வ.உ.சி.யின் மொழிபெயர்ப்புகளும் உரைகளும்
முனைவர் த. ஆதித்தன்
இணைப்பேராசிரியர்
அரிய கையெழுத்துச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
வ.உ.சி. என்றவுடன் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போன்றவையே மனதினில் எழும். காரணம் அவரின் சுதந்திரப் போராட்டங்கள் நினைக்கப்படும் அளவிற்கு இலக்கியப் பங்களிப்புகள் மனதினில் எழுவது இல்லை. ஏன் அதிகம் அறியப்படவே இல்லை. இலக்கணப் புலமை மிக்க வ.உ.சி. கட்டுரை, பதிப்பு, உரை, படைப்பாக்கம் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்தவர். தமது சுயசரிதையைச் செய்யுளில் படைத்தவர். அவரின் ஆக்கங்களுள் அவரின் மொழிபெயர்ப்புகளுக்கும், உரைகளுக்கும் தனி இடம் உண்டு. அவற்றைக் குறித்து இப்போது பார்க்கலாம்.
மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரையில் அவரின் நிறைவான பெயர்ப்புகளாக நமக்குக் கிடைப்பன நான்கு நூல்கள். நான்குமே ஜேம்ஸ் ஆலன் உடைய ஆங்கில நூல்கள். இவருடைய முதல் மொழிபெயர்ப்பு பணி சிறைச்சாலையில் தான் தொடங்கி உள்ளது. ஜேம்ஸ் ஆலனின் As a Man Thinketh எனும் நூலை மனம்போல் வாழ்வு என்று 1908 இல் மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே 1905 லேயே ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வ.உ.சி.க்கு இருந்ததாம். ஆனால் அவ்வெண்ணம் 1908இல் அவர் சிறையில் இருந்தபோது தான் நிறைவேறியுள்ளது.
சிறைச்சாலையில் கடுமையான தண்டனைப் பெற்றுவந்த அவருக்குச் சிறிது காலம் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அது பற்றி அவரது சுயசரிதையில்
“திங்கள் ஒன்றில் சென்னை ஐக்கோர்ட்டில்
செய்த அப்பீலில் திருத்தமும் ஒழுக்கமும்
தேசாபிமானமும் சேர்ந்த நல் ஜட்ஜ் சங்கரநாயர் தகுதியில் – பின்னியின்
தீர்ப்பினை சஸ்பெண்டு செய்து அறிவித்தார்
தொலைந்தது வேலை – சொந்த உணவும்
சொந்த உடையும், சொந்த படுக்கையும்
வந்தன. கொண்டவை மகிழ்வுடன் இருந்தேன்”
என்று எழுதியிருக்கிறார்.
சங்கர நாயர் என்கிற ஓர் இந்தியர் அந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்ததால் தான் தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதித்ததாலேயே சிறிது தப்ப முடிந்தது வ.உ.சிக்கு. இதனால் பிற கடும் குற்றங்கள் புரிந்த கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதிலேயிருந்து கொஞ்சம் காலம் விலக்கு கிடைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் வ.உ.சி.யால் சிறைக்குள்ளே படிக்கவும் எழுதவும் முடிந்திருக்கிறது. அவர் ஜேம்ஸ் ஆலனுடைய நூல்களை மட்டுமே மொழிபெயர்த்திருப்பதற்கான காரணம் – அதாவது அந்த ஈர்ப்புக்கான காரணம் சிந்திக்கத்தக்கது. வ.உ.சி. ஆங்கிலேய விதேசி அரசுக்கு எதிராகப் போராடியவர். சுதேச சிந்தனையாளர். அவரது ஈர்ப்புக்குக் காரணம் ஜேம்ஸ் ஆலனின் கருத்தியல்தான். ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த ஜேம்ஸ் ஆலன், இங்கிலாந்தில் 1864இல் பிறந்தவர். இளம் வயதிலேயே அதிபுத்திசாலியாக இருந்தவர். வாலிப வயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றவர்.
ஆங்கிலேயராக இருந்தாலும் புலால் மாமிச உணவுகளை உண்பதில்லை மது அருந்துவதில்லை. இது போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருந்தாராம். நாம் “ஆசிய ஜோதி” என்று சொல்கிற ‘The Light of Asia’ நூலை அவர் படித்த பின்னரே மெய்யுணர்வு அவரக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். நமது பாரத தேச நூல்கள் மீதும், மெய்யியல் அதாவது தத்துவவியல் மீதும் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு இருந்துள்ளது. “கீழ்நாட்டரே மெய்ஞ்ஞான கருவூலம்” என்பதாக அடிக்கடி ஜேம்ஸ் ஆலன் கூறுவாராம். வ.உ.சி. இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அவர் வாக்கின்று வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நமது நாட்டு நீதியும் மதக் கோட்பாடும் கலந்திருக்கும்.” என்கிறார்.
இவை எல்லாம், வ.உ.சி.க்கு ஜேம்ஸ் ஆலனின் படைப்புகள் மேல் ஈர்ப்பு வர காரணமாக இருக்கலாம்.
1908இல் “As a Man Thinketh-“ மனம் போல் வாழ்வு என்கிற முதல் மொழிபெயர்ப்பு நூல் எழுதப்பட்டுள்ளது இது “ வ.உ.சி.யின் நண்பர் சுவாமி வள்ளிநாயகம் அவர்களால் 1909இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஐந்தாம் பதிப்பு 1938இல் வெளிவந்துள்ளது. அதன் வெளியீட்டாளர் தூத்துக்குடி விக்டோரியா பிரிண்டிங் பிரஸ்சார் ஆவார்.
இந்த நூலின் உடைய மொழிபெயர்ப்பானது சரியான ஆக்கம், அதாவது முறையான மொழியாக்கம் என்று சொல்லலாம். மொழிப்பெயர்ப்புகளில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. அதில் ஒன்று செய்யுள்களை மொழியாக்கம் செய்வது. தமது மொழியாக்கத்தைக் குறித்து வ.உ.சி. சொல்லும்போது, “இதனை முதனூற்குச் சற்றேற குறையச் சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள சொற்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளன அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன்.
மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும் சில இடங்களில் முதனூலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழி பெயர்த்திருக்கிறேன். “ அன்றியும், “கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக”, என்றபடி, இந்நூலின் அரிய பொருள்களைத் தமிழுலகம் நன்குணர்ந்து கைக்கொண்டொழுகுதல் வேண்டும் என்ற எண்ணமே என் மனதின் கண் முற்பட்டு நின்றமையின், நமது நாட்டில் மிகுதியாக வழங்கும் வடமொழிகளை இதில் மிகுதியாக உபயோகித்திருக்கிறேன்.” என்கிறார். இதிலிருந்து செய்யுள்களை அதன் தன்மை மாறாமல் உள்ளது உள்ளபடி அமையுமாறு மொழி ஆக்கம் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றவராக வ.உ.சி. இருந்துள்ளதை அறியமுடிகிறது. மக்கள் வழக்கில் பயன்படுத்தும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். அவையே அவர்களின் புரிலுக்கு மிகவும் பயனுடையதாக அமையும் என்ற எண்ணம் உடையவராகவும் இருந்துள்ளார். மனிதனின் எண்ணங்களே அவனுடைய வாழ்வை வடிவமைக்கிறது என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்ட நூலாக இது உள்ளது.
அடுத்ததாக அவர் மொழிபெயர்த்த நூல், Out from the Heart என்ற ஆங்கில நூல் அதற்கு அகமே புறம் என்று பெயரிட்டுள்ளார். இது நூலாக வெளிவந்தது 1914 இல்.
இதில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று கட்டுரைகள் சுப்பிரமணிய சிவம் நடத்திய ஞானபாநு இதழில் வெளிவந்தவை. அகமும் வாழ்வும் – ஆகஸ்ட் 1913, மனதின் தன்மையும் வன்மையும் – செப்,1913, சுபாவத்தை ஏற்படுத்துதல் – அக்.1913 ஆகிய ஞானபானுவில் வெளிவந்த கட்டுரைகளை நூலின் தொடக்கமாக அப்படியே அமைத்துள்ளார். 1916 இல் சென்னை புரோகிராம் பிரஸ் மூலம் அதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. நூலின் முக உரையில் வ.உ.சி. மூல நூலில் உள்ள ஒரு அத்தியாயத்தை நான்கு சிறிய அத்தியாயங்களாகப் புரிதற்பொருட்டு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
மிக மிக எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் அத்தியாயங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கலாம். ஒழுக்கத்தை மிக உயர்ந்ததாக எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது.
மூன்றாகப் பகுத்துத் தந்துள்ள உயர்தர வாழ்வு என்ற தலைப்பு (முதல் பாடம் / இரண்டாம் பாடம் / மூன்றாம் பாடம்) முழுவதுமே இந்த ஒழுக்கம் பற்றியதுதான். இதிலிருந்தே ஒழுங்கமைந்த வாழ்வை வ.உ.சி. மிகவும் நேசித்துள்ளது விரும்பியுள்ளது தெரிகிறது.
முதற்பகுதியில் மனதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகக் குறிப்பிடுகிறார். அதன் முதல் சாதனம் சோம்பலை ஒழிப்பது என்கிறார். உணவுக் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தின் பாற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இப்படியேதான் இரண்டாம் பாடம், மூன்றாம் பாடம் ஆகியவற்றிலும் ஒழுக்கத்தின் உயர்வுகளையே சொல்லி செல்கிறார். உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் தான் அழகு.
அவர் மொழிபெயர்த்த நூல்களில் மூன்றாவது நூலாகக் கிடைக்கப் பெறுவது, வலிமைக்கு மார்க்கம் என்கிற நூல்.
ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power” என்ற நூலின் முதல் பகுதி The Path of Prosperity என்பது. அதனை மட்டும் 1916இல் வலிமைக்கு மார்க்கம் என்பதாக ஆக்கித் தந்தவர் நம்முடைய வ.உ.சி. இந்த பெயர்ப்பின் சில இடங்களில் தழுவுதல் தன்மை இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். இதனைப் பாயிரம் பகுதியில் வ.உ.சி. சொல்லியிருப்பதில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
“மூல நூலின் ஐந்தாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் கண்ட ஆங்கிலக் கதையை நம்மவரில் பெரும்பாலார் கேட்டிருக்க மாட்டாராதலால் அக்கதையின் பெயரினை இந்நூலில் குறிப்பதால் பயனில்லையென்று கருதி அதற்குப் பதிலாகப் பாரதக் கதை என்று குறித்துள்ளேன்.
முதல் நூலின் கருத்துகளை நம்மவர்கள் எளிதில் உணருமாறு சிற்சில இடங்களில், சில சொற்களைக் சேர்த்தும் சில சொற்களை விடுத்தும் இம் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளேன்”. என்று பாயிரப் பகுதியில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.
நூலில் வலிமைக்கு உரிய, உயரிய வழியாக அவர் சொல்வது நீதி நெறியில் இருந்து தவறாது நடந்து கொள்வதுதான். “நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர் போட்டி தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக் கொள்வதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர்.
நீதி மார்க்கத்தில் நடக்கின்றவர் போட்டியில் தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்பன போன்ற அற வாழ்வை எடுத்துச் சொல்லி அதுவே வலிமைக்கான மார்க்கம் என்று வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
சாந்திக்கு மார்க்கம் என்கிற மொழிபெயர்ப்பு நூல் 1939இல் வெளிவந்துள்ளது. ஜேம்ஸ் ஆலனின் The Way of Peace என்ற நூலின் மொழியாக்கம் இது.
நமது பாரத தேசம் அன்பு மயமான வாழ்வைப் போதிப்பதில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அன்பின் வழியது உயிர்நிலை என்போம் அத்தகைய அன்பு மயமான வாழ்க்கைக்குரிய பல்வேறு வழிகளைப் பல கோணங்களில் எடுத்துரைப்பதாக இந்த நூல் உள்ளது. மனதுள் சுழலும் நமது எண்ணங்கள் நமது எதிர் காலத்தை வடிவமைக்கும் என்பதை எளிமையாக எடுத்துரைக்கிறார்.
முதல் அத்தியாயமான தியான வலிமை தலைப்பில், “நீங்கள் எதனைப் பற்றி அடிக்கடி ஆழ்ந்து நினைக்கின்றீர்களோ, வேலையற்ற நேரங்களில் எதனிடத்தில் உங்கள் ஆத்மா இயற்கையாகச் செல்கிறதோ அதனை எனக்குச் சொல்லுங்கள்; நீங்கள் எந்தத் துன்ப இடத்திற்கு அல்லது இன்ப இடத்திற்குச் சென்று கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் தெய்வ வடிவாகவோ? அல்லது மிருக வடிவாகவா? வளர்ந்துகொண்டு இருக்கிறீர்களா? என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன், என்பதாகக் குறிப்பிடுகிறார் இப்படி வாழ்வியல் எதார்த்தத்தை எளிமையாகப் புரியும் வகையில் தந்துள்ளது உண்மையிலேயே சிறப்பு.
அனைத்து மொழிபெயர்ப்புகளிலுமே எளிய நடையில் கருத்துகளை வாசகர்களின் புரிதலுக்குக் கொண்டு செல்லும் பாங்கினைப் பார்க்க முடிகிறது. நுட்பமான பகுதிகளையும் சுவை குன்றாமல் நல்லதொரு யதார்த்த நடையில் கொண்டு செல்வதில் வ.உ.சி. வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்ததாக வ.உ.சி.யின் உரைகள் குறித்துப் பார்க்கலாம் உரை நூல்கள் என வரும் போது திருக்குறள், இன்னிலை, சிவஞான போதம் ஆகிய நூல்களுக்கு அவர் உரை எழுதியுள்ளார்.
திருக்குறளைப் பொறுத்தவரையில் திருக்குறள் முழுமைக்கும் வ.உ.சி. உரை கண்டுள்ளார். இருந்தாலும் திருக்குறள் அறத்துப் பாலை மட்டுமே அவர் நேரடியாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இன்று அவரின் திருக்குறளுக்கான முழு உரையும் கிடைத்துள்ளது அவரது அறத்துப்பால் விருத்தியுரை 1935ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1917 இல் திருக்குறள் மணக்குடவர் உரையைத் தந்தவர் இவர். தனியாக இவர் உரை கொடுப்பதற்கான காரணம் குறித்து அவரின் சிவஞான போதம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறள், சிவஞான போதம், கைவல்ய நவநீதம் என்னும் நூல்கள் முறையே நீதி நூல்களிலும், சித்தாந்த நூல்களிலும், வேதாந்த நூல்களிலும் ஒப்புயர்வற்றவை என்பது வ.உ.சி.யின் கருத்து.
இவற்றுள் திருக்குறள், சிவஞான போதம் இரண்டின் உரைகளும் கடின நடையில் அக்காலத்தில் இருந்ததாம். அதனால் அவற்றை எளிமைப்படுத்த எண்ணியே வ.உ.சி. எளிய நடையில் உரை வழங்கியதாகக் குறிப்பிடுகிறார்.
வ.உ.சி., திருக்குறளை மூன்று பால்களாகவே பகுத்திருந்தாலும் இயல் அமைப்பில் சில வேறுபாடுகளைச் செய்துள்ளார். அதிகார அமைப்பு, அதிகாரப் பெயர், குறள் வைப்பு முறை ஆகியவற்றிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். குறள்களுக்கு நேரடியாக எளிய விளக்கங்கள் தந்துள்ளது. முக்கியமாக இலக்கணக் குறிப்புகள் தந்துள்ளது போன்றவற்றால் வ.உ.சி.யின் உரை மேலும் சிறப்பு பெறுகிறது.
இதை போன்றே வ.உ.சி.யின் சிவஞான போத உரைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. இதன் ஒவ்வொரு நூற்பாவின் சாரத்தையும் அதனதன் தலைப்பாகக் குறிப்பிடுகிறார். பாடலின் பொருளையும் பொருள் எனத் தலைப்பிட்டு எளிய நடையில் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒருங்கிணைத்து எளிதில் புரிந்துகொள்ள வகை செய்துள்ளார் வ.உ.சி.
செய்யுள் முதற் குறிப்பகராதி, அரும்பத அகராதி, உரை மேற்கோள் அகராதி ஆகியவற்றோடு இந்நூலை வ.உ.சி. கொடுத்திருப்பது சிறப்புக்குரியது.
பொய்கையார் எழுதியுள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலை நூலுக்கு வ.உ.சி. வழங்கியுள்ள உரையும் சிறப்புடையது. இதில் பொய்கையார் குறித்த பெரும் ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.
நாலாயிரத் திவ்யபிரபந்தத்தில் இடம் பெறும் ஆழ்வார் பொய்கையார், களவழி, புறநானூறு ஆகியவற்றில் வரும் பொய்கையார் ஆகியோரோடு இன்னிலை ஆசிரியர் பொய்கையாரையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.
பொய்கையார் என்கிற பெயரில் இடம் பெறும் அனைவரும் ஒரே புலவர்தான் என ஏற்றுக் கொள்ள இயலாது என்பதே வ.உ.சி.யின் கருத்து. அதேநேரம் ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான பொய்கையாரே இன்னிலையையும் இயற்றியிருக்க வேண்டும் என்கிறார்.
மொத்தத்தில் மொழிபெயர்ப்பு, உரை ஆகிய இரண்டு தளங்களிலும் வ.உ.சி.யின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வ.உ.சி மொழிபெயர்த்துள்ள ஜேம்ஸ் ஆலனின் வாழ்வியல் படைப்புகள் தமிழில் தோன்றியுள்ள தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற நூல்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம்.