தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 41

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமங்களான இயற்கை

முன்னுரை

பொதுவாகத் தமிழ்க்கவிதைகளில் இயற்கை ஒரு பாடுபொருள் என்பது தெளிவான உண்மை. இயற்கையைப் பாடாத புலவர் இலர். அந்த இயற்கை பொருள் புலப்பாட்டுக் கருவியாக அதாவது உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வுக்கு உட்பட்டது. இயற்கைக் காட்சிகளும் இயற்கை நிகழ்வுகளும் தமிழ்க்கவிதைகளின் பாடுபொருளை எவ்வாறு உவமவழியில் பாதிக்கின்றன என்பதை ஆய்வது காலத்தேவையாகக் கருதப்படுகிறது. இயற்கையைப் பாடுபொருளாக்கிக் கொள்வதற்கும் அவற்றையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. சங்க இலக்கியங்களின் நிலைப்பேற்றுக்குப் பெரிதும் காரணமாக அமைந்த இயற்கையைப் பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பலரும் பாடியிருக்கிறார்கள். இயற்கைச் சித்திரிப்பை ‘அழகின் சிரிப்பு’ எனக் குறிப்பார் பாவேந்தர். பாவேந்தரைத் தொடர்ந்து வந்த கவிஞர்களில்  இயற்கையை ஓரளவு பாடியவராக வாணிதாசன் திகழ்கிறார். அவருக்குப் பின்னால் வைரமுத்தின் இயற்கை ஈடுபாடு பெரிதும் குறிக்கத்தக்கதாக உள்ளது. சங்ககால மக்களின் வாழ்வியல் களமாகவும், இலக்கியப் பாடுபொருளாகவும் விளங்கிய இயற்கை மறுமலர்ச்சிக் காலத்துக் கவிஞர்களின் வாழ்க்கையைக் கூட அவர்தம் ஒவ்வொரு கவியசைவிலும் பாதித்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இயற்கைக் கூறுகள் கவிதையில் உவமங்களாக அமைந்த பாங்கு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

தமிழும் இயற்கையும்

‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்பதால் ‘தமிழ்’ என்னும் சொல்லுக்கு இவ்விரு பண்புகளும் உண்டு என்பது பெறப்படும். தாய்மொழியாகிய தமிழுக்கு இவ்விரண்டு பண்புகள் பொருந்தும்படியாகவே அதன் இயல்பு அமைந்துள்ளது. உலக மொழிகள் அனைத்திலும் தலைமை ஒலிவடிவமாக அகரம் அமைந்திருப்பதும், எத்தகைய முயற்சியுமின்றி வாயைத் திறந்தவுடன் அகரவொலி வெளிப்படுவதும் ‘தமிழ் ஒரு மொழி’ என்னும் நிலையில் இயற்கையைத் தழுவியமைந்திருக்கும் உண்மையை உணரப் போதுமானதாகும். மொழியின் தோற்றம் இவ்வாறு இயற்கையை ஒட்டி அமைந்திருப்பது போலவே அம்மொழியில் அமைந்த இலக்கணப் பாகுபாடுகளும் இலக்கியக் குறியீடுகளும் இயற்கையையொட்டி அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் இயற்கை

தமிழ் அகவிலக்கண மரபில் காணப்படும் திணைப்பாகுபாடுகளுக்கு முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம் எனப் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும், வெட்சி, வஞ்சி, உழிஞை, காஞ்சி, வாகை எனப் புறத்திணைகளுக்கும் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் இயற்கை, தமிழருடைய வாழ்வியலோடு கொண்டிருந்த பிணைப்பைப் பறைசாற்றுவனவாம். பொருளிலக்கணப் பகுதிகளில் இயற்கையின் தாக்கம் இங்ஙனம் இருப்பதைப் போலவே மொழியிலக்கணத்திலும் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சான்றாக,

“ஆற்றொழுக்கு அரிமா நோக்கு தவளைப்
பாய்த்துப் பருந்தின் வீழ்வுஅன்ன சூத்திர நிலையே”

என்னும் நூற்பாவில், சூத்திரங்களின் நிலைக்கு இயற்கைப் பொருள்களின் வினைகளே உவமமாக்கப்பட்டுள்ளன. ஆற்றின் ஓட்டமும், அரிமாவின் பார்வையும், தவளையின் பாய்ச்சலும், பருந்தின் வீழ்ச்சியும் மொழியின் கட்டமைப்பு பற்றிய இலக்கணச் சிந்தனைகளைப் பாதித்திருக்கிறது எனக் கருதுவதற்கு இடமுண்டு. பட்டினப்பாலை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மலைபடுகடாஅம் என்னும் பத்துப்பாட்டுக்களின் பெரும்பான்மைப் பெயர்களும் மலர்களின் பெயர் தாங்கி நிற்பதும் மேற்கண்ட கூற்றை உறுதி செய்யலாம். தென்றல், மேகம், கிளி, மயில், குயில் எனத் தூது இலக்கியத்தின் தூதுவர்களும் இயற்கையைச் சார்ந்தவர்களாகவே  குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழ்க்கவிதை மரபில் இயற்கை

தமிழிலக்கியக் கவிதை மரபில் இயற்கையின் இடம் குறிப்பிடத்தக்கது என்பது மேலே சுட்டப்பட்டது. ‘தனித்ததொரு பாடுபொருள்’ என்னும் நிலையில் இயற்கை தமிழ்க்கவிதைகளில் பாடப்பெறவில்லை என்பதை அறிஞர் மு.வ. தமது ‘பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இயற்கை’ என்னும் ஆய்வு நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். பெயரடைகளாக நின்று திணை விளக்கத்திற்குத் துணையாக விளங்கியதே சங்க இலக்கியங்களில் இயற்கை பாடப்பெற்றிருக்கும் நெறியாகும். ஐம்பெருங் காப்பியங்களிலும், கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய இதிகாசக் காப்பியங்களிலும் ஆறு, காடு, சோலை இவற்றின் வண்ணனைகள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. பரிதிமாற் கலைஞரின் கடற்கரைக் காட்சி, தாமரைத்தடாகம் முதலிய நூற்பகுதிகளும், மகாகவி பாரதியின் குயில்பாட்டின் சில பகுதிகளும், பாஞ்சாலி சபதத்தின் சில பகுதிகளும் இயற்கையில் உள்ள ஈடுபாட்டைக் காட்டக் கூடும். பாரதிக்குப் பின் வந்த கவிஞர்களின் படைப்புக்களில் இயற்கை தனக்குரிய இடத்தைத் தவறாமல் பெற்று வந்தது என்பதும் குறிக்கத்தக்கதே. ஆனால் இயற்கையைத் தனியொரு பாடுபொருளாகக் கொண்டு பாடப்பட்ட தமிழின் முதல் தொகுப்பு பாவேந்தரின் அழகின் சிரிப்பாகலாம்.

தமிழ்க்கவிதைகளில் இயற்கைப் பயன்பாடு

தமிழ் இலக்கணமும் இலக்கியமும் இயற்கையோடு பிரிக்க இயலாத உறவு கொண்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்க்கவிஞர்கள் தங்கள் படைப்புக்களில் இயற்கையை ஐந்து வகையாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பகுத்துரைப்பார் அறிஞர் அ.கி.பரந்தாமனார். அவரது பகுப்பு வருமாறு:

  1. இயற்கையளிக்கும் காட்சியழகில் ஈடுபட்டுச் சித்திரிப்பது.
  2. இயற்கையை உவமையில் பயன்படுத்துவது.
  3. இயற்கையைப் பயன்படுத்திக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது.
  4. இயற்கையை மானிட வாழ்வுடன் இணைத்துக் காட்டுவது.
  5. இயற்கை வாயிலாக அரிய நீதிகளையும் பெரிய உண்மைகளையும் தெரிவிப்பது.

பேராசிரியர் பரந்தாமனாரின் பகுப்புக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ஆய்வுப் பொருளாகும் வன்மையுடையது என்றாலும், அவரது இரண்டாவது பகுப்பான ‘இயற்கையை உவமையில் பயன்படுத்துவது’ பற்றிய விளக்கமுறை ஆய்வாக இந்தக் கட்டுரையைக் கருதலாம்.

தமிழ்க்கவிதை உவமங்களில் இயற்கை

சங்க இலக்கியத்தில் தொடங்கிய தமிழ்க்கவிதை நெடும்பயணத்துள்  உவமங்களின் ஆளுமை தனித்துச் சுட்டுதற்குரியது. தமிழ்க்கவிதைகளில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகளில் சமுதாயச் சிந்தனைகள் தமக்கென தனித்ததொரு இடத்தைப் பெற்றுள்ளதைப் போலவே இயற்கையும் உவமங்களாகத் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கை உவமமாகும் பொழுது,

  1. இயற்கைக்கு இயற்கை உவமமாதல்
  2. இயற்கைக்குச் செயற்கை உவமமாதல்
  3. செயற்கைக்கு இயற்கை உவமமாதல்

என மூன்று தனித்தனிக் களங்களில் செயல்படுவதை அறியமுடிகிறது. இயற்கையோடு இரண்டறக் கலந்தமைந்த வாழ்க்கை முறையும், நடைமுறை வாழ்வியல் உண்மைகளை இயற்கைக்கு ஏற்றியுரைக்கும் அழகியல் உணர்வும், இயற்கை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நடைமுறை வாழ்க்கையைச் செப்பனிடல் வேண்டும் என்னும் பொதுநல உணர்வும் ஆகிய மூன்றுமே மேற்சுட்டிய மூன்றுவகை நிலைப்பாடுகளுக்குக் காரணம் எனலாம்.

இயற்கைக்கு உவமமான இயற்கை

மானுட வாழ்வியல், இயற்கையிலிருந்து தொடங்கி நிகழ்வதாகலின், உவமம் பெரும்பாலும் இயற்கைப் பொருள்களிலிருந்தும் அவற்றின் அசைவுகளிலிருந்துமே தோன்றியன ஆதல் வேண்டும். ‘மாடாட்டம் உழைக்கிறான், ‘மயில் மாதிரி பெண்’, ‘குயில் மாதிரிப் பேசினாள்’, ‘எருமை  மாதிரி நிற்கிறான்’, ‘தென்றலாய் வந்தாள்’, ‘புயலாய்ச் சீறினாள்’, ‘பனை மாதிரி வளர்ந்தவன்’ என்றெல்லாம் நிலைபெற்றிருக்கும் வழக்குகள், உவமத்தின் நிலைக்களம் இயற்கையே என்பதைப் புலப்படுத்தும். இயற்கைப் பொருளைச் சித்திரிக்கின்ற நேர்வுகளில் கூட மற்றொரு இயற்கைப் பொருளையே உவமமாகக் கூறும் போக்கைக் காணமுடிகிறது. இயற்கையில் வளர்ந்த உகாய் மரத்துக்குப் புறாவின் முதுகையும் அதில் விளைந்த கனிகளுக்கு நீலமணியையும் உவமித்திருப்பதன் மூலம் இயற்கைக்கு இயற்கையை உவமமாக்கும் தமிழ்க்கவிதைக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

“புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅய்க்
காசினை அன்ன நளிகனி யுதிர” (குறுந்தொகை – 274)

குறுந்தொகையில் இதே பொருளுக்குக் கூறப்பட்டிருக்கும் இதே உவமையை,

“மணிக்கா சன்ன மானிற இருங்கனி
உகாய் மென்சினை உதிர்வன கழியும்” (அகநானூறு – 293)

என அகநானூற்றிலும் காணமுடிகிறது.

இயற்கைக்கு உவமமான இயற்கை

போர்க்களத்தில் போர்செய்து புண்பட்ட யானையினது முகத்தைச், செங்காந்தள் மலர் விழுந்த பாறைக்கு உவமித்திருப்பதையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.

“பொருத யானை புகர்முகம் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும்” (குறுந்தொகை – 284)

பாறையில் காந்தள் விழுவது இயற்கை. போர்க்களத்து யானைமுகம் புண்படுவது களத்தொழிலின் காரியம். காந்தள் விழுந்த பாறை புண்விழுந்த யானை முகமானது, இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் புலவர் திறம்.

இயற்கைக்கு உவமமான செயற்கை

இயற்கைக்கு இயற்கையே உவமம் என்னும் நிலையிலிருந்து இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் திறனையும் தமிழ்க்கவிதைகளில் காணமுடிகிறது. பெண்பல்லியைத் துணைக்கழைக்கும் ஆண்பல்லியின் இயற்கை ஒலிக்கு, அம்புநுனியைத் தீட்டுவதனால் உண்டாகும் ஒலியை உவமை கூறும் திறன் சங்கச் சான்றோர்களுக்கு இருந்திருக்கிறது.

“கள்வர்தம்
பொன்புணை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசைபோல
செங்காற்பல்லி தன் துணை பயிரும்” (குறுந்தொகை – 16)

என்னும் இவ்வடிகளில் ஆண்பல்லியின் அழைப்பொலிக்கு ஆறலைக் கள்வர்கள் தம் அம்புகளைச் செப்பம் செய்வதற்காகத் தங்கள் நகத்தினால் கீறிப்பார்க்குங்கால் எழும் நுட்பமான ஒலியை உவமையாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

பாவேந்தர் பாரதிதாசன் தமது கவிதைகளில் இயற்கைக் காட்சிகளை விளக்குதற்குச் செயற்கைக் காட்சிகளை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது. தாமரைச் செவ்வரும்பு தடாகத்தில் தோன்றும் இயற்கைக் காட்சிக்கு, மாலையில் மங்கையர் ஏற்றிய விளக்குச் சுடரை உவமையாகக் கூறியிருக்கிறார்.

“மணியிருள் அடர்ந்த வீட்டில்
மங்கைமார், செங்கை ஏந்தி,
அணிசெய்த நல்வி ளக்கின்
அழகிய பிழம்புபோல
தணிஇலை பரப்பி னிற்செந்
தாமரை செவ்வரும்பு
பிணிபோக்கி என்விழிக்குப்
படைத்தது பெருவிருந்தே” (அழகின் சிரிப்பு)

என்னும் கவிதையில் இயற்கையில் தோன்றும் ஓர் அழகிய காட்சிக்கு நடைமுறை வாழ்வியல் நிகழ்ச்சி ஒன்றினை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது.

செயற்கைக்கு  உவமமான இயற்கை

பிறவிப் பெரும் பிணி தொலைக்க வேண்டுமானால் இறைவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்பது நியதி. இறைவனை அடைகின்ற வழிகள் இரண்டு. ஒன்று விரதங்கள். இரண்டு ஞானம். விரதங்களினால் ஞானம் கைகூடும். ‘வினை மாசு தீர்ந்து அந்தக் கரணங்கள தூயவாதற் பொருட்டு ஒருவரால் காக்கப்படும் விரதங்களும் அவற்றால் அவை தூயவாய வழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்’ என விளக்குவார் பரிமேலழகர். ஆனால் உலகியலில் இது அவ்வளவு எளிதாகக் கைகூடுமாறில்லை. எனவே சரணாகதி ஒன்றுதான் ஒரே வழி. அதுபற்றிப் பாடுகிற குலசேகர ஆழ்வார் ‘நினது அருளன்றி நான் மீள்வதற்கில்லை’ என்னும் தம் கருத்தினை விளக்குதற்குச் சில உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

“செங்கதிரே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க் கல்லால் அலராவால்!
வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டம்மா! உன்
அந்தமில் சீர்க்கல்லால் அகங்குழைய மாட்டானே!

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்க்கும் அதுவே போல்
மெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டம்மா!
சித்தம் மிக உன்பாலே வைப்பன் உன் அடியேனே!

தொக்கு இலங்கி ஆறு எல்லாம் பரந்தோடி தொடுகடலை
புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே!”

                                   (பெருமாள் திருமொழி)

விரதமும் ஞானமும் மானுட முயற்சியால் கைகூடுவது. எனவே செயற்கை. வெப்பமாக இருந்தாலும் தாமரை செங்கதிரோனுக்கு மட்டும் மலர்வதும், பயிர்கள் வான்மழையை எதிர்நோக்குவதும், ஆறுகள் கடல் நோக்கிப் பயணிப்பதும் இயற்கை. ஆழ்வார் பாசுரங்களில் இத்தகைய உவமக் கோட்பாடு இழைவதைக் காணமுடிகிறது.

ஆடவரின் மீசையின் பொலிவு, மயிரின் கன அளவையும் கத்தரிக்கோலைக் கையாள்பவனின் திறனையும் பொருத்தது. மயிர் வளர்வது இயற்கை. அதனை மீசையாகக் காட்டிக் கொள்வது மனித முயற்சியான செயற்கை. இந்த மீசைக்கு அணிலின் வாலை உவமை கூறுகிறார் கவிஞர் பனப்பாக்கம் சீதா.

“அணில்வாலைப் போன்ற மீசை
அமைந்தநற் புலவர்” (பனப்பாக்கம் சீதா பாட்டுப் பயணம்)

அக்காலப் புலவர்களுக்கு அணில்வாலைப் போல மீசை இருந்ததாகக் கூறுவதைப் போலவே பாவேந்தர் பாரதிதாசன் பாண்டியன் பரிசு காவியத்தில்,

“கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை” (பாண்டியன் பரிசு)

என அரும்புகிற மீசைக்குக் கிளிக்கழுத்தில் இருக்கின்ற பொன்வரிகளை உவமமாக்கிக் காட்டுகிறார்.

இயற்கைக்கு உவமமான இலக்கணம்

மேற்கண்ட முந்நிலைகளேயன்றி இயற்கைக்கு இலக்கணத்தையே உவமமாக்கும் போக்கையும் காணமுடிகிறது. வயலோடு நீர் சேர்வது இயல்பானது., மெய்யோடு உயிர் சேர்வது இயல்பானது. இரண்டிடத்திலும் சேர்க்கை செயற்கையானது அல்ல, இயற்கையானது.

“வெடித்திருந்த வயலெல்லாம் தண்ணீ ராலே
மெய்யெழுத்தின் முன்னுயிர்போல் பொருந்திக் கொள்ள” (தேன்மழை)

என்னும் உவமையில், இலக்கணத்துள் புணர்ச்சி இயற்கையானதைப் போலவே, வயலுக்குள் நீர்பாய்வதும் இயற்கையாயிற்று என்னும் உவமைக்கவிஞர் சுரதாவின் உவமத்திறன் காண்க.

“உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  (நன்னூல்)

என்னும் இலக்கண நூற்பாவின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட கவிஞர் சுரதா வெகு இயல்பாகவும், இயற்கைக் காட்சியொன்றைச் சித்திரிக்கும் நோக்குடனும் கையாண்டிருக்கும் உவமத்திறன் பாராட்டத்தகுந்தது.

 மறைந்த மடந்தையும் மறைந்த பொருள்களும்

மீசையாகிய செயற்கைப் பொருளுக்கு இயற்கைப் பொருளை உவமிக்கும் பொழுது உவமமாக ஒரு பொருளே வந்துள்ளது. மாறாக செயற்கைக்கு இயற்கைப் பொருளை உவமிக்குங்கால், ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சுட்டும் வழக்கும் தமிழில் உண்டு. சான்றாக,

“இலைகளுக்குப் பின்புறத்தில் காய்கள் போன்றும்
இருள்முகிலின் பின்புறத்தில் நிலவு போன்றும்
மலைகளுக்குப் பின்புறத்தில் சிற்றூர் போன்றும்
மறைவாக அரண்மனையில் வாழ்ந்து வந்த
கலைமடந்தை”  (தேன்மழை)

என்னும் கவிதை வரிகளில், அரண்மனையில் ஒதுக்குப்புறமாகப் பிறரால் அறிந்து கொள்ள இயலா வண்ணம் வாழ்ந்து வரும் இளவரசி ஒருத்திக்கு, இலைமறைக்கும் காயும், முகில் மறைக்கும் நிலவும், மலை மறைக்கும் சிற்றூரும் உவமைகளாய்க் கையாளப்பட்டிருக்கும் பாங்கினைக் காணலாம்.  இதனால் செயற்கையின் ஒரு பொருளுக்கு இயற்கையின் பலபொருள்கள் உவமமாக்கப்படுவதும் தமிழ்க்கவிதைகளின் உவமக்கோட்பாடுகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.

நிறைவுரை

மேற்கண்ட சான்றுகளால் இயற்கைக்கு இயற்கை, இயற்கைக்குச் செயற்கை, செயற்கைக்கு இயற்கை என்னும் மூவகைத் தளங்களில் இயற்கைப் பொருள் உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு ஓரளவு ஆராயப்பட்டது. இயற்கைச் சித்திரிப்பிற்குத் தமிழிலக்கணக் கூறுகளும் உவமங்களாய் வந்துள்ளன என்பதும் சுட்டப்பட்டது. இவ்வாறெல்லாம் வகுத்துக் கொண்டு உவமங்களைப் பயன்படுத்துவது பற்றிய எந்தத் திறனாய்வுக் கொள்கையும் தற்காலத்தில் இல்லை. காட்டப்பட்ட உவமங்கள் எல்லாம் படைப்புக்களில் அனிச்சையாக வந்தவை. வந்து அமைந்தவை. ஒரு காலத்திய இலக்கியத்தினை, ஒரு மொழிக்குரிய இலக்கியத்தைத் திறனாய்வு செய்ய காலத்தால் பிற்பட்ட, முற்றிலும் தொடர்பில்லாத மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பொருந்தாது, பயன்தராது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கக்கூடும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.