நிர்மலா ராகவன்

என்ன இடர் வரினும்

சில தாவரங்கள் வெப்பமாக இருந்தாலும், மழை அடித்துக்கொட்டினாலும் பிழைத்துக்கொள்ளும். வேறு சில வெயிலில் வாடி, பெருமழையில் அழுகிப் போய்விடும்.

மனிதர்களும் அப்படித்தான். பலர் சிறிதளவு துன்பத்தைக்கூட தாங்கமுடியாது ஒடுங்கிவிடுவார்கள். புதிதாக ஒரு வழியைத் தேடும் உற்சாகத்தை இழந்துவிடுவதுதான் காரணம்.

ஒரு சிலர் எவ்வளவுதான் இடர்கள் வந்தாலும், அவற்றைச் `சவால்’ என ஏற்று, `இந்த நிலையும் ஒருநாள் மாறும்!’ என்ற நம்பிக்கையுடன் நடப்பார்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான். (பலர் புகழ ஏதாவது செய்வதுதான் வெற்றி என்பதல்ல).

வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற அண்மைக்காலத் தடையுத்தரவில், பலரும் தம் வேலையை இழந்தனர். கடைகளை மூடவேண்டிய நிலைமை பல வியாபாரிகளுக்கு.

விமானப்பயணம் கூடாது என்ற நிலையில், விமானப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு வருமானம் இல்லாதுபோயிற்று.

ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி இல்லாததால், கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை இன்னும் சிலருக்கு.

இவர்கள் அனைவரும், `அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!’ என்று நம்பிக்கை இழந்தால் என்ன ஆகும்?

நிலைமை மாறும் என்று பொறுமையைக் கடைப்பிடிக்கமுடியுமா?

என்ன கஷ்டம் வந்தாலும், சாப்பாடு மட்டும் எல்லாருக்கும் அவசியமான தேவை என்று, உணவுப்பொருட்களைத் தயார் செய்கிறார்கள் பலர். அவற்றை வீடுகளுக்குக் கொண்டுசெல்லும் பணி சிலருக்கு. ஆண்களோ, பெண்களோ, இவர்களில் எவரும் அந்தஸ்து பார்ப்பதில்லை.

ஒருவர் ஆயிரம் மரவள்ளிக்கிழங்கு செடிகளை நட்டு, கிழங்கை வறுவலாக விற்று, ஒரே நாளில் பல ஆயிரம் ரிங்கிட் சம்பாதிப்பதாகச் செய்தி வந்தது.

இருபத்தி இரண்டு வயதான சீன இளைஞன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே பெற்றோருடைய சிறு கடையில் உதவி செய்திருக்கிறான். படிப்பு முடிந்ததும், தன் அறிவைக்கொண்டு, கணினிவழி வியாபாரத்தைப் பெருக்கியிருக்கிறான். `இதற்கு கல்லூரிப் படிப்பும், அதற்கான செலவும் வீண்!’ என்று பலர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒரே தொழிலில் நிலைத்திருந்து கஷ்டப்படுவதைவிட, அதை விட்டுவிட்டு, புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவது அச்சத்தை விளைவித்தாலும், அதுதான் புத்திசாலித்தனம்.

அவ்வாறு செய்தால், `முன்பே செய்திருக்கவேண்டும்!’ என்ற வருத்தம் காலங்கடந்து உண்டாகாது. கிடைப்பது தோல்வியாக இருந்தாலும், செய்யாது போய்விட்டோமே என்ற வருத்தமாவது எழாதிருக்கும்.

கதை

நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, விமானத்தில் கோலாலம்பூர் திரும்பிக்கொண்டிருந்தேன்.

விமானம் தரையிறங்கும்போது, ஒரு பக்கத்திலிருந்து பல குரல்களில், மகிழ்ச்சி கலந்த சிரிப்பு உரக்கக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நாலரை மணிநேரப் பயணமாக இருந்தாலும், வழியில் சாப்பிட எதுவும் வாங்காது, அங்கு உட்கார்ந்திருந்தார்கள் பல நேபாளிகள்.

முதன்முறையாக வெளிநாடு வந்திருக்கும் தொழிலாளிகள் என்று புரிந்தது.

வெளிநாட்டுக்கு வேலை நிமித்தம் போகிறவர்கள் பலவிதத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை, குறுகிய இடத்தில் நிறைய பேருடன் படுக்கை, உற்றவர்களைவிட்டுப் பிரிந்திருத்தல், மாறுபட்ட கலாசாரத்தால் ஏற்படும் குழப்பங்கள் – இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று நினைத்தும் பாராது, வளமான எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ந்திருந்தார்கள்.

எதிர்ப்படும் சங்கடங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு, வேலையைப் பொறுப்பாகச் செய்பவர்கள் முதலாளிகளின் ஆதரவைப் பெற்று, உயர வழியுண்டு.

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஒரு தையல்காரர் தான் எதிர்பார்த்தபடி வாழ்க்கை எளிதாக இல்லை என்றோ, அல்லது மதுபானங்கள் எளிதாக, எங்கும் கிடைப்பதைக் கண்டோ, அப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரது உத்தியோகம் நிலைக்கவில்லை.

அவர் செய்த தவறு: ஆரம்பித்த காரியத்தை (புதிய நாட்டில் கிடைத்த வேலையை) சரியாக முடிக்காது, அதில் முழுக்கவனமும் செலுத்தாது, முதலாளி பலமுறை கண்டித்தபோதும் விழித்துக்கொள்ளாமல் இருந்தது.

புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமானால், பழைய பழக்கங்களை, தொடர்புகளை, விட்டுவிடத் தயாராக இருக்கவேண்டும்.

கதை

இன்பக் கனவுகளுடன் மலேசியா வந்தடைந்த அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவருக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை, கேட்டால் அடி, உதை. சாப்பாட்டுக்கே வழியில்லாது போனபோதும், அவருக்கு எங்கு போய், என்ன செய்வதென்று புரியவில்லை. கடப்பிதழோ, முதலாளி கைவசம்.

அவரைப் பற்றிய செய்தி தினசரியில் முதல்நாள் வெளியாகியது. பஞ்சத்தில் அடிபட்டவர்போல் காணப்பட்டார். மறுநாள், அவருடைய மரணச்செய்தி!

இம்மாதிரியான, கொடுமைக்கார, முதலாளிகள் தண்டிக்கப்பட்டாலும், பிழைப்பை நம்பி வந்த உயிர் போனது போனதுதான்.

பலர் எப்படியோ தப்பித்துவிடலாம். இருப்பினும், `நான் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன், தெரியுமா?” என்று கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதால் பயனில்லை. அவற்றை மாற்றவா முடியும்!

`நான் இத்தனைத் துன்பங்களை கடந்துவந்திருக்கிறேனா!’ என்ற வியப்புடன், பல வருடங்களுக்குப்பின், பேரக்குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதைகளாக வேண்டுமானால் அவை அமையும்!

வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்ற நிலையில், `வேறு என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக்கொண்டே இருப்பவருக்கு உற்சாகம் குன்றுவதே கிடையாது.

`எல்லாம் நன்மைக்கே!’ என்று எப்போதும் சொல்லிவந்த ஒருவனுக்கு விபத்தினால் ஒரு கால் முடமாகிவிட்டது.

`இதில் என்ன நன்மை?’ என்று சிலர் கேலி செய்ய, `ஒரு செருப்பு வாங்கினால் போதுமே,’ என்றானாம்!

எந்த நிலையிலும் அவன் தன் உற்சாகத்தை இழக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியது.

கதை

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நியு யூ (NIU YU) என்ற பெண் தனது பதினோராவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் ஆவலில் இருந்தாள்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அன்று நடந்த பூகம்பத்தில் 70,000 பேர் உயிரிழந்தனர். அச்சிறுமியின் பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழ, மூன்று தினங்கள் அதனடியில் மாட்டிக்கொண்டாள். உயிர் பிழைத்தாள். ஆனால், வலது காலை எடுக்கும்படி ஆயிற்று.

இப்போது, முழங்காலுக்குமேல் செயற்கைக்கால் வெளியே தெரிய நடக்கும் அப்பெண் ஒரு மாடல்!

“என்னைப்போன்றவர்கள் முழுமை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நாங்களும் அழகானவர்கள்தாம்!” என்னும் அவளது தன்னம்பிக்கை பலருக்கும் தைரியம் அளித்துவருகிறது.

கசப்பான நிகழ்வுகள் முடியும்போது, புதிய திருப்பங்கள் ஏற்பட வழியுண்டு.

அதற்காக, துன்பம் எதிர்ப்படும்போதுதான் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதல்ல.

முடிவில் ஆரம்பம்

நான் பள்ளியில் படித்தபோது, அநேகமாக எல்லா ஆசிரியைகளும் கணவனை இழந்தவர்கள், அல்லது முதிர்கன்னிகள். பதின்ம வயதில், அவர்களுடைய நிலை புரியவில்லை.

கதை

இளம்வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள் அவள்.

துக்கத்தைவிட, `இனி யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்!’ என்ற மலைப்புதான் பெரிதாக எழுந்தது.

அவளுடைய தந்தை அவளுடன் வந்து தங்கி, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடரச் செய்தார்.

புதிய இடத்தில், புதிய மனிதர்களுடன் எப்படித்தான் காலம் கழிக்கப்போகிறோமோ!’ என்று முதலில் பயம் ஏற்பட்டது. `வேறு வழியில்லை!’ என்ற நிலையில், படிப்பைத் தொடர்ந்தாள்.

பிறகு, ஆசிரியப்பணியில் அமர்ந்தபோது, வாழ்க்கை அவ்வளவு பயங்கரமானதாகத் தோன்றவில்லை. `பிறர் கையை எதிர்பார்த்து, காலத்தைக் கழிக்கத் தேவையில்லை!’ என்று புரிய, தன்னம்பிக்கை வளர்ந்தது.

பாதுகாப்பான நிலையைப் பெரிதாகக் கருதி, அளவுக்கு மீறிய பொறுமையுடன் இருந்தால், வளர்ச்சி ஏது!

இளமையும் ஆரோக்கியமும் இருக்கும்போதே சிலர் ஒன்றன்பின் ஒன்றாக, பல பொழுதுபோக்குகளில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கற்பது தம் திறமைக்கே சவால் விட்டுக்கொள்ள எண்ணித்தான்.

அவ்வாறு கற்பது எதுவும் வீண்போவதில்லை. வேறு எங்காவது உபயோகப்படும்.

சில சமயம், நாம் விரும்பினாலும், எதிர்பார்க்காவிட்டாலும், மாற்றங்கள் நம்மைத் தேடி வரும். புதிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைத்தால், அங்கு புதிய மொழி ஒன்றைக் கற்கவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாதது.

`புதியதாக எதிலாவது இறங்குவதா!’ என்ற அச்சம் அப்போது தடுக்கக்கூடும்.

அடுத்தடுத்த நாட்கள் ஒரே சீராக இருந்தால், சலிப்பு ஏற்படுமே! வாழ்வில் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இருக்குமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *