தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 38

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  [email protected]

அகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 2

உவமம் செய்யுளணியாகக் கருதப்பட்டது தமிழக வரலாற்றில்  வடமொழித் தாக்கம் மிகுந்திருந்த பிற்பட்ட காலத்தில் என்பது நினைவுகூரத்தக்கது. வேதனை என்னவென்றால் பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்க்கவிதை மரபறிந்த அறிஞர் பலரும்கூடச் சங்க இலக்கிய உவமப் பதிவுகளை ‘உவமையணி’ எனக் கருதி மயங்கியதும் வெளிப்படுத்தியதுமாகும். சொல்ல வந்த பொருளைப் புலப்படுத்துவதற்குக் கருவியாக இருந்தது உவமம். வெறும் அழகியலுக்காகப் பயன்படுவது உவமையணி. முன்னது பொருளோடு கலந்திருப்பது. பின்னது செய்யுளுக்குப் புறம்பாக நிற்பது. முன்னது உடம்பிற்குத் தோலாகி அரணாகும். பின்னது மேனிக்கு அணியாகி மினுக்கும். நுட்பமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மை இது. படைப்பாளனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்கள் பேசும் சொற்களுக்கும் பொருத்தம் இருத்தல் வேண்டும் என்பது படைப்புக் கொள்கை. திறனாய்வுக் கண்காணிப்பில் இது வெளிப்படும். சான்றாகக் கலாய் பூசுகிறவன் கலித்தொகையின் உள்ளுறை உவமம் பற்றிப் பேசினால் அது பொருந்தாமல் போய்விடும். தான் சென்று அறியாத இடத்துப் பொருளை ஒருத்தி உவமமாகச் சொன்னால் அதில் நம்பகத்தன்மையிருக்காது. இந்தக் கொள்கையைப் பரணர் கடைப்பிடிக்கிறார். அதுதான் அவரது தனிச்சிறப்பு. வரலாற்று நிகழ்வுகளாகிய புறத்திணைச் செய்திகளை அகத்திணை விளக்கங்களுக்கு அவர் பயன்படுத்துகிறபோது தோழி முதலிய அகத்திணை மாந்தர்களின் பொது அறிவைத் தனது கவனத்திற் கொள்கிறார். திணை, தலைவி, செவிலி என்னும் வட்டத்திற்குள் சுழலும் தோழி கண்காணாப் போர்க்களத்து ஆர்ப்பினை உவமம் சொல்கிறாள் என்றால் தோழியாகிய அப்பாத்திரத்தின் பொது அறிவைப் பரணர் வெளிப்படுத்திக் காட்டுகிறார் என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் சென்ற கட்டுரையை இந்தக் கட்டுரை வழிமொழிந்து தொடர்கிறது.

உவட்டாத உவமப் பந்தி

இரவுக்குறி காண, தான் வந்திருப்பதைத் தலைவியிடம் தெரிவிக்கும் ஊடகம் இன்றித் தவிக்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்வதாக அமைந்த பாட்டு, தன் வருகையை அறிந்தால் ‘இரும்பல் ஒலி கூந்தலையுடைய அவள் மகிழ்ச்சியடைவாள் என்பது’ மட்டுமே துறைவிளக்கம். இந்தத் துறைவிளக்கத்தை உவமப்பந்தியில் வைத்துப் பரிமாறுகிறார் பரணர். ‘கூந்தலையுடைய தலைவி’ எனச் சொன்ன பரணர் அந்தக் கூந்தலின் நறுமணத்திற்கு வல்வில் ஓரியின் கானகத்து மணத்தை ஒப்பிடுகிறார். ‘அத்தம்’ என்பது காட்டுவழி. “கல்லதர் அத்தம் கடக்க யாவதும்” என்பது சிலப்பதிகாரம். அந்தப் பகுதியில் விளைந்திருக்கும் குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய கனிகள் அவ்விடத்தே விளையாடும் மான்களுக்கு உணவாகி  மணம் கமழும் காடு.

“அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலி வரும் கூந்தல்
பெரும்பே துறுவள் வந்தனம் எனவே”  (நற். 6)

ஆயிரம் காடுகளை அறிந்தவர் பரணர். இந்தப் பாட்டில் வல்வில் ஓரி என்னும் வள்ளலின் காட்டையே முன்னிறுத்துகிறார் என்பதுதான் உவமச்சிறப்பு. இனித், தலைவியின் ஒட்டுமொத்த நலனுக்கு ஓரியின் கானகத்தை உவமமாக்கிய பரணர்,

“நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார் உரித்தன்ன மதனில் மாமைக்
குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண்
திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநற் பெறினே
‘இவர் யார்  என்குவள் அல்லள்! முனாஅது”

என்னும் வரிகளில் அவள் மேனியில் படர்ந்திருக்கும் மாமை நிறத்திற்கு ஆம்பலின் உரித்த தண்டின் நிறத்தையும், அவளுடைய குளிர்ச்சியான கண்ணிற்குக் குவளை மலரையும் உவமித்துக் காட்டியிருப்பது மரபு பற்றியது என்க. மாமை, பசலை என்னும் தலைவி மேனியின் நிறவேறுபாடுகள் இரண்டாயினும் மாமை குறிஞ்சிக்குரியது. பசலை பாலைக்குரியது. இதன் நுண்ணியத்தைத்,

“திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி” (அகம். 135)

என்னும் அகத்தானும்,

“இனி பசந்தன்று என் மாமைக் கவினே”  (ஐங்.35)

என்னும் ஐங்குறுநூற்றானும்,

“பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே (குறுந். 27)

என்னும் குறுந்தொகையானும் அறிந்து கொள்ளலாம். மாமை உடலுறுப்புக்களின் வண்ணம். பசலை தலைவனின் பிரிவாற்றாமையால் தலைவி உறும் நோய்!

தலைவன் அடைந்த தண்ணுமை அதிர்ச்சி

தலைவியை விட்டுப் புறத்தொழுக்கமாகிய பரத்தைமாட்டுச் சென்ற தலைவன், தலைவி பற்றிய எண்ணம் மீதூர மீண்டும் தலைவிபால் திரும்புகிறான். இந்நாள் வரை தன்னுடன் இருந்த தலைவனின் பிரிவைத் தாங்காத பரத்தை அவனுக்குப் பாங்காயினார் செவியில் விழுமாறு தன்னைச் சார்ந்த விறலியர்க்குக் கூறுதல்போல் தலைவனுடைய இயல்பைப் பழிக்கிறாள்.

“முனை ஊர்ப்
பல் ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை பேர் இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணின் அதிரும்” (நற். 100)

தன்னுடைய ஐம்பாலாகிய கூந்தலினைப் பற்றித் தன்னுடைய வளையல்களைப் பற்றிய அவன் செயலைத் தலைவிபால் சொன்னால் அவன் அதிர்ச்சி அடைவான். அந்த அதிர்ச்சி எதனைப் போன்றிருந்தது என்பதற்குத்தான் மேலே உள்ள மலையமான் திருமுடிக்காரியின் முரசின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதை உவமமாக்குகிறார் பரணர். மன்னனிடம் பரிசுபெறும் நோக்கத்துடன் வரும் கூத்தர்கள் முழவினை முழங்குகிறபோது உண்டாகும் அதிர்ச்சி என்று உவமித்திருந்தாலும் பாட்டின் சிறப்பு குன்றப்போவதில்லை. ஆனால் பரணர் மலையமானின் வள்ளன்மையைப் பாராட்டும் புறத்திணை நிகழ்வை ஒரு நோக்கத்திற்காகவே உவமமாக்கியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

அழகுக்கு ஆயிரம் உவமங்கள்

ஒரு பொருளை விளக்க ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைச் சொல்லுகிற நெறி சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிடுகிறது. அவ்வாறு அடுக்கிவரும் உவமங்கள் வெளிப்படுத்தப்படும் சூழல்கள் மிகவும் கவனத்திற்குரியது. தலைவியைச் சந்திக்க இயலாத ஆற்றாமை காரணமாகப் புலம்பும் தலைவன் தலைவியின் அழகைப் பல உவமங்களால் சித்திரிக்கிறான். இது இயல்பு. குழந்தையைக் ‘கண்ணே மணியே! முத்தே!’ என்பது போல.

“இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத் தன்ன”

(இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

இவற்றுள் முந்தைய இரண்டு வரிகளில் மிஞிலியின் குறிஞ்சியைப் பாடிய பரணர் அடுத்த மூன்று வரிகளில் அவனுடைய புறப்பொலிவை வண்ணனை செய்து அவன் நாட்டைத் தலைவியின் கூந்தல் பொலிவுக்கு உவமமாக்குகிறார். இனித் தொடர்ந்து,

“வார மார்பின்
சிறுகோல் சென்னி ஆரேற்று அன்ன”

(இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

எனச் சோழனை உவமப்பொருள் ஆக்குகின்றார். ‘ஆரேற்று’ என்பது தேரோட்டம் என்பது போன்றதொரு திருவிழா. சென்னியாகிய சோழன் தனக்கடங்கிய தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலைப் போற்றும் ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவின் பொலிவை உவமிக்கும் பரணர் தொடர்ந்து,

“மாரி வண்மகிழ் ஓலிகொல்லிக்
கலிமயிற் கலாவத்து அன்ன”

(இவள் ஒலிமென் கூந்தல்) (நற். 265)

என நிமிர்ந்து நிற்கும் செருக்கினால் பொலிவு பெற்ற மயிலை உவமிக்கிறார் பரணர். இந்த மயில் ‘மாரி போல வரையாது வழங்கியதால் புகழ் பெற்ற ஓரி என்பானின் கொல்லிமலையில் வாழும் மயில்’ என்கிறார். ஒரு பொருளின் பொலிவுக்குத் தனித்தன்மையுடைய மூன்று பொருள்களை உவமமாகக் கொள்வது கவனிக்கத்தக்கது.  நாடு, திருவிழா, மயில் என்னும் மூன்று பொருள்களும் தலைவியின் அழகுக்கு உவமமாக வந்துள்ளன என்பதை அறியலாம்.

நன்னன் கொடுமையினும் நின்னது பெரிதே!

பரத்தையர் மாட்டுச் சென்று மீண்ட தலைவன் வாயில் நேர்கிறான். தலைவி வாயில் மறுத்த நிலையில் இருவருக்கும் நட்பான தோழி, இணக்கமான சூழலை உருவாக்க எத்தனிக்கிறாள். தலைவன் மாட்டுத் தலைவிக்குள்ள இரக்கம் அவள் அறிந்ததாதலின் பெருந்தோள் செல்வமாகிய தலைவியை உயர்த்தியும் தலைவனின் பரத்தையர் பிரிவைக் கொடுமையாகச் சித்திரித்தும் வாயில் நேர்கிறாள். இந்தச்சூழலில் தலைவனின் செயல் கொடுமைக்கு நன்னன் என்பானின் கொடுமையை உவமமாக்குகிறார் பரணர்.

“……………………………………………..பொற்புடை
விரியுளை பொலிந்த பரியுடை நன்மான்
வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே!

மறப்பல் மாதோ நின் விறல்தகை மையே!” (நற்.270)

பகையரசருடைய உரிமை மகளிரை அவர்தம் கூந்தல் பற்றி இழுத்து வருதல் அக்காலப் போரறங்களுள் ஒன்றாகாதாயினும் நன்னன் முதலியோர் அத்தகைய மறச்செயலைச் செய்திருப்பதை இதனால் அறியலாம். அதனால்தான் அந்தச் செயலை எதிர்மறையால் பரணர் பதிவு செய்திருக்கிறார். ‘கூந்தல் முரற்சியின்’ என்றவிடத்து முன்பு சொன்னது போல ‘இன்’ என்னும் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளில் வந்து, உவம உருபுக்கான பணியினைச் செய்தது என்பதாம்.

இருப்பை அன்ன தொல்கவின்

‘இருப்பை’ என்பது தற்காலத்துப் புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் இலுப்பூர் என்பது அறிஞர் கருத்து. அவ்வூர்ச் சிறப்பையும் அதனையாண்ட விரான் என்பானின் வள்ளன்மையும் கூறி அதனைத் தலைவியின் எழிலுக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர்.

“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
பழனப் பல்புள் இரீஇயக் கழனி
வாங்குசினை மருதத்துத் தூங்குதுணர் உதிரும்
தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என்

தொல்கவின் தொலையினும் தொலைக!“ (நற். 350)

தொல்கவின் என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், ‘பழைய இயற்கை அழகு’ (1234 -1235) என உரை கண்டிருப்பதால் அவ்வுரை நயத்தைப் பரணர் பாட்டின் பொருளுக்கு ஏற்றி உவமத்தை நோக்கினால் தேர்வண் விராஅன் இருப்பையின் அழகு இயற்கை என்பது பெறப்படும்.

“தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
மலிபுனல் வாயல் இருப்பை அன்ன என்
ஓலியல் கூந்தல் நலம்” (260)

என்னும் மற்றொரு பாட்டிலும் இருப்பையை உவமமாக்கிக் கூறுகிறார் பரணர். இந்தப் பாட்டில் தலைவியின் அழகு பெரிதும் பொலிவு பெறுவது  கூந்தலால் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்த எண்ணிய பரணர், “இருப்பை அன்ன என் ஒலியல் கூந்தல் நலம்” என்றது காண்க.  முன்னதில் தேர்வண் விராஅன் என்றவர் இப்பாட்டில் தெவ்வர் தேய்த்த செவ்வேல் வயவன் என்கிறார். தலைவியின் அழகுக்கு விராஅன் என்பானின் இயற்கை வளம் நிரம்பிய இருப்பை நகரத்தை உவமிப்பதில் அவருடைய உவமக் கோட்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது. ‘விராஅன் மலை’ என்பது ‘விராலிமலை’ எனத் திரிதற்குக் காரணம் என்பதும்  ஈண்டுச் சுட்டுதற்குரியது.

பிச்சையெடுக்கும் யானைபோல

களவு நீட்டித்த தலைவன் தனது பாங்காயினார் வழி, மேலும் நீட்டிக்க விழைய, அது கண்ட தோழி “அயலான் ஒருவனும் தலைவியை மணந்து கொள்ளும் விருப்பத்துடன் வந்து போனான்” என்று அச்சுறுத்துவதுபோல வரைவு கடாவுகிறாள். இந்தப் பாட்டில் மூன்று வகையான உவமங்களைப் பரணர் அடுக்கிக்காட்டுகிறார். இந்த அடுக்கினை முன்னிருந்து பின்னாகவும் ரசிக்கலாம். பின்னிருந்து முன்னாகவும் ரசிக்கலாம். இது அவரவர் சுவையுணர் திறத்தினைப் பொருத்தது. தலைவனுக்காக வந்தவன் நீட்டித்து நிற்கிறானாம். எது போல?

“நெய் வார்ந்தன்ன துய்யடங்கு நரம்பின்
இரும்பான ஒக்கல் தலைவன் பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சை சூழ் பெருங்களிறு போல எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே!” (நற். 300)

வாயிலாக வந்த பாணனை நோக்கித் தோழி கூறும் பகுதி இது. “பெருந்தேரோடு வந்த அவனோடு நீயும் செல்லாமல் “போர்க்களத்திலே பெரும்புண்பட்டவனாகிய அழகினைக்கொண்ட தழும்பன என்பானின் ஊணூரிடத்தில் உள்ள பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல நிற்கிறாய்” என்று உடன் வந்த பாணனை ஏசுகிறாள் தோழி. போர்க்களத்துக் களிறு வேறு. பிச்சைக்கு வந்த பெருங்களிறு வேறு.  யானை எங்கே நிற்கிறதாம்? அட்டில் சாலை ஓலைக்குடிசையின் விளிம்பினைத் தொட்டுக் கொண்டு நிற்கிறதாம்!, பாணனுக்கு உவமமாக வந்தது யானை என்பது சரி!. ஆனால் அந்த யானைக்கு வரலாறொன்று இருக்கிறது. தழும்பனின் அந்த வரலாற்றைப் பரணர் யானைக்கு அடையாக்குகிறார். இது முதல் நிலை. இனி இரண்டாவது நிலை. பாணன் யாருக்கு வாயிலாக வருகிறான் என்றால் மருத நிலத் தலைவனுக்குப் பாங்காக வருகிறான். பணிவோடு வருகிறான். அந்த மருத நிலம் எத்தகையது? இங்கே இன்னொரு உவமத்தை நேரடியாகச் சொல்லாமல் பரணர் உள்ளுறையாக அமைக்கிறார்.

“உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்!”

என்று கூறுகிறார். மருத நிலத் தடாகத்தைத் தன் வண்ணனைக்கு உட்படுத்தும் பரணர் தாமரைக்கு இறைஞ்சும் ஆம்பலுக்குச்,

““சுடர்த்தொடி கோமகள் சினந்தென அதன் எதிர்
மடத்தகை ஆயம் கைதொழுது ஆங்கு” (நற். 006)

கோமகளைத் தொழும் பணிமகள் ஆயத்தை உவமமாக்குகிறார். ஆம்பல் வணங்கும் தடாகத்துத் தாமரையை வணங்கும் ஆம்பல் கூட்டத்திற்குத் தேவியை வணங்கும் மகளிர் ஆயத்தை உவமமாக்கியது இயற்கைக்குச் செயற்கை உவமமாகியது என்க. இனிப் பெருங்களிறே பாங்கனுக்கு உவமமாக நிற்க, அந்தக் களிற்றைத் தழும்பன் ஊரோடு சார்த்திச் சொன்னது வரலாற்று உவமமாம்.

நிறைவுரை

பெண்ணின் பொலிவோ அவள் கூந்தலின் பொலிவோ நுண்பொருள். நகரம் பருப்பொருள். நகரத்திற்கும் நங்கையின் கோலத்திற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை. ஆனால் பரணர் நங்கையின் பொலிவுக்கும் சிதைவுக்கும் நகரத்தை உவமமாக்குகிறார் என்றால் அவற்றில் உள்ள நுண்ணியத்தைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். நகரம் மாற்றாரின் படையெடுப்புக்கு முன் என்றும் மாற்றாரின் படையெடுப்புக்குப் பின் எனவும் இருவகைப்படும். பரணர் முன்னதைத் தலைவனோடு இருந்த நிலைக்கும் பின்னதைத் தலைவனைப் பிரிந்த நிலைக்கும் உவமிக்கிறார் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். ‘தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது” எனத் துள்ளிக் குதிக்கும் தலைவனின் பின்புலக் காட்சியைப் போலவும் “தேரேது? சிலையேது? திருநாள் ஏது?” என்று பாடும் ஒரு தலைவியின் பின்புலக் காட்சியைப் போலவுமே பரணரின் உவமச் சித்திரிப்பின் உள்நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டால் அவரின் உவமக் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானவையல்ல! புறத்திணை வரலாற்றுக் குறிப்புக்களை அகத்திணை இலக்கியத்தில் உவமமாகக் கையாளும் பரணரின் உவமக்கோட்டை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கையாலும் மதிப்பிடுதல் அரிது!

(தொடரும்…)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க