பெயர். கோயில் நடைத் திறப்பு,, மதில் வாயில் திறப்பும் என்பவற்றையும் படுக்கை விரித்தல், பூவிரித்தல், இலை விரித்தல் முதலிய வழக்கு நோக்குக. இது முரணாகிறபோது பொருள் மாறுபடும். ‘தலைவிரிக்கோலம்’ என்னும் ;முரண் அவலக் குறிப்பு. கடைவிரித்தல் என்பது சாதாரண மொழியில் தரைக்கடையை விரிப்பதாகக் கொளளலாம். ஆனால் அது மரபுத் தொடராக அமைகிறபோது ‘மந்தணத்தை வெளிப்படுத்துதல்’ என்னும் பொருளில் வரும். ‘எல்லாவற்றையும் கடைவிரிக்கத்தான் நீ வந்தாயா? என்பது உலகியல். நூலாசிரியர் கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்னும் தொடரை வள்ளலார் வாக்கு அதாவது வாயச்சொல் என்கிறார். உண்மையில் அது திருவருட்பாவில் எங்கும் காணப்படாத வரி. மிகவும் சாதுரியமாக ‘வாய்ச்சொல்’ என் ஆசிரியர் சொல்வதும் ஒரு வகை உத்தியே! அது வள்ளலார் சொன்னதாக வழிபோக்கர் சொன்னது. இத்தகைய வழிப்போக்கர் விட்ட கதை தமிழில் எராளம்! ஏராளம்!
கண் – மூடுதல் – விழித்தல் — காட்டுதல்
‘கணணயர்தல்’ என்பது உறங்குதல் என்னும் பொருளில் வரும். இந்தச் சொல்லில் ‘கண்’ என்பது பெயர்ச்சொல். அயர்தல் என்பது வினைச்சொல். இவையிரண்டும் அவற்றுக்கான உண்மைப் பொருளையே உணர்த்தியது. ‘கண்மூடுதல்’ என்பது சாதாரண நிலையில் ஒரு பொருளும் மரபத்தொடராக மற்றொரு பொருளும் உணர்த்தி நிற்கிறது. ‘கண்மூடுதல் என்றால் கண்ணயர்தல் என்பது போலவே உறங்குதல் என்பதை உணர்த்தும். ‘கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே’ என்பது அன்றைய திரையிசைப்பாடல். கூடவே ஒரே சொல்லாக நின்று ‘இறந்து போதல்’ என்னும் பொருளையும் உணர்த்தி நிற்கும். அவன் கண்ணை மூடுவதற்குள் இதனைச் செய்துவிட வேண்டும் என்பதில் ‘அவன் இறந்து விடுவதற்குள் இதனை முடித்துவிட வேண்டும் எனனும் பொருள் அமைந்திருப்பதை அறிக. ‘கண்ணை மூடுதல்’ என்னும் சினைவினை மரபுத் தொடராக நின்று நுண்பொருளை உணர்த்துகிறது.
‘கண்விழித்தல்’ என்பதும் அதுபோன்றதொரு சொல்லே. உறங்கி எழுதல் என்பது இயல்பான வழக்கு. ஆனால் ‘என்னைக் கொஞ்சம் கண் திறந்து பார்க்கக் கூடாதா?’ என்று திறந்த விழி உடையவனையே நோக்கி இறைஞ்சுகிறபோது அது மரபுத் தொடராகிவிடுகிறது, என்பால் இரக்கம் காட்டமாட்டாயா என்னும் பொருளைத் தருகிறது, ‘இன்னமும் பாரா முகம் ஏனம்மா?’ என்பது அக்காலத்திய புகழ் பெற்ற திரையிசைப் பாடல் வரி. ‘கண்ண தெறக்கணும சாமி’ என்பது இக்காலத்திய திரையிசைப் பாடல் வரி. ‘மீன் நோக்கும் நீள்வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா என்பால் நோக்காயாகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்’ என்பது பெருமாள் திருமொழி.
‘கண்விழித்தல்’ என்பதுபோன்ற மற்றொரு மரபுத்தொடர் கண்காட்டுதல். கண்காட்டுதல் என்றால் ‘அருள்பாலித்தல்’ ‘நன்னெறி காட்டுதல்’, ‘பிழைக்கும் வழி காட்டுதல்’ என்பது பொருள். கொஞ்சம் உன் கண்ணைக் காட்டினால் பிழைத்துக் கொள்வேன் என்பதும் ‘அவனுக்கொரு கண்ணைக் காட்டிட்டா பிழைத்துக் கொள்வான்’ என்பதும். ‘சாமி கண்ணத் தொறக்கணும்’ என்பதும் மரபியல் சார்ந்த உலகியல் வழக்கு.
கரைத்துக் குடித்தலும் கரைகாணுதலும்
முற்றோதல் என்பதும் முழுதறிதல் என்பதும் தமிழ்ப்பனுவல்களில் காணப்படும் சொற்கள். மனனம் செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாகச் சொல்லிச் சுவைப்பது முன்னது. ஒரு பொருள் பற்றி முழுமையாக அறிவது பின்னது. உணவுப்பொருட்களை நன்கு மென்று உள்ளே அனுப்பினால் உள்ளே இருக்கும் செரிமான உறுப்புக்களின் வேலைப் பளு குறையும் என்பது மருத்துவக் குறிப்பு. பற்களின் உடலியல் பயன் அது. அவசர வாழ்க்கையில் பலர் பற்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக விழுங்குவதற்குத் தொண்டையைப் பயன்படுத்துகிறார்கள். ‘கஞ்சி’ என்பதும் குழைத்தும் கரைத்தும் உண்பது. அது இன்னும் நல்லது. எதிலும் நுனிப்புல் மேய்வார் பரவி நிற்கும் உலகத்தில் எந்தப் பொருள் பற்றியும் முழுமையும் தெரிந்து கொள்வார் குறுகிப்போயினர். ஒருவனுடைய அடையாளப்படுத்தப்பட்ட அறிவின் அளவை அறிந்த மக்கள் அவன் அளவு தெரியாது பேசினால் ‘கரைத்துக் குடிச்சவன் மாதிரி பேசாதே’ எனக் கடிந்துரைப்பர். எதிர்மறையில் இப்படி வரும் இந்தத் தொடர் ‘வாரியார் அவர்கள் திருப்புகழைக் கரைத்துக் குடிததவர்’ என உடன்பாட்டில் வழங்கப்படும்.
‘கங்குல் எல்லை காண்பளவும இமைப்பிலன்’ (இலக்குவன்) என்பது குகன் வாக்கு. கரைத்துக் குடித்தல் என்பது ஒரு பொருளைப் பற்றிய பன்முகப் பரிமாணத்தைப் பற்றியதெனின் ‘கரைகாணுதல்’ என்பது பரப்பைப் பற்றியது. அகலக்கற்றல் ஆழக்கற்றல் என்னும் இருவகையுள் இது அகலக் கற்றலைக் குறிக்கும். இதுவும் எதிர்மறையிலும் வரும் உடன்பாட்டிலும் வரும். ‘கரைகாணாத் துன்பம்’ என்பது எதிர்மறை. ‘சிலப்பதிகாரத்தில் சிலம்புச் செல்வர் ம.மொ.சி. கரை கண்டவர் என்பதும் ‘வேர்ச்சொல் ஆய்வில் கரைகண்டவர் பாவாணர்’ என்பதும் உடன்பாடு. கரைத்தல், கரைகாணுதல் என்னும் பருப்பொருள் வினைகள் நுண்பொருள் உணர்த்தி வந்தமை வழக்கு நுண்ணியம். பண்பாட்டு நுண்ணியம். மொழியியல் நுண்ணியம்.
முழுகாமல் இருத்தலும் முழுகிப் போதலும்
‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் பேரறிஞர் அண்ணா எழுதியது. அதில் ஒரு காட்சி வரும். விலைமகளை நாடும் தலைவனிடம் கதைத்தலைவி தான் கர்ப்பமாயிருப்பதை நாணத்துடன் இப்படி வெளிப்படுத்தவாள். “நான் மூனு மாசம் முழுகாமல் இருககிறேன்” என்று. அதற்கு உடனடியாக கதைத்தலைவன் சொல்வான்’ நான் (உன்னை) ‘தலைமுழுகிவிட்டேன்” என்று. ‘தலை’ என்ற சொல் ‘தனி. முழுகுதல்’ என்ற சொல் தனி. இவ்விரண்டு சொற்களும் இணைந்து முற்றிலும் மாறுபட்டதொரு பொருளைப் தமிழ்ர் பண்பாட்டுத் தளத்தில் வைத்துப் பெறமுடிவதைக் காணலாம். பெண்கள் கருவுற்றிருப்பதை வெளிப்படுத்துவதற்குப் பல சொற்கள் இருக்கின்றன. அவை பண்பாடு காக்கும் சொற்கள். ‘மாசப்பொழுதாய் இருக்கிறாள்’. ‘முழுகாமல் இருக்கிறாள்.’ ‘மசக்கையாய் இருக்கிறாள்’ ‘இப்ப அவ ஐந்து மாசம்’ என்றுதான் சொல்வார்கள். அப்போதெல்லாம் பெண்களுக்குச் சுண்டு வலி வரும் அதனால் சுகப்பேறு நிகழும். அது ஒரு கனாக்காலம்!. போலி நாகரிகத்தில் எதனைப் பேசுகிறோம் யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் ஜிகினா வாழ்க்கையில் சிக்கித தவிக்கிற தற்காலத்தில் ‘என் மவ உண்டாயிருக்கிறா’ என்று உவந்து போகிறார்கள். அப்படிச் சொல்வது அவர்கள் உரிமை. அதே நேரம் ஒரு நெடிய மரபு புதைக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது, பெரியவர் தமிழகன் பண்பாடு காக்கும் இத்தகைய மரபுத்தொடர்களைத் தொகுத்துக் காட்டியிருக்கிறார் வகுத்துச் சொல்லியிருக்கிறார். இதில் என்ன பண்பாடு இருக்கிறது என்று சிலர் வினவலாம். ‘முழுகுதல்’ என்றால் தலைக்குக் குளித்தல் மாதாந்திர விலக்குக்கு உள்ளான மகளிர் மூன்றாம் நாள் குளித்து வீடடுக்குள் வருவது தமிழர் பண்பாடு. இன்றைக்கும் பெருவாரியான தமிழகச் சிற்றூர்களில் பின்பற்றப்படும் வாழ்வியல் நியதி. திங்கள்தோறும் தலைமுழுகும் மகளிர் கருவுற்றால் தலைகுளித்தலாகிய அந்தக் குறிப்பிட்ட சடங்கு நிகழாது. ‘தலைக்கு ஊற்றுதல்’ என்பது தலையைத் தாண்டியதொரு பண்பாட்டைக் குறித்தது காண்க. எனவே ‘முழுகாமல் இருக்கிறாள்’ என்ற சொல் ஏற்கனவே அவள் திஙகள் தோறும் முழுகியதைக் காட்டுகிறது. ஆனால் ‘உண்டாயிருக்கிறாள்’ என்ற சொல் அந்தப் பண்பாட்டு விழுமியத்தை எள்ளின் முனையளவும் வெளிப்படுத்தவில்லை என்பதை அறிதல் வேண்டும்.
‘என் குடி முழுகிடுச்சே?’ இந்த அவலம் அங்கிங்கு எனாதபடி எங்கும் கேட்கும் காலம் இது. முழுகுதல் என்பது நீரின்கண் நிகழ்கிற நிகழ்வு. வீடு வெள்ளத்தில் மூழ்குவது வேறு. காதல் கண்ணீரில் மூழ்குவது வேறு. குடி வறுமையில் மூழ்குவது அவற்றினும் வேறு. இது மூன்றாவது. தமிழின் மரபின் நுண்ணியம் வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. ஒருத்தி முழுகாமல் இருந்தால் அந்தக் குடும்பம் மகிழ்கிறது. அந்தக் குடும்பம் வறுமையில் மூழ்கினால் புலம்புகிறது. . இதனை வேறுவாய்பாட்டிலும் சொல்லலாம். முழுகாமல் இருந்தால் களிப்பு. மூழ்கினால் சலிப்பு! இந்தச் சலிப்பு பத்து பவுன் சங்கலியை அடகுவைத்து வட்டிக் கட்ட இயலாது மூழ்கிப் போனவனுக்குத்தான் தெரியும்!
சந்திக்கு இழுத்தல்
ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பாரத்துக் கொள்வதற்குச் சந்தித்தல் என்று பெயர். சாலைகளுக்கும் இரு பொருந்தும் இரண்டு மூன்றாகி முச்சந்தி, நாற்சந்தி எனவும் வருவதுண்டு. ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்துக்கு ‘ஐஞ்சந்தி’ என்று வந்திருக்க வேண்டிய பெயர் ‘விரல்நிலை’ என்று வந்தது. ‘FINGER POST’ என்பது நீலமலை மாவட்டத்தில் ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்திற்குப் பெயர். இ;நதப் பெயர் இங்கிலாந்து நாட்டில் உள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியில் தங்கள் நாட்டிலிருந்த பெயர்களையெல்லாம் நீலமலையில் முதன்முதலாகக் குடியேறிய காலத்து அங்கே வைத்தார்கள். கட்டுரைக்குத் தொடர்பிலலாதவிடத்தும் இது ஒரு கூடுதல் தகவலாகக் கொள்ளப்படலாம். இந்தச் சந்திகளில் தமிழர்களின் வாழ்வில் முச்சந்தி பெற்ற இடத்தை வேறு எதுவும பெற்றதாகத் தெரியவில்லை. ‘அங்காடி நாய்’ என்றே பட்டினத்தார் பாடுகிறார். சாவும் நெருங்காது சந்தியிலே நிற்கின்றேன் என்பார் வைரமுத்து. ‘சந்திப் பிழை போன்ற சந்ததிப் பிழைகள்’ என்பார் காமராசன். “சந்திக்கு இழுத்தல்” என்பதன் பொருள் தெருக்கள் கூடும் சந்தியை நோக்கி ஒருவரை இழுத்துச் செல்வது என்பதன்று. ‘அவமதித்தல்’ அல்லது ‘மானக்கேடான சம்பவங்களைப் பிறரறிய வெளிப்படுத்தல்’ என்பதே மரபுப் பொருளாகும். ஒருவன் மற்றொருவனைச் சந்திக்கு இழுத்தால் அங்கே அவர்கள் சிரிக்கமாட்டார்கள். சந்தி சிரிக்கும்! சந்தியென்றால் வேடிக்கை மனிதர்கள்!
குளிர்ந்தது நெஞ்சா? வயிறா?
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்பார் மகாகவி. புவியனைததையும் ஒரு சேர நோக்கி அனைத்தையும் தன் கவிக்குடைக்குள் கொண்டு வர எத்தனித்த அவன், ஒரு தனிமனிதனின் உணவுப் பசியைப் போக்குவதையே தலையாய தொண்டாகக் கருதினான். பாரதிக்கு முன்னால் அறச்செல்வி மணிமேகலை இதனை முன்னெடுத்திருந்தாலும் அவள் ‘கவிதாயினி’ அல்லள். பாரதி வையகத்து மாகவிஞன். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று தத்துவ முரணை முன்னெடுக்கிறான். சமுதாயத்திற்காகத் தனிமனிதன் என்பதுதான் நெறி. பாரதி பசியின் கொடுமையைச் சித்திரிக்க வேண்டி தனிமனிதனுக்காகவே சமுதாயம் என்று முன்னெடுக்கும் நுட்பம் உணரத்தக்கது. வயிற்றை அடிப்படையாகக் கொண்ட இச்சமுதாய வழக்கினை அறிஞர் முனைவர் தமிழகன் ஐயா அவர்கள மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
வயிற்றில் பால் வாரத்தல்
‘பால்வார்த்தல் என்பது பாம்புக்குரிய பழமொழியின் பகுதி. ‘பாலாபிஷேகம்’ என்பது இறைவழிபாட்டில் இடம்பெறுவது. ‘பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்க வா’ என்பது வைரமுத்தின் வரி. ஆனால் வயிற்றில் ‘பால் வார்த்தல் என்பது வழக்கு. வாழ்க்கைச் சிக்கல்களில் விடும் பெருமூச்சுக்களில் சிக்கித் திணறும் சூழலில் ஆறுதல் தரும் பொருளோ சேதியோ கிட்டும்போது வரும் வெளிப்பாடு இது. ‘சுகப் பிரசவம்’ எனக்கேட்டுத் தாய் பூரிக்கிறாள். ‘விபத்தில் பிள்ளை தப்பினான்’ என்னும் சேதி குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி. இவையெல்லாம் தொடர்புடையவர்களுக்கு ‘வயிற்றில் பால் வார்த்தது போல’ என்பதாம். வயிற்றுக்குச் சோறே கிட்டாதாரும் ‘வயிற்றுக்குப் பால் வாரத்தல்’ என்னும் இந்த வழக்கைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சேதி நெஞ்சைக் குளிரவைக்கும். நல்ல சோறு வயிற்றின் பசிபோக்கும். நெஞ்சின் வினை வயிற்றுக்கு இடம் மாறும் உலகியலில் வழக்கில் பயன்படுத்தப்படும் மரபியல் தொடர் இது. பதற்றம் நெஞ்சுக்கானது என்பதைப் புரிந்து கொண்டால் மரபுத் தொடரின் ஆழமும் அழகும் புரியக்கூடும்.
கொள்ளையடிததலும் வயிற்றிலடித்தலும்
“ஊரை அடித்துப் போடும் அரசியல்வாதி’களோடு தற்போது அரசு அதிகாரிகளும் இணைந்திருக்கிறார்கள் என்பது தினச்செய்தி. ‘படியளப்பேன் என்று பாராள வந்தவர் தடியெடுப்பதும், கடமை செய்ய வந்தவர்கள கையூட்டல் வளம் பெறுவதும் கண்கூடு’. தகராறு வருகிறபோதோ சண்டைவருகிறபோதோ யாரும் வயிற்றில் அடித்துக் கொள்வதில்லை, உடலின் கீழ்ப்பகுதியாக அது இருப்பதால். ஆனால் ஒருவனுடைய கை செயல்படாடமலேயே அடிப்பதுதான வயிற்றில் அடிப்பது. வயிற்றுப் பிழைப்புக்கான வழியைத் தூர்ப்பதே வயிற்றில் அடிப்பது என்பதன் பொருள். சமுதாயத்தின் எதிர் நிலைச் செயல்பாடுகளை இத்தகைய ஆழமான, அடர்த்தி நிறைய குறிக்கும் புலனெறி வழக்கு இன்மையையும் உணர்தல் வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ என்னும் இலக்கிய வழக்கினையும் ‘என் வயிற்றில் அடிச்சுட்டானே’ என்னும் சமுதாயப் புலம்பலையும் இணைத்து மதிப்பிடின் உண்மை துலங்கும்! உருக்கம் தெரியும்!
எரிந்து சொல்வதும் எரிச்சல் படுவதும்
சில நேர்வுகளில் புலனெறி வழக்கின் ஆழத்தைவிட, நுட்பத்தைவிட வழக்கின் நுண்ணியம் சிறந்து நிற்கும். ‘வயிறெரிந்து சொல்கிறேன்’ என்னும் வழக்கு அல்லற்பட்டு ஆற்றாது அழுதவனின் சொல்!. தெள்ளிய நீர்போல் கள்ளமில்லா உளததிலிருந்து சொல்கிறேன் என்பது கருத்து. ‘பலித்துவிடும்’ என்பது ‘அனுமானம்’ அன்று ‘திண்ணம்’. ‘நான் வயிறெரிந்து சொல்கிறேன், நீ உருப்பட மாட்டாய்! என்பது போல்வது இது. இதே வயிறு எரிதலை விட்டு எரிச்சல் படுவதும் உண்டு. அது வயிற்றெரிச்சல். இலக்கியவாதிகள் இதனை ‘அழுக்காறு’ என்று சொல்லி அதனைக் ‘கொள்ளாமை’ என்னும் பொருளில் ‘அழுக்காறாமை’ என எதிர்மறை இலக்கணம் எல்லாம் புணர்த்து எழுதுவார்கள். ஆசிரியர் பரிமேலழகர்,
“அழுக்காறு என்பது ஒருசொல். பிறரர் ஆக்கம் கண்ட வழி பொறாமை. அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள் எதிர்மறை ஆகாரமும் மகர ஐகாரவிகுதியும் பெற்று ‘அழுக்காறாமை என நின்றது”
எனத் தம் மலையளவு புலமையை நிலவளவு காட்டுவார். ஆனால் இலக்கணம் அறியாது எதிர்வீட்டை மட்டுமே அறிந்த ஒரு தமிழச்சி பெண் “அடுத்த விட்டுக்காரி ஆம்பள புள்ள பெத்தா எதுத்த வூட்டுக்காரி இடிச்சுககிட்டுச் செத்தாளாம்’ என்று ஓரங்க நாடகத்தையே நடததிவிட்டுப் போய்விடுவாள். உலகியலுக்குப் புலனெறி வழக்கு தலைவணங்கி நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று.
பூசி மெழுகலும் பூண்டற்றுப் போதலும்
‘தெளிவுபெற்ற மதியினாய்’ என்பார் பாரதியார். அறிவு தெளிவின் மேற்று. அதனால் பேச்சும் தெளிவின் மேற்று. மறைத்துப் பேசுதல் மாசுபடும். ‘நிரந்தினிது சொல்லுதல்’ சான்றோர் திறமை. உள்ளவாறே உரைத்தலும் நடந்தவாறே நவில்வதும் நல்லவர் கொள்கை. இவ்வாறின்றி ஒன்றைப் பிறிதொன்றாகக் கூறுவதும் மறைத்துக் கூறுவதும் மயங்கக் கூறுவதும் எதிர்மறை விளைவுகளேயே தரும். சிக்கலைத் தீர்க்க உதவாது. ‘வெட்டொன்று துண்டிரண்டாய் பேசு. ‘இந்தப் பூசி மெழுகிற வேலை இங்கு ஆகாது’ என்பது உலகியல். ‘உடைத்துப் பேசு’ என்பதும் அது. பூசி மெழுகுவதால் புரை ஆறாது என்பது தமிழர்தம் பண்பாட்டு விழுமியம்
எள் அமங்கலப் பொருள். எருக்கும் அமங்கலப் பொருள். ‘வாழையடி வாழையென. என்பது மங்கலம். ஒரு குடும்பம், ஒரு அரசு இவையெல்லாம் தழைத்திருக்க வேண்டியன. அற்றுப்போகக் கூடாதன. குடும்பத்திற்குக் குழந்தையும் அரசிற்கு வாரிசும் இல்லாவிடின் வாரிசு அற்று வழிதோன்றல் இல்லாது போய்விடும். இதனைப் பூண்டற்றுப் போதல் என்பது உலகியல். ‘பூண்டும்’ என்பதில் உம்மை தொக்கது. உண்மையில் பூண்டு என்பது புல்லிற்கு அடுத்த நிலைத் தாவரம். தரை நனைய மழைபெய்தால் புல் துளிர்க்கலாம். ஆனால் வேர் நனைய பெய்தாலே பூண்டு தழைக்கும். அல்லலுக்கு ஆளாகித் துன்புறுத்தப்படும் ஏழைகளின் சாபத்தில் இந்த வழக்கு தென்படும். ஏழை அழுத கண்ணீருக்குப் பூண்டற்றுப் போகச் செய்யும் வலிமை உண்டு. அன்னப் பறவையும் அசுணப் பறவையும் இன்றைக்குப் பூணடற்றுப் போய்விட்டன.
வெளுத்து வாங்குதலும் வெளிச்சம் போடுதலும்
‘முதல் மரியாதை’ திரைப்படப்பாடல்களின் ஒன்றில் ‘உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்’ நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ‘வெளுப்பது’ ஒரு வினை. ‘வாங்குதல்’ மற்றொரு வினை. வெளுத்து வாங்குதல் என்றால் ‘வெளுத்த துணியை வாங்குதல்’ என்னும் இருவினைத் தொகுப்பன்று. நடிப்பதன் உச்சி என்று பொருள். நேர்முகமாக இந்தத் தொடரை ‘கச்சேரியில் வெளுதது வாங்கினான்’ என்பர். எதிரியை ஏசுகிற போதும் ‘நல்லா வெளுத்து வாங்கிட்டியே!’ என்பர். நேர்முகமாகவும் எதிர்மறையாவும் இந்தத் தொடர் பயன்படுகிறது. தொடர்மழையால் துன்புறும் மக்கள் ‘வானம் வெளுத்து வாங்குது’ என்பர். இந்தத் தொடரில் உள்ள வெளுத்தல் என்னும வினைக்கும் சலவைத் தொழிலாளிக்கும் தொடர்பே இல்லை.
“வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
அவர் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே” என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே வந்த திரையிசைப்பாடல். இந்தப் பாடலில் முதலில் வநதிருக்கும் ‘வெளிச்சம்’ என்ற சொல் ஒளியையும் இரண்டாவது வந்திருக்கும் சொல் ‘பகட்டு’ மற்றும ‘படோடாப உணர்ச்சிகளையும்’ குறிப்பதாக அமைந்திருக்கிறது. பாடுபட்டு உழைத்து எளிய வாழ்க்கையை வாழ்பவர்கள் இடையே வெற்று ஆடம்பரத்திற்காகவும் வீண் ஆரவாரத்திற்காகவும் போலிவாழ்க்கை வாழ்கிறவர்களை இந்தச் சொல் குறிக்கிறது. மரபுத் தொடர்கள் வாழ்வியல் குறியீடுகள் என்பதை நினைவிற் கொண்டால் இதன் பொருள் இன்னும் தெளிவாகும். ‘ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்னும் பழமொழியின் கருத்தும் இதுவே!நிறைவுரை
மரபுத் தொடர்களின் துணையின்றி உரைநடை சிறக்காது அதற்காக உரைநடையைச் சிறக்கவைப்பதே மரபுத் தொடர் என்பதல்ல. மரபுத் தொடர் காட்டும் வரலாறும் பண்பாட்டு விழுமியமும் நோக்கத்தக்கவை. மரபுத் தொடர்கள் என்பன சொல்லியல் அல்ல. பொருளியல். ஆம். அது தலைமுறைத் தேட்டம். முந்தைய தலைமுறை பத்திரப்பதிவு இல்லாமலேயே நமக்கு விட்டுச் சென்றிருக்கிற பல்லாயிரம் கோடி சொத்துக்கள், பண்பாட்டு உடைமைகள். மரபுத் தொடர்களை அறிவதும் அறிந்து பயன்படுத்துவதும் இன்றைய தமிழ்நாட்டார் கடமை. தமிழ் எழுத்தாளர்களின் கடமை. தமிழ்ப் பேராசிரியர்களின் கடமை. ‘வட்டார வழக்கு’ என ‘மொழிச்சேரி’ காண்பதை விட்டு மொழியில் ‘சமத்துவபுரம்’ காண்பதே இன்றைய உண்மையான தமிழ்த் தொண்டு. அந்தத் தொண்டினை அறிஞர் பிச்சை தமிழகன் செய்திருக்கிறார். கொட்டிக் கிடக்கின்ற மணிகளில் எதனைக் கொத்துவது எதனைக் கோப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி நின்ற நான் கட்டுரையின் அளவு கருதி ஒரு சிலவற்றை மட்டுமே காட்டியிருக்கிறேன். காட்டு மூலிகை ஒன்றினைக் திருச்சிராப்பள்ளி காசாமலை பிச்சையம்மாள் நகரில் கண்டெடுத்த மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!
நூலாசிரியர் பற்றி
கவிதைக்கு ஈரோடு தமிழன்பனையும் நாவலுக்குப் புதுவை பிரபஞ்சனையும் தந்த தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி கண்டெடுத்த கல்வெட்டு மாமணி பிச்சை தமிழகன்!. நூறாண்டு தமிழ் வாழ்வுக்குச் சொந்தக்காரரான நிறைதமிழ்ச் சான்றோர் அடிகளாசிரியரின் அணுக்கத் தொண்டர். அன்புக்கிசைந்த மாணவர். இவர் கால்படாத ஊர், கண்படாத திருக்கோயில் தமிழக வரைபடத்தில் இல்லை. திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டம் குமுலூரில் தோன்றிக் கல்வெட்டைத் தத்தெடுத்துக் கொண்ட இவரைச், சொல்லியல் களவு மணம் புரிந்து கொண்ட கதை, சாண்டில்யன் சொல்லாத கதை! சிக்கனத்தைப் பேச்சிலும் உதவுவதில் தாராளத்தையும் கடைப்பிடிக்கும் இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சங்க இலக்கிய மரபுச் சொற்களை ஆய்ந்து ‘முனைவர்’ பட்டம் பெற்றவர்!. கருத்த தோற்றமும் வெளுத்த உள்ளமும் உடைய அறிஞர் பிச்சை தமிழகன், சொல்லாராய்ச்சிக் களம் காணும் இறுதித் தலைமுறையின் இளைக்காத தளபதி!
-

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 41
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.comஉவமங்களான இயற்கை
முன்னுரை
பொதுவாகத் தமிழ்க்கவிதைகளில் இயற்கை ஒரு பாடுபொருள் என்பது தெளிவான உண்மை. இயற்கையைப் பாடாத புலவர் இலர். அந்த இயற்கை பொருள் புலப்பாட்டுக் கருவியாக அதாவது உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வுக்கு உட்பட்டது. இயற்கைக் காட்சிகளும் இயற்கை நிகழ்வுகளும் தமிழ்க்கவிதைகளின் பாடுபொருளை எவ்வாறு உவமவழியில் பாதிக்கின்றன என்பதை ஆய்வது காலத்தேவையாகக் கருதப்படுகிறது. இயற்கையைப் பாடுபொருளாக்கிக் கொள்வதற்கும் அவற்றையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. சங்க இலக்கியங்களின் நிலைப்பேற்றுக்குப் பெரிதும் காரணமாக அமைந்த இயற்கையைப் பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பலரும் பாடியிருக்கிறார்கள். இயற்கைச் சித்திரிப்பை ‘அழகின் சிரிப்பு’ எனக் குறிப்பார் பாவேந்தர். பாவேந்தரைத் தொடர்ந்து வந்த கவிஞர்களில் இயற்கையை ஓரளவு பாடியவராக வாணிதாசன் திகழ்கிறார். அவருக்குப் பின்னால் வைரமுத்தின் இயற்கை ஈடுபாடு பெரிதும் குறிக்கத்தக்கதாக உள்ளது. சங்ககால மக்களின் வாழ்வியல் களமாகவும், இலக்கியப் பாடுபொருளாகவும் விளங்கிய இயற்கை மறுமலர்ச்சிக் காலத்துக் கவிஞர்களின் வாழ்க்கையைக் கூட அவர்தம் ஒவ்வொரு கவியசைவிலும் பாதித்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இயற்கைக் கூறுகள் கவிதையில் உவமங்களாக அமைந்த பாங்கு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.
தமிழும் இயற்கையும்
‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்பதால் ‘தமிழ்’ என்னும் சொல்லுக்கு இவ்விரு பண்புகளும் உண்டு என்பது பெறப்படும். தாய்மொழியாகிய தமிழுக்கு இவ்விரண்டு பண்புகள் பொருந்தும்படியாகவே அதன் இயல்பு அமைந்துள்ளது. உலக மொழிகள் அனைத்திலும் தலைமை ஒலிவடிவமாக அகரம் அமைந்திருப்பதும், எத்தகைய முயற்சியுமின்றி வாயைத் திறந்தவுடன் அகரவொலி வெளிப்படுவதும் ‘தமிழ் ஒரு மொழி’ என்னும் நிலையில் இயற்கையைத் தழுவியமைந்திருக்கும் உண்மையை உணரப் போதுமானதாகும். மொழியின் தோற்றம் இவ்வாறு இயற்கையை ஒட்டி அமைந்திருப்பது போலவே அம்மொழியில் அமைந்த இலக்கணப் பாகுபாடுகளும் இலக்கியக் குறியீடுகளும் இயற்கையையொட்டி அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.
தமிழ் இலக்கண இலக்கியங்களில் இயற்கை
தமிழ் அகவிலக்கண மரபில் காணப்படும் திணைப்பாகுபாடுகளுக்கு முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம் எனப் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும், வெட்சி, வஞ்சி, உழிஞை, காஞ்சி, வாகை எனப் புறத்திணைகளுக்கும் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் இயற்கை, தமிழருடைய வாழ்வியலோடு கொண்டிருந்த பிணைப்பைப் பறைசாற்றுவனவாம். பொருளிலக்கணப் பகுதிகளில் இயற்கையின் தாக்கம் இங்ஙனம் இருப்பதைப் போலவே மொழியிலக்கணத்திலும் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சான்றாக,
“ஆற்றொழுக்கு அரிமா நோக்கு தவளைப்
பாய்த்துப் பருந்தின் வீழ்வுஅன்ன சூத்திர நிலையே”என்னும் நூற்பாவில், சூத்திரங்களின் நிலைக்கு இயற்கைப் பொருள்களின் வினைகளே உவமமாக்கப்பட்டுள்ளன. ஆற்றின் ஓட்டமும், அரிமாவின் பார்வையும், தவளையின் பாய்ச்சலும், பருந்தின் வீழ்ச்சியும் மொழியின் கட்டமைப்பு பற்றிய இலக்கணச் சிந்தனைகளைப் பாதித்திருக்கிறது எனக் கருதுவதற்கு இடமுண்டு. பட்டினப்பாலை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மலைபடுகடாஅம் என்னும் பத்துப்பாட்டுக்களின் பெரும்பான்மைப் பெயர்களும் மலர்களின் பெயர் தாங்கி நிற்பதும் மேற்கண்ட கூற்றை உறுதி செய்யலாம். தென்றல், மேகம், கிளி, மயில், குயில் எனத் தூது இலக்கியத்தின் தூதுவர்களும் இயற்கையைச் சார்ந்தவர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தமிழ்க்கவிதை மரபில் இயற்கை
தமிழிலக்கியக் கவிதை மரபில் இயற்கையின் இடம் குறிப்பிடத்தக்கது என்பது மேலே சுட்டப்பட்டது. ‘தனித்ததொரு பாடுபொருள்’ என்னும் நிலையில் இயற்கை தமிழ்க்கவிதைகளில் பாடப்பெறவில்லை என்பதை அறிஞர் மு.வ. தமது ‘பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இயற்கை’ என்னும் ஆய்வு நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். பெயரடைகளாக நின்று திணை விளக்கத்திற்குத் துணையாக விளங்கியதே சங்க இலக்கியங்களில் இயற்கை பாடப்பெற்றிருக்கும் நெறியாகும். ஐம்பெருங் காப்பியங்களிலும், கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய இதிகாசக் காப்பியங்களிலும் ஆறு, காடு, சோலை இவற்றின் வண்ணனைகள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. பரிதிமாற் கலைஞரின் கடற்கரைக் காட்சி, தாமரைத்தடாகம் முதலிய நூற்பகுதிகளும், மகாகவி பாரதியின் குயில்பாட்டின் சில பகுதிகளும், பாஞ்சாலி சபதத்தின் சில பகுதிகளும் இயற்கையில் உள்ள ஈடுபாட்டைக் காட்டக் கூடும். பாரதிக்குப் பின் வந்த கவிஞர்களின் படைப்புக்களில் இயற்கை தனக்குரிய இடத்தைத் தவறாமல் பெற்று வந்தது என்பதும் குறிக்கத்தக்கதே. ஆனால் இயற்கையைத் தனியொரு பாடுபொருளாகக் கொண்டு பாடப்பட்ட தமிழின் முதல் தொகுப்பு பாவேந்தரின் அழகின் சிரிப்பாகலாம்.
தமிழ்க்கவிதைகளில் இயற்கைப் பயன்பாடு
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் இயற்கையோடு பிரிக்க இயலாத உறவு கொண்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்க்கவிஞர்கள் தங்கள் படைப்புக்களில் இயற்கையை ஐந்து வகையாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பகுத்துரைப்பார் அறிஞர் அ.கி.பரந்தாமனார். அவரது பகுப்பு வருமாறு:
- இயற்கையளிக்கும் காட்சியழகில் ஈடுபட்டுச் சித்திரிப்பது.
- இயற்கையை உவமையில் பயன்படுத்துவது.
- இயற்கையைப் பயன்படுத்திக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது.
- இயற்கையை மானிட வாழ்வுடன் இணைத்துக் காட்டுவது.
- இயற்கை வாயிலாக அரிய நீதிகளையும் பெரிய உண்மைகளையும் தெரிவிப்பது.
பேராசிரியர் பரந்தாமனாரின் பகுப்புக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ஆய்வுப் பொருளாகும் வன்மையுடையது என்றாலும், அவரது இரண்டாவது பகுப்பான ‘இயற்கையை உவமையில் பயன்படுத்துவது’ பற்றிய விளக்கமுறை ஆய்வாக இந்தக் கட்டுரையைக் கருதலாம்.
தமிழ்க்கவிதை உவமங்களில் இயற்கை
சங்க இலக்கியத்தில் தொடங்கிய தமிழ்க்கவிதை நெடும்பயணத்துள் உவமங்களின் ஆளுமை தனித்துச் சுட்டுதற்குரியது. தமிழ்க்கவிதைகளில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகளில் சமுதாயச் சிந்தனைகள் தமக்கென தனித்ததொரு இடத்தைப் பெற்றுள்ளதைப் போலவே இயற்கையும் உவமங்களாகத் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கை உவமமாகும் பொழுது,
- இயற்கைக்கு இயற்கை உவமமாதல்
- இயற்கைக்குச் செயற்கை உவமமாதல்
- செயற்கைக்கு இயற்கை உவமமாதல்
என மூன்று தனித்தனிக் களங்களில் செயல்படுவதை அறியமுடிகிறது. இயற்கையோடு இரண்டறக் கலந்தமைந்த வாழ்க்கை முறையும், நடைமுறை வாழ்வியல் உண்மைகளை இயற்கைக்கு ஏற்றியுரைக்கும் அழகியல் உணர்வும், இயற்கை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நடைமுறை வாழ்க்கையைச் செப்பனிடல் வேண்டும் என்னும் பொதுநல உணர்வும் ஆகிய மூன்றுமே மேற்சுட்டிய மூன்றுவகை நிலைப்பாடுகளுக்குக் காரணம் எனலாம்.
இயற்கைக்கு உவமமான இயற்கை
மானுட வாழ்வியல், இயற்கையிலிருந்து தொடங்கி நிகழ்வதாகலின், உவமம் பெரும்பாலும் இயற்கைப் பொருள்களிலிருந்தும் அவற்றின் அசைவுகளிலிருந்துமே தோன்றியன ஆதல் வேண்டும். ‘மாடாட்டம் உழைக்கிறான், ‘மயில் மாதிரி பெண்’, ‘குயில் மாதிரிப் பேசினாள்’, ‘எருமை மாதிரி நிற்கிறான்’, ‘தென்றலாய் வந்தாள்’, ‘புயலாய்ச் சீறினாள்’, ‘பனை மாதிரி வளர்ந்தவன்’ என்றெல்லாம் நிலைபெற்றிருக்கும் வழக்குகள், உவமத்தின் நிலைக்களம் இயற்கையே என்பதைப் புலப்படுத்தும். இயற்கைப் பொருளைச் சித்திரிக்கின்ற நேர்வுகளில் கூட மற்றொரு இயற்கைப் பொருளையே உவமமாகக் கூறும் போக்கைக் காணமுடிகிறது. இயற்கையில் வளர்ந்த உகாய் மரத்துக்குப் புறாவின் முதுகையும் அதில் விளைந்த கனிகளுக்கு நீலமணியையும் உவமித்திருப்பதன் மூலம் இயற்கைக்கு இயற்கையை உவமமாக்கும் தமிழ்க்கவிதைக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
“புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅய்க்
காசினை அன்ன நளிகனி யுதிர” (குறுந்தொகை – 274)குறுந்தொகையில் இதே பொருளுக்குக் கூறப்பட்டிருக்கும் இதே உவமையை,
“மணிக்கா சன்ன மானிற இருங்கனி
உகாய் மென்சினை உதிர்வன கழியும்” (அகநானூறு – 293)என அகநானூற்றிலும் காணமுடிகிறது.
இயற்கைக்கு உவமமான இயற்கை
போர்க்களத்தில் போர்செய்து புண்பட்ட யானையினது முகத்தைச், செங்காந்தள் மலர் விழுந்த பாறைக்கு உவமித்திருப்பதையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.
“பொருத யானை புகர்முகம் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும்” (குறுந்தொகை – 284)பாறையில் காந்தள் விழுவது இயற்கை. போர்க்களத்து யானைமுகம் புண்படுவது களத்தொழிலின் காரியம். காந்தள் விழுந்த பாறை புண்விழுந்த யானை முகமானது, இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் புலவர் திறம்.
இயற்கைக்கு உவமமான செயற்கை
இயற்கைக்கு இயற்கையே உவமம் என்னும் நிலையிலிருந்து இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் திறனையும் தமிழ்க்கவிதைகளில் காணமுடிகிறது. பெண்பல்லியைத் துணைக்கழைக்கும் ஆண்பல்லியின் இயற்கை ஒலிக்கு, அம்புநுனியைத் தீட்டுவதனால் உண்டாகும் ஒலியை உவமை கூறும் திறன் சங்கச் சான்றோர்களுக்கு இருந்திருக்கிறது.
“கள்வர்தம்
பொன்புணை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசைபோல
செங்காற்பல்லி தன் துணை பயிரும்” (குறுந்தொகை – 16)என்னும் இவ்வடிகளில் ஆண்பல்லியின் அழைப்பொலிக்கு ஆறலைக் கள்வர்கள் தம் அம்புகளைச் செப்பம் செய்வதற்காகத் தங்கள் நகத்தினால் கீறிப்பார்க்குங்கால் எழும் நுட்பமான ஒலியை உவமையாக்கியிருப்பது நோக்கத்தக்கது.
பாவேந்தர் பாரதிதாசன் தமது கவிதைகளில் இயற்கைக் காட்சிகளை விளக்குதற்குச் செயற்கைக் காட்சிகளை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது. தாமரைச் செவ்வரும்பு தடாகத்தில் தோன்றும் இயற்கைக் காட்சிக்கு, மாலையில் மங்கையர் ஏற்றிய விளக்குச் சுடரை உவமையாகக் கூறியிருக்கிறார்.
“மணியிருள் அடர்ந்த வீட்டில்
மங்கைமார், செங்கை ஏந்தி,
அணிசெய்த நல்வி ளக்கின்
அழகிய பிழம்புபோல
தணிஇலை பரப்பி னிற்செந்
தாமரை செவ்வரும்பு
பிணிபோக்கி என்விழிக்குப்
படைத்தது பெருவிருந்தே” (அழகின் சிரிப்பு)என்னும் கவிதையில் இயற்கையில் தோன்றும் ஓர் அழகிய காட்சிக்கு நடைமுறை வாழ்வியல் நிகழ்ச்சி ஒன்றினை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது.
செயற்கைக்கு உவமமான இயற்கை
பிறவிப் பெரும் பிணி தொலைக்க வேண்டுமானால் இறைவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்பது நியதி. இறைவனை அடைகின்ற வழிகள் இரண்டு. ஒன்று விரதங்கள். இரண்டு ஞானம். விரதங்களினால் ஞானம் கைகூடும். ‘வினை மாசு தீர்ந்து அந்தக் கரணங்கள தூயவாதற் பொருட்டு ஒருவரால் காக்கப்படும் விரதங்களும் அவற்றால் அவை தூயவாய வழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்’ என விளக்குவார் பரிமேலழகர். ஆனால் உலகியலில் இது அவ்வளவு எளிதாகக் கைகூடுமாறில்லை. எனவே சரணாகதி ஒன்றுதான் ஒரே வழி. அதுபற்றிப் பாடுகிற குலசேகர ஆழ்வார் ‘நினது அருளன்றி நான் மீள்வதற்கில்லை’ என்னும் தம் கருத்தினை விளக்குதற்குச் சில உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
“செங்கதிரே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க் கல்லால் அலராவால்!
வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டம்மா! உன்
அந்தமில் சீர்க்கல்லால் அகங்குழைய மாட்டானே!எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்க்கும் அதுவே போல்
மெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டம்மா!
சித்தம் மிக உன்பாலே வைப்பன் உன் அடியேனே!தொக்கு இலங்கி ஆறு எல்லாம் பரந்தோடி தொடுகடலை
புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே!”(பெருமாள் திருமொழி)
விரதமும் ஞானமும் மானுட முயற்சியால் கைகூடுவது. எனவே செயற்கை. வெப்பமாக இருந்தாலும் தாமரை செங்கதிரோனுக்கு மட்டும் மலர்வதும், பயிர்கள் வான்மழையை எதிர்நோக்குவதும், ஆறுகள் கடல் நோக்கிப் பயணிப்பதும் இயற்கை. ஆழ்வார் பாசுரங்களில் இத்தகைய உவமக் கோட்பாடு இழைவதைக் காணமுடிகிறது.
ஆடவரின் மீசையின் பொலிவு, மயிரின் கன அளவையும் கத்தரிக்கோலைக் கையாள்பவனின் திறனையும் பொருத்தது. மயிர் வளர்வது இயற்கை. அதனை மீசையாகக் காட்டிக் கொள்வது மனித முயற்சியான செயற்கை. இந்த மீசைக்கு அணிலின் வாலை உவமை கூறுகிறார் கவிஞர் பனப்பாக்கம் சீதா.
“அணில்வாலைப் போன்ற மீசை
அமைந்தநற் புலவர்” (பனப்பாக்கம் சீதா பாட்டுப் பயணம்)அக்காலப் புலவர்களுக்கு அணில்வாலைப் போல மீசை இருந்ததாகக் கூறுவதைப் போலவே பாவேந்தர் பாரதிதாசன் பாண்டியன் பரிசு காவியத்தில்,
“கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை” (பாண்டியன் பரிசு)
என அரும்புகிற மீசைக்குக் கிளிக்கழுத்தில் இருக்கின்ற பொன்வரிகளை உவமமாக்கிக் காட்டுகிறார்.
இயற்கைக்கு உவமமான இலக்கணம்
மேற்கண்ட முந்நிலைகளேயன்றி இயற்கைக்கு இலக்கணத்தையே உவமமாக்கும் போக்கையும் காணமுடிகிறது. வயலோடு நீர் சேர்வது இயல்பானது., மெய்யோடு உயிர் சேர்வது இயல்பானது. இரண்டிடத்திலும் சேர்க்கை செயற்கையானது அல்ல, இயற்கையானது.
“வெடித்திருந்த வயலெல்லாம் தண்ணீ ராலே
மெய்யெழுத்தின் முன்னுயிர்போல் பொருந்திக் கொள்ள” (தேன்மழை)என்னும் உவமையில், இலக்கணத்துள் புணர்ச்சி இயற்கையானதைப் போலவே, வயலுக்குள் நீர்பாய்வதும் இயற்கையாயிற்று என்னும் உவமைக்கவிஞர் சுரதாவின் உவமத்திறன் காண்க.
“உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” (நன்னூல்)
என்னும் இலக்கண நூற்பாவின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட கவிஞர் சுரதா வெகு இயல்பாகவும், இயற்கைக் காட்சியொன்றைச் சித்திரிக்கும் நோக்குடனும் கையாண்டிருக்கும் உவமத்திறன் பாராட்டத்தகுந்தது.
மறைந்த மடந்தையும் மறைந்த பொருள்களும்
மீசையாகிய செயற்கைப் பொருளுக்கு இயற்கைப் பொருளை உவமிக்கும் பொழுது உவமமாக ஒரு பொருளே வந்துள்ளது. மாறாக செயற்கைக்கு இயற்கைப் பொருளை உவமிக்குங்கால், ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சுட்டும் வழக்கும் தமிழில் உண்டு. சான்றாக,
“இலைகளுக்குப் பின்புறத்தில் காய்கள் போன்றும்
இருள்முகிலின் பின்புறத்தில் நிலவு போன்றும்
மலைகளுக்குப் பின்புறத்தில் சிற்றூர் போன்றும்
மறைவாக அரண்மனையில் வாழ்ந்து வந்த
கலைமடந்தை” (தேன்மழை)என்னும் கவிதை வரிகளில், அரண்மனையில் ஒதுக்குப்புறமாகப் பிறரால் அறிந்து கொள்ள இயலா வண்ணம் வாழ்ந்து வரும் இளவரசி ஒருத்திக்கு, இலைமறைக்கும் காயும், முகில் மறைக்கும் நிலவும், மலை மறைக்கும் சிற்றூரும் உவமைகளாய்க் கையாளப்பட்டிருக்கும் பாங்கினைக் காணலாம். இதனால் செயற்கையின் ஒரு பொருளுக்கு இயற்கையின் பலபொருள்கள் உவமமாக்கப்படுவதும் தமிழ்க்கவிதைகளின் உவமக்கோட்பாடுகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.
நிறைவுரை
மேற்கண்ட சான்றுகளால் இயற்கைக்கு இயற்கை, இயற்கைக்குச் செயற்கை, செயற்கைக்கு இயற்கை என்னும் மூவகைத் தளங்களில் இயற்கைப் பொருள் உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு ஓரளவு ஆராயப்பட்டது. இயற்கைச் சித்திரிப்பிற்குத் தமிழிலக்கணக் கூறுகளும் உவமங்களாய் வந்துள்ளன என்பதும் சுட்டப்பட்டது. இவ்வாறெல்லாம் வகுத்துக் கொண்டு உவமங்களைப் பயன்படுத்துவது பற்றிய எந்தத் திறனாய்வுக் கொள்கையும் தற்காலத்தில் இல்லை. காட்டப்பட்ட உவமங்கள் எல்லாம் படைப்புக்களில் அனிச்சையாக வந்தவை. வந்து அமைந்தவை. ஒரு காலத்திய இலக்கியத்தினை, ஒரு மொழிக்குரிய இலக்கியத்தைத் திறனாய்வு செய்ய காலத்தால் பிற்பட்ட, முற்றிலும் தொடர்பில்லாத மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பொருந்தாது, பயன்தராது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கக்கூடும்.
(தொடரும்…)
-

வ.உ.சி.யின் மொழிபெயர்ப்புகளும் உரைகளும்
முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்
அரிய கையெழுத்துச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.வ.உ.சி. என்றவுடன் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போன்றவையே மனதினில் எழும். காரணம் அவரின் சுதந்திரப் போராட்டங்கள் நினைக்கப்படும் அளவிற்கு இலக்கியப் பங்களிப்புகள் மனதினில் எழுவது இல்லை. ஏன் அதிகம் அறியப்படவே இல்லை. இலக்கணப் புலமை மிக்க வ.உ.சி. கட்டுரை, பதிப்பு, உரை, படைப்பாக்கம் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்தவர். தமது சுயசரிதையைச் செய்யுளில் படைத்தவர். அவரின் ஆக்கங்களுள் அவரின் மொழிபெயர்ப்புகளுக்கும், உரைகளுக்கும் தனி இடம் உண்டு. அவற்றைக் குறித்து இப்போது பார்க்கலாம்.
மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரையில் அவரின் நிறைவான பெயர்ப்புகளாக நமக்குக் கிடைப்பன நான்கு நூல்கள். நான்குமே ஜேம்ஸ் ஆலன் உடைய ஆங்கில நூல்கள். இவருடைய முதல் மொழிபெயர்ப்பு பணி சிறைச்சாலையில் தான் தொடங்கி உள்ளது. ஜேம்ஸ் ஆலனின் As a Man Thinketh எனும் நூலை மனம்போல் வாழ்வு என்று 1908 இல் மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே 1905 லேயே ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வ.உ.சி.க்கு இருந்ததாம். ஆனால் அவ்வெண்ணம் 1908இல் அவர் சிறையில் இருந்தபோது தான் நிறைவேறியுள்ளது.
சிறைச்சாலையில் கடுமையான தண்டனைப் பெற்றுவந்த அவருக்குச் சிறிது காலம் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அது பற்றி அவரது சுயசரிதையில்
“திங்கள் ஒன்றில் சென்னை ஐக்கோர்ட்டில்
செய்த அப்பீலில் திருத்தமும் ஒழுக்கமும்
தேசாபிமானமும் சேர்ந்த நல் ஜட்ஜ் சங்கரநாயர் தகுதியில் – பின்னியின்
தீர்ப்பினை சஸ்பெண்டு செய்து அறிவித்தார்
தொலைந்தது வேலை – சொந்த உணவும்
சொந்த உடையும், சொந்த படுக்கையும்
வந்தன. கொண்டவை மகிழ்வுடன் இருந்தேன்”என்று எழுதியிருக்கிறார்.
சங்கர நாயர் என்கிற ஓர் இந்தியர் அந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்ததால் தான் தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதித்ததாலேயே சிறிது தப்ப முடிந்தது வ.உ.சிக்கு. இதனால் பிற கடும் குற்றங்கள் புரிந்த கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதிலேயிருந்து கொஞ்சம் காலம் விலக்கு கிடைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் வ.உ.சி.யால் சிறைக்குள்ளே படிக்கவும் எழுதவும் முடிந்திருக்கிறது. அவர் ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மட்டுமே மொழிபெயர்த்திருப்பதற்கான காரணம் – அதாவது அந்த ஈர்ப்புக்கான காரணம் சிந்திக்கத்தக்கது. வ.உ.சி. ஆங்கிலேய விதேசி அரசுக்கு எதிராகப் போராடியவர். சுதேச சிந்தனையாளர். அவரது ஈர்ப்புக்குக் காரணம் ஜேம்ஸ் ஆலனின் கருத்தியல்தான். ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த ஜேம்ஸ் ஆலன், இங்கிலாந்தில் 1864இல் பிறந்தவர். இளம் வயதிலேயே அதிபுத்திசாலியாக இருந்தவர். வாலிப வயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றவர்.
ஆங்கிலேயராக இருந்தாலும் புலால் மாமிச உணவுகளை உண்பதில்லை மது அருந்துவதில்லை. இது போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருந்தாராம். நாம் “ஆசிய ஜோதி” என்று சொல்கிற ‘The Light of Asia’ நூலை அவர் படித்த பின்னரே மெய்யுணர்வு அவரக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். நமது பாரத தேச நூல்கள் மீதும், மெய்யியல் அதாவது தத்துவவியல் மீதும் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு இருந்துள்ளது. “கீழ்நாட்டரே மெய்ஞ்ஞான கருவூலம்” என்பதாக அடிக்கடி ஜேம்ஸ் ஆலன் கூறுவாராம். வ.உ.சி. இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர் வாக்கின்று வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நமது நாட்டு நீதியும் மதக் கோட்பாடும் கலந்திருக்கும்.” என்கிறார்.
இவை எல்லாம், வ.உ.சி.க்கு ஜேம்ஸ் ஆலனின் படைப்புகள் மேல் ஈர்ப்பு வர காரணமாக இருக்கலாம்.
1908இல் “As a Man Thinketh-“ மனம் போல் வாழ்வு என்கிற முதல் மொழிபெயர்ப்பு நூல் எழுதப்பட்டுள்ளது இது “ வ.உ.சி.யின் நண்பர் சுவாமி வள்ளிநாயகம் அவர்களால் 1909இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஐந்தாம் பதிப்பு 1938இல் வெளிவந்துள்ளது. அதன் வெளியீட்டாளர் தூத்துக்குடி விக்டோரியா பிரிண்டிங் பிரஸ்சார் ஆவார்.
இந்த நூலின் உடைய மொழிபெயர்ப்பானது சரியான ஆக்கம், அதாவது முறையான மொழியாக்கம் என்று சொல்லலாம். மொழிப்பெயர்ப்புகளில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. அதில் ஒன்று செய்யுள்களை மொழியாக்கம் செய்வது. தமது மொழியாக்கத்தைக் குறித்து வ.உ.சி. சொல்லும்போது, “இதனை முதனூற்குச் சற்றேற குறையச் சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள சொற்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளன அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன்.
மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும் சில இடங்களில் முதனூலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழி பெயர்த்திருக்கிறேன். “ அன்றியும், “கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக”, என்றபடி, இந்நூலின் அரிய பொருள்களைத் தமிழுலகம் நன்குணர்ந்து கைக்கொண்டொழுகுதல் வேண்டும் என்ற எண்ணமே என் மனதின் கண் முற்பட்டு நின்றமையின், நமது நாட்டில் மிகுதியாக வழங்கும் வடமொழிகளை இதில் மிகுதியாக உபயோகித்திருக்கிறேன்.” என்கிறார். இதிலிருந்து செய்யுள்களை அதன் தன்மை மாறாமல் உள்ளது உள்ளபடி அமையுமாறு மொழி ஆக்கம் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றவராக வ.உ.சி. இருந்துள்ளதை அறியமுடிகிறது. மக்கள் வழக்கில் பயன்படுத்தும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். அவையே அவர்களின் புரிலுக்கு மிகவும் பயனுடையதாக அமையும் என்ற எண்ணம் உடையவராகவும் இருந்துள்ளார். மனிதனின் எண்ணங்களே அவனுடைய வாழ்வை வடிவமைக்கிறது என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்ட நூலாக இது உள்ளது.
அடுத்ததாக அவர் மொழிபெயர்த்த நூல், Out from the Heart என்ற ஆங்கில நூல் அதற்கு அகமே புறம் என்று பெயரிட்டுள்ளார். இது நூலாக வெளிவந்தது 1914 இல்.
இதில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று கட்டுரைகள் சுப்பிரமணிய சிவம் நடத்திய ஞானபாநு இதழில் வெளிவந்தவை. அகமும் வாழ்வும் – ஆகஸ்ட் 1913, மனதின் தன்மையும் வன்மையும் – செப்,1913, சுபாவத்தை ஏற்படுத்துதல் – அக்.1913 ஆகிய ஞானபானுவில் வெளிவந்த கட்டுரைகளை நூலின் தொடக்கமாக அப்படியே அமைத்துள்ளார். 1916 இல் சென்னை புரோகிராம் பிரஸ் மூலம் அதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. நூலின் முக உரையில் வ.உ.சி. மூல நூலில் உள்ள ஒரு அத்தியாயத்தை நான்கு சிறிய அத்தியாயங்களாகப் புரிதற்பொருட்டு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
மிக மிக எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் அத்தியாயங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கலாம். ஒழுக்கத்தை மிக உயர்ந்ததாக எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது.
மூன்றாகப் பகுத்துத் தந்துள்ள உயர்தர வாழ்வு என்ற தலைப்பு (முதல் பாடம் / இரண்டாம் பாடம் / மூன்றாம் பாடம்) முழுவதுமே இந்த ஒழுக்கம் பற்றியதுதான். இதிலிருந்தே ஒழுங்கமைந்த வாழ்வை வ.உ.சி. மிகவும் நேசித்துள்ளது விரும்பியுள்ளது தெரிகிறது.
முதற்பகுதியில் மனதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகக் குறிப்பிடுகிறார். அதன் முதல் சாதனம் சோம்பலை ஒழிப்பது என்கிறார். உணவுக் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தின் பாற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இப்படியேதான் இரண்டாம் பாடம், மூன்றாம் பாடம் ஆகியவற்றிலும் ஒழுக்கத்தின் உயர்வுகளையே சொல்லி செல்கிறார். உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் தான் அழகு.
அவர் மொழிபெயர்த்த நூல்களில் மூன்றாவது நூலாகக் கிடைக்கப் பெறுவது, வலிமைக்கு மார்க்கம் என்கிற நூல்.
ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power” என்ற நூலின் முதல் பகுதி The Path of Prosperity என்பது. அதனை மட்டும் 1916இல் வலிமைக்கு மார்க்கம் என்பதாக ஆக்கித் தந்தவர் நம்முடைய வ.உ.சி. இந்த பெயர்ப்பின் சில இடங்களில் தழுவுதல் தன்மை இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். இதனைப் பாயிரம் பகுதியில் வ.உ.சி. சொல்லியிருப்பதில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
“மூல நூலின் ஐந்தாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் கண்ட ஆங்கிலக் கதையை நம்மவரில் பெரும்பாலார் கேட்டிருக்க மாட்டாராதலால் அக்கதையின் பெயரினை இந்நூலில் குறிப்பதால் பயனில்லையென்று கருதி அதற்குப் பதிலாகப் பாரதக் கதை என்று குறித்துள்ளேன்.
முதல் நூலின் கருத்துகளை நம்மவர்கள் எளிதில் உணருமாறு சிற்சில இடங்களில், சில சொற்களைக் சேர்த்தும் சில சொற்களை விடுத்தும் இம் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளேன்”. என்று பாயிரப் பகுதியில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.
நூலில் வலிமைக்கு உரிய, உயரிய வழியாக அவர் சொல்வது நீதி நெறியில் இருந்து தவறாது நடந்து கொள்வதுதான். “நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர் போட்டி தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக் கொள்வதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர்.
நீதி மார்க்கத்தில் நடக்கின்றவர் போட்டியில் தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்பன போன்ற அற வாழ்வை எடுத்துச் சொல்லி அதுவே வலிமைக்கான மார்க்கம் என்று வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
சாந்திக்கு மார்க்கம் என்கிற மொழிபெயர்ப்பு நூல் 1939இல் வெளிவந்துள்ளது. ஜேம்ஸ் ஆலனின் The Way of Peace என்ற நூலின் மொழியாக்கம் இது.
நமது பாரத தேசம் அன்பு மயமான வாழ்வைப் போதிப்பதில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அன்பின் வழியது உயிர்நிலை என்போம் அத்தகைய அன்பு மயமான வாழ்க்கைக்குரிய பல்வேறு வழிகளைப் பல கோணங்களில் எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது. மனதுள் சுழலும் நமது எண்ணங்கள் நமது எதிர் காலத்தை வடிவமைக்கும் என்பதை எளிமையாக எடுத்துரைக்கிறார்.
முதல் அத்தியாயமான தியான வலிமை தலைப்பில், “நீங்கள் எதனைப் பற்றி அடிக்கடி ஆழ்ந்து நினைக்கின்றீர்களோ, வேலையற்ற நேரங்களில் எதனிடத்தில் உங்கள் ஆத்மா இயற்கையாகச் செல்கிறதோ அதனை எனக்குச் சொல்லுங்கள்; நீங்கள் எந்தத் துன்ப இடத்திற்கு அல்லது இன்ப இடத்திற்குச் சென்று கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் தெய்வ வடிவாகவோ? அல்லது மிருக வடிவாகவா? வளர்ந்துகொண்டு இருக்கிறீர்களா? என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன், என்பதாகக் குறிப்பிடுகிறார் இப்படி வாழ்வியல் எதார்த்தத்தை எளிமையாகப் புரியும் வகையில் தந்துள்ளது உண்மையிலேயே சிறப்பு.
அனைத்து மொழிபெயர்ப்புகளிலுமே எளிய நடையில் கருத்துகளை வாசகர்களின் புரிதலுக்குக் கொண்டு செல்லும் பாங்கினைப் பார்க்க முடிகிறது. நுட்பமான பகுதிகளையும் சுவை குன்றாமல் நல்லதொரு யதார்த்த நடையில் கொண்டு செல்வதில் வ.உ.சி. வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்ததாக வ.உ.சி.யின் உரைகள் குறித்துப் பார்க்கலாம் உரை நூல்கள் என வரும் போது திருக்குறள், இன்னிலை, சிவஞான போதம் ஆகிய நூல்களுக்கு அவர் உரை எழுதியுள்ளார்.
திருக்குறளைப் பொறுத்தவரையில் திருக்குறள் முழுமைக்கும் வ.உ.சி. உரை கண்டுள்ளார். இருந்தாலும் திருக்குறள் அறத்துப் பாலை மட்டுமே அவர் நேரடியாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இன்று அவரின் திருக்குறளுக்கான முழு உரையும் கிடைத்துள்ளது அவரது அறத்துப்பால் விருத்தியுரை 1935ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1917 இல் திருக்குறள் மணக்குடவர் உரையைத் தந்தவர் இவர். தனியாக இவர் உரை கொடுப்பதற்கான காரணம் குறித்து அவரின் சிவஞான போதம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் என்னும் நூல்கள் முறையே நீதி நூல்களிலும், சித்தாந்த நூல்களிலும், வேதாந்த நூல்களிலும் ஒப்புயர்வற்றவை என்பது வ.உ.சி.யின் கருத்து.
இவற்றுள் திருக்குறள், சிவஞான போதம் இரண்டின் உரைகளும் கடின நடையில் அக்காலத்தில் இருந்ததாம். அதனால் அவற்றை எளிமைப்படுத்த எண்ணியே வ.உ.சி. எளிய நடையில் உரை வழங்கியதாகக் குறிப்பிடுகிறார்.
வ.உ.சி., திருக்குறளை மூன்று பால்களாகவே பகுத்திருந்தாலும் இயல் அமைப்பில் சில வேறுபாடுகளைச் செய்துள்ளார். அதிகார அமைப்பு, அதிகாரப் பெயர், குறள் வைப்பு முறை ஆகியவற்றிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். குறள்களுக்கு நேரடியாக எளிய விளக்கங்கள் தந்துள்ளது. முக்கியமாக இலக்கணக் குறிப்புகள் தந்துள்ளது போன்றவற்றால் வ.உ.சி.யின் உரை மேலும் சிறப்பு பெறுகிறது.
இதை போன்றே வ.உ.சி.யின் சிவஞான போத உரைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. இதன் ஒவ்வொரு நூற்பாவின் சாரத்தையும் அதனதன் தலைப்பாகக் குறிப்பிடுகிறார். பாடலின் பொருளையும் பொருள் எனத் தலைப்பிட்டு எளிய நடையில் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒருங்கிணைத்து எளிதில் புரிந்துகொள்ள வகை செய்துள்ளார் வ.உ.சி.
செய்யுள் முதற் குறிப்பகராதி, அரும்பத அகராதி, உரை மேற்கோள் அகராதி ஆகியவற்றோடு இந்நூலை வ.உ.சி. கொடுத்திருப்பது சிறப்புக்குரியது.
பொய்கையார் எழுதியுள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலை நூலுக்கு வ.உ.சி. வழங்கியுள்ள உரையும் சிறப்புடையது. இதில் பொய்கையார் குறித்த பெரும் ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.
நாலாயிரத் திவ்யபிரபந்தத்தில் இடம் பெறும் ஆழ்வார் பொய்கையார், களவழி, புறநானூறு ஆகியவற்றில் வரும் பொய்கையார் ஆகியோரோடு இன்னிலை ஆசிரியர் பொய்கையாரையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.
பொய்கையார் என்கிற பெயரில் இடம் பெறும் அனைவரும் ஒரே புலவர்தான் என ஏற்றுக் கொள்ள இயலாது என்பதே வ.உ.சி.யின் கருத்து. அதேநேரம் ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான பொய்கையாரே இன்னிலையையும் இயற்றியிருக்க வேண்டும் என்கிறார்.
மொத்தத்தில் மொழிபெயர்ப்பு, உரை ஆகிய இரண்டு தளங்களிலும் வ.உ.சி.யின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வ.உ.சி மொழிபெயர்த்துள்ள ஜேம்ஸ் ஆலனின் வாழ்வியல் படைப்புகள் தமிழில் தோன்றியுள்ள தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற நூல்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம்.
-

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 40
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.comசமுதாயச் சிந்தனைகள் உவமங்களான கதை
முன்னுரை
அகப்பொருள் புலப்பாட்டுக் கருவியாகத் தன் பணியைத் தொடங்கிய உவமம், காலந்தோறும் தன் பணிக்களப் பரப்பை விரித்துக் கொண்டே வந்திருக்கிறது. புறப்பொருண்மைகளுக்கும் அழகியல் உணர்வை மிகுவித்துக் காட்டுதற்கும் பயன்பட்டிருக்கின்றன. தத்துவக் கோட்பாடுகளை விளக்குதற்கும் இறையுணர்ச்சியைத் துல்லியமாகச் சொல்லுவதற்கும் கூட அவை பயன்பட்டுள்ளன. அடியார் மனத்து இறைவன் நிலைபெற்றிருக்கும் நிலையைக் ‘கறந்த பால் கன்னலோடு நெய்கலந்தாற்போல’ என்னும் உவமத்தால் விளக்குகிறார் மணிவாசகப்பெருமான். இத்தகைய பக்திப் பரப்பிலிருந்து தனது சிறகை விரித்தெழுந்த உவமம் சமுதாயக் களத்திற்குத் தாவி வந்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ‘மானுடம் பாடுவது’ என்னும் கம்பனின் கோட்பாடு அவனுக்குப் பின்னாலே வந்த கவிஞர்கள் அனைவரையும் பாதித்து இன்றளவும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்களைப் பாடாத யாரையும் எவரும் கவிஞராக ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதற்கும் அச்சிந்தனைகளையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. சமுதாயக் கருத்துக்களைப் பிற உவமைகளைக் கொண்டு விளக்குவது எல்லாக் கவிதைகளிலும் காணக்கூடியதே. அச்சிந்தனைகளே பிற பொருள்களுக்கு உவமைகளாக அமைவது கவிஞனின் பட்டறிவைப் பொருத்ததாகும். பட்டினிக் கிடந்த பட்டறிவால் பசியைப் பற்றி எழுதுவதற்கும் பட்டினியால் துடிப்பவனைப் பார்த்து அப்பசியைப்பற்றி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. இந்தப் பின்புலத்தில் சமுதாயத்தைப் பற்றிய கவிஞர்களின் அக்கறையும் கரிசனமும் அவர்கள் கவிதைகளில் உவமங்களாக அமைந்துள்ள பாங்கினைச் சுருக்கமாக ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.
கவிஞனும் சமுதாயச் சிந்தனைகளும்
சமுதாயத்தின் உள்கட்டமைப்புக்களான பொருளாதாரம், சமூக நிலை ஆகியவை எல்லாக் காலத்திலும் ஒரே தன்மையுடையனவாக இருப்பதில்லை. அவற்றின் சிக்கலுக்கேற்ப அவற்றின் தன்மைகளும் நிலைப்பாடுகளும் மாறுபடுகின்றன. இலக்கியம் சமுதாயத்திலிருந்து, அவற்றிலிருந்து கிடைக்கும் பட்டறிவிலிருந்து பிறப்பதாதலின், மேற்சுட்டிய பொருளாதாரச், சமூக மாறுபாடுகளும் அவற்றால் உண்டாகும் விளைவுகளும் படைப்பிலக்கியத்தில் எதிரொளிக்கவே செய்யும். ஒரு சமூகப் பிரச்சினை குறித்து ஊடகங்கள் பலவும் கருத்துத் தெரிவிக்கின்றன. அரசு, பொருளியல் அறிஞர்கள் அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன. கவிஞனும் அச்சிக்கல் குறித்த தன் பார்வையைப் பதிவு செய்கிறான். பிற யாவற்றிலும் இருந்து கவிஞனின் பார்வை வேறுபட்டதாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறன்று. ஏனெனில் கவிஞன் வாழ்க்கைச் சிக்கல்களை அறிவுப்பூர்வமாக மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் அணுகுகிறான்.
சமுதாயப் பார்வை கவிஞனுக்கு மேற்சட்டையன்று
இலக்கியத்தின் தலையாய நோக்கம் இன்புறுத்துவதே. அழகியல் குறையாமல், அது வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளை உணர்ந்து கொள்வது அதன் பயனாகும். இன்புறுத்துவது நோக்கம். ஏற்றம் பெறச் செய்வது பயன். “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்” என்னும் தொடரின் சாரம் இதுவே. வாழ்க்கைச் சிக்கல்களையும் நெறிகளையும் கற்பனை கொண்டு வடிவமைக்க முடியாது. சமகாலச் சமுதாய நிகழ்வுகளிலிருந்தும் உண்மை நிலவரங்களிலிருந்துமே அவற்றை வடிவமைக்க வேண்டியதிருக்கிறது. முன்னரே சுட்டியது போல் சமுதாய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதும், கண்டிப்பதும், திருத்த முயல்வதும், தீர்வு காண்பதும் ஒரு கவிஞனுடைய வேலைதான். எனவே கவிஞனுக்குச் சமுதாயச் சிந்தனைகள் புறமன்று., அகம். அவன் சிந்தை, அணு ஒவ்வொன்றிலும் சமுதாயமே நிறைந்திருத்தல் வேண்டும். இலக்கியத்தில் சமுதாயத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்வதும் சமுதாயச் சிந்தனைகளையே இலக்கியமாகப் படைத்துக்காட்டுவதும் தமிழுக்குப் புதியதல்ல.
“சமுதாயப் பார்வையினைச்
சட்டையைப் போல் மாட்டாதீர்!
அதை உங்கள்
உடம்பின் சதையாகவே
உருவாக்கிக் கொள்ளுங்கள்”என்பர். சமுதாயத்திலிருந்து சமுதாயத்திற்காகச் சமுதாயத்தோடு கலந்த ஒருவனால் படைக்கப்படுவதே இலக்கியம் என்னும் ‘கவிதை மக்களாட்சித் தத்துவத்தைத்தான்’ சுருக்கமாக ‘இலக்கியம் என்பது ஒரு காலக்கண்ணாடி’ என்று அறிஞர்கள் வரையறை செய்திருக்கிறார்கள்.
சமுதாயக் கட்டமைப்பும் கவிஞனின் சிந்தனைகளும்
சமுதாயக் கட்டமைப்பு மாறுகிறபோது சமுதாயச் சிந்தனைகளும் மாறுவது இயல்பே. முடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருந்த சமுதாயச் சிந்தனைகள் வேறு. குடியாட்சிக் காலத்தில் கவிஞன் ஒருவனுக்கு இருக்கின்ற சமுதாயச் சிந்தனைகள் வேறு. அரசமைப்பு மாற்றம் மட்டுமே இதற்குக் காரணம் எனக் கருதுவதைவிடச், சமுதாயக் கட்டமைப்புக்களுக்கேற்பச் சமுதாயச் சிக்கல்களின் தன்மைகள் மாறுபடுவதே காரணம் என்பது பொருத்தமாகலாம். ஆனால் தமிழ்க்கவிதைப் போக்கில் முற்றிலும் வியப்பான மாற்றத்தைக் காணமுடிகிறது. அதாவது சமுதாயக் கட்டமைப்பு மாறாதபோதே சிந்தனை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தெளிவாகச் சுட்டுவதானால், முடியாட்சிக் காலத்திலேயே குடியாட்சிச் சிந்தனைகளைத் தமிழ்க்கவிதை உலகம் பதிவு செய்திருக்கிறது. இது பற்றி விரிப்பின் பெருகும்.
தமிழ்க்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்
இதிகாசக் கதைப்பொருளாயினும், மன்னராட்சி ஓங்கியிருந்த சங்க காலப் பாடுபொருள்களாகிய அகம், புறமாயினும் அழகியலும் கற்பனை வளமும் தூக்கலாகத் துலங்கும் இடைக்கால இலக்கியப் படைப்புக்களாயினும் சமய இலக்கியங்களாயினும் தற்காலத் தமிழ்க்கவிதைகளாயினும் சமுதாயச் சிந்தனைகளை அடியொட்டிய உவமங்கள் ஆங்காங்கே பயிலப்பட்டு வந்துள்ளமையை அறியலாம். சமுதாயச் சிந்தனைகளைப் பாடுபொருளாக்குவதன்றி, அச்சிந்தனைகளையே உவமமாக அமைத்துக் காட்டுவது சங்க கால இலக்கியங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
வறியவன் இளமையும் வாடிய சுரமும்
சங்க இலக்கியம் ‘ஓர் உவமத் தோரணம்’. சமுதாயச் சிந்தனைகள் என்பன பெரும்பாலும் வறுமை பற்றியனவே என்பது ஓர் எழுதாச் சட்டமாகத் தமிழ்க்கவிதைப் படைப்புலகத்திலும் திறனாய்வுலகத்திலும் நிலவிவருகிறது. ‘சமுதாயம்’ என்பது தனிமனிதர்களின் தொகுப்பு. தனிமனிதன் வறுமையுறுகிறபோது சமுதாயம் தன்னிலையில் தாழ்கிறது. கயமை மேலோங்குகிறபோது கடமையுணர்வு தவறுகிறது. பிறருக்குக் கேடு சூழ்வான் முடிவும் கேடாகவே அமைகிறது. சமுதாயம் தடுமாறுகிறபோது அரசும் தடுமாறுகிறது. தடுமாறும் அரசின்கீழ் உள்ள மக்களும் வாடி உலர்கிறார்கள். உதிர்கிறார்கள்.
“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்
அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக்
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடி அவன் நிழல்
உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்”மேற்கண்ட பாடலின் பாடுபொருள் சமுதாயமன்று. பாலைத்திணையே. பாலையின் கருப்பொருள்களை வண்ணனைச் செய்யப் புகும் கவிஞருக்குச் சமுதாயம் பற்றி ஓடிய சிந்தனைகள் உவமைகளாக அமைந்துவிடுகின்றன. பாலையின் வாடலுக்கு, வறியவனின் இளமை உவமமாக அமைத்திருப்பதைப் போலவே தலைவியின் வாடலுக்கும் பொருளற்றவனின் இளமை உவமமாக்கப்பட்டுள்ளது.
“இருளிடை என்னாய் நீ இரவஞ்சாய் வந்தக்கால்
பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்”மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களிலிருந்து மறைபொருளாகிய அகத்திணையைப் பாடுகிற நேர்வுகளிலும் புறப்பொருளாகிய சமுதாயச் சிந்தனைகள் தமிழ்க் கவிதைகளில் உவமமாக அமைந்துவிடும் பாங்கை அறியலாம். பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வறியவன் ஒருவனுடைய இளமையையும் அருளாளன் ஒருவனுடைய ஆக்கத்தையும் உவமமாக அமைத்திருக்கிறார்கள்.
உவமங்களில் உலா வரும் ஊமன்
வறியவன் இளமை உவமமானது போலவே, வாயில்லா ஊமையும் உவமமாகியிருக்கிறான். வாயில்லாதவன் ஊமன். கவிஞர் ஒருவர் வாயில்லா அவனைக் கண்ணில்லா ஊமனாக்கி அவன்மேல் கழிவிரக்கத்தைப் பெருக்குகிறார்.
“மாரி இரவின் மரங்கவிழ் பொழுதில்
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்ணில் ஊமன் கடல்பட்டாங்கு”தன்னைப் புரக்கும் வெளிமானின் மறைவைத் தாங்கிக் கொள்ள இயலாத பெருஞ்சித்திரனார் தன்னுடைய இரங்கத்தக்க நிலையை உவமத்தால் வெளிப்படுத்துங்கால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். ‘மாரி இரவு’ என்பதால் ஊமனைக் ‘கண்ணில்லா ஊமன்’ என, ‘இருபொறி இழந்தவன் இருட்டில் படும் வேதனையை’ உவமமாக்கிக் கூறுகிறார். இருட்டிலே தவிக்கும் கண்ணில்லா ஊமன் நிலை இதுவாயிருக்கக், கண்ணுடைய ஒருவனைக் கையில்லா ஊமனாக அகத்திணைப் பாடலொன்று உவமமாக்கிக் காட்டியிருக்கிறது.
“ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்”தலைவியைப் பிரிந்த தலைவனைப் பாங்கன் தேற்றுகிறான். தேற்றுகிற பாங்கனுக்குத் தானுற்ற காமநோயை வெளிப்படுத்தும் தலைவன், மேற்கண்ட உவமத்தைப் பயன்படுத்துகிறான். ‘வெண்ணெய் உணங்கல்’ தலைவனின் மேனிக்கு உவமை. அதனை ‘ஞாயிறு காய்தல்’ நோய் பரவுதற்கு உவமை. கையில் ஊமன் தலைவனுக்கு உவமை. ‘கையில்லாமையால் உருகும் வெண்ணெயை எடுத்து நிழலிட்டு உருகாமற் காக்கவும், ஊமனாதலின் பிறர்க்கு அதனை உரைக்க இயலாமை பற்றிப் பிறராலே ஓம்பவும் இயலாதவன் ஆனாற்போலத், தானும் தன் அகத்தைத் தானேயாதல் பிறர் உதவியாலாதல் ஓம்ப முடியாதவன் ஆயினான்’ என்னும் தலைவன் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு இவ்வுவமை அமைந்துள்ளது. கண்ணில்லா ஊமன் புலவர். கையில்லா ஊமன் தலைவன். இவர் இருவருமன்றி இன்னொருவருக்கும் ஊமன் உவமமாகப் பயன்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது.
தலைவனைப் பிரிந்து வாடுகிறாள் தலைவி. அவள் வாட்டம் கண்டு மனம் வருந்துகிறாள் தோழி. அத்தோழியின் வருத்தம் தனக்கு எத்தகைய துன்பத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கூற வந்த தலைவி,
“……..கூவல்
குரால்ஆன் படுதுயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி!”பாங்கனுக்குப் பதிலுரைத்த தலைவனைப் போலப் பாங்கியின் பாசம் கண்டு வருந்திய தலைவியும் இவ்வாறு ஓர் ஊமனை உவமையாக்கிக் காட்டுகிறாள். கிணற்றினுள் வீழ்ந்துவிட்ட குரால் நிற பசு படுகின்ற துன்பத்தை இரவிலே கண்ட மக்களினத்து ஊமன் போல் தோழிக்காகத் தலைவி வருந்துகிறாள் என்பது கருத்து. மேலே சுட்டிய எடுத்துக்காட்டுக்களில் ‘கண்ணில் ஊமன்’, ‘கையில் ஊமன், ‘உயர்திணை ஊமன்’ என்றவாறு பல நிலைகளில் ‘வாயில்லா ஊமை’ உவமிக்கப்பட்டிருப்பது கொண்டு, தமிழ்க்கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் உவமமாக்கப்படும் முயற்சி தொடக்கக் காலத்திலேயே கால் கொண்டுள்ளது என அனுமானிக்கலாம்.
ஊமையைத் தொடர்ந்த ஓர் ஏர் உழவன்
ஊமனைத் தொடர்ந்து உழவன் ஒருவனையும் உவமமாகத் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. பிரிந்து சென்ற தலைமகன், மீண்டும் திரும்பி வருங்கால் தலைவியின் நிலையை எண்ணுகிறான். அவளைக் காண விரைந்து செல்ல வேண்டிய தன் நிலையையும் கருதுகிறான்.
“ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்ற”அவன் நிலை உவமத்தின் வழிச் சுட்டப்படுகிறது. ஓர் ஏரை மட்டுமே உடைமையாகக் கொண்ட ஏழை உழவன், மழையினால் ஈரம் பட்ட காலம், அந்த ஈரம் உலர்வதற்குள் நிலத்தை உழுதுவிட வேண்டும் என்னும் நிலை, அதனால் அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்’ என்னும் உவமப் பாங்கு ஒருபுறம். ‘தலைவன் செல்ல வேண்டிய இடைவழியோ தொலைவு., பருவம் கண்ட தலைவியின் ஆற்றாமை, ஆற்றாமை நீளின் அவள் இறந்துபடும் ஏதம், விரைந்து சென்று அவள் துயர் துடைக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஏற்படும் மன உளைச்சல்’ எனப் பொருண்மை நிலை மற்றொரு புறம். பொருள் புலப்பாடே உவமத்தின் தலையாய பணி என்பதை நன்குணர்ந்திருந்த இப்புலவர் தலைவனின் மனநிலைக்கு உழவனின் மனநிலையை உவமையாக்கித் தமது சமுதாயச் சிந்தனைக் கொள்கையை நிலைநிறுத்துகிறார். தலைவியின் பிரிவுத் துயரைப் போக்கவரும் தலைவனின் உள்ளத்தில் உழவனைப் பற்றிய சிந்தனையைப் பதியவைக்கும் சங்கச் சான்றோருடன் சமுதாயப் பார்வை பற்றிய கவிதைத் தொழில்நுட்பம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.
சமர்க்களத்திலும் சமுதாயச் சிந்தனைகள்
கற்பனை வளத்திலும் மொழி ஆளுமையிலும் தமக்கென தனித்த இடத்தைப் பெற்றுத் திகழ்வன இடைக்கால இலக்கியங்கள். அவற்றுள் ‘கலிங்கத்துப் பரணி’ என்பது தமிழின் கவிச்சக்கரவர்த்திகள் மூவருள் ஒருவரால் பாடப்பட்ட பெருமையினையுடையது. எள்ளின் முனையளவும் சமுதாய நோக்கு தேவைப்படாத பாடுகளத்தைத் தனக்கிடமாகக் கொண்டது. முடியாட்சியின் மாண்புகளை முழுமையாகக் காட்சிப்படுத்தும் இலக்கியம் அது. அத்தகைய இலக்கியத்தில்கூடச் சமுதாயச் சிந்தனைகள் உவமங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியக் கிடக்கின்றது. போர்க்களத்தைப் பாடுகிற செயங்கொண்டார் சமுதாயம் பற்றிய தம்முடைய சிந்தனைகளை உவமங்களால் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
“சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
சாருநர்போல் வீரர்உடல் தரிக்கும் ஆவி
போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்”வறுமையைப் போக்குதற்கான மக்களாட்சி நெறிமுறைகளில் ஒப்புரவும் ஒன்று. அதுபற்றித் திருவள்ளுவர் தனி அதிகாரமே செயதிருக்கிறார். அவர் காலத்தில் அத்தகைய கருத்தாக்கமே பெரும் புரட்சிக் கருவாகும். ‘போராட்டத்தின் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்’ என்னும் கருத்தாக்கம் நிலைகொண்ட இருபதாம் நூற்றாண்டுப் பாரதிதாசனே இந்த ஒப்புரவைக், ‘கடுகுள்ளம், துவரையுள்ளம், தென்னையுள்ளம், மாம்பிஞ்சு உள்ளம்’ எனப் படிநிலை வளர்ச்சி காட்டிப் பாடியிருப்பதொன்றே இதன் சிறப்பைக் காட்டப் போதுமானதாகும். அலந்தார்க்கு உதவுதலாகிய இச்சிந்தனையைக் கவிஞர் ‘நரியின் ஏமாற்றத்திற்கு’ உவமமாக அமைத்துக் காட்டியிருக்கிறார். ‘உதவுவார்’ என எதிர்பார்த்து ‘உதவவே மாட்டார்’ என்னும் முடிவையும் அறியாமல் ஏங்கி நிற்கும் நரிக்குலத்திற்குக் கவிஞர் காட்டும் உவமம், சமுதாயச் சிந்தனைகளில் அவருடைய உள்ளம் தோய்ந்த பாங்கை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
பாரதிதாசன் உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்
பாரதிதாசன் கவிதைகளில் இடம்பிடிக்காத உவமங்களே இல்லை எனலாம். அவருடைய கவிதைகளில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும்’ உவமங்களில் சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கிய உவமங்கள் தனிச்சிறப்புக்குரியன. தான் பெற்ற மழலையைத் தாயைப் போலத் தந்தை தூக்க முடியாது. வளர்ந்த நிலையில் குழந்தைகளை எவரும் தூக்கலாம். இந்தப் பட்டறிவைத் தம்முடைய நுனித்த நோக்கினால் கண்ட பாரதிதாசன் உவமங்களால் வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது.
“ஆழியில் உள்ள அழகு மட்கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பதுமுடியும்
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்”“உலைஅமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல் போல்
தவறாது தூக்குவது தலையாகிய கடன்”தான் வனையும் மட்பாண்டங்களைச் சக்கரத்தில் இருந்து எடுக்க குயவனால் மட்டுமே இயலும். அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அழகு மட்கலத்தை யார் வேண்டுமானாலும் தூக்கித் தட்டிப் பார்க்கலாம். பச்சைப் பானையைத் தூக்குவது குயவனால்தான் இயலும். பச்சைக் குழந்தையைத் தூக்குவது தாய்க்கு மட்டுமே கூடும். குழந்தையைப் ‘பச்சைமண்’ என்னும் வழக்கு ஒப்பு நோக்கத்தக்கது. குழந்தையைத் தூக்குதற்குரிய புறச்செயலுக்குக் குயவனை ஒப்புமை கூறியிருக்கும் பாங்கு இதுவாக, அப்பொழுதில் இருக்க வேண்டிய எச்சரிக்கையுணர்வை வறுமையில் உழன்ற ஒருத்தி, தான் வடித்த உலைச்சோற்றுப் பானையை நழுவ விடாது பொறுப்புடன் தூக்கி இறக்கிவைப்பதுடன் ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் பொருத்தப்பாடு நேர்த்தி நிறைந்தது. அதனால் நெஞ்சு கவர்ந்தது.
“உலக நிகழ்ச்சிகளை எத்துணைக் கூர்ந்து நோக்கியுள்ளான் என்பதைப் புலப்படுத்தும் முகத்தால் உவமை அவனது புலமையையும் காட்டுகிறது”
ஒப்புமை அடிப்படையில் பொருள் புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு கவிஞனின் நுண்ணோக்கினை வெளிப்படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது என்னும் அறிஞர் கைலாசபதியின் மேற்கண்ட கருத்து ஈண்டு ஒப்பு நோக்கிற்காகச் சுட்டப்படுகிறது.
புதுக்கவிதை உவமங்களில் சமுதாயச் சிந்தனைகள்
காலமாறுதல், சமுதாயச் சிக்கல்கள், அறிவியல் வளர்ச்சி, நாகரிகம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் கலப்புக்கள், உலகச் சிந்தனைப் போக்கின் மாறுதல்கள் எனப் பெருகி வளரும் காரணிகளின் அடிப்படையில் புதிதாகத் தோன்றிய ஓர் இலக்கிய வடிவமே ‘புதுக்கவிதை’ ஆகும். பெரும்பாலும் பொருண்மை நிலையினாலும் வெளிப்பாட்டு உத்தியாலும் அவைகள் அப்பெயர் பெற்றன என்பது பொருந்தும். மரபுக் கவிதைகளைவிடப் பன்மடங்கு சமுதாயச் சிந்தனைகளைத் தமக்கு உள்ளடக்கமாகக் கொண்டு விளங்குவன புதுக்கவிதைகள் ஆகும். அவற்றுள் பொருள் புலப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் உவமைகளில் பல சமுதாயச் சிந்தனைகளைத் தாங்கி நிற்பதை அறியமுடிகிறது.
முடி திருத்திய முத்தும் மீராவின் உவமமும்
கவிஞர் மீரா குறிப்பிட்ட ஒருவரிடமே முடி திருத்திக் கொள்வார். ஒரு நாள் அவர் கடைக்குச் செல்லும் போது முடி திருத்தும் முத்து என்பார் மறைந்த சேதியைக் கேட்டு அவருக்குக் கையறுநிலை பாடுகிறார். அக்கையறுநிலைக் கவிதையில் முத்து கடையில் எப்பொழுதும் குழுமியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் உவமை சொல்கிறார்.
“ஒரு கிராமத்துத்
திருமணப் பத்திரிகையில் வரும்
தாய் மாமன்களின்
பெயர்களைப் போல”அக்கடையில் குழுமியிருப்பார்களாம். பாடுபொருளாக்கப் பட்டிருப்பவர் முடி திருத்தும் தொழிலாளி என்பது புதுக்கவிதையின் சமுதாயப் பாடுபொருள். அக்கடையில் குழுமியுள்ளவர்களுக்குத் திருமண அழைப்பிதழில் அச்சடித்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தாய்மாமன்கள் குழு உவமம். அழைப்பிதழில் செலுத்திய மீராவின் ஆழ்ந்த நோக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது இந்த உவமம்.
காதலை அளக்கும் கண்ணீரும் வியர்வையும்
‘உள்ளங்களின் இடப்பெயர்ச்சியே காதல்’ என்பது தமிழ்க்கவிதைகளின் காதல் பற்றிய ஒருவரிக் கருதுகோளாகலாம். ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்’ என்பது கம்பன் பார்வை. அந்தக் கருதுகோளின் பன்முகப் பரிமாணங்களே தமிழ்க்கவிதைகளின் பெரும் பரப்பை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றன. மரபிலக்கியங்களில் காணப்படாத ‘தலைவன் புலம்பல்’ என்பது தற்காலக் கவிதைகளில் பெருவழக்கு. காதலியை நோக்கி அவள் காதலைப் பெருமைப்படுத்தும் காதலன்,
“நீ எனக்குக் காதலைத் தந்தாய்
அது
உழைப்பாளிகளின் வியர்வையைப் போல்
உயர்வானது”என உழைப்பாளியின் வியர்வையைத் தலைவியின் காதலுக்கு உவமையாக்குவதைக் காணமுடிகிறது. தலைவியின் காதலுக்கு மாற்றாகத் தான் தரும் காதல் காவியத்தை ஏழையின் கண்ணீரோடு ஒப்பிட்டு உரைப்பதையும் காணமுடிகிறது.
“நான் உனக்கு இந்த
வசன காவியத்தைத் தருகிறேன்.
இது
ஏழையின் கண்ணீரைப் போல்
உண்மையானதா என்று பார்!”காதலியின் காதல் உயர்வுக்கு உழைப்பாளியின் வியர்வைத் துளிகளை உவமிக்கும் மீரா, தன்னுடைய காவியத்தின் உண்மைக்கு ஏழையின் கண்ணீரை உவமித்துக் காட்டியிருக்கும் திறன் சுட்டத்தகுந்தது.
ஊசியில் காதும் உள்ளத்துக்கு வழியும்
தமிழ்க்கவிதைகளின் தலைமைப் பாடுபொருள் காதல். இருப்பினும் தற்காலக் கவிதைப் படைப்புக்களில் சமுதாயச் சிந்தனைகளே மேலோங்கியிருக்கின்றன என்பது அக்கவிதைகளை ஆராய்ந்தோர் கண்ட முடிபு. காதலியின் உள்ளத்தில் காதலன் இடம் பிடிப்பதைப் பாரதிதாசன்,
“கண்படைத்த குற்றத்தால் அழகி யோன்என்
கருத்தேறி உயிரேறிக் கலந்து கொண்டான்”எனத் தலைவி கூற்றாக அமைத்துக் காட்டுவார். இந்தச் சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட வைரமுத்து,
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”என வழிமொழிவார். உயிரேறிக் கலந்து கொண்டதற்கும், உயிரில் கலப்பதற்கும் உவமம் ஏதும் மேற்கண்ட கவிதைகளில் சுட்டப்படவில்லை. ஆனால் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவி கூற்றாக இருக்கும் மேற்கண்ட உள்ளடக்கத்தைத் தலைவனுக்கு மாற்றுவதோடு அதற்குச் சமுதாயம் சார்ந்த உவமையையும் கூறுகிறார். காதலியின் உள்ளத்துக்குள் செல்லும் வழியறியாமல் தடுமாறும் காதலனின் தடுமாற்றத்தைக், கண் தெரியாத முதுமையடைந்த தையல்காரன் ஒருவன், ஊசியில் காது தேடும் தடுமாற்றத்துடன் ஒப்பிடுவதைக் காணமுடிகிறது.
“உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்,
ஊசியின் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரனைப் போல”பாவேந்தர் கண்ட காதலியும் வைரமுத்து கண்ட காதலியும் தத்தம் காதலர்களுக்குத் தம் உள்ளத்துள் நுழைய அனுமதித்த நிலையில் அப்துல் ரகுமான் கண்ட காதலன் தன் காதலியின் உள்ளம் நுழைய வழிதேடும் அழகியலும் அவ்வழகியலைச் சிந்திக்க வைக்கும் உவமமும் கவிதையின் அகப்புற அழகை மேம்படுத்துவதைக் காணலாம்.
காதலன் துடிப்புக்குக் கவிஞனின் உவமைகள்
சங்க இலக்கியத் தலைவன் தலைவியைக் காண இடர்ப்படுவான். ‘அல்லகுறிபட்டு அலமறுதல்’ அவனுக்கு இயல்பு. தற்காலக் காதலன் காதலியைக் காணப் பதற்றமடைவான். இந்தப் பதற்றத்திற்குக் கவிஞர் மீரா காட்டும் உவமைகள் சுய பட்டறிவையும் கண்ணெதிரில் நிகழும் சமுதாய நிகழ்வுகளையும் ஒருசேரப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.
“முதல் தடவையாய்
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்
ஒரு வேலையில்லாப்
பட்டதாரியைப் போல்”“எதிர்பாரா விதமாய்
மணமேடையில் அமரும்
ஒரு ஏழைப் பெண்ணைப் போல்”நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பட்டதாரியின் படபடப்பும், எதிர்பாரா வகையில் மணமகளான ஏழைப் பெண்ணின் பதற்றமும் முறையே ஐயத்திற்கிடையே தோன்றும் அச்சத்திற்கும், எதிர்பாராதது கிட்டியதனால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் உவமைகளாய் அமைந்து அவ்விருவர்தம் சமுதாய நிலைப்பாடுகளில் கவிஞருடைய பார்வையை உணர்த்துவதாக உள்ளன. மேற்கண்ட சில சான்றுகளால் பொருள் புலப்பாட்டுக்காக அமைகின்ற உவமங்களில் படைப்பாளனின் சமுதாயப் பார்வையும் பொருத்தமான உவமங்களாய் அமைகின்ற பாங்கு ஓரளவு புலப்படுத்தப்பட்டுள்ளது.
நிறைவுரை
‘உவமம் என்பது செய்யுளுக்குப் புறத்தே நிற்பதன்று, அகத்தோடு கலந்து நிற்பது’ என்பதையும், அதனை வெறுமனே ‘அழகியல் வெளிப்பாட்டு உத்தி’ எனக் கருதுவதினும் பொருள் புலப்பாட்டுக் கருவி எனக் கருதியதே பழந்தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாடு என்பதையும் எப்பொருளைப் பற்றிப் பாடும் கவிஞன் எவராயினும் அவன் மானுடத்தைச் சேர்ந்தவன் ஆகையால் அவனால் சமுதாயத்தைவிட்டு விலகி நிற்க முடியாது என்பதையும் இந்தக் கட்டுரைத்தொடர் தொடர்ந்து வலிமையான தரவுகளால் நிறுவி வருகிறது. அவற்றோடு கவிதைக்கு அழகு, அடர்த்தி கூட்டும் உவமம் கவிஞனின் சமுதாயச் சிந்தனைகளாக அமைகிறபோது படைப்பாளனின் அகப்புற முகவரியாகவே மாறிவிடுகிறது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு சொல்ல முயன்றிருக்கிறது.
(தொடரும்…)
-

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.comபேசாத வாய் பேசிய உவமங்கள்!
முன்னுரை
பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் உவமம் பற்றிய ஆய்வு உவம இயல், அகத்திணை இயல், பொருளியல் முதலியவற்றில் நிகழ்ந்திருப்பதால் உவமம் பொருட்பகுதியாகவே கருதப்படும் என்பது அறிஞர் கருத்து. அகத்திணைக் கூறுகளான உள்ளுறை, இறைச்சி ஆகியன உவமத்தின் நுண்ணியச் செறிவுகள் ஆதலின் உவமம் பெரும்பாலும் அகத்திணைப் பாடல்களிலேயே பயன்பட்டு வந்திருக்கக்கூடும் என்பது ஒரு வலுவான அனுமானம். தொடர்ந்து உவமங்கள் புறச்செய்திகளைக் கூறவும் பயன்படத் தொடங்கின என்பது இலக்கிய வரலாறு காட்டும் உண்மை. இதனையும் தொடர்ந்து பக்தியுணர்ச்சியை வெளிப்படுத்தவும் அது பயன்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நீதிநெறிகளை விளக்கவும் பயன்பட்டு வந்திருக்கிறது என்பது திருக்குறள் தொடங்கிய நீதி நூல்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும். அந்த வகையில் சைவப்பெருந்தகை குமரகுருபரர் அவர்கள் பாடிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் பயின்றுள்ள சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.
விறகுக்கும் ஆகாத நெடுமரம்
ஒரு நூலை மங்கலத்தில் தொடங்கி மங்கலத்தில் நிறைவு செய்வது என்பது தமிழிலக்கிய நெடிய மரபின் ஒரு பகுதி. ‘உலகம்’ என்ற சொல் எந்தெந்த இலக்கியங்களில் தொடக்கமாக அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் அறிஞர்கள ஆய்ந்திருக்கிறார்கள். அதுபோலவே உவமத்திலேயே தொடங்கிய இலக்கியங்களையும் அடையாளம் காணமுடியும். ‘அகர முதல’ என உவமத்திலேயே இறைவனுக்கு உண்மை கூறினார் திருவள்ளுவர். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு” என்பது திருமுருகாற்றுப்படையின் தொடக்கம். இன்னும் பல., உரைப்பின் பெருகும். இந்த மரபைக் குமரகுருபரரும் இறைவணக்கத்திலேயே பின்பற்றுகிறார்.
“நீரில் குமிழி இளமை., நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரை – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள்! என்னே
வழுத்தாத எம்பிரான் மன்று? “ (நீ.நெ.வி.4)நில்லாத இளமை நீர்க்குமிழிக்கு ஒப்பாகும். முக்காலத்தும் நிறைந்தாலும் செல்வம் காற்றால் மொத்துப்பட்டலையும் அலைகளுக்கு ஒப்பாகும். ஒப்பனையால் பொலிவு பெறும் உடம்பு நீர் மேல் எழுதப்படும் எழுத்துக்கு ஒப்பாகும். இவ்வளவு உண்மைகளை அறிந்திருந்தும் நிலையான இறைவனை அவன் நிற்கும் திருக்கோயில் சென்று வணங்காதது ஏன்? என்பதுதான் குமரகுருபரரின் வினா. இளமைக்கு நீர்க்குமிழியையும் செல்வத்திற்குத் திரைகளையும் அழியும் உடம்பிற்கு நீர் மேல் எழுத்தையும் கடவுள் வாழ்த்திலேயே கூறும் குமரகுருபரர், நூல் தொடக்கத்தில் உவமப் பயன்பாட்டிலும் உவமங்களிலும் மரபினையே பின்பற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.
மலர் பொன்னானால் மணம் என்னாகும்?
சில நூல்களில் பயின்றுள்ள சொற்களும் தொடர்களும் உவமங்களும் உத்திகளும் நம்மையுமறியாமல் நம் ஆழ் மனத்துள் சென்று தங்கிவிடும். அவ்வாறு தங்கிவிடுவதுதான் அதன் சாயல், பின்னாலே வரும் படைப்புக்களில் வெளிப்படுத்தித் தலைக்காட்டுவதற்குக் காரணமாகும். இது நகலெடுப்பதன்று. தாயின் சாயல் பிள்ளைக்கு வருவது போன்றது. திருவள்ளுவர் சொல்லாற்றலைப் பற்றிச் சுருக்கமாகத் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்.
“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார்” (கு.எண்.650)இந்தக் குறள் சொல்வன்மையின் சிறப்பினை எதிர்மறையால் கூறுகிறது. ‘பூங்கொத்தின் பயன் அதன் மணம்’ என வரையறுக்கிறது. மணம் இல்லாவிடின் பூங்கொத்துக்களினால் பயனில்லை என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. இந்தச் சிந்தனையின் நீட்சியாக நீதிநெறி விளக்கத்தில் பின்வரும் பாடல் அமைந்திருப்பதாகக் கருதலாம்.
“எத்தணைய ஆயினும் கல்வி இடனறிந்து
உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துண்ர்ந்தும்
சொல்வன்மை இன்றெனின் என்னாம்? அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றமுடைத்து” (நீ.நெ.வி. 5)திருவள்ளுவர் உவமத்தை எதிர்மறையாகக் கூறிப் பொருட்சிறப்பையும் அவ்வாறே பெறவைத்தார். குமரகுருபரர் பொருட்சிறப்பை எதிர்மறையாகக் கூறி உவமத்தின் சிறப்பை உடன்பாட்டில் பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ‘மணக்காத பூவால் பயனில்லை’ என்பது வள்ளுவர் விளக்கம். உயர்த்துணர்வதும் உய்த்துணர வைப்பதும் இல்லாயின் கல்வியினால் பெருமையில்லை என்பது நீதிநெறி விளக்கம். ஆயினும் திருவள்ளுவர் உணர வைப்பதையே பொருளாகக் கொள்ள, குமரகுருபரர் உணர்வதையும் உணர வைப்பதையும் பொருளாகக் கொள்கிறார். கொண்டு உணரும் திறனை அதாவது ‘எண்பொருளவாகப்’ பிறர் சொல்லும் நுண்ணியங்களை உணரும் கற்றவனைப் பொன்மலரோடு ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு திருக்குறளில் இல்லை. நாறா மலரைத்தான் திருக்குறள் காட்டுகிறது. பொன்மலரை நீதிநெறி விளக்கம் காட்டுகிறது. பூ மணம் பூமணமாகவே இருக்கும். ஆனால் பூ பொன்னாலானால் மணம் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர முடியாது. காரணம் உவமம் இல்பொருள். இவ்வாறு இல்பொருளைக் குமரகுருபரர் உவமமாகக் சொன்னதற்குக் காரணம் அரியது நோக்கி. அதாவது உணர்வதும் அவ்வாறு உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்துவதும் அரிய செயல். எனவே அத்தகையோர் அரியர். எனவே இல்பொருள் உவமமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறள் ஒரு பொருள் பற்றி ஆராய, நீதிநெறி விளக்கம் இருபொருள் பற்றி ஆராய்வது சிந்திக்கத்தக்கது.
பிணம் விட்ட பெருமூச்சு!
பிணம் பெருமூச்சு விடுமா? விடாது. கருத்து என்னவென்றால் பெருமூச்சு விடுவதனாலேயே அது உயிர்பெற்ற மனிதனாகிவிட முடியாது என்பதுதான். பெருமூச்சுவிடுவது அதன் இருப்புக்கு அடையாளம். அவ்வளவுதான். ஆற்றல் மிகு உரையாசிரியர் பரிமேலழகர் ஒரு சில குறட்பாக்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கவுரை எழுதியிருப்பார். அவற்றுள் ஒன்று,
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்” (கு.எண். 848)என்னும் குறட்பாவாகும். இதற்குப் “புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்” எனப் பதசாரம் எழுதி,
“உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், ‘அவ்வுயிர்’ என்றும், அதனின் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் ‘போமளவும்’ என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் ‘ஓர் நோய்’ என்றும் கூறினார்”
என்று விளக்கவுரை தருகிறார் பரிமேலழகர். ‘அவ்வுயிர்’ என்னும் சேய்மைச்சுட்டால் சுட்டியதும் ‘அவன் இருக்கும் வரை’ என்னாது ‘அது போகிறவரை’ என உயிரை அஃறிணையாக்கி உரைத்ததும் ‘போஒம்’ எனச் செய்யுளிசை அளபெடையை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டதுமான திருவள்ளுவரின் சதுரப்பாடு மிகவும் உயர்ந்ததாம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது இதனால் ஈர்க்கப்பட்ட குமரகுருபர சுவாமிகள்,
“முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா – இடித்திடித்துக்
கட்டுரை கூறின் செவிகொளா! கண்விழியா!
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்” (நீ.நெ.வி.31)என்னும் ஒரு வெண்பாவை எழுதியிருக்கிறார். ‘நினைத்தவாறே ஒழுகித், தான் நினைக்கின்ற செயல்களையே செய்து முடித்துப், பூசுவன பூசி, உடுப்பன உடுத்து, உண்பனவற்றை உண்டு என்று தன்னிச்சையாகவே செயல்படும் ஒருவனுக்கு அவனிழைக்கும் தவறைப் பிறனொருவன் சுட்டிக்காட்டினால் செவி கேளாது. கண்ணும் குருடாகும். ஆதலின் அவன் பெருமூச்சுவிடும் பிணத்திற்கு ஒப்பாவான்” மேலே சுட்டிய திருக்குறள் மற்றும் நீதி நெறி வெண்பாக்களின் கருத்தொற்றுமையைக் கற்பார் எளிதில் புரிந்து கொள்ளலாம் எனினும் நடைப்பிணம் கிடைப்பிணமாகும் நாளை திருவள்ளுவர் எதிர்நோக்க, ‘பெருமூச்சும் நிற்காதா?’ என்று குமரகுருபரர் பெருமூச்சு இடுவதை உணரமுடிகிறது. தானாகவும் தெரியாது பிறர் சொல்வதைக் கேட்கவும் மறுதலித்துத் தனக்கும் உலகத்துக்கும் துன்பமாகித் திரிபவர்களுக்கான உவமம் இருபெரும் சான்றோர்களுக்குப் பெரும்பாலும் ஒத்திருப்பது வியப்பானதன்று!
உடையார் முன் இல்லார்
தமிழகத்தில் கல்வி பெறுவதில் இருவகை முறைகள் இருந்திருக்கலாம். குருவிற்குக் கொடுத்துப் பெறுவது. பிச்சையெடுத்தாகினும் கல்வி பெறுவது. இரண்டினையும் உறழ்ந்து நோக்கினால் குருவிற்குக் கொடுப்பதற்காகப் பிச்சையெடுப்பது நிகழ்ந்திருக்கக்கூடும். இரந்தும் உயிர் வாழ்தற்கு இது மாறானது. உயிர்வாழ்தற்குப் பிச்சையெடுப்பது இழுக்கு. கல்வி பெறுவதற்குப் பிச்சையெடுப்பது ஏற்புடையது என்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”என்னும் புறநானூறும்,
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே”எனக் கற்றலை அடுக்கில் கூறிப் பின்னரும் அனுவதித்த வெற்றி வேற்கையும் இத்தகைய எண்ணங்களையே ஏற்படுத்துகின்றன. ‘சிற்றுயிர்க்கு உற்ற துணையாதலின்’ கல்வியின் பெருமை இம்மை மட்டும் சார்ந்தது அன்று உயிரோடு சார்ந்தது’ என்பது பெறப்படும். படவே அது ‘எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பதும் புலப்படும். படுதலின் கல்லாமையின் இழிவையும் கல்வியின் பெருமையையும் பன்முக உத்திகளில் பாடும் நிலை சான்றோர்க்கு வந்திருக்கிறது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது. ‘கல்வியழகே அழியா அழகாதலின்’ அதன் சிறப்பு நோக்கி வலியுறுத்தும் போக்கினையே காண முடிகிறது. ‘உடைமை செல்வம்’ என்றால் ‘இன்மை வறுமை தானே! கல்வியைப் பெற்றவர்கள் கல்விச் செல்வத்தில் உயர்ந்தோர். கல்வியைப் பெறாதார் அது இல்லாமையின் வறியர். வறியர் செல்வரிடத்தில் இரப்பது இயல்பு. இதனைத்தான் திருவள்ளுவர்,
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.” (கு.எண்.395)என உவமமாக்கியுரைக்கிறார். இந்த உவமத்தால் கவரப்பட்ட குமரகுருபரர் திருவள்ளுவரின் பொருள் செயல்வகை என்னும் அதிகாரக்கருத்தினையும் ஒருசேரத் தழுவி எழுதுகிறார் இப்படி!
“கல்வி யுடைமை பொருளுடைமை என்றிரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும் – இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்” (நீ.நெ.வி. 16)இந்த வெண்பாவில் கல்வியையும் செல்வத்தையும் செல்வம் என அடையாளப்படுத்தியதில் அவ்வளவாகச் சிறப்பில்லையெனினும் இரண்டு குறட்பாக்களை நினைவுபடுத்துகிறார் குமரகுருபர். திருவள்ளுவர் கல்வியைப் பெறுதற்குக் காட்டிய உவமத்தைப் பொருளுக்கும் காட்டுவது புதிய உத்தி எனலாம். ‘குறையிரந்து தம் முன்னர் நிற்பபோல்’ என்பது திருவள்ளுவர் கல்வியிலார் அதனைப் பெறுதற்குச் செல்வர்க்கு முன்னால் நிற்கும் நிலையைக் காட்டிய உவமம். திருவள்ளுவர் மிக நுட்பமாக அந்தக் குறட்பாவில் செய்திருக்கும் பதிவு நேர்த்தியை ஒரு துறைக்குச் சொல்லப்பட்டது போல் காட்டப்பட்ட அந்த உவமத்தை இரு துறைக்கும் தெளிவாகக் காட்டிய குமரகுருபரர்,
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து” (கு.எண். 125)என்னும் குறட்பாவின் கருத்தையும் உள்வாங்கியிருப்பதோடு பொருத்தமாக இருக்குமானால் ஒரு பொருளை விளக்குதற்கான உவமத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் உவமக் கோட்பாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறார் என்பதற்கும் சான்றாகத் திகழ்கிறது.
சிந்திய பருக்கையால் செழித்திடும் உயிரினம்
குருடர்கள் தடவிய யானையைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் முழுயானையைப் பாடிய கவிஞர்கள் கூட ஒரே மாதிரி நோக்கவில்லை என்பதையும் ஒரே புலவர் கூட யானையைப் பலவகையாக நோக்கியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது, திருக்குறளில் யானை பற்றிய குறட்பாக்கள் யானை, களிறு என்ற பெயர்களில் எட்டு இடங்களில் (24, 597, 678, 599, 758, 772, 774, 1087) கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எட்டு இடங்களிலும் திருவள்ளுவரின் பார்வை மிக நுண்ணிய வேறுபாடுகளை உடையதாக அமைந்திருக்கிறது. விரிப்பின் பெருகும். எனினும் 597, 678, 599 ஆகிய மூன்று குறட்பாக்களிலும் அது உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடங்களிலெல்லாம் யானையின் பெருமிதத்தையும் வீரத்தையும் சுட்டுகின்றனவாகவே உள்ளன. ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்று யானைக்கு முறையாக இடப்படும் உணவுக் கவளத்தைக் காட்டி அதன் உண்ணும் முறையை உவமமாக்கியிருக்கிறது.
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே!” (புறம். 184)இந்தப் பாட்டில் யானை நேரடியாக உவமமாகக் கூறப்படவில்லை. யானையை எப்படிக் கையாள வேண்டும் என்பதையே உவமமாக்கி அதனால் அரசன் செய்ய வேண்டிய ஆட்சிமுறைமையை விளக்குகிறார் புலவர் பிசிராந்தையார். முறையாக அளிக்கப்படுமாயின் யானை ஒழுங்காக உண்ணும். கட்டவிழ்த்துவிட்டால் கழனியும் பாழாகும். ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்பது கருத்து. இந்தப் பாட்டில் முறையாகக் கொடுக்கப்படும் கவளத்தை அது உண்கையில் சிதறும் பருக்கைகளைப் பற்றிய சிந்தனை குமரகுருபரருக்கு வந்திருக்கிறது. அவர் எழுதுகிறார்,
“வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயர் உறா – ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்பிங்கு ஒரு கோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று” (நீ.நெ.வி. 38)யானையின் ஒரு சிறு செயலைச் சித்திரிக்கும் இப்பாடல் முழுவதையும் ‘பிறிது மொழிதல்’ என்னும் அணி உத்தியால் அலங்கரித்த குமரகுருபரர், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதைக் குறிப்பாகப் பெறவைக்கிறார். விலங்குகளின் உறவுகளுக்குக் ‘கிளை’ என்பது தொல்காப்பியச் சுட்டெனினும் இலக்கியங்களில் அவ்வளவாகப் பயின்று வருவதில்லை. ‘கல்லென் சுற்றம்’ என்பதுதான் புறநானூற்றின் பொருண்மைத் தொடர். ஆனால் ‘யானையின் கிளையும் அயிறும்’ என்ற தொடராட்சியால் செல்வர்களின் சிறு செல்வம் அதனைப் பெறுவாருக்கும் பெறுவார்தம் சுற்றத்தார்க்கும் (கிளைக்கும்) பயனாகும் (சுற்றத்தோர்க்கும் தொடர்புறு கிளைஞர்க்கும்’ — சிலப்பதிகாரம்) என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கும் சுவாமிகளின் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது. உவமம் ஒன்றானாலும் அதன் பன்முகப் பரிமாணத்தை உற்று நோக்கிப் பல பொருண்மைகளை விளக்கலாம் என்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடாக அமைந்துள்ளது என்பதை இதனால் புரிந்து கொள்ள இயலும்.
நிறைவுரை
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகளால் சில ஆழமான உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முடியும். முன்னோர்கள் சொன்னதெல்லாம் பழைமை என்பதற்காகத் தள்ளிவிட வேண்டியதில்லை. குறிப்பிட்ட பொருண்மைக்குச் சொல்லப்பட்ட உவமமே மிகப் பொருத்தமானது என்று கருதினால் பின்வருவோர் அதனையே உவமமாகக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஒரு வழியாக நோக்கப்பட்ட அந்த உவமத்தைத் தம் நுழைபுலம் காரணமாகப் பன்முகமாக நோக்கிப் புதிய பொருண்மைகளை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘பரியது கூர்ங்கோட்டது’ என யானையைச் சிறப்பித்தாலும் புலிக்கு அஞ்சும் அதனை எதிர்மறையாகத் திருவள்ளுவர் நோக்கியிருப்பதும் பல இடங்களில் அதன் பெருமிதத்தைப் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருப்பதும் ஒரே உவமத்தின் பன்முகப் பரிமாணமும் உவமமாகலாம் என்பதைக் காட்டுகிறது. செய்யுளுக்குப் புறம்பாக நிற்கும் அணியிலக்கணத்தைச் செய்யுளுக்கு அகமாகவும் ஆக்க முடியும் என்பதற்குக் குமரகுருபரின் உவமங்கள் சான்றாகி நிற்கின்றன.
(தொடரும்…)
-

நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு நாள் – வானதி சீனிவாசன்
மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு. பெயர் சூட்டப்பட்ட நாளைக் கொண்டாடுவது பொருத்தமற்றது
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள், சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டன. “இந்நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாள்’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று கடந்த 2019 ஜூலை 20ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அன்றைய முதல்வர் திரு. கே.பழனிசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாளுக்குக் கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 1 தமிழ்நாடு நாளுக்குத் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ஆம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்” என்று கூறியுள்ளார்.
ஆனால், அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மாநிலம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 நவம்பர் 18ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
1956 நவம்பர் 1ஆம் தேதி, தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனைத் தலைவர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும்.
குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகள் வெளியிடும் சிலரின் வேண்டுகோளை ஏற்று, வரலாற்றை மாற்ற முயல வேண்டாம் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாள். தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.comஅகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 2
உவமம் செய்யுளணியாகக் கருதப்பட்டது தமிழக வரலாற்றில் வடமொழித் தாக்கம் மிகுந்திருந்த பிற்பட்ட காலத்தில் என்பது நினைவுகூரத்தக்கது. வேதனை என்னவென்றால் பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்க்கவிதை மரபறிந்த அறிஞர் பலரும்கூடச் சங்க இலக்கிய உவமப் பதிவுகளை ‘உவமையணி’ எனக் கருதி மயங்கியதும் வெளிப்படுத்தியதுமாகும். சொல்ல வந்த பொருளைப் புலப்படுத்துவதற்குக் கருவியாக இருந்தது உவமம். வெறும் அழகியலுக்காகப் பயன்படுவது உவமையணி. முன்னது பொருளோடு கலந்திருப்பது. பின்னது செய்யுளுக்குப் புறம்பாக நிற்பது. முன்னது உடம்பிற்குத் தோலாகி அரணாகும். பின்னது மேனிக்கு அணியாகி மினுக்கும். நுட்பமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மை இது. படைப்பாளனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்கள் பேசும் சொற்களுக்கும் பொருத்தம் இருத்தல் வேண்டும் என்பது படைப்புக் கொள்கை. திறனாய்வுக் கண்காணிப்பில் இது வெளிப்படும். சான்றாகக் கலாய் பூசுகிறவன் கலித்தொகையின் உள்ளுறை உவமம் பற்றிப் பேசினால் அது பொருந்தாமல் போய்விடும். தான் சென்று அறியாத இடத்துப் பொருளை ஒருத்தி உவமமாகச் சொன்னால் அதில் நம்பகத்தன்மையிருக்காது. இந்தக் கொள்கையைப் பரணர் கடைப்பிடிக்கிறார். அதுதான் அவரது தனிச்சிறப்பு. வரலாற்று நிகழ்வுகளாகிய புறத்திணைச் செய்திகளை அகத்திணை விளக்கங்களுக்கு அவர் பயன்படுத்துகிறபோது தோழி முதலிய அகத்திணை மாந்தர்களின் பொது அறிவைத் தனது கவனத்திற் கொள்கிறார். திணை, தலைவி, செவிலி என்னும் வட்டத்திற்குள் சுழலும் தோழி கண்காணாப் போர்க்களத்து ஆர்ப்பினை உவமம் சொல்கிறாள் என்றால் தோழியாகிய அப்பாத்திரத்தின் பொது அறிவைப் பரணர் வெளிப்படுத்திக் காட்டுகிறார் என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் சென்ற கட்டுரையை இந்தக் கட்டுரை வழிமொழிந்து தொடர்கிறது.
உவட்டாத உவமப் பந்தி
இரவுக்குறி காண, தான் வந்திருப்பதைத் தலைவியிடம் தெரிவிக்கும் ஊடகம் இன்றித் தவிக்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்வதாக அமைந்த பாட்டு, தன் வருகையை அறிந்தால் ‘இரும்பல் ஒலி கூந்தலையுடைய அவள் மகிழ்ச்சியடைவாள் என்பது’ மட்டுமே துறைவிளக்கம். இந்தத் துறைவிளக்கத்தை உவமப்பந்தியில் வைத்துப் பரிமாறுகிறார் பரணர். ‘கூந்தலையுடைய தலைவி’ எனச் சொன்ன பரணர் அந்தக் கூந்தலின் நறுமணத்திற்கு வல்வில் ஓரியின் கானகத்து மணத்தை ஒப்பிடுகிறார். ‘அத்தம்’ என்பது காட்டுவழி. “கல்லதர் அத்தம் கடக்க யாவதும்” என்பது சிலப்பதிகாரம். அந்தப் பகுதியில் விளைந்திருக்கும் குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய கனிகள் அவ்விடத்தே விளையாடும் மான்களுக்கு உணவாகி மணம் கமழும் காடு.
“அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலி வரும் கூந்தல்
பெரும்பே துறுவள் வந்தனம் எனவே” (நற். 6)ஆயிரம் காடுகளை அறிந்தவர் பரணர். இந்தப் பாட்டில் வல்வில் ஓரி என்னும் வள்ளலின் காட்டையே முன்னிறுத்துகிறார் என்பதுதான் உவமச்சிறப்பு. இனித், தலைவியின் ஒட்டுமொத்த நலனுக்கு ஓரியின் கானகத்தை உவமமாக்கிய பரணர்,
“நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார் உரித்தன்ன மதனில் மாமைக்
குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண்
திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநற் பெறினே
‘இவர் யார் என்குவள் அல்லள்! முனாஅது”என்னும் வரிகளில் அவள் மேனியில் படர்ந்திருக்கும் மாமை நிறத்திற்கு ஆம்பலின் உரித்த தண்டின் நிறத்தையும், அவளுடைய குளிர்ச்சியான கண்ணிற்குக் குவளை மலரையும் உவமித்துக் காட்டியிருப்பது மரபு பற்றியது என்க. மாமை, பசலை என்னும் தலைவி மேனியின் நிறவேறுபாடுகள் இரண்டாயினும் மாமை குறிஞ்சிக்குரியது. பசலை பாலைக்குரியது. இதன் நுண்ணியத்தைத்,
“திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி” (அகம். 135)என்னும் அகத்தானும்,
“இனி பசந்தன்று என் மாமைக் கவினே” (ஐங்.35)
என்னும் ஐங்குறுநூற்றானும்,
“பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே (குறுந். 27)என்னும் குறுந்தொகையானும் அறிந்து கொள்ளலாம். மாமை உடலுறுப்புக்களின் வண்ணம். பசலை தலைவனின் பிரிவாற்றாமையால் தலைவி உறும் நோய்!
தலைவன் அடைந்த தண்ணுமை அதிர்ச்சி
தலைவியை விட்டுப் புறத்தொழுக்கமாகிய பரத்தைமாட்டுச் சென்ற தலைவன், தலைவி பற்றிய எண்ணம் மீதூர மீண்டும் தலைவிபால் திரும்புகிறான். இந்நாள் வரை தன்னுடன் இருந்த தலைவனின் பிரிவைத் தாங்காத பரத்தை அவனுக்குப் பாங்காயினார் செவியில் விழுமாறு தன்னைச் சார்ந்த விறலியர்க்குக் கூறுதல்போல் தலைவனுடைய இயல்பைப் பழிக்கிறாள்.
“முனை ஊர்ப்
பல் ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை பேர் இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணின் அதிரும்” (நற். 100)தன்னுடைய ஐம்பாலாகிய கூந்தலினைப் பற்றித் தன்னுடைய வளையல்களைப் பற்றிய அவன் செயலைத் தலைவிபால் சொன்னால் அவன் அதிர்ச்சி அடைவான். அந்த அதிர்ச்சி எதனைப் போன்றிருந்தது என்பதற்குத்தான் மேலே உள்ள மலையமான் திருமுடிக்காரியின் முரசின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதை உவமமாக்குகிறார் பரணர். மன்னனிடம் பரிசுபெறும் நோக்கத்துடன் வரும் கூத்தர்கள் முழவினை முழங்குகிறபோது உண்டாகும் அதிர்ச்சி என்று உவமித்திருந்தாலும் பாட்டின் சிறப்பு குன்றப்போவதில்லை. ஆனால் பரணர் மலையமானின் வள்ளன்மையைப் பாராட்டும் புறத்திணை நிகழ்வை ஒரு நோக்கத்திற்காகவே உவமமாக்கியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.
அழகுக்கு ஆயிரம் உவமங்கள்
ஒரு பொருளை விளக்க ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைச் சொல்லுகிற நெறி சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிடுகிறது. அவ்வாறு அடுக்கிவரும் உவமங்கள் வெளிப்படுத்தப்படும் சூழல்கள் மிகவும் கவனத்திற்குரியது. தலைவியைச் சந்திக்க இயலாத ஆற்றாமை காரணமாகப் புலம்பும் தலைவன் தலைவியின் அழகைப் பல உவமங்களால் சித்திரிக்கிறான். இது இயல்பு. குழந்தையைக் ‘கண்ணே மணியே! முத்தே!’ என்பது போல.
“இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத் தன்ன”(இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)
இவற்றுள் முந்தைய இரண்டு வரிகளில் மிஞிலியின் குறிஞ்சியைப் பாடிய பரணர் அடுத்த மூன்று வரிகளில் அவனுடைய புறப்பொலிவை வண்ணனை செய்து அவன் நாட்டைத் தலைவியின் கூந்தல் பொலிவுக்கு உவமமாக்குகிறார். இனித் தொடர்ந்து,
“வார மார்பின்
சிறுகோல் சென்னி ஆரேற்று அன்ன”(இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)
எனச் சோழனை உவமப்பொருள் ஆக்குகின்றார். ‘ஆரேற்று’ என்பது தேரோட்டம் என்பது போன்றதொரு திருவிழா. சென்னியாகிய சோழன் தனக்கடங்கிய தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலைப் போற்றும் ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவின் பொலிவை உவமிக்கும் பரணர் தொடர்ந்து,
“மாரி வண்மகிழ் ஓலிகொல்லிக்
கலிமயிற் கலாவத்து அன்ன”(இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)
என நிமிர்ந்து நிற்கும் செருக்கினால் பொலிவு பெற்ற மயிலை உவமிக்கிறார் பரணர். இந்த மயில் ‘மாரி போல வரையாது வழங்கியதால் புகழ் பெற்ற ஓரி என்பானின் கொல்லிமலையில் வாழும் மயில்’ என்கிறார். ஒரு பொருளின் பொலிவுக்குத் தனித்தன்மையுடைய மூன்று பொருள்களை உவமமாகக் கொள்வது கவனிக்கத்தக்கது. நாடு, திருவிழா, மயில் என்னும் மூன்று பொருள்களும் தலைவியின் அழகுக்கு உவமமாக வந்துள்ளன என்பதை அறியலாம்.
நன்னன் கொடுமையினும் நின்னது பெரிதே!
பரத்தையர் மாட்டுச் சென்று மீண்ட தலைவன் வாயில் நேர்கிறான். தலைவி வாயில் மறுத்த நிலையில் இருவருக்கும் நட்பான தோழி, இணக்கமான சூழலை உருவாக்க எத்தனிக்கிறாள். தலைவன் மாட்டுத் தலைவிக்குள்ள இரக்கம் அவள் அறிந்ததாதலின் பெருந்தோள் செல்வமாகிய தலைவியை உயர்த்தியும் தலைவனின் பரத்தையர் பிரிவைக் கொடுமையாகச் சித்திரித்தும் வாயில் நேர்கிறாள். இந்தச்சூழலில் தலைவனின் செயல் கொடுமைக்கு நன்னன் என்பானின் கொடுமையை உவமமாக்குகிறார் பரணர்.
“……………………………………………..பொற்புடை
விரியுளை பொலிந்த பரியுடை நன்மான்
வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே!மறப்பல் மாதோ நின் விறல்தகை மையே!” (நற்.270)
பகையரசருடைய உரிமை மகளிரை அவர்தம் கூந்தல் பற்றி இழுத்து வருதல் அக்காலப் போரறங்களுள் ஒன்றாகாதாயினும் நன்னன் முதலியோர் அத்தகைய மறச்செயலைச் செய்திருப்பதை இதனால் அறியலாம். அதனால்தான் அந்தச் செயலை எதிர்மறையால் பரணர் பதிவு செய்திருக்கிறார். ‘கூந்தல் முரற்சியின்’ என்றவிடத்து முன்பு சொன்னது போல ‘இன்’ என்னும் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் வந்து, உவம உருபுக்கான பணியினைச் செய்தது என்பதாம்.
இருப்பை அன்ன தொல்கவின்
‘இருப்பை’ என்பது தற்காலத்துப் புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் இலுப்பூர் என்பது அறிஞர் கருத்து. அவ்வூர்ச் சிறப்பையும் அதனையாண்ட விரான் என்பானின் வள்ளன்மையும் கூறி அதனைத் தலைவியின் எழிலுக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர்.
“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
பழனப் பல்புள் இரீஇயக் கழனி
வாங்குசினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும்
தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என்தொல்கவின் தொலையினும் தொலைக!“ (நற். 350)
தொல்கவின் என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், ‘பழைய இயற்கை அழகு’ (1234 -1235) என உரை கண்டிருப்பதால் அவ்வுரை நயத்தைப் பரணர் பாட்டின் பொருளுக்கு ஏற்றி உவமத்தை நோக்கினால் தேர்வண் விராஅன் இருப்பையின் அழகு இயற்கை என்பது பெறப்படும்.
“தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
மலிபுனல் வாயல் இருப்பை அன்ன என்
ஓலியல் கூந்தல் நலம்” (260)என்னும் மற்றொரு பாட்டிலும் இருப்பையை உவமமாக்கிக் கூறுகிறார் பரணர். இந்தப் பாட்டில் தலைவியின் அழகு பெரிதும் பொலிவு பெறுவது கூந்தலால் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்த எண்ணிய பரணர், “இருப்பை அன்ன என் ஒலியல் கூந்தல் நலம்” என்றது காண்க. முன்னதில் தேர்வண் விராஅன் என்றவர் இப்பாட்டில் தெவ்வர் தேய்த்த செவ்வேல் வயவன் என்கிறார். தலைவியின் அழகுக்கு விராஅன் என்பானின் இயற்கை வளம் நிரம்பிய இருப்பை நகரத்தை உவமிப்பதில் அவருடைய உவமக் கோட்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. ‘விராஅன் மலை’ என்பது ‘விராலிமலை’ எனத் திரிதற்குக் காரணம் என்பதும் ஈண்டுச் சுட்டுதற்குரியது.
பிச்சையெடுக்கும் யானைபோல
களவு நீட்டித்த தலைவன் தனது பாங்காயினார் வழி, மேலும் நீட்டிக்க விழைய, அது கண்ட தோழி “அயலான் ஒருவனும் தலைவியை மணந்து கொள்ளும் விருப்பத்துடன் வந்து போனான்” என்று அச்சுறுத்துவதுபோல வரைவு கடாவுகிறாள். இந்தப் பாட்டில் மூன்று வகையான உவமங்களைப் பரணர் அடுக்கிக்காட்டுகிறார். இந்த அடுக்கினை முன்னிருந்து பின்னாகவும் ரசிக்கலாம். பின்னிருந்து முன்னாகவும் ரசிக்கலாம். இது அவரவர் சுவையுணர் திறத்தினைப் பொருத்தது. தலைவனுக்காக வந்தவன் நீட்டித்து நிற்கிறானாம். எது போல?
“நெய் வார்ந்தன்ன துய்யடங்கு நரம்பின்
இரும்பான ஒக்கல் தலைவன் பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சை சூழ் பெருங்களிறு போல எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே!” (நற். 300)வாயிலாக வந்த பாணனை நோக்கித் தோழி கூறும் பகுதி இது. “பெருந்தேரோடு வந்த அவனோடு நீயும் செல்லாமல் “போர்க்களத்திலே பெரும்புண்பட்டவனாகிய அழகினைக்கொண்ட தழும்பன என்பானின் ஊணூரிடத்தில் உள்ள பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல நிற்கிறாய்” என்று உடன் வந்த பாணனை ஏசுகிறாள் தோழி. போர்க்களத்துக் களிறு வேறு. பிச்சைக்கு வந்த பெருங்களிறு வேறு. யானை எங்கே நிற்கிறதாம்? அட்டில் சாலை ஓலைக்குடிசையின் விளிம்பினைத் தொட்டுக் கொண்டு நிற்கிறதாம்!, பாணனுக்கு உவமமாக வந்தது யானை என்பது சரி!. ஆனால் அந்த யானைக்கு வரலாறொன்று இருக்கிறது. தழும்பனின் அந்த வரலாற்றைப் பரணர் யானைக்கு அடையாக்குகிறார். இது முதல் நிலை. இனி இரண்டாவது நிலை. பாணன் யாருக்கு வாயிலாக வருகிறான் என்றால் மருத நிலத் தலைவனுக்குப் பாங்காக வருகிறான். பணிவோடு வருகிறான். அந்த மருத நிலம் எத்தகையது? இங்கே இன்னொரு உவமத்தை நேரடியாகச் சொல்லாமல் பரணர் உள்ளுறையாக அமைக்கிறார்.
“உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்!”என்று கூறுகிறார். மருத நிலத் தடாகத்தைத் தன் வண்ணனைக்கு உட்படுத்தும் பரணர் தாமரைக்கு இறைஞ்சும் ஆம்பலுக்குச்,
““சுடர்த்தொடி கோமகள் சினந்தென அதன் எதிர்
மடத்தகை ஆயம் கைதொழுது ஆங்கு” (நற். 006)கோமகளைத் தொழும் பணிமகள் ஆயத்தை உவமமாக்குகிறார். ஆம்பல் வணங்கும் தடாகத்துத் தாமரையை வணங்கும் ஆம்பல் கூட்டத்திற்குத் தேவியை வணங்கும் மகளிர் ஆயத்தை உவமமாக்கியது இயற்கைக்குச் செயற்கை உவமமாகியது என்க. இனிப் பெருங்களிறே பாங்கனுக்கு உவமமாக நிற்க, அந்தக் களிற்றைத் தழும்பன் ஊரோடு சார்த்திச் சொன்னது வரலாற்று உவமமாம்.
நிறைவுரை
பெண்ணின் பொலிவோ அவள் கூந்தலின் பொலிவோ நுண்பொருள். நகரம் பருப்பொருள். நகரத்திற்கும் நங்கையின் கோலத்திற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. ஆனால் பரணர் நங்கையின் பொலிவுக்கும் சிதைவுக்கும் நகரத்தை உவமமாக்குகிறார் என்றால் அவற்றில் உள்ள நுண்ணியத்தைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். நகரம் மாற்றாரின் படையெடுப்புக்கு முன் என்றும் மாற்றாரின் படையெடுப்புக்குப் பின் எனவும் இருவகைப்படும். பரணர் முன்னதைத் தலைவனோடு இருந்த நிலைக்கும் பின்னதைத் தலைவனைப் பிரிந்த நிலைக்கும் உவமிக்கிறார் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். ‘தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது” எனத் துள்ளிக் குதிக்கும் தலைவனின் பின்புலக் காட்சியைப் போலவும் “தேரேது? சிலையேது? திருநாள் ஏது?” என்று பாடும் ஒரு தலைவியின் பின்புலக் காட்சியைப் போலவுமே பரணரின் உவமச் சித்திரிப்பின் உள்நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டால் அவரின் உவமக் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானவையல்ல! புறத்திணை வரலாற்றுக் குறிப்புக்களை அகத்திணை இலக்கியத்தில் உவமமாகக் கையாளும் பரணரின் உவமக்கோட்டை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கையாலும் மதிப்பிடுதல் அரிது!
(தொடரும்…)
-

காந்திய மாமணி T D திருமலை நூற்றாண்டு நிறைவு நாள் – அக்டோபர் 26. 2021
சுபாஷிணி திருமலை (T.D.திருமலை அவர்களின் மகள்)
எழுத்தாளர், தலைவர், சிறுவாணி வாசகர் மையம்தடம் பதித்த தந்தை போற்றுதும்•••
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் எங்களது நண்பரும் ஓவியருமான பாலசுப்ரமணியன் என்னை எழுத்தாளர் பா ராகவன் அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். என் கைகளில் இருந்த சில புத்தகங்களை அவருக்கு அளித்தேன்.
அப்புத்தகங்களைக் கண்டு சந்தோஷிக்கும் போது , வாசிப்பைப் பரவலாக்கும் ஒரு இயக்கமாக “சிறுவாணி வாசக மையம்” என்ற அமைப்பைத் தலைமையேற்று நடத்துகிறார் என என்னை அறிமுகப்படுத்திவிட்டதோடு, மேலும் சிறப்பாக இவர் T.D. திருமலை என்னும் காந்தியவாதியின் மகள் சுபாஷிணி திருமலை என்றதும் “சட்” என்று இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.
நாங்களும் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டோம்.
” காந்தியைப் பிடிக்காதோ? தவறான அறிமுகமாகிவிட்டதோ” என பயந்து விட்டேன்.
“பாலுசார்! இதை முதலில் சொல்லக்கூடாதா!
நீங்கள் வந்தது எனக்கு கௌரவம் சந்தோஷம் எல்லாம். அமருங்கள் “என்று எங்களை அமர்த்தித் தானும் அமர்ந்தார்.
“நான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தி நகரில் தக்கர்பாபா வளாகத்தில் உள்ள ஒரு குடிலில் உங்கள் தந்தையைச் சந்தித்தேன். 3 மணிநேரம் பேசினோம் . கிளம்பும்போது “காந்தி மண்டபத்தில் உள்ள நூலகத்தில் காந்தி பற்றிய நூல்களைப் படித்துப்பார்” என்றார். அந்த சந்திப்பு, அந்த வார்த்தைகள் என் வாழ்வில் திருப்புமுனை. “
“தினந்தோறும் அங்கு போய் நூலகம் திறக்கும் முன்பே போய்விடுவேன். நூலகம் மூடும்போதுதான் நானும் வெளியில் வருவேன். இது நிகழாமல் இருந்திருந்தால் நான் வேறு மாதிரி உருவாகிஇருப்பேன்” என்றார்.
நாங்கள் இருவரும் வாயடைத்துப்போனோம்.ஆம். இன்று என்று இல்லை. என்றும் திருமலை மகள் என்பதுதான் என் முகவரி.
இதுதான் எனது 55 ஆவது வயதில் எனக்கு “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில்” பணிபுரிய வாய்ப்பு நல்கியது. அந்நிறுவனத்திறகு வரும் பேராசிரியர்கள், ஆளுமைகள் அனைவரும் என்னைத் திருமலை மகளா என மகிழ்ந்து என் தந்தை பற்றி சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வர். அவருக்குள்ள இலக்கியத்தின் பால் உள்ள ஈடுபாடுதான் இதற்கு காரணம்.
ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களின் நட்பால் ரசிகமணி டி கே சி அறிமுகமானார். அவருடைய ரசனையின் பால் கொண்ட மகிழ்வால் “உலக இதய ஒலி” என்ற காலாண்டு இதழை நடத்தினார். அவரது ஆசிரியர் அ சீனிவாசராகவன் அவர்கள் ஆவார். அப்போதைய இலக்கிய ஆளுமைகள் தெ பொ மீ அவர்களிலிருந்து அனைவருடனும் நட்பு கொண்டு இலக்கியத்தின் மூலம் காந்தியம் வளர்த்தார்.
சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் இலக்கியத்தால் அன்பால் அனைவரிடமும் நட்பாக இருந்தார். அது தான்… அப்பா T.D.திருமலை.
ஶ்ரீ வில்லிபுத்தூரில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் தங்கள் செல்வத்தை நாட்டுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கும், ஏழைஎளியோர்க்கும் அளித்து விட்டு ஏழ்மையை உவந்தே ஏற்றுக்கொண்டவர்கள். அப்பா அன்றையத் தேவையான வெள்ளையனே வெளியேறு , போராட்டத்தில் தொடங்கி பூதான இயக்கத்தில் கலந்து கொண்டவர். அவ்வூர் முனிசிபல் சேர்மனாக பதவி ஏற்று தண்ணீர் வசதி செய்தல் போன்ற நற்பணிகள் செய்தவர்.
பின் மதுரையில் காந்தி மியூசியத்திலுள்ள காந்தி நினைவுநிதியில் தத்துவப் பிரசாரகராக பணியில் சேர்ந்து, தன் இறுதிநாள்வரை காந்தியை இளையதலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் செலவிட்டார்.
எங்களது இந்த உறவின் உன்னதம் பல நற்பணிகள் செய்வதற்கு ஆதரவாக இருக்கிறது. நான் கோவை நண்பர்களோடு இணைந்து நடத்தும் சிறுவாணி வாசகர் மையத்திற்காக பல இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் எளிதில் அணுக முடிகிறது. ஆகச்சிறந்த ஓவியர்கள் என் நண்பர்கள். அனைத்தும் என் தந்தைவழி கிட்டியதுதான்.
என்தாய்க்கு என தந்தை பற்றிப் புகார் இல்லை. மாறாக பெருமிதம் இருந்தது. தந்தையை எதிர்பார்க்காது தன் உழைப்பால் எங்களை வளர்த்தார். இது எங்களுக்கு இருவர்பாலும் மதிப்பும் மரியாதையையும் உணரவைத்தது…
உறவுகளை நட்பைப் பேணிகாக்க சொல்லிக்கொடுத்தது.எங்கள் அம்மாவின் அறிவுரைப்படி எங்கள் கல்வி, உழைப்பு, அதனுடன் பணிவு போன்றவை எங்கள் வாழ்வின் ஆதாரமானது. அம்மாவின் நிர்வாகம் மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
அப்பா இல்லாவிட்டாலும் (அப்பா மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார்) அவரது வாழ்வியல் எங்களுக்குப் பாடமாக அமைந்தது. மனம் , உணர்வுகள் மயங்கும் போது அறிவு மேலோங்கி நிலையை நேர்செய்யும்.
அறிவு தடுமாறும்போது உணர்வு உண்மையை உணர்த்தி நிலைநிறுத்தும்.
கல்லூரிப் படிப்புக் காலம் வரை மதுரை காந்தி மியூஸித்தில்தான் பெரும்பகுதி இருப்போம். முன்னாள்பிரதமர் நேரு, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர். உசேன், காமராஜர் பக்தவத்சலம் போன்ற தலைவரகள் ஆகியோர்கள் அங்கு வரும்போது நாங்களும் அவர்களுடன் இருப்போம். நல்ல கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் போன்ற இலக்கிய கூட்டங்கள் நடக்கும். ஞாயிறு தோறும் நல்ல படங்கள் காட்டுவார்கள். இப்படி நல்ல விஷயங்களோடு வளர்ந்தோம். அப்பாவுடன் சென்னை வந்தபோது சென்னையில் அப்பா நடத்தும் காந்தியக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், போன்றவற்றில் கலந்து கொள்வோம். இதெல்லாம் நாங்களாகத்தான் வருவோம் . என்றைக்கும் எங்களிடம் அப்பா எவற்றையும் திணித்ததில்லை.
மேலும் எங்களுக்கு தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் டிசம்பர் மாதங்களில் அவரது இடமான வசந்தவிஹாரில் கூட்டம் நடக்கும். அப்பா போகும்போது நாங்கள் உடன் போவோம். புரியறமாதிரி இருக்கும் . ஆனால் கூட்டம் முடிந்து அப்பா மற்றும் அவர் நண்பர்களுடன் திரும்பிவரும்போது அன்றைய பேச்சைப் பற்றிய விவாதம் பிரமாதமாக அமையும். அப்போது எங்களுக்குத் தெளிவாகி விடும்.
என் தந்தையோ அவரது தந்தையோ பணத்தை விட்டு சென்று இருந்தால் பணக்காரர்களாக இருந்து இருப்போம். இந்த விழுமியங்களும் பெருமிதமும் எங்களுக்குக் கிடைத்திருக்காது.
என் தந்தை எங்களைக் கவனிக்காது சமூகத்தைக் கவனித்ததால் நாங்கள் எதையும் இழக்கவில்லை. மாறாக. பல உறவுகளையும் உன்னதங்களையும் பண்பாட்டையும் பணிவுடன் மேன்மையையும் பெற்றோம். அவரது நற்பணிகளால் அவரது ஆசீர்வாதத்தால் நாங்கள், எங்கள் குடும்பம், நல்ல மருமகன்களையும் நல்ல மருமகள்களையும் சிறந்த பேரன் பெயர்த்திகளையும் பெற்றிருக்கிறோம் என்னும் பகிர்தலையன்றி பிறிதில்லை.
அன்பின் விரிவாக்கம்தான் எங்கள் குடும்பம். திருமலை குடும்பம் என்பது காந்தி குடும்பம் ஆகியது. காந்தி கல்வி நிலையத்தில் உள்ளவர்கள் இணைந்து விரிவாக்கினோம். தென்காசியிலிருந்து டி .கே. சி குடும்பத்தார் கி .ரா.வின் குடும்பமும் இணைந்தது. பின் கோவை சிறுவாணி வாசகர் மையம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் குடும்பம், எழுத்தாளர்நாஞ்சில் நாடன் , ஆலோசகர் சொல்வனம் வ ஶ்ரீநிவாசன் , ராக் அமைப்பாளர் ரவீந்திரன் குடும்பம் , ஆடிட்டர் கிருஷ்ணகுமார் என பல்கிப்பெருகி மிகப்பெரிய குடும்பம் ஆகிவிட்டோம்.
என் தந்தை வாழந்த வாழ்க்கை எங்களுக்கு சாத்தியமாக்கிக்கொடுத்துள்ளது.
வண்ணதாசன், வண்ணநிலவன், சந்தியா நடராஜன் ஆகியோர் தாண்டி ரவி சுப்ரமணியன், சண்முகம் சுப்ரமணியம் என்று தொடங்கி இளைய தலைமுறைகள் வரை ஒரு நட்பு கிடைத்திருக்கிறதே!
வரும் அக்டோபர் 26 அன்று தந்தையின் 100 வது பிறந்தநாள் பூர்த்தியாகிறது். அவரது திருநட்சத்திரம் மகம் 31 ஆம் தேதி வருவதாலும் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் அன்று விமரிசையாக அவர் பணிபுரிந்த காந்தி மியூஸியத்தில் நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவை ஆறு காந்தியநிறுவனங்கள்- புது தில்லி நேஷனல் அருங்காட்சியகம், சென்னை காந்தி கல்வி நிலையம், மதுரை தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை தமிழ்நாடு சர்வோதய மண்டல், மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை காந்திய இலக்கிய சங்கம் ஆகியவை விழா எடுத்து சிறப்பிக்கப் போகின்றன.
இது எங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் பெருமையும் சந்தோஷமும் ஆகும் .
அப்பா T.D. திருமலை எழுதிய “வினோபா” வாழ்க்கை வரலாற்று நூலும், அம்மா சீதா திருமலை இந்தியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய “தியாக உள்ளம்” என்னும் நூலும் மீள்பதிப்பபாக விழாவில் வெளியிடுகிறோம்.
மேலும் அப்பாவின் வாழ்க்கை வரலாறை “மனதில் நிறைந்த மாமனிதர்” என்னும் நூலாக எங்களது சகோதரர் தி.விப்ரநாராயணன் எழுதியதும், அப்பாவைக் கதாநாயகனாக வைத்து “வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று நண்பர் திரு கம்யூட் ராஜ் எழுதிய நாவலையும் முதற்பதிப்பாக விழாவில் வெளியிடுகிறோம். தவிர அப்பா 20 வருடங்கள் நடத்திய இலக்கிய இதழான “உலக இதய ஒலி”யின் முதல் இதழை அனைவருக்கும் அளிக்கிறோம்.
முனைப்பாகப் பல தேசியத்தலைவர்கள்இருப்பினும் என் தந்தை T D திருமலை அவர்களுக்குத்தான் ஒரு நிறுவனம் அமைந்து இன்னமும் சிறப்பாக சென்னையில் காந்தி கல்வி நிலையமாகச் செயல்பட்டு, முனைவர் பிரேமா அண்ணாமலையால் சிறப்பாக இயங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.
அனைவரும் விழாவிற்கு வந்திருந்து ஆசீர்வதிக்குமாறு எங்கள் அனைவரின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.!








