தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 39
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
பேசாத வாய் பேசிய உவமங்கள்!
முன்னுரை
பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் உவமம் பற்றிய ஆய்வு உவம இயல், அகத்திணை இயல், பொருளியல் முதலியவற்றில் நிகழ்ந்திருப்பதால் உவமம் பொருட்பகுதியாகவே கருதப்படும் என்பது அறிஞர் கருத்து. அகத்திணைக் கூறுகளான உள்ளுறை, இறைச்சி ஆகியன உவமத்தின் நுண்ணியச் செறிவுகள் ஆதலின் உவமம் பெரும்பாலும் அகத்திணைப் பாடல்களிலேயே பயன்பட்டு வந்திருக்கக்கூடும் என்பது ஒரு வலுவான அனுமானம். தொடர்ந்து உவமங்கள் புறச்செய்திகளைக் கூறவும் பயன்படத் தொடங்கின என்பது இலக்கிய வரலாறு காட்டும் உண்மை. இதனையும் தொடர்ந்து பக்தியுணர்ச்சியை வெளிப்படுத்தவும் அது பயன்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நீதிநெறிகளை விளக்கவும் பயன்பட்டு வந்திருக்கிறது என்பது திருக்குறள் தொடங்கிய நீதி நூல்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும். அந்த வகையில் சைவப்பெருந்தகை குமரகுருபரர் அவர்கள் பாடிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் பயின்றுள்ள சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.
விறகுக்கும் ஆகாத நெடுமரம்
ஒரு நூலை மங்கலத்தில் தொடங்கி மங்கலத்தில் நிறைவு செய்வது என்பது தமிழிலக்கிய நெடிய மரபின் ஒரு பகுதி. ‘உலகம்’ என்ற சொல் எந்தெந்த இலக்கியங்களில் தொடக்கமாக அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் அறிஞர்கள ஆய்ந்திருக்கிறார்கள். அதுபோலவே உவமத்திலேயே தொடங்கிய இலக்கியங்களையும் அடையாளம் காணமுடியும். ‘அகர முதல’ என உவமத்திலேயே இறைவனுக்கு உண்மை கூறினார் திருவள்ளுவர். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு” என்பது திருமுருகாற்றுப்படையின் தொடக்கம். இன்னும் பல., உரைப்பின் பெருகும். இந்த மரபைக் குமரகுருபரரும் இறைவணக்கத்திலேயே பின்பற்றுகிறார்.
“நீரில் குமிழி இளமை., நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரை – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள்! என்னே
வழுத்தாத எம்பிரான் மன்று? “ (நீ.நெ.வி.4)
நில்லாத இளமை நீர்க்குமிழிக்கு ஒப்பாகும். முக்காலத்தும் நிறைந்தாலும் செல்வம் காற்றால் மொத்துப்பட்டலையும் அலைகளுக்கு ஒப்பாகும். ஒப்பனையால் பொலிவு பெறும் உடம்பு நீர் மேல் எழுதப்படும் எழுத்துக்கு ஒப்பாகும். இவ்வளவு உண்மைகளை அறிந்திருந்தும் நிலையான இறைவனை அவன் நிற்கும் திருக்கோயில் சென்று வணங்காதது ஏன்? என்பதுதான் குமரகுருபரரின் வினா. இளமைக்கு நீர்க்குமிழியையும் செல்வத்திற்குத் திரைகளையும் அழியும் உடம்பிற்கு நீர் மேல் எழுத்தையும் கடவுள் வாழ்த்திலேயே கூறும் குமரகுருபரர், நூல் தொடக்கத்தில் உவமப் பயன்பாட்டிலும் உவமங்களிலும் மரபினையே பின்பற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.
மலர் பொன்னானால் மணம் என்னாகும்?
சில நூல்களில் பயின்றுள்ள சொற்களும் தொடர்களும் உவமங்களும் உத்திகளும் நம்மையுமறியாமல் நம் ஆழ் மனத்துள் சென்று தங்கிவிடும். அவ்வாறு தங்கிவிடுவதுதான் அதன் சாயல், பின்னாலே வரும் படைப்புக்களில் வெளிப்படுத்தித் தலைக்காட்டுவதற்குக் காரணமாகும். இது நகலெடுப்பதன்று. தாயின் சாயல் பிள்ளைக்கு வருவது போன்றது. திருவள்ளுவர் சொல்லாற்றலைப் பற்றிச் சுருக்கமாகத் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்.
“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார்” (கு.எண்.650)
இந்தக் குறள் சொல்வன்மையின் சிறப்பினை எதிர்மறையால் கூறுகிறது. ‘பூங்கொத்தின் பயன் அதன் மணம்’ என வரையறுக்கிறது. மணம் இல்லாவிடின் பூங்கொத்துக்களினால் பயனில்லை என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. இந்தச் சிந்தனையின் நீட்சியாக நீதிநெறி விளக்கத்தில் பின்வரும் பாடல் அமைந்திருப்பதாகக் கருதலாம்.
“எத்தணைய ஆயினும் கல்வி இடனறிந்து
உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துண்ர்ந்தும்
சொல்வன்மை இன்றெனின் என்னாம்? அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றமுடைத்து” (நீ.நெ.வி. 5)
திருவள்ளுவர் உவமத்தை எதிர்மறையாகக் கூறிப் பொருட்சிறப்பையும் அவ்வாறே பெறவைத்தார். குமரகுருபரர் பொருட்சிறப்பை எதிர்மறையாகக் கூறி உவமத்தின் சிறப்பை உடன்பாட்டில் பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ‘மணக்காத பூவால் பயனில்லை’ என்பது வள்ளுவர் விளக்கம். உயர்த்துணர்வதும் உய்த்துணர வைப்பதும் இல்லாயின் கல்வியினால் பெருமையில்லை என்பது நீதிநெறி விளக்கம். ஆயினும் திருவள்ளுவர் உணர வைப்பதையே பொருளாகக் கொள்ள, குமரகுருபரர் உணர்வதையும் உணர வைப்பதையும் பொருளாகக் கொள்கிறார். கொண்டு உணரும் திறனை அதாவது ‘எண்பொருளவாகப்’ பிறர் சொல்லும் நுண்ணியங்களை உணரும் கற்றவனைப் பொன்மலரோடு ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு திருக்குறளில் இல்லை. நாறா மலரைத்தான் திருக்குறள் காட்டுகிறது. பொன்மலரை நீதிநெறி விளக்கம் காட்டுகிறது. பூ மணம் பூமணமாகவே இருக்கும். ஆனால் பூ பொன்னாலானால் மணம் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர முடியாது. காரணம் உவமம் இல்பொருள். இவ்வாறு இல்பொருளைக் குமரகுருபரர் உவமமாகக் சொன்னதற்குக் காரணம் அரியது நோக்கி. அதாவது உணர்வதும் அவ்வாறு உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்துவதும் அரிய செயல். எனவே அத்தகையோர் அரியர். எனவே இல்பொருள் உவமமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறள் ஒரு பொருள் பற்றி ஆராய, நீதிநெறி விளக்கம் இருபொருள் பற்றி ஆராய்வது சிந்திக்கத்தக்கது.
பிணம் விட்ட பெருமூச்சு!
பிணம் பெருமூச்சு விடுமா? விடாது. கருத்து என்னவென்றால் பெருமூச்சு விடுவதனாலேயே அது உயிர்பெற்ற மனிதனாகிவிட முடியாது என்பதுதான். பெருமூச்சுவிடுவது அதன் இருப்புக்கு அடையாளம். அவ்வளவுதான். ஆற்றல் மிகு உரையாசிரியர் பரிமேலழகர் ஒரு சில குறட்பாக்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கவுரை எழுதியிருப்பார். அவற்றுள் ஒன்று,
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்” (கு.எண். 848)
என்னும் குறட்பாவாகும். இதற்குப் “புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்” எனப் பதசாரம் எழுதி,
“உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், ‘அவ்வுயிர்’ என்றும், அதனின் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் ‘போமளவும்’ என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் ‘ஓர் நோய்’ என்றும் கூறினார்”
என்று விளக்கவுரை தருகிறார் பரிமேலழகர். ‘அவ்வுயிர்’ என்னும் சேய்மைச்சுட்டால் சுட்டியதும் ‘அவன் இருக்கும் வரை’ என்னாது ‘அது போகிறவரை’ என உயிரை அஃறிணையாக்கி உரைத்ததும் ‘போஒம்’ எனச் செய்யுளிசை அளபெடையை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டதுமான திருவள்ளுவரின் சதுரப்பாடு மிகவும் உயர்ந்ததாம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது இதனால் ஈர்க்கப்பட்ட குமரகுருபர சுவாமிகள்,
“முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா – இடித்திடித்துக்
கட்டுரை கூறின் செவிகொளா! கண்விழியா!
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்” (நீ.நெ.வி.31)
என்னும் ஒரு வெண்பாவை எழுதியிருக்கிறார். ‘நினைத்தவாறே ஒழுகித், தான் நினைக்கின்ற செயல்களையே செய்து முடித்துப், பூசுவன பூசி, உடுப்பன உடுத்து, உண்பனவற்றை உண்டு என்று தன்னிச்சையாகவே செயல்படும் ஒருவனுக்கு அவனிழைக்கும் தவறைப் பிறனொருவன் சுட்டிக்காட்டினால் செவி கேளாது. கண்ணும் குருடாகும். ஆதலின் அவன் பெருமூச்சுவிடும் பிணத்திற்கு ஒப்பாவான்” மேலே சுட்டிய திருக்குறள் மற்றும் நீதி நெறி வெண்பாக்களின் கருத்தொற்றுமையைக் கற்பார் எளிதில் புரிந்து கொள்ளலாம் எனினும் நடைப்பிணம் கிடைப்பிணமாகும் நாளை திருவள்ளுவர் எதிர்நோக்க, ‘பெருமூச்சும் நிற்காதா?’ என்று குமரகுருபரர் பெருமூச்சு இடுவதை உணரமுடிகிறது. தானாகவும் தெரியாது பிறர் சொல்வதைக் கேட்கவும் மறுதலித்துத் தனக்கும் உலகத்துக்கும் துன்பமாகித் திரிபவர்களுக்கான உவமம் இருபெரும் சான்றோர்களுக்குப் பெரும்பாலும் ஒத்திருப்பது வியப்பானதன்று!
உடையார் முன் இல்லார்
தமிழகத்தில் கல்வி பெறுவதில் இருவகை முறைகள் இருந்திருக்கலாம். குருவிற்குக் கொடுத்துப் பெறுவது. பிச்சையெடுத்தாகினும் கல்வி பெறுவது. இரண்டினையும் உறழ்ந்து நோக்கினால் குருவிற்குக் கொடுப்பதற்காகப் பிச்சையெடுப்பது நிகழ்ந்திருக்கக்கூடும். இரந்தும் உயிர் வாழ்தற்கு இது மாறானது. உயிர்வாழ்தற்குப் பிச்சையெடுப்பது இழுக்கு. கல்வி பெறுவதற்குப் பிச்சையெடுப்பது ஏற்புடையது என்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”
என்னும் புறநானூறும்,
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே”
எனக் கற்றலை அடுக்கில் கூறிப் பின்னரும் அனுவதித்த வெற்றி வேற்கையும் இத்தகைய எண்ணங்களையே ஏற்படுத்துகின்றன. ‘சிற்றுயிர்க்கு உற்ற துணையாதலின்’ கல்வியின் பெருமை இம்மை மட்டும் சார்ந்தது அன்று உயிரோடு சார்ந்தது’ என்பது பெறப்படும். படவே அது ‘எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பதும் புலப்படும். படுதலின் கல்லாமையின் இழிவையும் கல்வியின் பெருமையையும் பன்முக உத்திகளில் பாடும் நிலை சான்றோர்க்கு வந்திருக்கிறது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது. ‘கல்வியழகே அழியா அழகாதலின்’ அதன் சிறப்பு நோக்கி வலியுறுத்தும் போக்கினையே காண முடிகிறது. ‘உடைமை செல்வம்’ என்றால் ‘இன்மை வறுமை தானே! கல்வியைப் பெற்றவர்கள் கல்விச் செல்வத்தில் உயர்ந்தோர். கல்வியைப் பெறாதார் அது இல்லாமையின் வறியர். வறியர் செல்வரிடத்தில் இரப்பது இயல்பு. இதனைத்தான் திருவள்ளுவர்,
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.” (கு.எண்.395)
என உவமமாக்கியுரைக்கிறார். இந்த உவமத்தால் கவரப்பட்ட குமரகுருபரர் திருவள்ளுவரின் பொருள் செயல்வகை என்னும் அதிகாரக்கருத்தினையும் ஒருசேரத் தழுவி எழுதுகிறார் இப்படி!
“கல்வி யுடைமை பொருளுடைமை என்றிரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும் – இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்” (நீ.நெ.வி. 16)
இந்த வெண்பாவில் கல்வியையும் செல்வத்தையும் செல்வம் என அடையாளப்படுத்தியதில் அவ்வளவாகச் சிறப்பில்லையெனினும் இரண்டு குறட்பாக்களை நினைவுபடுத்துகிறார் குமரகுருபர். திருவள்ளுவர் கல்வியைப் பெறுதற்குக் காட்டிய உவமத்தைப் பொருளுக்கும் காட்டுவது புதிய உத்தி எனலாம். ‘குறையிரந்து தம் முன்னர் நிற்பபோல்’ என்பது திருவள்ளுவர் கல்வியிலார் அதனைப் பெறுதற்குச் செல்வர்க்கு முன்னால் நிற்கும் நிலையைக் காட்டிய உவமம். திருவள்ளுவர் மிக நுட்பமாக அந்தக் குறட்பாவில் செய்திருக்கும் பதிவு நேர்த்தியை ஒரு துறைக்குச் சொல்லப்பட்டது போல் காட்டப்பட்ட அந்த உவமத்தை இரு துறைக்கும் தெளிவாகக் காட்டிய குமரகுருபரர்,
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து” (கு.எண். 125)
என்னும் குறட்பாவின் கருத்தையும் உள்வாங்கியிருப்பதோடு பொருத்தமாக இருக்குமானால் ஒரு பொருளை விளக்குதற்கான உவமத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் உவமக் கோட்பாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறார் என்பதற்கும் சான்றாகத் திகழ்கிறது.
சிந்திய பருக்கையால் செழித்திடும் உயிரினம்
குருடர்கள் தடவிய யானையைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் முழுயானையைப் பாடிய கவிஞர்கள் கூட ஒரே மாதிரி நோக்கவில்லை என்பதையும் ஒரே புலவர் கூட யானையைப் பலவகையாக நோக்கியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது, திருக்குறளில் யானை பற்றிய குறட்பாக்கள் யானை, களிறு என்ற பெயர்களில் எட்டு இடங்களில் (24, 597, 678, 599, 758, 772, 774, 1087) கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எட்டு இடங்களிலும் திருவள்ளுவரின் பார்வை மிக நுண்ணிய வேறுபாடுகளை உடையதாக அமைந்திருக்கிறது. விரிப்பின் பெருகும். எனினும் 597, 678, 599 ஆகிய மூன்று குறட்பாக்களிலும் அது உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடங்களிலெல்லாம் யானையின் பெருமிதத்தையும் வீரத்தையும் சுட்டுகின்றனவாகவே உள்ளன. ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்று யானைக்கு முறையாக இடப்படும் உணவுக் கவளத்தைக் காட்டி அதன் உண்ணும் முறையை உவமமாக்கியிருக்கிறது.
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே!” (புறம். 184)
இந்தப் பாட்டில் யானை நேரடியாக உவமமாகக் கூறப்படவில்லை. யானையை எப்படிக் கையாள வேண்டும் என்பதையே உவமமாக்கி அதனால் அரசன் செய்ய வேண்டிய ஆட்சிமுறைமையை விளக்குகிறார் புலவர் பிசிராந்தையார். முறையாக அளிக்கப்படுமாயின் யானை ஒழுங்காக உண்ணும். கட்டவிழ்த்துவிட்டால் கழனியும் பாழாகும். ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்பது கருத்து. இந்தப் பாட்டில் முறையாகக் கொடுக்கப்படும் கவளத்தை அது உண்கையில் சிதறும் பருக்கைகளைப் பற்றிய சிந்தனை குமரகுருபரருக்கு வந்திருக்கிறது. அவர் எழுதுகிறார்,
“வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயர் உறா – ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்பிங்கு ஒரு கோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று” (நீ.நெ.வி. 38)
யானையின் ஒரு சிறு செயலைச் சித்திரிக்கும் இப்பாடல் முழுவதையும் ‘பிறிது மொழிதல்’ என்னும் அணி உத்தியால் அலங்கரித்த குமரகுருபரர், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதைக் குறிப்பாகப் பெறவைக்கிறார். விலங்குகளின் உறவுகளுக்குக் ‘கிளை’ என்பது தொல்காப்பியச் சுட்டெனினும் இலக்கியங்களில் அவ்வளவாகப் பயின்று வருவதில்லை. ‘கல்லென் சுற்றம்’ என்பதுதான் புறநானூற்றின் பொருண்மைத் தொடர். ஆனால் ‘யானையின் கிளையும் அயிறும்’ என்ற தொடராட்சியால் செல்வர்களின் சிறு செல்வம் அதனைப் பெறுவாருக்கும் பெறுவார்தம் சுற்றத்தார்க்கும் (கிளைக்கும்) பயனாகும் (சுற்றத்தோர்க்கும் தொடர்புறு கிளைஞர்க்கும்’ — சிலப்பதிகாரம்) என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கும் சுவாமிகளின் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது. உவமம் ஒன்றானாலும் அதன் பன்முகப் பரிமாணத்தை உற்று நோக்கிப் பல பொருண்மைகளை விளக்கலாம் என்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடாக அமைந்துள்ளது என்பதை இதனால் புரிந்து கொள்ள இயலும்.
நிறைவுரை
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகளால் சில ஆழமான உவமக் கோட்பாடுகளை வரையறுக்க முடியும். முன்னோர்கள் சொன்னதெல்லாம் பழைமை என்பதற்காகத் தள்ளிவிட வேண்டியதில்லை. குறிப்பிட்ட பொருண்மைக்குச் சொல்லப்பட்ட உவமமே மிகப் பொருத்தமானது என்று கருதினால் பின்வருவோர் அதனையே உவமமாகக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஒரு வழியாக நோக்கப்பட்ட அந்த உவமத்தைத் தம் நுழைபுலம் காரணமாகப் பன்முகமாக நோக்கிப் புதிய பொருண்மைகளை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘பரியது கூர்ங்கோட்டது’ என யானையைச் சிறப்பித்தாலும் புலிக்கு அஞ்சும் அதனை எதிர்மறையாகத் திருவள்ளுவர் நோக்கியிருப்பதும் பல இடங்களில் அதன் பெருமிதத்தைப் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருப்பதும் ஒரே உவமத்தின் பன்முகப் பரிமாணமும் உவமமாகலாம் என்பதைக் காட்டுகிறது. செய்யுளுக்குப் புறம்பாக நிற்கும் அணியிலக்கணத்தைச் செய்யுளுக்கு அகமாகவும் ஆக்க முடியும் என்பதற்குக் குமரகுருபரின் உவமங்கள் சான்றாகி நிற்கின்றன.
(தொடரும்…)