தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமத் திருவாசகம் – 2

முன்னுரை

காதல் பேசும் அகத்திணை இலக்கியங்கள், அதுவல்லாத புறத்திணை இலக்கியங்கள் ஆக இவற்றில் எல்லாம் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இயல்பாகவே வேற்றுமை நிலவுவதை அறிய முடியும்.  ‘மாறிபுக்கு இதயம் எய்தும் காதல் வெளிப்பாட்டுக்கும்’, ‘பகை முடித்து நகை முழக்கும்’ புறவெளிப்பாட்டுக்குமான உவமங்கள் பெரும்பாலும் அழகியல் நோக்குடையவை. எடுத்துக்காட்டாக இராமன் கான் செல்கிறபோது இருந்த அவனுடைய முகத்தினைக் கம்பர் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையோடு’ ஒப்பிடுகிறார். இறைவனை வழிபடுகிற காலத்துப் புற உறுப்புக்களின் நிலையைக் கூறும் மணிவாசகப் பெருமான் ‘கரமலர் மொட்டித்து இருதயம் மலர’ என நிரல்படுத்துகிறார். முரண்படுத்துவார். இரண்டிடத்திலும் உவமமாக வந்தது மலரேயெனினும் இரண்டின் தாக்கமும் வெவ்வேறாக இருப்பதைக் கற்பார் உணரலாம்.

உவமங்களோடு உறவாடும் உள்ளம்

முன்னுரையில் பக்தியுணர்வுக்கான வெளிப்பாட்டில் அமையும் உவமப்பாங்கு அகப்புறப்பொருள்களை விளக்கும் உவமங்களின் வேறாகி நிற்கும் எனச் சொன்னோம். அதனை உறுதி செய்வதுபோல மணிவாசகப் பெருமான் பாடுகிறார்.

“தழலது கண்ட மெழுகதுபோலத் (1)
தொழுது உளமுருகி அழுது உடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்
படியே (2) ஆகி நல் இடையறா அன்பிற்
பசுமரத்தாணி அறைந்தாற் போலக் (3)
கசிவது பெருகிக் கடலென (4) மறுகி”

எழுவரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நான்கு உவமங்களும் தொழுதும் உள்ளம் உருகியும் அழுதும் நடுங்கியும் ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் என்னும் மெய்ப்பாடுகளுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும்.

“சிறுமையென்று இகழாது திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழலது போல (1)
முன்பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள (2)
நன்புலன் ஒற்றி நாத என்று அரற்றி
உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் (3) மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுன் துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர்
தாயே யாகி (4) வளர்த்தனை போற்றி”

என்னும் வரிகளிலும் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஏற்ப உவமங்கள் அமைந்துள்ள பாங்கினை அறியலாம். முகத்தை ‘மலர்’ என்பதற்கும் கரத்தை ‘மலர்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது மலர்ச்சியைக் குறித்தது. பின்னது மென்மையைக் குறித்தது. இது சாயா அன்பின் விளைந்த பக்தியாதலின் நிகழாத ஒன்றினை உவமமாக்குகிறார் மணிவாசகப் பெருமான். அதாவது மொட்டு மலருமேயன்றி மலர் மொட்டாகாது, மலர் மொட்டாகி என்பதனால் மெய்வணக்கமும் மொட்டாகிய இதயம் மலர்வதால் உள்நெகிழ்ச்சியும் பெறப்பட்டன. ‘அகம் நக’ என்னும் வள்ளுவத்திற்கு மணிவாசகர் எழுதிய விரிவுரையாகவும் இதனைக் கருத முடியும். ஒன்று மலர வேண்டும். மற்றொன்று குவிதல் வேண்டும். இரண்டும் இணையானது அன்று. ஆனாலும் இதய மலர்ச்சியின் குறியீடாகக் கரமலர் குவிவதைக் கொள்ளலாம்.

புளியம் பழமான மணிவாசகப் பெருமான்

சொற்களுக்கான நேரடிப்பொருள் வேறு. இலக்கிய நயம் பக்தியுணர்வு தோன்றுமாறு உள்ளீடாக நிலவும் பொருள் வேறு. நெருஞ்சிச் செடியில் பழமும் இருக்கும் முள்ளும் இருக்கும். தலைவியின் பாதத்தின் மென்மையைக் கூறவரும் தலைவன் அனிச்சப்பூவும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் என்கிறான். இங்கே நெருஞ்சிப் பழம் என்றது பழத்தைக் குறிக்காது முள்ளைக் குறித்தது காண்க. இந்த நுட்பத்தை மணிவாசகப் பெருமான் கையாள்கிறார்.

“அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.”

என்று ஒரு பாட்டு ‘ஆசைப்பத்து’ என்னும் பகுதியில் வருகிறது. “ஆன்மாவும் உடம்பும் வேறு வேறு என்று எண்ணாது இரண்டும் ஒன்றுதான் என்று எண்ணியிருந்தவன் நான். அத்தகைய அறியாமையில் நான் உழன்ற நேரத்திலும் எளிவந்து என்னை ஆண்ட பிரான் நீ! அவ்வருமை கூறி உன்னையழைக்க நான் விரும்பினேன்’ என்கிறார் மணிவாசகர்.  புண்ணிறைந்த உடம்பின் இழிவை முதலடியில் பேசி, இழிவான உடம்பினிடத்துப் பற்றுக் கொண்டு இருந்ததாகக் கூறுகிறார். அந்தப் பற்றுக்கூட, ஆன்மா என்றும் உடம்பு என்றும் தனித்தனியே பிரித்துக்காண முடியாதபடி ஒன்றியிருந்து விட்டது. அதனையே ‘புளியம்பழம் ஒத்திருந்தேன்’ என்கிறார். ஆனால் உண்மையில் அவர் கூறவந்தது புளியங்காய் ஒத்திருந்தேன் என்பதுதான். பழம் என்ற சொல் இங்குக் காய் என்ற பொருளில் அமைந்துள்ளது. ‘பழம்’ என்ற சொல்லையே வைத்துக்கொண்டு பொருள் செய்தால், இந்த உடம்போடு எவ்விதத் தொடர்பும் பற்றுமில்லாமல், ஓட்டில் ஒட்டாத புளியம்பழத்தைப் போல் இருந்தேன் என்று அழகாக பொருள் கூறலாம். ஆனால், இவ்வாறு பொருள் கூற முடியாமல் தடுப்பது அடுத்துவரும் இருந்தும் என்ற சொல்லாகும். புளியம் காயைப்போல, உடம்பு, ஆன்மா என்ற வேறுபாடின்றி நான் ஒட்டிக்கொண்டிருந்தும்கூட அதுபற்றிக் கவலைப்படாமல் எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்ஆர் அமுதே’ என்கிறார். ‘நீ ஆட்கொண்ட பின்பும், இந்த உடம்பை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கின்ற நான், பெரிதும் இரக்கத்திற் குரியவன் என்று நீ சொல்ல வேண்டும். அச்சொல்லை நான் கேட்க ஆசைப்பட்டேன்’ என்கிறார்.

அழல்சேர் மெழுகு

அன்பு உள்ளத்தின் இயல்பு. அறிவு மூளையின் தேடல். முன்னது உருக்கத்திற்கு உரியது. பின்னது சிந்தனைக்கு உரியது. மானுடம் உள்ளத்தின் வழி இயங்குவது. பாசம், துடிப்பு, ஆதங்கம், அன்பு, அருள், நேயம் என்பனவெல்லாம் அறிவு சார்ந்தன அல்ல. அவை மனம் சார்ந்தவை. ஆதலின் மணிவாசகர் உள்ளிட்ட அருளாளர்கள் பாடும் பாடல்களில் இத்தகைய உணர்வுகளை ஒப்பிட்டும் உறழ்ந்தும் நோக்கக் கூடிய உவமங்களே பெரும்பாலும் காணப்படுகின்றன.

“அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார்”

“அழல்சேர் மெழுகொப்ப ஐயா வென்றன் வாயாலரற்றி”

“அன்பா மனமா யழல்சேர்ந்த மெழுகே யன்னார்” 92

அழல் கண்டு உருகும் மெழுகாய் ஆண்டவனை எண்ணி உருகும் அடியார்கள் என்பதாம்.  இத்தகைய உருக்கத்திற்கு வெப்பத்திற்கு உருகும் பாறை வெண்ணெய் பொருந்தாமல் போய்விடும். மெழுகின் உருக்கம் நெருப்போடு கலந்துவிடும். செருக்கழிந்த உருக்கத்தின் அத்வைத நிலை இது. அவன் அன்பை வேண்டி நிற்பார் அடையும் நிலையும் இதுவே.

திருவாசகத்தில் கடல்

‘நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்று’ எனக் காதலின் ஆழத்திற்குக் கடலைச் சொன்னவர் உண்டு. திருவள்ளுவர் ‘அடங்கியான் தோற்றத்தினை மலைக்கும், பயன்தூக்காது உதவி  செய்தவரை கடலுக்கும் காலத்தினால் உதவியவருக்கு நிலத்தையும்’ ஒப்பிடுகிறார். இவைகளெல்லாம் அறிவுசார்ந்த அளவைகள் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவற்றுள் கடலை அளப்பரிய உருவகமாகக் கொள்கிறார் மணிவாசகர்.

“கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விட லரியேன்”

“கடலின் திரையது போல்வரு கலக்கம்”

“கடலே யனைய ஆனந்தம்”
இங்கே சுட்டப்பட்ட உவமங்களுள் ‘கடலை நாய் நக்க முயன்றதுபோல’ என்பது மரபு சார்ந்த உவமம். கம்பன் சொன்ன அது அவையடக்கத்திற்குச் சொல்லப்பட்டது. இங்கே பெருமானின் அருளை முழுமையாக ஏற்க இயலாமைக்குச் சொல்லப்பட்டது. இனித், துன்பத்திற்கும் இன்பத்திற்கும் கடலையே உருவகப்படுத்துவது தமிழ்க்கவிதைக் கொள்கை.  ‘துன்பக்கடல்’ என்பதும் ‘இன்பக்கடல்’ என்பதும் இலக்கிய வழக்கு. ‘பிறவிப் பெருங்கடல்’ என்பது  திருவள்ளுவர் செய்த உருவகம்.

திருவாசகத்தில் தாயும் பசுவும்

இறைவன் தாயும் ஆனவனாக இருப்பதாலே அடியார் அனைவர்தம் பாட்டிலும் தாய் மகவு என்னும் உறவை முன்னிலைப்படுத்தி அதற்கு இணையாகத் தாய்ப்பசுவையும் கன்றினையும் உவமவாக்கம் செய்வது பெருவழக்கு. ‘கற்றா’ என்னும் சொல் ‘கன்றையுடைய ஆ’ என்றே பொருள்படும். ஏனைய விலங்குகளை இவ்வாறு அதன் கன்றோடு சேர்த்து வழங்குவது உண்டா என்பது சிந்திக்கத்தக்கது.

“ஆவாகி ஆவினில் ஐந்துமாகி
அறிவாகிஅழலாகி அவியுமாகி
நாவாகி நாவுக்கோர் உரையுமாகி
நாதனாய்வேதத்தினுள்ளோனாகி
பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப்
புக்குளால்வாசமாய் நின்றானாகித்
தேவாதி தேவர் முதலுமாகிச்
செழுஞ்சுடராய் சென்றடிகள் நின்றவாறே”

பசுவும், பசுவினிடத்தில் தோன்றும் ஐந்து பொருட்களாகவும் (பால், தயிர், நெய், கோசலம், கோமியம்), வேள்வித் தீயாகவும், வேள்விகளைச் செய்வதற்குரிய அறிவாகவும், அந்த வேள்வியினில் இடப்படும் பொருட்களாகவும், வேள்விக்கான மந்திரங்களைச் சொல்லும் நாவாகவும், சொல்லப்படும் மந்திரங்களாகவும், மந்திரங்களின் பொருளாகவும், பயன்படுத்தப்படும் பூக்களாகவும், பூக்களின் மணமாகவும் மணமாக மலர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையாகவும், வேள்விகளால் தொழப்படும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் செழுஞ்சுடராய் எம்பெருமான் எங்கும் பரவி நிற்கிறார் என்ற பொருளமைந்த இந்தப் பாட்டில் தலைமையாகப் பாடப்பட்டிருக்கும் பொருள் பசு என்பதைக் காணலாம். அடியவர்களின் உள்ளம் இறையருள் வேண்டும் ஏக்கம் நிறைந்தது. உயிர்கள் பரபிரம்மம் ஆதலின் அவனிடமிருந்து பிரிந்து வந்த இவை மீண்டும் அவனிடமே சேர்வதற்கான முயற்சியே மானுட வாழ்வு. கன்றின் பிரிவு எல்லாத் தாய்மையையும் கலங்கிக் கதறச் செய்யும்  எனினும் பசு பெரிதும் கலங்கி நிற்கும்.

“கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
கன்றை நினைந்தெழு தாயென வந்தகணக்கது வாகாதே”

“கற்றா மனம் போல் கதறியும் பதறியும்”

பதி, பசு, பாசம் என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படை. பசுவாகிய உயிர், தன்னை மூடியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மாசு நீங்கிப் பதியாகிய பரம்பொருளை அடைவதே மானுடப் படைப்பின் நோக்கம் என்பதைச் சுருங்க உரைக்கும் சிவஞான போதம் அது. பாசத்தின் நீங்குவதற்கும் இறைவன் அருள் தேவைப்படுமாதலின் அதனை வேண்டுவதும் வேண்டிப் பெறுவதுமே பன்னிரு திருமுறைகளின் உள்ளடக்கம். வேண்டுவதைக் கொடுப்பவர்களில் தாயே முன்னிற்பாள் என்பது உலகியலாதலின் மணிவாசகப்பெருமான் தமது திருவாசகத்தில்,

“நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!”

என்று இறைவனைத் தாயாக்கிப் பாடுகிறார். ‘பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ என்று பிறிதொரு இடத்திலும் கூறுவார். தாயின் சிந்தை செயல் அனைத்தும் தன் குழந்தையைப் பற்றியே இருத்தலின், அக்குழந்தைக்குப் பால் ஊட்டும் காலமும் அவள் கருத்திலிருக்க, அக்காலமறிந்து ஊட்டுவாள் என்பதனால் ‘பால் நினைந்தூட்டும்’ என்றார். ஈண்டு இறைவனை அத்தாயினும் என உறழ்ந்து கூறுவதால் இறைவனின் மேன்மை புலப்படும். ‘வேண்டத்தக்கது அறிவோய’’ என இறைவனைப் பரவியதும்  அவன் தாயினும் மேம்பட்டுத் திகழ்வது நோக்கியே!. இவ்வாறு இறைவனைத் தாயாகவும் தன்னைக் குழந்தையாகவும் உவமித்துப் பாடும் இடங்கள் திருவாசகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.

“உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”

என்னும் பாடலில் கற்றாவை உவமமாக்கியிருக்கிறார் மணிவாசகர். ஆவிற்கு மனம் உண்டு என்பதும் அதுவும் கசிந்து உருகும் இயல்பினை உடையது என்பதும் மணிவாசகர் கண்ட நுண்ணியம். மூளையை வளர்க்கும் வெறுங்கல்வியைவிட மூலத்தை உணரும் அனுபவக் கல்வியையே மணிவாசகர் முன்னெடுக்கிறார். கற்றாரை யான் வேண்டேன் என்பதன் பொருள் அதுதான். அனுபவக்கல்வி கிட்டிவிடுமாயின் கற்பன தானே  அமையும் என்பதாம். அந்த அனுபவம் அறிவினால் வராது. அழுதால் வரும். ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்பதும் அது.

“கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம்
காணக் காட்டும்
என்றுடைய நாயகனே! எல்லாம் செய்வல்லவனே!
இலங்கும் சோதி
மன்றுடைய மணவாளா!மன்னவனே! என்னிருகண்
மணியே! நின்னை
அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணை உன் மேல் ஆணை உன்மேல்
ஆணை ஐயா!

என்று அருட்பிரகாச வள்ளலாரும் பசுவை  உவமித்திருப்பது காண்க.

மணிவாசகர் கண்ட மாற்றுத் திறனாளி

நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை -விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.

ஒரு பசு மந்தை மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றது. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறதாம்.

மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போலத், தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.

“ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
உன் தாளிணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.”

பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தன் அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இலக்கியங்களுள் பக்தி இலக்கியத்தைப் பற்றிய மதிப்பீடு எவ்வாறிருப்பினும் இந்த உவமத்திற்கு எந்த இலக்கிய உவமமும் ஈடாகுமா என்பதைக் கற்பார் சிந்திக்க வேண்டும்.

“சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட
ஊரேறாய் இங்கு உழல்வேனோ?”

என்று பின்னும் கூறுவார் மணிவாசகர்.

ஆள்வார் இலா மாடும் நுந்து மாடும்

திருவாசகம் முழுவதும் ஊடுருவி நிற்பது பக்தியுணர்ச்சி ஒன்றே. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான தன்னையாண்டுகொண்ட கருணைத் திறத்தினை வியந்து, அச்சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே  திருவாசகமாகப் பரிணமித்தது. நெகிழ்ச்சியும் பாசமும் துடிப்பும் கண்ணீரும் ஆகிய அகப்புற மெய்ப்பாடுகளுக்கேற்பவே உவமங்களும் அமைந்திருக்கின்றன.

நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவார். இத்தகைய கன்றுக்கு ‘நுந்து கன்று’ என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

“நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

மாடு சில நேர்வுகளில் தன் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ‘ஆள்வாரிலி மாடு’ என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.

“……………………….ஆள்வார் இலி மாடாவேனோ?
நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு
மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே”

மாடுகளில் மாற்றுத் திறனாளிகளைப் பாடியவர் மாணிக்கவாசகர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தாலும் சமுதாயத்தின் எல்லா நிலைகளையும் அவர் ஊடுருவி நோக்கியிருக்கிறார் என்பது மாடுகளின் வகைப்பாட்டை அவர் உவமமாக்கிய திறத்தால் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

திருவாசகத்தில் தொடர்ந்து மேயும் எறும்பு

சென்ற கிழமை கட்டுரையில் ‘இருதலைக் கொள்ளி உள்ளெறும்பை’ உவமமாகச் சொன்ன சதுரப்பாட்டைக் கண்டோம். இந்தக் கட்டுரையில் நெய்க்குடத்து எறும்பை உவமமாக்கும் திறனைக் காணலாம். ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களை’ உடையார், நெய்சேர்த்து வைக்கும் குடங்கள் இல்லம் நிறைந்து காணப்படும். நெய்வாசம் கண்ட எறும்புகள் அக்குடங்களின் உள்ளே இறங்கி உறைந்துபோன நெய்யின் பரப்பில் கால்கள் சிக்கிக் கொள்ள மீளத் தெரியாமல் மாளும்.

“உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா
மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே”

என்று பாடிய வாதவூரார் தொடர்ந்து செய்யும் விண்ணப்பம் அந்தாதியாதலின் எறும்பிலேயே  தொடங்கிப் பாடுகிறார். எறும்பு என்ற சொல் தொடக்கமாக இருந்தாலும் இது நெய்க்குடத்து எறும்பன்று. புழுவரிக்கும் எறும்பு.

“எறும்பிடை நாங்கூழ் வெனப்புல னால்அரிப் புண்டு அலந்த
வெறுந்தமியேனை விடுதி கண்டாய்!”

என்று பாடுகிறார். முந்தைய பாட்டில் நெய்க்குடத்து எறும்புகள் ஐம்புலன்களும் உயிரைச் சூழ்வதற்கு உவமம் இந்தப் பாட்டில் உயிர் புலன்களால் அரிக்கப்படுவதற்கு அதாவது ஈர்த்து அலைக்கழிக்கப்படுவதற்கு உவமம்.

நிறைவுரை

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அதன் பெருமை. பாடுபொருளாகிய பக்தியுணர்வுக்கும் அதனை வெளிப்படுத்திய பாங்கிற்கும் உத்திகளுக்கும் உரியதே. ஆனால் அதில் காணப்படும் உவமங்களுக்கும் அந்தப் பெருமையில் செம்பாதி பங்குண்டு என்பது இவ்விரண்டு கட்டுரைகளால் ஓரளவு புலப்படலாம். பன்னூறு பாடல்களில் காணப்படும் உவமங்களைத் தொகுத்து ஆராய்ந்தால் மணிவாசகரின் உவமங்களே பக்தியுணர்ச்சி என்னும் பொருண்மை கற்பார் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்துக் கண்ணீர் வரவழைக்கின்றன என்பதை அறிந்து கொள்ள இயலும். உருக்கம் உள்ளடக்கத்தில் மட்டுமன்று. உவமங்களிலும் உண்டு.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *